இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி
“ யுவபுரஸ்கார் “ பரிசு பெற்றுள்ள மலர்வதியின் ” தூப்புக்காரி
“ நாவல்:
தலித்திய
வாழ்க்கையை பின்தொடரும் ரணம்
- சுப்ரபாரதிமணியன்
தூப்புக்காரியின் தோற்றமும்
செயல்களும் வாழ்வும் ஒரு விளிம்பு நிலை பெண்ணின் அடையாள அவலம்.
மருத்துவமனையில் சுத்தப்படுத்தும் வேலை செய்யும் ஒரு தாயின் வாழ்வை மகளும்சேர்ந்து
ஈர்ப்புடன் ஆத்மாவின் வலியோடு பீ, குளியலறை , எச்சிலை, ரத்தவாடையோடு நாகர்கோவில்
பகுதி தலித் மக்கள் வாழ்வோடு ஓரளவு நேர்த்தியாகவே இதில் சொல்லப்பட்டிருக்கிறது..
தாய், மகள், மகளின் மகள் என்று தலைமுறை தொடர்கிறது. இது சாபமாய் படிகிறது.இந்திய
சமூகத்தின் பீடை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட அநாவிசிய பாரம்.இந்த பாரத்தை உணரும் வண்ணம் எழுதியிருக்கிறார் மலர்வதி. பணம்
தொலைவதில் படபடப்பாகிற தாய் தன்னைத் தொலைத்தலிலும் வாழ்க்கையை கடந்து
போகிறார். திருமண விருந்துகளில்
எச்சிலெடுப்பவள் எச்சிலாகிப்போகிறாள். எச்சிலை இலைதான் இந்த நாவல் எழுப்பும்
படிமம். மகள் பூவரசியின் உடல் தடுமாற்றம் பெண்ணின் உணர்வால் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
துப்புரவு வேலைநிமித்தமான அசுசையைச் சொல்லத் தயங்காதவர் பூவரசியின் உடல்
தடுமாற்றத்தையும் துல்லியமாகச் சொல்கிறார். அது கொண்டு போகும் துரோகம்தான் ஆணின்
அதிகாரமாக விளங்குகிறது. சகமனிதர்களின் மலம், அழுக்கு மட்டுமின்றி நாய் போன்ற பிராணிகளும் கூட மலத்துள்
தள்ளுகின்றன. வேறு சாதிப்பையனுடன் கொள்ளும் உறவால் உண்டாகும் குழந்தையைக்
கலைக்காமல் அவள் எதிர்கொள்ளும் முடிவில் பழமைவாதமே மிஞ்சுகிறது. பீயை மற்றவர்களின்
மூஞ்சியில் எறிகிற மாதிரி கருவைக் கலைத்து விட்டு அவள் நடமாடலாம். அவளை
ஏஏற்றுக்கொள்ளும் மாரியின் தியாகம்
உன்னதமானதுதான். ஆனால் அதை அவன் பாரமாக எப்போதாவது உணர ஆரம்பித்தால் அது சாபமே.
காத்திரமான பாத்திரங்கள் புழங்கும் மொழி பல இடங்களில் நுணுக்கமாக
வெளிப்பட்டிருக்கிறது.. சாதாரணக் கதை. பூவரசி சார்ந்த தலித் சமூக விவரிப்பும், பிற
ஆதிக்கஜாதியினரின் போக்கும்., காலகட்டத்தின் குறிப்பான பின்ணணியும் இல்லாமல்
ஒற்றைப்பரிமாணமாய் தட்டையாய் நீள்கிறது. நாலு பேர் ஒரு சமூகம். நானூறு பேரின்
வாழ்க்கையல்லவா நாவல். அதை பூவரசியோடு சிலருடன் அடக்கமுயல்வது பலவீனமே.
( ரூ
75/ வெளியிடு “ அனலகம் “, தண்ணீர் பந்தல், பாலூர், கருங்கல், கன்யாகுமரி
628157 )