சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 17 மார்ச், 2023

ஒரு பேட்டியை நேரடியாகக் கேள்வியிலிருந்து ஆரம்பிக்கலாமல் இப்படியும் ஆரம்பிக்கலாம்.. 0 சுப்ரபாதி மணியின் பேட்டிகள் : தொகுப்பில் சிங்கப்பூர் நகரம் மெல்ல இருட்ட துவங்குகிறது. தெருக்களில் மின் விளக்குகள் எரிய ஆரம்பித்துவிட்டன. வாகனங்கள் விரைவாகச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒழுங்கமைப்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த உணவு விடுதிக்கு வந்து விடுமாறு திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தகவல் தெரிவித்து இருந்தார். நண்பர் ரெ. பாண்டியன் அவர்களின் வீட்டு தொலைபேசி எண்ணில். ரெ.பாண்டியன் அவர்கள் என்னுடன் வர முடியாத சூழலில் இருந்தார். அவர் அந்த உணவு விடுதிக்கு செல்வதற்கான பேருந்து அடையாளத்தையும் வழியையும் சொல்லித் தந்தார் .வழியை விசாரித்து பக்கத்தில் இருந்த ஒரு மலர் கடையை பார்த்தபடி அந்த உணவு விடுதிக்கு வந்து சேர்ந்தேன். முதல் நாள் நா. முத்துசாமி அவர்களின் கூத்து பட்டறை நாடகம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கனிமொழி அவர்களும் அரவிந்தன் அவர்களும் வந்திருந்தார்கள் சிங்கப்பூரின் புகழ் பெற்ற நாடகவியலாளர் இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் தமிழ் முரசுக்கு பேட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். உணவு விடுதியில் வெளியில் போடப்பட்டிருந்த மேசைகளை பார்த்துக் கொண்டு அவற்றின் ஒழுங்கமைப்பை ரசித்துக்கொண்டு அந்த இடத்தின் உள்ளே நுழைகிறேன். உயரமான சுவர்கள், அதன் கூரை எல்லாவற்றையும் உட்கொண்டது போல் அமைதியாக இருந்தது. பச்சை நிற சட்டையும் நீல நிற பேண்டும் சிவப்பு நிற டையும் அணிந்த அந்த உணவு விடுதியின் பணியாளர்கள் என்னை வரவேற்றார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்து அங்கிருந்து நாற்காலி ஒன்றில் உட்கார ஆசைப்பட்டேன். அந்த நாற்காலி நல்ல அழுத்தமான மர வர்ணத்தை பூச்சாகக் கொண்டிருந்தது. அதிலிருந்த மூன்று சின்ன சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. கனிமொழி அவர்கள் உள்பகுதியில் இருந்து வந்து என்னை வரவேற்றார். அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட போது மிகவும் சவுரியமாக உணர்ந்து அடுத்த பக்கம் இருக்கும் சாலையைப் பார்க்க சில வாகனங்கள் கண்களில் பட்டன. சிறு பொம்மை போல பல கார்கள் விரைந்து போனது. பல வாகனங்களின் இரைச்சலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது அதனால் வேறு இடத்திற்கு செல்லலாம் என்று இன்னொரு பகுதிக்கு சென்ற போது சாலை நடமாட்டம் எனச் செல்லும் வாகனங்கள் இல்லாமல் சவுரியமாக இருந்தது. தமிழ் முரசு பத்திரிக்கை நிறுவனம் பற்றியும் தமிழ் முரசு பத்திரிக்கை சிங்கப்பூர் தமிழர்கள் வாழ்க்கையில் எப்படி முக்கியமான ஒரு பத்திரிக்கையாக, செய்தி ஊடகமாக இருக்கிறது என்பதையும் அவர் சொன்னார். அந்த பத்திரிகை பணி தனக்கு எப்படி பிடித்து இருக்கிறது என்று சொன்னார். வழங்கப்பட்ட தேநீருக்கு சர்க்கரை கட்டிகளை எடுத்து போட்டுக் கொண்டேன். ஆனால் இனிப்பு சுவை போதவில்லை அதே அளவு தான் கனிமொழி அவர்களும் சக்கரைக்கட்டிகளை போட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அந்த இனிப்பு சரியாக இருந்திருக்க வேண்டும். நான் மீண்டும் ஒரு சக்கரைக்கட்டியைப் போட்டுக் கொண்டேன். அவர் அதை பார்த்து தேநீர் சுவையாக இருக்கிறது அல்லவா என்றார். நான் இப்போது இன்னொரு சக்கரைக்கட்டையை போட்டுக் கொண்டதால் சுவை வந்து விட்டதால் ஆம் என்றேன். ( முன்பொரு முறை திருப்பூர் காலச்சுவடு நிகழ்ச்சியொன்றுக்கு வந்த போது இரவு உணவை கட்சிக்காரர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவர் உணவை வெகு அளவோடு எடுத்துக் கொண்டதையும் தேநீருக்காக சர்க்கரையை வெகுக் குறைவாகப் பயன்படுத்தியதும் கூட நினைவில் இருந்தது ) எங்கள் நேர்காணல் தொடங்கியது
சுப்ரபாரதி மணியன் நேர்காணல் கேள்விகள் மிலோ ராட் பாவிச் அவர்களுக்கானது... ( செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு இப்படி பதில் சொல்லி இருக்கிறேன் ) * உங்களுடைய செயல்கள், எதிர்வினைகள் எல்லாம் ஒரு குழந்தையினுடையது போலவே இருந்தன என்பதை கவனித்திருக்கிறேன் மிக முக்கியமான எழுத்தாளர் நீங்கள் என்ற உணர்வையே அவை தரவில்லை உண்மைதான் நான் பெரும்பாலும் சாமானிய மனிதனாகவே இருக்கவும், வழி காட்டவும் விரும்புகிறேன் அப்படித்தான் நான் குழந்தைகளுடன் கூட பழகுகிறேன். எங்கள் வீதியில் உள்ள குழந்தைகளை என் வீட்டிற்கு வாரம் ஒரு முறை அழைத்து கதை சொல்லவும், ,ஓவியங்கள் வரையவும், சிற்றுண்டி சாப்பிடவும் என்று இப்பொழுது பொழுதைக் கழிப்பது உட்பட பலவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னை மறப்பதற்கு வேறு ஒரு உலகத்தை காட்டுவதற்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் அப்படியே தான் நானும் இருக்க விரும்புகிறேன். * நீங்கள் ஏற்கனவே எழுதிய புத்தகங்கள் நீங்கள் மேலும் தொடர்ந்து எழுவதை தடுக்கின்றனவா அப்படி என்றும் ஒன்றும் இல்லை. ஆனால் பழைய புத்தகத்திலிருந்து மீண்டு நான் வெளிவர விரும்புகிறேன் திருப்பூரை பற்றி எழுதுகிற போது என் பழைய புத்தகங்கள் எப்படியோ இடைசஞ்சல்கள் ஆகி விடுகின்றன அவற்றை தான் தவிர்க்கவே விரும்புகிறேன் அவை என்னை தொடர்ந்து வருகின்றன. எழுதத் தடுப்பதில்லை ஆனால் வேறு களத்திற்கு போக தூண்டுகிறது * ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமும் முடிவும் இருக்கும்போது செவ்வியில் வழக்கில் உள்ள தொடக்கம் மற்றும் முடிவு பற்றிய கருத்தாக்கத்தை ஒடுக்குகிறோமோ, கைவிடுகிறோமா எல்லா படைப்புக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமோ முடிவோ இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்க வேண்டும் அது எப்படி முடிய வேண்டும் என்பதற்கான சுதந்திரங்கள் அந்த படைப்பு மையத்தில் தான் இருக்கின்றது *ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரே முடிவு தான் சாத்தியம் என நம்புகிறீர்களா? அப்படி எதுவும் இல்லை தொடங்கும் போது நான் வேறொரு மனிதன். முடிக்கும் போது வேறொரு மனிதனாக இருக்கிறபோது எப்படி ஒரே முடிவு சாதகமானதாக இருக்கும் . * இருப்பினும் சொல்கிறோம் பிறப்பிலிருந்து தொடங்கும் எதுவும் மரணத்தில் முடிகிறது என்று. ஆமாம் எல்லாம் பிறப்பிலிருந்து தொடங்கி மரணத்தில் முடிகிறதா ஒரு வழிப்பாதை தான் ஆனால் அதையே நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மரணம் இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தான் நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. • நம் வாழ்வின் கசப்பான நிதர்சனங்களை ஏற்று போராடும் ஆயுதமாக பேண்டஸியை கூறலாமா பேண்டஸி என்பது ஒருவகை தப்பித்தல் தான். அப்படியும் கூறிக் கொள்ளலாம் * உங்கள் பார்வையில் ஒருவர் உன்னதத்தை அடைய எந்த உண்மையை நோக்கி பயணப்பட வேண்டும் எதார்த்தமாக இருப்பது ,மனசாட்சியுடன் இருப்பது, உணர்வுடன் இருப்பது ஆகியவை உண்மையை நோக்கிய பயணத்தில் சரியாக இருக்கும். * பயம் நம்மை படைப்பாற்றலை நோக்கி இட்டு செல்கிறதா பதட்டம் இட்டு செல்கிறது என்று சொல்லலாம். பதட்டம் பயத்தை கொண்டு வந்து விடுகிறது. அதனால் பயமோ பதட்டமோ நிலை கொள்ளாமையும் படைப்பாற்றலை நோக்கி நகர்த்துகிறது என்று சொல்லலாம் * உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் பயம் ஏதாவது இருக்கிறதா நம்மை பற்றி ஏதாவது அவதூறுகள் வந்து விடுமோ. அப்படி நம்முடைய செயலும் சொல்லோ அமைந்து விடக்கூடாது என்ற பயம் தான் • நீங்கள் வியந்த முதல் எழுத்தாளரை உங்களுக்கு நினைவு இருக்கிறதா • நான் பார்த்து உயர்ந்த முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவருடைய உருவம், மேடையில் அவர் பேசுகிற தோரணை இதுதான் அவரை நினைக்க வைத்தது * உங்கள் எழுத்து நடைக்கு இந்த வாய்வழி பாரம்பரியம் எந்த அளவுக்கு முக்கியமாக அமைந்தது பெரும்பாலும் வாய்வழி பாரம்பரியம் மற்றும் சொல்லாடல்களில் பாரம்பரியம் என்பது என்னை பொறுத்தவரையில் பலவீனமாக தான் இருக்கிறது. என் கொங்கு பகுதி பேச்சையே நான் ஒழுங்காக உருவாக்கிக் கொண்டு பதிவு செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன் * உங்களைத் தூங்க வைக்கும் அளவிற்கு எழுதும் எழுத்தாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா இருக்கிறார்கள். வாக்கியங்கள் புரியாமல் அவற்றின் ஒருங்கிணைப்பு ஒரு அர்த்தத்திற்கு கொண்டு செல்லாமல் எழுதும் நவீன எழுத்தாளர்களை வாசிக்க முயன்று அப்படித்தான் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறேன். *ஒரு எழுத்து பிரதி எப்போது ஒரு வாசகனை அலுப்படையச் செய்கிறது வாசகன் அந்த எழுத்தாளருடைய பிரதி சார்ந்த அனுபவங்களை எப்போது தானும் கண்டிருக்க வேண்டும் அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டும் அல்லது அந்த தளத்தில் அவன் சென்று இயங்குவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் அப்படி இருக்கிற போது பிரதி வாசகனை அலுப்படைய வைக்காது. * அழகை பார்த்து எப்போதாவது அலுப்படைந்திருக்கிறீர்களா? இல்லை. அழகு என்பது புத்துணர்ச்சி ஊட்டுவது. அது ரசித்து மறந்து போவதல்ல. திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டிருப்பது * நீங்கள் எழுதும் போது வாசகனைப் பற்றி நினைப்பதுண்டா நிச்சயமாக இல்லை. என் எழுத்தில் என் அனுபவங்களும் உரையும் மொழியும் தான் முதன்மை படுகிறது. யாரை நோக்கி எழுதப்படுகிறது என்பதல்ல. * ஒருவர் எந்த காரியம் செய்தாலும் அதில் அவரை சிறப்பானவராக எது ஆக்குகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கிறீர்களா? தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது மனசாட்சியுடன் இருப்பது உணர்வு ரீதியாக இயங்குவது இதுதான் சிறப்பாக்கும் என்று நினைக்கிறேன் • உங்கள் தேசத்தை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் பல நாடுகளை சுற்றி பார்த்தவன் என்ற முறையில் நம் நாடும் மிக உயர்ந்த நாடுதான் இயற்கை வளமும் அழவும் கொண்டது தான். ஆனால ஊழலும் அதிகாரமும் பல்வேறு தளங்களில் செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கிறது இதெல்லாம் இல்லாமல் நியாயமான வாழ்க்கையோடு கூடிய அணுகு முறையில் நம் நாட்டைப் போல அழகான நாடு வேறு இல்லை என்று தான் நினைக்கிறேன் • ஒரு பெரும் எழுத்தாளர் பிறக்கிறானா அல்லது உருவாக்கப்படுகிறானா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் • எழுத்தாளன் சூழலால் உருவாக்கப்படுகிறாள் அவன் பிறப்பதாக இருந்தால் அவன் யாரிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று தெரியவில்லை * ஒருவர் உங்களுடைய நாவல்களை படிக்கும்போது அவை ஒழுங்கமைக்கப்பட்ட மனம் கொண்ட ஒரு கணிதவியலாளரின் படைப்புகள் போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றதே இருக்கலாம். காரணம் நான் அடிப்படையில் ஒரு கணிதவியல் மாணவன். முதுகலை கணிதம் படித்தவன். ஆகவே அப்படி ஒரு தோற்றம் வந்துவிடலாம். * பொதுவாக ஒரு எழுத்தாளர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் அவருடைய கடமை என்ன. உலகின் நிலவும் குழப்பங்களுக்கு ஒரு ஒழுங்கமைப்பை எந்த வகையிலும் அவர் பங்களிக்கிறாரா எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் மனசாட்சியாக எழுதுகிறார். அதன் மூலமாக நல்ல சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். சமூகத்தில் இருக்கிற ஒழுங்கமைப்பு என்பதில் அவர் அக்கறை கொண்டு செயல்படுகிறார். அந்த வகையில் தான் அவரை எழுத்தின் பயன்பாடு இருக்கிறது. * ஒரு நாவலை எழுதி முடிக்கு முன்பே அந்த நாவலைத் தொடர வேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா அப்படி பல சமயங்களில் அலுப்பு ஏற்பட்டிருக்கிறது ஆனால் அதை முடிப்பதில் தான் சவால் இருக்கிறது என்று தொடர் வேண்டி இருக்கிறது * கனவுகள் காண இயலாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா அப்படி என்றால் வாழ்க்கை இல்லாமல் தான் போகும். கனவு என்பது ஓரிரு விஷயங்கள் பற்றிய ஆசையாக இருக்கிறது ஆனால் நிஜமான கனவாக தூக்கத்தில் வந்து போகவே இந்த அர்த்தத்தில் இருப்பதில்லை • கனவு காணுதல் வாழ்க்கைக்கு அவசியமா தேவை • தேக்கத்திலிருந்து விடுபட கனவுகள் காண்பது தேவையாக இருக்கிறது அல்லது கனவில் இருந்து ஓடுவது தேவையாக இருக்கிறது. கனவில் இருந்து இன்னொரு கனவுக்கு ஓடுவது. பிறகு நிஜத்திற்கும். • நமது இருப்பின் காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா • நம் இருப்பின் காரணம் இயற்கையாகவே நாம் பிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்பதால் தான். அந்த இருப்பை நியாயப்படுத்த நாம் ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வகையில் நாம் எதுவும் செய்கிறோம். நான் கொஞ்சம் எழுதுகிறேன். * உங்களுடைய பார்வையில் ஒரு மாபெரும் எழுத்து என்பது ஒரு மாபெரும் ஆன்மாவால் அல்லது ஒரு மாபெரும் மனத்தால் மட்டுமே எழுதப்படக்கூடியதா அப்படி மாபெரும் ஆன்மா, மாபெரும் மனிதன் என்று எதுவுமே இல்லை. நியாயத்துடன் எதார்த்தத்துடன் அவன் பதிவு விட போது அது மாபெரும் எழுத்தாக அமைந்து விடுகிறது * உங்கள் கூற்றின்படி ஒரு திறமையான எழுத்தாளரின் படைப்பை படித்து புரிந்து கொள்ள ஒரு வாசகன் திறமை மிக்கவனாக இருக்க வேண்டுமா ஆமாம் திறமை என்பது வாசிப்பு திறமை தான். வேறு மொழி சார்ந்த அல்லது அறிவு சார்ந்த திறமை என்று எதுவும் தேவையில்லை . * திறமை என்பதை நீங்கள் வரையறுத்துக் கூற முடியுமா. அதன் அளவுகோல் என்னவென்று நான் சொன்னது போல வாசிப்பும் தொடர்ந்து வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருப்பதும் அறிவு சார்ந்த தேடல்களும் என்று இந்த அளவுகோல்களை கொள்ளலாம் * எடுத்துருவில் வாசிப்போரா அல்லது செவி வழி கேட்க விரும்புவோரா யாரை நோக்கி உங்கள் படைப்புகளை செலுத்துகிறீர்கள் எழுத்தாளர் என்ற வகையில் என் எழுத்துக்களை வாசிப்பவரை நான் விரும்புகிறேன். ஆனால் செவி வழியாக தரும்போது அதை இன்னும் சரியான பதிவாக மனதில் இருந்து கொள்ளும். * ஒரு பெரும் கிரேக்க எழுத்தாளர் ஒருமுறை சொன்னார் நான் எனது கதையின் முடிவை கண்டறிய வேண்டும் அது நடந்து விட்டால் மற்றவை தாமாகவே ஒழுங்கமைந்து விடும் என்று. நான் அப்படி நினைக்கவில்லை நான் கதையை முடிவு கண்டடையாமல் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். சூழலும் அறிவும் நீள்கிற சம்பவங்களும் சுற்றி இருப்பவையும் என்னை முடிவை கண்டறிய வைக்கின்றன * நீங்கள் நாவல் எழுதும்போது முந்தைய நாள் நிறுத்தி இடத்திலிருந்து தான் துவங்குவீர்களா. ஆமாம் அப்படித்தான் ஒரு தொடர்ச்சியை எதிர்பார்க்க முடியும் வேறு ஒரு இடத்தில இருந்து ஆரம்பித்து கொண்டு போய் எழுதுவது அதை வேறொரு வடிவ நாவலாக மாற்றலாம் ஆனால் அதற்கான வாசல்கள் எனக்கு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன் * ஒரு புத்தகம் சுவாசிக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது? அது எழுதுபவன் அனுபவிப்போடு செய்திருக்கலாம். ஆனால் வாசகன் அதை எப்படியோ படித்து முடிகிறபோது ஒரு புத்தகம் இயல்பாக இருக்கிறது உயிரோடு இருக்கிறது சுவாசிக்கிறது என்று சொல்லலாம். * திறமையற்ற வாசகர்கள் படிக்கும் போது ஒரு மாபெரும் எழுத்தாளர் காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளதா இருக்கிறது. திறமையற்ற வாசகர் அதை புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும் போது அவன் வாசிப்பதில் அர்த்தமில்லை * இந்த புதிய தலைமுறை எந்த வகையில் வேறுபட்டது விதவிதமான எழுத்துக்களைத் தருகிறார்கள். வெவ்வேறு வகையான துறை சார்ந்த எழுத்துக்கள் வருகின்றன மலைக்க வைக்கும், பிரமிக்க வைக்கும் அனுபவங்களை எல்லாம் கொண்டு எழுதி இருக்கிறார்கள். * தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் வளர்ச்சியும் புத்தகங்களின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளதா அப்படித்தான் சொல்லலாம் ஆனால் புத்தகங்கள் வீழ்ச்சி அடையவில்லை என்று திரும்பத் திரும்ப நாம் உரத்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் நாம் புத்தகங்கள் மத்தியில் இருக்கிறோம். அவற்றின் மத்தியில் இருந்து கொண்டு அவற்றை நாம் பழிக்க முடியாது. * உங்களுக்கு தீர்வு கிடைத்ததா என் படைப்பு தீர்வை நோக்கி நகர்கிறது. தீர்வை சமூகம் வழங்குகிறது அல்லது அரசியல்வாதி வழங்குகிறார் அரசியல்வாதி வழங்க நெடுங்காலம் தான் எடுத்துக் கொள்கிறது . * தற்போது உருமாற்றம் அடைந்து வரும் கலை வடிவங்கள் எவை கலை வடிவங்கள் தன்னைத்தானே மீறுவதும் உருமாற்றம் அடைவதும் சாதாரணம்தான்.. இலக்கியம் முதல் திரைப்படம் வரைக்கும் எல்லாம் வடிவளவில் உருமாற்றங்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. தொடர்ந்து அவை தங்களுடைய வடிவங்களை மாற்றிக் கொள்ளும் ( உன்னதம் ஜூலை 2017 இல் வெளிவந்த செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் சிறப்பதழில் அவருக்கு தொடுக்கப்பட்ட கேள்விகளை வைத்துக்கொண்டு நான் பதில் கொடுத்திருக்கிறேன்)
முதல் பேட்டி / சுப்ரபாரதி மணியன் . குழந்தைத் தொழில் எதிர்ப்பு சம்பந்தமாக ஒரு உலகப்பயணத்தை நோபல் பரிசு பெற்ற டெல்லி வாழ் சமூகப்போராளி கைலாஷ் சத்யார்த்தி அவர்களும், திண்டுக்கல் பால்பஸ்கரும் ஏற்பாடு செய்த போது என்னையும் இணைத்துக் கொண்டார்கள். அதற்காய் வெகு சிரமப்பட்டு நான் பணிபுரிந்து வந்தத் தொலைத்தொடர்புத்துறையில் அனுமதி பெற்றிருந்தேன். ஆனால் அப்பயணம் அமையாததால் சிங்கப்பூர் சென்றேன். என் முதல் பேட்டி பத்திரிக்கையில் வெளிவந்தது திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் தமிழ் முரசு பத்திரிகைக்காக சிங்கப்பூரில் எடுத்த பேட்டி தான். அப்போது நான் சிங்கப்பூர் உலக புத்தக கண்காட்சிச் சென்றிருந்தேன். ரெ. பாண்டியன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். ‘ கனிமொழி கருணாநிதி அவர்களின் நேர்காணலின் சூழல் விவரிக்கப்பட்டிருப்பது விசேசமாக அமைந்தது. செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு பதில் சொல்லி இருக்கிறேன் ஒரு பகுதியில் பேட்டி தொகுப்புரை: பொன். குமார் அன்புள்ளங்களுக்கு வணக்கம்! எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் இலக்கிய உலகில் நாற்பத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எண்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர் . கனவு என்னும் சிற்றிதழை தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பவர். தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு படைப்புகள் மூலம் குரல் எழுப்பி வருபவர். சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும் என்பதிலும் பெருமுனைப்பு கொண்டவர். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்து வருபவர். சுப்ரபாரதி மணியன் தன் இலக்கியப் பயண காலத்தில் பல்வேறு நேர்காணல்களைச் சந்தித்துள்ளார். பேட்டிகள் தந்துள்ளார். அவரின் நேர்காணல்கள்/ பேட்டிகள் இங்கு முதன்முறையாக ' புலி வாலை பிடித்த கதைகள்' என்னும் தலைப்பில் தொகுக்கப்படுகின்றன. எழுத்தாளரின் முதல் நேர்காணலை எடுத்தவர் கனிமொழி கருணாநிதி. சிங்கப்பூரின் தமிழ் முரசு நாளிதழுக்கான நேர்காணல் இது. சிறியதாயிருந்தாலும் சிறப்பான நேர்காணல். கனவு இதழ் குறித்தே மூன்று கேள்விகள். கனவு எப்படி ஆரம்பிக்கப்பட்டது, கனவு எந்தளவு வெற்றிப் பெற்றது, கனவை எந்த திசையில் கொண்டு செல்லப்படுகிறது என கனவு இதழ் குறித்த பதில்களில் கனவு இதழ் மீதான அவரின் ஆர்வமும் இலட்சியமும் வெளிப்படுகிறது. கனவு இதழுக்காக தொடர்ந்து சந்திக்கும் பொருளாதார இழப்பை ஒருவித மனத்திருப்தியுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஒரு தனி மனிதராக கனவு இதழைத் தொடர்ந்து நடத்தி வருவது அவரின் இலட்சியப் பிடிப்பைக் காட்டுகிறது. ' எழுத்தாளனுக்கென்று தனியாக சமூகக் கடமை என்றிருக்கிறதா?' என்றொரு கேள்வியை எழுப்பியுள்ளது புதுப்புனல். இது சுப்ரபாரதி மணியனுக்கான கேள்வி மட்டுமல்ல. எல்லா எழுத்தாளருக்குமானது. இதற்கான பதிலை மிக விரிவாகக் கூறியுள்ளார். " ஒற்றைக் குரலாகத்தான் எழுத்தாளனின் படைப்பை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒற்றைக் குரல் இல்லை. பல ஆண்டுகளாக சமூகம் பற்றின அவதானிப்பின் ஒட்டு மொத்தமான அனுபவக் குரல் தனிப்பட்ட உணர்ச்சி என்ற வகையில் அது தென்பட்டாலும் வாசகன் தன்னை அதில் உணர்ந்து கொள்வதில் ஒற்றைக் குரலின் வீச்சும், தீவிரமும் தெரிந்து கொள்கிறான். ஆனால் குரல் கொடுக்க முடியாதவர்களின் குரலாக அவன் வெளிப்படுகிறான் என்பது இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் உண்மையானது. இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் அமைந்து எழுத்தாளனை சமூக மனிதனாக்குகிறது " என பதிலளித்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமையை உணர்த்தியுள்ளார். இது அனைத்து எழுத்தாளர்களின் குரலாக ஒலித்துள்ளது. கோடுகள் இதழிலான நேர்காணல் மிக நீளமானது. மற்றும் விரிவானது. ஓர் எழுத்தாளர் என்பதையும், இலக்கியம் என்பதையும் தாண்டி கேட்கப்பட்ட ஒரு கேள்வி" சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது எதற்காக?". இட ஒதுக்கீட்டை ஓர் அம்சம் என்று குறிப்பிட்டவர் இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பதற்கான ஒரு அளவுகோல் தான் என சரியான பதில் தந்து சமூக நீதி குறித்து தன் பார்வையை தீர்க்கமாக தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நாவல்களில் பெரும்பாலும் திருப்பூர் களமாக இருக்கும். திருப்பூர் மக்கள் பாத்திங்களாக இருப்பர். இது குறித்து ஒரு கேள்வியை பேசும் புதிய சக்தி எஸ். செந்தில்குமார் எழுப்பியதற்கு சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதும் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதுமே காரணம் என்கிறார். படைப்புகள் மூலம் பேசப்பட்டதாலே ஓரளவு வெற்றியும் கிட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்கள் கொள்கையில் கடை பிடித்தல், மனித உரிமை பிரச்சனைகளாக மாறியது, நலத்திட்டங்கள் உருவானவை ஆகியவை படைப்பின் மூலம் கிடைத்த வெற்றி என்கிறார். இனிய உதயம் இதழுக்காக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனை நேர்கண்டவர் பொன். குமார். ' ஒரு படைப்பாளியின் இலட்சியம் விருது பெறுவதா? மக்களிடம் கொண்டு படைப்புகளை சேர்ப்பதா?' என்னும் கேள்விக்கு ' வாசகனிடம் படைப்புகள் கொண்டு சேர்ப்பதில் தான் படைப்பாளியின் லட்சியம் இருக்க வேண்டும்' என்று ஒரு தெளிவான பதிலைக் கூறியுள்ளார். ஒரு படைப்பாளியின் இலட்சியம் என்ன என்பதை, எதுவாக இருக்க வேண்டும் என்பதை படைப்பாளர்களுக்கு உணர்த்தியுள்ளார். இலக்கியம் சோறு போடுமா என்றொரு கேள்வி எல்லோரிடமும் உண்டு. இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலருக்கே இலக்கியம் சோறு போடுகிறது. இதை கருத்தில் கொண்டு அம்ருதா இதழுக்காக நேர்கண்ட பாலு சத்யா தொடுத்த வினாவிற்கு " வணிக எழுத்தை மட்டும் நம்பி வாழலாம். பரபரப்பான மலின ரசனையுடன் செய்யப்படும் விசயங்கள் விற்பனையாகும். தீவிர எழுத்து சோறு போடாது. புலி வாலை பிடித்த கதைதான். நிராகரிப்பின் வலியும் தீவிரமாய் எழுதுகிறவனை மனநோயாளிக்கும்" என தீவிரமாய் எழுதும் எழுத்தாளனின் நிலையைத் தெரிவித்துள்ளார். வணிக எழுத்தே சோறு போடும் என வகைப்படுத்திக் காட்டியுள்ளார். தீவிரமான எழுத்தாளர்கள் எல்லாம் புலி வாலை பிடித்தவர்கள் என்று தானும் புலி வாலை பிடித்த ஓர் எழுத்தாளரே என்கிறார். ஓர் எழுத்தாளனின் மன அழுத்தங்களை, மன உணர்வுகளை, மன வலிகளை, கடந்து வந்த கடும்பாதைகளை வெளிப்படுத்த நேர்காணல்கள் ஒரு நல்ல வாய்ப்பு. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் தான் எதிர்கொண்ட கேள்விகளை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தன்னையும் தன் வாழ்வையும் தன் படைப்புகள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். ஓர் எழுத்தாளன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்த முடியாததை, எழுத்தில் சொல்ல முடியாததை நேர்காணல்கள் கொண்டு வருகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் படைப்புலகம் தாண்டி அவரின் வாழ்வுலகத்தைக் காட்டுகின்றன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் நேர்காணல்கள் என்பவை படைப்புக்கு சமம் என்கிறார். இத்தொகுப்பிற்கு மிக பொருத்தமாக ” புலி வாலை பிடித்த கதைகள்” என தலைப்பிட்டுள்ளார். ஒரு நிராகரிப்பின் வலி தெரிகிறது. அனைத்து நேர்காணல்களையும் வாசிக்கும் போது எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் வாழ்வைக் கூறும் ஒரு படைப்பாகவே உள்ளன. விருதுகளுக்காக படைக்காமல் சமூகத்திற்காக படைத்திடும் சுப்ரபாரதி மணியனுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும். அ. மார்க்ஸ் நேர்காணல்கள், த. ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், ஆ. சிவசுப்ரமணியன் நேர்காணல்கள், அ. முத்துலிங்கம் நேர்காணல்கள், ச. தமிழ்ச் செல்வன் நேர்காணல்கள், அ. ராமசாமி நேர்காணல்கள், மாலன் நேர்காணல்கள், எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள், நாஞ்சில் நாடன் நேர்காணல்கள், சாரு நிவேதா நேர்காணல்கள், அப்பணசாமி நேர்காணல்கள், பாவண்ணன் நேர்காணல்கள், ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள், ஆதவன் தீட்சண்யா நேர்காணல்கள், அழகிய பெரியவன் நேர்காணல்கள், சுரேஷ் குமார் இந்திர ஜித் நேர்காணல்கள், ஷோபா சக்தி நேர்காணல்கள், சேரன் நேர்காணல்கள், புகழேந்தி நேர்காணல்கள் என வாழும் படைப்பாளிகளின் நேர்காணல்கள் பல வந்துள்ளன. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் புலி வாலை பிடித்த கதைகள் என்னும் இந்நேர்காணல்கள் தொகுப்பு மிக தாமதமாகவே வருகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் நேர்காணல்களை தொகுத்து ஒரு தொகுப்பாக்கி வழங்க ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளார். பெருமையாக இருக்கிறது. அதற்காக அவருக்கு என் நன்றி. பதிப்பகத்திற்கும் வாசித்து விமர்சிக்கும் தங்களுக்கும் நன்றி. என்றும் அன்புடன் பொன். குமார் 21 /15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன்மேடு சேலம் 636006 9003344742 Kaavya books rs 120
” திசையொன்று.. ” நாவல் அனுபவம் - சுப்ரபாரதி மணியன் நான் பயணிப்பதில் ஆர்வம் கொண்டவன். அவற்றை பதிவு செய்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டவன் குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து ஜெர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றது என்னுடைய முதல் வெளிநாட்டு பயணமாக அமைந்தது. அதன் பின்னால் சுமார் 20 நாடுகளுக்கு சென்று வந்த அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுதி இருக்கிறேன். பல நூல் வடிவம் பெற்று இருக்கின்றன அந்த வகையில் சென்றாண்டின் மத்தியில் ஜோடான் பாலஸ்தீனம், இஸ்ரேல், எகிப்து நாடுகளுக்கு சென்று வந்ததை கூட ஒரு நூலாக்கி இருக்கிறேன். பயணங்கள் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. ஆசுவாசம் கொள்ளச் செய்கின்றன அந்த வகையில் தான் சமீபத்தில் நான் சென்று வந்ததில் கேரளா அட்டப்பாடியில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு மற்றும் கர்நாடகாவில் உள்ள ஹம்பி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இது போன்ற ஒரு பயணம் மூணார் சென்றிருந்தபோது கிடைத்த அனுபவங்களை ஒரு நாவலாக இதில் பதிவு செய்திருக்கிறேன். பயண அனுபவங்களை நாவலாக்கிற முதல் முயற்சியாக நான் இதை செய்திருக்கிறேன் மூணாறுக்கு பல நண்பர்களுடன் சென்றேன், தம்பதிகள் ஆண்கள், பெண்கள் தனியாக வந்தவர்கள் உட்பட ஒரு திருநங்கை கூட எங்களுடைய குழுவில் இருந்தார். அந்த பயண அனுபவத்தில் மூணாறில் தங்கிய அனுபவங்கள், சக பயணிகளுடன் பகிர்ந்து கொண்ட பல்வேறு விஷயங்கள் இவைதான் இந்த நாவலின் மையமாக இருக்கிறது, முக்கியமாக ஒரு தம்பதிய,ர் ஆனால் கணவருக்கு சரியான வேலை வாய்ப்பு அமைவதில்லை, குழந்தை இல்லை என்பதால் அவரின் மனைவியிடம் இருந்து பிரிந்து இருக்கிறார் இருவரும் இந்த பயணத்தில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள் ஆனால் அந்த பயணம் ஒன்றும் அவர்களை சேர்த்து விடவில்லை, அதில் அவன் தவித்துப் போகிறார் இந்த நிலையில் இருந்து தன்னை ஏதாவது விடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், இந்த யதார்த்த தளத்தில் இருந்து வேறு நிலைக்குப் பயணப்பட்டு இருக்கிற உயர் நிலைகளை பற்றியும் தெரிந்து கொள்கிறார். வழக்கமான இயந்திரத்தனமான வாழ்க்கை மீறி உழைப்பு மட்டுமே உதவி செய்யும் என்று நம்புகிற ஒரு உலகம். இயற்கையை நேசித்து இயறகை உணவுடன் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு முகாமிடம் என்பது போல சில லட்சிய இடங்களும் அவரின் அனுபவங்கள் என வந்து விடுகின்றன. கதாபாத்திரங்கள் என்று சொன்னால் கூட வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் இளைஞர்கள், இளைஞிகள், தம்பதியர்கள் வெவ்வேறு வேலைகளில் இருந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பணியாளரகள் என்று இவர்கள் உலகத்துக்குள் இருக்கிற மனித உறவுகளைப் பற்றி இதில் விரிவாகவே பேசி இருக்கிறேன். தீங்கொன்று இருக்கிறபோது அதற்கு விடிவென்று இருக்கும் அல்லவா. அப்படித்தான் இந்த இறுதியில் நடைபெறுகிற ஒரு விபத்து கூட அதனுடைய அடையாளமாக இருக்கிறது பயணங்கள் எப்போதும் நம்மை ஆசுவாசப்படித்துக் கொள்ளும் வாழ்க்கையை உயர்வு கோணத்தில் பார்க்கச் செய்யும். அப்படி ஒரு திசையில் நான் பயணித்த சின்ன அனுபவம் தான் இந்த திசையொன்று என்ற இந்த நாவல். இந்த நாவலில் வரக்கூடிய இளம் பெண்கள் முகநூலிலும் சமூக ஊடங்களிலும் திளைக்கிறார்கள் .வயதானவர்கள் தங்கள் காலத்தை கடத்துவதை சுவையாக எண்ணுகிறார்கள். அதற்கு இந்த பயணம் சிலருக்கு பயன்படுகிறது. யார் யாரையோ தேடி யாரோ அலைகிறார்கள். அப்படியும் சில கதாபாத்திரங்கள். தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிற போது போதை பழக்கத்திற்கு ஆளாகிற ஒரு இளைஞனும் அவனை பாதுகாக்கிற அவன் தந்தையும இவர்களோடு இருக்கிறார்கள் நான் நான்கு ஐந்து நாட்கள் பயணித்த பயணத்தை ஒரு நாவலாக தந்திருக்கிறேன் திசை எட்டு மட்டுமல்ல., பதினாறு மட்டுமல்ல, இன்னும் பல திசைகள் உள்ளன, அதில் ஒரு திசையை இந்த நாவல் காட்டியிருக்கிறது சுப்ரபாரதி மணியன் ( ரூ 180, உயிர்மை பதிப்பகம் வெளியீடு , சென்னை 0 Book copy sent by courier
சுற்றுச்சூழல் : கோடரி வெட்டுகள் : சுப்ரபாரதி மணியன் ” கோடரி வெட்டு விழப் போகிறது.. ஏற்கனவே தாமதமாகிவிட்டது “ சுற்றுச்சூழல் பற்றி நினைக்கிற போதெல்லாம் மலையாள கவிஞர் சூழியல் களப்போராளி சுகுதகுமாரி அ வர்கள் கவிதைகளிலும் மக்கள் போராட்டங்களிலும் முழங்கிய வார்த்தைகள் ஞாபகம் வரும். அதுவும் அமைதி பள்ளத்தாக்கு பகுதிக்கு போகிற போதெல்லாம் தவிர்க்க முடியாமல் அது ஞாபகம் வரும் கோடாரி வெட்டு விழுந்து காயங்கள் அழுத்தமாகத்தான் இருக்கிறது உலகம் வெப்பமயமாய் மாறிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் . கொரோனா காலத்திற்குப் பிறகு சமீபத்தில் அமைதி பள்ளத்தாக்கிற்கு சென்ற போது உலகம் சூடாகிக் கொண்டிருக்கிற இயல்பிலேயே அந்தப் பகுதியும் வந்து விட்டது தெரிந்தது . அந்த பள்ளத்தாக்கு கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. . அமைதி பள்ளத்தாக்கு நுழைவு கட்டணம் 750 ரூபாய் ஆயிருப்பதை கவனித்த என் மனைவி இந்த கட்டணம் விகிதம் தலையை சூடேற்றுகிறது என்றார்.. முன்பெல்லாம் 350 ரூபாய், 500 ரூபாய் என்ற வகையில் இருந்து இப்போது 750 ரூபாய்க்கு அந்த கட்டணம் வந்துவிட்டது. தலை சூடாகிக் கொண்டிருப்பதை அவர் சொன்ன போது பக்கத்தில் இருந்த அந்தப் பகுதியைச் சார்ந்த ஒருவர் அந்த அமைதிப்பள்ளத்தாக்கு பகுதியிலும் சூட்டின் தன்மை, வெப்பநிலை அதிகமாக ஆகி கொண்டு இருப்பதாக சொன்னார். .உலகம் முழுக்க குளோபல் வார்மிங் எனப்படும் சூட்டின் தன்மை அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும் இலக்காகி இருக்கிறது. அதன் காரணமாக ஒரு சதுர கிலோ மீட்டரில் 2000-க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்தப் பகுதியில் அவற்றில் சில மறைந்து வருவதையும் அறிய முடிந்தது. பல நுண்ணிய தாவரங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றார்கள். அபூர்வமான பல மரங்கள் வறட்டு தன்மைக்கு வந்துவிட்டன. 1970 இல் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் நீர் மின் சக்திக்காக கட்டப்படவிருந்த அணை கவிஞர் சுகுதகுமாரி தலைமையிலான போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த அணை கட்டப்பட்டு இருந்தால் இந்த 50 ஆண்டுகளில் அந்த காட்டுப்பகுதி பெரும்பாலும் நீரில் மூழ்கி இருக்கும். அதன் வெப்பநிலையும் தாறுமாறாக போயிருக்கும் .அதிலிருந்து காப்பாற்றப்பட்டாலும் உலகம் முழுக்க சூடாகிக் கொண்டிருக்கிற தன்மையால் அமைதி பள்ளத்தாக்கும் தன் இயல்பை இழந்து வெப்பநிலையைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டிவிட்ட தருணத்தில் இந்த பூமியானது மனிதனுக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அந்த அளவுக்கு எறும்பு முதல் யானை வரை வரம் செடி புழு பூச்சிகளுக்கும் உரிமை உடையது.. பூமியில் இப்போது வெப்ப அலை காரணமாக நிகழும் அழிவுகள் பற்றி தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அன்னப்பறவை இல்லை. அனிச்சமலர் இல்லை சிட்டுக்குருவி இல்லாமல் போய்விடுமா என்ன பயம் வந்துவிட்டது. பூச்சிக்கொல்லி ரசாயன மருந்துகளின் உபயோகமும் அமைதி பள்ளத்தாக்கு சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. பசுமை குடி வாயு தான் பூமி வெப்பமடைய காரணமாக இருக்கிறது அதன் காரணமாக தாக்கத்தால் 34,000 தாவரங்களும் 52 ஆயிரம் விலங்கினங்களும் அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன .பூச்சிகள் எண்ணிக்கையும் குறைகிறது. கடல் வாழ் உயிரினங்களும் செத்து மடிகின்றன .இந்த 52 ஆயிரம் உயிரினங்களில் 20 ஆயிரம் உயிரினங்கள் விரைவாக அழிந்து விடும் ஆபத்தில் உள்ளன. பசுமை பள்ளத்தாக்கு போன்ற காடுகளில் வசிக்கின்ற பழங்குடியினர் வனத்தின் பாதுகாவலர்களாக உள்ளார்கள் கேரளா வனத்துறை அக்காட்டுப்பகுதியில் செல்ல பயன்படுத்தும் வாகனங்களில் பொறிக்கப்பட்ட பெரிய கே. எப். என்ற எழுத்துக்கள் சற்றே பயம் கொள்ள வைக்கின்றன. கே. எப். – கேரளா பாரஸ்ட் டிபார்ட்மெண்ட். காரணம் கே.எப் என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எல்லை கோடுகளை நிர்ணயிக்கும் மாநில எல்லை கற்கள் சமீப மாதங்களில் கோவை மாவட்டங்களிலும் திருட்டுத்தனமாக அவ்வப்போது நகர்ந்து வருகிறது என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு கேரளா எல்லை கிராமங்களில் கணினி முறையிலும் சிரோன் மூலமும் அளவீடு செய்யும் திட்டத்தை கடந்த இரண்டு மாதங்களாய் கேரளா அரசு செய்து வருகிறது . ஏற்கனவே 1956 ஆம் ஆண்டு மாநில சீரமைப்பு நடத்தப்பட்டபோது தமிழகத்தின் பல பகுதிகளில் கேரளத்தோடு இணைக்கப்பட்டன முல்லைப் பெரியாறு, கண்ணகி கோயில்கள் போன்றவை கேரளா எல்லை கோட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் 230 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே கூட்டு அளவிடும் முறையில் பார்க்கப்பட்டுள்ளது. மீதி உள்ள சுமார் 700 கிலோ மீட்டர் எல்லை பகுதி இன்றுவரை அளவிடல் செய்யப்படவில்லை. இந்த கேரளா அரசின் போக்கினால் எல்லைக் கற்கள் நகர்ந்து வருவது எச்சரிக்கையாக கூட இருக்கிறது ஓவியர் தூரிகை சின்னராஜ் அவர்கள் அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சி கூட்டங்களைக் குறிப்பிட்டு பட்டா பூச்சிகளின் இடம்பெயர்வும் அவை இந்த பகுதியில் அதிகமான காணப்படும் செப்டம்பர் மாதத்தில் இன்னும் ஒரு முறை வந்து பார்க்க வேண்டும் என்றார். பட்டாம்பூச்சிகளை பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் வர வேண்டி இருக்கிறது என்றார் . ஆனால் என் மனைவி எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் வந்து போகும் பட்டாம் பூச்சிகள், சிட்டுக்குருவிகள் போன்றவர்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார். . மாடி வீட்டு தோட்டங்கள் இருந்தாலே இவை சாதாரணமாக நகரமென்றாலும் எங்கிருந்தோ வந்து போகும் என்றார். . நாம் பட்டாம்பூச்சிகளை பார்க்க இவ்வளவு தூரம் வர வேண்டி இருக்காது .ஆனால் அவற்றை கூட்ட கூட்டமாக பார்ப்பதற்கு இங்கு வரவேண்டியிருக்கும். அதுவும் பல நாட்டு பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்து வரும் அபூர்வமான சூழலாக அது இருக்கும். உலக வெப்பம் மயமாதல் சூழலில் சுலபமாக தற்கொலைக்கு போய்விடும் பட்டாம்பூச்சிகளின் சில வகைகளை பற்றி உள்ளூர் ஆதிவாசி ஒருவர் குறிப்பிட்டார்.. உலகம் வெப்பமாகி கொண்டிருக்கும் சூழலை காட்டும் விதமாய் அமைதி பள்ளத்தாக்கில் பல மாற்றங்களை காண முடிந்தது ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் காணப்பட்ட ஆதிவாசிகள் வறண்டு போன மரத்தின் பாகங்களை கொண்டு போகிற காட்சிகள் உறுத்திக் கொண்டே இருந்தன. . அட்டப்பாடி ஆதிவாசிப்பாடகர் நஞ்சம்மாவின் “ காடு எரியுதே . மனம் பதறுதே “ என்ற பாடல் வரிகள் இவற்றிலிருந்து மீள்வது குறித்த காப் 27 சுற்றுச்சூழல் மாநாடு கூட தீர்க்கமான முடிவுகளை இந்த முறை எட்ட இயலாமல் போய்விட்டதைக்குறித்து ஞாபகப்படுத்தியது
Tamil hindu article பாலியல் சமத்துவம் / இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்.. சுப்ரபாரதிமணியன் நான் வசிக்கும் வீதியில் உள்ள அரசு அலுவலக பெண்மணி ஒருவர் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றில் பொருட்களை வாங்கிக் குவித்த பின்னால் பணம் செலுத்துவதற்காக அவர் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து, நிறைய ரூபாய் நோட்டுகளை சேர்த்து பதட்டமாக இருந்தார். பணம் குறைவாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். அவரை அணுகி எதற்கு இப்படி ரூபாய் நோட்டுகளை தேடி அலுத்துப் போகிறீர்கள். ஜி பேயில் அனுப்ப வேண்டியது தானே என்றேன். ” எனக்கு ஜி பே கணக்கு இல்லை. என் ஏடிஎம் கார்டு கூட என் கணவரிடம் தான் நெடுங்காலமாக உள்ளது” என்றார். அதிர்ச்சியாக இருந்தது பெண்கள் வேலைக்குப் போவதாக இருந்தாலும் பொருளாதார நிலையில் அவர்கள் மேற்பட்டிருந்தாலும் அவர்களுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது. . இந்தியாவில் பாலின சமத்துவம் அடைவதற்காக இன்னும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் நல ஆணையத்தின் சமீபத்திய ஆய்வு என்று தெரிவித்திருக்கிறது.. இது கூட ஒரு வகையில் வன்முறையாக மாறிவிடுகிறது.. ஏடிஎம்மை பெண் பயன்படுத்த ஆண்கள் வைக்கும் தடை அல்லது அது என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வது இதெல்லாம் ஒரு வகை பாலின சமத்துவ மின்மையின் அடிப்படையில் இருக்கின்றன. ” . நீ ஒழுங்கா இருந்தா எதுக்கு இதெல்லாம் நடக்குது. நீ இப்படி எல்லாம் டிரஸ் போடணுமா, எதுக்கு ராத்திரில கண்ட நேரத்தில் வெளியே போவது “ என்பது தான் இது சார்ந்து வைக்கப்படுகிற புகாரின் மீது எதிர் வினையாக இருக்கிறது. எது நடந்தாலும் அது பற்றிய பதிவுகள் காவல்துறையிடமோ அல்லது அரசு சார்ந்த நிறுவன புகார் பட்டியலில் 75 சதவீதம் அவை பதிவு செய்யப்படுவதில்லை. குடும்பத்தின் கட்டுமானம், குடும்பத்தின் அமைதி கருதி அவை பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யும் புகார்கள் தாண்டி பின்னரும் வேறு செயல்பாடுகள் இல்லாமல் முடங்கி போயிருக்கிறார்கள். பெண்கள் கணவரிடமிருந்து ஏடிஎம் பெற இயலுவதில்லை பல சமயம்.ஒரு அரசு அலுவலர் பெண் கூடத் தயங்குகிறார். தன் மீறல் சார்ந்து. கணவர் அடித்தால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கணவர் அடிப்பது கூட நல்லதுக்கு தான் என்று நம்பும் பெண்கள் ஏகதேசம் இன்றும் இருக்கிறார்கள். வீட்டிலும் வேலை செய்யும் இடங்களிலும் வெளியிலும் பெண்களுக்கான அவமதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே சூப்பர் மார்க்கெட்டில் அன்று பார்த்த சக ஊழியர் பெண் நோக்கி இன்னொரு ஆண் சைகை மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது அவரை கொச்சைப்படுத்துகிற விஷயம் என்பது தான் எனக்கு புரிந்தது.. இவ்வாறு மனரீதியாக துன்புறுத்தல்களும், சைகை மூலமாக சொல்லுவதும், பிறரைப் பற்றி தேவையில்லாமல் சொல்லிக் கொண்டிருப்பதும், கேலியாக புனைப்பெயரை வைத்துக்கொண்டு அழைப்பதும்., தேவையில்லாத செய்திகள் சொல்வதும், வசவுகள் மூலமாக வேலை செய்யாமல் முடக்குவதும் பெண்கள் மத்தியிலும் ஆண்கள் செய்யக்கூடிய அதிகார தொனி தான் தென்படுகிறது. . வேலைக்கு போகாதே, கெட்டுப் போகாதே என்று சொல்கிற பழைய தலைமுறையும் என்றும் இருக்கிறது, வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொன்ன மதவாதிப் பெரியோர்கள் கூட இருக்கிறார்கள். நாங்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோம். அதோடு சரி என்னுடைய பங்களிப்பு குடும்பத்தில் முடிந்து விடுகிறது என்கிறார்கள். ஏன் இவையெல்லாம் புகார் செய்யப்படுவதில்லை என்ற கேள்விக்கு ” படிச்சிருந்தா தெரியும். தைரியம் வரும் அதனால எங்க குழந்தைகளை படிக்க வைக்கிறோம் “ என்று சொல்கிற பெண்கள் இருக்கிறார்கள். . கமலஹாசன் தேவர்மகன் திரைக்காட்சியில் சொல்வது போல இதெல்லாம் வேண்டாம்பா. புள்ள குட்டிகளை படிக்க வையுங்கள் என்பதைப் போலத்தான் கடைசியாக அந்த பெண்மணிகள் சொல்லிப் போகிறார்கள். ஆனால் வெளியே போகாதே என்று கட்டுப்படுத்திய காலங்கள் போய், வெளியே போய் பிரச்சனைகள் என்ன இருக்கிறது என்று சந்தித்து விட்டு வா என்று சொல்லும் புதிய தலைமுறை பெண்களும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குறியவர்கள்.. இவருடைய உரிமைகளும் பேச்சும் 33% பஞ்சாயத்து வரைக்கும் தான் வந்திருக்கிறது. 50 சதவீதம் என்று சொன்னதெல்லாம் இன்னும் சட்டமாக கூட முறைப்படுத்தப்படவில்லை. சட்டப்படுத்துகிற இடங்களில் அதற்காக வைத்திருக்கிற குழுக்களின் சம்பிரதாயமாகவே நடக்கிறது, பாலியல் புகாரோ பாலியல் சமத்துவம் பற்றிப் பேசுகிற பெரும்பான்மையானக் குழுக்கள் கூட சம்பிரதாயமாக நடந்து கொள்கின்றன. ஒரு குழுவின் அறிக்கை தருவதற்காக தயாரிக்கப்படுகிற விஷயங்களில் கையெழுத்து போடுகிறவர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்,” வா. ஒரு காபி சாப்பிடு, கையெழுத்து போட்டு போ ”என்ற ரீதியில் தான் அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகின்றன, மற்றபடி அறிக்கை தயார் தான். சமீபத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று பாலியல் பாதிப்புக்கு உள்ளானது. அந்த குழந்தையின் பதற்றத்தை அம்மா தெரிந்து கொண்டார். புகார் அளித்தாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அந்த குழந்தை ..ஆனால் மருத்துவர், காவல்துறை அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகள் எல்லாமே அந்த குழந்தையின் கற்பனை அது என்று சொல்லி நிராகரித்தார்கள். எந்த நிலையிலும் இதை ஒரு வழக்காக மாற்றுவது என்பதிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தையின் கற்பனை அது என்று எல்லோரும் வாதித்து அந்த குழந்தையின் அம்மாவை நிராகரித்தார்கள். அந்த பெண்மணி காயப்பட்டு போய் ஒதுங்கிக் கொண்டார். திருமணங்களில் பெண்களும் மெட்டி போடுகிறார்கள் ஆண்களும் மெட்டி போடுகிறார்கள். ஆனால் பெண்கள் போடும் மெட்டி காலம் முழுக்க காலில் இருக்க வேண்டி இருக்கிறது. ஆண்கள் போடும் மெட்டி சடங்குகளுக்காக இருக்கிறது. திருமணச் சடங்குகள் முடிந்து அவை கழட்டி எறியப்படும். அப்படித்தான் பாலின சமத்துவம் சார்ந்த கேள்விகள் கூட அலட்சியப்படுத்தப்படும். நம் தமிழ் கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிற போது பெண்களை நோக்கி சகி சகி என்ற வார்த்தைகளை சொல்வார்கள். சகியே என்று அழைப்பார்கள். இப்போது அரசாங்கம் சகி என்ற பெயரில் தான் பாலின சமத்துவம் சார்ந்த உதவும் எண் 181 என்று நிறுவி இருக்கிறது.. இன்னொருவர் இப்படித்தான் ஒரு சகி என்பது பற்றி ஒரு கவிதை எழுதி காண்பித்தார். குரூரமாக இருந்தது “ கூட்டுப் பாலியல் புகார் தர காவல் நிலைக்குச் சென்றாள் அந்த கன்னி. காவல் நிலையத்தில் இருப்பவர்கள் அவள் மேல் தொடுத்தது கூட்டு பாலியல் தாக்குதல்”
காவ்யா சண்முகசுந்தரம் 70 --- சுப்ரபாரதிமணியன் ” 35 ஆண்டுகளாக சுப்ரபாரதிமணியன் என் நண்பராக இருக்கிறார் அவர் எந்த சமயத்திலும் என்னிடம் சண்டை போட்டது இல்லை ” என்று காவியா சண்முகசுந்தரம் அவர்கள் பல சமயங்களில் சிலரிடம் அறிமுகப்படுத்தும் போதும் பேச்சின் போதும் சொல்வார் . அவரிடம் சிறிது சிறிதாய் முரண்பட்டாலும் நடைமுறை எதார்த்தத்தில் அவருடன் சண்டை போடுவதற்கான எந்த சந்தர்ப்பங்களும் எனக்கு அமையவில்லை .காரணம் அவர் தொடர்ந்து இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தன் ஓய்வு வாழ்க்கையில் கூட ஓய்வின்றி பதிப்பகத் துறையில் இயங்கி புதியவர்களையும் கண்டுகொள்ளாதவர்களையும் அடையாளப்படுத்தி முன்னிலைப்படுத்துவதில் உள்ள அவரின் பெரும் உழைப்பு என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்துவது. அவர் என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ மாறுதடம் “ என்ற தொகுப்பை வெளியிட்டார். அதற்கு முன் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம் அவர்கள் அப்பா என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார் .அதில் சுஜாதா எழுதிய ஒரு நீண்ட முன்னுரை பலரின் கவனித்துக் உரியதாக இருந்தது. பாவண்ணன் அவர்கள் மூலம் அறிமுகமான காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் மாறுதடம் நூலை அழகாக பதித்திருந்தார் .பெண்களுக்கு நீல நிற சேலைகள் வெகுவாகப் படிக்கும் .அந்த அட்டை முழுக்க அழுத்தமான நீல நிறத்தில் இருந்தது .அதில் ஒரு தடம் எங்கோ சென்று முடிவது போல் ஓவியம் இருந்தது .அதன் பின்னால் சுமார் இருபது நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார் அத்தனையும் அவரின் உழைப்பால் முடிந்திருக்கிறது. அதுவும் என் சிறுகதைகளில் மொத்த தொகுப்பாக இரண்டு பாகங்களை கொண்டு வந்திருப்பது ஒரு முக்கிய சாதனை. முதல் தொகுப்பு ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தது .அவற்றை சந்தைப்படுத்துவதிலும் அவர் ஆர்வம் எடுத்துக்கொண்டிருந்தார். இப்படி பெரும் தொகுப்புகளை கொண்டு வருவதில் அவருக்கு ஆர்வம் சமீபமாய் வந்திருக்கிறது. எனது சிறுகதைகளை அப்படித்தான் கொண்டுவரலாம் என்ற ஆலோசனையை சொன்னார். 10 ஆண்டுகள் கழித்து அப்படி ஒரு பெரிய தொகுப்பை இரண்டாம் பாகமா கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவருடைய நினைவுறுத்தலின் காரணமாகவே நிகழ்ந்தது இவ்வாண்டில் .. என் சாயத்திரை நாவலின் முதல் பதிப்பை அவர்தான் வெளியிட்டார் அது தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான அந்த ஆண்டின் பரிசை பெற்றது. அதை தவிர ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் வங்காளம் போன்ற மொழிகளிலும் வெளிவந்தது .அவர் வெளியிட்ட பல நூல்களை நான் பின்னால் வேறு பதிப்பகங்கள் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறேன் .அப்போதெல்லாம் அவரை சம்மதம் குறித்து அணுகி ஒப்புதல் பெற வேண்டும் என்று எனக்கு தோன்றியது இல்லை .நான் இயல்பாக வேறு பதிப்பகத்திற்கு தந்துவிடுவேன். அதை அவர் அறிந்திருந்தால் கூட அதுபற்றி எதிர்மறையாக எதுவும் சொன்னதில்லை . அந்த வகையில் பல நூல்கள் முதல் பதிப்பாக அவரின் பதிப்பகம் மூலம் வெளிவந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. புனைவு இலக்கியத்தில் அதிலும் குறிப்பாக நாவலில் எண்பதுகளிலேயே சில அழுத்தமான தடங்களை அவர் பதித்திருக்கிறார் அவரின் நாவல்கள் குடும்பச்சூழல் மற்றும் இந்திய குடும்ப உறவுகளின் பொதுவான அமைப்பாக அமைந்திருக்கின்றன .அவை பெருமளவில் கல்லூரி பாடத் திட்டங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. திருப்பூரில் நடைபெற்ற ஒரு ஆப்பிரிக்க திரைப்பட விழாவிற்கு துவக்க விழாவிற்கு வந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் காவியா சண்முகசுந்தரத்தின் நாவல்களை சிலாகித்து என்னிடம் சொல்லி அவற்றை படமாக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் வாழும் காலத்தில் அதெல்லாம் நடந்ததில்லை .அப்போது அந்த நாவலின் காட்சி படிமங்கள் எப்படி திரைப்படங்களுக்கு உகந்ததாக இருக்குமாறு அவர் எழுதியிருக்கிறார் என்பதை பாலுமகேந்திரா அவர்கள் என்னிடம் விளக்கியபோது நான் மகிழ்ச்சியை விட அந்த காலகட்டத்தில் பொறாமையே பட்டிருக்கிறேன். இந்த வார்த்தைகளை அவரின் நாவல்கள் குறித்து பல உதவி இயக்குனர்கள் என்னிடம் கதை விவாதங்களின் போது விவரித்திருக்கிறார்கள் . அவருடனானச் சந்திப்புகள் நல்ல உரையாடல்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. அவரைச் சந்தித்து திரும்பும் போது எப்போதும் வருத்தத் தொனி தென்பட்டதில்லை. சற்றே மகிழ்வும் ஆறுதலும் தொற்றிக் கொள்வது பெரிய பாக்யம்தான் சமீப ஆண்டுகளில் அவர் நாட்டுப்புறவியல் இலக்கியங்களில் பெரும் அக்கறை கொண்டு பெரியத் தொகுப்புகளை எல்லாம் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சார்ந்த நாட்டுப்புறவியல் சார்ந்த விஷயங்களை ஆய்ந்து கட்டுரைகளாகவும் பாடல்களை சேகரிக்கும் பணியின் நிறைவாகவும் வெளியிட்டிருக்கிறார் .நாட்டுப்புறவியல் சார்ந்து பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை குண்டு குண்டான புத்தகங்களாக கூட கொண்டுவந்திருக்கிறார். அவரின் வயதை தாண்டிய, மீறிய உழைப்பு . அவரின் இன்னொரு முகம் நாட்டுப்புறவியலில் அம்சங்களை எழுத்து பதிவுகளாக கொண்டுவருவதில் சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறார் .நல்ல படைப்புகள் வெளிவர வேண்டும் , நல்ல படைப்பாளிகள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பது அவரின் விருப்பமான பிரார்த்தனையாகவும் இருந்திருக்கிறது . அவரின் பிரார்த்தனை அவரது நாட்டுப்புற தெய்வங்களிடம் -ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து விலக்களிக்குமாறு மன்றாடுவதை வழக்கமாக இருப்பதை உள்ளூர உணர்ந்திருகிறேன் ” . நாமெல்லாம் அறிவாளிகளல்லாதவர்களாக இருப்பதால், நமது தெய்வம் நமக்கு விலக்களிக்கவில்லை; அதனாலேயே ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்திலும் நாம் வாழ்கிறோம். இன்றைய படைப்பாளிகளுக்கு இது நன்கு தெரியும். அவர்கள் அதை வெளிப்படுத்தினால், உடனடியாக விமர்சிக்கப்படுவதோடு தாக்கவும் படுகிறார்கள். மனத்தாழ்மையினால் அவர்கள் மவுனம் காத்தால், அவர்களை இழித்தும் பழித்தும், அவர்களது மவுனம் குத்தலாக்கப் பேசப்படுகிறதே தவிர வேறு எதனைப் பற்றியும் எவரும் வாய்திறப்பதில்லை. காதைக்கிழிக்கும் இந்தக் காட்டுக் கூச்சலின் நடுவே, படைப்பாளிகள் அவர்கள் மதித்துப் போற்றுகின்ற சிந்தனை மற்றும் வெளிப்பாடுகளையும் தனியொரு பாதையாக முன்னெடுத்துச்செல்ல இனிமேலும் இயலுமென நம்பமுடியவில்லை. ஓட்டமாக ஓடும் வரலாற்றிலிருந்தும் விலகி நிற்கும் சாத்தியமென்பது இதுவரையிலும் அதிகமோ, குறைவோ இயன்றேயிருக்கிறது. நிகழ்வுகளோடு உடன்பாடில்லாத எவரானாலும் பொதுவாக மவுனமாகிவிடுகின்றனர்; அல்லது வேறு எதையேனும் பேசுகின்றனர். இன்று, எல்லாமே மாறிப் போய்விட்டிருக்கிறது: மவுனம் என்பதற்கு `எதிர்ப்பு` என்னும் புதிய பொருள் சூட்டப்பட்டுள்ளது. விலகியிருக்கும் அல்லது முடிவெடுத்த தருணமே அதனை ஒரு வாய்ப்பாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டதென்று கருதி, தண்டிக்கப்படுவதோ அல்லது பாராட்டப்படுவதோ நிகழ்வதுடன் கலைஞர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களும் அதில் ஈடுபட்டவர்களாக மாறிவிடுகின்றனர். மேலும், இதில் ஈடுபடுதல்` (involved) என்பது வெறுமனே `செயல்பட்டவர்` (committed) என்பதைக் காட்டிலும் மிகவும் துல்லியமானதெனத் தெரிகிறது. உண்மையில் இது கலைஞனின் வெறும் தன்னார்வச் செயல்பாடு என்பதல்ல, மாறாக கண்டிப்பாகச் செய்தேயாக வேண்டிய இராணுவப் பணி போன்றது. இன்று எல்லாக் கலைஞர்களும் காலத்தின் கப்பலில் ஏறிவிட்டுள்ளனர். அவர்களது கப்பல் அழுகிய மீன்களால் துர்நாற்றமடைந்திருப்பதை உணர்ந்தாலும், உண்மையில் அங்கே தேவைக்கு அதிகமான கொடுங்கோல் மேற்பார்வையாளர்கள் இருப்பதை, எல்லாவற்றிலும் மோசமாக, அவர்கள் நிகழ்போக்குக்குத் தடையாக இருப்பதைத் தெரிந்தாலும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டு ஒதுங்கிக்கிடக்கவேண்டியிருக்கிறது. நாம் கடலுக்குள் திசை தடுமாறித் தத்தளிக்கும் கப்பல்களாக அலைகிறோம். கலைஞர்கள், மற்ற எல்லோரையும் போலவே இறந்துவிடாமலிருக்க முடிந்தால், துடுப்புகளை ஏந்தவேண்டும் – அதாவது, உயிரோடு வாழ்வதையும், படைப்பதையும் தொடரவேண்டும். “ என்ற ஆல்பெர் காம்யுவின் கட்டுரையின் சில விசயங்கள் அவ்வப்போது அவரைப்பற்றி நினைக்கிற போது மனதில் வரும் . நான் பெரும்பாலும் அவருடன் கலந்து கொள்ளும் புத்தக வெளியீடுகளில் அவர் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் அந்த படைப்புகளை பற்றி அறிமுகம் செய்பவராக இருந்திருக்கிறார். அவரின் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆழமான அறிவையும் சிந்தனைகளையும் தெரிந்து கொள்ள எந்த சந்தர்ப்பங்களும் அமைந்ததில்லை .அவரின் நாட்டுப்புறவியல் சார்ந்த நூல்கள் அதற்கு ஏதுவாக இருந்தாலும் அவருடைய குரலிலும் உரையிலும் அந்த அம்சங்களை கேட்டு உணர முடியாதபடி சூழல்கள் அமைந்துவிட்டன .ஆனால் அந்த துறையில் அவர் பதிப்பித்த நூல்கள் அவரின் சாதனைகளைட் சொல்லும்..சமீபமாய் நூல்களின் குறைந்த விற்பனையும் அல்லது பரபரப்பு இல்லாத தன்மையும் இருந்தாலும் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் .புது இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார் .அவரின் பழைய நண்பர்களின் நூல்களையெல்லாம் பதிக்கிறார் .அவற்றிற்கு வெளியீட்டு விழாவும் நடத்துகிறார் .ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் இந்த முயற்சிகள் எந்தவிதத்திலும் தளரவில்லை. அவரின் குடும்ப சூழலில் இந்த முயற்சிகள் தேவை இல்லாததாகவும் ஓய்வற்ற வாழ்க்கையை தந்து இருப்பதையும் நான் அறிந்திருக்கிறேன் .ஆனால் எழுத்திலும் பதிப்பக துறையிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த முத்திரையை அவர் எந்த கணத்திலும் இழக்கத் தயாராக இல்லை. அதை அவர் தொடர்ந்து தன் மனதில் கொண்டு தன் வாழ்க்கையின் நேரங்களை செலவழித்து வருகிறார் .அவரின் முயற்சியில் காவியா இதழ் கூட ஏதேனும் ஒரு வகையில் மைல்கல் ஆகும் அதற்கான படைப்புகள் சேகரிப்பு , அவற்றின் பக்கங்களை நிரப்புவதில் நேரத்தை செலவிடுதல் என்பதெல்லாம் அவருக்கு சமீப ஆண்டுகளில் முக்கிய வேலையாக போய்விட்டது .ஆனாலும் தளராமல் காவியா இதழைக் கொண்டு வருகிறார் .காவியா மூலமாக அவர் முன்பு நடத்திக்கொண்டிருந்த எழுத்தாளர்களின் அனுபவங்களை உரைகளாக தருவது பின்னர் அவற்றை எழுத்து வடிவாக்குவது என்பவை சற்று பின்னடைவு அடைந்துள்ளன. ஆனால் அவரின் அலைச்சலால் இது சாத்தியமில்லாமல் போய் இருப்பதாக தோன்றுகிறது. தமிழ் சாகித்ய அகாதமியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒருவர் அவரைப் பற்றின ஒரு பேச்சின்போது நான் ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கின்ற காலத்தில் அவருக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைக்கும் என்பதை சொன்னார் .ஆனால் அது நிறைவேறவில்லை அதனால் அதற்கு முழு தகுதியும் அவரின் படைப்புகளின் தீவிரமாக தன்மையும் நாட்டுப்புறவியலிலும் வெளிப்பட்டிருக்கிறது அவர் தொடர்ந்து பதிப்பகத்தின் மூலமும் இயங்கி வருவதால் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஆறுதல் தருகிறது. அந்த ஆறுதலை எப்போதும் அவர் என்னைப் போன்றவர்களூக்குத் தரவேண்டும் ...
சிங்கப்பூர் இலக்கியம் : சுப்ரபாரதி மணியன் 49வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் இலக்கியம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க புத்தக அரங்கமும் இடம் பெற்று இருந்தது அந்த அரங்கத்தில் ஹேமா அவர்களின் வாழைமர நோட்டு என்ற நூலை முன்வைத்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ” காரிகாவனம் “ என்ற சிங்கப்பூர் வாழ் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து நான் ஒரு நூலை காவ்யா பதிப்பகம் மூலம் கொண்டு வந்திருக்கிறேன் .அதைத்தவிர ” ஓ.. சிங்கப்பூர் ”என்ற தலைப்பில் அங்கு வசிக்கும் நவாஸ், குமார் உட்பட பல்வேறு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளை எழுதியத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். சிங்கப்பூர் இலக்கியத்தின் முக்கிய கூறுகளாக அந்த எழுத்தாளர்களின் வேராக இருக்கிற தமிழ்நாட்டு மண்ணின் உறவுகள் பற்றியும் பாசப்பிணைப்பு ஏக்கம் பற்றியும் பல்வேறு கதைகளை நாம் பார்க்கலாம் இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் இடம்பெயர்ந்த சூழலின் அனுபவங்களை பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஒருவகையில் புலம்பெயர் இலக்கியம் என்ற வகையில் கூட அவர்களின் ஆர்வங்களை எடுத்துக் கொள்ளலாம். திருப்பூரில் சக்தி விருது என்று ஒரு விருது ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கு தரப்படுகிறது. அந்த விருதை சிங்கப்பூரைச் சார்ந்த மணிமாலா மதியழகன் முதல் ஹேமா வரை பலர் பெற்றிருக்கிறார்கள. அந்த திருப்பூர் சக்தி விருது பெற்ற நூல் தான் ” வாழை மர நோட்டுகள் ” என்ற ஹேமா அவர்களின் கட்டுரை நூலாகும் படைப்பிலக்கியத்தில் நுழைகிற பல பேர் கவிதையிலிருந்து உரைநடைக்கு செல்வார்கள் ஆனால் இவர் சிறுகதையிலிருந்து கட்டுரை போன்ற வடிவங்களுக்கும் வந்திருக்கிறார் என்பது முக்கியமாக இருக்கிறது.. சிறுகதை போன்ற முயற்சி விளக்கத்தில் இருந்து பதிவு எழுத்து வகைகள் என்பதற்கு இந்த நூல் மூலம் ஹேமா அவர்கள் வந்திருக்கிறார்கள். 2018 திரு சீரங்கன் டைம்ஸ் இதழில் அவர் ” இரைச்சல் “ என்ற ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது ஜெல்லி என்ற ஒரு பெண்ணும் அவளைச் சுற்றிய சூழலும் பற்றி அமைந்த கதை. மாயக்குரலில் அவளுக்கு தென்படும் பல விஷயங்களை அந்த கதையில் அலசி இருக்கிறார். அந்த மாயக்குரல் சிங்கப்பூரில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு பற்றிய பல்வேறு சம்பவங்களை தேடுவதற்கு ஹேமா அவர்களுக்கு வழி வகுத்திருக்கிறது ஆதாரத்தையும், வரலாற்று பதிவுகளையும் மையமாக கொண்ட படைப்புகளை தேட வைத்து இருக்கிறது. வரலாற்றை உணர்வாய் செய்வதும் வரலாற்றை மீட்டு வாசகர்களுக்கு நினைவு படுத்துவதும் அவருக்கு தேவை என்று பட்டிருக்கிறது வரலாற்றை திரும்பத் திரும்ப இன்றைய இளைஞர்கள் மத்தியில் பேசப்பட வேண்டி இருக்கிறது. படைப்புகளாகத் தர வேண்டி இருக்கிறது. மறந்து விடுதல் மக்கள் இயல்பு ஞாபகப்படுத்துவது எழுத்தாளன் கடமை என்று சொல்வார்கள். அந்த வகையில் தான் சிங்கப்பூரின் சரித்திரத்தில் ஒரு பகுதியை ஹேமா அவர்கள் இந்த புத்தகத்தில் ஞாபகப்படுத்துகிறார். 1931 ஜப்பான் சீனாவிற்குள் ஊடருகிறது. சிங்கப்பூரில் இருக்கிற சீனர்கள் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக நிதி திரட்டியும் அனுப்புகிறார்கள்.. இந்த நிலையில் 1942 முதல் சுமார் நான்கு ஆண்டுகள் ஜப்பானியரின் படையெடுப்பும் ஆக்கிரமிப்பு சிங்கப்பூர் மக்களை எப்படி சிரமப்படுத்தி இருக்கிறது என்பதை இந்த புத்தகம் சொல்கிறது .தாய்லாந்து மற்றும் வடக்கு மலேயா கரைகளில் வந்திறங்கிய ஜப்பான் வீரர்கள் மிதிவண்டியின் மூலமாக சிங்கப்பூர் நகரத்திற்கு செல்கிறார்கள்.. வெடி குண்டு தாக்குதல் நடைபெறுகிறது.. தீயில் பல கட்டடங்கள், வீடுகள் எரிகின்றன. மருத்துவமனைகளும் இந்த குண்டு தாக்குதலுக்கு இலக்காகின்றன.. மருத்துவமனையில் இருக்கிற நோயாளிகள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் அப்படி சிரமப்படுகிற ஒரு மருத்துவமனை சார்ந்த நோயாளிகளை வெளியில் கூட்டி செல்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும், பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் தனியே கூட்டிச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்கள்..நாஜிக்கள் விஷவாயுக்களை செலுத்தி கொள்வதைப் போல கொல்லப்படுகிறார்கள். முக்கிய நீர் தேக்கங்கள் மாசுபடுகின்றன. அங்கே பிணங்கள் கிடக்கின்றன சாலைகளில் புதைக்கப்படாத பிணங்கள் கிடக்கின்றன. கேத்தா என்ற 16 மாடி கட்டிடம் அப்போது பிரசித்தி பெற்றது. ஜப்பான் கொடி அங்கே ஏற்றப்படுகிறது. அந்த சமயத்தில் சீனப் புத்தாண்டு வருகிறது. வழக்கமான புத்தாண்டு என்றால் கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் போர் ஆக்கிரமிப்பு சூழலில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க இயலவில்லை. வீட்டில் இருக்கும் துண்டு துணியை வெட்டி அவற்றில் சிவப்பு வட்டம் போட்டு தங்களின் நாட்டு கொடி எது என்று இருக்கிற அபிமானத்தை வெளிப்படுத்துகிறார்கள். ” எங்களுக்கு உங்கள் மீது பகையில்லை கீழ்படிய தயாராக உள்ளோம் “ என்று குறிப்பிடுகிறார்கள். போர் கைதிகளாக பிடிக்கப்படுபவர்கள். சிரமப்படுத்தப்படுகிறார்கள் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். சரியான உணவு இல்லை சயாம் பர்மா ரயில் பாதை கட்டுமானத்திற்காக அதில் பல இந்தியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சிங்கப்பூரில் உணவு பொருட்களுக்கு தடை இருக்கிறது. உள்நாட்டு உணவு போதிய அளவில்லை. இருக்கிற உணவுப் பொருட்களையும் ஜப்பானியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். உணவு பஞ்சம் வந்துவிடுகிறது. கள்ள சந்தையில் மக்கள் உணவு பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு மூட்டை விலை 200 வெள்ளிக்கு கூட போய் விடுகிறது. இந்த நிலையில் பணம் பற்றாக்குறை ஏற்படுகிற போது ஜப்பானியர்கள் பணம் அச்சிட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் வாழை மர நோட்டுகளை பணமாக அச்சிடுகிறார்கள். ஆரம்பத்தில் அதில் வரிசை எண்கள் இடுகிறார்கள். பின்னால் அந்த வரிசை எண்களும் இல்லாமல் வாழை மர நோட்டுகள் வருகின்றன. கள்ளச் சந்தையில் டாலர் மதிப்பு உயர்கிறது. ஜப்பானியருடைய வாழை மர நோட்டுக்கு மதிப்புக்கு குறைகிறது. சிறு பொருளை வாங்கக்கூட பை நிறைய கை நிறைய பண நோட்டுகளை எடுத்துச் செல்கிறார்கள் பணத்தை விட சம்பளமாக கொடுத்த உணவு பொருட்களுக்கு மதிப்பு இருக்கிறது. உணவு பொருட்கள் திருடப்படுகின்றன பல மணி நேரம் வரிசையில் நின்று உணவு பொருட்களை பெறுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் 20 கட்டி அரிசி சுண்ணாம்பு கலந்து வழங்கப்படு.ம் ஆனால் அதுவே பின்னால் குறைக்கப்படுகிறது. உணவு பிரச்சினை வருவதால் வீடுகளில் செடிகள், தாவரங்கள் காய்கறிகளை வளர்க்கச் சொல்லி அரசாங்கமே சொல்கிறது. குறைந்த விலையில் விதைகளை தருகிறார்கள். பள்ளிகளில், கைதிகளின் முகாம்களில் இதுபோல செடிகள் நடப்படுகின்றன, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவை சீக்கிரம் வளரும் என்பதால் அவற்றை வளர்க்க முன்னுரிமை தரப்படுகிறது. சோளம் நிலக்கடலை கலந்த ரொட்டியை சாப்பிட வேண்டியிருக்கிறது. வளர்கின்ற செடியில் இருக்கிற கிழங்கை பிடுங்கி செடியை மட்டுமே நட்டு விட்டு போகிற மாதிரி பல விஷயங்களும் நடக்கின்றன. ரொட்டியின் மூலப் பொருட்கள் கூட கிடைப்பதில்லை. சோளம் கேழ்வரகு இவற்றை வைத்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள் அரசாங்கம் தருகிற நூடுல்ஸ் சிவப்பு பனை எண்ணெய் வாசனை உடன் இருக்கிறது. அதை தண்ணீரில் அலசி வெயில் காய வைத்து தான் சாப்பிட வேண்டி இருக்கிறது. புதிய குடியேற்றங்கள் ஏற்படுகின்றன. காடுகளை அழித்து தற்காலிக சாலைகள், வீடுகள் ஏற்படுத்தப்படுகின்றன எண்ணெய், சோப்பு பால் போன்ற பொருட்களும் உணவு பொருட்களும் தாமாகவே வளர்த்து,செய்து கொள்ளும் வேலையை மக்கள் கற்றுக் கொள்கிறார்கள், மீன், வாத்து, கோழி போன்றவை வளர்க்கக் கற்றுக் கொள்கிறார்கள். வீட்டு தோட்டங்கள் மக்களுக்கு பயன்படுகின்றன. ( இந்த சமயத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தால் தடைகள் ஏற்பட்ட போது கியூபாவில் மாடி விட்டு தோட்டங்களும் வீட்டு தோட்டங்களும் அமைக்கப்பட்டது ஞாபகம் வருகிறது.) ஜப்பானியருக்கு எதிராக சிங்கப்பூர் கொரில்லாப் படை பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறது. உணவுகளை எடுத்துச் செல்கிறது. இருவருக்கும் மத்தியில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உணவும் பரிமாறி கொள்ளப்படுகிறது. அங்குள்ள பெண்கள் விலை மாதர்களாக ஆக்கப்பட்டு ஜப்பானிய வீரர்களால் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கல்லறை தோட்டம் என்பது கூட இல்லை. அப்போதுதான் அந்த விலை மாதர்களில் சில நிர்வாகிகள் ஒரு கல்லறை தோட்டத்தை அமைக்கிறார்கள் .அதில் இறந்து போன ஜப்பான் வீரர்களின் அஸ்தியும் வைக்கப்படுகிறது. 1951 இல் ஜப்பான் சிங்கப்பூர் அமைதி ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஜப்பானியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைகின்றன. சூதாட்ட கூடம் அமைக்கப்படுவதும் பல பூங்காக்கள் பாலியல் விடுதிகளாக மாற்றப்படுவதும் நடக்கிறது. பல மனநல மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் அங்கு இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பும் என்ன என்பதை பற்றி ஹேமா அவர்கள் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். 1945 செப்டம்பர் 2ம் தேதி நேச நாடுகள் மத்தியில் ஜப்பான் சரணடைகிறது. ஆனால் சிங்கப்பூரை மீட்டெடுக்க முயற்சி தொடர்ந்து பல ஆண்டுகள் நடக்கிறது .இந்த காலகட்ட விஷயங்களை சுமார் 20 கட்டுரைகளாக ஹேமா அவர்கள் சிராங்கூன் டைம்ஸ் பத்திரிகை எழுதுகிறார். அதுதான் அவருடைய முதல் புத்தகமாகவும் அமைகிறது. சிங்கப்பூர் இலக்கிய பரிசுகள் பலவற்றை பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் தேசிய போட்டிகளில் கவிதை சார்ந்து இயங்கி பாராட்டை பெறுகிறார். கணையாழி, கனலி, தமிழ் முரசு, சிராங்கூன் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு பற்றி எழுதுகிற ஹேமா அவர்கள் ஜப்பான் சார்ந்த பல்வேறு படைப்புகளையும் பின்னர் முன் வைத்திருக்கிறார். ஜப்பான் ஆலயங்கள், செரிமலர்கள், மரங்கள் உட்பட ஜப்பானியரின் வாழ்வியலை பற்றியும் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அந்நிய மனிதர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கிற சிங்கப்பூர் மனிதர்களின் சித்திரங்கள் முக்கியமானவை ” உறுதுயர்” என்ற ஒரு சிறுகதையில் அவரின் நுணுக்கமான விவரிப்புகள் ஆச்சரியப்படுத்துகின்றன.. டச்சுக்காரர்களில் வருகையால் நடந்த வரலாற்றை மாற்றங்களையும் ஒரு சில கட்டுரைகளில் எழுதி இருக்கிறார். இவரின் சிங்கப்பூர் பொன்விழா சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற ”ஒளி தேடும் விட்டில் பூச்சி” என்ற கதையும் முக்கியமானது. இந்த கதைகளில் அவர் இளைய தலைமுறை சார்ந்தவர்களை, குழந்தைகளுடைய இயல்பை நுணுக்கமாக விவரத்திருக்கிறார் இந்த நுணுக்கமான விவரிப்புக்கள் ஹேமா அவர்களின் இந்த புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கிறது. ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கிற விதமாக அமைந்த ஹேமா அவர்களின் இந்த கட்டுரை தொகுப்பு சிங்கப்பூர் சரித்திரத்தின் ஒரு பகுதியை துல்லியமாக சித்தரிக்கிறது. அவரின் புனைவு எழுத்துக்களின் மத்தியில் இதுவும் முக்கியமாகிறது சுப்ரபாரதி மணியன் ( சென்னை 49 வது புத்தக கண்காட்சியில் பேசியது )
சிறுகதை ஆறுதல் ... சுப்ரபாதி மணியன் கண்களிலிருந்து நீர் வழிந்தது ஜெயலட்சுமிக்கு . தலையில் ஊற்றிய நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது .கண்ணீரும் குளியல் நீரும் கலந்து உடம்பு முழுக்க ப் பரவியது. குளியல் அறைக்கு வந்து விட்டால் ஜெயலட்சுமிக்கு எல்லா கவலைகளும் வந்துவிடும். அழுது த்தீர்ர்ப்பாள். கண்களிலிருந்து நீர் வழிய வழிய மனதின் கவலைகளை இறக்கி வைப்பாள் . இந்தச் சுற்றுலாப் பயணத்தில் கூட அவளுக்கு விருப்பமில்லை .மூட்டு வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ..சரியாக நடக்க முடியவில்லை .அதுவும் இப்படியான இடத்தில் வந்து செங்குத்தான இடத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது .. ஆகவே உணவு விடுதிக்குச் செல்லாமல் மகளே உணவைக்கொண்டு வந்தாள் .. அவளும் சிரமப்பட்டு உணவை எடுத்து வரவேண்டியிருந்தது. வெளியில் போகும் போது பேருந்து வண்டி இங்கு வந்து ஜெயலட்சுமியை ஏற்றிக் கொண்டு போனது. கால்களில் அவ்வப்போது தென்படும் சிறு அடர்ந்த மயிர் போன்ற பகுதிகள் அவருக்கு பயமூட்டும். .நரம்புகள் சுருண்டு கொள்கின்றன என்று சொல்லிக் கொள்வார் .. நெடுநேரம் நிற்பவர்களுக்கு அப்படி நரம்புகள் சுற்றிக் கொள்ளும் ஆனால் ஜெயலட்சுமிக்கும் அப்படி நரம்புகள் சுற்றி சிரமப்படுத்தும்.இந்த மூட்டு வலிக்கு காரணம் அந்த நரம்புகள் தான். ஏதோ ஒரு வகையில் அந்த நரம்புகள் மூட்டுகளைப் பாதிக்கின்றன. மூட்டுவலி இருந்துகொண்டே இருக்கின்றது. எண்ணை ய் தடவுவது ,ஒத்தடம் கொடுப்பது என்று பல விதங்களில் அதற்கு நிவாரணம் தந்து இருக்கிறார் ,. இரவுகளில் வலி நீக்கி மாத்திரைகளை சாப்பிட்டால் அடுத்து வரும் ஓரிரு நாட்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், ஆனால் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல என்று வலியைத் தாங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தார் , அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கண்ணீரையும் குளிர் நீரையும் சேர்ந்து கீழே இறக்கிக் கொண்டிருந்தார். உடம்பை மறைத்து , உடம்பைக் கல்லாக்க முயன்று வாசுகி இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியேத் தனியாக இருப்பாள் அவளின் கணவன் ஒரு விபத்தில் மரணமடைந்துவிட்டார் .காலம்பூராவும் அவள் இப்படி இருக்க முடியுமா . .மகள் வாசுகி எப்படித்தான் காலம் தள்ளப் போகிறாள் என்பது அவளுடைய கவலையாக எப்போதும் இருந்திருக்கிறது.. இன்னொருபுறம் வர்ஷினிஅவளுக்கு நிறைய சங்கடங்களை கொடுத்துக் கொண்டே இருந்தாள். இப்படி ஏதாவது சுற்றுலா பயணம் போய்க் கொண்டே இருக்க வேண்டும் ..அவள் ஆன்லைன் வகுப்புகளில் கூட அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏதோ கைபேசியை பார்த்து பாடத்தை கவனிப்பதாக தோன்றினாலும் படிக்கையில் தரையிலும் சோபாவில் உட்கார்ந்து புரண்டு கொண்டும் அவள் கவனம் சிதறி இருப்பதை ஜெயலட்சுமி கண்டிருக்கிறார் .. குளியல் அறையில் இருந்த டப்பில் தண்ணீரை நிரப்பி சுடு நீரையும் சரியாக நிரப்பி குளிக்க வாசுகி அவளுக்கு உதவுவாள் .வர்ஷினி அதில் கால் மணி நேரத்திற்கு மேலாக படுத்து இருந்து கொண்டு மெல்ல குளிப்பாள். செல்லமே செல்லமே என்று ஏதாவது பாட்டை பாடி கொண்டிருப்பாள்..அவள் டயப்பர் ரோடும் இருந்தக் காலத்தில் கூட அந்த பாட்டை தான் பாடிக் கொண்டிருந்தாள். சமீபமாய் விளையாட்டாய் ஆரம்பித்த அவளின் .டிக் டாக் வீடியோக்கள் ஜெயலட்சுமியைச் சங்கடப் படுத்தவே செய்தன யாராவது ஒரு ஆணுடன் சேர்ந்து இன்னொரு பகுதியாக வீடியோவை ஆடுவது .அதை பதிவிடுவது என்று வர்ஷினி செய்துகொண்டிருந்தாள் .. இதெல்லாம் நல்லா இருக்கா என்று வர்ஷினியிடம் ஜெயலட்சுமி புலம்பித் தீர்ப்பார் .’பாட்டி பொழுது போகனும் இல்ல ” என்று அதற்கு பதில் சொல்வாள் .அதைப் பகிரிந்து கொள்ளும் ஆண்கள் யார் என்று தெரியவில்லை .ஆனால் இணைப்பில் அவர்கள் வந்துவிடுகிறார்கள் . அவளுக்கு தேவையான விஷயங்கள் அதில் வந்துவிடுகின்றன. .பாடவும் ஆடவும் யாராவது கிடைத்து விடுகிறார்கள். அவளுக்கு பியர்லெஸ் கேர்ல் என்றப்பட்டமும் வந்துவிட்டது .விறுவிறுவென்று ஏணியில் ஏறுவாள் .குழந்தையாக நினைத்துக்கொண்டே ஏதாவது பெரிய பொம்மையை எடுத்துக் கொண்டு தூக்கி எறிவாள். அதை மீண்டும் பிடிப்பதற்காக எக்கிக்குதிப்பாள் .” பாட்டி உனக்கு வயதாகிவிட்டது. நீ சுமுகமாக இருக்க வேண்டும் .நீ இன்னும் எங்களையெல்லாம் இதற்கெல்லாம் அனுமதிக்க வேண்டும் “என்று கூட ஒருதரம் பாட்டியிடம் சொன்னாள் . மெத்தையில் இருந்தால் கால்களை எம்பி எம்பி குதிப்பதும் சிரமம் தரும். அதை அதில் ஒரு செய்வதும் வரிஷினிக்கு சாதாரணமாக இருக்கும் . அப்போதெல்லாம் அதே மெத்தையில் ஜெயலட்சுமி இருந்தால் அவருக்குப் பயம் வந்துவிடும் . இப்படி குதிக்கிற பெண் தன்னை அலற வைத்து விடுவாள் என்று நம்பினார். ..அதுவே பயத்துக்கு காரணமாக இருந்தது ..அவரின் சித்தப்பா மகள் ஒருவர் அமெரிக்காவிலிருந்து ஸ்கைப்பில் கூப்பிட்டு பேசிக்கொண்டு இருப்பாள் . அப்போது வர்ஷினி அவர்களிடம் தனது டிக்டாக் பற்றியும் அதற்கு வருகிற ஆண்கள் பற்றியும் நிறையச் சொல்வாள் . அதெல்லாம் ஜெயலட்சுமிக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்திருக்கிறது. முகநூலில் வேறு மேய்ந்து கொண்டிருப்பாள் ..இதெல்லாம் தேவைதானா என்றால் ஒரு நாளை எப்படிக் கழிப்பது என்று சொல்லிக் கொண்டிருப்பாள் .எப்படித்தான் வாசுகியைக்கரை ஏற்றுவது , வர்ஷினி எப்படி டிக்டாக்கிலிருந்து மீண்டு வருவாள் இதெல்லாம் ஜெயலட்சுமிக்கு கவலையாகவே இருந்தது . அவளின் உயர்நிலைப்படிப்பு பிறரிடமிருந்து அந்நியமாக்கியிருந்தது.. தலையில் தண்ணீரை ஊற்றி ஊற்றி அவளின் கண்ணீரை க்குறைத்துக் கொள் வார். . இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருந்தார் . “ரூம்ஓட்டை வழியா யாரோ பார்க்கிறார்கள் அந்த ஓட்டைகளை அடைக்க மாட்டீங்களா ..ரூம்ல ஓட்டை இருக்கு “என்று யாரோ சத்தம் போடுவது தெரிந்தது. தலையை துவட்டிக்கொண்டு வெளியே வந்தார் சுற்றுலாப் பயணம் தன்னுடன் வந்த. பக்கத்து அறையில் இருந்த ராம் அதிர்ச்சியுடன் அவரது மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார் “ இந்த ரூமில் இருந்து அந்த ரூமுக்கு வேடிக்கை பார்க்க ஏதோ இடம் இருக்கு . ஓட்டை இருக்கு .அத அடக்கச் சொல்லுங்க “ என்றான். ராம் பதட்டத்துடன் கதிரின் கைகளைப் பிடித்துக்கொண்டார் ” .” அதெல்லாம் ஒன்னும் இல்லடா .சும்மா இருடா .சும்மா இருடா ” ஜெயலட்சுமி கதவின் அருகில் சென்று நின்று கொண்டார் “ தம்பி சும்மா இரு அதெல்லாம் ஒன்னும் இல்ல ” “ இல்ல ரூம்ல வேடிக்கை பார்க்கிற மாதிரி ஏ தோ ஓட்டை இருக்கு ஜன்னலில் இருக்கா , செவுத்துல இருக்கான்னு தெரியல “ ” ரொம்பவும் பயப்படாத தம்பி ஆமாம்மா ” “இவ ன் எப்ப பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் பயத்தை க் காட்டிட்டே இருக்கான்.” “ கயிறு கட்டுவது கோயிலுக்கு போற து..இதெல்லாம் பண்றீங்களா ” “பண்ணி தான் இருக்கம்.” எதிரில் தென்பட்ட மர சட்டங்களால் உருவாக்கப்பட்ட கண்ட்ரி காட்டேஜை ஜெயலட்சுமி பார்த்தார். அவரின் அப்பாவிற்கு இது போன்ற மர பொருட்களால் செய்யப்பட்ட வீடுகள் ,காட்டேஜ்கள் மிகவும் பிடிக்கும். கேரளா போன்ற பகுதிகளுக்கு ஜெயலட்சுமியை கூட்டிக்கொண்டு போகிறபோது அது போன்ற வீடுகளை த் தேடிப்பிடித்து தங்கலாம் என்பார் ...சில சமயங்களில் அதற்கு வாய்த்திருக்கிறது. இந்தக் காட்டேஜை யாராவது பயன்படுத்துகிறார்களா அல்லது சும்மா கிடக்கிறதா . .மெல்ல நடந்து சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை ஜெயலட்சுமிக்கு வந்தது . தெற்கு பக்கம் பார்த்த போது அங்கிருந்த ஒரு திருஷ்டி பொம்மை அவளை திரும்ப திரும்ப பார்த்து செய்தது. ” இது எ துக்கு மாட்ட இருக்காங்க இதெல்லாம் பார்க்க பயமா இருக்குது ” “ பயப்படக்கூடாது .அதுக்குத்தான் மாட்டி இருக்காங்க. பயப்படாதே ” “இல்ல எதுக்கு இங்க மாட்டியிருக்காங்க ஜன்னலுக்கு வெளியே கசகசன்னு இந்த சாயங்கால நேரத்துல சத்தம் வருதே “ “ அப்படி எல்லாம் ஒன்னும் வராது .அப்படி எல்லாம் வந்தா இந்த பொம்மை விரட்டிவிடும் அதுக்கு தான் இருக்கு ” இரண்டாயிரம் மீட்டர் கடல் மட்ட உயரத்தில் இருந்த அந்த மலைப்பகுதியில குளிர்ந்த காற்றை அந்தப் பக்கம் கொண்டு சென்றது .ராம் தனது உடம்பை குறுக்கிக் கொண்டார்.. குளிரால் மட்டுமல்ல. கதிர் செய்யும் செயலாலும் அவனின் பயப்படுகிற தன்மையும் அவரை உடம்பை க் குலைக்கச் செய்தது ஜெயலட்சுமி கதிரைப் பார்த்து ” தம்பி பயப்படாத எல்லாம் சரியாயிடும் .இங்க பக்கத்திலெ இருக்கற கோயிலுக்குப் போகலாம் அந்த சாமி எல்லாத்தையும் பாத்துக்கும் “ என்றார் “எப்ப போறது சாயங்காலம் ஆச்சு இல்ல “ “ நாளைக்கு போலாம் வெளிய கூட்டிட்டு போகும்போது அதுக்கு சேத்துக் கூட்டிட்டு போவாங்க ” “அப்படியா அப்ப இந்த திருஷ்டி பொம்மை வேடிக்கை பார்க்கிறது ..இதுக்கு எல்லாம் வந்து பரிகாரம் கிடைச்சிடுமா ” “ஆமா கிடைச்சுடும். பரிகாரம் கிடைக்கிற வரைக்கும் வேற எதுவும் செய்யத் தேவையில்லெ “ “மாத்துங்க அப்பா .ரூம்மெ.. உடனே மாத்த முடியுமா ” “ தம்பி அந்த மேனேஜரைக் கூப்பிட்டு வேற ரூம் வேணும் ன்னு சொல்லுங்க “ ஜெயலட்சுமி வடக்கு பக்கம் பார்த்தபோது அங்கிருந்த மூன்று மாடிக் கட்டடத்தில் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள் பரபரவென்று மூன்றாவது மாடி படிக்கட்டுகளில் இருந்து இரண்டாவது மாடி க்கு இறங்கிக் கொண்டிருந்தார்கள் . வர்ஷினி எங்கே போயிருப்பாள் அவளுக்குப் புது நட்பு என்று ஏதாவது கிடைத்துவிட்டதா. .ரொம்ப நேரம் அவள் கண்ணில் படவில்லை என்பது ஞாபகம் வந்தது ஜெயலட்சுமிக்கு அந்த நினைப்பு விசூவரூபித்து உடம்பை நடுங்கச் செய்தது ஜெயலட்சுமிக்கு . அவளுக்கே நிறைய பிரச்சினைகள். ஆனால் அவள் ராமிற்கு ஆறுதல் சொன்னதை நினைத்துப் பார்க்கிறபோது வியப்பு மேலிட்டது. ஒவ்வொருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதுதான் வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டாள். 0 SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 0948610100
இறக்கையற்ற சில பறவைகளுடன்.. சுப்ரபாதிமணியன் ஆசித் முகமது அவர்களின் நாவல் மயான பயணிகள் -மலையாளம் தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள் முன்னாள் மாணவி ஒரு ஆசிரியரை நீண்ட காலம் கழித்து தேடி வரும் கதை இந்த நாவல், அவருடன் பழகிய கல்லூரி, நூலகம் முதல்வர் வளாகம் என்றும், அவரை தெரிந்து கொண்ட சில பேரையும் அந்தப் பெண் மர்வர் தேடுவதும் தான் இந்த நாவலாக வந்திருக்கிறது. மர்வர். அஞ்சுவேளை தொழுகிற அந்தப் பெண் மத கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி வேறு மதத்தைச் சார்ந்த ராஜவர்ம ஆசிரியரின் கடைசி கடன்களை நிறைவேற்றுகிறாள் மாமனிதனான ராஜ வர்மாவின் அன்பை தோல்வியாக மதிப்பிட்ட மனைவி உட்பட பலரால் வாழ்க்கையில் முழுவதும் காயப்பட்டவர் அவர். தற்கொலை செய்து கொள்கிறார். அவரின் . அஸ்தியை கரைக்கிற பொறுப்பு மர்வர் என்ற பெண்ணுக்கு வந்து சேர்கிறது.. எதிரணியில் அந்தப் பெண்ணின் குடும்பம் சார்ந்த வாழ்க்கை அப்பா மற்றும் சகோதரர் சாவு, அம்மா கல்லை பூ மாதிரி எடுக்கும் பலசாலியான பெண், அவள் குடும்பத்தையும் நிர்வகிப்பது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஈராக்கின் 1990 இல் குட்டி அரபு நாட்டை ஆக்கிரமித்து செய்த அதிகார வன்முறை பற்றி பல பக்கங்கள் பேசுகின்றன. அந்தப் பாலைவன நாட்களை மிகவும் அற்புதமாக இதில் சித்திருக்கிறார். வியாழன் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கிறது என்பது போலவே இஸ்லாம் மதச் சிந்தனைகள் எப்படி அவர்களுக்கு எல்லாம் ஆறுதல் தருகின்றன என்பதைச் சொல்கிறார். அந்த குவைத் தருணங்களும் மழைக்காலம் சார்ந்த அனுபவங்களும் இந்த நாவலில் மிக சிறப்பான முறையில் பிடிபட்டிருக்கின்றன.. அந்நிய மதத்தை சார்ந்த அந்தப் பெண் இறுதி சடங்காய் அஸ்தியை கடலில் கொண்டு கரைக்க வேண்டி இருக்கிறது. ராஜு வர்மா நம்பிக்கை கொண்டிருந்த மதத்தின் வழியாக அவருக்கு ஆத்ம சாந்தியை தேடித் தர வேண்டி இருக்கிறது. அதெல்லாம் சரிதான் ஆனால் ஏன் அந்த பெண் கடலில் அஸ்தியைக் கரைக்கிற நிகழ்ச்சியில் நீரில் மூழ்கிப் போகிறாள். அவள் நீரில் மறைந்து போகிற விதியை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. வெவ்வேறு மாதங்கள் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் வாழ்வியல் அம்சங்களை இந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஆனால் அந்த கடலில் கரைந்து போகிற பெண் ஏன் அப்படி தன்னை கரைத்துக் கொண்டாள், தற்கொலை செய்து கொண்டாளா என்பது போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதை மொழி பெயர்த்திருக்கிறார் சிதம்பரம் ரவிச்சந்திரன் அவர்கள்.. விழித்திறன் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தொடர்ந்து எழுதுகிறார்.. மலையாள மொழியில் இருந்து கதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார் .கடந்த ஆண்டில் திருவனந்தபுரம் தமிழ் சங்கம் வழங்கிய சிறந்த மொழி மொழிபெயர்ப்புக்கான உள்ளூர் பரமேஸ்வரன் விருதை பெற்றிருக்கிறார். ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரின் எளிமையான மொழியால் இந்த நாவல் வலுப்பெற்று இருக்கிறது சுப்ரபாதிமணியன் திருப்பூர்