சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

திருப்பூரியம் - ரவிவாமணன் அன்பிற்குரிய தோழரும், கொங்குநாட்டின் சமகால சிறந்த படைப்பிலக்கிய வாதிகளில் ஒருவருமான திரு. சுப்ரபாரதிமணியன் 34 ஆண்டுகளாக கனவு' சிற்றிதழை இலக்கியதரமுடன் வெளியிட்டு வருகின்றார். அவருடைய படைப்பிலக்கியப் பணிகள் மிகவும் பிரமிப்பூட்டுகின்றன. பதினேழு நாவல்கள், சிறுகதை, கவிதை, கட்டுரைத் தொகுதி சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தில் அனைத்துப் பரிமாணங்களிலும் முத்திரை பதித்தவர். மலேசியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘பெண்மை' எனும் நூலாக வெளியிட்டுள்ளார். பார்வைக்கூர்மையும், கூர்தலறமும் சமுதாய அக்கறையும் கொண்ட எழுத்துப் போராளி சுப்ரபாரதிமணியன். அவருடைய அண்மைக்காலப் படைப்புகளான தேநீர் இடைவேளை மற்றும் நைரா' ஆகிய இரண்டு நாவல்களையும் வாசித்தேன். "தேநீர் இடைவேளை" வழக்கமான நாவல்களிலிருந்து மாறுபட்ட வடிவம் கொண்டுள்ளது. கடித இலக்கிய வகையை சார்ந்தது. இதன் முன்னோடிகளாக அறிஞர் அண்ணா அவர்களையும் பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களையும் குறிப்பிடலாம். ஆனால் சுப்ரபாரதிமணியனின் களமும், கருதுகோளும் கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வியல் சூழலும் சமகாலம் சார்ந்த பிரச்சினைகளின் பதிவுகளாக விளங்குகின்றன. கோவை மாநகரத்தில் இயங்கி வந்த பல நூற்பாலைகள் நலிவுற்று மூடப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அவற்றின் நில மதிப்புகள் பல மடங்கு உயர்ந்ததும் அதில் முக்கியக் காரணமாகும். ஆதனால் அவை பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூர், பல்லடம் சுற்று வட்டாரங்களில் புதிதாக நிறுவப்படுகின்றன. நூற்பாலைத் தொழிலாளர்களை, குறிப்பாக இளம்பெண் தொழிலாளர்களை, நவீன கொத்தடிமைகளாக வளைத்துப் போடும் “சுமங்கலித்திட்டம்” எனும் கவர்ச்சியைக் காட்டி மயக்குகின்றன. நூற்பாலை நிர்வாகங்கள். மூன்றாண்டுகள், ஐந்தாண்டுகள், வரை இளம் பெண்களை ஒப்பந்தக்கூலிகளாக்கி, வசிப்பிடம் (தங்கும் விடுதி) இலவசம், உணவு, இலவசம் - சில நூற்பாலைகளில் சலுகை விலையில் உணவு என்று வாக்குறுதிகள் தந்து பணியமர்த்து கிறார்கள். பணி முதிர்வடைந்து ஒப்பந்தம் முடியும் போது திருமணத்திற்கு உதவ கணிசமான சேமிப்புத் தொகை வழங்கப்படும் என்கின்றன. ஆலை நிர்வாகங்கள். அதுவரையிலும் குறைந்த கூலிக்கு அதிக நேரம் அவர்கள் உழைத்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே நூற்பாலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தொழிலாளிகள், மேற்பார்வையாளர்களும் கூட வேலையிழப்பின் காரணமாக இந்த நவீன நூற்பாலைகளில் ஒப்பந்தக் கூலிகளாகத் தஞ்சமடைகிறார்கள். இந்த நவீன நூற்பாலைகள் ஒப்பந்தக் கூலி தொழிலாளர்களின் வசிப்பிடமாக “கொட்டகை”களை அமைந்துள்ளன. ஒரு வகையில் பார்த்தால் இதுவுங்கூட கறிக்கோழிகள் அல்லது கொட்டகைகளில் ஆடு வளர்க்கும் இடங்கள் போன்றது தான். இந்த கொட்டகை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைப் புனைவுகளின்றி எதார்த்தமான நிலையில் பதிவு செய்கிறார் சுப்ரபாரதிமணியன். "கொட்டகை வாழ்க்கையில் தொழிலாளர்களிடையே சாதி, மதம் கடந்த மலரும் காதல், வடிகால் தேடும் காமம், நுகர்வுக் கலாச்சாரத்தால் விளையும் பொருள் வயப்பட்ட கடன்கள், அவர்களை அழைக்கும் கடமைகள், துரோகங்களும், தோல்வி களும், பரிசளிக்கும் தற்கொலைகளும், அழுத்தும் பணிச்சுமைகள் வாட்டும் தனிமைத் துயரங்கள் மற்றும் எதிர்காலம் பற்றிய கனவுகள் ................ நிச்சயமற்ற எதிர்கால இருட்டைப் பற்றிய பயங்கள் ....... இப்படி ஒவ்வொரு எழுதாத கடிதங்களும் எழுதப்பட்ட வாழ்க்கைத் துயரங்களின் கதைகளாக விரிகின்றன நாவலில். மானுட உறவுகள் மகத்தானவை. வெறும் பொருள் தேடலுக்காகவும் நுகர்ச்சிக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டன அல்ல. அவை மனிதர்க்கிடையேயான பந்தம், பாசம், அன்பு, நன்றி, கடமை போன்றவற்றால் பிணைக்கப்பட்டவை. ஆனால் பொருள் தேடியாக வேண்டிய அழுத்தங்களுக் கிடையில் உணர்வுகளையும் உறவுகளையும் கட்டமைத்துக் கொள்ளும் அனுபவங்களே வாழ்க்கையை முன்னெடுக்கின்றன. அந்த முன்னெடுப்புகளே போராட்டங்களாக வடிவமாற்றம் அடைகின்றன. மாந்தர்களின் - குறிப்பாக நூற்பாலைத் தொழிலாளர்களின் "கொட்டகை வாழ்க்கையை வெகு நேர்த்தியாக படம் பிடித்துள்ளது இந்த... ‘தேநீர் இடைவேளை' நாவல். பின் நவீனத்துவ, முதலாளித்துவ சுரண்டல்களை பிரதிபலிக்கிற எதார்த்த வாத இலக்கிய வடிவம் இந்த நாவல். இருத்தலியலின் கூறுகள் இதில் தென்படுகின்றன எனலாம். சென்ற தலைமுறைக் கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜுவா, பாலதண்டாயுதம், பார்வதி கிருஷ்ணன், கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் போன்ற தன்னலமற்ற போராளிகள் குறித்தும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பஞ்சாலை நூற்பாலைத் தொழிலாளர்களின் உறுதி மிக்க போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தோழர் கே. ரமணி, தோழர். பூபதி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் பங்களிப்பையும் சிலையாக கோவையில் திரு. ராமசாமி அவர்களைப் பற்றியும் சின்னியம்பாளையம் போராளிகள் தூக்கு தண்டனை பெற்ற தியாகத்தையும் இணைத்திருந்தால் ஒரு சார்பு தன்மையற்ற முழுமையான பஞ்சாலைத் தொழிலாளர் போராட்ட வரலாற்றுப் பதிவாகவும் சிறந்து விளங்கியிருக்கும் என்பது என் கருத்து. திருப்பூரியம்: இயம் என்ற சொல்லுக்கு இயம்புதல், செல்லுதல் என்று பொருள்படும். இசம் என்ற சொல்லுக்கு திருப்பூரின் கொள்கை, லட்சியம் அல்லது இயக்கம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சுப்ரபாரதிமணியனின் முந்தைய நாவல்களான சாயத்திரை, தறிநாடா , முறிவு ஆகிய நூல்கள் திருப்பூர் பின்னலாடை விசைத்தறி பெண் தொழிலாளர்கள் பிரச்சினைகளையும் வாழ்க்கையையும் பற்றி பேசுகின்றன. ஆனால் முறிவு "தேனீர்” இடைவேளை" நூல்களைத் தொடர்ந்து வெளிவந்த “நைரா” முற்றிலும் நவீனமான பிரச்சினைகளை அலசுகிறது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க நகரங்களில் ஒன்றாக திருப்பூர் விளங்குவதற்குக் காரணம், பலநூறுகோடி டாலர் அன்னியச் செலவாணியை அது ஈட்டித் தருகிறது என்பதுதான். ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிற "அன்னதாதா”வாக வளர்ந்துள்ளது. திருப்பூர் என்பது ஒரு தனியான ஊரல்ல. பல கிராமங்களின் இணைப்பும், தொகுப்புமே திருப்பூர் எனப்படுகிறது. தேனீக்கள் அடைகிற தேன்கூடு திருப்பூர் பின்னலாடை நகரமான திருப்பூரின் பூர்வீகத் தொழில் பருத்தி விளைவித்தல், பருத்தியை நூலாக்குதல். நூலைக் கொண்டு கதர், கைத்தறி நெசவு நெய்தல் இப்போது அதன் பரிணாம வளர்ச்சி விசைத்தறிக் கூடங்களாகவும், நூற்பாலைகளாகவும், பின்னலாடை, ஆயத்த ஆடை தொழிற்கூடங்களாகவும் விரிவடைந்துள்ளது. இந்த மாபெரும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் இன்றைய நிலை என்ன? சந்தித்து வரும் பிரச்சினைகள் என்னென்ன என்று பேசுகிறது ‘நைரா' நாவல். வெளி மாவட்டங்களிலிருந்ம், வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்களும், ஏற்றுமதி வணிகர்களும் திருப்பூரை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். இப்போது வெளிநாட்டவர்களான - ஆப்பிரிக்க நைஜீரியர்கள் அதிக அளவில் திருப்பூருக்குள் சிறுவணிகர்களாக வந்து தங்க ஆரம்பித்துள்ளனர். அவர்களின் வருகையால் உள்ளூர் தொழிலாளர்கள், சிறு பின்னலாடைத் தொழில் முனைவோர், சிறு வணிகர்களிடையே ஒருவிதமான அசூயை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்களில் சிலருக்கு நைஜீரியர்களைப் பிடிப்பதில்லை. அவர்களின் முரட்டுத் தோற்றம், கன்னங்கரிய நிறம், கரடுமுரடான போக்குகள், கலாச்சார வேறுபாடுகள் காரணமாக பதட்டமும் மோதல்களும் ஏற்படுகின்றன. உள்ளூர் பின்னலாடை வியாபாரிகள், நைஜீரியர்களைத் தங்கள் போட்டியாளர்களாகக் கருதுகிறார்கள். நைஜீரியர்களுக்கு வீடுகள், கடைகள் போன்றவற்றை வாடகைக்கு விடுவதில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகின்றன. உள்ளூர் மக்களை விட நைஜீரியர்களுக்கு வாடகைக்கு வந்தால் இரண்டு மடங்கு வாடகை கிடைக்கும் என்பதால் வீடு, கடை உரிமையாளர்கள் அதை விரும்புகிறார்கள். ஆனால் நைஜீரிய இளைஞர்களால் கலாச்சார சீர்கேடுகள் உண்டாகின்றன. நம்முடைய இளம்பெண்களை நைஜீரிய வாலிபர்கள் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். பெண் தொழிலாளிகளைக் காதலில் வீழ்த்துகிறார்கள். பின்னர் நாட்டை விட்டுப் போய் விடுகிறார்கள். திரும்ப வருவதில்லை. அவர்களிடம் தங்கள் இளமையைப் பறி கொடுத்த அபலைகள் நிராதரவாக நிற்கிறார்கள். அவர்களோடு பழகும் உள்ளூர் இளைஞர்கள் கஞ்சா, அபின், பிரவுன்சுகர், மரியுவானா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகின்றனர். கடும்வேகத்தில் வாகனங்களை ஓட்டி நைஜுரிய இளைஞர்கள் விபத்துக்களை உண்டாக்குகிறார்கள். மக்கள் அச்சத்துடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது”. இப்படிப்பல குற்றச்சாட்டுக்கள் பழிகளை எதிர்தரப்பு அடுக்குகின்றது. ஒரு நைஜீரிய இளைஞன் மேல் காதல் வயப்பட்ட ஒரு தமிழ்ப்பெண்ணையும் அந்த நைஜுரிய இளைஞனையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள நாவல் ‘நைரா'. நைரா என்பது நைஜீரிய நாணயம் இதில் 'நைரா' என்பதை ஒரு குறியீட்டுச் சொல்லாக சுப்ரபாரதிமணியன் கையாண்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவும் அதன் மக்களும் உள்நாட்டு ஆயுதப் போராளிக்குழுக்களால் எப்படி யெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உள்நாட்டுப் போர்கள் நைஜீரியப் பொருளாதாரத்தை எவ்விதம் பாதிப்பிற்குள்ளாக்கி யுள்ளது என்பது குறித்தெல்லாம் அலசுகிறது சுப்ரபாரதி மணியனின் உலகளாவிய மானுடநேயம். இப்போதைய திருப்பூரின் பொருளாதாரம் மிகவும் பலவீனமாயுள்ளது. அதற்குச் சில முக்கிய காரணங்கள் உள்ளன. முதன்மையானது......... திருப்பூரின் ஏற்றுமதிகள் குறைந்து போயிருப்பதும், புதிய ஏற்றுமதிகளுக்கான கிராக்கியில்லாததும் தான். நாணய மதிப்பு அதன் தொடக்கம் எனலாம். அடுத்து 'நிஷிஜி' எனப்படும் மத்திய அரசின் புதிய 'விற்பனை மற்றும் சேவை வரிவிதிப்பு'. திருப்பூரின் தலைமேல் இறங்கிய இடி என்றே சொல்லலாம். உள்நாட்டுப்பருத்தி விளைச்சல் பாதிப்பு, பருத்தி இறக்குமதி பற்றாக்குறை இவற்றால் மூலப் பொருட்களின் விலையேற்றம். வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான், சீனா, மாலத்தீவு, மலேசியா போன்ற நாடுகளின் ஆயத்த ஆடைப்போட்டி. ஏற்கனவே வங்கிகளிலும், பிறநிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தொழிலாளர்களுக்கு கூலி, கொடுக்க முடியாமலும்......... உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை விற்க இயலாமலும் விழிபிதுங்கி நிற்கிறார்கள் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள். பின்னலாடை, நூற்பாலை, விசைத்தறி மற்றும் அவைச் சார்ந்த துணைத் தொழில்கள், தொழில்முனைவோர்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். தொழிற்கூடங்கள் மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கிறார்கள். வெளியூர்களிலிருந்து திருப்பூருக்குக் குடி பெயர்ந்தவர்கள் வருவாயிழப்புகளைத் தாக்குப் பிடிக்க இயலாமல் திருப்பூரை விட்டு வெளியேறுகிறார்கள். புதிய தொழிலாளர்கள் திருப்பூரை நோக்கி வருவது பெரிதும் குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த திருப்பூருக்கு வாய்த்த சாபமாயிருந்தது. அதன் உப்புத்தண்ணீர்தான். இப்போது அதுவே அதன் சாயத்தொழிலுக்கும், சலவைப் பட்டறைத் தொழிலுக்கும் வாய்த்த வரமாகிவிட்டது. இதன் வளர்ச்சிகள் நலிவுற்றிருக்கும் இந்தச்சூழலில் அன் பொருளாதாரத்தை, வணிகத்தை கைதூக்கிவிட வேண்டிய மாநில அரசோ, மத்திய அரசோ எவ்வித வரிச்சலுகைகளா கடன் தள்ளுபடி உதவிகளோ, குறைந்த பட்சம் வங்கிக் கடன்களுக்கு வட்டி குறைப்பு சலுகைகளோ தருவதில் மெத்தனமாகவும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. திருப்பூரின் பின்னலாடைத் தொழில்வளம் விசைத்தறித் தொழில் நூற்பாலைகளின் செயல்திறன் பெருகப் பெருக அதன் பொருளாதார வளங்களும் பெருகின. ஆதனால் மாநில, மைய அரசுகளும் பலனடைந்தன. இந்த மாற்றங்களும், கடமைப்பு வளங்களும் சட்டென ஒரே நாளில் நிகழ்த்தப்பட்ட மாயமந்திர தந்திரங்களல்ல. பல்லாயிரம் மனிதத் தேனீக்களின் உழைப்பின் பலனும் பலமும் ஆகும். திருப்பூர் எனும் கொங்கு நாட்டுச் சிற்றூரை பெரும் தொழில் கேந்திரமாக, வணிகமையமாக, பலநூறு கோடி டாலர் அந்நியச்செலவாணி ஈட்டித்தரும் பெருநகராக உருவாக்கியதின் பின்னணியில் உழைப்பும், முனைப்பும் கொண்ட கொங்கு நாட்டு மக்களின் ஆற்றல் அடங்கியுள்ளது. இந்த பெருநகரத்தின் நிகழ்காலம் சோதனைகளும், சவால்களும் நிறைந்ததாக இருந்ததாலும் குன்றாத மன உறுதியும் தன்னம்பிக்கையும், சுறுசுறுப்பும் மிக்க திருப்பூர் மக்கள் சரிவுகள், தோல்விகளிலிருந்து மீண்டெழும் ‘போனிக்ஸ் பறவைகள்' என்று தோழர் சுப்ரபாரதி மணியன் ‘தேநீர் இடைவேளை', 'நைரா', 'சாயத்திரை' நாவல்களில் அழுத்தமாகப் பதிவிட்டுள்ளார். இவருடைய நாவல்கள் வெறும் புனை கதைகளல்ல. தன்னோடு பயணிக்கிற ரத்தமும் சதையுமான சகமனிதர்களின் வலிகளையும் அன்பையும் மகிழச்சியையும், இழிவுகளையும், அவலங்களையும், வெளிப்படுத்தும் அச்சு அசலான எழுத்தோவியங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திருப்பூர், எண் திசைகளையும் நூலிழைகளால் பிணைக்கும் பட்டாம்பூச்சிகளின் பூந்தோட்டம், வலசைவரும் தொழிலாளிப் பறவைகளின் சரணாலயம் நொய்யல் நதியில் மீண்டும் புதுவெள்ளம் விரைவில் கரைபுரளக் காண்போம்.