சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 25 மார்ச், 2014

உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா


                                                     
தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் திரிவார்கள் “   18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க விழா படத்தில்   ( அன்ன அரபியாஇஸ்ரேலியப்படம்; இயக்குனர் அமோஸ் கிட்டாய்ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் வசனம் இதுதிருவனந்தபுரத்தில் துவக்க விழா படம் திரையிடப்பட்ட நிசகாந்தி அரங்கின் முகப்பிலேயே புத்தக்க கண்காட்சி., திரைப்பட விழாவின் அலுவலக பகுதி அமைந்த கைரளி திரையரங்கு சுற்றிலும்  திரைப்பட சம்பந்தமான பல புத்தக அரங்குகள் கேரள திரைப்பட விழாவை  ரம்மியமாக்கியிருந்தது. (  அன்ன அராபியா: 85 நிமிடப் படமான இது ஒரேசீக்குவன்ஸ் ஷாட்டில் “  எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இடையில் எந்த வெட்டும் கிடையாதுஇஸ்ரேலில் யூதர்கள்அரேபியர்கள் இணைந்து வாழும் ஒரு சிறு பகுதியை மையமாகக் கொண்டு  யால் என்ற பத்திரிக்கையாளப் பெண் அங்கு சென்று சிலரை பேட்டி காண்பது இதன் மையமாகும்  இடிந்த நிலையிலான வீடுகள், சேர்ந்த எலுமிச்சை தோட்டம் அங்கு வசிக்கும் சிலரின் மனப்போக்குகளும், விசித்திரங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பெண்ணின் பேட்டி மூலம் வெளிக்கொணரப்படுகிறது.).


திரைப்பட விழாவின் அலுவலகம்  அமைந்த பகுதியில் முன்பெல்லாம் சுற்றுச்சூழல் பற்றிய சுவரொட்டிகள், வாசகங்கள் கவனத்தை ஈர்க்கிற  விதமாய்  காணப்படும். கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து கண்ணில்
பட்டவை  என்டோ சல்பான் அபாயம் பற்றியவை ( இவ்வாண்டு வெளிவந்திருக்கும் என்மகஜே “  என்ற சிற்பியின் மொழிபெயர்ப்பிலான மலையாள நாவல்   என்டோசல்பான் பாதிப்பால் சீரழிந்த மக்களின் துயர வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ) இவ்வாண்டு  “ மேற்குத் தொடர்ச்சி மலையைப் காப்பாற்றுவோம் “  என்ற வாசகங்களுடன்  அவ்வகையில் பல பதாகைகள் தென்பட்டன. கஸ்தூரி ரங்கன் அறிக்கை சம்பந்தமாக பல போராட்டங்கள் கேரளமெங்கும் நடைபெற்று வருகின்றன.

பெண்கள் மீதான் வன்முரை பெருகி வரும் சம்யத்தில் பெண்கள் திரைப்பட விழா படங்கள் நடைபெறும் திரையரங்குக்களுக்குச் சென்று வர  இலவச ஆட்டோக்களும், டாக்சிகளும்  விழா அமைப்பாளர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது பெண்களுக்கு கொஞ்சம் பாதுகாப்புணர்வை தந்தது ( அவற்றின் பெயர்கள் :She Taxi,   women friendly autos ) .மிதிவண்டி மன்றங்கள் என்ற பெயரில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் பதாகைகள், பூட்டப்பட்ட சைக்கிளுடன் காந்தி பூங்கா தெருவில் காணப்பட்டது  :     ” மிதி வண்டியைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடல் நலதற்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக  ” என்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன )
சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையிலான படம் என்ற வகையில் சென்ற ஆண்டின் தேசிய விருது பெற்ற         ” பிளாக் பாரஸ்ட் “  இவ்வாண்டு போட்டிப்பிரிவில் இடம்பெற்றிருந்தது. ஒருவகையில் மிட்டுவும், மிலியும் தங்கள் பெற்றோர்களால் கை விடப்பட்டவர்கள்விடுமுறையைக் கழிக்க  வீட்டிற்குச் செல்ல இயலாத சூழலில்  காட்டில் வசிக்கும் லூக் மாமாவிடம் செல்கிறார்கள். ஆதிவாசிகளின் வாழ்வியலும் காடும், விலங்குகளும்  அவர்களுக்குத் தரும்  அனுபவங்களும் அவர்களை வேறு உலகில் இருக்க வைக்கிறது. இந்த மலையாளப்படத்தில்  தலைநகரில்  தலைமை செயலகத்திற்கு அருகிலான சாக்குப்படுதாவீட்டில் பஞ்சான் பிறக்கிறான். மரங்கள் வெட்டப்படுவது, காடழிப்பு சம்பந்த்மாக அவன் அப்பா சிறைக்குப் போய் விட்டு விடுதலை ஆனபோது அவன் அப்பாவை வரவேற்க தலைநகருக்குச் செல்கிறான். அவன் அப்பா மலையில் காற்றாடிகள் போட்ட முதலாளிகளின் மிரட்டலால் காட்டிற்குள் தலைமறைவாகிறான்.அவனைத் தேடி பஞ்சான் இரு நகரக் குழந்தைகளோடு செல்கிறான். அவன் அப்பா சொன்ன தொன்மக் கதையொன்று  அவனை வழிநடத்துகிறது.

விழாவின் சிறந்த படத்திற்கான   பரிசைப் பெற்ற படம்    ” பர்விஷ்என்ற ஈரான் திரைப்படம் .தன் தந்தை மறுமணம் செய்து கொள்கிற போது  அவரின் சமையல் வேலை , வீட்டைப் பாதுக்காக்கிற வேலையில்  ஈடுபட்டிருந்த  அவரின் அய்மபது வயது மகன்  பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறான. வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான். அப்பா தனி வீட்டு வாடகை கொடுத்தாலும்  அவரின் ஆதிக்கம் அவனை இம்சிக்கிறது.தேடிக்கொள்கிற காவலாளி வேலையில் தன்னைப் பொருத்திக்கொள்வதில்லை. நாய்கள் செய்யும் தொல்லைகள் பார்ர்த்து விஷம் வைத்துக் கொல்கிறான்.குழந்தையொன்றை தள்ளிக் கொண்டு போய் குழந்தை வண்டியை நிராவதாரமாக்கிப் போகிறான்சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் உலர் சலவையகத்து இடத்து முதியவனைக் கொல்கிறான். மனம் விசித்திரமாய் செயல்படுவது அவனுக்கே தெரிகிறது. அவனின் விசித்திரம் பார்வையாளர்க்குப் பதட்டத்தை  ஏற்படுத்துகிறது.


பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த படமாக ஆஸ்திரேலியாவின்ராக்கெட்இருந்தது.மலைப்பிரதேசத்தில் பெரும் சாபத்துடன் வாழ்கிறான் அச்சிறுவன். அவன் அம்மாவின் இரட்டைப்பிரசவத்தில் தப்பித்தவன் அவன். அவன் உயிரோடு இருப்பதே சாபம் என்கிற பாட்டிஇன்னொரு  அணை கட்டப்படுவதற்காக  அவர்களின் மலைப்குதி  கட்டாயமாக kali செய்யப்படுகிறது.அம்மாவும் இடையில் இறந்து போகிறாள்கன்னிவெடிகள், ஆயுதங்கள் விரவிக்கிடக்கும் பகுதி. ஜீவாதாரத்திற்கே சிரமம். அவன் அப்பா மலைப்பகுதியை விட்டு  தொழிற்சாலை உள்ள நகரப் பகுதிக்குச் செல்லும் யோசனையில் இருக்கிறான். புது இடத்தில் நடக்கும் ராக்கெட் திருவிழா சிறுவனுக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த மழை கொட்டுகிறது. ராக்கெட் விடும் போட்டியில் சிறுவன் வெற்றி பெறுகிறான்.
பார்வையாளர்கள் துருக்கியின்கதை சொல்லியில் அமிழ்ந்து போனார்கள். அஷிஸ் புகழ் பெற்ற நாடக நடிகராக இருந்தவர்புகழின் உச்சியில் இருந்தபோது பல பெண்களால் கவரப்பட்டு புற்று நோய் உபாதையில் இருந்த மனைவியை நிராகரித்து விவாகரத்து வாங்கியவர். பின்னர் நாடக வாய்ப்புகள் குறைந்து போய் வயதான காலத்தில் பொது இடங்களில், மால்களில், உணவு விடுதிகளில் கதை சொல்பவராக வாழ்க்கையை நடத்துகிறார். குழந்தைகளுக்கு அவர் சொல்லும் கதைகளை விட அவருக்கு பின்னால் வந்து சிரிப்பூட்டும் கோமாளிகள் தேவைப்படுகிறார்கள். தன் மகளைத் தேடி பழைய வாழ்க்கைக்கு மன்னிப்பு கோருகிறார். ஆனால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு இரவில் இறந்து போகிறார்.

மிகுந்த ஏமாற்றம்  தந்த  திரு இயக்குனர்கள் கிம்கி டெக் ( கொரியா )  , நோர்பு  ( பூட்டான்.)                     கிம்கி டெக்  ( மோயிபஸ்படத்தில் கணவனின் பாலியல் நடவடிக்கைகளை கவனித்து வெறுப்புற்ற மனைவி அவனின் ஆணுறுப்பை வெட்ட முயல்கையில் அவன் தப்பிக்க மாட்டிக்கொள்கிற மகனின் ஆணுறுப்பு வெட்ட்டப்படுகிறது.அவன் பள்ளியிலும் வெளியிடங்களிலும் அவமானப்டுத்தப்படுகிறான். அறுவைச் சிகிச்சை மூலம் வேறொன்று பொருத்தப்படுகிறது. பாலியல் தொந்தரவு செய்யும் இன்னொரு பையனின் ஆணுறுப்பு வெட்டப்படுகிறது. இப்படியே தொடர்கிறது. பாலியல் சார்ந்த அருவருப்பான்  படத்தை பார்த்த அனுபவமே ஏற்பட்டது. வசனமே இல்லாமல் கதறல், முணகலுடன்  புதிதாய் வடிவமைத்திருந்தார். கேரள திரைப்பட விழாவில் இளம் வயதினர் பெரிதும் பங்கு கொள்வதுண்டு. இப்படத்தைப் பார்த்து மயங்கிய இளம் பெண்களும், அதிர்சியில் உறைந்து போன பெண்களும் கிம்கிடெக்கை சபித்தபடி வெளியேறினர். கிம்கிடெக் பார்வையாளர்களுடான சந்திப்பில் அவரின் சமீபத்திய படங்களின் வணிக ரீதியாய் கட்டமைக்கப்பட்ட வன்முறை குறித்து   சொன்ன சமாதானங்கள் ஒரு நல்ல கலைஞருக்குரிய அடையாளங்களாக இல்லை. தென் கொரியா உட்பட பல நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. கடைசியில் புத்தரிடம் போய் சரணடையச் செய்கிற  குறியீடுகள் அருவருப்பே தந்தன. னித்துவமான அழகும், தனித்துவமான வன்முறையும் என்னளவில் ஒன்றுதான்குடும்ப அமைப்பை உடலின் அமைப்பின் வழியாகச் சொல்கிறேன். பிறப்புறுப்பின் வழியாகச் சித்தரிக்க விரும்புகிறேன்.குடும்ப அமைப்பில் உருவாகும் வன்முறைகளைச் சொல்கிறேன். வன்முறைகள் உருவாகும் காரணங்களை என் படங்கள் சொல்கின்றனவாழ்க்கை வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையிலானது வன்முறையும் புத்தமதமும் வெவ்வெறாகத் தெரிந்தாலும் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன் என்றார்.
( கிம் கி டெக்கின் படம் திரையிடலுக்கு முந்திய படமாக அஞ்சலி திரையரங்கில் மறைந்த வங்க இயக்குனர் ரிதுபர்னோகோஷ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த  ” மெமரிஸ் இன் மார்ச்என்ற படம்  இருந்ததுஓரின பாலுணர்வு பற்றி நாசுக்காவும், விவாதமாகவும் உயர்ந்த தளத்தில் பேசிய படம். நமக்குத் தேவை ரிதுபர்னோகோஷ்கள்தான். கிம்கி டெக்குகள் அல்ல என்ற விவாதம் மேலெழும்பியது. ) பூட்டாவின் நோர்பு   இயக்கிய படம் சுனில் கங்கோபாத்யாயாவின் நாவலை மையமாகக் கொண்டதென்றாலும் தேவதாசிக்குடும்பம், வாரிசு, நிலப்பிரபு, எழ்ழைக்காதலன் என்று யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகளுடனே இருந்தது. மண்  சிறபங்கள் செய்ய்யும் தலித் பையன் தேவதாசிப் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அவளை கர்ப்பமாக்கி விடுகிறான். பண்ணையார் மகனுக்கு அவள் மேல் கண் என்பதால் அவள் அவனுடனும் கூடி அது  பண்ணையார் மகனின் சிசு என்கிறாள். தலித் சிசுவை பண்ணையார் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்இடையில் முஸ்லீம்கள் சிலைகளை நொறுக்குவது போன்றவை வலிந்து சொல்லப்பட்டிருக்கிறது.
இலங்கைப்படமும் தமிழ்ப் போராளிகளை கொச்சைப்படுத்தும் பல விசயங்களால் கட்டமைக்கப்பட்டிருந்ததுயாழ்ப்பாணம் புலிகள் காய்ச்சலில் மிதப்பதாக குழதைகளை அடிக்கும் ஒருவனை வைத்து ஒரு வசனம் புகுத்தப்படுகிறது. பிரபாகரன் இறந்ததைக் கொண்டாட பட்டாசு வாங்கப போகிற 3 இளைஞர்களின் விசித்திரப்போகுகள்  இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.பிரபாகரன் இருக்கிறாரா என்று அதில் ஒரு இளைஞன் கேள்வி கேட்கிறான் அதற்கு தமிழனின் தோட்டத்தில் கள்ளு குடிக்கும் ஒரு சிங்கள் போலிஸ்காரன் இப்படிச் சொல்கிறான். : அதெல்லாம் நமக்கெதுக்கு . குடித்து குடியை அனுபவிதமிழனான விவசாயி நிலத்திலிருந்து காய்கறிப் பொருட்களும் தானியமும் சுரண்டி எடுத்துப் போகிற போலீஸ்காரன், குழந்தைகள் பொம்மைத்துப்பாக்கிகள் போலவே துப்பாக்கிகளை பாவித்து கொலை செய்து கொள்கிறார்கள்.   ஆய்தங்களை உபயோகித்துப் பழக்கப்பட்ட இளைஞர்கள் சிங்கள் புலிகள், பாதித்தமிழர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். வெலிக்கடை சிறையில் பத்தாண்டுகள் வாசமிருந்து வெளிவந்து காலில் தென்படும் கத்தியை நிராகரித்து புது வாழ்வுக்குத் தயாராகிறார்கள்.


போர்ஹேவின் புத்தகமொன்றை மையமாகக் கொண்டு பிழைகள் புத்தகத் தயாரிப்பில் மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையிலும் கொண்டு வரும் குழப்பங்களைஎரட்ட “  என்ற படம்  சொன்னது. இப்பட இயக்குனர் இவான் வெஸ்கொவொ  25 வயது இளைஞர். இதில் அவர் கட்டமைத்திருக்கும் உலிஸ்சஸ் கதாபாத்திரம் காதல் வயப்பட்ட  ஆண்களின் பிம்பமாக இருக்கிறான் . யதார்த்தத்திலும் புனைவிலும் கலந்ததாக ஞாபகங்களுடன் திரிகிறான்  அவனின் ஞாபகங்கள்  அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன இந்தக்குழப்பங்களை கனவுகளாகவும், மனப்பிறழ்வாகவும் இந்த அர்ஜென்டைனா இயக்குனர் காட்டுகிறார். இந்தப்பட அனுபவம் ஒவ்வொரு முறை பார்க்கவும்   பாவ்லோ கொயா, போர்ஹே நூல்களின் வாசிப்பு போல புது அனுபவங்களைத் தரக்கூடியது  என்று   இவான் வெஸ்கொவொ நம்புகிறார்.காப்ரியல் மார்க்கூஸின்கலோனியலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை “  நாவலை மையமாகக் கொண்டிருந்த படம் யதார்த்தவாதப்பிரதியாக நாவலை மடித்துப் போட்டு விட்டது. முதிய கலோனல் ஒருவன் தம்து ஓய்வூதியம் பற்றிய கடிதம் வருமென்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்துக் கொண்டிருக்கிறான்.அவனது மனைவிக்கு ஆஸ்துமா வியாதி சிரமப்படுத்துகிறது. அவர்களின் ஆதாரமாக இருந்த மகன் வளர்த்த சண்டைக் கோழியின் சண்டைப் போட்டியில் சாகிறான்.ரசம் போனக் கண்ணாடிதான் கிழவிக்கு முகம் பார்க்கக் கிடைதத்துபாட்டிலில் நெஞ்சுத்தைலம் நோண்டி எடுத்து  நெஞ்சில் துடைக்க வேண்டியிருக்கிறது. இரண்டு இழுப்பு இழுத்து விட்டு மீதி சிகரெட்டை சிக்கனமாக வைக்க வேண்டியிருக்கிறது.கிறிஸ்துவ பாதிரியார் காட்டுக் படத்திற்கு இலவசமாய் போய் சங்கடத்துடன் உட்கார வேண்டியிருக்கிறதுபாதிரியிடம் மோதிரத்தை அடமானம் வைக்க வேண்டியிருக்கிறது. கோழிக்கான மக்கா சோளத்தை அவள் திஙக வேண்டியிருக்கிறது.செத்துப் போன மகனின் காதலி தரும் உணவுப் பொருட்களை மறுத்தாலும் வெட்கத்தை விட்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.கோழிச் சண்டையில் அது ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற பிரயாசை எங்கெல்லாமோ இழுத்துச் செல்கிறதுஇன்னும் 45 நாட்கள் இருக்கின்றன. கோழிச் சண்டைக்கு.அது ஜெயித்தால்தான் வாழ்க்கை மிச்சமிருப்பது போல் தென்படுகிறதுஇப்போதே சாப்பாட்டுக்கு வழியில்லை. என்ன செய்வது . எதைச் சாப்பிட கிழவி கேட்கிறான். அவன் சொல்கிறான் :                ” ஷிட் “   இந்த நாவலை மார்க்குவஸ் 1956-57ல் பாரிஷில்  வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது பாக்னரின் பாதிப்பில் எழுதியிருக்கிறார். பதினோரு முறை திருத்தி எழுதப்பட்ட நாவல்.அவர் உபயோகித்து வந்த டைப்ரைட்டர் இதனாலேயே தேய்ந்து விட்டதாம். கிடப்பில் அவர் போட்டிருந்த நாவலை சில நண்பர்கள் மெக்சிகோவில் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள்

போட்டிப் பிரிவில் பல மலையாளப்படங்கள் தென்பட்டன. தமிழ்திரையிடல் பகுப்பில்  ” சூது கவ்வும்இருந்தது. படத்தை முன்பே பார்த்து கிண்டலை பின்னணியில் தந்து கொண்டிருந்த தமிழ்ச சமூகம் பலருக்கு அருவருப்பையேத் தந்தார்கள். இலங்கை பிரசனை பற்றிய  சந்தோஷ் சிவனின் தமிழ்ப்படம்சிலோன்பட்டியலில் இருந்தாலும் திரையிடப்படவில்லை.              ( கோவா திரைப்பட விழாவில் ராமின்தங்க மீன்கள்மூன்று முறை திரையிடபட்டது. அதை அங்கு திரும்பத் திருமபக் கோரியவர்கள்  மலையாள பார்வையாளர்கள். கேரளாவில் தங்க மீன்கள் முன்பு வெளியிடப்படவில்லை .அதனால் ஆவலுடன் பார்த்தார்கள் ஆனால் திருப்திப்படவிலை )

தெரு படத்தயாரிப்புகள் “street film making என்ற தலைப்பிலான் 10 லத்தீன் அமெரிக்கப்படங்களின்  திரையிடல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வணிக நோக்கங்களைத் தகர்த்து கலகக் குரலும் கலாச்சார அம்சங்களும் இணைந்த தன்மையை இப்படங்கள் கோடிட்டன. மெக்சிகோ, அர்ஜன்டைனா, கொலம்பிய, கியூபா படங்கள் இப்பிரிவில் இடம்பெற்றிருந்தன. லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில்  க்யூபா படங்கள் அதன் தொண்ணுறைம்பது கால நீட்சியில் புரட்சிகர அம்சங்களையும், கலாச்சார மோதல்களையும் சரியாகவே உள்ளடக்கி இருந்தன.
லத்தீன் அமெரிக்காவில் விடுதலை இறையியலைக் கொண்டிருந்தவர்கள் அமெரிக்க அரசு  சர்வாதிகாரத்தால்  பல ஆண்டுகளாக படுகொலை செய்யப்பட்டார்கள்.விடுதலை இறையியலை விரும்பும் மக்கள் சோசலிச அரசாங்கஙகள் உருவாக முயற்சிப்பவர்களாக இருப்பார்கள் என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறதுஇதை சொல்லுமம்சங்களை இப்படங்களில் காண முடிந்ததுஇப்பிரிவில் இடம்பெற்றிருந்த படம்சிவப்பு இள்வரசி ” . இதில் வரும் கிளாடியா என்ற பெண்குழந்தைக்கு  புரட்சிக்காரியாக தன்னை விளையாட்டில் காட்டிக் கொள்வதில் விருப்பம் இருக்கும். புரட்சிகரகாலமொன்றில்  அவளின் குடும்பம் நிகாரகுவாலிருந்து அரசியல் காரணங்களுக்கு வெவ்வேறு ஊர்களுக்குப் போய் தங்க நேரிடுகிறது.சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவ்வப்போது தங்கி காவல்துறையின் கண்காணிப்பு தொடர்கிற போது  தப்பிக்க வேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் கிளாடியாவின் பயமும் அலைக்கழிப்பும் சிரமமாக இருக்கிறது. பள்ளியில் கோரஸ் பாட்டுப்பயிற்சியும் அரங்கேற்றமும் தடைபட்டுப் போவது அவளை இம்சிக்கிறது. கடைசியில் தந்தை சுடப்பட்டு கிடக்க பலநாட்கள் தலைமறைவாகி வந்த அம்மா வெளிநாட்டிற்குத் தப்பியோட விமான நிலையம் வந்தபின்னும் கிளாடியா கோரஸ்பாட்டுப் பயிற்சியிலேயே  மனம் திண்டாட சிரமப்படுகிறாள்.பெற்றோரின்  புரட்சிகர நடவடிக்கைகளால் குழந்தைகளின் மனம்  சஞ்சலமும் சிதைவும் கொள்வதை இப்படம் சித்தரித்தது. இதில் வருகிற சில குழந்தைகளின் பிரார்த்தனைகளை கவனியுங்கள் :  1. ” எங்க வீட்டுக்கு வாசிங் மிசின் வாங்கித் தா. வாசிங் மிசின் பிரச்சினையால்  அப்பா, அம்மா, சண்டை ஏற்படுகிறது. 2. நான் கண்ணாடி போடுவதை விட வேண்டும்  3. நான் நல்லா  உயாமா வளரணும்

குழந்தைகளுக்குள் இந்த வகைக் குழப்பங்களும் உள்ளன    .” அப்பா அம்மாவுக்கு துரோகம் செய்கிறாரா. அப்பா, அம்மா நாட்டுக்குத் துரோகம் செய்கிறாரார்களா ”  ” தொலை தூரம்என்ற இன்னுமொரு இப்பிரிவு படம் க்யூபா நாட்டு பொருளாதாரச் சிரமங்களை கொண்ட பின்னணி பற்றிப் பேசியது.   சோவியது யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னால  க்யூபா மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ளும் காலத்தை இப்படம் கொண்டிருந்ததுபொருளாதாரச் சிக்கலகள் காரணமாக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள்முப்பத்தைந்து வயது அனா தனது பிறந்த நாளில் நண்பர்களெல்லாம் தன்னை விட்டுப் பிரிந்து போய் விட்டது பற்றி கவலை கொள்வதை இப்படம் சித்தரிததது.

100 வருட இந்திய சினிமாவை ஒட்டி பல கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதையொட்டிய படங்களின் திரையிடல் பட்டியலில் தமிழின் கர்ணன், பாசமலர் இடம் பெற்றிருந்தனநூற்றாண்டு  திரைப்பட சுவரொட்டிகள் கண்காட்சியில் அரங்கேற்றம் 1973, தண்ணீர் தண்ணீர் 1981, கர்ணன் 1963  பட சுவரொட்டிகள் இடம் பெற்றிருந்தன.மலையாள திரைப்படத்திற்கு 75 வயதா, 85 வயதா  என்பது பற்றிய சர்ச்சை துவக்க விழாவிலேயே ஆரமபித்து விட்டது. இந்த சர்ச்சையில் இயக்குனர் கமல் அவரின்செல்லுலாய்ட்படத்தை திரைப்பட விழாவில் இருந்து விலக்கிக்கொள்ளப் போவதாகச் சொன்னார்அவரின்செல்லுலாய்டு”  படம்விகிதகுமாரன்”  என்ற 80 ஆண்டுகளுக்கு முந்தைய  படத்தைத்  தயாரித்த ஜே.சி டேனியலின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தது.
கமலேஸ்வர் முகர்ஜியின் இயக்கத்திலானமேகெ தாகா தாராபடம் மறைந்த வங்காள இயக்குனர் ரித்விகடக் பற்றியப் படமாக அமைந்திருந்தது. அவரின் முக்கிய படங்களின் ஒன்றினையே தலைப்பாக்கியிருந்தார்.ரிவிக்கின் படம் இந்திய பிரிவினைக்குப் பின் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்துhttp://puthu.thinnai.com/wp-admin/post-new.php கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்த அகதி குடும்பம் ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.கலாச்சார அரசியல் சூழலகளும் அம்சங்களும் பின்னிப்பிணைந்த படம் அதுகமலேஸ்வர் முகர்ஜி 1969ல் ரித்விக் கடக் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்  நிகழும் பின்னணியைக் கொண்டிருந்ததுமேற்கு வங்காளத்தின் பலவேறு அரசியல் சூழல்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக நகசலைட் இயக்கங்களின்  தாக்கம் பற்றிய விவாதமாகவும் இருந்தது. ரித்விக் கடக்கின் நாடக, திரைப்பட அனுபவங்கள்,, கட்சி அவர் மீது வைத்த விமர்சனங்கள், ரித்விக்கின் எதிர்வினை என்று இருந்தது.பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவரைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர் ரித்விக் மருத்துவமனையில் சக நோயாளிகளை வைத்து ஒரு நாடகம் போட அனுமதிக்கிறார். அப்போது பின்னோக்கி நடந்த பல விசயங்கள்  நாடகப் பாணியிலேயே அமைந்திருக்கின்றன. ரித்விக்கின் குடும்ப வாழ்க்கைச் சிதைவும், மன நோயால் மின்சார அதிர்வு சிகிச்சையால் சிதையும் அவரின் உடல் சிதைவும்  மனதினை  அதிர  வைக்கிறது. ரித்விக்கின் படத்தில் கதாநாயகி அலறும்       ” தாதா .. நான் உயிர் வாழ வேண்டும்என்று கதறுவதைப்போல்   ரித்விக் உயிர் வாழ வேண்டும் என்று பார்வையாளர்களும் கதற வேண்டியிருக்கிறது.


பல  உலகத் திரைப்பட விழாக்களில் அதிக பட்ச விருதுகளைப் பெற்றஸ்டில் லைப்”  என்ற  இத்தாலியப்படம் எழுப்பிய கேள்விகள் பல தளங்களில் வைத்துப் பார்க்கிறதாய் அமைந்திருந்தது. இயக்குனர் : உம்பர்டோ பசோலினி.. அனாதையாக செத்துக்கிடப்பவர்கள், உறவினர் என்று அறியப்படாமல் போகிறவர்களைப் புதைக்கும் ஜான் மே  குடியினால் செத்துப்போகிற ஒருவனின் உறவினர்களைத் தேடும்போது பல சுவாரஸ்யமான கதைகள் கிடைக்கின்றன   ஆனால் அவரின் சாவு விபத்தால் நிகழ்கிறதுயாருமற்ற பிணமாகத்தான் புதைக்கப்படுகிறார். இந்தத் தலைப்பு பெரும்பாலும் ஓவியங்களூக்குத்தான் இடப்படுவதுண்டு. கேரளத்திரைப்பட விழாக்கள் எப்போதும் மனதில் உறையும் சித்திரங்களாவதை இது போன்ற படங்கள் இந்தாண்டும் மனதில் உறைய வைத்தன.

சுப்ரபாரதிமணியன்

வெள்ளி, 21 மார்ச், 2014

இருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்

 

subrabha
முனைவர் பா. ஆனந்தகுமார், எம்.ஏ., எம்ஃபில், பிஎச்.டி.,
தமிழ்ப்பேராசிரியர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம் – 624 302.


தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போன்று கொங்கு நாடும் தனித்த சமூக, அரசியல், பண்பாட்டு வரலாறுடையதாய்த் திகழ்கின்றது. கொடுமணலும் நொய்யலாறும் கொங்கு நாட்டின் பழமையைப் பறைசாற்றுகின்றன. பழந்தமிழிலக்கியங்கள் தொட்டே கொங்குநாடு பற்றிய இலக்கியப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலான பெருங்காப்பியங்களிலும் வையாபுரிப்பள்ளு முதலான சிற்றிலக்கியங்களிலும் கொங்கு நாட்டைக் குறித்துப் பதிவுகள் உள்ளன. தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கொங்கு வட்டாரச் சமூகப் பண்பாட்டு வாழ்க்கை விரிவான சித்திரிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி இன்று எழுதுகிற பெருமாள் முருகன், மா.நடராஜன், சூரியகாந்தன் போன்றோர் கொங்கு வட்டாரத்தை, தமது புனைகதை உலகின் மைய அச்சாகக் கொண்டுள்ளனர். இவ்வரிசையில் சுப்ரபாரதிமணியன் கொங்கு நாட்டின் ஒரு பகுதியான திருப்பூர் வட்டாரத்தைத் தனது புனைகதைகளில் படம்பிடித்துள்ளார். ‘பின்னலாடை நகரம்’ அல்லது ‘பனியன் ஊர்’ என்று அழைக்கப் படுகின்ற திருப்பூர் நகரமே இவரது கதைகளின் கதாநாயகன். கொங்கு வட்டாரம் ஏராளமான மருதநில வயல் பகுதிகளைக் கொண்டது. என்றாலும் தற்காலத்தில் அது அதிக நகரப்பகுதிகளை உள்ளடக்கியதாகவும் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதியாகவும் திகழ்கின்றது. பெரும்பாலான அண்மைக்கால கொங்கு நாட்டுப் படைப்பாளிகள், கொங்கு வட்டாரக்கிராமிய சமூக வாழ்க்கையை, பண்பாட்டு வாழ்க்கையைத் தமது கதைக்குள் கொண்டு வருகிறபோது, சுப்ரபாரதிமணியன் கொங்கு வட்டாரத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றான திருப்பூரின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வாழ்க்கையைத் தனது கதைகளுக்குள் கொண்டு வருகிறார். சுப்ரபாரதிமணியன் நகரத்திணையின் உரைகாரர். இந்தியப் பெருநகரங்களின் இயந்திரமான வாழ்க்கையும் – குரூர சாதி – மத, அரசியல் கலவரங்களும், வேர்களையும் அடையாளங்களையும் இழந்து மனிதத்தைத் தொலைத்த முகங்களற்ற மனிதர்களும் சுப்ரபாரதிமணியனின் கதைகளை ஆக்கிரமித்துள்ளனர். சுப்ரபாரதிமணியன் இருநகரங்களின் கதைசொல்லி. ஒன்று, அவர் நெடுங்காலமாய்ப் பணியாற்றிய ஹைதராபாத், சிகந்திராபாத் எனும் இரட்டை நகரம். மற்றொன்று, தமிழகத்தின் ‘பருத்தி நகரம்’ திருப்பூர். ‘சுடுமணல்’ எனும் நாவலும் ‘நகரம் 90’, ‘வர்ணங்களில்’, ‘வேறிடம்’, ‘இன்னொரு நாளை’ ஆகிய குறுநாவல்களும் ஆந்திர மாநிலத்தின் இரட்டை நகரங்கள் சார்ந்து இயங்குபவை. தறிநாடா, சாயத்திரை, நீர்த்துளி ஆகிய மூன்று நாவல்களும் ‘கவுண்டர் கிளப்’, ‘இருளிசை’, ‘மரபு’ ஆகிய குறுநாவல்களும் திருப்பூர் வட்டாரத்தைச் சார்ந்தவை.
‘தறிநாடா’ அண்மையில் வெளிவந்த நாவல் (ஆகஸ்டு, 2013) என்றாலும் அது 1970 களிலிருந்த திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. கைத்தறிகளும் விசைத்தறிகளும் அழிந்து, பனியன் கம்பெனிகளால் நிறைந்து, திருப்பூர் பெரும் தொழிற்சாலை நகரமாய் உருமாறி, நொய்யல் ஆற்றைச் சாய ஆறாக மாற்றிய வரலாற்றை ‘சாயத்திரை’ நாவல் சொல்கிறது (முதல் பதிப்பு. 1998). 1990களின் திருப்பூர் நகர வாழ்வு இதில் முதன்மை பெறுகின்றது. ‘நீர்த்துளி’ நாவல் (டிசம்பர் 2011) இருபத்தோராம் நூற்றாண்டுத் திருப்பூர் நகரத்தைப் படம்பிடித்துள்ளது. இம்மூன்று நாவல்களும் திருப்பூர் நகரத்தின் தொடர்ச்சியான நாற்பது ஆண்டுக்கால வரலாற்றை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. திருப்பூர் நகரம், அதன் மரபான நெசவுத்தொழிலை, வளமான இயற்கை எழிலை இழந்து முதலாளித்துவத்தின் அகோரப்பசிக்கு இரையாகி, வாழ்விடமும் தொழிலிடமும் பிரித்தறியமுடியாதபடி பெரும் தொழிற்சாலை நகரமாகி மாசுபட்ட நகரமாக மாறிய வரலாற்றை இந்நாவல்கள் எடுத்துரைக்கின்றன.
மி
‘தறிநாடா’, ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ போல் எம்.வி.வெங்கட்ராமனின் ‘வேள்வித்தீ’யைப் போல் நெசவுத்தொழிலாளரின் வாழ்க்கைச் சிக்கல்களை எடுத்துரைக்கின்றது. கொங்கு வட்டாரத்தில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்த ‘தேவாங்கர் செட்டியார்’களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையை இந்நாவல் பதிவு செய்துள்ளது. மரபான கைத்தறி முறை மாறி விசைத்தறி திருப்பூர் வட்டாரத்தில் நுழைந்ததும் அதனால் கைத்தறி நெசவு நலிந்ததும் இந்நாவலின் பிரச்சினையாக அமைந்துள்ளது. விசைத்தறிகளின் வருகையும் பனியன் கம்பெனிகளின் நுழைவும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளை இந்நாவல் அனுதாபத்துடன் சித்திரிக்கின்றது. கைத்தறி நெசவுக்கான கூலி குறைக்கப்பட்டதை எதிர்த்து நெசவாளர்கள் நடத்திய ‘நெசவுக்கட்டு’ எனும் வேலைநிறுத்தப் பேராட்டம் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, அது மிகப்பெரிய போராட்டமாகத் திருப்பூர் நகரை உலுக்கிய ‘போராட்ட வரலாறு’ இந்நாவலின் மையக்கருவாக அமைகின்றது. போராட்டம், குறிப்பிட்ட சாதியினர் (தேவாங்கர்) நடத்திய போராட்டமாக அமைந்தமையாலும் அது வர்க்கப் போராட்டமாக உருவெடுக்காமையாலும் போராட்டம் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. மரபான நெசவுத்தொழிலாளர்களும் இப்போராட்டத்தினால் தங்களது உடைமைகளை, உறவுகளை இழந்து உயிர்ப்பலிக்கு ஆளாகிச் சிதைந்துபோகின்றனர். ‘ரங்கசாமி’ எனும் ஒரு நெசவாளியின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த நாவல் இயங்குகிறது. ‘நாகமணி’ என்கிற அவனது மனைவி, ‘மல்லிகா’, ‘ராதிகா’ என்கிற மகள்கள், ‘பொன்னு’ என்கிற அவனது பட்டதாரி மகன்; தருமன், சோமன், அருணாசலம், வெள்ளியங்கிரி, நடேஷ், கோவிந்தன், ஆறுமுகம், சிவசாமி என சகநெசவாளர்கள், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தோழர் ராஜாமணி, கல்யாணசுந்தரம் ஆகியோர் இந்நாவலின் முக்கியக் கதைமாந்தர்கள் ஆவர்.
கூலிக்குறைப்பை எதிர்த்து நெசவாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் அமைத்துப் போராடினாலும் பசியும் பட்டினியும் தடியடிகளும் சிறைவாசமும் உயிர்ப்பலிகளுமே மிஞ்சுகின்றன. இந்நாவலில் வரும் ‘அருணாசலம்’ போராட்டத்தைச் சாதியின் எழுச்சியாகப் புரிந்து கொண்டு செயல்படுகிறார். ஆனால், அதே நெசவாளர் இன சமூகத்தின் பணக்கார முதலாளிகள் தங்கள் வர்க்கவுணர்வை வெளிப்படுத்தி போராட்டத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர். ரங்கசாமி மகன் பொன்னு, போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களை ஆராய்கின்றான். சாதியாக அணி திரண்டு வர்க்கமாக உருமாறி, வர்க்க உணர்வு பெறாமையும் அரசியல் கட்சிகளின் ஆதரவின்மையும் இப்போராட்டத்தின் பின்னடைவிற்கான காரணங்களென உணர்கின்றான். நாவலின் இறுதியில் அவன் இடதுசாரி கொள்கைப்பிடிப்புள்ள வர்க்கவுணர்வு பெற்ற தோழனாக மாறுகின்றான். காலச் சுழற்சிக்கு ஏற்ப விசைத்தறிக்கும் பனியன் ஆலைக்கும் மாறுவதுதான் தொழிலாளர்களின் வாழ்க்கை இருத்தலிற்கான தீர்வென்பதை உணர்கிறான். தறிக்குழிகள், தறிநாடா, பாவு இலைகள், பில் வார்கள், கஞ்சிப்பசை, பல எண்களைக் கொண்ட நூல்கள், துண்டுத் துணிகள், ஜரிகை நூல் ஆகியவற்றுடன் தறி இயங்கும் ஓசையும் இந்நாவலில் நிரம்பிக் கிடக்கின்றன. நாவலில் வரும் ரங்கசாமி சபிக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொள்பவராகவும் அருணாச்சலம், பொன்னு ஆகியோர் சபிக்கப்பட்ட வாழ்க்கையை எதிர்த்துப் போராடுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். தேவாங்கர்இன கைத்தறி நெசவாளர்களின் சமூக வாழ்க்கை மட்டுமன்றி பண்பாட்டு வாழ்க்கையும் இந்நாவலில் விரிவான சித்திரிப்பைப் பெற்றுள்ளது. தேவாங்கர் செட்டியார்களின் குலதெய்வமான சௌண்டி அம்மனின் கோவிலும், கோவில் திருவிழாவும் சப்பரம் எடுப்பும் நாவலில் சித்திரிப்பைப் பெற்றுள்ளன. தேவாங்கர், நெசவுத் தொழிலை மேற்கொண்டமைக்குக் காரணமாகச் சொல்லப்படும் தேவாங்கர் புராணமும் நாவலில் ஓரிடத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது:
“பிரமன் பல புவனங்களையும் உயிர்களையும் படைத்தார். ஆதி மனுவை, பிரமன் ஆடைதர படைத்தான். மனு கடமையை நிறைவேற்றிய வேலை முடிந்தது என்று பரம்பொருளிடம் அய்க்கியமானோர் ஆடையின்றிப் பின்னர் தவித்தனர். சிவன் தேவலனைப் படைத்தார். திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய தாமரை நூலை வாங்கிச் சென்று ஆடை நெய்யச் சொன்னார். சிவன் இமயமலைக்குத் தெற்கே சகர நாட்டுத் தலைநகர் ஆமோதா உன் ஊராகும் என்றார். திருமால் தாமரை நூலைத் தந்து பாதுகாப்புக்காக சக்கராயுதம் ஒன்றைக் கொடுத்தார். வரும் வழியில் தங்கியிருந்த ஆசிரமத்தில் இருந்த அரக்கர்கள் சுய ரூபத்தை வஜ்ரமுடி, தூர்மவக்கிரன், தூம்ராச்சன், சித்திரசேனன், பஞ்சசேனன் என்று ஐந்து பேராக மாறி தேவலரிடம் இருந்து நூலைப் பறிக்க முயன்றனர். சக்கராயுதத்தை அவர் ஏவ அரக்கர்கள் நிலத்தில் விழுந்த ரத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கில் தோன்றிப் போரிட்டனர். சக்கராயுதம் செயலற்றுப் போனது. தேவலர் தனக்கு உதவ தாயார் சண்டிகையை எண்ணிப் பிரார்த்தனை செய்தார். ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் கிரீடத்துடன் தோன்றினாள் சௌடேஸ்வரி. சூலம், சக்கரம், கத்தி, கதாயுதம் என்று நான்கு கைகளில் மின்னின. அரக்கர்களின் ரத்தம் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்து வர்ணமாய் இருந்தன. தேவலர் தன்னிடம் இருந்த நூலை அய்ந்தாய் பிரித்து வர்ணங்களில் நனைத்துக்கொண்டார். எஞ்சிய அரக்கர்களின் ரத்தத்தை பூமியில் விழாது சிம்ம வாகனம் குடித்து முடித்து சிலிர்த்தது. அப்போது அதன் காதுகளில் ஒட்டியிருந்த இரு துளி ரத்தம் கீழே விழுந்து அதிலிருந்து இரு அரக்கர்கள் தோன்றி வணங்கினர். அவர்களுக்கு மாணிக்கத்தார்கள் என்று பெயரிட்டு தேவலரின் பணிக்கு வைத்துக்கொண்டார். “நான் சூடாம்பிகை. நீயும் இன்று உனக்கு நேர்ந்த ஆபத்தில் இருந்து மீண்டாய். எனவே நம் இருவருக்கும் இதுவே பிறந்த நாளாகும்.” (பக். 5-6)
ரங்கசாமி தனக்குத் தொழிலில் சோதனை வருகின்ற போதெல்லாம் புராணத்தில் வரும் தேவலர், வந்து தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்று நினைக்கின்றார். தறி ஓடாமல் இருக்கின்ற பொழுது தேவதச்சன் உருவாக்கிய இத்தறி புழுதிபடிந்துக் கிடப்பதை எண்ணி வருந்துகின்றார். நாவலின் மொழி, பெரிதும் பொதுவழக்கு மொழி சார்ந்து விளங்குகின்றது. சில இடங்களில் தேவாங்கர் செட்டியார் மக்கள் பேசுகின்ற கன்னட மொழி வழக்கும் கலந்து இடம்பெறுகின்றது.
“நடேஷ் மாமா நம்மப்ப எல்லி” என்கிற மழலையால் வீதியின் ஒரு வீட்டு முகப்பைப் பார்த்தான்… நாடார் டீ அங்கிடிலி இந்ததே” என்றபடி நாலு வயசை எடுத்து முகத்தில் முத்தம் ஒன்று இட்டபடி நடந்தான்.” (ப.161)
மக்கள் வழக்கு மொழியைப் போன்று, “நெய்யறவன் வூட்லே கோமணம். கொல்லன் தெருவிலெ ஊசிப் பஞ்சம்” முதலான பழமொழிகளும் நாவலில் இடம்பெறுகின்றன.
நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நெசவாளியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பிறப்பும், சாதியும், தொழிலும் இணைந்த நிலவுடைமைச் சமூகத்தின் நிலைப்பாடு, நாவலில் வரும் நெசவாளர்களின் மனோபாவத்தில் நீங்காமல் இடம்பெற்றிருக்கிறது. குழந்தையைக் குளிப்பாட்டும் பொழுதுகூட ‘இந்தக் கைதான் நெசவு நெய்து என்னைக் காப்பாற்றும். இந்த கால்தான் நெசவு நெய்து என்னைக் காப்பாற்றும்’ எனச் சொல்லி குளிப்பாட்டு கின்றனர். தறிக்குழிகளில் கால் எட்டும் அளவிற்கு வளர்ந்தவுடனே குழந்தைகளைத் தறிகளில் உட்காரவைத்து விடுவார்கள். ஆனால், நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நெசவாளியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற சமூக விதியை நாவலில் வரும் பொன்னு மாற்றுகிறான். இந்நாவல் முழுக்க நெசவாளர் குடியிருப்புகளைப் பற்றியதாக இருந்தாலும் அவ்வாழ்க்கை தனித்துக் காட்டப்படாமல் கவுண்டர், பூம்பூம் மாட்டுக்காரர் முதலான பிற சமூகப் பிரிவினருடன்  அவர்கள் கொண்டிருக்கிற சமூக உறவுகளும் வெளிப் படுத்தப்பட்டுள்ளன. நெசவாளர்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக சீட்டாட்டமும், பெருக்கான் (பெருச்சாளி) வேட்டையும் இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. சமகால நெசவாளிகளின் வரலாறு மட்டுமின்றி வெள்ளையர் கால நெசவாளர் வரலாறும் அப்போதிருந்த கூலிப் பிரச்சினையும் நாவலில் ஓரிடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. ஆறுமாத காலம் நடந்த கூலி உயர்விற்கான போராட்டத்தில் ஏற்பட்ட பட்டினியைச் சமாளிக்க, சில நெசவாளர்கள் கேரளத்திற்கு அரிசி கடத்துகின்ற தொழிலைச் செய்து அவலத்தில் மாட்டிக் கொள்கின்றனர். நெசவாளர் போராட்டம் தறிகளை வெறுமையாக்கி மூளியாக்கியது போன்று நெசவாளர்களின் உடம்பும் மனதும் சந்தோஷங்களும் மூளியாகிப்போகின்றன. ஒரே ஜாதி என்றாலு, நெசவு நெய்கிறவன் கீழ் ஜாதி, நெய்யாத முதலாளி மேல்ஜாதி என்கிற உண்மையை நெசவுத்தொழிலாளர்கள் இந்நாவலின் இறுதியில் உணர்ந்துகொள்கின்றனர். போராட்டமானது, அரசியல் சார்பும் தத்துவச் சார்பும் பெறுகின்றபொழுதுதான் அது வெற்றிபெறும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டம் என்கிற வாள், மக்கள் பட்டறையில்தான் தீட்டிச் செழுமையாக்கப்பட முடியும் ஆகிய சமூக உண்மைகளை நாவலின் இறுதியில் உழைக்கும் நெசவாளர்கள் உணர்ந்துகொள்கின்றனர். நெசவாளர் போராட்டத்தை இலட்சியப்படுத்தி அற்புதப் புனைவாகக் காட்டாமல், தன்னெழுச்சியாகப் பிறந்த போராட்டத்தின் பலன்களையும் பலவீனங்களையும் நாவலாசிரியர் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மிமி
பறவைகளின் கூட்டொலிகளைப் போன்று கைத்தறிகளின் விசை ஒலிகளால் நிரம்பி வழிந்த தறிபூமியான திருப்பூர் எனும் சிறு நகரம், பேரிரைச்சல் கொண்ட இயந்திரங்கள் இயங்கும் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த தொழிற்பேட்டையாக உரு மாறுதலை ‘சாயத்திரை’ நாவல் விவரிக்கின்றது. கைத்தறிகள் ஓடிய வீடுகள், விசைத்தறிகளின் கிட்டங்கிகளாக பனியன் கம்பெனிகளாக மாறுகின்றபோது, கைத்தறிகளும் கைத்தறி நெசவாளர்களும் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வெளியிலிருந்து வந்து பனியன் கம்பெனிகளைத் தொடங்கிய புதுப்பணக்காரர்கள் நகரத்தை ஆட்டிப்படைப்பவர்களாக, அதிகாரம் நிறைந்தவர்களாக மாறுகின்றனர். இயந்திரமயமாதலும் முதலாளித்துவமும் இயற்கையின் மீதும், மனித உழைப்பின் மீதும், மனித உறவுகள் மீதும் மனிதர்கள் கொண்டிருந்த மரபான அக்கறையை, மனித நேயப் பண்பாட்டைக் காணாமல் போகச் செய்கின்றன. உயிர்த்தன்மை கொண்ட இயற்கையும் மனிதர்களும் பண்டமாகப் பாவிக்கப்பட்டு, அவர்கள் பெரும் சுரண்டலுக்கும் நுகர்வுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பனியன் தொழிற்சாலை இயந்திரங்களில் நெய்து, கசக்கி, சாயமேற்றி வெளியே துப்பப்படும் பனியன்களைப் போல உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களும் சக்கையாய்ப்பிழிந்து வெளியே துப்பப்படுகின்றனர். சோழர் காலந்தொட்டு இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உயிர் உணவான நொய்யலாறு தன் உயிர்த்தன்மையை இழந்து பலவர்ண சாயங்கள் ஓடும் சாய ஆறாக – சாக்கடையாக மாறுவதும் இந்நாவலில் எடுத்துரைக்கப்படுகிறது. பெரும் தொழில் நகரத்தின் உருவாக்கத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவது இந்நாவலின் மையப்பிரச்சினையாக இருக்கிறது. அதன்வழி, சுற்றுச்சூழல் குறித்த ஓர் அக்கறையை இந்நாவல் முன்னெடுத்துள்ளது.
பனியன் கம்பெனி முதலாளி சாமியப்பன், அவனது தொழிற்சாலையில் வேலை பார்க்கின்ற பக்தவத்சலம், நாகமணி, ஜோதிமணி இவர்கள் கம்பெனிக்கு எதிரிலிருக்கும் பல வாடகை வீடுகளைக் கொண்ட கட்டடத்திற்குச் சொந்தக்காரரான செட்டியார், ஜட்டி கம்பெனி முதலாளி பெரியண்ணன், சாயத்தொழிலில் ஈடுபட்டு உடம்பெல்லாம் புண்ணாகி அழுகிப்போன வேல்சாமி, அவனது மனைவி சௌந்தரி, நாகனோடு நேசம் பாராட்டி அவனோடு சதுரங்கம் விளையாடுகின்ற குழந்தைத்தொழிலாளி குமார் ஆகியோர் இந்நாவலின் முதன்மைக் கதை மாந்தர்கள் ஆவர். பனியன் தொழிற்சாலைத் தொழிலாளியான பக்தவசலம் மேலை நாட்டிலிருந்து வரும் பத்திரிகைக்காரியான ரோசாவிற்குத் திருப்பூர் நகரத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் காட்டுவதுடன் இந்நாவல் தொடங்குகின்றது. திருப்பூர் நகர சாயப்பட்டறைகளுக்குச் சுற்று கிராமங்களிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக்கொண்டுவரும் தண்ணீர் லாரிகள், தண்ணீர் லாரிகளில் அரைபட்டுக் கூழாகும் நாய்கள் – கழுதைக் குட்டிகள் – ஆடுகள், சாயப்பட்டறைகளில் வெடித்துச்சிதறும் கொதிகலன்களோடு வெடித்துச்சிதறும் மனிதர்கள் – சாய நீரைக் குடித்து காலிழுத்துச் சாகும் நாய்கள் – சாயத்தைக் கலந்து கலந்து உடலெல்லாம் சாயமாகி சீழ்வடியும் புண்ணாகி வேதனை தாங்காது சாராயம் குடித்து வேதனையை மறக்கும் மனிதர்கள் (வேலுசாமி), உடம்பெல்லாம் புண்ணான கணவனின் காம இச்சைக்கு ஆளாக மறுத்து, தூக்கில் தொங்கும் இளம் பெண்கள் (சௌந்தரி) – குடிநீருக்காக ஓடியலையும் மனிதர்கள் – குடிநீர்க் குழாயில் சாக்கடை புகுந்துவிட்டதால் ஓங்கரித்து வாந்தியெடுக்கும் மனிதர்கள் – சாயநீர் ஊறும் கிணறுகள் – சாயச் சாக்கடைகள் ஓடும் தெருக்கள் – பனியனில் லேபிள் தைக்கும்போது கண்ணில் ஊசி தைத்து அவதிப்படும் சிறுவன் – என நாவல் முழுவதும் மனிதத் துயரங்களும், துயரங்களில் அல்லல்படும் மனிதர்களும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். நாவல் முழுவதும் மனித சோகமே கவிந்து நிற்கிறது. சாயம் விஷநாகமாகச் சீறி திருப்பூர் நகர மக்களையும் நாவலை வாசிக்கும் வாசகர்களையும் அச்சுறுத்துகின்றது. சாயத்தால் புனிதச் சடங்குகள் செய்யும் கிணறு உட்பட அனைத்துக் குடிநீர் ஆதாரங்களும் மாசுபட்டு, மாசுபட்ட நொய்யல் ஆற்றால் சாயம் பூத்த விளைநிலங்கள், சாயங்கள் அப்பி கருமையடைந்த பயிர்கள் எனத் திருப்பூர் நகரம் மட்டுமன்றி நகரத்தைச் சுற்றியுள்ள விளைநிலங்களும் மாசுபட்டுப் போனதை நாவல் சித்திரிக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் நிறைந்து சாக்கடைகளால் சூழப்பட்டு, கால்வைத்து நடமாட முடியாது, மனிதர்கள் வாழ்வதற்கு அருகதையற்ற நகரமாக கோர முகத்துடன் திருப்பூர் மாறிவிட்டதை இந்நாவல் பதிவு செய்கின்றது. சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் நீர் சாக்கடையாகி, பேராறாகி, சிற்றாறாகி, சாயத்திரைகள் எழுப்பும் பெருங்கடலாகிறது. அக்கடலில் எதிர்நீச்சலிட முடியாமல் மனிதன் மெல்ல மூழ்கிச் சாகிறான்.
பனியன் தொழிற்சாலைகளில் இரைச்சல்களுக்கும் சாய ஆற்றின் வீச்சங்களுக்கும் மத்தியில் கொங்கு நாட்டுப் பண்பாட்டுச் சாறுகள் மெல்லிய இழையாக ஓடத்தான் செய்கின்றன. வாடகை வீடுகளின் கட்டடச் சொந்தக்காரரான செட்டியார் பாத்திரம் வழியாக, தேவாங்கர் இனப்பண்பாடு வெளிப்படுகிறது. செண்டியம்மன், சௌண்டியம்மன் சப்பரம், சப்பரத் திருவிழாவில் அலகுக்கத்திகளை மார்பில் அடித்தாடும் தேவாங்கச் செட்டியார்கள்,
“அம்மனையெ யாந்துரு கோபா…”
“எதாச்சும் வாக்கு கொட்டுடறத்தா நா எந்திருவ அம்மா…”
“அம்மா எதாங்கெ இத்துருன்னு மாத்து ஏளு. நின்னு மாத்துதா நவியெ வாக்கு”
“அம்மா நீ யாந்துரு ஏளுத்தியோ அதுனக் கேளுத்தேரே… ஏளும்மா…”
என வரும் கன்னட மொழி உரையாடல்கள், செட்டியார் பாத்திரம் வழி வெளிப்படுகிறது. ‘நாகன்’ பாத்திரம் கொங்கு நாட்டின் கிராமியப் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. தெருக்கூத்தில் ஆர்வமுள்ள சாத்துக்கட்டுகிற நாகனின் நினைவுகள், பேச்சுக்கள் வழி கன்னிப்பெண்கள் நடத்தும் பொறிமாத்துச் சடங்கு, பூப்பொறிக்கிற நோன்பு, நெட்டுக்கும்மி, வட்டக்கும்மி, வைகுந்தக்கும்மி, கொங்கு நாட்டுப்புற மக்களின் நாவுகளில் அதிர்ந்து எழும்பும் ‘ஓலையக்கா கொண்டையிலே ஒரு கூடைத் தாழம்பு…” எனும் பாடல் ஆகியன வெளிப்படுகின்றன. புருஷனுக்காக உயிர் துறந்த வீரமாத்தியம்மன் கதை, வெற்றிலை வியாபாரத்திற்குப் போன அம்மிணியிடம் தவறாக நடக்க முயன்ற ஓர் ஆடவன் அவளைத் தொட முயல்கையில் அவள் வலது கையில் ஆக்கை அரிவாளுடன் கல்லாகி ‘வெத்திலைக்கன்னிமார்’ ஆன கதையும் நாகனால் இந்நாவலில் எடுத்துரைக்கப்படுகின்றன.
மிமிமி
‘சாயத்திரை’ நாவல் திருப்பூர் நகரம் சாய நகரமாக மாறிய வரலாற்றைச் சொல்கிறது. என்றால், சுப்ரபாரதிமணியனின் ‘நீர்த்துளி’ நாவல் சாயக்கழிவுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தையும் அரசாங்கத்தின், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களை, விளைவுகளைச் சொல்கின்றது. திருப்பூரைப் பற்றிய முன்னர் விளக்கிய இரண்டு நாவல்களிலும் மனிதர்கள் இயங்குகின்ற புற உலகம் மையப்பட்டது என்றால், ‘நீர்த்துளி’ நாவலில் திருப்பூர் நகர மாந்தர்களின் அக உலகம் மையப்பட்டுள்ளது. வறுமையில், பொருளாதாரச் சீரழிவால், மனித உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களால், முறிவுகளால் தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்தும் சிறு நகரங்களிலிருந்தும் திருப்பூருக்குப் புலம்பெயர்ந்துள்ள மனிதர்களின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கின்றது. புலம்பெயர்ந்து வந்த மனிதர்களின் பெருக்கத்தால் புதிதாய் முளைத்த புறநகர்ப்பகுதிகளும் அதன் குடியிருப்புகளும் – தனித்தனியாக நபர்கள் சேர்ந்து வாழும் ஆடவர் – மகளிர் விடுதி இந்நாவலின் பின்புலமாக ஆகியுள்ளன. புதிய புதிய வேலைகளுக்கும் புதியபுதிய தொழில் நிறுவனங்களுக்கும் மாறிச்செல்கின்ற மனிதர்கள் நிரந்தர மணவுறவுகளின்றி கள்ள உறவுகளிலும் ‘இணைந்து வாழ்வதிலும்’ (லிவீஸ்வீஸீரீ tஷீரீமீtலீமீக்ஷீ) ஈடுபடுவதை இந்நாவல் விவரிக்கின்றது. தொழிற்களங்கள் பெண்களுக்கு எதிரானவையாகவும் பாலியல் வன்முறைக் களங்களாக விளங்குவதையும் ‘சுமங்கலி’த் திட்டத்தால் பெண்களின் உழைப்புச் சுரண்டப்படுவதையும் இந்நாவல் சுட்டிக்காட்டுகிறது. வெவ்வேறு ஊர்களிலிருந்து பொருளாதாரத் தேவைகளுக்காகத் திருப்பூருக்குப் புலம் பெயர்ந்து வந்து விடுதியறைகளில் வசிக்கும் திருமணம் ஆகாத இளைஞன் ‘லிங்க’மும் கணவனைப் பிரிந்து வாழ்கின்ற ‘கலா’வும் சேர்ந்து வாழ (லிவ்விங் டு கெதர்) தொடங்குவதிலிருந்து இந்நாவல் தொடங்குகின்றது. சூழல் மாசுக்கெதிரான போராட்டத்தால் ஏற்படுகின்ற வேலைநிறுத்தப் போராட்டங்களும், தொழில் நிறுவனங்களின் கதவடைப்பும் மூடல்களும் இவ்விருவரது வாழ்க்கையைப் பாதித்து அவர்களை அலைக்கழிக்கின்றன. இவர்கள் மட்டுமின்றி, இந்நாவலில் வரும் பலரும் இப்போராட்டத்தினால் அலைக்கழிக்கப்படுகின்றனர்; அல்லல் களுக்கு உள்ளாகின்றனர். சிக்கந்தர், லியாகத், ஜேக்கப், சகுந்தலா, பரமேஸ்வரி, சுப்ரமணியன் போன்றோர் இந்நாவலில் வரும் முதன்மைப் பாத்திரங்கள். ஆறும், குளங்களும் கிணறுகளும் மாசடைந்ததைப்போல் மனித மனங்களும் நகர வாழ்வில் மாசடைந்து போகின்றன. சுற்றுக்கிராமங்களிலிருந்து வேலைக்கு அள்ளிவரப் படுகின்ற தொழிலாளர்கள் சாலை விபத்தில் இறந்து போவதும், வாழ முடியாது தற்கொலை செய்து கொள்வதும் அந்நகரத்தின் அன்றாட நிகழ்வாக இருக்கின்றது. பின்னலாடை வணிகமும் பெரும் சூதாட்டமாக மாறுகின்றது. பரமபத ஏணியில் ஏறுகின்றவர்கள் விஷப்பாம்பால் கொத்தப்பட்டு பாதாளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், நகரம் என்கிற அரக்கன் எல்லா உயிர்களையும் வாரி விழுங்கிக்கொண்டு துள்ளித் திரிகிறான். நகர வாழ்வின் அரக்கத்தனம் லிங்கத்தின் கனவில் இவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறது.
“அவன் அந்தக் கிணற்றின் அருகில் நின்றிருந்தான். கிணறு முழுக்க பிணங்களாய் வழிந்தது. உடம்பு மூழ்கியிருக்க எல்லோர் தலைகளும் விழி பிதுங்கல்களுடன் வெளியே தெரிந்தன. அதில் சிக்கந்தர் தலை கோரமாக இடதுபுற முகத்தில் ரத்தம் தோய்ந்திருந்தது. லியாகத், சுப்ரமணியன் போன்றோரின் தலைகளும் இருந்தன. அவன் தலை இருந்ததா என்று சரியாக ஞாபகம் வரவில்லை. கிணற்றுக்குள் இவ்வளவு பிணங்கள் எப்படி வந்தன? இவ்வளவு பிணங்கள் மிதக்கும் இது கிணறா அல்லது ஏதாவது குளமா?” (ப.170)
குடியும் கும்மாளமும் பனியன் ஊரின் கலாச்சாரமாகிவிட்டதையும் இந்நாவல் காட்டுகின்றது. சாயப்பட்டறைக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு, கலைஞரின் ஆட்சி முடிந்து அம்மா ஆட்சிபீடம் ஏறுதல், சமச்சீர்க் கல்விப் பிரச்சினை என்கிற தொடர்ச்சியான தமிழக சமூக அரசியல் நிகழ்வுகள் நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அகோரப் பசியோடு மண்ணையும் மனிதர்களையும் விழுங்குகின்ற முதலாளித்துவத்தின் அதிக பொருளாதார வேட்டைக்கும் நுகர்வுக்கும் எதிராக,
“பசியாற சாப்பிடுவதோ தாகம் தீரக் குடிப்பதோ தவறில்லை. ஒரு வண்ணத்துப் பூச்சி பூவிலிருந்து அது வாடாமலும் கசங்காமலும் உறிஞ்சுவது போல் உங்கள் வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்”    (ப.136)
என்பது இந்தநாவலின் சமூகஅறமாக உரத்தகுரலில் ஒலிக்கிறது. திருமண பந்தமின்றி இணைந்து வாழ்ந்த லிங்கமும் கலாவும் இணைந்து வாழ்தல் முறையின் பொருளாதார, உளவியல் சிக்கல்களை உணர்ந்து பிரிவதோடு நாவல் முடிவடைகிறது. “நொய்யலில் இனி ஒரு சொட்டுச் சாயம்கூட விழ அனுமதிக்க மாட்டோம்” என்ற விவசாயியின் குரல் நாவலின் இறுதி வாசகமாக அமைகின்றது. நொய்யலாற்றின் சாயக்கழிவுச் சிக்கலை விட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலும் காமமும் அது சார்ந்த உளவியல் சிக்கல்களுமே இந்நாவலில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நகரவாழ்வில் திருமணமாகாத ஆணுக்குத் ‘தனிமை’யும் பெண்ணுக்குப் ‘பாதுகாப்பின்மை’யும் உளவியல் சிக்கல்களாகி அச்சுறுத்துவதை இந்நாவலின் தலைமை மாந்தர்களான லிங்கமும் கலாவும் வெளிப்படுத்துகின்றனர். தனிமைத் துயரில் சிக்கித் தவிக்கும் லிங்கம், தான் ஒரு பூச்சியாக உருமாறுவதாக உணர்கிறான்.
“பூச்சியாக மாறிக்கொண்டிருந்தான் அவன். களிமண் உடல் குழைந்து நீராகிக் கொண்டிருந்தது. உணவுக்குழாய் ஒரு புல்லாங்குழல் போல் காற்றை விசிறிக் கொண்டிருந்தது. சப்தமில்லாமல் காதை ஏதோ அடைத்து விட்டுப்போனது. சாரைப்பாம்பு திரும்பித் திரும்பிப் படுப்பதுபோல் குரலை மிரட்டிக்கொண்டு வந்தது. கபகப எரிச்சல் மூச்சில் பற்றும் தீ. தீ வாசனை அவனின் உருகும் கால்களின் பக்கம் சேர்ந்திருந்தது. வழிக்கலாமா என நினைத்தான். வேண்டாம் இப்படியே கிடக்கலாம். உடம்பு உருகி ஒரு பூச்சியாய் உடம்பில் ஒட்டிக் கொள்ளும்வரை கிடக்கவேண்டியதுதான்” (ப.18) இப்பகுதி காஃப்காவின் ‘உருமாற்றம்’ நாவலை நினைவுபடுத்துகிறது.
மிக்ஷி
கொங்கு வட்டாரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல்களாக ‘கவுண்டர் கிளப்’, ‘இருளிசை’, ‘மரபு’ ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. ‘மரபு’ குறுநாவல் ‘தறிநாடா’ நாவலின் ஒரு சிறு பகுதியாகும். ‘இருளிசை’, கிராமத்திலிருந்து நகரத்திற்குப் புலம்பெயர்ந்த இசைக் கலைஞன் ஒருவன், தான் பிறந்து வளர்ந்த நெசவுத் தொழில்சார்ந்த கிராமமான ‘செகடந்தாழி’க்குச் சென்று கடந்த காலத்தை அசைபோட்டு மீள்வதை விவரிக்கிறது. ‘கவுண்டர் கிளப்’, கிராமத்தில் வாழும் நம்பியா அழகுக் கவுண்டர் தனது இனத்தின் மரபான வேளாண் தொழிலிலிருந்து தேநீர் கடைத் தொழிலுக்கு மாறியதையும் கனகம் என்கிற இளம் விதவையோடு கொண்ட கள்ளக் காதலையும் விவரிக்கிறது. இக்குறு நாவலின் நாயகனான நம்பியா அழகுக் கவுண்டர் கொங்கு வட்டார மொழியின் இலாவகத்தையும், சாதுரியத்தையும், நக்கலையும் பெற்றவராகத் திகழ்கிறார். அவரது உரையாடலில் வெளிப்படும் வாழ்வியல் பழமொழிகள் சில:
“சாப்படறப்பவும், பொம்பளையோட தனியா இருக்கறப்பவும் வெக்கத்தே விட்டவனுக்குதா சொகம் கிடைக்கும்”
“பொன்னங்கன்னிக்கு புளியிட்டு ஆக்கினா உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்”
“முருங்கக்கான்னா முறிந்ததாம் பத்தியம்”
“வெள்ளப்பூண்டு பெத்தவளவிட நல்லது செய்யும்”
“மறுசாதம் போட்டுக்காதவ மாட்டுப் பொறப்பு”
கொங்கு வட்டார விவசாயக் கிராமங்களில் நிகழ்த்தப்படும் மலைக்கஞ்சி எடுத்தல், கொடும்பாவி கட்டி இழுத்தல், பாவைக் கலத்தாடுதல், கும்மிக் கொட்டுதல், ஓலையக்கா பாட்டுப் பாடுதல் ஆகிய நாட்டுப்புறப் பண்பாட்டு நிகழ்வுகள் இக்குறு நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுப்ரபாரதிமணியனின் நாவல், குறுநாவல்களுள் இப்படைப்பு மட்டுமே கொங்கு வட்டாரக் கிராமியப் பண்பாடு சார்ந்து அமைந்துள்ளது. ஏனைய படைப்புக்கள் முன்பே குறிப்பிட்டபடி ‘நகரத்திணை’ சார்ந்தவை.
க்ஷி
சுப்ரபாரதிமணியனின் திருப்பூர் நகரம் குறித்த நாவல்கள் தொழில் மயமாதலின் விளைவாக நிலவியலிலும் மனித வாழ்விலும் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கின்றன. ஆயின் சிகந்திரபாத் குறித்த சுடுமணல், நகரம் 90, வர்ணங்களில் ஆகிய நாவல் – குறுநாவல்கள் பெருநகரத்தில் மனிதநேயமும் மனிதவுணர்வுமற்று இயந்திரமாகிப் போன மனிதர்களைச் சித்திரிக்கின்றன. ஆந்திர மாநிலத் தலைநகரம், மதம் சார்ந்த பண்டிகை நாட்களில் கலவர பூமியாக மாறுவதும், மரணம் நகரமனிதர்களால் மிகச் சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ளப்படுவதும், மிகக்கொடூரமான கொலை கூட சில நிமிடங்களில் துடைத் தெறியப்பட்டு நகரம் இயல்பாக மாறி இயங்குவதும் இப்புனைகதைகளில் சித்திரிக்கப் படுகின்றன. இப்படைப்புக்களில் வரும் கதைமாந்தர்கள் எப்போதும் அச்சத்தாலும் பயங்கரத்தாலும் பீடிக்கப்பட்டு பதட்டத்துடன் அலைந்து திரிகிறார்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தமது இன-மொழி பண்பாட்டு அடையாளங்களால் இன்னல்களுக் குள்ளாவதும் இப்புனைகதைகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சுடுமணல் நாவல் மகேந்திரன் என்ற வேலை இல்லாத இளைஞனின் நோக்கு நிலையிலிருந்து ஹைதராபாத் நகரத்தின் பதற்றம் மிகுந்த நாட்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ‘பந்த்’ நடப்பதற்கு முன்னும் பின்னுமான நாட்கள் நாவலில் விவரிக்கப் பட்டுள்ளன. கலவரத்தின் போது நிகழும் மனிதவுயிர்களின் மரணத்தை எதிர்கொள்ளும் நகரத்துமனிதர்களின் இதயமற்ற மனோபாவமும், ஈரமிக்க கதைத்தலைவன் மகேந்திரனின் மனமும் முரண்பட்டு நிற்பதுதான் நாவலின் மைய இழுவிசை. நகரத்து மனிதர்களின் இதயத்தை மகேந்திரன் கற்சுவர்களாகக் காண்கிறான்.
“சமையலறையில் இருக்கின்றவரை நாலு சுவர்களையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கல் சுவர்கள், நகரத்து மனிதனின் இதயத்தைப் போன்ற திடம்தான். கொலைக்குரல் பக்கத்தில் கேட்டாலும் சாவகாசமாக இருக்கச் சொல்லும் சுவர்கள்.” (ப.2)
நகரத்தில் அன்றாடம் நடக்கின்ற கொலைகள், சாவுகளை வெறும் செய்திகளாக மட்டும் புரிந்துகொண்டு, எவ்வித அதிர்ச்சியுமின்றி சாதாரணமாக இயங்கும் மனிதர்களைப் பார்த்து மகேந்திரன் அச்சப்படுகின்றான்.
“நகரமே இப்படித்தான் பிணங்களின் மத்தியில் சாவகாசமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. அம்மா தானும் ஒரு பிணமாக தன்னை நினைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டாளோ என்று அவனும் பல சமயங்களில் நினைத்ததுண்டு.” (ப.11)
நகரத்தில் நிகழும் தொடர் மரணங்களும், வேலையில்லாத் திண்டாட்டமும், வெறுமையும் மகேந்திரனை இருத்தலிய மனோபாவம் உடையவனாக மாற்றுகின்றது. காலம் எல்லோருக்கும் இயக்கம் மிக்கதாகத் தோன்ற, அவனக்கு மட்டும் உறைந்து நிற்கின்றது.
“காலம் கட்டப்பட்டு எங்காவது மரணப்படுக்கையில் கிடக்கும். எல்லோருக்கும் காலம் நகர்ந்து எதை எதையோ நிகழ்த்திக் காட்டிப் போகிறது. தன்னை மட்டும் அப்படியே விட்டுவிட்டிருக்கிறது. ஒரு அடிகூட நகரவிடவில்லை. வாகனத்தின் வெளிச்ச ஒளிக்குள் அமிழ்ந்துவிட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.” (ப.64).
மகேந்திரனைத் திருப்பூருக்கு அனுப்பிவிட்டு ஊரடங்கு நாள் ஒன்றில் அவனைக் காண்பதற்காக ஹைதராபாத்திலிருந்து புறப்படும் அவனது அப்பா ‘வெங்கடய்யா’வின் நோக்கு நிலையில் நாவலின் இறுதிப்பகுதி இயங்குகின்றது. தமிழகத்திலிருந்து, வேறு மொழி பேசுகின்ற, ஹைதராபாத்தில் முப்பதாண்டுகளாக வசிக்கின்ற வெங்கடய்யா பண்பாட்டு வேர்களைத் தேடுபவராகவும் அடையாள நெருக்கடியில் அல்லலுறுகின்ற வராகவும் படைக்கப்பட்டுள்ளார். அவர் புலம்பெயர்ந்து வந்த தன்னை ஒரு வாலறுந்த பட்டமாக எண்ணுகின்றார். முன்பு இயல்பாக வெளிப்படுத்துவதற்கு உரியதாக இருந்த மொழி, இனம், கலாசாரம் (தாலி அணிதல்) சார்ந்த அடையாளங்கள் தற்போது ஊரடங்கு நாட்களில் வெளிப்படுத்துவதற்குத் தகுதியற்றதாக மாறிவிட்டதை எண்ணி வருந்துகின்றார். ஊரடங்கு நாட்களில் பிள்ளைகளைக் காணாது தவிக்கும் பெற்றோரின் பரிதவிப்பு உணர்வு இவரின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சிக்கல் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு மொழி பேசுவோருக்கான முகாம்களில் மூன்று மொழிகளையும் பேசும் தான் எந்த முகாமில் போய் அடைக்கலமாவது என்ற திகைப்புடன் நிற்பதோடு நாவல் முடிவடைகின்றது.
சுப்ரபாரதிமணியனின் நகரம் ‘90’ எனும் குறுநாவல் ஆந்திர தலைநகரத்தில் நடக்கும் ஊரடங்கின் குரூரத்தன்மையை மட்டுமல்லாது அதற்குப் பின்னால் உள்ள அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியையும் காட்டுகின்றது. பிரகாஷ் எனும் இளைஞனின் நோக்குநிலையில் இயங்கும் இந்நாவல், கலவரம் மனிதர்களைப் பிரித்துப்போடுவதையும் ஒருவருக்கொருவர் அந்நியமாவதையும் எல்லோரையும் ஐயப்பட்டு நோக்குவதையும் சித்திரித்துள்ளது. கலவரங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எல்லோரும் பலியாகின்ற நகரின் அவலம் இந்நாவலில் விவரிக்கப்படுகின்றது. பழைய நகரத்தில் நிகழும் கொலை, புதிய நகரத்திற்குச் செய்தியாக இருந்து, பின்னர் உண்மை நிகழ்வாக மாறுகின்றபோது நகரம் அச்சமும் மௌனமும் நீடித்துத் திகிலூட்டும் பிசாசாக மக்கள் மனதில் பேருருவம் எடுத்து நிற்கிறது.  தூரத்தில் (பழைய நகரம்) நடக்கும் கலவரப் பிசாசு, புதிய நகரத்திற்குள் நுழைந்து, வேறு பகுதிகளில் நடந்து, கதைத்தலைவன் வாழும் பகுதிக்குள் நெருங்கி பக்கத்துத் தெருவில் கொலையாக மாறி, பிறகு இவர்கள் வாழும் தெருவையும் வீட்டையும் கொலைக்களமாக்குவதுடன் நாவல் முடிவடைகிறது. கொலைகள் நிறைந்த கலவரத்திற்குப் பிறகு எல்லோரும் இயல்பாக மாறுகின்றனர்.
“வாகனங்கள் இரைச்சலுடன் ஓடத் துவங்கின. இறந்தவர்களின் மனைவிகள் வர்ண சேலைகளிலிருந்து சாதாரணச் சேலைக்கு மாறினர். அம்மாக்களை நினைத்து குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தன. தீக்கிரையான வீடுகளிலேயே அடுப்பெரிக்கப் பழகிக் கொண்டார்கள். வீட்டு ரத்தக்கறைகளுக்கு வெள்ளை பூசப்பட்டது. வேறு வீடுகளுக்கு மாறி நம்பிக்கையை வளர்த்தார்கள். குடிநீரில் விஷத்தை நினைத்து குமட்டலோடு நீரைக் குடிக்கக் கற்றுக்கொண்டார்கள்.”    (பக்.37-38)
பலஉயிர்களின் பலிகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு நாற்காலிகளும் சாம்ராஜ்ஜியங்களுமே இலட்சியமாக இருக்கின்றன. கலவரம் ஆட்சிக்கவிழ்ப்பிற்கான கருவியாகப் பயன்படுகிறது. மக்களின் உயிர் அரசியல்வாதிகள் அதிகாரப்பீடங்களுக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களாகின்றன என்கிற உண்மையை இக்குறுநாவல் உணர்த்துகின்றது.
‘வர்ணங்களில்’ எனும் குறுநாவல் கலவரங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் பயங்கரவாதத்தினை ஓர் ஓவியனின் நோக்கு நிலையிலிருந்து எடுத்துரைக்கிறது. அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பார்வையற்றவர்களாக இருந்தாலும் கூட தண்டனைக்குள்ளாவார்கள் என்பதை இக்குறுநாவல் உணர்த்துகின்றது. ‘இன்னொரு நாளை’ குறுநாவலும் பெருநகரக் கலவரத்தைப் பின்புலமாகக் கொண்டதாகும். இக்குறுநாவல் கலவரக் காலத்தில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே ‘வேலியே பயிரை மேய்ந்தது’ போல் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘வேறிடம்’ எனும் குறுநாவல் ஆந்திரத் தலைநகரில் வசிக்கும் ஓர் இலக்கியவாதியின் ஒரு நாளைய அனுபவத்தை விவரிக்கின்றது. அரசாங்க ஊழியர்களின் அலட்சியப்போக்கு, தண்ணீர்ப் பிரச்சினை என்பன இக்குறு நாவலின் பெருநகரச் சிக்கல்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சுப்ரபாரதிமணியனின் புனைகதைகள் நகரங்களையே முதற்பொருளாயும் கருப்பொருளாயும் கொண்டுள்ளன. திருப்பூர் நகரம் தொழில்மயமாதலின் பின்புலத்தில் இயற்கையின் – மனித வாழ்வின் சீரழிவைக் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. செகிந்திராபாத் எனும் நகரம் பெருநகர வாழ்வின் இயந்திரத்தனத்தையும், பரபரப்பையும், பதற்றத்தையும், கலவரத்தையும் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. திருப்பூர் பணம் எனும் பிசாசால் பீடிக்கப்பட்ட ஊர். செகந்திராபாத் கலவரம் எனும் பிசாசால் பீடிக்கப்பட்ட ஊர். சுப்ரபாரதிமணியனின் நகரத்திணை சார்ந்த புனைகதைகள் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், தனிமை, பெருந்திணை சார்ந்த ‘மிக்க காமம்’ என்பனவற்றை உரிப்பொருட்களாகக் கொண்டுள்ளன.
துணை நூற்பட்டியல்
1.     சுப்ரபாரதிமணியன், சாயத்திரை, எதிர்வெளியிடு, பொள்ளாச்சி, இரண்டாம் பதிப்பு, ஆகஸ்டு 2013
2.    ” நீர்த்துளி, உயிர்மை பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர் 2011
3.     ” சுடுமணல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதற்பதிப்பு, பிப். 2012
4.     ” தறிநாடா, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதற்பதிப்பு, ஆகஸ்டு 2013
5.     ” வேறிடம் (குறுநாவல்கள் தொகுப்பு) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதற்பதிப்பு, டிசம்பர் 2011.