சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 29 நவம்பர், 2013


காற்றுக் கொட்டகை

  சமீபத்தில் எங்கள் தாய்தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் காற்றுக் கொட்டகை என்ற ஓரங்க நாடகம் நடத்தினர்.
அதில் நகரங்களில் காற்று மாசுபட்டு மக்கள் காற்று சிலிண்டர்களைத் தேடிப் போவது பற்றியது. கேஸ் சிலிண்டர் போல் காற்று சிலிண்டர்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி ஏற்படுகிறது. அரசியல்வாதிகள் தேர்தலில் காற்று சிலிண்டர்கள் கொண்ட கொட்டகைகளை அமைத்து மக்களை மூச்சுத் திணறலிலிருந்து காப்பாற்றுவோம் என்று உறுதியளித்து கொட்டகைகளைத் திறக்கிறார்கள். அதைப் பெறுவது, உபயோகிப்பது என்று ஊழல் மலிகிறது. சாதாரண மக்களுக்கும் கிடைக்காததாக இருக்கிறது.

    உலகின் மிக முக்கியமான சுற்றுச்சுழல் சிக்கலில் ஒன்றாக இந்த காற்று மாசுபாடு இன்று கணிக்கப்படுகிறது. காற்று மாசுபாடு போக்குவரத்தும், மின்னுற்பத்தியுமே முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. ஆசிய நாட்டு மக்களில் பாதிப்பேர் நகரங்களில் வாழும் சூழலில் நகர் விரிவாக்கமும், வளர்ச்சியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. போக்குவரத்து வாகனங்கள், விமானங்களில் பறப்பது, புகை வண்டிகளின் இயக்கம் எல்லாம் சேர்ந்து இரைச்சலையும், ஒலி மாசையும் உருவாக்குகின்றன.

ஆலை இயந்திரங்கள், பொழுது போக்கு சாதன இரைச்சல், ஒலி பெருக்கி இரைச்சல் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவை தொடரும்போது உடல் சோர்வடையும். அதிகமான மன அழுத்தம், மிகையான உளைச்சல், கேட்கும் திறனில் குறைபாடு, உறக்கம் குறைந்து போதல் ஆகியவை நிகழ்கின்றன. மிகையான சப்தங்களால் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. கடலில் ஆயுதக் கப்பல்கள் எழுப்பும் ஒலியால் கடல்வாழ் திமிங்கிலங்கள் கடற்கரை நோக்கி விரைந்து கடற்கரையில் செத்துக் கிடப்பதும் நிகழ்கிறது. ஐரோப்பிய நாட்டின் ராபின் பறவைகள் கூவி தங்கள் செய்திகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால் பகல் நேரத்து இரைச்சல்கள் காரணமாய் அமைதியான இரவில் கூவிப்பழகிக் கொண்டன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த இரைச்சலால் சிட்டுக் குருவிகள் போன்றவை தமது இணைகளிடம் இருந்து பிரிந்து தத்தளிக்கின்றன. இந்த ஒலி மாசுபாட்டை பற்றி அக்கறை கொண்ட ஒரு நிறுவனம் "சத்தத்தில் இருந்து விடுபட்ட அமெரிக்கா" என்ற முழக்கத்துடன் அமெரிக்காவில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்தக் காற்று மாசுபாடு காரணமாக சென்றாண்டில் மட்டும் உலக அளவில் 32 லட்சம் பேர் தங்களின் இயல்பான முதுமையை அடைவதற்கு முன்பாகவே மரணத்தைத் சந்தித்துள்ளனர். இந்த மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்றவை முன்னணியில் உள்ளன. மனிதர்களின் முன் கூட்டிய மரணங்களுக்கான காரணங்களில் எட்டாவது காரணமாக இந்த காற்று மாசுபாடு உள்ளது.

    "வளரும் நகரங்கள், ஆரோக்யமான நகரங்கள்" என்ற முழக்கத்துடன் காற்று மாசுபாட்டிற்கெதிரான பல்வேறு திட்டங்கள் இன்று அமைக்கப்படுகின்றன.

    இந்த நுண் தூசு மாசு உடல் ரிதியாக பல நோய்களைக் கொண்டு வருகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை அதிகப்படுத்துகின்றன. தொடர்ந்த ஆஸ்துமா, இதயம் நின்று போதல் காரணமாக அகால மரணங்கள் சம்பவிக்கின்றன. குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும் குப்பைகளை எரித்து இன்னும் மாசுபாடாகிறது.

    திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளின் இயந்திர இரைச்சல் சப்தமும், பனியன் வேஸ்ட் துணிகளை சாதாரண மக்கள் அடுப்பெறிக்கப் பயன்படுத்துவதும் வேஸ்ட்களைப் பிரிக்கும் வேலையில் தூசு அடைவதும் மக்களின் உடல்நலக் கேடுகளைத் தொடர்ந்து தந்து வருகிறது. வாகனங்கள் வெளியேற்றும் புகை, வாகனங்கள் இயக்குவதால் உருவாகும் தூசு சிரமங்களைத் தருகின்றன.

    தனிப்பட்ட முறையிலான வாகனங்களைக் குறைத்து பொது வாகனங்களைப் பயன்படுத்துதல், மிதிவண்டிகளுக்கு முன்னுரிமை அளிப்பது நடையாகச் செல்வதை ஊக்குவிப்பது போன்றவை பெருமளவில் மாசுபாட்டினை குறைக்கும். வறண்ட பகுதிகளில் தாவரங்கள், மரங்கள் வளர்ப்பது, சாலை பராமரிப்பு பணிகள் செய்யும் போது குழிகளை உடனே மூடுவதாலும் குறைக்கலாம்.

    அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் போர்ட்லண்ட் நகரத்தில் சத்த அளவைக் குறைப்பதற்கான விதி முறைகளை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார். இந்த போர்ட்லண்ட் சட்ட விதி முறைகளே பின்னர் அமெரிக்காவிலும், கனடாவிலும் பல நகரங்கள் பின்பற்ற ஆரம்பித்தன.

    போர்ட்லண்ட் நகரத்தில் ஒலி மாசுபாடு சம்பந்தமான ஒவ்வொரு தவற்றுக்கும் தலா 5000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரே நாளில் பலமுறை தவறு செய்தால் தனித்தனியாக அபராதம் செலுத்த வேண்டியிருப்பதால் இது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு வகைச் சட்டங்களும், மாசு கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகளும் முறையாக்கப்படுமானால், சீக்கிரம் காது செவிடாகும் நிலையோ, சீக்கிரம் இதயநோய் ஏற்படும் துயரமோ மனிதனுக்குக் குறையும்.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதி மணியன்

நீலகிரி விஷ நீலமாய்...

2010ல் ஒரு மழைக் காலத்தில் ஊட்டி சென்றபோது பயணம் பாதியில் தடைபட்டு திரும்ப நேரிட்டது. அன்றுதான் மழை ஆரம்பித்திருந்தது.
ஆனால் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு பெரும் இடைஞ்சலாய் போய்விட்டது. நீலகிரியில் தென் மேற்கு பருவமழை காலங்களில் இவ்வகை மண் சரிவுகள் இருக்கும். அப்போதுதான் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை காலங்களிலும் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். இக்காலங்களில் மக்கள் ஒரு வித பய உணர்ச்சியுடன்தான் இருந்து கொண்டிருப்பர்.

    நீண்ட கால மரங்கள், புதர்கள் நெருங்கியிருப்பது மண்ணை இறுகப் பிடித்து மலையின் உறுதிக்குக் காரணமாக இருக்கும். சாலை விஸ்தாரணம், அழகுபடுத்தல், கடத்தல் என்று மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரியவகை மரங்களும், சந்தன மரங்களும் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கடத்தப்படுகின்றன. செழிப்பான காட்டுப் பகுதிகள் கேரட் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்காய் அழிக்கப்படுகின்றன. தாதுப்பொருட்களை வெட்டி எடுக்கிற நோக்கத்தில் நிலங்கள் குத்தகைக்கு விடப்படுவது பெரும் சுரண்டலுக்கு வழி வகுத்து விட்டது.

    இமயமலை பல விதங்களில் உயரம் மற்றும் அதன் தொன்மை காரணமாக எப்போதும் பேசப்படுவதாகும். அதேபோல் தொன்மையும், நீண்ட கால பாரம்பரியமும் கொண்டது மேற்குத் தொடர்ச்சி மலை. குஜராத் தொடங்கி தமிழகத்தில் நீலகிரி மலை ஊடாக பாலக்காட்டு கணவாய், ஏழுமலை, கம்பம் பள்ளத்தாக்கு கன்னியாகுமரி வரை 1600 கி.மீ நீளமும், 1,74,700 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. நர்மதா, தப்தி, கோதாவரி முதற் கொண்டு பவானி, வைகை, பெரியாறு உட்பட பல நதிகளின் ஊற்றிடமாக மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது.

அதன் ஒரு பகுதியான நீலகிரியில் உயர்நிலையான பரப்புகள் நிறைய உண்டு. தொட்டபட்டா போன்ற உயர்ந்த மலைச் சிகரங்கள் உள்ளன. தமிழகப் பகுதியில் 3 புலிகள் சரணாலயங்களும், 3 தேசியப் பூங்காக்களும், 8 வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன. சமீபத்தில் மத்திய அரசு சுற்றுச்சூழல் ஆணையம் ஒன்று அமைக்கிற திட்டத்தில் தமிழக அரசு அதை எதிர்த்தது. ஆனால் நீலகிரி நீல பூமிப் பகுதியை காக்கிற நடவடிக்கைகள் வழக்கம் போல் சுணக்கமாகத்தான் இருக்கிறது.

    நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களை கையில் வைத்துக் கொண்டு சுரண்டும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அவர்கள் காலங்காலமாக மலையின் பாதுகாவலர்களாக, மலையை தெய்வமாக வழிபடுகிறவர்களாக இருக்கிறார்கள். இருளர், கோத்தர், தோடர்,  உட்பட ஆதிவாசி இனங்கள் காட்டிற்கு இணக்கமானவர்களாகவே இருந்து வருகிறார்கள். பெரும் மழை காலங்களிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தங்களின் வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். அதிக எடை இல்லாமலும் அதிக உயரம் இல்லாமலும் குளிருக்கு இதமாகவும் காட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு குடில் வீடுகளை அமைத்து வாழ்கிறார்கள். பெரும் மரங்கள் வெட்டப்படும் சமயங்களில் தேவையற்ற மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்படுவதும் மண் சரிவு சிரமங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஊட்டி மலைப்பாதையில் வைக்கப்பட்ட வாகை மரங்கள் எடை அதிகமானவையாக, பிடிப்புத் தன்மையற்ற மண் அமைப்பில் இருப்பதால் பெரும் சேதங்களுக்கு மழை காலங்களில் உள்ளாகின்றன.

    நீலகிரி மலைப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளிலும் நீரில் வாழும் உயிரினங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமான பல்லுயிர்களின் மையங்களில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலை இருந்து வருகிறது. நன்னீரில் வாழும் பல மீன் வகைகள் மூன்றில் ஒரு பங்கு அழியும் தருவாயில் உள்ளன. இதில் டெக்கான் மஷிர் என்ற உணவு மீன் உண்டு. அலங்கார வியபாரத்திற்காக கேரளா அழகி என்ற மீன் பிடிக்கப்பட்டு, அதன் நீர் நிலைகள் அழிக்கப்பட்டு தோட்டங்கள், தோப்புகளால் மாசுபட்டிருப்பதால் அது மிகவும் குறைந்து வருகிறது. நன்னீர் மீன்களும், நத்தைகள், நீர் வாழ் தாவரங்களும் பல தரப்பட்ட மருந்தாக உபயோகப்படுத்தப்படுவதால் அழிவு அதிகமாகியிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் வட மகாராஷ்டிர பகுதியில் பெரிவிங்கிள் என்ற வகை நத்தைகள் அதிகமான நீர் உறிஞ்சப்படுவதாலும், மாசுபடுதலாலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. அங்கு பீட பூமியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளும், சுற்றுலா நடவடிக்கைகளும் கூட ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளன.

    நீலகிரி மலையையும் சுற்றுலா ஸ்தலமாக முன்னிலைப்படுத்தப்படுவதை விட பல்லுயிரிகளின் மையமாக மனதில் கொண்டு செயல்பட வேண்டிய சூழலுக்கான தேவைகள் இன்று அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதி மணியன்

வியாழன், 14 நவம்பர், 2013

சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013
------------------------------------------------------------------------------------------------------------

சேவ் “  அமைப்பு ஒருநாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவை விரைவில் நடத்த உள்ளது . அதில் சுற்றுச்சூழல சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் நாள் முழுக்கத் திரையிடப்பட உள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கல்ந்து கொள்ள இருக்கிறார்கள்.    இதில் பங்கு பெற விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்ணில் குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தேதியுடன் பிற விபரங்கள் அனுப்பித்தரப்படும்.சுற்றுச்சூழல் குறித்த கவிதைகள், படைப்புகளோடு வாருங்கள். பரிமாறிக்கொள்ளலாம்..
தொடர்புக்கு :
சேவ்   5, அய்ஸ்வர்யா நகர், தாராபுரம் சாலை,  திருப்பூர் -8
          ( கார்த்திகாயினி    95247 72000 , 2421800 )
-------------------------------------------------------------------------------------------------------------------------
* குப்பை உலகம் :  சுப்ரபாரதிமணியனின் சுற்றுசூழல்  கட்டுரைகள் தொகுப்பு விலை ரூ 50/ . பக்கங்கள் 100.  வெளியீடு சேவ் , திருப்பூர்

----------------------------------------------------------------------------------------------------------------------------

சூழல் அறம்

சூழல் அறம்

சுப்ரபாரதிமணியன்

சூழலியல் பற்றி யோசிப்பில் இப்போது முன் நிற்பது  தண்ணீர் வணிகப் பொருளாகிப் போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக யுத்தம் என்பதும்தான். “
எல்லோருக்குமான தண்ணீர்” என்பது சுத்தமான குடிநீர் உபயோகத்தை முன் நிறுத்துகிறது. தண்ணீர் பண்டமாகி விட்டது.தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உலகளவிலான ஏற்பாடுகள் பயமுறுத்தவே செய்கின்றன.” தண்ணீர் விற்பனைக்கல்ல “ என்று  தண்ணீரை ஒரு அடிப்படை உரிமையாகவும் கோரி பெரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தண்ணீர் தனியார்மயமாக்கல் என்பது தோல்வியடைந்து வருவதை பல நாடுகளின் போராட்டங்கள் சுட்டுகின்றன.

 கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்கிற பணத்திற்கு பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்பதோடு ஒதுங்கிக் கொள்ள வாய்ப்புகள் வந்திருக்கின்றன. கழிவு நீரைச் சுத்திகரிக்கும் தொழில் என்பது வளர்ந்து வருகிறது. கழிவு நீரை சுத்திகரித்துக் குடிப்பது பலநாடுகளில் அமுலுக்கு வந்தாகி விட்டது. தண்ணீர் சார்ந்த் உரிமைகளை வாங்குதல், வணிகம், விற்றலில் முக்கியத்துவம் பற்றிய புதிய நடைமுறைகள் உலக அளவில் வந்து விட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன்  தகவல் தொழில்நுட்பத்துறை இருந்தது போல தண்ணீர் சார்ந்த விசயங்களில் கடுமையான ஒழுங்குமுறைகள் கோரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எந்த  வியாபாரத்திலும் அடிப்படை நேர்மை, அறம் எதிர்பார்க்கப்பட்ட காலங்கள் உண்டு. நுகர்வும், பேராசையும் விசுவரூபம் எடுத்திருக்கும் நவீன உலகில் சூழலைச் சிதைக்கிற ” அறப்போராளிகள் “ வியாபாரத்தில் பெருகி விட்டார்கள். கார்ப்ப்ரேடுகள் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு கொண்டு செயல் படுவதே பெரும் அறமாகக் கொண்டாடப்படுகிறது.

 தண்ணீருக்கான தேடல் பல நாடுகளில் வறுமையோடு சம்பந்தப்பட்டது  என்பதையும் மறுப்பதற்கில்லை. சாதாரண புல் பூண்டிற்கும், விலங்குகளுக்கும் கரிசனம் காட்டிய  வேண்டிய மனிதன் சகமனிதனின் தாகத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டியிருக்கிறது.

அழகான காடு. வியாபாரத்திற்குச் சென்ற தலைவன் தலைவியைக் காண அழகிய மணிகள் உள்ள தேரில் விரைந்து வருகிறான். வரும் வழியில் தேனை உறிஞ்சி உணவு உண்ண தேன் சிட்டுகள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. தலைவனின் தேரின் மணிகள் எழுப்பும் சப்தம் இரைச்சலாகி விடுகிறது. அதைக் கேட்டு பறவைகள் சிதறுகின்றன. தேனீக்கள் சிதறுகின்றன. தலைவன் தன் தேரோட்டியிடம் மணிகளின் நாக்குகளை எடுத்து விடும் படி செய்கிறான். அவனின் விரைந்த பயணம் தொடர்கிறது.

அகநானூற்றில் இக்காட்சி பாடல் ஒன்றில் இடம் பெற்றிருக்கிறது. தேன் சிட்டுகளுக்கு கூட துன்பம் தரக்கூடாது என்கிறது இப்பாடல். இயற்கையை நேசிப்பதும், அதனுடன் இயல்பாக உறவாடுவதும் நல்ல வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்று நமது இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' பற்றி வள்ளுவரும் சொல்லி அறமாக்கியுள்ளார்.

    மனிதனின் பேராற்றலும், பிறவற்றைக் கட்டுப்படுத்தும் ஆசையும் காடு, மலை, கடல், மணல் என்று எல்லாவற்றையும் சீரழிக்கிறது. உலகில் எல்லாவகை உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. ஒவ்வொரு உயிரினமும் தனக்கானப் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு பாக்டீரியா கூட தான் சார்ந்து வேறொரு நுண்ணுயிர்க்கு உணவையும் பாதுகாப்பையும் தரக்கூடியது. அனைத்து உயிர்களும் வாழ எதிர் நோக்கும் அறத்தை கொல்லுவதை காடுகளை அழிப்பது, ஆறுகளை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழலை கெடுப்பதன் மூலம் மனிதன் செய்கிறான்.

    "யுத்தம் முடிவுக்கு வரப்போகும் நாள். நம் பாவங்களுக்குக் கடவுளால் நடத்தப்படும் விசாரணை நாள். அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அகத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும். பரிசுத்தமானவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" -பைபிள்-வெளி 22:11-12.

    "(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவர். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி, கணக்குக் கேட்பதில் மிக்க கெடுப்பானவன்" -குர்ஆன்- அர்ர அது 13:41.

    5-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த புத்தமதத் துறவியான புத்த கோஷா, "அழிவின் தொடக்க நிலையில், தெய்வீகத்தை அடைந்த துறவிகள் இல்லாமல் போவார்கள். இரண்டாம் நிலையில் புத்தரின் உண்மை போதனைகளைப் பின்பற்றப் போவதில்லை. கடைசி நிலையில் புத்தரைப் பற்றிய நினைவும் இல்லாமல் போகும்" என்றார்.

    கி.மு. 250-900 வரையிலான காலத்திய அமெரிக்கப் பழங்குடிகளான மாயன் சமூகத்தினரின் பெரு நாட்காட்டி 0.0.0.0.0 எனத் தொடங்கி. ஒவ்வொரு வரிசையும் 0-19 வரை மாறி சென்ற  டிசம்பர் 21-ல் 13.0.0.0.0 (5,125 ஆண்டுகள்) என இருக்கப்போகிறது. இந்த தேதிக்குப் பிறகாக நாட்காட்டியில் எதுவும் குறிக்கப்படவில்லையெனப்பட்டது. இதனடிப்படையில் 2012 டிசம்பர் 21-உடன் உலகம் அழிவுக்கு வரும் என்று சொன்னதும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உலகம் அழிவதென்னமோ சுற்றுச்சூழல் கேட்டினால்தான் என்று தோன்றுகிறது. பாரதி சொன்னதை இயற்கை மீதானக் காதலாகவும் வழிபாடாகவும் கடைபிடிக்கக் கூடியதாக மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா உயிர்களுக்குமான சமநிலை மிக் முக்கியமாகும்.

    "மண் மீதுள்ள மக்கள் பறவைகள்
    விலங்குகள் பூச்சிகள் புல் பூண்டு மரங்கள்
    யாவும் என் வினையால் இடும்பே தீர்ந்தே
    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட”

தாவரங்களின் வழி அன்பைத்  தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட  இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து  கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது. பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து  அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை  தவிர்க்கிறார்.

அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களில் காட்டப்பட்டிருக்கிறது.

திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில் சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து  உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படிபூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதி விளங்கி விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

காதலை மையப்படுத்தியே இயங்கும் இந்தியத் திரைப்பட, வெகுமக்கள் படைப்பிலக்கிய உலகம்  தண்ணீரில்லாமல் காதலர்களும் வாழ முடியுமா எனபதை மையமாக்க் கொண்டு படைப்புகளுக்காய் கதைகளைத் தேடும் காலம் சமீபத்து வருகிறது. “ தாகத்துடன் இருப்பவர்களுக்கு எந்த விலையுமின்றி நீருற்றிலிருந்து தண்ணீர் தருவேன் “ என்ற பைபிளின் வாசகங்களை தேர்தல் வாக்குறுதியாக கொள்ளும் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கட்சிகளும் வெகு சீக்கிரம் உணர்ந்து அந்த கோசங்களை கையிலெடுக்க தயங்க மாட்டார்கள். முகத்தில் பிராண வாயு கவசம், கை, கால்களில் பாதுகாப்பு உறைகள் அணிந்தபடி  அந்தவகை வாக்குறுதியைத்தரும் கட்சிக்கு  வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு இந்தியக் குடிமகன் செல்லும் காலமும் கற்பனைக்கு அப்பாற்பட்டதல்ல. அறம் படிமச் சிலையாக காட்சிக்கு தெரிந்து கொண்டிருக்கிறது.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன்

நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு

சுப்ரபாரதி மணியன்

            "அவர்கள் நம் நதிகளை விற்றார்கள்
            நமது கிணறுகள், ஏரிகள்
            ஏன் நம் தலைமேல் விழும் மழையைக்
            கூட விற்றார்கள்.
            லண்டனிலும், கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய
            கம்பனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது
            இனிமேல் எதைத் திருடப் போகிறார்கள்
            நமது மூச்சுக் காற்றிலிருக்கும்
            நீர்த்துளிகளையா?

            அல்லது நமது நெற்றியில் முகிழ்க்கும்
            வியர்வைத் துளிகளையா?"

            (தண்ணீர் தனியார் மயமாக்கலை எதிர்த்து போராடும் மக்கள் மத்தியில் 'ஈவன் த ரெயின்' என்ற ஸ்பானியத் திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் இது).

            உலகில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு ஐ.நா.சபை "வாழ்விற்கான தண்ணீர்" என்ற முழக்கத்தை முன் வைத்து 2005 ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை பல்வேறு திட்டங்களைத் தீட்டி உலக நாடுகளில் பல்வேறு பணிகளை நடத்தி வருகிறது. 'உலகில் இன்னும் 50 ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது மிகுந்த சவால் நிறைந்த விசயமாக இருக்கும். உணவு பொருள்களின் உற்பத்தி குறைந்து வருவதன் மத்தியில் உணவுப் பொருட்களின் தேவையும், சுமார் 300 கோடி உலக மக்களின் கழிவறை வசதித் தேவைகளும் பல சிக்கல்களை உருவாக்கும். நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதும் சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

      உலக நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இது இன்னும் தீவிரமாக இருக்கும். கடல் நீரை குடிநீராக்குவது, மழை நீரை குடிநீராகப் பயன்படுத்துவது, தேவை ஏற்பட்டால் கழிவு நீரையும் குடிநீர் ஆக்குவது, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்வது போன்றவை மனதில் கொள்ள வேண்டியதாகிறது.

      தமிழகத்தின் சராசரி மழையளவு 1000 மி.மீ. இது நமக்கு கிடைப்பது சமீப ஆண்டுகளில் அரிதாகிக் கொண்டேயிருக்கிறது. தென்மேற்கு பருவக் காற்றும், வட கிழக்கு பருவக் காற்றும், கோடை மழையும் கணிசமாக மழையைக் கொண்டு வருகின்றன. வட இந்தியாவின் பல நதிகளில் ஓடும் நீரின் அளவில் இது குறைவே. கங்கையில் ஆண்டுக்கு ஒரு வாரம் ஓடும் வெள்ளநீரின் அளவு தமிழகத்தின் ஓர் ஆண்டுத் தேவையாகும். கடந்த பத்தாண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இது இன்னும் பத்தாண்டுகளில் இன்னும் தீவிரமாகும்.

      தூய்மையான தண்ணீர் என்பதை மனிதனின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதில் குழந்தைகள் அதிகமாயும், பெண்கள் கணிசமாயும் உள்ளனர்.

      "நீருக்கு பொருளாதார மதிப்பு உள்ளது. இதை ஒரு வணிகப் பண்டமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. "நீர் ஒரு வணிகப் பொருள். அரிய நீர்வளத்தின் போட்டி மிக்க பயன்பாட்டின் அடிப்படையில் அதன் பொருளாதார மதிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில் தண்ணீரை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இந்தியாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம் முயற்சியால் தண்ணீர் ஏழைகளுக்கு கிடைப்பதை விட பண பலம் கொண்டவர்கள் செலவிடும் தொகைக்கு சாதாரணமாகக் கிடைத்து விடுகிற நிலை வந்து விட்டது.

            தென் அமெரிக்காவிலுள்ள பொலிவியா நிகாரகுவா, ஆப்ரிக்காவில் மொசாம்பிக், கென்யா, கானா, பர்கினபாசோ, ஈக்வடார், தான்சானியா போன்ற நாடுகளில் தண்ணீர் தனியார் மயம் சுலபமாகி விட்டது. திருப்பூரில் அமுல்படுத்தப்பட்ட மூன்றாம் குடிநீர் திட்டமும் இவ்வகையில் பொதுமக்கள், தனியார், கூட்டுப் பங்கீட்டை இன்னொருவகையான தனியார் மயத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

            தனியார் துறை, இந்த வணிகத்தில் நுழைவதற்கு பலவகைகளில் வரி விலக்கு அளித்து ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பல மாநில அரசுகள்  முறையற்று செயல்பட்டன. இப்போது எல்லா மாநிலங்களின் போக்கிலும் இதைக் காணலாம்.

            பொலிவியாவில் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டம் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டது. சட்டிஸ்கர் மாநில அரசு சியோநாத் நதியின் ஒரு பகுதியை ரேடியல் வாட்டர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் அந்நதியின் கரையில் வாழும் மக்களின் மீன்பிடிக்கும் தொழிலும், நீரைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி தங்கள் உரிமையை மீட்டனர்.

            நீர் என்பது அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக அடிப்படை தேவை என்று சொல்லப்படும் சூழல் வந்துவிட்டது. உரிமை என்றால் ஒவ்வொருவருக்கும் அளிப்பது என்றாகும். தேவை என்பது விலை கொடுத்து வாங்க வலியுறுத்துவது.

            வளர்ந்த நாடுகளில் நீர் விநியோகம் என்பது பொதுத்துறையின் கீழ் உள்ளது. ஆனால் பொதுத் துறையின் கீழ் இருந்து தனியார் துறைக்கு செல்லும் பாதைக்கு வளர்ந்த நாடுகள் திட்டமிட்டு வலியுறுத்துகின்றன. எனவே அவை தாம் கடன் கொடுக்கும் நாடுகளிடம் தனியார் மயமாக்கலை வற்புறுத்தி நிர்பந்திக்கின்றன.

            இந்த வகை நீரை தொடர்ந்து மக்கள் பருக விளம்பரங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சுவை கூடுவதற்கு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல பூச்சிக் கொல்லி மருந்துகளும் உள்ளன. இவை உடல் நலத்தை பாதிப்படையச் செய்பவை.

            இவற்றை வியாபார நோக்கம் கொண்டு பெரும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கையில் எடுத்துக் கொண்டு லாபம் சம்பாதிக்கின்றன. இது சாதாரண மக்களைச் சுரண்டவும் ஊழல் பெருகவும் வழி வகுத்து விட்டது.

            21ம் நூற்றாண்டின் ஏற்படும் போர்கள் நீருக்கானதான இருக்கும் என்று திரும்பத் திரும்ப ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.

            குடிநீருக்கே இப்பிரச்னைகள் என்கிறபோது விவசாயம் இன்னும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. மானாவாரி விவசாயம், பாசன விவசாயம் என்று விவசாயம் நடைபெறுகிறது. இவை இன்று வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நீர்நிலைகள் பொது சொத்தாக அறிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மிக முக்கியம். தூர்வாரலும், தடுப்பணைகளும் நீர் தேக்க பயன்படும். தொடர்ந்து மழை நீர் சேமிப்பு திட்டங்கள் அமுல்படுத்தவும் வேண்டியுள்ளது தனியார்கள் ஆழ்குழாய்களை அமைத்தலை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நீர் விளையாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதும் தடை செய்யப்பட வேண்டியுள்ளது.

            "நீர் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி. இதற்கு வியபார ரீதியாக தீர்வு என்பது பூமியை நாசப்படுத்தும். சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியில்தான் தீர்வு காண முடியும்" என்கிறார் சூழலியல் போராளி வந்தனா சிவா.

            1300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சிகள் குடிநீர் வழங்குவதை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்ற திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது.

            ஆயிரம் லிட்டருக்கு 45 ரூபாய் என சொல்லப்பட்டது. இந்த திட்டத்தின் படி அதிகபட்சமாய் சாயப்பட்டறைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள 800 கிராமங்களுக்கு குடி தண்ணீருக்கான சாயப்பட்டறைகளுக்கு வழங்கப்படுவதில் பாதிதான் வழங்கப்படுகிறது. பவானி ஆற்றிலிருந்து ஒரு மில்லியன் லிட்டர் நாள் தோறும் எடுத்துக் கொள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டு குறைந்த பட்ச கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அது வேறு நிறுவனத்திற்கு விற்பனையாகிறது. சிவகங்கையில் சர்க்கரை ஆலை ஒன்று நாள்தோறும் 1 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி இன்னொரு தனியார் நிறுவனத்திற்கு விற்கிறது. தாமிரபரணியிலிருந்து நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு அது வெறுமனே 6,000 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அது தனியார் குளிர்பானக் கம்பனியால் பல லட்சங்களுக்கு விற்பனையாகிறது.

- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதி மணியன்

வியாழன், 7 நவம்பர், 2013


வேட்டை

சுப்ரபாரதிமணியன்

சிறுகதை
“இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் “என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி.”
முதலில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. யாராவது பெயரைக் கேட்டால் பஞ்சவர்ணம் என்று சொல்கிறபோதே ஒரு வகைத் தாழ்வு மனப்பான்மையால் தலையைக் குனிந்து கொள்வது போலாகிவிடுகிறது அவளுக்கு. கிராமத்துப் பெயராகத்தான் இருக்கிறது. பஞ்சு என்று சொல்லிக் கொள்ளலாம். அல்லது வர்ணம் என்று சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தாள். பஞ்சு என்பது ஏதோ ஆண் பெயர் போல இருக்கிறது. வர்ணம் என்று சொல்லிக் கொள்வது அவ்வளவு சுலபமானதில்லை என்பது போலத் தோன்றியது. இப்படியெல்லாம் சொல்லிக் கொள்வதற்குப் பதிலாய் புதிதாக பெயரை வைத்துக்கொள்ளலாம். பெயர் எப்போது வைத்தது என்று யாரும் கேட்கப் போவதில்லை. ஸ்ரேயா என்றுகூட வைக்கலாம். ரொம்பவும் புதுப்பெயராக இருக்கிறது. சமீபத்திய திரைப்பட நாயகி ஒருத்தியின் பெயர். ஆனால் இவ்வளவு சமீபத்தில் பெயர் என்பது யாருக்கும் சந்தேகம் வந்துவிடும். தன் வயதிற்கேற்ப கொஞ்சம் பழைய பெயராக இருக்கலாம். பதினெட்டு வயதை எட்டியாகிவிட்டது. ஸ்ரீதேவி என்று சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் பஞ்சவர்ணம்.
புது ஊர். புதுப்பெயருடன் உலாவலாம். புது இடத்தில் வேலைக்குச் சேர்கிற இடத்தில் புதுப்பெயருடன் இருக்கலாம். புதுவாழ்க்கைதான். கிராமத்தைத் தொலைத்துவிட்டு வந்து நகரத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். புதுப்பெயர், புது அனுபவங்களுடன் நகர வாழ்க்கையைத் துவங்குவது நல்லதுதென்று பட்டது.
“அம்மணி பேர் என்ன,,,” கறுத்த நீலச் சட்டை போட்டிருந்தவன் கேட்டான். கறுத்த நீலச்சட்டை ஜீன்ஸ் துணி சட்டை கெட்டியானது. புழுக்கத்திலிருந்துதப்பித்து குளிர்ச்சியைத் தருவது. குளிர்ச்சி உள்ள நேரங்களில் வெதுவெதுப்பையும். பஞ்சவர்ணம் சட்டையேயே பார்த்துக்கொண்டிருந்தாள். கறத்த நீலச்சட்டையை போட்டிருந்தவனின் தலைமயிர் கறுத்திருந்தது. மீசையிலும் அதே வகையான கறுப்பு அடர்ந்திருந்தது. ‘டை’ போட்டிருப்பான். முகத்திலிருந்து ஓரிரண்டு கோடுகள் அவன் வயதை அதிகமாக்கிக் காட்டின. பஞ்சவர்ணம் என்று வாய் முணுமுணுத்துக் கொண்டது. “ஸ்ரீதேவி”
“நல்ல பேர்தா. நாளெல்லா நல்ல வயசா இருந்தப்போ ஸ்ரீதேவிதா எங்க கனவுக் கன்னி,,,”
“எப்பங்க,,,”
“காலேஜ் போக ஆரம்பிச்சப்போ,,,”
“என்னோட கனவுக் கன்னி எப்பவும் ஹேமமாலினி தான். அவங்க பொண்ணுங்கெல்லா கதாநாயகியா நடிச்சாலும் எனக்கு கனவுக்கன்னி எப்பவும் ஹேமமாலினிதா,,,” வெள்ளைச் சட்டையில் நீலக்கோடுச் சட்டை போட்டவன் ஆஹா,,, என்று சிரித்தபடிச் சொன்னான். “பாரு அம்மினி,,, இவனோட கனவுக்கன்னி ஹேமமாலிலினின்னா இவளோட வயசு என்னன்னு யூகிச்சுப்பாரு,,, கெழடு,,,” நீலச்சட்டைக்காரன் சிரித்து வாசனைப் பார்த்தபடி சொன்னான். நாலைந்து பேர் உணவு விடுதியின் முகப்பில் நின்று கொண்டிருந்தனர். உள்ளிருந்து போன சர்வர் ஒருவன் அவர்களை உள்ளே அழைத்தான். “டிபன் வேணும்னா டிபன். சாப்பாடு வேணும்னா சாப்பாடு. எல்லாமே சூடா இருக்குது. உள்ள வாங்க,,,” நாலைந்து பேர் கும்பல் வீதியில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. “உள்ள வந்து உக்காருங்கோ. எதுக்கு எதிர்வெயில்ல நின்னுட்டு.”
பஞ்சவர்ணம் காபி டம்ளரை மேசையின் மீது வைத்தாள். பளபளவென்று கிரைனட் கல்லின் பளபளப்பு மேஜையாகியிருந்தது. “ஜூஸ் ஏதாச்சும் சாப்புடறியா ஸ்ரீதேவி,,,” பல வர்ணத்தில் கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தவன் கேட்டான். “காபி சாப்புட்டப்புறம் ஜூஸ் சாப்பிட முடியுங்களா” பஞ்சவர்ணம் சிரித்தபடி கோட்டாள். “அதனாலென்ன தொண்டைக்குக் கீழே போயிட்டா எல்லாம் ஒண்ணுதானுங்களே…” காலை சற்றே ஆட்டியபோது அவளின் பை காலில் தட்டுப்பட்டது. இரண்டு சேலைகள், இரண்டு பாவாடை ஜாக்கெட்டுகள் என்று குறைவாத்தான் எடுத்தாள். ஈரிழைத் துண்டொன்றை அவசர கதியில் எடுத்துத் திணித்தது ஞாபகம் வந்தது. முதல் சம்பளம் வாங்குகிற வரைக்கும் இந்தத் துணிகளைப் பயன்படுத்தவேண்டும். அப்புறம் புதுசாகக் கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பு வந்தது. அவளுக்கு உணவு விடுதிக்குள் அந்த நாலைந்து பேர் நுழைந்து ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள்.
“அம்மணிக்கு என்ன திடீர்னு யோசனை” கட்டம் போட்ட சட்டைக்காரன் ஒருவகை புன்னகையுடன் கேட்டான். அவன் சட்டைப் பையில் இருந்த சிறு சீப்பை எடுத்து தலையைச் சீவிக்கொண்டான். “சாப்பிடற எடத்திலெ சீப்பு என்ன வேண்டிக் கெடக்குது. ” கறுத்த நீலக் சட்டைக்காரன் கடிந்துகொள்வது போல அவனைப் பார்த்தான். நாலைந்து பேர் கும்பல் பக்கமிருந்து சளசள வென்று சப்தம் கேட்டது.
“அம்மிணிக்கு என்ன திடீர்னு யோசனை. ”
“இல்லே.. வார சம்பளம் கெடைக்குமா. இங்கே மாசச் சம்பளம் குடுக்கற லேலையில சேரப் போறமான்னு யோசனை. ”
“அம்மிணிக்கு எது இஷ்டமோ அதில சேர்லாம். வாரச் சம்பளம் வேணும்னா வாரச் சம்பளம் வாங்கிக்கலாம். மாசச் சம்பளம் ஹாஸ்டல் சாப்பாடு வசதியோட வேணும்னாலும் அதிலே சேந்துக்கலாம். உங்களுக்கு எப்படியோ அப்பிடித்தா அம்மிணி நாங்க சேத்து விடப் போறோம். ”
“ஆமா… இங்கிருந்து பஸ் ஸ்டேண்ட் பக்கந்தானே. ”
“மறுபடியும் பஸ் ஸ்டாண்ட் போகப் போறீங்களா.. எதுக்கு நடந்துட்டு.. சொல்லுங்க ஆட்டோ புடுச்சுட்டு வந்தர்ரன். இனிமேல் உங்க காலு தரையில படக் கூடாது அவ்வளவுதான். ”
பஞ்சவர்ணம் சிரித்துக் கொண்டாள். சரிந்த முந்தானையைச் சரி செய்தபடி எதிரில் இருந்த படங்களைப் பார்த்தாள். எல்லாம் கடவுள் படங்கள் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயிலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் படம் ஆறடிக்கு ஆறடி இருந்தது. பல வர்ணங்களில் அது மினுமினுத்துக் கொண்டிருந்தது. அதே அளவுடன் நாலைந்து படங்கள் தென்பட்டன. ஒன்றில் சிவன் சிறுபிள்ளையாகக் கிடந்தார். பனிமலை பின்னால் விரிந்திருந்தது. இது எந்த ஊரில் இருக்கும் சாமி? வடநாட்டில் இருக்கலாம். முனியப்பன்,காட்டு மாரியம்மனை காலம்காலமாய் கும்பிட்டது இப்போது நகரத்திற்கு வந்தாயிற்று. இனி கும்பிட முனியப்பனும் காட்டு மாரியம்மனும் கிடைக்கமாட்டார்கள். புது சாமி கிடைத்துவிடும். இந்த ஊரில் உள்ளூர் திருப்பதி என்றொரு கோயிலை பணக்காரர் ஒருவர் கட்டியிருப்பதாக அவள் கேள்விப்பட்டிருந்தாள். எங்கும் பளிங்குக் கற்களாம். திருப்பதி கோயிலுக்கு இணையாக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தாள். வேலையில் சேர்வதற்கு முன்பாக அந்த உள்ளூர் திருப்பதி கோயிலுக்குப் போய் விட்டு வரலாம். அதுமாதிரி சந்தர்ப்பம் அமையவேண்டும். அப்படி சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் அதிஷ்டம்தான்.
“இல்லே பஸ் ஸ்டாண்ட்ல இருந்து எவ்வளவு தூரம்னு தெரிஞ்சுக்க கேட்டேன். ”
அவள் கையில் பையுடன் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது சோர்வாக இருந்தாள். விடியற் காலையில் புறப்பட்டது. பசியில் அசந்து தூங்கியிருந்தாள். வெயில் வேறு உச்சத்திலிருந்தது. பேருந்து நிலையத்தில் இறங்கினால் போதும். வேலை காலி என்ற போர்டுகள். அட்டைகள் நிறைய பேருந்து நிலையத் தூண்களிலேயே தொங்கிகொண்டிருக்கும் என்று சொல்லியிருந்தார்கள். தூண்களைத் தேடத் துவங்கியிருந்தபோதுதான் நீலச் சட்டைக்காரன் அவளருகில் வந்து நின்றான். அவள் தூணில் ஒட்டியிருந்த விளம்பர நோட்டீக்களைப் படிக்க ஆரம்பித்தாள். ஹாஸ்டல் வசதி நல்ல சாப்பாடு நல்ல வேலை என்ற முத்திரை வாசகங்கள் எல்லாவற்றிலும் இருந்தன. நீலச் சட்டைக்காரன் “ஹாஸ்டல்ல சேந்துடுங்க நல்ல வேலை ” என்றான். அவன் திருதிருவென்று விழித்தபடி அடுத்த தூணுக்குச் சென்று இன்னொரு விளம்பரப் பிரசுரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். வெள்ளைச் சட்டைக்காரனும், கட்டம் போட்ட சட்டைக்காரனும் சேர்ந்து கொண்டனர்.
“இந்த ஊர்ல எந்த வேலையும் தெரியாட்டியும் பரவாயில்லே. உடனே சேந்துக்கலாம். நல்ல ஹாஸ்டல் வசதி. நல்ல சாப்பாடு. மூணு வருஷம் முடிஞ்சா முப்பாதியிரம் ரூபா. கல்யாணச் செலவுக்குன்னு ஆகும். ” வெள்ளைச்சட்டைக்காரன் அவளின் முகத்தைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தான். ஏதோ கூச்சம் வந்ததைப் போல அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். சேலை முந்தானை அழுக்காகி கண்களில்பட்டது. “ரொம்பவும் டயர்டா இருக்கீங்க அம்மிணி. மொதல்ல சாப்புடலாமே பசியில் பேசிட்டு என்ன பிரயோஜனம். ” நீலச்சட்டைக்காரன் வழி காட்டுவது போல வலதுபுறத்தில் கையைக் காட்டினான்.
அவளை மத்தியில் உட்கார வைத்து அவர்கள் மூன்று பேரும் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். வெள்ளைச் சட்டை போட்டவன் எதிலிருந்து கடவுள் படங்களைப் பார்த்து கன்னத்தின் ஓரத்தில் சின்னதாக வணக்கம் சொல்லிக் கொண்டான்.
“சாப்பாடு சொல்லிர்லாமா அம்மிணி.”
“சாப்பாடு டெய்லி திங்கறதுதானே வேற ஏதாச்சும் சொல்லலாம்.”
“சர்வர் வேற காணம்.”
“சர்வருக்கு தெரியறது நமக்குத் தெரியாதா. சாப்பாடு வேண்டா. பூரிக்கிழங்கு இருக்கு. வெஜிடபிள் பிரியாணி இருக்கு. ஒவ்வொன்னிலியும் அம்மிணிக்கு ஒரு பிளேட் சொல்லிர்லாம்.”
“உங்களுக்கு.” பஞ்சவர்ணம் ஆச்சரியமாய் கண்களைச் சுழலலிட்டுக் கேட்டாள்.
“எங்களுக்கென்ன வேண்டிக் கெடக்கு. எங்கயோ இருந்து களச்சு பசியில் வந்திருக்கீங்க. வேலை தேடி வந்திருக்கீங்க சாப்புடுங்க.”
“இல்லம்மா நாங்கெல்லா நல்லா சாப்புட்டாச்சு. எங்களுக்கென்ன காலம் நேரம் கெடைக்குதா. நெனைச்சா சாப்பிடுவதும். நீங்க ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கீங்க. வேலை தேடணும். மொதல்லே பசியாத்திக்கோங்க.”
பஞ்சவர்ணத்திற்கு மலைப்பா இருந்தது. எவ்வளவு அன்பாய் உபசரிக்கிறார்கள். அன்பாய் உணவு விடுதிக்குக் கூட்டி வந்துவிட்டார்கள். வீதியில் போகிறவர்களை அழைத்து துணி வாங்கச் சொல்கிறவர்கள் மாதிரி கையுடன் கூட்டி வந்து விட்டார்கள். சாப்பிட்டபின் பில் கொடுக்கிறபோது அவர்களே பணம் கொடுத்தால் நல்லதுதான். கையில் பணம் குறைவாகத்தான் இருக்கிறது. இவ்வளவு நல்ல மனிதர்களை தன்னிடம் வந்து சேர்ந்தது எதுவாக இருக்கும் முனியப்பனா, காட்டு மாரியம்மனா ஏதாவது கடவுள்தான். இந்த மனிதர்கள்தான் தனக்கு வேலைக்கு வழி காட்டவேண்டும். ஒரு பிளேட் பூரியும் வெஜிடபிள் பிரியாணியும் சாப்பிட்டு காபியும் குடித்தாயிற்று. பூரண திருப்தியுடன் அவர்களைப் பார்த்தாள். நீலச்சட்டைக்காரன், வெள்ளைச்சட்டைக்காரன், கட்டங்கள் போட்ட சட்டைக்காரன் மூவரும் அவளைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவள் சொல்லும் பதிலை வைத்துக்கொண்டுதான் அடுத்த அடியை எடுத்து வைக்கவேண்டும் என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருப்பில் ஒருவித எரிச்சலை அம்முகங்கள் வெளிக்காட்டின.
நீலச்சட்டைக்காரன்: அவனது பெயர் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அவன் எந்த மதத்தினராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அவன் ஐம்பது வயதை எட்டிக் கொண்டிருக்கிறவன். அவன் பல தொழில்களைச் செய்துவிட்டான். இப்போது செய்யும் தொழில் எத்தைனையாவது தொழில் என்பது அவனுக்கு ஞாபகமில்லை. பட்டியல் போட்டுப் பார்த்ததில்லை. ஓய்வுநேரம் கிடைக்கும்போது அல்லது உடம்பு சுகமில்லாமல் கிடக்கும்போது அப்படியரு பட்டியலைப் போட்டுப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறான். குழந்தைத் தொழிலாளியாகத்தான் பனியன் கம்பெனியில் பத்து வயதில் சேர்ந்தான். அப்போதெல்லாம் எக்ஸ்போர்ட் என்று எதுவுமில்லை. உள்ளூர் வெள்ளைபனியன் தயாரிப்புதான். அவன் வீட்டுப்பக்கம் வரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவன் அவ்வப்போது ஏதாவது பனியனைக் கொண்டுவந்து பாதி விலைக்கு விற்பான். வயிற்றுப் பகுதியில் நாலைந்தாய் மடக்கினாலும் கசங்காமல் இருக்கிற மாதிரி பனியனை வைத்திருந்து கொண்டு வந்து விற்பான். அவன்தான் அவன் வேலை செய்யும் கம்பெனியில் கொண்டு போய் வேலைக்குச் சேர்த்து விட்டவன். அடுக்கிக் கட்டுவது, லேபிள் வைப்பது என்றிருந்துவிட்டு டைலராக தைக்கக் கற்றுக்கொண்டான். பத்து வருடம் இரவு பகல் என்று பார்க்காமல் வேலை அப்புறம் சின்னதாய் ஒரு செக்ஷன் போட்டு துணியெடுத்துத் தைக்க ஆரம்பித்தான். கூட மூன்று பேர்களை வேலைக்கு வைத்துக்கொண்டான். அப்புறம் எக்ஸ்போர்ட்டில் துணி எடுத்துத் தைத்தபோது ஸ்கூட்டர் வாங்கினான். நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு காலி இடம் வாங்கிப்போட்டான். கொஞ்சம் வளர்ந்து கொண்டிருக்கையில் “டாப்டென்” கம்பெனி ஒன்றில் சப்கான்டிராக்ட் எடுத்தார். நிறைய டெபிட் போட்டார்கள். நஷ்டம் வந்தது. கொஞ்ச காலத்திற்கு செக்ஷன் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தான். பவர் டேபிள் உட்பட எல்லாவற்றையும் விற்றிருந்தான். கொஞ்சநாள் கட்டிங் மாஸ்டராக வேலைக்குப் போனான். மறுபடியும் செக்ஷன் போடவேண்டும் என்ற ஆசை வந்து இருந்த நிலத்தை விற்று செக்ஷன் ஆரம்பித்தான். இந்த முறை அது பிரிண்டிங்காக இருந்தது. சாயங்களில் விலை ஏற்றம், சாயப்பட்டிறைகளுக்கான நெருக்கடியில்அதைத் கைவிட வேண்டியானது. மீண்டும் தொழிலாளியானான். கூடவே தண்ணீர் வண்டியன்றை வாடகைக்குப் பிடித்து ஒரு ஆளை வைத்து தண்ணீர் விற்றுக்கொண்டிருந்தான். பெரிய லாரிகளில் தண்ணீர் விநியோகம் நடப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு லாரி வாங்க ஆசைப்பாட்டான். அட்வான்ஸ் என்று கொடுத்த பணம் எதுவும் திரும்பி வரவில்லை. மீண்டும் தொழிலாளியாக ஒரு வருடம் ஓட்டினான். உடம்பு சுகமில்லாமல் வாட்டி வதைத்தது. இனி எங்காவது வாட்ச்மேன் வேலைக்குத் தான் போகவேண்டும் என்று நினைத்திருந்தான். வளர்ந்த மகன் கம்பெனி கட்டிங்கு போகிறான். மகளுக்குத் திருமணம் செய்யவேண்டும். ஏதாவது தொழில் செய்யவேண்டும். இந்த புரோக்கர் வேலை சுலபமானது என்று பட்டது. வேலை தேடி ஊருக்கு வரும் பெண்களை பேருந்து நிலையத்தில் சந்தித்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து பேசி ஏதாவது கம்பெனியில், மில்லில் வேலைக்கு சேர்த்து விடுவது அவன் வேலையாகிவிட்டது. ஹாஸ்டலில் சேருங்கள் என்ற வார்த்தை எல்லோருக்கும் பிடித்திருந்தது. நல்ல சாப்பாடு ஹாஸ்டல் வசதி என்பது தாரக மந்திரம்.
போய்ச் சேருகிற இடத்தில் ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். வேலையில் சேர்த்துவிடுகிறேன். கமிஷன் வேண்டும் என்றால் பெண்களும் கையிலிருப்பதைக் கொடுத்துவிடுவார்கள். ஆறு மாதம் ஒரு வருடம் கழித்து அப்பெண்களைச் சேர்த்துவிட்ட இடத்திற்குப் போய் அவர்கள் இருப்பதை நிச்சயித்து இன்னுமொரு கமிஷன் பெற்றுக்கொள்ளலாம். சாப்பாடு இல்லாமல் நகருக்கு வேலை தேடி வரும் பெண்களுக்கு வேலை தேடித் தரும் ஆபத்பாந்தவனாக அவன் இருக்கிறான். பல சமயங்களில் அவனுக்குப் பெருமையாக இருக்கும். கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளும்விதமாய் தன் வேலையை எண்ணி புளகாங்கிதம் கொள்வான். அந்த பெண்கள் ஹாஸ்டல் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்கள். விடுமுறை உண்டா. ஊருக்குப் போக பணம் கிடைக்கிறதா என்று யோசித்துப் பார்த்ததில்லை. ஏதாவது யோசிப்பு வந்து மனதைத் தொந்தரவு பண்ணுகிற போதெல்லாம் டாஸ்மாக் கடையை நாடிப் போவான். ‘ஓல்டு காஸ்க்’ பிராந்தி குவார்ட்டரும், குடல் கறி ஒரு பிளேட்டும் அவனின் எல்லா யோசிப்பையும் நிராகரிக்கச் செய்து விடும்.
வெள்ளைச் சட்டைக்காரன்: ஐந்து வருடங்கள் முன்புதான் இந்த ஊருக்கு வந்திருந்தான் இவன். விவசாயம் பொய்த்துப் போன பூமியிலிருந்து வருடத்தில் எல்லா நாட்களும் வேலை இருக்கும் ஒரு தூங்காத நகரத்திற்கு வந்தவன். அவனின் பூர்வீத்தை அறிந்து கொண்ட தொழிற்சாலை மேனேஜர் புது இடத்திற்கு வேலைக்குப் பெண்கள் வேண்டும். உங்களூரில் வேலையில்லாமல் இருக்கும் பெண்களை கூட்டிவரச் சொல்லி பணம் கொடுத்தார். சித்தப்பா வீட்டில் நான்கு பெண்கள் சும்மா இருந்து காலம் கழிக்கிறார்கள். பெரியண்ணன் வீட்டில் அவர் மனைவியும், சின்ன மகளும் கூடத் தயாராக இருப்பார்கள். மனக் கணக்கு போட்டுப் பார்த்ததில் தன் சுற்றம் இருபத்தைந்து பேர்களாவது தேறும் என்று தோன்றியது. எல்லோரையும் இங்க கூட்டி வந்து விடலாம். சந்தோஷப்படுவார்கள் என நினைத்தான். “இந்த கம்பெனியில் எல்லாரும் பொம்பளைகளா வெச்சுக்கலாமுன்னு இருக்கோம். பொம்பளைகன்னா பிரச்சனை இல்லே. யூனியன், போராட்டமுன்னு போக மாட்டாங்க. குடுக்கற சம்பளத்தை வாங்கிக்குவாங்க. ஹாஸ்டல்ன்னு ஒண்ணு கட்டி, சாப்பாடும் போட்டுட்டா எந்த நேரத்துக்கு வேணும்னாலும் போயி எழுப்பிட்டு வந்து வேலை செய்யச் சொல்லலாம். நெறைய சௌகரியம் இருக்கு.”
“எங்க சித்தி பெரியம்மா பொண்ணுன்னு பெரிய கூட்டமே இருக்கு. சொந்தக்காரங்களை எல்லாரையும் கூட்டிட்டு வந்துர்லாம்.” “ஆனா ஒரு கன்டிஷன். எல்லா பொம்பளைகளும் இருபது வயசுக்குள்ளதா இருக்கணும். கல்யாணமாகாத பொம்பளைகளா இருக்கணும். கல்யாணமான பொம்பளைகன்னா குழந்தைக்கு உடம்பு சுகமில்லை, புருஷனோட கோயிலுக்குப் போகணும். திதி, கருமாதின்னு, கல்யாணமுன்னு லீவு கேப்பாங்க. வேண்டா.” சுற்றத்தாருக்கு மறுவாழ்வு தரும் தனது திட்டத்தில் இந்த வரையறை சிரமம் ஏற்படுத்தியது.
அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஊருக்குத் திரும்பிப் போய் இருப்பதைந்து பெண்களைக் கூட்டி வந்தான். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஐநூறு ரூபாய் வீதம் அவனுக்குக் கிடைத்தது. பெரிய வருமானமாகத் தோன்றியது. சுற்றங்களைப் பார்க்கிற நோக்கில் கிராமங்களுக்குப் போவது. அவர்களுடன் தொழிற்சாலைக்குப் பெண்கள் தேவையாக வேண்டியிருப்பது. ஹாஸ்டல் சொர்க்கம் என்று பிரசங்கம் செய்வது சுலபமாகத்தான் இருந்தது. மலையாளம் தெரிந்த கொச்சுண்ணியின் நட்பு கிடைத்த பின்பு கேரள கிராமங்களுக்குச் செல்லத் துவங்கினான். ஒரு கம்பெனி முழுக்க நேபாளிப்பெண்கள் வேலை செய்வதை அறிந்து கொண்டான். இமயமலைப் பிரதேசங்களுக்குப் போக ஹிந்தியை தலைகீழாகப் பேசும் ஒருவனைத் தேடிக்கொண்டிருந்தான் அவன். சமீபத்தில் ஒரிசாவில் இருந்து வந்தவர்கள் நிறைய தென்படுகிறார்கள். ஒரிசாவிற்கு ஒரு சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தான். சுற்றுப்பயணம் இல்லாத போது நகரின் பேருந்து வண்டி நிலையத்திலும், புகைவண்டி நிலையத்திலும் தென்படுவான். வேலை தேடி வரும் பெண்களை உபசரித்து சரியான இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது அவனின் உயரிய பணியாக இருந்தது.
கட்டங்கள் போட்ட சட்டைக்காரன்: சின்ன வயதில் இருந்தே பெரிய மெக்கானிக் ஆக வேண்டும் என்பது அவனின் ஆசையாக இருந்தது. பனியன் கம்பெனிக்குப் போய் பிசிர் வெட்டுவது, அடுக்கிக் கட்டுவது போன்ற வேலைகளை செய்யத் தயங்கினான். இரும்புக் கதவு செய்யும் பட்டறை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். இரட்டை சக்கர வாகன பட்டறையன்றில் பதினேழாவது வயதில் சேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பட்டறைக்கு வரும் வண்டிகளை ஓட்டுவது அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது. காலையில் பேருந்து நெரிசலான நேரங்களில் பட்டறைக்கு வரும் வண்டிகளில் பின்னால் பேருந்து நிறுத்தத்தில் நின்று சலிக்கும் இளம் பெண்களை ஒட்கார வைத்து தொழிற்சாலைக்களுக்குக் கொண்டு விடுவது அவனின் மகிழ்ச்சிகரமான பொழுது போக்காக இருந்தது. அவனுடன் வண்டியில் பயணம் செய்யும், அவனுடன் உரசிக் கொள்ளவும் பெண்கள் தயாராக இருந்தார்கள். ஹேர்பின்செட், பிரா இவற்றுக்காக அவனின் சில்மிஷங்களை உபத்திரவமின்றி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் பெண்கள் இருந்தார்கள். பெரிய இரட்டை சக்கர வண்டிகளில் பெண்களை ஏற்றி ஊர் சுற்றுவதற்கு பட்டறைக்கு வரும் வண்டிகள் அவனுக்கு பெரிதும் உதவின. அப்படியே பக்கத்து ஊர் லாட்ஜ்களுக்குக் கூட்டிப் போகப் பழகினான். அதில் துய்ந்து விடும் பெண்களை பிறருக்கு அறிமுகம் செய்வான். அவர்கள் எந்த ஊருக்குக் கூட்டிக் கொண்டு போகிறார்கள் என்பதை அவன் கேட்டு அறிந்து கொள்ள ஆவல் கொள்ள மாட்டான். வடமாநிலங்களுக்கு அப்படி அவன் அறிமுகப்படுத்தின பெண்கள் சென்றிருக்கிறார்கள் என்பதும் அவன் செவிகளுக்குச் செய்திகளாய் வந்து சேரும். அதைக் கேட்கையில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் பரவசப்படுவான். அவன் பெரும்பாலும் புகைவண்டி நிலையங்களில் தான் இவர்களைத் தேடி பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பான். வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் பெண்களும் கல்லூரி, பள்ளி தேர்வு முடிவில் திருப்தியில்லாமல் வீட்டில் இருப்பவர்களின் தொல்லைகளுக்கு பயந்த வெளியூர் வரும் பெண்களும், சித்தி கொடுமை தாங்காது வரும் பெண்களும், வேலை வாய்ப்புத் தேடி வரும் பெண்களில் கணிசமானவர்கள் புகைவண்டிப் பயணத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவனின் புள்ளிவிவரக் கணக்கில் எப்போதும் ஒத்து வந்திருக்கிறது. இப்போது அறிமுகமாகியிருக்கும் பஞ்சவர்ணம் என்ற ஸ்ரீதேவி எந்த ஊருக்குப் பொருந்துவாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.
பிருந்தாவன் பூங்காவில் குழல் விளக்குகள் மெல்ல எரிய ஆரம்பித்தன. மூவரும் பஞ்சவர்ணத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் புல் தரை விசேஷ வர்ணக் கலவையாகியிருந்தது. தூரத்தில் இருந்த சறுக்கில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். புல்வெளியில் பெண்கள் அடக்கமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“இந்த பார்க் பேரு என்ன?”
“பிருந்தாவன் பார்க்,,,” நீலச் சட்டைக்காரன் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.
“ஆமா,,, பேர்ல என்ன கெடக்குது ஸ்ரீதேவி.”
“ஆமாங்க,,, ஆமா, பக்கத்திலே என்னமோ பள்ளமா கெடக்குது,,,”
“எங்க ஊரு ஆறு. பெரிய ஆறு. பெரிய சரித்திரம் அதுக்கு இருக்கு,,,”
“தண்ணியெல்லா போகுமுங்களா.”
“போகும். ஒரு காலத்திலெ போச்சு. இப்போ ஊர் சாக்கடையும் சாயப்பட்டறைத் தண்ணியுந்தாபோகுது.”
கட்டங்கள் போட்ட சட்டைக்காரன் ஒரு நிமிடம் நடையாக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் பகுதிக்குச் சென்று விட்டு வந்தான். “மத்தியானத்தில் இருந்து இப்பிடியே ஹோட்டல், பார்க்குன்னு திரியறம். ஒரு முடிவுக்கு வர வேண்டாமா,,,” எரிச்சலுடன் சொன்னான். கட்டங்கள் போட்ட சட்டைக்காரன் அகை ஆமோதிப்பது போல சிரித்தான். வாயைக் கோணலாக்கி நாக்கின் உள் இருந்த வெற்றிலைத் துணுக்கை வெளியே எடுத்தான். வாய் சிவந்து இருப்பதை கண்களைக் கீழே தாழ்த்திப் பார்த்துக் கொண்டான்.
“ஆமா ஸ்ரீதேவி,,, ராத்திரி நேரமாயிருச்சு. ஏதாச்சும் முடிவு பண்ணிரு. யார் கூட வர்றே எந்த ஹாஸ்டலுக்கு வர்ரேன்னு சொன்னா செரியா இருக்கும். வேலைமுடியணும் இல்லியா.”
பஞ்சவர்ணத்திற்குக் குழப்பமாகவே இருந்தது. எந்த வேலை என்று யூகிக்க முடியவில்லை. ஏதாவது ஒரு வேலை வேண்டும் இந்த மூன்று பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருந்தது. காசை சுண்டிப் பார்க்கலாம். பூவா தலையா பார்க்கலாம். இங்கு மூன்று பேர் இருக்கிறார்கள். பூ, தலை பூ, தலை போதாது. இன்னொரு புறமும் வேண்டும் குழப்பமாக இருந்தது அவளுக்கு.


மரபணு விதைகளும் மாற்றுத்தொழில்நுட்பத்தின் ஆபத்தும்!

                                                                                                                                   சுப்ரபாரதிமணியன்

மூல விதைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆடும் ஆட்டமே மரபணு மாற்று விதைத் தொழில் நுட்பம் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து செயல்படுகிறது.
இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளின் அனுபவங்கள் கசப்பானவை என்பதால் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அவை தடை விதித்து விட்டன. இவ்வகை பயிர் பொருட்கள் சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதிகள், ஒவ்வாமை, இதயநோய், புற்றுநோய் என்று 55 வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

பி.டி. கத்திரிக்காயை தொடர்ந்து நெல், பருப்பு, கோதுமை மூலிகைகள், காய்கனிகள் சிறு தானியங்கள் என்று பல பயிர்களின் மரபணு மாற்றப்பட்ட ரகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பது ஓர் அபாயம். உணவு உதவி என்ற பெயரில் இவற்றின் விதைகள் தாராளமாக கிடைக்கச் செய்வதில் உள்ள அபாயம் காத்துக் கொண்டிருக்கிறது.

எலிகளைப் போல் மனிதர்களையும் மரபணு மாற்றுப் பொருட்களைப் பரிசோதிக்க அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி விட்டன. உற்பத்திப் பெருக்கம் என்று ஆசை காட்டப்படுகிறது. உலகில் அதிக உற்பத்திப் பொருட்களை மரபணு மாற்று விவசாயத்தின் பிடியில் கொண்டு வந்து லாபத்தைக் குவிப்பதே அதன் குறிக்கோளாகும்.

    இந்தியாவில் சுமார் 2000 கத்திரிக்காய் ரகங்கள் உள்ளன. கத்திரிக்காய் சுலபமாகக் கிடைக்கிறது. அப்படியிருக்க மரபணு மாற்று பி.டி. கத்திரிக்காயை பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. உற்பத்தி அதிகரிப்பு என்பதற்காக பசுமை புரட்சி கொண்டு வரப்பட்ட உயர் விளைச்சலை தரும் ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரசாயன உரமும், பூச்சிக் கொல்லிகளும் தாராளமாக கிடைத்தன. நிலம் உயிரியல் தன்மையை இழந்து நிற்கிறது. மரபணு மாற்று விவசாய முறை என்பது செலவைக் குறைத்து உணவு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக உள்ளது.
    
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் மிகப் பெரிய விதை உற்பத்தி நிறுவனமாக மான்சான்டோவின் கூட்டு நிறுவனமான மஹிகோ இந்தியாவில் பி.டி. கத்திரிக்காயை உருவாக்கியுள்ளது. இதை சாப்பிடுவோரின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. எல்லா வகை கத்திரிக்காய் போலத்தான் இதுவும் இருக்கும். எந்த வித லேபிளும், முத்திரையும் இருக்காது. தமிழ் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படும் கத்திரிக்காயில் இந்த வகை சேருமானால் மருத்துவ குணங்கள் காணாமல் போய்விடும். 4000 ஆண்டுகளாக பல தலைமுறைகளாக உணவுப் பழக்க வழக்கத்தில் சாதாரண வகை கத்திரிக்காய் இருக்கிறது. கத்திரிக்காய் உற்பத்தியை அதிகமாக்க ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையும், இயற்கை வேளாண்மை முறையும் குறைந்த செலவில் பல வழிகளைக் கொண்டிருக்கின்றன.

    ஒரு எலி பி.டி வகை உணவை சாப்பிடும் போது கீழ்க்கண்டவை உருவாகின. வயிற்றுப் புண், குட்டி எலிகளின் இறப்பு விகிதம் 4 மடங்கு அதிகரித்தது, ஈரல், கணையம் பாதிப்பு (சோயாவை சாப்பிட்டதால்), ஒவ்வாமை (பட்டாணி) ஈரல் வீக்கம் (எண்ணை விதைகள்), வயிற்றில் புற்று நோய் (உருளைக்கிழங்கு), சிறுநீரக நோய் (சோளம்) உடல் உறுப்புகள் மாற்றம் (சோளம்). இதே வகை நோய்கள்தான் மனிதர்களுக்கும் ஏற்படும் என்று 55 வகை நோய்களின் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார்கள் இவை ஆன்டிபயாட்டிக் மருந்தால் உடம்பில் சென்று தங்கி, எளிதில் நோய் தாக்கும் நிலையும் நோய்ப்பட்டவர்கள் எளிதில் குணமாக முடியாத நிலையும் உருவாக வாய்ப்புகள் உள்ளன. பயிர்களின் பன்முகத் தன்மை என்பது முக்ய இயற்கை வளமாகக் காப்பாற்றப்படுகிறது.

மரபணு மாற்றத்தால் மகரந்த சேர்க்கை மூலம் எல்லா வகை பயிர்களும் மாசுபடும் என்பது தலையாயது. இவ்வகை விதைகளை விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி விட முடியாது. தங்கள் நிலத்தில் விளைந்த பயிரின் விதையை மறுபடியும் பயன்படுத்த முடியாது ஒவ்வொரு தடவையும் விதைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் உரிமை பெற்ற முகவர்களிடம்தான் வாங்க வேண்டும். விலை நிர்ணயம் கூட அவர்கள்தான் செய்வர். இந்திய விவசாயி விவசாயம் செய்யும் ஒவ்வொரு விதைக்குள்ளும் தனது மரபணு உரிமை இருக்கிறது என்று பன்னாட்டு நிறுவனங்கள் முத்திரை குத்துவது எந்தவொரு ஜனநாயக நாட்டின் குடிமகனுக்கும் எதிரானதாகும்.

    அதிகப்படியான பூச்சிக் கொல்லிகளின் நுகர்வால் பாதிப்புக்கு உள்ளாகி நிலத்தை இழந்து கொண்டிருக்கும் விவசாயிகள் மரபணு மாற்ற பி.டி பருத்தி வகையால் இன்னும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பருத்திக்கான பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் பல மடங்கு பெருகி விட்டன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆறெழு வகைப் பூச்சிகள் பருத்தியைத் தாக்கின. இன்று எழுபது வகை பூச்சிகள் தாக்குகின்றன. இந்தியாவில் பயிரிடப்படும் பருத்தி விதை அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் உரிமைப் பொருளே. சாதாரண பருத்தி விதை ரூ 300 என்றால், பி.டி. பருத்தி விதை ஆறு மடங்கு அதிகமாகும். இதில் பாதிக்கு மேல் மான்சாண்டோ நிறுவனத்திற்கு உரிமைத் தொகையாகச் செல்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கிய விதை அவர்கள் உறுதி அளித்தபடி மகசூலைத் தராததால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட கதைகள் இன்னொருபுறத்தில் நீண்டு கொண்டிருக்கின்றன.

    மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பலன் பெரிதாக இல்லை. தனது நிலத்தில் என்ன பயிரிட என்பது விவசாயின் உரிமையாக இருப்பது பறிபோகிறது. நமது உள்ளூர் வகை மரபணு பயிர்கள் காணாமல் போய்விடும். பெரும் உடல் நலக் கேடுகள் வாய்க்கும் விவசாயம், உணவு சார்ந்து நாம் கொண்டிருக்கும் சுதந்திர கருத்துக்களுக்கு ஊறு ஏற்பட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஊடுருவ இந்த மரபணு மாற்ற பயிர்கள் வழிவகுத்து, எலிகளைப் போல 135 கோடி மக்களையும் பரிசோதனைப் பொருட்களாகி பன்னாட்டு நிறுவனங்கள் வேடிக்கை பார்க்கின்றன.


- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன்

திங்கள், 28 அக்டோபர், 2013

படிக்கலாம் வாங்க.

படிக்கலாம் வாங்க..

                                     சுப்ரபாரதிமணியன்

                  1.
நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் )
தமிழில்: ச.மாடசாமி
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர்  சிப்ஸ் )

    சிப்பிங் என்ற  பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு  பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர்  உறவு பற்றியும் இந்நூல் பேசுகிறது. ஒரு தலைமை ஆசிரியராக உயர்வது அவரின் கனவு.  அதற்குத் தேவையான கல்வித்தகுதியும் திறமையும் அவரிடம் இல்லை. 60 வயதில் பள்ளி ஆலோசராகிறார். 65ல் பணி ஓய்வு..பள்ளி வாழ்க்கையும் ,  ஓய்வு வாழ்க்கைக்குப் பின்னதான அவரின் அனுபவங்களும் இந்நாவலில் விரிகிறது. ஆசிரியர் மாணவரிடத்தில் அதிகாரமற்ற உறவு நீடித்திருப்பதை சிப்ஸ் பள்ளி வாழ்க்கை முடிய கடைபிடித்திருக்கிறார். மாணவர்களை தோழர்களாக வகுப்பிலும் வெளியிலும் நடத்தியிருக்கிறார்.1848ல் பிறந்த சிப்ஸ் 1913ல் மூச்சுத் திணறல் நோயால் இறந்து போகிறார்.பள்ளியை பனி மூடிக்கிடந்த போதும், பள்ளி மாணவர்கள் மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டபோதும் அசெம்பிளி ஹாலையே மருத்துவ வார்டாக மாற்றி சேவை செய்திருக்கிறார். முதல் உலகப் போர் தொடங்கிய போது புருக்பீல்டு மாணவர்களில் கணிசமானோர் ராணுவத்தில் சேர்ந்து சிலர் பலி ஆகி யிருக்கின்றனர். பழைய மாணவர்களைப் பற்றி பிறமாணவர்களிடம் பேசி உத்வேக மூட்டி மனம் கரையச் செய்திருக்கிறார்.பள்ளீக்கு வெளியே குண்டு மழை பொழிந்தபோதும் அது மாணவர்களை பெரிதும் பாதிக்கக் கூடாதென்று  பாடத்தை நடத்தி  காட்டியவர்.பள்ளி இயல்பான இடமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.போர்க்காலத்தில் ரொட்டிக்கு ரேசன். ரேசனில் கிடைத்த ரொட்டியை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்.தன் உயிலில் சொத்துக்களை புரூக் பீல்டு பள்ளிக்கும், ஆதரவற்றோர் பள்ளிக்கும் எழுதி வைத்தவர். ஆட்சி அதிகாரத்தைப் பற்றி  தொடர்ந்து மாணவர்களிடம் விமர்சித்துக் கொண்டே இருந்தவர்.திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களில் மனைவி இறந்து போன பின் முடிந்து போக வாழ்க்கை முழுக்க தனிமைதான். ஆனால் தனிமையை அவர் உணராமல்  மாணவர்களுடனேயே கழித்தவர்.எனக்கா குழந்தைகள் இல்லை. எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள் . ஆயிரக்கணக்கில்.. எல்லாம் ஆம்பளப் பசங்க “ என்று மரணப் படுக்கையில் பெருமிதம் கொண்டவர்.வகுப்பறையை வெல்வது, மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரியராக உணர்ந்து வாழ்ந்தது, தொடர்ந்து வாசிப்பதன் ஆகியவை மூலம்  தன்னை தன்னை ஆசிரியராய்  நிருபித்து கொள்வதுமாய் வாழ்ந்திருக்கிறார். சிப்ஸ் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான். ஆனால் நிஜ மனிதராய் ஜேம்ஸ் ஹில்டன் மூலம் பெரும் ஆளுமையாக இந்நாவலில் வெளிப்பட்டிருக்கிறார் சிப்ஸ். எளிய மொழிபெயர்ப்பு.உள் ஓவியங்கள் பள்ளிச் சூழலை வெளிக்கொணர சிறப்பாகப் பயன்பட்டிருகிறது.திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.

இன்றைய ஆசிரியர் உறவு எவ்வகையிலும் தீங்கு தரக்கூடாது என்றிருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தம் சொல்லி மாளாது. திசை மாறிச் செல்லும் மாணவர் சமூகம்.அதிநுகர்வுப்போக்குகள் அவர்களை அலைக்கழிகின்றன, அது ஆண்டான் அடிமை உறவல்ல. அன்பும் கருத்துப் பரிமாற்றமும் உள்ளடக்கிய கருத்துப் பரிமாற்றமாக இருக்க வேண்டும். சுதந்திரக்கல்வி உணர்வு என்றைக்கும் மனதில் நிலவ வேண்டும்  
ஆசிரியர் மாணவர் உறவு அசாதரணமாக இருக்கும் இன்றைய சூழலில் அதை மேம்படுத்தும் அம்சங்களை இந்நாவல் கொண்டிருக்கிறது.
   ( 64 பக்கங்கள் ரூ 35: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )
    - சுப்ரபாரதிமணியன் (  9486101003  )
வியாழன், 24 அக்டோபர், 2013

பாவடி

 

சுப்ரபாரதிமணியன்

Share


பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது.
பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு மைதானம் பின்பக்கத்தில் கொஞ்சம் காலி இடம் இருந்தது. இரண்டாம் முளைக் கடப்பாரையை அந்த மைதானத்தில்தான் அடிக்க வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் இடம் பத்தும், அய்ம்பது கெஜம் என்றால் சற்று சிரமம்தான். பள்ளிக்கூடம் ஆரம்பப் பள்ளிதான். அதிகம் குழந்தைகள் படிப்பதில்லை. தெரிந்த ஒரு வாத்தியாரும் இருந்தார். அவரிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று ரங்கசாமி நினைத்தார்.
நரகலாகஇருந்தது. பெரிய இரும்புத் தகரத்தை வைத்துக் கொண்டு நரகலை தள்ளி தள்ளி விட்டார். “ என்ன மனுஷங்களதா இல்லே பன்னிதான்னு தெரியலே..” அருணாச்சலம் சிரித்துக் கொண்டே சொன்னான். இது சிரிக்கிற விஷயமா இல்லையா என்பதை விட இவ்வளவு தூரம் வந்து இந்த இடத்தை சுத்தம் பண்ண வேண்டியதாகிவிட்டதே என்RRறிருந்தது. நெருஞ்சியை வெட்டித் தள்ளினார். மக்கின காகிதங்களும், செங்கற்களும், சிறுசிறு கற்களையும் ஒதுக்கிப் போட்டார்கள். புற்கள் இருந்தன. அது மெல்ல மெல்ல பாவடியில் ஆட்கள் நடமாட ஆரம்பித்தால் போய்விடும். வீட்டிலிருந்து ஒன்றரை பர்லாங் நடந்து வர வேண்டும்.உடம்பிலிருந்து வியர்வை ஓடிக் கலைத்த்து.
பாவு குச்சிகள், பாத்திரங்கள், பில்லுவேர்கள், கஞ்சிப் பைகள் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு நடையும் கொண்டு போக வர ஆளை அசத்திவிடும் அலுப்பாகிவிடும்.
பாவு நீட்டி கஞ்சி போட்டு சரிசெய்து பூர்த்தியாவதற்குள் ரெண்டு நாள் நெய்த அலுப்பு வந்து விடுவது சகஜம். இனி இவ்வளவு தூரம் நடந்து வந்து பாவு நீட்டிக் கொண்டு போவது கஷ்டம் என்பது தெரிந்தது. பாவு நீட்டிவிட்டால் இரண்டு தரமாச்சும் காபி சாப்பிடும் பழக்கம். வீடு பக்கம் என்றால் ‘சூடு பண்ணிக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் இவ்வளவு தூரம் காபியைக் கொண்டு வந்தாலே ஆறிவிடும். சகித்துக் கொண்டு முதல்தரம் குடித்து கொண்டாலும் இரண்டாம் தரம் முடியாது. வெயில் காலம் என்றால் சோற்று வடிநீர் டம்ளர் டம்ளராய் பாவடியில் இருக்கையில் எல்லோரும் குடிப்பர்.புளி தண்ணீர் ரங்கசாமிக்கு மிகவும் பிடிக்கும்.
“ அருணாசலம் எப்பிடி இருக்கு..”
“ பரவாயில்லே மாமா..”
“ நாளைக்கு மல்லிகா பாவு இருக்கு. இங்கதா வந்தர்லாமுன்னு… கவுண்டர் லாரி எடுத்துட்டாலும், யாராச்சும் ரகளை பண்ணினா எதுக்கு.. நேரிடையா இங்க புது பாவடிக்கு வந்திர வேண்டியதுதா. உனக்கு பில்லுவேர் வேணுமா.. எங்களது ஒண்ணு செரியில்லாமெப் போச்சு. பிரிச்சு ஆலி வெச்சுக் கட்டணும்..”
காலையில் நடந்தது மனசிற்குள் வந்த்து..வேலிக்கிளுவை படலுக்கு வெளியே பாவுக் குச்சிகளுடன் தர்மன் நிற்பது தெரிந்தது. பனி மெல்ல விலகின மாதிரி அவன் தென்பட்டான்.
”என்ன பாவா. இன்னிக்கு உங்க பாவு இருக்குதுன்னு சொன்ன ஞாபகம். உங்க பாவு கட்டற எடத்திலெ கவுண்டர் லாரி எமனா நிக்குது..”
திக்கென்று ரங்கசாமிக்கு. பரபரவென்று தறிக் குழியிலிருந்து எழுந்தார்.
முழுத் தெருவையும் அடைத்துக் கொண்டு லாரி நின்றிருந்தது. அதன் முழு பலத்தையும் தன்னுடன் வாங்கிக் கொண்டு திமிராய் நிற்பதாய் தோன்றியது பயமளித்தது.அதன் கண்ணாடியில் ஏதோ காளி உருவம் வரையப்பட்டிருப்பது தெரிந்தது
தர்மன் பக்கத்தில் நின்றிருந்தான். நாகமணி பரபரவென்று வந்து நின்றாள்.அவள் சேலையை எடுத்து செருகியிருந்த கதியில் சேலை இன்னும் கசகசவென்றிருந்தது.
“ என்ன பாவா. என்ன பண்ணப் போறீங்க..”
“ தர்மா. உனக்கு பாவு நீட்டறதா சொன்னார். இப்ப என்ன பண்றது..”
“ கவுண்டரே எதுக்கும் எழுப்பி மேக்காலெ கொண்டு போய் நிறுத்தச் சொல்றது..”
சற்று பயமாகத்தான் இருந்தது ரங்கசாமிக்கு. மயில்சாமிக் கவுண்டர் கேட்பாரா? கேட்கிற மனிதனா? எதற்கெடுத்தாலும் வீம்புக்கு வருகிறவர்.பேச்சே வீறாப்புடன்தான் இருக்கும்.
“அந்த ஆள் எத்தனெ மணிக்கு வூட்டுக்கு வந்தாரோ.. எப்பவிருந்து தூங்கறாறோ.. போய் லாரியை மேக்க கொண்டு போய் நிறுத்தச் சொன்னா என்ன சொல்லப் போறாரோ..”
“எதுக்கும் கேட்டுப் பாருங்க.. எடம் இல்லாமெ பாவெ எப்பிடி நீட்டி, கஞ்சி போட்டு, உலத்தி எடுப்பீங்க..”
தர்மன் “பில்வேர்களை” சுமந்து கொண்டு அடுத்தத் தெருவின் பாவு நீட்டும் இடத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். சரசரவென்று அதை நீவி சப்தம் உண்டாக்கினான்.இசைக்கருவியின் மீட்டல் போலிருந்தது.
“ என்னங்க. நான் போயி கவுண்டச்சி கிட்ட சொல்லட்டுமா..”
“ அந்த ஆளெ விட அந்தம்மா இன்னமும் முசுடு..”
ஏதாவது தேவலர் வந்து உதவி புரிந்தால் நன்றாக இருக்கும் என் நினைத்தார். கடந்து சென்ற காற்றின் ஈரம் உடம்பை உலுக்குவதாக இருந்தது. தோலைத் தைத்து உடம்பில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த குளிர் குறையும். தோல் ஆடை எப்படி வந்தது யாரோ சொன்னது மனதில் வந்தது. பல்லில் கடித்து தூக்கிப்போகும் குட்டியின் பிடறித்தோல் கிழிந்து போகாமல் இருப்பதைக் கண்ட மனிதன் அதிசயமாகப் பார்த்தான். அப்படியானால் சிறுத்தையின் தோல் இன்னும் வலுவாய் இருக்கும் என்று வேட்டையாடி தோலை உரித்து தோல் ஆடை செய்ய ஆரம்பித்திருக்கிறான். சாதாரண மனிதர்களுக்கு திருமாலின் நாபிக் கமலத்தில் பிறந்த மானி, அபிமானி என்ற இரு பெண்கள் பூவுலகில் பருத்திச் செடிகளாகி நூல்களாய் வெளிவந்திருக்கின்றனர்.
கையிலிருந்த பாவு நூல் பெருத்த எடையாகி கனத்துக் கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.இருவரும் என்ன செய்வதென்று புரியாதவர்கள் போல நின்றிருந்தார்கள். பனி விலகிவிட்டது. சீக்கிரம் வெயில் மெல்லக் கிளம்பும். பாவு நீட்ட சரியான நேரம். பெருமாள் கோவிலிருந்து மணிச் சப்தம் மிகவும் துல்லியமாய் கேட்டது. யாரோ பாட்டுப் பாடுவதும் கேட்டது. எவ்வளவு அற்புதமான சூழ்நிலை. ரம்மியமான நேரம். இந்த நேரத்தில் குளித்து கோயிலுக்கு போயிருந்தால் வாழ்க்கை உன்னதம் என்பது போலத்தான் தோன்றும் என நினைத்தார் ரங்கசாமி. ஆனால் இந்த லாரி இந்த நேரத்தின் ரம்மியத்தைக் கெடுத்து விட்டதே என்று நினைத்தார்.
மல்லிகா கண்களைக் கசக்கியபடி வந்தாள் “ பில்லு வேர்களை” தோளில் இருந்து இறக்கி வைத்தாள்.அவள் வாயிலிருந்து வந்த சப்தம் ஒருவகை ஆசுவாசமாய் இருந்தது.
“ எதுக்கு நீ பில்லுவார்த்தை எடுத்துட்டு வந்தே..” சற்று எரிச்சலுடன் கேட்டார் ரங்கசாமி.
“எதுக்கு அவ மேல எரிஞ்சு விழறீங்க” நாகமணி சமாதானப்படுத்தும் விதமாய் மல்லிகாவின் பக்கம் சென்றாள்.
“ நீங்க ரெண்டு பேரும் வூட்லே காணம். பாவடியிலதா இருப்பீங்கன்னு எடுத்துட்டு வந்துட்டன்.. இதென்னப்பா லாரி..”
“அதுதாம்மா..”
ரொம்பவும் சோர்வடைந்து விட்டார் ரங்கசாமி. ஓரத்தில் கிடந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து விட்டிருந்தார். வானத்தின் நீலம் மெல்ல வெளிச்சக் கீற்றுகளை பரப்பத் தலைப்பட்டது.
“ நாளைக்கு பாவு நீட்டிக்கலாமா மல்லிகா..”
“ இன்னிக்கு பாவு முடிஞ்சப்புறம் ரெண்டு மணி நேரத்திலெ னெய்யற வேலை முடிஞ்சுரும். பாவு அறுத்து ‘அச்சு’ எடுக்கணும்.. இல்லீன்னா இன்னிக்கும் வீண், நாளைக்கும் வீண்தா.” வீதியில் போகிறவர்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றனர்.
“ எதுக்கும் கேட்டுப் பாக்கறனே..”
ஏதாவது தெய்வம் காப்பாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.சவுண்டிஅம்மனும்,பெருமாளும் சட்டென நினைவை விட்டுப் போயிருந்தனர். ஊரில் இருக்கும் மாசி பெரியண்ணசாமி ஞாபகம் வந்தார்.அது மாமரம்தான். நூறு வயதிற்கு மேல் இருக்கலாம்.மரத்தின் அடியில் சிவலிங்கம் இருக்கும் மரத்திலிருந்து விழும் மாம்பிஞ்சுகள் பிரசாதமாக்க் கிடைக்கும். அந்தக் கோவில் இருக்கும் பக்கம் மாலை நான்கு மணிக்கு மேல் யாரும் நடமாட மாட்டார்கள். மரத்தில் சித்தர்கள் வசிப்பதால் அவர்கள் பயமுறுத்துவார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் பேசப்பட்டதாக இருந்த்து.அப்படி பயமுறுத்தும் ஏதாவது தெய்வம் இருந்தால் சங்கடம் தருவோர்க்கு பயம் தருவார். தொழில் சுமூகமாக நடக்கும்.
ரங்கசாமி வீட்டிற்கு வந்து கெட்டியானத் துண்டொன்றை எடுத்துக் கொண்டார். உடம்பில் போர்த்தினார். புதிதாய் துவைத்து வைத்த துண்டு. இதமாய் இருந்தது. புது துணியைப் போன்ற மணம் வந்தது.
ராட்சத மனிதனைப் போல லாரி நீண்டு நின்று கொண்டிருந்தது. முருகன் துணை என்று எழுதப்பட்டிருந்தது. கரும் பச்சை நிற வர்ணம் பூசப்பட்டது. முகப்பு கண்ணாடியில் பனி விழுந்த தடமாய் பரவலாய் இருந்தது. தெருவை சரியாய் அடைத்தது போலிருந்தது. அதன் ஓரமாய் நடந்தார். சாக்கடை மீது கால்களை வைத்து நடக்க வேண்டும். வேறு வழியில்லை. சாக்கடையின் ஓரத்தில் கால்களை ஊன்றி நகர்வது போல் லாரியின் அந்தப் புறத்தைக் கடந்தார். சாக்கடை கறுப்பாய் கால்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தபோது நாகமணியும், மல்லிகாவும் சாக்கடையில் இருந்த சற்றே பெரிய கற்களில் ஜாக்கிரதையாய் கால் வைத்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
மயில்சாமி கவுண்டர் வீட்டுமுன் நின்றார். முழுக்க கிளுவை முள் வேலி. நடுவில் இரும்புக் கதவு. கவுண்டர் முன்பு கூலிக்காக டிரைவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்புறம் இருக்கும் நிலத்தையும், நகைகளையும் விற்று சொந்தமாய் லாரியொன்றை வாங்கிக் கொண்டார். வெளியூர் போகாத நாட்களில் தெரு அந்த லாரியால் அடைபடும் அந்தப் பகுதி நெசவாளர்களுக்கு சிரமங்களைக் கொடுக்கும் லாரி.ஒவ்வொரு தெருவுக்கும் இப்படி ஒவ்வொரு லாரி இருக்குமா…
மயில்சாமி கவுண்டர் வீட்டு இரும்பு கேட்டிற்கு முன் நின்றார்.அதன் திடத்தன்மை பயமுறுத்துவதாக இருந்தது.துருப்பிடித்தது போல மரநிறமாகியிருந்தது.
“ கவுண்டரே.. என்ன கவுண்டரே..”
எந்தப் பதிலும் இல்லை . யாராவது பெண்கள் வந்தால் செளகரியமாக இருக்கும். சொல்லலாம். கவுண்டர் மறுப்பதும் உடன்படுவது இரண்டாவது. மறுத்தால் பெண்கள் சொல்லைக் கேட்டு சும்மா இருந்துவிடலாம். கவுண்டச்சியை எதிர்பார்த்தார் ரங்கசாமி.
“ கவுண்டச்சி இருந்தா நல்லது” என்றாள் நாகமணி.
“எல்லாம் முசுவு போட்டுட்டு தூங்குதுகளோ என்னமோ ” என்று சொல்லி சிரித்தாள் மல்லிகா. கிளுவை மரங்கள் பச்சையாக மினுங்கின.பனியின் குளிப்பில் அவை திளைத்திருந்தன.
“ கவுண்டரே.. லாரிக்காரக் கவுண்டரே..”
இரும்புக் கதவின் தாழ்ப்பாளைத் தட்டி சப்தமுண்டாக்கினார். படபடவென்று அது அதிர்ந்தது. நாரசமாய் சப்தம் கிளம்பி எதிரொலித்தது.
“ யார்யா..”
கதவு திறந்தது. கவுண்டர் நின்றிருந்தார். கண்கள் சிவந்திருந்தன. கண்களில் பீழை. முகம் உப்பியிருந்தது. ரங்கசாமி தன் பூஞ்சை உடம்பிற்கு முன் ராட்சத உருவமொன்று நிற்பதை உணர்ந்தார்.
“ என்ன வேணும். நீயா..”
“ பாவு நீட்டணும். கொஞ்சம் லாரியை எடுத்து மேக்காலெ எங்காச்சும் நிறுத்துனா பாவு நீட்ட செளகரியமா இருக்குமுங்க..”
“அதெல்லாம் கஷ்டம்.. நீ வேற எடத்திலெ பாவு நீட்டிவியோ சாவு நீட்டிவியோ.. செய்..”
“வேற எடம் இல்லாமத்தானே..”
அவர் பதிலைச் சொல்லாமல் நடக்க் ஆரம்பித்தார். வீட்டுக் கதவு ஒருக்களித்து சாய்ந்திருந்தது.மெல்ல வெளிச்சம் கசிந்து கொண்டிருந்து.
“ என்னங்க.. பாத்து செய்யுங்க..”
” லாரி எடுக்கறது கஷ்டம். எனக்கு ரெண்டு நாள் தூக்கம் இன்னமிருக்கு. தூங்கணும்… போங்க..”
“ பாத்து எடுத்துருஙக..”
நாகமணி மெல்லச் சொன்னாள். அவள் குரல் நெகிழ்வடைந்திருந்தது.குரலின் கமறலைச் சரி செய்து கொண்டாள்.
“ என்ன உன் சொந்த எடமா. அதிகாரம் பண்றே..”
“ அதிகாரமில்லீங்க.. தொழில் பண்ணற ரோடு..”
“ ரோடுன்னு தெரிஞ்சதுதானே… முனிசிபல் ரோட்லே எனக்கும் நிறுத்தரதுக்கு உரிமை இருக்கு போ..”
உள்ளே போய் விட்டார். மல்லிகா அப்பாவைப் பார்த்தாள்.அவள் முகம் சிவந்திருந்த்து.
“திமிர் புடிச்ச ஆள்” என்றாள் மெல்லிசான குரலில்.
“ சும்மா இரு. நீ வேற பூதத்தை கிளப்பி விட்டுராதே..”
“ என்ன செய்யலாமப்பா.”
அவரும் யோசித்தபடி நின்றிருந்தார். மயில்சாமி கவுண்டரின் மனைவி வந்தாள்.சேலை கசங்கியிருந்தது. மரத்துக்கிளைகள் போல் தலைமயிர் பிளந்திருந்தது.எண்ணெய் போடாததால் போல் வறண்டிருந்தது.
“ சொல்லிட்டார்லே.. போங்க.. க்ளீனர் பையன் கூட இல்லே.அவர் சொன்னது சொன்னதுதா. தூக்கம் கெட்ட எரிச்சல் வேற. வேவாரம் செரியில்ல போலிருக்கு.. ராத்திரியிலிந்து எரிச்சல்லே வூட்லே நடந்துக்கறார்..”
“ உங்க எரிச்சல்லாலே எங்க உயிர் போகுது..”
மல்லிகா துடுக்கென்று பேசினாள். அவளுக்கு உதடு துடித்தது.
“ எவண்டா அது… தாஸ்தியா பேசறவன்.. செட்டுக்காரங்களுக்கு அவ்வளவு திமிர் ஆயிடுச்சா”
பரபரவென்று கேட்டபடி மயில்சாமி கவுண்டர் உள்ளிலிருந்து வந்தார். ரங்கசாமி நிலைகுலைந்தார். “ நட நட” என்றபடி மல்லிகாவைத் தள்ளினார். நாகமணி பயத்தில் பத்தடி நகர்ந்து விட்டிருந்தாள். மல்லிகாவும் பயந்தவள் போல் விரைசலாக நடந்தாள். அஜாக்கிரதையாய் சாக்கடையில் கால் வைத்து நடந்தபோது சாக்கடை பரவலாய் தெறித்தது.மல்லைகாவின் கால்களில் சாக்கடை அப்பியிருந்த்து.
“ நாலு வார்த்தைன்னா போதும். பெரிய சண்டையே வந்துரும்.. போ மல்லிகா..” அவரும் விரைசலாய் நடந்தார். சாக்கடையைப் பொறுத்த வரையில் அக்கறை காட்டாதவர் போல.பூவரசஞ் செடியொன்று குட்டையாய் உரசியது.
“ செட்டுக்காரப் பசங்களுக்கு கொழுப்பைப் பாரு.. நீங்க இனி எப்ப இந்தத் தெருவிலெ பாவு நீட்டுவீங்கன்னு பாத்துருவன்…” உரக்கக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. குரல் சட்டென நின்று போயிருந்த்து.வீட்டிற்கு வந்து உட்கார்ந்ததும் மூச்சிரைத்தது ரங்கசாமிக்கு. சண்டை பெரிதாகாமல் தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் என்றிருந்தது. “ மல்லிகா நீ வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்கலாமில்லே..”
“ என்னப்பா.. முனிசிபாலிட்டி ரோடுதானே.. நாம பாவு நீட்டுனா என்ன..”
“ அவனுக்கும் அது முனிசிபாலிட்டி ரோடுதா.. கெஞ்சிக் கேட்டுத்தா தொழில் பண்ணனும் நீ எளசு பாரு..”
மல்லிகா ரங்கசாமியின் மூத்தமகள். நெய்து கொண்டிருப்பவள். நெய்து சம்பாத்யம் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும், வயது இருபதாகிவிட்டது. கல்யாணத்திற்கென்று சேமித்து வைக்க வேண்டிய சாபக்கேடு. நெய்து கொஞ்சம் சேமித்து வைத்திருந்தால் இன்னொரு நல்ல நெசவாளிக்கோ, பனியன் கம்பெனியில் வேலை செய்பவனுக்கோ வாழ்க்கைப்படலாம். இல்லையென்றால் கிராமத்திலிருந்து வரும் மாப்பிள்ளைதான் வாய்க்கும். டவுனில் பிறந்து வளர்ந்த பெண்கள் கிராமங்களுக்குப் போக பயப்படுவர். சினிமா முதற்கொண்டு எத்தனை விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.
ராதிகா இரண்டு காபி டம்ளர்களைக் கொண்டு வந்தாள். “அப்பா காபி சாப்பிடுங்க..”
“இப்ப என்ன அவசரம். பாவடிக்கு போய் கஞ்சி போட்டப்புறம் குடுத்தா பத்தாதா..”
“அப்பா இன்னிக்கு இன்னமும் பாவு நீட்டற முடிவுலதா இருக்கார் போல” என்றாள் மல்லிகா.
ராதிகா “ குடிங்கப்பா” என்றூ சொல்லியபடி உறிஞ்ச ஆரம்பித்தாள்.அவள் எதைக் குடிப்பதாக இருந்தாலும் ஒரே மூச்ச்சில்தான் உறிஞ்சித்தீர்ப்பாள்.”மாடு உறிஞ்சற மாதிரி..”
ராதிகாவிற்கு பத்து வயதாகிறது. நூல் சுற்றுவாள். அப்பாவுக்கும், அக்காவுக்கும் நெசவு வேலைகளில் உதவுவாள். மேல் வேலைகள் செய்வாள். இரண்டு வருஷமாய் அவளையும் தறியில் இறக்கி விட வேண்டும் என்று ரங்கசாமி நினைத்திருந்தார்.படித்தது போதும் என்று நிறுத்தி விட்டார்.முடியவில்லை. அவளுக்கென்று மூன்றாம் தறியைப் போட்டபின் நாகமணியால் மூன்று தறிகளுக்கும் சேர்த்து வேலை செய்வது கஷ்டம்தான்.
“ அந்த ஆளு என்ன பேச்சு பேசறான் பாத்தீங்களா. செட்டுக்காரனாம்.. உடனே ஜாதிக்கு போயிர்ரானுக.. கேவலமா பேசறாங்க.. அவங்கெல்லா பொறக்கறப்பவே லாரியோட பொறந்த மாதிரி..”
“ சும்மா இரு மல்லிகா. எரிச்சலைக் கெளப்பாதே..”
ஊர் முழுக்க பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். டவுன் என்றாலும் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. கவுண்டர்கள் இருக்கும் வீதிகளில் பாவு நீட்டுவது சுலபமல்ல. பணிந்து போக வேண்டும். இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு வீட்டிற்கு அருகில் என்றில்லாமல் தேடிப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
“ காலையில் அஞ்சு மணிக்கு நீட்டிரீங்க. கெளம்ப பத்து மணியாகும். அதுக்குள்ள நடமாடறது கஷ்டம்.. ஓரமா போகணும்.. எல்லாமும்..” முணுப்பார்கள். இவர்களின் தொழில் ஆயிற்றே. இதற்கு போய் இடைஞ்சல் செய்யலாமா என்று சிலர் சகித்துக் கொள்வார்கள். “ பொழைக்கட்டுமே அவங்களும் “ என்று. தங்கள் வீட்டில் ஏதாவது விசேசம், வேலை என்றால் முன்பே சொல்லிவிட்டால் யாரும் பாவு நீட்ட மாட்டார்கள். பாவு நீட்டின பின் “ இன்னிக்கு வண்டி வருது; சாமான் வருது.. கழட்டிட்டு போ” என்று ரகளைகள் பல நடந்திருக்கின்றன. பாவு கட்டின கடப்பாரையை கழட்டி விட்டு ரகளை செய்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் பயந்துதான் நெசவுத் தொழில் செய்ய வேண்டியிருக்கிறது.
அதுவும் பனியன் பேக்டரிகள் டவுன் முழுக்க ஆன பின்பு இன்னும் சிக்கல்கள்தான் . அட்டைப்பெட்டி வண்டிகள், ஸ்டீம் கேலண்டரிங், ட்ரிங் வண்டிகள், வாகனங்கள் எந்த நிமிடமும் வரும். நெசவு தொழிலுக்கு இந்த வகையில் தெருவிற்குத் தெரு பனியன் கம்பனிகள் ஆகிப் போனது இடைஞ்சலாகத்தான் போய்விட்டது.
“ நாளைக்கு பாவு நீட்டிக்கலாம் அப்பா. நாளைக்காச்சும் லாரி போய் இடம் காலியாகணும். இல்லீன்னா வேற பாவடிகள்லேதா பாக்கணும்..”
ரங்கசாமிக்கு முடிவு எடுக்க முடியவில்லை. என்ன செய்வது என்று விளங்கவில்லை. வீட்டு முகட்டைப் பார்த்தார். சிதைந்த ஓட்டின் வழியே வானம் தெரிந்தது.அது பனியில் வெளிச்சத்தைக் காட்டாமல் சோம்பியிருந்த்து.
“ கஞ்சி காய்ச்சி வெச்சது வீணாயிருங்க..”
“ வீணாயிரும்தா..”
“ நம்ம பில்லுவேர் வேறெ செரியில்லெ. அருணாச்சலம் வூட்லிருந்து ஒண்ணு வாங்கிட்டு வந்து வச்சிருக்கன். நாளைக்கு அவங்களுக்கு வேணும்ன்னா கஷ்டமா போயிரும். அவசரத்துக்குப் போய் தேட முடியாது பாருங்க.”
“நீ சொல்றதெல்லா வாஸ்தவந்தா.. இன்னிக்கு பாவடி கெடைக்கனும் இல்லையா. அந்த ஆள் வேற இனி இந்தத் தெருவிலே நீ பாவு நீட்டறதை பாத்துர்ரேன்னு வேற சொன்னான். நீட்ட வுடுவானோ இல்லை ரகளை பண்ணுவானோ தெரியலே..”
“ என்ன பண்ணலாமுன்னு சொல்றீங்க..”
“ நீ கஞ்சி சட்டிகளையும் ,கொடத்தையும் எடுத்து இடுப்புலே வெச்சுக்க. நான் பாவு நூல் எடுத்து தோள்லே போட்டுக்கறன். பொண்ணுக பில்லுவேர்த்தையும் சாமான்களையும் எடுத்துக்கட்டும். டவுன்லே தெருத் தெருவா திரிவம். எங்க எடம் இருக்குதோ அங்க இருக்கறவங்ககிட்ட என்னங்க சாமி உங்களுக்கு எடஞ்சல் எதுவுமில்லையே.. நாங்க பாவு நீட்டறதில்லேன்னு கேட்டுட்டு பாவு நீட்டலாம் “ரங்கசாமிக்கு குரல் தழுதழுத்தது. நாகமணி துணுக்குற்றாள்.
” நெசவு பண்ணி ஜீவனம் பண்றதே கொடுமையாய் போச்சு. இதிலெ தொழிலை பண்ண வுடாமக் கூட எத்தனை தொந்தரவுக. நானும் நிறையக் கவுண்டர்களைப் பார்த்திருக்கன். மனுஷங்களுக்கு அடையாளமா இருப்பானுங்க. நம்ம சோலைமலைக் கவுண்டர் இல்லியா..”
“ ஆமா அவர் கிட்ட சொன்னா இந்த லாரிக்காரன்கிட்ட கேக்க மாட்டாரா ஏன் எதுக்குன்னு..”
“ கேப்பார். கேக்க தயக்கம் பண்ணாலும் பண்ணுவார். நம்மளப் பொறுத்தவரை நல்லவர்தா. ஆனா கவுண்டருக்கு கவுண்டர் விட்டுக் கொடுப்பாங்களா. ஜாதி முக்யம் பாரு..”
அருணாச்சலம் வந்து நின்றான். முகத்தில் எப்போதும் இருக்கும் அடர்த்தியான தாடி. நல்ல கறுப்பு மயிர்கள் அடங்கினத் தாடி. முப்பது வயது. எப்போதும் கலவரப்படும்படி பேசுவான். அது சில சமயம் சிலருக்கு சந்தோஷம் தரும். பலர் அதிர்ந்து பயந்து போவார்கள். அவன் செய்வதையெல்லாம் வைத்து அவனை பலர் “ கிறுக்கன் அருணாச்சலம்” என்றே அழைத்து வந்தார்கள். வாரத்தில் மூணு நாள் இரவு பகல் என்று உட்கார்ந்து நெய்வான். கடைக்குப் போய் கூலி வாங்கி வந்தபின் நெய்யமாட்டான். சினிமா, நண்பர்கள் வீடு என்று சுற்றுவான்.” வாரம் மூன்று நாட்கள் லீவு தார உத்யோகம் இதுதா” என்று சொல்லித் திரிவான்.
“இதுல உள்ள சுதந்தரம் எதில இருக்கு”
“ என்ன மாமா.. லாரிக்காரக் கவுண்டன் லாரியை எடுக்க மாட்டான்னு சொல்லிட்டானாமா..”
“ ஆமாண்டா என்ன பண்ண முடியும்..”
“ நாளைக்கு ராத்திரியும் அந்த லாரியை எடுக்காமெ அங்கிருக்கட்டும். லாரி கண்ணாடியை ஒடச்சு வுட்டறேன்.”
திகிலானது ரங்கசாமிக்கு. சடாரென எழுந்தார், கை கூப்பினார். அவரின் உடம்பு சற்றே நடுங்குவதாக இருந்த்து.
“ டேய் அப்பிடி ஏதாச்சும் பண்ணீராதேடா. அப்புறம் இந்தப் பக்கம் குடியே இருக்க முடியாது.. எங்காச்சும் ஓடித்தான் போகணும். அப்பிடி ஏதாச்சும் பண்ணீராதடா..”
அருணாச்சலம் எதுவும் பேசவில்லை. ரங்கசாமியைப் பார்த்தான். அவர் அவன் சொன்னதில் நிலைகுலைந்து போயிருக்க வேண்டும்.
“ எம். ஜி ஆர் . ஆட்சிக்கு வந்தாதா இதுக்கெல்லாம் பதில் கெடைக்கும்.செரி.. என்ன பண்ணலாம் மாமா..”
“ எம்.ஜி ஆர் ஆட்சிக்கு வர்றப்போ நீதானே நெசவுத்துறை மந்திரி . அப்போ பாத்துக்கலாம் இன்னிக்கு அவ்வளவுதா.வேற எடம் பாக்கறது நல்லதா தோணுது. அந்த ஆளு எப்பவும் பாவு நீட்ட முடியாமெ ரகளை செஞ்சா..”
“ ஊர்ல இருக்கற நாலு பேரை வச்சு பேசுவம்..”
“ ஊர்லே இருக்கற நாலு பேர் யாரு.. பெரியவங்க எல்லாரும் கவுண்டர்ங்கதா நமக்காக வருவாங்களா.. அவன் பொண்டாட்டி, அம்மாவையே போட்டு வண்ணான் துணி வெளுக்கற மாதிரி அடிக்கிற ஆளு. அவன்கிட்ட யாரு ஜெயிச்சிருக்கா..”
“ செரி..”
“ வேற இடம் எதுக்கும் தேடலாம்..”
“ முனிசிபாலிட்டிக்கு புகார் எழுதித்தர்லாம்.. உள்ளூர் கவுன்சிலர் கிட்ட சொல்லலாம்”
“ போடா பைத்தியக்காரா.. உன்னை கிறுக்கன்னு சொல்றது செரியாத்தானே இருக்கு. அதுக்கு தொழிலை வுட்டுட்டு எவன் அலைவான். உள்ளூர் கவுன்சிலரும் அவருதா. நாம எடஞ்சல் பண்றதா அந்த ஆளு எழுதிக் குடுத்தா என்ன செய்யறது. வேண்டாம் போ..”
“ அப்போ வேற இடம் பாக்கலாமுன்னு சொல்றீங்களா..”
“ ஆமா பொது எடமா ஏதாச்சும் பாத்து வெக்கலாம். எடம் கெடைக்காதப்போ புது எடம் நம்ம ஆளுகளுக்கு பிரயோஜனம் ஆகும் பாரு..”
“ எங்க இருக்கு” யோசனை வந்தது போல் மெளனித்தார்கள். அவர்களின் யோசனையைக் கலைக்காதவர்கள் மாதிரி மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ பள்ளிக் கூட்த்து பின்புறந்தா என் மனசிலெ ரொம்ப நாளா கெடக்குது..”
“ கொஞ்சமாத்தானே இருக்கு. பன்னிக மேயும். அப்புறம் நம்ம ஆளுக இருட்டினப்புறம் வெளிக்குப் போறதுக்கு அந்த எடம்ன்னு ஆயிப் போச்சு..”
“ கொஞ்சம் சுத்தம் பண்ணினா பிரயோஜனம் ஆகலாம்.”

. “ பாவடிக்கு எடம் தேடறது என்னமோ மனசுக்கு சங்கடமா இருக்கு “
“நாளைக்கு என்ற பாவும் இருக்குங்க. பில்வேர் எதுக்கும் உங்ககிட்டையே இருக்கட்டும். நான் வேற யார்கிட்டையாச்சும் இரவல் வாங்கிக்கறேன்..”
கூட்டுப் பாவுக்காரர்கள் நிறைய இருந்தார்கள். வீட்டில் ஆள் குறைவாக இருந்தால் வேறு ஒருவருடன் சேர்ந்து பாவு உலர்த்துவதும் பிற வேலைகளுக்கு ஒத்தாசை செய்வதும் என்று. பாவடி இடத்தில் மூங்கில் குதிரைகளை கொண்டு வந்து போட்டு இடத்தை முன்னதாக ‘ரிசர்வ்’ செய்து கொள்வதும் நடக்கும். முந்தின இரவு பாவு இருக்கிறார்கள் கொண்டு வந்து பாவாடையில் “ மூங்கில் குதிரையை” போட்டுவிடுவார்கள். மூங்கிலால் பெருக்கல் வடிவத்தில் அமைந்திருக்கும் பாவின் இருபக்க முனைகளும் மாட்டிக் கொள்ள ஏதுவாக இருக்கும். “ சாவக்கட்டு பாளையத்தில், மூக்கனூர்லே இருக்கற மாதிரி பொது பாவாடை எடம் ஏற்பாடு பண்ணுனா நல்லா இருக்கும். அதுமாதிரி பட்டிக்காட்ல அது முடியும்ன்னா இங்க டவுண்லே இன்னம் அவசியம் அது.
தெற்குத் தெரு சிவகாமி பில்லுவேர் இரண்டை தோளின் மேல் வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தாள். அவளின் மகள் கழுத்தில் துணிக்கஞ்சிப் பைகள் இரண்டை மாலையாகப் போட்டுக் கொண்டு தத்தக்கா, பித்தக்கா என்று கடந்து கொண்டிருந்தாள். “ நீ சம்பாதிச்சதுதா குடும்ப KOnTU தரித்திரம் முடியப் போகுதாக்கும் புள்ளெ”
“ நம்ம ஆளுக தரித்திரம் எப்ப முடியும் போ”என்றபடி சிவகாமி நடந்தாள். குழந்தைகள் கூட தறிக்குழி வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். தார்க்குச்சியைக் கொண்டு போய் குடு என்று அதற்கும் ஏதாவது வேலை கொடுத்து விடுவார்கள். குழந்தையின் கழுத்தில் இருந்த கஞ்சி துணிப்பை செத்துப் போன பாம்பு போல கிடந்தது. துணிப்பை ஜந்து அடி நீளம் இருக்கும். கை புகும் அளவு விட்டம். அதில் கஞ்சியை ஊற்றி இரண்டு பேர் இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு பாவை நனைப்பார்கள். பிறகு பாவை எட்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். கஞ்சி நனைந்திருப்பதைப் பிளந்து கைகளால் பிரிக்க வேண்டியிருக்கும். பிறகு உருவிக் கோலால் அடிக்கும் போது இழைகள் பிரிந்து விடும். பில்வேர் தலை வாரும் சீப்பு போல் எட்டடிக்கு இருக்கும். பில்வேரை பிறகு பாவின் மீது வைத்து மெல்ல இழுத்துக் கொண்டு போக வேண்டியதாயிருக்கும். அது பாவு ஈரம் போய் ஆறும் வரைக்கும் பில்வேருக்கு வேலை இருக்கும். ஈரம் முழுக்க காய்ந்த பின் குறுக்கிக் கொண்டு வரவேண்டியிருக்கும்.
சென்றதரம் ரங்கசாமி பாவு சுற்றும்போது அணி மாறிவிட்டது. ரோலுக்கும் படுமரத்திற்கும் இடைவெளி பத்தடியாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நூல் அறுந்து போனாலும் அதைச் சுத்தம் செய்ய முடியும். சேலையின் அளவு, ரோல் பாவின் அளவிற்கு சம்மாக இல்லாமல் கொஞ்சம் வித்யாசம் வந்துவிட்டது. அச்சு வேறு வலம் இடம் என்று ஆடி இம்சை செய்துவிட்டது. பாவு சுற்றும்போது ஒரு சுற்றுக்கு இருபத்து நான்கு இந்த அளவாக இருக்க வேண்டி ஜாக்கிரதையாகச் சுற்றுவதில் ரங்கசாமி கவனமாக இருப்பவர் சென்றதரம் சற்று மாறிப் போனதால் எல்லாம் சிதைந்துவிட்டது. அந்த பாவு முழுக்க நெய்து அறுத்தெடுத்துக் கொண்டு போவதற்குள் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டார்.
எப்படியோ பள்ளியின் பின்புறம் இருந்த இடம் எல்லோருக்கும் மனதில் பட்டு சுத்தமாகி விட்ட்து,
பள்ளிக் கூட சுவற்றில் சாய்ந்தார். பெரிய பாறாங்கல்லொன்று இருந்தது. அதில் ‘தம்’ இழுத்து ஏறிக் கொண்டார். ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சுத்தம் செய்யப்பட்ட இடம் செவ்வகம்மாய் நீண்டு கிடந்தது. ஆறுதலாய் இருந்தது பாவடிக்கு ஒரு இடம் கிடைத்ததே என்றிருந்தது.
“ சவுண்டம்மா “ வாய் முணுமுணுத்துக் கொண்ட்து.
“ என்ன மாமா பாறாங்கல்லிலே ஏறி உட்கார்ந்திட்டீங்க..”
தூரத்தில் தென்பட்ட செளண்டியம்மன் கோவில் கோபுரத்தைப் பார்த்தார். சவுடியம்மன் முகம் மனதுள் வந்து விட்ட்து. அவள் கண்களிலிருந்து பிரகாசம் எழும்பிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளில் வீரவாட்கள் இருந்தன. ஆசீர்வதிக்கும் கையிலிருந்த ஒளி வெள்ளம் பிறீட்டது. அவளின் கிரீடத்தில் தங்கமும் வைரமும் மின்னின. சிங்க வாகனம் பின்னால் நின்றபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கோவிலில் பஜனை மடத்தில் படிக்கும் தேவாங்க புராணம் மனதில் மின்னலடித்தது.
பிரமன் பல புவனங்களையும், உயிர்களையும் படைத்தார். ஆதி மனுவை பிரமன் ஆடை தர படைத்தான். மனு கடமையை நிறைவேற்றிய வேலை முடிந்தது என்று பரம்பொருளிடம் அய்க்கியமானார் ஆடையின்றி பின்னர் தவித்தனர். சிவன் தேவலனைப் படைத்தார். திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய தாமரை நூலை வாங்கிச் சென்று ஆடை நெய்யச் சொன்னார். சிவன் இமயமலைக்குத் தெற்கே சகர நாட்டு தலைநகர் ஆமோதா உன் ஊராகும் என்றார். திருமால் தாமரை நூலைத் தந்து பாதுகாப்புக்காக சக்கராயுதம் ஒன்றை கொடுத்தார். வரும் வழியில் தங்கியிருந்த ஆசிரமத்தில் இருந்த அரக்கர்கள் சுய ரூபத்தை வஜ்ரமுடி தூர்மவக்கிரன் தூம்ராச்சன் சித்திரசேனன் பஞ்சசேனன் என்று ஜந்து பேராக மாறி தேவலரிடம் இருந்து நூலைப் பறிக்க முயன்றனர். சக்கராயுதத்தை அவர் ஏவ அரக்கர்கள் நிலத்தில் விழுந்த ரத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கில் தோன்றி போரிட்டனர். சக்கராயுதம் செயலற்றுப் போனது. தேவலர் தனக்கு உதவ தாயார் சண்டிகையை எண்ணி பிரார்த்தனை செய்தார். ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் கிரீடத்துடன் தோன்றினாள் செளடேஸ்வரி. சூலம் சக்கரம், கத்தி, கதாயுதம் என்று நான்கு கைகளில் மின்னின. அரக்கர்களின் ரத்தம் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், பச்சை என ஜந்து வர்ணமாய் இருந்தன. தேவலர் தன்னிடம் இருந்த நூலை அய்ந்தாய் பிரித்து வர்ணங்களில் நனைத்துக் கொண்டார். எஞ்சிய அரக்கர்களின் ரத்தத்தை பூமியில் விழாது சிம்ம வாகனம் குடித்து முடித்து சிலிர்த்தது. அப்போது அதன் காதுகளில் ஒட்டியிருந்த இரு துளி ரத்தம் கீழே விழுந்து அதிலிருந்து இரு அரக்கர்கள் தோன்றி வணங்கினர். அவர்களுக்கு மாணிக்கத்தார்கள் என்று பெயரிட்டு தேவலரின் பணிக்கு வைத்துக் கொண்டார். “ நான் சூடாம்பிகை. நீயும் இன்று உனக்கு நேர்ந்த ஆபத்தில் இருந்த மீண்டாய். எனவே நம் இருவருக்கும் இதுவே பிறந்த நாளாகும்”
அமாவாசை என்று வருகிற போதெல்லாம் அவருக்கு இக்கதை ஒரு நிமிடம் மனதில் ஓடும். அமாவாசை அன்றுதான் மாதத்திற்கு ஒருநாள் தறிக்குழிக்கு விடுமுறை. அம்மன் தொழிலை நிறுத்தி வழிபாடு செய்ய அமாவாசையை ஒதுக்கினாள்.
இப்போது ஏதாவது தேவலர் வந்து தங்களைக் காப்பாற்ற மாட்டாரா என்று நினைத்துக் கொண்டார். தறிக் குழியை ஞாபகம் வந்தது.. மேருமலையில் இருந்த தேவதச்சன் உருவாக்கிய தறி இது. வைரம் வைடூரியம் போன்ற நவரத்னங்களால் அவன் செய்து தந்த தறி இப்போது புழுதி பட்டுக் கிடக்கிறது..
“ மனசுலே ஒரு சந்தோஷம் . சட்டுன்னு என்னமோ பாரத்தை பாறாங்கல்லு மேல எறக்கி வெச்சுட்ட மாதிரி பிரம்மை..”
“ இருக்கும். இருக்காதா பின்னெ.பாவடி கெடக்லீன்னா சிரமம்தானே..”
உற்சாகமான குரல் பிசிறில்லாமல் வெளிப்பட்டது.
கிளம்பிப் போகையில் சுத்தம் செய்யப்பட்ட செவ்வக பாவடியை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கிளம்பினார் ரங்கசாமி.
கொஞ்ச நேரத்திற்கப்புறம் நாலைந்து பையன்கள் அந்தப்பக்கம் வந்தார்கள். எல்லோரின் கண்களிலும் ஏகப்பட்ட பிரகாசம்.
“ அட புதுப் பாவடி “
“ நெசவு பண்றவங்களுக்கு புது பாவடி. நமக்கு புது கிரிக்கட் கிரவுண்ட். நாமும் இடம் தேடிட்டிருந்தம். ” பிசிறில்லாமல் உற்சாகமான குரல்கள் வந்தன.
உற்சாகமான குரல்களில் எப்போதும் பிசிறு இருப்பதில்லை