சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 18 டிசம்பர், 2021
தேத்தண்ணி – முன்னுரை / சுப்ரபாரதிமணியன்
சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘காரிகாவனம்’ என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டு இருக்கிறேன். அதேபோல மலேசிய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘பெண்மை’ என்ற சிறுகதை நூலாகவும் தொகுத்துள்ளேன்.‘காரிகாவனம்’ சிறுகதைத் தொகுப்பிற்கான கதைகளைச் சேகரிக்கும்போது, மணிமாலா மதியழகனுடைய சிறுகதைகளின் தனித்தன்மையைத் தெரிந்துகொண்டேன். அங்குள்ள பிற பெண் எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து அவை மாறுபடும் விதமாய், விரிந்த எல்லைகளும் வேகமான எழுத்து முயற்சிகளும்கொண்டவையாகஎனக்குப்பட்டன.
மருது பாண்டியர் யார் என்று கேட்கும் சீன முதியவர், அவர் ஏன் தமிழ் நூல் மேல் அவ்வளவு ஈடுபாட்டுடன் பேசுகிறார் என்பதை ஒரு சிறுகதை சொல்கிறது. சிங்கப்பூர், ஜப்பானியரின் ஆதிக்கத்தில் இருந்தபோது சீனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போராட்டத்தைக் கொரோனா போராட்டத்தோடு ஒப்பிட்டு கதாசிரியர் எழுதியுள்ளார். அம்முதியவரின் அகச்சிக்கலை காலச் சூழலுடன் பொருத்தியதன் வழியாக இச்சிறுகதை நம் கண்முன் காட்சியாக விரிகிறது. நான் சமீபத்தில் ஷார்ஜாவுக்குச் சென்றிருந்தபோது பெரும் வணிக கடைத்தொகுதியில் இதுபோன்ற ஒரு மனிதரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது.
வேகம் வேகமென எந்நேரமும் அவசரகதியில் இயங்குவது, தற்கால வாழ்வில் கட்டாயமாகிப் போன ஒன்றாகிவிட்டது. காரியம் முடிந்த கையோடு சம்பந்தப்பட்டவரது சொல்லைக் காற்றில் பறக்கவிடுவதை ஓர் எழுத்தாளரைப்பற்றியக் கதை உணர்த்தியது.
தன் மனைவிமேல் ஒருவர் கொண்டுள்ள மிதமிஞ்சிய பிரியத்தை ஒரு கதையில் காண முடிகிறது. அக்கதையிலும் சீன முதியவர்தான் கதையின் நாயகனாக வருகிறார். இக்கதையில் மீன்களைப்பற்றியப் பல சுவாரசியமானத் தகவல்கள் கதையோட்டத்தோடு ரசிக்கும்படி இருக்கின்றன.இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா கிருமி உற்பத்தியான ‘வூஹானை’ குறிப்பிட்டது கதையின் நம்பகத் தன்மைக்குச்சான்றாகிறது.
நூலாசிரியர் தன்னுடைய கதைகளில் சிங்கப்பூர் கல்வி பற்றிப் பல விஷயங்களை எழுதியுள்ளார். இத்தொகுப்பிலும், அப்படிக் கல்வி சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. ‘அஞ்சனா’ என்னும் கதையில் வரும் சிறுமியின் அம்மா தமிழர், அப்பா மேலைநாட்டவர்.ஏதோ காரணத்தால் குடும்பத்தை விட்டுவிட்டு அப்பா பிரிந்துவிடுகிறார். பள்ளியில் தமிழ்ப் பாடம் என்றாலே அச்சிறுமிக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. அவள் அப்பாவின்மேல் கொண்டுள்ள பிரியம் கதையில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. சிறுமியின் உளச் சிக்கலை வாசகர்களும் உணரும்படிச் செய்தது மிகவும் சிறப்பு.
செய்யாத தவறுக்கு ஒருவர் தண்டனை அனுபவிப்பது மிகப்பெரிய கொடுமையாகும். அதுவும் காலங்கடந்து, தான் தண்டனை அளித்தது தவறு என ஒருவர் அறிய வரும்போது அவரது நிலை இன்னும் மோசமாகும். இதை நூலின் தலைப்புக் கதை சொல்லாமல் சொல்கிறது.
பணி நிமித்தமாகக் குடும்பத்தைப் பிரிந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் கதாமாந்தர்கள், இரட்டை உலகங்களில் வாழும் வாழ்வியல் சிக்கல்கள்; வாடகை வீட்டில் குடி வந்த ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்;சூம் மீட்டிங்கில் நடக்கும் சுவாரசியங்கள்; இன்றைய வாழ்க்கையில் ஓர் அங்கமாகிப்போன சமூக வலைத்தளங்களைச் சிலர் அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதால் நேரும் அவலம்; சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதை நகைச்சுவையோடு சொன்னவிதம் என ஒவ்வொரு கதையும் வெவ்வேறு தனித்தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது.
மணிமாலா மதியழகனின் கதைகள் கொடூரமான விஷயங்களைத் தவிர்த்து மிக மென்மையாக விஷயங்களைச் சொல்லும் இயல்புடையவை. இத்தன்மையிலிருந்து ஒரு கதை மாறுபட்டுள்ளது. கணவன், மனைவி உறவில் உண்டாகும் விரிசலைப் பேசும் கதையில் ‘திருப்பி அடிக்கிறேன்’ என்பது அதிர்ச்சி தரக்கூடியதாய் உள்ளது. தவறு செய்பவர்களின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்த இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லவும் வேண்டியுள்ளது.
சிங்கப்பூர் வாழ்க்கையில்உள்ள வேலைப்பளுவும் சிக்கல்களும் வெளியில் இருப்பவர்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சிங்கப்பூரில் வாழ்பவர்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவே ஒரு கருத்தை மற்றவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர். அங்கு, இரவு பகல் பாராது உழைத்துச் சிரமப்பட்டு வாழ்கின்ற தமிழர்களின் வாழ்க்கையை இக்கதைகள் துல்லியமாகச் சொல்லியுள்ளன.
சமகால வாழ்வின் சிக்கல்களைப் பேசுகிற கதைக் கருக்களேஇத்தொகுப்பில் ஆக்கிரமித்திருக்கின்றன. அந்தந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய இதுபோன்ற படைப்புகள் அவசியமாகின்றன. வாழ்க்கை நெருக்கடிகளைப் பற்றியப் புரிதல் ஏற்பட இவை வழி வகுக்கும்.
எழுத்தாளர் ஒரே சீரான நடையில் பிரச்சினைகளை முன்வைக்கிறார். இதேபோல, தமிழகச் சூழலிலுள்ள கதைகளை அவர் எழுதினாலும் இந்த நுணுக்கமும் கூர்மையும் அவருக்குக் கிடைத்துவிடுகிறது. இவை, அவரது தொடர்ந்த எழுத்துப் பயிற்சியாலும் உழைப்பாலும் சமூக நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பதாலும் நிகழ்பவையாகும். மணிமாலா மதியழகன்தனது படைப்புகளை இன்னும் விரிந்த தளத்தில் நாவலாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்த்துகள்!
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன், திருப்பூர்.
10.12.2021