கடத்தல் கலாச்சாரம் : எதிர்ப்பு தினம் கூட்டம் , மார்ச் 29 திண்டுக்கல்லில்.
சுப்ரபாரதிமணியன்
குழந்தைகள் கடத்தல் என்பது விநோதமான விளையாட்டுத் தனமாய் உயிர்களை பலி
வாங்குகின்றன குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதற்காய் நண்பர்களுடன் செய்த கடத்தல் நாடகம் கொலையாகியிருக்கிறது. குழந்தைகளுக்குள் இவ்வகை துர்குணங்கள் வளர்ந்து குடும்பச் சூழலைச் சீர்குலைக்கின்றன.
இதன் மறுபுறமாய் குழந்தைகள் கடத்தல் என்பது சட்டநெறிமுறைகளுக்கு எதிராக குழந்தைகளை அழைத்துச் செல்லுதலும் குழந்தைக் கடத்தல் என்றே வரையறை செய்யப்படுகிறது. இவ்வகை சமூகக் கொடுமையாக நீண்டு வருகிறது.
பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள் மற்றம் பொது இடங்களில் மிரண்டபடி தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திசைமாற்றி கடத்தப்படுவது சாதாரணமாகி விட்டது. ஒரு சில நேரங்களில் அவ்வகைச் சிறார்களின் பரபரப்பை சுலபமாகக் கண்டிருக்கிறேன். அவர்களை அணுகி எதையாவது பேசினால் போதும், பெரிய ஆவலாகி விடுகிறது அவர்களுக்கு. சுலபமாக அடைக்கலமாகி விடுகிறார்கள். அன்பான வார்த்தைகள் போதும் அவர்களை வசியப்படுத்துவதற்கு, கொஞ்சம் வார்த்தைகளும் எளிமையான வாக்குறுதிகளும் போதும். தங்களின் திரை நாயகர்களைக் காண வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவர் சிறுமியர் கூட்டங்கள்; பெற்றோரின் அரவணைப்பு இன்றி தவித்து வெளியேறி எங்காவது அடைக்கலமாகும் சிறுவர்கள்; கட்டுப்பாடு என்ற பெயரில் இறுக்கப்படும் சூழல்களின் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க ஒடி வருபவர்கள் எனத் தொடர்கிறது. சமீபமாய் பெற்றோரை மிரட்டிப் பணம் பெற நண்பர்களுடன் நாடகம் நடத்துவதும், பள்ளிகளில் சுமைகள் தாங்காமல் தாங்கள் கடத்தப்பட்டதாய் தகவல் தந்து பெற்றோரைப் பதற வைத்திருப்பதும் நடந்து வருகிறது. குழந்தைகள் தங்களின் எதிர்ப் புணர்வை வெளிக்காட்ட இவ்வகை நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். இதன் மறுபுறமாய் சமூகக் கொடுமையின் அங்கமாக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அடிமைப்படுத்தும் நோக்கங்கள், வறுமை, பண ஆசை, தவறான வழி காட்டல் போன்றவை குழந்தைக் கடத்தலுக்கு முக்கியமானக் காரணங்களாகின்றன. தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைக் கடத்தல் வெகு சகஜமாகி விட்டது.
தேவதாசி முறை
மற்றும் பெண் குழந்தைகளை கோயிலுக்குக் காணிக்கையாக்குதல் போன்ற மதம் சார்ந்த நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 'மாத்தம்மாக்கள்' பெருகிக் கொண்டிருக்கின்றன. கன்னிப்பெண்களுடன் உடல் உறவு கொள்வதால் பாலின வியாதிகள் மறையும் என்ற மூட நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. விபச்சாரத்தால் பெருகும் பாலியல் நோய்களிலிருந்து தப்பிக்க இளம் பெண்களுடன் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர்.
வறுமையில் வாடுபவர்களை தொழில் வசதி
காட்டி சட்டத்திற்குப் புறம்பாக கூட்டிச் செல்லப்பட்டு வெளி மாநிலங்களில் குறைந்த சம்பளத்திற்குக் கொத்தடிமைகளாக வைக்கப்படுகிறார்கள். படிப்பறிவில்லாதப் பெற்றோர்கள் இதற்கு உடன்பட்டு விடுகிறார்கள். விளிம்பு நிலை மக்களின் வெளி உலகு பற்றின அறிவின்மையும், வெகுளித்தனமும் இதற்கு உடந்தையாகி விடுகின்றன. உலகமயமாக்கல் இடம் பெயர்வைச் சாதாரணமாகிவிட்ட நிலையில் உள்ளூரிலேயே அகதிகள் உருவாக்கப்படுகிறார்கள். இயற்கைச் சார்ந்த நாசங்களும், தண்ணீர் பிரச்சனைகளும், வேலையின்மையும் அகதிகளாய் மக்களை இடம் பெயரச் செய்யும்போது குழந்தைகள் மலினமாகி விடுகிறார்கள். இவ்வகைத் தொழிலுக்கு உடன்படுவதும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் ஒருங்கிணைக்கப்பட்ட கும்பல்களால் நடைபெறுகிறது. இவற்றுக்கு பல இடங்களில் சில காவல்துறையினரும் உடந்தையாக இருக்கின்றனர். தார்மீக நெறிகளுக்கு எதிராகவும், குழந்தைகளை நேசிக்கும் மன இயல்பு அற்றவர்களும் இதை ஒரு தொழிலாகக் கைக்கொள்ளுவதில் அவர்களின் மனம் இறுகி வரும் சமூக நிர்பந்தத்தை காண முடிகிறது.
வெளிமாநிலங்களுக்கு பல்வேறு வகைத் தொழில்களுக்கும் கொத்தடிமைகளுக்குமென்று குழந்தைகள் சாதாரணமாய் கடத்தப்படுகின்றனர். சென்னை போன்ற பெரும் நகரங்களில் புகைவண்டி நிலையங்களில் குழந்தைகள் கும்பலாய் கைது செய்யப்பட்டு மீட்கப்படுவது செய்தித்தாளின் சாதாரண நிகழ்ச்சிகளாகி விட்டன. தெருவோரச் சிறுவர்கள் தங்களின் பாதுகாப்பின்மையை உணர்ந்து அலைபாய்தலில் வெவ்வேறு வகை முதலாளிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
சமீபத்தில் நண்பர் ஒருவரின் கல்லூரி படிக்கும் மகள்
இவ்விதமான கடத்தலில் இருந்து தப்பித்தாள். அந்த நண்பர் நடந்ததை எண்ணி நிலை குலைந்து விட்டார். அப்பெண் கல்லூரியில் கம்யூட்டர் சயன்ஸ் படிப்பவள் என்ற முறையில் இமெயில் பெற்றிருக்கிறாள். நண்பர் தன் வசதியை மீறி அவளின் படிப்பிற்கென்று கணினி வாங்கித் தந்திருக்கிறார். ஒரு நகரத்தின் செல்வந்தர் மகன் ஒருவன் அப்பெண்ணின் இமெயில் முகவரியை அறிந்து கொண்டு தகவல்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறான். முதலில் அவற்றை அலட்சியப்படுத்தியப் பெண் சுவாரஸ்யம் பொருட்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். இருவரும் குடும்பம் பற்றியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இமெயில் மூலமே கல்யாண விஷயங்களை பேசி இருக்கிறார்கள். எதேச்சையாக நண்பருக்கே இமெயில் ஒன்றின் 'பிரிண்ட் அவுட்' கிடைக்கவே பதறிப்போய் நண்பர் ஒருவரிடம் கொண்டு சென்று காட்டியிருக்கிறார். சந்திக்காமல் இமெயில் தகவல்கள் மூலம் பெற்றோரை முழுவதும் நிராகரித்து கல்யாணம் வரைக்கும் போய்விட்டிருக்கிறது. முழுத் தகவலையும் பெண்ணிடம் இருந்து பெற்றுக் கொண்ட நண்பர் நிலைகுலைந்து போனார். அந்தப் பெண் கல்லூரியில் படிப்பவளாக இருந்தாலும் வெளி உலகை அறியாதவள். இமெயில் மூலம் நண்பரைப் பெற்றதில் என்ன தவறு. கல்யாணம் வரைக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டது என்ன தவறு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தைகள், பெண்களைக் கடத்துவது சம்பந்தமாக கட்டுரையொன்று எதேச்சையாய் நண்பருக்கு நான் கொடுக்கவும் அதைப் படித்தவர் இன்னும் நிலைகுலைந்து போனார். அக்கட்டுரையை நண்பர் தன் பெண்ணிடம் தந்திருக்கிறார். அவள் அவளின் இமெயில் நண்பர் அப்படியானவர் அல்ல என்று தீர்க்கமாய் பேச ஆரம்பித்துவிட்டாள். அவளே கல்லூரித் தோழி ஒருத்தி மூலம் இமெயில் நண்பரின் நகர விலாசத்தைக் கண்டுபிடித்து விபரங்கள் சேகரித்திருக்கிறாள். தோழி தந்த விபரங்கள் அதிர்ச்சி தந்திருக்கின்றன. இமெயில் நண்பர் போலீசால் தேடப்படுபவர் என்பது இறுதியில் தெரிந்திருக்கிறது. அவனை நம்பி அவளின் கடைசி இமெயில் தகவலின்படி அவள் கிளம்பிப் போயிருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்பதை அந்தப் பெண் உணர்ந்து ஆரம்பித்திருக்கிறாள்.
திருமண வயதுப் பெண்கள் வசீகரமான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். ஏழ்மையானப் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு திருமண வாய்ப்பு அமைந்தால் போதும் என்று ஒத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாடுகளுக்குள்ளோ, வெளிநாடுகளுக்குள்ளோ திருமணமான பின்பு கடத்தப்படுவதும், விபச்சாரத்திற்காக அலைக்கழிக்கப்படுவதும் பின்னர் நிகழ்கின்றன. எவ்விதப் புகார்களும் இல்லாமல் காவல்துறைக்கென்றத் தகவல்கள் கூட இல்லாமல் பல பெற்றோர்கள் முடங்கிவிடுகிறார்கள். உலகமயமாக்கலில் பெண்களும், குழந்தைகளும் சந்தைப் பொருளாகிவிட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் கடத்துவது என்பது நிறைய பணம் தரும் கவர்ச்சிகரமானத் தொழிலாகியும் விட்டது.
இவை தவிர
பிச்சையெடுத்தல், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றி விற்பனை செய்தல், போதைப் பொருட்களைக் கடத்துதல், வீட்டு வேலைகளுக்காகக் கடத்துதல், தத்தெடுத்தல் என்ற பெயரில் குழந்தைகளைக் கூட்டிச் சென்றுத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.
குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் வலுவானதாக இல்லை. அவை குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கான பல்வேறு ஓட்டைகளை வைத்திருக்கின்றன. தொடர்பு சாதனங்களும், பத்திரிகைகளும் உலகத்தை நம் முன் சுலபமாகக் கொண்டு வந்த காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படுவது சாதாரணச் செய்திகளாக நமக்கு வந்து சேர்கின்றன.
குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சனையாக இது விசுவரூபிக்கப்படுகிற போது, அவை தடுக்கப்படுவதற்கான இன்னும் வழிகள் உருவாகும். தடுப்பு மற்றும் மறுவாழ்வு முறைகள் அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்ட வரும். இதற்காக பல தொண்டாகவே நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், மீட்பு முயற்சிகளையும் எடுத்து வருவது சமீபமாய் அதிகரித்திருக்கிறது.
இவ்வகைக் கடத்தல்கள் பெற்றோர் மத்தியில் குழந்தைகளைப் பேண
வேண்டிய பொறுப்பையும், உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தர வேண்டியப் பாதுகாப்பைப் பற்றின எண்ணங்களை வலியுறுத்தலாம். குழந்தைகளுக்கும் வீட்டை விட்டு வெளியேறுதல் பற்றின அச்சத்தை மேலோட்டமாகக் கிளப்பலாம். ஆனால் சமூக நிலைக் காரணங்கள் இவ்வகைக் கடத்தல்களைத் தொடர்ந்து நிகழ்த்தாமல் தடுத்துவிடுமா என்ன?
குழந்தைத் தொழில் உழைப்பு தடை
செய்யப்படுதலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அமுலாக்களும், மறுவாழ்வும், அடிப்படைக் கல்வியின் அவசியமும் கடத்தல் கலாச்சாரத்தை வலு இழக்கச் செய்யும்.