சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 18 டிசம்பர், 2023
அறியப்படாத உலகின் அரிய குரல்
-சுப்ரபாரதி மணியன்
(குற்றியலுகரம் நாவல் விலை ரூபாய் 250
எழுத்து பிரசுரம் சென்னை )
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றொலிக்கும் குரல் கூட இன்றைக்கு மெலிந்துவிட்டது. விவசாயம் மெல்ல அழிந்துகொண்டே இருக்கிறது.
இன்னொரு பக்கம் பல்வேறு தொழில்களும் நசிந்து விட்டன. கைத்தறி நெசவு
முதல் பின்னலாடை வரை இந்த நசிவு இருக்கிறது. இதன் காரணமாக
அவற்றைச் சார்ந்திருக்கிற சிறு தொழில்களையும் முடக்கிவிட்டது. சிறு தொழில் நசுக்கம் பற்றியும், அந்தத் தொழிலை முடக்கும் நுண்ணரசியல் பற்றியும் மையப்படுத்தி குற்றியலுகரம் நாவலை நெய்வேலி பாரதிக்குமார் எழுதி இருக்கிறார்.
பாபு - ஜெனிதா மற்றும் அறிவழகன்-மலர்விழி என்ற இரண்டு இளம்
தம்பதிகளையும், குருராஜன் என்னும் இன்னொரு தொழில் முனைபவரையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் தமிழில் இதுவரை பேசப்படாத புதிய களத்தை கண்முன் விரிக்கிறது
குறுந்தொழில் உலகம் என்பது திறன் சார்ந்த தொழிலாளர்கள் என்றேனும்
ஒரு நாள் தாமும் ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியும் என்கிற கனவு காணும் மாய உலகம். அது எப்படி. தந்திரங்களால் சூழப்பட்ட உலகமானது என்பதை நாவல் நுட்பமாகச் சித்தரிக்கிறது.
இந்தத் தொழில் சார்ந்த குரலை ஒரு இடத்தில்
இவர் இப்படி பதிவு செய்கிறார் : ” நம்முடைய பாமரத்தனம் வந்து ஏமாத்திக்கோ, ஏமாத்திக்கோ அப்படின்னு கூப்பிடும். நம்ம தலை எழுத்து என்னன்னா, வேலை தெரிஞ்சவன் அழுக்குச் சட்டையோட எவனுக்கோ உழைச்சுக் கொட்டிட்டு இருப்பான் ஸ்பேனர் சைஸ் கூடத் தெரியாதவன் முதலாளியா கொழுத்துத் திரிஞ்சிட்டு இருப்பான். ஒரு தொழிலாளிதான் படிப்படியா வளர்ந்து ஒரு சமூகத்தில் முதலாளியா மாறனும். அப்பத்தான் தொழில் தரமும், புதுப்புது தொழில்நுட்பமும் வளரும். அதுதான் சமூகத்துக்கு நல்லது இங்க என்ன நடக்குது.. பணம் வச்சிருக்கறவன் முதலாளி. அதனால அவன் பணத்து மேலதான் குறியா
இருக்கான். தரம் இல்லாத பொருட்கள் சந்தைக்கு வருது” என்றொரு குரல்.
பரம்பரை முதலாளிகளுக்கு உள்ளுக்குள்ள ஒரு வெறி ஓடிக்கிட்டே
இருக்கும். அவங்களால திடீர் முதலாளியை ஏத்துக்கவே முடியாது. அதனால என்ன நினைக்கிறாங்கன்னா உதிரி பாகங்கள் உற்பத்தி பண்ற குறுந்தொழில் முனைவோர்களுக்கு இடையே எப்பவும் போட்டி இருக்கனும். இல்லன்னா உருவாக்கனும் அப்பதான் அடிமாட்டு விலைக்கு ஜாப் ஃபிக்ஸ் பண்ண முடியும் . அதுவுமில்லாம கீழே இருக்கறவன் இப்படி வளர்ந்துகிட்டே வந்தா ஒருநாள் அவங்களுக்கு சமமா உட்கார்ந்துடுவான்”. என்று முதலாளிகளுக்கும், சிறு தொழில் முனைவோருக்கும் இடையே உள்ள உளவியல் சவால்களைச் சொல்கிறது.
சிறு தொழில் நடத்துகிற பாபு பிறப்பால் இலங்கைக்காரன். சிறு குழந்தையாக இருக்கும்போதே, தான் யாரென்று தெரியாமல், சாதி, மத அடையாளங்கள் எதுவும் இல்லாமல் அகதி முகாமில் வளர்ந்தவன். இப்படி ஒரு கதாபாத்திரம் தமிழுக்கு மிகப்புதிது.
இந்த நாவலில் வருகிற அறிவழகன் முதலாளிகளுடைய துரோகச் செயல்களுக்கு எதிராக கழுத்தை பலரின் மத்தியில் கத்தியால் அறுத்துக் கொள்கிறான். அறிவழகன் குடும்பத்திற்கு கழுத்தறுப்புக்கு கை மேல் பலன் என்று அவர் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கிற போது சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி கழுத்தறுப்பு நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கும் சிறு சிறு முதலாளிகளுக்கும் ஏற்படுகிறது. இதே போல மலர்விழியின் தொழில் சார்ந்த சிக்கல்களைப் பற்றியும், அவற்றிலிருந்து அவள் எப்படி மீண்டெழுகிறாள்
என்பதும் நாவலில் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
கதைக்குள் கதைகள் என்பது போல, இந்த நாவலில் கதையின்
ஓட்டத்தோடு நான்கு குறுங்கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஒன்று
வாசாப்பு நாடகம் என்னும் அதிகம் அறியப்படாதக் கலையின் வழியே இஸ்ரவேல் தேசத்தில் எலிசா என்ற தீர்க்கதரிசியைச் சந்திக்கச் செல்லும் நாகமானின் கதை. மலர்விழி தன்னுடைய குழந்தைக்குச் சொல்லும் நரியின் கதை, மனித நாவும் பற்களும் உரையாடும் இன்னொரு சுவாரசியமான கதை. . நான்காவதாக அகநானூற்றில் வரும் ‘தொல் புகழ் நிறைந்த பல்பூங்கழனி’ என்னும் பாடலின் வழியே சொல்லப்படும் குறுங்கதையில் துரோகம் செய்தவர்களின் தலையில் சாம்பலைக் கொட்டி, ஊர் மக்கள் யாவரும் தூற்றி வசை பாடும் தண்டனையை அறிவிக்கிறார்கள். இந்த வகையானக் கதைகளை
நாம் இதில் வருகிற முக்கியமான கதாபாத்திரங்களின் வாழ்க்கையோடு
வலிந்தோ, இயல்பாகவோ நாம் இந்த நாவலில் பொருத்திப் பார்க்கலாம்.
துரோகத்தின் பல்வேறு வகையான வடிவங்கள் பற்றியும், சிக்கல்களைப் பற்றியும் வெவ்வேறு மட்டங்களிலும் இந்த நாவல் வழியே வாசிக்கும்போது துரோகம் செய்பவர்கள் தலையில் சாம்பலை அல்ல, நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டும் என்கிற கோபத்தை, இந்த நாவலை முடிக்கிற போது நாமும் உணர்கிறோம்.
சிறு தொழில் சார்ந்த ஒரு பெரும் உலகம் சார்ந்து இயங்கும் பல மனிதர்கள் பற்றிய முக்கியமான அனுபவங்களை நாவல் பதிவு செய்கிறது .குறுந்தொழில் முனைவோரின் முன்னால் நிற்கும் பிரச்சனைகளையும் சவால்களையும், அவற்றை எதிர்கொண்டு போராட வேண்டிய எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதையும் துல்லியமாக இந்த நாவல் சொல்கிறது.
. படைப்பாளிக்கு திறனும், உழைப்பும் மட்டுமே முதலீடு என்பதை திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் பாரதிக்குமாருடைய தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பதிவாக அவரின் இந்த முதல் நாவல் இருக்கிறது
( ரூபாய் 250 எழுத்து பிரசுரம் சென்னை )