சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 31 ஜூலை, 2010

வால்பாறை

வால்பாறை
--------------------


குளிரும், மழையும், பனியும் என்று ஒரு வாரத்தங்கலில் வால்பாறை புது அழகுடன் இருப்பதை சமீபத்தில் கண்டு கொண்டேன். உடுமலைக்கு வேலை மாற்றலாகிற வரைக்கும் வால்பாறை போனதில்லை. அங்கு போன பின்பு அலுவலக நிமித்தமாக வால்பாறைக்குப் போவது சாதாரணமாகி விட்டது.இந்த முறை கைபேசி நுட்பக்கோளாறு காரணமான வேலையில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஆசியாவின் மிகச்சிறந்த தூய்மைப்பகுதிகள் என்று கணிக்கப்படுகிற டாப்சிலிப்பும், அக்காமலையும், மிகப்பெரிய அணையான சோலையார் அணையும், காடம்பாறை மின் நிலையமும், மிக உயரமான கவர்க்கல் பகுதியும், பாலாஜி கோவிலும் முக்கியமானவை.
வால்பாறையில் சுற்றுலா இடங்கள் என்று அதிகம் இல்லாவிட்டாலும் மடிப்புகளான மலைகளும், இயற்கை சூழலும், ரம்மியமானவை. தேயிலைக்கு விலையில்லாமல் போவது பற்றி சமீப ஆண்டுகளில் தொடர்ந்து செய்திகள் வருவது தேயிலைத்தொழிலாளர்களின் நிலையைச் சொல்லி வருகிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு மலைப்பபகுதி மக்கள் இடம் பெயர்வது சமீபத்தில் சாதாரணமாகிவிட்டது. தொழிற்சஙக உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தொழிற்சங்கங்கள் என்ற நிலை இல்லாமல் அதிகாரத்துடனான நெருக்கமான உறவுக்கும், தலைவர்களின் சுயலாபத்திற்கும் தொழிற்சங்கங்கள் என்றாகி விட்டன. இரட்டை, மூன்று உறுப்பினர் நிலை என்று கணக்கு காண்பிப்பதற்காக ஒரே தொழிலாளரே மூன்று தொழிற்சங்கங்களில் உறுப்பினராக தலைவர்களே சந்தா செலுத்தி தங்கள் சங்கங்களை காத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகள், கொத்தடிமை நிலை பற்றி “எரியும் பனிக்காடு “ என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு விரிவாகச் சொல்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்து 40 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த “ ரெட் டீ “ தமிழ் வடிவம் பெற்றுள்ளது. விடியல் பதிப்பகம், கோவை அதை முருகவேளின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது.இனறைய தோட்டத்தொழிலாளி மலின உழைப்பை முன் நிறுத்தி மீண்டும் நவீன கொத்தடிமை ஆகிக்கொண்டிருப்பதை அவர்களின் நிலை பற்றி அறிகிற போது தெரிந்து கொள்ள முடிகிறது.
அறையில் குளிரில் முடங்கிக் கிடந்த போது வெங்கடேசனின் “ தாண்டவராயன் கதை” நாவலைப்படித்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த விடுதி ஊழியர் ஒருவர் ” என்ன நீங்க எழுத்தாளரா.. கொஞ்ச நாளைக்கு முந்தி இங்க கவிஞர்கள் கூட்டம் ஒண்ணு நடந்தது. எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. கவிஞர்கள்ன்னா சிடுமூஞ்சியா இருப்பாங்க. ஆனா அவங்கெல்லா ஜாலியா இருந்தாங்க. கவிதைன்னா சந்தோசம்தாங்களே..” என்றார். அவரின் கவிஞர்கள் பற்றிய ப்ரமைகட்டுடைப்பிற்கு குறிப்பாக கவிதாயினிகள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள்.
கைபேசி கோபுரம் தொழில் நுட்பக்கோளாறு சின்கோனாபகுதியினை முடக்கியிருந்தது.அங்கு தோட்டத்தொழிலாளர்களின் பழைய மருத்துவ மனையை சீர்திருத்தி பாரதியார் பல்கலைக்கழக அரசு கலைக் கல்லூரியை நிறுவி இருக்கிறார்கள். வால்பாறையில் இருக்கும் சுமார் 60 தேயிலைத் தோட்டப்பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் படிக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப்பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது அக்கல்லூரி. பனியும், மழையும், ஸ்வெட்டரும் , குடையும் அவர்களின் உடம்போடு ஒட்டிக்கொண்டவை. சிறு குழுவாய் உட்கார்ந்திருந்த மாணவர்களிடம் கேட்டேன்: “ என்ன கடலையா... “
“ இல்லீங்க .. கவிதைங்க “ என்றார்கள் . “ நெசமாலுமுங்க ..”

கவிதாயினிகள் தங்குவதற்காக சின்கோனாபகுதியில் நான் சிபாரிசு செய்யும் இடம் “ உட்டன் ஹைவுஸ் “. 1720ல் வெள்ளையர்களால் முழுக்க மரத்தால் வடிவமைக்கப்பட்ட வெயிலுக்கும், மழைக்கும் இதமாக இருக்கும் விடுதி . சின்கோனா சின்ன சொர்க்கம்.
subrabharathi@gmail.com
-------- சுப்ரபாரதிமணியன்

வியாழன், 22 ஜூலை, 2010

பழமலையும், ப க பொன்னுசாமியும்....

சமீபத்தில் சில தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்க்க நேர்ந்த்து. விழுப்புரம் பழமலையின் “ ஜனங்களின் கதை “ கவிதை நூல் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் தில்லியில் வசிக்கும் ராஜா அவர்கள். தலைப்பை அப்படியே வைத்துள்ளது இது ஆங்கில வாசகர்களுக்கு உரியது அல்லவே என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் , பழமலை வெளிக்கொணர்ந்த நுணுக்கமான அவர் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களும் சரியாகவே மொழிபெயர்பில் படிக்கக் கிடைத்திருப்பது ஆங்கில வாசகனிடம் சரியாகப் போய் சேரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பழமலையின் மொத்தக் கவிதைகள் “ காவ்யா “ பதிப்பகத்தினரால் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் மகிழ்ச்சி தருகிறது.
உடுமலையில் வசிக்கும் முந்நாள் துணை வேந்தர் ப க பொன்னுசாமியின் ”படுகளம்” நாவல் கொங்கு பகுதி பற்றிய குறிப்பிடத்தக்கதாகும் ( மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ரூ 300)
.இதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தட்டச்சுப் பிரதியின் சில பகுதிகளை சமீபத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தலைப்பு ” அவைட்டிங் காடஸ் “
கொங்கு பிரதேச வழக்குகளும், பேச்சும் ஆங்கில வாசகனுக்கு புதிது போல தோற்றம் கொள்ள செய்தாலும், மக்களின் அனுபவங்கள் நேரடியாக புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. பொன்னுசாமியின் இயற்பியல் சார்ந்த ஆங்கிலக்கட்டுரைகளை வாசிக்கிற போது இந்த நாவலின் மொழிபெயர்ப்பையும் அவரே செய்திருக்கலாம் என்று தோன்றியது.
”படுகளத்” தை அடுத்து அவர் எழுதி வரும் முந்தின நாவலின் தொடர்ச்சியான நாவலை ஆங்கிலத்திலும் அவரே எழுதலாம்.
பொள்ளாச்சி சிற்பிபாலசுப்ரமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் டாக்டர் கே எஸ் சுப்ரமணியனின் மொழிபெயர்ப்பு ஆங்கில வாசகனை மனதில் கொண்டு நுணுக்கமாக உருவாக்கப்பட்டிருந்தது.இந்த்த் தேர்ச்சியை அவர் மொழிபெயர்த்துள்ள ஜெயகாந்தனின் நாவல்களிலும் காணலாம்
எனது “ பிணங்களின் முகங்கள் “ நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2003 ம் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது பரிசு பெற்றது.( இப்பரிசை பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சிவசங்கரி, சோலைசுந்தரப்பெருமாள், பாவைச்சந்திரன் போன்றோரும் பெற்றிருக்கின்றனர் )இது சமீபத்தில் கோவையைச் சார்ந்த பேராசிரியர்
ஆர். பாலகிருஸ்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டவர் என்ற வகையில் அவரின் மொழிபெயர்ப்பில் காணப்படும் உற்சாகம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. இவர் இளம் வயது பேராசிரியர் என்பதால் , ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் வழமையான மொழிபெயர்ப்பில் இருந்து மாறுபட்டிருக்கிறது எனபது ஆறுதலானது.

*சுப்ரபாரதிமணியன்

“ கனவு “ இலக்கிய இதழ் தொகுப்பு நூல் வெளியீடு

கனவு இலக்கிய இதழ் 23 ஆண்டுகளாய் வெளிவந்து கொண்டிருக்கிறது. 1987ல் செகந்திராபாத்தில் சுப்ரபாரதிமணியனால் ஆரம்பிக்கப்பட்ட கனவு இதழ் தற்போது அவர் வசித்து வரும் திருப்பூரில் இருந்து தொடர்ந்து காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த் 20 ஆண்டுகளில் கனவு இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற சாகித்திய அகாதமியின் ” எழுத்தாளர்களுடன்ஒரு மாலை ”என்ற
நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. கனவு தொகுப்பு நூலை சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் வெளியிட்டார். விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னீலன் , பாரதிகிருஸ்ணகுமார், சிங்கப்பூர் எழுத்தாளர் டாக்டர்லக்சுமி சுப்ரபாரதிமணியன், ஆகியோர் உரையாற்றினர்.கனவு தொகுப்பு நூலை காவ்யா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது. 700 பக்கங்கள் விலை ரூ 350/.
இடம் பெற்றிருக்கிற சில படைப்பாளிகள்:க நா சுப்ரமணியன், பசுவையா, நகுலன், பிரம்மராஜன், கல்யாண்ஜி, புவியரசு, ஜெயமொகன், எஸ் ராமகிருஸ்ணன், பாவண்ணன், பெருமாள் முருகன், இந்திரன், காலசுப்ரமணியன், அ மார்கஸ், சுஜாதா, அசோகமித்திரன், சா கந்தசாமி, ஜெயந்தன், தமிழவன், நாஞ்சில் நாடன், அ முத்துலிங்கம், ரெ பாண்டியன், சுதேசமித்திரன், ஜி முருகன், எஸ் சங்கரநாராயணன், காலசுப்ரமணியன், நா கண்ணன்.கனவு 64 ம் இதழ் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கனவு ஆண்டு சந்தா ரூ 50/. மட்டும், ஆயுள் சந்தா ரூ 1000/, காசோலை, வரைவோலை அனுப்ப:
கனவு, 8/2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641 602. (09486101003) * கனவு இதழ் இணைய தளத்தில் காண: கீற்று.காம்*
சுப்ரபாரதிமணியனின் இணைய தளம்; rpsubrabharathimanian.blogspot.com


செய்தி: Issundarakannan7@gmail.com