Kodukal
சுப்ரபாரதிமணியன்
கோடுகள் இதழில் நேர்காணல் ஏப்ரல் 2019
முதன்முதலில் சுப்ரபாரதிமணியன் அவர்களிடம் தான்
நேர்காணலுக்கான விண்ணப்பம் விடுத்தது. நேர்காணலை மிக விரிவாக கொண்டு செல்ல
வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கேள்விகளை இலக்கியத்தில் இருந்து துவக்கி
எல்லாம் முடிந்து கடைசியில் சொந்த வாழ்வைப்பற்றி கேள்விகள் கேட்டு அங்கிருந்து
வாழ்வின் பல வினாக்களையும் எழுப்பலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். பொதுவாக
கேள்விகள் படைப்பாளியையோ, அவரது
படைப்புகளையோ அறிந்த இடத்திலிருந்து தான் துவங்க வேண்டும். சுப்ரபாரதிமணியன்
அவர்களும் அதைத்தான் வலியுறுத்தினார். கேள்விகள் கேட்கப்பட்டால் படைப்பாளிக்கு தன்
சொந்த உலகத்திலிருந்து உயிர்ப்போடு எழ வேண்டும் என நினைத்திருப்பார் போல. என்
கேள்விகளும் நவீன இலக்கிய உலகிற்கு அந்நியமான ஒரு இடத்திலிருந்து கேட்கப்பட்ட
கேள்விகளை போல இருந்திருக்கலாம். ஆனால் எனக்கென்று ஒரு அணுகுமுறை இருந்தது.
என்னால் நவீன இலக்கியத்தின் சகல திக்குகளிலும் எல்லையற்ற ஒரு அணுகலை நிகழ்த்த
முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என்னைப்பற்றி அவருக்கு தெரியாத நிலையில்,
அவரைப்பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாத நிலையில் - ஆனால் நான்
ஒரு நவீன இலக்கிய படைப்பாளியை நன்கு அறிந்திருக்கிறேன் - நேர்காணல் நான்
எதிர்பார்த்த விரிவானதொரு இலக்கை எட்டவில்லை. சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கும்
அச்சமயத்தில் பல்வேறு பணிகள் வந்தவண்ணம் இருந்தது. நேர்காணல் வழக்கம் போல இணையம்
வழியாகவே நடைபெற்றது. நேரடியாக நேரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும், எழுத்து வடிவில் அளித்து பெறப்படும் கேள்வி, பதில்களுக்கும்
வித்தியாசம் இருந்தாலும் இரண்டிலுமே சாதக, பாதகங்கள்
இருக்கவே செய்கிறது என்றே நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைக்கும்
போது மேலும் விரிவான கேள்விகளோடு அவரை அணுக முடியும் என நினைக்கிறேன்.
கேள்வி: ஒரு படைப்பாளிக்கு வாழ்வு குறித்து எத்தனை
தேடல், எத்தனை கேள்விகள்
வேண்டுமானாலும் இருக்கலாம். அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். அவன் பதில்களை அல்லது தீர்வுகளை
அல்லது முடிவுகளையும் கூட கண்டடையலாம். ஆனால் ஒருபோதும் அவன் அறுதியிறுதியான
முடிவுகளுக்கு - அதன் பிறகு அதில் வேறு எதுவும் இல்லை என்பது போல - வரமுடியாதவனாக
இருக்க வேண்டும். ஒரு படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா?
சுப்ரபாரதிமணியன்: வாழ்வின் பெரும் பயணத்தில் அவன்
சந்திக்கிற மனிதர்கள், நிகழ்வுகள்,
புறச்சூழல்கள் அவனை தொடர்ந்து இயங்கவேச் செய்கிறது. படைப்பிலக்கியம்
சார்ந்த நேர்மையும் சகமனிதனின்
மீட்சிக்கான புதிய சூழல்களும் அவனின் கனவாகவே இருக்கின்றன. ஒரு மதம் சார்ந்த
மனிதனுக்கு பக்தி, மோட்சம், காசி
யாத்திரை கூட அறுதியிறுதியான முடிவாகத் தெரிந்து விடுகிறது. ஆனால் ஒரு பகுத்தறிவு
சார்ந்த சக மனிதனே இந்த கண்டடைதலை விரும்பாத போது எழுத்தாளன் எப்படி அந்த
அறுதியிறுதிக்கும் அடைபட்டுப் போவான்? எழுத்தின் மூலம்
அந்தத் தேடலை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறான்.
கேள்வி: வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான் என்பது
தான் அவனை ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாக ஆக்குகிறது. அது மனிதர்களின் பொதுப்படையான
பார்வையிலிருந்து உருவாகி வருவதல்ல. அவனுடைய சொந்த அணுகுமுறையிலிருந்து, சொந்த பார்வையிலிருந்து உருவாகி
வருவது. ஒரு படைப்பாக்கத்தில் இது என்ன மாதிரியான பாத்திரத்தை வகிக்கிறது?
சுப்ரபாரதிமணியன்: இதற்கு தத்துவம் சார்ந்த
அறிமுகமும் வாசிப்பும் அவசியம். சொந்த அனுபவங்கள், தனிமனிதப்பார்வையை
ஒழுங்குபடுத்துவதில் அல்லது நெறிப்படுத்துவதில் தத்துவத்திற்கு ஒரு முக்கியப்
பங்கு உள்ளது. உதாரணத்திற்கு மார்க்சியம்.
கேள்வி: மனித உறவுகளுக்கென்று நடைமுறை வாழ்வு
சார்ந்த, எதார்த்த வாழ்வு சார்ந்த ஒரு
வேல்யூ இருக்கிறது. இவை மறைத்து நிற்கும் எத்தனை பொய்மைகளுக்கிடையிலும் உண்மையை
காணும் திறன் ஒரு படைப்பாளிக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு
கட்டாயமான தேவையாக இருக்க வேண்டும். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தால் அது அவன்
அறிந்து நிகழ்வதை விட சிறப்பானது. இதை எப்படிப்பட்ட கூற்றாக பார்க்கிறீர்கள்?
இது ஒரு படைப்பாளிக்கு தவிர்க்க முடியாத முக்கியமானதொரு தேவையென
சொல்ல முடியுமா? இதனால் அவனுக்கு அகமும், புறமும் போராட்டங்கள் ஏற்படலாம்.
சுப்ரபாரதிமணியன்: இயந்திர உலகில் சக மனிதனோடு உறவாட, சந்திக்க வாய்ப்புகள் குறைவுதான்.
இந்த சூழலில் அனுமானமும், தன் உள்ளூணர்வும்தான் உண்மையைப்
படைப்பாளிக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது. பல சமயங்களில் சிலருடனான உரையாடல்கள்,
பத்திரிக்கைச் செய்திகள் என்பது கூட உதவலாம். வாசிப்பின் மூலம் பிற
படைப்பின் வழியே பயணிக்கிறவனுக்கு இது
எதேச்சையாகவும் அமைந்து விடும், சில சமயங்களில்.
கேள்வி: ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது என்ன? அது ஒரு ஆன்மீக தேடலாக இருக்க
முடியாது. தத்துவத்தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே திட்டவட்டமான
அணுகுமுறையோடு, திட்டவட்டமான வழிமுறையோடு இருப்பவை. ஒரு
இலக்கிய படைப்பாளி இவ்விரண்டிலிருந்தும் எப்படி ஒரு வேறுபட்ட தேடலை
கொண்டிருக்கிறான்? ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது
கட்டாயமானதா?
சுப்ரபாரதிமணியன்: தொடர்ந்த வாசிப்பு, எழுத்து மூலம் சக மனிதர்களை
அடையாளம் காண்பது. வாசிப்பின் மூலம் இனங்காண வேண்டுகோள் விடுப்பது மெல்லியத்
தொனியில், உலகத்தைத்திறந்து காட்டுகிறேன். உன்னை அடையாளம்
கண்டு கொள் என்பதில்தான் தேடல் தொடர்கிறது.
கேள்வி: ஒரு படைப்பாளியை லௌகீகத்தளத்தில்
வேரூன்றியிருந்து, படைப்பாக்கத்தின்
போது இடைவிடாமல் ஆன்மீகத்தளத்திற்கு எத்தனிப்பவன் என்று சொல்லலாமா? லௌகீக தளத்திற்கும், ஆன்மீக தளத்திற்கும் இடையே
போராடுபவனை போல. ஆன்மீகத்தளம் என்பது ஒரு படைப்பாளிக்கு லௌகீக உன்னதமாகவும்
இருக்கலாம்...
சுப்ரபாரதிமணியன்: உண்மைதான். அவன்
லௌகீகத்தளத்தில் இருந்து தனித்திருக்க
இயலுவதில்லை. பிரம்மச்சாரியான படைப்பாளர்கள் குறைவே. சம்சாரிகளான படைப்பாளிகள்
லௌகீகத்தளத்தில் இருந்து விலக நேர்வது இயலாததல்ல.
மூளைக்குள் ஏதோ பூச்சி ஊர்வதைப் போலத்தான் உறுத்திக் கொண்டே இருக்கும்.
கேள்வி: எழுதப்போகும் ஒரு படைப்பைப்பற்றி முன்னரே
தெளிவான, நிறைவான திட்டமிடலை கொண்ட
வரைபடத்தோடு ஒரு படைப்பாளி இருக்கும் போது அப்படைப்பின் எல்லைகளும், சாத்தியங்களும் குறுகுகிறதா? ஒரு படைப்பாக்கத்தின்
போது அவனை ஒரு முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக நிகழும், புத்தம்புதிய
மொழிவழி பயணத்திற்கு எது ஆட்படுத்துகிறதோ அதுதான் படைப்பாற்றல் என்பதா?
சுப்ரபாரதிமணியன்: அந்த வகைத் திட்டமிடல்
அடிப்படையாக நிகழ்வதுண்டு. ஆனால் படைப்பாக்கத்துள் சென்று விடுகிறபோது
புறச்சூழல்களும் அவனின் அனுபவத்தில் மிதக்கும் நிகழ்வுகளும் புதியப் பயணத்திற்கே
கொண்டு செல்கிறது. திட்டமிட்டு நடப்பது சில சமயங்களிலேயே
கேள்வி: ஏன் மனிதனுக்கு பிறரது எண்ணங்களின் வழியாக -
மொழியின் வழியாக - பின்தொடர்ந்து சென்று ஒரு கருத்தையோ, ஒரு உண்மையையோ புரிந்துகொள்வது
கடினமாக இருக்கிறது? பிறரது எழுத்தை கண்டு பிரமிப்பனின்,
எழுத்தை கண்டு அதே பிறர் கண்டு பிரமிப்பது போல. மனப்பாடம் செய்து
தக்கவைப்பது கடினம், புரிந்து படித்தால் தக்கவைப்பது எளிது
என்பதை போல. அங்கு என்ன செயல்படுகிறது? படைப்பாக்க
சுதந்திரம் என்பது என்ன?
சுப்ரபாரதிமணியன்: அதை பின்தொடர்கிற
முயற்சிகளுக்காக உழைப்பு தேவைப்படுகிறது.
அவனின் அனுபவ உலகோடு நெருங்கியதாக இருந்தால் பின்தொடர்வது எளிது. அல்லது சிரமமாகி
விடுகிறது. மனப்பாடமெல்லாம் இளம் வயதிலேயே சுலபம். வயது ஏற ஏற சிரமமாகி விடுகிறது.
புரிதலில் அவன் படிப்பு சார்ந்த துறைகளே
எளிதில் பிடிபடும். அனுபவம் சார்ந்த துறைகளே இயல்பாகும். இல்லாத போது
மனப்பாடம் செய்தாலும் மறந்து விடும். படைப்பாக்கத்தில் அவனின் அனுபவம் சார்ந்த
விசயங்களுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதே சுதந்திரம்
என்றாகிவிடும்.
கேள்வி: ஒரு இலக்கிய படைப்பை, அப்படைப்பிற்கு வெளியேயிருந்து
அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய படைப்பின் மதிப்புவாய்ந்த, பொருட்படுத்தத்தக்க
கூறு என்ன? ஏதோ ஒன்றை காட்டி இலக்கியத்தின் பக்கமாக ஒருவனை
திருப்ப முடியுமானால் அது என்னவாக இருக்க முடியும்? திரும்பவில்லையெனில்
அதை ஒரு இழப்பு என்று எப்படி கூறுவது? அதை வெறும் ஆர்வத்தின்
கைகளில் ஒப்படைத்து விடலாமா?
சுப்ரபாரதிமணியன்: சுலபமான வாசிப்போ, அவனின் மனதோடு, அனுபவத்தோ,டு இயைந்து போவதோ தான்
பொருட்படுத்தும். கவனம் கூடுகிறபோது
தான் திருப்ப முடியும். திரும்ப
வில்லையெனில் அவனுக்கானப் படைப்புகள் வேறாகக் கூட இருக்கக்கூடும். மனம்
விசித்திரக்குரங்காய் எதைப்பற்றிக்கொள்ளும் என்பதை அறிய ரொம்ப நாள் பிடிக்கும்.
கேள்வி: படைப்பாக்கத்தில் கவிதைக்கும், கதைக்கும், நாவலுக்குமான
தனியாக பிரித்தறிந்து பார்க்கக்கூடிய வேறுபாடு என்ன? கவிஞனின்
மனம் பிரத்யேகமான முறையில் செயல்படுகிறதா? ஒரு கதையையோ,
நாவலையோ விமர்சிக்க அணுகுவதை போல ஒரு கவிதையை அணுகுவது கடினமாக
இருப்பது எதனால்? அங்கு தர்க்கங்களுக்கான சாத்தியம்
குறைகிறதா? .
சுப்ரபாரதிமணியன்: உள்மனப்பகுப்பாய்வில் படைப்பு
என்னவாக இருக்கும் என்று திட்டமிடுகிற
போது எந்த வடிவம் என்பது வந்து விடுகிறது. கவிதை மனம் என்று தீர்மானித்துக்கொள்கிற
போது அதற்கான மன ஆயத்தங்களுக்குள்ளும் போய்விடுகிறான். பிரக்ஞை பூர்வமானதாகவே
நடைபெறுகிறது.
கேள்வி: படைப்பாற்றல் / கற்பனை வளம் / மொழியில்
புலமை மற்றும் மொழியை கையாளும் விதம் / வேறுபட்ட, பரந்துபட்ட வாழ்வனுபவங்கள் /
இடைவிடாத இலக்கிய அறிமுகம் மற்றும் இலக்கிய வாசிப்பு / நடுநிலை மற்றும் தர்க்க
அறிவு / சொந்த பண்பாட்டு கலாச்சாரத்தில் வேரூன்றி இருத்தல் / சுயதேடல், கேள்விகள், உரையாடல், அவதானிக்கும்
திறன், தேர்ந்தெடுக்கும் திறன், ஞாபகத்திறன்
/ ஆன்மீக அறிவு / மன ஆரோக்கியம் இவற்றில் அதன் வேறுபட்ட முக்கியத்துவம்
அடிப்படையில் வரிசைப்படுத்தச்சொன்னால் எப்படி வரிசைப்படுத்துவீர்கள்? நீக்க வேண்டியதும், சேர்க்க வேண்டியது என்ன?
சுப்ரபாரதிமணியன்: வசதிக்காய் இப்படி பகுப்பாய்ந்து
கொள்ளலாமேத் தவிர இயல்பில் படைப்பாக்கத்தின் போது
இவையெல்லாம் காணாமல் போய் இவையெல்லாம் கலந்த ஒரு கூட்டு மனநிலை இதையெல்லாம்
விட படைப்பிலேயே மனதை இருத்தி விடுகிறது
கேள்வி: ஒரு படைப்பாளியையும், படைப்பாற்றலையும் தற்செயலான
சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் முடிவு செய்கிறதா? அல்லது படைப்பாளியும், படைப்பாற்றலும் கடவுளின்
அருளைப்போல வருகின்றனவா? சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் என்றால் - சகல வசதி வாய்ப்புகளும் அளிக்கப்படுமானால் -
யார் வேண்டுமானாலும் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள முடியுமா? கடவுளின் அருள் என்றால் அந்த அருள் தவறவிடப்படுவதற்கான வாய்ப்பு
இருக்கிறதா? அதாவது அந்த அருள் இருந்து ஒருவன் படைப்பாளியாக
பரிமளிக்க முடியாமல் போக முடியுமா? அல்லது எவரெல்லாம்
படைப்பாளியோ அவருக்கு அது இருக்கிறது எனக்கொள்ளலாமா? அதுதான்
அளவுகோல் என்பதை போல.
சுப்ரபாரதிமணியன்: தற்செயலான சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள்தான் படைப்பினை
வடித்தெடுக்க ஆதாரமாகிறது. கடவுள் அருள் என்பதெல்லாம் பம்மாத்து. வாசிப்பு,
சமூகத்தைக் கூர்ந்து நோக்கல் என்று அவதானிக்க்கிறபோது மனதின்
விருப்பத்தால் படைப்பு உருவாகிறது. படைப்பாளிக்கு கடவுள் அருள் இருப்பதாக கடவுளை
நம்பும் பெரும்பான்மையான எழுத்தாளர்கள்
நம்புகிறார்கள்.
கேள்வி: படைப்புகள் என்று வந்து விட்டால் சிலவற்றை
நிராகரிக்க வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலவற்றை கொண்டாட வேண்டும்.
சிலவற்றை குப்பை என ஒதுக்க வேண்டும். சிலவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். சிலவற்றை
அவற்றின் இடத்தை - ஒன்றன் பின் ஒன்றாக - உறுதிசெய்ய வேண்டும். எதற்கு முதல்
முக்கியத்துவம் கொடுப்பது, எதற்கு
இரண்டாம் முக்கியத்துவம் கொடுப்பது என்பது போல. இதை அந்தரங்கமாக நீங்கள் எப்படி
செய்கிறீர்கள்? அல்லது இது ஒரு சிக்கலுக்குரியதும், பிரச்சனைக்குரியதும் என விட்டுவிடலாமா?
சுப்ரபாரதிமணியன்: ரசனைக்குறிய விசயமாக இருந்த இது
அரசியலுக்கான, குழு
மனப்பான்மைக்கான விசயமாகி விட்டது. படைப்பை ஜனநாயக ரீதியாக அணுகுவது, ரசிப்பது என்றில்லாமல் குழு மனப்பான்மையுடன் அணுகுவது என்பது இன்றைய
நிலையாகி விட்டது துரதிஷ்டம்.
கேள்வி: மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வாசகப்பரப்பு
மிகக்குறைவாக இருக்க காரணம் என்ன? படைப்பிலக்கியங்கள் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைவதற்கான
ஊடகவழி சாத்தியங்கள் குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணமா? அல்லது
வாழ்வின் முன் படைப்பிலக்கியம் அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து விடுகிறதா?
அல்லது பெரும்பான்மையான மனிதர்கள் இலக்கியத்தை நிராகரிக்க நியாயமான
காரணங்கள் இருக்கிறதா? அது ஒரு சொகுசு, மேல்தட்டு, அசாதாரணம் என்பது போல.
சுப்ரபாரதிமணியன்: இது எல்லா நாட்டிற்கும்
பொருந்துகிறதா என்று தெரியவில்லை. இந்தியக்கல்வி முறையில் வாசிப்பு, புத்தகங்கள் என்பவை சொகுசு
என்பதாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, படித்தவர்களின் ரசனையில் தேந்த நூல்கள் குறைவாகவே உள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள்
கொண்டவை அவர்களுக்குப் பிரதானமாகிறது. வாசிப்பை தேவையானதாக உருவாக்காத மனங்களின்
விசித்திரம் தான் இது.
கேள்வி: ஒரு இலக்கிய படைப்பில் புரியாமை, பூடகம், மர்மம்,
சிக்கலான சேர்க்கை போன்றவை தவிர்க்க முடியாதவையா? அது ஒருவேளை வாழ்வின் பூடகத்திலிருந்து வருவதா? அல்லது
எதிர்மறையான கூறுகள் அவற்றில் இடம்பெறுகிறதா?
சுப்ரபாரதிமணியன்: வாழ்க்கையில் மர்மங்கள் பல நிலைகளில் உள்ளன. அதை படைப்பில்
கொண்டு வருகிறவர்கள் குறைவுதான். அந்த வகை அனுபவங்கள் அவர்களை அது போன்ற படைப்புகளை எழுதத் தூண்டலாம்.
கேள்வி: எழுத்தாளர்களில் பலரையும், வரலாறையும் பார்க்கும்பொழுது
இயல்பான, வழக்கமான வாழ்வின் துயரச்சாத்தியங்களிலிருந்து அவன்
ஒரு எழுத்தாளனாக இருப்பதாலையே அதைவிட அதிகமான, குறிப்பான
துயர்மிகுந்த வாழ்வை அடைகிறானா? அது அவனது சொந்த தனிப்பட்ட
இயல்பூக்கங்களிலிருந்து முளைத்தெழுகிறதா? அல்லது சமூகம் அவனை
தன்னிலிருந்து வேறுபட்ட - பிரச்சனைக்குரிய அல்லது ஒவ்வாமை போல - ஒரு மனிதனாக
காண்கிறதா? அவனிடம் உள்ள பிரச்சனை என்ன? அல்லது சமூகத்திற்கு அவனிடம் உள்ள பிரச்சனை என்ன?
சுப்ரபாரதிமணியன்: ஒரு உதாரணத்தின் மூலம் இதைப்
பரிசீலிக்கலாம் என்று எண்ணுகிறேன். நான் நாத்திகவாதி என்ற வகையில் எல்லோரிடமும்
இருந்து அந்நியப்படுகிறேன். மதம் சார்ந்த நடவடிக்கைகள் இந்திய வாழ்க்கையில்
பின்னிப் பிணைந்திருக்கிறது. நாத்திகனாக இருந்து விலகி இருப்பதால் எங்கள் வீதி
விநாயகர் கோவில் விசேசங்களில் நான் கலந்து கொள்ளாதபோது எங்கள் வீதியில் இருப்பவர்களிடம் தொடர்ப்பு
இல்லாமல் போகிறது. எங்கள் வீதி மக்களின் பரஸ்பர சந்திப்பு, நட்பு என்பதெல்லாம் இங்கிருந்துதான்
ஆரம்பிக்கிறது. தனியே அவர்களைச் சந்திக்கிற, உரையாடுகிற
சந்தர்ப்பங்கள் மிகக் குறைவே. இன்னும் கொஞ்சம் அடுத்தடுத்த வீதிகளுக்குப் போனால்
இருக்கும் சவுண்டியம்மன் கோவிலுக்கு நான் சாதியரீதியாக வரி கொடுப்பதில்லை.
அவர்களும் என்னை இனம் கண்டு கொண்டு தள்ளியே இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதி,
சமயம் சார்ந்த வாழக்கைதான் இயல்பாக இருக்கிறது. இதிலிருந்து விலகி
நிற்கும் என்னை அந்நியனாகவே
பார்க்கிறார்கள். இதில் தனிமைப்படும் நானும் அவர்களுடன் கலந்து கொள்ளாமல் தனியாகவே
நிற்கிறேன். என் அனுபவம் போல் பிற எழுத்தாளர்கள் முரண்படும் பல கோணங்கள்
இருக்கலாம்.
கேள்வி: ஒரு படைப்பாளி தன் சொந்த வாழ்வின் நிஜமான
வாழ்வனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்பை உருவாக்கும் போதே, அப்படைப்பு, படைப்புக்குரிய
அழுத்தமான கூறுகளோடு வெளிப்பட முடியும். அவனுக்கு வேறுவழியில்லை. அவன் பலவற்றையும்
கண்டிருக்கலாம். புரிந்திருக்கலாம். அது ஒருவரை அவரது அனுமதியில்லாமல்
புகைப்படமெடுப்பது போலாகுமா? - ஒரு படைப்பு அச்சு அசலாக
நிஜம், செய்தித்தாளில் வெளிப்படுவதை போல வெளிப்படுவதில்லை
என்ற போதிலும் - அல்லது ஒரு வாசகனோ, ஒரு பார்வையாளனோ ஒரு
படைப்பின் மேன்மையான கூறுகளை கருத்தில் கொள்வதற்கு முன் அது ஒன்றுமேயில்லையா?
சுப்ரபாரதிமணியன்: சொந்த அனுபவங்கள் சார்ந்த
படைப்புகளே மேன்மையானவை என்ற எண்ணம் ஆரம்பத்தில் எனக்கிருந்தது. அந்த
வகையிலேயே என் அப்பா என்ற முதல் தொகுப்பு
முதற்கொண்டு பலவும் அமைந்திருந்தன. ஆனால் சொந்த அனுபவங்களை எத்தனைப் படைப்புகளாக்க
முடியும்? எழுத்து
ஒரு பயிற்சி என்ற வகையில் தொடர்ந்து எழுத் வேண்டியிருக்கிறது. பிறரின்
அனுபவங்களை வரித்துக் கொண்டு எழுதுபவனே
நிறைய எழுத முடியும். நாவல் போன்ற விரிவான தளங்களுக்குள் செல்ல முடியும்.
படைப்பாளி படிப்பாளியாக இருந்து
செயல்படும்போது இன்னும் விரிவானத்தலத்திற்குச் செல்லவே ஆசைப்படுவான்.
கேள்வி: கலையின் அசாத்தியமான சாத்தியங்களை கொண்டு
பார்வையாளனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் சினிமா தான் அதிகபட்ச சாத்தியங்களை -
என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் - கொண்டிருப்பது போல தோன்றுகிறது.
நீங்கள் பிற கலைகளோடு இலக்கியத்தை எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? ஓவியம் - சிற்பம், சினிமா - நாடகம், பாரம்பரிய இசை - நடனம் இவற்றை அவை
செயல்படும் முறையில் இலக்கியத்தோடு ஒப்பிட்டு கூற முடியுமா? அல்லது
இந்த ஒப்பிடல் உபயோகமற்றதா? பொருத்தமற்றதா?
சுப்ரபாரதிமணியன்: ஒவ்வொரு கலைக்கும் தனித்தனி
சிறப்பம்சங்கள் உள்ளன. இதில் ஒப்பிடுவது நல்லதல்ல. திரைப்படத்தின் வீச்சு
எல்லோரும் அறிந்ததே.
கேள்வி: படைப்பாளிகள் தங்களுக்குள் அறிந்தோ, அறியாமலோ பல்வேறு காரணங்களால் பிளவுபட்டு
இருக்கிறார்களா? ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதல்ல.
ஒருவரையொருவர் நெருங்க முடியாதவாறு அல்லது ஒரு பகுதி இன்னொரு பகுதியை நெருங்க
முடியாதவாறு இடையில் குறுக்கிட்டு நிறுத்தும் கூறுகள் ஏதேனும் இருக்கிறதா?
சுப்ரபாரதிமணியன்: இந்தியச் சூழலில் மனித மனத்தின்
பிளவுகள் மிக அதிகம். இந்திய சமூகச்சுழல்தான் காரணம். அதிலும் வர்க்க வேறுபாடு
முதல் சாதிய வேறுபாடு வரை அதிக அளவு பிளவுத்தன்மை உள்ள சமூகத்தில், கலை சார்ந்த பிளவுகளுக்கும் நம்
சமூக அமைப்பும் சூழல்களுமே முக்கியக்காரணம். இலக்கிய விசயங்களில் இன்னும்
குறுகியுள்ளது நம் மனம். ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு மூச்சுத்திணறும்
இடத்தில் இலக்கிய ஜனநாயக செயல்பாடுகளும் குறைவே. ஜனநாயகரீதியான வாசிப்புக்கு
இடமளிக்கும் சூழல்களும் குறைவே,
கேள்வி: சிறுபத்திரிக்கைகளின் செயல்பாடு தங்களுக்கு
திருப்திகரமானதாக இருக்கிறதா? பல்வேறு தரத்தில், பல்வேறு வகையில், பல்வேறு பொருளில் எழுத்துக்கள் ஒரு சிறுபத்திரிக்கையை நோக்கி வருகிறது. 30
நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் ஏறக்குறைய 80 பக்க ஒரு சிறுபத்திரிக்கையில் என்ன
அடிப்படையில் எழுத்தாளர்களை தேர்வுசெய்து முன்னிறுத்துவது? சந்தேகமில்லாமல்
அது ஆசிரியரின் தனிப்பட்ட உரிமை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை
வாங்கிப்படிக்கும் வாசகன் என்ற முறையில் அவனது எதிர்பார்ப்புகளை எப்படி
வைத்துக்கொள்வது?
சுப்ரபாரதிமணியன்: அந்தந்த தளத்தில் ஓரளவு திருப்தி
கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இலக்கிய அரசியல், குழுரீதியான செயல்பாடுகளும் இச்சூழலை சிறுமையாக்கிவிட்டது. வாசகனின் திசையை
பத்திரிக்கைகள் கட்டமைக்கின்றன. எனவே வாசிப்பே அரிதாகி வரும் சூழலில் அவனின் எதிர்பார்ப்புகளை சுலபமாகத்
தட்டையாக்கிவிடும் சூழல்கள் சாதாரணமாக நடக்கின்றன.
கேள்வி: பதிப்பகத்தை ஒரு தொழிலாக நடத்துவதை
தவிர்க்கமுடியாது என்ற நிலையில், பதிப்பகங்கள் பொதுவாக தீவிர படைப்பிலக்கியத்தை எப்படிப்பார்க்கின்றன?
படைப்பிலக்கியத்தோடு ஏதேனும் ஒருவகையில் தொடர்போடு இருப்பவர்கள்
தான் அதை பதிப்பிக்கிறார்களா? தீவிர படைப்பிலக்கியத்தின்
விற்பனை பதிப்பாளர்களுக்கு லாபம் தரும் ஒரு தொழிலாக இருக்கிறதா?
சுப்ரபாரதிமணியன்: பதிப்பக முயற்சிகள் இன்றைக்கு
கார்ப்ரேட் மயமாகி விட்ட சுழலில் அவற்றின் வணிக நோக்கங்களும் சாதாரணமாகி விட்டன.
நுகர்வுச்சூழல் பதிப்பக முயற்சிகளின் தடத்தையும் மாற்றுகிறது. இலக்கியம், அறம், ஆரோக்யமான
சூழல்கள் குறித்த அக்கறை கொண்டவர்கள் சிறுபான்மையினராக இருந்து கொண்டு தங்களின்
நேரமையானப் பங்களிப்பின் மூலம் ஆறுதல் தருகிறார்கள்.
நேர்காணல் காண்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
நேரில் காணாமல் இணையம் வழியாக காண்பது ஒரு பிரச்சனை. கணினி இருக்கிறதா இல்லையா
என்பது ஒரு பிரச்சனை, இரண்டு
பேரும் ஒரே நேரத்தில் இணையத்தில் வர முடியுமா என்பது ஒரு பிரச்சனை, நேர்காணல் செய்பவருக்கும், படைப்பாளிக்கும் சுமூகமான
உறவு இருக்கிறதா, சாத்தியமாகிறதா என்பது ஒரு பிரச்சனை,
சொந்த பிரச்சனைகளை தாண்டி இருவருமே நேர்காணலுக்குள் அது முடியும்
வரை, கடைசி வரை வர முடிகிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சனை,
நேரில் என்றால் எத்தனை நாட்கள் ஆகும், தங்க
வேண்டியிருக்குமா இல்லையா, எவ்வளவு பணம் செலவாகும், செலவழிக்கும் பணம் திரும்ப வருவதற்கான சாத்தியம் இல்லாமல் இருந்தால்
பரவாயில்லையா, பலமணி நேர பயணம் செய்து படைப்பாளியை காண
போகும் போது நேர்காணலுக்கு ஒத்துழைக்கும் வண்ணம் - ஏற்கனவே ஒத்துக்கொண்டிருந்தாலும்
- அவருக்கு புதிய நெருக்கடிகள் ஏதேனும் நேர்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சனை,
போஸ்டில் என்றால் ஒவ்வொரு கேள்வியாக போஸ்டில் அனுப்பி கேட்க
முடியுமா என்பது ஒரு பிரச்சனை, மொத்தமாக கேள்விகள்
அனுப்பினால் ஸ்கூலில் பரிட்சை எழுதுவது போன்ற உணர்வு வந்தால் என்ன செய்வது என்பது
ஒரு பிரச்சனை, மேலும் மொத்தமாக கேள்விகளை பார்க்கையில்
படைப்பாளிக்கு வேறு வேலை எதுவும் பார்க்க போகலாமா வேண்டாமா என தோன்றுமா தோன்றாதா
என்பது ஒரு பிரச்சனை, போஸ்டில் என்றால் பதில் வந்த பிறகு
தான் கிளைக்கேள்விகள் கேட்க முடியும், கிளைக்கேள்விகள்
கேட்காவிட்டால் அது நேர்காணல் போல் இருக்குமா என்பது ஒரு பிரச்சனை, இணையத்தில் மொத்தமாக கேள்விகளை அனுப்பினாலும் இதே பிரச்சனை, நாம் நேர்காணல் எடுப்பது பக்கத்து வீடு, எதிர்த்த
வீடு போன்ற எல்லா வீடுகளுக்கும் சம்மதம் இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சனை
என்று ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே ஒரு நேர்காணல் மிகவும் நடுங்க
வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் கேள்வியும் சரியாக இருக்க வேண்டும். பதிலும்
சரியாக இருக்க வேண்டும். எல்லா தடைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கே வர முடிகிறது.
அதற்குள் நமக்கு தூக்கம் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்பது ஒரு பிரச்சனை
என்று இந்த நேர்காணல் காண்பதில் தான் எத்தனை பிரச்சனை? நேர்காணல்
அனைத்து படைப்பாளிகளையுமே கண்டிப்பாக காணப்பட வேண்டும். அதுவும் மீண்டும்
மீண்டும். மேலும் நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து படைப்பாளிகளை பல வகைகளாக
பிரித்து அடுத்தடுத்த அடுக்குகளில் அடுக்கி வைத்திருக்கிறோம். இதை முதலில் நாம்
வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது பல படைப்பாளிகளை முற்றிலும்
புறக்கணிக்க மறைமுகமாக எப்பொழுதும் வேலை செய்த வண்ணம் இருக்கிறது. ஒத்துழைப்பு
என்பது நிச்சயமாக இருந்தால் ஒரு நேர்காணலை யாரிடம் நடத்தினாலும் அதை ஒரு
மிகச்சிறந்த நேர்காணலாக மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே
இருக்கிறது. பெரும்பாலும் நேர்காணல் முடிவடைந்த பின்பும் இன்னும் முடியவில்லை என்ற
உணர்வே மேலெழுந்து வருகிறது.
உங்களது கல்வி கற்ற காலம் வரையிலான வாழ்வைப்பற்றி
சொல்ல முடியுமா? தங்களிடம்
தாக்கங்களை ஏதேனும் ஏற்படுத்தியதா என்ற முறையில் கல்விசூழல், குடும்பச்சூழல், சமூகச்சூழல் சார்ந்து பதிலளிக்க
முடியுமா?
திருப்பூரில் பிஷப்பு உபகாரசாமி என்ற கிறிஸ்தவ
உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி படித்தேன். அதற்கு பின்னால் திருப்பூரில்
இருக்கிற சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்ற கல்லூரியில் ஆங்கில வழிக்கல்வியில்
கணிதம் படித்தேன். உயர்நிலைக் கல்வி தமிழில்தான். கல்லூரி கல்வி ஆங்கிலத்தில்
இருந்தது சிரமமாக இருந்தது. ஆனால் கணிதம் என்று வருகிற போது அந்த சிரமம் சீக்கிரம்
மறைந்துவிட்டது. கணிதத்தில் நிறைய மதிப்பெண்கள் பெறுபவனாக இருந்தேன். பிறகு
கோவையில் உள்ள பூசாகோ கலைக் கல்லூரிக்கு சென்று எம்.எஸ்.சி. கணிதம் படித்தேன்.
குடும்பச்சூழல்... என் அண்ணா ஒருவர், எனக்கு மூத்தவர், நெசவாளி. அவர் தான் என்னை படிக்க
வைத்தார். அவருடைய குடும்ப சூழலில் அது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும்
என்னுடைய ஆசையை அவர் நிறைவேற்றினார். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நான்
தான். ஆகவே என்னுடைய படிப்பு என்பது அவருக்கு கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது.
பொருளாதார ரீதியாக பல சிரமங்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. என் பெற்றோர்களும்
அதற்கு இருந்தார்கள்.
தங்களுக்கு எப்போது முதன்முதலாக வேலை கிடைத்தது? திருமணம் எப்போது, எப்படி நடைபெற்றது? குடும்ப வாழ்க்கை தங்களிடம்
ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியதா?
நான் எம்.எஸ்.சி கணிதம் படித்துவிட்டு ஏறக்குறைய
இரண்டு ஆண்டுகள் வேலை இல்லாதவனாக இருந்தேன். அப்போது எல்லாம் அரசாங்க வேலைக்கு
தான் மரியாதை. தனியார் வேலை செல்கிறவன் படிப்பில் நல்ல மதிப்பெண் எடுக்காதவன்
அல்லது சின்சியாரிட்டி இல்லாதவன் என்ற ஒரு கருத்தும் இருந்தது. ஆனால் என்னுடைய
நண்பர் ஒருவர் சொல்வார். படித்துவிட்டு அரசாங்க வேலைக்கு செல்வது என்பது
கோழைத்தனம். தனியார் வேலை மற்றும் வியாபார விஷயங்களை அக்கறை கொண்டு முன்னேற
பார்க்க வேண்டும் என்பார். அதுதான் சவால் என்பார். ஆனால் எனக்கு படித்து அரசு
உத்தியோகம் செல்லும் ஆசை இருந்தது. நெசவாளர் சமூக சூழலில் இருந்து வந்ததால் ஒரு
அரசாங்க வேலை கிடைத்துவிட்டால் சுலபமாக இருக்கும் என்று நினைத்தேன். ஏறத்தாழ
இரண்டு ஆண்டுகள் வேலை இல்லாமல் இருந்தேன். என்னுடைய அப்பா, நான் கல்லூரி நுழைந்தபோது என்னை ஒரு
பேருந்து கம்பெனியின் முதலாளியிடம்
அழைத்துச் சென்றார். என் மகனை கண்டக்டராக்க வேண்டும் என்றார். ஆனால் நல்ல
வேளை, அவர் உன் மகன் நன்றாக படிக்கிறான், அவன் படிக்கட்டும் என்று சொன்னார். அப்போது நான் குடும்ப சூழல் அல்லது ஒரு
மாதிரி தயக்கம் ஏற்பட்டு ஆமாம் என்று சொல்லியிருந்தால் நான் ஒரு கண்டக்டர் ஆகி
இருப்பேன். இரண்டு ஆண்டுகள் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த போது
சில மருந்து கடைகளுக்கும், கம்பனிகளுக்கும் வேலைக்கு
செல்லலாம் என்று முயன்றேன்.
ஆனால் இவ்வளவு படித்தவன் எதற்கு இங்கு வரவேண்டும்
என்றார்கள். என்னுடைய நண்பர் ஒருவர், மருத்துவ பிரதிநிதியாக இருந்தார், இளையவர்.
மிடுக்காகச் செல்வார். டை கட்டிக்கொண்டு, நன்கு உடை அணிந்து
கொண்டு செல்வார். அதை பார்த்த போது அந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.
அப்படியும் இரண்டு நேர்முகத்தேர்வுக்கு
சென்றேன். ஆனால் அவர்கள் இந்த பட்டப்படிப்பு, மேற்படிப்பு
படித்துவிட்டு இங்கு வருவதற்கு என்ன அவசியம் என்று நிராகரித்து விட்டார்கள்,
பிறகு பக்கத்தில் இருந்த ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்யலாம்
என்று என் அப்பா அனுப்பினார், முதலாளி ஒரு பொதுவுடைமை
இயக்கம் சார்ந்த ஒரு தோழர், பொதுவான நிர்வாகத்துக்காக,
ஒரு நபராக என்னை எடுத்துக் கொண்டு, அவர்
எனக்கு வேலை கொடுத்தார். ஆனால் இரண்டு வாரங்கள் எந்தவித சம்பளமும் தரவில்லை.
மூன்றாவது வாரம், போக தயக்கம் காட்டி போது என் அப்பாவே
வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அதற்கு பின்னால் சின்ன சின்ன உத்தியோக முயற்சிகள்
இருந்தேன். பிறகு தொலைபேசி தொடர்பு துறையில் எனக்கு வேலை கிடைத்தது. முதலில்
பெங்களூரில் உள்ள தொலைத்தொடர்பு பகுதியில் எனக்கு வேலைக்கு ஆணைக் கடிதம்
வந்திருந்தது. ஆனால் அந்த கடிதம் என்னை வந்து சேரும் போது சற்று தாமதமாகிவிட்டது.
கடுமையான மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தேன். என்னுடைய அண்ணா அவர்களுடன்
பெங்களூருக்கு சென்றபோது அந்த நேர்முகத் தேர்வு தேதி, முடிந்து விட்டது என்று தேதியைக்
காட்டினார்கள். வேறு வழியில்லை என்று என்னுடைய அண்ணாவின் நண்பர்கள் - அங்கே
நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்தார்கள் - அவர்களோடு ஓரிரு நாட்கள் இருந்து
விட்டு திரும்பி விட்டேன். பிறகு எனக்கு தொலைத்தொடர்புத் துறையில் சி பிரிவில் ஒரு
வேலை கிடைத்தது. பயிற்சிமுறை ஓராண்டு. பயிற்சி முடிந்து குன்னூரில் எனக்கு வேலை
வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்றபோது இருந்த குளிரும் புதிய சூழலும் என்னை
பயமுறுத்தின. உடல்நிலை பாதிக்கப்பட்டது.பிறகு உடல்நலப் போராட்டங்களுக்கு பிறகு
பொள்ளாச்சிக்கு மாற்றலாகி வந்தேன்.
நான் குன்னூரில் இருக்கும் போதே எழுத
ஆரம்பித்திருந்தேன். நான் இடதுசாரி இலக்கியம் சார்ந்த விஷயங்களை படித்துக்
கொண்டிருந்தேன். பொள்ளாச்சி வந்தபோது கவிஞர் சிற்பி போன்றவர்கள் அங்கே
இருந்தார்கள். என்னுடைய பணியை அங்கு தொடர்ந்து, பிறகு ஓராண்டுக்குப் பிறகு, நான் ஹைதராபாத் தொலைத்தொடர்பு வட்டத்தில் பொறியாளர் பணிக்கு
விண்ணப்பித்தேன்.அங்கு வேலை கிடைத்தது. பயிற்சியில் ஓராண்டு சென்னையிலிருந்தேன்.
சென்னையில் இலக்கிய அமைப்புகளின் கூட்டங்களுக்கு செல்வது, இலக்கிய
எழுத்தாளர்கள் சந்திப்பது போன்றவற்றில் பொழுது கழியும். பயிற்சிக்கு பிறகு
ஹைதராபாத்தில் வேலை கிடைத்தது. அந்த பயிற்சி முடிந்து அங்கு வேலை தரப்பட்டது. ஒரு
பத்து நண்பர்கள், தமிழக நண்பர்கள், அந்தப்
பயிற்சியின் முடிவில், 10 தமிழக நண்பர்களுக்கும்
ஹைதராபாத்தில் வேலை கிடைத்தது. ஈராண்டுக்குப் பிறகு திருமணத்திற்காக என்னுடைய
வீட்டில் ஆயத்தங்கள் செய்தார்கள்.
அப்போது நான் வெகு தூரமாகப் பணியில் இருக்கிறேன், என்னுடைய பணி வெகு தூரத்தில்
இருக்கிறது என்பதற்காக உறவுகள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.தனியாகக் குடும்ப
வாழ்க்கையை ஆரம்பித்த போது சிரமங்கள் இருந்தது. பின் திருமண வாழ்க்கை ஆரம்பித்த
போது நிறைய எழுத ஆரம்பித்திருந்தேன். அப்போது என்னுடைய திருமணத்தின் போது நண்பர்
கார்த்திகா ராஜ்குமார் நந்தலாலா ராமானுஜம் என்கிற பிரியதர்சன் உடன், நானும் சேர்ந்து, நான்கு பேரும் 15 கதைகளும் என்ற தொகுப்பைக்
கொண்டு வரவேண்டும் என்ற, நண்பர் கார்த்திகா ராஜ்குமார்,
மிகவும் முயன்றார். நான் குன்னூரில் பணி செய்த போது அவர் ஊட்டியில்
இருந்ததால், நாங்கள் ஊட்டிக்கு அடிக்கடி செல்வோம். அங்கு
பிரம்மராஜன் இருந்தார். ஆத்மாநாம் அங்கு அடிக்கடி வந்து செல்வார். நீல மலைச்சாரல்
மணிகண்டன் அங்கு இருந்தார். பல்வேறு இலக்கிய நண்பர்கள், குறிப்பாக
பிரதிபா ஜெயச்சந்திரன் போன்றவர்கள் இருந்தார்கள். அந்த சூழலில் ஒரு நல்ல இலக்கிய
வாசிப்புக்கும் ஆரோக்கியமான இலக்கிய சர்ச்சைகளுக்கும் இடமாக இருந்தது. நான்
அப்போதுதான் வானம்பாடிகளுக்குப்பின் புதுக்கவிதை என்ற ஒரு அறிமுக நூலை எழுதினேன்.
பாப்ரியாவின் உந்துதலால், வானம்பாடிகள் இயக்கத்திற்குப்
பின்னால் வந்த புதுக்கவிதைகள் பற்றிய ஒரு அறிமுகமாக, அந்த
நூல், சிறுநூல் இருந்தது. அதை மீரா அவர்கள் சிவகங்கை,
அன்னம் பதிப்பகம் வெளியிட்டு இருந்தார்கள். என்னுடைய திருமணநாள்
அன்று கார்த்திகா ராஜ்குமார் அவர்கள் எங்களின் நான்கு பேரும் 15 கதைகளும் என்ற
தொகுப்பை கொண்டுவர விரும்பினார்.
அதில் என் கதைகள், கார்த்திகா ராஜ்குமார், பிரியதர்ஷன் என்கிற ராமானுஜம், நந்தலாலா என, 15 கதைகள் இருந்தன. அட்டைப்படத்தை ஆதிமூலம் அவர்கள் வரைந்திருந்தார்கள்.
முன்பு வந்திருந்த கோணல்கள் என்ற கிரியா பதிப்பகம் வெளியிட்ட நூலை அதன் தொடர்புடைய
ஒரு மாதிரியாக எடுத்துக் கொண்டோம். அந்த தொகுப்புகள், கதைகள்,
வடிவமைப்பு மிகச் சிறப்பாக இருந்தன. ஆனால் திருமண நாளில், கோவையில் அதைக் கொண்டுவர முடியவில்லை. என் திருமணம், கோவையில் நடைபெற்றது. என்னுடைய மனைவி சுகந்தி அவர்கள், ஒரு தனிமையான வாழ்க்கையில் இருந்தார். அவரின் பாட்டியின் வளர்ப்பில். இலக்கிய, கவிதை
முயற்சிகளை சொல்லி, அவரையும் எழுதத் தூண்டினேன். அது அவரின்
தனிமையிலிருந்து வெளியேற உதவியது.
பொதுவாக திருமணம் என்ற ஒரு குடும்ப அமைப்பைப்பற்றி
என்ன நினைக்கிறீர்கள்? அது
மனிதனுக்கு அதிகப்படியான செயற்கையான சுமைகளை சுமக்கும்படி செய்கிறதா? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் எதனால் சேர்ந்து வாழ
வேண்டும் என்ற ஒரு அடிப்படையையே அது இல்லாமல் செய்கிறதா?
காதல் திருமணத்தை விட நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்
குறைவான மனநிம்மதியை தரும் அல்லது ஒரு மனப்போக்கை தரும் என்று பொதுவாக
நம்பப்படுகிறது. ஆனால் இந்திய சமூகச்சூழலில் குடும்பம் என்பதும், குடும்ப அமைப்பு என்பதும் ஒரு
வகையில் நம்மை பாதுகாப்பாக உணரச் செய்கிறது. நிச்சயிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத்
துணையை ஏற்றுக்கொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. முற்போக்கு முகாமில் இருந்து
இலக்கியத்தையும், வாழ்க்கை பற்றியும் கற்றுக் கொண்டவன்
என்றாலும் காதல் பற்றிய பெரிய அக்கறை இருந்ததில்லை. அந்த சூழலில் எனக்கு
குடும்பத்தினர் பார்த்து நிச்சயிக்கும் பெண் தான் சரியென்று பட்டது. இந்த பெண்
பார்க்கும் படலம் இதெல்லாம் ரொம்பவும் அபத்தம் தான். பொள்ளாச்சியில் ஒரு பெண்ணைப்
பார்த்து விட்டு அந்தப் பெண், கன்னங்கள் ஒடுங்கி, கண்கள் உள்ளே போய் இருந்தாள். ஆனால் நிறம் நல்ல நிறமாக இருந்ததால் எங்கள்
வீட்டில் பலருக்கு அந்த பெண்ணை பிடித்து இருந்தது. ஆனால் என்னுடன் வந்த ஒரு
இலக்கிய நண்பருக்கு அந்தப் பெண்ணுடைய தோற்றம் பிடிக்கவில்லை. அதனால் அந்தப் பெண்ணை
நிராகரித்தேன். அப்போது நான் பட்ட வேதனை கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
நீங்கள் சொல்வது போல பெண் பார்க்கும் படலம் ஒரு
மாதிரி அபத்தமாகத் தான் இருந்திருக்கிறது. அதன்பின், நான் இரண்டாவதாக பார்த்த பெண்ணை
திருமணம் செய்து கொண்டேன். அவர் கவிஞர் சுகந்தி. கோவையில் இருக்கிற செம்மேடு என்ற
பகுதியைச் சார்ந்தவர். சிறுவாணி - செம்மேடு செல்லுகிற பாதையில் உள்ள ஆலந்துறை என்ற
பகுதியை சேர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 16தான் இருக்கும். நான் திருமணம்
செய்துகொண்டேன். ஹைதராபாத்தில் குடியேறினோம்.
குடும்ப அமைப்பைப் பற்றி எனக்கு மோசமான எண்ணமெல்லாம்
இருந்ததில்லை. என்னதான் பிரச்சனைகள்
குடும்பத்துக்குள் இருந்தாலும், குடும்பம் வந்து... கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு பாதுகாப்பான இடம் என்று
தான் நினைக்கிறேன். வெளி அவனுக்குப் பாதுகாப்பானதா என்று சொல்ல முடியாது. இந்த
நிலையில் ஒரு கூட்டுக்குடும்பம் என்பதெல்லாம் உளவியல்ரீதியாக நிறைய
பயன்தரக்கூடியது, தயக்கம் இல்லாமல் எல்லோரிடமும்
பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும், பிரச்சனைகளைத்
தீர்த்துக் கொள்வதற்கும் கூட்டுக் குடும்பம் சரியாக வரும் என்ற எண்ணம் என்னுள்
மேலோங்கி இருந்தது. அந்த வகையில் தான் திருமணம் என்ற அமைப்பை நான் பார்த்தேன்.
நீங்கள் சொன்ன மாதிரி நிறைய செயற்கையான சுமைகள் இருப்பதை நான் உணர்கிறேன், ஆனால் அந்த சுமையில் ஒரு மாதிரி சுகமாகவும், சுகமான சுமைகளாக ப்ல சமயங்களில்
மாறியிருக்கிறது. ஒருவரோடு ஒருவரை பகிர்ந்து கொள்ள, உறவாடி
கொள்ள, அதுவும் பெண் சார்ந்த உணர்வு... புது அனுபவம் தானே.
எனக்கு நிறைய மரியாதை கொடுக்கும் விஷயமாக திருமணம்
மற்றும் குடும்ப வாழ்க்கை இருந்திருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் எதனால் சேர்ந்து
வாழவேண்டும் என்று யோசித்து பார்த்தால், ஒரு குடும்பம், குலம் சார்ந்த புதுப்பிறப்புகள்
எல்லாம் சார்ந்தும், மீண்டு வரும் உடல் சார்ந்த
தேவைகள்..இதெல்லாம் தான் தோன்றுகிறது. அது இல்லாத பட்சத்தில் தனிமை வாழ்க்கையை
சீரழித்துவிடும் அல்லது வாழ்க்கையை வேறு திசையில் திருப்பிவிடலாம். இதுபோன்ற
சூழலில் குடும்பம் என்பது, இன்னும் எனக்கு பாதுகாப்பாக
தெரிந்திருக்கிறது. ஆனால் பின்னால் திருமண வாழ்க்கையில் நான் பட்ட சிரமங்கள்
அதிகம்.
தங்களது இன்றைய காலம் வரையில் எத்தனை வேலைகள்
செய்திருப்பீர்கள்? பொதுவாக
ஒரு வேலையோ, ஒரு தொழிலோ செய்து பிழைப்பதில் என்ன மாதிரியான
ஒரு சிக்கல் இருந்து செயல்படுகிறது என நினைக்கிறீர்கள்? அல்லது
எந்த ஒரு சிக்கலையும் தாங்கள் காணவில்லையா?.
இன்றைய காலகட்டம் வரை அதிகமான வேலைகள்
பார்த்ததில்லை. நான் முதலில் சொன்ன பனியன் கம்பனி வேலை 2 வாரங்கள் செய்து
இருக்கிறேன். பிறகு கோடை விடுமுறை வருகிறபோது எங்கள் வீட்டில், என்ன செய்யலாம் என்று யோசனை வந்து
விடும். எங்கள் வீட்டில் '100' நம்பர்
சேலையை சகோதரர்கள் நெய்வார்கள். மிகவும் நுணுக்கமாக செய்யவேண்டியிருக்கும். இதமாக
செய்ய வேண்டியிருக்கும். அதெல்லாம் நல்ல தேர்ச்சி இருந்தால்தான் செய்ய முடியும்.
ஆனால் சாதாரணமாக, நெசவாளர் சமூகத்தில் உள்ளவர்கள் அல்லது
ஓய்வாக நெசவு செய்ய வேண்டும் என்று இருக்கும் சிலர், கேரளத்தில்
முண்டு என்று சொல்வார்கள், பெண்கள் பயன்படுத்துகிற வெள்ளை
நிறத்தில் இருக்கும் உடை, அதை நெய்வார்கள். அந்த ஆடை அணிவது
நன்றாக இருக்கும்.
அந்த நூல் கொஞ்சம் இன்னும் அதிகமான கவுண்ட் உள்ளதாக
இருக்கும். சாதாரணமானவர்களுக்கு அதற்கு பெரிய தேர்ச்சியும், அனுபவமும் தேவையில்லை. என்னுடைய
கல்லூரி வாழ்க்கையில் கோடை விடுமுறையில் அதுபோல் சிறுதறிகளில், அந்த முண்டு ரகங்களை நெய்திருக்கிறேன். படிப்புக்கு பணம் கிடைக்கும்,
செலவுக்கு பணம் கிடைக்கும் என்ற அக்கறையுடன். பலர் கிண்டல்
செய்வார்கள். என் வீட்டில் நான்கு அண்ணன்மார்கள் இருந்தார்கள். இந்த நான்கு
அண்ணன்மார்கள் நெசவு நெய்து, சம்பாதிப்பதை மீறி, நீ நெய்தால் தான் சாப்பிட முடியுமா, குடும்பத்தை
காப்பாற்ற முடியுமா என்று கேள்வி கேட்பார்கள். எனக்கு பொழுதுபோக வேண்டும்.
புத்தகம் வாங்க பணம் வேண்டும். அதற்காக நான் செய்ய வேண்டி இருந்தது. அது கட்டாயம்
இல்லை. நான் ஒருவகையில் பொழுதுபோக்கிற்காகச் செய்தேன் என்று கூட சொல்லலாம். பிறகு
என்னுடைய அண்ணார் ஒருவர் சிறு ஜவுளி கடை வைத்திருந்தார்.
ஜவுளி கடை என்றால் நெசவாளர்களுக்கு, நமக்கு, பட்டு
ஜரிகை போன்றவற்றையெல்லாம் முதலீடு போட்டு, பிறருக்குத்
தருவது. இந்த மாதிரி ஒரு தொழில் சார்ந்த ஒரு வியாபார கடை நடத்தி வந்தார். அந்த
கடையில் ஓரிரு மாதங்கள் இருந்திருக்கிறேன். ஒருநாள் முழுக்க கடையில்
உட்கார்ந்திருக்க வேண்டும். நான் கொண்டுபோகிற ஆங்கில தினசரியை படிப்பேன். மற்றபடி
உறவாட, பேசிக்கொள்ள யாரும் கிடைக்கமாட்டார்கள், அபூர்வமாக நெசவாளர்கள் நெய்த சேலையைக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
அப்போது எங்க அண்ணன் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறான் என்று
அறிமுகப்படுத்திச் சொல்வார். பிறகு மத்திய அரசினுடைய தொலைத்தொடர்புத் துறை வேலை.
பயிற்சியில், படிக்க வேண்டியிருந்து, பல்வேறு
ஊர்களில், அதில் ஈடுபட வேண்டிய அளவு, ஒரு
தொழிலை அல்லது வேலையை செய்து படிப்பதில், என்ன மாதிரியான
சிக்கல் செயல்படுகிறது என்றால், அந்த இடத்தில் வேலை
வாங்குபவர் கொஞ்சம் அதிக வேலையை எதிர்பார்ப்பார். அதில் ஒரு அரசாங்க அதிகாரி என்று
ஒருத்தர் இருப்பார். அவருடைய அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
வரைமுறைகள் என்பது நமக்குப் பிடிக்காமல் கூட
இருக்கும். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே, எனக்கிருந்த இலக்கிய ஈடுபாடு, நான் வேலை செய்கிற
எல்லா இடத்திலும் ஒரு பெரிய தடங்கலாக இருந்தது. ஏதாவது இலக்கிய இதழ்களை
பார்த்துக்கொண்டிருப்பது, படித்துக் கொண்டிருப்பது அல்லது
அது சார்ந்து யோசிப்பது, அது சார்ந்த நண்பர்கள், இலக்கியவாதிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வது என்பதெல்லாம் ஒரு வகையில்,
சில சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது, அந்த
சிக்கல்கள் எல்லாம் ஒருவகையில் தீர்ந்து போயும் இருக்கின்றன. ஆனால் இலக்கிய உலகில்
அங்கீகாரம் பெற வேண்டும், நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்ததால்
அந்த சிக்கலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தீவிர இலக்கிய அறிமுகம் எப்படி ஏற்பட்டது? தங்களது வழிகாட்டிகள் யார், யார்? ஜனரஞ்சக படைப்புகளுக்கும், தீவிர இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை நோக்கி
எப்படி சென்றீர்கள்?
எழுத வேண்டும் என எப்படி தோன்றியது? எப்பொழுது எழுத துவங்கினீர்கள்?
பத்திரிக்கைகளில் எப்பொழுது அவை பிரசுரமாயிற்று?
தீவிர இலக்கிய ஆர்வம்... நான் கல்லூரியில் முதல்
ஆண்டு படிக்கும்போது பி.எஸ்.சி. கணிதம் படிக்கும்போது நூலகத்துக்குச் சென்று உணவு
இடைவேளையின் போது வாசிப்பதன் வழியாக ஏற்பட்டது. நூல்களைப் பெற்று படிப்போம். ஒரு
நண்பனோடு சேர்ந்து ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிப்போம்.
அப்படித்தான் முதலில் ஜெயகாந்தன் கதைகளை வாசித்தேன். ஜெயகாந்தன் காட்டிய உலகம்
அப்போது அதிர்ச்சி தரத்தக்கதாக இருந்தது,
அப்படித்தான் இலக்கிய ஆர்வம் அறிமுகமானது. என் பள்ளித் தோழர்
பாலகிருஷ்ணனைச் சந்தித்தபோது குறிஞ்சி கையெழுத்து இதழ் பற்றிச் சொன்னார். அவர்
கல்லூரிக்கு வரவில்லை. பள்ளியோடு தன்னுடைய படிப்பை நிறுத்திக் கொண்டார். அவர்
பனியன் தொழிலை வீட்டில் செய்து கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் இலக்கிய ஆர்வம்
கொண்டவர். அமைப்பினுடைய செயல்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் குறிஞ்சி
என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழை நண்பர்கள் நடத்துவதாகவும், அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.
அவர் வீட்டிற்கு சென்று அந்த இதழைப் பார்த்தேன்.
அந்த இதழில் எழுத ஆரம்பித்தேன். பெரும்பாலும் சாதாரண நடையில் காதல் கவிதைகள், வறுமை சார்ந்த சித்திரங்கள்.
அப்போதெல்லாம் நான் சுதந்திரமானவன். கவிதைகள் எல்லாம் எழுத வரும் என்ற நினைப்பு
இருந்தது. ஒரு வகையில் முற்போக்கு என்று காட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். இன்னொரு
பக்கம் காதல் உறவுகள் சார்ந்த வெகு பிரபலமாக உள்ள கவிதைகளின் மாதிரிகளாக அவை
இருக்கும். அப்போது அந்தப் படைப்புகளை எல்லாம் நாங்கள் சிறு நூல்களாக்கி அல்லது
கையெழுத்துப் பிரதிகள் ஆக்கி நூலகத்தில் கொண்டு போய் போடுவோம். பின்னால் இருக்கிற
வெள்ளைத் தாள்களில், அதைப் பார்ப்பவர்கள் தங்களுடைய
கருத்துக்களை, விபரங்களை எழுதுவார்கள். அதுவே பெரிய
மனத்திருப்தியை கொண்டு வந்தது. அந்த குறிஞ்சி இலக்கிய இதழ் சார்பாக ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்துவோம். முதல்
ஆண்டிலேயே கவிஞர் மு.மேத்தா, புவியரசு, திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்களை எல்லாம் கூப்பிட்டு இருந்தோம். அந்த
இதழ் சில ஆண்டுகள் வந்தது. அது வருகிறபோது லிங்குசாமி என்ற ஒருவர் -
மருத்துவத்துறையில் இருக்கிற கம்பவுண்டர் - அறிமுகமானார்.
அவர் மார்க்சீய ஈடுபாடு கொண்டவர். அவர் குறிஞ்சியைப்
படித்து விட்டு நீங்கள் நம்புகிற நா.பா.வும்,
அகிலனும் நல்ல இலக்கியவாதிகள் இல்லை. இன்னும் எதார்த்தமான
வாழ்க்கையை பிரதிபலிக்கும் நல்ல படைப்புகளை நீங்கள் படிக்க வேண்டும், அப்போதுதான் நீங்கள் இந்த நிலையில் இருந்து வேறு நிலைக்கு செல்ல முடியும்
என்பதை சொன்னார். எங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அந்த பகுதியில்
இருந்த கே.பொன்னுசாமி என்ற - பனியன் கம்பெனியில் வேலை - தோழர்... அவர் தமிழ்நாடு
கலை இலக்கிய பெருமன்றத்தின் முக்கிய நிர்வாகி. கட்சியில் ஈடுபாடு கொண்டவராகவும்
இருந்தார். அவர் மார்க்சீய இலக்கியங்களை
அறிமுகப்படுத்தினார். அடுத்து குறிஞ்சி கையெழுத்து இதழின் போக்கை மாற்றி அமைத்தார்.
அதன் பின்தான் சாதாரண வெகுஜன படைப்புகளுக்கும், தீவிர இலக்கிய தரம்வாய்ந்த
படைப்புக்கும் இருக்கும் ஒரு இடைவெளி எங்களுக்கு தெரிந்தது. நல்ல படைப்புகள்,
சமூகம் சார்ந்தும், மக்களுடைய பிரச்சினைகளை
வெளிக்கொண்டு வரும் கலை நுணுக்கத்திலும் இருக்க வேண்டும் என்பது அப்போதுதான்
விளங்கியது. இது ஒருபுறம். பின்னால் நான் கோவை பூசாகோ கலைக்கல்லூரியில்
எம்.எஸ்.சி. கணிதம் படிப்பதற்காக சேர்ந்தபோது அங்கு தமிழ் துறையில் புதுவெள்ளம்
என்ற பத்திரிக்கையை நடத்தி கொண்டிருந்தார்கள். அந்தப் பத்திரிகையில் மாணவர்களும்,
பேராசிரியர்களும் ஆசிரியர் குழுவில் குழுவில் இருந்தார்கள். அவர்கள்
கவிதைகள், கட்டுரைகள் எழுது என்று சொன்னார்கள். அப்படித்தான்
அந்தப் பத்திரிகையில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதினேன்.
திருப்பூரில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த நண்பர்கள் யுக விழிப்பு என்ற ஒரு
பத்திரிகையை ஆரம்பித்தார்கள். இலக்கிய இதழ். சி.பி.எம். சார்ந்த தோழர்கள்
நடத்தினார்கள். அப்போது பொதுவாகவே செம்மலர் என்ற இடதுசாரி இதழ் மட்டும் தான்,
அவர்களுடைய அரங்கில் இருந்து, வந்து
கொண்டிருந்தது.
அதே சி.பி.எம். அரங்கில் இருந்து இன்னொரு பத்திரிகை
என்பது பெரிய எதிர்பார்ப்பை கொடுத்தது. அந்த இதழில், நான் முதலில் ஒரு சிறுகதை
எழுதினேன். வேலியை மீறும் பயிர்கள் என்று எமர்ஜென்சி காலகட்டத்தில், அவசரநிலை காலகட்டத்தில் நடந்த
காவல்துறையினர் அத்துமீறல் பற்றிய ஒரு கதை. அது, ஒரு
கால்பந்து வீரர், காவல்துறையின் அத்துமீறலால்
பாதிக்கப்படுகிறார். அவர்கள் தலைப்பு, பழைய தலைப்பாக
இருக்கிறது என்று சொல்லி சுதந்திர வீதிகள் என்ற தலைப்பு வைத்தார்கள். நடராஜன், சி.ஆர்.ரவீந்திரன், பாவெல் போன்ற நண்பர்கள் அதில் ஆசிரியர் குழுவில் இருந்தார்கள். அந்த
பத்திரிகை இரண்டு ஆண்டுகள் வந்து நின்று போனது. அந்த பத்திரிக்கையில் வந்த
சுதந்திர வீதிகள் என்ற கதையை தான் நான் பெரும்பாலும் என்னுடைய முதல் கதையாக
சொல்வது வழக்கம். அதற்கு முன்னால் நான் குறிஞ்சி கையெழுத்து பத்திரிக்கையில்
எழுதிய சில கதைகளும், புதுவெள்ளம் மாணவர்கள் இதழில் எழுதிய
சில கதைகளும் இருந்தாலும், என்னுடைய இலக்கிய முயற்சியாக நான்
யுக விழிப்பு பத்திரிகையில் வெளிவந்த சுதந்திர வீதிகள் என்ற கதையை தான்
முதன்மையானதாகப் பதிவு செய்து இருக்கிறேன். அதற்குப் பின்னால் அந்த பொதுவுடமைத்
தோழர்கள் தந்த ஊக்கத்தினால் தாமரை, தீபம் போன்ற இதழ்கள்
மற்றும் இடதுசாரி இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். தீபம், கணையாழி
போன்ற இலக்கியப் பத்திரிகைகளில் தான் நிறைய எழுதினேன். அப்போது அலிபாபா என்ற ஒரு
ஜனரஞ்சக பத்திரிகை வந்தது. அந்த பத்திரிகையில் கவிதைகள் நிறைய வரும். அதில் நிறைய
கவிதைகள் எழுதி இருக்கிறேன். அதுபோல மகாநதி போன்ற இடதுசாரி பத்திரிக்கையில் எழுதினேன்.
வேறு பத்திரிக்கைகளுக்கும் எழுதியிருக்கிறேன்.
படைப்பாக்கத்தில் கவிதைக்கும், கதைக்கும்,
நாவலுக்குமான தனியாக பிரித்தறிந்து பார்க்கக்கூடிய வேறுபாடு என்ன? கவிஞனின் மனம் பிரத்யேகமான முறையில் செயல்படுகிறதா? ஒரு
கதையையோ, நாவலையோ விமர்சிக்க அணுகுவதை போல ஒரு கவிதையை
அணுகுவது கடினமாக இருப்பது எதனால்? அங்கு தர்க்கங்களுக்கான
சாத்தியம் குறைகிறதா?
படைப்பு சார்ந்த ஒரு வடிவத்தை எப்படி ஆயினும் ஒரு
படைப்பாளி தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி செய்யப்படுகின்ற தேர்வு மூலமாக
தான் அவன் தன்னை வடித்துக் கொள்கிறான். படைப்பை வடிவமைத்துக் கொள்கிறான். ஆனால்
கவிதை இறுக்கமான வடிவமாக இருக்கிறது. அதில் பூடகத்தன்மை அல்லது அனுபவம் வேறு
மாதிரி இருக்கிறது என்பது முக்கியமானது. உரைநடையில் அதை விரித்துக் கொண்டு
போகலாம். ஆனால் கவிதையில் அந்த இறுக்கத்தை சார்ந்து உருவாக்க வேண்டி, பல விசயங்கள் இருக்கும் என்பதால்,
இந்த சிக்கல்கள் தோன்றுகின்றன,
படைப்பாற்றல் / கற்பனை வளம் / மொழியில் புலமை
மற்றும் மொழியை கையாளும் விதம் / வேறுபட்ட,
பரந்துபட்ட வாழ்வனுபவங்கள் / இடைவிடாத இலக்கிய அறிமுகம் மற்றும்
இலக்கிய வாசிப்பு / நடுநிலை மற்றும் தர்க்க அறிவு / சொந்த பண்பாட்டு
கலாச்சாரத்தில் வேரூன்றி இருத்தல் / சுயதேடல், கேள்விகள்,
உரையாடல், அவதானிக்கும் திறன், தேர்ந்தெடுக்கும் திறன், ஞாபகத்திறன் / ஆன்மீக அறிவு
/ மன ஆரோக்கியம் இவற்றில் அதன் வேறுபட்ட முக்கியத்துவம் அடிப்படையில்
வரிசைப்படுத்தச்சொன்னால் எப்படி வரிசைப்படுத்துவீர்கள்? நீக்க
வேண்டியதும், சேர்க்க வேண்டியது என்ன?
நீங்கள் குறிப்பிடும் எல்லாம் கலந்ததுதான்
படைப்பாற்றல் என்பது. பலர் படைப்பாற்றல் என்பது வேறு. கடவுளின் அருள் என்று
நினைக்கிறார்கள். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கூர்ந்து பார்ப்பதும், அவருக்குள்ள ஒரு சமூக அக்கறையும்,
படைப்புக்கு பலமாக இருக்கும் தளங்களைத் தருகின்றன என்று நான்
நினைக்கிறேன். எவரெல்லாம் படைப்பாளியோ அவருக்கெல்லாம் இந்த கூறுகள் இருக்கின்றன.
அதுதான் வாழ்க்கை என்பது பற்றியும், படைப்பின் தன்மை
பற்றியும் அளவுகோலை அமைகிறது. வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை விரித்துக் கொண்டு
போகிறது
படைப்புகள் என்று வந்து விட்டால் சிலவற்றை
நிராகரிக்க வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலவற்றை கொண்டாட வேண்டும்.
சிலவற்றை குப்பை என ஒதுக்க வேண்டும். சிலவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். சிலவற்றை
அவற்றின் இடத்தை - ஒன்றன் பின் ஒன்றாக - உறுதிசெய்ய வேண்டும். எதற்கு முதல்
முக்கியத்துவம் கொடுப்பது, எதற்கு
இரண்டாம் முக்கியத்துவம் கொடுப்பது என்பது போல. இதை அந்தரங்கமாக நீங்கள் எப்படி
செய்கிறீர்கள்? அல்லது இது ஒரு சிக்கலுக்குரியதும், பிரச்சனைக்குரியதும் என விட்டுவிடலாமா?
படைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. எது
இரண்டாமிடம் என்பதெல்லாம், அதிகாரம்
சார்ந்த விஷயங்கள் ஒரு ஜனநாயக தன்மையோடு படைப்பாளிகளை, படைப்புகளை
அணுகுவது என்று வருகிறபோது இந்த இரண்டாம், முதல்நிலை
இதெல்லாம் இருக்காது. சமூகத்தோடு மனிதர்களோடு இயைந்த வாழ்வை உருவாக்கிக்
கொள்வதற்கான ஒரு உபாயமாக எனக்கும் தெரிந்து விடும். அது இல்லாமல் வேறு என்ற அதற்கு
முக்கியத்துவம் கொடுப்பது என்பது ஒரு அதிகாரத்தில் உடைய ஒரு கையில் வன்முறை உடைய
செயல்பாடாக இருக்கிறது. ஜனநாயகத்தன்மையை மதிப்பது, பகிர்ந்துகொள்வது, இதைத் தாண்டி படைப்பிற்கு கவுரவம் தருவது என வேண்டி இருக்கிறது.
மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வாசகப்பரப்பு
மிகக்குறைவாக இருக்க காரணம் என்ன? படைப்பிலக்கியங்கள் மூலை, முடுக்கெல்லாம்
சென்றடைவதற்கான ஊடகவழி சாத்தியங்கள் குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணமா? அல்லது வாழ்வின் முன் படைப்பிலக்கியம் அதன் முக்கியத்துவத்தில் சிறுத்து
விடுகிறதா? அல்லது பெரும்பான்மையான மனிதர்கள் இலக்கியத்தை
நிராகரிக்க நியாயமான காரணங்கள் இருக்கிறதா? அது ஒரு சொகுசு,
மேல்தட்டு, அசாதாரணம் என்பது போல.
எல்லா நாடுகளிலும் கவனம் கொள்கிற அளவிற்கு, படைப்பாளிகள் கவனம் பெறுவதில்லை.
எல்லா சமூகங்களிலும் அவர்கள் மைனாரிட்டியாக சிறுபான்மையாகவே இருக்கிறார்கள்.
சிறுபான்மையினர் என்பது கேவலம் அல்ல. ஒரு தனி முத்திரை, தனித்தடம்,
அவன் எந்த தடத்தில் செல்வது என்பதெல்லாம் அவனது இயல்பு. அதில்
செல்பவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் இலக்கியத்தை
வாசிக்க நேர்வதில்லை. காரணம் குடும்ப வாழ்க்கை நிர்ப்பந்தங்கள், நேரமின்மை, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் சூழல்கள்
இல்லாமல் போவது. அதுவும் இந்தியச் சுழலில் அது கொடுமை. அப்படியான ஆசுவாசத்திற்கான
சூழலில் இலக்கியமும் இருக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை என்பதுதான் முக்கியம்,
ஒரு இலக்கிய படைப்பில் புரியாமை, பூடகம், மர்மம்,
சிக்கலான சேர்க்கை போன்றவை தவிர்க்க முடியாதவையா? அது ஒருவேளை வாழ்வின் பூடகத்திலிருந்து வருவதா? அல்லது
எதிர்மறையான கூறுகள் அவற்றில் இடம்பெறுகிறதா?
ஒரு இலக்கியப் படைப்பில் நீங்கள் சொன்ன எல்லா
விஷயங்களும் சேர்ந்துதான் இருக்கும். வாழ்க்கை பல விஷயங்கள் சேர்ந்த கூடாரமாகும்.
அதே சமயத்தில் பகுத்தறிவிற்கு எதிராகவும் ஏதும் இல்லை. எதிர்மறையான கூறுகளும்
இடம்பெறுகின்றன. ஆனால் நிச்சயம் அவற்றை புரிந்துகொண்டு செயலாற்றுவதில்
பகுத்தறிவிற்கும், தியானத்திற்கும்
ஒரு முக்கிய பங்கு இருக்கும்.
எழுத்தாளர்களில் பலரையும், வரலாறையும் பார்க்கும்பொழுது
இயல்பான, வழக்கமான வாழ்வின் துயரச்சாத்தியங்களிலிருந்து அவன்
ஒரு எழுத்தாளனாக இருப்பதாலையே அதைவிட அதிகமான, குறிப்பான
துயர்மிகுந்த வாழ்வை அடைகிறானா? அது அவனது சொந்த தனிப்பட்ட
இயல்பூக்கங்களிலிருந்து முளைத்தெழுகிறதா? அல்லது சமூகம் அவனை
தன்னிலிருந்து வேறுபட்ட - பிரச்சனைக்குரிய அல்லது ஒவ்வாமை போல - ஒரு மனிதனாக
காண்கிறதா? அவனிடம் உள்ள பிரச்சனை என்ன? அல்லது சமூகத்திற்கு அவனிடம் உள்ள பிரச்சனை என்ன?
எழுத்தாளன் ஒருவன் துயரமாக இருக்கிறான். அவர்
வாழ்கிற சமூகம் துயரமாக இருக்கிறது. அதை அவன் பிரதிபலிக்கிறான். தானும் சமூகத்தில்
ஒருவன் என்ற வகையில், அது
அவனை பாதிக்கும் வகையில், அவன் துயர் மிகுந்த வாழ்க்கையை
அடைகிறான். பிரச்சனைகளை அவன் உதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. இயல்பாக எடுத்துக்
கொள்கிறான். அவனிடம் உள்ள இயல்பு, அவனிடம் உள்ள பிரச்சனை
என்பது, சமூகம் அவனை புரிந்துகொள்ளாததுதான். வாழ்க்கை,
எல்லோருக்கும் வாழ அனுமதி கொடுக்கிறது. அதை அவன் பிறருடன்
தொடர்புகொள்ள வரும் போது இதெல்லாம் சாத்தியம் ஆகிறது. இல்லாவிட்டால் தனிமை தான்
மிஞ்சும்.
ஒரு படைப்பாளிக்கு வாழ்வு குறித்து எத்தனை தேடல், எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும்
இருக்கலாம். அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தூரம்
வேண்டுமானாலும் போகலாம். அவன் பதில்களை அல்லது தீர்வுகளை அல்லது முடிவுகளையும் கூட
கண்டடையலாம். ஆனால் ஒருபோதும் அவன் அறுதியிறுதியான முடிவுகளுக்கு - அதன் பிறகு
அதில் வேறு எதுவும் இல்லை என்பது போல - வரமுடியாதவனாக இருக்க வேண்டும். ஒரு
படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா?
ஒரு படைப்பாளிக்கு அப்படி ஒரு இறுதியான முடிவு எதுவும்
இருக்க முடியாது அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று வருகிறவன் தேங்கிப் போய்
விடுகிறான். தொடர்ந்த தேடல் மனிதர்கள் குறித்த தத்துவங்கள், அதை சார்ந்து மனித வாழ்க்கையின்
அனுபவம் குறித்து இருக்க வேண்டும்.
வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான் என்பது தான் அவனை
ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாக ஆக்குகிறது. அது மனிதர்களின் பொதுப்படையான
பார்வையிலிருந்து உருவாகி வருவதல்ல. அவனுடைய சொந்த அணுகுமுறையிலிருந்து, சொந்த பார்வையிலிருந்து உருவாகி
வருவது. ஒரு படைப்பாக்கத்தில் இது என்ன மாதிரியான பாத்திரத்தை வகிக்கிறது?
வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான் என்பதற்கும், ஒரு படைப்பாளி எப்படி பார்க்கிறான்
இதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. படைப்பாளி இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக
பார்க்கிறான். அவனே இந்த சாதிய கட்டமைப்பில் இருக்கிறான். அவன் ஏன் இந்த அதிகாரம்
தனது எனக் கொண்டிருக்கிறான், அவன் ஏன் இந்த போலித்தனத்தை
கொண்டிருக்கிறான் என்று கண்டடைவது ஒரு எழுத்தாளனுடைய வேலையாக இருக்கிறது.
இதெல்லாம் அவர்களுடைய பார்வையில் இருந்து வருவது. இந்த அனுபவம்தான் ஒரு
படைப்பாளியை வெவ்வேறு வகையான பாத்திரங்களை கொண்டுவர செல்கிறது. அந்த
கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அவனுடைய வாழ்க்கையோடு இயைந்ததாக இருக்கிறார்கள்,
மனித உறவுகளுக்கென்று நடைமுறை வாழ்வு சார்ந்த, எதார்த்த வாழ்வு சார்ந்த ஒரு வேல்யூ
இருக்கிறது. இவை மறைத்து நிற்கும் எத்தனை பொய்மைகளுக்கிடையிலும் உண்மையை காணும்
திறன் ஒரு படைப்பாளிக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கட்டாயமான
தேவையாக இருக்க வேண்டும். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தால் அது அவன் அறிந்து
நிகழ்வதை விட சிறப்பானது. இதை எப்படிப்பட்ட கூற்றாக பார்க்கிறீர்கள்? இது ஒரு படைப்பாளிக்கு தவிர்க்க முடியாத முக்கியமானதொரு தேவையென சொல்ல
முடியுமா? இதனால் அவனுக்கு அகமும், புறமும்
போராட்டங்கள் ஏற்படலாம்.
மனித உறவுகளுக்கு என்று இருக்கிற நடைமுறை வாழ்வு
சார்ந்த அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு உண்மையை காண படைப்பாளி முயல்கிறான்.
அது அவனை அறியாமல் கூட உள்மனதில் புகுந்துவிடும். அகமும், புறமும் என நடக்கிற போராட்டங்களும்,
நிகழ்வுகளும் அவனை இந்த வகையில் வைத்து பார்த்துக் கொண்டே
இருக்கும். இது சார்ந்த ஒரு ஆய்வை, ஒரு விமர்சனத்தை அவன்
மனமும் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்கும். அதுதான் அவருடைய படைப்பின் மூலமாக
இருக்கிறது.
ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது என்ன? அது ஒரு ஆன்மீக தேடலாக இருக்க
முடியாது. தத்துவத்தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே திட்டவட்டமான
அணுகுமுறையோடு, திட்டவட்டமான வழிமுறையோடு இருப்பவை. ஒரு
இலக்கிய படைப்பாளி இவ்விரண்டிலிருந்தும் எப்படி ஒரு வேறுபட்ட தேடலை
கொண்டிருக்கிறான்? ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது கட்டாயமானதா?
ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது அவன் சார்ந்த
மனிதர்களை சார்ந்து இருக்கிறது. கூர்ந்து பார்ப்பதும், அதை ஆய்வு செய்வதும் கூட. இதை ஒரு
ஆன்மீகரீதியாக, ஒரு மதம் சார்ந்த என எடுத்துக் கொண்டால்
அதற்கு ஒரு எல்லை வரையறை என்பது இருக்கிறது. இதை தாண்டி போய் யோசிக்கிறவன் ஒரு
படைப்பின் பல்வேறு சாத்தியங்களை கொண்டு வர முடியும். இல்லாவிட்டால் எங்கோ
ஓரிடத்தில் நின்று விடலாம் அல்லது மேலும் தேடிக்கொள்ளலாம்.
ஒரு படைப்பாளியை லௌகீகத்தளத்தில் வேரூன்றியிருந்து, படைப்பாக்கத்தின் போது இடைவிடாமல்
ஆன்மீகத்தளத்திற்கு எத்தனிப்பவன் என்று சொல்லலாமா? லௌகீக
தளத்திற்கும், ஆன்மீக தளத்திற்கும் இடையே போராடுபவனை போல.
ஆன்மீகத்தளம் என்பது ஒரு படைப்பாளிக்கு லௌகீக உன்னதமாகவும் இருக்கலாம்...
ஒரு படைப்பாளியை, அவனுடைய மெல்லிய உணர்வுகளுடன் கூடிய
ஒரு தளத்தில் அணுக வேண்டியிருக்கிறது. படைப்பாக்கத்தின் போது அவனும் பேசுகிறான்.
ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த ஆன்மீகமாக இல்லாமல் இன்னொரு ஆன்மீக தளத்தில் அவன்
பயணித்துக் கொண்டிருக்கிறான். அது ஒரு அன்பு சார்ந்து, மதம்
சாராததாக அது இருக்கும். அவனுக்கு கிடைக்கப்பெறும் அனுபவங்கள் அலாதியானவை.
ஏன் மனிதனுக்கு பிறரது எண்ணங்களின் வழியாக -
மொழியின் வழியாக - பின்தொடர்ந்து சென்று ஒரு கருத்தையோ, ஒரு உண்மையையோ புரிந்துகொள்வது
கடினமாக இருக்கிறது? பிறரது எழுத்தை கண்டு பிரமிப்பனின்,
எழுத்தை கண்டு அதே பிறர் கண்டு பிரமிப்பது போல. மனப்பாடம் செய்து
தக்கவைப்பது கடினம், புரிந்து படித்தால் தக்கவைப்பது எளிது
என்பதை போல. அங்கு என்ன செயல்படுகிறது? படைப்பாக்க
சுதந்திரம் என்பது என்ன?
மனிதன், பிறருடைய உண்மைகளை, வாழ்க்கையை புரிந்து கொண்டு,
அதிலிருந்து ஒரு உண்மையை தெரிவித்துக் கொள்கிறான். அது அவனுக்கு
கடினமாக இருக்கிறது என்றால், அவன் மேம்போக்காக இருக்கிறார்
என்று அர்த்தம். அவன் தனக்கு வந்ததை பிரித்தறிய முடியாமல் இருக்கிறார் என்று
அர்த்தம். ஆகவே அதை தக்க வைத்துக் கொள்வது என்பது முக்கியமாக இருக்கிறது. இதில்
படைப்பு சுதந்திரம் என்பது அவன் எழுதி செல்லும் வழியில் தான் இருக்கிறது. எழுதிச்செல்லும்
வடிவத்தில் தான் இருக்கிறது. உண்மையை கண்டு கொள்வதில் அவனுடைய படைப்பாக்க
சுதந்திரம் வெற்றி பெறுகிறது.
ஒரு இலக்கிய படைப்பை, அப்படைப்பிற்கு வெளியேயிருந்து
அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய படைப்பின் மதிப்புவாய்ந்த, பொருட்படுத்தத்தக்க
கூறு என்ன? ஏதோ ஒன்றை காட்டி இலக்கியத்தின் பக்கமாக ஒருவனை
திருப்ப முடியுமானால் அது என்னவாக இருக்க முடியும்? திரும்பவில்லையெனில்
அதை ஒரு இழப்பு என்று எப்படி கூறுவது? அதை வெறும் ஆர்வத்தின்
கைகளில் ஒப்படைத்து விடலாமா?
ஒரு இலக்கியப் படைப்பை வெளியில் இருந்து அணுகும் ஒருவனுக்கு, அது வாழ்க்கையோடு நெருக்கமாக
இருந்தால் மதிப்பு வாய்ந்ததாக பொருட்படுத்தத்தக்கதாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு
ஏதோ ஒரு வகையில் அது நேரக்கூடும் என்று இருந்தால், அதை
படைப்பாளி வற்புறுத்தி சொல்கிறான். இல்லாவிட்டால் வாசகன் அதை
பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்தாத போது அவருக்கு இழப்பு என்று சொல்லலாம்.
வெறும் ஆர்வத்தின் கைகளில் சிக்கிக் கொள்கிற ஒருவன் அதிலிருந்து மீண்டு விடக்
கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வாசிப்பு என்பது, எழுத்து
என்பது அவனின் செயல்களின் அன்றாட செயல்களில் ஒன்றாக்க் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு படைப்பாளி தன் சொந்த வாழ்வின் நிஜமான
வாழ்வனுபவங்களிலிருந்து தன்னுடைய படைப்பை உருவாக்கும் போதே, அப்படைப்பு, படைப்புக்குரிய
அழுத்தமான கூறுகளோடு வெளிப்பட முடியும். அவனுக்கு வேறுவழியில்லை. அவன் பலவற்றையும்
கண்டிருக்கலாம். புரிந்திருக்கலாம். அது ஒருவரை அவரது அனுமதியில்லாமல்
புகைப்படமெடுப்பது போலாகுமா? - ஒரு படைப்பு அச்சு அசலாக
நிஜம், செய்தித்தாளில் வெளிப்படுவதை போல வெளிப்படுவதில்லை
என்ற போதிலும் - அல்லது ஒரு வாசகனோ, ஒரு பார்வையாளனோ ஒரு
படைப்பின் மேன்மையான கூறுகளை கருத்தில் கொள்வதற்கு முன் அது ஒன்றுமேயில்லையா?
ஒரு படைப்பாளி சொந்த வாழ்க்கை அனுபவங்களை எழுத
வேண்டும் என்பது ஒரு நல்ல விஷயம் தான். அந்த வகை படைப்புகள் தீவிரமான அக்கறை
கொண்டு இருக்கும் என்பது கூட உண்மைதான். உங்கள் சொந்த அனுபவங்கள் திரும்பத்
திரும்ப படைப்பில் கொண்டு வரலாம். குறுகிய வட்டம் அது. அப்போது அவன் பிறரின்
அனுபவங்களை தனக்காக வரித்துக் கொண்டு எழுதுவது என்பதும் முக்கியம், அது ஒரு படைப்பாளிக்கு சவாலும் கூட.
ஒரு வாசகனோ, பார்வையாளனோ,
ஒரு படைப்பின் மேன்மையான கூறுகளை முன்பே கண்டிருப்பான். படைப்பு அதை,
நிச்சயம் செய்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
படைப்பாளிகள் தங்களுக்குள் அறிந்தோ, அறியாமலோ பல்வேறு காரணங்களால்
பிளவுபட்டு இருக்கிறார்களா? ஒன்றுபட்டு இருக்க வேண்டும்
என்பதல்ல. ஒருவரையொருவர் நெருங்க முடியாதவாறு அல்லது ஒரு பகுதி இன்னொரு பகுதியை
நெருங்க முடியாதவாறு இடையில் குறுக்கிட்டு நிறுத்தும் கூறுகள் ஏதேனும் இருக்கிறதா?
படைப்பாளிகள் முரண் கொண்டு நிற்கிறார்கள். இறுக்கமான
மனித மனத்தை கொண்டவர்கள் அவர்கள். காரணம் அரசியல், இனம், மனம்,
பொறாமை, வெவ்வேறு இயக்கம் போன்ற வெவ்வேறு
பிரிவுகளில் அவர்கள் இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள். ஆனால் மனித மனத்தை
எழுதுவது, நுணுக்கமாக மனித மனதை புரிந்து கொள்வது என்ற
அளவில் அவர்கள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். இவர்களின் இடையில் இருக்கும்
குறுக்கீடுகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன,
கலையின் அசாத்தியமான சாத்தியங்களை கொண்டு
பார்வையாளனிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் சினிமா தான் அதிகபட்ச சாத்தியங்களை -
என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் - கொண்டிருப்பது போல
தோன்றுகிறது. நீங்கள் பிற கலைகளோடு இலக்கியத்தை எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? ஓவியம் - சிற்பம், சினிமா - நாடகம், பாரம்பரிய இசை - நடனம் இவற்றை அவை
செயல்படும் முறையில் இலக்கியத்தோடு ஒப்பிட்டு கூற முடியுமா? அல்லது
இந்த ஒப்பிடல் உபயோகமற்றதா? பொருத்தமற்றதா?
பிற கலைகளோடு வாசிப்பையும் எழுத்தையும் ஒப்பிட
வேண்டியதில்லை அதனதன் அளவில் அவை வெவ்வேறு பரிமாணங்களை கொண்டிருக்கின்றன. இந்த
ஒப்பிடல் தேவையற்றது, பொருத்தமற்றது
என்று நான் நினைக்கிறேன்.
ஒரு தீவிர இலக்கிய படைப்பில் பாலியலின் பாத்திரம்
எப்படிப்பட்டதாக இருக்கலாம்? எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாமா? ஒரு
தீவிர இலக்கிய படைப்பில் பாலியலை கையாளும் போது நியதிகள் ஏதேனும் இருக்கிறதா?
அது மஞ்சள் எழுத்தல்ல என்று மிகத்தெளிவாக நமக்கு இருக்க
வேண்டுமானால் அங்கு என்ன இருக்க வேண்டும்?
தாராளமாக எழுதலாம். வணிக நோக்கங்களுக்காக
கொச்சைப்படுத்துவது, வெகு
வெளிப்படையாக எழுதுவது தவிர்க்கலாம். பூடகமாகச் சொல்லலாம்.
பெரும்பாலும் தீவிர படைப்பு என்பது வாழ்வின்
தீவிரமானதொரு பிரச்சனையை, தீவிரமானதொரு
நடையில் சொல்வதாக இருக்கிறது. ஒரு படைப்பு வாழ்வின் துயரத்தையோ, குரூரத்தையோ, ஒரு அசிங்கத்தையோ முன்வைக்கும் போது
அதற்கென்று நியதிகள் இருக்கிறதா? ஏனெனில் ஒரு படைப்பை
வாசிக்கும்பொழுது அது நமக்கு என்ன ஒரு அனுபவத்தை தருகிறது என்பது முக்கியமானது
இல்லையா? அது நம் மேலான உணர்வுகளை தூண்டுகிறதா? எதிர்மறையான உணர்வுகளை தூண்டுகிறதா? அல்லது நம்மிடம்
உள்ள சொல்லொணா துயரத்தை அது கிண்டி மேலும் ஒரு துயரத்தை அளிக்கிறதா? ஒரு படைப்பு என்னை தற்கொலை வரை கொண்டு செல்லக்கூடுமானால் - அப்படிப்பட்ட
படைப்புகள் இருக்கிறதா? - அப்படைப்பை சிறந்த படைப்பாக நான்
கருத முடியுமா? இதுபோன்று.
துயரத்தையோ,
குரூரத்தையோ, ஒரு அசிங்கத்தையோ முன்வைக்கும்
போது அதற்கென்று உருவாகும் நியதிகள் எப்போதும் படைப்பை முன்னகர்த்திச் செல்லும்.
படைப்புகளையும், படைப்பாளியையும் நாம் மிகையாக
மதிப்பிடுகிறோமா? அதாவது தவறாக மதிப்பிடுகிறோமா? அதாவது அதன் முக்கியத்துவம், மதிப்புவாய்ந்த தன்மை
போன்றவை இருக்கிறது. ஆனால் நாம் அதற்கும் மேலான ஒரு இடத்தில் நவீன இலக்கியத்தை -
மிகச்சரியாக புரிந்துகொள்ளாததுனாலையே - வைத்திருக்கிறோமா? இதன்
மூலமாக புகைமூட்டமான தொந்தரவுகளையும், நெருக்கடிகளையும்
படைப்பாளிகளுக்கு உருவாக்குகிறோமா? நடைமுறை வாழ்வில்
படைப்பாளிகளை வைத்து பார்க்கும்பொழுது தான் எனக்கு இந்த கேள்வி தோன்றுகிறது.
சிலரை சில காரணஙகளுக்காக, அரசியல் காரணங்களுக்காக, குழு மனப்பான்மைக்காக மிகையாக மதிப்பிடுவதோ, தொடர்ந்து
பேசி வருவதோ வணிகரீதியில் பயன் தரலாம். அது சாதாரண வாசகனிடம் மிகுந்த மதிப்பை
ஏற்படுத்தலாம். நம் சமூகம் எழுத்தாளனையெல்லாம் அப்படி மிகையாக மதிப்பிடுவதில்லை.
கவனிப்பதில்லை.
நான் இந்த எழுத்தில் நிகழும் சிக்கல் நிறைந்த
முடிவற்ற சேர்க்கைகளை - ஒரு மரத்தின் உத்தேசிக்க முடியாத திசையில் உருவாகும்
ஆயிரக்கணக்கான கிளைகள் போல அல்லது ஒரு சிலந்தி வலையை போல - ஒரு ஆர்வமூட்டும் கூறாக
பார்க்கிறேன். இதற்கு எழுத்தாளர்களில் யாரையேனும் உதாரணமாக சொல்லி இதைப்பற்றி பேச
முடியுமா?
சிக்கல்கள் நிறைந்த முடிவு என்பது அவரவர் மனநிலை
உருவாக்கும் குழப்பமே. அதிலும் முயன்று பார்க்கலாம். வேடிக்கை நிலை எதிலும்
உருவாகலாம்.
இதுதான் பிரச்சனை, இதுதான் வாழ்க்கை, இதுதான் தீர்வு, சுபம் என எழுத்து ஒரு
முற்றுப்புள்ளிக்கு வருவது ஏன் மிகச்சிறந்த எழுத்தாக கருதப்படுவதில்லை?
அதற்கு பன்முகங்கள் இருக்கலாம். முடிவாய் ஒன்றைச்
சொல்லும் போது அது தரும் தீவிரமான வன்முறை,
அதிகாரம் இயல்பாய் அதை நிராகரிக்க, ஒதுக்கச்
செய்கிறது.
சுதந்திரத்தை வரையறுப்பதாக இருந்தால் ஒரு
எழுத்தாளனுக்கு தேவையான சுதந்திரத்தை எப்படி வரையறுப்பீர்கள்? எல்லையற்ற சுதந்திரத்தை நம்மால்
கற்பனை செய்யவோ, அதை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கவோ முடியாது.
பிறரை நோகடிக்காமல் இருப்பது. நோகடித்தாலும், வெளிப்படையாக இல்லாமல் இருப்பது.
ஒருவர் தனக்காக எழுதுகிறார். அதை தன்னிடமே வைத்துக்கொள்கிறார்.
அல்லது வேண்டுமானால் பிறர் வாசித்துக்கொள்ளட்டும் என்று அனுமதிக்கிறார். இதை
நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது ஒரு எழுத்தில் பிறர் என்ற பாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
பிறருக்காக எழுதுவது சிறந்தது. எழுத்தின் வெளிப்பாடே
தன் குறிக்கோளை எட்டுவது. இதைப்பிரசுரிக்க யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம்
தன்னிடம் வைத்துக்கொள்ளச் செய்யும். அதற்கென்று வாசகர்களும் இருப்பார்கள்.
படைப்புகளில் பொதுவாக பால்யகால அனுபவங்கள் தான்
தீவிரமான உத்வேகம் கொள்ளவைக்கும் எழுத்துக்களை உருவாக்க காரணமாகிறது என்பது
உண்மையா?
உள்மன பிரக்ஞையில் அது அதிகம் தங்கியிருப்பதால் தான்
என எண்ணுகிறேன்.
எழுதும் போது இது யாருக்காக எழுதப்படுகிறது என்ற
பிரக்ஞை உள்ளே வருவது அல்லது உள்ளே செயல்படுவது ஒரு படைப்பின் போக்கை, ஒரு படைப்பின் அர்த்தத்தை
திசைமாற்றி விடுமா?
நிச்சயமாக. பத்திரிக்கைகள் கேட்டு கதைகள்
எழுதும்போது இது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. ஆனால் அப்படி மனதில் கொள்ளாமல்
எழுதுவதுதான் நல்லது.
எழுத்து ஒரு வடிகாலா? அல்லது படைப்பாற்றல் என்ற தனியான
ஒன்றிலிருந்து அது பிறந்து வர வேண்டுமா? வடிகாலாக இருந்தால்
- வெறும் புலம்பல், வெறும் துயரக்காடு போன்று - அதில் அதை
வாசிக்கும் ஒரு வாசகனின் இடம் என்ன? அல்லது ஒரே சமயத்தில் அது இரண்டுமாக இருக்கிறதா?
இயல்பாகவே வாசிப்பின் தொடர்ச்சி எழுதத்தூண்டும்
பலரை. பயிற்சியும் பல சமயங்களில் உதவும். பல வெளிப்படுத்த முடியாத விசயங்கள்
வடிகாலாய் வருவதுண்டு. சொல்ல முடியாத மனச்சிக்கல்களை பிரசுரமாகாத கடிதங்களாய்
எழுதி வடிகால் கண்டிருக்கிறேன் நான், பல சமயஙக்ளில்.
இலக்கியம் என்ற பெயரில் எழுதுபவர்களையெல்லாம்
மொத்தமாக கணக்கிட்டு வைத்துப்பார்க்கும்பொழுது அவர்கள் பல்வேறு வகையாக பிரிந்து
கிடக்கிறார்கள். சாதாரண, மலினமான,
பொருட்படுத்த முடியாத எழுத்துக்களிலிருந்து அசாதாரண, உன்னதமான, நிராகரிக்கவே முடியாத எழுத்துவரை. வாழ்வு
குறித்த தேடல், கேள்விகள், பார்வை,
புரிதல் இவைதான் இந்த வேறுபாட்டை உருவாக்குகிறதா? எழுத்தில் வேறுபாடுகளை அடையாளம் கண்டு ஏன் சரியான திசையில் ஒருவரால் நகர
முடியாமல் போகிறது?
எல்லா மனமும் அடிப்படையில் பொழுதுபோக்கு திசையில்
தான் செல்கிறது பெரும்பாலும். எது சுலபமோ அதில் திளைக்கவே அது விரும்பும். பலரின்
மனம் இவ்வகை செயல்பாடுகளில் அக்கறை கொள்வதால் இதெல்லாம் நிகழ்கிறது. இலக்கியம், சமூகவியல் அக்கறை வேறு திசையைக்
காட்டும்.
எழுத வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலில் ஒரு
எழுத்தாளனுக்கு எப்படி வருகிறது? எல்லோருக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. சூழலும் ஒரே மாதிரியானதே.
படைப்பாற்றல் பல்வேறு வழிகளில் வெளிப்படும் சாத்தியங்களும் உள்ளன. எழுத்தின்
நுழைவாயில் எப்படிப்பட்டது? அது மிகவும் இயல்பாகவும்,
தற்செயலாகவும் நிகழ்கிறதா? எழுத்து
எல்லோரையும் வசீகரித்து உள்ளே இழுப்பதில்லை.
உள்மனத்தூண்டுதல் எப்படியோ ஆரம்பித்து வைத்து
விடுகிறது. ஒரு குறிப்பிட்ட விசயத்தை ஏன் எழுதுகிறோம் என்று தெரியாது. அதைவிட பல
முக்கிய விசயங்களை, பாதிப்புகளை
எழுத வேண்டியிருக்கும். ஆனால் அதையெல்லாம் விடுத்து வேறு ஒன்று எழுதுவோம்.
விசித்திர மனநிலை அப்போது செயல்படும்.
ஒரு படைப்பாளியோ அல்லது ஒரு வாசகனோ இணையத்திற்கு
சென்று ஒரு இலக்கிய படைப்பையோ, ஒரு இலக்கிய கட்டுரையையோ தொடர்ச்சியாக நுகர வேண்டுமானால் அவனிடம் ஒரு
கணினி இருக்க வேண்டும், இணையத்தொடர்பு இருக்க வேண்டும்,
தேவையானவற்றை எடுத்து வாசிக்க ஒரு பிரிண்டர் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் இல்லையென்றால் அவன் ப்ரவுசிங் சென்டருக்கு சென்று கட்டணம் செலுத்தி -
குறைந்த நேரம், அதிக கட்டணம் - அதை சாத்தியமாக்க வேண்டும்.
பொதுவாக தீவிர இலக்கிய வாசகர்கள் இணையத்தை எளிதில் அணுகி அதை
பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார சுதந்திரத்தோடு இருப்பவர்களா?
இணைய தளத்தில் படைப்புகளை படிப்பது ஆழமானதாக இல்லை.
பதில் நிதானமாகப் பதிவதில்லை. பிரவுசிங் - மேய்வதுதான் என்ற நிலையில் அது
கடத்துகிற ஒரு வேலைதான். புத்தக வாசிப்பை போல் உவப்பாக இல்லை. தொடர்ந்து கணினி
சார்ந்த வேலைகளால் சோர்வு, கண்
எரிச்சல் இவை நெடுநேரம் படிக்க இயலாததாக்குகிறது.
ஒரு படைப்பை இணையத்திலிருந்து பிரிண்டவுட்டாக
எடுத்து வாசிப்பதற்கும், ஒரு
பத்திரிக்கையில் அதை வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக கருதுகிறேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதுதான். நான் மேலே சொன்ன மாதிரிதான். பிரிண்ட்அவுட்
எடுத்துப்படிப்பதல்ல. மேய்வதுதான்.
இணையத்தில் தீவிர படைப்பாளிகளுக்கான
சிறுபத்திரிக்கைகள், தளங்கள்
எவ்வாறு செயல்படுகின்றன? அவை முழுமையாக படைப்பாளிகளால் - தளங்களோடு
தொடர்ந்து தொடர்பில் இருப்பது, படைப்புகளை வாசிப்பது,
படைப்புகளை அனுப்புவது - பயன்படுத்தப்படுகின்றனவா? அல்லது அவை தனிப்பட்ட நபர்களின் ஆத்மதிருப்திக்காக நடத்தப்படுகின்றனவா?
பல சமயங்களில் தொடர்புக்கு பயன்படுகிறது.
விளம்பரங்களுக்கு கூட. ஆனால் தேவையான சாதாரணத் தகவல்கள் கேட்கும்போது கூட
ஒத்துழைப்பு கிடைக்காது. அப்படித்தான் படைப்புகள் கேட்டாலும்.
வாழ்க்கைக்கு எப்பொழுதுமே ஒரு பொருளாதார பாதுகாப்பு
தேவையாக இருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு வேலைக்கு செல்லுதல், சம்பாதித்தல் என்பது அவனுக்கு தான்
நேசிக்கும் எழுத்தை நோக்கி போக விடாமல் ஒரு வகையான அக்கப்போரான இன்னல்களை அல்லது
சொல்லொணா இன்னல்களை பொதுவாக கொண்டிருப்பதாக இருப்பது எதனால்? தங்களுடைய அனுபவம் எப்படிப்பட்டது?
வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு பொருளாதார பாதுகாப்பு
தேவை தான். எழுத்தாளனுக்கு வேலைக்குச் செல்வது, சம்பாதிப்பது போன்றவை முக்கியம்
தான். அதோடு முழுக்க முழுக்க எழுத்து சார்ந்து இயங்க வேண்டும் என்ற ஆசையும் கூடவே
இருந்திருக்கிறது. ஆனால் நடைமுறையில் முழுநேர எழுத்தாளனாக தொடர்ந்து எழுதுவது,
படிப்பது என்பது சிரமமாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
அந்த விட ஏதேனும் ஒன்றில் பணியாற்றிக் கொண்டே நமக்கு கிடைக்கும் நேரங்களில்
எழுதுவது, படிப்பது என்பது இன்னும் உகந்ததாக இருக்கும் எனத்
தோன்றியது. காரணம் எழுத்தில் தொடர்ந்து முழுநேரமும் சதா இயங்கும் போது, எழுதுவதை அது இயந்தரத்தனமான செயல்பாடாக மாற்றிவிடும் என்ற பயம் எனக்கு இருந்தது.
மேலும் ஏதேனும் ஒன்றில் பணியாற்றிக்கொண்டே எழுதுவது, வேலையின்மையால்,
பாதுகாப்பின்மையால் நேரும் உளவியல் இடையூறை இல்லாமல் செய்யும் நான்
நிச்சயமாக நம்பினேன்.
கவிதைக்கு மதிப்புவாய்ந்த, தவிர்க்கவே முடியாத என்று
பொருள்படக்கூடிய ஒன்று எதிலிருந்து உருவாகி வருகிறது? கவிதை
ஆன்மாவிற்கு நெருக்கமாக இருக்கிறது, அறிவிற்கு தூரமாக
இருக்கிறது என்ற நிதர்சனத்திலிருந்து அது வருகிறதா? ஏன்
கவிதை பொதுவாக எளிதாக நிராகரிக்கப்படும் ஒன்றாக, எளிதாக
தாண்டிச்செல்லும் ஒன்றாக இருக்கிறது?
ஒரு புறம் கவிதை அறிவுஜீவித்தனமாக இன்றைக்கு வெளிப்பட்டுக்
கொண்டிருக்கிறது ஆனால் தாங்கள் சொன்ன மாதிரி அறிவிற்கு தூரமாக இருக்கிறது என்று
சொல்ல முடியாது. அது நிச்சயம் உணர்வுகளில் இருந்து வருவதால் உண்மையானது. கவிதை
நிராகரிக்கப்பட்டவர்களின் குரல். அதற்கு காரணம் இருக்கலாம். அதைத்தாண்டி
செல்வதற்கு காரணம் படைப்பிலக்கியத்தில் இன்னும் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்
என்ற உதாசீனமாக கூட இருக்கலாம்.
கவிஞனுக்கு எதார்த்த உலகை புரிந்துகொள்ளாதவனைப்
போன்ற தோற்றம் எங்கிருந்து வருகிறது? அது அவன் எழுதும் கவிதையிலிருந்து தான் அந்த சித்திரம் உருவாகி வருகிறதா?
அல்லது அவனது தனிப்பட்ட இயல்பிலிருந்து அந்த சித்திரம் உருவாகி
வருகிறதா?
கவிஞன் உலகத்தை புரிந்து கொள்ளாதவனாக இருப்பது
சாத்தியமில்லை. அவன் எழுதிய கவிதையில் இருந்து பல சித்திரங்கள் உருவாகலாம். ஆனால்
அந்த சித்திரங்கள் எல்லாம் அவனின் உள்மனது அல்லது தனிப்பட்ட உணர்விலிருந்து உருவானதுதான். ஆகவே அவனை எதார்த்த உலகத்தை
புரிந்து கொள்ளாதவனாக சொல்வது சரியானதல்ல.
ஜனரஞ்சக கவிதைகள் ஏன் ஜனரஞ்சக கவிதைகளாகவே
இருக்கின்றன, அவைகளுக்கு
தீவிர தரம்வாய்ந்த, மேலான, படைப்பாற்றலுக்கு
சவால்விடக்கூடிய கவிதைகள் பக்கம் ஏன் வருவதில்லை? அவைகளுக்கு
என்ன பிரச்சனையாக இருக்கும்? அதற்கு தெரிந்ததே அவ்வளவுதானா?
எதற்காக இதை கேட்கிறேன் எனில் சாத்தியங்களை கொண்டுள்ள அவற்றை தேற்றி
மேலே கொண்டு வர முடியாதா?
ஜனரஞ்சக கவிதைகள் பொழுதுபோக்குக் கவிதைகளாக
இருக்கின்றன. காரணம் அவை வைக்கிற வெகுஜன மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் படைப்பாற்றல்மிக்க
கூறுகளோடு பொருந்திப்போவதில்லை. எல்லாருக்குள்ளும் இந்த வெகுஜன இயல்பு இருக்கிறது.
ஆனால் அதைத் தாண்டி செல்கிறபோது இன்னும் படைப்பாக்கத்தில் சிறப்பு பெற முடியும்.
கூறுமுறையில் நேரடித்தன்மை மற்றும்
பூடகத்தன்மைக்குள்ள பங்கு என்ன? சிலருக்கு நேரடித்தன்மையிலிருந்தே இந்த பூடகத்தன்மை என்பது சாத்தியமாகி
விடுகிறது. சிலர் துவங்கும் போதே பூடகத்தன்மையிலிருந்து துவங்குகிறார்கள்.
ஆகச்சிறந்த கவிதைக்கு பூடகத்தன்மையுடனான தொடர்பு எவ்வாறு உருவாகிறது?
நேரடித் தன்மை அல்லது பூடகத்தன்மை என்பது ஒரு
படைப்புக்கு தேவையாக இருக்கிறது. பூடகத் தன்மை என்பது கவிஞனுடைய அனுபவ அளவு, எழுத்தாளனுடைய அனுபவ உலகம் சார்ந்து
உருவாகக்கூடியது. அல்லது அவனுடைய இயல்பான ஆட்டோமேட்டிக் எழுத்து முறையில் அது
தானாக சேர்ந்து வந்துவிடும். அது ஒரு பயிற்சியாகக் கூட இருக்கிறது, நேரடித் தன்மைக்கு வாசகனை சுலபமாக கொண்டு செல்லும் தன்மை உள்ளது. உணர்வு
என்பது, திரும்ப திரும்ப வாசிப்பதற்கும், அந்த அனுபவங்களை பார்த்து நுணுக்கமாக வைத்துக் கொள்வதற்கும் உள்ள
வித்தியாசம்.
சமூக மதிப்பீடுகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? குற்றம், குறை
சொல்ல முடியாத ஒரு சமூகம் என்பது நிச்சயமற்ற சூழலில் சமூக மதிப்பீடுகளின்
தரத்தையும், நன்மை, தீமைகளையும் இனம்
கண்டு நிர்ணயிப்பது எப்படி? அவற்றை வளர்த்தெடுப்பது எப்படி?
சாதக, பாதகங்கள் தான் அவற்றை தீர்மானிக்க
வேண்டுமா?
சமூக மதிப்பீடுகளை நாம் எப்படியும் எதிர்கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த சமூக மதிப்பீடுகள் மாறக்கூடியவை. காலத்தால், கலாச்சாரம் சார்ந்த மாறுபாடுகளால்,
மாறக்கூடியவை. அதன் சாதக, பாதகங்களை
காலத்தினூடான மாற்றத்தால் நாம் மாற வேண்டும்.
கல்வி கற்பதில் தாய்மொழியில் அல்லாது வேற்றுமொழி
ஆங்கிலத்தில் கற்பது என்பதை நாம் பெரிதும் சார்ந்திருப்பது எதற்காக? சமூகத்தில் உள்ள பெரும்பான்மையோர்
முற்றிலும் தமிழறிவை பின்னணியாக கொண்டிருக்க ஆங்கில மொழியில் கல்வி - அதிக
பயனையும், மதிப்பையும் கொண்ட கல்வி - என்பது ஒரு கூடுதல்
சுமையல்லவா?
தாய்மொழிக் கல்வி என்பது ஒருவனுடைய சுயசிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது.
தேடலுக்கு ரொம்ப இயல்பாக இருப்பது. ஆனால் ஆங்கில மொழிக்கல்வி பயனுள்ளது என்பது ஒரு
மூடநம்பிக்கைதான். உலக நாடுகளில், முன்னேறிய நாடுகளில்
தாய்மொழி கல்வி மூலமாக தான் அதிகம் பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் தாய்மொழியை பெருமையாக பேசுகிறோம். மற்றொருபுறம்
ஆங்கிலத்தை முதன்மையான இடத்தில் வைத்திருக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு?
நாம் ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தி இருப்பதில், இன்றைக்கு, உலகமயமாக்கல்
பாதிப்புக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இன்றைய அரசியல், உலக அரசியல் அப்படி ஆக்குகிறது. தாய்மொழி சூழலை அழித்து ஒற்றை மொழியை,
ஒற்றை கலாச்சாரத்தை முன்வைக்கின்றன, கலாச்சார
விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஆங்கிலத்திற்கு நிகரான பகுத்தறிவு, நாகரீகம், வேலைவாய்ப்பு,
சம்பாதிக்கும் சாத்தியங்கள், வளமையான வாழ்வு
போன்றவற்றை தமிழோடு பொருத்திப்பார்க்க எவராலும் இயலாததாக இருக்கிறது. ஏன்?
ஆங்கிலத்திற்கு நிகரான பகுத்தறிவு, நாகரீகம், வேலைவாய்ப்பு,
சம்பாதிக்க வாய்ப்புகள், வளமான வாழ்வு எல்லாம்
தமிழிலும் இருக்கிறது என்று சொல்லலாம். ஆங்கிலத்தோடு எல்லாவற்றிலும் தமிழை
பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இருக்கின்ற மொழி அரசியல், உலக
அரசியல் தமிழை தனிமைப்படுத்தி இருக்கிறது.
மருத்துவம்,
பொறியியல் உட்பட அனைத்தையும் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை
தமிழில் கற்று, கல்வித்தகுதிக்கேற்ற அறிவையும், வேலைவாய்ப்பையும், வளமான வாழ்வையும் பெறுவது
சாத்தியமா?
உலகில் பல நாடுகள் மருத்துவம், பொறியியல் உட்பட ஆரம்பக் கல்வி
முதல் உயர்கல்வி வரை தாய் மொழியில் கற்று சாதித்து வளர்ந்திருக்கிறது. இலங்கையில்,
தமிழ் ஈழம் சார்ந்த நடவடிக்கைகள் இருந்தபோது அங்கே இதெல்லாம்
சாத்தியம் ஆனது. ஆங்கில மொழி, நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்ட
காரணத்தினால் அதன் பாதிப்பிலிருந்து மீளாமல் நாம் இன்னும் இருக்கிறோம்.
மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படும் போது என்ன
மாதிரியான விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன?
இன்றைய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் வணிகவியல்
உத்திகளால் நிரம்பி இருக்கிறது. அதை வைத்து இருநூறு பிரதிகள் ஒரு பதிப்பகம் ஒரு
மொழிபெயர்ப்பு நூலை கொண்டு வந்தால், விற்று விடும் என்ற நம்பிக்கையில் விற்கப்படுகின்றன.
பதிப்பிக்கப்படுகின்றன. அடுத்த நிலையில் நூலகத்திற்கான ஆணை என்பது கிடைத்தால்,
இன்னும் சுலபமாக இருந்தது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால்,
அப்போதெல்லாம் இலக்கியம் சார்ந்த பரிமாற்றம் அல்லது தேவை என்று
கருதி, நிறைய மொழிபெயர்ப்புகள் உருவாகியுள்ளன.
பொதுவாக பதிப்பகங்களால் வெளியிடப்படும் நூல்கள்
செய்திதாள்கள், பத்திரிக்கைகள்,
இணையதளங்கள், தொலைக்காட்சிகள் போன்ற
ஊடகங்களில் அறிமுகமாவதற்கு எவற்றை பெரிதும் சார்ந்திருக்கின்றன? தேடிச்செல்லும் வாசகனுக்குத்தான் நூல்களை பெறுவது சாத்தியமா? வெளியிடப்படும் நூல்கள் அவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது
எவ்வாறு? நூல்களின் உள்ளடக்கங்களின் தரத்தை யார்
நிர்ணயிப்பது? ஆன்மீகம், இலக்கியம்,
தத்துவம் மற்றும் எத்துறைசார் நூலாக இருந்தாலும் நூல்களின் தரத்தை
ஒருவர் தர்க்கங்களின் மூலமாக நிறுவ முடியுமா?
நம்முடைய நூல்கள் அறிமுகம் ஆவதற்கு, செய்தித்தாள்கள் பத்திரிகைகள்
முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்களும் பங்கு வைக்கின்றன. சிறு சிறு பகுதிகளாக
அவற்றைக் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவற்றைப் பற்றி அறிவிப்பது,
விமர்சனப்படுத்துவது இதெல்லாம் பயன்படும். எந்த வகையான நூலாக
இருந்தாலும் இதன் மூலமாக அவற்றை நிறைவேற்ற முடியும் எனத் தோன்றவில்லை.
பதிப்பாளர் சங்கம் என்ன மாதிரியான பணிகளை செய்கிறது?
பல பதிப்பாளர் சங்கங்கள் என்பவை முன்பெல்லாம்
எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் இப்போதெல்லாம் பப்பாசி என்ற ஒரு பதிப்பாளர் சங்கம் தான் உடனே மனதிற்கு
வருகிறது. அவர்கள் மிக பிரபலமான முறையில் புத்தகக்கண்காட்சி நடத்துகிறார்கள்.
எழுத்தாளர்களை அழைத்து பேசவைக்கிறார்கள். எழுதினதை மக்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப, அந்த வழக்கத்திற்கு ஏற்ப அவர்கள்
செயல்படுகிறார்கள். ஆனால் கேரளாவில் இதுபோல் நிறைய பதிப்பாளர் சங்கம் இருப்பதாக
கேள்விப்படுகிறேன். ஷார்ஜா புத்தகக் காட்சி சென்ற போது அப்படி சில பதிப்பாளர்
சங்கங்களைப் பார்த்தேன்.அவர்களைச்
சந்திக்க பிடித்தது. அந்த அளவு தமிழகத்தில் தமிழ்ச் சூழலில் பதிப்பாளர்கள்
இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
தங்களுக்கு அரசியல் ஈடுபாடு இருக்கிறதா? இருக்கிறது எனில் ஏன்? இல்லை எனில் ஏன்? அதைப்பற்றி சிறிது சொல்ல முடியுமா?
எனக்கு அரசியலில் ஈடுபாடு இருக்கிறது. கல்லூரி
காலங்களில் இருந்து மார்க்சியத்தையும் பயிலுதல், அது தொடர்பான அணுகுமுறை என்பது
இருக்கிறது. ஆனால் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை. நான் கட்சி சார்ந்து
செயல்பட்டதில்லை. மார்சியம் சார்ந்த அணுகுமுறை பிடித்திருக்கிறது. தொடர்ந்து
மார்க்சீய வாசிப்பும், விவாதமும் மேலோட்டமாகவே இன்றைக்கும்
இருக்கிறது.
வாழ்வின் நிலையாமை குறித்து தாங்கள் என்ன
கருதுகிறீர்கள்? என்றேனும்
ஒரு நாள் சர்வ நிச்சயமாக வாழ்வு முற்றுப்பெற்று விடும் என்பது தங்களை எப்போதாவது
உலுக்கியிருக்கிறதா?
படைப்பிலக்கியம், வாழ்வு முற்றுப்பெறும் என்பதை
இதுவரை ஒத்துக்கொண்டதில்லை. மனிதனின் ஆயுள் என்பதை வேண்டுமானால் சொல்லலாம். அந்த
சூழல் வரும்போது, அது நிச்சயம் முடிவு பெறாமல் இருக்காது.
ஆனால் இலக்கியமும் செயல்பாடும் தொடர்ந்து இருக்கிறபோது அது பெரும்
பொறுப்புகளுக்கும் இழுக்கும். பெரும் பொறுப்புகளுக்கும் கொண்டு செல்லும். முற்று
பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.
தங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கிறதா? இருக்கிறது எனில் என்ன அடிப்படையில்
இருக்கிறது? இல்லை எனில் என்ன அடிப்படையில் இல்லை? ஆன்மீகம் என்பதை தாங்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?
ஆன்மீக ஈடுபாடு என்று தாங்கள் சொல்வது பக்தி சார்ந்த
விஷயங்களை என்று நினைக்கிறேன். எனக்கு
கல்லூரி பருவத்தில் இருந்து மார்க்சியம் கற்றுக்கொள்ளவும், இதிலிருந்து கடவுள் நம்பிக்கை
என்பதை மறுக்கவும் பழக்கப்படுத்திக்கொண்டேன். வாழ்க்கையின் மிக சிக்கலான
தருணங்களில் கூட நான் பகுத்தறிவுவாதியாகவே இருந்திருக்கிறேன். அப்போதுகூட
வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கை தேவையானது என்று நான் உணர்ந்ததில்லை.
நாத்திகவாதியாகவும், ஒரு பகுத்தறிவுவாதியாகவும் இருந்து
பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக எப்பொழுதும் இருக்கிறது.
வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. இந்த அனுபவங்களை
தொடர்ந்து எழுத்தாய் உருவாக்கிக் கொண்டே இருக்கிறேன். அவ்வளவு தான். இந்த
அனுபவங்களைக் கொண்டு அதுசார்பான மனிதர்களையும், உங்களையும்
தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
தங்கள் வாழ்வில் அசாதாரணமாக என்று குறிப்பிட்டு சொல்லும்
அளவு ஏதேனும் நடந்திருக்கிறதா?
என் வாழ்வில் அசாதாரணம் என்று குறிப்பிடுகிற நிறைய
விஷயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது,
என் மனைவிக்கு மனநலக் குறைவு ஏற்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக
அவர்கள் தொடர்சிகிச்சையில் இருந்ததும், அது தொடர்பான
அனுபவங்களும், என் வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தை நான்
கடந்து வந்திருக்கிறேன். அவர்களின் நோயும், இரு பெண்
குழந்தைகள் வளர்ப்பும் பெரிய சவாலாக இருந்திருக்கிறது.
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது எதற்காக?
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது தேவைதான்.
அது ஒரு சமூகநீதி அம்சம். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக இடஒதுக்கீடு
என்பதை சட்ட நடைமுறைகள் மூலம் அறிகிறோம். அது முடிவு பெறுதற்கான சூழல் இந்தியாவில்
இன்னும் முற்றுப்பெறவில்லை. சாதி இறுக்கங்கள், இடஒதுக்கீட்டையும், பிரச்சனையின் விஸ்வரூபத்தையும் இன்னும் விரிவாக்கிக் கொண்டே போகிறது.
இடஒதுக்கீடு என்பது பல சமயங்களில் தகுதியுள்ளவர்களுக்கு எதிராக இருக்கிறது என்று
புரிந்துகொள்ளப்படுவது உண்டு. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான். ஆனால் அதை
பயன்படுத்தவேண்டிய சாதி சமூகம் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது. இடஒதுக்கீடு
என்பதை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். இடஒதுக்கீடு கோருவது என்பது கல்வி
கற்பதற்கான ஒரு வாய்ப்பு. அது சிலருக்கு மறுக்கப்படுகிறது என்று சொல்வது
குறைவாகவே.
இடஒதுக்கீடு என்பது முற்றிலும் தகுதியற்றவர்களுக்காக
அல்ல. மிகக்குறைந்த லாபங்களுக்காக நாம் அதிக விலையை கொடுக்கிறோமா? அதாவது சாதியை பேணிப்
பாதுகாக்கிறோமா? அதன் அடிப்படை ஏற்றத்தாழ்வுகளோடு. அடிப்படை
பகைமைகளோடு.
விஷயம் அது இல்லை. இடஒதுக்கீடு என்பது சாதி
ஒழிப்பதற்கான ஒரு அளவுகோல் தான். அது முயற்சி தான். அந்த வகையில் சாதி ஒழிப்பு
என்பது முக்கிய அங்கமாக தான் இடஒதுக்கீடு போன்றவை இருக்கின்றன.
ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகம் என்பது ஒரு மிகுகற்பனையா? அப்படியொரு சமூகம் சாத்தியம் தானா?
ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகம் என்பது வெறும் கற்பனை
அல்ல. அப்படியான ஒரு உட்டோபியன் உலகம் பொதுவுடமை சார்ந்த தத்துவங்கள் கொண்டு
நிறைவேறி இருக்கிறது. கண்கூடாகவும் இருக்கிறது. ஆனால் அது சோவியத்தில் சிதைவுற்றது
என்பது வருத்தம் தரக்கூடியது.
நாட்டார் கலைகள் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாட்டார் கலைகளை ஒரு படைப்பாளி ஏன்
கொண்டாடுகிறான்? நாட்டார் கலை வாழ வேண்டுமானால் வறுமையும்,
வறுமையால் நேரும் இழிவும் வாழ வேண்டும். ஒரு கூட்டத்தை நிரந்தரமாக
நாம் வறுமையிலும், இழிவிலும் தலைமுறை தலைமுறையாக வைத்திருக்க
வேண்டும். தலைமுறை, தலைமுறையாக அதற்குள் இழுக்க வேண்டும்,
பழக்க வேண்டும். நாட்டார் கலைகளில் ஒரு படைப்பாளி எந்த ஒரு
இழிவையும் காண்பதில்லையா?
நாட்டார்கலை கூறுகளில் அவ்வளவு தேர்ச்சி எனக்கு
இல்லை. மேலோட்டமாகவே படித்திருக்கிறேன். எல்லா படைப்புகளிலும் இழிவுசார்ந்த
குற்றவுணர்வோ, வடிகாலோதான் அடிப்படையாக இருக்கிறது.