, “தமிழ்நாட்டின்
கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் செய்யத் தவறியதும் செய்யவேண்டியதும்”
, “தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு
தமிழக அரசியல் கட்சிகள் செய்யத் தவறியதும் செய்யவேண்டியதும்” என்ற
தலைப்பில் மூத்த கல்வியாளர் முனைவர் வே. வசந்திதேவி அவர்கள் தலைமையில்
கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் சமச்சீர்க் கல்விக் குழுவின்
முன்னாள் உறுப்பினரும் கல்வியாளருமான ச,சீ.இராசகோபாலன், முன்னாள்
திட்டக்குழு உறுப்பினர் மு.நாகநாதன், சென்னைப்
பல்கலைக் கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையின் தலைவர் பேராசிரியர்
ரா.மணிவண்ணன், மூத்த சிந்தனையாளர் பேரவையின்
ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஆர்.ராஜ்மோகன், வழக்கறிஞர்
பி.தர்மராஜ், வட அமெரிக்கா தமிழ்சங்கங்களின்
கூட்டமைப்பின் தலைவர் நாஞ்சில் இ.பீற்றர், தமிழ்நாட்டுக்
கல்வி இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மு.திருமலை தமிழாசான், தமிழ்தேசியப்
பேரியக்கத்தின் மா.இராமதாசு, தமிழ்வழிக்
கல்விக் கழகத்தின் வெற்றிச்செழியன், கல்வி
மேம்பாட்டுக் கூட்டமைப்பின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.சீதரன், நாமக்கல்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.இரா.சுப்பிரமணியன், கரூர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந.விசுவநாதன், திருப்பூர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.து.செளந்தரராசன், இந்திய
மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் சீ.தினேஷ், தமிழ்நாடு
மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சே.இளையராஜா, பேராசிரியர்
பெ.விஜயகுமார் (மூட்டா) மக்கள் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
சே. கோச்சடை, குழந்தைகளைக் கொண்டாடுவோம்
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுடரொளி, சமத்துவக்கல்வி
இதழின் ஆசிரியர் சியாம்சுந்தர், அறிவாயுதம் இதழ்
ஆசிரியர் ஏ.இரமணிகாந்தன், வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி
மற்றும் பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வாழவேண்டுமென்றால், வளரவேண்டுமென்றால், எதிர்காலம்
நம்பிக்கை அளிக்கவேண்டுமென்றால், நம் கல்வி
அமைப்பில் மிகப்பெரும் மாற்றம், புரட்டிப்போடும்
புரட்சிகர மாற்றம் தேவை. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த எழுந்த வற்புறுத்தல்களைப்
போல நாட்டின் எதிர்காலத்தை, குழந்தைகளின்
எதிர்காலத்தை, நிகழ்காலத்தைக் காக்க
வற்புறுத்தல்கள் உருவாகவேண்டும். இந்த வற்புறுத்தல்கள் ஆட்சியாளர்களுக்கும், கல்விக்
கொள்கை வகுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பேரழுத்தம் கொடுக்கும் வகையில்
மாறவேண்டும்.. இப்பணியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மக்கள் கல்விப்
பறைசாற்றம் வெளியிடுவதென கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஒரே
குரலில் வலியுறுத்தினர்.
இவ்வலியுறுத்தல்களின் முதல் செயல்வடிவமாக
இந்த மக்கள் கல்விப் பறைசாற்றம் வெளியிடப்படுகிறது. கல்வி வணிகமயத்தை ஒழித்து
அனைவருக்கும் பொதுப்பள்ளி முறையில் அருகமைப் பள்ளி அமைப்பில் தாய்மொழிவழியில்
அரசின் பொறுப்பில் விலையில்லாக் கல்வி கிடைத்திட இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான
செயல்வடிவங்கள் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களிடம் இருந்தும் உருவாகவேண்டும்
என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு விரும்புகின்றது.