முத்துக்கிருஷ்ணன், ஜேஎன்யூ -1.
-------------------------------------------------------
முதல் இரண்டு முறை நான் முறையாகப் பயின்றிருக்கவில்லை ஆங்கிலத்தை.
ஆனாலும் முயற்சி செய்தேன். முயற்சியைக் கைவிட விருப்பமில்லை எனக்கு.
ஒவ்வொரு ஆண்டும் ஜேஎன்யூவுக்குச் செல்வதற்காகப் பல உடல் உழைப்பு வேலைகளைச்
செய்தேன்.
எறும்பைப் போல் பணம் சேமித்தேன் பணம் கேட்டுப் பிறரிடம் கெஞ்சினேன்.
முதல் இரண்டு முறை தமிழகத்திலிருந்து புறப்பட்டேன்
அடுத்த இரண்டு முறை ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து. ரயில்
பயணத்தில் ஒருபோதும் நான் உணவருந்தவில்லை.
‘இந்த முறை உனக்குக்
கிடைத்துவிடும்’ என்று ஒவ்வொரு ஆண்டும்
உற்சாகப்படுத்துவார்கள் நானும் முயற்சி செய்தேன்.
ஏனெனில், விட்டுக்கொடுக்க நான்
விரும்பவில்லை எப்போதும் நினைத்துக்கொள்வேன் ‘கடும்
உழைப்பு ஒருபோதும் தோற்பதில்லை’ என்று.
ஒவ்வொரு ஆண்டும் நேரு சிலையின் கீழ் அமரும்போதெல்லாம் அவரிடம் கேட்பேன்:
“நேருஜி, காங்கிரஸுக்கு வாக்களிக்கும் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் நாங்கள். எனக்குக் கல்வி தர ஏன் நீங்கள் விரும்பவில்லை?”
கடைசி நேர்காணலில் 11 நிமிடங்கள் பேசிய
பின்னர் ஒரு பெண் சொன்னார் நான் எளிய ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று.
இந்த ஆண்டு நேர்காணலில் எட்டு நிமிடங்கள் பேசினேன் எல்லா கேள்விகளுக்கும்
விடையளித்தேன் மூன்று பேராசிரியர்கள் சொன்னார்கள்:
“நன்றாகப் பேசினாய்” என்று. அரசு கலைக் கல்லூரியிலிருந்து மத்தியப்
பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்தவன் நான் ஒருவன்தான் என்று இப்போது
உணர்ந்துகொண்டேன்.
சேலம் மாவட்டத்திலிருந்து ஜேஎன்யூவுக்காகத் தேர்வுசெய்யப்பட்டதும் நான்
ஒருவன்தான்.
நவீன இந்திய வரலாறு பிரிவில் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து
தேர்வுசெய்யப்பட்டதும் நான் மட்டும்தான்.
எனது மேற்பார்வையாளர் பி.ஈஸ்வர் பொனெலாவுக்கு மிக்க நன்றி. என்னுள் ஓர் ஆய்வு
மாணவனைக் கண்டுபிடித்தது அவர்தான்.
எனது ஆய்வு தொடர்பான முன்மொழிவை எழுத என்னை அவர் ஊக்குவித்தார். அதை நான் 38 முறை எழுதினேன்.
இந்த வரலாற்றுத் தருணத்துக்காகப் பலருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
அதனால்தான் ‘எ ஜங்கெட் டு ஜேஎன்யூ’ எனும் புத்தகத்தை நான் எழுதப்போகிறேன்.
மிக்க நன்றி பிரவீண் தோந்தி. ஜேஎன்யூவில் என் முதல் படம் இதுதான். மகிழ்ச்சி!
- முத்துகிருஷ்ணன், (26 ஜூலை 2016-ல் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் இட்ட பதிவு)
தமிழில்: வெ.சந்திரமோகன்
Keywords: கவிதை, முயற்சி, முத்துக்கிருஷ்ணன், ஜேஎன்யூ,
View Comment
(1)Post Comment
MORE IN: செய்தியாளர் பக்கம் | சிந்தனைக் களம்
Share
முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்…
-----------------------------------------------------------------------------
ஏனென்றால், இத்தனை ஆண்டுகாலம் இங்கே நான் ஆட்சிசெய்தும், தமிழ்நாட்டிலேயே
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல ஒரு பல்கலைக்கழகத்தை நான் உருவாக்காமல் போனேன்.
ஏனென்றால், இத்தனை காலம் இங்கே நான் ஆட்சிசெய்தும் தமிழ்நாட்டு
மாணவர்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அல்லது பின்தங்கிய சூழல்களிருந்து வரும்
மாணவர்கள் பயமின்றி உலகின் பல இடங்களுக்குச் சென்று படிக் கவோ வேலைசெய்யவோ உரிய
சூழலை நான் ஏற்படுத்தாமல் போனேன். இன்னமும் முத்துகிருஷ்ணன்கள் தமிழகத்திலிருந்து
வெளி யேறும்போது - குறிப்பாக, சாம்ராஜ்ய ராஜதானி யான புது டெல்லி போன்ற இடங்களுக்குப்
போகும்போது தங்களுடைய சாதி, மொழி, உடல் நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மை களோடுதான்
செல்கிறார்கள். அவர்கள் தன்னம் பிக்கை மிக்கவர்களாகவும் தமது அடையாளங் கள் குறித்த
விஷயத்தில் நாம் யாருக்கும் இளைத் தவர்கள் இல்லை. என்று அறிந்தவர்களாகவும் இருக்க
வேண்டும் என்றால், முதலில் அவர்கள் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து நடக்கக் கூடியவர்களாகவும்
மதிப்போடு பார்க்கப் படுபவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அதை நான்
உத்தரவாதப்படுத்த மறுத்தேன்.
ஏனென்றால், என் பிள்ளைகள் ஐஐடியிலும் அமெரிக்காவிலும் படித்தால்
போதும், தலித்
பிள்ளைகள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று நினைத்தேன். அக்கிரகாரம் வரை வந்த
பஸ், என்
வீதி அதிலும் என் வீடு வரை - வந்தால் போதும் என்று நினைத்தேன்.
ஏனென்றால், நான் என் கிராமத்தில் தமிழ்வழிக் கல்வி பயின்று,
பாடங்களை நன்கு
புரிந்து, தேர்வில்
வெற்றிபெற்று, பிறகு வாழ்க்கையில் உயர்ந்தேன் என்கிற ரகசியத்தை வெளியே சொல்ல மறுத்தேன்.
இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றி, மூப்பை நோக்கிச்
சென்றுகொண்டிருப்பவர்கள், இஸ்ரோ உள்ளிட்ட இந்திய அதியுயர் அறிவியல் நிறுவனங்களில்
சாதனை படைத்தவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து
உயர்ந்தவர்கள். அன்று அவர்களுக்கு அப்படிப்பட்ட கல்வி தரப்பட்டது. ஆனால், ஊரிலிருந்து நகரத்துக்கு
நான் புலம்பெயர்ந்தபோது, அந்தக் கல்வியை அங்கே வெட்டிக் கொல்லுமாறு பணித்தேன். அந்த
மொழியைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசுமாறு செய்தேன். இனிவரும் காலங்களில்
கிராமத்துக் குழந்தைகளும் சிறுநகரக் குழந்தைகளும் மாநகரங்களின் கார்ப்பரேஷன்
பள்ளிக் குழந்தைகளும், மறந்தும் தங்கள் வாய்களைத் திறந்து தமிழில் ஓர் வார்த்தை சொன்னால், அந்தப் பிஞ்சு
இதழ்களின்மீது அடியுங்கள் என்று சொன்னேன். அவர்களின் சுதந்திரமும்
தன்னம்பிக்கையும் அதில் நொறுங்கிப்போகுமே என்று நான் கவலைப் படவில்லை. அரசுப்
பள்ளிகளின் அத்தனை நல்ல அம்சங்களையும் அழிக்க ஆங்கிலம் என்ற கருவியைப்
பயன்படுத்தினேன். கிராமத்தில் உள்ளவர்கள் அச்சமின்றிப் படிப்பதற்கான சூழலை நான்
அழித்தேன். இவ்வளவும் செய்த பிறகு, அவர்களுக்கு நல்ல ஆங்கிலக் கல்வி அளிக்காதவாறும்
பார்த்துக்கொண்டேன்!
ஏனென்றால், நான் கிராமத்தில் நன்கு படித்து, நகரத்துக்குச் சென்று
வாழ்க்கையில் வெற்றிபெற்ற பிறகு, என் கிராமத்தின்மீது நான் தாக்கம் செலுத்தினேன். நான் என்
சிறுநகரத்தில் அரசுப் பள்ளியில் படித்தபோது, கட்டணங்கள் பெரிதுமின்றி, அருமையான ஆசிரியர்களுடன் விளையாட்டும்
படிப்புமாய் கனவுபோன்ற விரிந்த ஒரு சூழலில் படித்தேன். ஆனால், என் தாக்கத்தினூடாக
அந்தக் கல்விச்சூழலைக் கரும்பலகை எழுத்தைப் போல ஆதிக்க டஸ்டர் கொண்டு அழித்தேன்.
ஆசிரியர்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்குச் செல்லுமாறு வழிசெய்தேன். ஊரின்
அனைத்து மேட்டுத் தெரு குழந்தைகளும் அரசுப் பள்ளிகள் பக்கம் மழைக்கும் ஒதுங்காமல்
பார்த்துக்கொண்டேன்.
ஏனென்றால், ஒரு வியாபாரியாக நான் சிலவற்றை அறிந்தேன். கல்வியில்
காசு பார்க்க வேண்டும் என்றால், கல்வியை அரிதான ஒன்றாக மாற்ற வேண்டும் என நான் அறிந்தேன்.
நான் படிக்கத் தொடங்கிய காலத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த கல்விச்சூழல் தமிழ்நாட்டில்
இருந்தது. காமராசரும் அண்ணாவும் எனக்கு அதைப் பெற்றுத்தந்தார்கள். கருணாநிதியும்
எம்ஜிஆரும் அப்போது அதை ஊட்டி வளர்த்தார்கள். ஆனால், நான் பள்ளிப்படிப்பை முடித்து ஊரை
விட்டு வெளியேறும்போது, இனி உங்கள் சேவை எங்களுக்குத் தேவை யில்லை என்று
தலைவர்களிடம் சொல்லி விட்டேன். அவர்களும் ஏற்றுக்கொண்டார் கள். நான் கல்வித்
தொழில்முனைவோராக ஆவதென்று முடிவுசெய்தவுடன், அதே கருணாநிதியையும் எம்ஜிஆரையும்
ஜெயலலிதா வையும் வசப்படுத்தி, அரசுப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் சீரழிக்கும்படிசெய்ய
நானே ஏற்பாடுசெய்தேன். பின்பு, எல்கேஜிக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க ஏற்பாடு செய்ததால்,
உயர் கல்விக்கு
மக்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கத் தயாரானார்கள்.
ஏனென்றால், நான் கல்வியைப் பற்றிக் கற்றுக்கொண்டேன். இனி எனது
நோக்கம் ஐம்பது கோடி ரூபாய்க்குத் துணைவேந்தர் பதவிகளை விற்பது மட்டுமே. எனது
நோக்கம், கிராமப்புற
மாணவர்கள் குறித்து ‘அய்யோ.. குய்யோ’ என்று கண்ணீர் வடித்துக்கொண்டே, கிராமப்புறப் பள்ளிகளை மூடுவதே. எனது நோக்கம்,
சந்தடிசாக்கில்
தமிழகத்தில் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகளை மூலைக்கு மூலை நிறுவிக் கொள்ளையடிப்பதை
ஊக்குவிப்பதே. எனது நோக்கம், சாதாரண மக்களுக்கு உயர்தரக் கல்வியை எட்டாக் கனியாக ஆக்கி,
அதன் மூலம் கல்வி
வணிகத்தைப் பெரிதாக்கி, அதில் என் பங்கைக் கேட்பதே. எனது நோக்கம், பள்ளிக் கல்வி முதல்
பல்கலைக்கழகக் கல்வி வரை லாபவெறியைத் தவிர, வேறு இல்லை என்பதைக்
கேள்விக்கிடமற்ற யதார்த்தமாக ஆக்குவதே. எனது நோக்கம், நான் பெற்ற இன்பம் நீ பெறாமல்
இருக்கும்படி செய்வதே.
ஏனென்றால், இவை அனைத்தினும் மிக முக்கியமாக, முத்துகிருஷ்ணன்களுக்கான
அதிகாரம், முத்துகிருஷ்ணன்களிடம்
இருப்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. முத்துகிருஷ்ணனுக்கு அதிகாரம் இருந்தால்,
அவர் அவரது
சூழலுக்கேற்பக் கல்வித் திட்டம் போடுவார்; நான் என் சூழலுக்கேற்ப திட்டமிட்டதைப் போல. இதெல்லாம்
வேலைக்கு ஆகுமா? கேளுங்களேன், முத்துகிருஷ்ணனுக்குக் கல்வி தொடர்பாக நான் என்னென்ன நன்மைசெய்தேன்! அதைக்
கொண்டு அவர் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். குரூப் 4 வேலையைப் பற்றி மட்டும்
கவலைப்பட்டிருக்க வேண்டும்.
ஏனென்றால், நான் எச்1பி விசாவைப் பற்றிக் கவலைப்படும் இடத்துக்கு
வந்துவிட்டேன். புதிய இந்தியனாக ஆகிவிட்டேன். எனக்கு இனி சமூக நீதியோ மொழியோ நில
உரிமையோ இறையாண்மையோ தேவையில்லை. இந்த அகண்ட இந்துஸ்தானத்தில், நான் யாரோடு இணைந்திருக்க
வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பரந்த உலகில் நான் யாராக
இருக்கிறேன் என்று அறிந்திருக்கிறேன்.
ஏனென்றால், முத்துகிருஷ்ணனும் ரோஹித் வெமுலாவும் என் சாதியினர் அல்லர். அதுமட்டுமல்ல,
அவர்கள் என்னைக்
கேள்வியும் கேட்கிறார்கள்.
எனவே, முத்துகிருஷ்ணனை
நான்தான் கொன்றேன்.
- ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com –the hindu tamil
Keywords: முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன், ஜவஹர்லால் நேரு, ரோஹித் வெமுலா, தலித்
View Comments (57)Post Comment
இன்னும் பல ரோஹித்துகளை கொல்லப் போகிறார்கள்!
-----------------------------------------------------------------------------------------------
முத்துகிருஷ்ணன்
ரோஹித் வெமுலா இறந்தபின் முத்துகிருஷ்ணன் தனது முகநூலில்
செய்திருந்த பதிவு
2016 ஜூன் 30, மதியம் 2 மணி. வழக்கம் போல் நான் நூலகத்தில் இருந்தேன். அன்றைய தினம் நான் என்
சகோதரர்கள் மீர், ஜான் ஆகியோருடன் சேர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தேன். வெளி வராண்டாவில்
எங்களது பேராசிரியர்களோடு சேர்ந்து தொடர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும்
என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பேராசிரியர்கள் ரத்னம், தத்தாகட்டா ஆகியோரது
தொடர் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ராதிகா அம்மா வரப் போவதாக அர்பிதா
என்னிடம் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், அந்த நாளில் ராதிகா
அம்மாவை சந்திக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள்ளே பலமாக எழுந்ததை நான்
உணர்ந்தேன்.கடந்த ஆறு மாதங்களாக பலத்த சவால்களை அவர் எதிர் கொண்டு வருகிறார். உடல்
நலக் குறைவு, அரசாங்கம், அதிகாரத்தில் இருக்கும் கட்சி ஆகியவற்றிடமிருந்து எதிர்ப்பு என்று பல
பிரச்சனைகள். அது 153ஆவது நாள். கொஞ்ச நேரம் மட்டுமே என்னால் தூங்க முடிந்தது. சுதிப்தோ சொல்லுவது
போல மிகச் சிறந்த நபரான ரோஹித் வெமுலா சக்கரவர்த்தியின் நினைவுகளால் நான் மன
உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். ஆங்கிலத்தில் எழுதுவதற்காக படிப்பதற்காகவும்,
கற்றுக்
கொள்வதற்காகவும் எனது நேரம் முழுவதையும் ஒதுக்கி முயற்சி செய்து வந்தேன்.
பிற நேரங்களில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஜேஏசி முடிவுகளை
செயல்படுத்துவதற்காக வேலை செய்து வந்தேன்.ஜூன் 17. ஜனவரி மாதம் ரோஹித் நட்சத்திரக்
கூட்டங்களுக்குள் சென்ற அதே நாள். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் பிரதான
வாசலில் இருந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்தில் எனது சைக்கிளை நிறுத்தி
வைத்தேன். பிரதான நுழைவு வாசலுக்கு அருகே இருந்த மாற்று நுழைவு வாசலுக்கு முன்பாக
தொடர் உண்ணாவிரதம் நடைபெற இருந்தது. நான் அறிந்த வரை அந்த வாசல் திறக்கப்பட்டதே
இல்லை. நான் மெதுவாக வெளி வராண்டாவை நோக்கி நடந்தேன். இடதுபுறத்தில் இருந்த சிறு
மேடையில் உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்கள் அமர்ந்திருந்தனர். தனது நிர்வாகப்
பணியிலிருந்து ராஜினாமா செய்திருந்த பேராசிரியர் ராமுடு அவர்களோடு இருந்தார்.
அவர்கள் அனைவரையும் நோக்கி புன்னகைத்து எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொண்டேன்.பிறகு திறக்கப்படாத அந்த பிரதான வாசலைப் பார்த்தேன். தேவைப்படாத
தாவரங்களால் சூழப்பட்டிருந்தது. நான் அந்த கூடாரத்திற்குள் சென்றேன். அங்கே தொடர்
உண்ணாவிரதத்திற்கான பேனர் தவிர, ‘அப்பாராவ் போடிலைக் கைது செய், நியாயத்துக்குப் புறம்பான தற்காலிகப்
பணிநீக்கத்தை ரத்து செய், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தை
அமல்படுத்து என்பது போன்ற வாசகங்களுடன் நீல வண்ண போஸ்டர்கள் தொங்கிக்
கொண்டிருந்தன.
எல்லோரும் சணல் பாயின் மீது உட்கார்ந்திருந்தனர். ஒலிபெருக்கி வசதிக்கான
மின்சாரம் இல்லாததால், பேராசிரியர் ஜோபியின் வேகன்ஆர் காரில் இருந்த பேட்டரியை அமைப்பாளர்கள்
உபயோகப்படுத்தினர். காரிலிருந்து வந்த கேபிள் வயர் அந்தப் பாய்க்கு மேலாக சென்று
கொண்டிருந்தது.ரோஹித் அண்ணாவின் அம்மாவான ராதிகா அம்மா அங்கே அமர்ந்திருந்தார்.
அவருக்கருகே எந்த இடமும் இருக்கவில்லை. ராம்ஜி அண்ணா, ராஜா அண்ணா ஆகியோருடன் ஒரு ஐந்து
நிமிடங்கள் உரையாடிக் கொண்டிருந்தேன். வெளியில் இருந்து வந்திருந்த சில சமூக
அமைப்பு சார்ந்த தலைவர்களுடன் ரத்னம் சாரும், தத்தாகட்டா சாரும் ஆலோசனை செய்து
கொண்டிருந்தனர். அந்தப் பேராசிரியர்கள் இருவரும் அம்மா கொடுத்திருந்த வெள்ளை
நிறத்தில் அம்பேத்கரது முகம் பொறிக்கப்பட்ட நீல நிற டி-சர்ட்டை அணிந்திருந்தனர்.
ரத்னம் சார் ஆங்கிலத்திலும், அம்மாவுக்கு தெலுங்கிலும் எல்லாவற்றையும் விளக்கிக்
கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அம்மாவுக்கு அருகே அமர இடம் கிடைத்ததால், நான் அவர்கள் அருகில்
சென்று அமர்ந்தேன்.சில நிமிடங்கள் நான் அம்மாவை வியந்து பார்த்துக்
கொண்டிருந்தேன். அவர் என்னுடைய அம்மாவாக இருந்தால் எப்படி இருக்கும்? தனது வலது கையை
கன்னத்தில் வைத்தவாறு ஒரு பக்கமாக அம்மா உட்கார்ந்திருந்தார். அவர் ரத்னம் சாருடைய
பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
கறுப்பு, மெல்லிய பச்சை, வெள்ளை நிறம் கலந்து, கறுப்பு புள்ளிகள், வெள்ளை பூக்கள் கொண்ட டிசைனில் சேலை
உடுத்தியிருந்தார். தலையில் புதிதாக வெள்ளை முடிகள் நிறைய தோன்றியிருந்தன. கைகளில்
சிவப்பு நிற வளையல்களை அணிந்திருந்தார். உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு
அணிவிக்கப்பட்ட மாலை ஒன்று அவருக்கு முன்பாக கிடந்தது. இரண்டு ஆசிரியர்கள்
தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று
வருகிறது. தையல் செய்து தளர்ந்து போயிருந்த அவரது கால்களைப் பார்த்துக் கொண்டே,
நான் அவரிடம்
உங்களது உடல்நிலை எப்படி இருக்கிறது? நீங்கள் குண்டூரிலிருந்து வருகிறீர்களா என்று
கேட்டேன். ஆமாம் பாபு என்றவர், நீ ரோஹித்தைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். ஆமாம்
அம்மா. அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக நான் அவரைச் சந்தித்தேன். அப்போது இரவு
எட்டு மணி இருக்கும் என்று சொன்னேன்.வெளி வராண்டாவிற்கு இடதுபுறம் இருக்கும்
சிமெண்ட் பெஞ்சில் ரோஹித் உட்கார்ந்திருந்தார். இப்போது அந்த பெஞ்சின்
மூலையில்தான் அந்தக் கூடாரத்தின் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அவரது மொபைல் போனை
அவர் பார்த்துக் கொண்டிருந்தார். . நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அண்ணாவென்றே
அழைத்துக் கொள்வோம். நாங்கள் இருவருமே இரவு உணவு சாப்பிட்டு விட்டீர்களா அண்ணா
என்று கேட்டுக் கொண்டோம். நான் அப்புறம் சாப்பிடப் போகிறேன் அண்ணா என்று ரோஹித்
சொன்னார். அவர் நீலம், கிரே கலரில் ஜெர்கின் அணிந்திருந்தார். இயக்கத்தைப் பற்றி நாங்கள் பேசிக்
கொண்டிருந்ததற்கு அப்புறம். அவர், முதலாவதாக நமது ஜனநாயகப்பூர்வமான எதிர்ப்பை வைத்துக்
கொள்ளலாம், அதற்குப் பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் செய்யலாம் என்று சொன்னார். நானும்
உங்களோடு சேர்ந்து கொள்கிறேன் அண்ணா என்று நான் சொன்னதும், நன்றி அண்ணா என்று அவர் சொன்னார்.
இரவு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு நான் அங்கிருந்து கிளம்பினேன். அடுத்த
நாள் நான் வணிக வளாகத்தில் அமர்ந்திருந்த போது, ஹெல்த் சென்டரின் ஆம்புலன்ஸ் ’சி’ ஹாஸ்டல் ரோடை நோக்கி
செல்வதைப் பார்த்தேன். யாருக்கோ மிகவும் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக
நான் நினைத்துக் கொண்டேன். அதற்கப்புறம் இரண்டு இன்னோவா போலீஸ் கார்கள் சென்றதைப்
பார்த்தேன். ஏதோ தகராறு நடப்பதாக நினைத்தேன். ஆனால் திடீரென்று ஒரு கும்பல் ‘சி’ ஹாஸ்டல் ரோடு, என்ஆர்எஸ் (சூசுளு)
ஹாஸ்டல் நோக்கி ஓடியதைப் பார்த்தேன். அப்போது எனது நண்பர்கள் யாரோ தற்கொலை செய்து
கொண்டிருப்பதாக பேசிக் கொண்டார்கள். இரண்டு நண்பர்கள் தங்களது பைக்கை எடுத்துக்
கொண்டு விரைந்தனர். அவர்கள் திரும்ப வந்து, ரோஹித் தற்கொலை செய்து கொண்டதாக
சோகச் செய்தியை சொன்னார்கள். பின்னர் நாங்கள் எல்லோரும் என்ஆர்எஸ் ஹாஸ்டலுக்கு
சென்றோம். அங்கே ரோஹித்தின் உடல் ஃபிரீசருக்குள் வைக்கப்பட்டிருந்தது.ரோஹித்தின்
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அம்மாவைப் புண்படுத்த நான் விரும்பவில்லை.
ரோஹித்தோடு சேர்ந்து இருந்தது பற்றி நான் ஞாபகப்படுத்திக் கொண்டேன். ரோஹித்தை நான்
ஆறு முறை சந்தித்து இருக்கிறேன். வடக்கு வளாகத்திலிருந்து கிளம்பிய ஒரு எதிர்ப்பு
பேரணியின் போது தெற்கு வளாகத்தில் இருக்கும் வணிக வளாகம் அருகே முதன்முறையாக நான்
சந்தித்தேன். மெல்லிய கிரே கலர் சட்டையை அப்போது அணிந்திருந்தார். நானும், பிரசாந்த்தும் கறுப்பு
சட்டை அணிந்திருந்தோம். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அவர் முழக்கங்களை எழுப்பிக்
கொண்டிருந்தார். நான் ஏன் இதுவரையிலும் முழக்கங்களை எழுப்பாதவனாக இருக்கிறேன்
என்று நினைத்த போது, வியந்து போனேன். மொழித் தடை கூட காரணமாக இருக்கலாம் என்று எனக்குள்ளே சொல்லிக்
கொண்டேன்.
அவரது தலைமைப் பண்பு குறித்து நான் மலைத்துப் போனேன்.இரண்டாவது முறை நான்
ரோஹித்தை டிக்கன்ஸ் அறைக்குச் செல்லும் வழியில் என்ஆர்எஸ் மெஸ்ஸுக்கு அருகில்
சந்தித்தேன். ரோஹித் எதிர்ப்புறம் இருந்து வந்தார். அண்ணா, மிக விரைவில் நாம் ஜிபிஎம் கூடப்
போகிறோம். தயவுசெய்து வாருங்கள். நண்பர்களையும் அழைத்து வாருங்கள். இந்தத் தடவை
பொறுப்பான பதவியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார். நான்,
அண்ணா, நம்மவர்கள் கடுமையாக
உழைத்தாலும் ஏன் நம்மால் வெற்றி பெற முடியவில்லை என்று கேட்டேன். 2013இல் நடைபெற்ற மாணவர்
பேரவைத் தேர்தல் எனது ஞாபகத்தில் இருந்தது. நமது கடின உழைப்பைத் தொடருவோம். நமது
வாழ்க்கை எப்பொழுதுமே போராட்டம்தான்.மாணவ சமுதாயத்திற்காக உண்மையாக உதவுபவர்களை
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் நுழைவுத் தேர்வை
சீக்கிரமாக நடத்த வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கைக்கான காத்திருப்போர் பட்டியலை
வெளிக் கொண்டு வருவதற்காக துணைவேந்தரிடம் ஏஎஸ்ஏ (ASA) அமைப்பு வாதம் செய்து வந்தது. 2014ஆம் ஆண்டு மாணவர் பேரவைத்
தலைவராக வின்சென்ட் பென்னி தேர்வானதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு அது
நடந்தது.மூன்றாவது முறையாக நான் சகோதரர் ராம்ஜியுடன் ரோஹித்தை மஜித் பண்டா
ரவுண்டானா அருகே சந்தித்தேன். நானும் ரோஹித்தும் ஒருவரையொருவர் பார்த்து
சிரித்துக் கொண்டோம். அவர், அண்ணா, நாளைக்கு ஜிபிஎம் இருக்கிறது. எனவே தயவுசெய்து வாருங்கள்.
போன தடவை நீங்கள் வரவில்லை என்று சொன்னார். அதனால் என்ன அண்ணா, நீங்கள் சீனியர்கள்
முடிவெடுங்கள். என்ன முடிவாக இருந்தாலும் நான் அதை ஒத்துக் கொள்கிறேன் என்று நான்
சொன்னேன். அதற்கு ரோஹித், இல்லை இல்லை அண்ணா, இந்தத் தடவை நாங்கள் எங்களது அணுகுமுறையை மாற்றிக்
கொண்டிருக்கிறோம்.
எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். நாம் ஜனநாயகப்பூர்வமாக நமது சங்கத்தைத்
தேர்ந்தெடுப்போம். தயவுசெய்து வாருங்கள். நானும் கூட சகோதரர் ராம்ஜி ஏஎஸ்ஏ
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே விரும்புகிறேன் என்றார். நான்
சகோதரர் ராம்ஜிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு அங்கிருந்து
கிளம்பினேன்.அதற்கப்புறம் ரொம்ப நாட்களாக நான் ரோஹித்தை சந்திக்கவில்லை. எனது
படிப்பு, தேர்வுகளில்
நான் மும்முரமாக இருந்தேன். அவர்களை சஸ்பெண்ட் பண்ணியிருந்தது கூட எனக்குத்
தெரியாது. இதற்கிடையில் சகோதரர் சேசுவை எஸ்எஸ்பி (ssp) கேண்டீனில் அவர் காலை உணவு
சாப்பிடும் போது சந்தித்தேன். நான் சேசு அண்ணாவிடம், ஏன் இங்கே சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள், மெஸ் கார்டு முடிந்து போய் விட்டதா, தூங்கி தாமதமாக எழுந்தீர்களா என்று கேட்டேன். சேசு
அண்ணா, அரே,
எங்களை சஸ்பெண்ட்
பண்ணி விட்டார்கள், உனக்குத் தெரியாதா என்று கேட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் மேலும்
நான்கு சகோதரர்களின் பெயரை அவர் என்னிடம் சொன்னார். ஒரு வாரத்திற்குப் பிறகு,
‘எச்சியு’
(HCU) அலுவலகத்தை
நிரப்புவோம்’ என்ற போராட்டம் நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான் வணிக வளாகத்தின் வழியாக
நூலகத்திற்குச் சென்று கொண்டிருந்தேன்.பிரசாந்த் முதலாவதாக என்னைக் கூப்பிட்டான்.
அருகிலிருந்த பெஞ்சில் சுங்கன்னாவும், விஜய் அண்ணாவும் உட்கார்ந்து இருந்தார்கள்.
ரோஹித்தும் உட்கார்ந்திருந்தார்.
முன்னா அவருக்கு பக்கத்தில் நின்றிருந்தார். நூலகத்தில் விநியோகிப்பதற்காக
முன்னா என்னிடம் சில துண்டறிக்கைகளைக் கொடுத்தார். முதன்முதலாக தடித்த கறுப்பு
எழுத்துக்களில், சமூக சமத்துவத்திற்கான கூட்டு நடவடிக்கைக் குழு என்று இருந்த பெயரைப்
பார்த்தேன். முன்னாவிடம் நூலகத்தில் கொடுப்பதற்கு இவ்வளவு எங்களுக்குத் தேவையில்லை
என்று கூறினேன். சில துண்டறிக்கைகளை நான் எடுத்துக் கொண்டேன். எனக்கு அவ்வளவாக
அதில் ஆர்வம் இருக்கவில்லை. திடீரென்று ரோஹித், அண்ணா, நாம் மனப்பூர்வமாகப் போராட
வேண்டும். இல்லையென்றால் சஸ்பெண்சன் உத்தரவைத் திரும்பப் பெற வைக்க முடியாது
என்றார். நான் உடனடியாக இன்னும் கொஞ்சம் துண்டறிக்கைகளை எடுத்துக் கொண்டு, போகின்ற வழியில் அதை
வாசித்தேன். நூலகத்திலும், வாசிப்பறையிலும் அவற்றை விநியோகம் செய்தேன். அந்த முறைதான்
நான் நான்காவது தடவையாக ரோஹித்தை சந்தித்தேன்.அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து,
இரவு 11.45 மணியளவில்
நூலகத்திலிருந்து எனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஹாஸ்டலுக்கு செல்லும்
வழியில், வணிக
வளாகத்தைக் கடந்து சென்ற போது வெளி வளாகத்தில் இரண்டு பேர் உறங்கிக் கொண்டிருப்பதை
ரோட்டிலிருந்து பார்த்தேன்.வணிக வளாகத்தில் விளக்குகள் எரியவில்லை. ஆனால்
அங்கிருந்த ஏடிஎம்மிலிருந்து வந்த வெளிச்சம் வணிக வளாகத்தில் பரவியிருந்தது. நான்
வெளி வராண்டாவிற்குச் சென்ற போது அங்கே சேசு அண்ணாவும், ரோஹித்தும் உறங்கிக்
கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கொசுக்கடியினால் அவதிப்பட்டுக்
கொண்டிருந்தார்கள். சேசு அண்ணா பெட்சீட்டை வைத்து முழுமையாக மூடிக்
கொண்டிருந்தார். ஆனால் ரோஹித் அவ்வாறு இருக்கவில்லை. ரோஹித் மெதுவாக அசைந்து தனது
முகத்தின் இடது புறம், கையில் இருந்த கொசுவை அடித்தார். நான் யார் என்பதை கண்டு கொள்ள முயற்சித்த
ரோஹித், மூன்று
முறை என்னைப் பார்த்தார். இறுதியாக அவர் என்னிடம் குட் நைட் என்று மெதுவாகச்
சொன்னார். நானும் அவ்வாறே தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றேன்.ஆறாவது முறையாக,
கடைசித் தடவையாக
நான் அவரைச் சந்தித்தேன்.
குறைந்தது ஒவ்வொரு நாளும் ஒரு தடவையாவது நான் இதை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
ஒன்றுமறியாத அந்த அம்மாவின் வலியினை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நமது
சமூகத்தில் பிள்ளைகள்தான் சொத்து. அவர்கள் படித்து, வேலை பார்த்து உதவுவார்கள்.
வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த சமூகத்திற்கும் என்று என்னுடைய அம்மாவும்
சொல்வார்.அருமை தேசத் துரோகிகளே, இந்த நாடு ஒன்றுமறியாத தாய் ஒருவரின் மகனைக் கொன்று
விட்டது. பாரத் மாதா தனது மகனை இழந்து விட்டாள் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால்
அவரது சாதியையும், அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்கி அந்தத் தாயைக் காயப்படுத்தி விட்டார்கள்.
இந்த அநியாயத்திற்குப் பிறகு அந்தத் தாய் இவர்களது தேசியவாதத்தை ஆதரிப்பாளா?அருமை தேசத் துரோகிகளே,
நான் ஒன்று
சொல்லுகிறேன். செல்பிக்காக, வெளியாட்களின் கைதட்டலுக்காக இந்த தேசத்தின் தலைவர் நம்
அனைவரையும் ஒரு நாள் விற்று விடப் போகிறார்.நூற்றுக்கணக்கான டப்பா ராவ்கள்
ஆயிரக்கணக்கில் ரோஹித்களைக் கொன்று விட்டு, அவன்/அவள் ஒரு தலைசிறந்த மாணவன்
என்று சொல்லப் போகிறார்கள். கற்பனைக் கதாபாத்திரங்களை கேலி செய்ததாக விளிம்புநிலை
சமூகங்களைச் சேர்ந்த அறிவார்ந்தவர்கள் கைது செய்யப்படப் போகிறார்கள்.
அதே நேரத்தில், பத்தாம் வகுப்பு தேறாதவர்கள் நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின்
தலைவர்களாகப் போகிறார்கள். தங்களது கருத்தோடு ஒத்துப் போகாதவர்களை தேசத் துரோகிகள்
என்றும், பிரிவினைவாதிகள்
என்றும் இவர்கள் சொல்கிறார்கள். மாட்டுக்கறி உண்ணுவதால், பகுத்தறிவோடு இருப்பதால், அறிவார்ந்தவர்களாக.
நாட்டிற்காக உழைப்பவர்களாக இருப்பதால் மேலும் பல ரோஹித்களை இவர்கள் கொல்லப்
போகிறார்கள். நாம்தான் இந்த நிலத்தின் உண்மையான புதல்வர்கள் என்பதால், நம்மை எல்லாம் கொன்ற
பிறகு, தேசம்
என்ற ஒன்றே இருக்காது.ஒன்றுமறியாத தாய் ஒருவரை ஆதரிக்க இன்னும் ஏன்
காத்திருக்கிறீர்கள்?சாதிக்கெதிரான இயக்கங்களை ஆதரிப்பதன் மூலம், உலகமெங்கும் இருக்கும் அனைத்து
மாணவர்களும், ராதிகா அம்மாவின் ரோஹித்களாக மாற வேண்டும். உதவியற்று இருக்கும் இந்த தாய்க்கு,
பிரபஞ்சத்தின்
தாய்க்கு உதவுவதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும்.
அருமை தேசத் துரோகிகளே, நான் ஒன்று சொல்லுகிறேன். செல்பிக்காக, வெளியாட்களின்
கைதட்டலுக்காக இந்த தேசத்தின் தலைவர் நம் அனைவரையும் ஒரு நாள் விற்று விடப்
போகிறார். theekathir
)
தமிழில் : பேரா.த.சந்திரகுரு