சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்

சுப்ரபாரதிமணியன்


யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது.
சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும். அதுவும் தீவிரமான கவிதை உணர்விற்கு எதிரான மனநிலையில் படைப்புகளை அணுகுகிறவருக்கு ஒவ்வொரு கவிதை ஆக்கமும் தவம்தான்.  பிரசவ அனுபவம்தான்.  ஆனாலும் பத்திரிக்கையாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல சமயங்களில்  கர்வம் இல்லாமல் போய் விடுகிறது. சிறுபத்திரிக்கைப்பணியில் ஆரம்பித்தது பெரும் பத்திரிக்கைப் பணியாகி விட்டது. கவிதையைக் கைவிடுவது சற்றே சிரமமானது. அடைமொழியை சுலபமாக கை விட்டு விடமுடியாது. அதனால் கவிதை  உடனான உறவை தவிர்க்க இயலாமல் வைத்துக் கொண்டே இருக்கிறார். அது இத்தொகுப்பில் தொடர்கிறது.கிணற்று பாறையிடுக்கில் கசியும் நீராய் இருந்து கொண்டே இருக்கிறது.

காலை நடைபாதை பயணம் பலருக்கு வணக்கம் சொல்ல வைக்கிறது. புன்னகையை உதிர்க்க வைக்கிறது.  பலமுகங்களை அறிமுகப்படுத்துகிறது.   பழைய முகங்களுடன் பரிச்சயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கச் செய்கிறது.  அதையே கவிதையிலும் செய்யச் செய்கிறது.
நகரம் பற்றி அதிகம் பிரஸ்தாபித்துக் கொண்டே இருக்கிறவர் அமிர்தம் சூரியா.            நகரப் பட்சிகளின் காலையை விவரிப்பவர் ( 140 )புலியாய் நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் பயம் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.(5 ) மனிதன் யார் என்று சகமனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் . கன்னித்தீவை ஏன் கண்டு பிடிக்க இயலவில்லை என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் ( 42 ) நகரங்களை விட்டு ஓடிப் போகிற பாதத் தடங்களைப் பற்றியும் பேசுகிறார். பூட்டிய கிராம வீட்டின் கொல்லைப்புற டிரங் பெட்டியைத் தேடும் ஆசையும் இருக்கிறது.நகரம் அவரை பயமுறுத்துவதை அவரின் சிறுகதைகளிலும் காணலாம். இந்தக்  கண்டடைதலுக்குக் காரணமாக வாழ்வைத் துழாவுதல் இக்கவிதைகளில் இருக்கிறது. சுருக்குப் பையில் – கடைசி ஒற்றைக் கொட்டைப் – பாக்கைத் தேடும்- பாட்டியின் விரல்களைப் போல்(28) . தருக்கத்தை மீறி சொல்லவும் இவருக்கு நிறையவே இருக்கிறது.மாயையின் பல அடவுகள் இவருக்கு விசித்திரம் காட்டுவதைச் சொல்லிக் கொண்டே போகிறார்.

கவிதை பற்றிய இவரின் முன் மொழிதல்களைக்கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  மானுட மன இருளறையில் தேங்கிக் கிடக்கிறது குளமாய் / இறைத்தேன் வீதியில் பிசுபிசுத்த்து விரலில் வரியின் காயம் ./புன்னகையினுடே தெறித்தது பரண் இடிக்கும் சூட்சுமத்தின் பிம்பமும் அதனூடாக கூட்டமும் கூவலும் மாய தரிசனமாய்/ நமக்குத் தெரியாமல் நமக்குள் பசித்த காகமும் வெடித்த மதிலும்- விதைக்குப் பதிலாய்- முளைக்கத் தெரிந்த முற்றிய  வார்த்தைகள் / இயக்கும்-இயங்கும் வாழ்வை- மனதின் கதியில் காற்று- காற்றுமாதேவி தரிசனம் தொடர்கிறது யாதுமாகி.

    மரணம்  மாயையா. இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையில் தள்ளாடுகிறது இந்த மாயைத்தனம். மாயை குறித்து பேசும்  நிர்பந்தம் பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வாழ்வின் யதார்த்தங்களை ஒப்புக்கொண்டு  வாழ்வை நிஜமாகவேக் கொண்டு நகர்ந்து  விடுவதை இக்கவிதைகள்  கோடிடுகின்றன.
 பூனை குறித்துச் சொல்லப்படுகிறதில் பூனைதான் என்று சொல்லப்படுவதில்லை. மனிதர்களின் தேவைகளைக் குறியீடாக்கிக் கொண்டே போவது போல் பல குறீடுகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். குறியீடுகள் மூலமான சுய விசாரணை இக்கவிதைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தேவதேவனுக்கு அருகாமையில் இவர் இருப்பதாய் ஜெய மோகன் சொல்கிறார்.  ஆனால் இயல்பு ஒழுங்காய் இக்கவிதைகள் செல்லாமல் தடைபடுவது அதற்கு எதிராக இருக்கிறது. வடமொழிச் சொற்களின் மீதான காமமும், தலைப்பிடப்படுவதில் இருக்கும் வலிந்த தன்மையும் தேவதேவனிடம் இருக்காது. உரையாடல்களுக்கான நிறைய சாத்தியங்களைக் கொண்டிருக்கும் இக்கவிதைகளில் பல  உரையாடல் தளத்திலேயே  கட்டமைக்கப்பட்டிருப்பது வாசகனுடனான உரையாடலை எளிமைப்படுத்தியிருக்கிறது.
  ( ரூ 100 , அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை )

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

நூல் அறிமுகம் - சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “ ’’ : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது

சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “  ’’ :  சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987)  சுஜாதா எழுதியதுசுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில் தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள். நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன. தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப்போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள். இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள்.
 பலர் சொந்தமாகவே கைக்காசை செலவழித்து அழகான புத்தக வடிவில் வெளிவருகிறார்கள். இந்த வகையில் தமிழில் வருஷத்துக்கு நாம் முன் சொன்ன கிழச்சிங்கங்களின் கவலையை மதிக்காது பத்துப் பன்னிரண்டு நல்ல கதைகள் தேறுகின்றன.
 இவ்வாறு நல்ல கதைகள் எழுதும் இவர்கள் பெரும்பாலோர் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் இன்னமும் கவிதையும் எழுதுகிறார்கள் (சிலர் அதே பெயரில் சிலர் புனை பெயரில்) சிலர் சித்திரங்கள் வரைகிறார்கள். சிலர் வண்ண ஓவியங்கள். இப்படி இவர்கள் தத்தம் உள்ளங்களை வெளிப்படுத்த அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வகையில் சுப்ரபாரதிமணியனும் கவிதைகளும் கதைகளும் எழுதுகிறார். இந்த இரட்டை வேடத்தில் சிரமங்களும் சௌகரியங்களும் இருக்கின்றன. கவிதை மனமும் ஒரு கவிஞனின் உன்னிப்பான பார்வையும் சிறுகதைக்கு மிகவும் உதவும். அதே சமயம் சிறுகதை வடிவமும் கவிதை வடிவமும் வேறு வேறு. அதனால் சிறுகதையல்லாததையெல்லாம் சிறுகதை என்று ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய அபாயங்கள் கவிஞர்கள் எழுதும் சிறுகதைகளுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 நான் மேலே சொன்ன இரண்டு வகைக்கும் சுப்ரபாரதிமணியனின் இந்த தொகுப்பிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குமுன் சிறுகதை பற்றிய செய்திகள்:
 சிறுகதைக்கு மேற்கத்திய இலக்கியத்தில் முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணம் எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டன. இனிமேல் புதுசாக சாத்தியக் கூறுகளை ஆராயவேண்டுமெனில் விஞ்ஞான கதைகளில்தான் முடியும் என்று ஒரு சித்தாந்தம் உண்டு.
 தலையணை நாவல்கள் லட்சக்கணக்கில் விற்க சிறுகதைத் தொகுதிகள் மேலைநாட்டில் விற்காததற்கு காரணம் என்னவென்று அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை. இருப்பினும் சிறுகதை இலக்கியம் மறுகிக் கொண்டிருப்பது நிஜமே.
 தமிழில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. தமிழ் வார மாதப் பத்திரிகைகளில் பெரும் அளவு சிறுகதைகளைப் பதிப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (அவைகளின் தரம் பற்றி நாம் இப்போது பேசவில்லை.) எண்ணிக்கையில் தமிழில் இப்போது சிறுகதைகள் நிறையவே எழுதப்படுகின்றன. ஆனால் நாவல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளிவரும் அளவுக்கு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவருவதில்லை. இதற்கு காரணம் பதிப்பாளர்கள் சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகம் விலைபோவதில்லை என்கிறார்கள். இரண்டு பாகம் மூன்று பாகம் என்று ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட உறையூர் ஒற்றர்களைக் கொண்ட சரித்திர நாவல்களை எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பவர்கள் சிறுகதைத் தொகுப்புக்களுக்கு ஆதரவு தராதது தமிழ் நாட்டின் எத்தனையோ சோகங்களில் ஒன்று.
 இதனால் மனசிழந்த நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் கவிதைக்குத் தாவி விட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.
 நம்பிக்கை இழக்காமல் சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் விடாப்பிடியாக சிறுகதை எழுதிக்கொண்டிருப்பதை உற்சாகப்படுத்த வேண்டும்.
 ஆரோக்கியமான சிறுகதைகளுக்கு வருவோம். கவிதையிலிருந்து சிறுகதைகளுக்கு வருவதில் உள்ள அவஸ்தைகளையும் ஆனந்தங்களையும் பற்றி சற்று முன் சொன்னேன். உதாரணங்கள் பார்க்கலாம்.
 தமிழில் புதுக்கவிதையின் பல வடிவங்களில் நினைவூட்டும் (Evocative) வகை கவிதைகள்தான் சிறுகதைகளுக்கு அருகே உள்ளன. இந்த வகை கவிதைகளை எல்லாப் புதுக்கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இரண்டு பேரை உதாரணம் காட்ட விரும்புகிறேன். கலாப்ரியா, கல்யாண்ஜி.
 "ராத்திரியே மார்ஜின் போட்டு
 கடவுள் துணை
 பெயர் வகுப்பு பிரிவு
 எழுதி வைத்த
 பரீட்சை பேப்பருடன்
 எதிர்ப்படும்
 கோயிலிலெல்லாம்
 திருநீறெடுத்து
 ஜியாமெட்ரிபாக்ஸில்
 போட்டுப் போவேன்."
 "போஸ்ட்மேன் வருகிற
 நடுப்பகல்த் தெருவுக்கு
 அதேயொரு தனிமையுண்டு
 அதே விபசாரப்பெண்
 கோர்ட்டில் கூண்டேறி
 புதுப் பேருக்கு
 அபராதம் செலுத்திவிட்டு
 மாமாவுடன்
 அடிவயிற்று வலியுடன்
 வீடு திரும்புவாள்.
 உச்சி வெயிலில்
 மந்த தகனமாகும்
 தும்பைச் செடியின்
 அதே வாசனை
 நாசி நெருடுகையில்
 போஸ்ட் மேன்
 கைவிரித்துப் போவான்"
இந்தக் கவிதையை சற்றே யோசித்துப் பாருங்கள். இது உங்கள் மனத்தில் ஏற்படுத்தும் வடிவங்கள் என்ன? யார் அந்த பெண்? யார் அந்த போஸ்ட்மேன்? அந்த ஜியாமெட்ரி பாக்ஸ் பையன் ஒரு வேளை நீங்களா?
 உங்கள் மனதில் நீங்கள் பார்த்த போஸ்ட்மேனும் நீங்கள் பார்த்த விபசாரியும் நினைவுக்கு வருகிறதல்லவா, இதைத்தான் நான் 'இவொக்கேஷன்' என்கிறேன்.
 கல்யாண்ஜியைப் பார்க்கலாம்.
 "வாகன உதிரிகள்
 கையில் கனக்க
 படித்த ஹைஸ்கூலில்
 நடக்கிற வாலிபால்
 போட்டியை
 காம்பவுண்டுக்கு வெளியே
 கரியும் காக்கியுமான உடுப்புடன் ரசிக்கிற
 ஒர்க்ஷாப் இளைஞன்."
இந்த வரிகளே லேசாக ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கின்றன. ஆனால் இதை ரசிக்க முக்கியமாக நீங்கள் உங்கள் ஊரில் இளமையில் காம்பவுண்டு சுவரிலிருந்து வாலிபாலோ புட்பாலோ பார்த்திருக்க வேண்டும். கரியும் காக்கியுமான ஸ்பேர்பார்ட் இளைஞர்களையும் கவனித்திருக்க வேண்டும். இந்த பிம்பங்களையெல்லாம் நம் மனதில் மீண்டும் எழுப்ப இந்த வரிகள் உதவுகின்றன.
 சில சமயம் கவிதை முழுக்கதையும் சொல்லிவிடுவதுண்டு. மறுபடியும் கல்யாண்ஜி:
 "பிச்சையெடுக்க
 கையை உயர்த்தின
 ஊமைப் பையனை
 வேலையில் சேர்த்து
 அளவில் பெரிய
 பழைய பனியனை
 அவனுக்கு மாட்டி
 ஏவிமேய்த்து
 சந்தோஷப்படுகிற
 டீக்கடை பாய்"
இது ஏறக்குறைய கதையே சொன்னாலும் இவொக்கேஷன் என்பது தொள தொள பனியனில் நான் பார்த்த குழந்தைகளால் எனக்குக் கிடைக்கிறது.
 எனவே இவ்வகை கவிதைகளுக்கும் கதை வடிவத்துக்கும் கொஞ்சம் குழப்பமும் மயக்கமும் ஏற்படுவது சாத்தியமே. அதுவும் கவிஞரே கதை எழுதும் போது பின்னோக்கில் Nostaigia என்று சொல்வார்களே பழைய ஆதங்க நினைவுகளை வடித்தெடுப்பதில் இந்த வகை கவிதைகள் மிகவும் பிரசித்தம். கவிஞரின் ஆதங்கங்கள் கவிதை படிப்பவனின் ஆதங்கங்களைத் தூண்டி விடுகின்றன.
 இதே வகையில் சிறுகதையிலும் இன்று பலர் ஆதங்கங்களையும் நினைவுகளையும் சொல்லி வருகிறார்கள்.
 "அப்பாவுக்கு ஆட்டுத் தலைக்கறி பிடிக்கும். தலை வாங்க வரும்போது மொகிதின் சொல்லி வைத்த மாதிரி ஆட்டுக் கால்களையும் தருவார். தீயில் கருக்கின பின்பு ஆட்டுக்கால்களை கழுவி கயிற்றில் கோர்த்து சமையற்கட்டில் அப்பா தொங்க விடுவார்."
 இந்த வரிகளுக்கும் நாம் முன்பு உதாரணம் காட்டிய கவிதை வரிகளுக்கும் ஒற்றுமையை கவனியுங்கள். இரண்டுக்கும் நோக்கம் ஒன்றே. கவிதை வரிகள் போஸ்ட் மேனையும் கடித எதிர்பார்ப்புக்களையும் டீக்கடை பாய்களையும் நினைவுபடுத்துகின்றன. கதையின் மேற்கோள் வரிகள் சின்ன வயசில் கசாப்புக்கடைக்குச் சென்று ஆட்டுக்காலும் தலையும் தின்றவர்களுக்கு ஒருவிதமான அன்னியோன்னியத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
 மனதில் பிம்பங்களை ஏற்படுத்தும் முயற்சி நவீன தமிழ்ச் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் பொதுவாக இருப்பதை நான் கவனிக்கிறேன்.
 கேள்வி: இந்த பிம்பங்களை எழுப்பினால் போதுமா, அது சிறுகதையாகிவிடுமா?
 நான் மேற்சொன்ன ஆட்டுத்தலை உதாரணம் சுப்ரபாரதிமணியனின் 'ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்' என்ற சிறுகதையிலிருந்து எடுத்தது. இந்தக் கதை, வடிவத்தில் சிறுகதை தானா என்று ஆராய்வதற்கு முன் இந்தத் தொகுதியிலிருந்து மற்றொரு கதை 'இன்னொரு முறை மௌனம்' என்கிற கதையையும் எடுத்துக் கொள்வோம்.
 இரண்டுமே வடிவமைப்பில் ஒரே வகைதான். முதல் கதை சொல்பவன் தன் அப்பாவின் ஆட்டுக்கறி சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்கிறான். பின்னதில் கதை சொல்பவன் தன் நண்பனுடன் ஒண்டிக் குடித்தனம் இருந்தபோது எதிர்த்த போர்ஷனில் பார்த்த ஆந்திரப் பெண்ணை நினைவுபடுத்திக் கொள்கிறான்.
 இரண்டுமே ஒரு கையாலாகாத பார்வையாளன் கோணத்திலிருந்து கதையின் சம்பவங்கள் நடந்துபோன பின்னோக்காக சொல்லப்படுபவை. இதில் பின்னது சிறுகதை. முன்னது சிறுகதையல்ல.
 ஏன் என்று சொல்கிறேன்.
 இப்போது சிறுகதை வடிவம் என்ற ஒரு புகையான சமாசாரம் வருகிறது.
 வெறும் ஞாபகங்கள் மட்டும் சிறுகதையல்ல. ஜானகி ராமனின் சிறுகதைகள் சிலவற்றில் குறிப்பாக பிற்கால சிறுகதைகளில் இந்த மயக்கம் ஏற்படும்.
 ராஜகுமாரி கதையில் அப்பா ஆட்டுக்கறி தின்னும் நுணுக்கமான விவரங்கள் சொல்லப்படுகின்றன.
 மௌனம் கதையில் ஆந்திரப் பெண்ணின் உள்பாவாடை வரை விவரமாகச் சொல்லப்படுகின்றன.
 இருந்தும் முன்னதில் கதை வடிவம் இல்லை. பின்னதில் கதை வடிவம் இருக்கிறது.
 இரண்டு கதைகளும், ஏன் சுப்ரபாரதிமணியனின் பெரும்பாலான கதைகள் இந்த வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. சிறுவயதில், அல்லது சமீபத்திய இறந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அல்லது சந்தித்த கதாபாத்திரத்தைப் பற்றி நினைவு கூர்வது அது மோர்க்காரியாக இருக்கலாம், ஆந்திரப் பெண்ணாக இருக்கலாம் அல்லது கதாசிரியரின் அப்பாவாக இருக்கலாம். எப்படியும் கடந்த காலத்து சம்பவத் தொடர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்த ஒருவன் மிக நுணுக்கமாக நினைவு கூர்வது இந்தக் கதைகளின் பொது அம்சமாகப் பார்க்கிறேன்.
 கிறிஸ்மஸ் தினத்தன்று கறிக்குழம்பும், முந்தின நாள் செய்து வைத்த மீன் குழம்பின் மிச்சமோ காலை பத்துமணிக்கு கண்ணெரிச்சலால் வரும் தூக்கமோ இத்தனை விவரங்கள் தேவைதானா இது கதையா கட்டுரையா பட்டியலா என்று வியக்கவைக்கும் அளவுக்கு அலுப்புத் தரும் விவரங்கள் தரும் பழக்கத்தை தற்கால இளம் எழுத்தாளர்களிடம் மிகுதியாகப் பார்க்கிறேன்.
 இதை (Catalogueing) காடலாகிங் என்று சொல்வார்கள். அமெரிக்க இலக்கியத்தின் ஜேடி சாலிங்கர் இவ்வகை பட்டியலிடுவதில் பிரியர். ஒரு அலமாரியைத் திறந்தால் அதில் உள்ள அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு விட்டுத்தான் மேலே கதை நகரும். இந்த ரீதியில் சுப்ரபாரதிமணியனின் கதைகளில் தேவைக்கு அதிகமாகவே விவரங்கள் தென்படுகின்றன.
 "இரண்டாவது உள் அறையில் சமையலுக்கென்று ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கும். மாடியில் பொதுவாக பாத்ரூம் என்று தனியாக இருப்பினும் லெட்ரினுக்கென்று கீழேதான் போகவேண்டியிருக்கும். கீழே படிகளைக் கடப்பதற்கு முன் சீதா வீட்டு ஜன்னல் திறந்து கிடக்கும். லேசான வெளி வெளிச்சம் உள்ளே அடையாளம் காட்டும். உள் சமையல் அறையில் சீதா படுத்திருப்பதும் வெளி அறையில் பத்மா கணவனுடன் படுத்திருப்பதும் கண்ணில்படும்."
 பத்மா எந்த அறையில் படுத்திருந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஆச்சரியகரமாக ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். இந்தக் கதைக்கு இத்தனை நுட்பமான விவரம் தேவைதான். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்ற கதைக்கு தேவையில்லை! ருசியான கறி சாப்பிடுவதைப்பற்றி ஆரம்பித்து இந்தக் கதை சேக் மொகிதீனிடம் அப்பா மட்டன் வாங்க வரும் ஞாபகத்திற்கு தாவுகிறது அங்கிருந்து, அம்மா அடுத்தபாராவில் சந்தனமாய் மிளகு அரைக்கிறாள்.
 அடுத்ததற்கு அடுத்த பாராவில் சின்ன வாணலியில் மிளகும் உப்பும் சேர்ந்து வாங்கி வந்த ஆட்டுத்தலை கறியாகும் பக்குவம். இப்படி ஆற அமர அவசரமே இல்லாமல் இரண்டு பக்கம் கழித்து கோழித்தலைக்கு பழனிவேலுவுடன் சண்டை என்று முதல் சம்பவம் வருகிறது. அதற்கப்புறம் அம்மா கோழிக்கறி சமைப்பதில்லை. கோவிந்தராஜ மாமாவை கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆதங்கத்தை தெரிவிக்கிறாள். அம்மாவின் புதைந்த ஆசை ஒன்று வெளிப்பட அந்த ஆசை தொடர்பாக கற்பனை சாத்தியக் கூறுகளுடன் கதை முடிகிறது.
 இந்தக் கதையில் சிறுகதை வடிவம் இருக்கிறதா என்று தீர்மானிப்பதற்கு முன் சிறுகதை வடிவம் என்று நான் எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 எந்தக் கதைக்கும் இந்த மாதிரி விவரங்கள், சூழ்நிலை வர்ணனைகள், பாத்திரப் படைப்புக்கள் எல்லாம் தேவைதான், எதற்கு? அந்தக் கதை மூலம் மனிதர்களுடன் மனிதர்கள் பழகுவதில் உள்ள முரண்பாட்டையோ மேம்பாட்டையோ சொல்வதற்கு. தேவைப்பட்டால்தான் அவைகளுக்கு இடம் அளிக்க வேண்டும் இல்லையெனில் கோழிக்கறி சமைப்பதைப்பற்றியோ சின்ன வெங்காயம் நறுக்குவதைப்பற்றியோ ஒரு கட்டுரை எழுதிவிட்டு போகலாம். ராஜகுமாரிக்கதையில் தலைப்பிலிருந்து கடைசிவரை மறைமுகமாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு விஷயம் மனசுக்குள் பொதிந்திருந்த ஆசை. அதை கடைசிப் பாராவில் வெளிப்படுத்த இத்தனை விவரங்கள் தேவை இல்லை என்று சொல்வேன் அதே போலத்தான், "சிலவேறு தினங்களில்" என்கிற கதையில் கதை சொல்பவரின் அப்பாவுக்கு கோழிச்சண்டையில் இருந்த பிடிவாதமான ஈடுபாட்டை விஸ்தாரமாக சொல்லி அதனால் அவர் குடும்பப் பொறுப்பு இல்லாமல் திரிந்த விவரங்களையும் சொல்லி தாத்தா இறந்து போனதும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் கோழிச்சண்டைக்குப் போவதற்கு பட்சி சாஸ்திரத்தை தேடும்போது அம்மா இதுநாள் வரை படிந்திருந்தவள் ஒரு முதல் எதிர்ப்பாக அந்த புத்தகத்தை எரித்துவிட்ட செய்தி அறிந்து அவளை அடிக்கப்போன கையோடு ஞானோதயம் பெற்று எல்லாவற்றையும் விட்டு ஒழிக்கிறார்.
 இந்த கதைக்கும் ராஜகுமாரி கதைக்கும் ஒற்றுமையான விஷயங்கள் என்ன? ஒரு இந்திய மனைவியின் மௌனமான வாழ்க்கை. என்றாவது ஒருநாள் அவள் தன் எதிர்ப்பையோ ஆதங்கத்தையோ ஆசையையோ தெரிவிப்பது. இதை இன்னும் கொஞ்சம் சிக்கனமாக காட்டியிருக்கலாமே. கோழிச் சண்டையைப் பற்றியும் ஆட்டுக்கறி சமைப்பதைப் பற்றியும் தனக்கு நினைவிருக்கும் அத்தனை சங்கதிகளையும் சொல்லும் போது கதாசிரியர் சிறுகதை வடிவத்தை கோட்டை விடுகிறார்.
 வடிவம் உத்தமமாக அமைந்திருக்கும் கதைகளும் இந்த தொகுதியில் உள்ளன. "இன்னொரு முறை மௌனம்" என்ற கதை இதற்கு முதன்மையான உதாரணம். இதிலும் ஒரு பெண்ணின் அவலம்தான் கதை மையம். சற்று தூரத்திலிருந்து மாடியில் மூன்று போர்ஷன்களில் ஒரு போர்ஷனில் வசிக்கும் ஒரு பிரம்மசாரியின் கோணத்திலிருந்து முதல் போர்ஷனுக்கு குடி வந்திருக்கும் ஒரு குடும்பத்தைப்பற்றிய அன்றாட விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படுகின்றன. இந்தக் கதையிலும் மற்ற இரண்டு கதைகள் போல நிறையவே விவரங்கள் இருந்தாலும் அத்தனை விவரங்களும் கதையின் மையக்கவலைக்கு ஏதோ ஒரு விதத்தில் செறிவூட்டுகின்றன. மெல்ல மெல்ல அந்த குடும்பம், அதன் உறவு விவரங்கள் வெளிப்படுகின்றன. இயல்பாக ஏதோ ஒரு பிறப்புபோல ஒவ்வொன்றாக ஒரு கோட்டுச் சித்திரம் மெல்ல மெல்ல வண்ணங்கள் நிரப்பப்பட்டு... முழு ஓவியமாவதுபோல கணவன் மனைவி கணவனின் தங்கை சீதா இப்போது சீதாவின் மேல் கதையின் கவனம் அதிகமாக அவளுடைய சுபாவம், பார்வையில் தாபம், அவளுடன் பேசமுடியாத தெலுங்கு, அவள் துவைக்கும் துணிகள் என்று மேலும் மேலும் அந்த பிம்பம் தீட்டப்படுகிறது. சீதாவின் மேல் ஏற்படும் ஒரு மாதிரியான ஆசைக்கு நம் பிரதிநிதியாக கதை சொல்லுபவன் ஏற்றுக் கொள்கிறான்.
 "தண்ணீர் பிடிக்கிறபோதும் பக்கெட்டைக் கொடுக்கிற போதும் பிற பொருட்களைத் தருகிறபோதும் அவள் கைபடுவதும் ஆடை விஷயத்தில் அசிரத்தையும் எங்கள் அறைப்பக்கமிருக்கும் பாத்ரூமிலிருந்து குலைந்த ஆடைகளுடன் வெளியாவதும் பற்றி தான் கவனித்திருப்பதாய் திருநாத் ஒரு முறை சொன்னான். இது எனக்கே ஆனது என்று மனசுள் வைத்திருந்தேன். இது பொதுவான விஷயமாகப் போய்விட்டது வருத்தமாக இருந்தது."
 இவ்வாறு மென்மையான எண்ணத் தீற்றல்களை வெளிப்படுத்தி சீதாவின் கதை பையனின் கோணத்திலிருந்து. விலகாமல் திறமையாகச் செல்கிறது. இளம் அண்ணனும், மனைவியும் அத்தனை அருகில் படுத்திருக்கும் போது அருகே இருட்டில் விழித்திருக்கும் திருமணமாகாத பெண்ணின் உள்ளக் கவலைகளை அந்த அறையில் நுழையாமலேயே நம்மால் உணர முடிகிறது.
 சீதாவின் சகோதரன் இறந்துபோய் பத்மா விதவையாகி தம்பி ராமகிருஷ்ணன் வந்து அவர்களை ஜுடிமேட்லாவுக்கு அழைத்துப் போனதும் அவர்கள் நம் பார்வையிலிருந்து விலகுகிறார்கள். அகஸ்மாத்தாக சில மாதங்கள் கழித்து சீதாவை சந்திக்கும்போது அவள் மற்றொரு சகோதரனுடன் முன் மாதிரியே கல்யாண நம்பிக்கையே இல்லாத இன்னம் இளைத்துப் போய் அழகு குறைந்த சீதாவை சந்திப்பதுடன் கதை முடிந்தாலும் அது நம்முள் எழுப்பும் சில எண்ணத் தொடர்ச்சிகள் முடிவதில்லை. ஊருக்கு ஊர் நாம் பார்க்கும் சீதாக்களை மனத்தில் கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உயிர் வாழ்தலின், பெண் ஜன்மத்தின் நகர வாழ்க்கையின் அநிச்சியம், பிரம்மசாரிகளின் மௌன அதைரிய ஆசைகள் யாவுமே வெவ்வேறு படிமங்களாக வெளிப்படுகின்றன. இவை அனைத்தையும் கொண்டு வருவதற்கு இக்கதையில் இத்தனை விவரங்கள் தேவைதான். சுப்ரபாரதிமணியனின் மற்றக் கதைகளையும் இந்த வடிவம், வடிவமற்ற ரீதியில் விமரிசிக்க முடியும். வடிவம் அமைந்திருக்கிறதா இல்லையா என்ற தீர்மானத்தை இனி நீங்களே ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
 சுப்ரபாரதிமணியனின் தமிழ் நடையில் ஒரு கவிஞனின் பலங்களும் பலவீனங்களும் உள்ளன. நான் முன்பு குறிப்பிட்ட மாதிரி மெலிதான தீற்றல் போன்ற எண்ணங்களை சொல்ல முடிவது நிறை. "கணிசமான சதவிகிதத்தில் அரக்கனோ குழந்தையோ மென்மையோ நம்முள் உறைந்து போயிருப்பதை நாம் எப்போது முதல் முதலாக உணர ஆரம்பித்தோம் என்பது ஆச்சரியமான விஷயம்." இது முழுவதும் உங்களுக்கு முதல் படிப்பில் புரிந்தால் நீங்களும் கவிஞர்.
 ஏனெனில் கவிஞர்கள் "செல்லம்மாவை எனக்கு நினைவிருக்கிறது" என்று சொல்லமாட்டார்கள்.
 "புராதன ஓவியம் போல் செல்லம்மா நினைவுக்குரிய விஷயமாக எனக்குள் இன்னும் இருக்கிறாள்" என்று தான் சொல்வார்கள்.
பதிவுகளுக்கு அனுப்பியவர்: சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

புது நூல்: தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!சுப்ரபாரதிமணியன்"எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள்  வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில்  ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு  “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில்  வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக  இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித  நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை
புனைகதைகளின் சுவாரஸ்யத்தோடு இயல்பாக வெளீப்படுத்தியிருக்கிறார். மெல்லிய நகைச்சுவை, எழுத்தாளர்களின் வெவ்வேறு கலாச்சாரச் சூழல், எழுத்தின் நுட்பமான அம்சங்களைக் கொண்டவை அப்பேட்டிகள்.
அ.முத்துலிங்கம் அவர்கள் பற்றிய சகஎழுத்தாளர்கள், வாசகர்களின்  கட்டுரைகளையும் , அவரின் பேட்டிகளையும் தொகுத்துப்  படிக்கிற போது  அவரின் பேட்டிகளில் இருக்கும் சுவாரஸ்யம் அவர் மற்ற எழுத்தாளர்களை நினைத்து வியத்தல் போல்  அவரைப் பார்த்து எவருக்கும் வியப்பைக் கொடுக்கும். அந்த வியப்பை இத்தொகுப்பும் கொடுக்கும்.  நேர்காணல்கள்  கூட ஒரு வகைப்படைப்பாக்கம்தான். பகிர்வும், விவாதங்களுமான கோப்பைக்குள் நிகழும் புயல்தான். கற்றறிந்த விசயங்களை, அனுபவப்பட்ட்தைச் சொல்வதும் அவரின் பரந்துபட்ட அனுபவ முதிர்ர்சியுடன் பல்வேறு விசயங்களை அருகருகே வைத்துப்பேசுவதில் இருக்கும் சுவாரஸ்யமும் இப்புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. 
சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ”  இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது.  நாமெல்லாம் சமூக மனிதர்கள், சமூக விலங்குகள். ஆனால் ஏன் இப்படித் தனிமைப் பட்டுப் போனோம்.  பேச, பரிமாறிக் கொள்ள, கதைகள் சொல்ல, சிரிக்க, சந்தோசிக்க, கற்றுக் கொள்ள சந்திப்பு அவசியம் “ என்றார். aaஅவருக்கு 100 கோப்பைத் தேனீருடன், நூறு புது மனிதர்கள் கிடைத்திருப்பார்கள். உண்மைதானே.உரையாடல் என்ற வார்த்தையே  அகராதியில் இருந்து நீக்கப்பட்டு விடுமோ என்ற பயம் பல உளவியல் அறிஞர்களுக்கு வந்திருக்கிறது.வீடுகளுக்கு வரும் நண்பர்களோடு, உறவினர்களோடு  தொலைக்காட்சி பார்த்தபடி, கைபேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பியபடி, பார்த்தபடி தான் உரையாடுகிறோம்.பயணங்களின் போது காதுகளில் ஏதவது ஒயரைச் செருகி எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறோம்.உரையாடுதல் என்ற  கலைக்கு  சாவு மணி அடிக்கிறோம்.கேட்க, பேச மறந்து விட்டவர்கள்  போலாகிவிட்டோம். 
நல்ல உரையாடல்கள் எதிரில் உள்ளவரின் மனதை அறிய, அவர் அறிவை அறிய,  உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்ள, கை குலுக்கிக் கொள்வதைப் போல. அப்புறம் சிந்தனைத் தெளிவிற்கு, கொஞ்சம் சேகரித்துக் கொள்ளவும் கூட.. முத்துலிங்கம் அவர்கள்  பகிர்ந்து கொள்ளும் வெவ்வேறு விதமான தகவல்களும் இலக்கிய அனுபவங்களும் அவருக்கே உரித்தானவை.அவரின்   “ குதிரைக்காரன் “ என்ற சமீபத்திய தொகுப்பிற்கான ( சென்றாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான ஆனந்தவிகடன்  விருதை அந்நூல் பெற்றது ) முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.: “ நூறு தேர்க்கால்கள் செய்த ஒரு தச்சருக்கு 101வது தேர்க்கால் செய்வது எத்தனை சுலபம். நூறு குதிரைகளை அடக்கிய வீரனுக்கு 101 வது குதிரையை அடக்குவது எத்தனை சுலபம். 100 ரோஜாக்கன்று நட்டு வளர்த்த ஒருவருக்கு 101வது ரோஜாக்கன்றை வளர்த்து எடுப்பது  எத்தனை சுலபம். ஆனால் சிறுகதைகள் அப்படியல்ல. 100 சிறுகதைகள் எழுதிய ஒருவருக்கு 101 வது சிறுகதை எழுதுவது அத்தனை எளிதாக  இருப்பதில்லை. உண்மையில் மிகவும் கடினமானது.  அது ஏற்கனவே எழுதிய நூறு கதைகளில் சொல்லாதது ஒன்றைச் சொல்ல வேண்டும். மற்றவ்ர்கள் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும்  இருக்க வேண்டும். “ புதிதைச்  சொல். புதிதாகச் சொல் “ என்பார்கள். இப்பேட்டிகளிலும் புதிது புதிதாக விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பேட்டி எடுத்தவர்கள் பாக்யவான்கள்.
முத்துலிங்கம் அவர்களின் இப்பேட்டிகளையும் உரையாடல்களைய்ம் கவனிக்கிற போது கட்டுப்பெட்டியான குடும்பங்களில் ஆண்கள்  பேசுவதை எதிலும் குறுக்கிடாமல் , கேள்விகள் கேட்காமல் கண்களை சிமிட்டாமல் கேட்கும் பெண்களைப்  போல் இருக்க ஆசை வருகிறது.
                              
(விலை ரூ 120. கயல்கவின் பதிப்பகம் , சென்னை  9944583282)

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்சுப்ரபாரதிமணியன்பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக  அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை.  இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும்  நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம்  சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய  தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி  தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை  வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அதனால்தான் மரணமில்லா பெருவாழ்வும் அவனின் கனவாக இருந்திருக்கிறது.அவரின் இறுதிச் சொற்பொழிவினை ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.அதன் தலைப்பு : ”  மனிதனுக்கு மரணமில்லை.”  அவரை சிறந்த சொற்பொழிவாளராகக் காட்டும் தரவுகளைத் தந்திருக்கிறார். இதைத்தவிர இஸ்லாம் மார்க்க மகிமை போன்ற சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டி இதைச் செய்திருக்கிறார்.
தாவரங்களின் வழி அன்பைத்  தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட  இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து  கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது.பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து  அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை  தவிர்க்கிறார். அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களீல் காட்டப்பட்டிருக்கிறது.திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில்சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து  உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படி பூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதியின் செயப்பாட்டால் விளங்கியதை சேதுபதி எடுத்துரைக்கிறார்.  . 
பலஅபூர்வமான  புதிய தரவுகளையும் செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. பாரதி தலைமறைவு வாழ்க்கையில் சென்னையிலிருந்து புதுவைப் பயணத்தை இரயில் மேற்கொண்டாரா, இல்லை படகில் சென்றாரா என்ற ஆய்வில் படகில் சென்றிரூகும் வாய்ப்பு பற்றி  எடுத்துரைக்கிறார். ( இதை மெய்பிக்க அவர் அரசாஙகத்தின் கெமிக்கல் எக்ஸாமினரின் முதல் நிலை உதவியாளரான நஞ்சுண்டராவ் வாரிசுகளை சேதுபதி தேடிச் சென்ற அனுபவங்களை நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவே ஒரு தனி நூல் அளவு விரிவானது)  படைப்புகளைத் தொகுக்கப்படுகிற போது ஏற்படும் மயக்கம் தந்திருக்கும் குழப்பத்தை சேதுபதி பாரதிதாசன் அரவிந்தர் மீது பாடிய அரவிந்த பாமபு என்ற கவிதை பாரதியின் பாடலென இடம்பெற்றிருப்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறார்.தன் நண்பரான அரவிந்தரின் நட்பு  ஆன்மீக இலக்கிய உறவாக இருந்ததைக் காட்டும் அத்தியாயங்கள் வெகு சிறப்பானவை.
பாரதி எப்பொருளையும் விட்டு வைக்கவில்லை. எந்தக்கடவுளையும் கூட.பக்தி இலக்கியப் பார்வையிலிருந்து  மாறுபட்டு செயலாக்க  நிலையில் நாயன்மார்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம்  செய்திருப்பதை சேதுபதி விரிவாய்ச் சுட்டிக்காட்டுவதில் நவீன நாயன்மாராக பொலிவுறும் பாரதியைக் காட்டுவதன் மூலம்    கலை வடிவம் மீறி செயல்வடிவிற்குறிய  அவசியத்தை  வலியுறுத்துகிறார். சமூக செயல்பாடுகளில் இன்றைய எழுத்தாளர்கள் நிற்க வேண்டிய இடம் எது என்பது இதனால் பூடகமாக சேதுபதி வெளிப்படுத்தியிருக்கிறார். என்பது சமகால முக்கியச் செய்தியாகும். அருணகிரிநாதர் முதற் கொண்டு அரவிந்தர் வரைக்கும்,  நவராத்திரி முதல் தீபாவளி வரை, மதம் முதல் தொழிலாளி வர்க்கம் வரை பாரதியின் பாடல்கள் கவிதையின், படைப்பிலக்கியத்தின்  உச்சமாயும், சமூக வாழ்வியலாகவும் அமைந்திருப்பதை சேதுபதி ஆழமான வாசிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.அருணகிரிநாதரின் கவிதைகளை மொழிபெயர்த்தது, நாயன்மார்களின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை  சேதுபதி வெளிப்படுத்துவது பாரதியின் ஆழமான வாசிப்பின் அடையாளத்தையும் பன்முகத்தன்மையையும்  விரிவுபடுத்துகிறது.
மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல்  என்ற வகையிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக்கிறது..அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது. இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது. சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின்  வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கியச் சம்பவங்களையும் சுவாரஸ்யமானச் செய்திகளையும் அவரின் கவிதைகளின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்புகளில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டுவதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.
நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்- முனைவர் சொ. சேதுபதி ரூ 115, நியூ சென்சுரி  புக் ஹவுஸ், சென்னை

நாவல் : தறிநாடா… –

சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

கலைச்செல்வி

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள் பதிகிறது.
‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.. கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..’ என்ற கருத்து எதிர்மறையாகிறது. கற்றுக் கொண்ட கைத்தொழில் கண்ணெதிரே நசிந்துக் கொண்டிருக்க விட்டு செல்லவும் முடியாமல் தொட்டு தொடரவும் வழியின்றி போராட்டமாக மாறுகிறது. போராட்டம்.. போராட்டம்.. நீளும் போராட்டம்.. அரசியல் பாதுகாப்பின்மை.. பணபலமின்னை.. வலுவான ஆள் தொடர்பின்மை.. ஒருமித்த கருத்தின்மை.. ஜாதி ரீதியாக மட்டுமே கையெடுப்பு.. என்பது போன்ற காரணிகள் அமிழ்த்துவதில் பசி.. சாவு.. அழுகுரல்.. இவற்றோடு காவல்துறையினரின் அடக்குமுறையும் சேர்ந்து கொள்ள போராட்டம் கூர்மையை இழக்கிறது. இருப்பதை பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிலைக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது.. என்ற உண்மை நிலைப்பாடு உருக்குலைந்து போகிறது.
நெசவுத்தொழிலின் பிரத்யேக வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெளிவு செய்திருக்கலாம். தறிநாடா.. பாவு.. பாவடி.. பில்வேர்.. ஊடைநூல்.. ஜக்காடு மிஷின்.. என்ற நெசவுப்பயணத்தில் சவுண்டியம்மன் கோவில்.. அதை தொடர்ந்த சிறுசிறு நம்பிக்கைள்.. சம்பிரதாயங்கள்.. சிவனின் காரமடை பெருமாள் மீதான பக்தி.. அதை சுற்றியமைந்த கதைகள் போன்றவை நாவலை உயிர்ப்பாக்கி முன் செலுத்துகிறது.
ஒரு தொழிலின் நசிவென்பது முதலில் உணரப்படுவது அந்த தொழிலாளிகளால் தான். அவர்களின் குரல்கள் அலட்சியப்படுத்தப்பட்டு செய்யும் காலப்பயணம் முழுமையற்று தான் போகும். பொன்னுவை நேர்முகத்தேர்வுக்கு அனுப்பும் தகப்பன் ;நாங்கள்ளாம் ஏழப்பட்ட நெசவாள குடும்பம்ன்னு சொல்லுப்பா..’ என்ற ஒற்றை வார்த்தை ஒரு சமுதாய துயரத்தை உணர்த்துகிறது. ஆசாட மாதங்களில் தறிசாமான் கடையா.. அடகு கடையா என்ற சந்தேகம் வந்து விடும் என்ற பதிவுகள் மனதின் சுமைகள்;. கூரைப்புடவை.. ராஜாஜி கதர்.. ஆனந்தரங்கம் பிள்ளையின் நெசவுத்தொழில்.. இப்படியான தகவல்கள் ஏராளம். எண்ணங்களையும் எதிர்கால பயங்களையும் கனவுகளாக்கி வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
போராட்டத்தின் தொய்வுகளும் நிமிரல்களும் பத்திகளாக வெளிப்படாமல் கதாபாத்திர உரையாடல்கள் மூலம் தெரிய வருவது ஆறுதல்.  ‘ஸ்டிரைக் யார பாதிக்குது..? முதலாளிங்க அக்கறப்படல.. நாமளே இறங்கி வரணும்னு நெனப்பு அவங்களுக்கு.. கடைகளை கூட அபூர்வமா தான் தெறக்கிறாங்க.. எப்போஎப்போன்னு பாத்து நெஞ்ச சேலைய கொடுத்தமுன்னா காசு வேணும்னா உங்க சங்கத்துல கேளுங்கிறாங்க..’ இயலாமை வார்த்தைகளாகிறது. ‘பாவெல்லாம் நீட்டி எவ்ளோ நாளாச்சு..’ குலத்தொழிலின் ஏக்கம் வார்த்தைகளில் வடிகிறது.
ஏகப்பட்ட விஷயங்களை தொட்டு செல்லும் நாவலாசிரியர் பொன்னுவின் பாத்திரத்தில் தன்னையறியாது வெளிப்படுகிறார். ‘நெசவாளிங்க போராட்டத்துல உண்மையா நெசவு செய்றவங்கள மட்டும் போனா போதும்..’ என்று வரமறுக்கும் நேர்மை.. தகப்பனின் தழுதழுப்புக்கு ‘இரக்கப்படற உலகம் இது இல்லப்பா..’ என்ற சமுதாய புரிதல்.. என்று பொன்னுவின் மனப்போக்கு விரிவடைகிறது. நாராயணமூர்த்தி வேடமிட்ட பொன்னு.. தன்னை ஜாதிக்குள் சொருகிக் கொள்ளும் பொன்னு என்றிருந்தவன் வேலையின்றி சலித்து கிடந்ததில் பாசிபடர்ந்த குட்டைக்கு அழுக்கு துணிகளை வெளுக்க செல்லும் தாயும் சகோதரிகளும்.. சோறின்றி போனதில் மயங்கிய தாய்… காசின்றி போனதில் காத்து கருப்பு நம்பிக்கை.. இதற்கு ஒத்து ஊதும் காசி சித்தப்பா.. இப்படியான பற்பல நிகழ்வுகளில் பொன்னுவின் விழிப்புணர்வு உணர்த்தப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் வீழ்ந்து போன பரமேஸ்வரன் பொன்னுவின் மனதில் உயிர்த்து போகிறார்.. தோழர் ராஜாமணி நிலைத்து விடுகிறார்.. பொதுவுடமை சித்தாந்தத்தின் வழி செல்லும் மனதை கட்டுப்படுத்த முடியாது இறுதியாக பெற்றவர்களிடம் தன்னை தணித்துக் கொண்டு வாதிடும் பொன்னு.. அப்போதே புதுத்தோழர் உருவாகி விடுகிறான்;.
ஒரு விதமான ‘டிரண்ட் செட்டர்களாக..’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தற்போதைய கதராடை காதலர்களை நோக்கி சொடுக்கி விட்ட சாட்டை இந்நாவல். வெகுஜன பார்வைக்கு உட்பட்டேயாக வேண்டிய நாவல்.
நாவலை முடிக்கும் போது காலங்களின் குரல்கள்; காதுகளில் தறிநாடா சத்தமாய்.. சத்தமாய்.. சத்தமாய்..
Print Friendly

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

      கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு நூல்களையும் அனுப்பலாம்.
ரூ50,000 பரிசு வழங்கப்படும்.
3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி :  15-4-2014
முகவரி:
அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு
பாலாஜி ரோடுலைன்ஸ்,
51/38, சரவணா தெரு,
அவினாசி சாலை,
திருப்பூர் 641 602

சனி, 25 ஜனவரி, 2014

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

சுப்ரபாரதிமணியன்

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி
ஆசிரியர்:      என் . மணி

” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள் போகும் சிரமம் நீங்க மிதிவண்டிகள் வந்து விட்டன.முன்பு வகுப்பில் பத்துப் பேர் இருந்தால் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் அபூர்வம். இப்போது புத்தகம், சீருடை இலவசம். மடிக்கணிணியில் உலகத்தையே பார்க்கும் லாவகம். 2023 தனி நபர் வருமானம் 4லட்சத்து 50 ஆயிரம் ஆக்கும் திட்டங்கள். 2020ல் இந்தியா வல்லரசாகி விட்டபின் இதெல்லாம் சகஜமோ என்னமோ. வெளிநாட்டினரின் முதலீடு கல்வித்துறையில். உயர்கல்விக்குப் போகிறவர்கள் 12% என இருக்கையில் 2% வெளிநாடு போகிற மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டி நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.” குலோபல் மெத்தாடலஜி “ என்று ஏகத்துக்கும்  பிரச்சாரம்.

மறுபுறம் கல்வி உரிமைச் சட்டம்   நடைமுறைப்படுத்தப்படலிருக்கும் சிக்கல்கள் அசர வைக்கின்றன. கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கே கல்வி உரிமை என்பதில் குழப்பம் இல்லை. அதே சமயம் பள்ளிகளில் இடை நின்றவர்கள் பற்றிய புள்ளி விபரக் கணக்குகளும் அவர்களின் நிஜக்கதைகளும் பள்ளி விட்டுத் துரத்தப்பட்டவர்கள் என்பதையே காட்டுகின்றன.பள்ளிகளிலேயே   ஆரம்பிக்கும் ஜாதீய வன்முறை, படிப்பு, ஒழுக்கம் எனபதை வலியுறுத்தி நடத்தப்படும் தண்டனை வன்முறைகள் குழந்தைகளை பள்ளிகளில் இருந்துத் துரத்துகின்றன. அந்த வகையில் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளைத் தேடிச் சென்று    அவர்களுக்கு கல்வி நிராகரிக்கப்பட்ட கதைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த மணி இந்நூலில் தொகுத்திருக்கிறார். அக்குழந்தைகளின் வார்த்தைகளிலேயே பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் குடும்பப் பின்னணி வறுமை நிலை பல கதைகள் சொல்கின்றன. டிசி இல்லாத காரணத்தால் பல குழந்தைகள் துரத்தப்படுகிறார்கள். ( டி சி தேவையில்லை என்பது வேறு விசயம். ) இரவுப்பள்ளிகளுக்கு ஆர்வமாய் செல்பவர்கள் குடும்பச் சூழல் காரணமாக  அதையும் கை விட வேண்டியிருக்கிறது.போதைக்கு பலியாகிப் போன அப்பாக்கள். குழந்தைகளை விட்டு வேறு புது உறவுகளுடன் தஞ்சமாகி விடும் அம்மாகள்,பகுதி நேர வேலை செய்து விட்டு  பள்ளிக்குச் செல்கிறவர்கள். கணக்கும் ஆங்கிலமும் அவர்களுள்  ஏற்படுத்தி விடும் மனத்தடைகள் ஏராளம்.இருப்பிடம், சுகாதாரம், ஆரோக்கியம் ஏதுமின்றி வளர்க்கப்ப்டும் குழந்தைகள்.,உழைத்து விட்டு வேலைக்குப் போகிற சிறார்கள் மத்தியில் புழங்கும் சேமிப்புப் பழக்கம், ஆசியர்களின் அணுகுமுறையே பலசமயங்களில் மாணவர்களை பள்ளிகளில் இருந்து துரத்துவது, நிலைமை சரியில்லை என்று குடும்பச்சூழல் பார்த்து பள்ளிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் குழந்தைகள்.,ஒரு குழந்தை இன்னும் பிறந்து விட்டால் முந்தைய குழந்தையின் கல்வி  தடைபடுவது, பள்ளியிலும் , வீட்டிலும் விளையாட்டை மறந்து விட்ட குழந்தைகள் என்ரு பல விதமான குழந்தைகளின் வாழ்க்கையை மணி இந்நூலில் சொல்கிறார். அவர்களின் இருப்பிடங்கள். வேலைக்குச் செல்லும் இடங்கள், இரவுப் பள்ளிகள் என்று அவர்களைத் தேடிச் சென்று  அவர்களின் கதைகளைக் கேட்டு பதிவு செய்திருகிறார்.  கல்வி உரிமை  மறுக்கப்பட்டவர்களின் கதைகளாக இவை நீள்கின்றன. இடைநிற்றல், வறுமையை புறம் தள்ளி விட்டு அவர்கள் கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் பற்றி தொடர்ந்து தனது இயக்க செயல்பாடுகளின் மூலம்  பணி புரிந்து வரும் மணி அவர்கள் தனது செயல்பாட்டின்  ஓர் அங்கமாக இந்நூலை  கள ஆய்வுப்பணிகளின் பதிவாய் வெளியிட்டிருக்கிறார். மணி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் . மாற்றுக்கல்விக்கான நுல்களின்  வாசிப்பு முகாமைத் தொடர்ந்து நடத்தி வருபவர்.. பொருளாதாரத் துறைப் பேராசிரியர்.கல்வி உரிமைச் சட்ட்த்தின்  அவசியம் பற்றித் தெரிந்து கொள்ள இன்னுமொரு கள ரீதியான பதிவாய் இந்நூல் விரிந்துள்ளது. ( 48 பக்கங்கள் ரூ 25: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )



- சுப்ரபாரதிமணியன் (  9486101003  )

வெள்ளி, 24 ஜனவரி, 2014

திரை விலக்கும் முகங்கள்

கமலா இந்திரஜித் கதைகள்

சுப்ரபாரதிமணியன்

திரை விலக்கும் முகங்கள்



வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர்  பரிசு பெற்ற  ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த  அங்கீகாரத்தை  எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை )

இவரின்  30 ஆண்டுகளுக்கு மேலான ஆசிரியப் பணியும்., தஞ்சை மக்களின் வாழ்க்கையும், கிராமியச் சூழலும் இவரின் படைப்புகளுக்கான களமாக இருக்கின்றன. இதைத்தாண்டி புள்ளமங்கலம் என்ற இவர் வாழும் கிராமத்துச் சூழலும் , பெரிய கடை என்ற பல்பொருள் அங்காடியும் அது சாதாரண மக்களை கொண்டு சேர்க்கிற அம்சங்களும் மிக முக்கியமானவை..
இக்கதைகளில் தஞ்சை மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழக்கைப் பதிவுகளைப் பிரதானமாகச் சொல்லலாம். அவர்களில் பெரும்பான்மியினர் விவசாயக்கூலிகள்  சாதாரண விதியின் சதிக்குள்ளும்,  நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளுக்குள்ளும் அடங்கிப்போனவர்கள்.தேர் வடக்கயிறு பிடிக்க அருகதையற்ற வகையில் புறகணிக்கப்பட்டவர்கள். அறுவடைகால நியாயங்களில் முடங்கிப் போனவர்கள்.. வெகு சாதாரணமாக கைவிடப்பட்டவர்கள்.       ” இந்த வலி எல்லோருக்கு கிடைக்காது. பொம்மனாட்டிகளுக்கு மட்டுந்தா ” என்று பிரசவத்தையும், தாய்மைப்  பேற்றையும் மனதில் கொண்டிருப்பவர்கள். கணவன்மார்களின் சிதரவதைகளைப் பொறுத்துக் கொள்பவர்கள்.  தேனீக்களோ, இயற்கை நியாயங்களோ  அவர்களை கேள்வி கேட்கும் என்று திடமாய் நம்புகிறவர்கள். விவாகரத்து கோரினாலும் 60ம் கல்யாணக் கோலங்கள் பார்த்து திருந்தி விடுபவர்கள். உழைப்பை பிரதானமாகக் கொண்டு வாழக்கையை நடத்துபவர்கள். உறவுகள் சொந்தமாக்குகின்றன. சொந்தங்கள் உறவுகளாகின்றன இவர்களுக்கு,
மறுபுறம் கிராமத்தின் கால்நடைகளும், மிருகங்களூம் வெகு லகுவாக இந்தக் கதைகளில் பிரவேசித்து சக மனிதர்களுடன் நடமாடுகின்றன. கால்நடைகளின்  மீதான பிரியம் வாழக்கைக்கு வேறொரு அர்த்தம் கொடுக்கிறது.  உயிரற்ற பொருட்களும் தரும் புது உபயோக்ஙக்ளும், அணைப்பும் சக மனிதர்களின் பூரிப்பிற்கு இடம் தருகின்றன.இவர்களுக்கு சடங்குகள் பாரங்களாக அமைவதில்லைல் பாரத்தைக் குறைக்கிற அருமருந்துகளாக அமைகின்றன.  மனித நேயம்,  சமய சடங்குகளை ஒழித்த  அன்பின் வெளிப்பாடு   எங்கும் பரவிக்கிடக்கிறது.
பரிசுக்கதைகளின் பார்மலாவிற்கென்று கட்டமைக்கப்பட்ட பல்சமயமனிதர்களின் நோக்கும் மனிதாபிமானமும்  எப்போதைக்கும் சகமனிதர்களின் சாதாரண உணர்வுகளை   கவ்விப்பிடித்து விடுவதை இதில் உள்ள சிலகதைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஹேமாவின் அம்மா போன்ற கதைகளில் தலைப்பு முதல் பிறரின் புகழ் பெற்ற  கதைகளின் பாதிப்பையும் காண முடிகிறது, கிராமியப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள் என்று கிராமியச் சூழலில் இணைந்த   கதையாடல்கள் கதைகளை வேறு தளங்களுக்கு நகர்த்திச் செல்கின்றன. மூடு  பல்லக்கில் உலவும் பல பெண்களின் முகங்களைக் காட்டுகிறார். அல்லது கிழித்தெறிகிறார்.  ஆழ்கடலென பல்வேறு சமய மனிதர்கள்  சக பயணிகளாக மனிதாபம் கொள்ளச் செய்கிறவர்களாக் இருக்கிறார்கள். கதை சொல்வதில் சரளத்தன்மை இருக்கிறது. புழங்கும் மொழியில் தஞ்சையும், பிராமணியமும் மணக்கிறது. இன்னும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றியது. வெகுஜன இதழ்களின் பிரசுரிப்பும் முக்கிய காரணம்.
பெரியகடையும், புள்ளமங்கலமும் இன்னும் நிறைய செய்திகளையும், அனுபவங்களையும் சுரங்கங்களாகத் தர இருப்பதன் முதல் அடையாளமாக  மூடுபல்லக்கில் முகம் விலக்கிப் போகும் பல தஞ்சை மனிதர்களுடன் இக்கதைகளில் பயணிக்கிறோம்.

(  ரூ 150., காவ்யா பதிப்பகம், சென்னை  )

திங்கள், 6 ஜனவரி, 2014

அமிருதா வெளியீடு - முத்துக்கள் பத்து: சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்!


சுப்ரபாரதிமணியனின்  மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள்  வெகு யதார்த்தமான  அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும்  குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும்  சிறுகதைகளாயிருந்தன.  அவற்றையெல்லாம்  அவரின் அனுபவக் கதைகளாகக்  கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது  நிறைய எழுத ஆரம்பித்தார்.  செகந்திராபாத் வாழ்க்கையை   சிறுகதைகளாக  ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். . 
     
செகந்திராபாத் வாழ்க்கைகுப் பின்னால் அவர் தன் சொந்த ஊரான திருப்பூர் வந்த பின்  அவரின்  நாவல்கள் தரும் திருப்பூர்  வாழ்க்கையின் அனுபவங்களை மீறிய அவதானிப்புகளை இவரின் சிறுகதைகளின் பரப்பில் காணலாம்.  தொழில் நகரம் காட்டும்  உழைக்கும் விளிம்பு நிலை  மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். உலகமயமாக்கல்  ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும், குழந்தைகளையும்  சிதைத்து வருவதை விரிவாகச் சொல்லியிருக்கிறார்.சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், மனித உரிமை பிரச்சினைகளும் அவர்களுள் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.  வாழ்க்கையையும், இலக்கியத்தையும் ஒரு சேர  கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதிமணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்பட்டிருப்பதில்  அவருக்கு இணை யாருமில்லை.அவ்வளவு  விரிவான வகையில்  அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும்,பிரச்சினைகள் மீதும். கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும், விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை  அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது  கதை மாந்தர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் வெளிப்படுகின்றன, அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம்  சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாயும், அதிகபட்சமான சிறுகதைகளையும் வேறு யாரும் தமிழ் சூழலில் எழுதி இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் அக்கறை பற்றி நிறையவே சிறு கதைகளில் விவாதித்திருக்கிறார்.  ஒவ்வொருவரும் ” சாயத்திரை”யை மறந்து விட முடியாதபடிக்கு ஒரு படிமமாகவே அது நிலைத்து விட்டது
     
அயலகத்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி இவரின் பயண அனுபவக்கட்டுரைகளைத்தவிர இடம் பெற்றுள்ள சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.செகந்திராபாத் சூழலில் அந்நியப்பட்ட தமிழன்களைப் போலவே இவர்களும் அன்னியப்பட்டே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.

பெண் பாத்திரங்களின் உருவாக்கத்தில் அவர் கொள்ளும் அக்கறையும், தேர்ச்சியும் ஆச்சர்யப்படுத்துபவை. கஸ்ட அனுபவங்களுக்குள் இவர் தன்னைத் தோய்த்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. செகந்திராபாபாத்தோ, திருப்பூரோ அவர் வெவ்வேறு களங்களுக்குள்ளும், இடங்களுக்குள்ளும் பயணிக்கிறார். போராடும் மனிதர்களின் ஆன்மாவைத் தொட்டுக் கொண்டே போகிறார். சொல்முறை உத்தி சாதாரண உரையாடல்களாலும், இறுக்கமான வாக்கிய அமைப்புகளாலும்  நிறைந்திருக்கிறது. சமூக மனிதர்களின் உளவியலுக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன.   வெவ்வேறு மையங்களுகு செல்வதாக்த் தோன்றினாலும் அவை மனிதம், அன்பு, சமூக விமர்சனம் என்ற வகையிலேயே அடைக்கலம் கொள்கின்றன. எழுத்தாளன் அவனின் அரசியலை வெளிப்படுத்தாமல் எங்கும் ஒளிந்து கொள்ள இயலாது.  தன் அரசியல் முகத்தை சுப்ரபாரதி மணியன் என்றைக்கும் ஒளித்து வைத்துக் கொண்டதில்லை. மாற்று அரசியல் குறித்த அக்கறையைஅவை சுட்டுகின்றன. அவரின் மார்க்சியம் சார்ந்த சார்பை அவரின் கட்டுரைகளில் இனம் கண்டு கொள்ளலாம். ஆனால் படைப்பாக்கத்தில் அவை கோரும் தத்துவ சார்பை எப்போதும் உரக்கத் தொனித்ததில்லை யதார்த்தம்  மீறிய மாயத்தன்மையை அவரின் சில கதைகளில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.   அவை பெரும் பாலும் கனவு நிலைகளில் வெளிப்படுகிறது. எந்த முன் தீர்மானமும் இன்றி கதைகள் நகரும் போது சொடுக்கப்படும் சாட்டையின் வீச்சை  சுலபமாகக் கண்டு கொள்ளலாம். மனிதத்துவத்திற்கு எதிராக நடக்கும் எல்லா விதமானக் கொடூரங்களையும் , அதீத செயல்களையும் அடையாளம் கண்டு கொள்கிறார். அடையாளப் படுத்துகிறார்.விளிம்புநிலை மக்களில் பொறுக்கிகள், எளிய பெண்கள், விலைமாதர்கள், ஆதிவாசிகள், சுற்றுச்சூழல்வாதிகள் என்று பலரை அடையாளம் கண்டு கொள்ளலாம். மையங்களைக் தகர்த்தெரிந்த  விளிம்பு நிலை மனிதர்கள் இவரின் கதைகளில் தென்படுகிறார்கள். குழந்தைகளின் அபூர்வ உலகத்தை  சரியாக மனதில் பிடித்துக் கொள்ளலாம்.  சாயம் அப்பிய முகங்களோடு அலையும் மனிதர்களும், தனியார் மையத்தை சகித்துக் கொள்ள முடியாமல் திணறுபவர்களும், பெரும்நகரத்தில் கை விடப்பட்டவர்களும், நகரம் உருவாக்கும்  உதிரித்தொழிலாளர்களும் கூட இக்கதைகளில் அழுத்தமாக இடம் பெற்றிருக்கிறார்கள்.    நம்முடன் உறவாட இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களா என்ற எண்ணமும் , நம்பிக்கையும் இவரின் கதாபாத்திரங்களோடு பயணிக்கும் போது  தென்படுகிறது. வாழ்க்கை எவ்வளவு வகையான  மனிதர்களை நம்மோடு இணைத்துக் கொண்டு செல்கிறது என்பது விசித்திரமானது. ஒரு முதிய மனிதனின் அனுபவத்தோடும், இளைஞனின் துடுப்போடும்  உள்ள இக்கதைகளை  படிக்கும் எந்த வாசகனும் தமிழ்ச் சிறுகதை வாசகப் பரப்பின் விரிவை அடையாளம்  கண்டு கொள்வான்.சிறுகதைகள் மூலம் பிரமாண்டமாய் வெளிப்படும் ஆளுமை சுப்ரபாரதிமணியனுக்குள் இருப்பதை சரியாக உணர்ந்து கொள்வான்.     
( விலை ரூ 90., அமிருதா பதிப்பகம் வெளியீடு, சென்னை )
அனுப்பியவர்: subrabharathi@gmail.com

நிர்வாணி





அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் குறுகச் செய்த்து. வேர்த்து விறுவிறுத்திருந்த பனியன் சட்டையை கழற்றியிருந்தான். இடுப்பு உள்ளாடையைக் கழற்ற எத்தனித்தபோது அவன் லுங்கியின் நுனியை  வாயில் கவ்வியிருந்தான். ஆனால் அது ஏனோ நழுவி அவனை நிர்வாணமாக்கியிருந்தது.  ஜெயபால் குனிந்து லுங்கியை எடுத்த போது உடம்பில் ஏதோ பாரத்தைக் கட்டி விட்டது போல்  உடம்பு கனத்தது. உடம்பு இன்னும் ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் வந்து விட்டது. பயம் எந்த வித சகுன்ங்களும் குறியீடுகளும் இன்றி  உடம்பினுள் புகுந்து விட்ட்து போலிருந்தது
சந்திராவுக்கும் உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதைச் சொல்லியிருந்தாள். காலை அகட்டி வெச்சு படுக்கறப்போ உலகமே பாரமா எறங்கற மாதிரி இருக்கய்யா என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவளின் புட்டங்கள் வெகுவாக விரிந்த செம்பருத்திப் பூ போல பருத்து விட்டன.
அவள் கொஞ்ச நாளாய் செம்பருத்திப்ப் பூவை தேடிப் பிடித்து வீடியகாலையில் சாப்பிடுபவளாயிருந்தாள். கொலஸ்ட்ரால்  என்று மருத்துவ பரிசோதனை ரிபோர்ட்கள் தொடர்ச்சியாய் சொல்லிக் கொண்டே இருந்தன. முத்துசாமி டாக்டர் வாய் விட்டு ஏதேதோ சொல்லி விட்ட மாதிரிதான் அதைச் சொன்னார்: செம்பருத்தி ந்ல்லா கரச்சிரும் ஹைபிரிட் வேண்டாம். என்றார்.. ஹைபிட்டைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருந்தது. அவ்வளவு சிவப்பாய் இல்லை. சிவப்பில் ஒரு பழுப்பு நிறம். மகரந்தங்கள் ஏனோ ஒடிசலாய் நிற்கும்.. அதை சுலபமாக நிராகரிக்க முடியவில்லை. நல்ல   செம்பருத்திப்பூவை இளசாய் சாப்பிடுவது கனவாய்  மாறி விட்டிருந்தது. வீதியில் அவ்வப்போது வந்து போகும் தள்ளி வண்டிக்காரனிடம் செம்பருத்தி  நாற்று ஏதாவது  தென்படுகிறதா என்று அவள் கண்கள் ஜல்லடையாய் அலைந்தன.  செம்பருத்தி தவிர எல்லாம் கிடைப்பதாக் இருந்தது.  செக்யூரிட்டி உத்யோகம் பார்க்கும்  ஜேகப்  வால்பாறையில் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.அவன் செம்பருத்தி குச்சியைக் கொண்டு வந்து தருவதற்கு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அதை வாசலில் வைத்த போது துளிர் விடவில்லை. அந்த சமயத்தின் போது மஞ்சூருக்கு வேறு போக வேண்டியிருந்த்து.  அங்கு எல்லாம் பனியில் குளித்திருந்தன. உடமபை சுலபமாக நடுங்க வைக்கும் குளிர்… வாயில் தண்ணீர் விட்டுக் கொண்டால் கடுகடு என்றிருந்தது.பல்லில் படும் போது ஒரு வித வலி கிளம்பியது.வயசனால்தான் பல்லுக்கு இந்த கூச்சமும், வலியும் வரும் என்று விஜயா சொன்னாள். அவ்வளவு வயசாகி விட்டதா என்ன.. நாற்பதற்கு மேல் கடந்து விடுவது பெரிய வயசா என்ன..மஞ்சூரில் செம்பருத்தி பூத்துக் கிடப்பதாய் சொன்னார்கள். பனியில் படுத்துக் கிடப்பதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று  சிரிப்பினூடே சொன்னாள்.”  நீ சொன்னா அந்த நாத்து எந்திரிக்காதா..”
“ நான் சொல்லி எவன் எந்திரிக்கப் போறான் . இது எந்திரிக்கறதுக்கு ’ வாசலில் நட்டது வீணாகாது என்று நம்பினாள்.  ஊருக்குத்திரும்பியபோது அது மண்ணோடு படுத்துக் கிடந்து சோர்வைக் காட்டியது. மண்ணு வேறெ மாத்திப் பாரேன் என்று கவுசல்யா சொல்லி விட்டாள். மறுபடியும் செம்பருத்தியைத் தேடுவது சிரம்மாகவே இருந்த்து அவளுக்கு. “ வேரோட புடுங்கி வெச்ச மாதிரி செய்யணும் . அப்பதா அதுக   நெலைக்கும்  ” சிவதாசன் வீட்டில் இருப்பதாக யாரோ சொன்னார்கள், நெடு நெடு என்று வளர்ந்து கிடந்தது சிவதாசனைப் போலவே..அதுவும் விடிய காலையில் தான்  சாப்பிட வேண்டும் இரண்டு நாள் பனி, இருட்டு என்று பார்க்காமல் போய் நறுக்கி வந்து விட்டாள். ஒரு நாள் சற்றே இருட்டில் நடந்து கொண்டிருக்கும் போது நாடார் மளிகைக் கடை பக்கம்  கேட்ட குரல்தான் அவளைத் தடுமாறச் செய்து விட்ட்து.” வெடிய காலையிலே இவ மீஞ்சியிலே முழிக்க வேண்டியிருக்கே”  அதற்கப்புறம் சிவதாசன் வீட்டுப்பக்கம் போக வில்லை. இரவில் அந்தப் பக்கம் நடமாடி செம்பருத்தியைப் பறித்து வரலாம் என்பது சவுகரியமானதாக் இல்லை. வெறும் வயிற்றில் தின்னும் போது வழுவழுப்பாக குமட்டிக் கொண்டு வந்தது.  கொஞ்ச நாளில் பழகிப் போய் விடும் போல இருந்தது. ஆனால் கைக்கு எட்டாதமாதிரி நின்று விட்டது.  இடைவெளி விட்டு சிவதாசன் வீட்டுப் பக்கம் போயிருந்த போது ஒரு முறை  ஏதோ களேபரம் மாதிரி தெரிந்த்து.  அவரின் மாமனார் அவருடன் தான் இருந்து கொண்டிருந்தா. அவருக்கும் எழுபது வயதிற்கு மேலாகி விட்ட்து.  அவரது நடத்தையில்  மாமியாருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந்த வயசிலே அந்தாளு என்ன பண்றார் இப்பிடி என்று எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.  அவருக்கு எழுபதிற்கு மேலாகி விட்டது. சின்ன வயதில் அப்படி இப்படி என்றுதான்  இருந்திருக்கிறார்.  அந்த ஞாபகத்திலேயே மாமியார் அவர் இந்த் வயதில் முடங்கிக் கிடக்கிற போதும் கூட சந்தேகத்தால் ஏதோ பேசிக் கொண்டே இருக்கிறார்.  மனநல மருத்துவர்களிடம் கூட்டிக் கொண்டு போகலாம் என்றால் “ நம்ம மரியாதை என்ன ஆகிறது” என்று சிவதாசன் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்த சமயத்தில் அந்தப் பக்கம் நடமாடுவது உகந்ததாகத் தோன்றவில்லை அவளுக்கு.        ” என்னையும் சேத்து வெச்சு பேசிட்டா என்ன பண்றது.. “  அதை ஜெயபாலிடமும் சொல்லியிருதாள்.” நீ அந்தப் பக்கம் நடமாடியதுதா காரணமோ என்னமோ… சிவதாசன் மாமியார் கண்லே பட்டுட்டேயோ என்னவோ. “ கொலஸ்ட்ரால் பற்றி அதற்கப்புறம் மனதில் கொள்ளவில்லை. தலை போகிற போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்.
என்ன பிழைப்பு இது. எத்தனை நாளைக்கு இப்படி அல்லாடிக் கொண்டு என்பது சந்திரா  வாயில் இருந்து வரும் சுலோகம். அவனின் நிவாணத்தைக்குலைத்தது அது. அவன் கீழே நழுவிய லுங்கியை  எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான்.  சட்டையை வியர்வை  ஆறிப்போன பின்பு மாட்டிக் கொள்ளலாமா என்ற நினைப்பு வந்த்து.  ஆனால் அதை எடுத்து பக்கம் கொண்டு வந்த போது வீசிய வாசம் ஒரு விதக் குமட்டலைக் கொண்டு வந்து விடும் போலிருந்தது. இந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டால் இப்படி குமட்டலாகத்தான் இருக்கிறது அதற்காக வீட்டை விட்டு ஓடிப் போக முடியாது. பனியன் கம்பனியில் வேலை குறைந்து போய் விட்டபின்பு பனியன் கம்பனியும் துரத்து விடுகிறது. நாரசமாய் எல்லாத் தெருக்களிலும் ஓடும் ஜெனரேட்டர்களின் சப்தம்  அவனை வெகு தூரம்  துரத்தி விடும் என்பது திரும்பத் திரும்ப மனதில் வந்தது.எங்காவது போவதற்கும் பணம் வேண்டும். எதேச்சையாய்  நீண்ட அவனின் கைகள் பேண்ட் பாக்கெட்டை  தொட்டுப் பார்த்துக் கொண்டன. அதுவும் பெரிதாக காசில்லாமல் நிர்வாணமாக்த்தான் கிடப்பதாகச் சொல்லிக் கொண்டான். சனிக்கிழமையன்று தென்படும் பண நோட்டுகள்  அவனுக்கு புது ஆடை உடுத்தி விட்ட சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்திருகின்றது.
.

அவன் பேண்ட் பாக்கெட்டில்  சாக்லெட்டுகள் நாலைந்து  தென்பட்டன. இது போது. யாராவது அகப்பட்டால் போதும். அப்புறம் வேறு எதையாவது வாங்கிக் கொள்ளலாம். அந்த மெட்ரிக்குலேசன் பள்ளி முகப்பு கேட் பார்வையிலிருது தப்பியிருந்தது. வேப்பமரத்தடியில் கிடந்த கல்லின் மீது உட்கார்ந்திருந்தான். அதன் சொரசொரப்பு குலைந்து போய் மொழுக்மொழுக்கென்றிருந்தது. நாலு பேருந்துகளும் போய் விட்டிருந்தன. இனி ஒற்றை ஒற்றையாய் குழந்தைகளை அம்மாக்கள் அழைத்துச் செல்வது நடக்கும்.  சில அப்பாக்களும் வருவார்கள். தாமதமாக வரும் அம்மாக்களும் இருப்பார்கள்.அப்படி ஏதாவது தாமதாமாய் வரும் அம்மாவிற்காக அவன் காத்திருந்தான். நீல நிற வானத்தின் குறுக்கே பாய்ந்த ஏதோ பறவையொன்றை விமானமாக எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான்.
கையை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா என்றுதான் சந்திராவும் கேட்டிருக்கிறாள். போன மாதம் ஒரு சமையல் கேஸ் சிலிண்டரை எடுத்து வந்திருந்தான்.      “ அந்த வூடு தொறந்து கெடந்தது. நான் முன் ரூமைக்கடந்து உள்ள போனதே யாரும் பாக்கலே. ரெண்டாவது ரூம்லே டிவிக்கு நெருக்கமா ஒரு வயசான அம்மா உட்காந்திட்டிருந்திச்சு. நான் நடக்கறது தெரியாமெ பொம்பளெ நடை நடந்து அடுத்த ரூமுக்கு போனன்.  சிலிண்டர் ஒண்ணு இருந்துச்சு. வலது  கையாலெ தூக்குனா கனம் தெரிஞ்சுது.  தம் கட்டி தோள்லே வச்சேன். என்னமோ மூச்சிரைப்பு வந்துட்ட மாதிரி இருந்துச்சு. சத்தம் வரக்கூடாதுன்னு மறுபடியும் பொம்பளெ நடை. வயசான அம்மா டிவியெப் பாத்துட்டே இருக்காங்க. டிவியிலெ யாரோ ஒரு பொம்பளெ கண்ணா பிண்ணான்னு அழுதிட்டு இருந்துச்சு.  வாசலுக்கு வந்தப்பறம் யாரும் தட்டுப்படலே. விறுவிறுன்னூ நடந்தேன். நீயும் அந்த நேரத்திலே அந்த சீரியல்தா பாத்திட்டிருந்தியா “. ஜெயபால் வாய் விட்டுச் சிரித்தபடிக் கேட்டான்..
மதிய நேரத்தில் இப்படி புகுவது சுலபமாகத்தான் இருந்தது அவனுக்கு. அப்படி ராயபுரத்தில் ஒரு வீட்டில் நுழைந்து வெளிவந்த போது  ஒரு மிக்சி கிடைத்தது.வீட்டில் இலவச மிக்சி  இருப்பது  ஞாபகம் வந்து சிக்கந்தர் கடை பக்கம் கொண்டு போய் விட்டான். அவன் அகப்பட்டுக் கொண்டபோது போலீஸ்காரன் வைத்த அறையில் தலை சுற்றுவது போலிருந்த்து.ஒரு வகைப் பூச்சிகள் கண்களுக்குள் மினுங்கின. போலீஸ்ஸ்டேசனுக்கு சந்திரா வந்த போது  அவன் மயங்கி நிலையில் தான் இருந்தான்
.” இதுக்கு இவ்வளவு அடியாய்யா..”
“ எவன் மேலையோ இருக்கற கோபமோ “
“ செரி .. இதை விடப் பெரிசா பண்ணவேண்டியது தானா… அந்த அளவு அடி…” அவள் சொல்வது சுலபமாகத்தான் இருக்கும்.எப்பவாவது  ஒரு முறை சொல்லுவாள். ஆனால் மனதில்  பதிகிற மாதிரி இருக்கும். இந்த தரம் அப்படித்தான் ஏதோ சொன்னது  அமனதில் பதிந்து விட்டது போல் இருந்தது. அது அந்தப் பள்ளி வாசலைப்பார்த்து அவனை உட்காரவைத்தது.” இப்பிடியே எத்தனை நாளைக்குதாய்யா பொழப்பை ஓட்டறது. பெரிசா ஏதாச்சு பாத்தாதா உட்காந்தாவது சாப்பட முடியும் போல  “
பள்ளி வாசலில் பார்வையில் நிலைத்து விட்டது. பிரமாண்டமான வளைவாய் முகப்பு நின்றிருந்தது  சட்டைப்பாக்கெட்டில் ஏதோ சொரசொரத்தது. சிறு துண்டுத்தாள். நேற்று சந்திரா கையில் வைத்திருந்த வாரப்பத்திரிக்கை இணைப்பினை  வாங்கிப் பார்த்திருந்தான். ராசி பலன் பகுதி அது. ஜோதிட ரத்னா வித்யாதரனின் ராசி பலன்கள் அவனுக்கு ஓரளவு பலிப்பதை அவன் கணித்திருக்கிறான்.இந்த வாரம் சுக்கிரன் ஏழில் நுழைவதால் அனுகூலம் இருக்கும்.  புது தெம்பு பிறக்கும். தடைபட்ட வேலைகளை  உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை  கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். சூரியன் செவ்வாய் போக்கு சரியில்லாத்தால் வீட்டில் விவாதம் அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.  12,13 நாட்களில் அதிக உணர்ச்சிப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரம் சுலபமாக நடக்கும் உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத்  தாண்டி முன்னேறுவீர்கள். தாளை கசக்கி எறிந்தான்..12, 13 நாட்கள் என்றால் அந்த வாரத்து தேதியா. எல்லாம் குழப்பமாக இருந்தது.

.முகப்பில் இருந்து மறைந்து போன பெண்  நவிருசான உடையில் இருப்பதாகப்பட்டது..இந்த வயது அம்மாக்கள்  எவ்வளவு நேர்த்தியாக உடை உடுத்துகிறார்கள். கொஞ்சம் புருவ செதுக்கல், கொஞ்சம் முக பிளிச்சிங் என்று செய்து எவ்வளவு சாதாரண முகத்தையும்  பளிச்சென்று வைத்துக்கொள்கிறார்கள். சாதாரண முகங்களுக்கும் கூட  பளிச்  தன்மை வந்து விடுகிறது  என்பது பற்றி அவனுக்கு ஆச்சர்யம் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் ஆடையில் எவ்வளவு கவனமாய் இருகிறார்கள். தோள்வரைக்கும் கைகள் வெறுமையாய் அழகாய் தெரிகின்றன. அந்தப் பளிச்சிடலில்    அழகு கூடி வந்து விடுகிறது. சந்திராவிற்கு இதெல்லாம் ஒத்து வரவில்லை என்பது போல் ஒதுங்கிக் கொள்கிறாள். புசுபுசு என்று புருவ மயிர்கள் அடர்ந்து விட்டால் புருவங்களைச் செதுக்கப் போவாள்.அதுவும் திருமணம், முக்கிய உறவினர் வீட்டு விசேசம் என்று வருகிற போதுதான்.  அவ்வளவுதான். இன்று ஒரு பையன் அகப்பட்டால் போதும், பெண் பிள்ளை என்றால் சிரமம் தான். அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த  சாக்கெட்டுகள்  மணம் பரப்பிக் கொண்டிருப்பதாய் பட்டது அவனுக்கு.

வாசலிலிருது கிளம்பிய பேருந்தில் நாலைந்து பேர்கள்தான் இருந்தனர்.  ஆசிரியைகளாக இருக்கக் கூடும். பேருந்தின் இருக்கைகள் ஓரத்து ஜன்னல் கம்பிகளால் அடைபட்டிருந்தது. ஜன்னல் கம்பிகளுக்குள் தெரிந்த முகங்களின் துணுக்குகள்  சோர்வடைந்து கம்பிகளுக்குள் அடைபடத்தான் லாயக்கு என்பது போல் தெரிந்தன.

எல்லாவற்றுக்கும் அந்தப் புகை வண்டி நிலையம் சவுகரியமாகத்தான்  இருப்பதாய் தோன்றியது. சாய்ந்து கொள்ள சவுகரியமான இரும்பு நாற்காலிகள்.  பயணிகள் காத்திருக்கும் அறை வெகு சுத்தமாக இருந்தது.  ஜன்னலில் தெரிந்த வானம் எந்தப் பறவையோ, விமானமோ அற்று இருந்தது. அப்போதுதான் துடைத்தெடுத்த மாதிரி  ஒருவகை டெட்டால் வாசம் கிளம்பியிருந்தது. புகை வண்டி நிலையங்களுக்கென்றே  அமைக்கப்பட்ட பெரிய வட்ட வடிவிலான மின் விசிறிகள் குறைந்த சப்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தன. விபரீதத்தை உணராமலே வந்து உட்கார்ந்திருக்கிறோம் என்று பட்டது.  சிக்குபுக்கு ரயிலே என்று சொல்லிக் கொண்டான்.
அவனுக்கு புகை வண்டிப் பயணங்கள் பிடிக்கும்.  கொல்லம் என்ற ஊர் பெயர் ஞாபகம் வந்தது.அதுவும் கேரளாதானே. செங்கோட்டையிலிருந்து கொல்லம் போகும் புகை வண்டிப் பாதை அவனுக்குப் பிடிக்கும். கோட்டை வாசலிலிருந்து ஆரியங்காவுக்கு போகும் பாதையில்  மலைக்குகை இருக்கும். குகையினுள் செல்லும் போது கும்மிருட்டாகவும், குளிராகவும் இருக்கும்.  இருக்கைகளில்  இருப்போர் ஓ வென்று கூச்சலிடுவது எதிரொலித்து பயமுண்டாக்கியது. ஆரியங்காவுதான் சந்திராவுக்கு சொந்த ஊர். கோட்டை வாசல் மலைக்குகையில் விழும் நீருற்று அழகாக இருக்கும். குகையில் கொஞ்ச தூரத்திற்கு வெளிச்சம் தெரியும்.  அப்புறம் இருட்டுதான். மலைக்குகை வேலையில் சந்திராவின் தாத்தா ஒருவர் இருந்து இறந்திருக்கிறார்.புளியரை, தெற்குமேடு, ஆரியங்காவு ஊர்களிலிருந்து வேலைக்குப் போய் குகை வேலையில் பலர் இறந்திருகிறார்கள்.அதே பக்கத்தில் தன்மலைக்கு போயிருந்த போது  அந்த புகை வண்டிப்பாலம்  அவனை பிரமிக்க வைத்தது. பத்து பதினைந்து கண்கள் கொண்ட பாலம் . புகை வண்டி அதில் ஊர்ந்து செல்வதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  புகை வண்டியில் உட்கார்ந்து கீழே பார்த்தால் தலை சுற்றி விடும். இப்பாதையில் ரயில் செல்லும் போது எல்லா பெட்டிகளையும்  முன்னால் இருக்கும் இன்சின் டிரைவரோ. கடைசிப் பெட்டியில் இருக்கும் கார்டோ பார்க்க முடியும். “ ஒரு நாளைக்கு  அந்த என்சின் டிரைவராகவோ, இல்லே கார்டகவோ இருக்க ஆசை சந்திரா..” என்ற் சொல்லியிருக்கிறான். “ பனியன் கம்பனி டெயிலராத்தா இருப்பே எப்பவும் “
இந்தப் புகை வண்டிப் பாதியிலும் குகைகள் இருக்கலாம். நீர்வீழ்ச்சிகள் இருக்கலாம் இதெல்லாம் இல்லாத கேரளம் இருக்குமா. இது எந்த ஊர்….
பையன் முதுகில் பையுடன் பள்ளி கேட்டிற்கு ஓரமாய் வந்தபோது தாமதிக்காதவன் போல் ஜெயபால் விறுவென்று நடந்தான். பையன் பார்வையை தரையிலிருந்து மேலெழும்பிய போது  “ அம்மாதா கூட்டிகிட்டு வர்ரச் சொல்லுச்சு “ என்றான். “ செரி “ என்றான் பையன்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பேருந்தில் இடம் கிடைத்தது ஆறுதலாக இருந்தது  ஜெயபாலுக்கு. . பையன் அவன் மடியில் உடனே படுத்துக்கொண்டான். சாக்லேட் வேணுமா என்று கேட்க நினைத்தான்.  அத்ற்குள் அந்தப்பையன் தூங்கிவிட்டான். நடத்துனர் அவன் அருகில் வந்தபோது  ஏதோ எழுச்சி கொண்டவன் போல் இரயில்வே ஸ்டேசன்  என்றான்


பலரின் பார்வை பையனின் பள்ளிச் சீருடை மேல் இருந்ததைக் கவனித்தான். .பேருந்தை விட்டு இறங்கும் போது பையனின் சாப்ப்பாடுப் பையை திட்டமிட்டு வைத்து விட்டு வந்தது தவறு என்பது போல் பட்டது. வேறு எங்காவது நழுவ விட்டிருக்கலாம்.  புத்தகப்பையை   தவற விட இடம் பார்த்துக் கொண்டிருந்தான்.  மாலை நேரம் என்பதால் புகை வண்டி நிலையத்தில் வரிசை நீண்டிருந்தது. பாலக்காட்டிற்கு டிக்கட் எடுத்தான். பையன் என்ன வகுப்பு படிக்கிறவன். புத்தகப் பையைத்திறந்து பார்த்து  புத்தகங்களைப் புரட்டினால் கண்டு கொள்ளாலாம். புத்தக அடையாளத்தை  மறைப்பது  நல்லது என்று பட்டது. இரண்டாவது மூன்றாவது இருக்குமா. வீட்டில் குழந்தையென்று ஏதாவது இருந்தால் சரியாக அடையாளம் கண்டு கொள்ளலாமோ என்னமோ.
பாலக்காட்டு புகை வண்டி நிலையத்தில்  இறங்கி  பையனிடன் பால் டம்ளரை  நீட்டியபோது  “ ஹார்லிக்ஸ்தானே வேணும்.அதுதா சாயங்காலம் குடிக்கறது ” என்றான். .
“ ரெடியாகுலே அதுதா.  “  டம்பளரை வாங்கிக் கொண்ட பையன் ” அம்மாவும் டிரெயினுக்கு வரும் இல்லே “ என்றான்.  “ வரும் ’
“ அப்போ அம்மா வந்தப்புறம் குடிக்கறேன்”
“ வரும்.. குடிச்சிடு  “
“ அம்மா வந்தாதா குடிப்பேன். “  எதிர் வீதி நீளமாய் சென்று மறைந்தது  ஆட்டோக்கள் பரபரத்து ஓடிக் கொண்டிருந்தன. இருட்டு நடமாடிக் கொண்டிருந்த மனிதர்களின் நடமாட்டத்தை முகமற்றதாக்கியிருந்தது.மெல்ல கிளம்பியிருந்த வெளிச்சம் புது அழகை கொண்டு வந்திருந்த்து.  புது ஆடை உடுத்திக் கொண்டு நடமாடும் சூழல் போல் இருந்தது.அந்த பாதை புதிர்கள் கொண்ட்தாக் இருக்கும் என்பதைத் தீர்க்கமாக நினைத்தான்.ராசி பலனில் உள்ள புதிர்வழிகள் அரைகுறையாய் நிற்பது போலிருந்தது. வானத்தில் தெரிய  ஆரம்பிக்கும் நட்சத்திரங்கள்  அவனின் இனி வரும் புதிர் வழியை தீர்க்க யோசனை சொல்லும் என்று நம்ப ஆர்மபித்தான்.
ஜெயபால் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.கண்ணாடி முகமூடி முகத்தில் மாட்டப்பட்டிருந்த்து. விலாங்கு மீன் போல் அவன் விரைந்து  போய்க்கொண்டிருந்தான். மண்ணாலி, உரு என்ற வார்த்தைகள் அவனின் காதுகளில் விழுகின்றன்.  அவையெல்லம் பெண்களின் பெயரா. ஊர் பெயரா.
எதிரில் மூழ்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் கழுத்தில் சங்கு மாலை பளிச்சென்றிருந்தது. “ எனக்கு போத்தபாசி  கெடச்சது. கீரிச்சோவி, பீச்சோவி, குழிச்சங்கு எல்லாத்தையும் மாலையாக் கட்டி கழுத்திலே போட்டிருக்கேன் பாரேன்.” துடுப்புப் படகு அருகில் கடந்து சென்றது. கூர்மையாக ஏதோ தெரிகிறது . பவளப்பாறையாக இருக்குமோ.  மணல் திட்டோ என்னவோ..பக்கத்தில் நீந்திக் கொண்டிருக்கிறவள் பெண்ணா. உடம்பில் வயிற்றுப் பகுதி மேடாகத்தெரிந்தது. கர்ப்பிணியாக இருப்பாளோ.  கர்ப்பிணிகள் பாசி எடுக்க வரமாட்டார்களே. சந்திராவும் கர்ப்பிணி ஆகிற கனவினை எப்போதோ விட்டு விட்டாள் என்று சொல்லியிருக்கிறாள். இது சந்திராவின் உடம்பா.  புட்டங்கள் கடல் சங்கு போல் விரிந்து உள் அறைகளைக் கொண்ட்தாக இருக்கும் அபூர்வம் அதில் தென்பட்ட்து. அந்தப் பெண்னின் வலது கையில் ஆள்காட்டி விரலைக் காணோம். மீன்கள் கடித்து விரல் இல்லாமல் போயிருக்குமா.  இன்னொரு கையில் துணிகள் சுத்தி ரப்பர் போடப்பட்டிருந்தது. அவனுக்கு மூச்சு திணருவது போலிருந்த்து. பாசி பாசி என்று கத்தியபடி நீரில் முழ்கிக் கொண்டிருந்தான். உடம்பை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

எந்தத் திட்டமும் இல்லாமல் இப்படி வந்து சேர்ந்து விட்டோமே என்ற நினைப்பு ஜெயபாலுக்கு மனதில் வந்தது. தான் ஒரு கோழை திட்டம் அபாயகரமானது என்பதை அவன் இப்போது உணர்ந்திருந்தான்.  .ஏதாவது மயக்க மருந்து சேகரித்திருக்கலாம். பையனை மயக்கத்தில் வைத்திருப்பது நல்லதாக இருந்திருக்கும். பையனின் புத்தகப் பையில் தேடினால் ஏதாவது தொலைபேசி எண், முகவரி கிடைக்கலாம். வீட்டு தொஅலைபேசி எண் இருந்தால் நல்லது. பள்ளி தொலைபேசி எண் என்றால் இந்த நேரத்திற்குப் பிறகு யார் எடுப்பார்கள். காலை வரை காத்திருக்க வேண்டும். அதுவும் பழுதாகியிருந்தால் சிரமம். தொலை பேசி கிடைத்து விட்டால்  போதும் பையனைக் கடத்தி வந்து விட்டதைப் பற்றி சொல்லி விடலாம். எவ்வளவு பணம் கேட்கலாம்  என்பதை முடிவு செய்யவில்லை. எதற்கும்  புத்தகப் பையைத் தேட வேண்டும் என்பது அவன் மனதிற்கு வந்து விட்டது.
அம்மா அம்மா என்ற அழுகுரலின் ஆரம்பம் புத்தக்ப்பையிலிருது அவனின் கவனத்தை விலக்கியது.அவன் காத்திருக்கும் அறையிலிருந்து  வெளிவந்த  போது தூரத்தில் ஒரு புகை வண்டி வந்து கொண்டிருப்பதும், உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து  புகை வண்டியை வரவேற்க  ஆயத்தமாவதும் தெரிந்தது. அம்மா என்று பையனின் அழுகை  உரத்துக் கிளம்பியது.. வந்து கொண்டிருக்கும் புகை வண்டியின் இரைச்சல் பையனின் அழுகையைக்  காணாமல் போகச் செய்திருந்தது. ஆனால் அவனால் அங்கு அழுகுரலைக் கேட்டுக் கொண்டு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.. ஒரு புதிய புதிர்வழி அவனுக்கு முன்னால் விரிந்து கிடப்பதாகத் தோன்றியது.
அடுத்த புகை வண்டி நிலையத்தில் இறங்கி விட்டான்.பயணிகள் காத்திருக்கும் அறை அவன் கணகளில் முதலில் பட்டது போல் வந்து உட்கார்ந்து கொண்டான்..பையன் என்னவாகியிருப்பான். அவன் அழுகை கூட்டம் சேர்த்திருக்கும். புத்தகப்பையை யாராவது திறந்து பார்த்து  அடையாளம் கண்டிருப்பார்கள். காவல்துறைக்கும் தகவல் போயிருக்கும். பையனின் அம்மா குழந்தையைக் காணவில்லை என்று பள்ளியில் புகார் செய்திருப்பார். அவர்கள் வீட்டில் களேபரமாகி காவல் நிலையத்திற்கும் தகவல் போயிருக்கும். பள்ளி வாசலில் காத்திருந்ததை கவனித்து யாராவது தன்னை அடையாளம் கண்டிருப்பார்களா.புத்தகங்களின் பக்கத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது போல பையன் காணாமல்  போனது பற்றி புது புது விசயங்கள் கிளம்பிக் கொண்டிருக்கும். அந்தப் புத்தகம் வட்ட வடிவிலானதாக இருக்கலாம். கடையும், முதலும் ஒன்றாக இருக்கும். எவ்வளவுதான் சுற்றினாலும் அடுத்தடுத்த பக்கங்களாய் அவனும் சந்திராவும் இருப்பார்கள் என்ற நினைப்பு வந்த்து. நல்ல வேளை பள்ளி தான் இருக்கும் பகுதியிலானது அல்ல. வேறு  பகுதி பள்ள்யைத் தேர்ந்தெடுத்திருந்தான். செல் போனை அணைத்து வைத்திருப்பது ஞாபகம் வந்தது.சந்தேகப்பட்டு கூப்பிட்டால் உளறவேண்டியிருக்கும். இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். செல்போன்தான் இப்போதெல்ல்லாம் எவ்வளவு வகையில் உபயோகமாகிறது என்பதை யோசித்துப் பார்த்தான்.அலாரம், கைக்கடிகாரம், நாட்காடி, முகவரிபுத்தகம், பேஜர், டார்ச் விளக்கு, கேமரா, டிரான்ஸ்சிஸ்டர் வானொலிப் பெட்டி, டேப் ரிகார்டர், சிடி பிளேயர், கால்குலேட்டர்.. இந்த டென்சனிலும் இப்படி செல்போன் பற்றி யோசிக்க ஒரு நிமிடம் வாய்த்தது  குறித்து ஆறுதல் மனதில் வந்த்து.
அடுத்து என்ன நடக்கும் . எப்படியோ எல்லாவர்றையும் கண்டுபிடித்து விடுவார்கள். தன் பயமே எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடும். அந்த காத்திருப்பு அறையின் பொறுப்பாளர் தன் பயண விபரம் பற்றிக் கேட்டால் சரியாக பதில் சொல்லமுடியாது. பயணச் சீட்டும் இல்லை.தாறுமாறாய் பதில்கள்  .சுலபமாக போலீசில் ஒப்படைத்து விடுவார்கள். நன்கு சுத்தமாக்கப்பட்ட அந்த அறை அவனுக்கு ஆசுவாசம் தருவதாக இருந்தது.ஜன்னலில் வானம் தெரிவது வேறு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
மரக்கலர் புடவை உடுத்தியிருந்தவள் வந்து உட்கார்ந்து ஸ்டூலின் மேல் இருக்கும் நோட்டைப் புரட்ட ஆரம்பித்தாள்.அதில் அறையில் காத்திருப்போர் பற்றி குறிப்புகள் இருக்குமா. பயணச்சீட்டு கேட்டு வெளியேற்றிவிடுவாளா. பாலக்காட்டைக் கடந்து விட்டது. இது எந்த ஊராக இருக்கும். இந்தப் பகுதியென்றால் குருவாயூர்தான் ஞாபகம் வரும். குருவாயூரில் ரயில்வே ஸ்டேசன் இருக்குமா. மரக்கலர் புடவைக்காரி த்ன்னைப்பார்ப்பது போலிருந்தது.பெரிய சப்தமெதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த்து  ஆச்சர்யமாக இருந்தது.அதுவே பேரலையாக விரிந்து காதுகளை அடைப்பதாக இருந்தது. கொல்லம் எந்தப் பக்கம்… பக்கமென்றால் ஆரியங்காவு கூட போய் விடலாம். இங்கிருந்து தப்பிப்பது சுலபம். இந்தக் குற்றத்திலிருந்து தப்ப முடியுமா. நிர்வாணப்படுத்தி காவல் நிலையத்தில் உட்கார வைத்து விடுவார்கள். இனி நிர்வாணம் அடிக்கடி தரிசிக்கக்  கூடியதுதானா.  அதற்கான சாத்தியங்கள் பெருகிக் கொண்டே இருக்கும் ஒன்றை விலக்க இன்னொன்று உருவாகிக் கொண்டே இருக்கும் ஆழங்காண இயலாத்தாகத் தெரிந்து கொண்டே இருக்கும்  இவையெல்லாம் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும். எல்லாம் தன்னை மறைத்துக் கொள்கிற உபாயம்தான் என்று சொல்லிக் கொண்டான்.

மூத்திரப்புறா என்று தமிழிலும் எழுதப்பட்டிருந்தது ஆறுதலாக இருந்தது.
உள்ளே உட்கார்ந்து கொண்டால்   மரக்கலர் சேலைக்காரியின் பார்வையில் இருந்து தப்பிக்கலாம். பேண்டைக்கழற்றாமல் உட்காருவது  அசவுகரியமாக இருக்கும்.கழற்றி கழிப்பறைக் கதவின் மீது போட்டான்.
போலீஸ் பிடித்துக் கொண்டு போகிற போது கம்பிகள் இட்ட இது போன்ற சிறிய அறையில்தான் உட்கார வைப்பார்கள். சட்டை, பேண்ட் போட்டுக்கொள்ள அனுமதிப்பார்களா. கழற்றச் சொல்லி விடுவார்கள். ஜட்டியையும் விட்டு வைக்க மாட்டார்கள்,  எல்லாம் சுருட்டப்பட்டு ஒரு மூலையில் கைக்கு எட்டாத தூரத்தில் கிடக்கும். அப்படி ஒரு முறை அவனுக்கும் அது வாய்த்த்து. எல்லா ஆடைகளையும்  கழற்றி போட்ட பின்  கைகளை தொடை இடுக்கில் வைத்துக் கொண்டு குறுகி உட்கார்ந்திருக்கிறான்.  யாரோ வருகிறார்கள் என்று எழுந்து நின்ற போது ஒரு போலீஸ்காரன் அன்றைய தினத்தந்தியை கொண்டு வந்து நீட்ட அவன் அதைச் சுற்றிக் கொண்டு நின்றான். இனியும் கூட அதுதான் நடக்கும். எல்லா உடைகளையும் கழற்றி நிர்வாணமாக்கி விடுவார்கள். உட்ம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லாத நிலையில் தான் லத்தியில் அடி விடும். அல்லது பிளாஸ்டிக் பைப்பில்.
விதியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். விதி தன் கதையில் இந்தக் கழிப்பறையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது. இந்தக் கதியின் சாத்தியப்பாடு வேறு விதமாக எந்த வகையில் இருக்கும், இந்தக் கழிப்பறையிலிருந்து  உடையைப் போட்டுக் கொண்டு ஓடும் போது ஒரு வகையில்  மாறும். ஆடைகள் அணியாமல்     நிர்வாணமாய்                    ஓடும் போது இன்னொரு விதமாய் உருவாகும். எல்லா சாத்தியப்பாடுகளும் தவறில்தான் போய் முடியுமோ என்னமோ.  இருப்பே பெரும் தவறாகிவிடுமோ என்னமோ. பேய் போல், ஆவி போல் எந்த புகை போக்கி வழியாகவும் தப்பி விடுவதுதான் சரியான சாத்தியப் பாடோ என்னவோ.
அவன் சட்டையையும், பனியனையும் , ஜட்டியையும் கழற்றி கழிப்ப்பறைக் கதவின் மீது போட்டான். இனி இப்படித்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்தது..தன்  முழு நிர்வாண உடம்பைப் பார்த்துக் கொண்டான்.