சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 7 மார்ச், 2017

சிறுகதை: உயிரெழுத்து இத மார்ச் 2017ல் பிரசுரம் 
-----------------------------------------------------------------------------

நாற்காலி மனிதர் ..: சுப்ரபாரதிமணியன்


 .
       நாற்காலியில் உட்கார்ந்தபடியே அன்புக்கு பாடை கட்டியிருந்தார்கள். பத்து வருசமா எங்கும் போகாமல் நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தார். வலது பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்துவிட்டது . அதன் பின் ஒரு மாதம்  நாற்காலியில் அவரை உட்கார வைத்து அவர் மகன் சிவன் சிகிச்சை  செய்தான். மருமகள் சிவமணி எதுவும் கண்டுகொள்ள மாட்டாள். வேலைக்குப் போகும் முன் சிவன் அவரின் உடம்பைத் துடைத்து சோறு ஊட்டி விடுவான். இரவில்தான் அவர் மல ஜலம் கழிப்பார் என்பதால் இரவில் அதைக் கவனிப்பான். அவனுக்கு ரைஸ் மில் ஒன்றில் கணக்கெழுதும் வேலை. பத்து மணி நேரம் இடுப்பு கழன்று விடும் வேலை.

" பத்து வருசமா உக்காந்து ஒரே எடத்தில இருந்து வேடிக்கை பாத்திட்டிருந்தார். சக்கரம் கட்டி ஓடற காலு மாதிரி ஓடிட்டிருந்த மனிதன் பக்கவாதம் வந்தப்புறம் எல்லாம் மொடங்கிப் போச்சு. செத்தப்புரமாச்சும் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டுப் போகட்டும் '’ என்பதாய் சிவன் சொன்னான்.

" அக்கட போகாமா எண்ணத்தை பாக்கறது "

" அகக்கண்ணுன்னு ஒன்னு இருந்திருக்கும் அவருக்கு. அதுல பாத்திட்டுப் போகட்டும்"

"நல்ல வேக்கானந்தா ..."

 அன்பு திருமண விசேஷங்களின்போது கொம்பூதுவார். ஒற்றை ஆளாய் நின்று கொண்டு ஏதாவது ஒரு விசேஷ ராகம் என்பதுபோல் ஊதிக் கொண்டிருப்பார். வெங்கலத்தின் நாதம் ராகமாய் அவனைக்  கிளப்பிக் கொண்டிருக்கும். கல்யாண விசேஷங்களின் போது தவறாமல் சென்று விடுவார். நாதஸ்வரம் வாசிக்கத்  தாமதமாகும் சமயங்களில் கொம்பூதி எல்லோர் கவனத்தையும் ஒருமிக்க செய்துவிடுவார். அலை அலையாய் நாதம் அவர் பக்கமிருந்து கிளம்பும்.

காந்தி மைதானத்தில் நடக்கும் ஏதாவது கூத்து நிகழ்ச்சி என்றால் அதில் அன்புவின் கொம்பு ஊதல் இருக்கும். யாராவது அரசியல் கட்சிக் கூட்டம் என்றால் வந்து பத்து நிமிஷம் ஊதிட்டுப் போ என்பார்கள். அவர் போக மாட்டார்.

" பொதுவான ஏதாச்சும் இருந்தாச் சொல்லுங்க. அரசியல் பொழப்பெல்லா வேண்டாங்க "

கவுண்டர் தெரு மூக்கில் குன்னடையாக்கவுண்டன் கதை ஒரு மாதம் இரவில் நடக்கும். அப்பொழுதெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கொம்பூதுவார்.

" பழைய காலத்தில சாவப்போ கூட வாசிச்சு இருப்பாங்க.. ஆனா நான் சின்ன வயசுல இருந்தே சாவுக்கு வாசிச்சதில்ல. கட்சிக்காரங்ககே கூட்டங்களுக்கும் வாசிக்கறதில்லைன்னு முடிவு மாதிரி சாவுக்கும் எந்தக் காலத்திலேயும் வாசிக்கமாட்டேன். "

அன்புவைக் குளிப்பாட்டி நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர். யாரோ வெண்கலக் கொம்பை கொண்டுவந்து சிவனிடம் தந்தார்கள்.
" பக்கவாதம் வந்தப்புறம் இது ஊதாமே கெடக்குது உங்கப்பானே வழியனுப்பறதுக்கு சிவா நீ கொஞ்சம் ஊதி வழியனுப்பே..."

" எங்கப்பா  எந்த சாவுக்கும் ஊதக்கூடாதுன்னு பிடிவாதமா இருந்தார். அதை நான் கெடுக்கக் கூடாது. அவரே எதுக்கு தொந்தரவு பண்ணனும் "

அவர்களின் வீட்டைச்  சுற்றி  இரண்டு பண்டாரக்  குடும்பங்கள் இருந்தன. கட்டிடம் கட்டுதல், கல் கொத்துவதற்கு போகும் போயர்கள் நான்கு குடும்பங்கள் இருந்தனர். திருமண விசேஷங்களில் மங்கள வாழ்த்துப் 
பாடுவதற்கு சென்று வரும். இரண்டு நாவிதக் குடும்பங்களும் இருந்தன.

         பாடை சோழியர்  தெருவைத் தாண்டிக் கிழக்குத்தெருவிற்கு நகர்ந்தது. பாண்டிய வேளாளர் பீமார்கள் அந்த தெருவில் அதிகம் இருந்தனர். பெரும் கூட்டமாய் வீட்டிக்கு வெளியே வந்து நின்று பாடை கடந்து போவதைப்  பார்த்தார்கள்.
" உள்ளூர்லே  ஜாதகம் பார்க்கப்போயி அவனுக்கிட்ட உட்கார்ந்தா நல்லா இருக்கா "  என்று அவர்களில் பலர் ஜாதகம் கட்டை தொட மறுத்து விலக்கியே வைத்திருந்தனர். அவர்கள் ஏதாவது விசேஷம்  என்றால் சோளி  போட்டு சரி தவறு என்று சொல்லிக் கொள்வார்கள் பலர் ஒரே இடத்தில் உட்கார்ந்து சோளி போடும்போது கொம்பூத அன்புவை அழைப்பார்கள்

"தொடக்கம் மங்கலமா இருக்கனுமில்லையா ... அதுதா அன்பு இருக்கட்டும் " என்பார்கள்.

" எண்கணிதமும் வேண்டா ... பஞ்சாங்கமும்  வேண்டா...பொறந்த தேதியும் வேண்டா ...நினைக்கறதே மனசுலே வெச்சுகிட்டு சோளி உருட்டலாம். வர்றது வரட்டும் " என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

" ஜாதகம் ஒன்னும் பார்க்காமே சோளி  உருட்டறதே  எவன் ஆரம்பிச்சு வெச்சிருப்பான்."

" ஏதாச்சும் பெரியார் கட்சி ஆளா  இருந்திருக்கணும் ".

"அவனுக வேண்டாம்னா வேண்டாம்தா இருப்பாங்க. அதுக்கு மாத்து இதுன்னு போக மாட்டாங்கலே"
"எவனோ ஆரம்பிச்சு வெச்சுட்டான் போ .."

 "வள்ளுவன் தெருவுக்கு எவனும் போகக் கூடாதுன்னு வேணும்ன்னு  பண்ணுன சதி போலிருக்கு .."

 " அந்தக் காலத்தில ஒரு குடும்பதுக்குன்னு பத்து ரூபா வாங்குனாங்க அவங்க. இப்போ ஐநூறு, ஆயிரும்னு வராங்க. அவனுகளுக்கு வருமானம் போகக் கூடாதுன்னு முந்தியே யாரோ சோளியை உருட்டிவிட்டாங்க போலிருக்கு" மனப் பொருத்தம் என்று வருகிறபோது கூட ஆறேழு பொருத்தங்கள் இருந்தால் போதும் என்று ஒதுங்கி கொள்ளப் பழகிக் கொண்டார்கள் .
"பத்துபொருத்தத்துக்கு மேல வேணும்னு காத்திருந்து அந்தக் காலம் "
"அதுகுத்த சோளி வந்திருச்சே ."
"அவனுக வெள்ளை வேஸ்டினு வெள்ளை சட்டைனு போட்டு ஜம்பம் பன்றானுங்க ."
"அதுதா அவங்க மேல எடுத்தவகையில பொறாமைனாலதா இது வந்திருக்கோணும் .,"
ஜாதக ஓலைச்சுவடி ஏகதேசம் மறைந்து விட்டது போலிருந்தது .  நாற்பது பக்க நோட்டில் மஞ்சள் தடவி கிரகப் பலன்கள் இருக்கும் . கைவசம் பெரும்பான்மையோர் அதையே வைத்திருந்தார்கள்.
 வெத்தலக்காரர்கள் தெருவை அன்புவின் பாடை கடந்தது.

        பல போகங்களை வெற்றிலை விளைந்த ஊர்தான் அது . உள்ளூர் வெற்றிலைக்கு காரம் அதிகம். அளவில் பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல் அளவில் இருக்கும் சதா வெற்றியை விட கற்பூர வெற்றிலைக்கு மவுசு அதிகமா இருந்தது . கொழிந்து வெற்றிலையை ,முதியா வெற்றிலையா என்று வகை வகையாய் ருசிக்குத் தகுந்தபடி வாங்கிக் கொள்வார்கள். கல்யாணம், காது குத்து , கருமாதி  என்று எல்லா விசேஷங்களுக்கும் வெற்றிலையை தாராளமாக புழங்கிக்கிற ஊராக அது இருந்தது அது. வெற்றிலையின் பசுமை எல்லோரின் முகங்களிலும் பூத்திருக்கும். 
         பெரிய கோமுட்டி செட்டியார் இறந்த பின் பொதுச்சாவடி அதிலிருந்து பெரிய மாளிகைக் கடை பெரியண்ணன் கைக்குப் போய் விட்டது . முன்பெல்லாம் எந்த நவதானியம் என்றாலும் பெரிய கோமுட்டி செட்டியார் கடைக்குதான் போக வேண்டும் . சரியான நேரத்துக்கு காலையிலும் மாலையிலும் கடை திறக்கும் . அந்த காலத்தில் பெண்களை கடையில் உட்கார வைத்து அழகு பார்த்தார்கள் அவர்கள் . குழந்தைகள் மாளிகைக்கு கடை முன்னாள் ஆடிக் கொண்டிருக்க வீட்டுப் பெண்களை , ஆண்கள் இல்லாதபோது மளிகைக் கடையில் உட்கார வைத்திருந்தார்கள் .
ஜாதகம் கணிப்பதில் சின்னண்ணன் பண்டாரம் அந்தக் காலத்தில் முக்கிமானவராக இருந்தார். "வேற ஜாதிக்காரனுக்கு எப்படி இது கை வந்துச்சு" என்று பலரும் வியந்து போகிற  அளவு  சின்னண்ணன் பண்டாரம் எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார் . தங்கமுத்து , சண்முகம், சுந்தரம் போல் அவரும் எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார்.

பாடை நவதானியக் கடையைக் கடந்து  தார் சாலையை அடைந்தது. கிழக்கே போனால் முருக நதி  வந்துவிடும். இடது பக்கம் சுடுகாடு இருந்தது. அடர்ந்த டெல்லி முட்கள் பசுமையை மீறி பயத்தைத் தரும். தூரத்திலேயே அதன் அடர்த்தி தெரிந்தது.

         ஆற்று நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பாடையை இறக்கி வைத்தவர்கள் குழி தோண்டிக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார்கள். அன்பு பல சமயங்களில் சுடுகாட்டு மேடையில்  உட்கார்ந்து சலசலக்கும் ஆற்று நீரை வேடிக்கை பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தார். சலசலப்பும், தெளிவும் அவர் முகத்தில் தெளிவை கொண்டுவந்து விடும்.


இதென்ன பிணத்தைப் பார்ப்பதே இரண்டு நாட்களாய் வாடிக்கையாய் போய்விட்டதே என்று நினைத்தபடி அன்புவின் படையைப்பார்த்துக் கொண்டிருந்தாள் பரமேஸ்வரி. சற்றே நைந்து போன நைலான் சேலை இடுப்பில் நிற்காத குழந்தை போல் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவளின் இடுப்பைகையால் மறைத்துச் சுதாரித்துக் கொண்டாள்.

அவளுக்கும் ஆற்றின் சலசலப்பு ரொம்பவும் பிடிக்கும். ஆற்றில் உட்கார்ந்தபடியே சற்றே இருட்டாகும் வரை உட்கார்ந்திருப்பாள். வானம் நிலத்திலிருந்து சூரியனின் வெளிச்சத்தை முழுமையாய் இழந்து கருக்கிறவரை உட்கார்ந்திருப்பாள். இன்றைக்கு கிறிஸ்டோபர் வருவதாக சொல்லியிருந்தான். தன்னிடம் பெற்றக்  கடனைத் திருப்பித்தராததால் திட்டித்   தீர்த்திருந்தாள்.

 " கர்த்தர் உன்னையெல்லா சும்மா விடுவாரா" என்று ஏதோ அகராதியாய்  சொன்னாள். கர்த்தரைப்  பற்றியெல்லாம் அவருக்கு ஒன்றும் தெரியாது. எதோ ஏதேச்சையாய் பெயர் வாயில் வந்துவிட்டது போலிருந்தது அவளுக்கு.



2

                      " மண்டையில ரெண்டு போடு அப்பத்தா அது அடங்கும். அடங்காமே எந்திரிச்சுட்டுத் திரியுது பாரு"  என்றான் வெட்டியான்.  சிவனுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்களைத் துடைத்துக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. வெட்டியானின் கையில் வைத்திருந்த தடி வெகு கனமாக இருந்தது வயதானவர்கள் நிலத்தில் ஊன்றி தவழ்ந்து போகப் பயன்படும் தடியைப் போல இருந்தாலும் கனம் இருப்பதாகத் தோன்றியது. சிவன் உடல் எரிந்து கொண்டிருந்தது. செந்நிறப்பிழம்புகள் திமிறிக்கொண்டு மேலேறிக் கொண்டிருந்தன.

நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து பகலின் இறுதி நேரத்தை வழியனுப்பிக் கொண்டிருந்தது. தீக் கொழுந்து அடர்த்தியை இரவு நேரத்தில் துல்லியமாக காட்ட இன்னும் நேரம் இருந்தது. சடசடவென்று கேட்கும் சத்தம் விறகு எரிந்து பொசுங்கிப் போவதாலா, கருகும் உடம்பின் எலும்புகள் தீயில் கருகி வெடித்துத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறதா என்ற யோசனை சிவனுக்கு வந்தது. வேறு பிணம் எதுவும் எரியாமலோ புதைபடாமலோ சுடுகாடு வெறுமையாகக்  கிடந்தது. வெட்டியானைத் தவிர கலைந்து போனவர்கள் அங்கங்கே நின்று கொண்டிருந்தனர். கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியதுபோல் சிவன் நின்றான்.

" ஆவி வெளியே போகாமெ  கபாலத்துல நிற்குது. அதுதா உடம்பை எழுப்பிட்டே இருக்கு. நாலு போடுங்க."


" அதெல்லா என்னாலே முடியாது. நீயே பார்த்துக்க "

           சிவன் தீச்சுவாலையின் சூடு அதிகமில்லாத இடத்திற்கு  நகர்ந்து விட்டிருந்தான். இவ்வளவு நெருக்கமாய் நின்று அவன் பிணம் எரிவதைப் பார்த்ததில்லை. பிணம் எழும்பிக் கொண்டிருக்கையில் அடித்துக் கிடத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். தடியைக் கொடுத்து அடி என்று சொல்லிக்கொண்டிருந்தான் வெட்டியான். ஏதோ  நினைப்பில் அங்கு நின்றிருக்கக் கூடாது என்ற நினைப்பு அப்போதுதான் வந்தது சிவனுக்கு.
அவன் படுத்துக் கிடந்த ஒரு தரம் கையில் இருந்த நீண்ட வேப்பங்குச்சியால் அடித்து அவனை எழுப்பியிருக்கிறார் அப்பா. அதற்குப் பழிவாங்கும் விதமாய் பிணமாய் கிடப்பவரை தன்னை அடிக்கச் சொல்கிறானா வெட்டியான். இதொரு சந்தர்ப்பமா அவரை அடித்து வீழ்த்த... பிணமாகிவிட்டார். இனி எழும்பப்போவதில்லை. ஆனால் பிணம் எழுந்து தொந்தரவு செய்வது போல் அதை அடிக்கச் சொல்கிறான் வெட்டியான். அதெல்லாம் அவனால் முடியாது. அவனின் துணைக்கு யாருமில்லாததால் தடியைத் தன்னிடம் கொடுக்கிறானா கூட யாருமில்லைதான் அவனுக்கு. சாம்பலாகும்வரை பிணம்தான் துணை அவனுக்கு.

           அப்பா அவனை நீண்ட வேப்பங்குச்சியால் அடித்தது அவன் படிப்பில் வெகு சுமாராக இருக்கிறான் என்ற புகாரால். எப்படிக் கரையேற்றுவது  என்று பள்ளி ஆசிரியர் ஒருவர் அன்புவிடம் சொல்லியிருந்தார். வழக்கமாய் நீண்ட வேப்பங்குச்சியை கொண்டு வந்து ஒரு ஜான் நீளத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்வார். ஒரு ஜான் நீளக் குச்சியை ஒரு நாள் பயன்படுத்திவிட்டு அது எவ்வளவுதான் மிச்சம் இருந்தாலும் தூக்கி எரிந்து விடுவார். அப்படியொரு நாள் வேப்பங்குச்சியைக்  கொண்டு வந்த நாளில்தான் படுத்துக் கிடந்த அவன் மீது அவர் வேப்பங்குச்சியை விசிறியது நல்ல வலி இருந்ததாக ஞாபகம். அடுப்படியில் இருந்த அம்மாதான் அவனின் அலறல் கேட்டு ஓடிவந்து பாயில் நின்றாள்.                       " செரி...செரி ...படிப்பு வாரமியப் போகப் போகுது. படிப்பான் " என்றாள்.

வடக்குப்பக்கம் இருந்த தொம்பன் மகன், பள்ளி  ஆசிரியர் சிவன் பற்றிச் சொன்னபோது பக்கமிருந்தாள் . "இவனுக பன்னி  மேய்ச்சு பன்னிக் கறி  தின்னு பன்னியா அலையறானுக. படிப்பிலே கெட்டிக்காரன். ரொம்ப சூட்டிகை" என்று சொல்லிக் காட்டியிருக்கிறார்.

" அவன் மூத்திரத்தை குடிடா... அப்பவாச்சும் படிப்பு வருதான்னு பார்க்கலாம்".

"செரி ...செரி...  நல்லதுதா.  அவனவன் மூத்திரத்தை குடிக்கறது நல்லதுதா. இதுலே மத்தவன் மூத்திரம் எங்க வந்தது. படிக்கலேன்னு அடிக்க வந்துட்டீங்க. நீங்கல்லாம் படிச்ச லட்சணம் தெரியுதா..."

" அதுத இவனே படிக்க வெக்கணும்னு ஆசை தோசை அப்பளங்கறான்..."

"செரி... செரி...அதுக்குன்னு நொறுக்கிர்ரதா..."

         அவர் வளர்த்திய 'மணிபிளாண்ட்' மளமளவென்று வளர்ந்து ரொம்ப தூரம் சென்றிருந்ததைப் பார்த்தான். அது அவருக்கு ஏன் பிடித்தது என்று தெரியவில்லை. வீட்டின் முகப்பில் படரத் துவங்கி கூரைக்கு மேல் சென்று வானத்தைத் தேடுவதாக இருந்தது. அது எங்கு சென்று முடிந்திருக்கிறது. என்பதை அவன் சரியாக கவனித்ததில்லை. அவ்வப்போது ஓட்டுக்கூரையில் அது ஏறும் பகுதியில் வெட்டி விடுவார். அது போகும் திசையெல்லாம் கருகி விழச் செய்வார். அது மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அவரை நாற்காலியில் உட்காரவைத்து உபச்சாரம் செய்தபோது அவர் எதையெதையோ நினைத்துக் கொண்டு பொழுதைக் கழிப்பார். தான் சரியாகப் படிக்கவில்லையென்பதற்காய் அடித்தவர். தான் அவ்வளவாய் சம்பாதிக்கவில்லை என்பதற்காய் அடிக்க நினைத்திருப்பாரா என்ற எண்ணமும் சிவனுக்கு வந்திருக்கிறது. அவரின் அன்னார், தம்பி மகன்களெல்லாம் வியாபாரத்தில் நிறைய சம்பாதித்திருக்கிறார்கள். தனது ஒரே மகன் அப்படி சம்பாதித்திருந்தால்  அவருக்குப் பெருமையாக இருந்திருக்கும். சிவனும் வெவ்வேறு வகையில் குட்டிக் கரணம் அடித்துப் பார்த்திருக்கிறான். இந்தக் குட்டிக்கரணத்திற்கும் பெரிய கைதட்டல் இருந்ததில்லை. பெருமூச்சே வெளிப்பட்டுக் கழிந்திருக்கிறது.


ஒரு நாள் அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவன் அப்பாவிடமும் கேட்டுவிட்டான்.

"எங்க தொட்டாலும் வலிக்கிற பொழப்பு.  இதுல எங்காச்சுத் தொட்டதுனாலே வலின்னு சொல்றது..."

அப்போதுதான் அந்தக் கதையைச் சொன்னார். புதிதாக இருந்தது. யாரிடம் இருந்து கேட்டிருப்பார் என்பது தெரியவில்லை. ஒருவர் வைத்தியரிடம் சென்று தன் சுண்டு விரலால் தலையைத் தொட்டபோது வலித்தது. மார்பைத் தொட்டபோது வலித்தது. காலைத் தொட்டபோது வலித்தது. இடுப்பைத் தொட்டபோது வலித்தது என்றானாம். வைத்தியன் உன் சுட்டு விரலில் உள்ள புண் பழுத்து சீழ் பிடித்து இருக்கிறது என்றாராம்.

அவரை நாற்காலியில் உட்கார வைத்து வேடிக்கை பார்த்தது. அவரை  நோகவே  செய்திருக்கிறது.

"நீங்க நடமாட வேண்டாம்னா  சொன்னம்  "

" முடியல"

" அப்புறம் என்ன பண்றது. உட்கார்ந்தே பொழுதைக் கழிங்க..."

" இந்த ஊர்லெல்லா கூட அந்த மாதிரி சாமியார்க இருந்திருக்காங்க. அவங்களுக்கு அவங்களே சமாதி கட்டிட்டு போயி உக்காந்துக்குவாங்க. உக்காந்தப்புறம் தண்ணி சோறுன்னு எதுவும் பொழங்கமாட்டாங்க. அப்படியே உடம்பு இறுதி மூச்சு நின்னு போகும். அது மாதிரி மூச்சு நின்னா நல்லா இருக்கும்."

" அதெல்லா இந்த நாற்காலியிலே நீங்க உக்காரதுக்கு முந்தி பண்ணியிருக்கணும். செஞ்சு காட்டி பலரு கிட்டச் சொல்லியிருக்கணும். இப்போ பேசி என்ன பண்றது. அதையெல்லா நானு பண்ணமுடியாது."

"பேச்சுக்குச் சொன்னன் "

       மணிபிளாண்ட் செடி சுவரின் நாற்காலி பக்கம் ஊடுருவச் செல்வதை அவர் விரும்பியபோது ஒரு தரம் எடுத்து தன் பக்கத்தில் கிடக்குமாறு செய்தார்.  அது மெல்ல வளர்ந்து  மேலே கூரைக்குச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் இயக்கத்தை தினந்தோறும் கவனிப்பவர் போல் பார்த்துக் கொண்டிருப்பார். வேறு எவ்வளவோ செடிகள் இருக்கின்றன, கொடிகள் இருக்கின்றன.

அதையெல்லாம் விட்டு விட்டு 'மணிபிளாண்ட்' செடியைப் படர விடுவதற்குக் காரணம் அதில் உள்ள 'மணி ' என்ற பெயர்தான் காரணமோ என்றுக் கூட அவனுக்குத் தோன்றியிருக்கிறது.
அவர் கணபதியிடம் ஒரு வருடம்  முன்னால் சாதகத்தை எடுத்துக் கொண்டு சென்றிருந்தார். எதேச்சையாய் அவரின் கையை கவனித்த கணபதி சாதகத்தைப் பார்க்காமல்           ஆயுள் ரேகையெல்லா பட்டை போட்டது மாதிரி இருக்குது.இனி உடம்பு ஒத்துக்காது என்று முணுமுணுத்துவிட்டு சாதகத்தைப் பார்க்காமல்  திருப்பிக் கொடுத்து விட்டார். எல்லாத்துக்கும் பரிகாரம்ன்னு ஒண்னு இருக்குது. அதெப்பாருங்க என்றார். தோசப்பரிகாரம் பக்கமெல்லாம் போகாமல் அவர் நிராகரித்தே நாற்காலியில் உட்கார்ந்து ஆயுளை முடித்துக் கொண்டு விட்டார்.
           அன்பு உட்கார்ந்து  சலித்து செத்துப் போன நாற்காலியை பத்திரமாக வைத்திருக்க நினைத்தான் சிவன்.. சிவமணி ஒத்துக்கொள்ளமாட்டாள். எங்காவது தூக்கி எறி என்பாள். முருகநதிப்பக்கம் கொண்டு போய் போடு என்பாள் என்பதை நினைத்த போது அவனுக்கு அடக்க முடியாதபடி அழுகை வந்தது. தனியாய் சுவர் பக்கம் திரும்பி நின்று அழுதுதீர்த்தான்.