அரசியல் செயல்பாடாகவே பார்க்கும் நோக்கு
இரா காமராசுவின் இரு சமீபத்திய நூல்கள்:
சுப்ரபாரதிமணியன்
கல்வித்துறை சார்ந்து
இயங்குகிறவர்களுக்கு சில எல்லைகள், வரையறைகள்
உள்ளன. துறை சார்ந்த இலக்கியக்கருத்தரங்குகள், பீடம் சார்ந்த உபதேசங்கள் ஆகியவை
அவர்களுக்கு மிக முக்கியமானதாகவே தோன்றும். இரா காமராசு அந்த எல்லைகளைத் தகர்க்க
முயல்கிறவர்.
வரலாற்றுக்குள்ளும் காலச்சூழலுக்குள்ளும்
ஓர் இலக்கியப் படைப்பை புரிந்து கொள்ள வற்புறுத்துகிறவர்.மதிப்புக் கல்வி குறித்தும்
அக்கறை கொள்கிறவர். கல்வியின் மனித நேயக் குறிக்கோள்களை
எட்டுவதற்கு மதிப்புக் கல்வி மிக முக்கியம் என வலியுறுத்துபவர். இயற்கை மனிதனைக்
கொண்டாடிய காலம் இருந்தது. மனிதன் உலக இன்பத்தை வாழ்வாக வரித்து வாழ்ந்த காலம்
உண்டு இன்றைய சூழல் கேடுகள் நிறைந்த
வாழ்வில் இவையாவும் இனிய எச்சங்களாக
நிற்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதன் மூலம் இயற்கையோடு இணைந்த
வாழக்கையை வலியுறுத்துபவர்.சுரண்டப்படும் இயற்கை பற்றி தொடர்ந்து
பேசுபவர்.புறவயமான பொருட்களும் அகவயமான உணர்வுகளும் இணைகிற ஒரு பரஸ்பர செயலுறவே
அழகுக்கு அடிப்படை என்று அழகியல் சார்ந்து இயங்குபவர். மக்களின் நம்பிக்கைகள்
சார்ந்து இயறகை வழிபாடாக உருவாகிய
நாட்டார் தெய்வ வழிபாடு, காலப்போக்கில் புராணக்கதையின் மூலமும் பிராமண
இடையீட்டின் மூலமும் பெருந்தெய்வ மரபோடு தொடப்புறுத்தப்பட்டு இன்று புனிதமான
பெருந்தெய்வ வழிபாடாக் மாற்றப்பட்டு வருவதை கட்டுடைத்துக் காட்டி வருபவர். இந்த
அடிப்படையில் இத்தொகுப்பின் கட்டுரைகளை அணுகுவது சுலபமாக இருக்கும். அவரின்
விமர்சன நோக்கின் வலிமையைப் பறைச்சாற்றும். அந்த வகையில் சமீபத்தில் அவரின் இரு
கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 1.. படுவழிப் படுக ( சங்க இலகியக்
கட்டுரைகள்) 2. கட்டற்ற கவிதை
அத்துமீறும் பயணம் ( கவிதை சார்ந்த உரையாடல்கள் ). இரண்டும் என்சிபிஎச்
வெளியீடுகள்.
அறம் பற்றிய பல்வேறு சிந்தனைகளை
விவாதங்களாக இந்நூலில் முன் வைத்திருகிறார். தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் எனப்
பகுத்த்றிவு சமூக வரலாற்றை அப் பின்னணியில் காணும்போது
பொதுமக்கள், உழைப்பாளர்கள் , பெண்கள் உள்ளிட்ட குடிமைச்சமூக அமைப்பு
உருவாக்கத்தில் கட்டமைக்கப்ப்ட்ட அறக்கோட்பாட்களுக்குள் நின்று பேசுவதில் புதிய
வெளிச்சம் கிடைப்பதில் அக்கறை கொண்டிருக்கிறார். போதிக்கப்பட்ட அறங்களுக்குள் செயல்பட்ட அதிகார உருவாக்கங்கள் என்பதையும்
விவாதப் பொருளாக்கிறார். பழமொழிகள் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிற போது பொதுப்புத்தியில்
நாம் நினைத்திருக்கும் பழமொழி சார்ந்தவை பாரம்பரிய அனுபவங்கள் என்ற நியதியைத்
தகர்த்து அவை எழுந்த காலத்தின் சமூக உணர்வோட்டத்தின் உந்துதலைக் கொண்டிருப்பதை
விளக்கும் கட்டுரை விசேசமானதாகும். தனிமனித நலனும் தனிமனித ஊட்டங்களும் தனிமனித ஆளுமைத்
திறன் வளர்க்கும் விதமாகப் பழமொழியில் இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டி கூட்டுமனம்,
சமூகமனம் இவற்றுக்கு மாற்றாகத் தனிமனித மனத்தைக் கட்டமைக்கும் முயற்சியாக காணும் ஒரு
புதிய பார்வையையும் வெளிப்படுத்துகிறார். நிலம், நீர், வளி ஆகாயம், சூழல்,
உயிர்கள் தரத்திலும் அளவிலும் சமநிலை எய்தி பிரபஞ்ச இயக்கத்தை உறுதி செய்திட
இன்றைய அறிவியல் ச்ழலியல் முன் வைப்புகளுக்கான எடு கோள்கள் நற்றிணை முதலான சங்க
இலக்கியங்களீல் நிலைபெற்றிருக்கின்றன் ( 61 ) என அதை எடுத்தியம்பும் ஆய்வுகள்
இன்றைய சுற்றுசூழல் பிரச்சினைகள் குறித்த
உச்ச காலத்தில் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. பின்நவீனத்துவ உலகம் விளிம்பு நிலை மக்களையும்
நாட்டார் தெய்வ முன்நிறுத்தலையும் கைக்கொண்டிருக்கிறது. நிறுவன சம்யம்
சார்ந்தவற்றைப் புறக்கணித்து இதற்கு
மாற்றாக நாட்டார் சமய மரபானது
முழுமுதற்கடவுளோ, ஆகம் நெறிகளோ மையமோ இல்லாத்தை விளக்கி மாற்று கலாச்சார
அம்சங்களையும் விளக்கும் பண்பாக பல கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. நவீன வாதம்
சார்ந்த உரையாடலாகவும் அவற்றை வடிவமைத்திருகிறார். காலச்சூழலே ஒரு படைப்பாளியின்
செயல்பாட்ட்டையும் படைப்பையையும் ஒரு சேர பார்த்து நியாயம் கொள்வதை எப்போது
ஏற்பவர் என்ற வகையில் பாரதி, ஆறுமுக
நாவலர் உட்பட பலரை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.இன்றைய உலகமயமாக்கல் சூழலும்
இந்துத்துவா வன்முறையும் முன்வைக்கும் ஒற்றைப் பண்பாட்டை தகர்த்து பண்டையப் பண்பாடும் பன்மைப்பண்பாடுதான் என்பதை
நிறுவுகிறார்..இன்றைய பண்பாட்டு விளக்கங்களை அக்காலப் பண்பாட்டில் பொருத்திப்
பார்க்க இயலாது. எனினும் அடித்தள மக்கள், விளிம்பு நிலையினர் போன்ற
கருத்தாக்கங்களின் மூல வித்துக்களைப் பழந்தமிழ்ப் பனுவல்களில் இனம் காண முடிவதையும்
சொல்கிறார் ( 96) . பழந்தமிழ்ப் பனுவல்களை முற்றிலும்
நிராகரிக்காமல் அவற்றிலிருந்து பெறப்படும் நியாயங்களை சேர்த்துக் கொள்ளும்
ஆரோக்கியமான போக்கிற்கு இது ஒரு எடுத்துக் காட்டுகிறது., சமூகவியல் நோக்கில்
ஆராயும் போக்கால் இது சாத்தியப்பட்டிருக்கிறது.
இதேப் பார்வையை நவீன கவிதை குறித்த
அம்சங்களிலும் அழுத்தமாக
முன்வைக்கிறார் இரா. காமராசு. எழுத்து என்பதை விட சமுகப்பணியும், களப்பணியும்
கொண்டவர்களின் அனுபவங்களை படைப்பிலக்கியங்களாக இதனாலேயே இவர் இனம் காண்கிறார்.இந்த
அம்சங்களே அண்ணா முதல் இன்குலாப் வரையிலான படைப்பாளர்களின் கவிதைச் செய்ல்பாட்டை
மற்றவர்களின் நிராகரித்தலை மீறி அங்கீகரிக்கிறார்.அதே சமயம் கவிஞர்களின் அகவெளியைக்கண்டடைகிற
அம்சங்களில் இவரின் தேடலுக்கு எவ்வித முட்டுக்கட்டையும் இல்லை என்பதை சமூக
இயக்கங்களில் பணிபுரிந்து கொண்டு அவர்களின் அனுபவங்களை வெளிப்படையாக்க்
கவிதைகளாக்கும் கவிஞர்கள் பற்றிய அறிமுகத்திலும் காணலாம். தன் அனுபவங்களை சமூக
அனுபவங்களாக மாற்றும் ரசவித்தையில் அனுபவங்கள்
மாறுவதைக் கூர்ந்து கவனித்துச் சொல்கிறார்.சீர்திருத்தக்கருத்துக்களை கவிதைப்பாங்கோடு இணைக்கும் லாவகத்தை பல சமூக
கவிஞர்களின் உள்ளீடான அனுபவங்களை மையமாகக் கொண்டு பேசுகிறார். வழக்கமாய்
பட்டியலிடப்படுகிற கவிஞர்களைத் தவிர்த்து விளிம்பு நிலைக்கவிஞர்களையே இவர்
புதுப்பட்டியலாக்குவது இவரின் சிறப்பியல்பு. அதில்தான் பொன் கண்ணகி முதல் தான்யா
வரை இடம்பெறுகிறார்கள். கலைப்படைப்பின் முன் எப்போதயும் விட படைப்பின்
தனித்துவத்தையும் படைபாளியின் உழைப்பையும் வேண்டி
நிற்கிற படைப்புத்தன்மை பற்றி
அதிகம் பேசுகிறார் . மொழியும்
சமூகமும் பெருத்த சிதைவுகளுக்குள்ளும் மாற்றங்களுக்குள்ளும் உள்ளாகியிருக்கும் கால
கட்டத்தில் இதன் அவசியம் பற்றிப் பேசுகிறார்.
நோகாமல் நோம்பி கும்பிடும் வித்தை அல்ல எனபதையும் விளக்குகிறார். குடும்ப
உறுப்பினர்கள் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புத்தன்மையில்
காலத்தின் வேகமும் நவீனத்துவமும் காலத்திற்குக் காலம் மாற்றமடைவதை இராஜேஸ்வரி கோதண்டம் முதல் கொமாகோ
இளங்கோ வரை தனித் தனித் தொகுப்புகளை முன்வைத்துக் காட்டுகிறார்.உள்ளெழுச்சியும் முனைப்பான
நடவடிக்கைகளும் தேக்கத்தை உடைத்து அரசியல்
எழுத்தால் அடையும் கலைத் தன்மை பற்றி நுணுக்கமாக இவை பேசுகிறது எனலாம்.ஆகாயத்தில்
பறந்தும் முட்டையிட்டும் குஞ்சு பொறித்தும் உலாவும் படைப்புகளின் மத்தியில் மண்ணில், யதார்த்த்தில்
காலுன்றியப்படைப்புகள் புதுப்பித்துக் கொள்வதை காமராசின் விமர்சனங்களால் தெரிந்து
கொள்ளலாம். எழுத்திற்கும் அனுபவத்திற்கும்
உறவு இருக்கிறது. வாழ்க்கை அனுபவத்தின் வெளி நோக்கிய படைப்பு கலையாக முகிழ்ப்பதில் இருக்கும் புனவின் சதவீதம்
குறைவாகவே காணப்பட வேண்டியது அவசியமாகிறது அவருக்கு. வாழும் நிலத்தின் மனிதர்களின்
துல்லியமான சித்தரிப்புகளை படைப்புகளில்
முன்னிலைப்படுத்துகிறார். சங்ககாலப்படைப்புகள் முதல் நவீனப்படைப்புகள் வரை
மீள்வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை காமராசு, அரசியல் செயல்பாடாகவே பார்க்கும் நோக்கில் இந்த
நூல்களை எடுத்துக் கொள்ளலாம்.
1.. படுவழிப் படுக ( சங்க இலகியக்
கட்டுரைகள்) ரூ 90
2. கட்டற்ற கவிதை அத்துமீறும் பயணம். ( கவிதை
சார்ந்த உரையாடல்கள் ). ரூ 105