சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 9 மே, 2023

என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் : சுப்ரபாரதிமணியன் “ மொழிபெயர்ப்பது என்பது ஒரு வகையில் கூடுவிட்டு கூடு பாய்வது தான் ஒரு மீன் தண்ணீரில் தாவி நீந்துவது போல் ஒரு மொழிபெயர்ப்பாளனும் மனங்களுக்குள் நீந்துகிறான். ஒவ்வொரு சொல்லின் கரையிலும் நிரம்பி இருக்கும் மணலில் மண்டியிடுகிறான். ஒவ்வொரு சிற்பியின் வண்ணத்தையும் உற்றுநோக்குகிறான். ஒவ்வொரு சங்கையும் ஊதி பார்க்கிறான் மொழிபெயர்ப்பு என்பது விக்கிரமாதியன் கதைகளில் வரும் தலைகளை இடம் மாற்றி வைக்கும் வேலைதான். மொழிபெயர்ப்பாளன் இன்னொரு கவிஞனின் தலையை தன் முண்டத்தின் மீது பொருத்தி வைக்கிறவன் தான். மொழிபெயர்ப்பின் வழியில் வருகிறவர்களே உங்கள் காலணிகளை கழற்றி விடுங்கள் கரையில்.. உங்கள் உடைகளைக் களைந்தும் விடுங்கள் நிர்வாணமாகப் பதுங்கி செல்லுங்கள்.” ( மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தன்) 0 இந்தியா என்பது ஒற்றை கலாச்சாரத்தால் அமைக்கப்பட்டது என்பது போல சில சமயம் தோற்றமளித்தாலும், அப்படி சிலரால் கட்டமைக்கப்பட்டாலும் இந்தியா என்பது அப்படியல்ல, பல்வேறு கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய பல மடிப்புகளை கொண்டது. இந்த எண்ணங்கள் இந்தியாவின் பல்வேறு மொழி படைப்பாளிகளின் படைப்புகளை ஆங்கிலம் மூலம் மொழிபெயர்க்க போது நான் உணர்ந்தேன் சாகித்ய அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையிலான குழுவில் பணியாற்றினேன். அப்போது சாகித்ய அகாடமிக்காக இரண்டு நூல்களை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிராந்திய செயலாளராக இருந்த இளங்கோவன் அவர்கள் என்னை மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ளச் சொன்னார். ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் பல்வேறு படைப்பாளிகளுக்கு மொழிபெயர்ப்புக்காக படைப்புகளை ஒதுக்கீடு செய்யும் பணியின் போது என்னையும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடச் சொன்னார் அப்படி நான் சாகித்ய அகாடமிற்காக எடுத்துக் கொள்ள முதல் நூல் ஒடிய எழுத்தாளரான ஜே பி தாஸ் என்பவரின் “ உயில் மற்றும் பிற கதைகள் “ .ஜே பிதாஸ் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். டெல்லியில் அப்போது இருந்து கொண்டிருந்தார். அவரின் ஒடியக் கதைகள் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் ஒடிய கலாச்சார அம்சங்களும், தொன்மங்களும், மக்களின் நம்பிக்கைகளும் அவை மூட நம்பிக்கையாக இருந்தாலும் சரி தனித்து விளங்குவதை கண்டேன். எனவே அந்தக் கதைகளை மொழி பெயர்க்கிற போது அந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. கடவுள் நம்பிக்கையோ, மூடநம்பிக்கையோ மக்கள் சார்ந்த தொன்மக்கதைகளோ என பல பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளாக அவை இருந்தால் கூட பல சமயங்களில் அவை ஒவ்வொன்றுக்குமான தனித்தன்மை இருப்பதை அந்த ஒடிய கதைகளை மொழிபெயர்க்கும் போது அறிந்து கொண்டேன். அதற்கு பின்னால் நான் மொழி பெயர்த்தது ” பூமியின் பாடல்கள்” என்ற சாகித்ய அகடமி வெளியிட்ட நூல், வடகிழக்கு இந்திய எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு . வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களுடைய கதைகளினுடைய அம்சங்களை கவனிக்கிற போது அவை பல சமயங்களில் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டதைப் போல தென்படும். மலைப்பகுதிகளும் இயற்கை வளங்களும் கொண்ட வடகிழக்கு இந்திய பகுதி சார்ந்த கதைகள் அவர்களின் பிரத்தியேக வாழ்க்கையை சொல்வதை கனிம வளங்களும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை சம்பந்தமான இடங்களும் என்று உள் வாங்கினேன். அதனோடு மக்களுடைய வாழ்க்கையையும் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடக்கூடாது என்ற அக்கறையில் அவற்றை பாதுகாக்கும் ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும் போராளி குழுக்களும் அவர்களுடைய பிரிவினைகளும் ஒற்றுமையும் பல சமயங்களில் ஆச்சரியப்படுத்தியது. பின்னால் வடகிழக்கு இந்திய பகுதிகளுக்கு நான் சென்றிருந்தபோது நான் மொழி பெயர்த்த அந்த கதைகள் சார்ந்த மனிதர்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தக் கதைகளை நான் இன்னும் ஒரு முறை திரும்ப வாசித்த போது அவற்றின் தீவிர தன்மையும் உண்மை தன்மையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த இரண்டு நூல்கள் மொழிபெயர்ப்பிலும் நான் மூலப்படைப்பைப் போல பல சிக்கல்களை எதிர்கொண்டேன். ஆனாலும் எழுதி முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. எங்கள் திருப்பூர் என்பது 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரமாக இருக்கிறது. பின்னலாடை துறை மூலமாக இந்த 50,000 கோடி ரூபாய் அன்னிய செலவாணி கிடைக்கிறது. இந்த துறை சார்ந்து பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுக்க இருந்து வரும் கல்வித்துறை சார்ந்தவர்களாலும் ஜவுளித்துறை சார்ந்தவர்களாலும் செய்யப்படுகின்றன. அப்படி செய்யப்பட்ட ஒரு நூல் நெதர்லாந்து சார்ந்த சில ஆய்வாளர்கள் நடத்திய பின்னலாடை துறை சார்ந்த ஆய்வு ” நிட்டட் டுகெதர்” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை நான் ” பின்னலின் பின்னல்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தேன். சுமார் 400 பக்கம் கொண்ட அந்த ஆய்வில் திருப்பூர் சார்ந்த தொழிலார்களின் நிலைமை, பெண்களுடைய வேலை அமைப்பு, சாயப்பட்டறை தொழில் மாசுபடுத்தி இருப்பது உட்பட பல விஷயங்களைப் பற்றிய புள்ளி விவரங்களை நான் கண்டுகொண்டேன். அப்போதுதான் திருப்பூர் சார்ந்து இயங்கும் தன்னார்வ குழுக்கள் மற்றும் திருப்பூர் மக்களின் வாழ்க்கையை போராட்டங்களில் மூலம் பதிவு செய்யும் தொழிற்சங்கங்கள் இவற்றினுடைய போக்குகளும் நடவடிக்கைகளும் சரியாக அறிந்து கொள்ள முடிந்தது. விஜயவாடாவில் நடக்கும் கவிதை திருவிழாக்களில் பல ஆண்டுகள் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அவற்றை முன் நின்று நடத்தியவர் திருமதி பத்மாஜா ஐயங்கார் என்பவர்.தமிழர். பாடி என்று அவரை செல்லமாக அழைப்பார்கள். அந்த பெயரில் தான் அவரும் ஆங்கிலத்தில் எழுதுவார் .அவர் விஜயவாடாவில் அந்த கவிதை திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துவார். உலகம் முழுக்க இருந்து கவிஞர்கள் கலந்து கொள்வார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து 500 பக்கங்களுக்கு மேலாக ஆண்டுதோறும் புத்தகமாக வெளியிடுவார். அந்த புத்தகத்தில் அவரவர் மொழி சார்ந்தப் பிரதிகள் மட்டுமல்லாமல் ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு பிரதிகளையும் அதே நூலில் வைத்திருப்பார்கள். பெரிய முயற்சியாக பல ஆண்டுகள் அந்த திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஓர் ஆண்டில் அப்போதைய ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அவர்கள் கலந்து கொண்டு தமிழ் தெலுங்கு கவிதை உலகம் பற்றியும் இந்திய கவிதையை பற்றியும் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. பல வெளிநாட்டுக் கவிஞர்களின் அரிய உரைகளையும் கேட்டிருக்கிறேன். அந்த கவிதை திருவிழாவில் நான் ஆண்டுதோறும் ஒடிய கவிஞர் சுப்ன பெஹரா என்பவரை சந்திக்கிற வழக்கம். அப்படித்தான் ஓராண்டில் அவரின் ஒரு கவிதை தொகுப்பை பெற்றிருந்தேன். அதை ” அகதி முகாமில் ஓர் இரவு” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தேன். அதேபோல இன்னொரு ஆண்டு அதே ஓடிய பிரதேசத்தைச் சார்ந்த சங்கரா ஜெனே என்பவருடைய ” கான்சிபூரின் நிலவு “ என்ற நூலை தமிழுக்கு மொழி பெயர்த்து இருந்தேன். ஒரு இரண்டுமே நல்ல அனுபவங்கள். அந்த விஜயவாடா கவிதைத் திருவிழா ஆகட்டும், சாகித்திய அகடாமி நிகழ்ச்சிக்காக வெவ்வேறு ஊர்களுக்கு நான் செல்கிற போதும் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் படைப்புகளுடன் உறவாடுகிற போது அவற்றில் மூழ்கி இருக்கிற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பின்னால் பன்னாட்டு கவிதைகள் 2016/ 2017 என்ற தலைப்புகளில் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்திருக்கிறேன் என்னுடைய படைப்புகளில் சுமார் 20 படைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்தவை. சுற்றுச்சூழல் சார்ந்த என் படைப்புகளில் என் மூன்று நாவல்களும், 12 கட்டுரை நூல்களும் அடங்கும். ஆகவே தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த என் மனம் அது சார்ந்த பல பிரச்சனைகளைக் கொண்ட கட்டுரைகளையும் மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறது. அப்படித்தான் இன்றைக்கு உலகை ஆட்டிக் கொண்டிருக்கும் உலக வெப்பமயமாதல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் சார்ந்து நான் மொழிபெயடுத்த கட்டுரைகள் ” போப் சூழலில் மற்றும் பிற கட்டுரைகள்” என்ற தலைப்பில் நான் ஒரு நூலாக கொண்டு வந்தேன் சார்ஜா புத்தக கண்காட்சிக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை சென்ற போது அங்கு லாபியா அஞ்சும் என்ற ஒரு இளம் கல்லூரி மாணவி மற்றும் பெண் கவிஞரை சந்திக்க நேர்ந்தது அவருடைய ஒரு கவிதை தொகுப்பை நான் மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் அறையில் தங்கியிருந்த போது தினந்தோறும் ஒரு கவிதை என்ற வகையில் மொழிபெயர்க்க ஆரம்பித்து சார்ஜா புத்தகக் கண்காட்சி முடிகிற சமயத்தில் ஒரு தொகுப்பை முடித்து வைத்திருந்தேன். அதுதான் பின்னால் ” பேசாத.. “ என்ற தலைப்பில் திருப்பூர் கவிநிலா பதிப்பகம் ஒரு புத்தகமாக கொண்டு வந்தது. சென்றாண்டு 2021 இல் மீண்டும் சார்ஜா புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அப்போது துபாயில் தங்கி இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மெலடி என்பவர் ஒரு ஆங்கில கவிதை தொகுப்பை எனக்கு பரிசளித்தார் .அவர் ஒரு மலையாள கவிஞர் பத்திரிகையாளர். தினமும் கிடைத்த ஓய்வில் துபாய் கவிஞரின் அந்த கவிதைகளை மொழிபெயர்த்து முடித்தேன் “ புலம்பெயர் மணல் துகள்கள்” என்ற தலைப்பில் அந்த நூல் பின்னால் வெளிவந்தது. அந்த நூலில் இடம் பெயர்ந்து வாழும் இந்திய மக்களுடைய பிரச்சினைகள் பற்றியும் அவர்களுடைய உணர்வுகள் பற்றியும் கவிதைகளின் அனுபவங்களை மொழிபெயர்த்து இருந்தேன் . சாகித்ய அகாடமின் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தரக்கூடியவை. அப்போதெல்லாம் அங்கு சந்திக்கிற கவிஞர்களின் கவிதைகளை பெற்று உடனே மொழிபெயர்க்கிற ஒரு வேலை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன். அந்த கவிதைகளை நான் “ அரசியல்வாதியும் புறாவும்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன் பல்வேறு அரசியல் கருத்துக்கள் சார்ந்த விஷயங்கள் நம் இந்திய சமூகத்தை பாதிப்பதை அந்த தொகுப்பில் நான் அடையாளம் கண்டு கொண்டேன். பெண்கள் உரிமைகள் சார்ந்தும், பாலின வேற்றுமை சார்ந்தும் பல்வேறு கருத்தரங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் இந்தியாவில் நடைபெற்ற அந்த வகை கருத்தரங்குகளில் மட்டுமல்லாமல் பாலின வேறுபாடு சார்ந்த இரண்டு சர்வதேச கருத்துகளில் வங்காள தேசத்தின் டாக்காவில் நடைபெற்றவையில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை பல்வேறு கட்டுரைகளாக எழுதி இருந்தால் கூட நான் பெண்கள் உரிமை சார்ந்த ஒரு நூலை மொழிபெயர்க்கிற வாய்ப்பை ஒரு தன்னார்வ குழு அமைப்பாளர் திலகா அவர்கள் ஒருமுறை அளித்தார். அது சர்வதேச தொழிலாளர் ஆணையம் வெளியிட்ட பெண் உரிமைகள் சம்பந்தமான ஒரு நூலாகும். அந்த நூலை ” பெண்களும் தொழிற்சங்கங்களும்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டு இருக்கிறேன் அந்த நூலில் பாலின வேறுபாடு காரணமாக சுரண்டப்படும் பெண்களும் அவர்களுக்கான நிலையும் உலக அளவில் எப்படி இருக்கிறது வெளிநாட்டுத் துறைகளில் எப்படி இருக்கிறது என்பதை சார்ந்த பல எண்ணங்களின் பிரதிபலிப்பாக அந்த நூல் வெளி வந்திருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொள்கிற வாய்ப்பின் போது அங்கு வாங்கும்பல நூல்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறேன் சமீபத்தில் வெளிவந்த என்னுடைய மொழிபெயர்ப்பு நூல் ” பெயிண்டிங் பிரஸ் நம்பர் 000 “. பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சு சஜித் அவர்கள் ஒரு பிரபலமான பதிப்பகத்தின் முக்கிய நிர்வாகியாக பணிபுரிகிறவர் அவர் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறவர். அவர் ஆங்கிலத்தில் எழுதின பல படைப்புகளை படித்து இருக்கிறேன் ஒருமுறை நானும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான ப.கா. பொன்னுசாமியும் பாலக்காட்டிற்கு சென்றிருந்தோம். பாலக்காட்டில் பிரபல எழுத்தாளர் அமரர் ஓ வி விஜயன் அவர்களுடைய நினைவு இல்லத்திற்கு சென்று விட்டு அவருடைய படைப்புகள் பற்றி பல்வேறு பரிமாணங்னைகளை உள்வாங்கிக் கொண்டு திரும்பிய போது பாலக்காட்டில் அஞ்சு சஜித் அவர்களைச் சந்தித்தேன். அவர் கொடுத்த அந்த நாவலின் ஆங்கில பதிப்பை பாலக்காட்டில் இருந்து நான் திருப்பூர் வருவதற்குள் படித்து முடித்து விட்டேன். அதை உடனே மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. ஓவியர் ஒருவரின் உலகத்தை பற்றி அந்த நாவல் சொன்னது. நரபலிகள் மற்றும் மூடநம்பிக்கை சார்ந்து இயங்குகிற ஒரு சமூகத்தில் அதை தன்னுடைய படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகிற ஒரு ஓவியனுக்கு ஏற்படுகிற சிரமங்களும் அனுபவங்களும் பின்னால் அவர் காணாமல் போவதும் அவரைத் தேடி அவருடைய மகன் சென்னையில் அவர் வசித்த பகுதிகளில் சென்று அலைவதுமான அனுபவங்களை அந்த நாவல் கொண்டிருந்தது. என் மொழிபெயர்ப்பு பணியில் என் படைப்பிலக்கியத்தின் அம்சங்கள் அவற்றை மொழி பெயர்க்க எனக்கு உதவி இருக்கின்றன. ஒரு படைப்பை உருவாக்குவது போலவே மொழிபெயர்ப்பையும் உருவாக்கும் தன்மையை நான் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். இந்திய மற்றும் சர்வதேச கலாச்சார அம்சங்களை உள்வாங்கிக் கொள்கிற ஒரு பணியாக மற்றும் ஆங்கில வழியில் அந்த மொழி சார்ந்த நுணுக்கங்களை பிரதிபலிக்கும் தன்மையை இந்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு படைப்புகளின் மொழியாக்கமும் என்னை தொடர்ந்து இந்த துறையில் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது