சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 20 ஜூலை, 2015

அஞ்சலி : சுப்ரபாரதிமணியன்
திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த பிணைப்பும் அன்பும் சொல்லி மாளாது.அவரின் மகன் வில்சனும், மருமகளும் கூட எழுத்தாளர்களே . ( வில்சன் 75 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டிய தினமணி சிறுகதைப்போட்டியில் வில்சனின் கதைக்கு இரண்டாம் பரிசு- சென்ற வாரச் செய்தி இது ) . அவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பை ” காவ்யா ” வெளியிட்டுள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு அஞ்சலி. நாவல் ஒன்றை எழுதுவதைக் கனவாகக் கொண்டிருந்தார். எம்.ஜீ. ஆர் , எம்மெஸ்சுப்புலட்சுமி நூற்றாண்டுகளை ஒட்டி இரு நூல்களை எழுதத் திட்டமிட்டு பணிபுரிந்து வந்தார். இறுதி வரை வாசிப்பும், எழுத்தும் என்று தோய்ந்து கிடந்தார். நோய் அவரை ஓய்வு கொள்ள வைத்து விட்டது.
. அவரின் சிறுகதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை கீழே உள்ளது. :
வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர் பரிசு பெற்ற ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை )
இவரின் 30 ஆண்டுகளுக்கு மேலான ஆசிரியப் பணியும்., தஞ்சை மக்களின் வாழ்க்கையும், கிராமியச் சூழலும் இவரின் படைப்புகளுக்கான களமாக இருக்கின்றன. இதைத்தாண்டி புள்ளமங்கலம் என்ற இவர் வாழும் கிராமத்துச் சூழலும் , பெரிய கடை என்ற பல்பொருள் அங்காடியும் அது சாதாரண மக்களை கொண்டு சேர்க்கிற அம்சங்களும் மிக முக்கியமானவை..
இக்கதைகளில் தஞ்சை மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழக்கைப் பதிவுகளைப் பிரதானமாகச் சொல்லலாம். அவர்களில் பெரும்பான்மியினர் விவசாயக்கூலிகள் சாதாரண விதியின் சதிக்குள்ளும், நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளுக்குள்ளும் அடங்கிப்போனவர்கள்.தேர் வடக்கயிறு பிடிக்க அருகதையற்ற வகையில் புறகணிக்கப்பட்டவர்கள். அறுவடைகால நியாயங்களில் முடங்கிப் போனவர்கள்.. வெகு சாதாரணமாக கைவிடப்பட்டவர்கள். ” இந்த வலி எல்லோருக்கு கிடைக்காது. பொம்மனாட்டிகளுக்கு மட்டுந்தா ” என்று பிரசவத்தையும், தாய்மைப் பேற்றையும் மனதில் கொண்டிருப்பவர்கள். கணவன்மார்களின் சிதரவதைகளைப் பொறுத்துக் கொள்பவர்கள். தேனீக்களோ, இயற்கை நியாயங்களோ அவர்களை கேள்வி கேட்கும் என்று திடமாய் நம்புகிறவர்கள். விவாகரத்து கோரினாலும் 60ம் கல்யாணக் கோலங்கள் பார்த்து திருந்தி விடுபவர்கள். உழைப்பை பிரதானமாகக் கொண்டு வாழக்கையை நடத்துபவர்கள். உறவுகள் சொந்தமாக்குகின்றன. சொந்தங்கள் உறவுகளாகின்றன இவர்களுக்கு,
மறுபுறம் கிராமத்தின் கால்நடைகளும், மிருகங்களூம் வெகு லகுவாக இந்தக் கதைகளில் பிரவேசித்து சக மனிதர்களுடன் நடமாடுகின்றன. கால்நடைகளின் மீதான பிரியம் வாழக்கைக்கு வேறொரு அர்த்தம் கொடுக்கிறது. உயிரற்ற பொருட்களும் தரும் புது உபயோக்ஙக்ளும், அணைப்பும் சக மனிதர்களின் பூரிப்பிற்கு இடம் தருகின்றன.இவர்களுக்கு சடங்குகள் பாரங்களாக அமைவதில்லைல் பாரத்தைக் குறைக்கிற அருமருந்துகளாக அமைகின்றன. மனித நேயம், சமய சங்குகளை ஒழித்த அன்பின் வெளிப்பாடு எங்கும் பரவிக்கிடக்கிறது.
பரிசுக்கதைகளின் பார்மலாவிற்கென்று கட்டமைக்கப்பட்ட பல்சமயமனிதர்களின் நோக்கும் மனிதாபிமானமும் எப்போதைக்கும் சகமனிதர்களின் சாதாரண உணர்வுகளை கவ்விப்பிடித்து விடுவதை இதில் உள்ள சிலகதைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஹேமாவின் அம்மா போன்ற கதைகளில் தலைப்பு முதல் பிறரின் புகழ் பெற்ற கதைகளின் பாதிப்பையும் காண முடிகிறது, கிராமியப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள் என்று கிராமியச் சூழலில் இணைந்த கதையாடல்கள் கதைகளை வேறு தளங்களுக்கு நகர்த்திச் செல்கின்றன. மூடு பல்லக்கில் உலவும் பல பெண்களின் முகங்களைக் காட்டுகிறார். அல்லது கிழித்தெறிகிறார். ஆழ்கடலென பல்வேறு சமய மனிதர்கள் சக பயணிகளாக மனிதாபம் கொள்ளச் செய்கிறவர்களாக் இருக்கிறார்கள். கதை சொல்வதில் சரளத்தன்மை இருக்கிறது. புழங்கும் மொழியில் தஞ்சையும், பிராமணியமும் மணக்கிறது. இன்னும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றியது. வெகுஜன இதழ்களின் பிரசுரிப்பும் முக்கிய காரணம்.
பெரியகடையும், புள்ளமங்கலமும் இன்னும் நிறைய செய்திகளையும், அனுபவங்களையும் சுரங்கங்களாகத் தர இருப்பதன் முதல் அடையாளமாக மூடுபல்லக்கில் முகம் விலக்கிப் போகும் பல தஞ்சை மனிதர்களுடன் இக்கதைகளில் பயணிக்கிறோம்.
சுப்ரபாரதிமணியனின் தறிநாடா நாவல்

பி. சத்திய மூர்த்தி.,
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம் – 624 302
முன்னுரை:
இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெருகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் “தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
பொன்னு:
தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.
பரமேஸ்வரன்:
மில் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்த போது நடந்த பொது துப்பாக்கி சூட்டில் இறந்து பட்டார். இவரின் இழப்பு ஊர் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவன் இறந்தவுடன் அவன் சொர்க்கத்துக்கு செல்கிறானா, இல்லை நரகத்துக்கு செல்கிறானா, என்பது இப்பூமியிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இவன் சொர்க்கத்திற்குதான் செல்கிறான் என்பது இவ்வூர் மக்களின் பேச்சு தீர்மானித்தது. இவர் இறந்த பின்பும் இப்பூவுலகில் வாழவேண்டும் என்பதற்காக அந்தத் தெருவிற்கு “தியாகி இல்லம்” என்று பெயர் வைத்தனர் பரமேஸ்வரன் என்றப் பெயரை மறந்து தியாகி என்றே அழைத்தனர். இவரின் வீட்டைக்கடந்து செல்கிறபோது ஊர்மக்கள் அடைகிற ஆனந்தம் அளப்பறியது.
காசி:
தனது சம்சாரம் இறந்து போனப் பின்பு காவிஉடையை அணிந்து கொண்டார். திருமணம் செய்துவிட்டு விக்ரமாதித்யன் போல ஊரில் ஆறுமாதமும், புண்ணியஸ்தலமான காசியில் ஆறுமாதமும் என்று தனது வாழ்வைக் கழித்து வந்தார். குட்சியஜல்இருந்து திரும்பும் போழுது காசி மாலை தீர்த்தம் சாமி உருவங்கள் என்று வாங்கிவந்து அதைத் தன்னுடைய உறவினர்கள், ஜாதிக்காரர்களுக்கு விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு மறுபடியும் காசிக்குச் செல்வார். இப்படித்தான் இவரின் வாழ்வு ஏகாந்தமாய் ஓடிக்கொண்டிருந்தது.
ரங்கச்சாமி:
ரங்கசாமி தறிநெய்யும் போது சீரான தளத்திற்கேற்ப கால்களை மாற்றிக் கொண்டு “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி” என்று முணுமுணுத்துக் கொள்வார். அதை ராகம் போட்டுப் பாடுவதை விட இப்படி முணுமுணுப்பதுதான் அவருக்குப் பிடிக்கும் இவருடைய உடம்பானது ஒல்லியாக இருக்கும் என்று பலர் கூறுவர். மிகவும் சிரம்மப்பட்டு தன்னுடைய மகனைப் படிக்க வைத்தார். இவருக்கு வடிகஞ்சியானது மிகவும் பிடிக்கும்.
நாகமணி:
அழுக்குப் புடவையுடன் இருக்கும் நாகமணி கல்யாணம் ஆகிஇருப்பது வருடமாகியும் ரங்கசாமியை (கணவன்) விட்டுப்பிரியாமல் கணவனுக்கும், பிள்ளைக்கும் “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்ற ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க தன் வாழ்வை அர்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தாள். இல்லறத்தை மட்டும் பேணிக்காத்த அவள்
“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சிச் சொல்லல் பாவம்”;
என்ற பாரதியின் கூற்றை மறந்து “பலசாதி பலவட்டற ஜாதி” என்று கீழ்ச்சாதி மக்களை இழிவாகப் பேசும் தன்மை கொண்டவளாக விளங்குகின்றாள்.
அருணாச்சலம்:
பதறிய காரியம் சதறிப்போகும் என்றப் பழமொழிக்கேற்ப அருணச்சலம் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கும் அவசரபுத்தி உள்ளவன். இவன் நெசவாளர்களைப் பற்றி கூடினா கோ~ம் போடறகோஹ்டி என்று சொல்லுவான். அவன் போராட்டத்திற்குச் செல்லும்போது தறிநாடாவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுவான் எதிரில் படும் முதலாளிகளைக் குத்தலாம் அப்படியாவது விடிவு காலம் பிறக்குமா என்று நினைத்தான் எங்களுடைய போராட்டத்திற்காக நான் தீக்குளிப்பேன் என்று காவல் துறையினர் இவனை எச்சரித்தனர். போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இவனுடைய உயிர் பிரிந்தது. மக்கள் இவனைப் பற்றி பல்வேறாக பேசினர். துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை யென்றால் தானே தீக்குளித்து இறந்து விடுவேன் என்று கூறியதாக மக்கள் கூறினர்.
தர்மன்:
தர்மன் வீடானது நெசவாளர்களுக்குப் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்தது. இவருடைய வீட்டில் எப்போதும் சீட்டாட்டம் நடந்துகொண்டே இருக்கும் தர்மன் முன்பெல்லாம் மாசம் மூணு பாவு நெய்சாச என்று கேட்பான். அதுஎன்ன மூணுபாவு முந்தியெல்லாம் மாசம் மூணு மழை பெஞ்சுதான்னு ராசா கேட்கிற கதைதா சரி அதென்ன மாசம் மூணு மழை “நீதிராசாவுக்கு ஒரு மழை, பெண்ணுக்கொரு மழை, நல்லவங்களுக்கு ஒரு மழைன்னு கணக்கு” மாசமூணு மழை என்றால் நீதிராசாவுக்கு ஒரு மழையும்
நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை
என ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க நல்லவர் பொருட்டு ஒருமழையும் பொய்யும் என தர்மன் கூறுகிறார். இப்பொழுது நீதிராசாவும் இல்லை நல்லவரும் இல்லை மழையும் பெய்வதில்லை என்றார்.
முடிவுரை:
இந்நாவலில் குறிப்பிடும் ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக அமைகின்றன. பொன்னு என்பவன் பகுத்தறிவு நிறைந்தவனாகக் காணப்படுகிறான். பரமேஸ்வரன் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்து தியாகி என்னும் பட்டத்தோடு இன்றும் திகழ்கிறான். ரங்கசாமிக்குப் பல்வேறு குடும்பச் சிக்கல் இருந்தாலும் தன்னுடைய மகனைப் படிக்க வைத்துச் சமுதாயத்தில் பெரிய மனிதனாக்கி பார்ப்பதே இவருடைய கனவாகும். நாகமணி சிறந்த குடுபத் தலைவியாக இருந்த போதிலும் மற்ற சாதியைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கம் அவளிடம் இருக்கிறது.
அருணாச்சலம் அவசர புத்தியுடையவன். ஏந்தவொரு செயலைச் செய்தாலும் அவனிடம் வேகம் மட்டுமே இருக்கும் விவேகம் இருக்காது. துர்மன் வீடானது பொழுதுபோக்கு அம்சமாக நெசவாளர்களுக்கு இருக்கிறது பல்வேறு தத்துவங்களை பேசக்கூடியவன். ( ரூ 180, என்சிபிஎச்., சென்னை வெளியீடு )

செவ்வாய், 14 ஜூலை, 2015

கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :
மொய் : சுப்ரபாரதிமணியன்  சிறுகதை
          - பூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை )

“ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின்  பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளும், சமூகத்துடனான அவனது உறவுகளும் அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்தரிக்கின்றது.இவற்றுள்  தனி மனிதனுக்குள்ளும் அவனது வாழ்க்கையும் வரலாற்றுச் சமூக சூழ்நிலையில் பண்பாட்டைக்காட்டுபவை  கதைகள் “ என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் வாசகங்கள் ( தமிழில் இலக்கிய  வரலாறு, என்சிபிஎச் வெளியீடு  )  சுப்ரபாரதிமணியனின்      “ மொய்என்ற சிறுகதையை இந்த வாரம் “ திண்ணையில்படித்த போது தோன்றியது.
  கொங்கு மக்களின் வாழ்க்கையை ஆர். சண்முகசுந்தரத்தைப் பின் பற்றி சிறப்பாக பதிவு செய்து வருகிறவர்களில் சி ஆர் ரவீந்திரன், மா.நடராசன்,,பழமன் போன்றோருடன் சுப்ரபாரதிமணியனும் இருக்கிறார். இக்கதை கொங்கு மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறுபங்கைச் சொல்கிறது. கோவை அருகிலான சோமனூர், செகடந்தாளி, எளச்சிபாளையம், செம்மாண்டாம்பாளையம், கருமத்தாம்பட்டி போன்ற ஊர்களும் அந்த ஊர்களின் கொங்கு மனிதர்களும் என்று நிறைத்திருக்கிறார்.
`       தபால்காரர் ஒருவருக்கு திருட்டுத்தனமாய் கடிதங்களை பிரித்துப் படிக்கும் பழக்கம். உமா என்ற ஆசிரியை பயிற்சி படித்த கிராமத்துப் பெண்ணின் - உமாவின் கடிதங்களை பின் தொடர்கிறார். பக்கத்து கிராமத்து குடிகாரனுக்கு திருமண ஏற்பாட்டில் இருக்கையில் ஆசிரியைப் பயிற்சி நண்பருடன் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாள். அவள் பேருந்தில் புறப்படுகையில் அவள் கையில் அய்நூறு ரூபாய் கொடுத்து “ மகராசியா இரு “ என்று ஆசீர்வாதம் செய்கிறார், இருபத்தைந்து வருடம் கழித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல்  வருகிறது.என்ன திருட்டுத் தபால்  ஏதாச்சும் கிடச்சுதா “ என்று கேட்கிறாள் மனைவி.உமாவின் மகன் அமெரிக்காவிலிருந்து  அனுப்பி இருக்கிறான். என் அம்மா  அந்தகிராமத்தை விட்டு கிளம்பும் போது  மோய் ஆசீர்வாதம் செய்த உஙக்ளைப் பற்றி அம்மா சொன்னார்.உங்களைப் பார்க்க வருவேன்என்கிறது மின்னஞ்சல்.
     கொங்கு கிராம வாழ்க்கையின் அடையாளமானப் பேச்சு வழக்கு,    கொங்கு மனித இயல்புகள் விரவிகிடக்கின்றன. மாறி வரும் தலைமுறை அடையாளங்கள், மனித இயல்பிம் தென்படும் மாறுதல்களை இக்கதை துல்லியமாகச் சித்தரித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனை இக்கதியில் அடையாளம் கண்டு  கொள்ளமுடிகிறது. ஒரு சிறுகதைக்குள் கொங்கு உலகத்தையே கொண்டு வந்து விடுவது பெரும் சிறப்பாகும்.
( கோவை இலக்கியச் சந்திப்பு 47 ம் நிகழ்வில் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைத் தொகுப்பு  நூலை கவிஞர் புவியரசு வெளியிட் பூ.அ.ரவீந்திரன் பெற்றுக்கொண்டு பேசியது - உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைகள் விலை ரூ 160 ; சாகித்ய அகாதமி வெளியீடு சென்னை ) . 

சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு நூல்
                            பேரூர்  ஜெயராமன்
     சுப்ரபாரதிமணியனை  அவரின் “ சாயத்திரை நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல்  பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது  வெளிப்படுத்துகிறது.இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் மூலம் சுற்றுசூழல் சார்ந்த உரையாடல்களை விரித்துக் கொண்டு போகலாம். தேன் போல் பயன் உள்ளவை இக்கட்டுரைகள். தேன் யாருக்குப் பிடிக்காது. ஆனால் மீத்தேன் யாருக்கும் பிடிக்காதுதான். மீத்தேன் எடுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் இடங்களை நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். அந்த என் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை இதில் உள்ள கட்டுரை.
2013ம் ஆண்டின் மிக முக்கியமான சுற்றுச் சூழல் சார்ந்த உலக அளவிலான பாதிப்புகளைப் பற்றி இந்நூல் பேசுகிறது.ஜார்கண்ட்டின் பெரும் வெள்ளம், இந்தோனிசியாவின் புயல்,  ஹயான்னாவின் சிரமம், கார்களால் சுற்றுசூழல் கேடு உட்பட பல தகவல்களைச் சொல்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய பலரை அறிமுகப்படுத்துகிறார். அதில் நம்மாழ்வாரும்  இருக்கிறார்கள்.இந்த கட்டுரைகளின் அறிமுகங்கள் மூலம் குப்பையை உற்பத்தி செய்பவனுக்கு அதை ஒழுங்குபடுத்த, சுத்தம் செய்யும் பொறுப்பு இருப்பது உணர்த்தப்படுகிறது. சிறு ஆறு அதன் உற்பத்தி இடத்தில் சின்னதாக அமைந்திருந்தாலும் அது போகப் போக அக்லமான, நீளமான ஆறாகப் பரிமாணம் அடையவும் அதிகப்யன்பாடு கொள்ளவும் நம் செயபாடும் இருக்கவேண்டும். சுற்ற்சுசூழல் பற்றித் தனியே பேச வேண்டியதில்லை. அது வாழ்க்கையோடு இணைந்தது.  அதைப் பேசுவதைத் தவிர்க்க இயலாது விஞ்ஞானம்  நம் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பதை இக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன.மிச்சமுள்ள மலை எவ்வளவு, .  மிச்சமுள்ள மரங்கள் எத்தனை என்று ஒவ்வொரு மரம் நடும் போதும், மலையைப் பாதுகாக்கப் பேசும் போதும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விகளை இக்கட்டுரைத் தொகுப்பும் வெளிப்படுத்துகிறது. சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து எழுதியும் இயங்கியும் வருவதை சாயத்திரை நாவல், குப்பை உலகம், நீர்ப்பாலை போன்ற கட்டுரைத் தொகுப்புகளின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. எழுத்துப் பதிவு சுற்றுசூழல் சார்ந்த செய்ல்பாடுகளில் முக்கிமானது என்பதை இவரின் எழுத்து மெய்ப்பிக்கிறது.

( மேக வெடிப்பு   ரூ 50 , எதிர் பதிப்பகம்., பொள்ளாச்சி :9865005084 )


சனி, 11 ஜூலை, 2015

சுயசரிதைத் துணுக்குகளும்,
சுயமரியாதைக் குறிப்புகளும்
முதல் தலைமுறை :
வெ.இறையன்புவின் சமீபக்கட்டுரைகள் – தொகுப்பு( 2014 )
சுப்ரபாரதிமணியன்

    நான் அதிகம் செலவிடும் தொகை புத்தகங்களுக்காகத்தான்.அவையே என் மூளையின் முதலீடுகளாக இருக்கின்றன.எளிமையான வாழ்வு, இயல்பான உணவு, அவா இல்லா பக்குவம் ஆகியவற்றால் பணக்காரனாக இல்லாவிட்டாலும் மனக்காரனாக வாழ்கிறேன்.பெரிய இல்லத்தை விட பரந்த உள்ளமே  உயர்ந்த செல்வம்என்பதை அறிவேன். அதிகப் பணம் இருப்பவனை விட  குறைவானத்  தேவைகள்  இருப்பவனே செல்வந்தன் என்பது என் கொள்கை “. இறையன்புவின் இந்த வாக்குமூலத்தைத் தாண்டி எதுவும் அவரின் படைப்புகளில்  இருக்காதுதான். ஆனால் இதை வலியுறுத்தும் ஒவ்வொரு சொல்லின் தீவிரமும் அவரின் எல்லாப் படைப்புகளிலும் தென்படுவதுண்டு.
            இத்தொகுப்பின் கட்டுரைகளை இப்படி பாகுபடுத்தலாம்.1. சுயசரிதை சார்ந்த அனுபவங்கள் 2. விழிப்புணர்வு தரும் வாழ்க்கையின் வெற்றி அம்சங்கள்         3.  படைப்பாக்க அனுபவங்கள் 4. சில மனிதர்கள் 5.. சில  உரைகள் 6. மாணவர்களின் படிப்பிற்காக சில டிப்ஸ். 7. வேளாண்மையும், கல்வியும்.

1. சுயசரிதை சார்ந்த அனுபவங்கள் :  வேளாண்மைக்கல்லூரி படிப்பு அனுபவங்களில் ஆசிரியர்கள், பாட முறைகள், நண்பர்கள் பற்றியக் குறிப்புகள் உள்ளன. ஒருகாலத்திய கோவை நகரத்தின்  முகத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் எந்த மாணவனுக்கும் நேரும் அனுபவங்கள் இவை.என்னதான் சுவையானதாக இருந்தாலும் உணவு விடுதி  விமர்சனங்களுக்குத் தப்புவதில்லை. கல்லூரி காலச் சுற்றுலாக்களில் இருக்கும் அலட்சியமும் ,கேளிக்கையும் சொல்லி மாளாது. வேற்று மாநிலங்களில் வேலை செய்யும் போது அந்த மக்களின் இயல்பான வாழ்க்கை சொல்லப்படுகிறது. அதிகாரிகள் என்றாலே அதிகாரம் மிக்கவர்கள். அதுவும் மொழி தரும் ஆதிக்கம் மனிதர்களைப் பிரித்து விடுவது பற்றிய வேதனையை நகைச்சுவையோடு சொல்கிறார். இந்தி மொழி ஆதிக்கம், இந்தி மொழி பேசுபவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இளமை என்னும் தென்றல் காற்று  வருடிச்செல்லும் பல அனுபவங்கள் இத்தொகுப்பில் உள்ளன.
 2. விழிப்புணர்வு தரும் வாழ்க்கையின் வெற்றி அம்சங்கள் ; அடுத்தவர் நலனுக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனையாக அமைந்து வெற்றிக்குப் படிக்கட்டுகளாகின்றன.ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன்  அணுகினாலே வாழக்கை வழிபாடுதான்  என்பதை சில சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். அவை சாதாரண சம்பவங்கள். ஆனால் சாதனைக்கு அளவிடும் வெகுளித்தனமான, நேர்மையான அனுபவங்கள்.

 3. படைப்பாக்க அனுபவங்கள் ; வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்கள்  படைப்புத்தளத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னைப்படைப்பாக்கு என்று தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உள்மனம் அவ்வகை சீண்டல்களால் நிறைந்திருக்கும். அந்தச் சீண்டல்கள் தொடர்ந்து இருந்து மன அழுத்தங்களாகி நீண்ட அளவுப் படைப்புகளையும்  தர வல்லவை. குறிப்பாக நாவல் எழுதும் அனுபவங்களைச் சொல்லலாம்... மசூரி பகுதியின் பயிற்சி பற்றி ஒரு நீண்ட கட்டுரை இருக்கிறது. பழங்குடியினரின் இடப்பெயர்வும், இடர்பாடுகளும் அவரை வெகுவாக பாதித்திருக்கின்றன.  ‘ பெரிய அணைகளின் பெயரால்  அந்த மண்ணில் வாழும் மைந்தர்கள் எந்த உத்தரவாதமுமின்றி  ஒரு நாள் தூக்கி எறியப்படுவது பற்றியும், கரை மேல் தலைக்குப்புற விழுந்த மீன்களைப் போல எந்த ஆரவாரமும் இல்லாமல் அவர்கள் பண்பாடும், இருந்ததும் கரைந்து போவது பற்றியும் ’’  அவரின் சிந்தனைகள் ஒரு நாவலாக பின்னர் பரிணமித்ததையும் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். 1988ல் நர்மதை சர்தார் அணைப்பகுதிக்குச்  சென்ற அனுபவங்கள்  1995ல் அதை ஒரு நாவலாக்கப்பயன்பட்டிருகின்றன. அவ்வாண்டின் சிறந்த நாவலாக ( “ ஆற்றங்கரையினிலே.. “ என்ற நாவல்) அது திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசையும் பெற்றது.


 4. சில மனிதர்கள் :  சந்திக்கிற நல்ல மனிதர்கள் பற்றி பிறருக்குச்  சொல்லாமல் விடுவதென்பது அவர்களை மற்றவர்கள் அறிமுகப்படுத்தாமலும் அவர்களின்  வாழ்க்கை அம்சங்களை முன்னெடுத்துச் செல்லாமலும் தடைப்படுத்தும் செயல்களாகும்.அந்த வகையில் மோத்தி ராஜகோபால் பற்றிய கட்டுரைக்குப் பின்,  வாசிப்பும் நேசிப்பும் கொண்ட ஒரு உயர்ந்த மனிதரை இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஒரு கட்டுரை உதவுகிறது. இது போல் பல்வேறு இடங்களில் பல்வேறு உயர்ந்த உள்ளங்களை முன்னம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  
 5.. சில  உரைகள் : இதிலுள்ள உரைகள் இளைஞர்களுக்கு வழி காட்டுபவை. குறுக்கு வழிகளைத் தவிர்த்து உண்மையானத் தேடுதலை மேற்கொள்ள வேண்டிய வழிகளைக் காட்டுபவை.  உரைகள் பெரும்பாலும் கை தட்டல், பொழுதுபோக்கு என்று மாறி காற்றில் கலந்து விடுபவை அந்த வகையில் அவை அமைந்து விடாமல் எண்ணப்பதிவுகளாக அமைய இது போன்றத் தொகுப்புகள் வழிகோலுகின்றன. அவை மாணவர்களோ, இளைஞர்களோ யாருக்கும் வழிகாட்டலாம். ஏன் இறையன்பு அவர்களுக்கே மசூரி பயிற்சிப்பள்ளியில்         ‘ கூந்தலின் கரைகளில் நரை ததும்ப, எந்த ஒப்பனையிலும் கற்பனையானத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யாமல் எளிமையாக கசங்கிய பருத்திப் புடவையுடன் தீர்க்கமும், கண்ணியமும் கொண்ட விழிகளுடன் ‘ பேசிய ஒரு பெண்ணின்  உரைதான் அவரை “ ஆற்றங்கரையினிலே.. “ என்ற நாவல் எழுத அஸ்திவாரமாக இருந்திருக்கிறது.  இதில் இடம் பெற்றிருக்கிற உரைகள் பல இளைஞர்களுக்கு அடைக்கப்பட்ட வழிகளைத் திறந்து வைத்து வழிகாட்டும்தன்மை கொண்டவை என்பது தெரிகிறது.அந்த வகையில் ஆனந்த விகடன்  வாசகர்களுக்கான  சில உரைகள்  இதில் தொகுக்கப்பட்டிருகின்றன. இன்னொரு புறம் பெரும் உரைகள்  கவனத்திற்குரியதாகின்றன.. சென்னை கமபன் விழாவின் “ கம்ப இராமயாணத்தில் போர்க்கலை “ என்ற தலைப்பில் அமைந்த உரைக்குத் தேவைப்பட்ட வாசிப்பும் , உழைப்பும்  மனதை அதிரவைக்கிறது. அதன் மூலம் நியாயத்திற்காக , உண்மைக்காக ஒவ்வொரு மனிதனையும் வீறு கொண்டு எழச்செய்யும் உண்மையான சக்தி  உருவாவது வெளிப்படுகிறது.வாசிப்பும் யோசிப்பும் மனதில் கொண்டு வரும் மாற்றங்களைச் சொல்கிறது.  கம்ப ராமயாணமூலமும், கிரேக்க , இந்திய இதிகாசங்களோடும் இந்த உரையில் அவர் பயணப்பட்டிருப்பதும்  இன்னொரு வித்தியாசமானக் கோணமாக அமைந்திருக்கிறது.உச்சி முதல் பாதம் வரை நம் உடம்ப்பிம் பாகங்களை நாம் பராமரிக்க வேண்டிய  அவசியம் பற்றியும் அவற்றின் நுணுக்கமான செயல்பாடுகள் மூலம் உடம்பே கோவில் என்ற நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் உரைகள் புதிதாகத் தோன்றுகிறது. உடம்பின் பாகங்கள் பற்றிய வெவ்வேறு இலக்கியக் குறிப்புகளும், சம்பவங்களும் தரப்பட்டுள்ளன.
6. விரல்களையே நாராக்குபவர்கள்  கைகளில் பூக்கள் விரைவில் மாலையாகின்றன. கரங்களே உளியாகிறவர்கள்  மத்தியில்  கற்கள் இளகிச் சிற்பமாகின்றன. பணியை நேசிப்பவர்கள் எவ்வளவு நேரம் உழைத்தாலும் களைப்படிந்து காலாவதியாவதில்லை. உழைப்பே ஓய்வு என நினைப்பவர்களுக்கு வேர்க்குறுகளே முத்தாரஙகள். ஒவ்வொரு பணியும் எதிர்பார்த்த மாதிரி கச்சிதமாக முடியும் போது ஏற்படும் மகிழ்ச்சியே  அடுத்த பணிக்கான  அடித்தளமாகி அதை கோபுரமாகக்  கும்பிட வைக்கும் “ என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.இதை மாணவர்களுக்கும், அவர்களின் படிப்பிற்குமாக வெவேறு தளங்களில் பொருத்திப் பார்க்கச் செய்கிறார். வெற்றிக்கானப் படிக்கட்டுகளாய் காட்டுகிறார்.
7. உதிரியான வகையிலமைந்துள்ள கட்டுரைகளில்  ஆசிரியர் சமூகம் பற்றியக் கட்டுரையும், வேளாண்மை பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானவை.           “ கிராமங்களோ முதுமக்கள் தாழிகளாகிவிட்டன. இன்று நாம் முற்றிலுமாக விஞ்ஞானத்தின் வள்ர்ச்சி , தொழில் நுட்ப மாற்றங்களை மறுதலித்து விட்டு  பழைய முறையில் விவசாயம் செய்ய முடியாது . ஆனால் அதே நேரத்தில்  நம் மண் சார்ந்த மரபுகளை  முழுவதுமாக வழித்து எறிந்து விட்டு மேற்கத்திய முறையிலேயே விவசாயம் செயவது சரியல்ல  “  என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.பாடத்திட்டத்தைத் தாண்டி  ஆசிரியர்கள் குழந்தைகளை அணுகுவது, பாடப்புத்தகங்களைத் கடந்து செல்வது, ஒவ்வொரு ஆசிரியரும் இறுதி வரை மாணவனாக இருப்பது போன்ற அம்சங்களை வலியுறுத்துகிறார். கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு அரசியல் நடவடிக்கை, ஆசிரியர் என்பவர் நடுநிலையாக  இருக்க முடியாது என்பதை யோசிக்கையில்   மாற்றுக்கல்வி சார்ந்த அம்சங்களை இவை கோடிவதும் தெரிகிறது.

அடையாள அரசியல் பற்றி அதிகமாய் பேசப்படும் சூழலில் சாதாரண மனிதனின் அடையாளச் சிக்கல் பற்றியும் இந்நூல் பேசுகிறது. அடையாளச் சிக்கல் என்று எதுவுமில்லை. அடையாளமே சிக்கல்தான். இயறகை  நம்மைப் போதிய அடையாளங்களோடுதான் படைத்திருக்கிறது. ஆனால் நாமோ அவற்றில் திருப்தியடையாமல் இன்னும் வேண்டும் என்று  அதிக அடையாளங்களை அப்பிக் கொள்ள ஆசைப்படுவதை பட்டியலிடுகிறார். சாதாரண மனிதர்களின் இயல்பில் அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு போகிற போது சிக்கல்ளைத் தீர்த்துக் கொள்ள   அடையாளங்களை வலிந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் வலியுறுத்துகிறார்.ஆனால் அரசியல் ரீதியான யோசிப்பிற்கு அவசியம் இல்லாமல் ஆரம்ப நிலையிலேயே அது நின்று விடுகிறது.

                இவற்றினூடே,  வெற்றிக்கு சமரசம் இல்லாத சுயமரியாதைத்தன்மை ஊடாட வேண்டிய  அம்சங்களை இந்நூல் நிறைத்துள்ளது.வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்ட இதில் தென்படும் பிரதி சார்ந்த,   சொற்பொழிவு  சார்ந்த நகைச்சுவை தேனீரின் இனிப்பாக இயைந்து அமைந்துள்ளது.மற்றத்தொகுப்புகளைப் போல குட்டிக்கதைகளின் ஆதிக்கம் அதிகம் இல்லாதது ஒரு ஆறுதல்.
                எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் கண்டு பிடிக்க வேண்டும் “ என்பதை முதல் தலைமுறையும் கண்டு கொள்ள இந்தப் பயணத்தை வாசகர்களுடன் இறையன்பு நிகழ்த்தியிருக்கிறார். வாசிப்பும், கற்றலும்  இலக்கு மட்டுமல்ல , இனிய பயணம் என்பதை இக்கட்டுரைகள்  மெய்ப்பிப்பதற்குக் காரணம் ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது ‘ என்பது போல இறையன்புவின் ஒவ்வொரு புத்தகமும் சொல்லும் முறையிலும், புதுத்தகவல்களாலும் நிரப்பப்பட்டதாய்   புதிதாக இருக்கிறது. என்பதுதான்.
( ரூ 110, 200 பக்கங்கள், விஜயா பதிப்பகம், கோவை வெளியீடு 0422- 2382614, 2385614 )
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,
திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.comவியாழன், 9 ஜூலை, 2015

ஒரு முன்னுரை : சுப்ரபாரதிமணியன்


மூன்று உலகங்கள்

அ.முத்துலிங்கம் பற்றிய  கட்டுரைகள் தொகுப்புஇலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில்   அ.முத்துலிங்கத்தின்   எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது  இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.

 பாக்கிஸ்தானில் முத்துலிங்கம்  இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் கனவு இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு   வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள்  என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.
இரண்டாண்டுகளுக்கு முன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட்து. எழுத்தாளர் ஒருவரின் மகள் கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்பச் சிக்கல்களில் தவித்து வந்த போது எழுத்தாள நண்பர் அவரின் மகள் பற்றி ஓயாமல் அழுது கொண்டிருந்தார். அப்பெண்ணுக்கு அது இரண்டாவது திருமணம்.இதுவும் இப்படியாகி விட்ட்தே என்ற அழுகை. தொடர்பு கொள்ள யாருமில்லை என்றார். முத்துலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அப்பெண் அணுகுவார் என்று தெரிவித்தபோது, தாராளமாய் அணுகலாம் என்று ஆறுதல் படுத்தினார் என்னிடம்.  ஆனால் அப்பெண் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்தியாவிற்கு உடனே திரும்பி விட்டார்.
 .  திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. சென்றாண்டு அ.முத்துலிங்கத்தின்  “ அமெரிக்கா உளவாளி “ நூல் பரிசு பெற்ற போது அவ்ருக்கு அச்செய்தியை மின்னஞ்சலில் பதிவு செய்திருந்தேன். பரிசை பெற்றுக் கொள்ளச் சொன்னார் . பெற்றபின் பரிசுத்தொகையை அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அப்பரிசுத்தொகையைக் கொண்டு “ கனவு”    அ,.முத்துலிங்கம் படைப்புகள் பற்றிய
ஒரு போட்டியை நட்த்தியது.  அதில் தேர்வு பெற்ற கட்டுரைகளுடன் சிலதைச் சேர்த்து ஒரு புத்தக வடிவமாக்க முயன்றபோது அனுமதியும் தந்தார். நண்பர்களின் சிபாரிசால் சில நல்ல கட்டுரைகள் கூடக் கிடைத்தன.அது இப்போது இந்த வடிவம் பெற்றுள்ளது.


 .அமெரிக்க உளவாளிநூலைப் பற்றி அப்போட்டியின் போது நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மாலன் இப்படிச் சொல்கிறார்:
நாள் காட்டியில் தேதி கிழிப்பது போன்ற உப்புச்சப்பற்ற ஒரு விஷயத்தைக் கூட (இந்த டிஜிட்டல் நாள்களில் நாள் காட்டிகள் ஏது?) இதழ்க் கடையில் புன்னகை நிரந்தரமாய் ஒதுங்கியிருக்க சுவாரஸ்யமாகச் சொல்வது .முத்துலிங்கத்தின் பாணி. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு மொழியின் மீது ஆளுமை, நுட்பமான பார்வை, வரலாற்று அறிவு, உலக அனுபவம், நகைச்சுவை உணர்வு என்ற பல ஆற்றல்கள் தேவை. முத்துலிங்கத்திடம் அவை ஏராளம். ஆங்கிலத்தில் ஓட்ஹவுஸ், மார்க்ட்வைன், ஆஸ்கார் ஒயில்ட், ஆர்ட் புக்வால்ட் என டஜன் கணக்கில் புன்னகைக்க வைக்கும் மன்னன்கள் இருக்கிறார்கள். தமிழில் முத்துலிங்கம் ஒருவர்தான்.
அவரது அமெரிக்க உளவாளி அதற்கோர் உதாரணம். என்னை நம்ப வேண்டாம், அந்தத் தலைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புன்னகைக்கச் செய்வது மட்டுமல்ல, மழை பெய்யத் துவங்கும் முன் கிளம்பும் மண் வாசனை கண்ணுக்குத் தெரியாமல் மனதை நிறைத்துவிடுவது போல, முத்துலிங்கத்தின் எந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு மூடி வைத்தாலும் மனசு கொஞ்ச நேரம் விண்ணென்று நெரி கட்டிக் கொண்டு விம்மும். கைலாசபதி பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நாள் முழுக்க அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். எப்பேர்பட்ட வாழ்க்கை! எப்பேர்பட்ட சாவு! அதை நினைவூட்டிக் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் எழுத்து!
ஒரு நல்ல புத்தகத்தைக் கெளரவிக்க திருப்பூர் தமிழ்ச் சங்கம் வாய்ப்புக் கொடுத்தது. நடுவர் நாற்காலியில் அமர நேர்ந்த எல்லா நேரங்களிலும் இப்படிப் பொருத்தமான புத்தகம் அகப்படுவதில்லை. இந்த முறை வாய்த்தது. அதற்கு நான்தான் சந்தோஷப்பட வேண்டும்.’ 
  அப்போட்டியின் இன்னொரு நடுவர் ப.க.பொன்னுசாமி அவர்கள் சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராய் இருந்தவர்.தமிழில் அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருப்பவர்.நாவரசு அறக்கட்டளைச் சார்பாக நிறையப் பணிகள் செய்து வருபவர். அவர் பரிசளிப்பு கருத்தரங்கில் முத்துலிங்கம் படைப்புகள்  பற்றி நிறைய சிலாகிப்புகளை முன் வைத்தார்.
   அவ்வகை சிலாகிப்புகள்தான் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. முத்துலிங்கம் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு சில நினைவூட்டலை, வியப்பை, நமுட்டுச் சிரிப்பை இத்தொகுப்பு  தரும். மனதுள்  ஆறுதல் அளிக்கும் நண்பர்களாய் அவரின் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் எழுத்தின் பேராற்றலை ஞாபகமூட்டும்.. வாழ்க்கையின் சில நல்ல தருணங்களை  இத்தொகுப்பு  உருவாக்கும்.

     கனவில் வெளிவந்த பல்வேறு படைப்புகளை தொகுக்கும் முயற்சியின் போதான மகிழ்ச்சியான  மன நிலையை இத்தொகுப்பும் தந்தது. அவ்வகை தொகுப்புகளாக உலக சினிமா கட்டுரைகள்,  நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் தொகுப்பு , கனவு   முதல் 20ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். கனவில் வெளிவந்த  அசோகமித்திரனின் சிறப்பிதழின் கட்டுரைகளோடு இன்னுன் சிலவற்றைச் சேர்த்து “ அசோகமித்திரன் 77 “ என்ற தொகுப்பை இரண்டாண்டுகளுக்குமுன் கொண்டு வந்தது எனக்கு    நிறைவு தந்த்து, அது போல் நிறைவு தந்த தொகுப்பு இது.
  இத்தொகுப்பின் இக்கட்டுரைகளை பயன்படுத்த அனுமதி தந்த எழுத்தாள நணபர்கள்,இக்கட்டுரைகளை தேடி சிபாரிசு செய்தவர்கள், அச்சாக்கத்தில் உதவிய தளவாய் சுந்தரம் ஆகியோர்களுக்கும் நன்றி.

                                -   சுப்ரபாரதிமணியன், திருப்பூர்