ஓடும் நதி : நாவல் மறுபதிப்பு
-------------------------------
என்சிபிஎச். ரூ 230 . 300 பக்கங்கள்
பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று
திணைகள் - ஓடும் நதி: ஜெயந்தி சங்கர்
செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி
தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம்
என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும் நதி' உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந்திராபாத் மற்றும் திருப்பூர், அடுத்திருக்கும் சிற்றூர்கள் கதைக்களன்கள்.
மூன்று ஊர்களின் மக்கள், கலாசாரம்
மற்றும் மொழி போன்றவற்றைச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் தூவியபடி கதையை நகர்த்துகிறார்
ஆசிரியர். செல்லத்தின் கதையைச் சொல்வது நோக்கமா அல்லது மூன்று திணைகளைச் சொல்லும் நோக்கமா
என்றே பிரித்தறியமுடியாத மாதிரி கலந்து ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்த்து நிற்கின்றது.
திருமணம் குதிராமல் இருக்கும் செல்லத்தின்
வாழ்க்கையைச் சுற்றியே தான் போகிறது கதை. ஓடும் நதியாகவே சொல்லப்பட்டிருக்கும் கதையைப்
படித்துக் கொண்டு போகும் போது நமக்கு செல்லம் வாழ்க்கைக்காற்றில் தாறுமாறாக அலைக்கழியும்
ஒரு பெண்பட்டமாகிப்போவது போன்றும் தோன்றக்கூடும். புறஅலைக்கழிப்பை மட்டுமின்றி செல்லத்தின்
அகஅலைக்கழிப்பையும் சிறப்பாக, வாசகன் தன்னைப்
பொருத்திக் கொண்டு உணரக்கூடியதான சிறந்த சித்தரிப்புகள் கதையெங்கும் விரிகின்றன. மாப்பிள்ளை
அமையாத செல்லம் உள்ளூரில் எதிர்கொள்ளும் சில சிக்கல்களில் துவங்கி ஜாதி வேறுபாட்டின்
காரணமாக அவள் சொக்கனுடன் ஆந்திராவுக்கு ஓடுவதில் வேகம் கொண்டு பின்னர் தனியே ஊருக்குத்
திரும்பிய பிறகு அவளின் அப்பா ஒரு ஊனமுற்றவனுக்கு அவளைக்கட்டி வைப்பதில் தொடர்ந்து
மேலும் முன்னேறுகிறது கதை. ஒரு பெண்ணின் இடத்தில் இருந்து அவள் கோணத்தில் நூலாசிரியரால்
மிக அருமையாகவும் சீராகவும் கதையைக் கொண்டு போக முடிந்துள்ளது.
அதிவேகவாழ்வு, அதிநிதான வாழ்வு மற்றும் வயிற்றுப்பிழைப்பை
மட்டுமே பிரதானமாகக் கொண்ட வாழ்வு என மூன்று வாழ்வுமுறைகளைக் கொண்ட நகர, மலைப்பிரதேச மற்றும் கிராமங்களை தொட்டு கதை
நதியென ஓடுகிறது. நாகாலந்திலிருந்து எழுதப்படும் கடிதங்கள் களத்தில் மட்டுமின்றி கதைசொல்லலிலும்
கூட வேறுபட்ட அனுபவமாக புதுமையைச் சேர்த்திருப்பதாகவே தோன்றுகிறது. நாகாலந்தில் மட்டும்
தான் செல்லம்மிணி வாழ்வதில்லை. நாகலாந்து வாழ்க்கையை செல்வன் அவளுக்கு எழுதப்படும்
கடிதங்களின் மூலமாக விவரிப்பதன் மூலமே வாசகனுக்குப் பரிமாறுகிறார் ஆசிரியர்.
செகந்திராபாத் வீதிகளில் தள்ளுவண்டியில்
தள்ளிக்கொண்டு நீளநெடுகபோகும் தெருவியாபாரி சொக்கன் சந்திக்கும் சவால்களும் சிரமங்களும்
அழகாகப் பதிவாகியுள்ளன. அந்த எளிய ஸ்டீல் பாத்திரங்களையும் தவணை முறையில் வாங்கும்
சிலரிடம் போய் பாக்கியை வசூலிக்கும் போதும் வேறு பல சந்தர்ப்பங்களிலும் தெலுங்கோ ஹிந்தியோ
தெரியாமல் சொக்கன் தவிப்பது மிகமிக சுவாரஸியம். வெளியே நாலிடம் போகும் சொக்கன் மொழியைக்
கற்றுக்கொள்வதற்குத் தவிக்கும் போது செல்லம் வீட்டுக்குள்ளே அடைந்திருந்து, அக்கம்பக்கம் சிலரோடு மட்டும் பழகியே மொழியைக்
கற்றுக்கொள்வது இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில், புது வேற்று மொழியைப் பெண்கள் மிக எளிதிலும்
சீக்கிரத்திலும் கற்பதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். வீட்டுக்காரம்மா, ஜீலியக்கா போன்ற கதாப்பாத்திரங்கள் மற்றும்
இப்ராஹிம் போன்ற சின்னக் கதாப்பாத்திரங்களும் கூட நல்ல வார்ப்புகள். ஈராயியன் டீ, வேர்கடலை விற்பவன், காய்கறி மார்க்கெட், ஆஸ்பெஸ்டாஸ் கூரையினால் ஏற்படும் சிரமங்கள், வீட்டுக்காரம்மாவின் கறார்த்தனம், முட்டுத்துணியை வைக்கக்கூட சரியான இடமில்லாதது
போன்ற சிரமங்கள் போன்று பலவும் செகந்திராபாத் வாழ்க்கை முறையில் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
முறையாக திருமணம் முடிக்காத ஒரு பெண் காய்கறிச் சந்தை போன்ற இடங்களில் ஒரு ஆணால் எப்படியாகப்
பார்க்கப் படுகிறாள் என்றும் நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது. செகந்திராபாத்திலிருந்து
செல்லம் தன் ஊருக்குத் திரும்பும் ரயில் பயணம் சாமியாரைச் சந்திப்பது, திருவண்ணாமலை குறித்து உரையாடுவது போன்றவற்றுடன்
வேறு சில நுண் அவதானிப்புகளுடன் சுவாரஸியமாக முன்னேறுகிறது.
செல்லம் ஒவ்வொரு கட்டத்திலும் அவள்
விரும்பியோ விரும்பாமலோ ஒரு ஆணுடன் இணைக்கப்படுகிறதைப் படிக்கும் போது, உண்மையிலும் ஒரு பெண்ணை அவள் போக்கில் தனியே
விடுவதில்லை தானே இந்தச் சமூகம் என்று தோன்றுகிறது. தேவையென்றால் சேர்த்துக்கொள்ளவும்
வேண்டாமென்று நினைப்பதாலோ வேறு சில சூழலின் காரணமாகவோ பெண்ணை உதறி ஓடுவதுமாய் கதையில்
நெடுக ஆண்பாத்திரங்கள். சொல்லப் போனால், ஊனமுற்றவனாகவே
இருந்தாலும் அவனைப் பெயரளவிலேனும் கணவன் என்றோ கொண்டவன் என்று சொல்லி பெண்ணை அவனிடம்
ஒப்படைக்கும் போக்கினையும் எப்போதும் ஒரு ஆணின் 'அரண்' பெண்ணுக்குத்
தேவையாக இருக்கும் சமூக அமைப்பினையும் மறைமுகமாக நூலாசிரியர் எதிர்ப்பதாகவே தெரிகிறது.
அந்தப்பெண்ணுக்கு அந்த அரண் வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறதா இல்லையா என்ற அக்கறையெல்லாம்
சமூகத்துக்கு முக்கியமாக இல்லை. அத்துடன் தனக்குப் பிடிக்காவிட்டால் பெண்ணை அவளே விரும்பித்
தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய இணையிடமிருந்து பிரிக்கவும் தயங்குவதில்லையே சமூகம். காரணங்களாக
ஜாதியையோ ஜாதகத்தையோ எடுத்துக் கொள்ளப் பழகியிருக்கும் அந்தச் சமூகத்தில் அந்தப் பெண்ணைப்
பெற்ற அப்பனும் முக்கிய அங்கமாக இருப்பான்.
தொடர்ந்தபடியே இருந்த தொழிற்சாலைகளின்
வேலை நிறுத்தங்களும் திருப்பூரிலும் சுற்றுப்பட்ட ஊர்களிலும் மின்வெட்டுகளினால் பவர்
லூம்கள் மூடப்பட தொழிலாளர்கள் பனியன் கம்பனிகளுக்கு வேலைக்கு வர ஆரம்பித்ததுமாக இருந்ததை
அவதானிக்கிற செல்வன் மாற்றாக யோசிக்கிறான். பட்டப்படிப்பு முடித்த செல்வன் அரசாங்கவேலையை
மட்டும் நம்பியிருக்காமல் தன் தம்பியை நம்பி நாகலாந்துக்குப் போகிறான். இயற்கையோடு
இயைந்த வாழ்வுமுறையையும் எண்ணை சேர்க்காத சமையல்/உணவு முறைகளையும் சிறப்பாக வாசகன்
முன் விரிக்கிறார். அங்கேயே இரண்டாண்டுகளுக்கு வாழ்பவன் இடையில் ஊருக்கு வந்துபோகும்
போது மணம்புரிந்துகொள்கிறான். அவ்வாறு வரும் போது பிறந்து வளர்ந்த ஊரையே கொஞ்சம் அன்னியமாக
உணர்கிறான். மீண்டும் நாகாலாந்துக்குப் போகும் போது மனைவியால் மலைப்பிரதேச வாழ்க்கையில்
ஒன்ற முடியாது போகிறது. ஒருவாறாக அவள் வாழ ஆரம்பிக்கும் போது பிள்ளைப்பேறுக்கு ஊருக்கு
வந்து, குழந்தையைத் தன்
தாயிடமே விட்டுவிட்டு வருகிறாள். ஆனால், குழந்தையைப்
பிரிந்திருக்க முடியாமல் தவிக்கிறாள்.
செல்வன் தொடர்ந்து ஊருக்குத் தன் சம்பளத்தை
அனுப்பிவைக்க அவனின் அப்பா மனை வாங்கிப் போட்டு விடுகிறார். இந்தியாவுக்குள்ளேயே மறுகோடியிலிருக்கும்
ஒரு மாநிலத்தின் வாழ்க்கை முறையில் நிலவும் முற்றிலுமான முரண் ஒருபுறம் வாசகனை ஆச்சரியத்தில்
ஆழ்த்தும். மறுபுறம் சம்பாதிக்கும் ஒருவன் தெற்கில் இருக்கும் தன் ஊருக்குப் பணம் அனுப்பி
வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதும் எத்தனை பெரிய ஆச்சரியம்! ஆனால், நடக்கக்கூடியது தான். ஏனெனில், நாகாலந்தின் வாழ்வுமுறை அத்தகையது. செலவுகள்
இல்லாத எளிய வாழ்க்கை. வடகோடி மாநிலமே ஒரு வெளிநாடு போன்ற பிம்பம் உருவாகும் அளவில்
இருக்கும் நாட்டின் பெரும்பரப்பளவும் புரிந்துகொள்ளக் கூடியது. வடகிழக்குப் பகுதியில்
பதின்பருவத்தின் மூன்றாண்டுகளை வாழ்ந்தவள் என்ற அளவில் மலைப்பிரதேச வாழ்க்கை முறையில்
என்னால் சிறப்பாக ஒன்றி ரசிக்க முடிந்தது.
ஆறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்
இந்தப் புதினத்தில் அத்தியாயப் பிரிவுகளுண்டே தவிர அவற்றுக்கு எண்கள் இல்லை. தொய்வென்று
எதையும் உணரமுடியாத சீரான ஓட்டு இந்த நதி. சமச்சீரான அடர்த்தியுமிருக்கிறது. உணர்வுகளும், சூழல் விவரணைகளுமே கூட சிறப்பாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் நாவலின் முழுக்ககதையும் நம்பகத்தன்மையுடனே பயணிக்கிறது.
சில இடங்களில் வரும் 'தொலைபேசி செய்வோமா என்று நினைத்தான்', என்ற வரி, 'தொலைபேசுவோமா என்று நினைத்தான்', என்றிருந்தால் போதுமென்று பட்டது. இயல்புக்கு
இயல்பும் ஆயிற்று; பிற்கால மொழிபெயர்ப்பாளர்கள்
'made telephone' என்று எழுதக்கூடிய
அபாயத்தையும் இப்போதே தடுத்தாற்போலுமாயிற்று. இன்னொன்று 'மனதில் வந்தது' மற்றும் 'மனதிற்கு வந்தது' என்று ஒரே
பக்கத்தில் இருபத்திகள் (பக்கம்-174) முடிகிறதும்
வேறொரு பக்கத்தில் இரண்டோ மூன்றோ பத்திகளில் 'என்று நினைவுக்கு
வந்தது', 'என்று ஞாபகம் வந்தது' என்பது போலவே முடிவதையும் உணர முடிந்தது.
அதைத் தவிர்த்திருக்கலாம். படித்துக் கொண்டே வரும் போது உணரக்கூடியதாக இருப்பதால் அது
ஒரு கவனச்சிதறலாகத் தோன்றியது. இதுபோல மிகச் சிறிய, எளிதில் கடந்து சென்று விடக்கூடியவை தவிர்த்துமிருக்கக்கூடியவை.
உட்பக்கங்களில் காணப்படும் ஷாராஜின்
ஐந்தாறு கோட்டோவியங்களைப் பொருத்தமாகத் தன்னுள்
கொண்ட 'ஓடும் நதி' சமீபத்தில் நான் வாசித்த புதினங்களில் ஒரு
நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல்.
ஓடும் நதி (நாவல்)
அசிரியர்: சுப்ரபாரதிமணியம்
பதிப்பு: 2007
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
பக்கங்கள்: 336
விலை: ரூ.150
---------------------------------------