" பொழுதுகளை வேட்டையாடுகிறவன் " : சேதுபதியின்
கவிதைகள்
சுப்ரபாரதிமணியன்
சேதுபதியின் மேடைப் பேச்சில் கவிதைத்
தெறிப்புகளைக் கூர்ந்து கவனிக்கிற போது அவை கவிதைக்குள் அடைபடுகிறதைப்பற்றி யோசித்துப்பார்த்திருக்கிறேன். தமிழகத்தின்
சிறந்த மேடைப்பேச்சாளர்களின் பட்டியலில்
அவர் பெயர் சமீப ஆண்டுகளில் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப்பட்டியல் வெகு
நீளமானதல்ல. ஆனால் அவரின் கவிதை முயற்சிகள் மேடைத் தெறிப்புகளைத் தவிர்த்து விட்டு
இயங்கி வருவதை அவரின் தொகுப்புகள் மூலம் இனம் காண எவராலும் முடியும். அப்படியொரு
தொகுப்புதான் சமீபத்திய “பொழுதுகளை வேட்டையாடுகிறவன் “
இத்தொகுப்பில் அமைந்திருக்கும்
கவிதைகளைப் பாகுபடுத்துகிற சிரமத்தை வாசிப்பவர்களுக்குத் தர வேண்டாம் என்று சுமார்
10
பிரிவுகளாக்கித் தந்திருக்கிறார். அது ”கவிதையும்
நானும்“
என்பது முதல் ”பழங்கதையன்று ” என்பது வரை விரிந்திருக்கிறது.
வெவ்வேறு வகையான அனுபவங்களில் திளைத்திருப்பது தெரிகிறது. ” என்னில்
இருந்து பிறந்த கவிதை, நான் என்பதே பன்மை “ என்பதை
அவர் வரித்துக் கொண்டிருப்பதில் தனிமனித அனுபவங்களை சமூக அனுபவங்களாகக் கொள்கிற
போக்கும் மனமும் தென்படுகிறது. இதுவே அவரை ஒரு சமூக அக்கறை கொண்ட படைப்பாளியாக
எப்போதும் காட்டி விடுகிறது.
“ என்ன
செய்யப் போகிறீர்கள்“ என்ற
கவிதையில் அவர் மனசாட்சியாய் எழுந்து
குடையும் நிகழ்வுகளைச் சொல்லி அவர்
கேட்கும் கேள்வியில் அவரின் சார்பை
மறுக்காமல் கவிதை எந்தப் பக்கம் நிற்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது.
கற்றுக் கொண்ட கவிதை வித்தைகளை மத்தாப்பு
ஒளியில் “
என்றுமுள தென்றமிழில் ‘ வெகு
கணக்காகப் புழங்கு சொற்களைக் கொண்டு நடமாடவிடுகிறார். மெல்லிய வாசிப்பிற்கு இடம்
தராமல் முகத்தில் அறைந்து சமூக நடப்புகளை
வெகு அருகில் கொண்டு வந்து விடுகிறார்.கவிதையில் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள்
முக்கியம். அதைப் பல்வேறு கோணங்களில் கவனித்துப் பார்த்திருப்பதை இக்கவிதைகள்
காட்டுகின்றன. தமிழ்ப்பேராசிரியர் என்ற வகையில் மொழியின் ருசியை. பேச்சில் கண்டு
கொண்டவர் என்ற வகையில் அந்த ருசியை
இதிலும் ஏற்றுகிறார். அந்த ருசியை வாசகனும் உணர வைக்கும் வகையில் கவிதையில்
இயங்குகிறார். கவிதையை எங்கு நிறுத்த வேண்டும், மவுன
யோசிப்பிற்காக எங்கே இடைவெளி தரவேண்டும்
என்பதில் அவரின் அக்கறை தெரிந்து விடுகிறது. நவீன கவிதையில் சிக்கல்களும்
மனப்பிறழ்வுகளும் சாதாரணமாகி அந்த மொழியையும் சிக்கலானதாகவே மாற்றி விடுகிறது.
அந்த வகையில் மொழி கொண்டு செல்லும் பாதையைச் சிக்கலானதாகக் காட்டாமல் திசை
தெரியும் பாதையாகவே மாற்றி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நினைக்கிற போது
பேச்சாளரின் முத்திரையை தவிர்க்க இயலாது.
”எல்லாம்
ஆன பரம்பொருள் என்னைத் தன்னுள் தாங்கியது ” என்று அவரே
குறிப்பிடுவது போல பேச்சாளன் பிம்பத்தையும் அவர் தாங்கிக் கொண்டேயிருக்கிறார்..
“பொதுவாய்
நடக்கும் பூமியின் மேல் பொறுமையாய் இருப்பதில் நட்டமென்ன ”என்ற
பாவத்தை எல்லோருக்குள்ளும் கொண்டு வந்து விடுகிறார். பால்ய காலம், தொடர்ந்து
துன்புறுத்திக் கொண்டே இருக்க, “ வாடகையாகி விட்டது வாழ்க்கையும் “ என்ற தொனி தொடர்ந்து வந்து விடுகிறது.
நுகர்வுச் சூழல் தொடர்ந்து இம்சித்துக்
கொண்டே இருக்கிறது. நம்முடைய காலத்தை அந்தச் சூழல் யாருடைய காலமாகவோ மாற்றி
விட்டது. ஆனால் ”சங்கமிக்கும் கணத்தில்
வானமாகி கவிதையாய் நிரப்புகிறார்.
பிழைப்பு யாரையெல்லாம் எப்படி மாற்றி விட்டது என்பதை வியாசமுனிவன் சொல்லாத
குறிப்புகளில் கவிதையில் பல வேடங்கள் பூண்டு திரிய வைக்கிறது. "சனீஸ்வரன்
எந்தக் குளத்தில் மூழ்கிப் போக்குவான் பாவத்தை" என்று திரிந்து போக வேண்டியிருக்கிறது. தனிமை
பற்றிய யோசிப்புகள் நிறையத்
தென்படுகின்றன. இன்றைய தலைமுறை கைபேசி உலகத்துள் எப்போதும் இருப்பதாகத்
தோன்றினாலும் தனிமைக்குள்ளும், அந்நியமான சூழலுக்குள்ளும்
மாட்டிக்கொண்டிருக்கிறது.
"எல்லோரும் ஊருக்குப் போயாச்சு/ ஆனாலும் கதவுக்கு
வெளியில்/யாரோ காத்திருப்பதாய் உணர்வு/சாத்தியமில்லை/ கழிவறையிலும்கூடத்
தனிமை" என்கிறார்.
புத்தக வாசிப்பு, சேகரிப்பு
பற்றிய ஒரு கவிதையை நான் திரும்பத் திரும்ப வாசித்தேன் . அப்படித்தான் கறையான்
தின்னப் பல புத்தகங்களை நானும் கொடுத்திருக்கிறேன்.
“படித்தே முடித்து விட்டன கரையான்கள்.
தோற்ற அவமானத்தில் / சுருங்கிய முகம்
பார்த்துக்/ கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது/ அலமாரிக்கதவு. ”
பேச்சின் அரவம் விட்டுச் சென்ற ஓசை நயம்
பல் இடங்களில் புதுப் பாதியாய் மிளிர்கிறது. இன்னொரு புறம் வாழ்க்கை அனுபவங்களை
ஆலகால விசமாய்ச் செரித்துக் கொண்டு இம்சங்களையும் கொட்டித் தீர்த்துக் கொள்கிறார்.
பேச்சில் ஒரு நீண்ட வாக்கியத்தை உதிர்த்து விட்டு விடும் மவுனத்தைப் பல கவிதையின்
இறுதியிலும் அடுத்த்தன் தொடக்கத்தையும் கண்டுணர்ந்து வாசகனை நிறுத்தி வைத்து
விடுகிறார். சேதுபதியின் கண் முன் விரிந்து
கிடக்கிற வாழ்க்கை அனுபவங்களை கவிதை வாசகன் உணர்ந்து கொள்ளும் வகையில் தூரத்து நட்சத்திரத்தின் வெளிச்ச நம்பிக்கையைக்
காட்டுபவை அவரின் கவிதை மனம் போலவே கவிதை வரிகளும்.
தமிழ் ஆசிரியர், பேச்சாளர்
என்ற பிரமைகளை உடைத்தெறிபவை இவரின் கவிதைகள்.
“
இறுகிக் கிடந்த / இலக்கணக் கதவை உடைத்து/ வெளி உண்டாக்கிய
கவிதை சொன்னது : நான் என்பதே பன்மைதான் தோழனே” என்ற
அவரின் ஒரு கவிதையை முன்னர் சொல்லியிருந்தேன். அவர் இன்னும் பல கதவுகளை கவிதைச்
செயல்பாட்டால் உடைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ( ரூ 100, பாவை
ப்ப்ளிக்கேசன்ஸ், சென்னை )