சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

Published in Uyirmmeei April issue 2023 Short story குற்றமும், தண்டனையும்/ சுப்ரபாரதிமணியன் “ கருப்புக் கண் “ என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து போகிறார்கள். போனார்கள் ” கருப்புக் கண் தெரியுமா ”. ” தெரியாதுங்க ஒரு கண்ணாடியில் பார்த்தால் உனக்கு தெரிஞ்சுடும் ” . ” கண்ணாடி இருந்தாக் குடுங்க “ ” ஓ அது வேறயா ..அதுவேற கொடுக்கணுமா உன் மூஞ்சி லட்சணம் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா “ .தியாகராஜனின் கண்களைச் சுற்றி கருப்பாய் வீக்கம் வந்திருந்தது. எலும்பு முறிந்த இடம் என்றில்லாமல் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போலிருந்தது ” .கண்டியூசன் அடினா என்னனு தெரியுமா .அந்த அடி தான் நீ இன்னைக்கு வாங்க போறே”. ” வேண்டாங்க. வாங்குனது போதும் உடம்பெல்லாம் வலி .எதெத் தாங்கறது “ ” கண்டியூசனடினா என்னனு இன்னைக்கு நான் உனக்கு தெரிய வைக்கனும்”. கை கூப்பியபடி சுவற்றோடு சேர்ந்து உட்கார்ந்திருந்த தியாகராஜனின் கைகள் தளர்ந்து விழுந்தபோது அவனின் கண்களில் கண்ணீர் கசிந்தது. தியாகராஜனின் கைகளிலும் கால்களிலும் பல இடங்களில் வட்ட வடிவில் வீக்கம் வந்திருந்தது .மூடின கையை ஒன்று சேர்த்து அடித்த இடங்களில் இப்படி வட்டவடிவில் வீக்கம் வந்து விட்டது. சொல்லி குத்தி விட்டது போல இருந்தது .தொடைக்கு கீழ் ஒவ்வொரு இடமும் இன்னும் வலித்தது அவனின் மூளையில் அபாய சிக்னல்களைத் தந்து கொண்டிருந்தன. விரைக்கொட்டை பெரிய வீக்கத்தைக் கொண்டு வந்துவிட்டது மிகவும் அடிபட்ட பல பகுதிகளில் வீக்கம் வேறு இடங்களில் பரவுவது போல இருந்தது .எங்கு எலும்பு முறிந்து இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் வேறு இடத்தில் வீக்கம் வந்து விட்டது போல இருந்தது .அவன் அருகில் ஏதாவது கயிறு இருக்கிறதா என்று தேடினார்கள் முன்பே அவன் இடுப்பில் கட்டியிருந்த அருணாக் கயிற்றைக் பிடுங்கி இருந்தார்கள் . ”ஏதாவது கயிறு இங்கே கிடந்ததா” ”அதெல்லாம் ஒன்னும் இல்லை ” ” இல்ல உனக்கு முன்னால் இங்கு ஒருத்தன் இருந்தான் அவன் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி இருக்கான்” ” அய்யய்யோ “ ” என்னய்யா ஆகும். கழுத்தை இறுக்கி இருக்கான் மூச்சுத்திணறல் வந்துடுச்சு அந்த கயிறு ஏதாச்சும் துண்டு கிடைக்குதான்னு “ ” ஒன்னும் காணங்க”. தியாகராஜனுக்குக் கூட அப்படி ஒரு கயிறு கிடைத்து கழுத்தை இறுக்கி மூச்சுத்திணறல் வந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.உடம்பின் எல்லா பாகங்களும் வலித்தன.மெல்ல எழ முயன்று சுவற்றோடு உடம்பை சேர்த்துக் கொண்டு இன்னும் அழுத்தம் கொடுத்து எம்பியதில் அவனின் வட்டவடிவ வீக்கங்கள் பெரிதாகியது போல இருந்தது . கருப்புக் கண் வந்தாயிற்று. அடுத்து கண்டியூசனடினா என்னனு காட்டறேன் என்கிறார். இதெல்லாம் எங்கு போய் முடியும் தன் உடம்பை என்னவாகி வைக்கும் என்பது தியாகராஜனுக்கு பயம் அதிகரித்து அவன் உடம்பில் வியர்வை பெருக்கெடுத்தது .வெளியில் ஓரளவு வெயில் இருக்கும் அந்த வெயிலின் வெப்பம் அறைக்குள் வந்து இன்னும் வியர்வையைப் பெருக்கெடுத்து ஓட விட்டது போல இருந்தது . எதுக்கு இப்படி அடிக்கிறீங்க என்று கேட்ட போது ” அப்புறம் குண்டர் சட்டத்தில் போட்டவங்களை சும்மா விடுவாங்களா” என்றான் ஒருவன் ” . குண்டர் சட்டமா. ஆமாம் அதுதான் உள்ள வச்சிருக்காங்க உன் மாதிரி ஆளுக இனிமேல இந்த மாதிரி நடவடிக்கைகளை வெச்சுக்கக் கூடாதுன்னு. அப்புறம் உன்னை மனசுல வெச்சுட்டு எவனும் இது மாதிரி பண்ணக் கூடாது.. அதுக்கு தான் ...பொம்பளெ கேசு இப்போ இடம் மாறிடுச்சு இப்பிடி “ ”அதுக்கு இப்படியா அடிப்பாங்க “. ” அண்ணன் தம்பி உதவற மாதிரி இந்த அடி உதவும் நல்ல அடி. நல்ல பாடமாக இருக்கும் ”. அந்த காவலாளி அறையை விட்டு வெளியே செல்லும்போது சப்தமாக்கி கேட்டை பூட்டிவிட்டுச் சென்றான். மெல்ல உடம்பை நகர்த்தி ஒரு அடி சுவரோடு சேர்ந்து நகர்ந்து மெல்ல எழுவதற்கு முயன்றான் தியாகராஜன்.வலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலித்தது.ஒவ்வொரு அணு என்று சொல்வார்களே அதன் பூரணத் தன்மையை இப்போதுதான் அவன் அறிந்து கொண்டான். ஒவ்வொரு அணுவில் இருந்து கிளம்பும் வலி மெல்ல மெல்ல அவன் உடம்பையே தீயில் போட்டு வாட்டி எடுத்த மாதிரி இருந்தது . அருகில் கசங்கிக் கிடந்த அந்தத் தாளை அவன் எடுத்தான். எண்ணெய் பிசுக்குடன் அந்த தினசரித் தாளின் கையளவுப் பகுதி இருந்தது .இவர்கள் ஏதாவது எண்ணைப் பலகாரம் தின்றதன் மிச்சமாய் அது தன் அறைக்கு வந்து வேடம் காட்டுகிறது என்று நினைத்தான். மெல்ல அதை எடுத்து முகர்ந்து போது அந்தத் தாளில் இன்னும் எண்ணை வாசம் மிச்சம் இருப்பது தெரிந்தது. அப்படி என்றால் இப்போது தான் அந்த தாள் இங்கே இடம் பெயர்ந்திருக்க வேண்டும். இப்போதுதான் ஏதாவது சாப்பிட்டுவிட்டு அவர்கள் இங்கே கடாசி வீசியிருக்க வேண்டும் இந்த போண்டா, பஜ்ஜி எண்ணையின் பிசுபிசுப்பு வாசனை எத்தனை நாளைக்குப் பிறகு உணரப் போகிறோம் என்ற கற்பனை அவனுக்கு வந்தது. இதையெல்லாம் சாப்பிடுகிற வாய்ப்புக் கூட இல்லாமல் செய்து விட்டார்களே என்று இருந்தது தியாகராஜனுக்கு. அந்தத் தாளில் கிழி பட்ட பகுதியை அவன் பார்க்க ஆரம்பித்தான். செய்தித்தாள் படித்தும் பல நாட்கள் ஆகிவிட்டன .படிக்கிற பழக்கத்தில் செய்தித்தாள் மட்டும் அவனின் அட்டவணையில் இருந்தது. கையிலிருந்த எண்ணெய் பிசுக்கால் தாளின் வரிகள் ஒருவகை மினுமினுப்புடன் அவனின் கண்களில் தெரிந்தன. மனிதனின் வாழ்வில் ஒரு செயலும் இல்லை. நல்லதானாலும் சரி கேட்டதானாலும் சரி.. ஒவ்வொரு செயலுக்கும் பலனுண்டு. அணுவளவு நன்மையோ அல்லது தீமையோ அதற்கும் பலன் உண்டு. மனிதன் பரிசோதனைக்காகப் படைக்கப்பட்டான். இந்த வாழ்வு ஒரு பரிசுக்காக இந்த உலகம் ஒரு பரிசோதனைக் கூடம். உங்களின் ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படுகிறது இதில் தேர்ச்சிபெறவே மனிதன் போராட வேண்டும் இதைத்தான் வேதங்களை அளித்து உணர்த்துகிறான் இறைவன். அவனின் வாழ்வு அவனுக்கு தரப்பட்ட சந்தர்ப்பம். அதை மிகச் சரியாக உபயோகிக்க வேண்டும். இந்த வாழ்வு மகத்துவம் மிக்கது .மீண்டும் இந்த சந்தர்ப்பம் கிடைக்காது. இறந்துவிட்டால் இந்த நாட்கள் கிடைக்காது என்று இருந்த அந்தப் பத்தியின் ஓரத்தில் வேதங்களில் ஒளியில் இறைவன் என்று இருந்தது .அது புத்தகத்தின் பெயராக இருக்கக் கூடுமா. இப்போதெல்லாம் புத்தகங்களை யார் படிக்கிறார்கள் புத்தகங்களை இப்படி போண்டா பஜ்ஜி மடக்குவதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் போல இருக்கிறது. இது இஸ்லாமிய நூலாக இருக்குமா கிறிஸ்துவ நூலாக இருக்குமா. நிச்சயம் இந்து நூலாக இருக்காது .அனேகமாக இஸ்லாமிய நூல் ஆகத்தான் இருக்கும் என்று நம்பத் தொடங்கினான் தியாகராஜன். நவாஸ் ஹமீத் என்றொரு நண்பன் அவனுக்கு உண்டு. அவனுக்கு இருக்கிற பழக்கங்களில் மோசமான பழக்கங்களில் ஒன்று வாயில் எப்போதும் சிகரெட்டை வைத்துக் கொண்டிருப்பது தான் .சமீபமாய் இ-சிகரெட் என்று ஏதோ வந்திருக்கிறது என்று அவனிடம் நீட்டினான் .புகை வராது ஆனால் புகை படிக்கிற அனுபவமும் ருசியும் இருக்கும் என்று சொன்னான் .இதெல்லாம் எனக்கு எதற்கு என்று தியாகராஜன் வேண்டாம் என்று சொல்லியிருந்தான். அவனுக்கு இறை நம்பிக்கையும் தானம் செய்வதில் அக்கறையும் இருந்தது அவனிடம் இப்படி ஒரு புத்தகப் பத்தியை மனப்பாடமாகச் சொன்னால் அவன் நிச்சயம் மகிழ்ச்சி அடைவான். இந்த குறுகிய அறைக்குள் வேறு எதையும் சிந்திக்க முடியாது. இந்தத் தாளில் ஒரு பகுதியை மனப்பாடம் செய்து கொள்ளலாம் .அவனிடம் இந்த வார்த்தைகளைச் சரியாகச் சொன்னால் அவன் மகிழ்ச்சி அடைவான். தியாகராஜன் திரும்ப அந்த தாளின் முனையில் உள்ள பத்தியைப் பார்க்க ஆரம்பித்தான். அந்த எழுத்துக்கள் எண்ணைப்பூச்சுடன் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தன 00 கை விரல்கள் பரபரத்துக் கொண்டிருந்தன தியாகராஜனுக்கு .எப்போதும் கைகளில் இருக்கும் கைபேசியை எந்த வகையிலாவது உபயோகப்படுத்திக் கொள்வது என்பது சாதாரணமாகி விட்டது அவனை. முகநூல் , வாட்ஸ்அப் , குறுஞ்செய்தி என்று ஏதாவது அலைக்கழித்துக் கொண்டே இருக்கும் அதுவும் முகநூலில் வருகிற வீடியோக்களில் பெண்கள் சம்பந்தமான விசயங்களை விரும்பிப் பார்ப்பான் ,கொஞ்சம் கைவிரல்கள் பிசகி விட்டது போல எதையாவது அழுத்திவிட்டால் பெண்கள், பாலியல் சம்பந்தமாக நிறைய வீடியோக்கள் வந்து குவிந்து விடும். அந்த வகை வீடியோக்களைப் பார்ப்பதில் அவனுக்கும் ஆர்வம் இருந்தது. இப்போது கைபேசி இல்லாமல் கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்கு சிரமமாகத்தான் இருந்தது. எவ்வளவு கைபேசிகளை காவல்துறையினர் அபகரித்துக் கொண்டார்கள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .நோக்கியா சாம்சங் சைனா மாடல் மைக்ரோமேக்ஸ் லெனோவா சோனி எரிக்சன் சாம்சங் என்று அப்போது அறையில் அங்கிருந்த அவர்களிடம் இருந்த கைபேசிகளை எல்லாம் சுருட்டிக் கொண்டார்கள். பணமும் அதுபோல் மேசையின் மேலும் மேசையின் இழுப்பறையிலும் இருந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் .இந்த கைபேசிகளை எல்லாம் என்ன செய்திருப்பார்கள் என்று பல சமயங்களில் அவன் யோசித்திருக்கிறான். கைப்பற்றப் பொருட்களை பார்ம் 95ல் பதிவிட்டு நீதிபதியிடம் ஒப்படைத்து விடுவார்கள் பிறகு அவையெல்லாம் அப்படியே கிடக்கும். ஒரு நாளைக்கு அவை அடித்து நொறுக்கப்பட்டு குப்பை ஆகிவிடும் .இந்த கைபேசிகளை காவல்துறையினர் ஏதாவது எடுத்து பயன்படுத்துவார்களா என்ற சந்தேகம் தியாகராஜனுக்கு எழுந்திருக்கிறது .இந்த கைபேசி களிலிருந்து சிம்களைப் எடுத்துவிட்டு வேறு சிம்களை போட்டு பயன்படுத்தலாம் அப்படி செய்வதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என்று யோசித்திருக்கிறான். ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் அலைவரிசை கைபேசி சம்பந்தமான தயாரிப்பு எண்கள் எங்காவது பதிவாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள் இடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகள் என்ற எண்ணம் வந்துவிடும் என்று அதை பெரும்பாலும் தவிர்ப்பதாக சொல்லிக்கொண்டான். இது போல் ஆயிரக்கணக்கான கைபேசிகள் அவர்களிடம் இருக்கும். ஊரில் உள்ள வீடியோ பார்லர்களில் கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளை அப்படித்தான் காவல் துறை அலுவலகங்களில், பீரோக்களில் கிடப்பதையும் அல்லது சாக்கு மூட்டையாகக் கிடப்பதையும் தியாகராஜன் பார்த்திருக்கிறான் .அவனுக்கு தெரிந்த ஒரு நண்பர் காவல்துறை கைப்பற்றிய குறுந்தகடுகளை வாங்கி வந்து பார்த்துவிட்டு திருப்பித் தந்ததாக கூடச் சொன்னார். அந்த கைப்பற்றப்பட்ட குறுந்தகடுகளில் பாலியல் சம்பந்தமான விஷயங்கள் இருந்தன .ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றைப் பெற்று பார்த்து அனுபவித்து திருப்பித் தந்ததாக ஒரு நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அதற்கெல்லாம் அவசியம் இல்லை எல்லாப் படங்களும் கைபேசியில் இருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுத்து வாங்கிய இந்த கைபேசிகள் இப்படி முடங்கிப்போய் கிடப்பதோ அல்லது இறுதியில் நொறுக்கப்பட்டு குப்பை ஆக்கப்படுவதோ அவனுக்கு நினைக்கையில் சங்கடம் அளித்தது .முகநூல் , வாட்ஸ்அப் என்று வந்தபின் தொடர்புகொள்வது சுலபமாகத்தான் ஆகிவிட்டது . ஆனால் அதுவே காவல்துறையினருக்கு வழக்குகளை விசாரிக்க போதுமானதாக இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள் .கைபற்றப்பட்ட கைபேசிகளில் அதிகபட்சமாய் 8000 ரூபாய் உள்ள கைபேசி இருந்தது. அதே போல 300 ரூபாய் உள்ள சைனா கைபேசிகளும் இருந்தன கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பட்டியலிடும் போது ஒவ்வொன்றிற்கும் எண் குறித்தார்கள் அப்போது காண்டம் ,கருத்தடை ஆணுறை விலை குறிக்காமல் மதிப்பிடப்பட்ட விலை என்ற பகுதியில் 0 என்று குறிப்பிட்டார்கள். அது அப்படி விலை அற்றதா அல்லது விலை மதிப்பு இல்லாததா.. அதை எவ்வளவு ஜாக்கிரதையாக கையாள வேண்டும் .அதை எவ்வளவு நுணுக்கமாக பயன்படுத்த வேண்டும் என்னென்ன அத்தியாவசியமான விஷயங்களுக்குத் தேவையாக இருக்கிறது என்றில்லாமல் மதிப்பிட்டவர்கள் கீழே விரிக்கப்பட்டிருந்த நீலக்கலர் பிளாஸ்டிக் பாய் 200 ரூபாய் என்று போட்டு இருந்தார்கள் .அதனுடைய விலை மட்டும் சரியாகக் குறித்து இருந்தார்கள். மற்றபடி மற்ற கைபேசிகளுக்கு விலை என்று குறிப்பிட்ட தொகை பாதியாக தான் இருந்தது. அவையெல்லாம் சரியான பயன்பாட்டில் தான் இருந்தவை .ஆனால் இவ்வளவு குறைவாக மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்று அவன் கூட முணுமுணுத்துக் கொண்டான். குற்ற அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களில் கடவுச்சீட்டு எண் என்று ஒன்று இருப்பதை அவன் எட்டிப் பார்த்தபோது அந்த விண்ணப்பத்தில் இருப்பது தெரிந்தது. தியாகராஜன் மலேசியா சிங்கப்பூர் போக வேண்டுமென்று கடவுச்சீட்டு எடுக்க ஆசைப்பட்டு இருந்தான். ஆனால் சமீபகாலங்களில் விசா பெறுவதற்கு அங்கிருந்து யாராவது கடிதம் அனுப்ப வேண்டும், உத்தரவாதம் தரவேண்டும் என்று வந்துவிட்ட விதிமுறைகளால் தாமதித்துக்கொண்டிருந்தது. .இல்லை என்றால் கொஞ்சம் காசு அதிகம் செலவழித்து அங்கு அறைகள் பதிவு செய்துகொண்டு அதை விசாவிற்கு காண்பித்தால் சுலபமாகிவிடும். அது கொஞ்சம் செலவு அதிகம் என்று அவன் தவிர்த்திருந்தான். கடவுச்சீட்டு வாங்குகிற எண்ணம் அப்படியே தவிர்த்து விட்டது . அவன் ஒரு முறை அங்கு வருகிற நெருக்கமான பெண்களிடம் மலேசியா சிங்கப்பூர் போலாமா என்று கூட கேட்டு வைத்தான். அவர்கள்கூட உற்சாகமாய் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள் அதற்காக திட்டமிடல் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தான் .குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரப்பட்டியல் இருந்த கடவுசீட்டு எண் என்பது வெளிநாடு செல்வதற்கான பாஸ்போர்ட் அல்ல. சிறைக்கு அனுப்புவதற்கு அவர்களுக்கான ஒரு எண் என்பது அவனுக்கு பின்னால் தெரிய வந்தது .அந்த விவரம் பிணையத்தில் எடுக்கும்போது பூர்த்தி செய்யப்பட வேண்டிய குறிப்பாக இருந்தது .ஆனால் பிணையம் தனக்கு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார்கள் .அவனையும் ஜான்சிராணி அடையாளம் காட்டினாள். அவளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தியதாய் அவள் சொன்ன எட்டு பேர்களை குண்டர் சட்டத்தில் தான் போட்டிருந்தார்கள், ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை அவர்களின் வழக்கறிஞர்களிடம் அவனும் சொல்லி இருந்தான். அப்படி குண்டர் சட்டத்தில் போட்டால் பிணையும் கிடைக்காது .ஓராண்டுக்கு வெளியில் வரமுடியாது அவர்கள் மேல் போடப்பட்டிருக்கும் வழக்குகளை குண்டர் சட்டத்திலிருந்து வேறு பிரிவுகளுக்கு மாற்றினால் பிணையம் கிடைக்கும், வெளியே வர ஏதுவாகும் என்பது கூட முக்கியமான விஷயமாக இருந்தது ,அதற்காக வழக்கறிஞரிடம் அவனும் சொல்லிக்கொண்டிருந்தான் ,ஆனால் காவல் துறையில் உள்ளவர்களால் தான் அடிபட்டு மிதிபட்டு நடமாடச் சிரமப்பட்டு பிணையில் வெளியே போய் நிம்மதியாக இருக்க முடியுமா என்ற கேள்வி வந்தது . இனி மனைவி அவனைச் சரியாக பார்ப்பாளா. மரியாதை தருவாளா .இனி அவளை எப்படி எதிர்கொள்வது. எதற்கெடுத்தாலும் முறைத்துக்கொண்டு அவள் பெற்றோர் வீட்டுக்கு செல்பவள் இந்த வழக்கு காரணமாக அவள் நிரந்தரமாகக் கூட தன்னைவிட்டு விலகக் கூடும் என்பது அவனுக்கு பயம் அளித்தது. பல பேர் பாதுகாப்பு இல்லத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருந்தான். தன்னுடன் கைதுசெய்யப்பட்ட அழகிகளையெல்லாம் சிறையில் போடுவார்களா அல்லது பாதுகாப்பில்லத்தில் வைப்பார்களா என்பது அவனுடைய கற்பனைக்கே எட்டவில்லை. வழக்குகள் என்பது பல பிரிவுகளாக இருந்தன. சில வழக்குகள் விடுதலை வரை பல வழக்குகள் தண்டனையாக அபராதத் தொகை கட்டும் வரை. சில வழக்குகள் சிறைக்குச் சென்று தள்ளி விடும் வரை. சில வழக்குகள் தண்டனை முடியும்வரை என்று வகைவகையாக இருந்தன. இவற்றில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இப்படி வகை வகையான தண்டனைகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது தனக்கு கிடைக்கும் தண்டனை எதுவாக இருக்கும் இந்தப் பட்டியலில் ஏதாவது ஒன்று அவனுக்கு கிடைக்கும். ஆனால் அது எதுவாக இருக்கும் என்பது அவனின் யோசிப்பிற்கு உடனே வரவில்லை. பெயில் வரை இருக்கும் வழக்குக்கு மேலாக சிறை மேலும் இருக்கும் என்பது அவனுடைய மனதில் இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்கள் பல பேர் அவனுக்கு அவ்வப்போது அறிமுகமாகி இருந்தார்கள். ஆனால் அவர்கள் தன்னை சுற்றிவளைத்த காவல்துறையுடன் இருப்பது அவனுக்கு ஆச்சரியம் தந்தது .சாதாரண சமூகப் பணியாளர்கள் ஆலோசனை சொல்பவர்கள்,கவுன்சிலர்கள் போன்றவர்களெல்லாம் அந்தப் பட்டியலில் வந்துவிட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது , குழந்தைகள் நலக்குழு வைச் சார்ந்த சிலரும் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள் ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் எல்லாம் யார் .திடீரென்று இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள் .இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா .ஏதோ கொஞ்சம் பணம் ,கொஞ்சம் எலும்புத் துண்டு போட்டால் இவர்கள் எல்லாம் ஓடி விடுவார்கள் என்றுதான் தியாகராஜன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களின் செல்வாக்கு என்ன என்பதை அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்து அவன் அறிந்து கொண்டான் .குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் என்று சுமார் 30 பேராவது அந்த பட்டியலில் இருப்பார்கள் என்று தோன்றியது .இவர்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒரே வழக்கறிஞரை வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை அல்லது ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நியமித்து தான் வாதாட வேண்டுமா என்பது அவனின் குழப்பங்களில் ஒன்றாக இருந்தது .ஆனால் குண்டர் சட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வேறு வழக்கு பிரிவுகளின்கீழ் தாங்கள் வந்துவிட்டால் ஓரளவு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தான் .தான் அடி பட்டது போல் மற்றவர்களும் அடிவாங்கி இருப்பார்களா அல்லது பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல்தொழில் செய்ய தூண்டியதாக உள்ள சிலருக்கு இன்னும் கடுமையான அடி உதைகள் கிடைத்திருக்குமா.. பாலியல் தொழில் மூலம் சம்பாத்தியம் ஈட்டி பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் தொழில் செய்யத் தூண்டியதாக யார் மீதெல்லாம் வழக்குகள் போட்டிருப்பார்கள் அவனுக்கு யூகிக்க முடியவில்லை. ஆனாலும் குண்டர், போக்சோ சட்டப் பிரிவில் இருந்து வேறு சட்டப் பிரிவுக்கு மாற்றம் செய்து விட்டார்கள் என்றால் அது ஒருவகை ஆறுதலாக இருக்கும் என்பது அவனின் விருப்பமாக இருந்தது . விரல்களின் நாட்டியத்தை இப்போது கைபேசி எதுவுமில்லாமல் விரல்களை அசைத்து பாவனை செய்து கொண்டான் ஆனால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலியை உற்பத்தி செய்வது போல விரல் நுனிகளில் வலியின் தீவிரம் வந்து நின்றது. ஐயோ என்று லேசாக முணுமுணுத்துக் கொண்டான் .அம்மா என்று எதேச்சையாக வார்த்தைகள் அவனின் வாயில் இருந்து வந்தன. அம்மாவை இன்னும் கொஞ்சம் கௌரவப்படுத்தி சாக விட்டிருக்கலாம். கடைசி காலத்தில் காலில் அடிபட்டு கிடந்தவளை ஒரு பிச்சைக்காரியைப் போல தானும் சேர்ந்து நடத்தி விட்டது ஞாபகம் வந்தது .அம்மா கால்களைத் தூக்கிவைக்க முடியாமல் ஏதோ இரும்பு குண்டுகளைக் கட்டி விட்டது போல இருப்பதாகச் சொல்லி அழுவாள் .அதேபோலத்தான் பெரிய இரும்புக் குண்டுகளை கயிற்றில் மாட்டி தன் உடம்போடு இணைத்து பெரும்பாரம் ஆகிவிட்டதை அவனின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீர் வெளிப்படுத்தியது. ” நான் செத்துருவன் போலிருக்கு “ ” நீ சாக மாட்டே. ரொம்ப நாள் இருப்பே . தப்பு பண்ணும் போது தெரியலையா தப்புன்னு “ “ தப்புன்னு தெரியலே. கொஞ்சம் காசு வந்துச்சு. பல பெரிய புள்ளிக கைக்கிவந்துட்ட மாதிரி இருந்துச்சு . “ “ தப்புன்னு தெரியலே. ஆனா தண்டனை மட்டும் இப்போ தெரியறதாக்கும் “ “ ஆமாங்க “