திருப்பூர் இலக்கிய விருதுகள் 2015
(சுகந்தி சுப்ரமணியன் நினைவுப்பரிசு ) :
பரிசு பெற்ற சில நூல்கள்
1. முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள் :
ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான
உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். . வாழ்கிற பெரும்
கனவிற்காக இன்னும் துயரங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் அகளங்கன்
இந்தத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் அறுபது வயதைக்கடந்திருக்கிறார் அகளங்கன். அவரின் எழுத்துப்
பணியில் கவிதைகள், கட்டுரைகள், நாடகம் என்றிருந்தாலும் சிறுகதைத் தொகுப்பு என்ற
வகையில் இதுதான் முதலாவதாகும். 42 வது வயதில் அவரின் இந்நூல் 21 சிறுகதைகளை
உள்ளடக்கியதாகும். இனத்தன்மையின் தனித்துவமும், வன்னிப்பகுதிமக்களின் இன்றைய
வாழ்வியலும் என்ற வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன..வவுனியாவின் பம்பைமடு என்ற
விவசாய கிராமத்தின் மண்ணின் வனப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் அசைபோடும்
மனிதர்களைக் காட்டுகிறார். மரபு வகையில் அமையப்பெற்ற நடத்தை முறைகளின் விசித்திரங்களையும்
வாழ்வியலையும் போர்க்காலச் சூழலையும் அதன் பின்னதான வாழ்க்கையையும் விரிவான அளவில்
எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆசிரியராக பணிபுரிந்தவர் என்ற அளவில் நகர்புற ஆசிரியப்பணியின் சூழல் சரியாக துருவ நட்சத்திரம் போன்ற கதைகளில்
வெளிப்பட்டிருக்கிறது. ஆசிரியரால்
உருவாக்கப்படும் சிறுவர்கள் ஆசிரியர்களை நினைவு கூர்தல் சகஜமே. அந்த நினைவுகூறலின்
உட்சபட்சமாய் ஏழேழு பிறப்பும் ஆசிரியராக
பணிபுரிய வேண்டும் என்ற அவா எழுவது உன்னதமான ஆசிரியப்பணியின் லட்சியமாக
இருக்கிறது. அதேபோல் எழுத்தாளன் ஆவது என்கிறதும் கூட. பள்ளி போர்க்காலச் சூழலில்
படும் அவஸ்தையை பல கதைகளில் எடுத்துரைக்கிறார்
இதைச் சொல்வதற்கு அவரின்
ஆசிரியப்பணியின் நேர்மை முன்னிற்கிறது.
மிருகங்களும் தாவரங்களூம், பறவைகளும் வெறும்
குறிப்பீட்டளவில் மட்டுமில்லாமல் அதன் வெவ்வேறு வகைப் பெயர்களுடனும் இயல்புடனும்
இவரின் கதைகளில் தென்படுகின்றன. ஆண்களின் உளவியல், மற்றும் கிராமிய பெண்களின்
உளவியலை கூர்ந்து நோக்கும் உரையாடல்களால் நிரம்பியிருக்கிறது. வழக்கமானக் கட்டமைபை
தகர்க்கும் பெண்களும் இதில் தென்படுகிறார்கள். புலம்பலுக்குள் மாட்டிக்
கொண்டவர்களும் இருக்கிறார்கள். குமார் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு பல
கதைகளின் உருவாக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அகதிமுகாம் நிலைகளும் போர்சூழலும் தீவிரமாக நம்
கண்களில் நடமாட வைத்து விட்டார். அதேபோல் வவுனியா பிரதேச நில அமைப்பும்,வைத்யசாலைகளும், விவசாய
நிலங்களும் மண்ணின் மணத்தோடு
பதிவாகியுள்ளன. ( முற்றத்துக்கரடி – அகளங்கன் சிறுகதைகள்- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியீடு,
கதிர்காமர் வீதி, அமிர்தகழி,
மட்டக்களப்பு )