சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 9 மே, 2023
அநீதிக் கதைகள் 2 அருண் மோ / சுப்ரபாரதி மணியன்
அருண் மிகையான எதார்த்தத்தை முன் வைக்கிறாரா.... தீவிரமான பிரச்சனைகளை முன் வைக்கும்போது சிலருக்கு அப்படித் தோன்றும். ஆனால் அந்த வகையான எதார்த்தத்தில் சாத்தியம் உள்ளது. சாத்தியமாகி நடந்தது பற்றி தான் அவர் எழுதுகிறார்.அல்லது சாத்தியமாகும் விசயம் பற்றித்தான் எழுதுகிறார். அப்படித்தான் முதல் தொகுப்பிலும் இந்த தொகுப்பிலும் உள்ள விஷயங்கள் சொல்லப்பட்ட விதத்திலும் மையத்தின் தீவிரத்திலும் வெகுவாக அக்கறை கொண்டவை
எல்லா கதைகளும் சமூக நிகழ்வுகளை நாடகிய பண்புகளுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தில் பெரும்பாலும் எதார்த்த போக்கை மீறி நாடக மயமான சித்தரிப்புகள் பார்வையாளருக்கு உணர்ச்சிவசப்பட வைப்பவை. கவர்பவை.
அப்படி திரைப்படத்துறை சார்ந்தவர் என்ற முறையில் சில கூறுகளும் அருண் அவர்களிடம் காணாமல் இல்லை. இ பாஸ்., தொற்று காலம் போன்ற கதைகளில் இந்த மிகையான எதார்த்தத்தை நாம் சுலபமாக கண்டு கொள்ளலாம். தொற்றுக்காலத்தில் வெளியே வரும் மனிதர்கள் இ பாஸ் பெற்று தொடர்வண்டி ஒன்றை முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிற அவலத்தை சொல்கிறார் இதே போல தொற்றுக்காலத்தில் பசி, வறுமை மேலோங்கி நிற்பதையும் தங்கள் குழந்தைகளை வறுமை சார்ந்து இருக்கிற கொடுமையும் சொல்லப்பட்டிருக்கிறது .” மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயிலே. இது மாறுவதைப்போ இது தீர்வது எப்போ “ என்று பட்டுக்கோட்டை எழுதினார். ஆனால் அப்படி சுரண்டப்பட்ட மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதை ஒரு மிகை எதார்த்தத்தில் சொல்லி இருக்கிறார். மனிதனை மனிதன் சாப்பிடும் அவல நிலை பற்றிய கற்பனை கொஞ்சம் பயப்படவே வைக்கிறது. ஆனால் அந்த கதை சொல்லப்பட்ட முறையிலும் கதையின் மையத்தை தீவிரமாக கொண்டு சென்ற முறையிலும் ஒரு முக்கியமான கதையாகவே இருக்கிறது. சாதி சார்ந்த படிநிலைகள் எப்படி இருக்கின்றன என்பதை எப்போதும் அக்கறை கொண்டு எழுதுபவர். அந்த வகையில்தான் கொல்லப்படுகிற பஞ்சமி நில மனிதர்கள் மற்றும் காதலுக்காக பலிகொள்ளப்படுகிற காதலர்கள் கருப்பு கூட்டம் கதைகளிலும்..
அருண் அவர்கள் திரைப்படத் துறையை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் அந்த சார்ந்த துறை சார்ந்த சிரமங்கள் இதில் இரண்டாம் கதையில் வெளிப்பட்டிருக்கிறது. வான்கோ காதுகளை அறுத்துக் கொண்டது போல இன்றைய கால சிரமங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரமும் அதிலிருந்து தப்பிப்பதற்காக காதுகளை அறுத்து ஒரு வழியில் நிவாரணம் அடைவதும் இன்னொரு கதையில் இருக்கிறது. நாமும் காதுகளை அறுத்து ஆறுதல் கொண்டது போல ஆகிவிடுகிறது பகுத்தறிவு சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொண்டு மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை கட்டுடைக்கிற தன்மையும் இருக்கிறது. இந்த கட்டுடைத்தல் எல்லா கதைகளிலும் அமைந்திருக்கிறது. சமூக நிகழ்வுகளை கட்டுடைத்து வித்தைகள் காணும் ரூபம் இந்தக் கதைகளில் கவனிக்க முடிகிறது .
நுகர்வு முகத்தை சார்ந்து இயங்குகிற கதைகளின் அத்தாட்சிகளாக இபி மின்சாரம், கிரெடிட் கார்டு ஆகியவை உள்ளன, இபி மின்சாரம் கதையில் மின்சாரம் தடைபடலும் கட்டண உயர்வுகளும் ஒரு சாதாரண மனிதனை அலைக்கழிப்பதை சொல்கிறார். கிரெடிட் கார்டு என்று அம்சம் சாதாரண மக்களை வணிக்க் களவாணி கூட்டத்தில் மாட்டிக் கொள்ள வைத்து அலைக்கழிப்பதை பற்றி சொல்லப்படுகிறது. தொடர்ந்து சமூக அநீதிகள் நிகழ்வுகளை கதைகளால் சொல்லும் போது மிகை எதார்த்தமும் சற்று உயர்ந்த குரலும் கொண்டு வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாத்தாகிறது. அப்படித்தான் இக்கதைகளும் தவிர்க்க முடியாத கொடுமைகளான சமூகம் சார்ந்த அநீதிகளை சுட்டிக்காட்டும் கதைகளாக அமைகிறது - சுப்ரபாரதி மணியன்
அக்கானி :. இலா வின்சென்ட் நாவல் -- சுப்ரபாரதிமணியன்
பனையேறி மக்களுடைய வாழ்க்கையை ஹெப்சிபா ஜேசுதாசன் ஜேக்கப் வாத்தியார் முதற்கொண்டு செல்வம் வரை பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் வின்சென்ட் அவர்களின் நாவலில் அவருடைய களமும், கோலமும் வேறுபட்டதாக இருக்கிறது. வின்சென்ட் அவர்கள் சேலத்திற்கு நாஞ்சில் நாட்டு கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து சுமார் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் இந்த நாவலில் அவர் பயன்படுத்தி இருக்கும் பூட்டேற்றி கிராம மக்கள் சார்ந்த மொழியை அவர் பயன்படுத்தும் லாவகமும் மலையாளமும் தமிழும் கலந்த மணி பிரவாள பேச்சு நடையும் இந்த நாவலின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. அந்த பேச்சு மொழியோடு அவர்களுடைய உணவு வகைகள், அவர்களின் வசிப்படங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை மிகவும் நுணுக்கமாக இதில் காட்டியிருக்கிறார். அந்த பனையேறி மக்கள் வேலையில்லாத போது நெசவு தொழிலைக் கைக்கொள்கிறார்கள் அல்லது கூலி வேலைக்குச் செல்கிறார்கள். பனையேறி தொழில் சார்ந்த தீவிரமான நுணுக்கமான விவரிப்புகள் போல நெசவாளர் சார்ந்த தகவல்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் கதை ஓட்டத்தோடு நெசவுத்தொழிலோடு அந்த மக்கள் எப்படி இயைந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்கிறார். ஏழ்மையில் கிடக்கும் மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கைக்கு ஓடுபவர்கள். அவர்களுக்குப் பசியைத் தீர்க்க ஏதாவது உணவு கிடைத்தால் போதும். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. ஆனால் கல்வி என்பது அவர்களுக்கு எப்படி மீட்சியைத் தருகிறது. பொதுவுடமை இயக்கங்கள் எப்படி அவர்களை வலிமைப்படுத்தி எழுச்சி கொள்ள வைக்கிறது என்பதுதான் இந்த நாவலின் முக்கிய மையமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் படும் பாட்டை சொல்ல இயலாது. குடும்பத்தில் உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். கணவன்களின் கொடுமையை சகித்துக் கொள்கிறார்கள். குடும்பப் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. பாலியல் ரீதியான பல்வேறு தொல்லைகளையும் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது இதெல்லாம் மீறி தன் குடும்பத்து உறுப்பினர்களை பெருமைப்படுத்த பல்வேறு செயல்களில் செயல்பட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் ஏழ்மையிலும் கல்வியைப் பெறுவது அதற்கான முயற்சியில் எடுப்பது என்பது பெண்களின் முக்கிய கடமையாகி விடுகிறது. இந்த பனை தொழிலாளர்கள் தங்களுடைய சிரமங்களை அப்படியே சொல்லிக் கொண்டிருக்காமல் தங்கள் உரிமைகளை சார்ந்து போராடவும் வழி வகுத்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்த நாவலில் முக்கிய அம்சமாக இருக்கிறது. அந்த போராடும் மக்களின் வாழ்க்கை முறையில் இருந்து, படித்த ஒருவர் அந்த இயக்க வேலைகளுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை சூசகமாக சொல்லி இந்த நாவல் முடிகிறது. அங்கு இருக்கிற பொதுவுடமை இயக்கம் சார்ந்த செயல்பாடுகளை பற்றி விரிவாக சொல்கிறபோது அப்பகுதியில் அந்த கட்சியின் தோற்றம், வளர்ச்சி அது தேர்தலில் தன்னை முன்னிறுத்த ஆசைப்படுவது, அது பற்றி விமர்சனங்கள் போன்றவையும் சொல்லப்படுகிறது கிறிஸ்துவத்தை பற்றியும், விடுதலை இறையியல் பற்றியும் பல்வேறு விவாதங்கள் இந்த நாவலில் இருக்கின்றன, அந்த விவாதங்களை அவர்கள் தங்களுடைய பேச்சுக்களாக, உரைகளாக மட்டும் கொள்ளாமல் நாடக வடிவில் சொல்லும் விதத்திலும் அந்த நாடகப் பிரதி என்று இந்த நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவுடமை இயக்கங்கள் இந்த மண்ணின், பனையேறி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவதை இந்த நாவல் பல்வேறு சித்திரங்கள் மூலம் சொல்கிறது. 70 களில் திருப்பூரில் நடந்த ஒரு நெசவாளர் போராட்டத்தை மையமாக வைத்து நான் ” தறி நாடா” என்ற நாவலை எழுதியிருக்கிறேன். அந்த நாவலில் நெசவாளிகளின் போராட்ட சூழலும் அந்த நெசவாளர் குடும்பத்திலிருந்து படித்த இளைஞன் அந்தப் போராட்டம் தருகிற அறிமுக காரணமாக தன்னை பொதுவுடமை இயக்கத்தில் முழுமையான மாறுவதற்காக தயார் படுத்திக் கொள்வதை அந்த நாவலில் நான் எழுதி இருந்தேன். அந்த நாவலின் இரண்டாவது
பாகமாக அந்த இளைஞரின் பொதுவுடமை இயக்க அனுபவங்களும் இன்றைய கட்சி சார்ந்தவர்களின் சாதிய, தனி மனித குருரங்களும் சார்ந்து அது அவனை சிதைப்பதை இரண்டாவது பாகமாக எழுத நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாவது பாகம் ஒரு வகையில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த பலவீனங்களை பெரிதுபடுத்தி காட்டுவதாக அமைந்துவிடும் என்று நான் அந்த இரண்டாம் பாக நாவலை எழுதவில்லை.
இந்த நாவலில் வின்சென்ட் அவர்கள் அப்படி ஒரு இளமையான, துடிப்பான இளைஞனைத் தான் முன்வைக்கிறார். சுயநலத்தோடு வாழ்க்கையை நடத்துவதை விட பொதுநலத்தோடு அணுகுவது என்பது அந்த இளைஞனுக்கு உவப்பாக இருக்கிறது. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சிகள் சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியத் தாக்கங்களை இன்னொரு கோணத்தில் சொல்லும் நாவலாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் பனையேரி மக்களுடைய வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்தவை. அவர்களிடம் மொழியும் அந்த வகையில் பின்னிப்பிணைந்தவை. ரத்தமும் சதையுமாக அந்த மனிதர்களை முன் வைப்பதில் இல வின்சென்ட் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய 15க்கும் மேற்பட்ட நூல்களில் அவருடைய முதல் நாவலாக இதைக் கொள்ளலாம். பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டு நூல்களும் எழுதி இருந்தாலும் முதல் நாவல் என்ற வகையிலேயே ஒரு சிறந்த நாவலை அவர் தந்திருக்கிறார் என்பது கூடுதல் பலம் தருகிறது.
பாரதி புத்தகாலயம் சென்னை வெளியீடு - ரூபாய் 330
ReplyForward