விரைவில் வெளிவர உள்ள “ கொரானா காலம் “ நூலில் இடம் பெறும் படைப்பு
( வெளியீடு கனவு, திருப்பூர் )
திருப்பூருக்கு , இமாலய வெற்றியை மீட்டெடுப்பது : யுவராஜ் சம்பத்
கொடிய நோய் கொராணாவின் தாக்கத்தில் ,பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, சாதாரண குடிசைத் தொழிலில் இருப்பவர்களும்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்...
ஆனால் இதை இன்னும் அரசுகள் கண்டுகொள்வதில்லை. காரணம், இவர்கள் வங்கிப் பரிமாற்றம் செய்வதில்லை, ஜிஎஸ்டி கட்டுவதில்லை, தங்கள் தொழிலுக்கு எந்தவிதமான கணக்கு
வழக்குகளையும் அரசுக்கு சமர்ப்பிப்பது இல்லை, வங்கிகளில் கடன் வாங்குவதில்லை, யாருக்கும் வட்டிக்கு கடன் கொடுப்பதும்
இல்லை.. அவர்கள் செய்த ஒரே தவறு குருவி சேர்த்தார் போல் பல்வேறு வழிகளில் ஒவ்வொரு
ரூபாயாக சேர்த்த சிறிய முதலீட்டைக் கொண்டு ,அன்றாடம் தேவையான துணி மற்றும் அதன் தொடர்பான பொருட்களை, குறைந்த விலைக்கு வாங்கி ,தன் குடும்ப உறுப்பினர்களை கொண்டு, பனியன் ,ஜட்டி, மாஸ்கோ ஏதாவது ஒன்றை தயார் செய்து திருப்பூரில் இதற்கெனவே இருக்கிற
சிறிய சிறிய சந்தைகளில் விற்று தங்கள் குடும்பங்களை நடத்துகிற அளவுக்கு பொருள்
ஈட்டுவார்கள் .இவர்களுக்கும் இன்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.. இதை கேட்பதற்கு யாருமில்லை....
அதே நேரத்தில் சிறு,குறு ஏற்றுமதியாளர்களும், தயாரிப்பாளர்களும் ஏற்கனவே
தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய தோழர்களை இழந்திருக்கிறார்கள்.. வெளிமாநில
தொழிலாளர்களைப் பயன்படுத்தி வேலை வாங்குவதில் சிரமம் இருக்கிறது.. அப்படி
அவர்களுக்கு வேலை அளித்தாலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடக்கத்திலிருந்தே பல்வேறு
குழப்பங்கள் இருக்கின்றன.. அதனால் அவர்களும் தங்கள் தொழிலை தொடங்க முடியாமலும் ,தொடங்கினால் நடத்த முடியாமலும்
சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
அதைப்போலவே உள்ளூர் வணிகம் என்று சொல்லுகிற இந்திய சந்தைக்கு தயார்
செய்து விற்பனை செய்து கொண்டு இருக்கிற பல்வேறு நிறுவனங்களுக்கும், வரவேண்டிய பணம் நீண்டகாலமாக
நிலுவையில் இருக்கிறது.. ஏற்றுமதியாளர்களுக்கு இருப்பது போன்ற
காப்பீடு கிடையாது என்பதால், அவர்களும் வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்..
ஏற்றுமதியாளர்கள் நிலைமையும் சொல்லவே வேண்டாம். சற்றேறக்குறைய
பத்தாயிரம் கோடிக்கு மேல் வராத கடன் இருக்கும் என்று சொல்லப்படுகிற அளவுக்கு
மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இந்தியாவை
வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது என்பது
பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், ஆயத்த ஆடை ஏற்றுமதியை பொருத்தவரை இது ஒரு எதிர்மறை விளைவை
ஏற்படுத்துகிறது. காரணம் இந்திய தயாரிப்புகள் வங்கதேசத்து தயாரிப்புடன் அல்லது
வியட்னாம் தயாரிப்புடன் போட்டி போட முடியாத நிலை... இந்திய தயாரிப்புகளை விட
அவருடைய தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியும் மற்ற சலுகைகளும் அதிகம் இருப்பது தான்
காரணம்..
இந்திய அரசு சொல்லளவில் இதுவரை உறுதியளித்திருக்கிற நடவடிக்கைகளை
செயலளவில் காட்டினால் ஒழிய, திருப்பூருக்கு ,கடந்த காலங்களில் வென்றெடுத்த
இமாலய வெற்றியை மீட்டெடுப்பது சிரமமாகத்தான் இருக்கும்....
M.M.Sampath Kumar .