சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 3 ஜூலை, 2013

குப்பை வயிறு!


  முன்பெல்லாம் சாதாரணக் கடைகளில் கூட சரசரமாய் தொங்கும் ஷாம்பு, தேங்காய் எண்ணெய், குட்கா போன்றவற்றைக் காண முடியும்.
இப்போது இதில் உணவுப் பொருட்களும் அடக்கம் இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயிலிருந்து தின்பண்டங்கள் சிறு பொட்டலங்களாய் பெட்டிக் கடைகளில் கூட தொங்குகின்றன. சிறார்களின் உணவு ஆசை சட் சட்டென்று நிறைவேறிப் போகிறது. அவர்களின் வயிறும் சுலபமாக குப்பைக் கழிவாகிறது. குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வயிற்றை கழிவுகளின் இருப்பிடம் ஆக்கிக் கொள்கிறார்கள்.

    பெரியவர்கள் தெரிந்து கொண்டே இதைச் செய்கிறார்கள். அவசர உணவுத் தேவைக்கு இது போல் எதையாவது வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்கிறார்கள். அவற்றில் பிஸ்ஸா, பர்கர், ஹாட்டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் வகை உணவுகளும் அடங்கியிருக்கின்றன.

    அலுவலகம் போகும் ஆண்கள் கையில் சாப்பாட்டு பொட்டலம் கொண்டு போவதை தேவையில்லாததாக்கி இவற்றையே நாடுகின்றனர். வார இறுதிகளில் உணவு விடுதிகளை நாடுவது சாதாரணமாகி விட்டது. அல்லது விதவிதமான சாப்பாடு சாப்பிடுவதற்காக வெளியூர் போகிறார்கள் வெளிநாடு சுற்றுலா போகிற பலர் அந்தந்த நாட்டு உணவை ருசிக்கவும் அதிக பணத்தையும், நேரத்தையும் செலவழிக்கிறார்கள். உணவுத் திருவிழாக்கள் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகளில் அவை நடைபெற்று வந்தன. இப்போது தெருக்களிலும், சாதாரணத் திருமண மண்டபங்களிலும் அவை நடைபெறுகின்றன. அந்நிய வகை உணவுகள் சுலபமாக மேசைக்கு வந்து விடும் போது யாருக்கும் சாப்பிடுவதற்கு ஆசை ஏற்படத்தான் செய்யும். உணவு, கேளிக்கை இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது பலருக்கு.

    ஒற்றைக் கலாச்சாரத்தை முன் வைக்கிற நடவடிக்கைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. ஒரே ருசி, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்பது சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பதன் மரபாக இடம் பிடித்துக் கொண்டது போல தனி மனித வாழ்க்கைச் சிறுத்துப் போய் விட்டது.

    இவ்வகை துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவை தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்சத்து, ரசாயன கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்து விட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கும் உடல் உபாதை மீறி கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.

    பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவு பரிமாறலில் பல நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதை காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய்), ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம் ஆடு கோழி இறைச்சி, பத நீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால் நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.ஆகியவற்றில் கிடைத்த வெவ்வேறு பொருட்கள் மக்களுக்கு தினசரி உணவாகவும், இவற்றை பண்டமாற்றாக்கி வேறு உணவுகள் பெறவும் ஏதுவாகின.

    தொழிலுக்கு தகுந்தபடியும், வருமானம், பருவ காலத்திற்கு ஏற்பவும் உணவு முறைகளை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். வெக்கை காலத்தில் தண்ணீர் கஞ்சி, குளிர் காலத்தில் சுடு சோறு கம்பு, களி உணவுகள் என்றும் வழக்கத்திலிருந்தது. தங்களுக்கு கிடைக்கும் இளநீர் நுங்கு மாம்பழம், கொய்யா ஆகியவற்றை சுலபமாக எடுத்துக் கொண்டனர். சமைக்காத சத்துள்ள உணவுகள் தொடர்ந்து கிடைக்க வழி இருந்தது. உணவை சமைக்க ஆரம்பித்த பின் அவை வெகு சுவையாகவும், எளிதில் செரிக்கும் தன்மையும் கொண்டிருந்ததால் சமையல் கலை என்பது வளர்ந்தது. சமையல் கலை இன்று ஒரு வகைப் படிப்பாகவும் வளர்ந்து விட்டது. சிறு நகரங்களின் உணவு விடுதிகள், பள்ளி மாணவர் விடுதிகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவுக் கூடங்களில் கூட இவ்வகை படிப்பு படித்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமையல் கலை சார்ந்த படிப்புகளும், கல்வி நிறுவனங்களும் வளர்ந்து அத்துறையிலும் வேலையில்லாத பட்டதாரிகளை உருவாக்கி விட்டது. பரோட்டா, பிரியாணி, குஸ்கா, பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் என்று தமிழ்ப் பெயர்களற்று உணவுப் பண்டங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. தினசரி சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட மாற்று உணவுகளை தேடிப் போனான் தமிழன். ஆனால் இன்று நமது பாரம்பரிய உணவுகளை மாற்று உணவு என்று மீண்டும் தேடி வர வேண்டியுள்ளது. நம்மிடம் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் இருந்தன. இன்று நோய் கொண்டு வரும் உணவுப் பொருளைத் தேடுவதில் சுகம் கண்டு கொண்டான். பெண்கள் தங்களின் பணி நேரம் தவிர சமையலில் அதிக நேரம் செலுத்த இயலாமல் துரித வகை உணவு பழக்கங்களில் முடங்கிப் போய்விடுகிறவர்களாக இருக்கிறார்கள். நோய்களுக்கும் வகை வகையான மருந்துகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, சுடுக்காய், சித்தரத்தை, மதுரம், கிராம்பு, வெட்டி வேர் வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள் என்றும் மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று வெவ்வேறு கீரை வகைகளும் சாதாரண உணவில் சேர்க்கப்படும் பொழுது நோய்க்கு மருந்தாகும். இன்று மருந்தை தனியாக தேடி நிறைய செலவு செய்து உடம்பை மோசமான இயந்திரமாக்க வேண்டியிருக்கிறது.

    வயிற்றைக் குப்பையாக்கும் குப்பை தீனிப் பழக்கம் இன்றைய இயந்திர வாழ்க்கையின் நெருக்கடியால் தவிர்க்க இயலாமல் வந்து சேர்ந்து விட்டாலும் நுகர்வு கலாச்சார உணவுப் பண்பாய் ரத்தத்தில் கலந்து விட்டதை அறுவை சிகிச்சை மூலமே தவிர்க்க இயலும் நிலைக்கு வந்தாகி விட்டது.
(http://www.4tamilmedia.com/knowledge/essays/15205-2013-06-29-20-00-25)
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்பிரபாரதிமணியன்

மரணத் தாள்

மரணத் தாள்

சுப்ரபாரதிமணியன்

Share
 
                 அப்பாசாமியின்  கண்களுக்கு முன் கிழித்து எறியப்பட்ட விதமாய்  வெள்ளைத்தாள்கள் பறந்தன. வானத்திலிருந்து எறியப்பட்ட்து போலிருந்தது. இது என்ன ஆசீர்வாதமா.. குழந்தைகள் விளையாட்டு போல் தாளைக்கிழித்துக் கொண்டு வீசியெறிந்து கொண்டிருக்கிறார்களா என்றிருந்தது அப்பாசாமிக்கு. இப்போதைக்கு ஒரு வெள்ளைத்தாள் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் ஞாபகம் வந்த்து. மூடியிருந்த கண்களைத்திறந்து கொண்டார்.
 
அந்த வயதின் வனப்பு அவள் முகத்தில் தேங்கியிருந்தது. அணிந்திருந்தக் குட்டைப் பாவாடையும், மேலாடையில் அவளின் கனத்த மார்புகளும் எந்த ஒரு இளைஞனையும் அவளை தேவதை நிலைக்கு கொண்டு போய் நிறுத்தி விடும். அவளின் உடை வர்ணத்திலேயே பள்ளிஆடை அணிந்திருந்த பையன் அவளை நெருங்கினான். அவள் முகம் ஒருவகைப் பரவசத்துடன் மினுங்கியது. தேர்வுகால அடையாளமாய் மார்பில் சேர்ந்திருந்த அட்டை வெள்ளைத்தாள்களுடன் இருந்தது. அதை மார்போடு இன்னும் இறுக்கினாள்.
    “எனக்கு ஒரு பேப்பர் வேணும்.”
    “உங்கிட்ட இருக்குதே…”
    “உங்கிட்ட இருக்கறதிலை ஒண்ணு வேணும்.”
அவனும் தேர்வு அட்டையை சில வெள்ளைத்தாள்களுடன் வைத்திருந்தான்.
    ” உங்கிட்ட இருக்கறதில ஒண்ணு வேணும் “
அவள் அட்டைக் கிளிப்பிலிருந்து ஒரு வெள்ளைத்தாளை விடுவித்தாள். அந்த பையன் வெள்ளைத்தாளைப் பெற்றபின் தன் பரவசத்தை எப்படியாவது வெளிக்காட்டிவிட வேண்டும் என்று பரபரப்பவன் போல் இருந்தான். பத்தடி தள்ளினால் பேருந்து நிழல் குடை. ஏகமாய் அதை பலர் நிறைத்திருந்தார்கள். ஏகதேசம் எல்லாரின் பார்வையும் அவர்கள் மீது குவிந்தது. பரபரப்பு வாகனங்கள் திமிறிக் கொண்டு விரைந்தன.
    அப்பாசாமி தனக்கும் விண்ணப்பம் எழுத ஒரு வெள்ளைத்தாள் வேண்டும் என்று கேட்க நினைத்தார். மனுவில் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் இப்போதைக்கு கடவுள்..  கடவுள் முன் திருவளச் சீட்டு அந்தக் காகிதம்.
    “என் மகனெக் காப்பாத்துங்கய்யா…” மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்ததும் தென்படும் முதல் நபரைப்பார்த்ததும் கதறவேண்டும் என்று நினைத்திருந்தார் அப்பாசாமி. ஆனால் திகைப்பேற்படுத்தியது போன்று நின்றுவிட்டார். பேருந்து நிழல் குடை தாண்டி வந்தவர் ஒரு நிமிடம் நின்று பின் நடந்தார். தாறுமாறாய் ஜனங்கள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். வாகனங்களின் விரைசலும் முகத்தை அறைந்துவிட்டுப் போகிற மாதிரி இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் அங்கங்கு மரத்தடிகளில் நிற்பவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிற மாதிரி அப்பாசாமிக்குத் தோன்றியது.
    வாசல் முகப்பிலிருந்து உள்ளே சென்றவர் புர்ரென்ற சப்தத்துடன் விரைய ஆரம்பித்திருந்த கறுத்த நீல நிற வாகனம் பார்த்து விலகிக்  கொண்டார். காவல்காரர் ஒருவர் சல்யூட் அடித்து விரைப்பாக நின்றார். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அவரின் விறைப்பு இருந்தது. வாகனம் சீறிட்டு பறந்து சென்றது. கறுத்த தார் சாலைகள் வளாகத்தில் எங்கெங்கோ சென்று மறைந்தன.
    “என் மகனெக் காப்பாத்துங்ய்யா…” என்றக் கதறலை செகடந்தாளியிலிருந்து வரும்போது பேருந்தில் உட்கார்ந்தபடியே சொல்லிக் கொண்டு வந்திருந்தார். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. தோளில் இருந்தத் துண்டில் துடைத்துக் கொண்டார். எப்படித்துடைத்தாலும் கண்ணீர் நிற்கப் போவதில்லை என்பதுபோல் கன்னங்களில் உருண்டு கொண்டிருந்தது. சகபயணிகள் அவரின் அழுகையைக் கண்டிருக்கக் கூடும். யாரிடமாவது கதறலாமா. வேண்டாம் கதறுவதை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் தென்படும் முதல் நபரிடம் தான் நிகழ்த்த வேண்டும். அதுவும் மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் நிகழ்ந்தால்தான்  மாதங்களாக மனதில் இருக்கும் பாரம் இறங்கும். பாரத்தின் ஒரு பகுதியை இறக்கின ஆசுவாசத்தில் மனதில் இருப்பதைச் சொல்லிவிடலாம். தூக்கு தண்டனையை எதிர்பார்த்து இதேபோல் கண்ணீருடன் இருக்கும் திருச்செல்வத்தின் முகத்தைப் பார்ப்பதற்கு இனியொரு வாய்ப்பு ஏற்படுமா என்பதை உப கேள்வியாகக் கேட்கலாம். நிச்சயம் மாவட்ட ஆட்சியாளர் கண்ணில் தட்டுப்படுவார். இன்றைக்கு மக்களின் குறை தீர்க்கும் நாளாக இருக்குமா… இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாவட்ட ஆட்சியரிடமே எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விடலாம். வாரக்கணக்கில் யோசித்து கிராமத்தில் உட்கார்ந்தாயிற்று. சரி என்று கிளம்பி வந்திருந்தார். சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் புதுசாக இருந்தன.
    எதிரில் விரைசலாய் நடந்து வந்து கொண்டிருந்தவரின் முகத்தில் விசனம் தென்பட்டது. அவரின் கறுத்த முகம் இருட்டாகியிருந்தது. அவரின் ஒழுங்கமைப்பான உடையும், நடையின் கம்பீரமும் ஏதோ நம்பிக்கை தருவதாக இருந்தது. அவர் நெருங்க நெருங்க உடலின் படபடப்பை உணர்ந்தவரானார் அப்பாசாமி. கட்டியிருந்த வேட்டியை தளர்த்தி மேல் முட்டியைக் கடந்து பாதத்தைத் தொடும்படி செய்தார். சட்டென தோளின் மீது கிடந்த கண்ணீரால் நனைந்து போயிருந்த துண்டை எடுத்துக் கொண்டார். ஒருவகை பவ்யத்துடன் உடம்பு வளைந்தது.  நோஞ்சானான எலும்பு வளைவது சுலபம்
அவர் நெருங்கியிருந்தார்.
    “கலெக்டர் அய்யா இருக்காங்களாய்யா…”
அப்பாசாமி தாழ்ந்த குரலில் தெளிவாய் கேட்டார். சரியாகச் சொல்லிவிட்டத் திருப்தியில் அப்பாசாமியின் முகம் மிளிர்ந்தது. தன்னைச் சுதாகரித்து அவரிடம் பேசுவதற்கு வெகுவாக ஆயத்தம் செய்து கொண்டது போலிருந்தது. “என்ன…” நடந்து கொண்டிருந்தவர்  கேட்டார். “கலெக்டர் அய்யா உள்ள இருக்காங்களாய்யா”
“ உனக்காகத்தா உள்ளக் காத்திட்டிருக்கார். போய் பாரு…”  அவர் சொல்லி முடிக்கிறபோது கறுப்பு முகம் அவரைத் தாண்டிப் போய்விட்டது. தனது முகமும் கறுத்துப் போயிருக்கும் என நினைத்துக் கொண்டார் அப்பாசாமி.
    ஒரு நிமிடம் நிமிர்ந்து நின்றார். அவர் சொன்னது போல ஆட்சியர் அவருக்காகக் காத்துக் கொண்டிருப்பாரா. பொது மக்களின் குறைகளைக் கேட்பதற்கென்றுதான் இருக்கிறார். ஆனால் குறைகளை மட்டுமே கேட்பதற்கென்றுதான் அவர் இருக்கிறாரா. அவருக்கென்று ஆயிரம் சோலிகள் இருக்கும். ஆயிரத்தொன்பதாவது சோலியாக தான் போய் நிற்க வேண்டியிருக்கும். எந்த அரசு அதிகாரியை அணுக முடிந்திருக்கிறது. விளக்கமாய் ஏதாவது கேள்வியைக் கேட்க முடிந்திருக்கிறது? எம்.எல்.ஏ.விலிருந்து யார் வீட்டு முகப்பிலும் நின்று அவர்களின் முகங்களைத் தெளிவாய் பார்க்க முடிந்ததில்லை. தான் சொல்லும் வார்த்தை ஏதாவது மூன்றாவது நபர் மூலமாக எம்.எல்.ஏ.விடம் போய் சேர்ந்திருக்குமா. எல்லாம் காற்றில் வீசியெறியப்பட்ட வார்த்தைகளாகத்தான் போயிருக்கும். காற்றுக்கு கூட நியாயம் தர்மம் தெரியாதா. தெரிந்திருந்தால் தனது கதறலை கொண்டு போய் சேர்த்திருக்குமே. தனது கிழக்குரல் என்பதால் வலுவிழந்து கரைந்து விடுகிறதா என்ன.. குரலுடன் வேறு என்ன செய்ய வேண்டியிருக்கும். எது செய்தாலும் இவ்வளவுதானா. வேறு வழியில்லை. ஏதாவது சொல்லி கதறித்தான் சொல்ல வேண்டும். எப்படியாவது குரல் கேட்கட்டும். எதுவும் வீணாகிவிடக் கூடாது. வீணாகிவிடக் கூடாது என்று முணுமுணுத்துக் கொண்டார்.
    எதற்கும் உள்ளே சென்று ஒரு  பார்வை பார்க்கலாம் என்று தோன்றியது. யாராவது ஊர்க்காரர்களோ, கட்சிக்காரர்களோ தென்பட்டால் நல்லதுதான். தன் கிராமத்தில் கூட எவ்வளவு கட்சிகள் வந்துவிட்டன. ஒவ்வொரு கட்சியும் தலைவர்களின் பிறந்தநாள், கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினம் என்று வகைவகையாய் கொடிகளை ஏற்றித் தோரணங்களைக் கட்டிக் கொண்டாடுகிறார்கள். ரத்த தானம், கண் தானம் என்று விழா எடுத்துக் கொண்டாடுகிரார்கள்.அதில் யாராவது தென்பட்டுவிட மாட்டார்களா. படபடப்பு நீங்க அவர்களிடம் சொல்லிவிடலாம். கிராமத்தில் கட்சிக்காரர்களிடம் சொல்லாததா. பலமுறை சொல்லியாயிற்று. உள்ளூர்காரர்களாயிற்றே என்று எந்த வகையிலும் அழுதுவிடக் கூடாது என்று கட்டுப்படுத்தி அவர்களிடம் எல்லாம் சொல்லியாயிற்று. ஆனால் எதுவும் நடக்கவில்லை. கருணை மனு அனுப்புவதற்கு கூட காரியங்கள் நடைபெற்றனவா என்று தெரியவில்லை. தெரியாததால் எதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. சட்டென எதிர்க்கட்டிடம் மங்கலாகத் தெரிவது போல இருந்தது. ஒருவகை குலுங்கலுடன் நிற்பது போலிருந்தது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. பசியாக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டால் போதும் எல்லாப்பசியும் ஓடிவிடும் என்றிருந்தது.வெறும் வயிற்றோடு வந்திருந்தார். புளிதண்ணீர் தந்த ஆசுவாசம் எப்போதோ ஓடிவிட்ட்து. இப்போதைக்கு டீயும், பன்னும் கிடைக்கிற மாதிரி கடையையாவது தேட வேண்டும்.
    கண்களை வருத்தி திறந்து பார்த்தார். வலது புறத்தில் வினை தீர்க்கும் விநாயகர் கோவில் என்பது கொட்டை கொட்டையாய் தெரிந்தது. சற்று தூரம்தான். திண்டுபோல் முகப்பிலும் ஏதோ தென்பட்டது. ஆசுவாசப்படுத்திக் கொள்ளவென்று உட்கார்ந்து விடலாம். மெல்ல நடக்க ஆரம்பித்தார்.
    காம்பவுண்ட் சுவர் நடுங்கிக் கொண்டிருந்தது. எதிரில் இரட்டைச் சக்கர வாகனத்தில் வருபவர் ஏன் நடுங்கியபடி இப்படி தடுமாறிக் கொண்டு வருகிறார். கட்டிடங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஏதாவது பூகம்பமாக இருக்குமா. பூகம்பம் வந்து எல்லாவற்றையும் கொண்டு போக வேண்டும். தீயதெல்லாம் அழிந்து போக வேண்டும். திருச்செல்வன் இருக்கும் சிறை கூட இதுபோல் குலுங்கி தரைமட்டமாக வேண்டும். கைதிகள் சிறையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடவேண்டும். அப்படி ஏதாவது நடந்தால்தான் திருச்செல்வன் உயிர் பிழைப்பானா. அப்படியென்றால்தானா அவனை உயிருடன் பார்க்க முடியுமா. அப்படியாவது ஏதாவது நடக்குமா? அல்லது சுனாமி வந்து எல்லாவற்றையும் சீர்குலைத்துப் போகாதா. அப்படி சீர் குலைத்துப் போகிறதில் திருச்செல்வன் தப்பிக்கட்டும். வெளிநாட்டு  வேலைக்குப் போனவன்  அகப்பட்டுக்கொண்டான், பொதைப் பொருள் கடத்தல்  என்று மாட்டிக் கொண்டு விட்டான். தூக்கிற்கும் போய் விட்டான். ஏதாவது கருணை மனு அவனைக் காப்பாற்றாதா என்று  ஆட்சியாளரைப் பார்க்க  வந்து விட்டிருந்தார்.
 
    இரண்டு தினங்களுக்கு முன் இலவச் தொலைக்காட்சியில் தூக்கு தண்டனை பற்றி ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவருக்கு புரியவில்லை. தப்பு செய்தால் தூக்கில் போடு. அதற்கு இவ்வளவு சூட்சுமங்களா. திருச்செல்வன் வேலைக்குப் போயிருக்கிற தேசத்தில் ஏதாவது தப்பு என்றால் நடு வீதியில் வைத்து கசையடி உண்டு.தூக்கு  தண்டனை சுலபம்.
 
மரண தண்டனை என்பது குற்றமா.. ஹாரம் என்று அந்நாட்டுச் சட்டம் சொல்லவில்லை. மரண தண்டனை வேண்டாம் என்று சொன்னது ஒரு கோஷ்டி. வேண்டும் என்றது ஒரு கோஷ்டி. மரணதண்டனை வேண்டாம் என்பது ஒரு தத்துவம்.. அது வேண்டாம் என்று வந்தபின் என் ஆளுக்கு  வேண்டாம் எதிரிக்கு தா என்பது மோசம். வேண்டாம் என்றால் எல்லோருக்கும்தான் வேண்டாம். கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி அலைக்கழிக்க வைப்பதா இந்த முறை… தினம் தினம் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதா.  ஒரு நாள் சட்டெனக்  கொல்லப்பட்டு விடுவது எவ்வளவு உத்தமமானது. தூக்கு தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டால் பின் தினம் தினம் சாவின் முகத்தில்தான் விழிக்க வேண்டியிருக்குமா..திருச்செல்வன் அப்படித்தான் சாவை எதிர்கொண்டிருப்பானா..
 
அது சரி. கட்டிடங்கள் எதற்கு தாறுமாறாய் இப்படி நடுங்குகின்றன. யாராவது உயர் அதிகாரி வருகிறாரா. முதலமைச்சர் வருவாரா.உள்ளிருந்த  விநாயகர் கோவில் அருகில் வந்துவிட்டது. பசி மயக்கம்தான் எல்லாவற்றையும் நடுங்கச் செய்கிறதா. திண்டில் உட்கார்ந்தார். கறுத்த விநாயகர் என்றாலும் சந்தனக் காப்பில் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.
      கையில்  இருந்த வெள்ளைத்தாளைப் பார்த்துக் கொண்டிருந்தார்..  இது கருணை மனு எழுதப்பயன்படலாம். தன் சாவு பற்றி தானே தானே எழுதிக்கொள்ளும் தற்கொலைக் கடிதமாகக் கூட மாற்றிக் கொள்ளலாம். அவர் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

 
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர்  /  9486101003