உள்ளத்தில் கள்ளம் உண்டாயின்...
(சத்குருவிற்கு ஒரு திறந்த மடல்)
-------------------------------------------------------
அன்புள்ள சத்குரு, வணக்கம்.தங்களுடைய பேட்டிகளை இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
நீண்ட நாட்களாக யோகா கற்றுக் கொள்ளவில்லையே என்கிற மனக்குறையை தீர்த்து
வைத்தமைக்காக முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். யோகா கற்றுக்
கொண்டால் மனம் நிதானத்தில் இருக்கும், கோபம் வராது என்றெல்லாம் உங்களை நேசிக்காத சிலரும்
கூட சொல்லி வந்தார்கள். தங்களது பேட்டிகளை பார்த்த பிறகு யோகா கற்றுக் கொள்ளாததால்
ஒன்றும் குறைந்துபோய் விடாது என்று எனக்கு தோன்றியது. சத்குருவே கோபப்படுகிறார்.
லட்சக்கணக்கான... தப்பு தப்பு... கோடிக்கணக்கான மனிதர்களுக்கு தமிழகத்தில்,
இந்தியாவில்,
வெளிநாடுகளில் தரம்
பிரித்து (அதாவது வெவ்வேறு கட்டணம் வைத்து) யோகா கற்றுக் கொடுக்கிற சத்குருவாகிய
உங்களுக்கு கோபம் வந்ததைப் பார்த்தேன். உங்கள் மீதான விமர்சனங்களை, பேட்டி கண்டவர்கள்
மிகுந்த நிதானத்தோடும் தாங்கள்கோபித்துக் கொள்ளக் கூடாது என்கிற கவனத்தோடும்
முன்வைத்தார்கள். அப்போது பார்க்க வேண்டுமே உங்கள் முகத்தை...
அந்த நிகழ்ச்சியை நீங்களும் ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
உங்கள் கண்,முகம், உடல்மொழி, வார்த்தைகள் இவையெல்லாம் பார்க்கிறவர்களை, கேள்வி கேட்பவர்களை மிரட்டுகிறது.
எனக்கு உண்மையில் பயம் ஏற்பட்டது. எருமை, அறிவில்லாதவர்கள், மூளையில்லாதவர்கள், கட்டப்பஞ்சாயத்து,
புத்தியில்லாதவர்கள்,
விபச்சாரிகள்
என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள். பலமொழிகளில் உயர் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி, நீங்களே சொல்வதைப் போல பல உயர்ந்த நிறுவனங்களில் நிர்வாகியாக
இருப்பவர்களுக்கெல்லாம் வழிகாட்டுகிற சத்குரு, பொதுவெளியில் இப்படி
வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள்
சொல்லுகிற உயர்தொழில்நுட்பத்தில் இது எல்லாம் கிடையாதா?.ரிஷிமூலம்...அனைத்திற்கும்
ஆசைப்படு என்று நீங்கள் சொல்வது வழக்கம். ஆனால் சத்குருஎன்ற ஒரு பெயருக்காக அத்தனை
கோபத்தோடு, பேட்டி கண்டவரிடம் அழுத்தம்
கொடுத்தது சற்று ஆச்சரியமாக இருந்தது. இன்று தாங்கள் யாராக இருந்தாலும்
ஜக்கிவாசுதேவ் என்ற பெயர் உங்களுக்கு ஏன் அப்படி கசக்க வேண்டும். அந்த பெயருடன்
சம்பந்தப்பட்டிருக்கும் தங்கள் கடந்த காலம் ஏதேனும் உங்களை மிரட்டுகிறதோ என்று
எண்ணத் தோன்றுகிறது. அதுவெல்லாம் ஒருபிரச்சனையா குருவே. நீங்கள் சத்குருவான பிறகு
உங்கள் மனைவி விஜி இறந்து போனதும்அவர் கொலை செய்யப்பட்டதாக அவருடைய உறவினர்கள்
புகார் அளித்ததும், அவர்களது உறவினர்கள் வருவதற்கு முன்பே உங்கள் மனைவியின் உடல்
எரியூட்டப்பட்டதும், இறந்தவர்களை புதைப்பது தான் உங்கள் வழக்கம் என்றாலும் எரிப்பது என்று எடுத்த
முடிவு தடயங்களை அழிக்கவே என அவர்கள் குற்றம் சாட்டியதும் சத்குருவின் பெயரோடு
ஒட்டிக்கொண்டது தான். பிறகு ஏன் ஜக்கிவாசுதேவ் என்ற பெயரின் மீது உங்களுக்கு
இத்தனை கோபம்...! அந்நிய மோகம் குறித்து அதிலும் ஆங்கிலேயர்கள் வைத்திருந்த
டிரம்சை பயன்படுத்துவது குறித்தெல்லாம் அருவருப்போடு பேசியிருக்கும் நீங்கள்,
போப்பை போல என்னை
ஏன் பாவிக்கவில்லை என்று கோபப்பட்டீர்கள். நீங்கள், போப்பை விட பெரியவர். கடவுளுக்கு
அடுத்த இடத்தில் உள்ளவர். நீங்கள் ஏன் அவரோடு ஒப்பீட்டு போட்டியிடுகிறீர்கள் என்று
தெரியவில்லை. யார் கட்டப்பஞ்சாயத்து...
உங்கள் மீது விமர்சனம் வைப்பவர்களை பணத்திற்கு விலைபோனவர்கள் என்று கொஞ்சமும்
கூச்சமின்றி பேசியிருக்கிறீர்கள். பணத்தால் வாங்க முடிந்திருந்தால் பல
உயர்பதவிகளில் இருந்தவர்களை - ஏன் நாட்டின் பிரதமரையே வளைத்துப் போட்டிருக்கும்
உங்களால் அவர்களை வாங்கியிருக்க முடியாதா? சத்குரு அவர்களே, ஏழைகள் என்றால் உங்களுக்கு
இளப்பமா? முத்தம்மாள்
ஏழைப் பெண் தான். ஆதிவாசிப் பெண்தான். படிக்காதவர் தான். ஆனால்
அடுத்தவர்காசுக்கும், அதீத லாபத்திற்கும் ஆசைப்படுபவர் அல்ல. நீங்கள் சொல்வது போல அனைத்துக்கும்
ஆசைப்படக் கூட தெரியாதவர். அப்படிப்பட்டவர்கள் மீது சரி சமமாக... இன்னும் சொல்லப்போனால்
உங்களுடைய சத்குரு என்கிற நிலையிலிருந்து இறங்கி வந்து தெருச்சண்டைக்கு
அழைக்கிறீர்கள். இன்னும் கூடஒன்று சொன்னீர்களே... நான் கோபப்படவில்லை; சத்தமாகப் பேசினேன்
என்று. உண்மையை சத்தமாகச் சொல்ல வேண்டும்; அப்படித்தான் அவதூறுகளை எதிர்கொள்ள முடியும் என்றீர்கள்.
ஆஹா எத்தனை பெரிய தத்துவத்தை உலகுக்கு வழங்கியிருக்கிறீர்கள். அதுவெல்லாம் ஒரு
பக்கம் இருக்கட்டும். நீங்கள் ஏதோ சட்டப்படி நடப்பது போலவும், உங்களது தவறான
நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர்கள்
என்றும் கூறியிருக்கிறீர்கள். சட்டத்தையும் மீற ஆசையா?சத்குரு அவர்களே, பிப்ரவரி மாதம் 24ஆம்தேதி 112 அடி சிலையை திறக்க விழா
நடத்துகிறீர்கள். பிரதமர் வந்து திறக்கிறார். 15.2.2017ல்தான் அந்த இடத்திற்கான அனுமதி
பெற்றிருக்கிறீர்கள். ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்திருப்பீர்கள்.
அனுமதி கிடைப்பதற்காகத் தான்நாட்டினுடைய பிரதமரை அழைத்து அதைதிறக்கச் செய்தீர்கள்
என்று ஒருவர் கருதினால் அதை தவறு என சொல்ல முடியுமா?. சட்டத்தை மதிக்கும் நீங்கள்
அனுமதி பெற்றபிறகு தானே கட்டுமானப் பணிகளை துவக்கியிருக்க வேண்டும்.
கட்டுமானப் பணிகளை துவக்குவதற்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று
சொல்பவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், எல்லாவற்றையும் கட்டி
முடித்துவிட்டு எவர் அனுமதியும் தேவையில்லை என்று எகத்தாளமாய் இருந்துவிட்டு,
பிரதமர் வருகையை
காரணம் காட்டி அரசுநிர்வாகத்தை நிர்ப்பந்தித்து அனுமதி வாங்குவீர்கள், அதன் பெயர் சட்டப்படி
நடவடிக்கையா? சத்குரு அவர்களே லட்சக்கணக்கான பேர் தவறு, நீங்கள் சொன்னது, கோடிக்கணக்கான பேர்
நீங்கள் சொல்வதை நம்பலாம். ஆனால் சட்டத்தின் முன் நீங்கள் குற்றவாளி தான். தன்னை
ஆதி சிவன் என்று காட்டிய பின்னும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று
நக்கீரன் சொன்னதாய் தமிழ் இலக்கியம் கூறுகிறது. ஆதி சிவனையே தவறு என்றவர்கள்
ஆதியோகிக்கு ஒரு சிலை வைத்துவிட்டதால் அதுவும் 112 அடியில் வைத்து விட்டதால்
நாங்கள் அடங்கிப் போக வேண்டுமென்று நினைக்கிறீர்களா? தங்களிடம் ஈஷா யோகா மையம் அனுமதிவாங்கவில்லை
என்று நகர் மற்றும் ஊர்ப்புறத்திட்டத்துறை அடித்துச் சொல்லுகிறது. உங்கள் பதில்
என்ன?. அவர்களிடம்
அனுமதி வாங்கினால் அந்த துறைக்கு வருமானம் கிடைக்கும். நீதிமன்றம்
தீர்மானிக்கட்டும். தேவையானால் கொடுத்துவிட்டுப் போகிறேன் என்கிறீர்கள். இப்படி
சட்டத்தை, நிர்வாகத்தைப்
பற்றிய எகத்தாளமான உங்கள் பதிவு,நான் எவனுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல என்ற
இறுமாப்பிலிருந்து எழுந்தது. 8.10.2016 மற்றும் 15.2.2017 ஆகிய தேதிகளில் 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை
மாற்ற கோவைஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மத வழிபாட்டை கருத்தில் கொண்டு இந்த
அனுமதி அளிக்கப்பட்டதாம். மதத்தின் பெயரால் விளைச்சல் நிலங்களை அழிப்பது நியாயமா
சத்குரு? நீங்கள்
இன்னொன்றையும் கூடச் சொன்னீர்கள். கார்ப்பரேட் என்றால் ஒழுங்கு.நான்
கார்ப்பரேட்டாக இயங்குவதில் என்னதவறு என்று கேட்டீர்கள். விதி மீறல்
குற்றச்சாட்டுக்கு உட்படாத ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை உங்கள் ஞான
திருஷ்டியால் கண்டு சொல்லுங்கள் சத்குருவே. மல்லையா, சஹாரா சுப்ரதா ராய்
இவர்கள்எல்லாம் கூட கார்ப்பரேட்டுகள் தான். கார்ப்பரேட்டுகள், அனுமதி வாங்கியது போன்ற
தோற்றத்தையாவது ஏற்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் அதற்கும் கூட தயாரில்லை.சட்டம்
உங்கள் பையிலா...மலைத்தள பாதுகாப்புக் குழு ஒன்று இருக்கிறது. அதற்கு என்று
சட்டத்திட்டங்கள் இருக்கின்றன.
ஜெயலலிதா ஜெயிலுக்குப் போன பிளசன்ட் ஸ்டே வழக்கு, மலைத்தள பாதுகாப்புக்குழுவின்
விதிகளை மீறியதற்காகத்தான் என்பதை முற்றும் அறிந்த ஞானியானஉங்களுக்கு நான்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் மலைத்தள பாதுகாப்புக் குழு,வனத்துறை ஆகியவற்றைப்
பற்றியெல்லாம் அவர்கள் ஏதோ சட்டம் வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறீர்கள். அது
எப்படி. இந்திய நாட்டின் சட்டம், அதன்படி இயங்கும் நிர்வாகஅமைப்பு உங்களை கட்டுப்படுத்த
முடியாதா?. இக்கரைபோளுவாம்பட்டியில் புல எண் 48/1, 48/2, 49, 50/1, 50/2ஏ, 50/2பி-ல்
கட்டப்பட்டுள்ளஅத்தனை கட்டிடங்களும் விதிகளை மீறியவை. அவற்றில் பணிகளைத் தொடரவும்,
மூடிசீல் வைக்கவும்
ஒரு மாத காலத்திற்குள் இடிக்கவும் சொல்லி கோப்பு எண். 1866/2012-4, தேதி:21.12.2012ல் உங்களுக்கு
வழங்கப்பட்ட ஆணையை நீங்கள் அமல்படுத்த அனுமதித்தீர்களா? பதற்றப்பட்டு உடனே யாரிடமாவது
மேல்முறையீடு செய்தீர்களா? ஒரு மாதத்திற்குள் இடிக்க வேண்டுமென்று சொன்னதற்கு மூன்று
மாதம் கழித்து 19.3.2013ல் மேல்முறையீடு செய்கிறீர்கள். அரசு நிர்வாகம் ஏன் அதை
அமல்படுத்தவில்லை. ஏன் நீங்கள்நீதிமன்றம் செல்லவில்லை. அரசிடம் முறையீடு
செய்திருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் ஒரு கட்டிடம் கட்டப்படுவதற்கு அரசுத்
துறைகளில் அனுமதி பெற வேண்டும்என்கிற குறைந்தபட்ச விபரம் கூட தெரியாதவரா நீங்கள்;
என்றைக்காவது
எந்தக் கட்டிடத்திற்காவது அனுமதிக்காக மனுச் செய்திருக்கிறீர்களா; கடவுளாக இருந்தாலும்
அவர்களுக்கும் கூட சில விதிமுறைகள் இருக்கிறது என்று நமது புராணங்கள்
சொல்லுகின்றனவே. அவர்களையெல்லாம் மீறிய அதி கடவுளா அல்லது ஆதி கடவுளா நீங்கள்?
எந்தவொரு
அனுமதியும் பெறாமல், அரசு அமைப்புகள் எதையும் சட்டை செய்யாமல் நடந்து கொள்ளுகிற நீங்கள்
கட்டப்பஞ்சாயத்தைப் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டீர்கள். உங்கள்
வளாகத்திற்குள் குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
தமிழ்நாடு குழந்தைகள் நல வாரியம் விசாரிக்க முனைகிறது. அதை விசாரிக்கக் கூடாது
என்று நீதிமன்றத்திற்கு போகிறீர்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். உங்கள்
பலம் நீதிமன்றம் வரை பாய்ந்திருக்கிறது. நீதிமன்றம் உங்களை விசாரிக்கக் கூடாது
என்று தடை விதித்து விட்டது. ஓ!சத்குருக்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள்
போலும்! அப்படிச் சொன்னாலாவது பரவாயில்லை. ஆனால் நீங்கள் நீதிமன்றத்தை மதிப்பவர்
போலும், சட்டத்தை
மதிப்பவர் போலும், உங்களை கேள்வி கேட்பவர்களை எல்லாம் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் போலும்
சித்தரிப்பது நியாயமா? அடுத்து ஒரு வழக்கு இருக்கிறது சத்குருவே, நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
ஏனென்றால் நீங்கள் கார்ப்பரேட் போல் இயங்குவதில் பெருமை கொள்கிறீர்கள்.
44 ஏக்கர் நிலத்தில் உங்கள் பினாமிகள் மூலம் வேலி போட்டுக் கொண்டீர்கள்.
தாசில்தார் அதை விசாரித்து உங்களுக்கு சொந்தமானது இல்லையென்று
உறுதிப்படுத்திவிட்டார். அந்த இடம் யாருக்கானது என்று விசாரித்துக்
கொண்டிருக்கிறார். உடனடியாக உங்களுக்கு இருக்கிற இயல்பான பலத்தை ஏவிவிட்டு
நீதிமன்றத்திற்கு போகச் சொல்கிறீர்கள். நீதிமன்றமும் அதை விசாரிக்கக் கூடாது என்று
சொல்லிவிட்டது. ஆஹா! நீங்கள் சட்டத்தை மதிக்கிற மாண்பு புல்லரிக்க வைக்கிறது.
மந்திரத்தை தவறாகச் சொன்ன பிரம்மனைக் கூட முருகன் சிறையில் அடைத்ததாக இருக்கிறது.
ஆனால் இந்த ஜனநாயக யுகத்தில் மதத்தை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துபவர்களைக்
கண்டால் நீதிமன்றங்களும் கை கட்டி நிற்கின்றன. நாங்கள் எளிய மனிதர்கள்.
ஆரம்பப்பள்ளிக் கூடத்திலிருந்து எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம்
சொல்லியிருக்கிறார்கள். உண்மை வெல்லும், நியாயம் வெல்லும் என்று. உண்மைக்கு எதிராக
கடவுள்களும், சத்குருக்களும் நின்றாலும் உண்மை தான் வெல்லும் என்று தான் அவர்கள்
சொல்லியிருக்கிறார்கள். பார்க்கலாம் நீங்கள் இப்போது பதற்றப்பட
ஆரம்பித்திருக்கிறீர்கள்; இன்னும்கூடுதலாக உங்கள் பலத்தை பயன்படுத்துவீர்கள்.
பிரபலத்தாலும், பிற பலத்தாலும் எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்கிற உங்களது அசாத்திய
நம்பிக்கையையும் மீறி உண்மைவெல்லும்; அதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். Kanakaraj -theekathir
*