சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 27 டிசம்பர், 2012


இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி
“ யுவபுரஸ்கார் “ பரிசு பெற்றுள்ள மலர்வதியின்  தூப்புக்காரி “ நாவல்:
தலித்திய வாழ்க்கையை பின்தொடரும் ரணம்
                   - சுப்ரபாரதிமணியன்

                     தூப்புக்காரியின் தோற்றமும் செயல்களும் வாழ்வும் ஒரு விளிம்பு நிலை பெண்ணின் அடையாள அவலம். மருத்துவமனையில் சுத்தப்படுத்தும் வேலை செய்யும் ஒரு தாயின் வாழ்வை மகளும்சேர்ந்து ஈர்ப்புடன் ஆத்மாவின் வலியோடு பீ, குளியலறை , எச்சிலை, ரத்தவாடையோடு நாகர்கோவில் பகுதி தலித் மக்கள் வாழ்வோடு ஓரளவு நேர்த்தியாகவே இதில் சொல்லப்பட்டிருக்கிறது.. தாய், மகள், மகளின் மகள் என்று தலைமுறை தொடர்கிறது. இது சாபமாய் படிகிறது.இந்திய சமூகத்தின் பீடை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட அநாவிசிய பாரம்.இந்த பாரத்தை  உணரும் வண்ணம் எழுதியிருக்கிறார் மலர்வதி. பணம் தொலைவதில் படபடப்பாகிற தாய் தன்னைத் தொலைத்தலிலும் வாழ்க்கையை கடந்து போகிறார்.  திருமண விருந்துகளில் எச்சிலெடுப்பவள் எச்சிலாகிப்போகிறாள். எச்சிலை இலைதான் இந்த நாவல் எழுப்பும் படிமம். மகள் பூவரசியின் உடல் தடுமாற்றம் பெண்ணின் உணர்வால் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. துப்புரவு வேலைநிமித்தமான அசுசையைச் சொல்லத் தயங்காதவர் பூவரசியின் உடல் தடுமாற்றத்தையும் துல்லியமாகச் சொல்கிறார். அது கொண்டு போகும் துரோகம்தான் ஆணின் அதிகாரமாக விளங்குகிறது. சகமனிதர்களின் மலம், அழுக்கு  மட்டுமின்றி நாய் போன்ற பிராணிகளும் கூட மலத்துள் தள்ளுகின்றன. வேறு சாதிப்பையனுடன் கொள்ளும் உறவால் உண்டாகும் குழந்தையைக் கலைக்காமல் அவள் எதிர்கொள்ளும் முடிவில் பழமைவாதமே மிஞ்சுகிறது. பீயை மற்றவர்களின் மூஞ்சியில் எறிகிற மாதிரி கருவைக் கலைத்து விட்டு அவள் நடமாடலாம். அவளை ஏஏற்றுக்கொள்ளும்  மாரியின் தியாகம் உன்னதமானதுதான். ஆனால் அதை அவன் பாரமாக எப்போதாவது உணர ஆரம்பித்தால் அது சாபமே. காத்திரமான பாத்திரங்கள் புழங்கும் மொழி பல இடங்களில் நுணுக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.. சாதாரணக் கதை. பூவரசி சார்ந்த தலித் சமூக விவரிப்பும், பிற ஆதிக்கஜாதியினரின் போக்கும்., காலகட்டத்தின் குறிப்பான பின்ணணியும் இல்லாமல் ஒற்றைப்பரிமாணமாய் தட்டையாய் நீள்கிறது. நாலு பேர் ஒரு சமூகம். நானூறு பேரின் வாழ்க்கையல்லவா நாவல். அதை பூவரசியோடு சிலருடன் அடக்கமுயல்வது பலவீனமே.
 ( ரூ 75/ வெளியிடு “ அனலகம் “, தண்ணீர் பந்தல், பாலூர், கருங்கல், கன்யாகுமரி 628157  )


செவ்வாய், 18 டிசம்பர், 2012பாராளுமன்றத்தில் வைகோ "

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பூரில் ..


உரை:  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
    

     தோழர் பொன்னையன் தமிழ்தேசிய இனத்தின் போராளி என்று வை. கோ அவர்களைக் குறிப்பிட்டார். நான் அரசியல்வாதிகள் மத்தியில் இலக்கிய இதயம் கொண்டவர் என்கிறேன். எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களையும், புரட்சிகர நடவடிக்கைகளிலும் முன்னின்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். அரசியல்வாதிகள் எழுத்தாளர்களின் நண்பர்களாக, வாசகர்களாக இருப்பது பலம் தருகிறது. லத்தின் அமெரிக்காவின்  நோபல்பரிசு பெற்ற  காப்ரியல் மார்க்கூஸ் அவர்களின் படைப்புகளின் வாசகன் பிடரல் காஸ்ரோ. தமிழகத்தில் பொதுவுடமை வாதிகளில் ஜீவா, பாலதண்டாயுதம் முதல் கொண்டு நல்லகண்ணு, சி.மகேந்திரன் வரை நல்ல இணக்கமானவர்களாக எழுத்தாளர்களுடன் இருக்கிறார்கள். வை.கோ. இலக்கிய இதயம் கொண்டவராக ஆறுதல் தருகிறார்.அவர் இயக்கம் சார்ந்த அருணகிரி, செந்திலதிபன், உடுமலை ரவி முதற்கொண்டு பொன்னியின் செல்வன் முதல் புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், தோப்பில் மீரான் உட்பட பல படைப்பாளிகள் பற்றி மணிக்கணக்கில் பேசும் இயல்புடையவர். அவர் தன்க்குப் பிடித்த பல நூல்களைப் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.
   சமீபத்தில் என்க்குப்பிடித்த இரு நூலகளைப் பற்றி சொல்கிறேன். அமரர்   பொன்னியின் செல்வன் பற்றிய வை.கோவின் உரையில் சோழர்களின் பெருமை பற்றி  அற்புதமாகச் சொல்வார். சோழன் கடாரம் கொண்டவன். அந்த கடாரம் மலேசியாவின் கெடா மாநிலப்பகுதி. மலேசியாவில் சயாம் பர்மா  இரயில் பாதை போடும் பணியில் நாற்பதுகளில் 2 லட்சம் தமிழர்கள் பலியாக்கப்பட்டார்கள். அதை பற்றி சொல்லும் நூல் சயாம் பர்மா இரயில் பாதை. அதேபோல் கொங்கு நாட்டில் இரயில் பாதைகள் பற்றின போராட்டம் ஒன்றை வை.கோ. கடந்த 5 ஆண்டுகளாய்                         
                                                                      2

நடத்தியிருக்கிறார். எத்தனைப் போராட்டங்கள். எத்தனை கூட்டங்கள்.பொள்ளாச்சி கேரளா கோட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது. உடுமலை சேலம் கோட்டத்துடன் இருப்பது காரணமாய் வஞ்சிக்கப்பட்டிருப்பது போராட்டத்தின் மையம்.இன்னும் உடுமலை பழனி ரயில் பாதை பயன்பாட்டிற்கு வரவைல்லை.எத்தனை பேரணிகள். இவற்றை உடுமலை ரவி ஒரு நூலாக ஆவணப்படுத்தியிருக்கிறார். இவை இரண்டு சமீபத்தில் என்னை பாதித்தவை. உடுமலை திண்டுக்கல் இரயில் பாதை பிடுங்கியெறியப்பட்டு புது பாதை முழுமையடையவில்லை.சாதாரண மக்களுக்கான குறைந்த கட்டண ரயில் பயணம், பாதுகாப்பான பயணம் பற்றியவை அடிப்படிடை உரிமை சார்ந்தது அவரின் போராட்டம்.இது போல் தொடர்ந்து அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுபவர் வை.கோ.இது போல் அணுசக்கிக்கெதிர், நதி நீர் பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு  என்று அடிப்படை உரிமைகளுக்காகத்  தொடர்ந்து போராடுகிறார்.
அவரின் தூத்துக்குடி ஸ்டெரிலைட் சுற்றுச்சூழல் போராட்டம் எனக்கு கார்ஸனின் “ மவுன வசந்தம் “ நூலை ஞாபகப்ப்டுத்துகிறது. கார்ஸனின் அந்த நூல் 1962 ல் வெளிவந்தது.நாற்பதுகளில் உலகின் பல பாகங்களில் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக  இருந்த மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க கண்டுபிடிக்கப்பட்ட டி.டி.டி. மருந்துக் கொல்லி சிறு நுண்ணுயிர்கள், வண்ணத்துப்பூச்சிகள்,மீன்களை கொல்லும் இயல்புடையது. அமெரிக்காவின் தேசிய சின்னத்தில் இடம்பெற்ற கழுகையும் கொன்றது. மனிதனுக்கும் ஆபத்தானது. இதை கார்ஸன் தந்து நூலில் விவரித்திருந்தார். அதன் பின் எழுத்தாளர்கள், சுற்றுசுழலாளர்கள்  இணைந்து பல் போராட்டங்களை நடத்தினர். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி அதைப்பற்றி ஆராய ஒரு கமிசனை நியமித்தார். அது மனிதர்கள் மீதான ஆபத்தை ஒத்துக் கொண்டு  டி.டி.டி பயன்பாட்டை மெல்ல குறைத்துக் கொண்டு பின் முற்றிலும் தடை செய்யப்பட்ட்து. 1964ல் கார்சன் மரணமடைந்தார். 2001ல் கார்சனின் சுற்றுச்சூழல் பணிக்காக அமெரிக்காவின் உயரிய விருது தரப்பட்டது.அதேபோல் வை.கோ.வின் சுற்றுச்சூழல் போராட்டங்களும், சுத்தமான தண்ணீர், நதி நீர் பாதுகாப்பு  குறித்த போராட்டங்களும் பெரிய அங்கீகாரத்தைப் பெறும் .
     தாகூரின் 150 வது பிறந்த தின கொண்டாட்ட ஆண்டு இது .தாகூரின்  “ எங்கே பயமில்லாமல் இருக்கிறதோ..என்ற கவிதையின் அடையாளமாய் வை.கோ.                                                                               பாராளுமன்றத்தில் பேசிய பல பேச்சுகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா இந்து நாடென்றால் சிதையுறட்டும், இந்திராவின் பேச்சுசுகளை இந்த நூற்றாண்டின் மகத்தான பொய்கள், இந்தியாவின்  மைலாய் இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறை, கல்வி காவி மயமாக்க் கூடாது, இந்தியாவின் மனிதாபிமானம் அரைக் கொடி கம்பத்தில் பறக்கிறது, இலங்கையில்  இந்திய ராணுவத்தின் அத்து மீறல்கள் என்று பயமில்லாத மனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
  இது போன்ற புத்தகங்கள் பல தலைமுறைகளுக்கு பேசப்படும் இயல்பு கொண்டதாகும். நுணுக்கமான நம்பகமான தகவல்கள், பாராளுமன்றத்தில் வை.கோ எழுப்பும் தார்மீகக் கேள்விகள், அறம் சார்ந்த, மனித உரிமை சார்ந்த நியாயங்கள் ஆகியவை நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.சொல்லும் பாணியில் இருக்கிற இலக்கியத் தரம் கவனிக்கத் தக்கது. உரையின் ஊடாக ஸ்பார்டகஸ், கசபிளாங்கா, உலக இலக்கிய பாத்திரங்கள், இந்திய புராண கதைகளின் உவமைகள் அடுத்த நிலைக்கு புத்தகத்தை, நல்ல வாசிப்பிற்குக் கொண்டு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கும் கையேடாக்குகிறது.
  இதில் ஓரிடத்தில் எழுத்தாளர் குஷ்வந்த்சிங்   சிறுபான்மை சீக்கியர் மீதான வன்முறைக்கு எதிரான வை.கோ.வின் குரலை பாராட்டி தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார். குல்தீப்நய்யார் 20 ஆண்டுகளுக்குப் பின் சென்ற மாத ஆனந்தவிகடன் பேட்டியில்  தமிழர்களின் நம்பிக்கைக்கான ஒரே அரசியல் தலைவர்  வை. கோ.என்பதை உறுதிப்படுத்தியிருப்பது அவரின் தொடர்ந்த செயல்பாட்டை கவுரவத்துள்ளாக்குகிறது.
     அவரின் பேச்சுசுகள் காற்றில் கலந்த பேரோசையாக இருந்தது  இன்று புத்தகப் பதிவு பெற்றுள்ளது. ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் அந்த மொழிக்குள்ளேயே ஜீவிப்பதில்லை. எந்த மொழியையும் கடந்து செல்லும் இந்த நூலும் குறைந்த பட்சம் இந்திய மொழிகளில்  இளம் தலை முறை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையேடாக மையும். அவை எழுப்பும் மனித உரிமை சார்ந்த  கேள்விகள் இந்திய தேசியம்  என்பது மாயை என்பதை நிலைநிறுத்தும்.
     பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவரின் குரல் திட்டமிட்டு பாராளுமன்றத்தில் ஒலிக்காமல் முடக்கப்பட்டிருக்கிறது ஆனால் இந்தப் புத்தக வீச்சு இன்னும் பல மடங்கு வீரியமாய் ஒலிக்கும்.அவரின் பேச்சின் வலிமை பாராளுமன்றத் தூண்களையும் அசைய வைப்பது போல் ஒவ்வொரு கலாச்சார தூணையும்
    
                                                                             4                                                                                        
     அதிரவைக்கும் இயல்பு கொண்டது. என் பேச்சின் வலிமை தமிழர்களுக்கு , தமிழ்நாட்டிற்கு, தமிழ்  மொழிக்குப் பயன் படட்டும் என்கிறவர் அவர்.
அவரின் நீண்ட பயணங்களில்  இனியும்   இது ஒலிக்கட்டும்.
  திருப்பூரில் இவ்வாண்டு தீபாவளியின் போது 2 தினங்களில்  5 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது,தமிழ் சமூகமே மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது.இதிலிருந்து மீட்டெடுப்பது அவசியம். இதுவரை தமிழ் மக்கள்
49, 05,000 பேர் உலக சரித்திரத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள். ஈழப்போராட்டம், சயாம் பர்மா ரயில் பாதை போடும் பணி, சுனாமி, வெள்ளம், காலனிஆதிக்க கொடுமைகள், காணாமல் போனவர்கள் என்று... மதுவால் தமிழன் தற்கொலைக்குள் மூழ்கி காணாமல் போய்க்கொண்டிருக்கிறான். அதிலிருந்து தமிழனை மீட்க டிசம்பர் மாதத்திலான வை.கோ.வின் நீண்டபயணம் ஆயிரம் புதிய பூக்க்களை மலரச்செய்கிறதாக இருக்கும்.. ஒற்றை கலாச்சார பண்பாட்டை, உணவு முறையை, வாழ்க்கை முறையை முன்வைக்கும் உலக ஏகாதிபத்தியமும், கார்ப்பரேட்டுகளும் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்குஎதிரான போக்கை தொடர்ந்து வை. கோ. தன் படையுடன் எதிர் கொள்ளும் ஒரு குரூர சூழல் இன்றைக்கு உருவாக்கப்படிருக்கிறது. அதை வை.கோ தன் பலத்தால் எதிர்கொள்வார். தமிழ் இன மீட்சிக்காக அவர் தொடர்ந்து போராடும் அடையாளமே அவரின் பூரண மது விலக்கு போராட்ட நெடும் பயணம் என எண்ணுகிறேன்

. ( பாராளுமன்றத்தில் வை.கோ.  தொகுப்பு: செந்திலதிபன், விலை ரூ 450, தாயகம், சென்ன்னி )

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602.      /  9486101003.
--------------------------------------------------------------------------------- செவ்வாய், 11 டிசம்பர், 2012

சூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்


சூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்
----------------------------------------------------------------------

 சக்தி அருளானந்தம்


            திருப்பூர் என்றதும் என் நினைவிற்கு முதலில் வருவது சுப்ரபாரதிமணியன். திருப்பூர் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரையும் அங்கிருக்கும் படைப்பாளிகளாலேயே நினைவு கூர்கிறேன். இரண்டாவது அவருடைய விரிவான படைப்புலகம். பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழுநாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், நாடகம், பயண அனுபவம், திரைப்படக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என முப்பது நூல்கள்.. பரந்து விரிந்திருக்கிறது அவருடைய படைப்புலகம். மூன்றாவது, படைப்பாளி 'தூய இலக்கியவாதி'யாக அரசியல் சார்பு, வேறு துறை ஈடுபாடு, களப்பணி போன்றவைகள் மீதான ஒவ்வாமை இல்லாமல் சுற்றுப்புறச்சூழல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, தாய்வழிக்கல்வி போன்ற களப்பணி செயல்பாடுகள். நான்காவது அவருடைய சகாக்களான பலர் ஓய்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து இயங்காது ஐந்தாவது.. மூத்த எழுத்தாளர் ஒருவர்.. சிறந்த படைப்பாளியும் கூட அவருடைய நேர்காணல் ஒன்றில், இன்றைக்கு வரும் எழுத்துக்களை நான் படிப்பதேயில்லை. ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை" படிக்காமலேயே அபிப்ராயம் உதிர்க்கையில் சுப்ரபாரதிமணியன் இளைய படைப்பாளிகளின் எழுத்துக்களில் காட்டும் கவனம், அக்கறை.
            'விமோசனம்' சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. பதினாறு சிறுகதைகள்... அவருடைய பதினைந்து தொகுதிகிள்ல 250 கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. திருப்பூர் கலை இலக்கியப் பேரவையைச் சார்ந்த திரு. வி.டி. சுப்ரமணியன் தொகுத்திருக்கிறார். காவ்யா வெளியிட்டிருக்கிறது.
      "சமூக யதார்த்தம் தன் மனித ஆளுமையுடன் சேர்ந்து கலையாக உருவெடுக்கிறது. கலை வெற்றிடத்திலிருந்து பிறக்க முடியாது என்கிற காரணத்தினாலேயே, எந்த சமூகத்திலிருந்து பிறக்கிறதோ அந்த சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக அது இருக்கிறது. எனும் இந்திரனின் கூற்றை உறுதி செய்வது போல இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்திருக்கின்றன.
            பிழைப்பு தேடிப்போகுமிடத்தில் அந்தச் சூழலுடன் பொருந்திப் போகவிடாமல் செய்கிற சிக்கல்கள் அதனால் எதிர் கொள்ள நேர்கிற வன்முறைகள் சொந்த நாட்டிலேயே அகதியாக மாறிப்போன துயரைப் பேசுகிறது 'எதிர்பதியம்' "உயிரைக் கையில் பிடிச்சிட்டு ஒடுறவனுக்கு இது ஒன்றும் பெரிய தூரமல்ல' வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று முழக்கமாய் கோஷமாய் நின்று விட்டதைச் சொல்கிறது. "நா மட்டுமா அகதி முனியப்பனும் அகதி தா" என முடியும் இறுதிவரை பலவகைப்பட்ட கலாச்சாரங்களை, பண்பாடுகளை அழித்து ஒற்றைத் தன்மையை கட்டமைக்க முயல்கையில் கடவுளர்களும் அகதிகளாகி விடுவதை எதிரொலிக்கிறது.
            பாதுகாப்பு தருவதாக சொல்லப்படும் குடும்ப அமைப்பிற்கு பெண் தரும் விலையை 'நாதம்' சிறுகதையில் பார்க்கலாம். பெண்ணின் இயல்பான சின்னஞ்சிறு ஆசைகளுக்குக் கூட அதில் இடமில்லாமல் போய் விடுகிறது. மழையில் நனைவது, ஆலங்கட்டிகளைப் பொறுக்கித்தின்பமும் அவளுக்குப் பிடித்தமானதாயிருக்கலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளும் கணவனும் எனும்போது மழையை ஜன்னல் வழியாக பார்த்து சந்தோசப்படுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். காய்ச்சலில் அவள் அவதிப்படுவதைவிட அதனால் தடைபடும் குடும்பப் பொறுப்புகள், கடமைகள் முன்னுரிமை பெறுகின்றன.
            இந்தக் கதையில் இன்னொரு கோணமும் கூட இருக்கிறது. குடும்ப அமைப்பில் பெண் வேலைக்குப் போவதென்பது பொருளாதார பலத்திற்காகத்தான். அது முதன்மை வருமானமல்ல, கூடுதல் வருமானம் பொருளாதார அவசியமில்லையென்றால் பெண் வேலைக்குச் செல்ல வேண்டாம். குடும்பம், குழந்தைகளை பராமரிப்பது போதும். வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்வது பெண்ணுக்கு கூடுதல் சுமை. வேலைக்குப் போவது பெண் விடுதலையின் ஓர் அம்சமல்ல. அது ஆணுக்குத்தான் லாபம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இருந்தாலுமே கூட குடும்பத்தில் பெண் தன் சுயத்தைக் கரைத்துக் கொள்கிறாள். வேலையென்பது அவளுக்கு சுய கௌரவத்தை, தன்னம்பிக்கையை, அடையாளத்தை மீட்டுத் தருகிறது.
            காசநோய் வந்தது போல் உருக்கின உடம்புடன் குடும்பக் கஷ்டங்களை இரவு வேளைகளில் கணவனிடம் அழுது புலம்புபவளிடம் வேலைக்குச் சென்றபின் ஏற்படும் மாற்றம்...
            "அப்படி சாந்தியை பிரகாசத்துடன் பார்த்து எத்தனை வருஷங்கள் இருக்கும் என நினைத்துப் பார்த்தான். கல்யாணத்திற்கு முன்பானக் காலத்தில்தான் இந்தப் பிரகாசத்துடன் இருந்திருப்பாள் என நினைப்பு வந்தது"
            அவளின் நாளொன்றின் பத்து மணி நேரத்தை முந்நூற்று ஐம்பது ரூபாய்க்காக உறிஞ்சும் வேலையில் கொஞ்சமே கிடைக்கும் அந்தத்துளி மகிழ்ச்சியைக் கூட ஆண் மனம் பொறுத்துக் கொள்ளாததை, அவளின் சின்ன சந்தோசமான வானொலியில் கர்நாடக சங்கீதத்தை இரவு நேரங்களில் கேட்பதும் வானொலியை நிறுத்த மறந்து தூங்கிப் போகும் சமயம் கணவன் கொள்ளும் எரிச்சல், நிறுத்த மறந்ததை சுட்டிக்காட்டி அவளுக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது, வேலைக்குச் சென்ற பிறகு அவள் முகத்தில் தெரியும் பிரகாசம் அவனிடம் ஏற்படுத்தும் பொறாமையென ஆண் மனதை கதைப்போக்கில் சிறுகச் சிறுக நுட்பமாக வெளிப்படுத்துவது போலவே பெண் மனதையும் வெளிப்படுத்துகிறது.
            தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பெண் உணர்வு சார்ந்த இன்னொரு கதை 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும் தலைப்பே சிறப்பாக அமைந்து விட்டது. பெண் என்பவள் மகள் மட்டுமல்ல மனைவி மட்டுமல்ல தாய் மட்டுமல்ல தனித்த உயிர் அவளுக்கென்று தனியாக ஒரு மனம் இருக்கிறதென்பதையும் அவளுக்கென்று சுய விருப்பு வெறுப்பு இருப்பதையும் 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும்' என்கிற தலைப்பே சொல்லி விடுகிறது.
            கதை தொடக்கத்திலிருந்து கடைசி சில பாராக்கள் நீங்கலாக சிறுவனின் பார்வையில் கறியெடுப்பது சமைப்பது அதன் மீதானஅவன் ஈர்ப்பு அதை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகள் என வரும் விவரிப்புகள் வெகு ரசமானவை. கறியெடுப்பது என்பதன் பின்னணியிலிருக்கும் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரச்சூழல், மதம் சார்ந்த நம்பிக்கைகள், கிராமத்து பண்பாடு, கலாச்சாரம்... கிராமத்துக் கதையென்றால் சுப்ரபாரதிமணியனின் பேனாவுக்குத் தனி உற்சாகம் வந்து விடுகிறது. அந்த உற்சாகத்திலும் கிராமத்தின் சாதிய முகத்தைக் காட்டத் தவறவில்லை "வள்ளுவன் வேத வாக்கு சொல்கிறவன் என்றாலும் கீழ் ஜாதிதானே" (வாக்கு) சாதி என்று வந்துவிட்டால் நகரமும் விதி விலக்கு கிடையாது. கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். "சாந்தி வேலை தேடி வந்தபோது அவளிடம் ஜாதியைப் பற்றி விசாரித்தார்களாம். கூட்டிப் பெருக்கத்தானே" (நாதம்)
            இங்கு திருமணம் என்பதில் மாப்பிள்ளை பெண்ணின் விருப்பம் என்பது கடைசி பட்சமாகி விடுகிறது. அதிலும் பெண்ணின் விருப்பம் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. ஜாதி, ஜாதகம், வேலை, அந்தஸ்து, பணம் என்று எத்தனை. இதில் வெளிப்பட வாய்ப்பே இல்லாமல் போன பெண் மனம் தன்னை திடுமென்று வெளிப்படுத்துகையில்... பாரதத்தில் கூட பாஞ்சாலி கர்ணன் மீது தனக்கு ஆசையிருந்ததைச் சொல்லுவாள். அப்படியொரு திருப்பம் இந்தக் கதையின் இறுதியில். இந்தக் கதையை உயரத்திற்கு கொண்டு போய் விடுகிறது.
            இத்தகைய திருமணங்களில் இப்போது உடைவு ஏற்பட்டிருப்பதை வாழ்வின் இறுதியில் இருக்கும் முதியவரின் கசந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. "பனியன் பேக்டரிக்குப் போகும் பையன்களைக் கேட்க வேண்டாம். லேபிள் வைக்க அயர்ன் செய்ய கட்டிங்குக்கு என்று பனியன் கம்பெனிகளில் சரிசமமாய்ப் பெண்கள் வேறு உலவுகிறார்கள். சுலபமாய், ஜாதி என்பது பற்றி இல்லாமல் தொழில் ரீதியாக உறவுகளைத் தீர்மானித்துக் கொள்கிறார்கள்" (இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்)
      சுற்றுப்புறச் சூழல் சீர்குலைவை ஈரம் கதை பேசுகிறது. வணிக நகரமாக திருப்பூர் மாறியதில் அது இழந்தவற்றை சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். டாலர் கனவுகளில் மிதப்பவர்களை தொந்தரவு செய்யும் இது போன்ற குரல்களை கேளாச் செவியினராய் பாவனை செய்தவர்கள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பதற்கு சில சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பின்பு திருப்பூரில் தகர்க்கப்பட்ட சாயப்பட்டறைகள் சேலம், நாமக்கல் புறநகர்ப் பகுதிகளுக்கு இடப் பெயர்பு கொள்வதை நாளிதழ்கள் வெளிச்சமிடுகின்றன.
      சூழலியலாளர்களை மனித குல முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுபவர்களாக பார்ப்பவர்கள் விஞ்ஞானிகள் தங்களால் கைவிடப்பட்ட ஜப்பான் மக்களை காற்றில் கதிர் வீச்சு கலந்து விட்டது சுவாசிக்க வேண்டாம். தண்ணீரில் கலந்து விட்டது குடிக்க வேண்டாம் என்று சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் தான் மறதிக்காரர்களாயிற்றே. வாழ்வைவிட பிழைப்பு முக்கியமாகி விட்டதே "வெடிக்க விரும்பும் வெடி குண்டைப்போல் தகதகத்து நிற்கும் அணை நீரின் ரசாயணக் கழிவுகளில் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். ரசாயணப் பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம்." பட்டீஸ்வரன் முரசன் மட்டுமல்ல முனிஸ்வரனும் கூட.
            பிழைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பிழையான வாழ்வில் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களைப் படிக்க வைப்பது என்பதெல்லாம் பிராய்லர் கோழி வளர்ப்பதுபோல அவர்கள் மூலம் திரும்பக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குப் பண்ணி காய் நகர்த்துவதில் குழந்தைகள் படும் அவஸ்தையை 'மகா வாக்கியம்' எதிரொலிக்கிறது. இந்த அழுகிய மனங்களின் விளைச்சல் அழுகலாய்த்தானே இருக்கும். தமிழ் மரபில் வழிப்பறி பாலைத் திணைக்குரியதாய் இருந்தது. இன்று குழந்தைக் கடத்தல், வழிப்பறி போன்றவைகளில் ஈடுபடுபவர்கள் படித்த இளைஞர்களாயிருக்கிறார்கள்.
            கோட்பாடுகளை உடும்புப் பிடியாக பிடித்துக் கொள்ளாமல் வாழ்க்கையிலிருந்து படைப்புகளைத் தந்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். பதினாறு கதைகளில் ஒன்றான 'விமோசனம்' தொகுப்பின் எல்லாக் கதைகளுக்கும் பொருந்திப் போகிறது. தேசியம், சர்வதேசியம் பேசிக் கொண்டு சொந்த மக்களை அகதிகளாக அலைய விடுவதும், வல்லரசு கனவு காணச் சொல்லும் நாட்டில் கழிப்பறை கூட இல்லாத கொடுமையையும், சிறைக்கூடமான பள்ளிக் கூடங்களையும், மாறிவிட்ட மதிப்பீடுகள் காரணமாய் உறவுகளுக்கிடையே ஊடாடும் நெருக்கடிகளையும் சொல்லும் இந்தக் கதைகள் இவற்றிலிருந்து விமோசனம் பிறக்காதா என்கிற விழைவை, ஏக்கத்தை, கவலையை வெளிப்படுத்துகின்றன விமர்சிக்கின்றன. கவனத்தைக் கோருகின்றன.

சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
விமோசனம்: ரூ. 90/- காவ்யா, சென்னை)