சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 4 நவம்பர், 2021
சிறுவர்களுக்குப் பிடித்தமான தடுப்பூசியிது...சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நாவல் பற்றி
- மு.முருகேஷ்
குழந்தைகளின் மனவுலகம் கதைகளால் ஆனது. கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் குழந்தைகளின்
கதையுலகைக் கட்டமைக்கின்றன. முதலில் கேள்விகளிலிருந்தே எதையும் கேட்கத் தொடங்குகிறார்கள் குழந்தைகள்.
தன்னருகே இருக்கும் சக உயிரிடம் (அது மனிதராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை) பேசுவதென்றால்
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அருகில் மனிதர்கள் இல்லாவிட்டாலென்ன... கையில் வைத்திருக்கும் பர்பி
பொம்மையொன்று போதும், குழந்தைகள் பேசுவதற்கு. யாருமில்லா சூழலிலும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளால்
முடியும். பல நேரங்களில் அவர்களுக்குப் பதில்கள்கூட தேவையில்லை. அவர்கள் பேசுவதை யாராவது கேட்டுக்
கொண்டிருந்தால்கூடப் போதும். எதுவும் பேசாமல் வெறுமனே ‘சும்மா’ உட்கார்ந்திருக்க குழந்தைகள் ஒன்றும்
பொம்மைகள் அல்லவே!
குழந்தைகள் பேசுகிறார்கள் என்றால் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தம். கேள்விகள் கேட்கிறார்கள் என்றால்
கற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள். எந்தக் குழந்தைக்கும் யாரும் தாய்மொழியைப் பேசுவதற்கு கற்றுத் தருவதேயில்லை.
நாம் பேசுவதைக் கவனிக்கும் குழந்தை, அதுவாகவே பேசக் கற்றுக்கொள்கிறது. தட்டுத் தடுமாறி குழந்தைகள் பேசப் பேச,
ஒவ்வொரு நாளும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். எப்போதும் கற்றுக்கொள்வதில் குழந்தைகள்
பெரியவர்களை விடவும் வேகமானவர்கள், ஆர்வமானவர்கள். நாம் தான் வளர வளர கற்றுக்கொள்வதிலிருந்து மெல்ல
விலகி விடுகின்றோம். ‘நாம் வளர்ந்தவர்கள், நமக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனநிலை கற்றுக்கொள்வதற்குப் பெரும்
தடையாக இருந்து விடுகிறது.
குழந்தைகள் இருக்குமிடத்தில் குதூகலத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆடுவதும், ஓடுவதும், குதிப்பதும், பேசுவதும், கேட்பதும்
குழந்தைகளுக்கே உரித்தான இயல்பான செயல்பாடுகள். ஒரே இடத்தில் உட்கார்ந்தேயிருக்கும் குழந்தைகள் ‘சவலைப்பிள்ளை’களாகி
விடுவார்கள். கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தெழும் குழந்தைகளே, அடுத்த முறை அந்தப் பள்ளத்தில் விழாதிருக்க கற்றுக் கொள்கிறார்கள்.
‘இடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்
விழுந்து எழட்டும்...
குழந்தைகள்’ - என்றெழுதிய கவிஞனை நிச்சயம் குழந்தைகள் கொண்டாடவே செய்வார்கள்.
“ஏம்பா, இந்தக் குருவிகளெல்லாம் எங்கேயிருந்து வந்துச்சு..?”
“ஏம்மா, நெருப்பைத் தொட்டா சுடுது..?”
“தூங்கும்போது மட்டும் ஏன் காது கேட்க மாட்டேங்கிது..?” என்று குழந்தைகள் கேட்கும் பல கோடி கேள்விகளுக்கு
நமக்குப் பதிலே தெரியாது. ஆனாலும் சாமர்த்தியமாய், “சும்மா தொண தொணன்னு பேசாம, அமைதியா கவனி..!” என்று
குழந்தைகளின் வாயை அடக்கி விடுகின்றோம்.
குழந்தைகளைக் கல்வி கற்பதற்காக நாம் அனுப்பும் பள்ளிக்கூடங்களும்கூட இதையே தான் சொல்கின்றன.
“கையைக் கட்டு; வாயைப் பொத்து..!”
தன்போக்கில் இயல்பாய், வெகு சுதந்திரமாய்ப் பேசிக் கொண்டிருந்த குழந்தை, பள்ளியில் சேர்த்த சில தினங்களிலேயே
வாய் மூடி மெளனியாவதை எந்த எதிர்விளைவுமின்றிச் சகித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை என்ன செய்வது..?
குழந்தைகளோடு உரையாடவும், குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வரவும் நமக்கு கதைகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள்
சொல்வதைக் குறுக்கீடின்றிக் கேட்பதற்கு பெரிய காதுகளும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தை மனம் வேண்டும்.
குழந்தைகளோடு பேசவும், பழகவும், குழந்தைகளுக்கென்று எழுதவும் குழந்தை மனம் வாய்க்க வேண்டும். அவ்வாறான
மனம் படைத்த மனிதர்களாலேயே குழந்தை இலக்கியங்களைப் படைக்க முடியும்.
நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே, 1847-ஆம் ஆண்டு வங்க எழுத்தாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
எழுதிய ‘வேதாள பஞ்சவிம்ஷதி’ எனும் நூலே குழந்தைகளுக்கான முதல் இந்திய படைப்பென அறியப்பட்டுள்ளது. இவர்
குழந்தைகளுக்கென பல கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தந்துள்ளார்.
உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கென்று எழுதியிருக்கிறார்கள். ‘போரும் அமைதியும்’ எனும் உலகப்
புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், குழந்தைகளுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ளார். நம்
நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய இரவீந்திர நாத் தாகூர், மகாகவி பாரதியார் என பலரும் குழந்தைகளுக்காகவும் எழுதி இருக்கின்றனர்.
’குழந்தைக் கவிஞர்’ என அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பாவால் 1950-இல் தொடங்கப்பட்ட ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’, குழந்தை
இலக்கியப் படைப்புகள் மிகுதியாக வெளிவர வழி வகுத்தது. ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி, சிறந்த சிறுவர் பாடல்கள்,
கதைகள், நாவல்கள், நாடகங்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தது. கையெழுத்துப் படிகளைப் பெற்று, நூல்களாக்கி
வெளியிட்டது.
ஆர்.வி என்றழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் சிறார்களுக்காகப் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அழ.வள்ளியப்பா,
பெ.தூரன், வாண்டுமாமா, ரேவதி, தமிழ்வாணன், பூவண்ணன், கொ.மா.கோதண்டம், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம். ஆயிஷா இரா.நடராஜன் எனப்
பலரும் சிறுவர்களுக்கான காத்திரமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழில் சிறுவர் இலக்கியம் என்பது போதிய அளவில் எழுதப்படவில்லை என்பதே சமூக எதார்த்தமாக உள்ளது.
சிறுவர்களுக்கென்றே வெளியான இதழ்கள் பலவும் நின்றுவிட்ட காலமிது. சிறுவர்களுக்கு எழுதுவதென்பது, தன்னைக் குறைத்து
மதிப்பிடச் செய்துவிடும் என்கிற எண்ணமும் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்தாளர்களின் மனதில்
உறைந்துபோய் கிடக்கிறது. இந்தச் சூழலிலிருந்து மீண்டு, சிறுவர் இலக்கியங்களைப் படைத்துவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் படைப்பிலக்கியத் தளத்தில் தனது காத்திரமான பங்களிப்பினைத் தொடர்ந்து ஆற்றி வருபவர்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைப்படம் என பல விரிந்த தளத்தில் எழுதிவரும் இவர், சிறுவர் இலக்கியப் படைப்புகளையும் ஆர்வத்தோடு
எழுதி வருகிறார். இவர் எழுதிய ‘சாயத்திரை’ நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றதோடு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த கதைகளுக்கு வழங்கப்படும் ‘கதா விருதினை’யும் பெற்றுள்ளார்.
எழுதுவதோடு நின்றுவிடாமல் களத்திலும் செயல்படும் ஆர்வமிக்க சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார். திருப்பூரிலுள்ள குழந்தைத்
தொழிலாளர்கள் ஒழிப்புப் பணியிலும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பதிலும், நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கும் பணியிலும்
ஈடுபட்டு வருகிறார்.
எழுபதுக்கும் மேற்பட்ட பல்துறை நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ‘கனவு’ எனும் இலக்கிய இதழையும் 35 ஆண்டுகளாக
நடத்தி வருகிறார். எய்டு-இந்தியா குழந்தைகளுக்காக வெளியிட்ட சிறு நூல்களில் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பள்ளி மறுதிறப்பு’ எனும் கதை நூல்
எனக்கு மிகவும் பிடித்தமானது. சமீபத்தில் சாகித்திய அகாதெமிக்காக நான் தொகுத்த ‘சிறுவர் நாடகக் களஞ்சியம்’ தொகுப்பில், இந்தக் கதையின்
நாடக வடிவத்தைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன். சமூக அக்கறையும், சமூக அநீதிகளுக்கு எதிரான கோபமும் சேர்ந்த கலவையே
சுப்ரபாரதிமணியனின் எழுத்துகள்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோரும் ஊரடங்கினால் வீடுகளுக்குள் அடைப்பட்டுக் கிடந்தோம்.
கோவிட் - 19 வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவம் பல்லாயிரம் உயிர்களைச் சூறையாடிச் சென்றுள்ளது. தற்போதுதான் ஊரடங்கிலிருந்து ஒவ்வொன்றாக
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலச்சூழலை அப்படியே நம் மனதில் நிறுத்தும் வண்ணமாக ;கொரோனா தடுப்பூசி’ எனும் சிறார்களுக்கான
நாவலாகத் தந்துள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
இந்த நாவலை கையிலெடுத்தால் போதும்; கடகடவென எழுத்தோட்டம் நம்மைத் தள்ளிக்கொண்டு போகிறது... தெளிந்த நீரோடையாக. சிறுவர்களுக்கே
பிடித்த முழுக்க முழுக்க உரையாடல் போக்கிலான இந்த நாவலில் எல்லாவற்றையும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்...
இல்லையில்லை... இந்த நாவலில் வரும் குழந்தைகள். பேசிக்கொண்டேயிருப்பதால் இந்த உயிர்ப்பான குழந்தைகள் நமக்கும் பிடித்துப் போகிறார்கள்.
“மாடியிலே போய் கைத்தட்டுறாங்க. மாடி இல்லாதவங்க என்ன செய்வாங்க..?” என்கிற அர்த்தம் செறிந்த கேள்விகளோடு தொடங்கும் நாவலில் வரும் புகழ்,
செல்வி, மீரான், பால், ஆர்த்தி, நிர்மலா என எல்லாக் குழந்தைகளும் நம் வீட்டுக் குழந்தைகளைப் போல நம் மனசுக்கு மிக நெருக்கமானவர்களாக
இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நிஜமான கதாபாத்திரமான திருப்பூர் பாண்டியன் நகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் கிரிஜா அக்காவும்
வருகிறார். குழந்தைகளின் கற்றலுக்குத் தடைகள் இல்லாத போது, அவர்கள் தங்களை எந்தச் சூழலிலும் வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாவலின்
எல்லா இடங்களிலும் நடைபெறுகிற உரையாடல்கள் வழி உணர்த்தியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
முகக்கவசம் போடணும், ஏ.சி.யினால் வைரஸ் தொற்று சீக்கிரமாகப் பரவும், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும்,
ஊரடங்கினால் இயற்கைச் சீரழிவு குறைந்துபோனது, மாடித் தோட்டத்தின் பயன்கள், பாம்பு சட்டையுரித்தல், மத நல்லிணக்கம் என ஒன்றையும்
விட்டு வைக்கவில்லை. இடையிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டைச் சொடுக்குகளும் சரியான இடத்தில் கையாளப்பட்டுள்ளன.
கரோனாவின் துயரம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மத்திய - மாநில ஆட்சியாளர்கள் துயருறும் மக்களுக்காக எந்தப்
பயனளிக்கும் திட்டங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. பெருமுதலாளிகளின் கல்லாக்களை நிரப்புவது பற்றியே கவலை கொண்டவர்களாக
இருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.
2020 ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் தலா 2 விலையில்லா முகக் கவசங்களை வழங்குவதாக
முடிவெடுத்தது தமிழக அரசு. முதல்கட்டமாக, ஜூலை-27-ஆம் தேதி தமிழக முதல்வர் விலையில்லா முகக் கவசங்களை வழங்கி, இந்தத் திட்டத்தைத் தொடங்கி
வைத்தார். இதனை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை (அக்டோபர்-1) இன்னும் பல கோடி பேர்களுக்கு விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படவில்லை.
இவர்கள் வழங்குவதற்குள் கரோனாவே விடைபெற்றுச் சென்றுவிடும் போலும். இதைப் பற்றிய கேள்வியும் இந்த நாவலினூடே எழுப்பப்பட்டுள்ளது.
எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரியும் உரையாடல், ‘அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும்’ என்கிற நல்லெண்ணத்துடன் முடிகிறது. இந்த நேரத்தில், கரோனா
போன்ற பெருந்தொற்று காலத்திலும் வீட்டில் இல்லாமல், குழந்தைகளுக்கான கல்விப் பணியை வீடு தேடிச்சென்று செய்த பல நூறு ஆசிரியர்களின் அக்கறையான
கல்விப் பணியை நெகிழ்ச்சியோடு நினைவுகூற வைக்கிறது.
’கொரானா தடுப்பூசி’ சிறுவர் நாவல், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தடுப்பூசி. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; மூட நம்பிக்கைகள் சமூகத் தொற்றாகப்
பரவாமலிருக்க நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையறிந்த தடுப்பூசி. வாருங்கள்... நாம் அனைவருமே வாசிக்கலாம்.
சிறப்பானதொரு சிறுவர் நாவலைத் தந்திருக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு என் அன்பின் தோழமை கனிந்த வாழ்த்துகள்.
இன்னும் இன்னுமாய் சிறுவர் இலக்கியங்களைப் படையுங்கள். தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்கு உங்கள் எழுத்துகளும் படிக்கட்டுகளாக
அமையட்டும்.
1.10.2020
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ மு.முருகேஷ்
முதுநிலை உதவி ஆசிரியர்,
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்,
124, வாலாசா சாலை,
சென்னை – 600 002.
செல் : 94443 60421 / 74013 29364
மின்னஞ்சல் : haiku.mumu@gmail.com