shortstory
காணாமல் போனவர்கள் : சுப்ரபாரதிமணியன்
ரகீம் அடித்த பந்து சாலமன் வீட்டு முகப்பில் போய் விழுந்தது. இன்னும் நாலடி தப்பி இருந்தால் வாசலில்
நின்றிருந்த காரின் மீது பட்டிருக்கும். சாலமனின் தாத்தா வாசலுக்கு வந்து கையை புருவங்களின் மீது வைத்து தூரமாய் பார்த்தார். அவர் கையிலிருந்த செய்தித்தாள் மனிஷா கொய்லராவிற்கு இரண்டாம் திருமணம் பற்றியும், ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் ஆண்டு விழா பற்றியும் முகப்புச் செய்திகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. நடிகை ஒருத்தியின் கற்பக்கலைப்பு ரகசியம் மீறி செய்தியாய் கசிந்திருந்தது. அதைப்படித்து
விட்டு கற்புக்கலைப்பு என்று சொல்லி கொஞ்சம் புன்னகைத்துக் கொண்டார்.
" டேய் ... பசங்களா...ஏரி , கொளம்னு எல்லாமே வத்திப்போய் கெடுக்குது. அதிலெல்லா போயி விளையாடுங்க. உங்க கிரிக்கெட்டை அங்க வெச்சுக்கங்க. இங்க எதுக்குடா டிஸ்டர்ப் பண்றீங்க "
" உங்க சாலமன் கூடத்தா இங்கிருக்கான்."
" ஆமா தெரியும். சாலமனை வரச் சொல்லப்பா "
சாலமன் தலையில் இருந்த தொப்பியை சரி செய்தபடி தாத்தாவைப் பார்த்தபடி மேற்குப் பக்கம் வந்து நின்றான்.அவன் முகத்தில்
வியர்வை அடர்த்தியான கசடாக நின்றது. கையை புருவங்களின் மீது வைத்து தூரமாய் பார்த்தார். “ நான் பக்கத்திலதா
இருக்கேன்”
" நீங்கெல்லா நாங்க வெளையாடற எடத்திலே வூடு கட்டிட்டு எங்களைக் குத்தம் சொல்றீங்களா"
' இதென்னடா புதுக்கதையா இருக்கு.நல்ல கதைதா போங்கடா பசங்களா... யானை வந்து நாசம் பண்றதுன்னா யானை வந்து போற தடத்தில வூடு கட்டிட்டீங்கன்னு பதில் சொல்ற மாதிரி இருக்கு.அதிலிருந்துதா
இதெக்காப்பி அடிச்சீங்களா "
அவர்கள் விளையாடும் இடம் வேறு சிறுத்துவிட்டது. மூன்று பக்கங்களிலும் வீடுகள் வந்து விட்டன. நாலாம் பக்கத்தில் புதர்க் காடு ஒன்று வளர்ந்து இருந்தது. முருக நதியின் அடுத்த கரைக்கு அந்த புதர்க் காடு சென்று முடியும். ஆடு மாடு மேய்ப்பவர்கள் கூட அந்தப் பக்கம் போகத் தயங்குவர். பச்சை மூங்கில்களில் மரக்கிளைகளை அடர்த்தியாய் கட்டி சாய்மானம் செய்தது போல் அந்த புதர்க் காடும் தென்படும்.
புர்ரென்று வந்த இரட்டை சக்கர வாகனம் அந்த முஸ்லீம் பெரியவரை இறக்கி விட்டுப் போனது. " உள்ள போயிர்ரன். வாப்பா வீடு இங்கதா"
" செரிங்க "
" நீங்க நல்ல நாள் குறிச்சுக் குடுத்ததற்கு சந்தோசம் . என்னமோ உங்ககிட்ட குறிச்சதா சந்தோசம். திருப்தி"
" எப்ப வேண்ணா வாங்க. உங்க ஆளுக கூட
என்னெத்தேடி வர்ரது எனக்குப் பெருமைதா " அந்தப்பெரியவரின்
மகள் சாதகம் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்தது.அவளுக்கு அரசாங்க உத்யோகம்
கிடைக்கலாம். அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறது.இதையெல்லாம் விட தற்கொலை
முயற்சிக்கு வாய்ப்பும்
இருக்கிறதாம்.முன்னது இரண்டைப்பற்றி கணபதி சொன்னார் அவரிடம்,
இரட்டை சக்கர வாகனம் இன்னும் கொஞ்சம் மேற்குப் பக்கம் போய் கிரிக்கெட் விளையாடும் இடத்திற்கு வந்தது. ரத்னவேல் போடா போடா என்றபடி சோமசுந்தரத்தைத் தள்ளினான். அவனும் விரசலாய் வந்து இரட்டை சக்கர வாகனத்தின் முன் நின்றான்.வாகனம் புழுதியை
அப்பிக்கொண்டு நிறம் மாறி இருந்தது.
" ஏண்டா லீவு நாள்ல வீட்ல இருக்க மாட்டியா..."
" ஒன் அவர் விளையாடிட்டு வந்தரேன்ப்பா "
" வீட்ல இருந்தமா... ஜாதகம் கொண்டு வரவங்ககிட்டே நாலு வார்த்தை பேசுனாமா... ஜாதகம் பார்க்கறதுல நாலு விஷயம் கத்துக்கிட்டமான்னு இல்லமே லீவு நாள்னா கிரிக்கட் வெளையாடிட்டே இருக்ககறே..."
" ஒரு அவர்லே வந்தர்ரப்பா..."
" ஜாதகம் பாக்கத் கத்துக்கோன்னு சொல்றன் காதில் விழறதில்லே"
" காதில வுழுதப்பா. வந்தர்றேன். நானே மெல்ல மெல்ல கத்துக்கிட்டுதான் இருக்கான்."
" செரி... செரி ... வந்திரு . பந்து எங்கெங்கேயோ போயி வுழுவுது. பாத்து ஆடுங்க.வயசானவங்க,
நடக்கறவங்க மேல வுழுந்து சிரமம் பண்ணாதீங்க"
கிரிக்கட் பேட்டை எடுத்துக் கொண்டபோது ரஹீமின் முகத்தில் வேர்வை வழிந்தோடியது. முகத்தைத் துடைக்கத் துடைக்க வேர்வை ஊறிக் கொண்டே இருப்பது போல் பெருக்கெடுத்தது. அடிவயிற்றில் சிறு நீர் ஊற்றுபோல் கசகசக்க வைத்தது. ஆடிக்களித்தது
போதும் என்று முடிவுக்கு வந்தார்கள்.
" பழனிக்கு படத்துக்கு போலாமா... நைட் ஷோ "
" படம் பாக்கறதுக்கு ஸ்ரீராம் இல்லையா "
" என்னடா புது வேதமெல்லா.. ஒளரே "
" ஸ்ரீராம் இல்லையான்னு சொல்லு"
" அது அப்புறம்... அங்காடித் தெரு , அவள் பெயர் தமிழரசி... எதுக்குப் போறது..."
" ரெண்டும் அழுவாச்சிக் காவியங்க.. வேற படம் ஏதாச்சும் "
" ஊரெப் பேரா வெச்சு ரெண்டுப் படம் வந்திருக்கு."
" என்னடா ஊர்ப் பேர்லயா"
" ஒன்னு திருப்பூர். இன்னொன்னு மதராசபட்டணம்"
" திருப்பூர்தா பக்கத்திலதா இருக்கு. நேர்லயே பாத்திரலாமே ... வேற "
" ரெண்டு பெரிய டைரக்டர்க நடிச்ச படம்'
" பாலசந்தர், பாரதிராஜா நடிச்சது."
" என்ன படம்"
" ரெட்டைச் சுழி'
" யூத்தா இருந்தா சொல்லுடா..."
" ஆயிரத்தில் ஒருவன். "
" அது பழைய படமாச்சே "
" இல்லடா. பழைய படத்துப் பேரு. புதுப்படம் "
" இருக்கறதை நாலு தியேட்டர் பத்து படத்துப் பேருக சொல்றியே..."
" போயி பார்த்தாதா தெரியும். எது எது ஓடுதுன்னு.எது எது
ஓடிப்போச்சுன்னு "
" ஓடற படத்துல ஏதாச்சும் பார்க்கணும் "
" பாக்கலாம்... "
" வீச்சருவா வாய் வெச்சா
வெத்தலையை போடுதடா...
சேனத் தொட்டு வச்ச மண்ணிலே
செங்குருதி ஓடுதடா...
ஆகாயம் என்னமோ
வெள்ளையாத்தா இருக்குதப்பா
மண்ணதோண்டிப் பார்த்தாக்க
மனுஷ ரத்தம் ஓடுதப்பா."
" என்னடா பாட்டு புதுசா இருக்கு ரத்னவேல் "
"புதுப்பாட்டு"
" நீ சொன்னப் பத்துப் படத்துல இதுவும் ஒண்ணா "
" இல்லே . இப்பத்தா எடுத்திருக்காங்க. என்னமோ மதயானைன்னு படத்துப் பேரு... ஏதாச்சும் மீட்டிங் பேசறப்போ பிரயோஜனம் ஆகும். இந்தப் பாட்டுன்னு மனப்பாடம் பண்ணி வெச்சேன்"
ஆளுக்கொரு திசையில் பிரிந்து போனார்கள் . கிரிக்கெட் பேட்டை ஆட்டியபடி ரஹீம் வடக்குத் தெருப்பக்கம் போனான். மைதானம் கொஞ்சம் சிவப்பு மண்ணால் விரிந்திருந்தது. கால்கள் பட்டு செம்புழுதி பழுப்பு வெள்ளைக்கு மாறியிருந்தது.
2.
சாயங்காலம் ஆகிவிட்டால் பொதுச்சாவடியில் பத்துபேர் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். பொதுச்சாவடியில் கிரிக்கெட் ஆட
சோமசுந்தரம் பலரிடம் அழைத்திருக்கிறான்.
யாரும் உடன்படாத மாதிரி தட்டிக்கழித்தே வேறு இடம் பார்க்கச் செல்வார்கள்
பொதுச்சாவடியில் உட்கார்கிறவர்களுக்கு முகம் பார்த்து பேசிக் கொள்ள ஏதாவது விஷயம் கிடைத்து விடும். பறையர் தெரு, அருந்ததியர் தெரு, அகமுடையார் நடுத்தெரு, கவுண்டர் தெரு , குளம் துரோகி கூடத்தெரு, ஓராண்டி வேளாளர் பிள்ளையார் தெரு, பள்ளிவாசல் தெரு என்று பல தெருக்களில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மடம் என்று இருந்த காலம் உண்டு. இப்போதெல்லாம் அவை அழிந்து போன மாதிரி பொது மேடம் ஒன்றுதான் எல்லோர் கண்ணிலும் பட்டுக் கொண்டிருந்தது.
அமலம் கூடையை பக்கவாட்டில் வைத்து விட்டு எதிர் மசூதியைப் பார்த்தாள். கம்பீரமான மனிதனைப்போல அது நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த பழைய நூலகக் கட்டிடம் சிதிலமடைந்தது போல் இருந்தது முருக நதிக்குப் போகும் பாதையில் புதிய நூலகக் கட்டிடம் வந்து விட்டது. பழைய தபால் நிலையம் அதனருகே இன்னும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டது போல் இருந்தது.
அமலத்தின் பையனும் பெண்ணும் இரண்டு மணி நேரப் பயணத்தில் கல்லூரிக்குப் போகிறார்கள் பெரிய குழப்பத்துடன் அவர்கள் வளர்ந்து வருவதைக் கஷ்ட்டத்துடனே பார்த்து வருகிறாள் அவளும். புடலங்காய் நீண்டு வளர்ந்து விடுவதைப்போல் அவர்களும் வளர்ந்து விட்டார்கள்.
" ரெண்டு பேரும் தெனமும் மூன்று நாலு மணி நேரம் பஸ்லே போயி வந்து சிரமப் படறாங்களே. நீயும் அங்கேயே போயிற வேண்டியதுதானே. இப்ப இருக்கறது வாடகை வீடுதானே "
" போலாம். பழகுனா ஊர். நாலு பேரு பூ வேணுமுன்னு கேட்டா டக்குன்னு குடுக்கலாம். காலேஜ் இருக்கற டவுனுக்குப் போனா பெரியத் தொகை குடுத்து பூக்கடை போட எடம் புடிக்கணும். வேவாரம் எப்பிடி ஆகும்னு சொல்ல முடியாது" என்பாள்.
பரமேஸ்வரி தேவைப்படும்போதெல்லாம் தவறாமல் அமலத்திடம் பூ வாங்குவாள்.
கரிசனமாய் நாலு வார்த்தை சொல்லிக் கொண்டிருப்பாள்.
" அமலா... உன் தைரியமெல்லா யாருக்கும் வராது. புருஷன் காணாமல் போயிட்டான். இந்தக் கொழந்தைக வளரணும்னா நீ என்னமா கஷ்ட்டப்படறே "
" இருக்கறதுதா "
" என் வாழ்க்கையல்லா எவ்வளவு கேவலமா இருக்கு பாரேன்."
" அதது விதிச்சதுதா . என்ன பண்றது.'
அப்போதுதான் சிவனின் பட்டறைக்கு கடைசியாய் நாளுமுழ அரளிப்பூ கொடுத்துவிட்டு வந்திருந்தாள். அத்தோடு கூடையும்
காலியாகியிருந்தது. சோமு அவர்களைக்கடந்து போனான். “ உங்க வூட்டுக்கு இவளே
கூட்டிட்டுப் போடா “
“ அய்ய்ய்யோ.. என்னக்கா சொல்றே.. “
“ ஒண்னூமில்லே.. இவ ஜாதகத்தைக் கொண்டு போயி பாருங்கறேன்.
அதுதா “
“ அதுக்கு எங்கவூடுதா கெடச்சுதா. இன்னம் எவ்வளவு பேருஇருக்காங்க”
“
என்னமோ நீ கண்லே தட்டுப்பட்ட்தாலே கேட்டன்டா. வேற் தப்பா எடுத்துக்காதே “
“
அவங்க ஜாதகம்தா ஊர் பூரா தெரிஞ்சதுதானே ..
“ செரி.. வுடு “
“ செரி.. வுடு “
“
பழனி கிரிவலம் போகச்சொல்லக்கா . கொஞ்சம் பாரம் கொறையும் “
பழனி கிரிவல பூஜைக்கு சிவன் ஆயத்தமாகிக் கொண்டிருப்பது போலிருந்தது. வைகாசியில் முதல் ஏழு நாளும் , சித்திரையில் கடைசி ஏழு நாட்களும் பழனி மலை பூசைகளால் பிரபலப்படும். கிரிவலம் வருவதற்கு அவ்வப்போது கூட்டம் சேர்ந்துவிடும். காவடி என்று எதுவும் இல்லை . காவி வேட்டியை உடுத்துக்கொண்டு கிரிவலம் போவார்கள். விரதம் இருக்கவேண்டிய அவசியமிருக்காது. பதினான்காம் நாள் மண்டல சாப்பாடு என்று அன்னதானம் நடக்கும். அதில் ஏதாவது ஒரு இடத்தில் சிவன் அன்னதானம் செய்வான். அன்னமிட்ட கைக்கு அருள் கிடைக்கும் என்று வெகுவாக நம்புவான். அன்னதான பூஜை செய்யும்போது கொம்பூதி அதிர செய்வான். காமன் பண்டிகை இப்போதெல்லாம் இல்லாமல் போனது வருத்தம் என்பதுபோல சொல்லுவான். அவன் அப்பா அதை " காமாண்டி" என்று சொல்லுவார். " உள்ளிவிழா " ன்னு எங்கப்பாரு சொல்வார். அந்த வார்த்தையே இப்போ இல்லாமே போச்சு" என்பார்.
அவர் முன்பு பழனியில்தான் குடியிருந்திருக்கிறார். அப்போது நான்கு கால்கள் நிறுத்தி பந்தல் அமைத்து சாணம் இடப்பட்ட இடத்தில் கம்பு நடப்பட்டு வைக்கோல் பிரி சுற்றும் வேலையை அவர் செய்திருக்கிறார். வறட்டியை வைத்து தலையில் கட்டி " காமதேவன் " வந்துட்டேன் பார் ”என்பார். மாசிப் பௌர்ணமி நாளில் காமன் பொம்மை எரிக்கப்படும். சாம்பலாக்கப்படும்.
ஆரம்பத்தில் ஒரு தரம் அவருக்கு மன்மதன் வேடம் போட்டுவிட்டார்கள். அப்போது அவருக்குத் திருமணமாகவில்லை. எதுவும் சொல்லாமல் நீரில் பிடித்து தள்ளிக் குளிக்கவைத்து பச்சை வர்ணத்தைப் பூசிவிட்டார்கள். பரமசிவம் வேஷத்தில் அப்போது அண்ணன் காவி உடை அணிந்து கலசத்துடன் வந்திருக்கிறார்.
பரமசிவன் உட்கார்ந்து தவசு செய்கிறார். சொக்கப்பனை போன்று ஒரு கூம்பு வடிவத்தில் துவரை மிளார்கள் கட்டப்பட்டதன் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட்டிருக்கிறது. ரதி மன்மதன் வேடம் இட்டவர்கள் கையில் வில்லேந்தி ஊர்வலமாய் வெள்ளை நிற யானை மீது வருகிறான் . மன்மதன் பரமசிவத்தின் தபசைக் கலைக்கப் போகிறான். அவனிடம் அப்படி செய்த பரமசிவனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று கெஞ்சுவான். மன்மதனின் பாடலும் வரும். மன்மதன் சிவனைப் பழித்து " ஆதி... உன் அப்பன் பேயாண்டி... மோசமானவன்" என்று ரதி பாடல் வரும். மனம்தான்
தடுமாறும். தபசிருக்கும் சிவனை நோக்கி மலர் அம்பு எய்துவார். சிவன் நெற்றி திறக்கும். காமன் படத்தின் மீது கற்பூரம் கொழுந்து
விட்டுப் பற்றி எரியும். அதிர்வேட்டு முழங்கி காமதகனம் முடியும். சாம்பல் நிலத்தோடு ஒட்டிக் கிடைக்கும்.
அப்பா அவ்வப்போது சிவனிடம் இதை சொல்லியிருக்கிறார். அவர் காமனாகவும் பரமசிவனாகவும் வேடமிட்டிருக்கிறார். சுப்பையாவிடம் கூட சிவன் கேட்டிருக்கிறான். வற்புறுத்தியிருக்கிறான்.
" காமன் தகனத்தை நாடகம் போடப்பா"
" அதுக்குத்தா ஊர் திருவிழா இருக்கே "
" இப்பெல்லா யாரும் நடத்தறதில்லேயே..."
" நாங்க அதப் பத்தி நாடகம் போட்ட எரிந்த கட்சி எரியாத கட்சின்னு இப்ப இருக்கற பகுத்தறிவு விஷயங்களைத்தா பேச வேண்டியிருக்கும்."
" அது பிரச்சனையில் முடியுமே "
"எங்களுக்கு இப்ப இருக்கற , தெரியற காமன் அமெரிக்காதா... அதத்தா எரிக்கணும் "
" உங்களுக்கு புதுசா என்ன
தோணுதோ நீங்க சொல்லிட்டிருப்பீங்க பழசெ சொல்ல ஆள் இல்ல பாரு..."
அன்னதானத்தின் போது தேடி எடுத்து சாமை சோறும் போடுவான். கொள்ளுப் பருப்பும், சாமையும் நல்ல ருசியாக அவன் கைகளிலிருந்து விழும். கம்பும் நெல்லும் வள்ளம் வள்ளமாய் சலவைக்காரர்களுக்கும், நாவிதர்களுக்கும் அவன் அப்பா அள்ளிப் போட்டதை சின்ன வயதில் பார்த்திருப்பதாய் சொல்வான். ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஜாதகம் பார்ப்பவர்கள் வீட்டிற்கு வந்து கம்பு அள்ளிப் போவதைப் பார்த்திருக்கிறான். ஜாதகம் பார்த்தபின் அப்பா அய்ந்து, பத்து என்று காணிக்கை வைத்துத் தருவார். ஜாதகம் எழுத பனையோலை அவர்கள் வீட்டில் கொண்டு வந்து போட்டிருப்பார். யார் வேண்டுமானாலும் சொல்லிவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.
" ஆடிப் போய்
ஆவணி வந்தா நல்லது.
புரட்டாசி வந்தா
புரட்டிப் போட்டிரும்
ஜாக்கிரதையாக இருக்கணும் ”
என்று சொல்வார். அப்படியொரு புரட்டாசி மாதத்தில்தான் அவருக்குப் பக்கவாதம் வந்து நாற்காலியிலேயே இருக்கச் செய்துவிட்டது.
அமலத்திற்கு ஞாபகம் வந்தது. ஒரு புரட்டாசி சனிக்கிழமைக் காலையில் அவள் புருசனைக் கடைசியாகப் பார்த்தது. கோனார் வீதி சுப்ரமணியன் நாமம் போட்டு
பஞ்சகட்சம் கட்டி சங்கு ஊர்தி சேர்வை காணிக்கைக்கு வீடு வந்து போனான். அப்போது
அவள் கணவன் சொம்பில் காசு போட்டான்.அதன் பின் அவன் காணாமல் போனான்.
3.
கிரிவலத்திற்குப் போவதாய் சொன்ன பரமேஸ்வரி ரொம்ப
நாளாய் காணவில்லை.பழனியிலேயே தங்க இடம்
பார்த்துத் தங்கி விட்டாளோ என்று அமலம் நினைத்திருந்தாள். சோமசுந்தரத்தை
மறுபடியும்பார்த்த அவள் பரமேஸ்வரியை காணவில்லை என்று சொன்னாள்.
“ என்ன என்னெ இழுக்கறே அக்கா ‘
“ என்னமோ. அன்னிக்கு நீ கிரிவலம் போன்னு சொன்னியே
அப்பத்தா அவளும் போறன்ன்னு சொல்லிட்டுப் போனா ..காணலே..”
கையிலிருந்த கிரிக்கெட் பேட்டைக்காண்பித்து அவுட் ஆப் பிட்ச் ஆயிருச்சு போல
என்று சொல்லிக்கொண்டே கிரிக்கெட் பந்தை தடவிக்கொண்டிருந்த ரகீமைப் பார்த்துச்
சிரித்தான்.அவனும் எல்லாம் புரிந்தது போல்
சிரித்தான்.