சுகந்தி சுப்ரமணியன் நினைவு நாள்
11.02.2013
அறைக்குள் ஒரு பெண் ஆளுமை, கவிதை - ஜெயமோகன்
நான் வாழ்ந்த ஊர்களில் எனக்குக் கொஞ்சம்கூட நினைவில்
நிற்காத ஊர் என்றால் அது திருப்பத்தூர்தான். இத்தனைக்கும் அங்கிருக்கையில் சில
நல்ல இலக்கிய நட்புகள் கிடைத்தன. அங்கேதான் எவரும் தங்கள் வாழ்க்கையின் மிக இனிய
நினைவுகளாகச் சொல்லக்கூடியவை நிகழ்ந்தன – எங்கள் முதல்குழந்தை அஜிதன் கைக்குழந்தையாக
இருந்தான். அக்காலகட்டத்தில்தான் எனக்கு சம்ஸ்கிருதி சம்மான் உள்ளிட்ட விருதுகள்
கிடைத்தன. ஆனாலும் அந்த ஊர் நினைவிலிருந்து நழுவிக்கொண்டே இருக்கிறது.
1992ல் என் மனைவி தபால்
குமாஸ்தாவுக்கான பயிற்சி முடித்துத் தபால்துறை ஊழியராக பதவி ஏற்றது
திருப்பத்தூரில்தான். நான் அப்போது தர்மபுரியில் தொலைபேசித்துறை ஊழியராகப்
பணியாற்றினேன். திருப்பத்தூரில் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியன் குடியிருந்தார். அவர் எனக்கு நண்பர். அங்கே தங்குவதற்கு அவர்
எனக்கு வீடு எடுத்துத்தந்தார்.
திருப்பத்தூரில் தங்கி தினமும் பேருந்தில் தர்மபுரி
வந்துசென்றேன். ஒன்றரை மணிநேரப் பேருந்துப்பயணம். ஆக, திருப்பத்தூரில் நான்
தங்கியிருந்ததே பாதிநாள்தான். மாலையில் கிளம்பி அலுவலகம் சென்றால் மறுநாள்
வேலையும் முடித்து மறுநாள் மாலை திரும்பி வருவேன். ஒருநாள் வீட்டில் இருப்பேன்.
என் வாழ்க்கையில் நான் முழுதாக ஒருவருடம் புனைகதை என எதையுமே எழுதாமலிருந்தது
அப்போதுதான். அசோகமித்திரனுக்கும், சுந்தரராமசாமிக்கும் இரு மலர்களை நானும் சுப்ரபாரதிமணியனும்
இணைந்து கொண்டுவந்தோம்.
யோசித்துப்பார்க்கையில் அப்போது நான் படைப்பூக்கத்துடன்
இல்லை என்பதனால்தான் நினைவில் அந்த ஊரே இல்லை என்று தோன்றுகிறது. திருப்பத்தூருடன்
இணைந்து நினைவில் வரும் முகம் கவிஞர் சுகந்தி சுப்ரமணியனுடையது. நண்பர்
சுப்ரபாரதிமணியனின் துணைவி அவர். இன்னொரு சிந்தனை வருகிறது. சுகந்தி சுப்ரமணியனின்
நினைவுடன் பின்னிப்பிணைந்திருப்பதனால்தான் நான் திருப்பத்தூரை என்
அகப்பதிவுகளிலிருந்து அழித்துவிட்டேன் போல.
தமிழின் ஆரம்பகாலப் பெண்கவிஞர்களில்
குறிப்பிடத்தக்கவர் சுகந்தி. நான் எழுதவந்த காலத்தில், 1988இல் சுகந்தியின் கவிதைகளைப் பற்றி
சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன்.
திருப்பத்தூர் சென்று குடியேறிய அன்று மூச்சிரைக்க சுகந்தி ஓடிவந்து பேச
ஆரம்பித்தார். அவரது இரு அழகிய மகள்களை அருண்மொழி பெரும்பிரியத்துடன் அள்ளி
அணைத்துக்கொண்டாள்.
சுகந்தியை அப்போதுதான் நான் கவனித்தேன். முதலில்
போதிய அளவில் ஆளுமை வளராத ஒரு பெண் என்று மதிப்பிட்டேன். பதினைந்து பதினாறு வயதான
கிராமத்துப் பெண்களுக்குரிய அப்பாவித்தனமும் படபடப்பும் அவரிடமிருந்தது. முதலில்
என்னைப்பார்க்க வந்தபோதே ஒரு நோட்புக் நிறைய கவிதைகள் எடுத்துவந்தார். அவற்றை நான்
உடனே பார்க்கவேண்டும் என்று சொன்னார். ’இப்ப படிங்க… இப்பவே படிங்க’ என்று திரும்பத் திரும்பச்
சொன்னார்.
அவர் போனபின்பு நான் கவிதைகளை வாசித்தேன். அவை
கவிதைகளே அல்ல. வெறும் சொற்கள். திரும்பத்திரும்ப நான் தனியாக இருக்கிறேன்,
என்னை
அடைத்துவைத்திருக்கிறார்கள், எனக்கு வழிதவறிவிட்டது, நான் ஊருக்குச்செல்லவேண்டும்
என்பதுபோன்ற எளியவரிகள் வெவ்வேறு வகையாக எழுதப்பட்டிருந்தன. அதிர்ச்சியுடன்
சுப்ரபாரதிமணியனிடம் அதைப்பற்றிக் கேட்டேன். அவர் சுகந்தியின் மனம்
நிலையழிந்திருப்பதைப் பற்றிச் சொன்னார்.
சுப்ரபாரதிமணியன் அதற்கு முன் செகந்திராபாதில்
பணியாற்றினார். நான் முன்னரே இருமுறை அவர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன்.
முதல்முறை ஓர் இந்தியச்சுற்றுப்பயணத்தின் பகுதியாக. அப்போது சுகந்தியைச்
சந்தித்திருந்தேன். அச்சமும் தயக்கமும் மிக்க கிராமத்துச் சிறுமி என்ற எண்ணம்
ஏற்பட்டிருந்தது. ஓரிரு சொற்களுக்குமேல் பேசியதில்லை. அதன்பின் இன்னொருமுறை
செகிந்திராபாத் சென்றிருந்தேன். அப்போதும் ஒருசில சொற்கள் பேசினேன். அவ்வளவுதான்
என் மனப்பதிவு.
சுப்ரபாரதிமணியன் சுகந்தியின் உளச்சிக்கல்களைச்
சொன்னார். ஆனால் அவருக்கே உரிய முறையில் அது ஒரு பெரியவிஷயமில்லை என்றபாணியில்
சொன்னதனால் நான் பெரிதாக நினைக்கவில்லை. ’அவளாலே ஒரு இடத்திலே இருக்க முடியல்ல. ஒரு
ரூமுக்குள்ள இருக்கிறப்ப டென்ஷன் ஆயிடுவா… கதவச்சாத்தினா பதற்றம் ஆயிடும்…. சின்னச்சின்னப்
பிரச்சினைகள் இருக்கு’.
ஆனால் திருப்பத்தூரில் சுகந்தியை அருகில் கண்டு பழக
ஆரம்பித்த முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘இப்ப கொஞ்சம் ஜாஸ்தி.
ஸ்கிஸோபிர்னியான்னு சொல்றாங்க…. பலவிதமான மனப்பிரமைகள் இருக்கு… டிரக்ஸ் குடுக்கிறோம். அத ஒழுங்கா
சாப்பிட்டா ஓரளவு கண்டிரோல்ல இருக்கும்…’ என்று சாதாரணமாகச் சொன்னார். நான் வருத்ததுடன் ‘என்ன ஆர்பிஎஸ் இது?’
என்றேன். ‘என்ன செய்றது? பாப்போம்…’ என்றார் சுப்ரபாரதிமணியன்
இன்னும் சாதாரணமாக.
சுகந்தி இந்த உலகிலேயே இல்லை.நிலைகொள்ளாத தன்மை,
கட்டுக்கடங்காத
நடவடிக்கைகள். உண்மையில் அவரது உளப்பிரச்சினைகள் பள்ளிநாளிலேயே ஆரம்பமாகியிருந்தன.
அவருடைய இளமைப்பருவம் பரிதாபகரமானது. தாயாரால் புறக்கணிக்கப்பட்ட அவரைப்
பாட்டிதான் வளர்த்தாள். சுகந்தியின் கவிதைகளில் அடிக்கடி வரும் லட்சுமிப்பாட்டி.
வீட்டில் கறாரான கண்டிப்பு , வெளியே சமூகத்தின் கேலி கிண்டல் என வளர்ந்த சுகந்திக்கு
எப்போதுமே தாழ்வுணர்ச்சியும் மனஅழுத்தமும் இருந்தது. மெல்ல மெல்ல அது
வலுப்பெற்றிருக்கலாம்.
சுப்ரபாரதிமணியன் சுகந்தியைக் கவிதைகள் எழுதச்சொன்னதே
அந்த உளச்சிக்கல்களைத் தாண்டி வர அது உதவக்கூடும் என்பதனால்தான். தனக்குத்தானே
சுற்றி இறுக்கிக்கொண்ட மனப்பிரமைகளின் சுவர்களை உடைக்க கவிதை உதவக்கூடும் என அவர்
நினைத்தார். அவர் ஓர் எழுத்தாளர் என்பதனால் மொழி அளிக்கும் விடுதலையை நன்கு
அறிந்திருந்தார்.
சுகந்தியின் ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும்
மிகநேர்மையான உணர்ச்சிவேகம் கொண்டவை. தன்னியல்பான மொழிவீச்சு கொண்டவை. கணிசமான
கவிதைகள் முடிவடையாதவையாக இருக்கும். ஒருவகை முடிவை அடைந்த கவிதைகளை மட்டும்
சுப்ரபாரதிமணியன் பிரசுரித்தார். அவரது முதல் தொகுதி சுப்ரபாரதிமணியன் முயற்சியால்
அன்னம் வெளியீடாக 1986இல் வெளிவந்தது. அப்போதே சுந்தர ராமசாமி உட்பட முக்கியமான திறனாய்வாளர்களின்
கவனத்தைப்பெற்றது அது.
சுகந்திக்கு இரு பெண்கள். இருவருமே அப்போது
சிறுமிகள். சுகந்தியால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அன்றன்று செய்தித்தாளில்
வாசித்த, கேள்விப்பட்ட
செய்திகளை எல்லாம் தன் வாழ்க்கையில் நிகழ்ந்தவை என்று நம்பக்கூடிய மனப்பதற்றம்
இருந்தது. பெரும்பாலான செய்திகள் பயங்கரமாக, மனம் பதறச்செய்யக்கூடியவையாக
இருக்கும். ஆரம்பத்தில் அருண்மொழியே அவற்றை நம்பிப் பதற்றமடைந்துகொண்டிருந்தாள்.
நாள்கணக்கில் வெவ்வேறுவகையான கற்பனை யதார்த்தங்களில்
கொந்தளித்துக்கொண்டிருப்பார். எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம்.
நாலைந்து குண்டர்கள் தன்னைத் தாக்கிவிட்டதாக ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்
ஜீப்பில் வந்திறங்கினார். தாள் வாங்க வந்தவர் தன்னைக் கொல்லமுயன்றதாக சொல்லி
வீட்டிலிருந்து இறங்கி ஓடினார் ஒருமுறை. சிலநாட்கள் பகல் முழுக்க எங்கெல்லாமோ
அலைந்து திரும்பி வருவார். இருளில் இறங்கிச்சென்றால் சுப்ரபாரதிமணியன்
கைவிளக்குடன் தேடி அலைந்து கூட்டிவருவார்.
‘இப்டி வெளியே கெளம்பிடறாங்களே…’ என்று நான் கவலையுடன். ‘அவளாலே ரூமுக்குள்ள
இருக்க முடியாது. பூட்டினா அப்டியே எக்ஸைட் ஆயிடுவா’ என்றார் சுப்ரபாரதிமணியன்.
விதவிதமான அனுபவங்களை டைரியாக எழுதி கொண்டுவந்து
அருண்மொழியிடம் காட்டுவார். நாங்கள் பக்கத்துவீடு என்பதனால் உண்மை தெரியும்.
நான்காம் வீட்டுக்காரர் என்றால் நம்பியிருப்பார். ஒரு கட்டத்தில் யதார்த்தம்
என்றால் உண்மையில் என்ன என்ற பெரும் வியப்பை நான் அடைந்தேன். ஒருவர் தான்
அடிக்கப்பட்டதாக, அவமதிக்கப்பட்டதாக ‘உண்மையாக’ உணர்ந்தால் அவர் அந்த வலியை முழுக்க முழுக்க அனுபவிக்கிறார்
அல்லவா?
அனுபவ உலகம் என்பது ஒவ்வொருவரும் தன்னந்தனிமையில்
குடியிருக்கும் அறையா என்ன? அந்த அறைக்குள் உள்ளே தாழிட்டுக்கொண்டுதான் வாழ்கிறோமா?
கதவிடுக்குகள்,
அரைமனதுடன் திறந்த
சன்னல்கள் வழியாகத்தான் ஒருவர் அறைக்குள் இன்னொருவர் பார்த்துக்கொள்கிறோமா?
வீட்டில் ஒருவருக்கு மனநிலைச் சிக்கல் என்றால் அந்த
நிலையை அனுபவிப்பவருக்கே அதன் வலி தெரியும். நான் உடனிருந்து பார்த்த
சுப்ரபாரதிமனியனின் வாழ்க்கை மிகக் கொடுமையானது. அந்தவாழ்க்கையிலும்
சுப்ரபாரதிமணியன் ஓயாது வாசித்தார். எழுதினார். கனவு இதழ்கள் கொண்டுவந்தார்.
நாங்கள் அங்கே இருந்தபோதுதான் அசோகமித்திரன், சுந்தரராமசாமி இருவருக்கும்
அறுபதாமாண்டு நிறைவுமலர்கள் தயாரித்தோம்.
சுப்ரபாரதிமணியன் ஒவ்வொருநாளும் அவரே காலையில்
சமைத்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் செல்வார். மாலையில்
மீண்டும் சமையல். குழந்தைகள் அருண்மொழியுடன் மிகவும் ஒட்டிக்கொண்டிருந்தன.
சுகந்திக்குத் தன்னைப் பிறர் அவமதிக்கிறார்கள் என்பது எப்போதுமுள்ள பிரமை என்றால்,
கணவரோ பிறரோ
தாக்கிவிட்டார்கள் என்பது அதன் உச்சம். பலசமயங்களில் கட்டுப்படுத்த உடல்பலம்
தேவைப்படும். இந்தியாவில் உளவியல்சிக்கல்களுக்கு மருந்துகள் இல்லை – காய்கறிபோல ஆக்கித் தூங்க
வைப்பது தவிர. ஒரு கட்டத்தில் மாத்திரைமூலம் இரவு பகலாகத் தூங்கிக்கொன்டிருக்கச்
செய்யப்பட்டார்.
என் வாழ்க்கையில் நான் தனிப்பட்ட முறையில்
அறிந்தவர்களில் சுப்ரபாரதிமணியன் அற்புதமான மனிதர். அவரே உருவாக்கிக்கொண்ட ஒருவகை
ஒட்டாத தன்மை அவரை அவர் வாழ்க்கையின் மிகப்பெரிய துயரங்கள், அவஸ்தைகளில் இருந்து காத்தது.
என்னிடம் அதிகபட்சம் இரண்டு தடவைகளுக்கு மேல் அவர் தன் பிரச்சினைகளைப்பற்றிப்
பேசியதில்லை. மிகவும் உள்ளடங்கிய, எதையுமே காட்டிக்கொள்ளாத மனிதர் அவர்.
ஆச்சரியம் என்னவென்றால் சுப்ரபாரதிமணியன் என்னிடம்
எப்போதும் கவலையும் கோபமும் வருத்தமும் கொண்டு பேசியவை எல்லாமே
சமூகப்பிரச்சினைகளைப்பற்றித்தான். அவற்றில் எப்போதும் ஆழ்ந்த அக்கறையுடன் அவர்
ஈடுபட்டுவந்தார். இலக்கியத்தைவிட அவருக்கு நேரடியாக மக்களுக்கு உதவும்
சமூகசேவையில்தான் ஆர்வம் இருந்தது. செகந்திராபாதில் இருந்தபோது தோல்நிறமி
பிரச்சினையால் வரும் நிறஇழப்பு நோய்க்கான யுனானி ஆய்வுமையத்துடன் தொடர்புகொண்டு
சேவையாற்றினார். தமிழகத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்குத் தங்குமிடமும்
நிதியுதவிகளும் ஏற்பாடு செய்து கொடுப்பார். அதைத்தவிர செகந்திராபாதில் இலக்கிய அறிமுக
நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து ஏற்பாடுசெய்துவந்தார்.
ஒருமுறை சுப்ரபாரதிமணியன் பற்றி சுந்தர ராமசாமியிடம்
சொன்னேன். அப்போது சுப்ரபாரதிமணியன் திருப்பத்தூரில் இருந்து மாற்றலாகி சொந்த ஊரான
திருப்பூர் வந்திருந்தார். அங்கே நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிராகவும் சிறார்
உழைப்புக்கு எதிராகவும் தீவிரமாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரது
தனிவாழ்க்கையின் அல்லல்கள் பற்றிச் சொல்லி ‘எப்படி இதன் நடுவே அவரால்
சேவைகளில் ஈடுபட முடிகிறது’ என்றேன்.
சுந்தரராமசாமி ‘சேவைமனநிலைக்கு அப்படி நிபந்தனையே
கிடையாது. தன் துயர் வழியாகப் பிறர் துயரை உணர்ந்தவர்களும் உண்டு. சொந்தமாக ஒரு
துளி துயரையோ வசதிக்குறைவையோ அனுபவிக்காமல் பிறரைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டவர்கள்
உண்டு’ என்றார்.
அதன்பின் காந்திகிராம நிறுவனர் சௌந்தரம் ராமச்சந்திரனைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்.
சௌந்தரம் டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சுந்தர ராமசாமியின் சொற்களில் ‘வெண்ணையில் வளர்ந்தவர்’
ஆனால் மிக
இளம்வயதில் காந்தியால் ஈர்க்கப்பட்டு சேவையுலகுக்குச் சென்றார். ’நம்ம அறையோட வாசலை நாம்
எந்த அளவுக்குத் தெறக்கறோம்கிறதைப் பொறுத்தது அது’ என்றார். என்னுடைய படிமத்தை அவர்
எடுத்துக்கொண்டார் என்று தோன்றியது.
சுகந்தி ஒருமுறை அதிகமாக மாத்திரைகளை விழுங்கித்
தற்கொலைக்கு முயன்றார்.வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் மீட்டோம்.
மனச்சிக்கல் சற்றே அகலும் இடைவேளையில் கணவனையும் குழந்தைகளையும்
கவனித்துக்கொள்ளவில்லை என்ற கடுமையான குற்றவுணர்வு அவருக்கு ஏற்படும். உளநோயை
அளித்த சக்தி அந்த வதை போதவில்லை என்று நினைத்துக்கொண்டு வன்மத்துடன் உளநோயை
கொஞ்சம் விலக்கிக் காட்டுகிறதுபோல என நினைத்தேன். உளநோய் தனக்கிருப்பதை அது
விலகும் கணங்களிலேயே உணர முடியும். அப்போதுதான் அந்நோயின் வலி பேருருவம்
கொள்கிறது.
நான் திருப்பத்தூரை விட்டு வந்தபின்னர் சுகந்தியைச்
சந்திக்கவில்லை. திருப்பூருக்கு சுப்ரபாரதிமணியன் வீட்டுக்குச் சென்றபோது இருமுறை
சுகந்தியை சந்தித்திருக்கிறேன். மங்கிய புன்னகையுடன் இருந்தார், என்னை நினைவுகூரவில்லை.
மனநோய்க்கான சிகிழ்ச்சை என்பது இந்தியாவில் மனதை அழிப்பதுதான்.
சுகந்தி எழுதுவதை கவனித்திருக்கிறேன். தன்
வீட்டுப்படியில் அமர்ந்துகொண்டு பேனாவை செங்குத்தாக எழுத்தாணிபோல பற்றியபடி
முகத்தில் அதி உக்கிரமான பாவனையுடன் வேகமாக எழுதித்தள்ளுவார். முற்றுப்புள்ளிகளை
ஓங்கிக் குத்திவைப்பார். பலசமயம் காகிதங்கள் கிழியும். பக்கம் பக்கமாக எழுதித்
தள்ளுவார். நான் திருப்பத்தூரில் இருப்பது வரை அவர் எழுதி வாசிக்கக் கண்டவை
பெரும்பாலும் வெறும் வரிகள். அவற்றைக்கொண்டு அவரது உளச்சிக்கலைக்கூட ஊகிக்க
முடியும் என்று தோன்றவில்லை.
ஆனால் சட்டென்று ஒரு கவிதை அவற்றில் தோன்றிவிடும்
என்றார் சுப்ரபாரதிமணியன். அவ்வாறு தோன்றிய கவிதைகளையே அவர் நூல்வடிவமாக
ஆக்கியிருக்கிறார் சுகந்தியின் கவிதைகளில் உணர்வுகள் மற்றும் சில அழகிய
மொழிவெளிப்பாடுகள் அவருடையவை என்றால் கவிதைவடிவம் வரியமைப்பு எல்லாமே
சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் உள்ள அசலான அகவெளிப்பாட்டை
சுப்ரபாரதிமணியனின் உண்மையான வாசகமனம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான் அவை
பிரசுரமாயின.
அக்கவிதைகளில் பலவற்றில் வீட்டை, வீட்டின் அறைகளைத் தன்னை
அழுத்திக்கொல்லும் எதிரியாகவே சுகந்தி சித்தரித்திருந்தார். அவை அச்சானபோது கற்பனை
இல்லாத நம் வாசகச்சூழல் சுப்ரபாரதிமணியனையே ஒரு பெருங்கொடுமைககாரராகச்
சித்தரித்துக்கொண்டது. சுகந்தியின் மனச்சிக்கலுக்குக் காரணம் அவரே என்றுகூட
நம்மவர்கள் ‘வாசித்தி’ருக்கிறார்கள்.
அதைப்பற்றி நான் சுப்ரபாரதிமணியனிடம்
பேசியிருக்கிறேன். ”இருக்கட்டும், இப்ப என்ன. அந்த வரிகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கு. அதுவும் ஒரு குரல்தானே.
நம்மை யாருக்குத் தெரியும்?” என்றார் சுப்ரபாரதிமணியன் அவருக்கே உரிய கம்மலான குரலில்.
மனச்சிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது
தனியனுபவம் அல்ல பிறரது அனுபவங்களின் தொகுப்புதான் என்றும் அவருக்கு எண்ணம்
இருந்தது.
எப்படியானாலும் சுகந்தியின் கவிதைகளை இப்போது
பார்க்கும்போது அர்த்தமுள்ள ஒன்றை சுப்ரபாரதிமணியன் செய்திருக்கிறார் என்றே
எண்ணத்தோன்றுகிறது. அந்தத் துயரம் நிறைந்த வாழ்க்கைக்கு இப்படியாவது ஒரு பொருள்
உருவாகியிருக்கிறது. சுகந்தியின் கவிதைகள் தமிழினி வெளியீடாக இப்போது
கிடைக்கின்றன. [மீண்டெழுதலின் ரகசியம்] முதல் தொகுதிக்குப் பின்னர் மேலும் பல
கவிதைகளை அவர் எழுதினார். ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த கோர்வையான வெளிப்பாடு
பின்னர் சாத்தியமாகவில்லை.
சுகந்தியின் பிற்காலக் கவிதைகளில் நல்ல கவிதைக்கான
அம்சங்கள் ஏதுமில்லை. படிமங்கள் இல்லை, சொல்லழகு அனேகமாக இல்லை. நேரடியான முறையிடல்கள்.
ஆனால் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாகப் பதிவாகியிருக்கும்.
அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார்.
2008 ல் சுகந்தியின் மறைவை சுப்ரபாரதிமணியன்
ஒரு அஞ்சலட்டையில் எனக்குத் தெரிவித்திருந்தார். அந்த அட்டை விதவிதமான நினைவுகளை
எழுப்பியது. பல வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருந்தன. சுகந்தி கவிதைகள் எழுதுவதை
நிறுத்திவிட்டிருந்தார். சிலகாலம் மனநோய்விடுதியில் இருந்துவிட்டு மீண்டு
வந்திருந்தார். அவரை நானேகூட நினைத்துப்பார்த்ததும் இல்லை. அந்த மரணம் ஒரு பெரிய
விடுதலை என நினைத்துக்கொண்டேன். உடல் என்ற, அடையாளம் என்ற, வாழ்க்கை என்ற அறையைத்
திறந்து அவர் வெளியேறிவிட்டார்.
சுகந்திக்கு நான் ஓர் அஞ்சலிக்குறிப்பு எழுதினேன்.
அதில் சுகந்தியின் பிற்காலக் கவிதைகளில் எனக்குப்பிடித்த ஒன்றைக் கைபோனபோக்கில்
எடுத்து பிரசுரித்திருந்தேன். சிலவருடங்களுக்குப்பின் ‘அறை’ என்ற தலைப்பிலான அந்தக் கவிதையை
எடுத்துப்பார்க்கையில் என் மனம் அதிர்ந்தது. அதில் சுகந்தி தன் அறையைப்
பாதுகாப்பான ஓர் இடமாக, ஒளிந்துகொள்ளும் இடமாக சொல்லியிருந்தார். மேலும் சிலநாள்
கழித்துப் படித்துப்பார்க்கையில் இன்னொரு அதிர்ச்சி. அறையை சுகந்தி தன்னை
அலட்சியப்படுத்தக்கூடிய, அவமதிக்கக்கூடிய, மூச்சுத்திணற செய்யக்கூடிய ஒன்றாகவும் சொல்லியிருந்தார்.
சுகந்தியின் உலகின் மொத்தச்சிக்கலையும் அக்கவிதை
சொல்லிக்கொண்டிருந்தது.
அறை
அறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது.
கோடைகாலம் குளிர்காலம்
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது.
எனக்குத் தேவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன்.
இந்த அறை
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது.
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது.
இந்த அறையில் நான்
வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பிவழிவதாகவும்
எனக்கு தகவல் வருகிறது.
இது என்ன விசித்திரம்!
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன?
இனி எனக்கு நிம்மதியில்லை.
நான் நானாக இருக்கவே முடியாது.
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன.
அறைக்குள் என் ஆடைகளை மீறி
கண்கள் என்னை ஒற்றறிகின்றன.
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.
(ஜெயமோகன் இணையதளம்,மீடியா வாய்ஸ் இதழ் )