சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 2 ஜூலை, 2024

இன்னும் ஞாபகமிருக்கிற அந்த “ இலக்கியச் சிந்தனைப் பொழுது…..” ------------------------------------ சுப்ரபாரதிமணியன் --------------------------------------------------------------------- சென்னை “ இலக்கியச் சிந்தனை ” அமைப்பு சமீபத்தில் பொன்விழாவைக் கொண்டாடியிருப்பது ஒரு சாதனை. சிறுகதைகளின் மேன்மை சார்ந்து இவ்வளவு ஆண்டுகள் இரு அமைப்பு இயங்குவது சாதனைதான். சிறுகதையாளர்கள் நோபல் பரிசு போன்ற உயரிய விருதுகளில் கவனிக்கபப்டுவதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உண்டு . ஆனால் அலிஸ்மன்றோவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அவர் ஒரு (பெரும்) சிறுகதையாளர். எனக்கு “இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்.. “ என்ற சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசு கிடைத்த போது அப்படியொரு பெரும் பரிசு கிடைத்த மகிழ்ச்சி இருந்தது. எழுத்துலகின் ஆரம்பகாலம் .என்ற காரணம் நான் பெரும் குறிப்பிடத்தக்க பரிசாய் அப்போது அது அமைந்திருந்தது. எஸ். வி. ராஜதுரை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வந்த “ இனி ..” என்ற இதழில் அக்கதை வெளிவந்தது. நான் அப்போது ஹைதராபாத்தில் வசித்து வந்தேன். பரிசு பெற்றதையொட்டி ஊருக்கு வர முடிந்த மகிச்சியும் கூட சேர்ந்து கொண்டது இன்னொரு காரணம். " இனி " இதழ் தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இதழ். அழகான அச்சமைப்பு, நேர்த்தியான வடிவம் . நலல ஓவியங்களுடன் நேர்த்தியாக் அக்கதை அச்சிடப்பட்டதை பார்த்த கணத்தில் எல்லையில்லாத ஆனந்தத்தில் திளைத்தேன் என்பதே உண்மை. நெசவாளர் குடும்பத்துத் திருமணங்களில் டர்பன் கட்டுவதை தொழிலாளச் செய்து வந்த ஒருவர் கால மாறுதலில் நசிந்து போய் புது மாறுதல்களை மன அவஸ்தைகளுடன் பார்க்கும் அனுபவமாய் அமைந்திருந்தது. சாதாரண அனுபவங்களாய் நினைத்து நான் பதிவு செய்தது முக்கிய பண்பாட்டுக்கூறுகளாகவும் அமைந்து பெரும் வரவேற்பும் கவனிப்பும் கொண்ட கதைகளாய் அமைந்திருந்ததில் இக்கதைக்கும் " ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்கும் " என்ற கதைக்கும் இடமிருக்கிற்து. சென்னை விழாவில் கலந்து கொள்ளப் போகிறோம் என்றப் பரபரப்பு திரு .பாரதி அவர்களின் கடிதம் வந்தது முதல் ஒட்டிக் கொண்டது. அமரர் செ. யோகநாதனிடம் முதலில் தொலை பேசியில் இதைப் பகிர்ந்து கொண்டேன். மாலன், திகசியின் வாழ்த்து ரொம்பவும் உற்சாகமூட்டியது. ( அப்போது “ தீராநதி ‘’யில் வந்த எனது சுற்றுச்சூழல் கட்டுரைகள் பற்றி திகசி தொலை பேசியில் பேசும் போது சுற்றுச்சூழலைப் பொறுத்த அளவில் நீங்கள் ஓர் இயக்கமாகச் செயல்படவேண்டும் என்பார். அதைத்தான் அப்போதும் அவர் சொன்னார். இயக்க ரீதியான செயல்பாடுகளில் அவருக்கு என்றைக்கும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ) ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் கலந்து கொள்ள மேடையில் இடம் கிடைத்தது பெரும் பாக்யமாகப் பட்டது. சிறுகதை படைப்புக்கான அங்கீகாரம் அது என்பதை உணர்த்தியது. ஒடிய, ஆங்கில எழுத்தாளர் மனோஜ் தாஸ் பரிசை வழங்கினார். அவர் எழுத்துக்களை நான் ஆங்கில மொழியில் அப்போது அதிகம் படித்ததில்லை. சில மொழிபெய்ர்ப்புக்கதைகளை பாண்டிச்சேரி ராஜ்ஜா அவர்களின் மொழிபெயர்ப்பில் படித்திருந்தேன். இலக்கியச் சிந்தனைப் பரிசு சிறுகதை படைப்புக்கான அங்கீகாரம் அது என்பதை உணர்த்தியது. வேர்த்து விருவிருத்த முகத்துடன் அவரிடமிருந்து பரிசு பெற்ற புகைப்படம் மனதிலிருக்கிறது. புகைப்படப் பதிவு என்பது அப்போது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இன்றைக்குத் தெரிந்திருக்கிறது. ( சமீபத்தில் மரணமடைந்தார். இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான மனோஜ்தாசின் சில கதைகள் மிருகங்களுடனான மனித உறவுகளை விளக்குவதற்குப் பயன்பட்டதை அவரின் சில சிறுகதைகளை படிக்கையில் உணர்ந்திருக்கிறேன்.புலியொன்றை வளர்த்து வருபவன் சுதந்திரம் என்பது அது காட்டிற்குள் திரிவது என்பதைக் கண்டு கொண்ட ஒருவன், அதை காட்டிற்குள் கொண்டு விடச் செய்கிற முயற்சிகள் தோற்றுப் போவதைக் காண்கிறான். முதலை ஒன்று ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை இழுத்துச் சென்று குடும்பம் நடத்துகிறது. அது மனித உருவாகவும் ஆகும் இயல்பு கொண்டது. அது ஊருக்குள் வந்து இருக்கும் போது ,கொல்லப்படுகிற போது அவற்றின் உறவில் ஏற்படும் அதிர்வுகளை இன்னொரு கதை பேசுகிறது. ஆந்தை பற்றிய ஒரு கதையின் சித்தரிப்பில் ஆந்தை மூடநம்பிக்கைகளின் குறியீடாகவும், கடவுளின் நேரடி பிரதிநிதியாகவும் ஊருக்கு வந்து மக்களை மிரட்டுவதை ஒரு கதையில் சித்திரித்திருக்கிறார். அதை ஜமீந்தார் ஒருவர் சுட்டுக் கொல்லும் போது அந்த ஊர் பயத்துள் மூழ்கிப் போவதை அக் கதையில் சொல்கிறார். ) . லட்சுமணன் இனிமையாக வரவேற்றார். லட்சுமணன் அவர்கள் முந்தைய மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரர் என்பது அப்போது தகவலாய் கிடைத்திருக்கவில்லை எனக்கு. அ.சா. ஞானசம்பந்தன் அவர்களின் பேரூரையைக் கேட்கும் அரிய வாய்ப்பும் ஏற்பட்டது. பழுத்த ஞானப் பழம் அவர். அ.முத்துலிங்கம் அவர்கள் நோபல் பரிசு பெற்ற அலீஸ்மன்றோ பற்றிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் : அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். ’உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது அழகான வசனங்களின் கீழே அடிக்கோடிடுவேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் ஓரிடத்தில் உங்கள் கதைகளில் அழகான வசனங்கள் வரும் இடங்களை வெட்டிவிடுவீர்கள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?’ அவர் சொன்னார். “ அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும் வசனம். அல்லது திரும்பத்திரும்ப மினுக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவற்றை நான் விரும்புவதில்லை. அகற்றிவிடுவேன். காரணம் ஒரு கதையை சொல்லும்போது அந்தக் கதைதான் முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகருடைய கவனத்தை கதையின் மையத்திலிருந்து திருப்பிவிடும். ஆனால், கதை முடிவை நோக்கிச் செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்கவேண்டும். அதை வரவேற்பேன். ஒரு வசனம் அது சொல்ல வந்ததிலும் பார்க்க கூடச்சொல்லவேண்டும். ஆனால் பூச்சு வேலை எனக்கு பிடிக்காது.” இலக்கியச் சிந்தனையும் பூச்சும், மினுக்கமும், வண்ணமும் சேர்க்காமல் இயல்பாக இன்னும் தன் பணியைச் செய்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் தற்போது இலக்கியச் சிந்தனை மாதக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை வருத்தமே கொள்ளச் செய்கிறது.நான் நடத்தி வரும் “ கனவு “ இலக்கிய காலாண்டிதழ் சார்ந்த மற்றும் கனவு இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் அவ்வாறே உள்ளது, ஆனாலும் இலக்கியச் சிந்தனை தொடர்ந்து வெகுஜன இதழ்களில் நசிந்து வரும் சிறுகதைக்கு ( அதே சமயம் சிற்றிதழ்களில் வரும் அதிதீவிரமான, முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள்) ஊக்கம் தருவது டானிக் ஆகவே கொள்ளலாம். இலக்கியச் சிந்தனை தன் பரிசிலனைக்கு இலக்கிய இதழ்களை பெருவாரியாக எடுத்துக் கொள்ளாததன் குறையையே சமீபத்தில் அவதானித்து இவ்வாறு சொல்கிறேன். பள்ளியில் பெற்ற முதல் பரிசு ஓரடி ஸ்கேல்தான். ஆனால் அது எப்போதும் பெரிய பரிசாகப்பட்டிருக்கிறது. அது போல் இலக்கியச் சிந்தனையின் பரிசும் பல அடிகள் தாவிப் பாய உதவியிருக்கிறது என்பது உண்மை.இன்னும் இலக்கியச் சிந்தனை உயிர்ப்புடன் இயங்கி வருவது ஆறுதல் .அதன் அடையாளம் ஏப்ரல் மாதப் பொன்விழாக்கூட்டமும் எழுத்தாளர்களுக்கான அங்கீகாரமும். 500 பக்க அளவில்கடந்த 50 ஆண்டுகளின்- ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பெற்ற 50 சிறுகதைகளைத் தொகுப்பாக்கிக் கொண்டுவந்திருப்பதும் சாதனைதான் . சுப்ரபாரதிமணியன்