மலேசிய சிறுகதை
சிறுகதை : சுப்ரபாரதிமணியன்
---------------------------------------------
எலிக்கடி
---------------------------------------------
குறிப்புப்புத்தகத்தை எடுத்தார் மாணிக்கம்.
கை மெல்ல உயர்ந்து உதட்டைத் தொட்டது. இது முத்தமா...மீண்டும் உதட்டருகே கொண்டு
சென்று உதட்டை அதன் மீது அழுத்தினார் இது
முத்தமா...பெண் உதடு பட்டால் மட்டுமே முத்தம். ஒரு வகைக் கிளர்ச்சியாகவே இருந்தது.
அகால நேரத்தில் லிப்டை விட்டு வருபவர்கள் அதிசியப்
பிறவிகள் என்று சிலர் நினைப்பர். மாணிக்கம் கூட அப்படி நினைத்தார். அகால நேரம் என்றால் இரவு, நடுநிசி
என்றில்லை. ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரம். நல்ல வெயில் . நல்ல மழை நேரம். அல்லது
எல்லோரும் ஓயவு எடுக்கும் நேரம். அவர்களுக்கு முத்தம் கிடைப்பதால் அதிசியப்
பிறவிகள் ...லிப்டில் முத்தம்...
குறிப்புப்புத்தகம்,
மஞ்சள் கோட்டு,டார்ச் லைட். இது மாணிக்கத்தின் அடையாளம். காவலாளி. பாதுகாவலன் வேலை
.காசு பார்க்க ஒரு வேலை. சாகிற காலத்தில் ஒரு வேலை. இதில் எங்கே வந்தது
முத்தம்.லிப்ட் பயண முத்தம் ஞாபகம்
வந்தது.
அந்த லிப்ட்
பயண சமயத்தில் சில பெண் பிள்ளைகளுக்கு
அபூர்வ முத்தம் கிடைத்து விடுகிறது. லிப்ட்டை விட்டு வெளியே வரும் போது
புன்சிரிப்பு இருக்கும். உதடுகள் சிவந்திருக்கும். யாராவது ஆண்கள் கன்னத்தை
நிமிண்டி இருப்பார்கள். சில ஆண்கள் முத்தம் கேட்டே வாங்கியிருப்பார்கள். எல்லாம்
கலி காலம் என்று மாணிக்கம் சொல்லிக்
கொள்வார். மாணிக்கம் க்ரெண்ட் பசிபிக் அபார்ட்மெண்டின் காவலாளி. வயசாகிப் போன
காலத்தில் அப்படி உத்யோகம்.
இன்றைக்கு அந்த வேடிக்கை இருக்காது. அது
அபூர்வ வேடிக்கை.
சிட்டி கிளப் வீதியை நெருங்கினார். வாகனங்கள் பரபரத்து
விரைந்தன.தேசியக் கொடிகள் படபடத்து பளிச்சிட்டன.வாகனங்கள் எங்காவது போய் முட்டி
மோதிக் கொள்ளும். இங்கு அபூர்வமாய் விபத்து. தமிழ்நாடு போயிருந்தபோது பல
விபத்துகளை பத்து நாட்களில் பார்த்தார். அவ்வளவு அவசரமாய் உயிரை விட்டு
விடுகிறார்கள். மோட்சத்திற்கு குறுகிய வழி.மாணீக்கத்தின் சித்தப்பா கூட விபத்தில்
உயிர் இழந்தவர்.
சித்தப்பாவை பார்க்கவே ஊர் போனார்
மாணிக்கம். பிணமாய் பார்த்தார். எவ்வளவு அஜாக்கிரதை. உயிர் பலி..
இன்றைக்கும்
ஒரு உயிர் பலி. அதனால் வேலைக்கு போக தயக்கம். மனதில் வலி... அல்லாமா... என்று அவர் மனம் அல்றியது.
லிப்டில் இருந்து வருபவர்களை பார்ப்பது போல
அபார்ட்மெண்டின் உச்சிக்குப் போய்
வேடிக்கை பார்ப்பார். முத்த்தை பல சம்யங்களில் வெளிப்படையாக ரசிக்க
மாட்டார். உள்ளூற ரசிப்பார். ஆனால் உச்சிக்கு போய் கீழே பார்ப்பது அவருக்குப்
பிடிக்கும். பெட்டிகள் மாதிரி கார்கள். தீக்குச்சிகள் மாதிரி ஆண் பெண்கள்.
டிராபிக் ஜாம். தீப்பெட்டிகளை நிறுத்தி வைத்த மாதிரி இருக்கும் . எங்கிருந்து
பார்த்தாலும் இரட்டை கோபுரம்
தெரியும்..எல்லா வீதிகளும் கடற்கரைக்குச் செல்லும் நக்ரத்தைப் போல் இங்கு எல்லா
வீதிகளும் இரட்டை கோபுரத்தை நோக்கிச் செல்வதாகவே பட்ட்து.
இன்றைக்கு மனசு
கெட்டு விட்டது அதை ரசிக்கிற மனம் இல்லை. ஒரு சாவு செய்தி மனதை மாற்றி விட்டது.
வேலைக்கு போக வேண்டாம் என்றது மனம்.
மாணிக்கத்தை கடந்து போனாள் அந்த மலாய்காரி.
தொடை தெரிய உடை. கத்தரித்த புருவம்.. சப்பை மூக்கு. ஆனால் வசீகரம் இருந்தது.
பெருமூச்சு
விட்டார். அவளை ரசிக்கிற மனம் இல்லை.
மனம் ஒரு சாவு செய்தியால் நிரம்பி
இருந்தது.. அந்த பெண் பிண்மானாலும்
மேக்கப் போடுவாளா. பிணத்திற்கு யாராவது மேக்கப் போடுவார்களா. பண்க்காரப்பிணங்கள்,
அரசியல் வாதிகளின் பிணங்களுக்கு மேக்கப் அவசியம். எம்ஜிஆருக்கு மேக்கப் போட்டு
படுக்க வைத்ததாக ராஜன் சொல்லியிருந்தார். அவர் எம்ஜிஆர் ரசிகர். அதைச் சொல்லும்
போது அழுதார். அவர் சாவை பார்க்கவில்லை பத்துமலைமுருகனுக்கு விரதம் இருந்த்தால்
ராஜன் சாவுக்கு போகவில்லை. பதினாறு முடிந்து போன போது அவர் போட்டோ வாடிய மாலையுடன்
தொங்கிக்கொண்டிருந்த்து. போட்டோ மேக்கப் போட்டுதான் எடுத்திருந்தார் என்பது
தெரிந்தது. முண்டக்கன்னியம்மன்
படமும் பக்கத்தில் இருந்த்து. முண்டக் கன்னியம்மன் தலையில் பெரிய பொட்டு,
சாகிறவர்கள்
நெற்றியில், தலையில் கூட அப்படி பெரிய பொட்டுதான் போடுகிறார்கள்.
தனக்கும் பெரிய
பொட்டா. போடுவார்கள் முனியாண்டிக்கு பெரிய பொட்டா
போட்டிருப்பார்கள். அனாதை பிணத்துக்கு பொட்டு போட யார் இருப்பார்கள்.
நீ அனாதை.
இல்லை மகன்,
மகள் இருக்கிறார்களே.
வீதியில்
போகும் போது வாகனம் பட்டு இறந்து விட்டால் நீ அனாதைதான்.
இல்லை. என்
பாக்கெட்டில் மலேயா அடையாள அட்டை இருக்கிறது. முகவரி இருக்கிறது,
முனியாண்டிக்கு..
இதெல்லாம்
இல்லை.
ஏன் இல்லை.
தமிழ்
நாட்டிலிருந்து ஓடி வந்தவன்.
எல்லாரும் ஓடி
வந்தவர்கள்தான். பூர்வக் குடிகள் கூட.
முனியாண்டி
டூரிஸ்ட் விசாவில் வந்து போகாமல்
இருப்பவன். போலீசுக்கு பயந்து இருந்தவன்.
மாணிக்கத்தின் வீட்டுப்பின்புறம்தான் முனியாண்டி தங்கி இருந்தான்.
இரண்டு ஆண்டுகள்.எங்காவது மலேசியா போலீஸ் தென்பட்டால் ஓடி ஒளிவான். இரண்டு
வருசம் ஒன்றும் தெரியவில்லை. ஒரு நாள் போலிஸ் மாணிக்கம் வீட்டுக்கு வந்தது.
அது மாதிரி
யாராவது இருக்கிறார்களா
அதுமாதிரின்னா.
தீவிரவாதம்,
கலகக்காரர்கள்
யாரும்மில்லை.
டூரிஸ்ட்
விசாவில வந்து ஓடி ஒளியறவன்
ஒருத்தரும்
இல்லை.
மலேயா போலீஸ்
போனபின் மகன் மாணிக்கத்தை பிடித்து உலுக்கினார்.
இந்த வேலை
வேண்டாம். அந்த ஆளைத் துரத்து.
யாரு
முனியாண்டியை..
இருந்துட்டு
போறார்.
போலீஸ்
வந்துட்டு போறான்.
இருந்துட்டு
போகட்டும்,
அந்த வேலை
வேண்டாம். அனுப்பு.
அனாதை
ஜெயிலுக்கு
முனியாண்டியா
வேணாம்.
இல்லெ
நாமெல்லாமா ஜெயிலுக்கு போகவா..
முனியாண்டியே
முன் வந்தான். என்னாலே உங்கக் குடும்பத்திலே சங்கடம் எதுக்கு. நானே போறன்.
கஸ்ட காலத்துக்கு உதவின்னீங்க.
அடுத்த நாள்
பசிபிக் அபார்ட்மெண்டில் வேலை நேரத்தில்
இருக்கும் போது முனியாண்டி வந்தான்.அவன் கண்களில் ஒரு வித அச்சம்.கையில்
ஒரு பை. எங்கே போறே என்று மாணிக்கம் கேட்டான்.
எங்காச்சும்.
போலீசுலே அகப்பட்டா கஸ்டம். ஊருக்கு வழி தெரிஞ்சா போயிரணும்.
அது நல்லது.
அம்பது
வெள்ளியாவது கொடுத்து அனுப்ப நினைத்தார். காலியான பாக்கெட் உறுத்தியது.
இரண்டு மாதம்
கழித்து முனியாண்டியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.. கிள்ளானில் ஒரு தோட்டத்தின் ஓரத்தில்
தகர சாளையில் தங்கியிருப்பதாய். சொன்னான்
ஒரு சீன உணவகத்தில் வேலை. இதற்கு முன்
நாலு வெவ்வேறு வேலைகள் பார்த்தாகிவிட்டது. வாழ்க்கை ஓடுகிறது என்றான். சம்பாதித்து
ஊருக்கு பணம் அனுப்ப வந்தேன்.லட்சியம் மாதிரி
அனுப்புவேன் என்றான்.
இன்னொருமுறை தொலை பேசியில்
அழைத்தான்.உடம்பில் கொசுவோ, மூட்டைப்பூச்சியோ கடித்த மாதிரி கீறல்கள். ஏதோ ஆவிதான் தன் உடம்பை காயப்படுத்திக்
கொண்டிருப்பதாக சொன்னான். எந்திரம் கட்டி பிரச்சினையைத் தீர்க்கணும்.ஆவி பெரிசாய்
உடம்பைக் கெடுக்காமல் இருந்தால் சரி. பத்து, இருபது வெள்ளி செலவுடன் கழிந்து
விட்டால் போதும் என்றான்.
அவனை நினைத்துக் கொண்டே நடந்தார்
மாணிக்கம். போர்டு கார் ஒன்று உரசிக் கொண்டு விரைந்தது அவன் கூட ஏதாவது
திட்டியிருப்பான். கில்லிங் என்ற வசவு இங்கு சாதாரணம்,.ஜாக்கிரைதையாக நடந்து
போகணும். தள்ளாத வயது வேறு. பயத்தில் தள்ளாட்டம் வந்து விடக்கூடாது.
காலை செய்தித்
தாளில் பல சாவுச் செய்திகள். பல பாலியல்
செய்திகள். பல வீடு உடைப்புச் செய்திகள். அதில் ஒன்று ஒரு சாவு பற்றியது. கிள்ளான்
பகுதியில் தகர கொட்டையில் தனியேவசித்து வந்தவர்
எலிக்கடி மரணத்தால் சாவு. தமிழரா.. டூரிஸ்ட் விசாவில் வந்தவரா.. விசாரணை.
அது முனியாண்டிதான் என்று மாணிக்கம் பலமாக
நம்பினார். நம் வீட்டை விட்டுப் போனார். கிள்ளானில் இருப்பதாக ஒரு தரம் போன்.
அப்புறம் காணோம். செத்துப் போனது நம்ம ஆள். அனாதைப் பிணமாக கிடந்திருக்கிறான்.
முனியாண்டி பற்றிய நினைப்பே காலை முதல் அவரை அலைக்கழித்தது.
கிள்ளான் போய் எங்கு விசாரிக்க.. கிள்ளான்
புகை வண்டி நிலையத்திற்கு முன்புறம் சஞ்சித் துரை அலுவலகம். அங்கு லேசாய்
விசாரிக்கலாம்.அந்த முச்சந்தியில் ” தண்ணிப் பீலி ” என்ற நீர்க்குழாய் அந்தக்காலத்தில் இருந்த்து. இப்போது இருக்குமா. குளிக்க,
குடிக்க அந்த தண்ணிப் பீலி. தண்ணிப் பீலிக்காரன் ஒருவன் கூட வசூல் செய்து கொண்டு
இருந்தான். நூறு வயசுக்கு மேல் இருக்கும்.அப்படி பழைய ஆள் யாராவது கிடைத்தால்
விசாரிக்கலாம்
பசிபிக் அபார்ட்மெண்ட் அலுவலகம் முன்
நின்றார். லிப்ட்டில் ஆட்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். வாகனங்கள் புர்புர்
என்று விரைந்தன.அகால நேரத்தில் முத்தத்துடன் வரும் பெண்களை இன்று வேடிக்கை பார்க்க
வேண்டாம். முனியாண்டியை நினைத்து மனம் பரபரத்தது.செத்தவன் எரிக்கப்பட்டிருப்பானா.
அடையாளம் தெரியாத ஆள் என்று பிணக்கிடங்கில் கிடப்பானா.
“ இன்னிக்கு லீவு வேணும் மானேஜர்.”
“ என்ன
விசேசம் “
“ ஒரு சாவு
காரியம் மானேஜர் சார் “
“ மஞ்சள் கோட்,
குறிப்பு புத்தகம், டார்ச் லைட்டுன்னு வந்திருக்கே..”
“ இடையிலதா
சாவு நியூஸ் கிடச்சது.”
“ உனக்கே சாவு
வந்தது மாதிரி பொணம்மாதிரி மூஞ்சியெ வெச்சிருக்கே “
“ நெருக்கமான
ஆள்”
“ எப்போ
அடக்கம் “
“ மத்தியானம் “
’’ சரி தொலை. பகல் டூட்டிக்கு ஆள் தேடணும் “
” செரி மேனேஜர் சார்.”
அவர் உடம்பு ஏதோ காய்ச்சல்
வந்த மாதிரி ஆகிவிட்ட்து. ஏதோ ஆவி புகுந்திருக்குமா. என்ன பரிகாரம் செய்யலாம்,
பசரட்த் முனியப்பன் கோவிலுக்குப் போகலாமா. எந்திரம் கட்டினால் சரியாகி விடும்..எச்சில் துப்பி நெற்றியில் பூசலாம்.
குளித்து விட்டு உடம்பைத் துடைக்கிற போது முதலில் முகத்தைத் துடைத்தால் மூதேவி
வந்து உட்கார்ந்து கொள்வாளாம். உடம்பைத்துடைத்து விட்டுதான் முகத்தைத்
துடைக்கவேண்டுமாம். சக்தர்மிணி சொல்வாள். இன்றைக்கு துண்டு நேராக முகத்திற்குச்
சென்றது ஞாபகம் வந்தது.
சாமியாடிகள் யாரிடமாவது போய்
பரிகாரம் கேட்கலாம். செம்பனைக்காட்டுக்குள் யாராவது சாமியாடி இன்னும் இருப்பான்.
ஆயாக் கொட்டகையில் இருந்த ராமண்ணன்
செத்துப் போய் விட்டான். முன்பெல்லாம் கோவில் திருவிழா வாராவாரம் என்றாகி
விடும் . ராமண்ணன் சாமியாடும்போதெல்லாம் திருவிழா தான். ஆற்றங்கரையோரத்திலிருந்து
கேட்கும் எஸ்டேட் மேளத்தின் அதிரலில் ஊரே
கூடி விடும் . அருள் பெற்று யார் யார் சாமியாடப்போகிறார்கள் என்று ஊகிக்க
முடியாது. பெரிய கூட்டமே சாமியாடி பின்
ஓய்ந்து விடும்.
புத்தகத்தால்
முகத்தைச் சொறிந்தார். சொறிவது சுகம். சொறிந்து சொறிந்து புண் கூட ஆகலாம். எலி
கடித்து புண் ஆன முகம் பற்றி யோசிக்க
ஆரம்பித்தார் மாணிக்கம்.முத்தத்தின் எச்சிலைத் துடைக்கையில் சொறிகிற மாதிரி
அழுத்தமாய் ஏதாவது கீறல் எந்தப் பெண்ணிற்காவது ஆகியிருக்குமா என்று யோசிக்க
ஆரம்பித்தார்.