சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 30 மார்ச், 2009

"சுகந்தி" -------அண்ணாகண்ணன்

--------------------- அண்ணாகண்ணன் --------------------------
ஒரு பெரிய அணை. நீர் நிரம்பிய நிலை. மேலும் நீர் வருகிறது. உடைப்பெடுக்கும் நிலை. இப்போது நீர் எப்படி வெளியேறும்? அணையின் பலவீனமான பகுதியின் வழியாகத்தான் முதலில் வெளியேறும். அந்த நீர் மேற்புறமாக வழியலாம்; சுவரில் வலுக்குன்றிய பகுதி உடையலாம்; மதகுகள் லேசாக இருந்தால் பிய்த்துக்கொண்டு போகலாம்; அல்லது வந்த வழியாகவே வெளியேறிவிடலாம்....
இப்போது மனித மனத்திற்கு வருவோம். பெரும் துயரத்தைச் சந்திக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறலாம்; சினமுற்றுக் கத்தலாம்; மன அழுத்தத்தால் மெளனம் காக்கலாம்; புலம்பித் தள்ளலாம்; அதிரடியாய்ப் போராட்டத்தில் இறங்கலாம்.... இப்படி மனம் எந்த இடத்தில் பலவீனமாய் இருக்கிறதோ, அந்த இடத்தின் வழியே துயரம் வெளிப்பட்டுவிடும். இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் துயரம் வெளிப்படுகிறது. துயரங்களின் கனம் தாங்காத சுகந்தி சுப்ரமணியன் (37), கவிதை எழுதுகிறார்.மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்.... என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.மாத விடாயின் போதும் கருவுற்ற போதும் பெண் படும் துயரங்கள், மற்றவர்களுக்காக அவள் வாழவேண்டியிருப்பது, அவள் எதிர்கொள்ளும் வசை, வன்முறை, உரிமை மறுப்பு, அடையாளம் இழப்பு, அவமானம், 'எதிர்வீட்டுக்காரியின் என் முகம் பற்றிய வர்ணனை', பாதுகாப்பின்மை, எதிலிருந்தும் தப்பிக்க முடியாத வாழ்க்கை, தனிமைத் துயர், குடும்பத்திற்குள் அகதியான நிலை, 'போதும் கலைத்துவிடு எனச் சொல்ல பக்கத்து வீட்டில்கூட ஆட்கள் இருக்கும்' சமூகம், உறவுகளின் உண்மை முகம், நிலையின்மை, நழுவிச் செல்லும் வாழ்க்கை.... எனச் சுகந்தியின் விரல், இந்தச் சிரிக்கும் உலகின் உண்மைத் தோற்றத்தை அம்பலப்படுத்துகிறது.இத்தகைய உலகத்தை நெருக்கமாகக் காணும் ஒருவர், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என நாம் கணிக்க முடியும்.'என்னைக் கவலைகள் தின்னத் தகாதென நின்னைச் சரணடைந்தேன்' என்றான் பாரதி. கவலை, ஒரு விபரீத நோய்க் கிருமி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதைதான். உள்ளே நுழையவிட்டால் பிறகு, நம்மையே தின்று ஏப்பம் விட்டுவிடும். கவலையின் கரங்களில் நாம் ஒரு பொம்மையாகிவிடக் கூடாது. நம் சூத்திரக் கயிறு, நம்மிடமே இருக்கவேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான செயலா என்ன? 'ஆகாயத்தில் கண்ணும் பூமியிலே மனசுமாய்' இருக்கும் சுகந்தி, மென்மையான-நுண்மையான மனத்தவர். அவரால் இந்தக் கவலைகளை வெல்ல முடியவில்லை.

எனக்குள் சிதைந்து போகிறேன்.
என்றாலும்என்னை
மீட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.
என் எலும்புகளில்
நான் மீட்டாகவேண்டும்.
என் சுவாசத்தினூடே

நான்நிறுத்தியாக வேண்டும்....- என்ற கவிதையில் ஒரு மிதமிஞ்சிய அச்சமும் பதற்றமும் விரிகின்றன.

சிரித்திரு என்கிறாய்.
சரிதான்.என்னால் முடியவில்லை.
எல்லோரும் அப்படித்தான்
என்கிறாய்.என்றாலும்
முடியாதென்கிறேன்.
சும்மாகிட என்கிறாய்.
மாட்டேன் என்றேன்.
செத்துப்போ என்கிறாய்என்னை
உன் காலால் எட்டித் தள்ளியபடி.
எனக்கென நான் வாழ்க்கையைமிச்சம்
வைத்திருக்கிறேன்வாழமுடியாமல்-'
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'
எனப் பாடியதெல்லாம் என்னாயிற்று?
நம் பெண்கள் பலருக்கு
இந்த அனுபவம் என்ன புதிதா?
இப்படி ஒரு நாள் கழியாவிட்டால்
அதுதானே புதிது.
அவள் முகம்
பார்க்கும்போதெல்லாம்சுடுசொற்கள்
வந்துவிடுகின்றன.
மிகவும் வேதனைதான்;
என்ன செய்வது?
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.அது:
நானாக இருக்க முடியாதுபோன
வருத்தம்தான்-
இப்போது சிக்கலின் அடித்தளம் என்னவென்று புரிகிறது. நான் என்ற உள்மன வேட்கை, ஒவ்வொரு மனத்திற்குள்ளும் சாம்பல் மூடிய தீயெனக் கனலுகிறது.
இன்னொரு கவிதையில் பாருங்கள்.

உண்மையில்
எல்லோருக்கும்பிடித்தமானதைப்
பற்றிப் பேசத் தெரியவில்லைதான்.
ஆனாலும் நட்பு தோழமை போன்றவைவெற்று
வார்த்தைகளாகிப் போனபின்எனக்கெதற்கு
இந்த விசாரம்.
மனித நடமாட்டமில்லாத இடங்கள்ஆபூர்வமானவை;
அழகானவை கூட....-

மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கும்போது இந்த இடத்திற்குத்தான் வந்துசேர வேண்டியிருக்கிறது.சுகந்தி பெரும்பாலும் துயரத்தையும் எதிர்மறை உணர்வுகளையுமே எழுதுகிறார். ஆனால், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாய் அமைந்துள்ளது. வாசிக்கையில் அதே உணர்வில் நாம் இழுத்துச் செல்லப்படுவதை உணருகிறோம்.

இந்த மரம் என்னைத் திட்டியதில்லைஅல்லது
எந்த மரமும்.என் நன்றியைத் தெரிவிக்கிறேன்மீண்டும்.

-இந்தக் கவிதை, வலியைப் பேசுகிறது. ஆனால், இதில் ஒரு புதுமையான வெளிப்பாடு இருப்பதைக் கவனித்தீர்களா?

சப்தங்களின் கூடாரங்களில்நடனமாடிய
சொற்களைஆணியடித்து அறைந்த
பின்னும்அலையடித்துக் கிடக்கும்
மனசைமணல் வெளியில் எறிந்த
பின்னும்எங்கோ இருக்கும் பறவை
தேடும்தன் இனத்தை வீட்டில்
தொலைத்தபின்னும்எதுவுமில்லை
இனி தொலைக்க என்றுஆகிப்போன
பின்னும்நான் சப்தங்களின்...

-மொத்தக் கவிதையுமே இவ்வளவுதான். இந்தக் கவிதையின் வடிவத்தில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கிய சொல்லிலேயே முடிவதோடு, ஒரு சுழலும் தன்மை இதில் இருக்கிறது. முடியும் இடத்தில் கவிதை,
மீண்டும் மீண்டும் தொடங்கிவிடுகிறது.

மனம் ஒரு விசித்திரம். அது,
நினைத்த நேரத்தில்
நினைத்த உருவம் எடுக்கிறது. '
மதம் பிடித்த யானையாய்',
'அறுந்துவிடப்போகும்
பட்டம்போல்', '
விடை தேடும் பறவையாய்', '
ரயிலும் தண்டவாளமும்
இணையும் தருணத்தில்
சிக்கித் தவிக்கும் உயிராய்',
'தத்திப் பறக்கும் சிறுகுருவிபோல்'

எனப் பல வகைகளில் சுகந்தியின் கவிதை மனம், அவதாரம் எடுக்கிறது.புதையுண்ட வாழ்க்கை(1988), மீண்டெழுதலின் ரகசியம்(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகளைச் சுகந்தி படைத்துள்ளார். சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன்பே பெண்ணியத்தின் குரலை ஒலித்தவர். கவிஞர் மீரா இலக்கிய விருது பெற்றவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. திருப்பூரில் வசிக்கிறார். தற்சமயம் உடல்நலன் குன்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.இந்த உலகில் மனிதர்கள் குறைவு; வேறு உயிரினங்களே மிகுதி. ஆனால், உலகின் அமைதி, பெரும்பாலும் மனிதர்களால்தான் கெடுகிறது. மனிதன், பிற உயிரினங்களுக்கு மட்டுமில்லை; தன் சக மனிதனுக்குக்கூட மகிழ்ச்சியை அளிப்பதில்லை. சுயநலமும் ஆதிக்க மனோபாவமும் இந்த அழகான பூமிப் பந்தை, துயரக் கிண்ணமாக மாற்றி விடுகின்றன.நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமா என அறிய, ஒரு சிறிய சோதனை. நீங்கள் இந்த உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெட்ட வெளிக்கு வாருங்கள். உங்கள் காலின் கீழ், தலைக்கு மேல், எட்டுத் திசைகள் என 360 பாகை அளவில் ஒரு சுற்று சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திலும் மனிதன் அல்லாத ஏதேனும் ஓர் உயிரைப் பார்க்கிறீர்களா? அதுவே சிறந்த இடம். நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமாக இல்லையென்றால் அதைச் சிறந்ததாக மாற்றுங்கள்.ஒரு சின்னஞ்சிறு குருவியாலும் மலராலும் நாய்க்குட்டியாலும் நமக்கு மகிழ்ச்சியைத் தரமுடிகிறது! ஆறு அறிவு படைத்த மனிதர் பலரால் அது முடியவில்லை. இ·து ஒரு விநோதம்தான். ஆனாலும் நல்லவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அதனால்தானே அவ்வப்போது மழை பெய்கிறது. முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்.நமக்கென ஒரு கதவு திறக்கும். நம் வெக்கையைப் போக்க, ஒரு குளிர்த்தென்றல் நம்மைத் தழுவும். முட்செடியிலிருந்தும் ஒரு பூ மலரும். சொல்லத் தெரியாத பறவைதன் சந்தோஷத்தைபறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்- என்கிறார் சுகந்தி. அந்தப் பறவை, உங்கள் தோளில் வந்து உட்காருவதாக!

சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
----------------------------------------
பாவண்ணன்
------------என் நண்பரும் எழுத்தாளருமான சுப்ரபாரதிமணியன் எண்பதுகளில் ஐதராபாத்தில் வசித்துவந்த சமயம் நான் கர்நாடகத்தில் வசித்துவந்தேன். அவருடைய திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை. துணைவியாரை அழைத்துக்கொண்டு அவர் ஐதராபாத்துக்குத் திரும்பிய பிறகு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். தன் மனைவியை தொலைபேசியிலேயே அறிமுகப்படுத்திவைத்தார் சுப்ரபாரதிமணியன். "சுகந்தி கவிதையெல்லாம் எழுதுவாங்க..." என்றார். ஒரு சில நிமிடங்கள்மட்டுமே அவரோடு நான் பேசினேன். சற்றே கீச்சுக்குரல். பத்துப்பதினைந்து வாக்கியம் பேசியதும் கரகரத்து உடைந்து இயல்பாக வெளிப்பட்டது.


அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அவருடைய கவிதைகள் "புதையுண்ட வாழ்க்கை" என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்தன. தலைப்பின் படிமத்தன்மை என்னை ஆழமாகப் பாதித்தது. வாழ்க்கையை நாம் ஒரு கொண்டாட்டம் என்கிறோம். மனிதப்பிறவிக்கே கிடைத்த அபூர்வமான வரம் என்கிறோம். அன்பை வழங்குவதற்கும் அன்பில் திளைப்பதற்குமான மாபெரும் வாய்ப்பாக வாழ்க்கையை நினைக்கிறோம். அந்த நிலையில் வாழ்க்கையை ஒருவர் புதையுண்ட நகரத்தைப்போல, புதையுண்ட தெய்வச்சிலையைப்போல புதைந்துபோனதாக முன்வைப்பதை நினைத்து ஒருகணம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும் அந்தத் தலைப்பின் வசீகரம் என் மனத்தைவிட்டு அகலவே இல்லை. மீண்டும்மீண்டும் அசைபோட்டுக்கொண்டே இருந்தேன். இயற்கையின் சீற்றத்தால் சூறாவளியோ ஆழிப்பேரலையோ நிலநடுக்கமோ உருவாகி வாழ்கிற ஒரு நகரத்தையே விழுங்கி உள்ளiழுத்துக்கொள்வதைத்தான் புதையுண்டதாகச் சொல்கிறோம். மாமல்லபுரத்தின் கடற்கரைக் கோயில்கள் கடலுக்கடியில் புதைந்துகிடக்கின்றன. வாழ்க்கையும் துயரம், கவலை, தனிமை, கண்ணீர் என்ற உணர்வுகளுக்கடியில் புதைந்துகிடக்கிறது. புராண காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான முக்கால் பகுதிக்கும் மேலான இந்தியப் பெண்களின் பொதுப்படிமமாகவே அத்தலைப்பை நான் உணர்ந்தேன். அக்கணம் சுகந்தியின்மீது நான் கொண்டிருந்த மதிப்பு இன்னும் அதிகமானது. பெண்கவிஞர்கள் அவ்வளவாக உருவாகி வராத காலம் அது. கவிதைகளைப் படித்தபிறகு என் வாழ்த்துகளைச் சொன்னேன்.


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு சந்திப்பை உதகை பகுதியில் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்புக்கு சுகந்தியும் சுப்ரபாரதிமணியனும் குழந்தைகளும் வந்திருந்தார்கள். அப்போதுதான் சுகந்தியை நேரிடையாகச் சந்தித்தேன். சங்கச் செய்யுள்களை வாசிப்பதுதொடர்பாக அன்று அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவற்றைப்பற்றி என்னிடமும் சந்திப்புக்கு வந்திருந்த பல கவிஞர்களிடமும் நிறைய கேள்விகள் கேட்டார். எளிய தோற்றத்துடன் கண்களiல் ஆவல் மின்ன அவர் உரையாடிய காட்சி என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.


நினைவிலிருந்து பிசகிவிட்ட பல முகங்களைப்பற்றிய குறிப்புகளை முன்வைத்தபடி தன் ஞாபகமறதியை நினைத்து மனவேதனைக்கு ஆளாகும் ஒரு கவிதை சுகந்தி எழுதிய கவிதைகளில் மிக முக்கியமானது. ஒரு பெண்ணுக்கு தன் பிரசவத்தின்போது தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த முகம் மறந்துபோகிறது. முதன்முதலாக தான் கருவுற்ற செய்தியை யாரிடம் சொல்லிப் பகிர்ந்துகொண்டோம் என்பதும் மறந்துபோகிறது. பள்ளியில் எழுத்தறிவித்த ஆசிரியரின் முகமும் மறந்துபோகிறது. விளையாடச் சென்ற இடத்தில் தற்செயலாக ருதுவான கணத்தில் அச்சத்துடன் கண்ணீர் பெருகிய சமயத்தில் ஆறுதலாக கையைப்பற்றி அழைத்துவந்து கனிவான சொற்களைச் சொன்ன முகம்கூட நினைவிலிருந்து விலகிவிட்டது. கவிதையில் சுகந்தி விவரிக்கிற வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு முக்கியமான தருணங்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தாமாகவே நினைவில் அழுத்தமாகப் பதிந்துவிடத்தக்க தருணங்கள். இருந்தபோதிலும் எதுவுமே நினைவில்லாதபடி எப்படி நிகழ்ந்தது? கவிதையைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. நினைவின்மையின் தொகுதியாக ஒரு வெள்ளைத்திரைபோல பெண்ணின் மனம் அமைந்துபோயிருக்கும் விதம் அதிர்ச்சியாக இருந்தது.


"எங்களூர் நதி எங்கே போய்க்கொண்டிருக்கிறது..." என்று தொடங்கும் கவிதையும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. ஓர் இளம்பெண் இக்கவிதையில் இடம்பெறுகிறாள். வழக்கமாக தாழிடப்பட்ட குயலறைக்குள் குளியலை முடித்துக்கொள்கிறவள் அவள். எதிர்பாராத விதமாக பால்யகாலத்தில் பூப்பறிப்பு நோன்புக்காக தோழிகளுடன் சென்ற ஆற்றை நினைத்துக்கொள்கிறாள். நதி எங்கே போகிறது என்னும் கேள்வி அப்போதுதான் அவள் மனத்தில் எழுகிறது. ஆனால் விடை தெரியவில்லை. மறுபடியும் அவள் ஆற்றைப் பார்ப்பது திருமணத்துக்குப் பிறகுதான். அப்போதும் அவள் மனத்தில் அதே கேள்வி தோன்றுகிறது. அத்தருணத்திலும் அவளுக்கு விடை தெரியவில்லை. அழைத்துச் செல்கிற கணவனுக்கும் விடை தெரியவில்லை. ஐம்பது மைல் தள்ளiப்போய் ஆறு செல்லுமிடத்தில் ஓர் அணையைக் காட்டி அதுவரைக்கும்தான் தனக்கும் தெரியும் என்கிறான் கணவன். விடைதெரியாத கேள்வி அவள் மனத்தில் அப்படியே எஞ்சிவிடுகிறது. ஆறும் தொடர்ந்து ஓடியபடி இருக்கிறது. இக்கவிதையின் தொடக்கத்தில் இக்கேள்வியை இளம்பெண் யாரிடமும் கேட்டதாக குறிப்பில்லை. திருமணத்துக்குப் பிறகு தன் கணவனிடம்தான் முதன்முதலில் வாய்திறந்து கேட்கிறாள். ஒரு விடைக்கான நீண்டகாலக் காத்திருப்பு அவலமும் துயரமும் மிகுந்தது.


சுகந்தியின் கற்பனைவளம் உற்சாகத்தை ஊட்டுவது. முதல் வரி கவிதையில் இறங்கியதுமே வேகவேகமாக சொற்கள் கூடிப் பெருகுகின்றன. தரையில் தண்ணீர் பரவி ஈரத்தடம் படர்வதுபோல அச்சொற்களில் அபூர்வமான ஓர் ஓவியத்தை வரைந்துகாட்டுகிறார் சுகந்தி. காற்று என்னும் கவிதை அப்படி வரையப்பட்ட ஓர் அபூர்வ ஓவியம். காற்றை சிறகிலாப் பறவை என்று அடையாளப்படுத்துகிறார். அக்கவிதையில் சந்தனமும் குங்குமமும் துலங்க தாம்பூலம் சிவக்க சந்தோஷமாக பூவைத்துக் காத்திருக்கிறாள் ஒரு பெண். கொலுசொலிக்க நடந்துவருகிற ஒரு தோழிபோல அருகில் வருகிறது காற்று. இருவரும் விளையாடிக்கொள்கிறார்கள். பெண்ணின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி சின்னக்குழந்தை என்று கொஞ்சிவிட்டு நகர்கிறது காற்று. கண்கள் சிவக்க அழும்போது உறங்கவைக்க முயற்சி செய்கிறது. கண்களை மூடிவிட்டால் காற்று நகர்ந்துவிடுமோ என வாட்டமுறுகிறாள் அவள். ஆனாலும் காற்றின் தாலாட்டில் உறங்காமல் இருக்கவும் இயலவில்லை. கவலையில் தோய்ந்த சிரிப்பையே காவலுக்கு நிறுத்திவிட்டு கண்களை மூடுகிறாள். தன்னிலை மறந்த உறக்கத்தில் அவள் ஆழ்ந்த பிறகு, செல்லச் சிரிப்போடு காவலுக்கு நின்ற கவலையில் தோய்ந்த சிரிப்பை அழைத்துச் சென்றுவிடுகிறது. ஒரு நாடகக்காட்சியைப்போலத் தோற்றம் தரும் இக்கவிதை துணையற்ற பெண்ணின் தனிமையையும் துணையாக நிற்கும் காற்றின் ஆதரவையும் ஒருங்கே முன்வைக்கின்து.


புதையுண்ட வாழ்க்கை தொகுப்பைத் தொடர்ந்து 2003ல் தமிழினியின் முயற்சியால் அவருடைய விரிவான தொகுப்பொன்று வெவந்தது. நான் விரும்பிப் படித்த தொகுதிகளில் அதுவும் ஒன்று. தற்செயலாக ஒரு கவிதையில் படிக்க நேர்ந்த "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரி என்னை உலுக்கியெடுத்தது. மனம் என்பது ஓர் அறையல்ல, வீடுமல்ல. கதவு பொருத்தி தாழிட்டும் பூட்டியும் வைக்க. அது ஒரு நதிபோல, கடல்போல, வானம்போல விரிவானது. எல்லையல்லாதது. எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான் இது. ஆனாலும் மனம் முரண்விழைவு உந்தித்தள்ள தனக்கென ஒரு கதவை நாடுகிறது. கதவு பொருத்தியபிறகு தாழும் தேவையாகிறது. தாழிட முடியாதபோது தவிப்பை தானே ஏற்படுத்திக்கொள்கிறது. ஆற்றாமையையும் இயலாமையையும் முன்வைக்கும் சுகந்தியின் கவிதைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. இருபத்தைந்து ஆண்டுகளில் மிகச்சில ஆண்டுகளiல்மட்டுமே அவருடைய கவிதைகள் வெளிவந்தன.


பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் ஒரு பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தேன். என் வருகையைப் பதிந்துவிட்டு எனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் திறவுகோலோடு திரும்பியபோது தற்செயலாக சுப்ரபாரதிமணியானப் பார்த்தேன். அதே நிலையத்தில் அதே பயிற்சிக்கு அவரும் வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தேன். பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் பேசிக்கொண்டிருந்தோம். குடும்ப நலன்களைப்பற்றி ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டோம். பயிற்சி வகுப்பில் அவர் மூன்றாம் வரிசையிலும் நான் ஐந்தாம் வரிசையிலும் உட்கார்ந்திருந்தோம். மூன்றாவது நாள் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் வேகமாக இருக்கையைவிட்டு எழுந்து ஒரு நொடி ஆசிரியரிடம் மெதுவாக ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதைக் கவனித்தேன். அவசரமாக கழிப்பறைக்குச் சென்றிருக்கக்கூடும் என்றுதான் முதலில் நினைத்தேன். அரைமணிநேரத்துக்குப் பிறகும் வராதபோது எங்காவது தொலைபேசி செய்யச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது. உணவு இடைவேளை வரைக்கும் வராதபோது அதிர்ச்சியாக இருந்தது. அவர் இல்லாமலேயே அறைக்குத் திரும்பினேன். அறையில் மேசைமீது அவர் கையெழுத்தில் ஒரு சீட்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. பதறும் மனத்துடன் எடுத்துப் படித்தேன். ஒரே வரிதான். சுகந்திக்கு உடல்நலம் சரியில்லை. ஊருக்குச் சென்று சேர்ந்த பிறகு பேசுகிறேன் என்று மட்டுமே எழுதியிருந்தது. எனக்கு மனம் தாங்கவில்லை. உடனே கைப்பேசியில் அவரை அழைத்துக் கேட்டேன். பேருந்து இரைச்சலில் பேச்சு சரியாக காதில் விழவில்லை. காகிதக் குறிப்பில் இருந்ததையே மற்றொரு முறை சொன்னதுமட்டுமே புரிந்தது. அடுத்த நாள் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலைவரை அழைப்பு வரவில்லை. வகுப்புக்குச் செல்வதற்கு முன்னால் ஒருமுறை பேசிவிடலாம் என்று கைப்பேசியை எடுத்த அதே கணத்தில் மறுமுனையிலிருந்து சுகந்தியின் மரணச் செய்தியைத் தாங்கிக்கொண்டு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி வந்துவிட்டது. ஆழ்ந்த மௌனத்தில் சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். என்ன என்ன என்று கேட்ட அறைநண்பருக்கு விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டே பெருமூச்சோடு எழுந்த தருணத்தில் "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரியை என்னையறியாமல் இரண்டுமூன்று முறைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக்கொண்டேன். மனம் கனத்தது.


paavannan@hotmail.com

காலச்சுவடு

சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள்
திரு. மீரா அவர்கள் எனது முதல் கவிதைத் தொகுப்பான "புதையுண்ட வாழ்க்கை'யை வெளியிட்டார். அவர் பெயரால் விருது வழங்கப்படுகிற போதுதான் அவர் மறைந்தது எனக்குத் தெரிய வருவது என் துரதிருஷ்டம். அவருக்கு அஞ்சலியாக இந்த மூன்று கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.


மரணத்தின் நுழைவாயிலுக்கு
சென்று திரும்பிவிட்டேன்
வந்த பின்னர் இன்னும்
மரணத்தைப் பற்றின ஆசைதான்
ஆனால் என் குழந்தைகளின்
கண்ணீரில்மனது ஊஞ்சலாடுகிறது
எனக்கும் சூரியனுக்கும்
மரணம் பற்றின அச்சம் நீங்கிவிடுகிறது
எல்லோரும் ரிஷிகளாகிறார்கள்
மெüனம் எப்போதும்
என்னைச்சிறையில் அடைக்கிறது.
மரணம் ஒரு பெரிய விசயமல்ல.
உயிரின் ஆசையில் மனத்திற்குள் சலசலப்பு
பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும்
கடிகாரத்தைப் போலவே
மனமும் மரணமும் . . .
பரிசுகளும் பாராட்டுகளும்
ஆறுதல்படுத்திக்கொண்டே இருக்கின்றன
ஆனால் நானும் என் உடலும்
மெüனமாய்த் தொங்குகிறோம் - தூங்குகிறோம்
மரணத்தை நீக்கிச் செல்லும் உதயசூரியன்
வேதனையைத் தூண்டிவிடுகிறது.
மூளை இறந்தபடி வாழ்கிறேன்

பதிவேட்டில் ஒரு முகம்
எப்போதும் உள்ளத் தூய்மை
வள்ளுவர் சொல்கிறார்.
வள்ளுவர் படத்தைப் பார்க்கிறேன்
அவர்தான் இதைச் சொல்கிறார்.
எப்போதும் ஊக்கமளிக்கும் சொற்கள்
எப்போதும் பண்பான செயல்
வள்ளுவர் சொல்கிறார்.
புத்தகங்களைப் படித்துஎதுவுமே
நிகழவில்லைநிமிடத்திற்கொரு முறை
மாறும் என் மிருகம்
விடுதலை ஆகிவிட்ட பின்பும் மனக் கூண்டிற்
குள்வள்ளுவர் சொல்கிறார்வெளியே வா
வெளியே வந்து நான் யாரிடம்
என்ன சொல்லஎன் அறியாமையின் கூண்டினுள்
எதிர்காலம் சிற்பங்களாய்.
வள்ளுவர் இதையே சொல்கிறார்.
எப்போதும் விடுதலை கேட்கும்
என் உயிர்கள்.எக்காளமிட்டுத் திரிகின்றன
உயிர்களின் குரல்கள்
.வள்ளுவர் இதையே சொல்கிறார்.

சுக துக்கங்கள் ஒரு தராசுபூலச்சந்தர்ப்பவாதம்
எப்போதும் வெல்வதில்லை
ஓயாத குரலில் அழுது
துடிக்கும் குழந்தைமொழி
தெரியாமல் சிரிக்கிற பெண்கள்.
எப்போதும் சுவற்றுடன் ஓயாத
ஓவியங்கள்கவலையற்றுக் கிடக்கிறது
பூமிஏன் என்று அழுகையில் கிடக்கிற
வானம்பூக்கள் இன்னும்
பூத்துக்கொண்டிருக்கின்றன.
எப்போதோ ஓய்ந்துபோன கவலைகளை
சுவடற்றுப் போக்க எல்லாமும்.
எப்போதும் எதுவும் நிரந்தரமில்லைதான்.

சுகந்திக்கு என் அஞ்சலி. - ஜெயமோகன்

நண்ப்ர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. தமிழின் ஆரம்பகால பெண்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். நான் எழுதவந்த காலத்தில் 1988 ல் சுகந்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன்.
பின்னர் 1992ல் அருண்மொழிக்கு திருப்பத்தூர் தபால்நிலையத்தில் வேலைகிடைத்தபோது நாங்கள் திருப்பத்தூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீட்டில் குடியமர்ந்தோம். சுப்ரபாரதிமணியன்தான் வீடு ஏற்பாடுசெய்தார். அவர் அப்போது திருப்பத்தூர் தொலைபேசி நிலையத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றினார். 1992 கதாவிருதுக்கு நாங்கள் இருவரும் தேர்வுசெய்யப்பட்டிருந்தோம். அதிலிருந்து இருவரும் நண்பர்கள். சுப்ரபாரதிமணியனின் வீடு பக்கத்தில்தான்.
அங்கே சென்றபின்னர்தான் சுகந்தி சுப்ரமணியன் அறிமுகமானார். அப்போதே கடுமையான உளவியல்சிக்கல்கள் அவருக்கு இருந்தன. நிலைகொள்ளாத தன்மை, கட்டுக்கடங்காத நடவடிக்கைகள். அவரது உளப்பிரச்சினைகள் பள்ளிநாளிலேயே ஆரம்பமாகியிருந்தன. அவருடைய இளமைப்பருவம் பரிதாபகரமானது. தாயாரால் புறக்கணிக்கப்பட்ட அவரை பாட்டிதான் வளர்த்தாள். வீட்டில் கறாரான கண்டிப்பு , வெளியே கேலி கிண்டல் என வளர்ந்த சுகந்திக்கு எப்போதுமே தாழ்வுணர்ச்சியும் மன அழுத்தமும் இருந்தது. மெல்ல மெல்ல அது வலுப்பெற்றது.
அவருக்கு இரு பெண்கள். இருவருமே அப்போது சிறுமிகள். சுகந்தியால் எந்த வேலையையும் செய்ய முடியாது. கேள்விப்பட்ட செய்திகளை எல்லாம் தன் வாழ்க்கை என்று நம்பக்கூடிய மனப்பதற்ரம். நாள்கணக்கில் வெவ்வேறுவகையான கற்பனை யதார்த்தங்களில் கொந்தளித்துக்கொண்டிருப்பார். எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். நாலைந்து குண்டர்கள் தன்னை தாக்கிவிட்டதாக ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஜீப்பில் வந்திறங்கினார். அப்படி பல நிகழ்ச்சிகள்.அவரது கவிதைகளில் உள்ள உணர்வுகள் மிகப்பெரும்பாலும் அவர் கற்பனையில் அனுபவித்தவை.
சுப்ரபாரதிமணியன் ஒவ்வொருநாளும் அவரே காலையில் சமைத்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம்செல்வார். மாலையில் மீண்டும் சமையல். குழந்தைகள் அருண்மொழியுடன் மிகவும் ஒட்டிக்கொண்டிருந்தன. சுகந்திக்கு தன்னை பிறர் அவமதிக்கிறார்கள் என்பது எப்போதுமுள்ள பிரமை என்றால் கணவரோ பிறரோ தாக்கிவிட்டார்கள் என்பது அதன் உச்சம். பலசமயங்களில் கட்டுப்படுத்த உடல்பலம் தேவைப்படும். இந்தியாவில் உளவியல்சிக்கல்களுக்கு மருந்துகள் இல்லை –காய்கறிபோல ஆக்கி தூங்க வைப்பது தவிர. ஒரு கட்டத்தில் மாத்திரைமூலம் இரவு பகலாக தூங்கிக்கொன்டிருக்கச் செய்யப்பட்டார்.
சுகந்தி ஒருமுறை அதிகமாக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். மனச்சிக்கல் சற்றே அகலும் இடைவேளையில் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளவில்லை என்ற கடுமையான குற்றவுணர்வு அவருக்கு ஏற்படும். வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் மீட்டோம். அந்த நாள் கொடூரமாக நினைவில் இருக்கிறது. அங்கிருந்த மருத்துவர்கள் பணம் கறப்பதிலேயே குறியாக இருந்தானர். அந்தக்குழந்தைகளை எப்போது எண்ணினாலும் வயிற்றைக் கலக்கும்
வீட்டில் ஒருவருக்கு மனநிலைச் சிக்கல் என்றால் அந்த நிலையை அனுபவிப்பவருக்கே அதன் வலி தெரியும். நான் உடனிருந்து பார்த்த சுப்ரபாரதிமனியனின் வாழ்க்கை மிக கொடுமையானது. அந்தவாழ்க்கையிலும் சுப்ரபாரதிமணியன் ஓயாது வாசித்தார். எழுதினார். கனவு இதழ்கள் கொண்டுவந்தார். நாங்கள் அங்கே இருந்தபோதுதான் அசோகமித்திரன், சுந்தரராமசாமி இருவருக்கும் அறுபதாமாண்டு நிறைவுமலர்கள் தயாரித்தோம்
அந்த பணிகள் வழியாகவே அவர் தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும். பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு சுப்ரபாரதிமணியனின் தனிப்பட்ட முகம் தெரியாது. மிகவும் உள்ளடங்கிய, எதையுமே காட்டிக்கொள்ளாத மனிதர் அவர்.நானறிந்த உண்மையான மனிதாபிமானம் கொண்ட சிலரில் ஒருவர். எழுத்துக்கு அப்பால் சமூகசேவையிலும் அவருக்கு தீவிரமான ஆர்வம் உண்டு.
ஹைதராபாதில் இருந்தபோது வெண்குஷ்ட நோயாளிகளுக்கு சிகிழ்ச்சை அளிக்கும் ஆய்வுமையத்துடன் இணைந்து விரிவான அளவில் பணியாற்றியிருக்கிறார். வெண்குழ்ஷ்டத்தால் பாதிக்கபப்ட்ட பல ஏழை பெண்களை அவர் தனியார் நிதியுதவி சேகரித்து கைதராபாத் கொன்டுவந்து சிகிழ்ச்சைசெய்து மீட்டதை நான் அறிவேன். அந்தப்பெண்களில் பலர் அவரை நன்றியுடன் கைகூப்பி கண்ணீர்விடுவதை கண்டிருக்கிறேன்.திருப்பூர் சென்றபின் சூழலியல் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டு அதைச்சார்ந்து செயலாற்றினார். அந்த ஆர்வம் காரணமாகவே அவரது இலக்கியப்பங்களிப்பு மட்டுப்பட்டது.
மனைவி மீது உண்மையான பிரியம் அவருக்கு இருந்தது.இல்லாவிட்டால் சுகந்தியை தாங்கிக்கொள்வது சாத்தியமாகியிருக்காது. சுகந்தி சிலகாலம் மனநலவிடுதியிலும் இருக்க நேரிட்டது.ஆனால் எப்போதும் சுப்ரபாரதிமணியன் அவர் மீது கவனத்துடன் இருந்தார் என்பதே நான் கண்டது. பின்னர் இருமுறை சுகந்தியை சந்தித்திருக்கிறேன். மங்கிய புன்னகையுடன் இருந்தார், என்னை நினைவுகூரவில்லை. இந்த மரணம் அவருக்கு ஒரு விடுதலை என்றுதான் எண்ணுகிறேன்.
சுகந்தியை ஒரு மனச்சிகிழ்ச்சையாக கவிதை எழுத பழக்கினார் சுப்ரபாரதிமணியன். சுகந்தி குறிப்பிட்ட மனநிலையில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவார். நூற்றுக்கு இரண்டு கவிதைகளே கவித்துவ அம்சத்துடன் இருக்கும் . பெரும்பாலானவை மனப்பிரமைகள், முறையீடுகள். அவற்றில் சிலவற்றை சுப்ரபாரதிமணியன் கவிதையின் வடிவ ஒழுங்குக்குக் கொண்டுவந்து 1986 ல் அன்னம் பிரசுரம் வழியாக பிரசுரித்தார். அவை சுகந்திக்கு ஓரளவு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தன. ஆனால் அது நீடிக்கவில்லை.
சுகந்தியின் கவிதைகளில் உணர்வுகள் மற்றும் சில அழகிய மொழிவெளிப்பாடுகள் அவருடையவை என்றால் கவிதைவடிவம் வரியமைப்பு எல்லாமே சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் உள்ள அசலான அகவெளிப்பாட்டை சுப்ரபாரதிமனியனின் உண்மையான வாசகமனம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான் அவை பிரசுரமாயின. அக்கவிதைகளில் பலவற்றில் வீட்டை தன்னைக்கொல்லும் எதிரியாகவே சுகந்தி சித்தரித்திருந்தார். அவை அச்சான போது கற்பனை இல்லாத நம் வாசகச்சூழல் சுப்ரபாரதிமணியனையே ஒரு பெருங்கொடுமைககாரராகச் சித்தரித்துக்கொண்டது. சுகந்தியின் மனச்சிக்கலுக்குக் காரணம் அவரே என்றுகூட நம்மவர்கள் ‘வாசித்தி’ருக்கிறார்கள்.
அதை நான் அவரிடம் பேசியிருக்கிறேன். ”இருக்கட்டும், இப்ப என்ன. அந்த வரிகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கு. அதுவும் ஒரு குரல்தானே. நம்மை யாருக்குதெரியும்?” என்றார் சுப்ரபாரதிமணியன். மனசிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது தனியனுபவம் அல்ல பிறரது அனுபவங்களின் தொகுப்புதான் என்றும் அவருக்கு எண்ணம் இருந்தது.
எப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது பார்க்கும்போது அர்த்தமுள்ள ஒன்றை சுபரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. அந்த துயரம் நிறைந்த வாழ்க்கைக்கு இப்படியாவது ஒரு பொருள் உருவாகியிருக்கிறது.
சுகந்தியின் கவிதைகள் தமிழினி வெளியீடாக இப்போது கிடைக்கின்றன. [மீண்டெழுதலின் ரகசியம்] முதல் தொகுதிக்குப் பின்னர் மேலும் பல கவிதைகளை அவர் எழுதினார். ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த கோர்வையான வெளிப்பாடு பின்னர் சாத்தியமாகவில்லை
சுகந்தியின் கவிதைகளில் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாக பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார். மேலுலகம் என்று ஒன்று இருந்தால் நல்லதுதானே என்று எண்ணும் தருணம் இது. அங்காவது ஒருசிலநாள் மனதின் ஒயாத குதறல்கள் இல்லாமல் அவர் மகிழ்ந்திருக்கலாமே.........

--------------------------ஜெயமோகன் -------------------------

சுகந்தி சுப்பிரமணியன் - நீள்கிறது நினைவில்லைகள்

யமுனா ராஜேந்திரன்
------------------------------------
மரணமுற்ற பெண்கவியான சுகந்தி சுப்ரமணியனை நான் அறிந்திருந்தேன். தொண்ணூறுகளின் மத்தியில் ‘எனக்குள் பெய்யும் மழை’ (எக்ஸில் வெளியீடு : பிரான்ஸ்) என ஆசியப் பெண்கவிகளின் மொழியாக்கத் தொகுப்பொன்றினைக் கொண்டு வந்தபோது, தமிழகப் பெண்கவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த சுகந்தியின் கவிதையொன்றினையும், ஈழப் பெண்கவிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த சிவரமணியின் கவிதையொன்றினையும் நான் தேர்ந்து கொண்டிருந்தேன். பிற்பாடாக பிரித்தானியா வந்து, மூன்று மாதகாலம் சுப்ரபாரதிமணியன் என்னோடு தங்கிச் சென்றார். சிலமுறைகள் சுப்ரபாரதிமணியோடு இங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட வேளையில் சுகந்தியுடனும் நான் சுருக்கமாகப் பேசியிருக்கிறேன். சுப்ரபாரதிமணியன் வீட்டில் அவரது பெண்குழந்தைகளுடன் முழுநாள் இருந்திருக்கிறேன். அவரது ஆரம்ப எழுத்துக்களின் காலத்திலிருந்தே அவரை நான் அறிவேன். பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் அவர் எனக்கு மூத்த மாணவர். தமிழகம் செல்லும் வேளையில் எல்லாம் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
அவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களால், ஒரு தகப்பனாக, முழுமையாக இரண்டு பெண்குழந்தைகளைப் பொறுப்பேற்க வேண்டியிருந்த அவரது துயர்களையும் பாடுகளையும் கூட ஒரு நண்பனாக நான் அறிந்திருக்கிறேன். எல்லைமீறி ஒரு போதும் நாங்கள் எமது பரஸ்பரமான சொந்த வாழ்வில் நுழைந்ததில்லை. எனது நண்பனும் தோழனுமான ரா.பாலகிருஷ்ணன் சொல்ல சுப்ரபாரதிமணியனின் துணைவியாரும் கவியுமான சுகந்தியின் மரணத்தைக் கேள்வியுற்று, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலொருநாள் எனது உயிர் நண்பன் விசுவநாதனுடனும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுடனும் திருப்பூரில் நண்பரும் நாவலாசிரியருமான சுப்ரபாரதிமணியனைச் சந்திக்கச் சென்றோம். ஈரோட்டில் சுகந்தி இறந்த விவரங்களையும், நாளொன்றுக்கு பதினைந்து மாத்திரைகள் வரையிலும் சாப்பிடவேண்டி இருந்த நிலையில், நிரந்தரமான தூக்கநிலையிலேயே சுகந்தி இறந்ததான நிலையை அவர் சொன்னார்.
அவரது பெண்குழந்தைகள் இருவரும் வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவரது பெண்குழந்தைகளின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பு எனக்கு ஞாபகம் வந்தது. அவர் வாழ்வு குறித்து அதிகம் பேச எனக்கு விருப்பமில்லை. அவர் அடிக்கடி மாற்றலாகிற வேலைநிலைமையைக் கொண்டிருந்தார். குழந்தைகளைப் பராமறிக்க வேண்டியதோடு சுகந்தியைப் பராமறிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. மாற்று ஏற்பாடுகளும் அவர் வாழ்க்கையில் பொய்த்துப் போயிற்று. அவர் மனம் கொள்ளாத சந்தோஷத்தில் என்றேனும் ஓர்நாளாவது இருந்திருப்பாரா என்பது என் வரையில் சந்தேகம்தான்.
ஓருவரின் உளவியல் என்பது இருபது வயதுக்குப் பிற்பாடுதான் உருவாகிறது என்பது இல்லை. அதைப் போலவே திருமணத்தின் பின்பாக அது முழமையடைந்து விடுகிறது என்பதும் இல்லை. பொதுவாகவே ஆண்பெண் உறவென்பது அதிகாரமும் முரணும் அன்பும் காமமும் கொண்டதாகத்தான் இருக்கிறது. படைப்பெழுச்சி கொண்ட பெண்கள் அனைவரும் பலதளங்களில் பதட்டமும் மனத்தளர்வும் கொள்வதென்பதும் இயல்பாகவே இருக்கிறது. இதற்கு அப்பாலும் அன்றாடம் நிறவெய்த வேண்டிய காரியங்களும் பொறுப்பும் இருக்கிறது.
இந்தச் சூழலில் மேற்போக்காகத் தெரிந்த சில செய்திகள், சில சந்திப்புகளில் சொல்லப்பட்ட சில சொற்களை மேற்போக்காக முன்வைப்பது என்பது, பல்வேறு முறைகளில் மரணத்தின் தொடர்விளைவுகளைத் தாங்கி நிற்கிற, உயிர்வாழ்கிற மனிதரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி விடக்கூடியது. சிறுகதையாசியரும் அறியப்பட்ட பெண்ணிலைவாதியுமான எழுத்தாளர் அம்பை சுகந்தியின் மரணத்தை முன்வைத்துச் செய்திருப்பது புதையுண்ட சுகந்தி : அம்பை : காலச்சுவடு : மார்ச் 2009) இப்படியான காரியம்தான்.
சுகந்தி பற்றிய இந்தக் கட்டுரை, அம்பையின் கூடார்த்த மொழியிலான மனப்பகுப்பாய்வுக் கட்டுரையா அல்லது சுப்ரபாரதிமணியன் மீதான வன்மமான நேரடித் தாக்குதலா என்று முழுமையாக அறியமுடியாத வகையில் எழுதப்பட்டிருக்கிறது. சிறுகதைகளுக்குள் தமது எதிரிகளைக் கொண்டு வஞ்சந்தீர்க்கிற காரியத்தைப் பெத்தாம் பெரிய எழுத்தாளரான தர்மு அரூப் ஜீவராமுவிலிருந்து, பின்நவீனத்துவப் புனிதசிகாமணி சாருநிவேதிதா வரை செய்து வருவதைத்தான் அம்பையும் இந்த அஞ்சலிக் கட்டுரையில் செய்திருக்கிறார்.என்ன கொடுமை பாருங்கள், சுகந்தியின் படைப்புக்கள் பற்றி அம்பையின் கட்டுரையில் ஒரு வரி கூட இல்லை. வேடிக்கை என்னவென்றால், தர்மு ஜீவராமுவின் இத்தகைய கொச்சைப்படுத்தல்களுக்கு கட்டுரையை எழுதிய அம்பையும் கட்டுரையைப் பிரசுரித்த காலச்சுசுவடு கண்ணனின் குடும்ப அங்கத்தவர்களும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதுதான்.
நிஜத்தில் படைப்பாளி எனும் அளவில் அம்பைக்கு அக்கறை இருந்திருந்தால், தனது படைப்பூக்கத்தின் அடிப்படையில் சுகந்தியின் உளவியல் உருவாக்கம் பற்றித் தான் கருதியிருப்பனவற்றின் அடிப்படையில் ஒரு படைப்பு எழுத அம்பை முயன்றிருப்பார். அல்லது ஒரு பெண்நிலைவாதத் தீவிரக் கோட்பாட்டாளராக, சுகந்தியின் மரணத்தின் பின்னிருந்த காரணங்களை ஒரு களஆய்வின் பின் பல்வேறு நேர்காணல்களின் பின், ஒரு புறநிலை ஆவணமாக முன்வைத்திருப்பார். மாறாக திடுக்கிடும் நிஜங்கள், திகில் சம்பவங்கள் போன்றனவற்றை எல்லாம் முன்வைத்து, சுப்ரபாரதிமணியன் என்கிற வெகு சாதாராண மனிதரைத் தமது பெண்நிலைவாதக் கோருதல்களுக்கான பலிகடாவாக அம்பை ஆக்கியிருக்க மாட்டார்.

--------------------------- யமுனா ராஜேந்திரன்

சுகந்தி சுப்ரமணியன்

சுப்ரபாரதி மணியன் வீட்டிற்கு ஒரு முறை ஈரோடு நாங்கள் இருவரும் சென்று விட்டு திருப்பூர் திரும்பிய போது அவர் அழைத்து சென்றிருந்தார் .
அங்கே அவர் துணைவி சுகந்தி என்னிடம் " அய்யா ! என் கணவர் உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார் . எனக்கு தமிழ் கற்று கொடுங்கள் அய்யா " என்று கேட்டார் . ஐந்து வயது குழந்தையாக தோன்றிய சுகந்தி யை மன பாரத்துடன் நான் பார்த்த போது இருபது வருடங்களுக்கு முன் அவருடைய " புதையுண்ட வாழ்க்கை ' கவிதை நூலை பற்றி புதுவையில் நடத்திய கருத்தரங்கம் என் நினைவில் நிழலாடியது .
சுப்ரபாரதி மணியன் உள்ளே சமையல் அறைக்கு சென்ற போது சுகந்தி " அய்யா ! உங்கள் பேனாவை எனக்கு தாருங்கள் அய்யா " என குழந்தை கேட்பது போல கேட்டார் . நான் உடனே அவரிடம் கொடுத்தவுடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார் . அதன் பின் சுப்ரபாரதி மணியனும் நானும் பேசுவதை ஆர்வத்துடன் ஜன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார் .
ஒரு ஐந்து வயது கூட நிறைவேறாத சிறுமியை த்தான் சுகந்தியிடம் காண முடிந்தது . அன்று சுப்ரபாரதி மணியன் , சுகந்தி , இரு மகள்கள் இவர்களை எண்ணி மிகுந்த வியாகுலம் அனுபவித்தேன் .
சென்ற மாதம் மறைந்த சுகந்தி சுப்பிரமணியன் அவர்களுக்கு மார்ச் 15 தேதியன்று திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தில் அஞ்சலியுரை நிகழ்த்தினேன். இந்த மரணம் சுகந்திக்கு பரிபூரண விடுதலை தான் . அவர் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு நீரில் இருந்து வெளிவந்த மீன் போல சொல்லணா துயரத்தை அனுபவித்த பெண்மணி . கணவருக்கு , மகள்களுக்கு பாரமாக வாழ நேர்ந்த துர்பாக்கியசாலி .இவர் கணவர் சுப்ரபாரதி மணியன் சிலுவை சுமந்திருக்கிறார் என நான் சொல்வேன் . தன் மனைவியின் மனநோய் அவருக்கு ஏற்படுத்திய உளைச்சல் ,அவமானம் , வேதனை குறித்து ஒரு போதும் ஒரு முணுமுணுப்போ , பல்கடிப்போ எப்போதும் அவரிடம் இருந்து கேட்க நேர்ந்ததில்லை . இரண்டு பெண் பிள்ளைகள் . அவர்களுக்கு தாய் சிலையாகி போன நிலையில் மணியனே பிள்ளைகளுக்கு தாயுமானவர் . சுகந்தியின் புதையுண்ட வாழ்க்கையை மீட்டு விடதளரா நம்பிக்கையோடு மீண்டு எழுதலின் ரகசியம் என்று தன்னால் செப்பனிடப்பட்ட சுகந்தியின் கவிதைகளுக்கு பெயர் வைத்தார் .
காலச்சுவடு பத்திரிகையில் அம்பையும் , உயிர்மையில் கவிஞர் சுகுமாரனும் அஞ்சலி கட்டுரை எழுதியுள்ளனர் . சுகுமாரனின் அஞ்சலி சிறப்பாக வந்திருந்தது .
காலச்சுவடு அம்பை அஞ்சலி ...
'நாச்சார் மட விவகாரம்' சிறுகதை சுந்தர ராமசாமிக்கு ,கண்ணனுக்கு எப்படிப்பட்ட அவமானத்தை தந்தது என்பதை நான் நன்கறிவேன் . சு. ரா இது பற்றி என்னிடம் போனில் மிகுந்த துக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. கண்ணனும் தன் மன உளைச்சலை என்னிடம் சொல்லியிருக்கிறார் .
சு ரா இறந்த பின் ஜெகம் பிராடு தூங்காம , பேலாம , சாப்பிடாம எழுதுன இருநூறு பக்க புத்தகத்தில் சு ரா வின் ஆளுமை எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது என்று கண்ணன் என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் . சொல்லப்போனால் அந்த புத்தகம் பற்றி கண்ணனும் நானும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டோம் . ஏனென்றால் என்னைப்பற்றியும் ரொம்ப அவதூறாக , சுந்தர ராமசாமியோடு ஜெகம் பிராடுக்கு மனஸ்தாபமே ஏதோ என்னால் தான் என அதில் அந்த ஆசாமியால் எழுதப்பட்டிருக்கிறது .
அந்த ஜெகம் பிராடு இணைய தளத்தில்கூட சுகந்தி பற்றி சில தேவையில்லாத விஷயங்கள் இப்போது எழுதப்பட்டுள்ளது.
..
சரி . இப்போது அம்பை அஞ்சலி என்ற பெயரில் சுப்ரபாரதி மணியனுக்கும் அவருடைய இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் எப்பேர்ப்பட்ட அவமானத்தையும் , மன உளைச்சலையும் உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை கண்ணன் உணர்ந்திருந்தால் காலச்சுவடில் இதை பிரசுரித்திருப்பாரா ?
தனக்கு வந்த கஷ்டம் மற்றவர்களுக்கு வரலாகாது என்பது கண்ணனுக்கு பொருட்டில்லையா? அம்பையின் அஞ்சலியில் நாச்சார் மட கூறுகள் இல்லையா ? அடுத்தவங்க குடும்பத்தில் தலையிட அவசியமில்லை என்று எழுதிக்கொண்டே அம்பை என்னவெல்லாமோ எழுதியிருக்கிறார்.இது போன்ற விஷயங்களை காலச்சுவடு ஆசிரியர் எடிட் செய்ய வேண்டாமா ?
......
அருண் குமார் பின்னூட்டத்திற்கு என் பதில்நாச்சார் மட விவகாரம் மற்றும் தூங்காம பேலாம சாப்பிடாம எழுதுன மாதிரி நாலாந்தரமாக Character assasinationசெய்து எழுதி விடவில்லை என்பதற்காக நன்றி தெரிவிக்கலாம் .நல்லவேளை அம்பை போல சுகந்தி, மணியன் இருவர் பற்றி வன்மமாக பெரிதாக எழுதவில்லை தான் . ஆனால் ஜீப்பை எடுத்துக்கொண்டு சுகந்தி போலிஸ் ஸ்டேசன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக எழுதியுள்ளது அநாகரீகம் இல்லையா ? மணியனின் சுற்று சூழல் அக்கறையையும் அவரது எழுத்து பற்றியும் இணைத்து ஒரு நுண் அரசியல் வார்த்தையை மணியன் இந்த துயர சூழலில் எங்ஙனம் எதிர்கொள்வது ?சுகந்தி பற்றிய அஞ்சலியில் மணியன் இன்றைய எழுத்து பற்றி ஏன்தீர்ப்பு ? விமர்சனம் ?

R P ராஜநாயஹம்

எதிர்வினை
----------
அவதூறு நோய்க்கிருமியிலிருந்து
நான் எப்போது விடுதலை பெறுவேன்
சுப்ரபாரதிமணியன்
அம்பையின் ‘சுகந்தி அஞ்சலி’ படித்தேன். என்னைப் பற்றியும் என்னைச் சுற்றியுள்ளவர்கள் பற்றியும் பொய்யான, தவறான, துஷ்பிரயோகத் தகவல்களை அம்பை அள்ளித் தெளித்திருந்தார். இதைக் காலச்சுவடு வெளியிட்டது துரதிஷ்டமானது.
சுகந்தி 11.02.09 அன்று காலமானார். 14.02.09 அன்று அம்பை என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதன் பதிவு என்னிடமுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டதன் ஒரு பகுதி: “உங்களைப் பற்றிப் பல விஷயங்களில் நான் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதை வெகுதாமதமாக உணர்கிறேன். சுகந்தியால் நீங்கள் நீண்ட நெடும்காலம் கஷ்டப்பட்டுள்ளீர்கள். இனிமேலாவது உங்கள் வாழ்க்கை நிம்மதியானதாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என் தவறான புரிதல்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.” அவரது தொலைபேசி உரையாடல் இப்படியிருக்க அஞ்சலி ‘அர்ச்சனை’ காலச்சுவட்டில் வேறுவிதமாய் இருப்பது அதிர்ச்சி தந்தது.

சுகந்தியின் நோய் குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் நான் எழுத்தில் பதிவுசெய்து வெளிப்படுத்த வேண்டுமெனப் பல எழுத்தாளர்கள், நண்பர்கள் பல சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது என் குடும்ப வாழ்க்கையோடானது என்பதால் தவிர்த்து வந்திருக்கிறேன். அவரின் நோய்த் தன்மையிலிருந்து விடுபட, சிகிச்சை முறையாகவே எழுத்தையும் அவர் எழுதியதை நான் ஊக்குவித்துப் பயிற்சியாகவும் மேற்கொள்ளச் செய்தேன். இலக்கிய வாசிப்பையும் அப்படித்தான் ஊக்குவித்தேன். (சாதாரண கிராமத்துப் பெண் அவர். +1 படித்தவர். இலக்கிய வாசிப்பு எதுவும் இல்லாத சாதாரண குடும்பம். 1984இல் திருமணம்.) ஆனால் நாளாக நாளாக நோயின் தன்மை வெகுதீவிரமடைந்து தொடர்ந்து கடுமையான மருத்துவ சிசிச்சைக்கு அவரை உட்படுத்தியது. கவிதையெழுதும் வெளிப்பாட்டுப் பயிற்சிமுறை பற்றியோ 17 ஆண்டுகளுக்கு மேலாக எனது சேமிப்பின் பெரும் பகுதியை அவரின் சிகிச்சைக்கென்று செலவழித்துவந்தது பற்றியோ என் இரு பெண் குழந்தைகள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்ந்து, இயல்பான குழந்தைப் பருவத்தை இழந்தது பற்றியோ நல்ல கல்விச் சூழல் அவர்களுக்கு அமையாதது பற்றியோ என் வாழ்க்கையின் மிக முக்கியமான நீண்ட காலம் துயரத்தால் நிரம்பியது பற்றியோ நான் எங்கும் எழுத்தில் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் அரைகுறைத் தகவல்களைக் கொண்டும் பிறரது பிதற்றல்களைக் கொண்டும் அம்பை அஞ்சலியை எழுதியுள்ளார்.

அஞ்சலியில் புகைப்படம் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள காலச்சுவடு அம்பையின் தவறான தகவல்களைப் பிரசுரித்ததற்கு வருத்தம் கொள்ளவில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் சுகந்தி ‘கவிஞர் மீரா’ விருது பெற்றபோது அவரின் ஏற்புரை + கவிதைகளைக் காலச்சுவடு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியதற்குப் பிராயச்சித்தமாக மரணமடைந்தபோது ‘அர்ச்சனை’யைக் கொட்டியது.

சுகந்திக்கு அஞ்சலியாகப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் என்ற வகையில் நண்பர் ஜெயமோகன் அவரின் வலைப்பூவில் (Jeyamohan. in) பிப்ரவரி 13 தேதியிலேயே எழுதியிருப்பதை வாசகர்கள் படித்து அம்பை கூறியுள்ளவற்றுக்கு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். (அம்பை என்னுடன் தொலைபேசியில் பேசியது பிப்ரவரி 14). மாலதி மைத்ரி, லீனாமணிமேகலை, சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து 28.02.09 அன்று சென்னையில் நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் அசோகமித்திரன் அவர்கள் பேசியதைக் கேட்டறிந்து கொள்ளலாம். (அக்கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. அசோகமித்திரன் அவர்கள், அவரின் கூட்டப் பேச்சு பற்றி அடுத்த நாள் தொலைபேசியில் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.)

17 வருடங்களுக்கு மேலாக நோயுடன் போராடி மிகுந்த சிரமங்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த சுகந்தி, மாரடைப்பு மூலம் “விடுதலை” பெற்றுவிட்டாரெனத் தோன்றுகிறது. ஆனால் அம்பை போன்றோர் அள்ளித் தெளிக்கும் அவதூறு நோய்க்கிருமியிலிருந்து நான் எப்போது விடுதலை பெறுவேன் எனத் தெரியவில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு இது என்னையும் என் மகள்களையும் என் உறவினர்களையும் அலைக்கழித்து அவர்களையும் சிகிச்சைக்கு உட்படுத்த நேருமோ என்னும் பயம் என்னை நிலைகுலைய வைக்கிறது.

வெள்ளி, 27 மார்ச், 2009

சுப்ரபாரதிமணியனின் " திரைவெளி "

செழியன்
-----------
சிறந்த சினிமா அறிமுகம் : திரைவெளி

------------------------------------------------
-உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல்.
-----------------------------------------------------------------------------------------------
நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம், அரசியல் சார்ந்த பின்புலங்களை அறிந்து கொள்வதற்கும் பரவலான அறிமுகம் தேவைப்படுகிறது. அந்த அக்கறையுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட ஒர் பார்வையாளரின் குறிப்புகளென " திரைவெளி "வந்திருக்கிறது.
செம்பேன் உஸ்மான் என்கிற ஆப்ரிக்க இயக்குநரில் இருந்து ஆலிவர்ஸ்டோன் என்கிற அமெரிக்க இயக்குனர் வரை அரிதான படங்களைப் பேசும் இந்த நூல் "ஸ்ரீ கனகலெட்சுமி ரெக்கார்ட் டான்ஸ் குரூப்" என்னும் சுவாரஸ்யமான தெலுங்கு நகைச்சுவைப் படம் குறித்த தகவலையும் தருகிறது. சோமரத்னே திசனாயக்கே எனும் இலங்கை இயக்குனரின் தேசியவாத பற்றிச் சொல்கையில், 'இலங்கையின் உயர் அதிகாரம் இன வர்க்க மேலாதிக்கமும் தமிழர்களை நிலையற்றவர்களாய் வைத்திருக்கும் துயரமும் இந்தப் படத்தில் சரியாகவே வெளிப்படுகிறது' (ப.62) என்று சொல்லும் இந்நூல், ஈழத் தமிழர்கள் பிரான்ஸ’ல் எடுக்கும் மூன்றாந்தரமான வீடியோ படங்கள் குறித்த செய்திகளையும்('எண்பதுகளில் வெளி வந்தவற்றில் தனிப்புறா, நீதியுன் சோதனை குறிப்பிடத்தக்க படங்கள்.ப.65) மாற்றாக ஒரு நல்ல குறும்படமான குடா என்கிற ஆதிவாசிகள் பற்றிய கேரளப்படத்தைப் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் மீது மதரீதியான அடக்குமுறையைச் சொல்லும் சப்மிஷன் என்ற வெளிநாட்டு குறும்படம் பற்றிய செய்தியையும் பதிவு செய்கிறது.(ப.116).
உலகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசும் அதே ஆர்வத்துடன் இந்தியாவின் பிற மொழிப்படங்கள் குறித்த செய்திகளையும் இந்த நூல் பதிவு செய்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, இந்தி, வங்காளம், மராத்தி முதலிய மொழிகளில் நிகழ்ந்திருக்கும் திரைப்பட முயற்சிகளும் பதிவாகியிருக்கின்றன. 'ஆசுவாசம் தரும் மராத்திய திரைப்பட உலகம்", தெலுங்கு திரைப்பட உலகம் 88' போன்ற எளிய தலைப்புகளால் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் அதன் தரம் சார்ந்த விவரங்களை நூலாசிரியர் சுப்ரபாரதிமணியனின் அபிப்ராயங்களுடனும் இந்த நூல் பதிவு செய்கிறது. ஆதிவாசிகளின் இயல்பான பாடல்களும் அவர்களின் மரபு ரீதியான இசையும் படத்திற்கு உயிர்ப்பூட்டுபவை. ஆனால் வெளிப்பாட்டு முறையில் கதாபாத்திரங்களின் வகையும் சற்று மிகையாக சில இடங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.( ப.22).
படங்கள் பற்றிய செய்திகளை நேரடியாகச் சொல்லாமல் தனது சந்திப்பு மற்றும் பயணஅனுபவம் சார்ந்த கட்டுரைகளாகவும் தனது வாசிப்பு சார்ந்த பதிவுகளாகவும்மாற்றுவது இந்தக் கட்டுரைகளின் பலம். பல இடங்களில் கட்டுரைகள் நேரடியான தகவல்களாகவும் அமைந்து விடுகின்றன. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட போதும் தவறாக பக்க எண்கள் குறிக்கப்பட்ட பொருளடக்கம் புத்தகத் தயாரிப்பிலிருக்கும் குறை. நேரடியான கட்டுரைகள்றவிர அயல்நாட்டு இயக்குனர்களின் சிறு பேட்டிகளும் இங்மர் பெர்க்மனின் ஒரு கடிதத்தின் மொழியாக்கமும் இந்த நூலில் உள்ளன.
பலருக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும், வெகுசிலரே தாங்கள் பார்த்த படங்கள் பற்றி எழுதுகிறார்கள். வெறுமனே பார்த்த படங்களின் பெயர்களை அடுக்கி பெருமை பேசுவதையும் இங்குள்ள படங்களை விமர்சிப்பதையும் விடுத்து, நல்ல திரைப்படம் மீது அக்கறை உள்ளவைகள் அது குறித்து எழுத முன்வர வேண்டும். அந்த வகையில் திரைவெளி வழங்கும் அறிமுகம் முக்கியமானது.
= செழியன்
=====================================================================
( செழியன்= "காதல் உட்பட பல தமிழ்த்திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர்)
" திரைவெளி " திரைப்படக்கட்டுரைகள் = அம்ருதா பதிப்பகம், 5, அய்ந்தாவது தெரு,
சக்தி நகர், போரூர், சென்னை 116. ரூ 80/
=====================================================================

வெள்ளி, 20 மார்ச், 2009

தேர்ந்தெடுத்த கவிதைகள்

சுக‌ந்தி சுப்ர‌ம‌ணிய‌த்தின் 'மீண்டெழுத‌லின் இர‌க‌சிய‌ம்' தொகுப்பை நாலைந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாசித்திருந்தேன். இன்றைய‌ த‌மிழ‌க‌ப்பெண் க‌விஞைக‌ளுக்கு முன்னோடியாக‌ இருந்த‌ அக்க‌விதைக‌ளை ச‌ம‌கால‌த்தில் அவ்வ‌ள‌வாய்ப் பேச‌ப்ப‌ட‌வில்லையேயென்ற‌ எண்ண‌மே வாசித்த‌ கால‌த்தில் தோன்றிய‌து. (சுக‌ந்தி சுப்ர‌ம‌ணிய‌த்தின் ம‌றைவிற்கான‌ அஞ்ச‌லியாய் சில‌ க‌விதைக‌ளை அவ‌ரின் தொகுப்பிலிருந்து எடுத்துப்போட‌லாமென்றால் இத்தொகுப்பு என் வ‌ச‌மில்லை; ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் வாசிக்க‌ இர‌வ‌ல் கொடுத்த‌து, திருப்பி வாங்க‌ ம‌ற‌ந்துவிட்டேன். )
--------------------------------------------------------
தேர்ந்தெடுத்த கவிதைகள் (8 )
-------------------------------------------------------
உயிர்ப்பு
ஒவ்வொரு கணமும்

அழுதுகொண்டிருந்தேன்.
ஜன்னல்களும் கதவுகளும் மூடிக்கிடந்தன.
அறைகள் இருட்டியிருந்தன
. எல்லாம் மௌனமாய்.
கதவு மெல்ல அழைத்தது;
அழாதே சாப்பிடு என்றது.
எழுந்து போய் திறந்தேன்.
பேரிரைச்சலுடன் நகரத்தை
அதிகாலை தந்தது.
புன்னகையுடன் தரையிறங்கினேன்.
என்னைக் கழுவு என்றது
வாசல் கோலம் போடு
என்றழைத்தது மண்.
தண்ணீர்விடு
என்றழைத்தன செடிகள்.
-0-
எனது உலகம்
உன்னால் எதுவும் செய்ய முடியாது

கேலியாய்ச் சிரித்தான்.
உண்மைதான். உண்மையில்லை.
இந்த உலகம் குறித்து

என் நம்பிக்கைகள்
இன்னும் சிதைந்தபடி

ஆனால் நான் நம்பிக்கையுடன்.
இந்திய ஜோக் என்றான் ஒருவன்.
விரலை என் முன் நீட்டி

கண்களை உருட்டியபடி அவன்.
இருந்தாலென்ன?
நான் இன்னமும்

எனதுலகத்தைத் தொலைக்கவில்லை.
முரண்பாடுகளே வாழ்க்கை என்றானபின்

எதுதான் சரி?
எதுதான் தவறு?
-----------------------------------------------

எனது உலகம்
------------------
யாரைப் பற்றியும் பேச எனக்கு உரிமையில்லை.
ஆனால் என்னைக் குறித்துப் பேச எல்லோருக்கும்
உரிமையிருப்பதாக அவன் சொன்னான்.
யார்? எப்போது? ஏன்?

நிர்ணயித்தார்கள் என்றேன்
அது உனக்கு அநாவசியம் என்றான்.
எனக்கு மிகவும் அவசியமானதாக
என் உலகை உணர்ந்தேன்.
இவர்களின் செயல்கள் எனக்கு
எரிச்சலூட்ட கேள்விகளற்று உறைந்து போனேன்.
------------------------------

எனது தோழிகள்
--------------------
அவ்வப்போது சண்டையிட்டாலும்

நாங்கள் நல்ல தோழிகளாகவே இருந்தோம்.
அஸ்மாவும், லூஸியாவும், வரலட்சுமியும், ஷோபாவும்.
அவர்களைப் பற்றி நான் பேசும்போது
என்னைப் பற்றி அவர்களும் பேசுவார்களென நினைத்தேன்.
பெரியவர்களின் மதச் சண்டைகள் எங்களுக்கு அநாவசியமாய்
தெரிந்தது
பெரும்பாலும் எங்கள் சமையல் அவர்களுக்கும்
அவர்களது எங்களுக்கும் பிடித்திருந்தது.
நகரத்தில் கலவரம் நேரும்போதெல்லாம்
நாங்கள் கவலைப்பட்டோம்.
அதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?
எங்களுக்கான நேரம் மிகக் குறைவாக இருந்தது.
தவிரவும்,
எங்களை எதுவும் செய்துவிடாதபடி
எல்லோரும் பாதுகாத்தனர்.
நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம்.
தோழிகளாக இருப்பதையே விரும்பினோம்.
ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பிடிக்காவிட்டாலும்.
----------------------------------------------------------------------------
பார்வையும் நானும் சமூகமும்
-------------------------------------------
எனது பார்வை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.
என்றாலும்
மிக முக்கியமாய் நகரில் நடப்பவை எல்லாம்
விடுபட்டுத்தான் போகின்றன.
காலங்கடந்து தெரிந்தாலும் ஏனோ
எதுவுமே பாதிப்பதில்லை.
இதுதான் சரியென எல்லோரும் சொன்னாலும்
எனக்குள் எப்போதும் வருத்தமாய் இருந்தாலும்
நானும் ஆக்ரோஷமாய் தடிகளைச் சுழற்றியபடி
வேகமாய் ஒவ்வொருவரையும் தாக்குவதாய் நினைக்கிறேன்
எதிரே வரும் தபால்காரரிடம் புன்னகையோடு பெறும்
கடிதங்களில் எந்த விசேஷமுமிருக்காது என்றாலும்
பெயர்ப் பட்டியலாய் நீளும் அவற்றை எப்போதும் விரும்புவேன் வுளையல்கள் ஒலிக்க தோழிகள் வருவர்.
அவர்கள் முகம் பார்த்து மகிழ்வேன்.
எல்லாம் சில கணங்கள் வரைதான்.
மீண்டும்
என் உலகில் நான் நுழையவேண்டியிருக்கிறது.
நான் விரும்பாவிட்டாலும்
காற்று என்னை வருடிச்செல்வதுபோல.
அவளைக் குறித்து எந்த வருத்தமில்லை என்றாலம்
அவளுக்காய் இரக்கப்படுகிறேன்.
அவள் முகம் பார்க்கும்போதெல்லாம்
சுடுசொற்கள் வந்துவிடுகின்றன.
மிகவும் வேதனைதான்; என்ன செய்வது?
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
அது;
நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்.
புதிய திரைப்படங்களின் பாடல்களை
மிகச் சத்தமாய் அவர்கள் ஒளிபரப்புகையில்
நானும் எனது தோழிகளும்
மெளனமாய் சங்கடத்துடன்
சேலையை சரிசெய்து கொள்ளநேர்கிறது.
--------------------------------------------------------

எனது தனிமையைப் போக்க
எவ்வழியும் கிடைக்கவில்லை.
நானறிந்த சுற்றமும்
தோழிகளுடனான இருப்பும்
விலகலைக் கற்றுக் கொடுத்தது.
மீண்டும் தனிமையில் இருக்கையில்
என்னை இயல்பாக்க
முடியாமல்
ரயிலும் தண்டவாளமும் இணையும்
தருணத்தில்
சிக்கித் தவிக்கும் உயிராய்
நிமிடத்தை வருஷமாக்கி
வேவு பார்க்கிறது மனசு.
இன்னமும் தீரவில்லை
எனது உணர்வுகள்.
எதுவும் தேவையில்லை
என
உதறித்தள்ள நானென்ன ஜடமா...
வீட்டிலிருக்கும் ஜடப்பொருளுக்கு
போட்டியாய் கிடந்து தவிக்கிறேன்.
எதுவாகவும் நானில்லை.
எனது நான்
வீட்டின் இருண்டமூலையில்
பதுங்கிக் கிடக்கிறது எலிகளோடு
---------------------------------------------

எதைச் சார்ந்து இருப்பது?
ஆல்லது
எப்போது யாரைச் சார்ந்து இருப்பது?
திருமணமாகும்வரை பெற்றோரும்
ஆனபின் கணவனும் பாதுகாக்க
நடுநடுவே
மூக்கை நுழைக்கும் சமூகத்திற்கு
சொரணையே இல்லை.
என் மேல் ஆவியிருப்பதாக
எல்லோரும் நம்பினார்கள்;
ஏன் நீயும்தான்.
எனக்கு இரண்டு யோசனை.
இருந்தாலும் பாட்டியுடன்
துதிக்கையாட்டும்
யானை பார்க்க கோவிலுக்கு சென்றேன்.
அது தன் கப்பீரத்தை இழந்து
பத்து காசுக்காய் குனிந்தது.
எனது தோழிகள் என்னை விரோதியாக்கினர்.
தோழர்களோ பத்தடி
தள்ளி நின்று பேசினர்.
எல்லாவற்றுக்கும் மேலாய்
எனது தனிமை என் வீட்டில்
எனைச் சார்ந்து இருக்கிறது
----------------------------------------------------
அறை
-----------
அறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது.
கோடைகாலம் குளிர்காலம்
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது.
எனக்குத் தோவையானதை
அறைக்குள்ளே பெறுகிறேன்.
இந்த அறை எனது எதிர்ப்புகளை
அலட்சியப்படுத்துகிறது.
உனது அடையாளமெங்கே
என இளிக்கிறது.
இந்த அறையில்
நான் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்
அவர்களால் அவர்கள்
அறைகள் நிரம்பிவழிவதாகவும்
எனக்கு தகவல் வருகிறது.
இது என்ன விசித்திரம்!
அறைகளுக்கு எப்போது
கண்கள் முளைத்தன?
இனி எனக்கு நிம்மதியில்லை.
நான் நானாக இருக்கவே முடியாது.
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன.
அறைக்குள் என் ஆடைகளை மீறி
கண்கள் என்னை ஒற்றறிகின்றன.
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.
---------------------------------- --------------------

மீண்டெழுதலின் ரகசியம் -சுகந்தி சுப்ரமணியம் யுனைடெட் ரைட்டர்ஸ் 130/2 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86 முதல் பதிப்பு டிசம்பர் 2003 --------------------


பெட்டைக்குப் பட்டவை
ஒரு பொடிச்சி
Canada

கவிதாயினி சுகந்தி சுப்ரமணியன்

ஒரு பெரிய அணை. நீர் நிரம்பிய நிலை. மேலும் நீர் வருகிறது. உடைப்பெடுக்கும் நிலை. இப்போது நீர் எப்படி வெளியேறும்? அணையின் பலவீனமான பகுதியின் வழியாகத் தான் முதலில் வெளியேறும். அந்த நீர் மேற் புறமாக வழியலாம்; சுவரில் வலுக்குன்றிய பகுதி உடையலாம்; தடுப்புகள் லேசாக இருந்தால் பிய்த்துக்கொண்டு போகலாம்; அல்லது வந்த வழியாகவே வெளியேறி விடலாம்....இப்போது மனித மனத்திற்கு வருவோம். பெரும் துயரத்தைச் சந்திக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்ணீர் விட்டுக் கதறலாம்; சினமுற்றுக் கத்தலாம்; மன அழுத்தத்தால் மௌனம் காக்கலாம்; புலம்பித் தள்ளலாம்; அதிரடியாய்ப் போராட்டத்தில் இறங்கலாம்.... இப்படி மனம் எந்த இடத்தில் பலவீனமாய் இருக்கிறதோ, அந்த இடத்தின் வழியே துயரம் வெளிப்பட்டுவிடும். இப்படித் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் துயரம் வெளிப்படுகிறது. துயரங்களின் கனம் தாங்காத சுகந்தி சுப்ரமணியன் (37), கவிதை எழுதுகிறார்.மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்.... என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.மாத விடாயின் போதும் கருவுற்ற போதும் பெண் படும் துயரங்கள், மற்றவர்களுக்காக அவள் வாழவேண்டியிருப்பது, அவள் எதிர்கொள்ளும் வசை, வன்முறை, உரிமை மறுப்பு, அடையாளம் இழப்பு, அவமானம், தன் முகம் பற்றிய எதிர்வீட்டுக்காரியின் வர்ணனை, பாதுகாப்பின்மை, எதிலிருந்தும் தப்பிக்க முடியாத வாழ்க்கை, தனிமைத் துயர், குடும்பத்திற்குள் அகதியான நிலை, "போதும் கலைத்துவிடு எனச் சொல்ல பக்கத்து வீட்டில்கூட ஆட்கள் இருக்கும்' சமூகம், உறவுகளின் உண்மை முகம், நிலை யின்மை, நழுவிச் செல்லும் வாழ்க்கை.... எனச் சுகந்தியின் விரல், இந்தச் சிரிக்கும் உலகின் உண்மைத் தோற்றத்தை அம்பலப்படுத்துகிறது.இத்தகைய உலகத்தை நெருக்கமாகக் காணும் ஒருவர், எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என நாம் கணிக்க முடியும்."என்னைக் கவலைகள் தின்னத் தகாதென நின்னைச் சரணடைந்தேன்' என்றான் பாரதி. கவலை, ஒரு விபரீத நோய்க் கிருமி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதைதான். உள்ளே நுழையவிட்டால் பிறகு, நம்மையே தின்று ஏப்பம் விட்டுவிடும். கவலையின் கரங்களில் நாம் ஒரு பொம்மையாகிவிடக் கூடாது. நம் சூத்திரக் கயிறு, நம்மிடமே இருக்கவேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான செயலா என்ன?"ஆகாயத்தில் கண்ணும் பூமியிலே மனசுமாய்' இருக்கும் சுகந்தி, மென்மையான-நுண்மையான மனத்தவர். அவரால் இந்தக் கவலைகளை வெல்ல முடியவில்லை.எனக்குள் சிதைந்து போகிறேன். என்றாலும் என்னை மீட்டுக்கொள்ளத்தான் வேண்டும். என் எலும்புகளில் ரத்தத்தோடு உணர்வுகளையும் நான் மீட்டாகவேண்டும். என் சுவாசத்தினூடே விஷம் உறிஞ்சப்படுவதையும் நான் நிறுத்தியாக வேண்டும்.... - என்ற கவிதையில் ஒரு மிதமிஞ்சிய அச்சமும் பதற்றமும் விரிகின்றன.சிரித்திரு என்கிறாய். சரிதான். என்னால் முடியவில்லை. எல்லோரும் அப்படித்தான் என்கிறாய். என்றாலும் முடியாதென்கிறேன். சும்மாகிட என்கிறாய். மாட்டேன் என்றேன். செத்துப்போ என்கிறாய் என்னை உன் காலால் எட்டித் தள்ளியபடி. எனக்கென நான் வாழ்க்கையை மிச்சம் வைத்திருக்கிறேன் வாழமுடியாமல் - "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' எனப் பாடியதெல்லாம் என்ன ஆயிற்று? நம் பெண்கள் பலருக்கு இந்த அனுபவம் என்ன புதிதா? இப்படி ஒரு நாள் கழியாவிட்டால் அதுதானே புதிது.அவள் முகம் பார்க்கும்போதெல்லாம் சுடுசொற்கள் வந்துவிடுகின்றன. மிகவும் வேதனைதான்; என்ன செய்வது? நான் ஏன் இப்படியாகிப் போனேன்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். அது: நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான் - இப்போது சிக்கலின் அடித்தளம் என்னவென்று புரிகிறது. நான் என்ற உள்மன வேட்கை, ஒவ்வொரு மனத்திற்குள்ளும் சாம்பல் மூடிய தீயெனக் கனலுகிறது. இன்னொரு கவிதையில் பாருங்கள்.சுகந்தி பெரும்பாலும் துயரத்தையும் எதிர்மறை உணர்வுகளையுமே எழுதுகிறார். ஆனால், ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாய் அமைந்துள்ளது. வாசிக்கையில் அதே உணர்வில் நாம் இழுத்துச் செல்லப்படுவதை உணருகிறோம்.இந்த மரம் என்னைத் திட்டியதில்லை அல்லது எந்த மரமும். என் நன்றியைத் தெரிவிக்கிறேன் மீண்டும். - இந்தக் கவிதை, வலியைப் பேசுகிறது. ஆனால், இதில் ஒரு புதுமையான வெளிப்பாடு இருப்பதைக் கவனித்தீர்களா?சப்தங்களின் கூடாரங்களில் நடனமாடிய சொற்களை ஆணியடித்து அறைந்த பின்னும் அலையடித்துக் கிடக்கும் மனசை மணல் வெளியில் எறிந்த பின்னும் எங்கோ இருக்கும் பறவை தேடும் தன் இனத்தை வீட்டில் தொலைத்தபின்னும் எதுவுமில்லை இனி தொலைக்க என்று ஆகிப்போன பின்னும் நான் சப்தங்களின்... - மொத்தக் கவிதையுமே இவ்வளவுதான். இந்தக் கவிதையின் வடிவத்தில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கிய சொல்லிலேயே முடிவ தோடு, ஒரு சுழலும் தன்மை இதில் இருக்கிறது. முடியும் இடத்தில் கவிதை, மீண்டும் மீண்டும் தொடங்கிவிடுகிறது.மனம் ஒரு விசித்திரம். அது, நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கிறது. "மதம் பிடித்த யானையாய்', "அறுந்துவிடப்போகும் பட்டம்போல்', "விடை தேடும் பறவையாய்', "ரயி லும் தண்டவாளமும் இணையும் தருணத்தில் சிக்கித் தவிக்கும் உயிராய்', "தத்திப் பறக்கும் சிறு குருவிபோல்' எனப் பல வகைகளில் சுகந்தியின் கவிதை மனம், அவதாரம் எடுக்கிறது.புதையுண்ட வாழ்க்கை (1988), மீண்டெழுதலின் ரகசியம் (2003) ஆகிய கவிதைத் தொகுப்புகளைச் சுகந்தி படைத் துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன்பே பெண்ணியத்தின் குரலை ஒலித்தவர். "கவிஞர் மீரா இலக்கிய விருது' பெற்றவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. திருப்பூரில் வசிக்கிறார். தற்சமயம் உடல்நலன் குன்றி யுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்.உண்மையில் எல்லோருக்கும் பிடித்தமானதைப் பற்றிப் பேசத்தெரியவில்லைதான். ஆனாலும் நட்பு தோழமை போன்றவை வெற்று வார்த்தைகளாகிப் போனபின் எனக்கெதற்கு இந்த விசாரம். மனித நடமாட்டமில்லாத இடங்கள் ஆபூர்வமானவை; அழகானவை கூட.... - மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கும் போது இந்த இடத்திற்குத்தான் வந்துசேர வேண்டியிருக்கிறது.இந்த உலகில் மனிதர்கள் குறைவு; வேறு உயிரினங்களே மிகுதி. ஆனால், உலகின் அமைதி, பெரும்பாலும் மனிதர்களால்தான் கெடுகிறது. மனிதன், பிற உயிரினங்களுக்கு மட்டுமில்லை; தன் சக மனிதனுக்குக்கூட மகிழ்ச்சியை அளிப்பதில்லை. சுயநலமும் ஆதிக்க மனோபாவமும் இந்த அழகான பூமிப் பந்தை, துயரக் கிண்ணமாக மாற்றி விடுகின்றன.நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமா என அறிய, ஒரு சிறிய சோதனை. நீங்கள் இந்த உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வெட்ட வெளிக்கு வாருங்கள். உங்கள் காலின் கீழ், தலைக்கு மேல், எட்டுத் திசைகள் என 360 பாகை அளவில் ஒரு சுற்று சுற்றிப் பாருங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கோணத்திலும் மனிதன் அல்லாத ஏதேனும் ஓர் உயிரைப் பார்க்கிறீர்களா? அதுவே சிறந்த இடம். நீங்கள் இருக்கும் இடம், சிறந்த இடமாக இல்லையென்றால் அதைச் சிறந்ததாக மாற்றுங்கள்.ஒரு சின்னஞ்சிறு குருவியாலும் மலராலும் நாய்க்குட்டியாலும் நமக்கு மகிழ்ச்சியைத் தரமுடிகிறது! ஆறு அறிவு படைத்த மனிதர் பலரால் அது முடியவில்லை. இஃது ஒரு விநோதம்தான். ஆனாலும் நல்லவர்களும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அதனால் தானே அவ்வப்போது மழை பெய்கிறது. முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்.நமக்கென ஒரு கதவு திறக்கும். நம் வெக்கையைப் போக்க, ஒரு குளிர்த்தென்றல் நம்மைத் தழுவும். முட்செடியிலிருந்தும் ஒரு பூ மலரும்.சொல்லத் தெரியாத பறவை தன் சந்தோஷத்தை பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில் - என்கிறார் சுகந்தி. அந்தப் பறவை, உங்கள் தோளில் வந்து உட்காருவதாக

சுகந்தி சுப்ரமணியன் சில நினைவுகள்


சுதந்திரம் என்பது காற்றுஇசையைப் போல் உயிர் வளர்க்கும்.சுதந்திரம் என்பது ஒரு கலைகவிதைகளை உருவாக்கும்.சுதந்திரம் என்பது ஒரு கற்பனைநம்மை நமக்கே பகையாக்குகிறது.சுதந்திரம் என்பது அபாயம்அது நம்மைச் சோதிக்கிறது.அது நாகத்தைப் போன்றது.கூரான கத்தியைப் போன்றது.ஒரு விளையாட்டைப் போன்றது.எல்லோருக்கும் சுதந்திரம் தேவை.எவருக்கு எவரிடமிருந்து எப்படி?சுதந்திரம் நதியைப் போன்றது.சுதந்திரம் மரத்தைப் போன்றது.சுதந்திரம் நிலவைப் போன்றது.சுதந்திரம் பெண்ணைப் போன்றது.சுதந்திரம் தாயைப் போன்றது.சுத்தமான மனசுக்குள் சங்கல்பமாகும் சுதந்திரம்.நம்மை அதுநம்மிடமிருந்து விடுவிக்கும்.-சுகந்தி சுப்ரமணியன் - 'மீண்டெழுதலின் ரகசியம்' தொகுப்பிலிருந்து...
இணையச் செய்திகள் மனச்சிதைவெனும் பாதாளத்தில் சரிக்க முயல்கின்றன. கவலைகளை மறக்க சிலர் மதுவருந்துகிறார்கள். வேறு சிலர் வீட்டிலிருந்து தப்பியோடி தனியறைகளில் தன்னிரக்க நெருப்பில் கருகிப்போகிறார்கள். சிலர் எழுத்தினைப் பற்றிப்பிடித்து இறங்கி ஓடிவிட முடியுமா என்று எத்தனிக்கிறார்கள். அதீத ‘புரட்சிக்காரர்’கள் சிலர் எழுத்தையும் மதுவையும் ஒன்றாகக் கலக்கிக் குடிக்கிறார்கள்.
அண்மையில் (28-02-2009) சுகந்தி சுப்பிரமணியன், கிருத்திகா ஆகியோரின் நினைவுகூரல் மாலதி மைத்ரியின் அணங்கு பெண்ணிய வெளி சார்பில் நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையோரமாக இப்படியொரு இடத்தைத் தேர்ந்து, அதில் மரமும் காற்றும் இழையும் சூழலில் நடனம் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று நினைத்த நடனமணி சந்திரலேகாவின் கவிதை மனசை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கவிஞர் சுகுமாரன் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டிருப்பது இந்த இடமாகத்தான் இருக்கவேண்டும். அதைக் குறித்து எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மீன் நாற்றத்திற்குப் பதிலீடாக சலங்கைகளின் ஓசை அவ்விடத்தை நிறைப்பதானது நமது மத்தியதர மனோபாவத்தைத் திருப்தி செய்வதாகவே இருக்கிறது.
கவிஞர் மாலதி மைத்ரி, கிருத்திகாவைப் பற்றியும் சுகந்தி சுப்ரமணியனைப் பற்றியும் பேசி அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்தார். கலந்துகொண்டு நான்கு நாட்களாகியும் சுகந்தியின் நினைவு அகல மறுத்து உள்ளுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. கவிதை எழுதக்கூடிய பெண்ணிலிருந்து பிறழ்நிலைவரை சென்ற மனப்பாதை எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு சுகந்தி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவரான எழுத்தாளர் அசோகமித்திரன் உட்பட பலரும் ‘சுப்ரபாரதிமணியன் மீது தவறொன்றுமில்லை… அவர் நல்லதொரு கணவனாகவே தென்பட்டார்’ என்றே சொன்னார்கள். சுப்ரபாரதிமணியனின் நண்பரான ஜெயமோகனும் தனது அஞ்சலிப் பதிவில் அவ்வாறே சொல்லியிருக்கிறார். மனம் பிறழ்ந்த ஒருவரை வைத்துக் காப்பாற்றிக்கொண்டு, குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் தோளில் தூக்கி நிர்வகிக்கவேண்டியதன் சிரமங்களை தோழியொருத்தி சொன்னாள்.
நினைவுப் பகிர்தல்களை மட்டும் கேட்டுவிட்டு வந்திருந்தால் ஒருவேளை மறந்திருக்கக்கூடும். ஆறே மணி நேரத்தில் தயாரானதாகச் சொல்லப்பட்ட அந்த நிகழ்த்து கலைதான் மனதைக் குடைந்து குடைந்து ஒருமாதிரிப் பித்துநிலைக்குத் தள்ளியிருக்கவேண்டும். இலக்கிய வட்டாரத்தால் நன்கறியப்பட்ட நடிகை ரோகிணி, தொலைக்காட்சியில் அடிக்கடி காணக்கிடைக்கும் மற்றோர் பெண், முகவசீகரமுடைய இன்னுமொரு பெண் (பெயரில் என்ன இருக்கிறது? :) என மூவர் அதில் பங்கேற்றார்கள்.
நீள்சதுரமான அந்த மண்டபத்தில் சச்சதுரமான துண்டொன்றின் கரை வழியாக மூவரும் நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள். கூடவே தேவாரம் பிழிகிறது. பிறகு சுகந்தியின் கவிதைகளால் பேசுகிறார்கள். வீட்டினுள் சிறைப்பட்டு வெளியை விழையும் அந்தக் கண்களில் கோடானுகோடி பெண்களைக் காணமுடிந்தது. சடார் சடாரென கோபத்திற்கும் கண்ணீருக்கும் பெருமிதத்துக்கும் மனச்சோர்வுக்கும் தாவும்போது நாங்கள் அவர்களானோம். ஏதேதோ பழைய நினைவுகளில் கண்ணீர் துளிர்த்தது. பெண்கள் எப்போதும் எந்நிலத்திலும் பாவப்பட்டவர்களாகவே இருக்கிறார்களே என்ற ஆற்றாமை பொங்கியது.
கவிஞர் இளம்பிறை பேசும்போது, தான் ஒருதடவை சுகந்தியைச் சந்தித்தாகவும் பேச முற்பட்டபோது அவர் ஆர்வம் காட்டாதிருந்ததாகவும் குறிப்பிட்டார். அப்படி அன்று சுகந்தி இருந்தமைக்கான காரணம் இன்று தனக்குப் புரிவதாகச் சொன்னார். அ.மங்கை, பன்னீர்செல்வம், மாலதி மைத்ரி எல்லோரும் ‘வாசுவேஸ்வரம்’பற்றிச் சொன்னதில் வாசிக்கவேண்டிய அடுத்த நாவல் அதுதான் என்று மனதிலிருத்திக்கொண்டேன். (இப்படிப் படிக்கவேண்டிய பட்டியல் நீளமாகக் காத்திருப்பதை நான் மட்டுமே அறிவேன் என்ற துணிவில் எழுதுகிறேன்) அ.மங்கை கிருத்திகாவைப் பற்றிச் சொன்னதில், தள்ளாமையிலும் தளராத கிருத்திகாவின் கம்பீரம் மனதில் தங்கியது.
நிறைய இலக்கிய ஆளுமைகள், நாடகக்காரர்கள், சினிமாவைச் சேர்ந்தவர்கள், கவிஞர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்கள். லிவிங் ஸ்மைல் வித்யா, அஜயன் பாலா, உமா ஷக்தி, ச.விஜயலஷ்மி, இளம்பிறை, இன்பா சுப்பிரமணியம், நரன், பாஸ்கர் சக்தி, அ.மங்கை, அசோகமித்திரன், நடிகைகள் ரேவதி-ரோகிணி, இசை, கடற்கரய், நந்தமிழ்நங்கை இன்னும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். ரேவதியின் விழிகளுக்கு இன்னமும் வயதாகவில்லை. அப்படியொரு சுடர் அதில். எனது அபிமான தாரகை அருகில் இருந்தும் ஒரு வார்த்தைகூடப் போய்ப் பேசமுடியாமல் கூச்சம் பின்னிழுத்துவிட்டது. ‘நீங்கள் இந்த நிகழ்வில் நன்றாக நடித்தீர்கள்’என்று ரோகிணியிடமும் சொல்ல நினைத்தேன். இங்கும் அதே கதை. மாலதி மைத்ரி நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து நடத்தினார்.
சுகந்தியை ஒரு பதிவின் மூலம் மனதிலிருந்து இறக்கிவிட முடியுமென்று தோன்றவில்லை. ‘மீண்டெழுதலின் ரகசியம்’தொகுப்பைப் படித்தேன். தனிமை தரக்கூடிய மனவிசித்திரங்கள் அவரைப் பீடிக்காமலிருந்திருந்தால், அல்லது மற்றவர்கள் சொல்வதுபோல அவ்விதம் அவர் கற்பிதம் செய்யாமலிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
வாழும்போது அருகில் இருப்பவர்களை மறந்துவிடுகிறோம். மரணத்தின் பின்னரே ‘நினைவுகூருகிறோம்’என்பது எத்தனை அமனிதத்தனமானது. ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்… நான் பழகியவர்களிடையே எனது சித்திரம் மரணத்தின் பின் எங்ஙனம் தோன்றுமென. எவ்விதம் நான் இவ்வுலகில் எஞ்சுவேன்… புத்தக வடிவிலா? நட்பார்ந்த புன்னகையாகவா? எனது நிலத்தைப் பற்றி நான் கிறுக்கி வைத்திருக்கும் பதிவுகளாகவா?
ஏன் எஞ்சவேண்டும்? இல்லாமல் போனபின்னும் இருக்க விளையுமளவு இந்த வாழ்க்கை என்ன இனிமையாகவா இருந்தது? மார்ச் 8இல் பெண்கள் தினம் வருகிறது. வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நிறையப் பொய்களைக் கேட்கவும் பார்க்கவும் வேண்டியதாயிருக்கும் என்று நினைக்கிறேன்

சுகந்தி சுப்ரமணியனின் 'மீண்டெழுதலின் ரகசியம்

' - சின்னச்சின்ன காட்சிகள்
பாவண்ணன்
சுகந்தி சுப்ரமணியனுடைய கவிதைகள் சின்னச்சின்ன காட்சிகளால் நிறைந்தவை. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது. கதறல் கேட்கிறது. மெளனமான அழுகையின் கண்ணீர்த்தடம் படர்ந்து உலர்ந்திருக்கிறது. ஆற்றாமையும் இயலாமையும் மாறிமாறி வெளிப்பட்டபடி உள்ளன. அக்கவிதைகளைப் புனையத்தூண்டிய புள்ளிகள் இவையாகவே இருக்கக்கூடும். வாசிப்பின்பொழுது மீண்டும் கண்டடையப்படுகிற இப்புள்ளிகள் வழியாக விரிவிடைகிற அனுபவம் பல தளங்களைநோக்கி நம் எண்ணங்களைத் திருப்பிவிடுகின்றது. இதுவே சுகந்தியின் கவித்துவ வெற்றி. சிற்சில இடங்களில் காட்சிகளைத் தீட்டிக்காட்டுவதில் வெளிப்படும் அவசரமும் எழுதிய கவிதைகளுக்குத் தலைப்பிடக்கூட நேரமற்ற பதற்றமும் பலவீனங்கள்.
நதி போகும் இடத்தை அறியும் ஆவலை நெஞ்சம்முழுக்க நிறைத்திருக்கும் இளம்பெண்ணொருத்தியைச் சித்தரிக்கும் கவிதை வாசகனுடைய மனத்தில் உடனடியாக பதிந்துவிடக்கூடியது. நாற்புறச்சுவருக்குள்ளேயே குளியலை முடித்துக்கொள்கிற வயதில் இருப்பவள் பால்யகாலத்தில் பூப்பறிப்பு நோன்புக்காக தோழிகளுடன் சென்ற ஆற்றை நினைத்துக்கொள்கிறாள். பால்யம் முதலாகவே அவளைத் தவிக்கவைக்கிற கேள்வி தொடர்ந்து அவளை அறியாமையின் விளிம்பிலேயே நிறுத்திவைக்கிறது. திருமணத்துக்குப் பிறகு அதே கேள்வியை கணவனிடம் கேட்கிறாள். ஐம்பது மைல் தள்ளிப்போய் ஆறு போகுமிடத்தில் ஓர் அணையைக் காட்டி அதுவரைக்கும்தான் தனக்கும் தெரியும் என்கிறான். விடைகிட்டாத கேள்வி அவளிடமே தங்கிவிடுகிறது. ஆறும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆறு எங்கே செல்கிறது என்னும் ஒற்றைக் கேள்வியை ஒட்டியே இக்கவிதை தொடங்கினாலும் கவிதை கொடுக்கிற அனுபவம் பெண்ணுலகின் ஆழ்மனத்தில் விடையற்றுத் துடித்துக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கேள்விகளின் படிமமாக மாற்றிப் பார்க்கிறது மனம். வாழ்க்கை என்பது என்ன ? சமூகம் என்பது என்ன ? கவிதை என்பது என்ன ? எல்லாவற்றிலும் என் பங்கு எந்த அளவு ? எந்த எல்லைவரை எனக்கு அனுமதி உண்டு ? இப்படி ஏராளமான கேள்விகள். அரைநுாற்றாண்டுக்கு முன்னால் இப்படிப்பட்ட கேள்விக்கு 'எது எங்கே போனால் உனக்கென்ன, மூலையில் கிட ' என்பது பதிலாக இருந்திருக்கக்கூடும். சில நுாற்றாண்டுகளுக்குமுன்னால் ஒருவேளை இப்படி கேட்பதற்கு வாய்ப்பே அற்ற சூழலே இருந்திருக்கக்கூடும். இன்று அக்கேள்வியை மதித்து அணைக்கட்டுவரையாவது அழைத்துச்சென்று காட்டும் ஆண் கிடைத்திருக்கிறான். அவ்வளவுதான். இருபது நுாற்றாண்டுகளுக்குப் பிறகாவது பெண் மீது ஒரு சின்னக் கரிசனம் பிறந்திருக்கிறது. அவளுக்கு விடையளிக்கவேண்டியது தன் கடமை என்று எண்ணும் ஆண் பிறந்திருக்கிறான். 'எதுவரைதான் இந்த நதி போகும், வா இருவரும் சேர்ந்தே சென்று பார்க்கலாம் ' என்று சொல்லத்தக்க ஆண் உருவாவதற்கு இன்னும் பல ஆண்டுகள் கழியவேண்டும்போலும்.
இக்கேள்வி முன்வைக்கப்படுகிற முறை மிகமுக்கியமானதாகத் தோன்றுகிறது. முதலில் இக்கேள்வி அவள் மனத்துக்குள்தான் தோன்றுகிறது. பிறந்தவீட்டில் இருந்தவரைக்கும் யாரிடமும் சுதந்தரமாக இக்கேள்வியை அவள் கேட்டதாக குறிப்புகள் இல்லை. கேட்க இயலாத சூழலாகவோ அல்லது கேட்டும் பயன்விளையாத சூழலாகவோ அவள் பிறந்தவீடு இருந்திருக்கக்கூடும். திருமணத்துக்குப் பிறகுதான் அக்கேள்வியை அவள் தன் கணவனிடம் கேட்க முடிந்திருக்கிறது. ஒரு பெண் தன் கேள்விக்கான விடையை ஓர் ஆணை அணுகித்தான் அறியவேண்டியதுள்ளது என்னும் நிலை எத்தனை மோசமானது. தன் கேள்விக்கான விடையை தானே தேடி அறிவதற்கான கல்வி அல்லது வாய்ப்புகளை ஒரு சமூகம் மறுத்தே வந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் தருணமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஒரு சின்னக்கேள்வியை ஒட்டி உருவாகும் ஒரு கவிதை ஆண்-பெண் உறவையொட்டியும் பெண்-சமூகம் உறவையொட்டியும் எண்ணத்துாண்டும் அளவுக்கு வலிமை கொண்டதாக இருக்கிறது. கவிதையை இப்படி அசைபோடஅசைபோட பல எண்ணங்கள் எழுந்தபடி இருக்கின்றன.
தன் நினைவின்மையை நொந்துகொள்ளும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக வெளிப்படும் ஒரு கவிதையும் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. பிரசவத்தின்போது தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த முகம் நினைவில் இல்லை. முதல் கர்ப்பம் பற்றிய செய்தியை யாரிடம் முதன்முதலாகச் சொன்னோம் என்பதுவும் நினைவில் இல்லை. பள்ளியில் அரிச்சுவடி சொல்லித்தந்த முகம் நினைவில் இல்லை. விளையாடும் இடத்தில் ருதுவான கணத்தில் ஆறுதலாக கைப்பிடித்து அழைத்துவந்த முகமும் நினைவில் இல்லை. எல்லாத் தருணங்களுக்கும் அவற்றுக்கே உரிய முக்கியத்துவம் இருந்தும் எதுவும் நினைவில் இல்லை என்று கவிதை முடிகிறது.
வலிமிகுந்த ஆற்றாமையின் ரகசியக்குரல் நம் செவியில் விழுந்த கணத்தில் அந்த வேதனையை நாமும் உணர்கிறோம். ஒரு வெற்றுத் தாள்போல நினைவின்மைகளின் தொகுதியாக ஒரு பெண்ணின் மனம் அமைந்துபோயிருக்கும் விதம் அதிர்ச்சியாக இருக்கிறது. உடலின் இயக்கம் பிறர் விதிக்கும் கட்டுப்பாடுகள் சார்ந்ததாக உள்ளது. மனமோ எந்த இயக்கமுமற்று தரிசாகக் கிடக்கிறது. இயக்கமற்ற மனம் கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணத்துக்குச் சமம். அப்படியென்றால் பெண்ணின் வாழ்க்கை என்பது உடலளவில் உயிர்ப்புள்ளதாகவும் மனத்தளவில் உயிரற்றதாகவும் அமைந்த ஒன்றுதானா ? நித்தமும் நடமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பலரோடு பழகிக்கொண்டும்தான் இங்கே பெண்ணின் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றே எடுத்துக்கொள்வோம். பல முக்கியமான தருணங்கள் அவள் வாழ்விலும் நிகழ்ந்தே வந்திருக்கின்றன என்றும் வைத்துக்கொள்வோம். ஆனாலும் எந்தத்தருணமும் அவள் மனத்தில் பதியாமல் போவதற்கான காரணம் எதுவாக இருக்கலாம் ? 'இதைஇதை மட்டுமே நீ நினைவில் வைத்துக்கொண்டால் போதும், மற்ற எதையும் மனத்தில் பாரமாக ஏற்றிச் சுமக்கவேண்டாம் ' என்றொரு குரல் புறத்திலிருந்து கட்டுப்படுத்தியபடி இருக்கக்கூடும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் . ஆணுக்குத் துணையாக நிழல்போல இருந்து காரியமாற்றும் பெண்ணுக்கென்று தனிப்பட்ட நினைவுகள் தேவையில்லை என்று எண்ணங்களால் மேலாண்மை செய்யப்படுவது மற்றொரு காரணமாக இருக்கலாம். 'தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு ' என்பது சுகந்தியின் இன்னொருகவிதையில் இடம்பெறும் வரி. தானியமற்ற வெற்றுக்குதிர்போல எந்த நினைவுமற்று இருப்பதாலேயே மனக்கதவுக்கு தாழின் அவசியம் இல்லாமல் போயிற்றா ? 'மனத்தைத் தொலைத்து பேயாய் அலைகிறேன் ' என்றொரு வரி மற்றொரு கவிதையில் இடம்பெறுகிறது. 'என்னைக்கொன்று இந்த மண்ணில் ஏற்கனவே புதைத்தாயிற்று ' என்னும் வரி சுகந்தியின் மற்றொரு கவிதையில் காணப்படுகிறது.
மானுட குலத்தின் நினைவுத்தொகுதியே வரலாறு. எந்தச் சமூக வரலாற்று நூலிலும் மனிதர்களின் இதயத்துடிப்புகள் ஒலித்தபடியே உள்ளன. ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமூகம் உருவாகிறது என்பது நம் நம்பிக்கை. ஆண்களின் மனஉலகம் ஏராளமான நினைவுத்தடங்களால் நிறைந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக, பெண்களின் மனஉலகிலோ ஒற்றை நினைவுகூட இல்லை. உலகவாழ்வில் சமபாதியாக வாழ்கிற பெண்குலத்தின் நினைவுச்சுவடுகளே வரலாற்றில் இல்லாமல் போகுமளவுக்கு புறக்கட்டுப்பாடுகள் அழுத்திக்கொண்டுள்ளன என்னும் சாரமே நம் அசைபோடல்களில் நாம் வந்து நிற்கிற புள்ளி. கசப்பு மிகுந்ததாகவே இப்புள்ளி தோன்றினாலும், இதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது முக்கியமான கேள்வி.
'அமைதி ' என்ற தலைப்பிலமைந்த கவிதையும் நல்ல அனுபவத்தைத் தரக்கூடிய ஒன்று. இக்கவிதையின் இறுதிவரிகள் மிகமுக்கியமானவையாகத் தோன்றுகின்றன.
'வழியும் நிலவின் ஒளிவெள்ளத்தில்
தேங்கிக்கிடக்கும் குளம்
கேட்பாரற்ற அமைதியில் '
ஒளிபொழியும் நிலவு ஒருபுறம். தேங்கிக் கிடக்கும் குளம் மறுபுறம். ஒன்று அழகு. மற்றொன்று அழகற்றது. ஒன்று இயங்கும் தன்மை கொண்டது. மற்றொன்று எந்த இயக்கமுமற்றுத் தேங்கிக் கிடப்பது. ஒன்று வானில். மற்றொன்று மண்ணில். எது எங்கே எப்படி இருந்தபோதும் இரண்டுமே தன்னை அமைதியாக மட்டுமே வெளிப்படுத்திக்கொள்கிறது. அமைதியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறவரைதான் அதற்கு இடமுண்டுபோலும். இப்படி இந்தப் படிமங்களைப் பிரிக்கப்பிரிக்க இவையனைத்தும் இருவேறு தன்மையுள்ள பெண்களின் சித்திரங்களோ என்னும் எண்ணம் எழுகிறது. எப்படிப்பட்ட தன்மை உள்ள பெண்ணானாலும் அமைதியை வெளிப்படுத்தும் பெண்ணுக்கு மட்டுமே வரவேற்பு இருக்கும்போலும். அமைதியை உடைக்கிற பெண்ணை என்ன செய்யும் என்னும் குறிப்பு கவிதையில் இல்லை. எண்ணங்களின் அணைக்கட்டை ஒரேவீச்சில் உடைத்தெறிந்துவிட்டு கவிதை முற்றுப்பெற்றுவிடுகிறது. கேள்விகளின் தடத்தையொட்டிச் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறோம் நாம்.
இப்படி எடுத்துச்சொல்ல சிறப்பான கவிதைகள் இத்தொகுதியில் பல உண்டு. கவிதை ததும்பும் மனநிலையில் பிறந்த ஒன்றிரண்டு வரிகளை இன்னும்இன்னும் மேலெடுத்துச் செல்லவியலாமல் தாழ்ந்து சரிந்துவிடும் சில கவிதைகளும் உண்டு. அவை முக்கியமல்ல என்றாலும், அத்தகு படிகளின் மீதேறி நின்றபடிதான் சுகந்தியின் சிறப்பான கவிதைகள் ஒளிர்கின்றன.
(மீண்டெழுதலின் ரகசியம்- சுகந்தி சுப்ரமணியன், யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86)

சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள்

மரணத்தின்
நுழைவாயிலுக்கு சென்று திரும்பிவிட்டேன் வந்த பின்னர் இன்னும் மரணத்தைப் பற்றின ஆசைதான் ஆனால் என் குழந்தைகளின் கண்ணீரில் மனது ஊஞ்சலாடுகிறது எனக்கும் சூரியனுக்கும் மரணம் பற்றின அச்சம் நீங்கிவிடுகிறது எல்லோரும் ரிஷிகளாகிறார்கள் மெüனம் எப்போதும் என்னைச் சிறையில் அடைக்கிறது. மரணம் ஒரு பெரிய விசயமல்ல. உயிரின் ஆசையில் மனத்திற்குள் சலசலப்பு பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும் கடிகாரத்தைப் போலவே மனமும் மரணமும் . . . பரிசுகளும் பாராட்டுகளும் ஆறுதல்படுத்திக்கொண்டே இருக்கின்றன ஆனால் நானும் என் உடலும் மெüனமாய்த் தொங்குகிறோம் - தூங்குகிறோம் மரணத்தை நீக்கிச் செல்லும் உதயசூரியன் வேதனையைத் தூண்டிவிடுகிறது. மூளை இறந்தபடி வாழ்கிறேன்

சுகந்தி சுப்பிரமணியம் - ஒர் அஞ்சலி


என்ன விதமான வாழ்க்கை வாழுகிறேன் என்று வெட்கமாக இருந்தது, சுகந்தி இறந்து போன செய்தி இன்றுதான் தெரிந்ததும். மு.கு ஜெகன்னாத ராஜா இறந்து போன செய்தியும் மிக மிக தாமதமாகவே தெரிந்தது. உண்மையில், அவர் இறந்து ஒன்றிரண்டு தினங்கள் ஆகியிருந்த போது, ராஜபாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தோம். அவர் வீட்டின் தெரு முனையில் ஒரு பிரஸ் இருக்கும் அது எப்போதும் கண்ணில் படும். உடனேயே அவர் நினைவு வரும்.அன்று, கணப்பித்தம் க்ஷணப் பித்தம் மாதிரி ராஜாவைப் பார்த்து விட்டு வருவோமோ என்று தீவிரமாகத் தோன்றியது.வாயிலிருந்து கெட்ட வாசனை வீசி, வேண்டாண்டா என்று தடுத்து விட்டது.அன்று ஜகன்னாத ராஜா உயிருடேனேயே இல்லை என்கிற விஷயம் தெரிய வந்த போது, கணநேரம் இருள் கவ்வி ஒரு வகை பயப் பந்து வயிற்றில் சுழன்று மறைந்தது.அருமையான மனுஷர். பல நல்ல சாதனைகளைச் செய்திருக்கிறார்.அவருடன் 25 வருடங்களுக்கு முன் டில்லி சென்றது மறக்க முடியாத அனுபவம்.ஆதர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவில் அவரும் சிட்டியும்தான் என்னை உறுப்பினர்களாகச் சேர்த்தார்கள். அந்தப் பயணத்தின் போதுதான் சாரு எனக்கு அறிமுகமானார். அந்த சந்திப்பை வைத்து ஒரு கதை கூட கணையாழியில் எழுதி இருக்கிறார்.சுகந்தியின் கணையாழிக் கவிதைகளின் பிரியமான வாசகன் நான். ஜெய மோகன் அவரது வாழ்க்கை பற்றியும் சுப்ர பாரதி மணியன் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.அவர்களது நெருக்கத்தின் காரணமாக சற்று அதிகமாகவும் எழுதியிருக்கிற மாதிரி தோன்றுகிறது.நானும் மரணம் வரை சென்று வந்தவன் என்பதால்,மாத்திரைகளின் துணையோடு வாழ்பவனென்பதால் சுகந்தியை 95-ல் சந்தித்த போது ஒரு இனம் புரியாத ஒட்டுதல் ஏற்பட்டது. சுகந்தியும் என் மனைவி, குழந்தைகளும், திலகவதியும் அன்று ரொம்ப அந்நியோன்மாய் பேசிக் கொண்டு இருந்தார்கள்..நான் சுகந்தியுடன் நிறையப் பேச நினைத்தவன் அந்த நெருக்கத்தின் காரணமாக, பேசாமலிருந்தேன், என் மனைவி சற்றுப் பேச்சை நிறுத்திய சமயம் ஒரு திடீர் மௌனம் சூழ்ந்தது.சுகந்தி கேட்டார் சார் என்ன பேசவே மாட்டேங்கிறேங்க.நான் அப்போதும் பேசவில்லை.சிரிக்க மட்டும் செய்தேன். அவருடைய கவிதைகளில் பெண் வாழ்வு சரியாகவே பிரக்ஞை பூர்வமாகவே சொல்லப் பட்டிருக்கிறது.சிலர் சொல்கிற மாதிரி பிறழ்வு பூர்வமானதில்லை.அவருடைய கவிதைத் தலைப்புகள் முக்கியமானவை.(மீண்டெழுதலின் ரகசியம்)அவரைப் பற்றி தெரிந்திருந்தாலும், அவருடைய குழந்தைகளின் முகங்களிலிருந்து அவர்கள் வாழ்க்கையை உணர முடிந்தாலும்,(மணியன் முகத்திலிருந்து இதைக் கண்டுணர முடியாது, அவர் இன்னொரு அற்புதப் பிறவி.) அதன் பாதிப்பில் சுகந்தியின் மனோநிலை இருந்திருந்தாலும்,அவருடைய எழுத்து சரியான தளத்திற்கு வந்து விடுகிறது. எனக்கு அவர் கவிதை வரிகளில் ஞாபகத்தில் அதிகமாய் இருப்பது.’’தோல்விகள் தொடர்கையில் நான் என்னுடனேநட்புக் கொண்டேன்...”,இதன் சாத்தியம் எனக்கு என்றுமே வசப் பட்டதில்லை.என்றாலும் கூட இதில் ஒரு வசீகரமும், நம்பிக்கையும் தென்படுவது தற்செயலல்ல. அவருக்கு முந்திய பெண் கவிஞர்களான மீனாட்சி, திரிசடை, இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டு 90 களின் பெண் கவிதைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் அமைந்தவை சுகந்தியின் கவிதைகள். சுகந்தியின் நீட்சியாக பல கவிதைகள் வெளிவந்துள்ளன.எனக்கு கானல் நீர் படத்தில் பானுமதி பாடுகிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்இதில் வளர்ந்தது சமுதாயம்-இங்குவந்ததின் பின்னே கேள்வியிலேயேவாழ்வதுதான் நியாயம்.


- கலாப்ரியா

வெள்ளி, 6 மார்ச், 2009

பாவண்ணன்

சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
------------------------------------------------------------
பாவண்ணன்
----------------
என் நண்பரும் எழுத்தாளருமான "சுப்ரபாரதிமணியன்" எண்பதுகளில் ஐதராபாத்தில் வசித்துவந்த சமயம் நான் கர்நாடகத்தில் வசித்துவந்தேன். அவருடைய திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை. துணைவியாரை அழைத்துக்கொண்டு அவர் ஐதராபாத்துக்குத் திரும்பிய பிறகு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். தன் மனைவியை தொலைபேசியிலேயே அறிமுகப்படுத்திவைத்தார் சுப்ரபாரதிமணியன். "சுகந்தி கவிதையெல்லாம் எழுதுவாங்க..." என்றார். ஒரு சில நிமிடங்கள்மட்டுமே அவரோடு நான் பேசினேன். சற்றே கீச்சுக்குரல். பத்துப்பதினைந்து வாக்கியம் பேசியதும் கரகரத்து உடைந்து இயல்பாக வெளிப்பட்டது.
அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அவருடைய கவிதைகள் "புதையுண்ட வாழ்க்கை" என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்தன. தலைப்பின் படிமத்தன்மை என்னை ஆழமாகப் பாதித்தது. வாழ்க்கையை நாம் ஒரு கொண்டாட்டம் என்கிறோம். மனிதப்பிறவிக்கே கிடைத்த அபூர்வமான வரம் என்கிறோம். அன்பை வழங்குவதற்கும் அன்பில் திளைப்பதற்குமான மாபெரும் வாய்ப்பாக வாழ்க்கையை நினைக்கிறோம். அந்த நிலையில் வாழ்க்கையை ஒருவர் புதையுண்ட நகரத்தைப்போல, புதையுண்ட தெய்வச்சிலையைப்போல புதைந்துபோனதாக முன்வைப்பதை நினைத்து ஒருகணம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும் அந்தத் தலைப்பின் வசீகரம் என் மனத்தைவிட்டு அகலவே இல்லை. மீண்டும்மீண்டும் அசைபோட்டுக்கொண்டே இருந்தேன். இயற்கையின் சீற்றத்தால் சூறாவளியோ ஆழிப்பேரலையோ நிலநடுக்கமோ உருவாகி வாழ்கிற ஒரு நகரத்தையே விழுங்கி உள்ளiழுத்துக்கொள்வதைத்தான் புதையுண்டதாகச் சொல்கிறோம். மாமல்லபுரத்தின் கடற்கரைக் கோயில்கள் கடலுக்கடியில் புதைந்துகிடக்கின்றன. வாழ்க்கையும் துயரம், கவலை, தனிமை, கண்ணீர் என்ற உணர்வுகளுக்கடியில் புதைந்துகிடக்கிறது. புராண காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான முக்கால் பகுதிக்கும் மேலான இந்தியப் பெண்களின் பொதுப்படிமமாகவே அத்தலைப்பை நான் உணர்ந்தேன். அக்கணம் சுகந்தியின்மீது நான் கொண்டிருந்த மதிப்பு இன்னும் அதிகமானது. பெண்கவிஞர்கள் அவ்வளவாக உருவாகி வராத காலம் அது. கவிதைகளைப் படித்தபிறகு என் வாழ்த்துகளைச் சொன்னேன்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு சந்திப்பை உதகை பகுதியில் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்புக்கு சுகந்தியும் சுப்ரபாரதிமணியனும் குழந்தைகளும் வந்திருந்தார்கள். அப்போதுதான் சுகந்தியை நேரிடையாகச் சந்தித்தேன். சங்கச் செய்யுள்களை வாசிப்பதுதொடர்பாக அன்று அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவற்றைப்பற்றி என்னிடமும் சந்திப்புக்கு வந்திருந்த பல கவிஞர்களிடமும் நிறைய கேள்விகள் கேட்டார். எளிய தோற்றத்துடன் கண்களiல் ஆவல் மின்ன அவர் உரையாடிய காட்சி என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.
நினைவிலிருந்து பிசகிவிட்ட பல முகங்களைப்பற்றிய குறிப்புகளை முன்வைத்தபடி தன் ஞாபகமறதியை நினைத்து மனவேதனைக்கு ஆளாகும் ஒரு கவிதை சுகந்தி எழுதிய கவிதைகளில் மிக முக்கியமானது. ஒரு பெண்ணுக்கு தன் பிரசவத்தின்போது தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த முகம் மறந்துபோகிறது. முதன்முதலாக தான் கருவுற்ற செய்தியை யாரிடம் சொல்லிப் பகிர்ந்துகொண்டோம் என்பதும் மறந்துபோகிறது. பள்ளியில் எழுத்தறிவித்த ஆசிரியரின் முகமும் மறந்துபோகிறது. விளையாடச் சென்ற இடத்தில் தற்செயலாக ருதுவான கணத்தில் அச்சத்துடன் கண்ணீர் பெருகிய சமயத்தில் ஆறுதலாக கையைப்பற்றி அழைத்துவந்து கனிவான சொற்களைச் சொன்ன முகம்கூட நினைவிலிருந்து விலகிவிட்டது. கவிதையில் சுகந்தி விவரிக்கிற வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு முக்கியமான தருணங்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தாமாகவே நினைவில் அழுத்தமாகப் பதிந்துவிடத்தக்க தருணங்கள். இருந்தபோதிலும் எதுவுமே நினைவில்லாதபடி எப்படி நிகழ்ந்தது? கவிதையைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. நினைவின்மையின் தொகுதியாக ஒரு வெள்ளைத்திரைபோல பெண்ணின் மனம் அமைந்துபோயிருக்கும் விதம் அதிர்ச்சியாக இருந்தது.
"எங்களூர் நதி எங்கே போய்க்கொண்டிருக்கிறது..." என்று தொடங்கும் கவிதையும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. ஓர் இளம்பெண் இக்கவிதையில் இடம்பெறுகிறாள். வழக்கமாக தாழிடப்பட்ட குயலறைக்குள் குளியலை முடித்துக்கொள்கிறவள் அவள். எதிர்பாராத விதமாக பால்யகாலத்தில் பூப்பறிப்பு நோன்புக்காக தோழிகளுடன் சென்ற ஆற்றை நினைத்துக்கொள்கிறாள். நதி எங்கே போகிறது என்னும் கேள்வி அப்போதுதான் அவள் மனத்தில் எழுகிறது. ஆனால் விடை தெரியவில்லை. மறுபடியும் அவள் ஆற்றைப் பார்ப்பது திருமணத்துக்குப் பிறகுதான். அப்போதும் அவள் மனத்தில் அதே கேள்வி தோன்றுகிறது. அத்தருணத்திலும் அவளுக்கு விடை தெரியவில்லை. அழைத்துச் செல்கிற கணவனுக்கும் விடை தெரியவில்லை. ஐம்பது மைல் தள்ளiப்போய் ஆறு செல்லுமிடத்தில் ஓர் அணையைக் காட்டி அதுவரைக்கும்தான் தனக்கும் தெரியும் என்கிறான் கணவன். விடைதெரியாத கேள்வி அவள் மனத்தில் அப்படியே எஞ்சிவிடுகிறது. ஆறும் தொடர்ந்து ஓடியபடி இருக்கிறது. இக்கவிதையின் தொடக்கத்தில் இக்கேள்வியை இளம்பெண் யாரிடமும் கேட்டதாக குறிப்பில்லை. திருமணத்துக்குப் பிறகு தன் கணவனிடம்தான் முதன்முதலில் வாய்திறந்து கேட்கிறாள். ஒரு விடைக்கான நீண்டகாலக் காத்திருப்பு அவலமும் துயரமும் மிகுந்தது.
சுகந்தியின் கற்பனைவளம் உற்சாகத்தை ஊட்டுவது. முதல் வரி கவிதையில் இறங்கியதுமே வேகவேகமாக சொற்கள் கூடிப் பெருகுகின்றன. தரையில் தண்ணீர் பரவி ஈரத்தடம் படர்வதுபோல அச்சொற்களில் அபூர்வமான ஓர் ஓவியத்தை வரைந்துகாட்டுகிறார் சுகந்தி. காற்று என்னும் கவிதை அப்படி வரையப்பட்ட ஓர் அபூர்வ ஓவியம். காற்றை சிறகிலாப் பறவை என்று அடையாளப்படுத்துகிறார். அக்கவிதையில் சந்தனமும் குங்குமமும் துலங்க தாம்பூலம் சிவக்க சந்தோஷமாக பூவைத்துக் காத்திருக்கிறாள் ஒரு பெண். கொலுசொலிக்க நடந்துவருகிற ஒரு தோழிபோல அருகில் வருகிறது காற்று. இருவரும் விளையாடிக்கொள்கிறார்கள். பெண்ணின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி சின்னக்குழந்தை என்று கொஞ்சிவிட்டு நகர்கிறது காற்று. கண்கள் சிவக்க அழும்போது உறங்கவைக்க முயற்சி செய்கிறது. கண்களை மூடிவிட்டால் காற்று நகர்ந்துவிடுமோ என வாட்டமுறுகிறாள் அவள். ஆனாலும் காற்றின் தாலாட்டில் உறங்காமல் இருக்கவும் இயலவில்லை. கவலையில் தோய்ந்த சிரிப்பையே காவலுக்கு நிறுத்திவிட்டு கண்களை மூடுகிறாள். தன்னிலை மறந்த உறக்கத்தில் அவள் ஆழ்ந்த பிறகு, செல்லச் சிரிப்போடு காவலுக்கு நின்ற கவலையில் தோய்ந்த சிரிப்பை அழைத்துச் சென்றுவிடுகிறது. ஒரு நாடகக்காட்சியைப்போலத் தோற்றம் தரும் இக்கவிதை துணையற்ற பெண்ணின் தனிமையையும் துணையாக நிற்கும் காற்றின் ஆதரவையும் ஒருங்கே முன்வைக்கின்து.
புதையுண்ட வாழ்க்கை தொகுப்பைத் தொடர்ந்து 2003ல் தமிழினியின் முயற்சியால் அவருடைய விரிவான தொகுப்பொன்று வெவந்தது. நான் விரும்பிப் படித்த தொகுதிகளில் அதுவும் ஒன்று. தற்செயலாக ஒரு கவிதையில் படிக்க நேர்ந்த "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரி என்னை உலுக்கியெடுத்தது. மனம் என்பது ஓர் அறையல்ல, வீடுமல்ல. கதவு பொருத்தி தாழிட்டும் பூட்டியும் வைக்க. அது ஒரு நதிபோல, கடல்போல, வானம்போல விரிவானது. எல்லையல்லாதது. எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான் இது. ஆனாலும் மனம் முரண்விழைவு உந்தித்தள்ள தனக்கென ஒரு கதவை நாடுகிறது. கதவு பொருத்தியபிறகு தாழும் தேவையாகிறது. தாழிட முடியாதபோது தவிப்பை தானே ஏற்படுத்திக்கொள்கிறது. ஆற்றாமையையும் இயலாமையையும் முன்வைக்கும் சுகந்தியின் கவிதைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. இருபத்தைந்து ஆண்டுகளில் மிகச்சில ஆண்டுகளiல்மட்டுமே அவருடைய கவிதைகள் வெளிவந்தன.
பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் ஒரு பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தேன். என் வருகையைப் பதிந்துவிட்டு எனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் திறவுகோலோடு திரும்பியபோது தற்செயலாக சுப்ரபாரதிமணியானப் பார்த்தேன். அதே நிலையத்தில் அதே பயிற்சிக்கு அவரும் வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தேன். பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் பேசிக்கொண்டிருந்தோம். குடும்ப நலன்களைப்பற்றி ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டோம். பயிற்சி வகுப்பில் அவர் மூன்றாம் வரிசையிலும் நான் ஐந்தாம் வரிசையிலும் உட்கார்ந்திருந்தோம். மூன்றாவது நாள் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் வேகமாக இருக்கையைவிட்டு எழுந்து ஒரு நொடி ஆசிரியரிடம் மெதுவாக ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதைக் கவனித்தேன். அவசரமாக கழிப்பறைக்குச் சென்றிருக்கக்கூடும் என்றுதான் முதலில் நினைத்தேன். அரைமணிநேரத்துக்குப் பிறகும் வராதபோது எங்காவது தொலைபேசி செய்யச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது. உணவு இடைவேளை வரைக்கும் வராதபோது அதிர்ச்சியாக இருந்தது. அவர் இல்லாமலேயே அறைக்குத் திரும்பினேன். அறையில் மேசைமீது அவர் கையெழுத்தில் ஒரு சீட்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. பதறும் மனத்துடன் எடுத்துப் படித்தேன். ஒரே வரிதான். சுகந்திக்கு உடல்நலம் சரியில்லை. ஊருக்குச் சென்று சேர்ந்த பிறகு பேசுகிறேன் என்று மட்டுமே எழுதியிருந்தது. எனக்கு மனம் தாங்கவில்லை. உடனே கைப்பேசியில் அவரை அழைத்துக் கேட்டேன். பேருந்து இரைச்சலில் பேச்சு சரியாக காதில் விழவில்லை. காகிதக் குறிப்பில் இருந்ததையே மற்றொரு முறை சொன்னதுமட்டுமே புரிந்தது. அடுத்த நாள் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலைவரை அழைப்பு வரவில்லை. வகுப்புக்குச் செல்வதற்கு முன்னால் ஒருமுறை பேசிவிடலாம் என்று கைப்பேசியை எடுத்த அதே கணத்தில் மறுமுனையிலிருந்து சுகந்தியின் மரணச் செய்தியைத் தாங்கிக்கொண்டு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி வந்துவிட்டது. ஆழ்ந்த மௌனத்தில் சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். என்ன என்ன என்று கேட்ட அறைநண்பருக்கு விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டே பெருமூச்சோடு எழுந்த தருணத்தில் "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரியை என்னையறியாமல் இரண்டுமூன்று முறைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக்கொண்டேன். மனம் கனத்தது.
paavannan@hotmail.comCopyright:thinnai.காம்


சுகந்தி சுப்பிரமணியன் அவர்கள் மறைவு !

புதையுண்ட‌ வாழ்க்கையிலிருந்து மீண்டெழுத‌லின் ர‌க‌சிய‌ம்.'
-----------------------------------------------------------------------------------

சொல்லத் தெரியாத பறவைதன்
சந்தோஷத்தைபறந்து பறந்து நிரப்புகிறது
வெளியில்'என்ன‌ ஒருவித மனதின்
ம‌கிழ்ச்சியின் வெளிப்பாடு இது.
மனம் முழுக்க ச‌ந்தோஷத்தை அள்ளித்தெளிக்கும் ‌வ‌ரிக‌ள்.
இதே க‌விதை ம‌னதால்தான்'முக்கியமாய் எதுவமில்லை என்னிடம் தனிமை தவிர' எனவும் எழுத‌ முடிந்த‌து.சுக‌ந்தி சுப்ர‌ம‌ணியனை நேரில் சந்திக்க‌‌ வேண்டுமென‌ நினைத்திருந்தேன். நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவே இல்லை. அவருடைய அஞ்ச‌லி கூட்ட‌த்தில் புகைப்ப‌ட‌த்தின் முன்னே ம‌ல‌ர்க‌ளை இடும்போது உள்ள‌ம் ப‌னிக்க கைக‌ள் ந‌டுங்க‌ ம‌ல‌ர்க‌ளை வைத்தேன். சொல்ல‌வொண்ணா ஏதோ ஒரு உணார்வு ஆட்கொண்ட‌தை உண‌ர‌ முடிந்த‌து. வெளியே கூட்ட‌த்தில் இருக்கிறோம் ச‌ரியாகு என‌க் க‌ட்ட‌ளையிட்டு ம‌ன‌தை ச‌ரி செய்ய‌வேண்டிய‌தாகிவிட்ட‌து.அண்மையில் மறைந்த கிருத்திகா, சுக‌ந்தி சுப்ர‌ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ளின் அஞ்ச‌லி கூட்டம் 'அணங்கு' சார்பில் 28.02.09 அன்று 1.எலியட்ஸ் சாலை பெசண்ட் நகரில், ஸ்பேசஸ் கல்சுரல் சென்ட்டரில் நடைபெற்றது. இன்பா சுப்ரமணியம் அழைப்பு விடுத்திருந்தார். அஞ்சலி கூட்ட‌த்திற்குச் சென்றிருந்தேன். '

தோல்விகள் தொடர்கையில்
என்னுடனே நான் நட்புக் கொண்டேன்'
என்ற‌ சுக‌ந்தி ம‌ர‌ண‌த்துட‌னும் ந‌ட்புகொண்டு ப‌ய‌ணித்துவிட்டார்.
சுக‌ந்தியின் இன்னும் சில‌ வ‌ரிக‌ள்..............................................................

எதுவும் தேவையில்லை என உதறித்தள்ள நானென்ன ஜடமா... வீட்டிலிருக்கும் ஜடப்பொருளுக்கு போட்டியாய் கிடந்து தவிக்கிறேன். எதுவாகவும் நானில்லை. *.
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். அது;
நானாக இருக்க முடியாதுபோன
வருத்தம்தான்.
*வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?
நான் கேட்டேன் அந்தப் பெண்களை.
இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி.
எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்
வாழ்கிறேன் என்றாள் மற்றவள்.
ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி.
வெள்ளிக் கிழமையும், வியாழனும்
விரதமிருக்கிறேன் அம்மனுக்கு;
தீரும் என் கவலைகள் என்றாள்
மற்றுமொருத்தி. *

கிருத்திகாவின் அஞ்சலிக் கூட்டம் சந்திரலேகாவின் வீட்டில் நடந்தது என்ன ஒரு விசித்திரமான‌ பொருத்தமாயிருக்க முடியும். வாசல் உள்ளே நுழைகையிலேயே வெளியே கடற்கரையின் ஆரவாரம், மக்களின், வாகனங்களின் இரைச்சல் கடந்து ஒருவித அமைதியை உணர முடிந்தது. அந்தக்கூடம் கிருத்திகா, சுகந்தி சுப்ரமணியன் படங்களுக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி பூக்கள் வைத்திருந்தனர். வெளி ரெங்கராஜனும் நானும் உள்ளே செல்லும்போது இளம்பிறை தனது உரையை முடித்துவிட்டுக் கிளம்பினார். அடுத்து மாலதி மைத்ரி அழைக்க அசோக‌மித்திர‌ன் பேச வந்தார். ஹைத‌ராபாதில் சுக‌ந்தி சுப்ர‌ம‌ணிய‌ன் குடும்ப‌த்தின‌ருட‌ன் த‌ங்கியிருந்த‌தை நினைவு கூர்ந்தார். நல்ல பெண்மணி. அழகிய பெண்மணி. அழகிய மனமுடையவர். இரு பெண் குழந்தைகள். இந்த மரணம் அவரின் வலிகளிலிருந்து விடுதலையாக இருந்திருக்க வேண்டும் என்ரார். ல‌தா ராம‌கிருஷ்ண‌ன் சுக‌ந்தியுட‌ன் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்து க‌வ‌னித்துக்கொண்ட‌தை நினைவுகூர்ந்தார். கிருத்திகாவின் நாவ‌ல்க‌ள் நேரடி நாவலாக‌ வ‌ராம‌ல் ப‌த்திரிகைக‌ள் மூல‌மாக‌ வ‌ந்திருந்தால் இன்னும் இலக்கிய உலகில் க‌வ‌னம் பெற்றிருப்பார் என்றார்.பிர‌ச‌ன்னா ராமசாமி அழுதுதான் அவ‌ர்க‌ளுக்கு அஞ்ச‌லி செய்ய‌வேண்டுமென்ப‌தில்லை என்றார். நடிகை ரோகிணி இன்னும் இருவ‌ருட‌னான 17 நிமிட நிக‌ழ்ச்சி ஒன்றை ந‌ட‌த்தினார். அ. ம‌ங்கை தனது உரையில் கிருத்திகா, அவ‌ரின் ம‌க‌ள் மீனா சுவாமிநாதன் குறித்து பேசிய‌வித‌ம் பெண் இருப்பியல் சார்ந்த ப‌ல‌ கேள்விக‌ளை முன்வைத்த‌து. தாய், ம‌க‌ள் என்னும் உற‌வின் இனிமை, புனித‌ம் க‌ட‌ந்து சொல்ல‌விய‌லா, வ‌ர்த்தைக‌ளில் எழுத‌விய‌லா சின்ன‌ உர‌ச‌லின் ஆத்மார்த்த உணர்வுச் சிக்க‌லை எந்த‌ குறைசொல்தலோ, உதாசீன உண‌ர்வோ இன்றி தெளிந்த‌ உரையில் எடுத்துரைத்தார். கிருத்திகாவின் நூல்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றார். ப‌ன்னீர்செல்வ‌ம் கிருத்திகாவின் வாசவேஸ்வரம் நாவல் குறித்து பேசுகையில் வேறு எந்த பிற ஜாதியினரின் ஒரு கதாபாத்திரம்கூட அந்த நாவலில் இல்லை என்று எடுத்துக்கூறினார். இதுகுறித்து கிருத்திகாவிடம் கேட்க நேர்ந்தபோது 'எனக்குத் தெரிந்ததைதானே எழுத முடியுமெ'ன அவர் நேர்மையாக ஒத்துக்கொண்டதையும் கூறினார்.அனைவ‌ரும் ம‌ல‌ர் தூவி அஞ்ச‌லி செலுத்த‌ இன்பா வந்தவருக்கு ந‌ன்றியுரைக்க‌ க‌ன‌க்கும் ம‌ன‌துட‌ன் நிக‌ழ்ச்சி முடிந்த‌து. நிகழ்ச்சிக்கு நடிகை ரேவதி, வெளி ரெங்கராஜன், கவிஞர்கள் அய்யப்பமாதவன், நரன்,தமிழ்நதி, நங்கை, உமாசக்தி, வித்யா என பலர் வந்து கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தின‌ர். ப‌டைப்பாளிக‌ள் இருக்கும்போது சிற‌ப்பு செய்யாம‌ல் அவர்கள் ம‌றைந்த‌பிற‌கு சிறப்பு செய்கிறோமே, இது என்னவொரு நியாயத்தில் சேர்த்தி. அவர்கள் இருக்கும்போது படைப்பினைப் பாராட்டியிருந்தால் மகிழ்ந்திருப்பார்களே என்று வ‌ருத்த‌மாகவும் இருந்த‌து. அதே சமயம் மறைவுக்குப் பிறகும் கண்டுகொள்ளப்படாமல் ஒரே ஒரு நாளேனும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய‌மைக்கு கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌வும் இருந்த‌‌து.புதையுண்ட‌ வாழ்க்கையிலிருந்து மீண்டெழுந்துதன் சந்தோஷத்தை சொல்லத் தெரியாத பறவை ஒன்றுபறந்து பறந்து நிரப்புகிறது வெளியை
.அன்புட‌ன் ம‌துமிதா