நாமும் கொத்தடிமைகள்தான்: சுப்ரபாரதிமணியன் நாவல்
கோவை ஞானி
நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும்.
ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
பிறந்த காலத்தை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது/கூடாது. நிகழ்காலத்தை எப்படியோ நகர்த்தி ஆகவேண்டும். திருமணத்திற்கு வழி இல்லை என்றால் உடல் தினவை எப்படித் தீர்த்துக்கொள்ள முடியும். சோரம் போக வேண்டும். இதில் ஆண்களுக்கு இருக்கிற சில வாய்ப்புகளும், வசதிகளும் பெண்களுக்கு இல்லை. பெண்கள துயரப்பட வேண்டும். கருக்கலைப்பு என்பது எளிதான காரியம் இல்லை. எத்தனையோ சங்கடங்களுக்கிடையே செய்தாக வேண்டும். சின்னவயதில் படித்த கல்வி இப்பொழுது கை கொடுப்பது இல்லை. பெரிய படிப்பு படித்திருந்தாலும் கூலி வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும். தன்மானத்தைக் காத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் இன்றைய கூலி, உழைப்பு என்பது கொத்தடிமைத் தொழிலுக்கு மேம்பட்டதாக இல்லை. தன் வயிற்றைக் கழுவிக் கொள்ள, தன்னைச் சார்ந்தவர்களுக்கு 2 வேளை உணவாவது இட, இன்னொருவருக்கு கொத்தடிமைத் தொழில் செய்தாக வேண்டும். குடிநீர், சுகாதாரம் முதலிய வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாத அல்லது குறைந்த அளவுக்கே இருக்கிற கொட்டடிகளில்தான் குடியிருந்தாக வேண்டும். பக்கத்தில் எங்காவது நூலகம் இருந்தால் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு கொஞ்சகாலம் அலைந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு, சிந்திப்பதற்கு, வெளியிடுவதற்கு இங்கு என்ன வாய்ப்புகள் கிடைத்துவிடும். கொஞ்சம் கவிதைகள் எழுதி, தானே வாசித்து மகிழலாம். நண்பர்கள் சிலரோடு வாசித்து மகிழலாம். மீறி மீறிப் போனால் ஒரு சிற்றிதழ் நடத்தலாம். அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். தன்னைக் கவிஞன் என்று கதாசிரியன் என்று சொல்லிக் கொள்ளலாம். தன்னைத் தானே இப்படி விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனபிறகு இதுவும் சாத்தியமில்லை.
சுருக்கமாகச் சொல்வது என்றால் இன்றைய நெருக்கடிமிக்க வாழ்க்கைச் சூழலில் கனவுகளோடு, பெரிய லட்சியங்களோடு, தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கை சமூகத்தில் பெரும்பாலானர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியன் மட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்தக் கதையை நெடுங்காலமாக நிறையவே சொல்லி வருகிறார்கள். நெருக்கடிகள் அதிகரிப்பதற்கு ஏற்ற விகிதத்தில் மனிதருக்குள் தகர்வுகளும் அதிகரிக்கின்றன. இதைச் சொல்வதற்குத்தான் படைப்பாளிகள் புதிதாக எழுத வேண்டியிருக்கிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் பற்றி ஏராளமான விவரங்களை சுப்ரபாரதிமணியன் சொல்கிறார். கோவை போன்ற நகரங்களில் உள்ள பெரிய பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில 10, 15 கிலோமீட்டர் தள்ளி புதிய பஞ்சாலைகள் தொடர்ந்து எழுகின்றன. பஞ்சாலைகளோடு சேர்ந்து வரிசைகளாக கொட்டகைகள். சுமார் 20/30 அறைகள் கொண்ட கொட்டகைகள். ஒரு கொட்டகையில் ஒரு குடும்பம் தங்கலாம். கொட்டகை அளவு 14/10க்கு அடி பொதுவான கழிப்பறை. தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீர் வண்ணக் கலவையில் மாற தொலைவிலிருந்து நீர் கொண்டுவந்து விற்கிறார்கள். குடம் ஒரு ரூபாய். 8 மணி நேர வேலை என்ற கட்டுப்பாடு இப்போது இல்லை. முடிந்தால் 12/16 மணிநேரம் உழைக்க வேண்டும். பெண்களுக்கும் இரவு வேலை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வரலாம். இளம் பெண்களுக்கு திருமணத்திட்டம். 5 ஆண்டு தொடர்ந்து வேலை செய்தால் 5ம் ஆண்டின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் கிடைக்கும். அதுவரை நாள் ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் கூலி. அதற்குள் எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடியாது. யாராவது வாங்கி வைத்திருந்தால் அந்த அறைப் பெண்ணின் கற்பு பற்றி கேள்வி எழும். FM ரேடியோ வைத்துக்கொள்ளலாம். பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலை பார்த்தவர்களில் VRS பெற்றுக்கொண்டு கிடைத்த பணத்தை எப்படி எல்லாமோ செலவு செய்த பிறகு இந்தத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வரலாம். தினக்கூலி மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும். தொழிலாளர் பிரிவு, தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இந்த சிறிய நாவலில் ஆசிரியர் சொல்கிறார். இத்தகைய நம் காலத்து வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக ஆசிரியரை வெகுவாகப் பாராட்டலாம். திருப்பூர் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் சூழ்ந்த எந்த ஒரு நகரத்திலும் தொழிற்சாலைக் கழிவுகளால் எத்தனையோ வடிவங்களில் சூழல் சீர்கேடு அதிகரித்து வரகிறது. புதியவகை நோய்களால் எல்லோரும் தாக்கப்படுகிறார்கள். திருமணத் திட்டத்தில், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு உறுதி இல்லை. அப்படியே கிடைத்தாலும் திருமண வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலம் இந்தப் பெண்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு இவர்கள் உடல்நலம் சீர்கெட்டுவிடுகிறது. 30 வயதிற்குள் இவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. தாயாகும் பெருமை இவர்களுக்கு இல்லை. இப்படி ஒரு அவலம் நம் காலத்திற்குரிய அவலம். இந்து மதம் பற்றி எவ்வளவோ பேசுகிறார்கள். புதிய கோயில்கள், கடவுள்கள் உற்பத்தி ஆகிறார்கள். புதிய கட்சிகளும், தொடர்ந்து உற்பத்தியாகின்றன. இந்தியா 2020ல் வல்லரசு ஆகிவிடலாம். யார் யாரோ காணும் வல்லரசு கனவுக்காக இவர்கள் தம் வாழ்வை இழந்த நொந்து சாக வேண்டும். இத்தகைய மக்கள் இந்தியாவில் எத்தனை கோடி பேர் இருப்பார்கள். இவர்களின் தொகை 50/60 கோடிகளுக்கு குறைவாக இருக்க முடியாது. இவர்கள் மூலம் எந்த இந்தியா ஒளிரமுடியும். இப்படி ஒர சோகத்தை இந்த நாவல் நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த சோகத்திலிருந்து நம்மால் மீள முடியாது. இந்த சோகத்தோடுதான் நாமும் வாழ்ந்தாக வேண்டும். இந்த சோகத்தை மாற்ற நாம் ஏதாவது செய்ய முடியுமா? ஏதாவது செய்யத்தான் வேண்டும் படித்து சுவைப்பதோடு நாம் இருந்துவிட முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். இந்த மனிதர்களை இப்படி அழிவில் ஆழ்த்துவதில் நமக்குள்ள பங்கு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமக்கான நல்ல ஆடைகளை மட்டுமா இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
இதன் பின் நவீனத்துவ வடிவம் தேவைதானா?
தமிழ் நால்களில் காலந்தோறும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த போதிலும், 80க்கு பிறகு பின் நவீனத்துவத்தின் வருகையோடு தீவிரமான சோதனை முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. நம் கால வாழ்வுக்குள் வந்து இருக்கிற நெருக்கடிகள். தகர்வுகள் முதலியவற்றை நுட்பமாக வெளிப்படுத்தும் முறையில் பின் நவீனத்துவம் நாவல் வடிவத்திலும் தகர்வுகள் முதலியவற்றை உள்ளடக்கிய சோதனை முயற்சிகளை விரிவுபடுத்தி உள்ளது. இத்தகைய போக்கின் தேவையை நாம் மறுப்பதற்கு இல்லை. இத்தகைய போக்கு ஒன்றுதான் தமிழ் நாவலுக்கு ஒரே வடிவமாக இருக்கமுடியும் என்பதையும் நம்மால் ஏற்க முடியவில்லை. மனிதனுக்குள் ஏற்பட்டுவரும் தகர்வை சித்திரிப்பதற்காக நாவல் வடிவத்தின் உள்ளும் தகர்வுதான் தேவை என்பதை நம்மால் ஏற்க முடியவில்லை. வாழ்க்கையில் மையம் அல்லது முழுமை இல்லைஎன்ற வாய்ப்பாட்டை வைத்து எதார்த்தவாதம் என்ற வடிவை முற்றாக ஒதுக்க வேண்டும் என்பதும் உண்மை இல்லை. நெருக்கடிகளும் தகர்வுகளும் கூட வாழ்வின் எதார்த்தங்கள் ஆகிவிடுகின்றன. எதார்த்தங்களைச் சித்திரிக்க படைப்பின் வடிவத்தை குழைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் நவீனத்துவ சித்திரிப்புகள் என்பன தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் கவர்ச்சியாகப் பேசப்பட்டு வருவதில் இருந்து படைப்பாளிகள் தப்ப முடியவில்லை. சுப்ரபாரதிமணியனும் 'சாயத்திரை' நாவல் தொடங்கி இத்தகைய எழுத்து முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
'தேநீர் இடைவேளை' நாவலும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி என்பதில் அய்யமில்லை. கோவை முதலிய பெரிய நகரங்களில் இருந்துவந்த பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில் சிறிய சிறிய பஞ்சாலைகள் தோன்றுகின்றன. உலகமயமாதல் என்ற போக்கின் விளைவாக இங்கெல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டன. கொட்டடிகளில் திருமணத்திட்டம் முதலிய பெயர்களில் தெற்கிலிருந்து வந்த பெண்கள, இளைஞர்கள் குடியேற்றப்படுகிறார்கள். குறைந்த கூலி, வசதிக் குறைவுகள் முதலியவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் தொழிற்சங்கம் ஏற்படுத்த முடியாது. 12 மணிநேரம் கட்டாய வேலை. பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட/நீங்கிய தொழிலாளிகள் இங்கு தினக்கூலிக்கு வந்து சேருகிறார்கள். இவர்களும் கொட்டடிகளில் அடைபடுகிறார்கள். கொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும்தான் கொத்தடிமைகள் என்ற உணர்வைப் பெற முடியும். முதலாளிகளுக்குச் சேவகம் செய்கிறோம். அரசு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோம். நாளுக்கு நாள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. போராடுவதால் பயன் இல்லை. ரங்கநாதன் போல நாம் இல்லை என்றாலும் ரங்கநாதனின் அவலத்திற்குள் நாமும் இல்லாமல் இல்லை. அந்தோணி ராஜ் மாதிரி நாமும் ஷேக்ஸ்பியர் என்று மார்க்சியம் என்றும் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறோம். உலகம் நம்மிடம் இருந்தும் பறிபோய்க் கொண்டிருக்கிறது. செந்தில் மாதிரி நாமும் திண்டாட்டத்தோடுதான் வாழ்கிறோம். இப்படி எல்லாம் இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக் கொண்டு இருக்கிறோம். சீரழிவுகளோடுதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த முறையை நமக்குள் ஏற்படுத்துவதன் மூலம் சுப்ரபாரதிமணியன் நமக்கு நன்மை செய்திருக்கிறார். நாம் அவரைப் பாராட்டலாம். ஒருவரையொருவர் பாராட்டுவதன் மூலம் நமக்குள் நிம்மதி ஏற்பட்டுவிடுமா? அப்படி ஒன்றும் ஏற்படாது.
இனி இந்த நாவலின் வடிவம் பற்றிப் பேசலாம். நாவலின் பக்க அளவு 75 மட்டும். 3 பகுதிகள். முதல் பகுதியில் 10 கடிதங்கள். 2 வது பகுதி அந்தோணிராஜ் டைரி குறிப்புகள்: 3வது பகுதி செந்திலின் டைரி குறிப்புகள். நம் காலத்தில் நமக்குள் ஏற்பட்டு இருக்கிற அவலத்தைச் சொல்வதற்கு இந்த நாவலின் இத்தகைய வடிவம் எப்படி பயன்படுகிறது. முதற்பகுதியில் உள்ள 10 கடிதங்களில் இடம் பெறுபவர்களின் வாழ்க்கையை நாவலின் மற்றப் பகுதிகளிலும் எதிர்பார்க்கிறோம். முதற் பகுதியில் இடம் பெற்ற ரங்கநாதன் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் தலைகாட்டுகிறார். முதற்பகுதியில் புத்தகங்கள் படிப்பதற்காக தேடி அலையும் செந்தில் 3வது பகுதியில் டைரி எழுதுகிறார். அந்தோணிராஜ். செந்தில் ஆகியோர் டைரிகளில் அவரவர்களின் சிந்தனைகள் தெளிவாகத் தரப்படுகின்றன. முதற்பகுதியில் இடம்பெற்ற நெருக்கடி மிகுந்த வாழ்வியல் 2/3ம் பகுதிகளில் அனேகமாக இல்லை. நாவல் அல்லது எந்த ஒரு படைப்புக்கும் மனித வாழ்வியல் மற்றும் இதன் நெருக்கடிகள்தான் சாரமாக அமைய முடியும். நாம் இப்படிக் கேட்கலாம். இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி இ.எம்.எஸ்யைப்பற்றி, மார்க்சைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் என்ற வடிவில் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படிக் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா? மல்லிகா முதலியவர்களின் வாழ்வைப்பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம். அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அனேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான். கொட்டடிகளை விட்டு வெளியில் சென்றபிறகு நோய் நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள். இந்தக் கதை ஏன் இன்னும் தொடர்ந்து சொல்லக்கூடாது? செந்திலுக்கோ, ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை. நாம் புரிந்து கொள்கிறோம். யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி வடிவத்தைச் சிதைப்பதன்மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? இப்படியெல்லாம் வாசகனைத் திணறடிப்பதன் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார்? ஒருவேளை நமக்குள்ளும் நாம் சிதைந்து கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்வதுதான் நாவலாசிரியரின் நோக்கம் என்றால் நம்மைப்போன்ற மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த படிப்பாளிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என்ற நம்மவரின் வாழ்க்கையை இந்த வாழ்க்கைக்குள் உள்ள நெருக்கடிகள், தகர்வுகள் பற்றிச் சித்திரிப்பதன் மூலம் நமக்குள்ளும் கூடுதலான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நம்மைக்காட்டிலும் வாழ்வின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் அவலங்களைச் சித்திரிப்பதன் மூலம் நம்மை எந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியும்? ஒருவேளை சுப்ரபாரதிமணியன் தனக்குள் இந்த அதிர்வுகளை இன்னும் போதுமான அளவுக்கு உணரவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.