சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 16 மார்ச், 2017

முத்துக்கிருஷ்ணன், ஜேஎன்யூ -1.
-------------------------------------------------------
முதல் இரண்டு முறை நான் முறையாகப் பயின்றிருக்கவில்லை ஆங்கிலத்தை.

ஆனாலும் முயற்சி செய்தேன். முயற்சியைக் கைவிட விருப்பமில்லை எனக்கு.

ஒவ்வொரு ஆண்டும் ஜேஎன்யூவுக்குச் செல்வதற்காகப் பல உடல் உழைப்பு வேலைகளைச் செய்தேன்.

எறும்பைப் போல் பணம் சேமித்தேன் பணம் கேட்டுப் பிறரிடம் கெஞ்சினேன்.

முதல் இரண்டு முறை தமிழகத்திலிருந்து புறப்பட்டேன்

அடுத்த இரண்டு முறை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து. ரயில் பயணத்தில் ஒருபோதும் நான் உணவருந்தவில்லை.

‘இந்த முறை உனக்குக் கிடைத்துவிடும்’ என்று ஒவ்வொரு ஆண்டும் உற்சாகப்படுத்துவார்கள் நானும் முயற்சி செய்தேன்.

ஏனெனில், விட்டுக்கொடுக்க நான் விரும்பவில்லை எப்போதும் நினைத்துக்கொள்வேன் ‘கடும் உழைப்பு ஒருபோதும் தோற்பதில்லை’ என்று.

ஒவ்வொரு ஆண்டும் நேரு சிலையின் கீழ் அமரும்போதெல்லாம் அவரிடம் கேட்பேன்:

“நேருஜி, காங்கிரஸுக்கு வாக்களிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எனக்குக் கல்வி தர ஏன் நீங்கள் விரும்பவில்லை?”

கடைசி நேர்காணலில் 11 நிமிடங்கள் பேசிய பின்னர் ஒரு பெண் சொன்னார் நான் எளிய ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று.

இந்த ஆண்டு நேர்காணலில் எட்டு நிமிடங்கள் பேசினேன் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தேன் மூன்று பேராசிரியர்கள் சொன்னார்கள்:

“நன்றாகப் பேசினாய்” என்று. அரசு கலைக் கல்லூரியிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்தவன் நான் ஒருவன்தான் என்று இப்போது உணர்ந்துகொண்டேன்.

சேலம் மாவட்டத்திலிருந்து ஜேஎன்யூவுக்காகத் தேர்வுசெய்யப்பட்டதும் நான் ஒருவன்தான்.

நவீன இந்திய வரலாறு பிரிவில் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டதும் நான் மட்டும்தான்.

எனது மேற்பார்வையாளர் பி.ஈஸ்வர் பொனெலாவுக்கு மிக்க நன்றி. என்னுள் ஓர் ஆய்வு மாணவனைக் கண்டுபிடித்தது அவர்தான்.

எனது ஆய்வு தொடர்பான முன்மொழிவை எழுத என்னை அவர் ஊக்குவித்தார். அதை நான் 38 முறை எழுதினேன்.

இந்த வரலாற்றுத் தருணத்துக்காகப் பலருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

அதனால்தான் ‘எ ஜங்கெட் டு ஜேஎன்யூ’ எனும் புத்தகத்தை நான் எழுதப்போகிறேன்.

மிக்க நன்றி பிரவீண் தோந்தி. ஜேஎன்யூவில் என் முதல் படம் இதுதான். மகிழ்ச்சி!

- முத்துகிருஷ்ணன், (26 ஜூலை 2016-ல் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் இட்ட பதிவு)

தமிழில்: வெ.சந்திரமோகன்

Keywords: கவிதை, முயற்சி, முத்துக்கிருஷ்ணன், ஜேஎன்யூ,
View Comment (1)Post Comment
MORE IN: செய்தியாளர் பக்கம் | சிந்தனைக் களம்
 Share




முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்…
-----------------------------------------------------------------------------

ஏனென்றால், இத்தனை ஆண்டுகாலம் இங்கே நான் ஆட்சிசெய்தும், தமிழ்நாட்டிலேயே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு பல்கலைக்கழகத்தை நான் உருவாக்காமல் போனேன்.

ஏனென்றால், இத்தனை காலம் இங்கே நான் ஆட்சிசெய்தும் தமிழ்நாட்டு மாணவர்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அல்லது பின்தங்கிய சூழல்களிருந்து வரும் மாணவர்கள் பயமின்றி உலகின் பல இடங்களுக்குச் சென்று படிக் கவோ வேலைசெய்யவோ உரிய சூழலை நான் ஏற்படுத்தாமல் போனேன். இன்னமும் முத்துகிருஷ்ணன்கள் தமிழகத்திலிருந்து வெளி யேறும்போது - குறிப்பாக, சாம்ராஜ்ய ராஜதானி யான புது டெல்லி போன்ற இடங்களுக்குப் போகும்போது தங்களுடைய சாதி, மொழி, உடல் நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை களோடுதான் செல்கிறார்கள். அவர்கள் தன்னம் பிக்கை மிக்கவர்களாகவும் தமது அடையாளங் கள் குறித்த விஷயத்தில் நாம் யாருக்கும் இளைத் தவர்கள் இல்லை. என்று அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்றால், முதலில் அவர்கள் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து நடக்கக் கூடியவர்களாகவும் மதிப்போடு பார்க்கப் படுபவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அதை நான் உத்தரவாதப்படுத்த மறுத்தேன்.

ஏனென்றால், என் பிள்ளைகள் ஐஐடியிலும் அமெரிக்காவிலும் படித்தால் போதும், தலித் பிள்ளைகள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று நினைத்தேன். அக்கிரகாரம் வரை வந்த பஸ், என் வீதி அதிலும் என் வீடு வரை - வந்தால் போதும் என்று நினைத்தேன்.

ஏனென்றால், நான் என் கிராமத்தில் தமிழ்வழிக் கல்வி பயின்று, பாடங்களை நன்கு புரிந்து, தேர்வில் வெற்றிபெற்று, பிறகு வாழ்க்கையில் உயர்ந்தேன் என்கிற ரகசியத்தை வெளியே சொல்ல மறுத்தேன். இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றி, மூப்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர்கள், இஸ்ரோ உள்ளிட்ட இந்திய அதியுயர் அறிவியல் நிறுவனங்களில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து உயர்ந்தவர்கள். அன்று அவர்களுக்கு அப்படிப்பட்ட கல்வி தரப்பட்டது. ஆனால், ஊரிலிருந்து நகரத்துக்கு நான் புலம்பெயர்ந்தபோது, அந்தக் கல்வியை அங்கே வெட்டிக் கொல்லுமாறு பணித்தேன். அந்த மொழியைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசுமாறு செய்தேன். இனிவரும் காலங்களில் கிராமத்துக் குழந்தைகளும் சிறுநகரக் குழந்தைகளும் மாநகரங்களின் கார்ப்பரேஷன் பள்ளிக் குழந்தைகளும், மறந்தும் தங்கள் வாய்களைத் திறந்து தமிழில் ஓர் வார்த்தை சொன்னால், அந்தப் பிஞ்சு இதழ்களின்மீது அடியுங்கள் என்று சொன்னேன். அவர்களின் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் அதில் நொறுங்கிப்போகுமே என்று நான் கவலைப் படவில்லை. அரசுப் பள்ளிகளின் அத்தனை நல்ல அம்சங்களையும் அழிக்க ஆங்கிலம் என்ற கருவியைப் பயன்படுத்தினேன். கிராமத்தில் உள்ளவர்கள் அச்சமின்றிப் படிப்பதற்கான சூழலை நான் அழித்தேன். இவ்வளவும் செய்த பிறகு, அவர்களுக்கு நல்ல ஆங்கிலக் கல்வி அளிக்காதவாறும் பார்த்துக்கொண்டேன்!

ஏனென்றால், நான் கிராமத்தில் நன்கு படித்து, நகரத்துக்குச் சென்று வாழ்க்கையில் வெற்றிபெற்ற பிறகு, என் கிராமத்தின்மீது நான் தாக்கம் செலுத்தினேன். நான் என் சிறுநகரத்தில் அரசுப் பள்ளியில் படித்தபோது, கட்டணங்கள் பெரிதுமின்றி, அருமையான ஆசிரியர்களுடன் விளையாட்டும் படிப்புமாய் கனவுபோன்ற விரிந்த ஒரு சூழலில் படித்தேன். ஆனால், என் தாக்கத்தினூடாக அந்தக் கல்விச்சூழலைக் கரும்பலகை எழுத்தைப் போல ஆதிக்க டஸ்டர் கொண்டு அழித்தேன். ஆசிரியர்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்குச் செல்லுமாறு வழிசெய்தேன். ஊரின் அனைத்து மேட்டுத் தெரு குழந்தைகளும் அரசுப் பள்ளிகள் பக்கம் மழைக்கும் ஒதுங்காமல் பார்த்துக்கொண்டேன்.

ஏனென்றால், ஒரு வியாபாரியாக நான் சிலவற்றை அறிந்தேன். கல்வியில் காசு பார்க்க வேண்டும் என்றால், கல்வியை அரிதான ஒன்றாக மாற்ற வேண்டும் என நான் அறிந்தேன். நான் படிக்கத் தொடங்கிய காலத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த கல்விச்சூழல் தமிழ்நாட்டில் இருந்தது. காமராசரும் அண்ணாவும் எனக்கு அதைப் பெற்றுத்தந்தார்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அப்போது அதை ஊட்டி வளர்த்தார்கள். ஆனால், நான் பள்ளிப்படிப்பை முடித்து ஊரை விட்டு வெளியேறும்போது, இனி உங்கள் சேவை எங்களுக்குத் தேவை யில்லை என்று தலைவர்களிடம் சொல்லி விட்டேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார் கள். நான் கல்வித் தொழில்முனைவோராக ஆவதென்று முடிவுசெய்தவுடன், அதே கருணாநிதியையும் எம்ஜிஆரையும் ஜெயலலிதா வையும் வசப்படுத்தி, அரசுப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் சீரழிக்கும்படிசெய்ய நானே ஏற்பாடுசெய்தேன். பின்பு, எல்கேஜிக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க ஏற்பாடு செய்ததால், உயர் கல்விக்கு மக்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயாரானார்கள்.

ஏனென்றால், நான் கல்வியைப் பற்றிக் கற்றுக்கொண்டேன். இனி எனது நோக்கம் ஐம்பது கோடி ரூபாய்க்குத் துணைவேந்தர் பதவிகளை விற்பது மட்டுமே. எனது நோக்கம், கிராமப்புற மாணவர்கள் குறித்து ‘அய்யோ.. குய்யோ’ என்று கண்ணீர் வடித்துக்கொண்டே, கிராமப்புறப் பள்ளிகளை மூடுவதே. எனது நோக்கம், சந்தடிசாக்கில் தமிழகத்தில் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகளை மூலைக்கு மூலை நிறுவிக் கொள்ளையடிப்பதை ஊக்குவிப்பதே. எனது நோக்கம், சாதாரண மக்களுக்கு உயர்தரக் கல்வியை எட்டாக் கனியாக ஆக்கி, அதன் மூலம் கல்வி வணிகத்தைப் பெரிதாக்கி, அதில் என் பங்கைக் கேட்பதே. எனது நோக்கம், பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை லாபவெறியைத் தவிர, வேறு இல்லை என்பதைக் கேள்விக்கிடமற்ற யதார்த்தமாக ஆக்குவதே. எனது நோக்கம், நான் பெற்ற இன்பம் நீ பெறாமல் இருக்கும்படி செய்வதே.

ஏனென்றால், இவை அனைத்தினும் மிக முக்கியமாக, முத்துகிருஷ்ணன்களுக்கான அதிகாரம், முத்துகிருஷ்ணன்களிடம் இருப்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. முத்துகிருஷ்ணனுக்கு அதிகாரம் இருந்தால், அவர் அவரது சூழலுக்கேற்பக் கல்வித் திட்டம் போடுவார்; நான் என் சூழலுக்கேற்ப திட்டமிட்டதைப் போல. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? கேளுங்களேன், முத்துகிருஷ்ணனுக்குக் கல்வி தொடர்பாக நான் என்னென்ன நன்மைசெய்தேன்! அதைக் கொண்டு அவர் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். குரூப் 4 வேலையைப் பற்றி மட்டும் கவலைப்பட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், நான் எச்1பி விசாவைப் பற்றிக் கவலைப்படும் இடத்துக்கு வந்துவிட்டேன். புதிய இந்தியனாக ஆகிவிட்டேன். எனக்கு இனி சமூக நீதியோ மொழியோ நில உரிமையோ இறையாண்மையோ தேவையில்லை. இந்த அகண்ட இந்துஸ்தானத்தில், நான் யாரோடு இணைந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பரந்த உலகில் நான் யாராக இருக்கிறேன் என்று அறிந்திருக்கிறேன்.

ஏனென்றால், முத்துகிருஷ்ணனும் ரோஹித் வெமுலாவும் என் சாதியினர் அல்லர். அதுமட்டுமல்ல, அவர்கள் என்னைக் கேள்வியும் கேட்கிறார்கள்.

எனவே, முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்.

- ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com –the hindu tamil

Keywords: முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன், ஜவஹர்லால் நேரு, ரோஹித் வெமுலா, தலித்
View Comments (57)Post Comment

இன்னும் பல ரோஹித்துகளை கொல்லப் போகிறார்கள்!
-----------------------------------------------------------------------------------------------
முத்துகிருஷ்ணன்

ரோஹித் வெமுலா இறந்தபின் முத்துகிருஷ்ணன்  தனது முகநூலில் செய்திருந்த பதிவு

2016 ஜூன் 30, மதியம் 2 மணி. வழக்கம் போல் நான் நூலகத்தில் இருந்தேன். அன்றைய தினம் நான் என் சகோதரர்கள் மீர், ஜான் ஆகியோருடன் சேர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தேன். வெளி வராண்டாவில் எங்களது பேராசிரியர்களோடு சேர்ந்து தொடர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பேராசிரியர்கள் ரத்னம், தத்தாகட்டா ஆகியோரது தொடர் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ராதிகா அம்மா வரப் போவதாக அர்பிதா என்னிடம் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், அந்த நாளில் ராதிகா அம்மாவை சந்திக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள்ளே பலமாக எழுந்ததை நான் உணர்ந்தேன்.கடந்த ஆறு மாதங்களாக பலத்த சவால்களை அவர் எதிர் கொண்டு வருகிறார். உடல் நலக் குறைவு, அரசாங்கம், அதிகாரத்தில் இருக்கும் கட்சி ஆகியவற்றிடமிருந்து எதிர்ப்பு என்று பல பிரச்சனைகள். அது 153ஆவது நாள். கொஞ்ச நேரம் மட்டுமே என்னால் தூங்க முடிந்தது. சுதிப்தோ சொல்லுவது போல மிகச் சிறந்த நபரான ரோஹித் வெமுலா சக்கரவர்த்தியின் நினைவுகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். ஆங்கிலத்தில் எழுதுவதற்காக படிப்பதற்காகவும், கற்றுக் கொள்வதற்காகவும் எனது நேரம் முழுவதையும் ஒதுக்கி முயற்சி செய்து வந்தேன்.

பிற நேரங்களில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஜேஏசி முடிவுகளை செயல்படுத்துவதற்காக வேலை செய்து வந்தேன்.ஜூன் 17. ஜனவரி மாதம் ரோஹித் நட்சத்திரக் கூட்டங்களுக்குள் சென்ற அதே நாள். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலில் இருந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்தில் எனது சைக்கிளை நிறுத்தி வைத்தேன். பிரதான நுழைவு வாசலுக்கு அருகே இருந்த மாற்று நுழைவு வாசலுக்கு முன்பாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற இருந்தது. நான் அறிந்த வரை அந்த வாசல் திறக்கப்பட்டதே இல்லை. நான் மெதுவாக வெளி வராண்டாவை நோக்கி நடந்தேன். இடதுபுறத்தில் இருந்த சிறு மேடையில் உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்கள் அமர்ந்திருந்தனர். தனது நிர்வாகப் பணியிலிருந்து ராஜினாமா செய்திருந்த பேராசிரியர் ராமுடு அவர்களோடு இருந்தார். அவர்கள் அனைவரையும் நோக்கி புன்னகைத்து எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.பிறகு திறக்கப்படாத அந்த பிரதான வாசலைப் பார்த்தேன். தேவைப்படாத தாவரங்களால் சூழப்பட்டிருந்தது. நான் அந்த கூடாரத்திற்குள் சென்றேன். அங்கே தொடர் உண்ணாவிரதத்திற்கான பேனர் தவிர, ‘அப்பாராவ் போடிலைக் கைது செய், நியாயத்துக்குப் புறம்பான தற்காலிகப் பணிநீக்கத்தை ரத்து செய், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தை அமல்படுத்து என்பது போன்ற வாசகங்களுடன் நீல வண்ண போஸ்டர்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

எல்லோரும் சணல் பாயின் மீது உட்கார்ந்திருந்தனர். ஒலிபெருக்கி வசதிக்கான மின்சாரம் இல்லாததால், பேராசிரியர் ஜோபியின் வேகன்ஆர் காரில் இருந்த பேட்டரியை அமைப்பாளர்கள் உபயோகப்படுத்தினர். காரிலிருந்து வந்த கேபிள் வயர் அந்தப் பாய்க்கு மேலாக சென்று கொண்டிருந்தது.ரோஹித் அண்ணாவின் அம்மாவான ராதிகா அம்மா அங்கே அமர்ந்திருந்தார். அவருக்கருகே எந்த இடமும் இருக்கவில்லை. ராம்ஜி அண்ணா, ராஜா அண்ணா ஆகியோருடன் ஒரு ஐந்து நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்தேன். வெளியில் இருந்து வந்திருந்த சில சமூக அமைப்பு சார்ந்த தலைவர்களுடன் ரத்னம் சாரும், தத்தாகட்டா சாரும் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அந்தப் பேராசிரியர்கள் இருவரும் அம்மா கொடுத்திருந்த வெள்ளை நிறத்தில் அம்பேத்கரது முகம் பொறிக்கப்பட்ட நீல நிற டி-சர்ட்டை அணிந்திருந்தனர். ரத்னம் சார் ஆங்கிலத்திலும், அம்மாவுக்கு தெலுங்கிலும் எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அம்மாவுக்கு அருகே அமர இடம் கிடைத்ததால், நான் அவர்கள் அருகில் சென்று அமர்ந்தேன்.சில நிமிடங்கள் நான் அம்மாவை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னுடைய அம்மாவாக இருந்தால் எப்படி இருக்கும்? தனது வலது கையை கன்னத்தில் வைத்தவாறு ஒரு பக்கமாக அம்மா உட்கார்ந்திருந்தார். அவர் ரத்னம் சாருடைய பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

கறுப்பு, மெல்லிய பச்சை, வெள்ளை நிறம் கலந்து, கறுப்பு புள்ளிகள், வெள்ளை பூக்கள் கொண்ட டிசைனில் சேலை உடுத்தியிருந்தார். தலையில் புதிதாக வெள்ளை முடிகள் நிறைய தோன்றியிருந்தன. கைகளில் சிவப்பு நிற வளையல்களை அணிந்திருந்தார். உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு அணிவிக்கப்பட்ட மாலை ஒன்று அவருக்கு முன்பாக கிடந்தது. இரண்டு ஆசிரியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. தையல் செய்து தளர்ந்து போயிருந்த அவரது கால்களைப் பார்த்துக் கொண்டே, நான் அவரிடம் உங்களது உடல்நிலை எப்படி இருக்கிறது? நீங்கள் குண்டூரிலிருந்து வருகிறீர்களா என்று கேட்டேன். ஆமாம் பாபு என்றவர், நீ ரோஹித்தைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். ஆமாம் அம்மா. அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக நான் அவரைச் சந்தித்தேன். அப்போது இரவு எட்டு மணி இருக்கும் என்று சொன்னேன்.வெளி வராண்டாவிற்கு இடதுபுறம் இருக்கும் சிமெண்ட் பெஞ்சில் ரோஹித் உட்கார்ந்திருந்தார். இப்போது அந்த பெஞ்சின் மூலையில்தான் அந்தக் கூடாரத்தின் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அவரது மொபைல் போனை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். . நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அண்ணாவென்றே அழைத்துக் கொள்வோம். நாங்கள் இருவருமே இரவு உணவு சாப்பிட்டு விட்டீர்களா அண்ணா என்று கேட்டுக் கொண்டோம். நான் அப்புறம் சாப்பிடப் போகிறேன் அண்ணா என்று ரோஹித் சொன்னார். அவர் நீலம், கிரே கலரில் ஜெர்கின் அணிந்திருந்தார். இயக்கத்தைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்ததற்கு அப்புறம். அவர், முதலாவதாக நமது ஜனநாயகப்பூர்வமான எதிர்ப்பை வைத்துக் கொள்ளலாம், அதற்குப் பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் செய்யலாம் என்று சொன்னார். நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன் அண்ணா என்று நான் சொன்னதும், நன்றி அண்ணா என்று அவர் சொன்னார்.

இரவு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு நான் அங்கிருந்து கிளம்பினேன். அடுத்த நாள் நான் வணிக வளாகத்தில் அமர்ந்திருந்த போது, ஹெல்த் சென்டரின் ஆம்புலன்ஸ் ’சி’ ஹாஸ்டல் ரோடை நோக்கி செல்வதைப் பார்த்தேன். யாருக்கோ மிகவும் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். அதற்கப்புறம் இரண்டு இன்னோவா போலீஸ் கார்கள் சென்றதைப் பார்த்தேன். ஏதோ தகராறு நடப்பதாக நினைத்தேன். ஆனால் திடீரென்று ஒரு கும்பல் ‘சி’ ஹாஸ்டல் ரோடு, என்ஆர்எஸ் (சூசுளு) ஹாஸ்டல் நோக்கி ஓடியதைப் பார்த்தேன். அப்போது எனது நண்பர்கள் யாரோ தற்கொலை செய்து கொண்டிருப்பதாக பேசிக் கொண்டார்கள். இரண்டு நண்பர்கள் தங்களது பைக்கை எடுத்துக் கொண்டு விரைந்தனர். அவர்கள் திரும்ப வந்து, ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக சோகச் செய்தியை சொன்னார்கள். பின்னர் நாங்கள் எல்லோரும் என்ஆர்எஸ் ஹாஸ்டலுக்கு சென்றோம். அங்கே ரோஹித்தின் உடல் ஃபிரீசருக்குள் வைக்கப்பட்டிருந்தது.ரோஹித்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அம்மாவைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. ரோஹித்தோடு சேர்ந்து இருந்தது பற்றி நான் ஞாபகப்படுத்திக் கொண்டேன். ரோஹித்தை நான் ஆறு முறை சந்தித்து இருக்கிறேன். வடக்கு வளாகத்திலிருந்து கிளம்பிய ஒரு எதிர்ப்பு பேரணியின் போது தெற்கு வளாகத்தில் இருக்கும் வணிக வளாகம் அருகே முதன்முறையாக நான் சந்தித்தேன். மெல்லிய கிரே கலர் சட்டையை அப்போது அணிந்திருந்தார். நானும், பிரசாந்த்தும் கறுப்பு சட்டை அணிந்திருந்தோம். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அவர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். நான் ஏன் இதுவரையிலும் முழக்கங்களை எழுப்பாதவனாக இருக்கிறேன் என்று நினைத்த போது, வியந்து போனேன். மொழித் தடை கூட காரணமாக இருக்கலாம் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

அவரது தலைமைப் பண்பு குறித்து நான் மலைத்துப் போனேன்.இரண்டாவது முறை நான் ரோஹித்தை டிக்கன்ஸ் அறைக்குச் செல்லும் வழியில் என்ஆர்எஸ் மெஸ்ஸுக்கு அருகில் சந்தித்தேன். ரோஹித் எதிர்ப்புறம் இருந்து வந்தார். அண்ணா, மிக விரைவில் நாம் ஜிபிஎம் கூடப் போகிறோம். தயவுசெய்து வாருங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள். இந்தத் தடவை பொறுப்பான பதவியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார். நான், அண்ணா, நம்மவர்கள் கடுமையாக உழைத்தாலும் ஏன் நம்மால் வெற்றி பெற முடியவில்லை என்று கேட்டேன். 2013இல் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல் எனது ஞாபகத்தில் இருந்தது. நமது கடின உழைப்பைத் தொடருவோம். நமது வாழ்க்கை எப்பொழுதுமே போராட்டம்தான்.மாணவ சமுதாயத்திற்காக உண்மையாக உதவுபவர்களை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் நுழைவுத் தேர்வை சீக்கிரமாக நடத்த வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கைக்கான காத்திருப்போர் பட்டியலை வெளிக் கொண்டு வருவதற்காக துணைவேந்தரிடம் ஏஎஸ்ஏ (ASA) அமைப்பு வாதம் செய்து வந்தது. 2014ஆம் ஆண்டு மாணவர் பேரவைத் தலைவராக வின்சென்ட் பென்னி தேர்வானதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு அது நடந்தது.மூன்றாவது முறையாக நான் சகோதரர் ராம்ஜியுடன் ரோஹித்தை மஜித் பண்டா ரவுண்டானா அருகே சந்தித்தேன். நானும் ரோஹித்தும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். அவர், அண்ணா, நாளைக்கு ஜிபிஎம் இருக்கிறது. எனவே தயவுசெய்து வாருங்கள். போன தடவை நீங்கள் வரவில்லை என்று சொன்னார். அதனால் என்ன அண்ணா, நீங்கள் சீனியர்கள் முடிவெடுங்கள். என்ன முடிவாக இருந்தாலும் நான் அதை ஒத்துக் கொள்கிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு ரோஹித், இல்லை இல்லை அண்ணா, இந்தத் தடவை நாங்கள் எங்களது அணுகுமுறையை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். நாம் ஜனநாயகப்பூர்வமாக நமது சங்கத்தைத் தேர்ந்தெடுப்போம். தயவுசெய்து வாருங்கள். நானும் கூட சகோதரர் ராம்ஜி ஏஎஸ்ஏ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புகிறேன் என்றார். நான் சகோதரர் ராம்ஜிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.அதற்கப்புறம் ரொம்ப நாட்களாக நான் ரோஹித்தை சந்திக்கவில்லை. எனது படிப்பு, தேர்வுகளில் நான் மும்முரமாக இருந்தேன். அவர்களை சஸ்பெண்ட் பண்ணியிருந்தது கூட எனக்குத் தெரியாது. இதற்கிடையில் சகோதரர் சேசுவை எஸ்எஸ்பி (ssp) கேண்டீனில் அவர் காலை உணவு சாப்பிடும் போது சந்தித்தேன். நான் சேசு அண்ணாவிடம், ஏன் இங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், மெஸ் கார்டு முடிந்து போய் விட்டதா, தூங்கி தாமதமாக எழுந்தீர்களா என்று கேட்டேன். சேசு அண்ணா, அரே, எங்களை சஸ்பெண்ட் பண்ணி விட்டார்கள், உனக்குத் தெரியாதா என்று கேட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் மேலும் நான்கு சகோதரர்களின் பெயரை அவர் என்னிடம் சொன்னார். ஒரு வாரத்திற்குப் பிறகு, ‘எச்சியு’ (HCU) அலுவலகத்தை நிரப்புவோம்’ என்ற போராட்டம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான் வணிக வளாகத்தின் வழியாக நூலகத்திற்குச் சென்று கொண்டிருந்தேன்.பிரசாந்த் முதலாவதாக என்னைக் கூப்பிட்டான். அருகிலிருந்த பெஞ்சில் சுங்கன்னாவும், விஜய் அண்ணாவும் உட்கார்ந்து இருந்தார்கள். ரோஹித்தும் உட்கார்ந்திருந்தார்.

முன்னா அவருக்கு பக்கத்தில் நின்றிருந்தார். நூலகத்தில் விநியோகிப்பதற்காக முன்னா என்னிடம் சில துண்டறிக்கைகளைக் கொடுத்தார். முதன்முதலாக தடித்த கறுப்பு எழுத்துக்களில், சமூக சமத்துவத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு என்று இருந்த பெயரைப் பார்த்தேன். முன்னாவிடம் நூலகத்தில் கொடுப்பதற்கு இவ்வளவு எங்களுக்குத் தேவையில்லை என்று கூறினேன். சில துண்டறிக்கைகளை நான் எடுத்துக் கொண்டேன். எனக்கு அவ்வளவாக அதில் ஆர்வம் இருக்கவில்லை. திடீரென்று ரோஹித், அண்ணா, நாம் மனப்பூர்வமாகப் போராட வேண்டும். இல்லையென்றால் சஸ்பெண்சன் உத்தரவைத் திரும்பப் பெற வைக்க முடியாது என்றார். நான் உடனடியாக இன்னும் கொஞ்சம் துண்டறிக்கைகளை எடுத்துக் கொண்டு, போகின்ற வழியில் அதை வாசித்தேன். நூலகத்திலும், வாசிப்பறையிலும் அவற்றை விநியோகம் செய்தேன். அந்த முறைதான் நான் நான்காவது தடவையாக ரோஹித்தை சந்தித்தேன்.அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, இரவு 11.45 மணியளவில் நூலகத்திலிருந்து எனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஹாஸ்டலுக்கு செல்லும் வழியில், வணிக வளாகத்தைக் கடந்து சென்ற போது வெளி வளாகத்தில் இரண்டு பேர் உறங்கிக் கொண்டிருப்பதை ரோட்டிலிருந்து பார்த்தேன்.வணிக வளாகத்தில் விளக்குகள் எரியவில்லை. ஆனால் அங்கிருந்த ஏடிஎம்மிலிருந்து வந்த வெளிச்சம் வணிக வளாகத்தில் பரவியிருந்தது. நான் வெளி வராண்டாவிற்குச் சென்ற போது அங்கே சேசு அண்ணாவும், ரோஹித்தும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கொசுக்கடியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சேசு அண்ணா பெட்சீட்டை வைத்து முழுமையாக மூடிக் கொண்டிருந்தார். ஆனால் ரோஹித் அவ்வாறு இருக்கவில்லை. ரோஹித் மெதுவாக அசைந்து தனது முகத்தின் இடது புறம், கையில் இருந்த கொசுவை அடித்தார். நான் யார் என்பதை கண்டு கொள்ள முயற்சித்த ரோஹித், மூன்று முறை என்னைப் பார்த்தார். இறுதியாக அவர் என்னிடம் குட் நைட் என்று மெதுவாகச் சொன்னார். நானும் அவ்வாறே தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றேன்.ஆறாவது முறையாக, கடைசித் தடவையாக நான் அவரைச் சந்தித்தேன்.

குறைந்தது ஒவ்வொரு நாளும் ஒரு தடவையாவது நான் இதை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். ஒன்றுமறியாத அந்த அம்மாவின் வலியினை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நமது சமூகத்தில் பிள்ளைகள்தான் சொத்து. அவர்கள் படித்து, வேலை பார்த்து உதவுவார்கள். வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த சமூகத்திற்கும் என்று என்னுடைய அம்மாவும் சொல்வார்.அருமை தேசத் துரோகிகளே, இந்த நாடு ஒன்றுமறியாத தாய் ஒருவரின் மகனைக் கொன்று விட்டது. பாரத் மாதா தனது மகனை இழந்து விட்டாள் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவரது சாதியையும், அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்கி அந்தத் தாயைக் காயப்படுத்தி விட்டார்கள். இந்த அநியாயத்திற்குப் பிறகு அந்தத் தாய் இவர்களது தேசியவாதத்தை ஆதரிப்பாளா?அருமை தேசத் துரோகிகளே, நான் ஒன்று சொல்லுகிறேன். செல்பிக்காக, வெளியாட்களின் கைதட்டலுக்காக இந்த தேசத்தின் தலைவர் நம் அனைவரையும் ஒரு நாள் விற்று விடப் போகிறார்.நூற்றுக்கணக்கான டப்பா ராவ்கள் ஆயிரக்கணக்கில் ரோஹித்களைக் கொன்று விட்டு, அவன்/அவள் ஒரு தலைசிறந்த மாணவன் என்று சொல்லப் போகிறார்கள். கற்பனைக் கதாபாத்திரங்களை கேலி செய்ததாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த அறிவார்ந்தவர்கள் கைது செய்யப்படப் போகிறார்கள்.

அதே நேரத்தில், பத்தாம் வகுப்பு தேறாதவர்கள் நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் தலைவர்களாகப் போகிறார்கள். தங்களது கருத்தோடு ஒத்துப் போகாதவர்களை தேசத் துரோகிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். மாட்டுக்கறி உண்ணுவதால், பகுத்தறிவோடு இருப்பதால், அறிவார்ந்தவர்களாக. நாட்டிற்காக உழைப்பவர்களாக இருப்பதால் மேலும் பல ரோஹித்களை இவர்கள் கொல்லப் போகிறார்கள். நாம்தான் இந்த நிலத்தின் உண்மையான புதல்வர்கள் என்பதால், நம்மை எல்லாம் கொன்ற பிறகு, தேசம் என்ற ஒன்றே இருக்காது.ஒன்றுமறியாத தாய் ஒருவரை ஆதரிக்க இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்?சாதிக்கெதிரான இயக்கங்களை ஆதரிப்பதன் மூலம், உலகமெங்கும் இருக்கும் அனைத்து மாணவர்களும், ராதிகா அம்மாவின் ரோஹித்களாக மாற வேண்டும். உதவியற்று இருக்கும் இந்த தாய்க்கு, பிரபஞ்சத்தின் தாய்க்கு உதவுவதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும்.

அருமை தேசத் துரோகிகளே, நான் ஒன்று சொல்லுகிறேன். செல்பிக்காக, வெளியாட்களின் கைதட்டலுக்காக இந்த தேசத்தின் தலைவர் நம் அனைவரையும் ஒரு நாள் விற்று விடப் போகிறார். theekathir )


தமிழில் : பேரா.த.சந்திரகுரு



வெள்ளி, 10 மார்ச், 2017

உள்ளத்தில் கள்ளம் உண்டாயின்...
(சத்குருவிற்கு ஒரு திறந்த மடல்)
-------------------------------------------------------

அன்புள்ள சத்குரு, வணக்கம்.தங்களுடைய பேட்டிகளை இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. நீண்ட நாட்களாக யோகா கற்றுக் கொள்ளவில்லையே என்கிற மனக்குறையை தீர்த்து வைத்தமைக்காக முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். யோகா கற்றுக் கொண்டால் மனம் நிதானத்தில் இருக்கும், கோபம் வராது என்றெல்லாம் உங்களை நேசிக்காத சிலரும் கூட சொல்லி வந்தார்கள். தங்களது பேட்டிகளை பார்த்த பிறகு யோகா கற்றுக் கொள்ளாததால் ஒன்றும் குறைந்துபோய் விடாது என்று எனக்கு தோன்றியது. சத்குருவே கோபப்படுகிறார். லட்சக்கணக்கான... தப்பு தப்பு... கோடிக்கணக்கான மனிதர்களுக்கு தமிழகத்தில், இந்தியாவில், வெளிநாடுகளில் தரம் பிரித்து (அதாவது வெவ்வேறு கட்டணம் வைத்து) யோகா கற்றுக் கொடுக்கிற சத்குருவாகிய உங்களுக்கு கோபம் வந்ததைப் பார்த்தேன். உங்கள் மீதான விமர்சனங்களை, பேட்டி கண்டவர்கள் மிகுந்த நிதானத்தோடும் தாங்கள்கோபித்துக் கொள்ளக் கூடாது என்கிற கவனத்தோடும் முன்வைத்தார்கள். அப்போது பார்க்க வேண்டுமே உங்கள் முகத்தை...

அந்த நிகழ்ச்சியை நீங்களும் ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். உங்கள் கண்,முகம், உடல்மொழி, வார்த்தைகள் இவையெல்லாம் பார்க்கிறவர்களை, கேள்வி கேட்பவர்களை மிரட்டுகிறது. எனக்கு உண்மையில் பயம் ஏற்பட்டது. எருமை, அறிவில்லாதவர்கள், மூளையில்லாதவர்கள், கட்டப்பஞ்சாயத்து, புத்தியில்லாதவர்கள், விபச்சாரிகள் என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள். பலமொழிகளில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நீங்களே சொல்வதைப் போல பல உயர்ந்த நிறுவனங்களில் நிர்வாகியாக இருப்பவர்களுக்கெல்லாம் வழிகாட்டுகிற சத்குரு, பொதுவெளியில் இப்படி வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் சொல்லுகிற உயர்தொழில்நுட்பத்தில் இது எல்லாம் கிடையாதா?.ரிஷிமூலம்...அனைத்திற்கும் ஆசைப்படு என்று நீங்கள் சொல்வது வழக்கம். ஆனால் சத்குருஎன்ற ஒரு பெயருக்காக அத்தனை கோபத்தோடு, பேட்டி கண்டவரிடம் அழுத்தம் கொடுத்தது சற்று ஆச்சரியமாக இருந்தது. இன்று தாங்கள் யாராக இருந்தாலும் ஜக்கிவாசுதேவ் என்ற பெயர் உங்களுக்கு ஏன் அப்படி கசக்க வேண்டும். அந்த பெயருடன் சம்பந்தப்பட்டிருக்கும் தங்கள் கடந்த காலம் ஏதேனும் உங்களை மிரட்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவெல்லாம் ஒருபிரச்சனையா குருவே. நீங்கள் சத்குருவான பிறகு உங்கள் மனைவி விஜி இறந்து போனதும்அவர் கொலை செய்யப்பட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் அளித்ததும், அவர்களது உறவினர்கள் வருவதற்கு முன்பே உங்கள் மனைவியின் உடல் எரியூட்டப்பட்டதும், இறந்தவர்களை புதைப்பது தான் உங்கள் வழக்கம் என்றாலும் எரிப்பது என்று எடுத்த முடிவு தடயங்களை அழிக்கவே என அவர்கள் குற்றம் சாட்டியதும் சத்குருவின் பெயரோடு ஒட்டிக்கொண்டது தான். பிறகு ஏன் ஜக்கிவாசுதேவ் என்ற பெயரின் மீது உங்களுக்கு இத்தனை கோபம்...! அந்நிய மோகம் குறித்து அதிலும் ஆங்கிலேயர்கள் வைத்திருந்த டிரம்சை பயன்படுத்துவது குறித்தெல்லாம் அருவருப்போடு பேசியிருக்கும் நீங்கள், போப்பை போல என்னை ஏன் பாவிக்கவில்லை என்று கோபப்பட்டீர்கள். நீங்கள், போப்பை விட பெரியவர். கடவுளுக்கு அடுத்த இடத்தில் உள்ளவர். நீங்கள் ஏன் அவரோடு ஒப்பீட்டு போட்டியிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. யார் கட்டப்பஞ்சாயத்து...

உங்கள் மீது விமர்சனம் வைப்பவர்களை பணத்திற்கு விலைபோனவர்கள் என்று கொஞ்சமும் கூச்சமின்றி பேசியிருக்கிறீர்கள். பணத்தால் வாங்க முடிந்திருந்தால் பல உயர்பதவிகளில் இருந்தவர்களை - ஏன் நாட்டின் பிரதமரையே வளைத்துப் போட்டிருக்கும் உங்களால் அவர்களை வாங்கியிருக்க முடியாதா? சத்குரு அவர்களே, ஏழைகள் என்றால் உங்களுக்கு இளப்பமா? முத்தம்மாள் ஏழைப் பெண் தான். ஆதிவாசிப் பெண்தான். படிக்காதவர் தான். ஆனால் அடுத்தவர்காசுக்கும், அதீத லாபத்திற்கும் ஆசைப்படுபவர் அல்ல. நீங்கள் சொல்வது போல அனைத்துக்கும் ஆசைப்படக் கூட தெரியாதவர். அப்படிப்பட்டவர்கள் மீது சரி சமமாக... இன்னும் சொல்லப்போனால் உங்களுடைய சத்குரு என்கிற நிலையிலிருந்து இறங்கி வந்து தெருச்சண்டைக்கு அழைக்கிறீர்கள். இன்னும் கூடஒன்று சொன்னீர்களே... நான் கோபப்படவில்லை; சத்தமாகப் பேசினேன் என்று. உண்மையை சத்தமாகச் சொல்ல வேண்டும்; அப்படித்தான் அவதூறுகளை எதிர்கொள்ள முடியும் என்றீர்கள். ஆஹா எத்தனை பெரிய தத்துவத்தை உலகுக்கு வழங்கியிருக்கிறீர்கள். அதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் ஏதோ சட்டப்படி நடப்பது போலவும், உங்களது தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர்கள் என்றும் கூறியிருக்கிறீர்கள். சட்டத்தையும் மீற ஆசையா?சத்குரு அவர்களே, பிப்ரவரி மாதம் 24ஆம்தேதி 112 அடி சிலையை திறக்க விழா நடத்துகிறீர்கள். பிரதமர் வந்து திறக்கிறார். 15.2.2017ல்தான் அந்த இடத்திற்கான அனுமதி பெற்றிருக்கிறீர்கள். ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்திருப்பீர்கள். அனுமதி கிடைப்பதற்காகத் தான்நாட்டினுடைய பிரதமரை அழைத்து அதைதிறக்கச் செய்தீர்கள் என்று ஒருவர் கருதினால் அதை தவறு என சொல்ல முடியுமா?. சட்டத்தை மதிக்கும் நீங்கள் அனுமதி பெற்றபிறகு தானே கட்டுமானப் பணிகளை துவக்கியிருக்க வேண்டும்.

கட்டுமானப் பணிகளை துவக்குவதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், எல்லாவற்றையும் கட்டி முடித்துவிட்டு எவர் அனுமதியும் தேவையில்லை என்று எகத்தாளமாய் இருந்துவிட்டு, பிரதமர் வருகையை காரணம் காட்டி அரசுநிர்வாகத்தை நிர்ப்பந்தித்து அனுமதி வாங்குவீர்கள், அதன் பெயர் சட்டப்படி நடவடிக்கையா? சத்குரு அவர்களே லட்சக்கணக்கான பேர் தவறு, நீங்கள் சொன்னது, கோடிக்கணக்கான பேர் நீங்கள் சொல்வதை நம்பலாம். ஆனால் சட்டத்தின் முன் நீங்கள் குற்றவாளி தான். தன்னை ஆதி சிவன் என்று காட்டிய பின்னும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் சொன்னதாய் தமிழ் இலக்கியம் கூறுகிறது. ஆதி சிவனையே தவறு என்றவர்கள் ஆதியோகிக்கு ஒரு சிலை வைத்துவிட்டதால் அதுவும் 112 அடியில் வைத்து விட்டதால் நாங்கள் அடங்கிப் போக வேண்டுமென்று நினைக்கிறீர்களா? தங்களிடம் ஈஷா யோகா மையம் அனுமதிவாங்கவில்லை என்று நகர் மற்றும் ஊர்ப்புறத்திட்டத்துறை அடித்துச் சொல்லுகிறது. உங்கள் பதில் என்ன?. அவர்களிடம் அனுமதி வாங்கினால் அந்த துறைக்கு வருமானம் கிடைக்கும். நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். தேவையானால் கொடுத்துவிட்டுப் போகிறேன் என்கிறீர்கள். இப்படி சட்டத்தை, நிர்வாகத்தைப் பற்றிய எகத்தாளமான உங்கள் பதிவு,நான் எவனுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல என்ற இறுமாப்பிலிருந்து எழுந்தது. 8.10.2016 மற்றும் 15.2.2017 ஆகிய தேதிகளில் 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை மாற்ற கோவைஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மத வழிபாட்டை கருத்தில் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டதாம். மதத்தின் பெயரால் விளைச்சல் நிலங்களை அழிப்பது நியாயமா சத்குரு? நீங்கள் இன்னொன்றையும் கூடச் சொன்னீர்கள். கார்ப்பரேட் என்றால் ஒழுங்கு.நான் கார்ப்பரேட்டாக இயங்குவதில் என்னதவறு என்று கேட்டீர்கள். விதி மீறல் குற்றச்சாட்டுக்கு உட்படாத ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை உங்கள் ஞான திருஷ்டியால் கண்டு சொல்லுங்கள் சத்குருவே. மல்லையா, சஹாரா சுப்ரதா ராய் இவர்கள்எல்லாம் கூட கார்ப்பரேட்டுகள் தான். கார்ப்பரேட்டுகள், அனுமதி வாங்கியது போன்ற தோற்றத்தையாவது ஏற்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் அதற்கும் கூட தயாரில்லை.சட்டம் உங்கள் பையிலா...மலைத்தள பாதுகாப்புக் குழு ஒன்று இருக்கிறது. அதற்கு என்று சட்டத்திட்டங்கள் இருக்கின்றன.

ஜெயலலிதா ஜெயிலுக்குப் போன பிளசன்ட் ஸ்டே வழக்கு, மலைத்தள பாதுகாப்புக்குழுவின் விதிகளை மீறியதற்காகத்தான் என்பதை முற்றும் அறிந்த ஞானியானஉங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் மலைத்தள பாதுகாப்புக் குழு,வனத்துறை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவர்கள் ஏதோ சட்டம் வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறீர்கள். அது எப்படி. இந்திய நாட்டின் சட்டம், அதன்படி இயங்கும் நிர்வாகஅமைப்பு உங்களை கட்டுப்படுத்த முடியாதா?. இக்கரைபோளுவாம்பட்டியில் புல எண் 48/1, 48/2, 49, 50/1, 50/2ஏ, 50/2பி-ல் கட்டப்பட்டுள்ளஅத்தனை கட்டிடங்களும் விதிகளை மீறியவை. அவற்றில் பணிகளைத் தொடரவும், மூடிசீல் வைக்கவும் ஒரு மாத காலத்திற்குள் இடிக்கவும் சொல்லி கோப்பு எண். 1866/2012-4, தேதி:21.12.2012ல் உங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை நீங்கள் அமல்படுத்த அனுமதித்தீர்களா? பதற்றப்பட்டு உடனே யாரிடமாவது மேல்முறையீடு செய்தீர்களா? ஒரு மாதத்திற்குள் இடிக்க வேண்டுமென்று சொன்னதற்கு மூன்று மாதம் கழித்து 19.3.2013ல் மேல்முறையீடு செய்கிறீர்கள். அரசு நிர்வாகம் ஏன் அதை அமல்படுத்தவில்லை. ஏன் நீங்கள்நீதிமன்றம் செல்லவில்லை. அரசிடம் முறையீடு செய்திருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் ஒரு கட்டிடம் கட்டப்படுவதற்கு அரசுத் துறைகளில் அனுமதி பெற வேண்டும்என்கிற குறைந்தபட்ச விபரம் கூட தெரியாதவரா நீங்கள்; என்றைக்காவது எந்தக் கட்டிடத்திற்காவது அனுமதிக்காக மனுச் செய்திருக்கிறீர்களா; கடவுளாக இருந்தாலும் அவர்களுக்கும் கூட சில விதிமுறைகள் இருக்கிறது என்று நமது புராணங்கள் சொல்லுகின்றனவே. அவர்களையெல்லாம் மீறிய அதி கடவுளா அல்லது ஆதி கடவுளா நீங்கள்? எந்தவொரு அனுமதியும் பெறாமல், அரசு அமைப்புகள் எதையும் சட்டை செய்யாமல் நடந்து கொள்ளுகிற நீங்கள் கட்டப்பஞ்சாயத்தைப் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டீர்கள். உங்கள் வளாகத்திற்குள் குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. தமிழ்நாடு குழந்தைகள் நல வாரியம் விசாரிக்க முனைகிறது. அதை விசாரிக்கக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு போகிறீர்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். உங்கள் பலம் நீதிமன்றம் வரை பாய்ந்திருக்கிறது. நீதிமன்றம் உங்களை விசாரிக்கக் கூடாது என்று தடை விதித்து விட்டது. ஓ!சத்குருக்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் போலும்! அப்படிச் சொன்னாலாவது பரவாயில்லை. ஆனால் நீங்கள் நீதிமன்றத்தை மதிப்பவர் போலும், சட்டத்தை மதிப்பவர் போலும், உங்களை கேள்வி கேட்பவர்களை எல்லாம் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் போலும் சித்தரிப்பது நியாயமா? அடுத்து ஒரு வழக்கு இருக்கிறது சத்குருவே, நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் கார்ப்பரேட் போல் இயங்குவதில் பெருமை கொள்கிறீர்கள்.

44 ஏக்கர் நிலத்தில் உங்கள் பினாமிகள் மூலம் வேலி போட்டுக் கொண்டீர்கள். தாசில்தார் அதை விசாரித்து உங்களுக்கு சொந்தமானது இல்லையென்று உறுதிப்படுத்திவிட்டார். அந்த இடம் யாருக்கானது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். உடனடியாக உங்களுக்கு இருக்கிற இயல்பான பலத்தை ஏவிவிட்டு நீதிமன்றத்திற்கு போகச் சொல்கிறீர்கள். நீதிமன்றமும் அதை விசாரிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டது. ஆஹா! நீங்கள் சட்டத்தை மதிக்கிற மாண்பு புல்லரிக்க வைக்கிறது. மந்திரத்தை தவறாகச் சொன்ன பிரம்மனைக் கூட முருகன் சிறையில் அடைத்ததாக இருக்கிறது. ஆனால் இந்த ஜனநாயக யுகத்தில் மதத்தை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துபவர்களைக் கண்டால் நீதிமன்றங்களும் கை கட்டி நிற்கின்றன. நாங்கள் எளிய மனிதர்கள். ஆரம்பப்பள்ளிக் கூடத்திலிருந்து எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் சொல்லியிருக்கிறார்கள். உண்மை வெல்லும், நியாயம் வெல்லும் என்று. உண்மைக்கு எதிராக கடவுள்களும், சத்குருக்களும் நின்றாலும் உண்மை தான் வெல்லும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பார்க்கலாம் நீங்கள் இப்போது பதற்றப்பட ஆரம்பித்திருக்கிறீர்கள்; இன்னும்கூடுதலாக உங்கள் பலத்தை பயன்படுத்துவீர்கள். பிரபலத்தாலும், பிற பலத்தாலும் எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்கிற உங்களது அசாத்திய நம்பிக்கையையும் மீறி உண்மைவெல்லும்; அதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். Kanakaraj -theekathir


*

செவ்வாய், 7 மார்ச், 2017


            கனவு இலக்கிய வட்டம் - நூல்வெளியீடு
-------------------------------------------------------------------------
கனவு இலக்கிய வட்டம்   சார்பில் “ உலக மகளிர் தினம்  “கொண்டாடப்பட்டது. அம்மன் நகர் விரிவு , பாண்டியன்நகர் பள்ளியில் செவ்வாய் அன்று காலை நடைபெற்றது. கிருஷ்ணகுமாரி தலைமை  தாங்கினார் .எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து கொண்டு ” சுகந்தி சுப்ரமணியனின் படைப்புகள்:  “ என்ற  நூலை வெளியிட்டார் . சவுந்த்ரிய்யா பெற்றுக் கொண்டார்.
(சுகந்தி சுப்ரமணியன்   திருப்பூரைச் சார்ந்த மரணமடைந்த பெண் கவிஞர். இவரின்  கவிதைகள், சிறுகதைகள்,    உட்பட பல படைப்புகளை இந்நூல் உள்ளடக்கியது . பக்கங்கள் 350 விலை ரூ 330. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு சென்னை )

பெரியாரின் பார்வையில் பெண்கள் , முன்னேறும் பெண்கள் என்றத் தலைப்பில் கட்டுரைகள் பூஜா, காயத்ரி ஆகியோரால் படிக்கப்பட்டன. உலக மகளிர் தினம் பற்றிய பல செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மணிமேகலை நன்றி கூறினார் .சுகந்தி  சுப்ரமணியன் பற்றிய ஜெயமோகனின் கட்டுரை அறிமுகப்படுத்தப்பட்டது.  அதில் ஒரு பகுதி:

சுகந்திசுப்ரமணியன்  : ஜெயமோகன்:
*
சுகந்தியின் கவிதைகளில் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாக பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார். தமிழின் ஆரம்பகால பெண்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். நான் எழுதவந்த காலத்தில் 1988 ல் சுகந்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன்.
‘அறை’ என்ற தலைப்பிலான கவிதையை எடுத்துப்பார்க்கையில் என் மனம் அதிர்ந்தது. அதில் சுகந்தி தன் அறையைப் பாதுகாப்பான ஓர் இடமாக, ஒளிந்துகொள்ளும் இடமாக சொல்லியிருந்தார். மேலும் சிலநாள் கழித்துப் படித்துப்பார்க்கையில் இன்னொரு அதிர்ச்சி. அறையை சுகந்தி தன்னை அலட்சியப்படுத்தக்கூடிய, அவமதிக்கக்கூடிய, மூச்சுத்திணற செய்யக்கூடிய ஒன்றாகவும் சொல்லியிருந்தார்.
சுகந்தியின் உலகின் மொத்தச்சிக்கலையும் அக்கவிதை சொல்லிக்கொண்டிருந்தது.

அறை
அறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது.
கோடைகாலம் குளிர்காலம்
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது.
எனக்குத் தேவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன்.
இந்த அறை
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது.
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது.
இந்த அறையில் நான்
வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பிவழிவதாகவும்
எனக்கு தகவல் வருகிறது.
இது என்ன விசித்திரம்!
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன?
இனி எனக்கு நிம்மதியில்லை.
நான் நானாக இருக்கவே முடியாது.
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன.
அறைக்குள் என் ஆடைகளை மீறி
கண்கள் என்னை ஒற்றறிகின்றன.
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.
செய்தி: சுப்ரபாரதிமணியன் 9486101003









சுப்ரபாரதிமணியனின் “  முறிவு “ நாவல்   : கா.ஜோதி
-----------------------------------------------------------

 பெண்கள்  என்ற குழந்தை உழைப்பாளிகள் :
       சுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம்சங்களை நுணுக்கமாக்க் காணலாம் . இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில்  சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையொன்று சூட்டுகோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்கிகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா .நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள்கிறார்கள்.

சுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில்  இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி  என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப்பதிவாக்கியுள்ளது.அவர் அதிகப்படியான வேலை, சோர்வு,மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி  வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட  காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பெண்தான்

  இந்நாவலின் கதாநாயகி. டைரிக்குறிப்பில் உள்ள பெண்கள் தவிர மனதை பாதிப்பது பெனாசீர் என்ற பெண். பழகும் பெண்கள் மில் புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்கிறாள். பழகும் ஆண்கள் வேறு வகை புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்கிறாள். கை வெட்டுப்பட்டதில்  அவளது வாழக்கை ஆதாரமே பாதிக்கப்படுவதாக எண்ணுகிறாள்.  வெட்டுப்பட்ட கையை மொண்ணை என்றே நாவலில் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. அதை முடம் அல்லது ஊனம் என்று சொல்லியிருக்கலாம். ஊனமுற்ற பெண் என்று குறிப்பிட்டிருக்கலாம்.வேம்பு என்று இன்னொரு பெண்ணின் பெயர் சொல்லப்பட்டிருப்பதை ண்களின் கசப்பு வாழ்க்கை சார்ந்தக் குறியீடாகவே சொல்லலாம்.  கசப்பில்தான் இந்நாவலும் மிதக்கிறது  வட்டார மொழிக்கு இடம் இல்லாமல் இயல்பாக கதை எழுதும் எழுத்தாளுமை வேறுபாடு இதில் தெரிகிறது.

இந்த நாவலில் அழுக்கு என்ற வார்த்தை பல இடங்களில் அதிகமாய் பயன்படுத்தப்படிருக்கிறது. அழுக்கடைந்த குடோனில் சிலந்தி வகைகள் சடைசடையாய் தொங்குவது போல் பறவைகளின் எச்சங்களும் கூடுகளும் இருப்பது போல் அழுக்கு நாவலில் அப்பியிருக்கிறது.  .பெண் தொழிலாளர்கள் பற்றிய முக்கிய பதிவு இந்நாவல்.இது பஞ்சாலைப் பெண்கள் பற்றிச் சொல்ல்ப்பட்டாலும் பல பிரிவுகள் , பல தொழிற்சாலைகளில்  வேலை செய்யும் பெண்களின் நிலையைத் தான் சொல்கிறது என்று சொல்லலாம்,. சுப்ரபாரதிமணீயனின் கூரிய பார்வையாலும் வாழ்க்கை பற்றிய  கருத்துக்களாலும் சாதாரண உழைக்கும் பெண்கள் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானதாக இது விளங்குகிறது.

பெரும்பாலும் இதில் உள்ள பல பெண்கள் குழந்தை உழைப்பாளிகள் என்ற வகையில்  18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதால் குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கைகளைப் பற்றியே இந்நாவல் பேசுகிறது என்றும் சொல்லலாம். அதே சமயம் பெண்ணியம் பேசும் நாவல் என்றும் சொல்லலாம். .( ரூ 90  உயிர்மை பதிப்பகம் , சென்னை )
----  கா.ஜோதி
                                                                                                                      
 ‘







          
சிறுகதை: உயிரெழுத்து இத மார்ச் 2017ல் பிரசுரம் 
-----------------------------------------------------------------------------

நாற்காலி மனிதர் ..: சுப்ரபாரதிமணியன்


 .
       நாற்காலியில் உட்கார்ந்தபடியே அன்புக்கு பாடை கட்டியிருந்தார்கள். பத்து வருசமா எங்கும் போகாமல் நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தார். வலது பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்துவிட்டது . அதன் பின் ஒரு மாதம்  நாற்காலியில் அவரை உட்கார வைத்து அவர் மகன் சிவன் சிகிச்சை  செய்தான். மருமகள் சிவமணி எதுவும் கண்டுகொள்ள மாட்டாள். வேலைக்குப் போகும் முன் சிவன் அவரின் உடம்பைத் துடைத்து சோறு ஊட்டி விடுவான். இரவில்தான் அவர் மல ஜலம் கழிப்பார் என்பதால் இரவில் அதைக் கவனிப்பான். அவனுக்கு ரைஸ் மில் ஒன்றில் கணக்கெழுதும் வேலை. பத்து மணி நேரம் இடுப்பு கழன்று விடும் வேலை.

" பத்து வருசமா உக்காந்து ஒரே எடத்தில இருந்து வேடிக்கை பாத்திட்டிருந்தார். சக்கரம் கட்டி ஓடற காலு மாதிரி ஓடிட்டிருந்த மனிதன் பக்கவாதம் வந்தப்புறம் எல்லாம் மொடங்கிப் போச்சு. செத்தப்புரமாச்சும் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டுப் போகட்டும் '’ என்பதாய் சிவன் சொன்னான்.

" அக்கட போகாமா எண்ணத்தை பாக்கறது "

" அகக்கண்ணுன்னு ஒன்னு இருந்திருக்கும் அவருக்கு. அதுல பாத்திட்டுப் போகட்டும்"

"நல்ல வேக்கானந்தா ..."

 அன்பு திருமண விசேஷங்களின்போது கொம்பூதுவார். ஒற்றை ஆளாய் நின்று கொண்டு ஏதாவது ஒரு விசேஷ ராகம் என்பதுபோல் ஊதிக் கொண்டிருப்பார். வெங்கலத்தின் நாதம் ராகமாய் அவனைக்  கிளப்பிக் கொண்டிருக்கும். கல்யாண விசேஷங்களின் போது தவறாமல் சென்று விடுவார். நாதஸ்வரம் வாசிக்கத்  தாமதமாகும் சமயங்களில் கொம்பூதி எல்லோர் கவனத்தையும் ஒருமிக்க செய்துவிடுவார். அலை அலையாய் நாதம் அவர் பக்கமிருந்து கிளம்பும்.

காந்தி மைதானத்தில் நடக்கும் ஏதாவது கூத்து நிகழ்ச்சி என்றால் அதில் அன்புவின் கொம்பு ஊதல் இருக்கும். யாராவது அரசியல் கட்சிக் கூட்டம் என்றால் வந்து பத்து நிமிஷம் ஊதிட்டுப் போ என்பார்கள். அவர் போக மாட்டார்.

" பொதுவான ஏதாச்சும் இருந்தாச் சொல்லுங்க. அரசியல் பொழப்பெல்லா வேண்டாங்க "

கவுண்டர் தெரு மூக்கில் குன்னடையாக்கவுண்டன் கதை ஒரு மாதம் இரவில் நடக்கும். அப்பொழுதெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கொம்பூதுவார்.

" பழைய காலத்தில சாவப்போ கூட வாசிச்சு இருப்பாங்க.. ஆனா நான் சின்ன வயசுல இருந்தே சாவுக்கு வாசிச்சதில்ல. கட்சிக்காரங்ககே கூட்டங்களுக்கும் வாசிக்கறதில்லைன்னு முடிவு மாதிரி சாவுக்கும் எந்தக் காலத்திலேயும் வாசிக்கமாட்டேன். "

அன்புவைக் குளிப்பாட்டி நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர். யாரோ வெண்கலக் கொம்பை கொண்டுவந்து சிவனிடம் தந்தார்கள்.
" பக்கவாதம் வந்தப்புறம் இது ஊதாமே கெடக்குது உங்கப்பானே வழியனுப்பறதுக்கு சிவா நீ கொஞ்சம் ஊதி வழியனுப்பே..."

" எங்கப்பா  எந்த சாவுக்கும் ஊதக்கூடாதுன்னு பிடிவாதமா இருந்தார். அதை நான் கெடுக்கக் கூடாது. அவரே எதுக்கு தொந்தரவு பண்ணனும் "

அவர்களின் வீட்டைச்  சுற்றி  இரண்டு பண்டாரக்  குடும்பங்கள் இருந்தன. கட்டிடம் கட்டுதல், கல் கொத்துவதற்கு போகும் போயர்கள் நான்கு குடும்பங்கள் இருந்தனர். திருமண விசேஷங்களில் மங்கள வாழ்த்துப் 
பாடுவதற்கு சென்று வரும். இரண்டு நாவிதக் குடும்பங்களும் இருந்தன.

         பாடை சோழியர்  தெருவைத் தாண்டிக் கிழக்குத்தெருவிற்கு நகர்ந்தது. பாண்டிய வேளாளர் பீமார்கள் அந்த தெருவில் அதிகம் இருந்தனர். பெரும் கூட்டமாய் வீட்டிக்கு வெளியே வந்து நின்று பாடை கடந்து போவதைப்  பார்த்தார்கள்.
" உள்ளூர்லே  ஜாதகம் பார்க்கப்போயி அவனுக்கிட்ட உட்கார்ந்தா நல்லா இருக்கா "  என்று அவர்களில் பலர் ஜாதகம் கட்டை தொட மறுத்து விலக்கியே வைத்திருந்தனர். அவர்கள் ஏதாவது விசேஷம்  என்றால் சோளி  போட்டு சரி தவறு என்று சொல்லிக் கொள்வார்கள் பலர் ஒரே இடத்தில் உட்கார்ந்து சோளி போடும்போது கொம்பூத அன்புவை அழைப்பார்கள்

"தொடக்கம் மங்கலமா இருக்கனுமில்லையா ... அதுதா அன்பு இருக்கட்டும் " என்பார்கள்.

" எண்கணிதமும் வேண்டா ... பஞ்சாங்கமும்  வேண்டா...பொறந்த தேதியும் வேண்டா ...நினைக்கறதே மனசுலே வெச்சுகிட்டு சோளி உருட்டலாம். வர்றது வரட்டும் " என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

" ஜாதகம் ஒன்னும் பார்க்காமே சோளி  உருட்டறதே  எவன் ஆரம்பிச்சு வெச்சிருப்பான்."

" ஏதாச்சும் பெரியார் கட்சி ஆளா  இருந்திருக்கணும் ".

"அவனுக வேண்டாம்னா வேண்டாம்தா இருப்பாங்க. அதுக்கு மாத்து இதுன்னு போக மாட்டாங்கலே"
"எவனோ ஆரம்பிச்சு வெச்சுட்டான் போ .."

 "வள்ளுவன் தெருவுக்கு எவனும் போகக் கூடாதுன்னு வேணும்ன்னு  பண்ணுன சதி போலிருக்கு .."

 " அந்தக் காலத்தில ஒரு குடும்பதுக்குன்னு பத்து ரூபா வாங்குனாங்க அவங்க. இப்போ ஐநூறு, ஆயிரும்னு வராங்க. அவனுகளுக்கு வருமானம் போகக் கூடாதுன்னு முந்தியே யாரோ சோளியை உருட்டிவிட்டாங்க போலிருக்கு" மனப் பொருத்தம் என்று வருகிறபோது கூட ஆறேழு பொருத்தங்கள் இருந்தால் போதும் என்று ஒதுங்கி கொள்ளப் பழகிக் கொண்டார்கள் .
"பத்துபொருத்தத்துக்கு மேல வேணும்னு காத்திருந்து அந்தக் காலம் "
"அதுகுத்த சோளி வந்திருச்சே ."
"அவனுக வெள்ளை வேஸ்டினு வெள்ளை சட்டைனு போட்டு ஜம்பம் பன்றானுங்க ."
"அதுதா அவங்க மேல எடுத்தவகையில பொறாமைனாலதா இது வந்திருக்கோணும் .,"
ஜாதக ஓலைச்சுவடி ஏகதேசம் மறைந்து விட்டது போலிருந்தது .  நாற்பது பக்க நோட்டில் மஞ்சள் தடவி கிரகப் பலன்கள் இருக்கும் . கைவசம் பெரும்பான்மையோர் அதையே வைத்திருந்தார்கள்.
 வெத்தலக்காரர்கள் தெருவை அன்புவின் பாடை கடந்தது.

        பல போகங்களை வெற்றிலை விளைந்த ஊர்தான் அது . உள்ளூர் வெற்றிலைக்கு காரம் அதிகம். அளவில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் அளவில் இருக்கும் சதா வெற்றியை விட கற்பூர வெற்றிலைக்கு மவுசு அதிகமா இருந்தது . கொழிந்து வெற்றிலையை ,முதியா வெற்றிலையா என்று வகை வகையாய் ருசிக்குத் தகுந்தபடி வாங்கிக் கொள்வார்கள். கல்யாணம், காது குத்து , கருமாதி  என்று எல்லா விசேஷங்களுக்கும் வெற்றிலையை தாராளமாக புழங்கிக்கிற ஊராக அது இருந்தது அது. வெற்றிலையின் பசுமை எல்லோரின் முகங்களிலும் பூத்திருக்கும். 
         பெரிய கோமுட்டி செட்டியார் இறந்த பின் பொதுச்சாவடி அதிலிருந்து பெரிய மாளிகைக் கடை பெரியண்ணன் கைக்குப் போய் விட்டது . முன்பெல்லாம் எந்த நவதானியம் என்றாலும் பெரிய கோமுட்டி செட்டியார் கடைக்குதான் போக வேண்டும் . சரியான நேரத்துக்கு காலையிலும் மாலையிலும் கடை திறக்கும் . அந்த காலத்தில் பெண்களை கடையில் உட்கார வைத்து அழகு பார்த்தார்கள் அவர்கள் . குழந்தைகள் மாளிகைக்கு கடை முன்னாள் ஆடிக் கொண்டிருக்க வீட்டுப் பெண்களை , ஆண்கள் இல்லாதபோது மளிகைக் கடையில் உட்கார வைத்திருந்தார்கள் .
ஜாதகம் கணிப்பதில் சின்னண்ணன் பண்டாரம் அந்தக் காலத்தில் முக்கிமானவராக இருந்தார். "வேற ஜாதிக்காரனுக்கு எப்படி இது கை வந்துச்சு" என்று பலரும் வியந்து போகிற  அளவு  சின்னண்ணன் பண்டாரம் எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார் . தங்கமுத்து , சண்முகம், சுந்தரம் போல் அவரும் எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார்.

பாடை நவதானியக் கடையைக் கடந்து  தார் சாலையை அடைந்தது. கிழக்கே போனால் முருக நதி  வந்துவிடும். இடது பக்கம் சுடுகாடு இருந்தது. அடர்ந்த டெல்லி முட்கள் பசுமையை மீறி பயத்தைத் தரும். தூரத்திலேயே அதன் அடர்த்தி தெரிந்தது.

         ஆற்று நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பாடையை இறக்கி வைத்தவர்கள் குழி தோண்டிக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார்கள். அன்பு பல சமயங்களில் சுடுகாட்டு மேடையில்  உட்கார்ந்து சலசலக்கும் ஆற்று நீரை வேடிக்கை பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தார். சலசலப்பும், தெளிவும் அவர் முகத்தில் தெளிவை கொண்டுவந்து விடும்.


இதென்ன பிணத்தைப் பார்ப்பதே இரண்டு நாட்களாய் வாடிக்கையாய் போய்விட்டதே என்று நினைத்தபடி அன்புவின் படையைப்பார்த்துக் கொண்டிருந்தாள் பரமேஸ்வரி. சற்றே நைந்து போன நைலான் சேலை இடுப்பில் நிற்காத குழந்தை போல் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவளின் இடுப்பைகையால் மறைத்துச் சுதாரித்துக் கொண்டாள்.

அவளுக்கும் ஆற்றின் சலசலப்பு ரொம்பவும் பிடிக்கும். ஆற்றில் உட்கார்ந்தபடியே சற்றே இருட்டாகும் வரை உட்கார்ந்திருப்பாள். வானம் நிலத்திலிருந்து சூரியனின் வெளிச்சத்தை முழுமையாய் இழந்து கருக்கிறவரை உட்கார்ந்திருப்பாள். இன்றைக்கு கிறிஸ்டோபர் வருவதாக சொல்லியிருந்தான். தன்னிடம் பெற்றக்  கடனைத் திருப்பித்தராததால் திட்டித்   தீர்த்திருந்தாள்.

 " கர்த்தர் உன்னையெல்லா சும்மா விடுவாரா" என்று ஏதோ அகராதியாய்  சொன்னாள். கர்த்தரைப்  பற்றியெல்லாம் அவருக்கு ஒன்றும் தெரியாது. எதோ ஏதேச்சையாய் பெயர் வாயில் வந்துவிட்டது போலிருந்தது அவளுக்கு.



2

                      " மண்டையில ரெண்டு போடு அப்பத்தா அது அடங்கும். அடங்காமே எந்திரிச்சுட்டுத் திரியுது பாரு"  என்றான் வெட்டியான்.  சிவனுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்களைத் துடைத்துக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. வெட்டியானின் கையில் வைத்திருந்த தடி வெகு கனமாக இருந்தது வயதானவர்கள் நிலத்தில் ஊன்றி தவழ்ந்து போகப் பயன்படும் தடியைப் போல இருந்தாலும் கனம் இருப்பதாகத் தோன்றியது. சிவன் உடல் எரிந்து கொண்டிருந்தது. செந்நிறப்பிழம்புகள் திமிறிக்கொண்டு மேலேறிக் கொண்டிருந்தன.

நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து பகலின் இறுதி நேரத்தை வழியனுப்பிக் கொண்டிருந்தது. தீக் கொழுந்து அடர்த்தியை இரவு நேரத்தில் துல்லியமாக காட்ட இன்னும் நேரம் இருந்தது. சடசடவென்று கேட்கும் சத்தம் விறகு எரிந்து பொசுங்கிப் போவதாலா, கருகும் உடம்பின் எலும்புகள் தீயில் கருகி வெடித்துத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறதா என்ற யோசனை சிவனுக்கு வந்தது. வேறு பிணம் எதுவும் எரியாமலோ புதைபடாமலோ சுடுகாடு வெறுமையாகக்  கிடந்தது. வெட்டியானைத் தவிர கலைந்து போனவர்கள் அங்கங்கே நின்று கொண்டிருந்தனர். கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியதுபோல் சிவன் நின்றான்.

" ஆவி வெளியே போகாமெ  கபாலத்துல நிற்குது. அதுதா உடம்பை எழுப்பிட்டே இருக்கு. நாலு போடுங்க."


" அதெல்லா என்னாலே முடியாது. நீயே பார்த்துக்க "

           சிவன் தீச்சுவாலையின் சூடு அதிகமில்லாத இடத்திற்கு  நகர்ந்து விட்டிருந்தான். இவ்வளவு நெருக்கமாய் நின்று அவன் பிணம் எரிவதைப் பார்த்ததில்லை. பிணம் எழும்பிக் கொண்டிருக்கையில் அடித்துக் கிடத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். தடியைக் கொடுத்து அடி என்று சொல்லிக்கொண்டிருந்தான் வெட்டியான். ஏதோ  நினைப்பில் அங்கு நின்றிருக்கக் கூடாது என்ற நினைப்பு அப்போதுதான் வந்தது சிவனுக்கு.
அவன் படுத்துக் கிடந்த ஒரு தரம் கையில் இருந்த நீண்ட வேப்பங்குச்சியால் அடித்து அவனை எழுப்பியிருக்கிறார் அப்பா. அதற்குப் பழிவாங்கும் விதமாய் பிணமாய் கிடப்பவரை தன்னை அடிக்கச் சொல்கிறானா வெட்டியான். இதொரு சந்தர்ப்பமா அவரை அடித்து வீழ்த்த... பிணமாகிவிட்டார். இனி எழும்பப்போவதில்லை. ஆனால் பிணம் எழுந்து தொந்தரவு செய்வது போல் அதை அடிக்கச் சொல்கிறான் வெட்டியான். அதெல்லாம் அவனால் முடியாது. அவனின் துணைக்கு யாருமில்லாததால் தடியைத் தன்னிடம் கொடுக்கிறானா கூட யாருமில்லைதான் அவனுக்கு. சாம்பலாகும்வரை பிணம்தான் துணை அவனுக்கு.

           அப்பா அவனை நீண்ட வேப்பங்குச்சியால் அடித்தது அவன் படிப்பில் வெகு சுமாராக இருக்கிறான் என்ற புகாரால். எப்படிக் கரையேற்றுவது  என்று பள்ளி ஆசிரியர் ஒருவர் அன்புவிடம் சொல்லியிருந்தார். வழக்கமாய் நீண்ட வேப்பங்குச்சியை கொண்டு வந்து ஒரு ஜான் நீளத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்வார். ஒரு ஜான் நீளக் குச்சியை ஒரு நாள் பயன்படுத்திவிட்டு அது எவ்வளவுதான் மிச்சம் இருந்தாலும் தூக்கி எரிந்து விடுவார். அப்படியொரு நாள் வேப்பங்குச்சியைக்  கொண்டு வந்த நாளில்தான் படுத்துக் கிடந்த அவன் மீது அவர் வேப்பங்குச்சியை விசிறியது நல்ல வலி இருந்ததாக ஞாபகம். அடுப்படியில் இருந்த அம்மாதான் அவனின் அலறல் கேட்டு ஓடிவந்து பாயில் நின்றாள்.                       " செரி...செரி ...படிப்பு வாரமியப் போகப் போகுது. படிப்பான் " என்றாள்.

வடக்குப்பக்கம் இருந்த தொம்பன் மகன், பள்ளி  ஆசிரியர் சிவன் பற்றிச் சொன்னபோது பக்கமிருந்தாள் . "இவனுக பன்னி  மேய்ச்சு பன்னிக் கறி  தின்னு பன்னியா அலையறானுக. படிப்பிலே கெட்டிக்காரன். ரொம்ப சூட்டிகை" என்று சொல்லிக் காட்டியிருக்கிறார்.

" அவன் மூத்திரத்தை குடிடா... அப்பவாச்சும் படிப்பு வருதான்னு பார்க்கலாம்".

"செரி ...செரி...  நல்லதுதா.  அவனவன் மூத்திரத்தை குடிக்கறது நல்லதுதா. இதுலே மத்தவன் மூத்திரம் எங்க வந்தது. படிக்கலேன்னு அடிக்க வந்துட்டீங்க. நீங்கல்லாம் படிச்ச லட்சணம் தெரியுதா..."

" அதுத இவனே படிக்க வெக்கணும்னு ஆசை தோசை அப்பளங்கறான்..."

"செரி... செரி...அதுக்குன்னு நொறுக்கிர்ரதா..."

         அவர் வளர்த்திய 'மணிபிளாண்ட்' மளமளவென்று வளர்ந்து ரொம்ப தூரம் சென்றிருந்ததைப் பார்த்தான். அது அவருக்கு ஏன் பிடித்தது என்று தெரியவில்லை. வீட்டின் முகப்பில் படரத் துவங்கி கூரைக்கு மேல் சென்று வானத்தைத் தேடுவதாக இருந்தது. அது எங்கு சென்று முடிந்திருக்கிறது. என்பதை அவன் சரியாக கவனித்ததில்லை. அவ்வப்போது ஓட்டுக்கூரையில் அது ஏறும் பகுதியில் வெட்டி விடுவார். அது போகும் திசையெல்லாம் கருகி விழச் செய்வார். அது மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அவரை நாற்காலியில் உட்காரவைத்து உபச்சாரம் செய்தபோது அவர் எதையெதையோ நினைத்துக் கொண்டு பொழுதைக் கழிப்பார். தான் சரியாகப் படிக்கவில்லையென்பதற்காய் அடித்தவர். தான் அவ்வளவாய் சம்பாதிக்கவில்லை என்பதற்காய் அடிக்க நினைத்திருப்பாரா என்ற எண்ணமும் சிவனுக்கு வந்திருக்கிறது. அவரின் அன்னார், தம்பி மகன்களெல்லாம் வியாபாரத்தில் நிறைய சம்பாதித்திருக்கிறார்கள். தனது ஒரே மகன் அப்படி சம்பாதித்திருந்தால்  அவருக்குப் பெருமையாக இருந்திருக்கும். சிவனும் வெவ்வேறு வகையில் குட்டிக் கரணம் அடித்துப் பார்த்திருக்கிறான். இந்தக் குட்டிக்கரணத்திற்கும் பெரிய கைதட்டல் இருந்ததில்லை. பெருமூச்சே வெளிப்பட்டுக் கழிந்திருக்கிறது.


ஒரு நாள் அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவன் அப்பாவிடமும் கேட்டுவிட்டான்.

"எங்க தொட்டாலும் வலிக்கிற பொழப்பு.  இதுல எங்காச்சுத் தொட்டதுனாலே வலின்னு சொல்றது..."

அப்போதுதான் அந்தக் கதையைச் சொன்னார். புதிதாக இருந்தது. யாரிடம் இருந்து கேட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஒருவர் வைத்தியரிடம் சென்று தன் சுண்டு விரலால் தலையைத் தொட்டபோது வலித்தது. மார்பைத் தொட்டபோது வலித்தது. காலைத் தொட்டபோது வலித்தது. இடுப்பைத் தொட்டபோது வலித்தது என்றானாம். வைத்தியன் உன் சுட்டு விரலில் உள்ள புண் பழுத்து சீழ் பிடித்து இருக்கிறது என்றாராம்.

அவரை நாற்காலியில் உட்கார வைத்து வேடிக்கை பார்த்தது. அவரை  நோகவே  செய்திருக்கிறது.

"நீங்க நடமாட வேண்டாம்னா  சொன்னம்  "

" முடியல"

" அப்புறம் என்ன பண்றது. உட்கார்ந்தே பொழுதைக் கழிங்க..."

" இந்த ஊர்லெல்லா கூட அந்த மாதிரி சாமியார்க இருந்திருக்காங்க. அவங்களுக்கு அவங்களே சமாதி கட்டிட்டு போயி உக்காந்துக்குவாங்க. உக்காந்தப்புறம் தண்ணி சோறுன்னு எதுவும் பொழங்கமாட்டாங்க. அப்படியே உடம்பு இறுதி மூச்சு நின்னு போகும். அது மாதிரி மூச்சு நின்னா நல்லா இருக்கும்."

" அதெல்லா இந்த நாற்காலியிலே நீங்க உக்காரதுக்கு முந்தி பண்ணியிருக்கணும். செஞ்சு காட்டி பலரு கிட்டச் சொல்லியிருக்கணும். இப்போ பேசி என்ன பண்றது. அதையெல்லா நானு பண்ணமுடியாது."

"பேச்சுக்குச் சொன்னன் "

       மணிபிளாண்ட் செடி சுவரின் நாற்காலி பக்கம் ஊடுருவச் செல்வதை அவர் விரும்பியபோது ஒரு தரம் எடுத்து தன் பக்கத்தில் கிடக்குமாறு செய்தார்.  அது மெல்ல வளர்ந்து  மேலே கூரைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் இயக்கத்தை தினந்தோறும் கவனிப்பவர் போல் பார்த்துக் கொண்டிருப்பார். வேறு எவ்வளவோ செடிகள் இருக்கின்றன, கொடிகள் இருக்கின்றன.

அதையெல்லாம் விட்டு விட்டு 'மணிபிளாண்ட்' செடியைப் படர விடுவதற்குக் காரணம் அதில் உள்ள 'மணி ' என்ற பெயர்தான் காரணமோ என்றுக் கூட அவனுக்குத் தோன்றியிருக்கிறது.
அவர் கணபதியிடம் ஒரு வருடம்  முன்னால் சாதகத்தை எடுத்துக் கொண்டு சென்றிருந்தார். எதேச்சையாய் அவரின் கையை கவனித்த கணபதி சாதகத்தைப் பார்க்காமல்           ” ஆயுள் ரேகையெல்லா பட்டை போட்டது மாதிரி இருக்குது.இனி உடம்பு ஒத்துக்காது ” என்று முணுமுணுத்துவிட்டு சாதகத்தைப் பார்க்காமல்  திருப்பிக் கொடுத்து விட்டார். “ எல்லாத்துக்கும் பரிகாரம்ன்னு ஒண்னு இருக்குது. அதெப்பாருங்க “ என்றார். தோசப்பரிகாரம் பக்கமெல்லாம் போகாமல் அவர் நிராகரித்தே நாற்காலியில் உட்கார்ந்து ஆயுளை முடித்துக் கொண்டு விட்டார்.
           அன்பு உட்கார்ந்து  சலித்து செத்துப் போன நாற்காலியை பத்திரமாக வைத்திருக்க நினைத்தான் சிவன்.. சிவமணி ஒத்துக்கொள்ளமாட்டாள். எங்காவது தூக்கி எறி என்பாள். முருகநதிப்பக்கம் கொண்டு போய் போடு என்பாள் என்பதை நினைத்த போது அவனுக்கு அடக்க முடியாதபடி அழுகை வந்தது. தனியாய் சுவர் பக்கம் திரும்பி நின்று அழுதுதீர்த்தான்.