ஏன் எழுத...
--------------
உங்களிடம் பேசுவதற்கு எனக்கு
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் வாய்ச்சொல்லாகவோ எழுதியோ நான் எப்படி எழுதக்
கற்றுக்கொண்டேன் என்று பலர் கேட்டிருக்கிறார்கள். சோவியத் யூனியனின் எல்லாப்
பகுதிகளிலிருந்தும் வருகிற கடிதங்களிலும் இதே கேள்விதான் கேட்டிருக்கிறார்கள்; அந்த கடிதங்கள் தொழிலாளி -
விவசாயி நிருபர்கள், செஞ்சேனை
நிருபர்கள், பொதுவாக, எழுதத் தொடங்கியுள்ள வாலிபர்கள்
அனுப்பியவையாகும். “கதைகள்
எப்படி எழுதுவது என்பதைப் பற்றி ஒரு நூல் தயாரிக்குமாறு” பலர் என்னை வேண்டிக்
கொண்டிருக்கிறார்கள்; அல்லது
“இலக்கியத்தைப் பற்றி ஒரு
தத்துவத்தைப் படைத்துக் கொடுங்கள்” என்றோ “இலக்கியத்தைப் பற்றி ஒரு பாடப் புத்தகம் வெளியிடும்படியோ” கேட்டிருக்கிறார்கள். அவ்விதப்
பாட புத்தகத்தை என்னால் எழுத முடியாது; எனக்கு அது சாத்தியமில்லை; அது தவிர, அவ்விதப் புத்தகங்கள் ஏற்கெனவே இருந்து வருகின்றன; அவை மிகவும்
நன்றாயில்லாவிட்டாலும் கூட பயனுள்ளவைதான்.எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கியத்தின்
வரலாற்றில் ஞானம் இருந்தாக வேண்டும். இதற்கு வி. கெல்துயால் எழுதிய இலக்கியத்தின்
வரலாறு எனும் நூல் (மாஸ்கோ, அரசாங்கப் பதிப்பகத்தார் வெளியிட்டது) பயன்படும்; அதில், வாய்ச் சொல்லாகவும் (கிராமிய வகை)
எழுத்து வடிவத்திலும் (இலக்கிய வகை) சிருஷ்டித்தன்மை வளர்ந்திருக்கிற வகையைப்
பற்றிச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. எதுவாயிருந்தாலும் சரி - ஒருவன் எந்தத்
தொழிலைச் செய்கிறானோ அந்தத் தொழிலின் வளர்ச்சி வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு தொழிலில், அல்லது
அதைவிட நல்லதாக ஒரு தொழிற்கூடத்தில், வேலை செய்கிற தொழிலாளிகளுக்கு அது எப்படித் தோன்றி
படிப்படியாக வளர்ந்தது, எப்படி
உற்பத்தி மேம்பட்டுச் சிறக்கலாயிற்று என்று தெரிந்திருந்தால் அவர்கள் இன்னும்
நன்றாக வேலை செய்வார்கள் - பண்பாட்டின் வரலாற்றில் தங்களுடைய உழைப்பின்
முக்கியத்துவத்தைப் பற்றிக் கூடுதலான உணர்வுடனும், கூடுதலான உற்சாகத்துடனும் வேலை செய்வார்கள்.வெளிநாட்டு
இலக்கியத்திலும் ஞானம் கட்டாயம் இருக்க வேண்டும், ஏனென்றால் சாராம்சத்தில் பார்த்தால், எல்லா நாடுகளிலும் எல்லா மக்கள்
சமூகங்களிடையிலும், இலக்கிய
சிருஷ்டித் தன்மை என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது. கொகோலுக்கு ‘இறந்த ஆன்மாக்கள்’ எழுத புஷ்கின் விஷயாதாரம் தந்தார்
என்றும், புஷ்கின்கூட அந்த
விஷயாதாரத்தை லாரென்ஸ் ஸ்டெர்ன் என்ற ஆங்கில எழுத்தாளன் எழுதிய உணர்ச்சிகரமான
பயணம் ( (sentimental
jorney) ) எனும்
நாவலிலிருந்து அநேகமாக எடுத்திருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள். அதேபோலத்தான், ‘இறந்த ஆன்மாக்கள்’ எனும் நாவலிலும் ‘பிக்விக் பற்றிய ஏடுகள்’ எனும் நாவலிலும் விஷயாதாரம் ஒன்று
போலிருப்பதும் முக்கியமல்ல. மனித நினைவுக்கெட்டாத நாளிலிருந்து மனிதனின் ஆன்மாவைச்
சிக்கவைத்துப் பிடிக்க எங்கு பார்த்தாலும், ஒரு வலை பின்னப்பட்டு வந்திருக்கிறது என்றும், இன்னொரு புறத்தில்
மனிதர்களிடையேயிருந்து மூட நம்பிக்கைகளையும், விருப்பு வெறுப்புகளையும் சார்புக் கருத்துகளையும்
நீக்குவதையே தமது பணியின் குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள் எங்கும் எப்போதும்
இருந்து வந்திருக்கிறார்கள் என்றும், அறிந்து வைப்பதுதான் முக்கிய விஷயம். மனிதர்களுக்குப்
பிடித்தமான அற்ப விஷயங்களில் ஈடுபடுத்துவதற்கு உற்சாகப்படுத்துபவர்கள் என்றைக்கும்
இருந்துவருவதுபோலவே, தம்மைச்
சூழ்ந்துள்ள வாழ்வின் மோசமான அம்சங்களை, இழிந்த அம்சங்களை, எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த கலகக்காரர்களும் இருந்து
வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். மேலும், கடைசிப் பரிசீலனையிலே பார்க்கும்போது, மனிதனுக்கு முன்னேற்றப் பாதையைச்
சுட்டிக் காட்டி அந்தப் பாதையிலேயே செல்லும்படி உற்சாகப்படுத்திய கலகக்காரர்களின்
கைதான் மேலோங்குகிறது; பேராசை, பொறாமை, சோம்பல், உழைப்பில் வெறுப்பு ஆகிய
அருவருக்கத்தக்க கெட்ட குணங்கள் உழைப்பாளி மக்களைத் தொற்றிக்கொள்ளச் செய்திருக்கிற
பூர்ஷ்வா சமுதாயத்தால், வர்க்க
சமுதாயத்தால் உண்டாக்கப்பட்டுள்ள மோசமான நிலைமைகளைத் தட்டிக்கொடுத்துத் திருப்திப்
படுத்தும்படியோ அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளும்படியோ பேசுகிற பிரச்சாரகர்களின்
கை விழத்தான் செய்கிறது என்பதையும் உணரவேண்டியது முக்கியம்.மனிதனைப் பற்றிய
வரலாற்றைவிட மனித உழைப்பின் சிருஷ்டித் தன்மையின் வரலாறு எவ்வளவோ சுவையுள்ளதாகும்.
பொருள் நிறைந்ததாகும்; நூறு
வயது எட்டுமுன் மனிதன் இறந்து விடுகிறான்; ஆனால் அவனது படையல்களோ பன்னூற்றாண்டுகளினூடே நிலைத்து
வாழ்கின்றன.ஒரு விஞ்ஞானிதாம் தனித்திறனுடன் ஆய்ந்த துறையின் வளர்ச்சி வரலாற்றை
அறிந்திருந்தால் அவனால் கற்பனைக் கதை போல் தோன்றுகிற விஞ்ஞானத்தின் சாதனைகளையும்
அதன் வளர்ச்சியையும் விளக்க முடியும், விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் பொதுவானவை நிறைய உண்டு; கவனித்தறிதல், ஒப்புநோக்குதல், பயில்வது ஆகியவை இரண்டிலும்
தலைமைப் பாத்திரம் வகிக்கின்றன; எழுத்தாளனுக்கும் சரி, விஞ்ஞானிக்கும் சரி, கற்பனையும் உள்ளுணர்வும் இருந்தே தீரவேண்டும்.இலக்கியச்
சிருஷ்டித் தன்மை என்பது குணச்சித்திரங்களையும் ‘மாதிரிகளையும்’ உருவாக்கும் விஷயம் சம்பந்தப்பட்டதாகும்; அதற்குக் கற்பனையும் புனைதிறனும்
தேவைப்படுகின்றன.
ஓர் எழுத்தாளன் தனக்குத் தெரிந்த ஒரு கடைக்காரனையோ அரசு ஊழியரையோ தொழிலாளியையோ
பாத்திரமாக வடிக்கும்பொழுது, அவன் ஒரு குறிப்பிட்ட தனி நபரை ஏறத்தாழ அப்படியே படம்
பிடித்த மாதிரி சிருஷ்டித்திருந்தால் அது வெறும் புகைப்படமாகுமே தவிர அதற்கு மேல்
ஒன்றுமில்லை. அதற்கு ஒரு சமுதாய முக்கியத்துவமோ அறிவூட்டவல்ல பொருட் குறிப்போ
கொஞ்சமேனும் கிடையாது. மனிதனைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ நாம் பெற்றிருக்கும் ஞானத்தை
விரிவாக்க அநேகமாக அறவே உதவாது.ஆனால் ஓர் இருபது, ஐம்பது அல்லது ஒரு நூறுகடைக்காரர்களுக்கோ அரசு
ஊழியர்களுக்கோ, தொழிலாளிகளுக்கோ
அலாதியாயமைந்த மிகவும் தனித்தன்மைக் குறிப்பான வர்க்க குணாம்சங்களையும், பழக்கங்களையும், ரசனைகளையும், அங்க அசைவுகளையும், நம்பிக்கைகளையும், பேச்சுத் தோரணையையும் பொதுவாக்கி
அவற்றையெல்லாம் தனி ஒரு கடைக்காரனாக, ஒரு அரசு ஊழியராக, ஒரு தொழிலாளியாக சுருக்கித்தர முடியுமானால் அதன் வழியாக
அந்த எழுத்தாளன் ஒரு மாதிரியைப் படைக்கிறான்; அதுவே கலையாகும். கலைஞனிடமுள்ள விரிவும், வாழ்க்கையைப் பற்றிய வளமான
அனுபவமும் அவனுக்கு ஒரு சக்தியைத் தருகின்றன; விஷயங்களைப் பற்றி அவன் கொண்டிருக்கிற கண்ணோட்டத்தைத் தவிர, அதாவது அவனுடைய அகநிலைத்
தன்மையைவிட அந்தச் சக்தி எவ்வளவோ மேலானது. சாராம்சத்திலே பார்த்தால் கற்பனை
என்பதும் உலகத்தைப் பற்றிச் சிந்திப்பதன் ஒரு முறையேயாகும். ஆனால் இது பிம்பங்களை
வைத்துச் சிந்திக்கும் முறையாகும். கற்பனை என்று சொன்னால் பொருட்களுக்கும்
இயற்கையின் பஞ்ச பூதங்களுக்கும் மனிதகுணங்களையும் மனித உணர்ச்சிகளையும்
நோக்கங்களையும் கூடக் கற்பித்துக் காட்டுவதிலிருக்கிற திறமை என்றும்
சொல்லலாம்.காற்று “முனகுகிறது”,“சிணுங்குகிறது” என்றும் சந்திரகலையின் “சிந்தனையில் தோய்ந்த ஒளி” என்றும், “மழலை பேசும் நீரோடை” என்றும் “முணுமுணுக்கும் அருவி” என்றும் இன்னும் இவை போன்ற இதர பல
சொற்களை நாம் கேட்கிறோம், சொல்கிறோம்; இச்சொற்களின் நோக்கம் இயற்கையின் தோற்றங்களுக்கு மேலும்
ஜீவகளையூட்டிக் காட்டுவதேயாகும்.இலக்கியத்தில் கற்பனாவாதம் யதார்த்தவாதம் என்ற இரண்டு
போக்குகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன. யதார்த்தவாதம் என்பது, மக்களையும் அவர்களுடைய வாழ்க்கை
நிலைமைகளையும் உண்மையாக, மேல் பூச்செதுவும் பூசாமல் சித்தரித்துக் காட்டுவதாகப்
பொருள்படும். கற்பனாவாதத்துக்குப் பல வரையறைகள் கூறப்படுகின்றன; ஆனால் எல்லா இலக்கிய வரலாற்றாசிரியர்களுக்கும்
திருப்தியளிக்கிற மாதிரி இதுவரைகறாரான முழுமையான வரையறை எதுவும் வகுக்கப்
பெறவில்லை. ஏன் எழுதத் தொடங்கினேன் என்ற கேள்விக்கு நான் தரும் விடை இதுதான்; நான் எழுதத் தொடங்குவதற்கு
முதற்காரணம், அழுத்திக்
கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது, இரண்டாவது காரணம், என்னுள் காட்சிக் கருத்துப் பிம்பங்கள் நிறைந்திருந்ததால்
என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. இதில் முதற் காரணமாயிருக்கிறதே, அது எனது சாரமற்ற வாழ்க்கையில்
பச்சைப்பாம்பு, பருந்து
பற்றிய கதை, பற்றியெரியும்
இதயத்தின் கதை, கடற்பறவை
முதலான கற்பனைகளைப் புகுத்த முயற்சிக்கும்படி செய்தது, இரண்டாவது காரணமாயிருக்கிறதே, அது இருபத்தாறு ஆண்களும் ஒரு
பெண்ணும், ஆர்லாவ் தம்பதிகள், ரௌடி என்ற யதார்த்தவாத ரீதியான
கதைகளை எழுதும்படி செய்தது.
கார்க்கி ஏன் எழுதத் தொடங்கினார்?
(மாக்ஸிம்
கார்க்கியின் ‘ நான்
எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்’ நூலிலிருந்து. தமிழாக்கம்: ஆர்.கே.கண்ணன்) nandri theekkathir