சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 4 நவம்பர், 2021
தோழர் எஸ் ஏ காதர் மற்றும்
திருப்பூர் நாடக முயற்சிகள் -சுப்ரபாரதிமணியன்
திருப்பூர் பகுதி நாடக முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தோழர் எஸ் ஏ காதர் அவர்களிடம் அவரின் நாடக அனுபவங்களை எழுதச்சொல்லி பல முறை வலியுறுத்தினேன். அவரின் பல படைப்புகளில் திருப்பூர் பகுதி நாடக முயற்சிகள் பற்றியக் குறிப்புகள் உள்ளன.இந்நூலில் அதை விரிவாக சொல்லியிருக்கிறார். இது ஒரு நல்ல பதிவு. எண்பதுகள் வரை இயங்கிய பல நாடகக்குழுக்கள் பற்றிய அரியத்தகவல்கள் இதில் உள்ளன.
தோழர் எஸ் ஏ காதர் அவர்களின் பள்ளி நாடக முயற்சிகள் முதல் ( எட்டு வயதில் முதல் நாடக அனுபவம் அவருக்கு ) எண்பதுகளில் இருந்த நாடக முயற்சிகள் வரை விரிவாகவேச் சொல்லியிருக்கிறார். நான் சிறு வயதில் வசித்து வந்த பகுதி சார்ந்த வரலாற்றின் சிறு பகுதியாகவும் இந்த நாடக முயற்சிகள் உள்ளன. நாடகம் நடத்தச் சிரமப்பட்டது, நாடகக் கலைஞர்களின் இயல்புகள், குடும்பச்சூழல் உட்பட பல விடயங்களை நினைவில் கொண்டு எழுதி இருக்கிறார்.
தோழர் எஸ் ஏ காதர் அவர்களின் கட்டுரை முடிகிற இடத்தில் நவீன நாடகப்போக்கு ஆரம்பித்ததைக் கீழேக்குறிப்பிட்டிருக்கிறேன்
*
நாடகத்தில் ஈடுபாடு கொண்ட ஆழ்வைக்கண்ணன் அவர்கள் பல உரைகளில் நாடகம் என்பது ” போலச் செய்தல்” என்பதாய் குறிப்பிட்டிருக்கிறார்.
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கை.. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் என்கின்றனர் மரபாளர்கள்.. தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.
'நாவில் வந்ததைப் பாடுவோம்
நாடகம் தினம் ஆடுவோம்
நாங்கள் சிறுவர் எங்கள் பிழையை
நீங்கள் பொறுப்பீர் நாளுமே'
எனப் பாடிக்கொண்டே சிறுவர்களை தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அவர் மேடையேற்றியபோது, தமிழ் நாடக உலகம் புதிய பரிணாம வளர்ச்சிக்குத் தயாராக இருந்தது. தமிழ் நாடகக் கலையை இவருக்கு முன், இவருக்குப் பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்குத் தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளவிட முடியாதது. வள்ளி திருமணம், பவளக் கொடி, வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் என, அவர் தந்த நாடகங்கள் பல இன்னும் மேடையேறிக் கொண்டிருக்கின்றன. அவர்தான், தமிழ் நாடக முதன்மை ஆசிரியர், தமிழ் நாடக விடிவெள்ளி எனக் கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களைத் தொடர்ந்து நாடக மரபு வலுப்பெற்றது..
எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது : .
பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது ..
அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின் “ வயிறு “ , அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள், சி ஆர ரவீந்திரனின் ” பசு “ , கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச் சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள் நடத்தப்பட்டன.
இவற்றை ஆரம்பத்தில் நானும், பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் . நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் .
இவற்றில் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை.
எஸ் ஏ பாலகிருஷ்ணன் நாடகங்களை இவ்வாண்டில்தான் நான் கனவு பதிப்பகம் மூலம் “ மறு விசாரிப்பு “ என்ற நாடக நூலை வெளியிட்டுள்ளேன். இவ்வாண்டில் சிறுவர்களுக்கான என் நாடக நூல் “ பசுமைப்பூங்கா “’ வும் வெளிவந்திருக்கிறது
என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும் “ மணல் வீடு “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “ பசுமை எனும் தாய்மை “ என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும் பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன.
இவற்றில் ஜெயந்தனின் “ இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின் “ வயிறு “ , , , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் ,
அறந்தை நாராயணனின் “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன,
ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதக் கூட்டங்களில் அரசியல் கவிதைகளை தோழர் எஸ் ஏ காதர்-தனி நபர் நடிப்பு - மோனே ஏக்டிங்க் வகையில் நாடகமாக்கினார் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்அண்மை கால மாவட்ட மாநாட்டில் தோழர் எஸ் ஏ காதர், ஸ்ரீநிதியின் பங்கேற்பில் மதம் என்ற நாடகம் நடைபெற்றது. கோவை திலீப்குமாரின் சிறு நாடகமும் அம்மாநாட்டில் அரங்கேறியது . (தோழர் எஸ் ஏ காதர் 25க்கும் மேற்பட்ட முழு நீள மேடை நாடகங்களை 70,80 களிலும் எழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் வயது 72. இன்னும் நாடக ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். அவர் இரு நாவல்கள் உட்பட சில நூல்களை வெளியிட்டுள்ளார் . மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன.
இவற்றையெல்லாம் பதிவு செய்யும் இந்தத் தருணம் மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. அந்த மகிழ்ச்சியில் தோழர் எஸ் ஏ காதர் அவர்களுடன் நானும் பங்கேற்கிறேன்
அவர் தொடர்ந்து நாடக முயற்சிகளில் பங்குபெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்.இந்த நூலில் குறிப்பிடும் விரிவான செட் நாடக அமைப்பிலிருந்து விலகி எளிமையான புரசீனியம் தியேட்டர் , வீதி நாடகங்களை நடத்தும் வாய்ப்புகளை இனியும் இலக்கியக்கூட்டங்களில் அவர் ஏற்படுத்திக்கொள்வார் என நம்புகிறேன். அது நாடக உலகிற்கு பெரும் கொடையாக அமையும்
இந்தத் திருப்பூர் முயற்சிகளில் ஆழ்வைக்கண்ணனும் சேர்ந்து கொள்கிறார். திருப்பூர் குமரன் நாடகமுயற்சிகள் அதில் ஒன்று . அதன் நாடகப்பிரதி தற்போது
இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.
2004 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்து மாவட்ட மைய நூலகங்களில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு ,பள்ளி கல்லூரி மேடைகளில் மாணவர்களை வைத்து நாடகமாக நடத்தியும், நடித்தும் காட்டி உள்ளார்..
.
2004 இல் நடைபெற்ற திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகள் அனைவரையும் அமர வைத்து அவர்கள் முன்பாக இந்த நாடகம் நடித்துக் காட்டப்பட்டது அனைவரின் வரவேற்பு பெற்றது.
தமிழக அரசு சார்பில் நடைபெற்ற குமரன் நூற்றாண்டு விழா வில் பள்ளி மாணவர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்றப்பட்டது
இதன் தொடர்ச்சியாக அவர் என் “ பசுமைப்பூங்கா “ சிறுவர் நாடக நூலில் உள்ள நாடகங்களையும் எளிமையான நாடகங்களாக்கியிருக்கிறார்.
இந்த அவரின் நாடகமுயற்சிகளுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்