சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வியாழன், 24 ஜூன், 2021
ஸ்னோலினும், சுகுதகுமாரியும்
சுப்ரபாரதிமணியன் :
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பைத் தந்து தார்மீகக் கடமையை நிறைவேற்றிய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் முதல் வார நடவடிக்கையில் ஒன்றாய் அமைந்தது .அது சுற்றுச்சூழல் சார்ந்தவர்களுக்கு ஆறுதல் தந்த செய்தியாக அமைந்தது .
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த நூறாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார் 18 வயது ஸ்னோலின்.. வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியடன் இருந்தவர் ஸ்னோலின். துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுடப்பட்டு இறந்தார் . போராட்ட்த்தில் இறந்த 13 நபர்களில் இளவயது நபர்
“ இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்தப்போறேன். முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைச்சிருக்கேன். எத்தனையோ மக்கள் என் மகளுக்காக கண்ணீர் விட்டாங்க. எளிமையாக சர்ச்சில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் வரணும். அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்,'' என கண்ணீருடன் அழைப்பிதழை தந்திருந்தார் வனிதா.
” அவளது தியாகத்தை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கை எனக்கு புதிது. உலகம் முழுவதும் பல சொந்தங்களை எனக்கு என் மகள் அள்ளித்தந்துவிட்டு போய்விட்டாள்,''என்கிறார் தாய் வனிதா.
சுற்றுச்சூழல் போராட்டங்களுக்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர் சுகுதகுமாரி அவர்களின் கொரானா கால்மரணம் குறித்த செய்தியோடு ஸ்னோலின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளலாம். காரணம் சுகுதகுமாரியின் சுற்றுச்சூழல் போராட்ட இயக்கம் இவ்வகையில் முன்னோடியாக இருந்தது என்பது முக்கியமானது.
சூழல் நீதி என்றக் கோட்பாடு சமூகத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சூழலியல் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதற்கான முயற்சியாக அது அமைந்தது. சூழல் உரிமைக்குரல்களின் அடிப்படையில் அது அமைந்தசாதாரண மக்களின் வாழ்விடங்களில் நச்சுக்கழிவுகளுக்கான களங்களாக மாறியதை தூத்துக்குடி காட்டியது.
இதே போல் ஒரு ஆரம்ப நடவடிக்கையே முளையில்கிள்ளி எறியப்பட்ட்து சுகுதகுமாரி போன்ற எழுத்தாளர்களின் சூழல் இயக்க நடவடிக்கைகளால்.
கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே தாமதமாகிவிட்டது என்று தொடர்ந்து முழங்கியவர் மலையாளக் கவிஞர், சூழியல் களப்போராளி, பெண்ணுரிமைப்போராளி,அபயா என்ற ஆதரவிழந்தோர் சேவை அமைப்பின் முன்னோடி (திக்கற்ற மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புகலிடம் தரும் அபயா என்றொரு அமைப்பு). எனப் பலமுகங்கள் கொண்ட சுகதகுமாரி எனக்கு அறிமுகமானதே அவர் நடத்திய அமைதிப்பள்ளத்தாக்குப் போராட்டம் மூலம்தான் அந்தப்போராட்டம் தொடங்கியபோது அவர் குறிப்பிட்ட வரிகள்
“ கோடாரி வெட்டு விழப்போகிறது . ஏற்கனவே தாமதமாகிவிட்டது. “
1970 இல் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகதகுமாரி, உலகின் பல சூழற் போராட்ட அமைப்புகளில் இந்தியாவின் முதற் சூழல் செயற்பாட்டு இயக்கம் இதுவாகும். இயற்கை எழில் கொஞ்சும் இம் மலைப்பள்ளத்தாக்குப் பிரதேசம் அட்டப்படி அருகில் இருப்பதாகும் நீளவால்க் குரங்குகள் போன்ற பல வன விலங்குகள் இருக்குமிடமாகும்.. இந்தியாவின் முதல் சூழல் செயற்பாட்டு இயக்கம் அது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
அங்கு வறண்ட பூமியை வளமாக்கி கிருஷ்ணவனம் என்ற பெயரில் பூங்காவாக்கியவர். சூழலியல் அறிவியல் விசயங்களைப்பற்றி அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள் ஆகியோரைவிட எழுத்தாளர்கள் அக்கறை கொண்டு அவர்கள் மொழியில், உள்ளூர் மக்களிடம் மேம்பட்ட பரப்புரையை செய்ய வேண்டும் என்ற அவரின் கருத்துக்கள் என் சுற்றுச்சூழல் படைப்புகளுக்கு ஆதாரமாக இருந்தன.
சுற்றுச்சூழலுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சுகதகுமாரி. அதற்காக 'பிரக்ருதி சமரக்ஷனா' என்கிற அமைப்பையும் ஏற்படுத்தினார். அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை நிறுவுவதற்கு அரசு எடுத்த முயற்சிகளை இப்போராட்டங்கள் தடுத்து நிறுத்தி வெற்றி கண்டது..இதைத் தொடர்ந்து பூயம்குட்டி, ஜீரகப்பாறை, அச்சன்கோயில், பொன்முடி, மாவூர், விளாப்பில்சாலை போன்ற இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எதிராக சுகுதகுமாரியும் இந்த அமைப்பினரும் நடத்தியப் போராட்டங்கள் வெற்றி கண்டன.
ஆரம்பத்தில் பெண் உணர்வுகளைப்பற்றி அதிகம் எழுத ஆரம்பித்தார். 'முத்துச்சிப்பிகள்', 'பத்திரப்பூக்கள்', 'கிருஷ்ண கவிதைகள்', 'ஸ்வப்னபூமி' என்று இவருடைய சில கவிதைத் தொகுப்புகள் 'கேரள சாகித்ய அகாடமி விருது', 'கேந்திர சாகித்ய அகாடமி விருது', 'ஒடக்குழல் விருது', 'எழுத்தச்சன் விருது' பெற்றவர்..சுற்றுச்சூழலுக்காகப் இவருக்குக் கிடைத்த விருதுகளும் ஏராளம்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட பெண்களையும் பாதுகாக்க ஏற்படுத்திய 'அபயா' என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஒருமுறை அவரைப்பார்த்தேன். அந்த அலுவலகத்தில் நண்பர் வனமாலிகை பணி புரிந்து வந்தார். அவரிடம் அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தபோது அவர் வீட்டிற்குக்கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. இன்னொருமுறை சந்திக்கலாம் என்றார். அப்போது மதியம் சாப்பாட்டு நேரம் . அப்போது இயலவில்லை.
இன்னொரு முறை நண்பர் வனமாலிகையைச் சந்திக்க அபயா அலுவலகம் சென்றபோது சந்தித்து அறிமுகப்படுத்தினேன். அப்போது நண்பர் வனமாலிகை உடல் நலக்குறைவால் அலுவலகம் வராமல் இருந்தார்,என் நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தகவலையும் அதில் என் சாயத்திரை ( சாயம்புரண்ட திர என்ற தலைப்பில் சிந்தா பதிப்பகம் வெளியிட்டிருப்பதைச் சொன்னபோது மகிழ்ந்தார். சுற்றுச்சூழல் சார்ந்த நாவல் என்பதைச் சொல்லி விளக்கினேன். மகிச்சியடைந்தார்.
________________________________________
மலையாளத்தின் புதியகவிதை இயக்கத்தின் பெண்குரல் சுகதகுமாரி. 1962ல் வெளிவந்த புதுமுளகள் [புதியகுருத்துகள்] என்னும் நவீனக்கவிதை தொகுதியில் இடம்பெற்ற அன்றைய புதியகவிஞர்களில் சுகதகுமாரி மட்டுமே பெண். பின்னர் கவிஞராக . . பெரும்புகழ்பெற்றார்.என் கனவு இதழின் சார்பாக தற்கால மலையாளக்கவிதைகள் குறித்து ஒரு சிறப்பிதழைக் கொண்டுவந்தேன். ஜெயமோகன் மலையாளக்கவிதைகளைத் தேர்வு செய்தும் மொழிபெயர்ப்பு செய்தும் உதவினார். தாயாரித்தார். பின்னர் கனவு, காவ்யா ஆகியவை அதைத் தனியாக நூலாக வெளியிட்டன
கேரள மக்களால் 'சுகந்தா டீச்சர்' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கவிஞர் சுகதகுமாரி எழுத்தாளர் மத்தியில் சுற்றுச்சூழல் போராளி என்ற ஒளிவட்டத்துடனே திகழ்ந்தார். 86 வயதான அவருக்கு நிமோனியா பிரச்னை தீவிரமாக இருந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர். உடன் கொரோனா பாதிப்பும் .
மரத்தினு ஸ்துதி எந்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை போராட்ட ஆர்ப்பாட்டங்களின்போது பிரபலமாக மக்களிடம் சென்றடைந்தது.
அவரின் இந்தக்கீழ்க்கண்ட பாடல் பிரசித்தி பெற்றது
1
இரவுமழை
வெறுமே விம்மியும் சிரித்தும்
விசும்பியும் நிறுத்தாமல்
முணுமுணுத்தும் நீள்கூந்தல் சுழற்றியும்
குனிந்து அமர்ந்திருக்கும்
இளம் பித்தியைப்போல
இரவுமழை
மெல்ல இந்த மருத்துவமனைக்குள்
ஒரு நீண்ட விம்மலென
பெருகிவந்து
சாளரவிரிசலின் வழியாக
குளிர்ந்த கைவிரல் நீட்டி
என்னை தொடும்
கரிய இரவின்
துயர் நிறைந்த மகள்
இரவுமழை
நோவின் முனகல்கள்
அதிர்வுகள்
கூரிய ஓசைகள்.
திடீரென்று ஓர் அன்னையின்
அலறல்.
நடுங்கி செவிகளை மூடி
நோய்ப்படுக்கையில் உருண்டு
நான் விசும்பும்போது
இந்த பேரிருளினூடாக
ஆறுதல் வார்த்தைகளுடன்
வந்தணையும்
பிரியத்திற்குரிய எவரோ போல.
யாரோ சொன்னார்கள்
வெட்டி அகற்றலாம்
சீர்கெட்ட ஓர் உறுப்பை.
சீர்கெட்ட இந்த
பாவம் நெஞ்சத்தை என்ன செய்ய?
இரவுமழை
முன்பு என் இனிய இரவுகளில் என்னை
சிரிக்கவைத்த
மெய்சிலிர்க்கவைத்த
வெண்ணிலவைவிட அன்பை அளித்து
உறங்கவைத்த அன்றைய காதல்சாட்சி
இரவுமழை
இன்று என் நோய்ப்படுக்கையில்
துயிலற்ற இரவுகளில்
இருளில்
தனிமையில்
அழவும் மறந்து
நான் உழலும்போது
சிலையென உறையும்போது
உடனிருக்கும்
துயரம்நிறைந்த சாட்சி
இரவுமழை!
இரவுமழையிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்
உன் துயரத்தின் இசையை நான் அறிகிறேன்
உன் கருணையும்
அடக்கிக்கொண்ட சீற்றமும்
இருளில் உன் வருகையும்
தனிமையின் விம்மல்களும்
விடியும்போது முகம்துடைத்து
திரும்பிச்செல்லும் உன் அவசரமும்
ரகசியப்புன்னகையும் பாவனைகளும்
எனக்குத்தெரியும்
எப்படி அறிகிறேன் என்கிறாயா
தோழி
நானும் உன்னைப்போலத்தான்.
இரவுமழைபோலத்தான்.
*
ஸ்னோலின் எழுப்பிய முழக்கமும் பாடலும் இதேத் தொனியில்தான் அமைந்திருந்தது. சூழல் நீதி என்றக் கோட்பாடு சமூகத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சூழலியல் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதற்கான முயற்சியாக அது அமைந்திருந்தது