சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 பிப்ரவரி, 2013



சுகந்தி சுப்ரமணியன் நினைவு நாள் 11.02.2013

அறைக்குள் ஒரு பெண்  ஆளுமை, கவிதை - ஜெயமோகன்

நான் வாழ்ந்த ஊர்களில் எனக்குக் கொஞ்சம்கூட நினைவில் நிற்காத ஊர் என்றால் அது திருப்பத்தூர்தான். இத்தனைக்கும் அங்கிருக்கையில் சில நல்ல இலக்கிய நட்புகள் கிடைத்தன. அங்கேதான் எவரும் தங்கள் வாழ்க்கையின் மிக இனிய நினைவுகளாகச் சொல்லக்கூடியவை நிகழ்ந்தன எங்கள் முதல்குழந்தை அஜிதன் கைக்குழந்தையாக இருந்தான். அக்காலகட்டத்தில்தான் எனக்கு சம்ஸ்கிருதி சம்மான் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தன. ஆனாலும் அந்த ஊர் நினைவிலிருந்து நழுவிக்கொண்டே இருக்கிறது.
1992ல் என் மனைவி தபால் குமாஸ்தாவுக்கான பயிற்சி முடித்துத் தபால்துறை ஊழியராக பதவி ஏற்றது திருப்பத்தூரில்தான். நான் அப்போது தர்மபுரியில் தொலைபேசித்துறை ஊழியராகப் பணியாற்றினேன். திருப்பத்தூரில் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் குடியிருந்தார். அவர் எனக்கு நண்பர். அங்கே தங்குவதற்கு அவர் எனக்கு வீடு எடுத்துத்தந்தார்.
திருப்பத்தூரில் தங்கி தினமும் பேருந்தில் தர்மபுரி வந்துசென்றேன். ஒன்றரை மணிநேரப் பேருந்துப்பயணம். ஆக, திருப்பத்தூரில் நான் தங்கியிருந்ததே பாதிநாள்தான். மாலையில் கிளம்பி அலுவலகம் சென்றால் மறுநாள் வேலையும் முடித்து மறுநாள் மாலை திரும்பி வருவேன். ஒருநாள் வீட்டில் இருப்பேன். என் வாழ்க்கையில் நான் முழுதாக ஒருவருடம் புனைகதை என எதையுமே எழுதாமலிருந்தது அப்போதுதான். அசோகமித்திரனுக்கும், சுந்தரராமசாமிக்கும் இரு மலர்களை நானும் சுப்ரபாரதிமணியனும் இணைந்து கொண்டுவந்தோம்.
யோசித்துப்பார்க்கையில் அப்போது நான் படைப்பூக்கத்துடன் இல்லை என்பதனால்தான் நினைவில் அந்த ஊரே இல்லை என்று தோன்றுகிறது. திருப்பத்தூருடன் இணைந்து நினைவில் வரும் முகம் கவிஞர் சுகந்தி சுப்ரமணியனுடையது. நண்பர் சுப்ரபாரதிமணியனின் துணைவி அவர். இன்னொரு சிந்தனை வருகிறது. சுகந்தி சுப்ரமணியனின் நினைவுடன் பின்னிப்பிணைந்திருப்பதனால்தான் நான் திருப்பத்தூரை என் அகப்பதிவுகளிலிருந்து அழித்துவிட்டேன் போல.
தமிழின் ஆரம்பகாலப் பெண்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சுகந்தி. நான் எழுதவந்த காலத்தில், 1988இல் சுகந்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். திருப்பத்தூர் சென்று குடியேறிய அன்று மூச்சிரைக்க சுகந்தி ஓடிவந்து பேச ஆரம்பித்தார். அவரது இரு அழகிய மகள்களை அருண்மொழி பெரும்பிரியத்துடன் அள்ளி அணைத்துக்கொண்டாள்.
சுகந்தியை அப்போதுதான் நான் கவனித்தேன். முதலில் போதிய அளவில் ஆளுமை வளராத ஒரு பெண் என்று மதிப்பிட்டேன். பதினைந்து பதினாறு வயதான கிராமத்துப் பெண்களுக்குரிய அப்பாவித்தனமும் படபடப்பும் அவரிடமிருந்தது. முதலில் என்னைப்பார்க்க வந்தபோதே ஒரு நோட்புக் நிறைய கவிதைகள் எடுத்துவந்தார். அவற்றை நான் உடனே பார்க்கவேண்டும் என்று சொன்னார். இப்ப படிங்கஇப்பவே படிங்கஎன்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
அவர் போனபின்பு நான் கவிதைகளை வாசித்தேன். அவை கவிதைகளே அல்ல. வெறும் சொற்கள். திரும்பத்திரும்ப நான் தனியாக இருக்கிறேன், என்னை அடைத்துவைத்திருக்கிறார்கள், எனக்கு வழிதவறிவிட்டது, நான் ஊருக்குச்செல்லவேண்டும் என்பதுபோன்ற எளியவரிகள் வெவ்வேறு வகையாக எழுதப்பட்டிருந்தன. அதிர்ச்சியுடன் சுப்ரபாரதிமணியனிடம் அதைப்பற்றிக் கேட்டேன். அவர் சுகந்தியின் மனம் நிலையழிந்திருப்பதைப் பற்றிச் சொன்னார்.
சுப்ரபாரதிமணியன் அதற்கு முன் செகந்திராபாதில் பணியாற்றினார். நான் முன்னரே இருமுறை அவர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். முதல்முறை ஓர் இந்தியச்சுற்றுப்பயணத்தின் பகுதியாக. அப்போது சுகந்தியைச் சந்தித்திருந்தேன். அச்சமும் தயக்கமும் மிக்க கிராமத்துச் சிறுமி என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஓரிரு சொற்களுக்குமேல் பேசியதில்லை. அதன்பின் இன்னொருமுறை செகிந்திராபாத் சென்றிருந்தேன். அப்போதும் ஒருசில சொற்கள் பேசினேன். அவ்வளவுதான் என் மனப்பதிவு.
சுப்ரபாரதிமணியன் சுகந்தியின் உளச்சிக்கல்களைச் சொன்னார். ஆனால் அவருக்கே உரிய முறையில் அது ஒரு பெரியவிஷயமில்லை என்றபாணியில் சொன்னதனால் நான் பெரிதாக நினைக்கவில்லை. அவளாலே ஒரு இடத்திலே இருக்க முடியல்ல. ஒரு ரூமுக்குள்ள இருக்கிறப்ப டென்ஷன் ஆயிடுவாகதவச்சாத்தினா பதற்றம் ஆயிடும்…. சின்னச்சின்னப் பிரச்சினைகள் இருக்கு’.
ஆனால் திருப்பத்தூரில் சுகந்தியை அருகில் கண்டு பழக ஆரம்பித்த முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்ப கொஞ்சம் ஜாஸ்தி. ஸ்கிஸோபிர்னியான்னு சொல்றாங்க…. பலவிதமான மனப்பிரமைகள் இருக்குடிரக்ஸ் குடுக்கிறோம். அத ஒழுங்கா சாப்பிட்டா ஓரளவு கண்டிரோல்ல இருக்கும்…’ என்று சாதாரணமாகச் சொன்னார். நான் வருத்ததுடன் என்ன ஆர்பிஎஸ் இது?’ என்றேன். என்ன செய்றது? பாப்போம்…’ என்றார் சுப்ரபாரதிமணியன் இன்னும் சாதாரணமாக.
சுகந்தி இந்த உலகிலேயே இல்லை.நிலைகொள்ளாத தன்மை, கட்டுக்கடங்காத நடவடிக்கைகள். உண்மையில் அவரது உளப்பிரச்சினைகள் பள்ளிநாளிலேயே ஆரம்பமாகியிருந்தன. அவருடைய இளமைப்பருவம் பரிதாபகரமானது. தாயாரால் புறக்கணிக்கப்பட்ட அவரைப் பாட்டிதான் வளர்த்தாள். சுகந்தியின் கவிதைகளில் அடிக்கடி வரும் லட்சுமிப்பாட்டி. வீட்டில் கறாரான கண்டிப்பு , வெளியே சமூகத்தின் கேலி கிண்டல் என வளர்ந்த சுகந்திக்கு எப்போதுமே தாழ்வுணர்ச்சியும் மனஅழுத்தமும் இருந்தது. மெல்ல மெல்ல அது வலுப்பெற்றிருக்கலாம்.
சுப்ரபாரதிமணியன் சுகந்தியைக் கவிதைகள் எழுதச்சொன்னதே அந்த உளச்சிக்கல்களைத் தாண்டி வர அது உதவக்கூடும் என்பதனால்தான். தனக்குத்தானே சுற்றி இறுக்கிக்கொண்ட மனப்பிரமைகளின் சுவர்களை உடைக்க கவிதை உதவக்கூடும் என அவர் நினைத்தார். அவர் ஓர் எழுத்தாளர் என்பதனால் மொழி அளிக்கும் விடுதலையை நன்கு அறிந்திருந்தார்.
சுகந்தியின் ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும் மிகநேர்மையான உணர்ச்சிவேகம் கொண்டவை. தன்னியல்பான மொழிவீச்சு கொண்டவை. கணிசமான கவிதைகள் முடிவடையாதவையாக இருக்கும். ஒருவகை முடிவை அடைந்த கவிதைகளை மட்டும் சுப்ரபாரதிமணியன் பிரசுரித்தார். அவரது முதல் தொகுதி சுப்ரபாரதிமணியன் முயற்சியால் அன்னம் வெளியீடாக 1986இல் வெளிவந்தது. அப்போதே சுந்தர ராமசாமி உட்பட முக்கியமான திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்றது அது.
சுகந்திக்கு இரு பெண்கள். இருவருமே அப்போது சிறுமிகள். சுகந்தியால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அன்றன்று செய்தித்தாளில் வாசித்த, கேள்விப்பட்ட செய்திகளை எல்லாம் தன் வாழ்க்கையில் நிகழ்ந்தவை என்று நம்பக்கூடிய மனப்பதற்றம் இருந்தது. பெரும்பாலான செய்திகள் பயங்கரமாக, மனம் பதறச்செய்யக்கூடியவையாக இருக்கும். ஆரம்பத்தில் அருண்மொழியே அவற்றை நம்பிப் பதற்றமடைந்துகொண்டிருந்தாள்.
நாள்கணக்கில் வெவ்வேறுவகையான கற்பனை யதார்த்தங்களில் கொந்தளித்துக்கொண்டிருப்பார். எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். நாலைந்து குண்டர்கள் தன்னைத் தாக்கிவிட்டதாக ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஜீப்பில் வந்திறங்கினார். தாள் வாங்க வந்தவர் தன்னைக் கொல்லமுயன்றதாக சொல்லி வீட்டிலிருந்து இறங்கி ஓடினார் ஒருமுறை. சிலநாட்கள் பகல் முழுக்க எங்கெல்லாமோ அலைந்து திரும்பி வருவார். இருளில் இறங்கிச்சென்றால் சுப்ரபாரதிமணியன் கைவிளக்குடன் தேடி அலைந்து கூட்டிவருவார்.
இப்டி வெளியே கெளம்பிடறாங்களே…’ என்று நான் கவலையுடன். அவளாலே ரூமுக்குள்ள இருக்க முடியாது. பூட்டினா அப்டியே எக்ஸைட் ஆயிடுவாஎன்றார் சுப்ரபாரதிமணியன்.
விதவிதமான அனுபவங்களை டைரியாக எழுதி கொண்டுவந்து அருண்மொழியிடம் காட்டுவார். நாங்கள் பக்கத்துவீடு என்பதனால் உண்மை தெரியும். நான்காம் வீட்டுக்காரர் என்றால் நம்பியிருப்பார். ஒரு கட்டத்தில் யதார்த்தம் என்றால் உண்மையில் என்ன என்ற பெரும் வியப்பை நான் அடைந்தேன். ஒருவர் தான் அடிக்கப்பட்டதாக, அவமதிக்கப்பட்டதாக உண்மையாகஉணர்ந்தால் அவர் அந்த வலியை முழுக்க முழுக்க அனுபவிக்கிறார் அல்லவா?
அனுபவ உலகம் என்பது ஒவ்வொருவரும் தன்னந்தனிமையில் குடியிருக்கும் அறையா என்ன? அந்த அறைக்குள் உள்ளே தாழிட்டுக்கொண்டுதான் வாழ்கிறோமா? கதவிடுக்குகள், அரைமனதுடன் திறந்த சன்னல்கள் வழியாகத்தான் ஒருவர் அறைக்குள் இன்னொருவர் பார்த்துக்கொள்கிறோமா?
வீட்டில் ஒருவருக்கு மனநிலைச் சிக்கல் என்றால் அந்த நிலையை அனுபவிப்பவருக்கே அதன் வலி தெரியும். நான் உடனிருந்து பார்த்த சுப்ரபாரதிமனியனின் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அந்தவாழ்க்கையிலும் சுப்ரபாரதிமணியன் ஓயாது வாசித்தார். எழுதினார். கனவு இதழ்கள் கொண்டுவந்தார். நாங்கள் அங்கே இருந்தபோதுதான் அசோகமித்திரன், சுந்தரராமசாமி இருவருக்கும் அறுபதாமாண்டு நிறைவுமலர்கள் தயாரித்தோம்.
சுப்ரபாரதிமணியன் ஒவ்வொருநாளும் அவரே காலையில் சமைத்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் செல்வார். மாலையில் மீண்டும் சமையல். குழந்தைகள் அருண்மொழியுடன் மிகவும் ஒட்டிக்கொண்டிருந்தன. சுகந்திக்குத் தன்னைப் பிறர் அவமதிக்கிறார்கள் என்பது எப்போதுமுள்ள பிரமை என்றால், கணவரோ பிறரோ தாக்கிவிட்டார்கள் என்பது அதன் உச்சம். பலசமயங்களில் கட்டுப்படுத்த உடல்பலம் தேவைப்படும். இந்தியாவில் உளவியல்சிக்கல்களுக்கு மருந்துகள் இல்லை காய்கறிபோல ஆக்கித் தூங்க வைப்பது தவிர. ஒரு கட்டத்தில் மாத்திரைமூலம் இரவு பகலாகத் தூங்கிக்கொன்டிருக்கச் செய்யப்பட்டார்.
என் வாழ்க்கையில் நான் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களில் சுப்ரபாரதிமணியன் அற்புதமான மனிதர். அவரே உருவாக்கிக்கொண்ட ஒருவகை ஒட்டாத தன்மை அவரை அவர் வாழ்க்கையின் மிகப்பெரிய துயரங்கள், அவஸ்தைகளில் இருந்து காத்தது. என்னிடம் அதிகபட்சம் இரண்டு தடவைகளுக்கு மேல் அவர் தன் பிரச்சினைகளைப்பற்றிப் பேசியதில்லை. மிகவும் உள்ளடங்கிய, எதையுமே காட்டிக்கொள்ளாத மனிதர் அவர்.
ஆச்சரியம் என்னவென்றால் சுப்ரபாரதிமணியன் என்னிடம் எப்போதும் கவலையும் கோபமும் வருத்தமும் கொண்டு பேசியவை எல்லாமே சமூகப்பிரச்சினைகளைப்பற்றித்தான். அவற்றில் எப்போதும் ஆழ்ந்த அக்கறையுடன் அவர் ஈடுபட்டுவந்தார். இலக்கியத்தைவிட அவருக்கு நேரடியாக மக்களுக்கு உதவும் சமூகசேவையில்தான் ஆர்வம் இருந்தது. செகந்திராபாதில் இருந்தபோது தோல்நிறமி பிரச்சினையால் வரும் நிறஇழப்பு நோய்க்கான யுனானி ஆய்வுமையத்துடன் தொடர்புகொண்டு சேவையாற்றினார். தமிழகத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்குத் தங்குமிடமும் நிதியுதவிகளும் ஏற்பாடு செய்து கொடுப்பார். அதைத்தவிர செகந்திராபாதில் இலக்கிய அறிமுக நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து ஏற்பாடுசெய்துவந்தார்.

ஒருமுறை சுப்ரபாரதிமணியன் பற்றி சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். அப்போது சுப்ரபாரதிமணியன் திருப்பத்தூரில் இருந்து மாற்றலாகி சொந்த ஊரான திருப்பூர் வந்திருந்தார். அங்கே நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிராகவும் சிறார் உழைப்புக்கு எதிராகவும் தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரது தனிவாழ்க்கையின் அல்லல்கள் பற்றிச் சொல்லி எப்படி இதன் நடுவே அவரால் சேவைகளில் ஈடுபட முடிகிறதுஎன்றேன்.
சுந்தரராமசாமி சேவைமனநிலைக்கு அப்படி நிபந்தனையே கிடையாது. தன் துயர் வழியாகப் பிறர் துயரை உணர்ந்தவர்களும் உண்டு. சொந்தமாக ஒரு துளி துயரையோ வசதிக்குறைவையோ அனுபவிக்காமல் பிறரைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டவர்கள் உண்டுஎன்றார். அதன்பின் காந்திகிராம நிறுவனர் சௌந்தரம் ராமச்சந்திரனைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். சௌந்தரம் டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சுந்தர ராமசாமியின் சொற்களில் வெண்ணையில் வளர்ந்தவர்ஆனால் மிக இளம்வயதில் காந்தியால் ஈர்க்கப்பட்டு சேவையுலகுக்குச் சென்றார். நம்ம அறையோட வாசலை நாம் எந்த அளவுக்குத் தெறக்கறோம்கிறதைப் பொறுத்தது அதுஎன்றார். என்னுடைய படிமத்தை அவர் எடுத்துக்கொண்டார் என்று தோன்றியது.
சுகந்தி ஒருமுறை அதிகமாக மாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயன்றார்.வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் மீட்டோம். மனச்சிக்கல் சற்றே அகலும் இடைவேளையில் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளவில்லை என்ற கடுமையான குற்றவுணர்வு அவருக்கு ஏற்படும். உளநோயை அளித்த சக்தி அந்த வதை போதவில்லை என்று நினைத்துக்கொண்டு வன்மத்துடன் உளநோயை கொஞ்சம் விலக்கிக் காட்டுகிறதுபோல என நினைத்தேன். உளநோய் தனக்கிருப்பதை அது விலகும் கணங்களிலேயே உணர முடியும். அப்போதுதான் அந்நோயின் வலி பேருருவம் கொள்கிறது.
நான் திருப்பத்தூரை விட்டு வந்தபின்னர் சுகந்தியைச் சந்திக்கவில்லை. திருப்பூருக்கு சுப்ரபாரதிமணியன் வீட்டுக்குச் சென்றபோது இருமுறை சுகந்தியை சந்தித்திருக்கிறேன். மங்கிய புன்னகையுடன் இருந்தார், என்னை நினைவுகூரவில்லை. மனநோய்க்கான சிகிழ்ச்சை என்பது இந்தியாவில் மனதை அழிப்பதுதான்.
சுகந்தி எழுதுவதை கவனித்திருக்கிறேன். தன் வீட்டுப்படியில் அமர்ந்துகொண்டு பேனாவை செங்குத்தாக எழுத்தாணிபோல பற்றியபடி முகத்தில் அதி உக்கிரமான பாவனையுடன் வேகமாக எழுதித்தள்ளுவார். முற்றுப்புள்ளிகளை ஓங்கிக் குத்திவைப்பார். பலசமயம் காகிதங்கள் கிழியும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவார். நான் திருப்பத்தூரில் இருப்பது வரை அவர் எழுதி வாசிக்கக் கண்டவை பெரும்பாலும் வெறும் வரிகள். அவற்றைக்கொண்டு அவரது உளச்சிக்கலைக்கூட ஊகிக்க முடியும் என்று தோன்றவில்லை.
ஆனால் சட்டென்று ஒரு கவிதை அவற்றில் தோன்றிவிடும் என்றார் சுப்ரபாரதிமணியன். அவ்வாறு தோன்றிய கவிதைகளையே அவர் நூல்வடிவமாக ஆக்கியிருக்கிறார் சுகந்தியின் கவிதைகளில் உணர்வுகள் மற்றும் சில அழகிய மொழிவெளிப்பாடுகள் அவருடையவை என்றால் கவிதைவடிவம் வரியமைப்பு எல்லாமே சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் உள்ள அசலான அகவெளிப்பாட்டை சுப்ரபாரதிமணியனின் உண்மையான வாசகமனம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான் அவை பிரசுரமாயின.
அக்கவிதைகளில் பலவற்றில் வீட்டை, வீட்டின் அறைகளைத் தன்னை அழுத்திக்கொல்லும் எதிரியாகவே சுகந்தி சித்தரித்திருந்தார். அவை அச்சானபோது கற்பனை இல்லாத நம் வாசகச்சூழல் சுப்ரபாரதிமணியனையே ஒரு பெருங்கொடுமைககாரராகச் சித்தரித்துக்கொண்டது. சுகந்தியின் மனச்சிக்கலுக்குக் காரணம் அவரே என்றுகூட நம்மவர்கள் வாசித்திருக்கிறார்கள்.
அதைப்பற்றி நான் சுப்ரபாரதிமணியனிடம் பேசியிருக்கிறேன். இருக்கட்டும், இப்ப என்ன. அந்த வரிகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கு. அதுவும் ஒரு குரல்தானே. நம்மை யாருக்குத் தெரியும்?” என்றார் சுப்ரபாரதிமணியன் அவருக்கே உரிய கம்மலான குரலில். மனச்சிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது தனியனுபவம் அல்ல பிறரது அனுபவங்களின் தொகுப்புதான் என்றும் அவருக்கு எண்ணம் இருந்தது.
எப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது பார்க்கும்போது அர்த்தமுள்ள ஒன்றை சுப்ரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. அந்தத் துயரம் நிறைந்த வாழ்க்கைக்கு இப்படியாவது ஒரு பொருள் உருவாகியிருக்கிறது. சுகந்தியின் கவிதைகள் தமிழினி வெளியீடாக இப்போது கிடைக்கின்றன. [மீண்டெழுதலின் ரகசியம்] முதல் தொகுதிக்குப் பின்னர் மேலும் பல கவிதைகளை அவர் எழுதினார். ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த கோர்வையான வெளிப்பாடு பின்னர் சாத்தியமாகவில்லை.
சுகந்தியின் பிற்காலக் கவிதைகளில் நல்ல கவிதைக்கான அம்சங்கள் ஏதுமில்லை. படிமங்கள் இல்லை, சொல்லழகு அனேகமாக இல்லை. நேரடியான முறையிடல்கள். ஆனால் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாகப் பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார்.
2008 ல் சுகந்தியின் மறைவை சுப்ரபாரதிமணியன் ஒரு அஞ்சலட்டையில் எனக்குத் தெரிவித்திருந்தார். அந்த அட்டை விதவிதமான நினைவுகளை எழுப்பியது. பல வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருந்தன. சுகந்தி கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தார். சிலகாலம் மனநோய்விடுதியில் இருந்துவிட்டு மீண்டு வந்திருந்தார். அவரை நானேகூட நினைத்துப்பார்த்ததும் இல்லை. அந்த மரணம் ஒரு பெரிய விடுதலை என நினைத்துக்கொண்டேன். உடல் என்ற, அடையாளம் என்ற, வாழ்க்கை என்ற அறையைத் திறந்து அவர் வெளியேறிவிட்டார்.
சுகந்திக்கு நான் ஓர் அஞ்சலிக்குறிப்பு எழுதினேன். அதில் சுகந்தியின் பிற்காலக் கவிதைகளில் எனக்குப்பிடித்த ஒன்றைக் கைபோனபோக்கில் எடுத்து பிரசுரித்திருந்தேன். சிலவருடங்களுக்குப்பின் அறைஎன்ற தலைப்பிலான அந்தக் கவிதையை எடுத்துப்பார்க்கையில் என் மனம் அதிர்ந்தது. அதில் சுகந்தி தன் அறையைப் பாதுகாப்பான ஓர் இடமாக, ஒளிந்துகொள்ளும் இடமாக சொல்லியிருந்தார். மேலும் சிலநாள் கழித்துப் படித்துப்பார்க்கையில் இன்னொரு அதிர்ச்சி. அறையை சுகந்தி தன்னை அலட்சியப்படுத்தக்கூடிய, அவமதிக்கக்கூடிய, மூச்சுத்திணற செய்யக்கூடிய ஒன்றாகவும் சொல்லியிருந்தார்.
சுகந்தியின் உலகின் மொத்தச்சிக்கலையும் அக்கவிதை சொல்லிக்கொண்டிருந்தது.

அறை
அறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது.
கோடைகாலம் குளிர்காலம்
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது.
எனக்குத் தேவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன்.
இந்த அறை
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது.
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது.
இந்த அறையில் நான்
வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பிவழிவதாகவும்
எனக்கு தகவல் வருகிறது.
இது என்ன விசித்திரம்!
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன?
இனி எனக்கு நிம்மதியில்லை.
நான் நானாக இருக்கவே முடியாது.
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன.
அறைக்குள் என் ஆடைகளை மீறி
கண்கள் என்னை ஒற்றறிகின்றன.
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.

(ஜெயமோகன் இணையதளம்,மீடியா வாய்ஸ் இதழ் )

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013


=====================================================
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும்
     தமயந்தியின்   குரல்:
                *  சுப்ரபாரதிமணியன்
======================================================
              பெரும்பாலும் வெகுஜனஇதழ்களிலும், கொஞ்சம் இலக்கிய இதழ்களிலும் படித்த தமயந்தியின் சிறுகதைகள் அவரின் பிறப்பு, ஜாதி சார்ந்த அடையாளங்களைக் காட்டியதில்லை. அவரின் நாவல்நிழலிரவுபடிக்க ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவ
சமூகம் சார்ந்த அவரின் அனுபவங்கள் அவரின் பெயர், கிறிஸ்துவ சமூகம் பற்றிய எண்ணங்கள் அவரின் இன்னொரு முகமாய் வெளிப்படுத்தியது.
     தமிழ்ச்சூழலில் கிறிஸ்துவ இலக்கியம் பற்றிய யோசிப்பில் எழுத்தாளர் பட்டியல் விடுபட்டுப்போகிறது. சிஎல்எஸ், பூக்கூடை எண்பதுகளில் நடத்திய இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் ஞாபகம் வந்த்து.நண்பர்வட்டம் பத்திரிக்கை சரோஜினி பாக்கியமுத்து மறைந்து போனார். அரும்பு  “ சிறுவர் இதழாகவே நின்று விட்டது. அதன் இலக்கிய தரம் அவ்வப்போது அதன் ஆசிரியராய் அமர்த்தப்படும் பாதிரியார்களின் இலக்கிய அக்கறை சார்ந்தே வெளிப்பட்டிருக்கிறது,
“ கோணல்கள்தொகுப்பின் பாதிப்பில் நாங்கள் வெளியிட்ட “ நாலு பேரும் பதினைந்து கதைகளும்தொகுப்பில் இடம்பெற்ற கார்த்திகா ராஜ்குமார் அப்போதைய ஸ்டார் எழுத்தாளர். இப்போது  கிறிஸ்துவ மத போதக விசயங்களை சின்னத்திரையில் பரப்புகிறவராகி விட்டார், காஞ்சிபுரம் எக்ஸ்பர்ட் சச்சிதானந்தமும் எழுதுவதில்லை. தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்களின் ஜாதீய சிக்கல்களை பாமா, ராஜ்கவுதமன், ஆர். எஸ்.ஜேக்கப் கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை தமிழில் குறிப்பிட்த்தக்கதாய் சொல்லப்பட்டது போல் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை முன் வைக்கப்படவில்லை.நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ இதழ்கள். சிலது விடுதலை இறையியலைப்  பேசுகின்றன. அவற்றில் இலக்கியப் பதிவுகள் ரொம்பக்கம்மி.
     தமயந்தியின்  “ நிழலிரவு “ நாவல் கூட        சிறகுகள் என்ற கிறிஸ்துவ இதழில் வெளிவந்ததுதான்.அதன் வடிவம் பின்நவீனத்துவம் சார்ந்தது.பெருங்கதையாடலின் வடிவத்தை, மரபான நாவலின் நேர்கோட்டு வடிவத்தை உடைத்திருக்கிறார். பாட்டியின் கடைசி தின்ங்கள் சொல்லப்படுகின்றன். பேத்தியின் கடிதங்கள் . ஆசிரியர் சமூகம் பற்றிய ஒரு சிறுகதை . அதன் மீதான விமர்சனகுரல்கள், அபிப்பிராயங்கள், மார்ஸ் ஏசு சந்திப்பு விவாதங்கள் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
     இந்நாவலின் காலம் இந்திய அரசியலின் இருண்ட காலமான நெருக்கடி நிலமைப் பிரகடனகாலம்.  மிசா கைதுகள், தலைவர்களின் தள்ளாட்டங்கள் குறிப்புகளாய் அங்கங்கே விரிகின்றன.கிறிஸ்துவ மனிதர்கள் அவர்களுள் நாடார்கள் ஆதிக்கம், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், ஆங்கிலேயர்களின் வாரிசானவர்கள், இவர்களின் முரண்பாடுகளாய் விரிகிறது.
    பெண்களின் பார்வையில் ஆண்கள் என்ற வரிசையில் மோசமான நிறைய  ஆண்கள் தென்படுகிறார்கள் ஆரோக்கியதாஸ் போன்றவர்கள். புரோட்டா மாஸ்டர் செல்லப்பாவின் கனவுகள் வித்தியாசமானவை.பலியாகிற நிறைய பெண்களும் காட்டப்படுகிறார்கள். மாமனாரோடு வாழ்ந்து தற்கொலை செய்து கொள்கிற அகஸ்டஸ் டீச்சர், குழந்தைப்பேறு இல்லாத வசவால் வாழ்கிற இளவரசி, தீக்குளித்து இறந்து போகிற  பாதிரியாரின் மனைவி, பொட்டு வைத்ததால் விமர்சிக்கப்படும் பெண், மாதவிலக்குக் காலத்தில் முக்காடிடாமல் பாதிரியிடம் போகும் பெண்ணின் அவஸ்தை, கதையெழுகிறதால் கண்டனத்திற்கு ஆளாகும் பெண், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் நட்ததும் சீட்டில் சேராத ஆசிரியைகள் மீதான வசவுகள்....
    பெரும் நிறுவனங்களாகி விட்ட கிறிஸ்துவ மெசினரிகளின் ஊழல், தேவாலயங்களின் பொய்க்கணக்குகள், கோவில் தேர்தல் தில்லுமுல்லுகள், ஓரினச்சேர்க்கைக்கு மாணவர்களை உட்படுத்தும் பாதிரியார்கள்,மெசினரி பள்ளிகளில் வேலை வாங்க த்லைவிரித்தாடும் லஞ்சம்,பள்ளிகளில் பழிவாங்கும் நடவடிக்கைகளாய் வேலை மாற்றங்கள், அதை ரத்து செய்ய சாக்லெட், இனிப்பு சகிதமாய் அலையும் ஆசிரியைகள்  என  சிக்கலான நுணுக்கமாய் காட்ட நிறைய கதாபாத்திரங்கள் இதில் உண்டு.
     மதம் மாறிய கிறிஸ்தவர்கள், பிற்பட்ட ஜாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களை பாதிரிகள் நடத்தும் தீண்டாமைக் கொடுமை பல இடங்களில் விரிகிறது.    பிணம் புதைக்கிற இடத்தில்  கூட பாகுபாடு. பொங்கல் மாடுகள் மந்திரிரிப்பில்  கூட வேற்றுமை என் நீள்கிறது. இதன் முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிடும் தேவாலயங்களில் மதம் மாறியவர்கள், ஒரிஜனல் கிருஸ்தவர்கள்  உட்கார்ந்து ஜெபம் செய்யும் இடங்களில் தடுப்புச் சுவர், நீதிமன்றத்தலையீடுகளுக்குப்பின் அவை பெஞ்சால் தடுக்கப்படுதலை இங்கும் காண்கிறோம்.           பா. விசாலத்தித்ன்  உண்மை ஒர்ளிர்கவென்று பாடவோ “ இவற்றைக்  நாவல்களிலும் காணலாம்.
    இந்நாவல் தேவாலய சபை அரசியல், ஆசிரியர் சமூக அரசியல், மதம்மாறி கிறிஸ்தவர்களை ஒதுக்கும் அரசியல் ஆகியவற்றின் மீதான் அதிகாரம் பற்றிய  விமர்சனமாக விரிந்துள்ளது. கர்த்தரை கோவிலுக்குள் விற்பது பற்றிய விமர்சனம்  வலுவாகவே வைக்கப்படுகிறது.காரல்மார்ஸ், ஏசுவின் சந்திப்புகளில் தொழிற்சங்க அரசியல் அதிகாரம், பொதுவுடமைக்கட்சிகளின் மீதான விமர்சனம் மேலிடுகிறது. கிறிஸ்துவ சபை அதிகாரத்தை கேள்விக்குறியாக்கும் தமயந்தி  தொடர்ந்து காவல்துறை சார்ந்த அதிகாரத்தை கேள்விக்குறியாக்குவதை சமீபத்தில் வெளிவந்த     “ கோட்டை காவல் நிலையம்போன்ற நிறையக் கதைகளிலும், அவர் பங்கு பெறும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ரவுத்தரம் பழகு போன்ற நிகழ்ச்சிகளிலும். புதிய தலைமுறை பத்திரிக்கையில் அவர் சமீபத்தில் எழுதி முடித்த “ இந்த நதி நனைவதற்கல்ல “ தொடரிலும் காணலாம். காணலாம்.கல்வித்துறையின் ஊழல், அதிகாரத்துவம், பாலியல் சுரண்டல் குறித்து தான் எழுதிய ஒரு கதைக்காக தன் விரல் முறிக்கப்பட்டதையும், அது தந்த உளவியல் பாதிப்பிலிருந்து விடுபட நீண்ட காலம் ஆனதையும் ஒரு உரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.விவேகானந்தர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவத்திற்கு திரும்ப வேண்டும் என்றார், தமயந்தி கிறிஸ்தவர்கள் மனித நேயத்திற்குத் திரும்ப வேண்டும் என்கிறார்.இவரின் நடை வெகு நுணுக்கமான ரசனைப்பதிவாகவும், தி.ஜானகிராமன், மாலன், பிரபஞ்சன் பாதிப்பிலான கலவையாகவும் சுவாரஸ்யமான வாசிப்பிற்குள்படுத்துவதாகும்.இந்த நாவல் பத்தாண்டுகளுக்கு முன் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்தது மறு பிரசுரம் காணவில்லை. பிரபஞ்சன் இதன் முன்னுரையில் குறிப்பிடப்படுவது போல் இது 1000 பக்கங்களில் விரிவாக எழுதப்பட்டிருக்க வேணடிய களமாகும்.
                  ( கோவையில் இலக்கியச் சந்திப்பு அமைப்பு நடத்திய தமயந்தியின் படைப்புலகம் கருத்தரங்கில் பேசியதன் கட்டுரை வடிவம். அக்கருத்தரங்கில் கோவை ஞானி, நாஞ்சில்நாடன், நாவலாசிரியர் மா,நடராசன், அக்னிபுத்திரன் , பூஆ ரவிந்திரன், பொன்சந்திரன், வேனில், இளஞ்சேரல், தியாகு,பொன் இளவேனில்,இயற்கை சிவம், தேவி  உட்பட பலர் கலந்து கொண்டனர். தமயந்தியின் மூன்று சிறுகதைத்தொகுப்புகள் பற்றி சுமதி ராம், சக்திசெல்வி, நித்திலன் ஆகியோர் உரையாற்றினர்)
                 =   சுப்ரபாரதிமணியன்






புதன், 16 ஜனவரி, 2013



சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்:
மாலு

     நான் இரு முறை மலேசியா சென்றிருக்கிறேன். அந்த நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்திருக்கிறேன்.மலேசியாவைப் பற்றி நான் ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இந்த நாவல் அமைந்துள்ளது என்பது இந்நாவலின் வெற்றி..மலேசிய தமிழர்கள் பற்றிய கூரிய பார்வையாக இது பரிமாணம் பெற்றுள்ளது. தமிழ்த் திரைப்படத்தை ஒரு பண்பாடாக ஏற்றுக் கொண்ட சமூகம் அவர்களில் ஒரு பகுதியினர். அதுவும் பாமரத்தனமான தமிழ் திரைப்படத்தை.
    அப்பாசாமி என்ற பெரியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அலைவது,  தன் மகன் திருச்செல்வத்திற்கு மலேசியாவில் வழங்கப்பட்டிருக்கும் மரணதண்டனையை விலக்கக் கோரி,  நாவல் முழுக்க ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இன்னொரு பகுதி சுற்றுலா விசாவில் அங்கு சென்று பணம் சம்பாதிக்கிற ஆசையில் தங்கி அந்நாட்டு காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பித்து ரப்பர் தோட்டமொன்றில் அடைக்கலமாகிற விக்னேஷ் என்ற இளைஞனின் மனப்போராட்டங்களும் ஆகும். திருச்செல்வமும், விக்னேஷும் நண்பர்கள் .மலேசியாவிற்கு செல்ல ஆசைப்படும் குணசேகரன் என்ற இளைஞன் மலேசியா பற்றிய நூல்களைப் படிப்பதில் அவனுக்குப் பிடித்ததாய் குறிப்பிடப்படும் பகுதிகள் இன்னொரு பகுதியாகும்.மலேசிய தமிழர்களின் வாழ்க்கை, மலேசிய நாட்டு வரலாறு,தமிழர்களின் மனக்குமறல்கள் என்பதன் இலக்கியச் சாட்சியாக அப்பகுதிகள் அமைந்துள்ளன..ரப்பர் தோட்ட வீட்டிற்குள்  அடைபட்ட விக்னேஷின் இயங்காதத் தன்மை அவனை மன நோயாளியாக்கும் தனமையில் அலைக்கழிக்கிறது.கனவும், எண்ணங்களும் சிதிலமாக்குகிறது.சரியான பதிவேடுகள் இல்லாமல் சிறையில் அடைபட்ட தமிழர்களை அந்நாட்டுச் சிறையில் பார்த்திருக்கிறேன். அடையாளமற்ற மனிதர்கள் அவர்கள். அந்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் உழைத்திருந்தாலும் தமிழர்கள் அடையாளம் மறுக்கப்படுகிறவர்களாக இருப்பதை இந்நாவல் காட்டுகிறது.
இதில் அப்பாசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு தரவே முடிவதில்லை. மனு தர முடிவது சிரமமானதல்ல. பெற்றபின் காரியங்கள் நடக்குமா என்பது சந்தேகமான வேறு விசயம்.இலக்கியப்பிரதிகள் மூலம் குணசேகரன் கண்டடைவது எதிர்மறையான விசயங்களாய் இங்கு பதிவாகியிருக்கும் போது அவன் அங்கு செல்ல ஆசைப்படுவதாய் முடிவது குறையாகச் சொல்லலாம். மலேசிய தமிழர்களின் வாழ்க்கை இலக்கியப் பிரதிகளில் தமிழகத்தில் காணக் கிடைப்பது அபூர்வமாகி விட்ட சூழலில் இந்நாவல்  கூரிய  சமகாலப் பதிவாகும்.
-  இயக்குனர்  ஞான ராஜசேகரன்
  ( ரூ 80 , உயிர்மை பதிப்பகம், சென்னை )

(  சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல் “ மாலு “ வெளியீட்டு விழா சென்னை புக் பாயிண்ட்டில்   நடைபெற்றது. பழ. நெடுமாறன் வெளியிட பாரதி, பெரியார் பட இயக்குனர்    ஞானராஜசேகரன் பெற்ருக் கொண்டு உரையாற்றினார். சிவகாமி, ஜெயமோகன், தமிழ்மகன், இயக்குனர்கள் லிங்குசாமி, தங்கர் பச்சான் உட்பட் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர் . சிவகாமி, தமிழ்மகனின் நாவல்களும் வெளியிடப்பட்டன. )

வெள்ளி, 4 ஜனவரி, 2013


வியாழன், 27 டிசம்பர், 2012


இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி
“ யுவபுரஸ்கார் “ பரிசு பெற்றுள்ள மலர்வதியின்  தூப்புக்காரி “ நாவல்:
தலித்திய வாழ்க்கையை பின்தொடரும் ரணம்
                   - சுப்ரபாரதிமணியன்

                     தூப்புக்காரியின் தோற்றமும் செயல்களும் வாழ்வும் ஒரு விளிம்பு நிலை பெண்ணின் அடையாள அவலம். மருத்துவமனையில் சுத்தப்படுத்தும் வேலை செய்யும் ஒரு தாயின் வாழ்வை மகளும்சேர்ந்து ஈர்ப்புடன் ஆத்மாவின் வலியோடு பீ, குளியலறை , எச்சிலை, ரத்தவாடையோடு நாகர்கோவில் பகுதி தலித் மக்கள் வாழ்வோடு ஓரளவு நேர்த்தியாகவே இதில் சொல்லப்பட்டிருக்கிறது.. தாய், மகள், மகளின் மகள் என்று தலைமுறை தொடர்கிறது. இது சாபமாய் படிகிறது.இந்திய சமூகத்தின் பீடை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட அநாவிசிய பாரம்.இந்த பாரத்தை  உணரும் வண்ணம் எழுதியிருக்கிறார் மலர்வதி. பணம் தொலைவதில் படபடப்பாகிற தாய் தன்னைத் தொலைத்தலிலும் வாழ்க்கையை கடந்து போகிறார்.  திருமண விருந்துகளில் எச்சிலெடுப்பவள் எச்சிலாகிப்போகிறாள். எச்சிலை இலைதான் இந்த நாவல் எழுப்பும் படிமம். மகள் பூவரசியின் உடல் தடுமாற்றம் பெண்ணின் உணர்வால் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. துப்புரவு வேலைநிமித்தமான அசுசையைச் சொல்லத் தயங்காதவர் பூவரசியின் உடல் தடுமாற்றத்தையும் துல்லியமாகச் சொல்கிறார். அது கொண்டு போகும் துரோகம்தான் ஆணின் அதிகாரமாக விளங்குகிறது. சகமனிதர்களின் மலம், அழுக்கு  மட்டுமின்றி நாய் போன்ற பிராணிகளும் கூட மலத்துள் தள்ளுகின்றன. வேறு சாதிப்பையனுடன் கொள்ளும் உறவால் உண்டாகும் குழந்தையைக் கலைக்காமல் அவள் எதிர்கொள்ளும் முடிவில் பழமைவாதமே மிஞ்சுகிறது. பீயை மற்றவர்களின் மூஞ்சியில் எறிகிற மாதிரி கருவைக் கலைத்து விட்டு அவள் நடமாடலாம். அவளை ஏஏற்றுக்கொள்ளும்  மாரியின் தியாகம் உன்னதமானதுதான். ஆனால் அதை அவன் பாரமாக எப்போதாவது உணர ஆரம்பித்தால் அது சாபமே. காத்திரமான பாத்திரங்கள் புழங்கும் மொழி பல இடங்களில் நுணுக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.. சாதாரணக் கதை. பூவரசி சார்ந்த தலித் சமூக விவரிப்பும், பிற ஆதிக்கஜாதியினரின் போக்கும்., காலகட்டத்தின் குறிப்பான பின்ணணியும் இல்லாமல் ஒற்றைப்பரிமாணமாய் தட்டையாய் நீள்கிறது. நாலு பேர் ஒரு சமூகம். நானூறு பேரின் வாழ்க்கையல்லவா நாவல். அதை பூவரசியோடு சிலருடன் அடக்கமுயல்வது பலவீனமே.
 ( ரூ 75/ வெளியிடு “ அனலகம் “, தண்ணீர் பந்தல், பாலூர், கருங்கல், கன்யாகுமரி 628157  )


செவ்வாய், 18 டிசம்பர், 2012



பாராளுமன்றத்தில் வைகோ "

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பூரில் ..


உரை:  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
    

     தோழர் பொன்னையன் தமிழ்தேசிய இனத்தின் போராளி என்று வை. கோ அவர்களைக் குறிப்பிட்டார். நான் அரசியல்வாதிகள் மத்தியில் இலக்கிய இதயம் கொண்டவர் என்கிறேன். எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களையும், புரட்சிகர நடவடிக்கைகளிலும் முன்னின்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். அரசியல்வாதிகள் எழுத்தாளர்களின் நண்பர்களாக, வாசகர்களாக இருப்பது பலம் தருகிறது. லத்தின் அமெரிக்காவின்  நோபல்பரிசு பெற்ற  காப்ரியல் மார்க்கூஸ் அவர்களின் படைப்புகளின் வாசகன் பிடரல் காஸ்ரோ. தமிழகத்தில் பொதுவுடமை வாதிகளில் ஜீவா, பாலதண்டாயுதம் முதல் கொண்டு நல்லகண்ணு, சி.மகேந்திரன் வரை நல்ல இணக்கமானவர்களாக எழுத்தாளர்களுடன் இருக்கிறார்கள். வை.கோ. இலக்கிய இதயம் கொண்டவராக ஆறுதல் தருகிறார்.அவர் இயக்கம் சார்ந்த அருணகிரி, செந்திலதிபன், உடுமலை ரவி முதற்கொண்டு பொன்னியின் செல்வன் முதல் புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், தோப்பில் மீரான் உட்பட பல படைப்பாளிகள் பற்றி மணிக்கணக்கில் பேசும் இயல்புடையவர். அவர் தன்க்குப் பிடித்த பல நூல்களைப் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.
   சமீபத்தில் என்க்குப்பிடித்த இரு நூலகளைப் பற்றி சொல்கிறேன். அமரர்   பொன்னியின் செல்வன் பற்றிய வை.கோவின் உரையில் சோழர்களின் பெருமை பற்றி  அற்புதமாகச் சொல்வார். சோழன் கடாரம் கொண்டவன். அந்த கடாரம் மலேசியாவின் கெடா மாநிலப்பகுதி. மலேசியாவில் சயாம் பர்மா  இரயில் பாதை போடும் பணியில் நாற்பதுகளில் 2 லட்சம் தமிழர்கள் பலியாக்கப்பட்டார்கள். அதை பற்றி சொல்லும் நூல் சயாம் பர்மா இரயில் பாதை. அதேபோல் கொங்கு நாட்டில் இரயில் பாதைகள் பற்றின போராட்டம் ஒன்றை வை.கோ. கடந்த 5 ஆண்டுகளாய்                         
                                                                      2

நடத்தியிருக்கிறார். எத்தனைப் போராட்டங்கள். எத்தனை கூட்டங்கள்.பொள்ளாச்சி கேரளா கோட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது. உடுமலை சேலம் கோட்டத்துடன் இருப்பது காரணமாய் வஞ்சிக்கப்பட்டிருப்பது போராட்டத்தின் மையம்.இன்னும் உடுமலை பழனி ரயில் பாதை பயன்பாட்டிற்கு வரவைல்லை.எத்தனை பேரணிகள். இவற்றை உடுமலை ரவி ஒரு நூலாக ஆவணப்படுத்தியிருக்கிறார். இவை இரண்டு சமீபத்தில் என்னை பாதித்தவை. உடுமலை திண்டுக்கல் இரயில் பாதை பிடுங்கியெறியப்பட்டு புது பாதை முழுமையடையவில்லை.சாதாரண மக்களுக்கான குறைந்த கட்டண ரயில் பயணம், பாதுகாப்பான பயணம் பற்றியவை அடிப்படிடை உரிமை சார்ந்தது அவரின் போராட்டம்.இது போல் தொடர்ந்து அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுபவர் வை.கோ.இது போல் அணுசக்கிக்கெதிர், நதி நீர் பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு  என்று அடிப்படை உரிமைகளுக்காகத்  தொடர்ந்து போராடுகிறார்.
அவரின் தூத்துக்குடி ஸ்டெரிலைட் சுற்றுச்சூழல் போராட்டம் எனக்கு கார்ஸனின் “ மவுன வசந்தம் “ நூலை ஞாபகப்ப்டுத்துகிறது. கார்ஸனின் அந்த நூல் 1962 ல் வெளிவந்தது.நாற்பதுகளில் உலகின் பல பாகங்களில் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக  இருந்த மலேரியா காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்க கண்டுபிடிக்கப்பட்ட டி.டி.டி. மருந்துக் கொல்லி சிறு நுண்ணுயிர்கள், வண்ணத்துப்பூச்சிகள்,மீன்களை கொல்லும் இயல்புடையது. அமெரிக்காவின் தேசிய சின்னத்தில் இடம்பெற்ற கழுகையும் கொன்றது. மனிதனுக்கும் ஆபத்தானது. இதை கார்ஸன் தந்து நூலில் விவரித்திருந்தார். அதன் பின் எழுத்தாளர்கள், சுற்றுசுழலாளர்கள்  இணைந்து பல் போராட்டங்களை நடத்தினர். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி அதைப்பற்றி ஆராய ஒரு கமிசனை நியமித்தார். அது மனிதர்கள் மீதான ஆபத்தை ஒத்துக் கொண்டு  டி.டி.டி பயன்பாட்டை மெல்ல குறைத்துக் கொண்டு பின் முற்றிலும் தடை செய்யப்பட்ட்து. 1964ல் கார்சன் மரணமடைந்தார். 2001ல் கார்சனின் சுற்றுச்சூழல் பணிக்காக அமெரிக்காவின் உயரிய விருது தரப்பட்டது.அதேபோல் வை.கோ.வின் சுற்றுச்சூழல் போராட்டங்களும், சுத்தமான தண்ணீர், நதி நீர் பாதுகாப்பு  குறித்த போராட்டங்களும் பெரிய அங்கீகாரத்தைப் பெறும் .
     தாகூரின் 150 வது பிறந்த தின கொண்டாட்ட ஆண்டு இது .தாகூரின்  “ எங்கே பயமில்லாமல் இருக்கிறதோ..என்ற கவிதையின் அடையாளமாய் வை.கோ.                                                                               பாராளுமன்றத்தில் பேசிய பல பேச்சுகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா இந்து நாடென்றால் சிதையுறட்டும், இந்திராவின் பேச்சுசுகளை இந்த நூற்றாண்டின் மகத்தான பொய்கள், இந்தியாவின்  மைலாய் இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறை, கல்வி காவி மயமாக்க் கூடாது, இந்தியாவின் மனிதாபிமானம் அரைக் கொடி கம்பத்தில் பறக்கிறது, இலங்கையில்  இந்திய ராணுவத்தின் அத்து மீறல்கள் என்று பயமில்லாத மனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
  இது போன்ற புத்தகங்கள் பல தலைமுறைகளுக்கு பேசப்படும் இயல்பு கொண்டதாகும். நுணுக்கமான நம்பகமான தகவல்கள், பாராளுமன்றத்தில் வை.கோ எழுப்பும் தார்மீகக் கேள்விகள், அறம் சார்ந்த, மனித உரிமை சார்ந்த நியாயங்கள் ஆகியவை நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.சொல்லும் பாணியில் இருக்கிற இலக்கியத் தரம் கவனிக்கத் தக்கது. உரையின் ஊடாக ஸ்பார்டகஸ், கசபிளாங்கா, உலக இலக்கிய பாத்திரங்கள், இந்திய புராண கதைகளின் உவமைகள் அடுத்த நிலைக்கு புத்தகத்தை, நல்ல வாசிப்பிற்குக் கொண்டு சென்று பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் கையில் வைத்திருக்கும் கையேடாக்குகிறது.
  இதில் ஓரிடத்தில் எழுத்தாளர் குஷ்வந்த்சிங்   சிறுபான்மை சீக்கியர் மீதான வன்முறைக்கு எதிரான வை.கோ.வின் குரலை பாராட்டி தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார். குல்தீப்நய்யார் 20 ஆண்டுகளுக்குப் பின் சென்ற மாத ஆனந்தவிகடன் பேட்டியில்  தமிழர்களின் நம்பிக்கைக்கான ஒரே அரசியல் தலைவர்  வை. கோ.என்பதை உறுதிப்படுத்தியிருப்பது அவரின் தொடர்ந்த செயல்பாட்டை கவுரவத்துள்ளாக்குகிறது.
     அவரின் பேச்சுசுகள் காற்றில் கலந்த பேரோசையாக இருந்தது  இன்று புத்தகப் பதிவு பெற்றுள்ளது. ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் அந்த மொழிக்குள்ளேயே ஜீவிப்பதில்லை. எந்த மொழியையும் கடந்து செல்லும் இந்த நூலும் குறைந்த பட்சம் இந்திய மொழிகளில்  இளம் தலை முறை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கையேடாக மையும். அவை எழுப்பும் மனித உரிமை சார்ந்த  கேள்விகள் இந்திய தேசியம்  என்பது மாயை என்பதை நிலைநிறுத்தும்.
     பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவரின் குரல் திட்டமிட்டு பாராளுமன்றத்தில் ஒலிக்காமல் முடக்கப்பட்டிருக்கிறது ஆனால் இந்தப் புத்தக வீச்சு இன்னும் பல மடங்கு வீரியமாய் ஒலிக்கும்.அவரின் பேச்சின் வலிமை பாராளுமன்றத் தூண்களையும் அசைய வைப்பது போல் ஒவ்வொரு கலாச்சார தூணையும்
    
                                                                             4                                                                                        
     அதிரவைக்கும் இயல்பு கொண்டது. என் பேச்சின் வலிமை தமிழர்களுக்கு , தமிழ்நாட்டிற்கு, தமிழ்  மொழிக்குப் பயன் படட்டும் என்கிறவர் அவர்.
அவரின் நீண்ட பயணங்களில்  இனியும்   இது ஒலிக்கட்டும்.
  திருப்பூரில் இவ்வாண்டு தீபாவளியின் போது 2 தினங்களில்  5 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது,தமிழ் சமூகமே மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது.இதிலிருந்து மீட்டெடுப்பது அவசியம். இதுவரை தமிழ் மக்கள்
49, 05,000 பேர் உலக சரித்திரத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள். ஈழப்போராட்டம், சயாம் பர்மா ரயில் பாதை போடும் பணி, சுனாமி, வெள்ளம், காலனிஆதிக்க கொடுமைகள், காணாமல் போனவர்கள் என்று... மதுவால் தமிழன் தற்கொலைக்குள் மூழ்கி காணாமல் போய்க்கொண்டிருக்கிறான். அதிலிருந்து தமிழனை மீட்க டிசம்பர் மாதத்திலான வை.கோ.வின் நீண்டபயணம் ஆயிரம் புதிய பூக்க்களை மலரச்செய்கிறதாக இருக்கும்.. ஒற்றை கலாச்சார பண்பாட்டை, உணவு முறையை, வாழ்க்கை முறையை முன்வைக்கும் உலக ஏகாதிபத்தியமும், கார்ப்பரேட்டுகளும் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்குஎதிரான போக்கை தொடர்ந்து வை. கோ. தன் படையுடன் எதிர் கொள்ளும் ஒரு குரூர சூழல் இன்றைக்கு உருவாக்கப்படிருக்கிறது. அதை வை.கோ தன் பலத்தால் எதிர்கொள்வார். தமிழ் இன மீட்சிக்காக அவர் தொடர்ந்து போராடும் அடையாளமே அவரின் பூரண மது விலக்கு போராட்ட நெடும் பயணம் என எண்ணுகிறேன்

. ( பாராளுமன்றத்தில் வை.கோ.  தொகுப்பு: செந்திலதிபன், விலை ரூ 450, தாயகம், சென்ன்னி )

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602.      /  9486101003.
--------------------------------------------------------------------------------- 



செவ்வாய், 11 டிசம்பர், 2012

சூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்


சூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்
----------------------------------------------------------------------

 சக்தி அருளானந்தம்


            திருப்பூர் என்றதும் என் நினைவிற்கு முதலில் வருவது சுப்ரபாரதிமணியன். திருப்பூர் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரையும் அங்கிருக்கும் படைப்பாளிகளாலேயே நினைவு கூர்கிறேன். இரண்டாவது அவருடைய விரிவான படைப்புலகம். பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழுநாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், நாடகம், பயண அனுபவம், திரைப்படக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என முப்பது நூல்கள்.. பரந்து விரிந்திருக்கிறது அவருடைய படைப்புலகம். மூன்றாவது, படைப்பாளி 'தூய இலக்கியவாதி'யாக அரசியல் சார்பு, வேறு துறை ஈடுபாடு, களப்பணி போன்றவைகள் மீதான ஒவ்வாமை இல்லாமல் சுற்றுப்புறச்சூழல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, தாய்வழிக்கல்வி போன்ற களப்பணி செயல்பாடுகள். நான்காவது அவருடைய சகாக்களான பலர் ஓய்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து இயங்காது ஐந்தாவது.. மூத்த எழுத்தாளர் ஒருவர்.. சிறந்த படைப்பாளியும் கூட அவருடைய நேர்காணல் ஒன்றில், இன்றைக்கு வரும் எழுத்துக்களை நான் படிப்பதேயில்லை. ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை" படிக்காமலேயே அபிப்ராயம் உதிர்க்கையில் சுப்ரபாரதிமணியன் இளைய படைப்பாளிகளின் எழுத்துக்களில் காட்டும் கவனம், அக்கறை.
            'விமோசனம்' சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. பதினாறு சிறுகதைகள்... அவருடைய பதினைந்து தொகுதிகிள்ல 250 கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. திருப்பூர் கலை இலக்கியப் பேரவையைச் சார்ந்த திரு. வி.டி. சுப்ரமணியன் தொகுத்திருக்கிறார். காவ்யா வெளியிட்டிருக்கிறது.
      "சமூக யதார்த்தம் தன் மனித ஆளுமையுடன் சேர்ந்து கலையாக உருவெடுக்கிறது. கலை வெற்றிடத்திலிருந்து பிறக்க முடியாது என்கிற காரணத்தினாலேயே, எந்த சமூகத்திலிருந்து பிறக்கிறதோ அந்த சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக அது இருக்கிறது. எனும் இந்திரனின் கூற்றை உறுதி செய்வது போல இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்திருக்கின்றன.
            பிழைப்பு தேடிப்போகுமிடத்தில் அந்தச் சூழலுடன் பொருந்திப் போகவிடாமல் செய்கிற சிக்கல்கள் அதனால் எதிர் கொள்ள நேர்கிற வன்முறைகள் சொந்த நாட்டிலேயே அகதியாக மாறிப்போன துயரைப் பேசுகிறது 'எதிர்பதியம்' "உயிரைக் கையில் பிடிச்சிட்டு ஒடுறவனுக்கு இது ஒன்றும் பெரிய தூரமல்ல' வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று முழக்கமாய் கோஷமாய் நின்று விட்டதைச் சொல்கிறது. "நா மட்டுமா அகதி முனியப்பனும் அகதி தா" என முடியும் இறுதிவரை பலவகைப்பட்ட கலாச்சாரங்களை, பண்பாடுகளை அழித்து ஒற்றைத் தன்மையை கட்டமைக்க முயல்கையில் கடவுளர்களும் அகதிகளாகி விடுவதை எதிரொலிக்கிறது.
            பாதுகாப்பு தருவதாக சொல்லப்படும் குடும்ப அமைப்பிற்கு பெண் தரும் விலையை 'நாதம்' சிறுகதையில் பார்க்கலாம். பெண்ணின் இயல்பான சின்னஞ்சிறு ஆசைகளுக்குக் கூட அதில் இடமில்லாமல் போய் விடுகிறது. மழையில் நனைவது, ஆலங்கட்டிகளைப் பொறுக்கித்தின்பமும் அவளுக்குப் பிடித்தமானதாயிருக்கலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளும் கணவனும் எனும்போது மழையை ஜன்னல் வழியாக பார்த்து சந்தோசப்படுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். காய்ச்சலில் அவள் அவதிப்படுவதைவிட அதனால் தடைபடும் குடும்பப் பொறுப்புகள், கடமைகள் முன்னுரிமை பெறுகின்றன.
            இந்தக் கதையில் இன்னொரு கோணமும் கூட இருக்கிறது. குடும்ப அமைப்பில் பெண் வேலைக்குப் போவதென்பது பொருளாதார பலத்திற்காகத்தான். அது முதன்மை வருமானமல்ல, கூடுதல் வருமானம் பொருளாதார அவசியமில்லையென்றால் பெண் வேலைக்குச் செல்ல வேண்டாம். குடும்பம், குழந்தைகளை பராமரிப்பது போதும். வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்வது பெண்ணுக்கு கூடுதல் சுமை. வேலைக்குப் போவது பெண் விடுதலையின் ஓர் அம்சமல்ல. அது ஆணுக்குத்தான் லாபம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இருந்தாலுமே கூட குடும்பத்தில் பெண் தன் சுயத்தைக் கரைத்துக் கொள்கிறாள். வேலையென்பது அவளுக்கு சுய கௌரவத்தை, தன்னம்பிக்கையை, அடையாளத்தை மீட்டுத் தருகிறது.
            காசநோய் வந்தது போல் உருக்கின உடம்புடன் குடும்பக் கஷ்டங்களை இரவு வேளைகளில் கணவனிடம் அழுது புலம்புபவளிடம் வேலைக்குச் சென்றபின் ஏற்படும் மாற்றம்...
            "அப்படி சாந்தியை பிரகாசத்துடன் பார்த்து எத்தனை வருஷங்கள் இருக்கும் என நினைத்துப் பார்த்தான். கல்யாணத்திற்கு முன்பானக் காலத்தில்தான் இந்தப் பிரகாசத்துடன் இருந்திருப்பாள் என நினைப்பு வந்தது"
            அவளின் நாளொன்றின் பத்து மணி நேரத்தை முந்நூற்று ஐம்பது ரூபாய்க்காக உறிஞ்சும் வேலையில் கொஞ்சமே கிடைக்கும் அந்தத்துளி மகிழ்ச்சியைக் கூட ஆண் மனம் பொறுத்துக் கொள்ளாததை, அவளின் சின்ன சந்தோசமான வானொலியில் கர்நாடக சங்கீதத்தை இரவு நேரங்களில் கேட்பதும் வானொலியை நிறுத்த மறந்து தூங்கிப் போகும் சமயம் கணவன் கொள்ளும் எரிச்சல், நிறுத்த மறந்ததை சுட்டிக்காட்டி அவளுக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது, வேலைக்குச் சென்ற பிறகு அவள் முகத்தில் தெரியும் பிரகாசம் அவனிடம் ஏற்படுத்தும் பொறாமையென ஆண் மனதை கதைப்போக்கில் சிறுகச் சிறுக நுட்பமாக வெளிப்படுத்துவது போலவே பெண் மனதையும் வெளிப்படுத்துகிறது.
            தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பெண் உணர்வு சார்ந்த இன்னொரு கதை 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும் தலைப்பே சிறப்பாக அமைந்து விட்டது. பெண் என்பவள் மகள் மட்டுமல்ல மனைவி மட்டுமல்ல தாய் மட்டுமல்ல தனித்த உயிர் அவளுக்கென்று தனியாக ஒரு மனம் இருக்கிறதென்பதையும் அவளுக்கென்று சுய விருப்பு வெறுப்பு இருப்பதையும் 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும்' என்கிற தலைப்பே சொல்லி விடுகிறது.
            கதை தொடக்கத்திலிருந்து கடைசி சில பாராக்கள் நீங்கலாக சிறுவனின் பார்வையில் கறியெடுப்பது சமைப்பது அதன் மீதானஅவன் ஈர்ப்பு அதை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகள் என வரும் விவரிப்புகள் வெகு ரசமானவை. கறியெடுப்பது என்பதன் பின்னணியிலிருக்கும் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரச்சூழல், மதம் சார்ந்த நம்பிக்கைகள், கிராமத்து பண்பாடு, கலாச்சாரம்... கிராமத்துக் கதையென்றால் சுப்ரபாரதிமணியனின் பேனாவுக்குத் தனி உற்சாகம் வந்து விடுகிறது. அந்த உற்சாகத்திலும் கிராமத்தின் சாதிய முகத்தைக் காட்டத் தவறவில்லை "வள்ளுவன் வேத வாக்கு சொல்கிறவன் என்றாலும் கீழ் ஜாதிதானே" (வாக்கு) சாதி என்று வந்துவிட்டால் நகரமும் விதி விலக்கு கிடையாது. கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். "சாந்தி வேலை தேடி வந்தபோது அவளிடம் ஜாதியைப் பற்றி விசாரித்தார்களாம். கூட்டிப் பெருக்கத்தானே" (நாதம்)
            இங்கு திருமணம் என்பதில் மாப்பிள்ளை பெண்ணின் விருப்பம் என்பது கடைசி பட்சமாகி விடுகிறது. அதிலும் பெண்ணின் விருப்பம் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. ஜாதி, ஜாதகம், வேலை, அந்தஸ்து, பணம் என்று எத்தனை. இதில் வெளிப்பட வாய்ப்பே இல்லாமல் போன பெண் மனம் தன்னை திடுமென்று வெளிப்படுத்துகையில்... பாரதத்தில் கூட பாஞ்சாலி கர்ணன் மீது தனக்கு ஆசையிருந்ததைச் சொல்லுவாள். அப்படியொரு திருப்பம் இந்தக் கதையின் இறுதியில். இந்தக் கதையை உயரத்திற்கு கொண்டு போய் விடுகிறது.
            இத்தகைய திருமணங்களில் இப்போது உடைவு ஏற்பட்டிருப்பதை வாழ்வின் இறுதியில் இருக்கும் முதியவரின் கசந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. "பனியன் பேக்டரிக்குப் போகும் பையன்களைக் கேட்க வேண்டாம். லேபிள் வைக்க அயர்ன் செய்ய கட்டிங்குக்கு என்று பனியன் கம்பெனிகளில் சரிசமமாய்ப் பெண்கள் வேறு உலவுகிறார்கள். சுலபமாய், ஜாதி என்பது பற்றி இல்லாமல் தொழில் ரீதியாக உறவுகளைத் தீர்மானித்துக் கொள்கிறார்கள்" (இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்)
      சுற்றுப்புறச் சூழல் சீர்குலைவை ஈரம் கதை பேசுகிறது. வணிக நகரமாக திருப்பூர் மாறியதில் அது இழந்தவற்றை சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். டாலர் கனவுகளில் மிதப்பவர்களை தொந்தரவு செய்யும் இது போன்ற குரல்களை கேளாச் செவியினராய் பாவனை செய்தவர்கள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பதற்கு சில சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பின்பு திருப்பூரில் தகர்க்கப்பட்ட சாயப்பட்டறைகள் சேலம், நாமக்கல் புறநகர்ப் பகுதிகளுக்கு இடப் பெயர்பு கொள்வதை நாளிதழ்கள் வெளிச்சமிடுகின்றன.
      சூழலியலாளர்களை மனித குல முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுபவர்களாக பார்ப்பவர்கள் விஞ்ஞானிகள் தங்களால் கைவிடப்பட்ட ஜப்பான் மக்களை காற்றில் கதிர் வீச்சு கலந்து விட்டது சுவாசிக்க வேண்டாம். தண்ணீரில் கலந்து விட்டது குடிக்க வேண்டாம் என்று சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் தான் மறதிக்காரர்களாயிற்றே. வாழ்வைவிட பிழைப்பு முக்கியமாகி விட்டதே "வெடிக்க விரும்பும் வெடி குண்டைப்போல் தகதகத்து நிற்கும் அணை நீரின் ரசாயணக் கழிவுகளில் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். ரசாயணப் பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம்." பட்டீஸ்வரன் முரசன் மட்டுமல்ல முனிஸ்வரனும் கூட.
            பிழைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பிழையான வாழ்வில் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களைப் படிக்க வைப்பது என்பதெல்லாம் பிராய்லர் கோழி வளர்ப்பதுபோல அவர்கள் மூலம் திரும்பக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குப் பண்ணி காய் நகர்த்துவதில் குழந்தைகள் படும் அவஸ்தையை 'மகா வாக்கியம்' எதிரொலிக்கிறது. இந்த அழுகிய மனங்களின் விளைச்சல் அழுகலாய்த்தானே இருக்கும். தமிழ் மரபில் வழிப்பறி பாலைத் திணைக்குரியதாய் இருந்தது. இன்று குழந்தைக் கடத்தல், வழிப்பறி போன்றவைகளில் ஈடுபடுபவர்கள் படித்த இளைஞர்களாயிருக்கிறார்கள்.
            கோட்பாடுகளை உடும்புப் பிடியாக பிடித்துக் கொள்ளாமல் வாழ்க்கையிலிருந்து படைப்புகளைத் தந்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். பதினாறு கதைகளில் ஒன்றான 'விமோசனம்' தொகுப்பின் எல்லாக் கதைகளுக்கும் பொருந்திப் போகிறது. தேசியம், சர்வதேசியம் பேசிக் கொண்டு சொந்த மக்களை அகதிகளாக அலைய விடுவதும், வல்லரசு கனவு காணச் சொல்லும் நாட்டில் கழிப்பறை கூட இல்லாத கொடுமையையும், சிறைக்கூடமான பள்ளிக் கூடங்களையும், மாறிவிட்ட மதிப்பீடுகள் காரணமாய் உறவுகளுக்கிடையே ஊடாடும் நெருக்கடிகளையும் சொல்லும் இந்தக் கதைகள் இவற்றிலிருந்து விமோசனம் பிறக்காதா என்கிற விழைவை, ஏக்கத்தை, கவலையை வெளிப்படுத்துகின்றன விமர்சிக்கின்றன. கவனத்தைக் கோருகின்றன.

சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
விமோசனம்: ரூ. 90/- காவ்யா, சென்னை)