சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

கொட்டும் தேனீ  :  நியூட்ரினோ
                 சுப்ரபாரதிமணியன்
அருவியில் குளிக்கும் போது திடீரென்று நியூட்ரினோ ஞாபகம் வந்து திக்கென்றது.பக்கத்தில் பொட்டிப்புரம் அருகே அமையயுள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடத்திற்கு  மத்திய அரசு ஜனவரியில் அங்கீகாரம் அளித்து ரூ 1500 கேடு நிதியையும்   வெளியிட்டுவிட்டது.  உலக் அளவில் அய்ந்தாவது நியூட்ரினோ திட்டம் அது. முன்பு நீலகிரி மாவட்டம் சிங்காரா பகுதியில் அமைக்கப்படுவதாக இருந்த்து. நீலகிரி மக்களின் எதிர்ப்பால் இடம்பெயர்ந்து விட்டது.
 சுருளி அருவியில் குளித்து விட்டு வெளியே வந்த பின்புதான் குளித்தது கொஞ்சம் அருவிநீரில், கொஞ்சம் மழைத்தூறலில் என்பது தெரிந்தது.( முதல்நாள் குற்றாலத்தில் 45 நிமிடம் வரிசையில் நின்று  குளித்த அனுபவத்திற்கு மாறாக சுருளி அருவியில் 20 நிமிட ஆனந்தக்  குளியல் )   நனைந்து கொண்டே நடந்து பேருந்து நிலையம் வந்தோம். ஏகப்பட்ட போலிச்சாமியார்கள். மவுன சாமியார், அழுக்குச் சாமியார், சாக்கடைசாமியார் என்று. ஆயிரம் லிங்கங்கள் வைத்து வேடிக்கை காட்டுகிறார்கள். சாமியார்கள் தரும் வரங்களை விட மக்களின் பேச்சு வெகு நம்பிக்கை தரக்கூடியது. சுருளி அருவியில் 90 நாட்கள் குளித்தால் குஷ்டரோகம் கூட குணமாகும். சுருளி தீர்த்த நீரில் விழுகிற குச்சிகள், இலைகள், எலும்புகள் எல்லாம் கல்லாகும். இலைகள் அழுகாமல் பொரித்த அப்பளம் மாதிரி இருக்கும் அரக்கர்களுக்குப்பயந்து  முப்பது முக்கோடித்தேவர்களும் இங்குதான் ஒளிந்து வாழ்ந்தார்களாம். 1008 குகைகள் உள்ளன.சீதையைத் தூக்கிச் செல்லும்போது இராவணனை எதிர்த்த ஜடாயுவின் சிறகு வெட்டப்பட்டு வீழ்ந்த் இடம், இராமாயண கால்த்தில் வரும் கதை மாந்தர்கள் யார் யார் அவதரிப்பது என்று முடிவு செய்த இடம், சனிபகவான் சூரபத்மனை வதம் செய்ய  வந்த போது இன்று போய் நாளை வா என்று விநாயகர் ஏமாற்றிய இடம். வீரபத்திர்ர் சாபத்தால்  கல்லாகிப் போன காமதேனு பசு சாப விமோசனம் பெற்ற இடம்.கைலாசநாதர் குகை வாசலில் மகாதேவன் காட்சி தந்து “ திருமுருகன் உதயமாவான் “ எனத் தேவர்களுக்கு வாக்கு தந்த் இடம் என்று பல வாய் மொழிக்கதைகள் சுருளி அருவிக்கு உண்டு. 

  கம்பம் பள்ளத்தாக்கைப் பார்க்கும் போதெல்லாம் இந்த பசுமையை விட்டு விட்டு எதற்கு திருப்பூர் பனியன் கம்பனிக்கு பஞ்சம் பிழைக்க வருகிறார்கள் என்று தோன்றும். கூலிகள் என்ன செய்வார்கள். எங்கிருந்தாலும் கூலிதான். முந்திரி, திராட்சை, வாழை என்று பணப்பயிர்கள் ஏற்றுமதியில். கடவுள் பூமி கேரளாவிலிருந்து கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டும் பூமியாக தேனி மாவட்டம் மாறி விட்டது (   பொள்ளாச்சி, கோவை பகுதிகளிலும் இதே போல் தான் கேரளாவிலிருந்து கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் ) கேரளாவில் சுற்றித்திரியும் நாய்களை இங்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். ( மன நோயாளிகள் எந்த மாநிலமானாலும் எங்காவது கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். சுமங்கலித்திட்டம் என்று இளம் பெண்களை பஞ்சாலைகள், பனியன் தொழிற்சாலைகளில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்).  தேனி மாவட்டத்தில் பஞ்சாலைகள்  ஏக்தேசம் மூடப்பட்டு விட்டன.தேனியின் தென்கிழக்குப் பகுதியில் வள்ளல் நதியின் மீது கண்டமனாயக்கர்களால் உருவாக்கப்பட்ட கண்டமனூர் அழகு ஊர்தான். மிருகங்கள்  அதிகம் வசித்த வருசநாடு மனிதர்களின் பூமியாக மாறி , மிருகங்கள் துரத்தப்ப்பட்டு விட்டன.பென்னிகுக் பெயரால் தேனியின் பேருந்து நிலையம், பல பாலங்கள், கடைகள், சலூன்கள் என்று விரவிகிடக்கின்றன. பென்னிக்குக் நினைவு மண்டபம் அதிகம் கவனிக்கப்படாமல்  அழுக்கடைந்திருக்கிறது., மரக்கா மலையின் அழகு பூஞ்சோலைகளால் மிளிர்கிறது.மரக்கா என்றால் பூஞ்சோலை என்று அர்த்தமாம்.வளம் கொழிக்கும் சின்னமனூர்  காசு போட்டால் காசு விளையும் பூமிதான் எப்போதும்.சிவகாமி அம்மன் கோவில் நாகலிங்கப்பூ அதிசயம் போல் படும் . ஒரு நாகம் படம் எடுத்து ஆட அதன் நிழலில் லிங்கம் இருப்பது போல்  தோன்றுவது பலரை வசீகரப்படுத்துவது.
முல்லைப் பெரியார் அணை 142 அடிகளாக உயர்த்தப்பட்ட ஆணையை ஒட்டி பிரமாண்டமான விழாக்கள் நடைபெற்றன.முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் ஆய்வு மாளிகை, பொதுப்பணித்துறையினர் தங்க 15 குடியிருப்புகளைக் கட்டியது தமிழக அரசு.இப்போது அவை சிதிலமடைந்து கிடக்கின்றன. முன்பு கேரள அரசு  அக்குடியிருப்புகளுக்கும் மின்சாரம் தந்தது. மின்சாரம் தாக்கி யானைகள் இறந்த்தால் அதைக்காரணமாக வைத்து மின்சார இணைப்பைத் துண்டித்து விட்டார்கள்.இரவில் விலங்குகள் தொல்லை. பகலில் கேரள அதிகாரிகள் தொல்லை. 1995லிருந்து ஒவ்வொரு குடும்பமாக வெளியே எல்லாம் காலியாகிவிட தமிழக அதிகாரிகள் படகுகளில் சென்று அணைப்பகுதிகளை பார்வையிட்டுதிரும்புகிறார்கள். பெரியார்  அணையில் மின்சாரம் இல்லாத்தால் மாலையிலும், இரவிலும் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளைக் காரணம் காட்டி இரவில் ஜெனரேட்டர் பயன்படுத்த அனுமதி இல்லை.  அரிக்கன் லைட் வெளிச்சமே தமிழக அதிகாரிகளுக்கு கதி. சோலார் விளக்கு கூட கிடைக்கவில்லை,
        தேனி மாவட்டமே நியுட்ரினோ பயத்தில் சிக்கித் தவிர்க்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தற்போது பெறப்பட்டிருக்கும் தகவல் : அங்கு அணுமின் உற்பத்தி நிலையம், அணு எரிபொருள் செயல்பாட்டு மையம், அணுக்கழிவு மேலாண்மை மையம் என்ற  மூன்று இனங்கள் அடிப்படையில் அனுமதி பெறப்பட்டுள்ளது.  அங்கு அமைய இருப்பது நியுட்ரினோ ஆய்வு மையம்  அல்ல. அணுக்கழிவுகளைக்கொட்டுவதற்கான பாதள சுரங்கம்தான். ”  சற்று தாண்டினால் கேரள எல்லை. கேரளா இதற்கு ஆதரவு இல்லை . கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறது.நியுட்ரினோ, அணுக்கழிவு  எல்லாம் சேர்ந்து பிசாசுத் துகள்களின் இருப்பிடமாக தேனியை மாற்றி வருகிறார்கள்.பொட்டுப்புரம் அம்பரப்பர் மலையில் முள் வேலிகள், தண்ணீர் தொட்டிகள், காவல் அரண்கள் சாதாரண மக்களையும் அவர்கள் மேய்க்கும் ஆடு மாடுகளையும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.   

நியூட்ரினோ  கூடம்  பிரபஞ்சத்தை முழுமையாக அறியவும் இயற்கை சீற்றங்களை முன்னதாக அறியவும்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.அம்பரப்பர் மலையை குடையவும், வெடிவைத்ஹ்டு தகர்க்கவும், துளையிடவும் வேண்டியிருப்பதால் சுற்றுசூழல் கேடு நிச்சய்ம் ஏற்படும். அணுக்கழிவுகளின் சேமிப்புத் திட்டமாகவும் இது பின்னால் மாறும்.  இதனால் விவசாய நிலங்கள் பயனற்று போகும் என்பது பயம் கொள்ள வைக்கிறது. எதிர்ப்பும் போராட்டமும் தருமிடமிடமாக தேனி மாறி விட்ட்து.
குப்பை உலகம்  நூல் தற்போது மறுபதிப்பில் :

 சூழல் அறம் என்ற தலைப்பில் என்சிபிஎச் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் “ குப்பை உலகம் “ நூல் பற்றி
தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் தினமணியின் “  தமிழ் மணி “ யில்::
     சுப்ரபாரதிமணியன் திருப்பூரில் இருந்து கொண்டு தமிழ் கூறு நல்லுலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்  என்றால் அதற்குக் காரணம் அவரது அறச்சீற்றம். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அவர் எழுப்பும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், செவிட்டு உலகம்  அதைக்கேட்க மறுக்கிறது. அதனாலென்ன.. அவர் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார். இருப்பார்.
   சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய 25 கட்டுரைகளின் தொகுப்பை “குப்பை உலகம்என்கிற தலைப்பில்  புத்தகமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். சுற்றுச்சூழலை  மாசுபடுத்தும்  எல்லாப் பிரச்சனைகளையுமே இந்தக் கட்டுரைத் தொகுப்பு தொட்டுக்காட்டுகிறது.. தொட்டுக் காட்டுகிறது என்றா சொன்னேன், இல்லை. நம்து மூளையில் உரைப்பது போல சுட்டிக் காட்டுகிறது.
“பாதரசத்தின் உற்பத்தியில்  பாதி அளவு மின்னணு பொருட்களின் தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. பாதரசம் நிலத்தடி நீரில் கலந்து  குடிநீராக சுலபமாக வீட்டுக்குள் வந்து சேருகிறது. இரத்தத்தில்  சிறுகச்சிறுக சேர்கிறது.மூளை , சிறுநீரகம், , கல்லீரல் போன்றவற்றை மெல்ல மெல்ல பாதிக்கிறது. மனிதனின் நினைவுகளை பாதிக்கிறது. கருவுறுதல், இனப்பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி மின்குப்பைகளால் பாதிப்பு, பிளாஸ்டிக்குகளால் பாதிப்பு, துரித  உணவால் பாதிப்பு என்று ஏற்படுவதுடன் உலகம் குப்பையாகிக் கொண்டே வருகிறது.
      சுப்ரபாரதிமணியனின் இந்தப்புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு ஆர்வலராகி விடுவார்கள். நீங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை செலுத்துபவரா. ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அய்ந்து இளைஞர்களுக்கு இந்தப் புத்தக்த்தை வாங்கிப் பரிசளியுங்கள். அவர்களை இந்தப் பிரச்சினை பாதிக்குமேயானால்  அய்ந்து பேருக்கு அதேபோல் வாங்கிப் பரிசளிக்க பணியுங்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை நாம் தமிழகத்தில்  செய்து விடலாம்,( ரூ 50 , வெளியீடு : சேவ் அமைப்பு, 5 அய்ஸ்வர்யா நக்ர், கே என்பி காலனி, தாராபுரம் சாலை, திருப்பூர் 98422 13011 )


வியாழன், 13 ஆகஸ்ட், 2015

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்
                                                                      சுப்ரபாரதிமணியன்
      போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது.  கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது  பழைய போபால்... யூனியன் கார்பைடு  தொழிற்சாலைக்கு அருகாமையில்  சுலபமாய் 5 கி மீ பகுதியில் வசிப்பவர்கள் படும் சிரமங்களை    நினைத்துப் பார்க்கவே வேதனை பெருகுகிறது
   போபால் நினைவுச்சின்னம்  பார்க்க கெடுபிடிகள்  சோர்வைத் தந்தன. முகப்பு காவலாளிகள் கும்பல் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார்கள். ஆங்கிலம் எதற்கும் பயன்படாது போலிருந்தது. வற்புறுத்தவே ஒரு காவலாளிகூடவே வந்து   பொது நல அதிகாரியைப் பார்க்கச் சொன்னார்கள். அவர் இன்னொருவரை துணைக்கனுப்பினார். இருவரும் கூட இருக்க நினைவுச் சின்னத்தைப் பார்த்தோம். போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவு கூற ஒரே ஒரு  மலர்வளையம் மட்டுமே நினைவுச்சின்னத்தின் கீழ் இருந்தது. ஒரே ஒரு  மலர்வளையம் வைக்க மட்டும் அனுமதியா. அல்லது யாரும் கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வி மனதில் வந்தது. ஹோப் அண்ட் ஹோமேஜ் என்ற ஆங்கில எழுத்து  வரிகள் மின்னின.புகைப்படம் எடுத்த கணத்திலேயே உடனே கிளம்பச் சொன்னார்கள். அந்த இரு காவலாளிகளும் நாங்கள் வெளியேறுவரை முகப்பு கதவு வரை எங்கள் கூட இருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள்., அதன் பின்புறம் இருந்த 6 கி,மீ அப்பால் இருந்த  யூனியன் கார்பைடு  தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டோம். சில புகைப்படங்கள் எடுத்தோம். துரத்திவந்தவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர், உள்ளே கொட்டிக் கிடக்கும் கழிவுகள் பல ஆயிரம் டன்கள் நிலத்தையும் , நீரையும் தொடர்ந்து மாசுபடுத்தி மக்களை நோயாளிகளாகவும் பிணங்களாகவும் ஆக்கியிருக்கிறது.  திருப்பூரில் சாயக்கழிவுகள் அங்கங்கே கொட்டிக்கிடப்பது ஞாபகத்திற்கு வந்தது.இன்னும் போபால் கார்பைடு தொழிற்சாலைக்குள் 18,000 டன் நச்சுக்கழிவு கொட்டிக்கிடக்கிறது. ( திருப்பூரின் இவ்வாண்டின் பின்னலாடை சார்ந்த  அந்நிய செலவாணி வருமானம் 18,000 கோடி ரூபாய் என்ற ஞாபகம் வருகிறது.). முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே 2000 லாரிகள் கொள்ளுமளவு கழிவு அங்கிருந்தது. கழிவைக் கொட்ட 32 ஏக்கர் பரப்பு குளம் அமைக்கப்பட்டு அதில் கழிவு தேங்கியிருக்கிறது.  இது போபால் நகரைச்சுற்றியிருக்கும் மண்ணையும் நிலத்தடி நீரையும் நச்சாக்கி விட்ட்து.இந்த நச்சுக் கழிவை எரிக்கும் முயற்சியில் 10 பேர் பார்வையிழந்ததால் அதுவும் கைவிடப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட்து. ஜெர்மனிக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஜெர்மன் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இவற்றை அக்ற்றக்கோரி அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அங்கு நிராகரிக்கப்பட்டன.புதிய டவ் நிர்வாகமும் மத்திய அரசும் இதில் கண்ணாமூச்சியும், பாராமுகமும் காட்டுகின்றன.
        சுற்றிப்பார்த்த போது தொழிற்சாலையின் சுவர்களில் நிறைய வாசகங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருந்தன.டவ் கெமிகல்ஸ் நிர்வாகமே. இந்தியாவை விட்டு வெளியேறு. இனி உனக்கு இங்கு வேலை இல்லை” “ குற்றவாளிகளை தண்டிக்கவும் “.      “ நஷ்ட ஈட்டுத் தொகையை சரியாக வழங்கு.  தொடர்ந்த மருத்துவ  வசதி செய்து கொடு”  “அரசே.. கெட்டுப் போன சுற்றியுள்ள பகுதிகளை சீர் அமை . பாதிகப்பட்டவர்களுகு அவர்களின் உடல் நலம்  பற்றிய  புத்தக ஆவணங்களை வழங்கு “ என்றபடி அந்த வாசகங்கள் இருந்தன, 
    முப்பதாண்டுகளுக்கு முன்னால் டிசம்பரின் அந்த குளிர்நாளில்  வழக்கமான பராமரிப்பு பணியின்போது  துருப்பிடித்த குழாய்கள் கசிந்து ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் பாய்ந்தது. புகை மண்டலம் மேலெழுந்து  தொழிற்சாலையைத் சூழ்ந்து கொண்டது. மரணப்பிடிக்குள் போபால் நகரம் வந்து விட்டது.கண் எரிச்சல், மூச்சுத்திணறில் மக்கள் மூச்சடைத்தது.  பலர் செத்து விழுந்தனர். பலர் கண்ணில் பட்ட ( எரியும் கண் காட்டிய ) கழிவுநீர்க்  குட்டைகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். வாந்தியும் , மலமுமாக விழுந்து தவித்தனர். உடனடியாக 10,000 பேர் செத்துமடிந்தனர். தொழிற்சாலையை சுற்றி இருந்த 6 லட்சம் மக்களின் நுரையீரல்களில் விச வாயு புகுந்து இன்னும் பாதிப்பைத் தந்து வருகிறது. செத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது போல பாதிக்கப்பட்டவர்கள் குற்றுயிரும் குலையுமாக வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சம் பேர் 15 வயதிற்கும் குறைவானவர்கள். அவர்களில் பலரை விசவாயு பற்றிய 30 ஆண்டு நினைவு நாள் மேடையில் , கூட்டத்தில்  போபால் விசவாயு பீடிட் மகிளா உத்யோக் சங்காதன் ஏற்பாடு செய்திருந்த சுல்தானியா ஜனன மருத்துவமனை பூங்காவில் நடந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.  மேதா பட்கரின் ஆவேசமான பேச்சில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது  ,நானும் என் பங்கிற்கு ஒரு கவிதையை எழுதினேன்.
எங்கள்து கண்கள் பறிக்கப்பட்டபின்
எங்கள் உயிர்கள் பிடுங்கப்பட்ட பின்
நாங்கள் நடைபிணங்களான பின்
நீங்ள் செய்ய ஒன்றிருக்கிறது.
வருடாந்திர திதிக் கூட்டம்
மலரஞ்சலி
கொஞ்சம் பூக்கள்
சிலவரிகளில் கொஞ்சம் கவிதைகள்.
பிறகு அடுத்த வருட்த்திற்கு காத்திருப்பது.
மேத்தா பட்கர் முழங்கிக் கொண்டிருந்தார்” “ மோடியிடமும் , முதலமைச்ச்ர் சிவராஜ் சவுகானிடமும் இன்னும்   அதிகம் எதுவும் எதிர்பார்க்க முடியாது “
பூங்காவின் முகப்பில் மூன்று பொம்மைகள். நீதித்துறை, சட்டம், பன்னாட்டு கம்பனிகள் கம்பீரமாய எங்களை ஒன்றும் செய்து விட முடியாது  என்ற நோக்கில் நின்று கொண்டிருந்தார்கள். மேத்தா பட்கர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

 இந்திய விவசாய புரட்சி உரங்களைக் கட்டாயமாக்கி விட்டபோது   பூச்சி கொல்லி மருந்துகளுக்காக, செயற்கை உரங்களின் உறபத்திக்காகத்  தொடங்கப்பட்டதுதான் போபால்  யூனியன் கார்பைடு தொழிற்சாலை. செத்து விழுந்தவர்கள், மாடுகள் என்று எல்லோருக்கும் ஒரே இடத்தில் எரியூட்டு நடந்திருக்கிறது.  அவை எரியூட்டப்பட்ட போது எழுந்த புகை  அதைச் செய்த ராணுவத்தினரை பாதித்து மூச்சு திணற வைத்திருக்கிறது.
இன்னுன் பாதிப்பாய் 300% குறைப்பிரசவம். 200% சிசு மரணம் நிகழ்கிறதாம். இன்னும் 2 லட்சம் பேர் பாதிக்கபட்டு சிரம்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உயிர் பழைத்தவர்களை பெரும் பாலும் தாற்காலிக பாதிப்பிற்கு உள்ளானவர்ளே என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.பாதித்த ஆறுமாதற்குப்பின் மத்திய பிரதேச அரசு 87 கோடி ரூபாய் ஒதுக்கி ஆரம்பத்தில் ரூ200 பிறகு 750 ரூபாயும் நிவாரணம் தந்தது. குடும்பத்திற்கு 1500 ரூபாய் . 13 ஆண்டுகளுக்குப் பின்  யூனியன் கார்பைடு நிறுவன பங்குகள் விற்க முற்பட்டபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு 500 கட்டில்கள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை நிறுவி எட்டாண்டுகள் இலவச சிகிச்சை தர  ஆணையிட்டது. அந்த மருத்துவம்னை வளாகத்தில்தான் நினைவுச்சின்னம் உள்ளது. ஹோப் அண்ட் ஹோமேஜ் என்ற ஆங்கில எழுத்து  வரிகள் மின்னிக் கொண்டிருக்கிறது.நம்பிக்கை  பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மையோருக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைதான் இழப்பீடு தரப்பட்டிருக்கிறது.
                  விபத்து நடந்த அடுத்த ஆண்டு “ போபால்  விச வாயு கசிவுச் சட்டம் “ ஒன்றை மத்திய அரசு நிறைவேற்றி யூனியன்கார்படிடுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் ரூ1750 கோடியை இழப்பீட்டு வைப்புத் தொகையாக  அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால்   அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றமும் வழக்கு இந்தியாவில்தான் நட்த்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்திய அரசு இரு மடங்குத் தொகையைக் கேட்ட்து. ஆனால் அதில் 15% தந்து நிர்வாகம் விலகிக் கொண்டது. பல்வேறு தன்னார்வக் குழுக்கள் நீதிமன்றத்தை அணுக 2010ல் தொழிற்சாலையின் இயக்குனர், செயல் தலைவருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை தந்தது. உடனே அவர்கள் பிணையில் வெளிவந்து விட்டனர். மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கிரது இன்னும். அந்த்த் தீர்ப்பில் அதன் நிறுவனத்தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு குறிப்பு இல்லை. அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம்  தன்னைக்குற்றவாளியாக்க இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நிராகரித்தது. வாரன் ஆண்டர்சன் மீது உயிர்ப்படுகொலைக்காக வழக்குமன்றம் பின் 10 ஆண்டு சிறை வழங்கினாலும் அவர் ஆஜராகாததால் தப்பியோடியக் குற்றவாளி என்றும், இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்ட்து. ஆண்டர்சனை ஒருமுறை கைது செய்து பின் மத்திய அரசு அவர் தப்பிப் போக வழிசெய்தது. உச்சநீதிமன்ற வழக்கொன்றும் கிடப்பிலேயே உள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கான  நிவாரணத் தொகை சொற்பமாகவே இதுவரை கிடைத்துள்ளது.      

   போபால் பேரழிவு பற்றி 1991 ல் மகேஷ் மதாஷ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. பல ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவுபடுத்துகிற விதமாய் ரவிகுமாரின் இயக்கத்தில் போபால்: ஏ பிரேயர் பார் ரெயின் “ என்ற திரைப்படம் வெளிவந்திருக்கிறது. யூனியன் கார்படு தொழிற்சாலையின் முக்கியஸ்தரான ஆண்டர்சன்  சென்றாண்டு இறந்து போனதால் இப்படம் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கியிருந்தன.  திலீப் என்ற ரிக்‌ஷா தொழிலாளிக்கு  யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது.அந்த ஆலைக்குள்  நடக்கும் விபத்து காரணமாக பணியாளர் ஒருவர் இறந்து விட  அந்த வேலைக்கான எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும் அவனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. பல அப்பாவிகள் முன்னமே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அதேபோல் அவனுடனும் சிலர் சேர்கிறார்கள்.  அவனின் சகோதரியின் திருமண நாளில் கசியும் விச வாயு கசிவு காரணமாக திருமண விழாவுக்கு வந்த பலர் செத்து விழுகிறார்கள். கண் எரிச்சல், உடல் உபாதைகளால் பலர் கழிவு நீர் குட்டைகளுக்குள்  விழுந்து செத்துப்போகிறார்கள். மருத்துவமனைகளில் பிணக்குவியல். சாலைகளில் பிணக்குவியல்.வாந்தியும், பேதியுமாய் செத்து விழுபவர்கள் பலர்.. தொழிற்சாலையில் ஏற்படும் சிறு அளவிலான பழுது கண்டு பிடிக்கப்படுகிற போது மேலாளர் வெளியே சொல்லாதே . வேலை போய் விடும் என்று மிரட்டி விடுகிறான்.சாதாரண ஏழையான திலீப் தன் வாழ்க்கையை கார்பைடு தொழிற்சாலை வேலை மேம்படுத்தும் என்ற கனவில் இருந்தவனுக்குப் பேரிடி.. vissவிசவாயு கசிவு எவ்வித பராமரிப்பும் இல்லாமல் ஆலை ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு உள்ளூர் பத்திரிக்கையாளனிடம் சொன்னாலும் அதை பத்திரிக்கை எச்சரிக்கையாக்குவதற்கு முன் விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. திலீப் இந்த செய்திகளை முன்னம் உள்ளூர் பத்திரிக்கையாளன் மோத்வானிக்குச் சொல்லியிருக்கிறான்.  மோத்வானி விசாரிக்கையில் கார்பைடு ஆலையில் நடக்கும் பல் முறைகேடுகள் தெரிய வருகின்றன. எழுதுகிறார். தொழிற்சாலையைப் பார்வையிட வரும் ஆண்டர்சன் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை மாற்ற முயல்கிறார். அரசியல்வாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்.      பாதுகாப்பு கெடுபிடிகள் எங்கள் நாட்டில் அதிகம் என்பதாலேயே இந்தியாவில் இந்தத் தொழிற்சாலையை அமைத்தோம். இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கும் என்றால் இங்கு அமைக்க வேண்டியதில்லையே “ என்கிறார். இப்படத்திலும் வாரன் ஆண்டர்சன் சற்றே மனிதாபிமானம் உள்ளவராகவும், கடின உழைப்பாளியாகவும் காட்டப்பட்டிருக்கிறார். திலீப்பின் குடும்பத்தைச் சார்ந்தே படம் இயங்குகிறது. விபத்துக்கும் முன் தொழிற்சாலை நடவடிக்கைகளும்  சிறுசிறு விபத்துகளும் அதிர்வுடன் காட்டப்பட்டுள்ளன. விபத்திற்குப் பின் சொல்லப்பட்ட விசயங்கள் குறைவாகவே இருக்கின்றன.வாரன் ஆண்டர்சன், அரசியல்வாதிகள் மீதான விமர்சமும் குறைவாகவே இருக்கிறது. பலியானவர்களுக்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ கிடைக்காத அநீதி பற்றி அதிகம் இப்படம் பேசவில்லை. என்பது குறைதான். ஆனால் இன்றைய தலைமுறை இப்பேரழிவை அறிந்து கொள்ள இப்படம் ஆதாரமாக அமைந்துள்ளது.போபால் மக்களின் வாழ்க்கையோடு வெகு நெருக்கமாக அப்படம் இல்லை. ஆனால் போபால் பற்றிய உண்மைகளைக் கொண்டிருந்த படம்.
மத்திய பிரதேச முதல்மந்திரி 30 ம் ஆண்டு நினைவை ஒட்டி அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்ட்த்தில் பேசும் போது                            “பாதிக்கப்பட்டவர்களின் குரலை சரியாகப் புரிந்து கொண்டுள்ளோம் “ என்று பேசினார்.பாதிக்கப்பட்டவர்களின் ஈனக்குரலினைச் சொல்லும் படம் இது.
  கூட்டம் நடந்த் இடத்திற்கு மேற்பகுதியில் ஒரு ஏரி தென்பட்டது. சென்ற போது ஏரியின் மீது ஒரு அம்மன் கோவில் தென்பட்டது.. அம்மன் கர்ப்பகிரகத்தைச் சுற்றிலும்  இரும்பு கம்பி பார்டர் . அதில் வேண்டுதல் போன்று சிறு சிறு துணிகள் கட்டப்படிருந்தன. அதில் பிளாஸ்டிக் பைகளும் நிறைய கட்டப்பட்டிருந்தன. சிறு துண்டுத்துணிகளுக்கு மாற்றா அவை. நேர்த்திக்கடனுக்கு பிளாஸ்டிக்கும் வந்து விட்டது  தெரிந்தது.  நடந்த களைப்பு  தீர  கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தேன். கால்கள் அம்மன் இருக்கும் திசையில் இருந்தன. உடல் ஊனமுற்றவன் ஒருவன்   என்னைப் பார்த்து முறைத்தான். அவனை கோவிலைச் சுற்றிப்பார்த்தபோது கவனித்திருந்தேன். இரு கைகளையும் சேர்த்து கடவுளை நோக்கி கூப்ப முடியவில்லை.. கைவிரல்கள் சேர சிரமப்பட்டன. நான் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்ததை அவன் ஆட்சேபிப்பது தெரிந்தது. கால்களைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்  அந்த ஏரியிலிருந்து சிறு செம்பில் நீர் மொண்டு கொண்டு வந்து பலர் அம்மன் மேல் விடுவது தெரிந்தது. உடம்பும் முகமும் கோண அவனும் தண்ணீர் கொண்டு வந்து விட்டான். கோபத்தில் என்தலையில் ஊற்றி விடுவானோ என்ற பயம் இருந்தது  அவனுடன் மெல்ல பேச்சு கொடுத்தேன். முப்பாதாண்டுகளுக்கு முன் அவன் சிறு குழந்தையாக  இருந்திருக்கிறான. விச வாயுவால் பாதிக்கப்பட்ட்வன் நான். என் வீட்டில் இருவர் இப்படி. எல்லா வீடுகளிலும்  யாராவது இருக்கிறார்கள் என்னைப் போல் ஊனத்துடன் “
           போபாலில் பலரைக்கவர்ந்த இடம் ஹனுமன் கஞ்ச்.  அங்கு ஹனுமன் கோவில் கட்டப்பட்டது குறித்த ஒரு கதை உள்ளது. பேகம் ஹாஜகான் ஆட்சி காலத்தில் நடந்ததாம் .  கமால்மகராஜ் என்ற சாமியார் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடவுள் வழிபாடு செய்து வந்தாராம். வழிபாட்டின் போது சங்கு ஊதுவாராம்.அது பேகம் அவர்களுக்கு தொந்தரவு தந்திருக்கிறது. அவரைக் கொல்ல ஆணையிட்டிருக்கிறார்.  படை வீரர்கள்  அவரைத் தேடிப் போன போது அவர் இறந்து கிடந்திருக்கிறார்.  ஆனால்  வழிபாட்டு நேரத்தில் சங்கொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. படைவீரர்கள்  அவர் உடலை வெட்டி பிய்த்துப் போட்டு விடுகிறார்கள்.அதன் பின்னும் சங்கொலி கேட்கிறது.
        யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த அந்த விபத்தின் போது உடனடியாக எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டும். ஒலிக்கவில்லை. அது அணைத்து வைக்கப்பட்டிருந்த்தாம்.
  இப்போது சொல்லப்படுவதெல்லாம் செவிடன் காதில் ஊதப்படும் சங்கின் ஒலியாகத்தான்  இன்றைக்கு இருக்கிறது..தங்கள் முதுகிலும் மனதிலும் பிணங்களைச் சுமந்து கொண்டு ஊர் முழுக்க பலர் சபித்தபடி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.செத்துப் போன சவங்களின் விலை சொற்பமாகத்தான் இருக்கிறது.


subrabharathi@gmail.com  / 8-2635 pandian nagar, tiruppur  641 602” சப்பரம்  “ இப்போது மறுபதிப்பில்..

என்சிபிஎச் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் சப்பரம் நாவல் வெளியீடு:

    “ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும்  “
        காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை. அதைப் பெற அவர்கள் போராட வேண்டும்.

 “ என்று திருப்பூரில் நடந்த நாவல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள்  தெரிவித்தனர்.
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின்   சப்பரம் “ என்ற நாவல் வெளியீட்டு விழா பெருமாநல்லூர் சாலை    முயற்சி “ அலுவலகத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை  தாங்கினார்,       சப்பரம் “ நாவல் திருப்பூர் பகுதி நெசவாளர் குடும்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்படிருந்தது.( சென்னை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது விலை ரூ100)   நாவலை வெளியிட்டு கலால் சேவை வரித்துறை ஆணையர் ஏ.கே.ரகுநாதன் IRS -அய்.ஆர்.எஸ் ( ஓய்வு ) பேசுகையில் திருப்பூரில்  பனியன் தொழில் நிறுவப்படுவதற்கு    முன்பு நெசவுதான் பிரதான தொழிலாக இருந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நெசவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உணவு, கல்வி,  மருத்துவம் என்று அவர்களின் தேவை நிறைவேற்றப்படாததால் அவர்கள் பனியன், பவர்லூம் என்று சென்று விட்டனர்.என்றார்.நாவலின் முதல் பிரதிகளை பாரதிவாசன்( பதியம்), தமிழ்ச்செல்வி          ( சமூகநீதிப்பதிப்பகம்) , செ. நடேசன் ( தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்-முன்னாள் மாநில செயலாளர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
   நாவலை அறிமுகப்படுத்திய கவிஞர் ஜோதி                “ ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு.. அது நசிந்து விட்ட்து “ என்றார்.    
              ஏற்புரை நிகழ்த்திய நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன்: “   காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை. அதைப் பெற அவர்கள் போராட வேண்டும். சொசைட்டியில் நெய்யும் நெசவாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள். சொசைட்டிகள்  பெரும்பாலும் ஊழல் மயமாகவும், அரசியல்வாதிகளின் பிடியிலும் உள்ளன. அண்ணா, கலைஞர் போன்றவர்கள் அவர்களின் ஆட்சி காலத்தில்  தோளில் கைத்தறி துணிகளைப் போட்டு விறப்னை செய்து முன்னோடிகளாக இருந்தனர். தொழிலாளி அந்தஸ்து, உரிமைகள் பெற  நெசவாளர்களின் ஒன்றுபடுதலும் போராட்டமும் தேவை. அப்போதே அவர்களுக்கு ஓரளவு சமூக பாதுகாப்பு கிடைக்கும்.உலகமயமாக்கல் கைத்தறி நெசவு போன்ற புராதன தொழில்களை ஒழித்துக் கொண்டு வருகிறது.இயந்திரமயத்தில் அவர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் முடைவோர், பட்டு, கோரா, பம்பர் நெய்பவர்கள் எல்லோரும் நெசவாளர்களே. ஆனால் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் நெய்பவர்கள் வறுமையின் கோட்டின் கீழ்தான் இருக்கிறார்கள். பட்டு, பம்பர்கோரா கைத்தறியில் நெய்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களாக இருப்பது ஆறுதல் தருகிறது. 1 கோடி பேர் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கைத்தொழிலை சொந்தத் தொழிலாக கொண்ட குடுமப்ங்களில் இந்த அவலம் இல்லை.  அது நெசவோ, மர வேலையோ.... எம்பிஏ படித்தவன் 5,000 ரூபாய்க்கு அலைய வேண்டி உள்ளது. நெசவாளர் வீட்டுப்பையன்  சுலபமாய் அதை விட 4 மடங்கு சம்பாதித்து விடுவான். ஆனால் நெசவாளி அவனது மகனை  நெசவாளி ஆக்க விரும்புவதில்லை. நெசவுத்தொழில் சரியான ஆட்கள் இல்லாமல், புதிய தலைமுறையினரின் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. நெசவாளி சம்பாதித்து குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் ஆக்குகிறான். ஆனால் நெசவாளன் குடும்பத்துக்கு பெண் தர விருப்பமிருக்காது பலருக்கு. படித்தவன் கணிசமான வருமானம் இருந்தாலும் நெய்வதில்லை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் தொழில் நடக்கும். தனியாள் வேலையாக அது இல்லை..என்றார்
   கருணாமனோகரன் எழுதிய “ சாதி-வர்க்கம்-தேசியம்நூல் பற்றி செ, நடேசன், தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். கருணாமனோகரன் திருப்பூரில் வாழ்ந்து மறைந்த மார்ச்சிய சிந்தனையாளர். அவரின் 7 நூல்களை சேர்த்து கோவை சமூக நீதிப் பதிப்பகம்“ சாதி-வர்க்கம்-தேசியம்”  என்ற நூல் வெளியிட்டுள்ளது.( ரூ 400 விலை ) முன்னதாக கனல்மதி,பாரதிவாசன், சிவதாசன், ரகுசெல்லம், ரத்தினமூர்த்தி , மதுராந்தகன்,அரசபாண்டியன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். கல்வி மேம்பாட்டுக்குழுத் தலைவர் காங்கயம் சு.மூர்த்தி         “ போபால் கல்வி யாத்திரை “ என்ற தலைப்பில் பேசினார். கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம்), சிதம்பரம்( முயற்சி ), குமார் ( தமிழ் வளர்ச்சித் துறை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழ,விசுவநாதன் நன்றி கூறினார்.

புதன், 5 ஆகஸ்ட், 2015

விலங்குகள் பற்றிய நினைவுகளோடு  குழந்தை மனம் கொண்டவர்களும்
 பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு
 ---------------------------------------------------------------------
                                   சுப்ரபாரதிமணியன்

    இறையன்புவின் மொத்த சிறுகதைகளின் இயல்பை  தத்துவதரிசனங்களால் மனிதர்களின் வாழ்க்கையை வளப்படும் செயல்கள் பற்றிய எண்ணங்கள்,விலங்குகள் மீதான கரிசனம், முதியோர்களின் உலகம், காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையின் கீறல்கள் என்று சிலவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த சட்டகத்தினையே இறையன்புவின் பூனார்த்தி சிறுகதைத் தொகுப்பிலும் காண நேர்ந்தது. எளிமையான கதைகள், செய்திகளைச் சொல்லும் இயல்பில் பூடகத்தன்மை, தீவிரமான அனுபவங்களைச் சொல்கிறபோதும் வெகு இறுக்கமானகதை சொல்லல் பாணியையும் வாக்கிய அமைப்புகளையும் கொண்டிராமல் எளிமையாகவே சொல்லும் இயலபு ஆகியவற்றையே அவரின் சிறப்புத்தன்மை என்று சொல்லலாம். தத்துவார்தத நெறிகளை நெறிப்படுதும் செயல்கள் , எண்ணங்களை முதன்மைப்படுத்துகிறார்.  உலக நெறிகளைச் சுட்டிக் காட்டி நமக்கு வாய்க்கும் அனுபவங்களின்  மூலமான  அனுபவத் தெளிவிற்குக் கொண்டு போகிறார். அதிலும் அற்றிணை உயிர்களையும் தத்துவ நெறிக்குள் உட்படுத்து படைப்பு எண்ணங்களை இவரிடமிருது பெறும் போது அவை மனிதர்களுக்கானது என்றே தோன்றுகிறது. தத்துவார்த்த நெறிகளை தாவரங்கள், பிராணிகள், பறவைகள் போன்றவற்றின் இயல்புகளோடு சில சம்பவங்கள், உரையாடல்களைக் கொண்டு வடிவமைத்து கதைகளையும் சொல்லியிருக்கிறார். பறவைகள், பிராணிகள் மூலம்  சிக்கல்களை எதிர்கொள்கிற மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்வதற்கான வழிகளைச் சொல்கிறார். அவற்றை உருவகக் கதைகள் என்று வைத்துக் கொள்ளலாம். உலகப்பொது நியதிகளை மனிதர்கள் மேலேற்றிச் சொல்வதை விட பறவைகள், பிராணிகள் மேலேற்றி சொல்வதில் நிறைய சவுகரியங்கள் இருக்கின்றன. பிரச்சாரத் தொனி அத்ற்குள் உள்ளடங்கிப் போகும். குழந்தைகள், இலைஞர்களுக்கான பல செய்திகளை அழுத்தமாகவும் முன் வைக்கலாம்.  ஆனால் யதார்த்த அனுபவக்கதைகளில் அவர் கொள்ளும் பயணம் வேறு வகையிலானது.( பயணங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் நிறையவும் எழுதியிருக்கிறார் என்பதும் இன்னொரு தகவல் ) இதில் உள்ள        விடுதலைக் கதையில் கொடுமைப்படுத்தப்படுத்தப்பட்ட ஆடுகள். அவற்றை பல சம்யங்களில் தவற விட்டுவிடுகிற ஆட்டிடையன். அதனால அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்  ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.  கொம்பு முளைத்த ஆடுகள் மனிதர்களை முட்டித்தள்ளி தங்கள் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்கின்றன.மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய  விடுதலை உணர்வும், கட்டுக்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் ஒரு வகையில்  குறியீட்டுதன்மையோடு இக்கதை வெளிப்படுத்துகிறது. கல்விகற்றுக்கொடுக்கிறவர்கள், ஆசான்கள் இவர்களைப் பற்றிச் சொல்லும் வகையில் அவர்கள் நினைனிக்கப்படுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துபவர் அவர். புதிய தலைமுறைகளின் வழிகாட்டுதலுக்காகத் தூண்களாக அவர்கள் காட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அந்த வகையில் சேவியர் என்ற வாத்யாரின் வாழ்க்கையை முன்வைக்கிறார். அவரின் சாவு கொண்டு வரும் நினைவுகளும் , ஆசிரியர் பணியின் சேவை மனப்பான்மையும் மெல்லிய இழைகளாக ஓடிக்  கொண்டே இருக்கிறது. நண்பர்களைப் பற்ரி நிறைய பேசுகிறார். நட்பு என்பது குடும்பச் சூழல்கள் போலவே போறிப் பாதுகாக்க வேண்டியது என்பதும் சாசுவதமாகிறது. கல்லூரி காதலுக்கென்றே கட்டமைகப்பட்ட ஸ்தலம் போலாகிவிட்டது. இதில் பிரிவு என்பதும் சகஜம்.  இந்த சகஜத்தை சகஜம் என்று ஏற்றுக் கொள்கிறார்களும் இருக்கிறார்கள். நவீன கலாச்சாரசூழல் இந்த சகஜசூழலை எப்படியோ கொண்டு வந்து திணித்து விடுகிறது. இந்த சகஜத்திற்குள் இருக்கும் சவுகரியங்கள் மாணவர்களின் வழ்க்கையை ஒரு வகையில்  வெகு இயல்பாக்குகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து போகச் செய்கிறது. இதை கதைகளில் சொல்கிறார்.  உயிர்த்தெழல் போன்ற கதைகளில் மகனின்  மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அப்பாவின் சோகம் தொற்றுகிறது. ஒரு தலைமுறை அப்படியும் இருந்துதான் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.  இன்றும் வெகுஜனதளத்தில் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தாலும் இலக்கிய இதழ்களில் இறையன்புவின்  படைப்புகள் வெளிவருவதில அக்கறை கொண்டிருக்கிறார் இறையன்பு அவர்கள்.  அந்த வகையில் தூரிகை என்ற இலக்கிய இதழின் பணி பற்றியும் அதன் தொடர்ந்த செய்ல்பாடுகள் பற்றியும் ஒரு சிறுகதை உள்ளது. அது நின்று போகிறது. வேறு ஒருவரின் கைக்குப்போகிறது. வேறொருவர் எடுத்து நடத்தி அதை ஆரம்பித்தவரிலிருந்து முரண் பட வேண்டுமா என்ற் கேள்வியும் எழுகிறது. இலக்கிய இதழ்களின் சிரமம், ஆனாலும் அதற்கான தனித்துவமான இடம் பற்றி   இக்கதை குறிப்பிடுகிறது எனலாம். சிறுபத்திரிக்கை சூழலில் இருக்கும் அரசியல் குழுக்கள், அவர்களின் செயல்படுகளின் மீதான விமர்சனத்தையும்  ஒரு வகையில் இக்கதை கோடிடுகிறது.   பூனார்த்தியில் கடுவன் பூனை உறவு நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தனிமையைத் தவிர்ப்பதற்காக பூனை  ஒரு உயிரி போல் செயல்படுகிறது.  மனைவி கர்ப்பமான சூழலில் அவளின் மூச்சிறைப்பிற்கு பூனையின் நடமாட்டம் ஒரு காரணம் என்பதை கண்டடைகிற கணவன் அதை அவளிடம் சொல்வதில்லை. அதன் மீதான் அவளின் அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. பூனை பிரசவத்தில் இறந்து போகிறது. பூனை இறந்த்து பற்றி மனைவியிடம் அவன் சொல்வதில்லை.  பூனார்த்தியின் நினைவுகளோடு அவளின் குழந்தை வளர்வதைச் சொல்லும் கதை மிக உயர்ந்த சிகரங்களைத் தொட்டு  கதை சொல்லும் முறையிலும்,  நுணுக்கமானத் தன்மையிலும் தனித்து நிற்கிறது.  தியாகராஜன் கற்பகம் தம்பதிகள் 60 வயதைக் கடந்தவர்கள்.  ஆனால் மூளை வளர்ச்சியில்லாத ஒரு உயிரை  காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தை இயல்பாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.  அந்த இயல்பு அந்த முதிய வாழ்க்கையும், வயதின் முதிர்ச்சியும் கொண்டு வந்த வரப்பிரசாதங்களாக இருக்கிறது. இதை விவரிக்கும் போது எந்த இளைய மனமும் அவ்வகை சேவைக்கு தன்னை ஈடுபடுத்த விளையும் என்பதே இக்கதையின் நோக்கமாகவும் கூட கொள்ளலாம். குழந்தை மனங்களோடு வெகுளித்தனைத்தையும், வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சாதாரண் மனிதர்களின் பாசமும் , நெகிழ்வு எண்ணங்களால்  சிந்தனைகளை நிறைக்கிறார். இந்த நோக்கங்களையோ, பல சமயங்களில்  சில செய்திகளையோ, தான் கண்டுணர்ந்த அனுபவங்களையோ இந்தக் கதைகளை மூலம்விரித்துச் சொல்வதில் சுவாரஸ்யமான  வாசிப்பும் படிப்பும் நோக்கமும் ஒருங்கே தட்டுப்படுகிறது.

( பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு ரூ 80  விஜயா  வெளியீடு, கோவை)

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

மறுபதிப்பு : தேனீர்  இடைவேளை நாவல் இரு விமர்சனங்கள்

1. நாமும் கொத்தடிமைகள்தான்:
 கோவை ஞானி


            நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும்.
            ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
            பிறந்த காலத்தை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது/கூடாது. நிகழ்காலத்தை எப்படியோ நகர்த்தி ஆகவேண்டும். திருமணத்திற்கு வழி இல்லை என்றால் உடல் தினவை எப்படித் தீர்த்துக்கொள்ள முடியும். சோரம் போக வேண்டும். இதில் ஆண்களுக்கு இருக்கிற சில வாய்ப்புகளும், வசதிகளும் பெண்களுக்கு இல்லை. பெண்கள துயரப்பட வேண்டும். கருக்கலைப்பு என்பது எளிதான காரியம் இல்லை. எத்தனையோ சங்கடங்களுக்கிடையே செய்தாக வேண்டும். சின்னவயதில் படித்த கல்வி இப்பொழுது கை கொடுப்பது இல்லை. பெரிய படிப்பு படித்திருந்தாலும் கூலி வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும். தன்மானத்தைக் காத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் இன்றைய கூலி, உழைப்பு என்பது கொத்தடிமைத் தொழிலுக்கு மேம்பட்டதாக இல்லை. தன் வயிற்றைக் கழுவிக் கொள்ள, தன்னைச் சார்ந்தவர்களுக்கு 2 வேளை உணவாவது இட, இன்னொருவருக்கு கொத்தடிமைத் தொழில் செய்தாக வேண்டும். குடிநீர், சுகாதாரம் முதலிய வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாத அல்லது குறைந்த அளவுக்கே இருக்கிற கொட்டடிகளில்தான் குடியிருந்தாக வேண்டும். பக்கத்தில் எங்காவது நூலகம் இருந்தால் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு கொஞ்சகாலம் அலைந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு, சிந்திப்பதற்கு, வெளியிடுவதற்கு இங்கு என்ன வாய்ப்புகள் கிடைத்துவிடும். கொஞ்சம் கவிதைகள் எழுதி, தானே வாசித்து மகிழலாம். நண்பர்கள் சிலரோடு வாசித்து மகிழலாம். மீறி மீறிப் போனால் ஒரு சிற்றிதழ் நடத்தலாம். அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். தன்னைக் கவிஞன் என்று கதாசிரியன் என்று சொல்லிக் கொள்ளலாம். தன்னைத் தானே இப்படி விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனபிறகு இதுவும் சாத்தியமில்லை.
            சுருக்கமாகச் சொல்வது என்றால் இன்றைய நெருக்கடிமிக்க வாழ்க்கைச் சூழலில் கனவுகளோடு, பெரிய லட்சியங்களோடு, தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கை சமூகத்தில் பெரும்பாலானர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியன் மட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்தக் கதையை நெடுங்காலமாக நிறையவே சொல்லி வருகிறார்கள். நெருக்கடிகள் அதிகரிப்பதற்கு ஏற்ற விகிதத்தில் மனிதருக்குள் தகர்வுகளும் அதிகரிக்கின்றன. இதைச் சொல்வதற்குத்தான் படைப்பாளிகள் புதிதாக எழுத வேண்டியிருக்கிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் பற்றி ஏராளமான விவரங்களை சுப்ரபாரதிமணியன் சொல்கிறார். கோவை போன்ற நகரங்களில் உள்ள பெரிய பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில 10, 15 கிலோமீட்டர் தள்ளி புதிய பஞ்சாலைகள் தொடர்ந்து எழுகின்றன. பஞ்சாலைகளோடு சேர்ந்து வரிசைகளாக கொட்டகைகள். சுமார் 20/30 அறைகள் கொண்ட கொட்டகைகள். ஒரு கொட்டகையில் ஒரு குடும்பம் தங்கலாம். கொட்டகை அளவு  14/10க்கு அடி பொதுவான கழிப்பறை. தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீர் வண்ணக் கலவையில் மாற தொலைவிலிருந்து நீர் கொண்டுவந்து விற்கிறார்கள். குடம் ஒரு ரூபாய். 8 மணி நேர வேலை என்ற கட்டுப்பாடு இப்போது இல்லை. முடிந்தால் 12/16 மணிநேரம் உழைக்க வேண்டும். பெண்களுக்கும் இரவு வேலை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வரலாம். இளம் பெண்களுக்கு திருமணத்திட்டம். 5 ஆண்டு தொடர்ந்து வேலை செய்தால் 5ம் ஆண்டின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் கிடைக்கும். அதுவரை நாள் ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் கூலி. அதற்குள் எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடியாது. யாராவது வாங்கி வைத்திருந்தால் அந்த அறைப் பெண்ணின் கற்பு பற்றி கேள்வி எழும். FM ரேடியோ வைத்துக்கொள்ளலாம். பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலை பார்த்தவர்களில் VRS பெற்றுக்கொண்டு கிடைத்த பணத்தை எப்படி எல்லாமோ செலவு செய்த பிறகு இந்தத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வரலாம். தினக்கூலி மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும். தொழிலாளர் பிரிவு, தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இந்த சிறிய நாவலில் ஆசிரியர் சொல்கிறார். இத்தகைய நம் காலத்து வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக ஆசிரியரை வெகுவாகப் பாராட்டலாம். திருப்பூர் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் சூழ்ந்த எந்த ஒரு நகரத்திலும் தொழிற்சாலைக் கழிவுகளால் எத்தனையோ வடிவங்களில் சூழல் சீர்கேடு அதிகரித்து வரகிறது. புதியவகை நோய்களால் எல்லோரும் தாக்கப்படுகிறார்கள். திருமணத் திட்டத்தில், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு உறுதி இல்லை. அப்படியே கிடைத்தாலும் திருமண வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலம் இந்தப் பெண்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு இவர்கள் உடல்நலம் சீர்கெட்டுவிடுகிறது. 30 வயதிற்குள் இவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. தாயாகும் பெருமை இவர்களுக்கு இல்லை. இப்படி ஒரு அவலம் நம் காலத்திற்குரிய அவலம். இந்து மதம் பற்றி எவ்வளவோ பேசுகிறார்கள். புதிய கோயில்கள், கடவுள்கள் உற்பத்தி ஆகிறார்கள். புதிய கட்சிகளும், தொடர்ந்து உற்பத்தியாகின்றன. இந்தியா 2020ல் வல்லரசு ஆகிவிடலாம். யார் யாரோ காணும் வல்லரசு கனவுக்காக இவர்கள் தம் வாழ்வை இழந்த நொந்து சாக வேண்டும். இத்தகைய மக்கள் இந்தியாவில் எத்தனை கோடி பேர் இருப்பார்கள். இவர்களின் தொகை 50/60 கோடிகளுக்கு குறைவாக இருக்க முடியாது. இவர்கள் மூலம் எந்த இந்தியா ஒளிரமுடியும். இப்படி ஒர சோகத்தை இந்த நாவல் நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த சோகத்திலிருந்து நம்மால் மீள முடியாது. இந்த சோகத்தோடுதான் நாமும் வாழ்ந்தாக வேண்டும். இந்த சோகத்தை மாற்ற நாம் ஏதாவது செய்ய முடியுமா? ஏதாவது செய்யத்தான் வேண்டும் படித்து சுவைப்பதோடு நாம் இருந்துவிட முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். இந்த மனிதர்களை இப்படி அழிவில் ஆழ்த்துவதில் நமக்குள்ள பங்கு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமக்கான நல்ல ஆடைகளை மட்டுமா இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
            இதன் பின் நவீனத்துவ வடிவம் தேவைதானா?
            தமிழ் நால்களில் காலந்தோறும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த போதிலும், 80க்கு பிறகு பின் நவீனத்துவத்தின் வருகையோடு தீவிரமான சோதனை முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. நம் கால வாழ்வுக்குள் வந்து இருக்கிற நெருக்கடிகள். தகர்வுகள் முதலியவற்றை நுட்பமாக வெளிப்படுத்தும் முறையில் பின் நவீனத்துவம் நாவல் வடிவத்திலும் தகர்வுகள் முதலியவற்றை உள்ளடக்கிய சோதனை முயற்சிகளை விரிவுபடுத்தி உள்ளது. இத்தகைய போக்கின் தேவையை நாம் மறுப்பதற்கு இல்லை. இத்தகைய போக்கு ஒன்றுதான் தமிழ் நாவலுக்கு ஒரே வடிவமாக இருக்கமுடியும் என்பதையும் நம்மால் ஏற்க முடியவில்லை. மனிதனுக்குள் ஏற்பட்டுவரும் தகர்வை சித்திரிப்பதற்காக நாவல் வடிவத்தின் உள்ளும் தகர்வுதான் தேவை என்பதை நம்மால் ஏற்க முடியவில்லை. வாழ்க்கையில் மையம் அல்லது முழுமை இல்லைஎன்ற வாய்ப்பாட்டை வைத்து எதார்த்தவாதம் என்ற வடிவை முற்றாக ஒதுக்க வேண்டும் என்பதும் உண்மை இல்லை. நெருக்கடிகளும் தகர்வுகளும் கூட வாழ்வின் எதார்த்தங்கள் ஆகிவிடுகின்றன. எதார்த்தங்களைச் சித்திரிக்க படைப்பின் வடிவத்தை குழைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் நவீனத்துவ சித்திரிப்புகள் என்பன தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் கவர்ச்சியாகப் பேசப்பட்டு வருவதில் இருந்து படைப்பாளிகள் தப்ப முடியவில்லை. சுப்ரபாரதிமணியனும் 'சாயத்திரை' நாவல் தொடங்கி இத்தகைய எழுத்து முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
            'தேநீர் இடைவேளை' நாவலும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி என்பதில் அய்யமில்லை. கோவை முதலிய பெரிய நகரங்களில் இருந்துவந்த பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில் சிறிய சிறிய பஞ்சாலைகள் தோன்றுகின்றன. உலகமயமாதல் என்ற போக்கின் விளைவாக இங்கெல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டன. கொட்டடிகளில் திருமணத்திட்டம் முதலிய பெயர்களில் தெற்கிலிருந்து வந்த பெண்கள, இளைஞர்கள் குடியேற்றப்படுகிறார்கள். குறைந்த கூலி, வசதிக் குறைவுகள் முதலியவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் தொழிற்சங்கம் ஏற்படுத்த முடியாது. 12 மணிநேரம் கட்டாய வேலை. பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட/நீங்கிய தொழிலாளிகள் இங்கு தினக்கூலிக்கு வந்து சேருகிறார்கள். இவர்களும் கொட்டடிகளில் அடைபடுகிறார்கள். கொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும்தான் கொத்தடிமைகள் என்ற உணர்வைப் பெற முடியும். முதலாளிகளுக்குச் சேவகம் செய்கிறோம். அரசு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோம். நாளுக்கு நாள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. போராடுவதால் பயன் இல்லை. ரங்கநாதன் போல நாம் இல்லை என்றாலும் ரங்கநாதனின் அவலத்திற்குள் நாமும் இல்லாமல் இல்லை. அந்தோணி ராஜ் மாதிரி நாமும் ஷேக்ஸ்பியர் என்று மார்க்சியம் என்றும் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறோம். உலகம் நம்மிடம் இருந்தும் பறிபோய்க் கொண்டிருக்கிறது. செந்தில் மாதிரி நாமும் திண்டாட்டத்தோடுதான் வாழ்கிறோம். இப்படி எல்லாம் இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக் கொண்டு இருக்கிறோம். சீரழிவுகளோடுதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த முறையை நமக்குள் ஏற்படுத்துவதன் மூலம் சுப்ரபாரதிமணியன் நமக்கு நன்மை செய்திருக்கிறார். நாம் அவரைப் பாராட்டலாம். ஒருவரையொருவர் பாராட்டுவதன் மூலம் நமக்குள் நிம்மதி ஏற்பட்டுவிடுமா? அப்படி ஒன்றும் ஏற்படாது.
            இனி இந்த நாவலின் வடிவம் பற்றிப் பேசலாம். நாவலின் பக்க அளவு 75 மட்டும். 3 பகுதிகள். முதல் பகுதியில் 10 கடிதங்கள். 2 வது பகுதி அந்தோணிராஜ் டைரி குறிப்புகள்: 3வது பகுதி செந்திலின் டைரி குறிப்புகள். நம் காலத்தில் நமக்குள் ஏற்பட்டு இருக்கிற அவலத்தைச் சொல்வதற்கு இந்த நாவலின் இத்தகைய வடிவம் எப்படி பயன்படுகிறது. முதற்பகுதியில் உள்ள 10 கடிதங்களில் இடம் பெறுபவர்களின் வாழ்க்கையை நாவலின் மற்றப் பகுதிகளிலும் எதிர்பார்க்கிறோம். முதற் பகுதியில் இடம் பெற்ற ரங்கநாதன் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் தலைகாட்டுகிறார். முதற்பகுதியில் புத்தகங்கள் படிப்பதற்காக தேடி அலையும் செந்தில் 3வது பகுதியில் டைரி எழுதுகிறார். அந்தோணிராஜ். செந்தில் ஆகியோர் டைரிகளில் அவரவர்களின் சிந்தனைகள் தெளிவாகத் தரப்படுகின்றன. முதற்பகுதியில் இடம்பெற்ற நெருக்கடி மிகுந்த வாழ்வியல் 2/3ம் பகுதிகளில் அனேகமாக இல்லை. நாவல் அல்லது எந்த ஒரு படைப்புக்கும் மனித வாழ்வியல் மற்றும் இதன் நெருக்கடிகள்தான் சாரமாக அமைய முடியும். நாம் இப்படிக் கேட்கலாம். இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி .எம்.எஸ்யைப்பற்றி, மார்க்சைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் என்ற வடிவில் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படிக் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா? மல்லிகா முதலியவர்களின் வாழ்வைப்பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம். அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அனேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான். கொட்டடிகளை விட்டு வெளியில் சென்றபிறகு நோய் நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள். இந்தக் கதை ஏன் இன்னும் தொடர்ந்து சொல்லக்கூடாது? செந்திலுக்கோ, ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை. நாம் புரிந்து கொள்கிறோம். யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி வடிவத்தைச் சிதைப்பதன்மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? இப்படியெல்லாம் வாசகனைத் திணறடிப்பதன் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார்? ஒருவேளை நமக்குள்ளும் நாம் சிதைந்து கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்வதுதான் நாவலாசிரியரின் நோக்கம் என்றால் நம்மைப்போன்ற மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த படிப்பாளிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என்ற நம்மவரின் வாழ்க்கையை இந்த வாழ்க்கைக்குள் உள்ள நெருக்கடிகள், தகர்வுகள் பற்றிச் சித்திரிப்பதன் மூலம் நமக்குள்ளும் கூடுதலான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நம்மைக்காட்டிலும் வாழ்வின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் அவலங்களைச் சித்திரிப்பதன் மூலம் நம்மை எந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியும்? ஒருவேளை சுப்ரபாரதிமணியன் தனக்குள் இந்த அதிர்வுகளை இன்னும் போதுமான அளவுக்கு உணரவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

2. சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள்
ஆர்.பி. ராஜநாயஹம்


            Hell is a city much like London என்றான் ஷெல்லி.
            Paris is a dingy sort of Town என்று அல்மெர் காம்யு கூறினான்.
            சுப்ரபாரதிமணியனின் 'தேநீர் இடைவேளை' நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும்போது Hell is a Town much like Tiruppur என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணர முடியும்.
            அவருடைய கட்டுரைகள் 'உலக மயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்', 'கரையும் நதிக்கரைகள்', 'கடத்தல் கலாச்சாரம்' போன்றவற்றை வாசிக்கும்போது அவர் Tiruppur is a dingy sort of Town என்று வேதனைப்படுவதை உணர முடியும்.
            இந்திரா பார்த்தசாரதி பார்த்த டெல்லி மேல்தட்டு மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை. ஆதவன் விவரித்த டெல்லி நடுத்தர மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை இவற்றிலிருந்து வேறுபட்டு மணியன் தான்சார்ந்த திருப்பூர் கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையில் அரசியல் தன்மை வெளிப்படையாக இல்லாதவாறு எழுதிப்போவதைக் காண முடியும். சமூகவியல் சார்ந்து சமகால அரசியல்கலாச்சார நிகழ்வுகளின் மீதான ஆய்வாக 'தேநீர் இடைவேளை' நாவல் பிரமாண்டமாக விரிகிறது. ஒரு எழுபத்தைந்து பக்கங்களில் இதன் சாத்தியம் அதிசயம்தான்.
            உலகமயமாக்கலில் திறந்தவெளிச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருள்கள். அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களும், தண்ணீரும், வீடும் கூட அரிதாகி விடுகிற அவலம். ஐயாயிரம்கோடி அந்நிய செலாவணி கிடைக்கிற திருப்பூர் நகரம் சாயக்கழிவுகள், குப்பைகள் சேர்ந்து அழுக்காகி நாறிவிட்டது. நொய்யலாறு ரசாயணக் கழிவுகளால் சாக்கடையாகிக் கரைந்துவிட்டது. வேலை தேடி இங்கே பிழைக்க இடம் பெயர்ந்தவர்கள் விவசாயத்தையும், மரபான தொழிலையும் நிராகரித்துவிட்டு வந்திருக்கிற துயரம். சாதாரண தொழிலாளிகளும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் இங்கே அனுபவிக்கிற அவதிகள். முறையான தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்புமே இல்லாத சூழ்நிலை. மில் கொட்டகைகளில் அடைபடும் பெண்களும், ஆண்களும், கல்யாணத்திற்குப் பணம் சேர்க்க, பெண்களுக்கு மாங்கல்யத் திட்டம். வேலை நேரத்தில் எந்த ஒழுங்கும் கிடையாது. இரவில்கூட இங்கே பெண்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பழைய மில்கள் மூடப்பட்டு புதிய மில்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்டு பழைய மில்லில் வேலை பார்த்தவர்களே புதிய மில்களில் தினக்கூலிகளாக வேலை செய்ய வேண்டிய துரதிர்ஷ்டம்.
      'தேநீர் இடைவேளை' நாவலின் வடிவம் மாறுபட்டது. முதல் பகுதி எழுதப்படாத கடிதங்கள். மல்லிகா, ரங்கநாதன், ஷமீம், போஸ்ட்மேன், கண்ணம்மா, வட்டிக்கு விடும் ராஜேஷ் சிங், வாசகர், செந்தில் ஆகியோரின் கடிதங்கள்-இரண்டாவது பகுதி தோற்றுப்போன தொழிற்சங்கவாதி அந்தோணி ராஜின் டைரிக் குறிப்புகள். மூன்றாவது பகுதி யதார்த்த வாழ்க்கையில் லட்சிய உலகைக் காண விழையும் செந்திலின் டைரிக் குறிப்புகள்.
            தி. ஜானகிராமனும், அசோகமித்திரனும் பெண்ணை முழுமையாகச் சித்திரித்தவர்கள். பெண் மனதின் நுட்பங்களைத் துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்தவர்கள். 'தேநீர் இடைவேளை' நாவலில் மல்லிகா, ஷமீம், கண்ணம்மா ஆகியோர் பாத்திரங்களும் அவர்களுடைய சிக்கல்களும் சிக்கனமான வரிகளில் சுப்ரபாரதிமணியன் ஒரு பெண்ணாகவே மாறித்தான் விரித்துக் காட்டியிருக்கிறார். ரங்கநாதனின் கடிதங்களில் வெளிப்படும் கிரிஜா. அருக்காணி என்ற விளிம்பு நிலைப் பெண்கள் கூட முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள். ஷமீம் மில் கொட்டகையில் தன் அறையிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக பதினைந்து அறைகள் தாண்டி கழிப்பறைக்குச் செல்ல நேரும் நிர்ப்பந்தம். அவளுடைய அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அவளுக்கு ஏற்படும் கூச்ச உணர்வு. மிக நுட்பமான இதுபோன்ற சித்திரிப்புகளில் ஆவேசமிக்க கலைஞனாக சுப்ரபாரதிமணியனின் சாதனை வெளிப்படுகிறது. கோவில்களை ஆடம்பரமாக மில்லில் அமைக்கும் நிர்வாகம் கழிப்பறைகளை சிக்கனமாக ஏன் அமைக்க வேண்டும். ரங்கநாதன் வேறு மில்லில் வேலைக்குச் சேர்கிறார். அந்த மில்லிலும் அழகான பிள்ளையார் கோவில். பொதுவான கழிப்பறை, குளியலறை.
            ரோசாலக்சம்பர்க் மனிதகுலத்தின் தேர்வு காட்டுமிராண்டித்தனமா? கம்யூனிசமா என்று கேள்வி கேட்டதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தோணிராஜின் டைரி ஒரு சமுத்திரம் போல ஷேக்ஷ்பியரின் டெம்பஸ்ட்., .எம்.எஸ். அருந்ததிராய், தொழிற்சங்கப் பெண்கள் அம்முவும் கோவிந்தம்மாளும், தொழில் நிறுவன உலகமயமாக்கல், இந்து மத பாசிசம், கோயமுத்தூர் மில் தொழிலாளி சங்கம் கேட் மீட்டிங் கூட்டங்களின் மூலம் ஜீவா, சி.. பாலன், பாலதண்டாயுதம் ஆகியோரின் பேச்சு மார்க்சியத்திற்கு வழி திறந்துவிட்ட விஷயம். கேட் மீட்டிங்கை ஒழிக்க நிர்வாகம் கேட் முன்னால் பூங்காக்களை அமைத்தது. புரூக் பாண்ட் டீ வந்த புதிதில் தொழிலாளிகளுக்கு வாரக்கணக்கில் காலையும், மாலையும் இலவச தேநீர் வழங்கப்பட்டு, பின் சம்பளப் பணத்தில் பிடித்தல் செய்து, அதற்கு எதிரான தொழிலாளர் போராட்டம், கடிகார முட்களை நகர்த்தி அதிகப்படியான வேலை வாங்கியது. தெலுங்கானா போராட்டம், விவசாயிகளின் போராட்டம், தெபாகா போராட்டம், ஆனைகட்டி துவைப் பகுதி ஆதிவாசி போராட்டம் மாதிரி கூட கேட் பூங்காவுக்கு எதிராக போராட்ட அறிகுறி இல்லாமல் போனது பற்றிய தவிப்பு. சினிமா தியேட்டரே இல்லாத வால்பாறை, நொய்யல் நதி கழிவுகளின் சங்கமமாவது பற்றி என்றெல்லாம் எவ்வளவு விஷயங்களை அந்தோணி ராஜின் டைரி உள்ளடக்கியிருக்கிறது.
      ஏதேனும் ஒரு நிலையிலாவது தன் வாழ்க்கை தோல்வி என்று எண்ணிப் பார்த்து சோர்ந்து போகாதவன் யாரேனும் உண்டா? என்ற கேள்வி உலுக்கி விடுகிறது.
      செந்தில் இளைஞன் His whole future is before him - மெகாசீரியல் அபத்தங்கள் இவனை உறுத்தும் அதே வேளையில் சிநேகாவைப் பிடிக்கிறது. லாரித்தண்ணீர், கல்வி, டியூசன், பகுத்தறிவு பிரசாரத்தின் தேவை தமிழ்வழிக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் கல்வி பற்றி, குழந்தையின் மருந்து செலவுப்பணம் பள்ளிக் கட்டணமாகக் கட்டப்படுவது பற்றியெல்லாம் நிறையச் சிந்திப்பவன், வாசிப்பதுதான் வாழ்க்கை அனுபவம். புதியதைத் தேடும் ஆவல் வாசிப்பு என்பதாக வாசிப்பு பற்றிய பிரமைகள் செந்திலுக்கு இருக்கிறது. குடி தனிமனித விருப்பம். ஜர்னலிசம் செய்ய முடியாத சில விஷயங்களை நாவல் செய்துவிடும் என்று இவனால் கருத முடியவில்லை. மில்லில் வேலை, கொட்டகையில் வாழ்க்கை என்றாலும் இலட்சியக் கனவுகளில் மிதக்கிறான். கேபிரியல் மார்க்வெஸ் "நான் பத்திரிகையாளன். கூடவே கொஞ்சம் கதைகளும் எழுதியிருக்கிறேன்" என்று கூறியிருப்பதனால் பத்திரிகைச் செய்தி எழுதும் பாணியிலான இலக்கியப் படைப்புகள் இறுக்கமில்லாமல் நிறையப் பேரைச் சென்று சேர்க்கின்றன என்று செந்தில் டைரிக் குறிப்பு எழுதுகிறான். 40 வயது பெண் பிணவண்டியை இடுகாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போவதைப் பற்றிக்கூட டைரியில் எழுதுகிறான்.
            வாசிப்பு இலக்கியக் கூட்டம் என்று இருந்த ராஜேந்திரன், இப்போதெல்லாம் மாறிப்போய் இலக்கியவாதிகளின் துரோகங்களும், ஒதுங்கும்படி செய்துவிட்டதாகக் கூறுவதை இவனால் அங்கீகரிக்க முடியவில்லை. செந்தில் வருகிற சில ஆண்டுகளில் ராஜேந்திரனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஐன்ஸ்டீன் I have never read anybody என்று சொல்லவில்லையா? 'புயலிலே ஒரு தோணி' . சிங்காரத்தை நான் 1989ஆம் ஆண்டு மதுரை YMCAயில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது நம் தளத்து படைப்பாளிகள் யாரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதனாலேயே கூட 'புயலிலே ஒரு தோணி' போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ? வாசிப்பு, இலக்கியம் பற்றிய செந்திலின் பிரமை மிகையாகவே பதிவாகியிருக்கிறது. கி.ரா.வின் 'கதவு' கதையை பாராட்டி சுந்தர ராமசாமி அதில் செகாவியன் டச் இருப்பதாகச் சொன்னபோது கி.ரா. செகாவியன் என்றால் என்ன என்று அந்தக் காலத்தில் கேட்டார். முன்பொரு தடவை கி.ரா. அவர்கள் சிட்டியிடம் மற்ற படைப்பாளிகள் போல் பரந்த வாசிப்பு அனுபவம் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டபோது சிட்டி பதட்டத்துடன் வேண்டாம். ரொம்ப வாசிப்பு வேண்டாம். வாசித்தால் எழுத்தில் உங்கள் தனித்தன்மை காணாமல் போய்விடும் என்று சொன்னாராம்.
            ஃபிடல் காஸ்ட்ரோ வாசிப்பு ஈடுபாடு அதிகமுள்ளவர். கேபிரியல் கார்சியா மார்க்வெஸின் அனைத்து புத்தகங்களையும் படித்தவர். இங்கே ஜீவா, பாலதண்டாயுதம் இலக்கிய வாசிப்புள்ளவர்கள். ஆனால் சமீபமாய் தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்படி தென்படவில்லை. நாவலின் இந்தப் பதிவு பல தோழர்களைக் கோபப்படுத்துகிறது.
            நாவலில் ரங்கநாதன் sexual poverty திகைக்க வைக்கிறது. ரங்கநாதனின் பாத்திரம் நேர்த்தியாக உருவாகியுள்ளது. ரங்கநாதனுக்கு வயது ஐம்பது என்பது சரியில்லை. அறுபது என்று இருக்க வேண்டும். ரங்கநாதன், அந்தோணிராஜ், செந்தில் மூவருமே பெண் துணையில்லாதவர்கள். ரங்கநாதன் சபலம் பற்றிப் பேசுகிறார். அந்தோணிராஜ் டைரியில் ஆசை, சபலம், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதக்கூடாது என்ற தீர்மானம் கொண்டவர். செந்திலுக்கு உடம்பில் இருக்கும் காமத்தையெல்லாம் ஒன்று திரட்டி யாரிடமாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
            சமீபத்திய கதைசொல்லி 15து இதழில் திரும்புதல்... என்ற சிறுகதையின் ஆண்பாத்திரம் எனக்கான பெண் துணை எங்கே தென்படுவாள் என்று கேட்டதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். உயிர்மை அக்டோபர் 2004 இதழில் இவருடைய 'நீலப்படமும், சுசித்ராவும்' புதிய பார்வை அக்டோபர் 1-15-2004 இதழில் பிரசுரமாகியுள்ள 'சூடு' ஆகிய கதைகளும் பாலியல் உணர்வையே வெளிப்படுத்துபவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதிய கோடாங்கியில் பிரசுரமாகியுள்ள 'மாற்றங்கள்' உலகமயமாக்கல் சம்பந்தப்பட்டது. அரசாங்க அமைப்பில் தனியார் சேவை நுழைவதை எதிர்த்த நிலைமாறி தனியார் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க அமைப்பு ஊழியர்கள் தோள் கொடுக்க நேர்ந்துள்ள அசாதரணநிலை பற்றி, மாறிவிட்ட வெவ்வேறு செருப்புகளைக் குறியீடாக்கிப் பேசுகிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் வருவது போல இந்தச் சிறுகதையிலும் தெருவோர குடியிருப்பில் ஏற்பட்ட சாவு ஒன்று பிணக்காட்சியாக வருகிறது. தேநீர் இடைவேளை நாவலில் தெருவோர குடியிருப்பு பெண்களைப் பற்றி மணியன் அழுக்கான பெண்கள் எல்லாத் துயரங்களையும் அழுக்கின் மூலம் சேர்த்து உடம்பில் அப்பிக் கொண்டார்கள் என்று கவிதையாகச் சுட்டுகிறதைப் பார்க்கலாம். சினிமா பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நுலாக வரவேண்டும். நல்ல கலைப்படங்கள் பலவற்றின் மீதான விமர்சனக் கட்டுரைகள். அவர் நடத்திவரும் கனவு பத்திரிகையில் எப்போதும் திரைப்பட ஊடகத்தின் ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.
      இங்க்மார் பெர்க்மன் Face to Face படம் பற்றி தணிக்கை குழுவினருக்கு எழுதிய கடிதத்தின் மொழிப்பெயர்ப்பு. 'முகாமுகம்'. ஒரு சரிதம் ஒரு திரைப்படம். மதவாத மற்றும் பொதுவுடமை அடிப்படை வாதங்கள். தில்லி கதா திருவிழா. மங்கம்மாக்கள், பூலன் தேவியின் குரல், மீரா நாயரின் 'மான்சூன் வெட்டிங்', மலையாளிகளின் சிம்மாசனங்கள். கவிஞனும் தடைசெய்யப்பட்ட இசைக் குறிப்புகளும், ரகு ரோமியோ, குறும்படங்களின் தணிக்கை மீதான வன்முறை போன்ற கட்டுரைகள் பல அபூர்வ உலகளாவிய திரைப்படங்களிலிருந்து 'பீ' குறும்படம் வரை விரிவாகத் தொட்டுப் பேசுபவை.
            பிராணிகள், பறவைகள், காட்டு உயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்கை வாழ்வைத் தருபவை என்பதாக கானுயிர் காப்போம் என்ற கட்டுரையின் அக்கறை. சா. கந்தசாமி என்னும் கலைஞன் மிக சிக்கனமான வார்த்தைகளில் பிரமாண்ட உலகை எழுத்தில் காட்டும் நல்ல கலைஞனுடன் ஏற்பட்ட ஒரு பயண அனுபவம். படைப்பு மனம் சஞ்சலமுறும் பின் நவீனத்துவம் என்ற தேடல் இவருடைய எழுத்துப் பயணத்தின் தவிப்பைத் தெரிவிக்கிறது.
            ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து தவிப்புடன் தலையைத் தூக்கித்தூக்கி ஒரு பச்சோந்தி பார்த்துக் கொண்டிருந்தது. அதை டால்ஸ்டாய் உற்றுப் பார்த்தார். அப்படியா? நானும் கூட கலையாகத்தான் இருக்கிறேன் என்று அதனிடம் வாய்விட்டு சத்தமாகவே கூறினாராம்.