சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 21 ஜூலை, 2020

நைரா மற்றும் மாலு நாவல்கள்- வாசிப்பு அனுபவம்.

வித்யா அருண், சிங்கப்பூர்


வணக்கம். சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிவருகிறேன்.காரிகாவனம் தொகுப்பில் என்னுடைய சிறுகதையும் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் உங்களுக்கு, ஒரு வாசகியாய் என் அனுபவத்தைப்பகிர எண்ணுகிறேன்.

உங்களின் மாலுவும், நைராவும் ஒரே நேரத்தில் வாசிக்கக் கிடைத்தன.

நைரா:

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருந்தீர்கள்.

அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும்  ஊரில் அந்த ஊரின் கடைநிலை  மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை.
எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தீர்கள் என்பது அதிசயமாக இருந்தது.

நைரா என்ற சொல் எனக்குப்புதிது. முதல் அத்தியாயத்தில் ரயில் நிலையத்தில் கறுத்தப்பனையாக நிற்கும் நைஜீரிய மனிதனின் அறிமுகம் நன்றாக இருந்தது.

நம் ஊரில் விற்கும் சிவப்பழகு பொருட்களின் விளம்பரங்கள் வெள்ளைத்தோலை விரும்பும் மனதைத்தானே வெட்டவெளிச்சப்படுத்திக்காட்டுகின்றன.

கெலுச்சி போன்ற ஆண்கள், பெண்களைப் படி, நல்ல வேலைக்கு போ என்று உற்சாகப்படுத்துபவர்காளாக இருந்தாலும், அவர்கள் சிவகாமி போன்றவர்களுக்கு ஒருவித அபசகுனம் தானே .
நம்மவர் அத்தனை கருப்பாகவும், கெலுச்சி போன்றோர் நம் தமிழர்களின் சராசரி நிறத்திலும் இருந்தால், இந்தக்காதலுக்கு ஒரு தடையும் இருந்திருக்காது இல்லையா?

ஒரு கதைசொல்லியாக, அங்கங்கே டைரிக்குறிப்புகளாக இந்தியாவையும், நைஜீரியாவையும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அங்கிருந்த தலைவர்கள், அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
நைஜீரியா என்ற நாட்டைப் பற்றி ஓரளவு அறிமுகம் உங்கள் நூலின் வாயிலாகக்கிடைத்தது. அங்கும் முருகன் கோயில்களும், தமிழ் பேசும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குப்புது செய்தி .

நான் அமெரிக்காவில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். கென்யா நாட்டிலிருந்து ஓரிருவர் என்னோடு வேலைப்பார்த்தனர். வெள்ளை இன மக்களைவிட, நம் தமிழ் சமூகத்தோடு அவர்களால் தங்களது, எண்ணங்களையும், கலாச்சாரம் தொடர்பான பகிர்தலையும் எளிதில் செய்ய முடிவதாக எனக்குத்தோன்றுகிறது.
இந்தியாவில் தான் அகதிகளாகட்டும், வேலைக்கென வரும் வெளிநாட்டவர் ஆகட்டும், பயமின்றி இருக்கமுடியும். இந்த நிலை மற்ற நாடுகளில் நிச்சயம் நடக்காத ஒன்று தான்.
காட்சிப்படுத்தும் போது  ஒரு வழிச்சாலையில் மனிதத்தலைகளை நட்டுவைப்பதாக சொல்வதும், மிதிவண்டியில் வருபவரை அதிசயமாகப்பார்க்கும் பார்வையாக ரசிக்கவைத்திருந்தீர்கள்.

ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்போது வரும் உபரித்துணிகளை அடுப்பெரிக்கப் பயன்படுத்தினால்  புற்று நோய் வரும் என்பது உங்களின் நூல் வாயிலாக அறிந்துகொண்ட புதியத்தகவல். சாக்கடையாக, சாயத்தநீராக மாறி விட்ட நொய்யலை மீட்டெடுப்பது எப்படி?

சுமங்கலித்திட்டம் பற்றி பல வருடங்களுக்கு முன்னர் நீயா நானாவில் ஒரு பெண் பேசினார். அவர் நேர்முகமாக அதில் பாதிக்கப்பட்டிருந்தார். கிறிஸ்துவின் சடலம் உயிர்தெழலற்று அழுகிக்கிடப்பது போல இருக்கிறது இந்த தேசம். சரி தான்!. எத்தனை நன்னீர் ஊற்றுகள் இருந்தாலும், குடிக்க சுத்தீகரிக்கப்பட்ட நீர் தானே இன்றைய நிதர்சனம்.

கடைசி ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் மூட்டைப்பூச்சி, கைத்தடி போன்றவை மூலமாக காட்சிகள் நகர்வது தனியாகத்தெரிந்தது.

மொத்தத்தில் இது ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்!.சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளரின் முக்கிய படைப்பு .ஆட்சியாளர்கள் யோசிக்க நிறையவிஷயங்கள் இருக்கின்றன. சுமங்கலி திட்டம், பள்ளிமாணவர்கள் குடிக்க ஆரம்பிப்பது இப்படிப்பல. இவற்றில் முக்கியமான ஒன்று- வெளி நாட்டிலிருந்து வருவோர் எப்படி நம் சமூகப்பாதுகாப்பைப் பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்பது. கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ள பெண்பிள்ளைகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கு, அங்கு வரும் அதிக அளவிலான வெள்ளையின வெளிநாட்டவரும் முக்கியக்காரணம்.

அந்நிய செலவாணி என்று மட்டும் யோசிக்காமல், மொத்தமாக யோசித்து செயல்படாவிட்டால், இந்தியாவின் முதலுக்கு மோசம் வந்துவிடும்.

மாலு :

நைராவை போலவே பெயர் புதிது. சொல்லுக்கான பொருள் முதலில் எனக்குத் தெரியவில்லை. திரு.சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் தான் மலேசிய வரலாற்றை எனக்கு அறிமுகம் செய்தது. உங்களின் இந்த படைப்பில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான விக்னேஷும் , அப்பாசாமியும் இணைகோடுகளாகக் கதையை நகர்த்தி செல்கின்றனர். எங்கும் அவர்கள் சந்திக்கவில்லை.
உங்களின் யுக்தியாக நான் இந்தப்படைப்பிலும், மலேசியா பற்றிய தகவல்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தரப்பட்டிருந்ததைக்கவனித்தேன்.

பெ. ராஜேந்திரன்- தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் சொன்னதாக வரும் கருத்து:
இங்கு படைக்கப்படும் இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியர்கள் அறியாமல் இருப்பார்கள். ஆனால், தமிழ் நாட்டினரையும், அங்கு படைக்கப்படும் இலக்கியத்தையும் நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.
இந்தச் செய்தி என்னை யோசிக்க வைத்தது.
மலேசியர்கள் பன்னிரண்டு வயது வரை மட்டுமே தாய்மொழி படிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். அவர்களின் சவால்கள் முற்றிலும் வேறானவை.
தமிழ் நாட்டிலிருந்து எழுதுபவரை விட, தம் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள மலசியத்தமிழர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

லங்காட் நதிக்கரை, ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி, The Bridge on the River Kwai என அரவமிருப்பவர்கள் மேலும் படிக்க என விரித்துச்சொன்னது மிகவும் உதவியாக இருக்கிறது.
தமிழர்கள் தம் தொழிலில் முன்னேற முடியாமல் இருப்பது ஏன் என்ற யோசனை எல்லாருக்கும் இருக்கும்.
அதை யோசனையாக நிறுத்தாமல், தர்க்கரீதியாக பதில் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு.
புற உலகம் என்று வரும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நீட்டி எழுதிய அளவில், மலேசியாவிலிருக்கும் விக்னேஷை சுற்றிய உலகம் காட்சிகளாக கண்ணில் விரியும் அளவில் சொல்லப்படவில்லை. அங்கங்கே தெரியும் கிளைக்கதாபாத்திரங்களான கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எப்படி போலீஸ்க்கு பயந்து மூஞ்சூர் போல உடலைகுறுக்கி அமர்கிறார்கள் என்பது, அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்வோரின் பயத்தைக்காட்டியது.

எத்தனை முறை எச்சரித்தாலும் எனக்கு நடக்காது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வெளிநாடுகளில் ஏமாறுவோரும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

  பினாங்கு, மலாக்கா, ஜோஹோர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். கடைநிலை வேலைகளில் தமிழர்கள் அதிகம் இருப்பதைக்கண்கூடாகப்பார்க்க முடிகிறது.

உங்களின் புத்தகங்கள் விரித்துரைக்கும் சராசரி மக்களின் வாழ்க்கை போராட்டங்களும், அவற்றை சுற்றி இருக்கும் அரசியலும், நம்மை சுற்றியுள்ள உலகை புதிய கோணத்தில் அவதானிக்க வைக்கின்றன.

நன்றி
வித்யா அருண்