சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

சனி, 14 மே, 2016

புத்தகம் பேசுது - மே இதழில்..
                       கலைஞன் 60
                                                                                                  சுப்ரபாரதிமணியன்
கலைஞன் பதிப்பகம் தன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 நூல்களை மலேசியா கோலாலம்பூரில் வெளியிட்டது. அதில் 50 பேர் தமிழக எழுத்தாளர்கள் . பத்துப்பேர் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்கள்.50 எழுத்தாளர்களையும் கலைஞன் பதிப்பகம் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தது. அதில் என் சிறுகதைத் தொகுப்பு குகைகளின் நிழலில் ஒன்று.
அந்தத் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். 2012ல் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்த்து.அதன் பின் மலேசிய பயண அனுபவம், நாவல் பட்டறை அனுபவம், படித்த மலேசியா எழுத்தாளர்கள் நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என்று 25 கட்டுரைகள் எழுதியிருந்தேன். அது ஓ.. மலேசியா என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன் . நூல் இன்னும் வெளியாகவில்லை. மலேசியப்பின்னணி நாவல் ஒன்றையும் எழுதினேன் மாலு “( உயிர்மை பதிப்பக வெளியீடு சென்னை ) . அதில் டூரிஸ்ட் விசாவில் கோலாலம்பூர் சென்று வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனின் தலை மறைவு வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கிறேன். அகிலன் மலேசியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து எழுதிய பால் மரக்காட்டினிலே நாவல்   மலேசியப்பின்னணி நாவல் ஆகும். ஓ.. மலேசியா ““ மாலு ஆகிய நூல்களில் இடம் பெறாத மலேசிய அனுபவங்களை  சில சிறுகதைகளாகவும் எழுதினேன்.அந்தச் சிறுகதைகள் குகைகளின் நிழலில் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.. அந்த்த் தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். ஆனால் முழுத்தொகுப்பையும் அப்படி அமைத்திருக்கலாம் என்று நினைத்தேன். .
    கோலாலம்பூர் -அந்த விழாவில் தமிழகத்திலிருந்து சென்றவர்களில்மூத்த எழுத்தாளர்கள் கர்ணன், உதயை மு. வீரய்யன், ப.முத்துகுமாரசாமி மற்றும் பத்திரிக்கைகளைச்சார்ந்த தினமலர் கவுதம சித்தார்த்தன், தினமணி இடைமருதூர் மஞ்சுளா, குமுதம்  மணா, சங்கொலி அருணகிரி, தினமலர் மலர்வதி, தினகரன் பிரபு சங்கர்  , முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த கமலாலயன், உதய சங்கர், உமர் பாரூக், ம.காமுத்துரை மற்றும் எஸ். சங்கரநாராயன். சாருகேசி, பானுமதி பாஸ்கோ, ராகவன்தம்பி, உடுமலை ரவி , கவிப்பித்தன், பாரதிவசந்தன், சப்தரிஷி போன்றோரும் இடம் பெற்றிருந்தோம். வெளியிடப்பட்ட தங்கள் நூல்களின் அனுபவ்ங்களை எழுத்தாளர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.. மலேசியா கல்வித்துறையைச் சார்ந்த கிருஷ்ணன் மணியம், கும்ரன், மன்னர் மன்னர், மணி வாசகம்  போன்றோரின் உரைகளில் மலேசியா இலக்கியம் பற்றிய பல பரிமாணங்களைத் தெரிந்து கொள்ள முடிந்த்து. , மலேசியா மலாக்கா எழுத்தாளர்களின் 50 கவிதைகளை மொழிபெயர்த்து தமிழில் செம்பருத்தி தாமரை சந்திப்பு என்ற தலைப்பில் நூலாய் வெளியிட்ட்தையும் குறிப்பிடலாம்.கொங்கு நாட்டினரை விருந்தோம்பல் , உபச்சாரத்திற்கு பெருமை கொள்ளும் விதமாய் சொல்வார்கள். மலேசியா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது என்று சொல்லும் அளவு பலமான உபச்சாரம் இருந்தது.   அடுத்த்த் தொகுப்பில் மலேசியா அனுபவ  முத்திரையை அழுத்தமாகப் பதிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது. பால் மரக்காட்டினிலே “ “ மாலு நாவல்கள் போல் 50 மலேசியா பின்னணி நாவல்கள் வெளிவரவேண்டும் என்ற விருப்பத்தை அந்த மாநாட்டில் நான் தெரிவித்தேன். அடுத்த குதிரைப்ப்யணத்திற்கு  கலைஞன் பதிப்பகம் தயாராகி வருகிறது.அதன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 தமிழ்க்கவிஞர்கள் பற்றிய  நூல்களை இவ்வாண்டில்  வெளியிட ஆயத்தம் செய்து வருவதைக்குறிப்பிடலாம்.


புதன், 11 மே, 2016

நூறு சதம் வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு பரப்புரை

நூறு சதம் வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு பரப்புரை திருப்பூர் இணைய தளம் அணி சார்பாக புதன் மாலை பாண்டியன் நகரில் நடைபெற்றது. இந்த பரப்புரைக்கு திருப்பூர் இணைய தளம் அணி சார்பாக மனோகரன் தலைமை தாங்கினார். நூறு சதம் வாக்குப்பதிவு அவசியம் பற்றி எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ஜனனி காயத்ரி ஆகியோர் வலியுறுத்தினர். சக்தி மகளிர் அறக்கட்டளைத் தலைவர் கலாமணி கணேசன், பழனிச்சாமி, சுலோசனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்டியன் நகர், கூத்தம்பாளையம் பிரிவு, அண்ணா நகர் பகுதிகளில் நடைபெற்ற பரப்புரையில் பிரசுரங்கள் தந்து வலியுறுத்தப்பட்டன.

செய்தி: திருப்பூர் இணைய தளம் அணி சார்பாக: ஏ. மனோகரன்  ( 8124283081 )
சிறுகதை :

தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்
                               -- சுப்ரபாரதிமணியன் “ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “
“ஏன் அப்பிடி சொல்றீங்க   .
“ முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.

அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென திகில் அடைந்தவள் போல்  பார்த்தாள்.அவர் தீர்மானத்தைச் சாதாரணமாய் சொல்லி விட்டது போலிருந்தது. நிலை கொள்ளாதவர்கள் மாதிரி  இருவரும் முகம் பார்ப்பதைத் தவிர்த்து சுவர்களின் வெண்மையைப் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.

              படை வீரர்கள் கூடியதும் மூடியதுமான நிலையில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படை வீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படும்போது மந்திரிக்கு கூடுதல் மதிப்பு வருவது பற்றி  அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.அவர் யோசிப்பைத்தாண்டி வெறுமைக்குப் போய் விட்ட மாதிரி முகம் வெளுக்க உட்கார்ந்திருந்தார்.

 அருட்செல்வம் மிகவும் சிரமப்பட்டுதான் அப்படியானத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருந்தார்.வேறு வகையில் முடியாதா என்று ஓராயிரம் தடவை மனதில் கேட்டுக் கொண்டார். குழப்பமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது போலிருந்தது. எப்பாவது நடக்கப்போகும் திருமண எல்லை அது . இது போல்தான் ஏதாவது எல்லைக்குப் போய் நடக்கப்போகிறது அந்த எல்லை இதுதானோ என்ற கடைசி என்பது போன்ற நினைப்பும் வந்தது.

        வடவள்ளி குலதெய்வம் கோவிலில் கல்யாணம் வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.கொஞ்சம்  தமிழ்முறைப்படி திருமணம் தமிழ் மந்திரங்கள். அதிக சடங்குகள் இல்லாதத்  திருமணம் என்றே கடைசியாய் சமரசம் செய்து கொள்வது என்று முடிவு செய்திருந்தார்.

            எங்காவது திருமணம் வைத்துக் கொண்டு மாலையில் வெகு சிறப்பாக வரவேற்பு வைத்துக் கொண்டால் நல்லது என்று நினைத்திருந்தார். பூணூல்  மாட்டிக் கொள்வது, சடங்குகள் செய்வது ஆகியவற்றை கொஞ்சம் தவித்து விட எண்ணியிருந்தார். எதுவும் அவர் நினைத்தது மாதிரி நடக்கவில்லை. அவர் பெயரை கருணாநிதி என்பதை அருட்செல்வம் என்று மாற்ற கூட அவர் சிரமப்பட வேண்டியிருந்தது.அவர் அப்பா இருந்த காலம். அப்பாவைத்தாண்டி வந்து , ஏகதேசம் குதித்துதான் அந்த மாற்றத்தைச் செய்திருந்தார். 

          கொஞ்சம் முற்போக்காய் யாராவது மாப்பிள்ளை வீடு அமைந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று ஏக்கமாய் நினைத்திருக்கிறார் பல வருடங்களாய். சுபாவிற்குப் பெண் தேட ஆரம்பித்த இரண்டு வருடங்களில் அவரின் வைராக்யமெல்லாம் வெயிலில் பரிதவிக்கும் சிறு பூச்சி போல் சிதறிவிட்டது.அவரின் விருப்பப்படி எதுவும் நடக்கவில்லை.இம்மியளவு கூட கல் நகரவில்லை.நிலைத்து விட்ட தரையில்  வேர்கள் பிடித்துக் கொண்ட கல்லாக இருந்தது.

                          ” மொதல் பொண்ணெ காதல் கல்யாணமுன்னு பறி குடுத்தாச்சு. இதுவாச்சும் குடும்ப கவுரவத்துக்கு ஏத்தபடி சொந்தக்காரங்க மனசு நோகாதபடி அமையணும். இல்லீன்னா சொந்தம் விலகிப் போயிரும். ” . 

எதற்கும் ஆறுதலுக்கென்று கூட வராதவர்கள் இந்தத் தீர்மானத்தைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.தீர்மானத்தில் அவரை நிற்கும்படி ஆளாக்கி விட்ட்து தனக்குள் நிகழ்ந்த பெரும் சரிவு என்று சொல்லிக்கொண்டார். உடலை உலுக்கிவிட்டுப்போகும் இருதய வலி போல் என்பது ஞாபகம் வந்து போகும்.

         சரி என்று ஒத்துக் கொண்டு விலகி இருந்தார். ஜாதகம் எங்கே என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். பிறந்த தேதி போட்டு கனிணியில் 25 ரூபாயில் ஜாதகம் கிடைத்துவிட்டது. பெரியண்ணன் காதும் காதும் வைத்தமாதிரி “ அதெல்லாம் வேண்டாம். நல்ல ஜோசியகாரர்கிட்ட குடுத்து எழுதிக்கறேன் “ என்று கிளம்பி விட்டார். தேவைப்படுகிற மாதிரி எழுதிக் கொள்வதற்கான சவுகரியங்கள் இருப்பதைச் சொல்லிக்கொண்டார். அப்படி வாழ்ந்து பேர் சொல்லும் உறவினர் கூட்டங்களையெல்லாம் சொன்னார். “ செகடந்தாளி முருகேசன் வூட்லே என்ன நடந்தது..


              அவர் ஜாதகம் கிடைத்த கையோடு சொந்த சாதியின்   கல்யாணமாலையிலும் பதிவு செய்து விட்டார். ராகு கேது தோசம் இருந்தது. ” அது மாதிரிதா அமையணும். இல்லீன்னா வர்றவங்க உசுருக்கு ஆபத்து. மாங்கலயம் நிலைக்காது. ” . 

மாங்கல்யம், நிலையாமை என்பது பற்றியெல்லாம் நினைக்கையில் உடம்பு சாதாரணமாகவே தளரும்.
சோர்வு வந்து விடும் அவருக்கு.

       பெண்ணின் திருமண ஏற்பாடுகள் பற்றி கேட்கிறவர்களிடம் அது தன் கையில் இல்லை என்பதாய் சொல்லிக் கொண்டார் அருட்செல்வம்.தன் எல்லையை மீறி குடுமபம், பெரியவர்கள், குடும்பக் கட்டுக்கோப்பு எல்லாம் அதை எடுத்துக் கொண்டதில்  அவருக்கு வருத்தம் அதிகமானது. இப்படி எத்தனை தோல்விகளை இனி சந்திக்க வேண்டியிருக்குமோ. சமரசம்  தற்கொலை மாதிரிதானா. இனி நிறைய சமரசங்கள் செய்ய வேண்டியிருக்குமா..


         “ மொதல் பொண்ணு கல்யாணம் சாதி மறுப்பு. அது பெரிய தோல்விதா. அதனாலே என்னெ தலையிட வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க “ என்றும் உண்மையைச் சொல்லி வைத்தார். தோசம், சடங்குகள் என்று பேச்சு அடிபடுகிற போதெல்லாம் கண்களை மூடிக் கொண்டார்.காதுகளைப் பொத்திக் கொண்டார். வாயையையும் மூடிக் கொண்டார்.காந்திய வாதியானார். மற்ற சமயங்களில் காந்தியத்திற்கு எதிராக இருப்பவர் ஆனால் வேறு வழியில்லாமல் காந்தியின் மூன்று பொம்மைகளை  மனதில்  இருத்திக் கொண்டார்.  அதில் கொஞ்சம் சுகம் இருந்தது.   


“இது தோற்கறவர்களின் ஆட்டமா “
“ என்ன “
“ இந்த சதுரங்கம் “
“ நீங்க நேரிடையா செஸ்சைப்பத்திக் கேக்கறீங்களா “
“ எப்படி வேண்ணா வெச்சுக்கலாம் “
“ நீங்கதானே இது ஜெயிக்கிறவங்க ஆட்டம்ன்னு சொல்லிகிட்டிருப்பீங்க 


    தோற்போ ஜெயிப்போ அதில் தன் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். சாம்பியன்சிப்பைப் பெறுவது என்பதெல்லாம் அவருக்கு ஆசை இருந்ததில்லை.பல்வேறு நகர்வுகளைப் புதிதாய் கண்டவர்கள் என்ற பெயர்ப் பட்டியலில் அவரது பெயர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.போடென் மேட், லஸ்கர் பாத்  என்பதெல்லாம் அவருக்குப் பிடித்திருக்கின்றன.அவர்கள் புதிய நகர்வுகளுடன் தங்கள் பெயர்களைப் பதித்தவர்கள்.
ரேட்டிங் ஆயிரத்திற்கும் மேல்  இருந்தவர்களுடனே அவர் ஆட ஆரம்பிப்பார்.  காம்பினேசன், செக்மேட் என்பதெல்லாம் அவருள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்.புதிய நகர்வுகள், புதிய அனுபவங்கள் என்று நினைப்பார். ஆனால் இந்த புதிய நகர்வுகள் அவரை இம்சித்தன. மூச்சு,  விடுதலை இன்னும் சிரமமாக்கின.
.
       சுபா கந்த புராணம் படித்துக் கொண்டிருக்கிறாள் நான்கு நாட்களாய். அவருக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் நிலை கொள்ளவில்லை. உடம்பு பரபரப்பாக்கி விடுகிறது. ஏதோ மருந்தில்லாத வியாதி வந்தது போலாகி விடுகிறது. அதைக் கட்டிலுக்கடியில் ஒழிந்து போகக் கடவது என்று ஒதுக்கி வைத்தார், அது கண்ணில் படாமல் அவ்வளவுதான் செய்ய முடியும். கர்ப்ப காலத்தில்  அவளை கந்த புராணம் படிக்கச் சொல்லி யார் சொல்லி இருப்பர்களோ.அது என்ன லாபமெல்லாம் தரும் என்று சொல்லியிருப்பார்கள்.

“ என்ன படிக்கறதுன்னு நான் தீர்மானம் பண்ணக்கூடாதா “ என்றும் அவரை முறைத்தபடி சொன்னாள்.இந்த முறைத்ததில் வெறோருவனின்  மனைவி என்ற அடையாளமும் இருந்தது.

   பேருந்து நிலையத்திலிருந்து வீடு வரும் போதுதான் ஒருநாள் தன் கர்ப்பம் பற்றிச் சொன்னாள். முன்பே  கிரிஜாவிடம் சொல்லியிருப்பாளா. வீட்டிற்குப் போன பின் சொல்லிவிடுவாளா. எப்படியும் கிரிஜாவிற்குத் தெரிந்திருந்தால் அவள் சொல்லீயிருப்பாள்.இதற்குக்கூட ஜாதகம் பார்த்து நல்ல நேரம் பார்த்து , யாரிடம் முதலில் சொல்வது என்ற மங்கலத்தன்மை பார்த்து சொல்கிறாளா என்றிருந்தது.

      அவள் வேலைக்குப் போகும் போதும், மாலை அலுவலகம் விட்டதும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும்படி சொல்லிருந்தாள். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு முக்கால் பர்லாங் இருந்தது.

” கூப்புட வருவது  தேவையா ‘ என்றும் கேட்டுவிட்ட ஒருமுறை முறைத்தாள்.     

 “ விஆரெஸ் வாங்கிட்டு என்ன பண்றீங்க . சும்மாதானே இருக்கீங்க “  சும்மா என்ற வார்த்தை அவரை இம்சித்தது. ரொம்பவும் இம்சைப்பட வேண்டாம் என்று தினமும் மாலை, இரவுகளில் சுபாவைக் கூப்பிட்டு வர ஆஜராகி விடுபவராக இருந்தார்.

     இரட்டைச் சக்கர வாகனத்தில் உட்கார அவளுக்கு லகுவாகவே இருந்தது. இன்னும் சில மாதங்கள் கழித்து இது அவளுக்குச் சிரமமாகிவிடலாம்.

           பரிக்சா சாமி வந்திருந்தார். ராத்திரியின் கோதுமை உப்புமாவே போதும் என்றார். காலை நேரம்  என்பதால் கொஞ்சம் சாதமும் போட்டு கட்டாயப்படுத்தினாள் கிரிஜா.அவர் கூச்சத்துடனே சாப்பிட்டு முடித்தார். மனைவி இறந்த பின் எந்தக்கூச்சமும் இல்லாமல் அவர் நல்ல ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டிருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது..பலருக்கும் அம்மாவோடு சமையல் ருசி போய் விட்டிருக்கும். அவருக்கு மனைவியோடு போய் விட்டிருக்குமா,.


“ 23 வருசமா சொல்லித்தந்ததெல்லா வீணாப் போச்சு. புருசன் வீட்டுக்கு போயிட்டு திரும்பறப்போ  என்ன கொண்டுட்டு வருவாளோன்னு பயந்திட்டிருக்க வேண்டியிருக்கு. போன தரம் கந்தப் புராணத்தோட வந்தா. பகுத்தறிவு, பெரியார், புத்தகங்கள், உலக சினிமான்னும் ஒவ்வொரு பருக்கையா திணிச்சது. ஒண்ணும் உள்ளே போகலையா. எல்லாம் வீணாப்போச்சா  

“ கேட்கறது அவங்க கடமைன்னு வெறுமனே கேட்டுட்டு இருந்தாஙக போலிருக்கு..இப்போ சொல்றதுக்கு வேற ஆள் வந்தாச்சு. இருபத்தி மூணு வருஷத்தெ விட இனியும் இருக்கற காலம் பெரிசுன்னு முடிவு பண்ணீட்டங்க போல ;;

“ துளி துளி ரத்தமா சொன்னதெல்லா ஒடம்புலே ஊறியிருக்கும்ன்னு நெனச்சா கதையே வேற மாதியில்லே இருக்குது.. “

“ எல்லா வீட்லியும் இதே பிரச்னைதா. “

 பரிக்சா சாமி மனைவியை இழந்தவர். பையன் காணாமல் போய் விட்டான். காணாமல் என்றால் நகரின் வேறு பகுதியில் வாழ்கிறான்.அவரைப் பார்ப்பதில்லை.பார்ப்பதைத் தவிர்க்கிறான். அவரையும்,  அவர் மகள் குடும்பத்தையும் சந்திக்க விரும்பாதவன் மாதிரி  வேறு பகுதியில் இருக்கிறான். அவர் நண்பர்களிடம் மட்டுமே   பகுத்தறிவு , இலக்கியம் என்றெல்லாம் பேசுவார். மற்றபடி சாதாரண மனிதனாக உலவ அவருக்குச் சாதகங்கள் இருந்தன.அதையும் வேதனையுடன்  சாதாரணமாக சொல்லிக் கொள்வார். அந்த சாதாரணம் தனக்கும் வந்து விடக்கூடாது என்ற பயம் இருந்து கொண்டே இருந்த்து.

                          *  * *


           “ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “

“ஏன் அப்பிடி சொல்றீங்க அப்பா  .

“ இனி முடியாதுன்னு தோணுது. மனசு ரொம்பவும்  பலவீனமாயிருச்சு.     கந்த புரணத்துக்குள்ளே அடைக்கலமாகறவங்கிட்டே ஒத்துப் போகமுடியுமுன்னு தோணலே 

“ ஊர் உலகத்திலே எத்தனையோ பேரோட ஒத்துப்போறீங்க. இங்க வீட்லே முடியாதா

“ வீட்லே எதைஎதையோ சொல்லி வளர்த்தேன். பிரயோசனமில்லைன்னு தோணுது. அதுதா ஒத்துப் போக முடியும்ன்னு தோணலே. ஒரு எதிர்ப்பாவாவது இதைச் செய்யணும்ன்னு தோணுது. இதைச் சொல்லக்கூட வேண்டியதில்லை.டக்குன்னு எந்திரிச்சு போயிர்லாம். ஆனா விளக்கம்ன்னு சொல்லிட்டுப்போறது உனக்கு குழப்பமில்லாமெப் போகும் பாரு.. அதுக்குத்தா “

        கிரிஜா குறுகிட்டாள். “ அவளுக்குப் பொறக்கற பையன் உங்க கூட உக்கார்ந்து செஸ் ஆடுவான்.  நீங்க சொல்றதேக் கேப்பான். .

ஆறுதல் மொழி கேட்பதே அபூர்வம்.  கிரிஜா ஆறுதலாய் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆறுதலுக்காகவே அப்படி சொல்கிறாள் என்றிருந்தது.

 பிறக்கப் போகும் அவனுக்காக செஸ் போட்டை பத்திரப்படுத்தலாமா  என்பது பற்றி நினைத்தார். அவன் ரேட்டிங் ஆயிரம்  என்பதைக் கடக்கையில் அவன் முன் உட்காரலாம் என்று இப்போதே நிபந்தனை போட்டுக் கொண்டார்.


சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,
திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.comசனி, 7 மே, 2016


சிறுகதை :
மனக்குறளி


                                        சுப்ரபாரதிமணியன்


                                             1.

நான் சிவரஞ்சனி.. அரசாங்க வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் என் கணவர் மணியனுக்கு என்னவகை சேவையில் ஈடூபட்டு பொழுதைக் கழிப்பது என்று குழப்பமாக இருந்தது. நான் வாழ்க வளமுடன் அமைப்பில் சேரச்சொன்னேன். கடுமையான பயிற்சி இல்லாத யோகா முறைகள். சாதாரண உணவு பழக்கவழக்கங்கள், பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. அவர் ஒருதரம் ரவிசங்கரின் "வாழும் கலை"யின் 15 தினப் பயிற்சிக்குச் சென்றுவந்தார். அதில் சொல்லித்தரப்பட்ட பயிற்சிகளை பல வருடங்களாக செய்து வருகிறார். அதில் கிடைத்த 'சுதர்சனகிரியா' அனுபவம் ரொம்பவும் புதுமையாக இருந்தது என்பார். அவர்களின் அமைப்பிலிருந்து வார, மாத சத்சங்கங்களுக்கு அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. உடல் பயிற்சிக்காக செய்கிறேன். மற்றபடி நான் நாத்திகன். இதிலெல்லாம் உடன்பாடு இல்லை என்று சொல்லிவிட்டார். திருமணமான புதிதில் நான் கோவில்களுக்கு கூப்பிடுவேன். வருபவர் கோயில் வாசலில் எங்காவது ஒதுக்குப்புறமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு தினசரி, புத்தகங்கள் படிப்பார். கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாலும் சிற்பங்கள், உள் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். சாமி கும்பிட வரமாட்டார். திருநீறு வாங்கிக் கொள்ளமாட்டார். உறவினர்கள் யாராவது வந்திருந்து கட்டாயப்படுத்தினால் கையில் வாங்கிக் கொள்வார். நெற்றியில் பூச மாட்டார்.அப்படி நாலைந்து வருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் கோயில்களுக்கு கூட்டி போகவர என்றிருந்ததை நிறுத்திவிட்டார். வர மறுத்துவிட்டார். தி.க. கூட்டங்களுக்கு என்று செல்வார். வீரமணி அமைப்பு, கு.ராமகிருஷ்ணன் அமைப்பு, கொளத்தூர் மணி அமைப்பு, உள்ளூர் வழக்கறிஞர் குணசேகரன் அமைப்பு என்று அதில் உள்பிரிவுகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் செல்வார். பலர் அவர் கட்சிகளில் சேர வற்புறுத்தினாலும் சேர்ந்ததில்லை. பொதுமனிதனாக இருப்போம் என்பார். சமூகநீதி சார்ந்த மாநாடுகளுக்குச் சென்றுவருவார். எனக்கு கருப்பு சேலை கட்டிய, நெற்றியில் பொட்டு இல்லாத, கைகளில் வளையல் இல்லாத பெண்களைப் பார்ப்பதற்கு ரொம்பவும் அலர்ஜியாக இருக்கும். என்னை அந்தக் கோலத்தில் கற்பனை செய்துகொண்டு எனக்குள் நானே அலறியிருக்கிறேன்.

மகள் தேனம்மைக்கு திருமண ஏற்பாடுகளின்போது பெரும் சிக்கல் ஏற்பட்டது. வீட்டில் இருக்கும் பெரிய பெரியார் படம் எல்லாருக்கும் உறுத்தலாக இருந்தது.  படிக்காத புதியவர்கள் வந்தால் "இது அவங்க தாத்தா படம்" என்று சொல்லி சமாளிப்பேன். நெருங்கிய உறவினர்கள் இவன் கருப்புச்சட்டைக்காரன், இவனைத் திருத்தமுடியாது என்று வாசகத்தை கோரஸாகச் சொல்வார்கள். மாப்பிள்ளை பார்த்தபோது எல்லாருக்கும் ஜாதகத்துடன்தான் வந்தார்கள். கண்டிப்பாக ஜாதகம் பார்த்தே தீரவேண்டும் என்றார்கள். நான்தான் அவற்றையெல்லாம் தூக்கிக் கொண்டு அலைந்தேன். நிச்சயமானபோது தமிழ்முறைப்படிதான் திருமணம் செய்ய வேண்டும் என்றார். கோபிசெட்டிபாளையத்துக்காரர், மாப்பிள்ளை வீட்டினர், பயந்துபோனார்கள்.
"ஒரே பையன், எல்லா சடங்கோடும் மூணுநாள் பண்ணிக்கிறோம். அடுத்து என்னமோ பண்ணுங்க"

"அடுத்து எங்க... இருக்கிறது ஒரே பொண்ணுதா..."

"அதுக்காக எங்களை பலி கொடுக்காதீங்க. யாரையாச்சும் தத்து எடுத்து நீங்க நினைக்கிறமாதிரி சீர்திருத்தக் கல்யாணம் பண்ணி வையுங்க. எங்களுக்கு இந்தக் கருமமெல்லாம் வேண்டா..."

திருமணச் சடங்களைப் பெரும்பாலும் தவிர்த்தார். பெண்ணின் மணமேடையில் சிக்கலுக்குள்ளானவர் போல ஒளிந்துகொண்டேயிருந்தார். அவரின் பல தோழர்கள் கருப்புச்சட்டைகளுடன் வந்திருந்தார்கள் என்பதே மாப்பிள்ளை வீட்டாருக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது. திருமணத்திற்கு அய்யாசாமி என்ற பெரியவர் வந்திருந்தார். கறுப்புச்சட்டை, வெள்ளை வேட்டி. 75 வயதுக்காரர். முகத்திலும் வெள்ளைத்தாடி. கையில் நடக்க குச்சி. பெரியாரை நேரில் பார்த்தது மாதிரி இருந்தது என்று பலர் சொன்னார்கள். எல்லாரும் அவரை வேடிக்கை பார்த்தார்கள். எந்தச் சிக்கல்களும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்ததில் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. திருமணத்திற்குப் பின் எந்த சடங்குகளுக்கோ, கோயில் குளங்களுக்கு பொண்ணு, மாப்பிள்ளையுடனோ வர மறுத்துவிட்டார். எனக்கு அழுகை அழுகையாக இருக்கும். இவர் இன்னும் கொஞ்சநாளைக்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டால்தான் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. அவர் "போதும்.. பெரியார் ரொம்பவும் கோவிச்சுக்குவார்" என்பார். பேத்தியின் மொட்டை, காதுகுத்துக்குக் கூட சம்பிரதாயமாகத்தான் கலந்து கொண்டார். கோபிச்செட்டிபாளையத்துக்காரர்கள் பிறகு வெகு சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

மார்க்சிஸ்ட்கள் சம்பந்தமான அரசியல் கூட்டங்களுக்கும் போவார். வலது, இடது, எம்.எல். என்று பாகுபாடு இருக்காது. சிலர் அவரை கிண்டல் செய்வார்கள். "உங்க பொணத்து மேலே சாத்தறதது கறுப்பு சால்வையா, செவப்பு சால்வாயா"

"எதுக்கு"

"தி.க.வுடையதா.. இல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களுதா"

"தெரிஞ்சுக்க நிறைய இருக்கு.. கத்துக்க நிறைய இருக்கு, அதில கொஞ்சம் கடைப்பிடிக்கனுமுன்னு..."

ஓய்வு பெற்றவர்கள், பென்சனர்தாரர் சங்கத்திற்கு வாரம் இரண்டு மூன்று நாட்கள் சென்று வர ஆரம்பித்தார். அவர்களுக்கான மனுக்கள் எழுதுவது, கூட்டங்களுக்குப் போவது என்றிருந்தவர் தன்னார்வக்குழுக்களின் சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டங்களுக்கு அதிகமாகச் செல்வதைக் கடைப்பிடித்தார். வனதினம், தாய்மொழி காப்பு தினம் என்று நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று வருவார். சுற்றுச்சூழல்பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளுக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். பிறகு சின்ன கட்டுரைகளும் எழுதினார். வெளியூர் கூட்டங்களுக்கு சென்றுவருவார். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் திரும்புவதற்கு. அதுபோன்ற நிலையில் தனிமையில்தான் பொழுதைக் கழிப்பேன். விரதம் நோன்பு, மாரியம்மன் பண்டிகைகள் போது தீச்சட்டி, குண்டடம் என்று சிவப்பு, மஞ்சள் சேலைகள் கட்டி போக ஆரம்பித்தேன் பொழுது போவதற்காக. அந்த நிலைமைகளில் என்னைப் பார்க்கிற அவருக்கு மூஞ்சி சிறுத்துக் போகும். வெகுவாக சங்கடப்பட்டார். அதனால் அதையும் நான் தவிர்க்க ஆரம்பித்தேன்.

சாயப்பட்டறைகள் பற்றிய பொதுவிசாரணை, குறை கேட்பு நாள், மாவட்ட ஆட்சியர் கூட்டங்களுக்கு போய்வர ஆரம்பித்தார். சாயப்பட்டறை சம்பந்தமாக வழக்குகள், திருப்பூர் நீதிமன்றங்களிலோ, கோவை நீதிமன்றங்களிலோ வரும்போது போவார். அவரும் சில நண்பர்களுமாக சேர்ந்து சில வழக்குகள் போட்டிருந்தார்கள் என்பது தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன்.

சிட்டுக்குருவிகள் மறைவு, தமிழரசனின் சுற்றுச்சூழல் ஓவியக் கண்காட்சி, கூடங்குளம் பற்றிய புகைப்படக் கண்காட்சி என்று நானும் போய்வந்திருக்கிறேன் அவருடன்.

ஒருதரம் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் உறவினர் ஒருவரின் திருமணம். அந்த மண்டபத்திற்கு வாடகையே மூன்று லட்சம் ரூபாய். ஆடம்பரமான திருமணங்களே அங்கு நடக்கும். முதலில் என்னை மட்டும் போகச் சொன்னார். காலை முகூர்த்தத்திற்கு நான் கிளம்பும்போது அவரும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டார். மண்டபச் சூழலோடு அவரால் பொருத்திக் கொள்ளமுடியவில்லை. தத்தளித்துக் கொண்டேயிருந்தார். டிபன் சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் வெளியே வந்து விட்டோம். திரும்பும்போது பெரியாஸ்பத்திரிக்குள் அவரின் வெஸ்பா நுழைந்தது. ஒருத்தரை பார்த்துட்டு போலாம் என்றார்.

நாங்கள் பார்த்தது ஒரு பத்துவயதுப் பெண்ணை. அவள் உடம்பு முழுக்கப் புண்கள். என்ன மருந்து போட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுவது பிறகு பெரிதாகிவிடும். பல தனியார் மருத்துவமனைகளிலும் பார்த்திருக்கிறார்கள். கலெக்டரிடம் குழந்தைக்கான செலவை ஏற்றுக் கொள்ள சொல்லி மனு கொடுக்க அவர் ஏற்பாட்டில் அரசு மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறார்கள். அந்தப் பெண் ஒரத்துப் பாளையம் அணைப்பகுதி கிராமம் சார்ந்தவள். சாயப்பட்டறை கழிவுகள் தேங்கும் அணைதான் ஒரத்துப்பாளையம். அய்ந்து வயதிற்கு மேல் இப்படி கொப்பளங்கள் வர ஆரம்பித்து இருக்கிறது. அய்ந்து வருடங்களாய் தீரவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் விவசாயிகள். சோளத்தட்டு கூட ஒரு அடிக்குமேல் சாயத்தண்ணீர் ஊடுருவலால் வளரவில்லை. மாட்டுக்குக் கூட அவை பயன்படவில்லை. தென்னைகள் காய்ப்பு வெகு குறைவு. காய்த்தாலும் இளநீர் நல்ல கலரில் இல்லாமல் ஏதாவது கலரில் இருந்தது. அந்தப் பெண்ணின் அப்பா பனியன் கம்பெனிக்குத்தான் தினமும் திருப்பூர் வந்து போகிறார். சொற்ப வருமானம். அதில் பெரும்பகுதி குழந்தையின் கொப்பள வைத்தியத்திற்கே கழிந்து போயிருக்கிறது.

"இந்தப் பெண்ணைத் தத்தெடுத்துக் கொள்ளலாமா" என்றார். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். முடியுமா என்ற கேள்வி உலுக்கியது.

"வேண்டாம்"

"ஏன்.. நம்மளாலே என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யலாம்"

"எனக்கோ கான்சர். உங்ககிட்ட ஒருவருசமாகவே சொல்லாம மறைச்சு வச்சேன்"

அந்த தத்தெடுக்கும் சூழலை தவிர்ப்பதற்காக நான் ஒரு பொய் சொன்னேன். ஆனால் எனக்கு இதய நோய் இருப்பதை அவரும் பலமுறை மருத்துவமனைக்கு கூட வந்து தெரிந்து கொண்டார்.

"இந்தச் சாயப்பட்டறை, நொய்யல் கெட்டுப்போனது, சுற்றுச்சுசூழல் பிரச்சனைப் பார்த்து பார்த்து உங்களுக்குதான் நெஞ்சுவலி வரும்னு பயந்தேன். எனக்கு..."

"நீ அதெல்லாம் பார்த்து உள்ளூர விசனப்பட்டிருப்பே போல... அதுதா" என்றார்.

                                         2

     
நான் தேனம்மை. இன்று காசியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன். அப்பாவிற்கு தெரிந்தால் கொஞ்சம் வருத்தப்படுவார். வேதனைப்படுவார் என்று சொல்வதற்கில்லை. அதையெல்லாம் கடந்து வந்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் கடைபிடிக்கச் செய்த பகுத்தறிவு, நாத்திகவாதத்தை நான் மெல்ல மெல்ல கைகழுவியதை அறிந்துகொண்டபோதுதான் அவர் அடைந்த வேதனையை நான் கண்கூடாகக் கண்டேன்.

அப்பா சில தி.க கூட்டங்களுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். தி.கவினர் நடத்தும் ” மந்திரமா, தந்திரமா”  நிகழ்ச்சிக்கு கூட்டிச் சென்றபோது நாம் கடைப்பிடிக்கும் பல சடங்குகளுக்குப் பின் இருக்கும் தந்திரம் பற்றித் தெரிந்து கொண்டேன். கடவுள் பக்தி குறித்த அபரிமிதமான அம்மாவின் நம்பிக்கை பற்றி அம்மாவிடமே பேசி சண்டையிட்டிருக்கிறேன். அம்மாவிடம் கோவில்களுக்குப் போவது, சடங்குகளில் பெரிதாக ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தேன். இது அப்பாவிற்கு ஆறுதலாய்தான் இருந்திருக்கிறது. கோவில்களுக்குப் போவது, அதற்காய் நேரம் ஒதுக்குவது, பூஜை செலவுகள் என்பதெல்லாம் எவ்வளவு பண, நேர விரையத்தைக் கொடுப்பது என்பதை பெருமூச்சோடே நினைத்துக் கொள்வேன். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படித்தபின்பு எம்பில் செய்ய ஆசைவந்தது. எனக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அக்கறை கொள்ள ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் வந்ததில்லை. தட்டுத்தடுமாறித்தான் கல்லூரிக்குள் நுழைந்தேன். அப்பாவை உறவினர்கள், நண்பர்கள் பொறியியல், மருத்துவப் படிப்பிற்கு என்னை அனுப்பாததை இரங்கல் செய்தியாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். தட்டுத்தடுமாறித்தான் பள்ளித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். "உங்கப்பனுக்கு சாமி, கோயில், குளம்ன்னு அக்கறை கிடையாது. அதனாலே உன்னை எஞ்ஜீனியராக்கனும், டாக்டராக்கனும்னு அக்கறை இல்லை"

"எனக்கு அதெல்லாம் புடிக்கலே, மார்க் வாங்க முடியலையே"

"உங்கப்பா சொல்றதில்ல பட்டம் வாங்கிக்க. இப்பவே இருக்கிற நாத்திகப் பட்டத்தை தக்க வைச்சுக்கோ"

கல்லூரியில் விண்ணப்பிக்கிறபோது அப்பாவிற்கும் குழப்பமாக இருந்தது- அவரின் பல நண்பர்களிடம் விசாரித்தார். என்னிடமும், நானும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டேன். கடைசியில் "ஆங்கில இலக்கியமா, தமிழ் இலக்கியமா" என்றார்.

"ஆங்கில இலக்கியம்"

"தமிழ் இலக்கியம்ன்னு சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்"

"இப்பவே உங்க மேல நெறய வசவு, இதில தமிழ் இலக்கியம்  படிக்கப் போயிட்டேன்னா செரிதா, வசவு இன்னமும் கூடிரும். ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இங்கிலீஸ்ன்னு பெரிசா பீத்திக்கலாம்."

விஞ்ஞான, கணிதப் பாடங்களை எடுத்துப் படிக்கமுடியாத எனக்கு ஆங்கில இலக்கியம் சுலபமாகவே பிடிபட்டது. ஆர்வத்துடன் படித்தேன். ஒன்றரை மணிநேரத்தில் சென்று வரும் வெளியூர் கல்லூரியை நான்தான் தேர்வு செய்தேன். முதுகலை வந்தபோது மட்டும் விடுதியில் இருப்பதாகச் சொன்னேன். அம்மாவிற்கு இதயநோய் ஆரம்பித்திருந்தது என்பதை விடுதியில் சேர்ந்தபின்தான் தெரிந்து கொண்டேன்.

அம்மாவிற்கு உதவியாக வீட்டுவேலைகள், மருத்துவ உதவிகளுக்கு வீட்டில் இருப்பது நல்லது என்று பட்டது. முதல் ஆறு மாதத்திற்கான விடுதிக்கட்டணத்தை மொத்தமாக வேறு கட்டியாகிவிட்டது. ஆறுமாதம் சகித்துக் கொண்டிருந்தேன். அக்கல்லூரி பெண்களுக்கானது என்பதால்தான் நான் ஆர்வமாக அதில் தொடர்ந்தேன். இரண்டாயிரம் மாணவிகளுக்கு மேல் விடுதியில் இருந்தனர். முதுநிலை மாணவிகளே ஒரு அறைக்கு நாலு பேர் இளநிலை மாணவிகள் என்றால் ஆறுபேர். குளிக்க நேரம் விடியற்காலை 4 மணிக்கு என்று நேரம் ஒதுக்கியிருந்தார்கள். 4 மணிக்கு குளித்துவிட்டு ஈரத்தலையுடன் தூங்குபவர்கள் பலர் இருந்தார்கள். அப்படியிருந்தாலும் 5 மணிக்கு படிப்பிற்கு எழுந்து கொள்ளத்தான் வேண்டும். அறையை விட்டு வராண்டாவில் புத்தகத்துடன் உட்கார வேண்டும். மோசமான சாப்பாடுதான் என்னை விடுதியிலிருந்து துரத்தியது. பிரட்டும், ஆறின இட்லியும் கொடுமை. எல்லா தினங்களிலும் ஒரே மாதிரி சாம்பார். இரவு உணவில் சாப்பாத்தி கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டம் என்பது போலிருக்கும். திடுமென பலருக்கு காய்ச்சல் வந்துவிடும். கொத்துக் கொத்தாய் வராண்டாவில் காய்ச்சல் வந்து படுத்துக்கிடப்பர். வீட்டிலிருந்து யாராவது வந்து கூட்டிப் போக வேண்டும். அதற்கென வீட்டில் இருவருக்கு அடையாள அட்டை உண்டு. அவர்கள் தவிர யாரும் வரஇயலாது. திரும்ப விடுதியில் கொண்டுவந்து சேர்க்கிறபோதும் அந்த அடையாள அட்டை உள்ளவர்கள் கூட வரவேண்டும். அம்மாவிற்கு உடம்பு சுகமில்லாமல் போனபோது அவர் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் இல்லாமல் போய்விட்டது. அப்பாதான் வருவார். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டுத்தான் அவர் உடல் சுகமில்லையென்றாலும், விடுதி விடுமுறையில் மூடப்படும்போதும் பண்டிகை விடுமுறையின் போதும் வந்து கூட்டிப் போக வேண்டியிருந்தது. அதற்காய் அரை, அரைநாள் என்று விடுமுறை போட்டு வருவார். விடுதியில் கொண்டு வந்துவிடுகிற காலை அரைநாளில் அவர் நிதானமாக இருப்பார். மாலை அரைநாள் என்றால் வருவதற்கு தாமதாமானால் காத்திருப்பேன். ஆனால் இப்படி ஒவ்வொரு தரமும் விடுமுறை போட்டு வருவது அப்பாவிற்கும் பிடிக்கவில்லை. மோசமாக உடம்பால் அடிக்கடி வாந்தி, பேதி என்று உடம்பு சீரழிந்தது. நல்ல சாப்பாட்டிற்காக ஏங்க வேண்டியிருந்தது. ஆறுமாதம் கழிந்ததும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். தினமும் மூன்று மணிநேரம் பேருந்து பயணம் என்றாலும் சகித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தேன். அம்மாவிற்கும் கொஞ்சம் உதவியாக இருந்தேன்.

எம்.பில் சேருகிற என் ஆசைக்கு அப்பா தலையாட்டினார். தற்காலிக ஆசிரியர் வேலை அங்கேயே கிடைத்தது பெரிய சவுகரியமாக இருந்தது. ஆனால் அதன்பின் தினசரி வாழ்க்கை வெகு அசவுகரியமாக மாறிவிட்டது. 5000 ரூ. சம்பளம், ஹெச்.ஓ.டி, கைடுகள் தரும் வேலையை இரவில் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் வகுப்பெடுக்க வேண்டியிருந்தால், ஏதாவது கட்டுரை எழுதவேண்டியிருந்தால் அது என்னிடமே தரப்படும். நடுஇரவு வரைக்கும் உட்கார்ந்து கொண்டு  செய்யவேண்டும். அவர்களுக்காக பிரிண்ட்  அவுட், கம்ப்யூட்டர் வேலைகள் என்று மாதம் குறைந்தது ஆயிரமாவது செலவாகும்.  மருந்துக் கட்டணம் என்று இரண்டாயிரம் கழிந்துவிடும். மிச்சமாகும் இரண்டாயிரத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குமா என்பதை அம்மா கேட்டுக்கொண்டே இருந்தார். கைடு என்னை நெருங்கவே அனுமதிப்பதில்லை. வேலை கொடுக்கும்போது மட்டுமே கூப்பிட்டு பேசுவார்,. இல்லையென்றால் அவரைச் சந்திக்கப் போனால் மணிக்கணக்கில் வெராண்டாவில் நிற்க வேண்டியிருக்கும். பாடம் எடுப்பது சிரமம், சத்தம் போடுவது சிரமமாக இருந்தது. மாணவிகளைச் சமாளிப்பதும். யாருக்காவது குறைவாக மதிப்பெண் போட்டுவிட்டால் அது வேறு வகையில் வெடிக்கும். எவ்வளவுதான் சிரித்துக்  கொண்டு பாடம் எடுத்தாலும் அவர்களின் அலட்சியம் என்னை அழவைத்துவிடும். ஒரு பெண்ணை பெயில் செய்துவிட்டேன் என்று அவள் என்மீது வதந்திச் செய்தியை பரப்பினாள். "நான் திருமணமாகி விவாகரத்தானவள்" வேறு கல்லூரியில் இச்செய்தி ஆரம்பித்து எங்கள் கல்லூரிக்கு வந்தபோது அதிர்ந்துவிட்டேன். ஒரு மாதமாய் செய்தி கசிந்து, பரவி என் காதுகளுக்கே வந்தது. அதற்கான ஆயிரக்கணக்கான காதுகளுக்கு அது எட்டியிருந்தது. நான் நிலைகுலைந்து போனேன். அப்பா லேசாக எடுத்துக் கொண்டார். ரொம்பவும் சிரித்தார். நான் வெடித்து அழுதபோது கூட சிரித்துக் கொண்டேயிருந்தார். பிரின்சிபால் முன்னால்சென்று அழுதபோது அந்த மாணவி தான் கேள்விப்பட்டதைத்தான் சொன்னதாக சொன்னாள். யாரையாவது பெயில் செய்துவிட்டால் தற்கொலை செய்வோம், ரொம்பவும் குறை சொல்லாதே. தற்கொலைக்கு காரணம் என்று கடிதம் எழுதிக் கொடுப்போம் என்று சில மாணவிகள் மிரட்டல் வேறு. அம்மாவின் உடல்நலக்குறைவு. அப்பா அப்போதுதான் அவரின் தொழிற்சாலை நலிந்துபோனதால் விருப்ப ஓய்வு பெற்றார். கல்லூரிக்கு போவதென்றால் பதட்டமுண்டாகும் எனக்கு. ஹெச்.ஓடி, கைடு, மாணவிகள் என்று மூன்று பக்கங்களிலும் இடிதான். ஹேமலதா என்றபரபரப்பை கவனித்து வந்த வணிகவியல் பேராசிரியை. சீரடி சாய்பாபா படம் ஒன்றைக் கொடுத்து சில சுலோகங்களைக் கொடுத்து பிரார்த்திக்கச் சொன்னார். ஆறுதலாய் இருந்தது. அப்புறம் கையளவு ஒரு சிலை தந்தார். அதை என் படுக்கையறை மர அலமாரியில் வைத்திருந்தேன். மறைமுகமாக கும்பிட்டுக் கொண்டிருந்தேன். அம்மாவிற்கு ஆச்சரியம், ஆனால் மகிழ்ச்சி. "கடைசியில உங்கப்பனை விட்டுட்டு வந்தியே". அந்த சாயிபாபாதான் எனக்கு ஆறுதல் தருவதாய் நம்பினேன். அந்த சாயிபாபாதான் எனக்கு மாங்கல்யபாக்கியத்தை சீக்கிரம் கொண்டுவருவார் என்றும் நம்பினேன். என் பதட்டம் ஓரளவு குறைந்தது. ஏதேச்சையாக என் படுக்கையறையில் சாயிபாபா சிலையை பார்த்த அப்பா கறுத்த முகத்துடன் கையில் எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்த என்னிடம் வந்தார். அவர் தொட்டுவிட்டார் என்பதற்காய் அம்மா அலறினாள். நான் எதுவும் பேசவில்லை. எனக்கு ஏனோ அழவேண்டும் போலிருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அப்பாவின் பகுத்தறிவு சார்ந்த அறிவுரைகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் எரித்து சாம்பலிட்டு அவர் முன் நிற்பதற்காய் நான் கேட்டுக்கொண்ட மன்னிப்புக்கான கண்ணீர்துளிகள் அவை. ஒரு வாரம் கழித்து மீண்டும் மன்னிப்பை அப்பாவிடம் விளக்கமாய் சொன்னேன். கல்லூரி வேலை, அம்மாவின் உடல்நிலை என்று எல்லாம் என்னை சீர்குலைப்பதை சொன்னேன்.

அதன்பின் அப்பா திருமண ஏற்பாடுகளை செய்தார். அதற்கு முன் வரைக்கும் நான் எம்பில் முடித்தபின் திருமணம் என்று கறாராகச் சொல்லிக்கொண்டிருந்தவர் உடனே கல்லூரியில் இருந்து நின்று கொள் என்றார். மூன்று மாத நோட்டீஸ் தரவேண்டியிருந்தது. அந்த மூன்று மாதங்களில் நான் பட்ட வேதனை இன்னும் அதிகம். எம்பில்லை உதறியதற்காக என்மீது வசவுகள் கைடு பக்கமிருந்து. அவரின் உறவினர்கள் பல்கலைக்கழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்ததால் நான் எம்.பில் பட்டத்தை இனி எந்த வகையிலும் வாங்க முடியாது என்று சபதம் போட்டாள் கைடு. அப்பா தலைமுழுகு என்றார். எம்.பில்.லை தலைமுழுகிவிட்டு வந்தேன். அதற்காய் செலவழித்த இருபத்தைந்தாயிரம் என்னை உறுத்திக் கொண்டே யிருந்தது.

இப்போது காசிக்குவந்து கங்கையில் தலைமுழுகிவிட்டுதான் உட்கார்ந்திருக்கிறேன். அழுக்குப் பட்டுசேலைகள், அழுக்கு நீர், அழுக்கு வீதிகள், கங்கையில் குளிக்கிற நேரத்தில் மட்டும் அழுக்கு நீங்கிய உடம்பு. அப்பா என் திருமணத்தை தமிழ்முறைப்படி நடத்த ஆசைப்பட்டார். சடங்குகள் அதிகம் வேண்டாம் என்று வலியுறுத்தினார். உறவினர்களோ, குறிப்பாக அம்மாவோ அதைக் கேட்கவில்லை. அப்பா சேர்ந்துதான் போனார். மணமேடையில், சடங்குகளின்போது அவமானப்பட்டவர் போல் உடம்பைக் குறுக்கிக் கொண்டு நின்றார்.
        

விருப்ப ஓய்வு வாழ்க்கையில் பென்சன் சங்கம் என்று ஆரம்பித்த அவரின் பணி சுற்றுச்சுழல் பணிகள் என்று நீண்டது. சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகள், போராட்டங்கள் என்று அலைக்கழிந்தார். வீட்டு விற்று எனக்கு எனக்குக் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை வாங்கியில் போட்டு அவரின் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து அலைந்து கொண்டிருப்பதால் தனிமை தொலைந்து போவதாய் சொல்லிக் கொண்டிருந்தார். நீதிமன்றம், காவல்துறை அனுபவங்கள் என்று அவர் அலைந்து கொண்டிருந்தது எனக்கு பயத்தையே தந்தது.
      அவர் ஒரு டெய்லர் பறவை போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அது இலைகளையே தங்குவதற்குத் தேர்ந்தெடுக்கும். இலைகளின் விளிம்புகளை சேர்த்து நாரால் கட்டி விட்டது போன்று தைக்கும். அது ஒரு சிறிய பையாகி விடும்.  அதைத் தன் கூடாக்கிக் கொள்ளும்.  என் பிரார்த்தனைகள், சுலோகங்கள்  அவர் ஒரு டெய்லர் பறவையாக்கி விட்டால் ஆறுதலாக  இருக்கும் என்று வினோதமாகத் தோன்றும். 

எனக்கு கணவனாக வருகிறவர் கோயில் குளம் என்று அலைகிறவராக இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை பொய்த்தது. அது இப்போதைக்கு காசிக்கு கங்கை மேட்டில் கொண்டுவந்து உட்கார வைத்திருக்கிறது.
   ஏகமாய் எல்லோரும் பிச்சைக்காரர்கள் போல்  தென்படுகிறது. எல்லாம் விட்டு விட்டு வந்தது போல் பாவத்தைக் கழுவ வருகிறார்கள்.  அன்னதானம் போடுகிற எந்த இடத்திலும் யாரும் கை நீட்டலாம். அன்னதானம் எதுவும் கிட்டாத போது  அப்படியே உட்கார்ந்து பிச்சை கேட்கிறார்கள்.காலையில் ஒரு பிச்சைக்காரி எல்லோரையும் ஏகதேசம் உடம்பைப் பிடித்தும், முகங்களை தடவிப்பார்த்தும்  ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தாள். உன் இளமை உன்னுடன் எப்போதும் இருக்கட்டும். உன் இளமை இவ்வளவு சீக்கிரம் கழிந்து விட்டதா  என்ன . .. என்கிற ரீதியில்தான் அவள் அவர்களிடன் சொன்னதாகச் சொன்னார்கள். அவள் தொடுவது ஏதோ   ஆசீர்வாதம் என்பது போல் எல்லோரும் சகித்துக் கொண்டது  எனக்கு ஆச்சர்யமே தந்தது.
ஹேமலதா கொடுத்த சாயிபாபா பாடல்கள் நூலை கையில் எடுத்து கொண்டு லேசாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன் இப்போதைக்கு. கங்கையில் லேசான தூரத்துச் சலசலப்புச் சத்தம் போல் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன். 

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
சாயி நாதம் நமாமி.

                                             3.
கணவனால் கை விடப்பட்ட பெண்களைப் பற்றி நிறையக் கேட்டுருப்பீர்கள். பெண்களால் கை விடப்பட்ட  ஆண்களைப் பற்றிய கதைகள் கூட பல உண்டு. என் அப்பா என்னாலும், என் அம்மாவாலும் கை விடப்பட்டவர் என்றுதான் பல சமயங்களில் தோன்றுகிறது.  அவரை ஏன் கை விட்டோம். அவர் நாத்திகர் என்பதுதான் முதலும் முற்றும் ஆகும்.  அவர் கொள்கை சார்ந்து பல விசயங்களை எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். பெரிதாகத் திணிக்கவில்லை. இந்த இந்திய சமூகத்தில்   ஆயிரத்தில் ஒருவர்தான் நாத்திகராக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவு தர 999 பேர் மறுக்கிறார்கள்.என் அப்பா நாத்திகர் என்பதாலேயே நாங்கள் புறக்கணித்து விட்டோம்.ஒரு குடிகாரனை, குடும்பத்திற்கு  துரோகம் செய்பவனை, லஞ்ச ஊழல் வாதியை, அயோக்கியனை எப்படியோ ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஒரு நாத்திகவாதியை ஒரு குடும்ப அமைப்பிற்குள் சகித்துக் கொள்வதில் பல சிரமங்கள் இருப்பதாய் தோன்றுகிறது. நாத்திகர்களை சகித்துக் கொண்டு வாழ்கிற சாதாரணப் பெண்களை இப்படி மேலே சொன்ன ஏதாவது ஸ்லோகம் சொல்லி வாழ்த்தத்தான் தோன்றுகிறது.