சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 28 ஆகஸ்ட், 2013

நெகிழி (பிளாஸ்டிக்) குப்பை

நெகிழி (பிளாஸ்டிக்) குப்பை

'உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கை' என்பது இன்றைக்கு முக்கியத்துவம் கொண்ட விடயமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடி நீரை மாசுபடுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் அவர்கள் உருவாக்கும் கழிவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பது இக்கோட்பாடாகும்.

            எந்தவகைக் குப்பை எதிலிருந்து வருகிறதோ அதை கழித்துக்கட்டும் பொறுப்பினையும் உற்பத்தியாளரே ஏற்க வேண்டும் என்கிறதாகிறது. பொருளை உற்பத்தி செய்வோர் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பொருளின் கழிவுப் பொருள் ஏதாகிலும் திரும்ப சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும். அதற்கான செலவையும் பொருளின் உற்பத்தி விலையிலேயே சேர்த்துக் கொள்ளலாம்.

            ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் மாபெரும் ஆபத்தாக விளங்கி வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இது அதன் பயன்பாட்டில் உச்ச நிலையை அடைந்துவிட்டது. இது மண்ணில் மட்கி அழியாத தன்மை கொண்டது என்பதால் சுற்றுச் சூழலுக்கு பெரும் சவாலாய் அமைந்துள்ளது.

            மக்காத பிளாஸ்டிக் பொருட்களைத் தூக்கி எறியும்போது கழிவு நீர்க் குழாய்களை அடைத்து நோய் பரப்பும் பூச்சிகளைப் பெருக்குகின்றன. இக்குப்பையை எரிப்பதால் வெளியாகும் நச்சு வாயு புற்று நோய், ஆண்மைக் குறைவு, நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அவை சுலபமாக விசையான காற்றில் பறந்து செல்வதால் வனவிலங்குகள், பறவைகள், கால்நடைகள் உண்டு உயிரை விடுகின்றன. கடலில் சேரும் இவை கடல் வாழ் உயிரினங்களையும், கடல் பறவைகளையும் அழிக்கின்றன. விவசாய நிலத்தில் பரவுபவை நீர் மற்றும் காற்று பரவுவதை தடுக்கின்றன. மண் வாழும் நுண்ணுயிர்களும், தாவரங்களின் வேர்ப்பகுதிகளும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தட்டுபாட்டிற்கு பெட்ரோலியத்தை மூலப்பொருளாகக் கொண்டு இவை தயாரிக்கப்படுவதும் ஒரு காரணமாகிறது. மொத்த பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காக பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. பிளாஸ்டிக் தொழிலில் 1 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது.

            பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைத்தலும் பிளாஸ்டிற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்துவதும், அவசியமாகிறது. மறு சுழற்சி முறைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் நிரந்தரக் குப்பைகளும் அதிகரிக்கின்றன. அது பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இல்லை.

            பிளாஸ்டிக் பல் வகைகளில் விஸ்வரூபம் எடுக்கக் கூடியதாகும். பாலிதீன் எனப்படும் வகை பிளாஸ்டிக் பொட்டலத் தேவைக்காக அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது. பி.வி.சி கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களில் முக்கிய இடம் வகிக்கிறது. உரம் மாவு, சிமெண்ட் நிரப்பப்படும் பைகள் இன்னொரு விதம். தெர்மாகோல், ஸ்டைரோபோம் வகைகள் இன்று வெகுவானப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. பாலியுரிதேன் வகை மெத்தைகளுக்காக அதிகம் பயன்படுகிறது. பாலிதீனுக்கு எதிராக துணிப்பைகள், கண்ணாடி பாட்டில், தகரம், பீங்கான் போன்றவை மாற்றாகப் பயன்படும். பி.வி.சிக்கு மாற்றாக சிமெண்ட் குழாய்கள், இரும்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்தலாம். பாலியுரிதேன் மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாது. ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் இலவம் பஞ்சு, சணல், பருத்திப் பஞ்சை இதற்கு மாற்றாக்கலாம்.

            பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்க அவற்றைக் குறைப்பது, மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது, மறு சுழற்சி செய்வது என்று கடைபிடிக்கலாம். ஒரு முறை மட்டும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம். காகிதத்தின் இரு பக்கங்களையும் பயன்படுத்துவது நல்லது. மட்கும் பொருட்களை உரமாக்க ஆரம்பிக்கலாம் குப்பையை முறையாக தகுந்த இடங்களுக்குக் கொண்டு செல்வதும் அவற்றை எரித்து மாசுபாடாக்காமல் இருப்பதும் நல்லது.

            தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் சட்டம் 2002 ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்துவது பற்றி பல தண்டனைகளையும் அறிவித்தது. அதுவும் பிளாஸ்டிக் தொழில்துறையினர் தந்த வற்புறுத்தலால் அடுத்த ஆண்டிலேயே அரசு திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. புற்றுநோய், மலட்டுத் தன்மை, ஹார்மோன் கோளாறு, நரம்பு மண்டலக் கோளாறுகள் நோய்களுக்கு பிளாஸ்டிக் கழிவு காரணமாக இருக்கிறது.

            உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் குப்பைத் தீவாக உருவெடுத்துள்ளது. ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த குப்பை தீவு உருவாகியுள்ளது. கடலில் ஏற்படும் சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் திரண்டு உருவான இக்குப்பை தீவு அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது. இத்தீவு நீர் மட்டத்திற்கு கீழ் இருக்கிற்தாம். உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும் 100 ஆண்டுகளில் மாறிவிடும் அபாயத்தை இந்த தீவு சொல்கிறது. பிளாஸ்டிக்கை நெகிழி என்ற சொல்லின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். எங்காவது செல்லும்போது ஒரு துணிப்பையைக் கொண்டு செல்லலாம். ஆயிரம் நெகிழிப் பைகளைத் தவிர்த்ததாக அது அமையும்.
>4தமிழ்மீடியாவுக்காக சுப்பிரபாரதிமணியன்

கரையும் நதிக்கரைகள்

கரையும் நதிக்கரைகள்


விநாயகர் சதுர்த்தியின் விசர்ஜன வைபத்தை நொய்யல் கரையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் வெளியூரிலிருந்து வந்த ஒரு நண்பர், என் புன்னகையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நொய்யலில் தண்ணீர் ஓடினால் தானே.
 சாயத் தண்ணீர் அல்லவா இருக்கிறது. இதுவும் சௌகரியம்தான். சாயத் தண்ணீரிலேயே விக்ரகங்களைப் போட்டு விடுவது சுலபம்தான் என்றார்.

    நொய்யலில் சாயத்தண்ணீர் ஓடுகிறது. தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக் கழிவுகள் எல்லாம் சேர்ந்து நொய்யலுக்கு நதி என்ற பிரயோகத்தை பொருத்தமில்லாமல் செய்கின்றன. 170 கி.மீ பயணம் செய்யும் நொய்யல் சுமார் 50 கி.மீ.க்கு மாசுபடாத நதியாகத்தான் பயணிக்கிறது. கோவை வெள்ளிங்கிர் மலையில் உற்பத்தியாகி நீலியாறு. பெரியாற்றுடன் கலக்கும்போது நொய்யலாகிறது. பின் 170 கி.மீ. பயணத்தில் காவேரியுடன் கலக்கிறது. 50 கி.மீ.க்கு மாசுபடாத நதியாக வருவது திருப்பூரில் விரிவுபடுத்தப்பட்டப் பகுதிகளில் சேரும்போது சாயக் கழிவுகளுக்கான கழிப்பிடமாகி விடுகிறது. அதன்பின் கழிவுநீர் பயணம்தான், ரசாயனக் கலவைகளின் மினுமினுப்பில் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்குகிறது.

    500 ஏக்கர் பாசனத்திற்காக கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை இன்று சாயக் கழிவுகளை தேக்குவதற்கான அணையாகிவிட்டது. இருபோகம் பருத்தி, கேழ்வரகு, புகையிலை, சோளம் விளைவித்த அப்பகுதி நிலம் விவசாயத்திற்கு லாயக்கற்றதாகி விட்டது. கொடுமணல் பகுதிப் புகையிலை முன்பெல்லாம் பிரசித்தி பெற்றது. கொடு மணலில் அகழ்வாராய்ச்சிக்காக வருபவர்களுக்கு சாயத் தண்ணியின் ரசாயன உபாதை இன்னொரு ஆராய்ச்சிக்கானத் தளமாகிவிட்டது.

    ரூ. 15,000 கோடி ரூபாய் அன்னியச் செலவாணி திருப்பூர் பனியன் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. இதற்கான ஆதாரங்களில் ஒன்றான சாயப்பட்டறைகளின் கழிவு ரசாயன நீர் நொய்யலை ரசாயன நதியாக்கி விட்டது. நதியோர விவசாய நிலங்களில் ரசாயனத்தன்மை விளைச்சலுக்கு ஏற்றதாயில்லை. மேல்நாட்டு வணிக ஒப்பந்தக் கட்டாயங்களும், மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அறிவுரைகளும் சில ரசாயன நீர் சுத்திகரிப்பு ஆலைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. இவை மொத்தமான பனியன் தொழிற்சாலைகளின் சதவிகித உபயோகத்தில் மிகவும் அற்பமான சதவீதம்தான்.

    சாயத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சேமித்து வைக்கப்படும் நிலக்கழிவுகளை என்ன செய்வது என்பது தீர்க்க முடியாததாகி விடுகிறது. பல சாயப்பட்டறைகள் இந்த திடக் கழிவுகளை சிறு வண்டிகளில் வெளிப்புற ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு போய் தள்ளிவிடுகின்றனர். சுத்திகரிப்பு ஆலைகளில் மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் திடக்கழிவுகள் நாட்போக்கில் சிதைந்தும் பிய்ந்தும் அலட்சியமாக்கப்பட்டு விடுகின்றன. இவை நொய்யலின் கரைகளில் இருக்கும் சௌகரியத்தால் மழைக் காலங்களில் உருகி நொய்யலில் கலந்து விடுகின்றன. பிய்ந்த மூட்டைகளிலிருந்து பலத்தக் காற்றின் மூலம் பரவும் திடக் கழிவுத் துகள்கள் குவாலிஸ், போர்டு, சுமோக்களில் செல்பவர்களின் மூக்கு நாசிகளைத் தொடுவது சிரமம். ஆனால் சாதாரண மக்களை சுலபமாகவே எட்டி விடுகின்றன.

    சாயக் கலவைகளில் சுமார் இருநூறு வகை ரசாயனப் பொருட்கள் சோடியம் குளோரைடு, பெராக்ஸைடு. சல்பியூரிக் ஆசிட் போன்றவை உள்ளன. 1.5 கோடி லிட்டர் சாயத் தண்ணீர் தினமும் வெளிவேற்றப்படுகிறது. பதினைந்தாயிரம் பேர் சாயத் தொழிலிலும், ஒரு லட்சம் பேர் பனியன் தொழிலிலும், சுமார் 4 லட்சம் பேர் மறைமுகமாகவும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். கணிசமான வருமானத்தைத் தருகிற உபயம் சுற்றுச்சூழல் பற்றின கேடுபற்றி இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அக்கறையைத் தருவதில்லை. கண் துடைப்பாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதும், மிகவும் உச்சபட்சமாக தொழில்நுட்ப கூறுகளைக் கொண்டு செய்யப்படும் பனியன் தொழிலில் சாயத்திடக் கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் கொட்டிக் கிடப்பதை அகற்ற அந்நியச் செலவாணி தரும் நகரத்துத் தொழில் நுட்பங்களும், விஞ்ஞான முறைகளும் பயன்படாமல் இருப்பது ஆச்சர்யம் தருகிறது. பனியன் ஏற்றுமதியாளர்கள் அவ்வப்போது திடக்கழிவுகள் குறித்தும் பட்டறைகளை நடத்துகின்றனர். இன்னும் சரியான தொழில் நுட்பம் அவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை என்பதைக் குறையாகச் சொல்கின்றனர்.

    பொது நல மனுக்கள், தன்னார்வக் குழுக்களின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைகள் திடக்கழிவுகள் பக்கம் நெருங்காமலே வேடிக்கை பார்க்கின்றன. விஞ்ஞான வளர்ச்சிகள், தொழில்நுட்ப அசாத்தியங்கள் என்ற வெள்ளை அறிக்கைகள் இந்த திடக்கழிவுகள் மற்றும் நொய்யலின் சாயக்கழிவுகளைச் சுத்திகரிக்கப் பயன்படாதது பெருத்தக் கேள்விக் குறிகளாகவே உள்ளன.

    தொடர்ந்து ரசாயனக் கலவைகளின் வட்டமாகவே நொய்யலை மாற்றிவிட்டன. நொய்யல் காவேரியாற்றில் கலந்த பின்பு கரூர் போன்ற நகரங்களின் சாயச் சேர்க்கை இன்னும் நதியை ரசாயனப் பாதையாக்கி விட்டது.

    முன்பெல்லாம் ஆடிப்பெருக்கின் போதும், பூப்பறிப்பு நோன்புகளின் போதும் நொய்யல் ஆற்றில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடும். நொய்யல் பற்றியும், வெள்ளப் பெருக்கு பற்றியும் உவகையுடன் பல்வேறு நாட்டுப் பாடல்கள் கிளம்பும். இன்று அவையெல்லாம் ஆடியோ கேசட்டுகளில் மட்டுமே அடக்கமாகி விட்டன. ஆடிப் பெருக்குகளில் காவிரித்தாய், நொய்யல் ஆற்றுத் தண்ணீருக்காகக் காத்திருந்து பாடுமாம்:

    "யார் யாரோ வந்தாலும்
    பேரூர் பெரிய மகள்
    நொய்யலைக் காணலியே"

    பிறந்த வீட்டிற்குச் சிக்கல்களுடன் வரும் மகள்களுக்கு தாய் எப்போதும் சொல்லும் அறிவுரை: "எப்ப வந்தாலும் அவரோட வா. தனியா வராதே. இல்லீன்னா வரவே வராதே." இதேபோல் காவிரித்தாயின் இன்றையப் புலம்பல் இப்படியாக இருக்கலாம்:

    "நல்லபடியா வர்றதா இருந்தா வா
    பெரிய மகள் நொய்யலே
    இல்லீன்னா வரவேண்டா"
    நொய்யலின் கூக்குரல் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் விழாமல் நொய்யல் மறைந்த நதியாகி விட்டது. காவிரித் தாயின் குரல் காதுள்ளவர்களிடம் சென்று நொய்யல்
மகளுக்கும் வெளிச்சம் கிடைக்க வழிகள் தெரிய வாய்ப்புகள் குறைந்துள்ளன.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013



ம.காமுத்துரை படைப்புலகம் 
கோவை இலக்கியச் சந்திப்பின் 33 வது அமர்வு ம.காமுத்துரையின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்காக அமைந்திருந்தது. சுப்ரபாரதிமணியன் தேனி மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பான மொழியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிவு செய்து வருபவர். 130 சிறுகதைகள் ( 10 தொகுப்புகள் ), 3 நாவல்கள் என அவரின் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.அவர் பணி புரிந்த வெவ்வேறு பணிகளும், தேனி மக்களின் அனுபவங்களும் அவரின் படைப்புகளில் நேர்மையானப் பதிவுகளாய் வளம் சேர்த்திருக்கிறது என்று அவரின் படைப்புகளின் பொதுத் தன்மை  குறித்துப் பேசினார்.அவரின் “ கோட்டை வீடு “ , மில்நாவல்கள் பற்றி ஓசை அவைநாயகன் பேசினார்.  நவீன தொழில்மயமாக்கலில் மில்கள் நசிந்து வேறு உருவம் அடைந்து விட்டன. மில்களின் வெவ்வேறு பிரிவுகளில் வேலை செய்ய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் மீதான சுரண்டலை   மில் வெளிப்படுத்தியது. கோட்டை வீடு நாவல் முதிய தலைமுறையின் பிரதிநிதியான ஆயாவின் உடல் நலக்குறைவும், மருத்துவமனை அனுபவங்களும், நினைவுகளும், இரவு நேரத்தில் அவளின் மனப்பிறழ்வான வெளிப்பாடும், அவள் சொல்லும் கதைகளும், சுற்றியுள்ள உறவுகளின் விசித்திரங்களும் என்று பின்னப்பட்டது. அம்மனிதர்களின் லவுகீக வாழ்க்கையும், ஆன்மீக எண்ணங்களுமாக அந்நாவல் நிரம்பி நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை கொண்டிருக்கிறது என்றார்.      முற்றாத இரவொன்றில் நாவல் பற்றி சந்திரகுமார் பேசினார். காதலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதுக்களனாக இருந்தது. இயற்கை வர்ணனைகளும். கிராம மனிதர்களும், ஒரே  ஜாதிக்குள் நிகழும் காதல் என்றாலும் மனித மனங்கள் எதிர் கொள்ளும் விசித்திரப்போக்குகளும் உளவியல் தன்மையோடு சொல்லப்பட்ட சிறந்த உளவியல் பாங்கு கொண்ட நாவல் என்றார். ஜாதி வர்க்க அடையாளத்தோடு இயங்குவதையும், பொருளாதார அந்தஸ்தைத் தாண்டி இயங்கும் ஜாதியின் தன்மை பற்றியும் இந்நாவல் வெகு நுணுக்கமாக எழுதப்பட்டிருப்பதை விவரித்தார். அவரின் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து அன்பு சிவா, முத்து உரையாற்றினர்.எளிமையான ஆனால் வலிமையான உரையாடல் தளங்கள் இவரின் பலமாக இருக்கிறது. பல்வேறு விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை அதில் வெளிப்பட்டிருக்கிது. வர்க்கமும், ஜாதியும் செயல்படும் சரியான தளங்கள பற்றி சிறுகதைகள் நுணுக்கமாகப் பேசுவதை விவரித்தனர்.“ கோட்டை வீடு “ நாவலில் வரும் ஆயாவின் உடம்பில் பல உருவங்கள் பச்சை குத்தலில்  பதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி சிறுவர்கள் கேட்கிறார்கள். ஸ்கூல் ரப்பரை வைத்து அழித்துப் பார்க்கிறார்கள்.  இது எதுக்கு “  “ செத்து சிவ லோகம் போன பின் அங்க் இருக்கற சிவன் எனக்கு என்ன கொண்டாந்தே     என்று கேட்பான். அவனுக்கும்க் குடுக்கறதுக்கு இங்கிருந்து ஏதாச்சிம் சொமந்திட்டுப் போக முடியுமா. இந்தப் பச்செ குத்தலெத்தா குடுக்கணும். இந்தா உனக்கு புலி, உனக்கு சிங்கம்ன்னு... அதுக்குத்தா  இதெல்லாம் ..   அந்தபச்சை குத்தல்கள் போல தேனி மாவட்ட மக்களின் வாழ்க்கையை அழிக்க முடியாத இலக்கியச் சித்திரங்கள்  ஆக்கிய காமுத்துரையின் படைப்புகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.ஏற்புரை நிகழ்த்திய காமுத்துரை 10 வகுப்பே படித்த தனக்கு பல தொழில்கள் செய்த அனுபவங்களும், சுற்றியிருக்கும் மக்களின் அனுபவங்களும் படைப்புகளாக சுலபமாக வெளிப்படுவதாகச் சொன்னார். கூட்டத்தில் காப்ரியாமார்க்க்ஸின் “  தனிமையின் நூறு ஆண்டுகள் “ நாவல் பற்றி சுப்ரபாரதிமணியன், 15 வயதுப் பெண்  சிரியா சேக்சரியா எழுதிய  ஒன் “ ஆங்கில நாவல் பற்றி மீனாட்சி சுந்தரம், அவ்வை டிகே சண்முகம் நூற்றாண்டை ஒட்டி  சிவதாசன் ஆகியோர் பேசினர். கூட்ட ஏற்பாடுகளை இளஞ்சேரல், பொன் இளவேனில், தியாகு ஆகியோர் செய்திருந்தனர்.
                                                      

செய்தி: கனவு










சிறுகதை
---------
விரதமிருப்பவளின் கணவன் ;
 தூங்காத இரவுகள்
                                                            சுப்ரபாரதிமணியன்
-----------------------------------------------------------
அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி கொள்ளலாம். அப்புறம் அவன் அப்பா  பெயர் சுந்தரம். அம்மா பெயர் காத்தாயி. இரண்டு பேரும் செத்துப் போய் விட்டார்கள்..அப்புறம் .. அவன் செய்யும் தொழில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியானது இல்லை.வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்துக் கொண்டு காய்கறி, பழங்கள் விற்பது.. அப்புறம் ..  அப்புறம்...அப்புறம் அவனைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை.அப்புறம் அவன் வயது 45, குழந்தைகள் இல்லாதவன். அதை ஒரு தொந்தரவாக  எடுத்துக்கொள்வதில்லை.அவ்வளவுதான்.
அவனுக்கு மூன்று நாடகளாக தூக்கமில்லை கைபேசியில் நடு இரவில் ஏதாவது தொலைபேசி அழைப்பு வந்து விடுகிறது.முந்தின நாலாம் நாள் இரவு சித்தப்பா வகையில் ஒருத்தர் செத்துப் போனதற்காய் திருப்பத்தூருக்கு போய் விட்டு வந்தான். துக்க கலக்கம் ஏதும் இல்லை. தூக்கக் கலக்கம். நக்சலைட்டுகளுக்கு எதிராக செத்துப்போன  காவல் துறையினருக்கு நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூண் அருகில் செத்து கிடந்தார். ஓயாத போதையில் உயிர்பிரிந்திருக்கிறது. வீட்டில் யாருக்கும் பிரயோசனமில்லதவராக் 68 வயது வரை இருந்தவர். பெயிண்ட் அடிக்கும் வேலையில் சம்பாதிப்பது. பெயிண்ட் வாசம் உடம்பிலிருந்து மறைகிறவரைக்கும் தண்ணி போடுவது என்று 55 க்கு மேல் வாழ்க்கையைக் கழித்தவர்.
ரொம்பவும் களைத்துப் போயிருக்கிறாள் என்று அவனை சீக்கிரம் தூங்கச் சொன்னாள் அவன் மனைவி. அவளுக்கு 40. உதிரியாக ஏதாவது வேலை செய்வாள். அதுவும் அவனுக்கு வேலை இல்லாமல் காசு புழக்கம் இல்லாத போது. அப்புறம் ஹோம் மேக்கர். அப்புறம் அவ்வளவு அழகானவள் இல்லை. உடம்பு சற்று பூரித்திருக்கும். அவள் உடம்பின் பூரிப்பைப் பார்த்து அவன் சோப்புக் கட்டி  போல நிகுநிகுவெனு இருப்பதாகச் சொல்வான்.  அவன் திருப்தியாய் முயங்கி களைத்துக் கிடக்கையில் தேக்கு மரம்யா  என்பாள்.அப்புறம் .. அப்புறம் .. அவளைப் பற்றிச் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.
அவன் தள்ளுவண்டியை  வாடகை எடுத்த இடத்தில்  தின வாடகையைக் கொடுத்து விட்டு படுக்கையில் சாய்ந்த போதே ஒன்பது மணியாகியிருந்து.சொந்தமாய் ஒரு தள்ளு வண்டி வாங்குவதே அவனின் சமீப லட்சியம். நீண்ட நாள் லட்சியம் கூட..நீ பயணத்தால் ரொம்பவும் களைத்துப் போயிருக்கிறாய் நன்றாகத்தூங்க வேண்டும் என்று ஆசீர்வதித்தாள். உன்னுடன் ம்ல்லாடி களைத்து விழுந்தால்தான் நல்ல தூக்கம் வரும் என்றான்.அவள் புரிந்து கொண்டாள். ஆனால் விரதத்தில்  இருக்கின்றேனே.. என்றாள். இருந்தால் என்ன.. சமீபத்தில் நாலைந்து வருடங்களாக சித்திரையில் விரதம் இருக்கிறாள். குழந்தை வேண்டுதல்தான், கொண்டத்து அம்மன் கோவிலில் குண்டம் மிதிப்பாள். தீச்சட்டி எடுத்துப்ப்போவாள்.18 நாள் விரதம். நாள் நெருங்கி விட்டது அவனின் ஞாபகத்தில் இருந்தது. இது போன்ற சமயத்தில் அவளின் ஒத்துழைப்பும் இருக்கும். வெண்ணிலா அய்ஸ் பிடிக்கும் என்பாள். களைத்துப் விழும் வரைக்கும் ஒத்துழைப்பாள்.அப்படித்தான் ஒத்துழைத்தாள். விரதகாலத்தில் நேரடியான கலவியை மறுப்பாள் விரதம் இருக்றேனே. இது விரதத்துக்கு விரோதம் இல்லையா. உங்களுக்கு தேவை. நிறைவேற்ற  வேறு வழி இல்லை.அவன் அயர்ந்து வெயிலில் அலைந்து திரிந்ததன்  உடம்பு நோவு போக தூங்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் தூங்கியிருப்பான். கை பேசியிலில் ஒரு அழைப்பு.வழக்கமாய்  வரும் அழைப்புகள் எதுவும் இந்த நேரத்தில் இருக்காது. கைபேசிக்காரர்கள் குறுஞ்செய்திகளை இரவில் அனுப்பாமல் இருக்கிற நாகரீகம் அவனுக்குப் பிடித்திருந்தது.  அது குறுஞ்செய்தியில்லை. அழைப்புதான். கரகரத்தகுரலில் பேச ஆரம்பித்தான். பேச்சென்றில்லாமல் கைபேசியில் அழுகுரல் கேட்டது. அய்ய்ய்யோ.. என்றபடி. அவன் துண்டித்து விட்டு முழுதுமாய் அணைத்து விட்டான். அவள் தூக்கம் கலைந்து அவள் தலை விரிகோலமாய் நின்றாள். அவளின் தலையை இசுக்கி முன்னம் கலைத்திருந்தான்.வழக்கமாத்தா தூக்கத்தைக் கெடுக்கறதுகு.. நாய்க..”  அவன் உபயோகப்படுத்து குறைந்தபட்ச கெட்ட வார்த்தை நாய். யோனியில் ஆரம்பித்து அதை சுவைப்பது வரை நிறைய கைவசம் வைத்திருப்பான்.  அவனுக்கு சமீபமாய் இது போல் இரவில் தொலைபேசி அழைப்புகள் வருவது சாதாரணமாகிவிட்டது. நல்ல தூக்கத்தைக் கெடுப்பதற்கென்று வரும் அழைப்புகள்.  அழுகிற குரல் கேட்கும். வாகனச் சப்தம் கேட்கும். சில சம்யம் சிரிப்பொலி  கேட்கும். பல நாட்கள் கைபேசியை அணைத்து விட்டுத் தூங்குவான். அல்லது சைலண்ட்டில் போட்டு விட்டுத் தூங்குவான்.சைலண்ட்டில் போட்டு விட்டுத் தூங்குகிற நாட்களில் அழைப்பெதுவும் வருவதில்லை என்பது போல் அதை செய்ய மறந்த நாட்களில் திடுமென வரும். தூக்கம்  கெட்டு விடும்.அவனுக்கு விரோதிகள் யார் என்று பட்டியல் போட்டுப் பார்த்தான்.நாலைந்து பேர் தென்பட்டனர். மல்டிலெவல் மார்கெட்டிங்கில் அவன் பணம் முதலீடு செய்ததில் ஏமாற்றமடைந்தது.சூரிட்டி கையெழுத்தில் ஏமாந்து பஞ்சாயத்தில் போய் நின்றது.  ஒரு கட்டிட மேஸ்திரியை  கிண்டலடித்ததால் அவன் நீ என்ன பெரிய கலெக்டரா என்று கேட்டது. கடைசியாக வாடகைக்கு இருந்த இடத்தில்  பக்கத்து வீட்டில் இருந்தவனுடன் சண்டை. அவன் ஒரு வகையில் மன நோயாளி போல. சரியாக வேலைக்குப் போக மாட்டான். சோம்பலாய் கிடப்பான். பொது மருத்துவமனைக்குப் போய் தூக்க மாத்திரை வாங்கி வருவான்.பெரும்பாலும் அவன் சரியாகத் தூங்கவில்லையென்றால்   அவளே கூட்டிக் கொண்டு போவாள். அவனைப் பார்த்து சுந்தரம் மனைவி லூசுப்பயலே என்று அவன் காது பட சொல்லப்போக அவன் எட்டி உதைக்க, இவள் செருப்பை எடுத்துக் காண்பிக்க ரகளைதான். இந்த புது வாடகை வீட்டிற்கு வந்த பின் இந்த வகை இரவு அழைப்புகள்.லூசுப்பையன் கைபேசி பயன்படுத்துவதில்லை.  அவன் மனைவியிடம் உண்டு. அவளுக்கு இந்த வகை தொல்லை  தரும் தைரியம் இருக்காது. டிராபிக் சப்தம், மழை விழும் சப்தம்,  அழுகைச் சப்தம் இவையெல்லாம் புது சைனா செட்டில்   இருப்பதை சுந்தரம் அறிவான்.அவன் வழக்கம் போல் கெட்ட வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தான். தன் தூக்கம் கெட்டுப் போகச் செய்கிறவர்களைச் சபித்தான்.மனைவியும்  அவன் சொல்லாமல் விட்ட கெட்ட வார்த்தைகளை உதிர்த்தாள். பக்கத்து வீட்டில் யாராவது கோபித்துக் கொள்ளலாம் என்ற யூகத்தைச் சொன்ன பின்   அவள் நிறுத்திக் கொண்டாள்.அவள் வாங்கியிருந்த கைபேசி கால்மணி நேரத்திற்கொரு முறை வரவேற்பு சப்தம் எழுப்பி இரவில் தொல்லை  கொடுத்ததால் அவள் அந்த கைபேசிக்கம்பனியை மாற்ற வேண்டி இருந்தது.    
     தூக்கம் கலைந்து விட்டது. கைபேசி அழைப்புபோலிருந்தது. அவன் கைபேசி ஒளிரவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கலாம்,இனி தூக்கம் வராது. அல்லது வெகு தாமதமாகும்.தூங்கிக் கொண்டிருப்பவளை எழுப்பினால் விரத்தில் இருப்பதாய் சொல்வாள்.கைபேசியை எடுத்து  தாறுமாறாய் பொத்தான்களை அழுத்தினான். அடுத்த முனையில் யாரோ தூக்கக்கலக்கத்தில்  ஹலோ என்றார்கள். 

-----------------------------------------------------------

புதன், 21 ஆகஸ்ட், 2013

கடத்தல் கலாச்சாரம்!

கடத்தல் கலாச்சாரம்!


குழந்தைகள் கடத்தல் என்பது விநோதமான விளையாட்டுத் தனமாய் உயிர்களை பலி வாங்கும் நடவடிக்கையாக உருவெடுத்துவிட்டது.  சிலவேளைகளில் குழந்தைகள் அல்லது உறவினர் தங்கள் பெற்றோர், ஏனைய உறவுகளிடமிருந்து பணம் பறிப்பதற்காய் நண்பர்களுடன் செய்த பல கடத்தல் நாடகங்கள்  கூட கொலையாகியிருக்கிறது. அண்மையில் ஐபிஎல் பேட்டிங்கில் இழந்த பணத்தை மீட்பதற்காக சொந்த உறவுகளையே கடத்தி, பொலிஸ் பிரசினையானதில் விரக்தியில் கொலை செய்யப்பட்டிருந்தது இதற்கு பொருத்தமான உதாரணம்.
குழந்தைகளுக்குள் இவ்வகை துர்குணங்கள் வளர்ந்து குடும்பச் சூழலைச் சீர்குலைக்கின்றன.

    இதன் மறுபுறமாய் குழந்தைகள் கடத்தல் என்பது சட்டநெறிமுறைகளுக்கு எதிராக குழந்தைகளை அழைத்துச் செல்லுதலும் குழந்தைக் கடத்தல் என்றே வரையறை செய்யப்படுகிறது. இவ்வகை சமூகக் கொடுமையாக நீண்டு வருகிறது.

    பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள் மற்றம் பொது இடங்களில் மிரண்டபடி தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திசைமாற்றி கடத்தப்படுவது சாதாரணமாகி விட்டது. ஒரு சில நேரங்களில் அவ்வகைச் சிறார்களின் பரபரப்பை சுலபமாகக் கண்டிருக்கிறேன். அவர்களை அணுகி எதையாவது பேசினால் போதும், பெரிய ஆவலாகி விடுகிறது அவர்களுக்கு. சுலபமாக அடைக்கலமாகி விடுகிறார்கள். அன்பான வார்த்தைகள் போதும் அவர்களை வசியப்படுத்துவதற்கு, கொஞ்சம் வார்த்தைகளும் எளிமையான வாக்குறுதிகளும் போதும். தங்களின் திரை நாயகர்களைக் காண வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவர் சிறுமியர் கூட்டங்கள்; பெற்றோரின் அரவணைப்பு இன்றி தவித்து வெளியேறி எங்காவது அடைக்கலமாகும் சிறுவர்கள்; கட்டுப்பாடு என்ற பெயரில் இறுக்கப்படும் சூழல்களின் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க ஒடி வருபவர்கள் எனத் தொடர்கிறது. சமீபமாய் பெற்றோரை மிரட்டிப் பணம் பெற நண்பர்களுடன் நாடகம் நடத்துவதும், பள்ளிகளில் சுமைகள் தாங்காமல் தாங்கள் கடத்தப்பட்டதாய் தகவல் தந்து பெற்றோரைப் பதற வைத்திருப்பதும் நடந்து வருகிறது. குழந்தைகள் தங்களின் எதிர்ப் புணர்வை வெளிக்காட்ட இவ்வகை நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். இதன் மறுபுறமாய் சமூகக் கொடுமையின் அங்கமாக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அடிமைப்படுத்தும் நோக்கங்கள், வறுமை, பண ஆசை, தவறான வழி காட்டல் போன்றவை குழந்தைக் கடத்தலுக்கு முக்கியமானக் காரணங்களாகின்றன. தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைக் கடத்தல் வெகு சகஜமாகி விட்டது.

    தேவதாசி முறை மற்றும் பெண் குழந்தைகளை கோயிலுக்குக் காணிக்கையாக்குதல் போன்ற மதம் சார்ந்த நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 'மாத்தம்மாக்கள்' பெருகிக் கொண்டிருக்கின்றன. கன்னிப்பெண்களுடன் உடல் உறவு கொள்வதால் பாலின வியாதிகள் மறையும் என்ற மூட நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. விபச்சாரத்தால் பெருகும் பாலியல் நோய்களிலிருந்து தப்பிக்க இளம் பெண்களுடன் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர்.

    வறுமையில் வாடுபவர்களை தொழில் வசதி காட்டி சட்டத்திற்குப் புறம்பாக கூட்டிச் செல்லப்பட்டு வெளி மாநிலங்களில் குறைந்த சம்பளத்திற்குக் கொத்தடிமைகளாக வைக்கப்படுகிறார்கள். படிப்பறிவில்லாதப் பெற்றோர்கள் இதற்கு உடன்பட்டு விடுகிறார்கள். விளிம்பு நிலை மக்களின் வெளி உலகு பற்றின அறிவின்மையும், வெகுளித்தனமும் இதற்கு உடந்தையாகி விடுகின்றன. உலகமயமாக்கல் இடம் பெயர்வைச் சாதாரணமாகிவிட்ட நிலையில் உள்ளூரிலேயே அகதிகள் உருவாக்கப்படுகிறார்கள். இயற்கைச் சார்ந்த நாசங்களும், தண்ணீர் பிரச்சனைகளும், வேலையின்மையும் அகதிகளாய் மக்களை இடம் பெயரச் செய்யும்போது குழந்தைகள் மலினமாகி விடுகிறார்கள். இவ்வகைத் தொழிலுக்கு உடன்படுவதும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் ஒருங்கிணைக்கப்பட்ட கும்பல்களால் நடைபெறுகிறது. இவற்றுக்கு பல இடங்களில் சில காவல்துறையினரும் உடந்தையாக இருக்கின்றனர். தார்மீக நெறிகளுக்கு எதிராகவும், குழந்தைகளை நேசிக்கும் மன இயல்பு அற்றவர்களும் இதை ஒரு தொழிலாகக் கைக்கொள்ளுவதில் அவர்களின் மனம் இறுகி வரும் சமூக நிர்பந்தத்தை காண முடிகிறது.

    வெளிமாநிலங்களுக்கு பல்வேறு வகைத் தொழில்களுக்கும் கொத்தடிமைகளுக்குமென்று குழந்தைகள் சாதாரணமாய் கடத்தப்படுகின்றனர். சென்னை போன்ற பெரும் நகரங்களில் புகைவண்டி நிலையங்களில் குழந்தைகள் கும்பலாய் கைது செய்யப்பட்டு மீட்கப்படுவது செய்தித்தாளின் சாதாரண நிகழ்ச்சிகளாகி விட்டன. தெருவோரச் சிறுவர்கள் தங்களின் பாதுகாப்பின்மையை உணர்ந்து அலைபாய்தலில் வெவ்வேறு வகை முதலாளிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

    சமீபத்தில் நண்பர் ஒருவரின் கல்லூரி படிக்கும் மகள் இவ்விதமான கடத்தலில் இருந்து தப்பித்தாள். அந்த நண்பர் நடந்ததை எண்ணி நிலை குலைந்து விட்டார். அப்பெண் கல்லூரியில் கம்யூட்டர் சயன்ஸ் படிப்பவள் என்ற முறையில் இமெயில் பெற்றிருக்கிறாள். நண்பர் தன் வசதியை மீறி அவளின் படிப்பிற்கென்று கணினி வாங்கித் தந்திருக்கிறார். ஒரு நகரத்தின் செல்வந்தர் மகன் ஒருவன் அப்பெண்ணின் இமெயில் முகவரியை அறிந்து கொண்டு தகவல்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறான். முதலில் அவற்றை அலட்சியப்படுத்தியப் பெண் சுவாரஸ்யம் பொருட்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். இருவரும் குடும்பம் பற்றியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இமெயில் மூலமே கல்யாண விஷயங்களை பேசி இருக்கிறார்கள். எதேச்சையாக நண்பருக்கே இமெயில் ஒன்றின் 'பிரிண்ட் அவுட்' கிடைக்கவே பதறிப்போய் நண்பர் ஒருவரிடம் கொண்டு சென்று காட்டியிருக்கிறார். சந்திக்காமல் இமெயில் தகவல்கள் மூலம் பெற்றோரை முழுவதும் நிராகரித்து கல்யாணம் வரைக்கும் போய்விட்டிருக்கிறது. முழுத் தகவலையும் பெண்ணிடம் இருந்து பெற்றுக் கொண்ட நண்பர் நிலைகுலைந்து போனார். அந்தப் பெண் கல்லூரியில் படிப்பவளாக இருந்தாலும் வெளி உலகை அறியாதவள். இமெயில் மூலம் நண்பரைப் பெற்றதில் என்ன தவறு. கல்யாணம் வரைக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டது என்ன தவறு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தைகள், பெண்களைக் கடத்துவது சம்பந்தமாக கட்டுரையொன்று எதேச்சையாய் நண்பருக்கு நான் கொடுக்கவும் அதைப் படித்தவர் இன்னும் நிலைகுலைந்து போனார். அக்கட்டுரையை நண்பர் தன் பெண்ணிடம் தந்திருக்கிறார். அவள் அவளின் இமெயில் நண்பர் அப்படியானவர் அல்ல என்று தீர்க்கமாய் பேச ஆரம்பித்துவிட்டாள். அவளே கல்லூரித் தோழி ஒருத்தி மூலம் இமெயில் நண்பரின் நகர விலாசத்தைக் கண்டுபிடித்து விபரங்கள் சேகரித்திருக்கிறாள். தோழி தந்த விபரங்கள் அதிர்ச்சி தந்திருக்கின்றன. இமெயில் நண்பர் போலீசால் தேடப்படுபவர் என்பது இறுதியில் தெரிந்திருக்கிறது. அவனை நம்பி அவளின் கடைசி இமெயில் தகவலின்படி அவள் கிளம்பிப் போயிருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்பதை அந்தப் பெண் உணர்ந்து ஆரம்பித்திருக்கிறாள்.

    திருமண வயதுப் பெண்கள் வசீகரமான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். ஏழ்மையானப் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு திருமண வாய்ப்பு அமைந்தால் போதும் என்று ஒத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாடுகளுக்குள்ளோ, வெளிநாடுகளுக்குள்ளோ திருமணமான பின்பு கடத்தப்படுவதும், விபச்சாரத்திற்காக அலைக்கழிக்கப்படுவதும் பின்னர் நிகழ்கின்றன. எவ்விதப் புகார்களும் இல்லாமல் காவல்துறைக்கென்றத் தகவல்கள் கூட இல்லாமல் பல பெற்றோர்கள் முடங்கிவிடுகிறார்கள். உலகமயமாக்கலில் பெண்களும், குழந்தைகளும் சந்தைப் பொருளாகிவிட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் கடத்துவது என்பது நிறைய பணம் தரும் கவர்ச்சிகரமானத் தொழிலாகியும் விட்டது.

    இவை தவிர பிச்சையெடுத்தல், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றி விற்பனை செய்தல், போதைப் பொருட்களைக் கடத்துதல், வீட்டு வேலைகளுக்காகக் கடத்துதல், தத்தெடுத்தல் என்ற பெயரில் குழந்தைகளைக் கூட்டிச் சென்றுத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

    குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் வலுவானதாக இல்லை. அவை குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கான பல்வேறு ஓட்டைகளை வைத்திருக்கின்றன. தொடர்பு சாதனங்களும், பத்திரிகைகளும் உலகத்தை நம் முன் சுலபமாகக் கொண்டு வந்த காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படுவது சாதாரணச் செய்திகளாக நமக்கு வந்து சேர்கின்றன.

    குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சனையாக இது விசுவரூபிக்கப்படுகிற போது, அவை தடுக்கப்படுவதற்கான இன்னும் வழிகள் உருவாகும். தடுப்பு மற்றும் மறுவாழ்வு முறைகள் அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்ட வரும். இதற்காக பல தொண்டாகவே நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், மீட்பு முயற்சிகளையும் எடுத்து வருவது சமீபமாய் அதிகரித்திருக்கிறது.

    இவ்வகைக் கடத்தல்கள் பெற்றோர் மத்தியில் குழந்தைகளைப் பேண வேண்டிய பொறுப்பையும், உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தர வேண்டியப் பாதுகாப்பைப் பற்றின எண்ணங்களை வலியுறுத்தலாம். குழந்தைகளுக்கும் வீட்டை விட்டு வெளியேறுதல் பற்றின அச்சத்தை மேலோட்டமாகக் கிளப்பலாம். ஆனால் சமூக நிலைக் காரணங்கள் இவ்வகைக் கடத்தல்களைத் தொடர்ந்து நிகழ்த்தாமல் தடுத்துவிடுமா என்ன?

    குழந்தைத் தொழில் உழைப்பு தடை செய்யப்படுதலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அமுலாக்களும், மறுவாழ்வும், அடிப்படைக் கல்வியின் அவசியமும் கடத்தல் கலாச்சாரத்தை வலு இழக்கச் செய்யும்.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன்
இந்திய - நேபாள எல்லையில் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு அடிமையாக்கப்பட்ட 12 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு மீள்வாழ்வு அளித்துள்ள சமூகப் போராளி பற்றிய இப்பதிவையும் நிச்சயம் வாசிக்க : 
4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன் எழுதிய மேலும் சில கட்டுரைகள் 


வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தற்கொலைக் களங்கள்

தற்கொலைக் களங்கள்


சுற்றுச்சூழல் காப்பு பற்றின அக்கறை எந்த வகையிலும் இரு தளங்களைச் சார்ந்திருக்கிறது.
அதை வீட்டிற்குள் இருந்து கொண்டு, வீட்டிலிருந்து ஆரம்பிப்பது என்பது முதன்மை. வீட்டுப் பொருட்களின் உபயோகத்தில் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது, வீட்டுச் சூழலில் ஒரு சாதாரண அக்கறையைக் கைக்கொள்வது என்பன ஒரு தளத்தை சார்ந்தன. இன்னொரு தளத்தில் இயக்க ரீதியானச் செயல்பாடும், விழிப்புணர்வும் அடங்குகிறது.

    எல்லா இயக்கங்களும் வெகுஜன ஈடுபாட்டைக் கொண்டிருப்பது அவசியம். ஆரம்பத்தில் தனிமனித, குழு முயற்சிகளாக இவ்வகை இயக்கங்கள் இருப்பது தவிர்க்க இயலாததாகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த இயக்கங்கள் வெகு அபூர்வமாகக் காணக் கிடைக்கின்றன. தன்னார்வக் குழுக்களைத் தவிர்த்த வெகுஜனத் திரளைக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகள் இவ்வகை சுற்றுச்சூழல் ஈடுபாட்டை மிகவும் குறைவானச் சதவிகிதத்திலேயேக் கைக்கொள்கின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வும், இயக்க ரீதியான நடவடிக்கைகளும் பெரும் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் எதிராக அமைந்துவிடுகின்றன. இன்றைய அரசியல் கட்சியினர் பெரும்பாலும் தொழிலதிபர்களாகவும், எந்த வகையிலேனும் தொழில்துறை சார்ந்த வியாபாரிகளாகவும் இருப்பதால் சுற்றுச்சூழல் பற்றின இயக்க ரீதியானச் செயல்பாட்டிற்குச் செல்வதில்லை. தொழிற்சங்கத் தலைவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஆண்டிற்கு பதினைந்தாயிரம் கோடி ரூபாயை அந்நியச் செலவாணியாகத் தரும் திருப்பூர் நகரின் அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்களில் கணிசமானோர் பின்னலாடைத் தொழில் சம்பந்தப்பட்டவர்களாய் இருப்பதால் சுற்றுச்சூழல், குழந்தைத் தொழில் எதிர்ப்பு இயக்கங்களில் பங்கு பெறுவது மிகவும் மேலோட்டமானதாக இருக்கிறது. மறுபுறம் சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கச் செயல்பாடுகள் தொழில் விஞ்ஞான ரீதியான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்றத் தீர்மானத்தை ஏதேனும் வகையில் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

    அரசியல் கட்சிகளில் ஐந்தாண்டு தேர்தல் கால அறிக்கையில் ஓரிருவரிகள் சுற்றுச்சூழல் அக்கறை குறித்து தென்பட்டு மறைந்துவிடும். அவை அந்தந்த அரசியல் கட்கிள் சார்ந்த சில அனுதாபிகளின் சுற்றுச்சூழல் அக்கறையை வெளிக்காட்டிக் கொள்வதோடு சரி. இது குறித்துச் செயல்படும் தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டை சுலபமாக உதாசீனப்படுத்தியும் விடுவது தாங்கள் சார்ந்த அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு விசுவாசமானதாக அமைந்து விடுகிறது.

    ஜனநாயக ரீதியாக எந்தவகை உரிமை குறித்தும் குரல் எழுப்ப யாருக்கும் தகுதி உண்டு. ஆனால் டாலர்களும், பவுண்டுகளுமாய் அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்கிற ஒரே உயர்ந்த பட்சத் தகுதி பல தொழில் அதிபர்களை, சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது கட்டுப்பாடற்ற விமர்சனங்களைத் தந்துவிடுவது ஆச்சர்யமானது. நொய்யலை மாசுபடுத்தி பணம் சம்பாதித்துத் தரும் அந்நிய செலவாணி குறித்த உரிமை ஏகபோகமானது என்றக் குரலை சமீபத்தில் கேட்க நேர்ந்தது. அதற்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களின் நியாயங்களை மறுப்பது மட்டுமின்றி உரிமைகளைத் தட்டிக் கேட்கிற தன்மையையும் சமீபமாய் இங்கு கேட்டுணர முடிகிறது. இது ஒரு வன்முறையாகவே வளர்ந்து வருகிறது.

    அந்நிய செலவாணி பேராசை திருப்பூர் போன்ற நகரங்களை அந்நிய நாடுகளின் குப்பைக் கூடையாக்கி விட்டது. முறையான வளர்ச்சியில்லாத சுற்றுச்சூழலை அழிக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை உருவாக்கும் மனநிலையைக் கொண்ட புறநகர் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் தெளிவற்றதானத் திட்டங்களுடனான நகர மையங்கள் அதிகரித்து வருகின்றன. நிர்வாகத் தன்மையும், திட்டமிடலும் இல்லாத நகர் விரிவு பொதுமக்களை உளவியல் ரீதியில் சிரமத்திற்குள்ளாக்குகின்றன. நில உரிமையாளர்கள் தங்களின் பண ஆசையின் படி எதையும் செய்யலாம் என்றத் திட்டமிடுதலில் மட்டுமே செயல்படுகிறார்கள். உயிரினத்தின் சூழலை அது தகர்த்து வருவதை அறியாமல் இருக்கிறார்கள்.

    நொய்யலைச் சார்ந்த விவசாய நிலங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்களாக்கப்பட்டு விட்டன. எதிர்காலத் தொழிற்சாலைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு வானம் பார்க்கின்றன. பருவ மழை என்பது தகர்ந்து போய், எதேச்சையான மழைப்பொழிவில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிற போதுதான் சாயக்கழிவுகள் அடித்துச் செல்லப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. விவசாய நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்ட பல அணைகள் சாயக்கழிவுகளின் தேக்கத்திற்கென்றே மாறிவிட்டன.

    எழுநூறு அடிவரை, ஆயிரம் அடிவரைக்கும் துளையிட்டு நீர் பெறவே இயலாதபடி நான் வாழும் புறநகர் உள்ளது. லாரி மூலம் தருவித்துக் கொள்ளப்படும் தண்ணீர் ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் என்றக் கணக்கிற்கு வந்து விடுகிறது. சாயம் தென்படாத நீர் கிடைக்கிற போது ஆசுவாசம் பிறந்து விடுகிறது. சுலபமாகப் பரவும் நோய்கள் மருத்துவமனைகளுக்கு கூட்டத்தைச் சேர்த்துவிடுகிறது. உலக வங்கியின் நிர்பந்தம், உதவியுடன் நவீனக் கட்டணக் கழிப்பிடங்கள் பெருகிவிட்டன. ஆனால் அவற்றைப் பராமரிப்போரின் அலட்சியமான மனப்போக்கு சகிக்கவியலாத கழிவறைக்குள் தினவாழ்க்கை ஆரம்பமாகிற அவலத்தைத் தந்து விடுகிறது.

    சிறு செடிகளும், தரைபாவின மர இனைங்களும் தென்படும் புறநகர் பகுதிகளில் வீசியெறியப்படும், காற்றில் அலைக்கழிந்து சிதறும் பிளாஸ்டிக் உறைகள் அவற்றின் மீது படிந்து நிரந்தரமாகி விடுகின்றன. வர்ண பிளாஸ்டிக் உறைகள் விரைவில் வெளுத்து விடுகின்றன. விடியற்காலை நேரங்களில் அவை வெள்ளைக் கொக்குகள், வெள்ளை நிறப் பறவைகள் உட்கார்ந்திருப்பதைப் போலவும் தோற்றம் தருகின்றன. சூரிய கிரணங்களின் பரப்பில் வெளிச்சம் பரவுகிறபோது அவை பிளாஸ்டிக் உறைகள் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தி குப்புறத் தள்ளி விடுகின்றன.

    திட்டமிட்ட பணக்கார நகரப் பகுதிகள் நகரங்களின் ஏதேனும் மூலையில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு திட்டமிடாத நகரம் விரிந்து கொண்டே இருக்கிறது. ஏழைகளுக்காக உருவாக்கப்படும் உயிரற்றத் திட்டங்கள் அவர்களை வீடுகளில் இருந்து துரத்திவிடுகின்றன. இந்த உயிரற்றத் திட்டங்களில் தங்களை மூழ்கடித்து வருபவர்களில் தொழில் அதிபர்கள் சேர்கிறார்கள். மேற்கத்திய நாடகள் தங்களின் ஏற்றுமதிக் கொள்கைகளின் சரத்துகளில் வைக்கிற திட்டங்கள் அவர்களைப் பயமுறுத்துகின்றன.

    அபரிமிதமான லாபத்தில் ஒரு சிறு சதவீதத்தை சுற்றுச்சூழல் காப்பிற்கு செலவழிக்க வேண்டியக் கட்டாயம் மூச்சுத் திணற வைக்கிறது. வேறு வழியில்லை என்று கழுத்து நெரிபடுகிற போது அரசின் உதவித் திட்டங்களுடன் செயல்படத் துவங்குகிறார்கள். சாயக்கழிவுகளை வெளியேற்றும் திட்டங்களுக்கு அவர்கள் வெவ்வேறு தனியார் தொழில் நுட்ப வல்லுனர்களை அணுகுகிறார்கள். அவர்கள் தரும் திட்டங்களும், செலவுகளும் கணக்கில் கொண்டு குறைந்தபட்சச் செலவுத் திட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். அத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர ஓரிரு வருடங்கள் ஆகிறபோது, அத்திட்ட அமைப்புகள் தொழில் நுட்ப ரீதியில் காலாவதியாகி விடுகின்றன. இன்னும் பெருத்த செலவிற்கு அடிகோலிடுகின்றன. பின்னலாடை ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் முந்தினத் தலைமுறையினருக்கு இது அதீத செலவாகவும் பட்டுவிடுகிறது. பின்னலாடை தொழில்நுட்பப் படிப்பு சார்ந்த ஒரு புதியத் தலைமுறை முழுமையாக உருவாக இங்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கலாம். வெறும் உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு வளர்ந்த ஒரு பணக்காரத் தலைமுறையினருக்கு சமீபத்திய ஏற்றுமதிக் கொள்கையில் சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன், குழந்தைத் தொழில் குறித்தவை அதிர்ச்சி தருவதில் ஆச்சர்யமில்லை.

    உயர்ந்தத் தொழில்நுட்ப பணிகளைக் கொண்ட அதிகபட்சமான பின்னலாடையைத் தயாரிக்கிற நோக்கம் கொண்டவர்கள் சுற்றுச்சூழல், தொழிலாளர் வாழ்சூழல் நிலையை மனதில் கொண்டு தயாரிப்பு நேர்த்தியில் சமீபத்தில் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தவறும்போது ஏற்றுமதியாளர்கள் என்ற ஸ்தானத்தை அவர்கள் ஏகதேசம் இழக்க வேண்டியிருக்கும். சுற்றுச்சூழல் மாசடையாத உற்பத்திப் பொருளை மனதில் கொண்டு செயல்படுகிறபோது சுற்றுச்சூழல் பற்றின அக்கறை அவர்களுள் வந்துவிடுகிறது. இந்த சமீபத்திய அக்கறை கட்டாயம் என்ற ரீதியில்தான் வந்து சேர்ந்திருக்கிறது. குறிப்பிட்ட கால அளவில் பொருள் உற்பத்தி என்பதை தினசரி வாழ்க்கையின் நெடுநேர உடல் உழைப்பால் சாத்யம் என்று காட்டிவிட்டு, தரம் என்பதை இரண்டாம், மூன்றாம் பட்சமாக்கியவர்கள் தனித்து விடப்படுகிறார்கள். நெடுநேர உழைப்பு 45 வயதிற்கு மேல் ஆண்களை நிரந்தர ஓய்வாளர்களாக்கியிருக்கிறது.

    அரசாங்க உதவியுடன் நிறுவப்படம் சாயக்கழிவு நீக்கும் நிலையங்கள் முறையாக வடிவமைக்கப்படுவதில்லை. சமீபத்தில் திருப்பூரில் மத்திய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்டதொன்று அதிர வைத்தது. பல்வேறு சாயப் பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கவென்று கொண்டு வரப்படும் சாய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாகச் செலுத்தப்படாமல், நிலத்தடியில் மறைமுகமாகப் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் ஒரு ஏரியில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் இருக்கையில் அதை வெற்றுப் பார்வைக்கென உருவாக்கியிருப்பது தெரிய வந்தது. இது சுற்றுச்சூழல் சார்ந்தவர்களின் அறியாமையோ, அலட்சியமோ, சட்டங்களின் இயலாமையோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்த கூட்டு எண்ணத்தின் வெற்றிடமா என்பது அதிர்ச்சி தருகிறது.

    சுற்றுச்சூழல் சார்ந்த பெரும்பான்மையானச் சட்டங்கள் சுற்றுச்சூழலின் மோசமான விளைவுகளைப் பற்றி மனதில் கொள்ளாமல் இயற்றப்பட்டதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் நீர்த்துப் போகும் தன்மையும் யாரையும் எளிதில் தப்பிக்க வைத்து விடுகிறது. ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை இயற்கை தந்தாலும் அதை மீறி பேராசை கொள்ளும் மனிதமனம் நச்சுக்காற்றால் மூச்சு நெரிபடுவதை உணராமல் இருப்பது வினோதமானது.

    மனிதன் மற்ற உயிரினங்களுக்கு ஈடான வகையில் தன்னை எந்த நிலைக்கும் மாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவனாகவும், சுற்றி சுற்றி உள்ள சுற்றுச்சூழலை மாற்றக்கூடிய நுண்ணறிவு கொண்டவனாகவும் இருந்த போதிலும் பெட்ரோல் புகையும், சாய நெடியும், உக்கிரமான வெயிலும் அவனின் சமநிலையைக் குலைக்கிறதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் அவனின் சுயசிந்தனைக்கும், பகுத்தறிவிற்கும் இடமில்லாமல் மூளையை ஸ்தம்பிக்கச் செய்யும் புறச்சூழல்கள் சுலபமாக உருவாகி வருகின்றன.

    சிறு குன்றுகளும், புல்வெளிகளும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட தொழிலதிபர் வீடுகளிலும், பூங்காக்கள் என்ற பெயரிலான உயர்ந்த நுழைவுக் கட்டண இடங்களிலும் காணக் கிடைக்கின்றன. குன்றுகளையும், புல்வெளிகளையும், ஏரிகளையும் முழுதும் தகர்த்து விட்டு அவற்றின் மாயத்தோற்றங்களை அங்கங்கே நிறுவுகிறார்கள்.

    இங்கு காதல் தோல்வியால் சாயக்கழிவுக் குட்டையொன்றில் சமீபத்தில் ஓர் இளைஞன் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டான். பெரும் தொழில் நகரங்கள் சாயக்கழிவுக் குட்டைகளாய், தற்கொலைக் களங்களாக மாறி வருகின்றன.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன் 
4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன் எழுதிய மேலும் சில சமூகப்பார்வை கொண்ட கட்டுரைகள் 

பிடித்திருக்கா? பகிருங்கள்!