சிறுகதை
மூன்று நதிகள் : சுப்ரபாரதிமணியன்
--------------------------------------------
கவுசிகா:
கவுசிகா நதி என்ற போர்டைப்பார்த்தான்.
அம்புக்குறிப்பிட்ட இடம் வெறும் தரையாய் கிடந்தது.. அம்புக்குறி நீண்டு கொண்டே
போவது போலிருந்தது. சமீப ஆண்டுகளில் கவுசிகா நதி இருந்த தடத்தைக் காட்டுவதற்காக பல
போர்டுகள் முளைத்து விட்டன. நதி இருந்த அடையாளம் தெரியவில்லை.பெரும்பாலும் எல்லா
இடங்களிலும் கட்டாந்தரைதான். சில இடங்களில் சிமெண்ட் தரை இருப்பதை மங்கலத்தில்
கண்டிருக்கிறான்.தெக்கலூரில்
மண்வண்டிப்பாதையாகவே போய் விட்ட்து. அப்படியொரு போர்டு போட்டு இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தியதற்காக
வருத்தப்படுபவன் போல்கைபேசியைப் பார்த்தான்.அம்புக்குறி நதி நீரை உறிஞ்சி
விட்டு திசை காட்டியது.
அழைப்பு இரண்டு முறை வந்து அவனை நிறுத்தியிருந்தது..வெயிலின் உச்சத்தில்
அவன் முகம் கறுத்திருந்தது..:ஒரு மருத்துவப் பரிசோதனைக்கென்று கோவைக்குச்
சென்று மருத்துவர் சொல்லி விட்டார்.
தைராய்டு பிரச்சினை என்று பல நாள் அலைந்து கொண்டிருந்தாள் மேகலை. அதன் அளவு ஏறும்
இறங்கும் அதற்குத் தகுந்தமாதிரி சாப்பிடும் மாத்திரைகளின் அளவு ஏறும் இறங்கும்.
என்னவவோ நிவர்த்தி கிடைத்த மாதிரித் தெரியவில்லை.
என்ன .. யாரு பேசறா
நூல் குடோன்ல இருந்து பேசறாங்க
பேசவேண்டியதுதானே
இல்லெ சிக்னல் இல்லாமெப் போச்சு
ஊர்பூராந்தா டவர் போட்டு
வெச்சிருக்கனுகளே. எல்லாத்தையுமிணைக்கறோம்ன்னு சொல்லிட்டே இருக்காங்களே.
சிக்னல் வருது போகுது இப்போ. வருது. அந்த
மேட்டுக்குபோயி பேசிர்ரன்.
என்ன ரகசியமா
வேவாரத்திலே என்ன ரகசியம் வேண்டிக்கெடக்கு.
முருகேசன் நடையை விரசலாக்கிக் கொண்டு
மேற்குப்பக்கம் போனான். டெல்லி முட்களின் அடர்த்தி தொடர்வண்டிப்பாதையை
மறைத்திருந்தது.அவனின் வேகத்தை வேட்டி தடுத்தது. பாலம் ஒன்று தூரத்தில் சிதிந்து
போய்அதன் ஓரத்தைக்காட்டிப் பல்லிளித்துக் கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டியொன்று
தனியே எந்த விதக் கத்தலுமின்றி நகர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிடையனின் கைத்தடி போல்
ஏதோ ஒன்று அவன் கண்களில் பட்டது.ஆட்டிடையனாக இருக்கமாட்டான்.ஆணகள் ஆடுமாடு
மேய்கிறவர்கள் கண்களில் தட்டுப்படுவதில்லை. ஏதாவது பெண் மேய்ப்பவளாக இருக்கக்
கூடும்.. கையில் இருந்த கைபேசியை சிக்னல் கிடைக்காத எரிச்சலினைத் தீர்த்து விடுபவன் போல் உதறிக்கொண்டான்.அது கை நழுவி
விழுந்து விடக்கூடாது என்ற பயமும்
அவனுக்கிருந்து முகத்தில் கவலை ரேகைகளை ஓடச்செய்தது.
மேகலை தூரத்தில் தென்படும்
மின்மயானத்தைப்பார்த்துக் கொண்டிருந்தாள். மில்களின் கூம்புகள் போல் ஏதோ நீட்டிக்
கொண்டிருந்தன. அதில்தான் ஆவி வெளியேறுமோ. ஆவி வெளியேறிய பின் சாம்பலுக்காகத்தான்
எரிக்கிறார்கள். விறகின் ஆவி அல்லது மின்சார ஆவியாக இருக்கக்கூடும். அது
நகரத்திற்கு வெளியில்தான் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லாமல் இழவு என்று வந்து விட்டால் வரத்தான் செய்கிரது.
ஒரு வருடத்தில் நாலைந்து தரமாவது அங்கு வந்திருப்பாள். இது இரண்டாவது மின் மயானம்.
நகரின் மத்தியில் இன்னொரு மின்மயானம் பழைய சுடுகாடு பக்கத்தில் இருந்தது. நொய்யல்
கரையிலிருந்து நூறு அடி தூரத்தில்
இருந்தது, முன்பெல்லாம் மழைக்காலங்களில் அங்கு சுடுகாட்டில் வெள்ளம் புகுந்து
விட்டக்கதையை தன்னாசி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் எண்பதைத் தொட்டு விட்டார்.
ரத்தம் உறிஞ்சி காய்ந்து போன உடம்புக்காரர் அவர்.
“ என்னை இங்கெல்லா
எரிக்காதிங்கப்பா . சுடுகாட்லே பொதைங்கப்பா “ ஒரு தரம் அந்த மின் மயானத்திற்கு
மேகலை வந்த போது சொல்லிக் கொண்டிருந்தார். அவர் புதைக்கச் சொன்ன மேட்டுப்பாளையம்
சுடுகாடு பன்றிகளால் நிரம்பியது.பன்றிகள் எப்போதும் உறுமிக்கொண்டிருக்கும்.அதை
வளர்க்கிறவர்கள்தான் சுடுகாட்டுப் பராமரிப்பைச் செய்து கொண்டிருந்தார்கள்.
பன்றிகளை விரட்ட வேண்டும் என்று பலர் சொன்னபோதேல்லாம் எங்களையும் வெரட்டிருங்க
என்று அவர்கள் சொல்ல அந்தப்பேச்சு நின்று போனதாக யாரோ அவளிடம்
சொல்லியிருந்தார்கள். தைராய்டு இப்படியே
சிரமப்படுத்திக் கொண்டிருந்தால் இப்படி
ஏதாவது ஒரு மின் மயானத்திற்குத்தாஅன் வர வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப்
பார்த்தாள். சங்கடமே மிஞ்சியது. பனியன் பொதி அவள் முகத்தில் அழுத்தி சங்கடம்
தந்தது.
முருகேசன் இரட்டை சக்கர வாகனத்தை
மீண்டும் முடக்கியபோது அது நகராமல்
சங்கடத்தைச் சொல்லிக்கொண்டிருந்தது.
என்ன ரகசியம் பேசியாச்சா
இதிலென்ன ரகசியம் வேண்டிக் கெடக்கு
அப்புறமென்ன கேட்காமியே சொல்ல
வேண்டியதுதானே.
ஒண்னுமில்லெ. நூல் வெலை ஏறியிருக்காமா.
நாலு பேல் வாங்கிப்போட்டுக்கோனு குடோன்லே இருந்துச் சொன்னாங்க.
அப்போ என்ற கிட்ட இருக்கற தாலிக்கொடியும்
போயிரும்.
போனா என்னா திரும்ப வராதா. மீட்டலாம்.
வெலை ஏறப்போ வாங்கிப்போட்டாதானே நல்லது. நாலு காசு லாபம் கெடைக்கும்.
பவர்டேபிள் போட்ட நீங்களே இப்பிடி ஆலா
பறக்கறப்போ பெரிய பெரிய ஆளுகலெல்லா சும்மா இருப்பாங்களா
அவன் இரட்டைச்சக்கர வாகனத்தின்
ஸ்டேண்டைப் போடு எரிச்சலுடன் எட்டி உதைத்தான். அது சீராக நகரும் சப்தம் கேட்டது.
இருக்கறதுதா. அவனவன் சாமார்த்தியத்துக்கு
தகுந்த மாதிரி பாத்துக்கறதா. நாலு காசு பாக்க வேனாமா.உன் வைத்திய செலவுக்காச்சும்
ஏதாச்சும் வேணுமில்லெ.
கடைசியா அதுலதா வந்து நிப்பீங்க
கவுசிகா நதி பற்றி அவனிடம் கேட்கலாமா என
நினைத்தாள். இப்போதுதான் சமீபமாய் இந்த போர்டுகளை அந்த வீதியின் நெடுகிலும்
பார்க்கிறாள்.அப்புறம் தெக்கலூர், கோவை பாதிகளில் கூட அவினாசி
அத்திக்கடவுத்திட்டப் போராட்டம் வந்த பின்புதான் கவுசிகா நதி பற்றி அதிகமாய்
பேச்சு அடிபடுகிறது என்பதை யாரோ பேச்சுவாக்கில் சொன்னது கொஞ்சம் ஞாபகம்
வந்தது.அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்நதி பற்றியப் பேச்சு இருந்தது..
அப்படியொரு நதி இருந்ததாக எந்த வாத்தியாரும் சொல்லித்தந்த்தில்லை.
எந்தப்பாடத்திலும் இருந்ததில்லை.மறைந்து போன நதி என்றார்கள். நதி பலரின்
ரத்தத்தையும் உறிஞ்சி சீக்கிரம் வேறு நிறமாகிவிட்டது.
வாகனம் சீரான வேகம் எடுத்து
தொடர்வண்டிச்சாலைக்கு இணையாகச் சென்றது . மீண்டுமொரு கவுசிகா நதி
போர்டைப்பார்த்தான். அம்புக்குறிப்பிட்ட இடம் தொடர்வண்டி பாலத்தின் அடியைச்
சுட்டிக்காட்டியது.அதுவும் கட்டாதரையாகத்தன் இருந்த்து. நொய்யால் சாக்கடையுடனும், சாயக்கழிவுடனும்தான் ஓடுகிறது. ரொம்பவும் சிறுத்துப் போய் விட்டது அதுவும்
மறைந்து போன நதி என்று எங்காவது பேச்சு வரும். அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது
என்று சொல்லிக் கொண்டாள்..
நொய்யல்:
இந்த நொய்யல் ரோட்டைப்போட்டு ஆறே இருந்த
அடையாளமில்லாமெப் பண்ணிருவாங்கன்னு ஒரே பேச்சா இருக்கு.
சாயத்தண்ணியும் சாக்கடையும் ஓடறப்போ அது
எத்தனியோ மேல்.
மொட்டை போட்ட மனுஷன் மாதிரி கான்கிரிட்
நிக்குது ஆத்து மேலெ. .. உன் மொட்டத்தலை மாதிரியா
மொட்டைத்தலையைத்தடவிக்கொண்டாள் மேகலை.
முதல் தரம் ஹீமோதெரபி தந்தபோதே முடி கொட்ட ஆரம்பித்தது. சீப்பெடுத்து சீவும் போது
ஒரு இஞ்ச் அடர்த்திக்கு முடி சீப்போடு வந்தது.
கண்களில் கரகரவென்று கண்ணீர் பொங்கி வழிந்தது. துடைக்காமல் கன்னங்களில்
வழிந்தோடிக்கொண்டே இருந்தது. இப்படியே விட்டால் மளிகைக்டைக்குக் கூட
போகமுடியாது.வெளியில் எங்கும் போக முடியாது. பெருந்தொழுவு பெருமாள் கோவில்
மேகலைக்கு குலதெயவம் என்பதால் போய் மொட்டை அடித்து வந்து விட்டாள். அவளுக்கு வந்த
புற்று நோய் பற்றி வெளியில் யாருக்கும் தெரியாது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்து
மறைக்க முடியுமோ அவ்வளவு நல்லது என்று முருகேசனும் சொல்லியிருந்தான்.இல்லையென்றால்
ப்ச் என்ற அனுதாபத்தில்தான் எல்லாம் நடக்கும்.எல்லாவற்றுக்கும் கோவை ராமச்சந்திரன்
மருத்துவமனைக்குத்தான் போக வேண்டியிருந்தது.அங்கு மொட்டையடித்தவர்கள் சுலபமாகக்
காணப்பட்டார்கள். மொட்டை அடித்தபின் கூச்சப்பட்டு சிலர் டோப்பாவும்
அணிந்திருப்பதும் தெரிந்தது. மருத்துவமனையிலேயே டோப்பாக்கள் விற்கும் கடையும்
இருந்தது அவள் அதற்குள் போகவில்லை. போக அவசியம் இருக்கும் என்று நினைக்கவில்லை.
அடுத்த ஹீமோதெரபியின் போது தான் உயிருடன் இருப்போமா என்ற சந்தேகம் பல சமயங்களில்
வரும். நோவுக்கு மருத்துவமனைக்குப் பார்க்கிறதாய் சொல்லிக் கேட்கிற யாரிடமும் அவள்
எந்த மருத்ஹ்டுவமனை என்று சொன்னதேயில்லை.
சிவன்கோவில் தெற்குத்தெருவில் அவர்கள்
வீடு இருந்தது. நொய்யல் சாலை விரிவாக்கத்தில் அவர்கள்
வீட்டிற்கு சிரமம் ஏற்படுமோ என்ற பயம் இருந்தது.ஸ்டீபன் வீடு வரைக்கும் எடுக்க
வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்னும் முப்பதடி சென்று விட்டால்
முருகேசன் வீடுதான்.சரசவென்று அட்டைப் பெட்டிகளை கலைத்து விட்ட மாதிரி
எல்லாத்தையும் இடித்துக் கோரமாக்கி விட்டார்கள். பிசிறு பிசிறாய் வீடுகள் தங்களைச்
சிதைத்துக் கொண்டு நின்றன.
பாக்கலாம். ஏதாச்சும் காம்பன்சேசன்
குடுப்பாங்கல்லெ
மொட்டை போட்டுக்களவுக்குகுடுப்பாங்க. அதெ
வெச்சுட்டு மண்ணரைக்கு அந்தப்புறமும் எடம் வாஙக முடியாது. இந்தப்புறம்
பெருந்தொழுவு வரைக்கும் ஒண்ணும் பண்ணமுடியாது. அப்பறம் எங்க போறது.
பெருந்தொழுவு போய் உங்க குலதெய்வம்
கோவில் பக்கத்திலெ இருந்தற வேண்டியதுதா.
குலதெயவம்ன்னு வந்தப்புறம் உங்களது என்னதுன்னு ஒண்ணும் பிரிக்க முடியாது பாருங்க.நல்லதில்லெ
இவங்க நொய்யலை ரோடு போடறம்ன்னு
பிரிக்கலாமா..
பெரிய பெரிய விசயமெல்லா பேசுனா எனக்கு
என்ன புரியும். இப்போதைக்குப் பேசற மொட்டை போட்ட விவகாரமே புரிய மாட்டீக்குது.
இந்தக்கிரகம் புற்று நோய எப்படி வந்ததென்று
அங்கலாயித்துக் கொள்வாள் மேகலை. பழைய பனியன் பீஸ்களை அடுப்பெரிக்க
பயன்படுத்தியது உடம்பில்அந்த ரசாயனம் போய் ரகளை செய்திருக்குமோ என்று ஒரு நாள் கண்டு
பிடித்தது போல் சொன்னாள். நொய்யலில் பிடிபடும் மீன்களை சாப்பிடுவதாலா என்றும்
கேட்டுக் கொண்டாள். அப்புறம் முருகேசந்தான் என்னவோ சாப்பாட்டு மிஷ்டேக்தா என்று
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான்.அவன் செய்த பஞ்சு வியாபாரம். அப்புறம் செக்ண்ட்
பீஸ் துணிகளின் தூசுக்குப்பைக்குள் பல
ஆண்டுகள் இருந்ததுதான் காரணம் என்று மனசுக்குள் இருந்தது., இப்போதெல்லாம் கோவைக்கு காரில் செல்லும்
அளவுக்கு வசதியாகியிருந்தான்.வியாபாரம் தூரம் கொண்டு போய் அவனை உட்கார வைத்து
விட்டது மகிழ்ச்சிதான் தந்திருக்கிறது ஒரு
புறம். தைராய்டு பிரச்சினை என்று மெல்ல
மெல்லக் கிளம்பி மார்புப் புற்று நோய் வரைக்கும் வந்து கடந்த மூன்று வருடங்களாய்
அலைக்கழித்து விட்டது அவனை. நதியின் மணலற்றுபோன வெக்கை போய் வாழ்க்கை ஆகிவிட்டது.
இதுவெல்லா ஊர் ஒலகத்திலெ வெகு சாதாரணமாயிருச்சு
ஊரில இருக்கறவனெல்லா சாப்புடறதுதா நானும்
சாப்படறேன்.
இன்னும் ஒரு முறை ஹீமோதெரபி
தரவேண்டியிருந்தது. அதற்கப்புறம்தான் அறுவைச்சிகிச்சை..
பொழச்சுவந்தா குலதெய்வம் பெருமாள் புன்ணியம் என்று இருவரும் முடிவு
செய்திருந்தார்கள்.
காசுக்காக ஊரே நாறி கெடக்குது. எந்தக்
கிரகமோ இதைக் கொண்டுட்டு வந்திருச்சு.
அவளுக்கு இப்படியொரு அவப்பெயர் நோயுடன்
நடமாட வேண்டியிருக்குமா என்று பலசமயம்
யோசிப்பு வரும்.
பாரதப்புழா ;
பாரதப்புழா சிறுத்து தூரத்தில்
ஓடிக்கொண்டிருந்த்து. மணல் எவ்வித கசடுமில்லாமல் அதன் நிறத்தில் இருந்தது. இன்னும்
தூரத்தில் தெரிந்த தென்னை மரங்களின் அணிவகுப்பு நேர்த்தியாக இருந்தது. பச்சையும்
மண்லின் நிறமும் கலந்து ஓவியத்தின் படிமமாகியிருந்தது,
ஏதோ பேச்சுக்குத்தான் நிம்சா அப்படிசொன்னாள். அவன் பிடிக்காதவன் போல
முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான். அவனுக்குப் பிடிக்காத நேரங்களில் மேல் சட்டைப்பொத்தான்களை திருகிக்
கொண்டிருப்பான்.அப்போது போட்டிருந்தது டீ சர்ட் என்பதால் கழுத்துக்கு வெகு அருகாமையில் இருந்தப் பொத்தானைத்
தொட்டான்.அதைத் திருக முற்பட்டவன் அதன் இறுக்கத்தன்மையை உணர்ந்து கொண்டவன் போல் நிறுத்திக் கொண்டான் ,பின் காற்றில் ஆடி அவனின் வலது கை தொய்ந்து விழுந்தது.
அருணைப்பற்றி நிம்சாவுக்கு எல்லாம்
தெரியும்தான். என்றாலும் துடுக்குத்தனமாய்தான் கேட்டு விட்டாள்.
“ நீ என்ன டெஸ்ட்
டுயூப்க்கு பொறந்தவனா “
அந்த பொது நூலக அட்டை விண்ணப்பத்தில்
தகப்பன் பெயர், தாய் பெயர் என்று இருந்த இடங்களை அவன் நிரப்பவில்லை. அதற்குத்தான் அப்படி
கேட்டு விட்டாள் நிம்சா.
“ உங்க அப்பா, அம்மா பேரு இல்லையா . டெஸ்ட்டியூப்புக்குப் பொறந்தவனா இருந்தாக் கூட அம்மான்னு
ஒருத்தி இருப்பாங்களே,..
“
“ எல்லாரும் இருந்தாங்களே . இப்ப இல்லே “
மேகலை புற்று நோயால் அவதிப்பட்டு
சீக்கிரம் போய் சேர்ந்து விட்டாள். முருகேசன்
அய்ம்பதாவது வயதில் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.போர்டிங்க்
ஸ்கூல் என்று வெவ்வேறு இடங்களில்தான் அருண் வளர்ந்தான்.கல்லூரி என்று வருகிறபோது
கேரளாவிற்குப் போகிறேன் என்று கிளம்பி விட்டான்.
அருணின் தாடி அடர்த்தியான கறுப்புக்கு
முயற்சி செய்து கொண்டிருந்தது.கொஞ்சம் உடம்பை ஏற்றியிருந்தான்.இந்த நவம்பரில்
உலகம் முழுக்க “ நோ ஷேவ் நவம்பர் “ என்றொரு விசயம் இளைஞர்கள் மத்தியில் பரவலாகலாகக் கடைபிடிக்கப்படுவதை கூகுளைத்
தேடியபோது தெரிந்து கொண்டான்.ஆண்களைத் தாக்கும் புராஸ்டேட் புற்றுனோய் , டெஸ்குலர் புற்று நோய் , அதனால் நிகழும் ஆண்களின் தற்கொலை
ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக இந்த தாடி வளர்ப்புத் திட்டம் என்பதை
அவன் சொல்லி நிம்சா தெரிந்திருந்தாள்.
“ பெண்களுக்குன்னு நோ டிசம்பர் ஷேவ்ன்னு
ஏதாச்சும் ஆர்ம்பிபீங்களா என்ன .. “
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
சிகிச்சையின் போது உடலில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து களையிழந்துக் காணப்படுவார்கள்.
அதை மனதில் வைத்துதான் மாதம் முழுவதும் ஷேவ்
செய்யாமல் அந்தச் ஷேவ்க்கு ஆகும் செல்வை புற்று நோய் தொடர்பான
விழிப்புணர்வுக்கு கொடுக்கும் செய்தி சொல்லுவதாக “ நோ ஷேவ் நவம்பர் “ இருப்பதை அருணும் பின்னர் சொன்னான்.
ஊருக்குப்போக வேண்டும் என்று
தோன்றுகிறபோதெல்லாம் கிளம்பி விடுவான்.சட்டெனப் போய் விடுவதற்க்கான எல்லா
உபாயங்களும் இருந்தன.
இங்கு வந்ததே அதிசயம் என்பது போல் ஆரம்பத்தில்
முருகேசன் பார்த்தான்.
“ அங்கிருக்கிருக்கறவனுக எல்லாம் இங்க வந்து படிக்கறாங்க. நீ அங்க் போறன்கறே..”
“ என்னமோ தோணுச்சு “
“ அந்தப் பொண்ணுக மனசில பட்டு
நிரந்தரமாயிட்டங்களா “
அப்போது அப்படி யாரும் இல்லை.கல்லூரியில் சேர்ந்தபின்புதான் நிம்சா அப்படி
நிரந்தரமானாள். அப்படி நிரந்தரமாக அவர்கள் போட்டுக் கொண்ட கண்ணாமூச்சி ஆட்டம் அதி இன்பம் தந்தது. பிறகு
சுலபமாகச் சண்டையும் சமாதானமுமாகச் சென்று கொண்டிருந்தது. அறைப்பூட்டை திறப்பதும்
மூடுவதுமான சாவியொன்றின் செயல்பாடாய் இருந்த்து.
“ நான் போறன் “
“ எப்போ வருவே “
” வருவேன். “
“ எங்க உங்க பனியன் ஊருக்கா “
..” ஆமாம்.”
“இந்த சுத்தமான
பாரதப்புழாவைவுட்டு உன்னாலே போக முடியுமா “ பொறக்கறவே பாரதப்புழாவோடத்தான் பொறந்தனா. வளர்ந்தனா . எடையிலே பாத்த்துதான்
இந்தப் பாரதப்புழா ”
“. அப்புறம் இடையிலெ பாத்தது இந்த நிம்சா ஆமா நிஜம்தா ”
வாகனங்களின் இரைச்சலில் ஒரு நிமிடம் எதிர்திசையைப் பார்த்தார்கள்.தெருவின்
ஓரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் குள்ளத்தனத்தை ரசிப்பது போல்
பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கையில் ஒரு பிளாஸ்டி கயிறும் அதன் முனையில் ஒரு
பெமரன் நாயும் இருந்தன.
” என்ன பார்வை
வெறிக்க..அந்தப் பெண்ணோட பேர் நிம்சாவா இருக்காது “
” வேற பேராத்தா இருக்கு
தெரியும். என்னமோ அந்தப் பொண்ணு நான் இப்போ என்ன நெனைக்கறனோ அதைத்தா நெனைக்கறதா
தோணுது அதுதா” “ “ என்ன டெலிபதியா “
“ உன்னோட டெலிபதி என்ன சொல்லுது. நான் எங்க போவன்னு சொல்லுது.. ”
“ என்னமோ கொஞ்சம் கோபம். மீறிப் போனா நொய்யல். நொய்யல் ஊர். கழுதை கெட்டுக்
குட்டுச்சுவரானப்புறம் பாரதப்புழா “
” எல்லாம் மறஞ்சிட்டிருக்கற நதிக.. “
“ உங்க ஊர்லே நதிக மறையிதுன்னு சொல்லு எங்க ஊர்லே நிதானமா மணலே முத்தமிட்டு
ஓடிட்டே இருக்கும்”
“ செரி செரி பெருமை பீத்தீக்காதே “
“ நீங்களும் பீத்திங்க யார் வேணான்னா “
“ செரி பீத்திக்கிறேன் . இப்போ
எங்கூர்லே முப்பதாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி. இரண்டாயிரத்து இருபதிலெ ஒரு லட்சம் கோடி அந்நிய செலவாணி.எவ்வளவு பெருமை ”
“ எத்தனை ஆயிரக்கணக்கான பேர் புற்று
நோயிலெ சாகக் காத்திருப்பாங்கன்னு சொல்லடா ‘
“ இப்போ எனக்காகக் காத்திருக்கிற
பஸ்சுக்குப் போறேண்டி ..”
“ ஓகே கண்மணி “
மகிழ்வுந்தின் சாவியை அவள் கையில்
கொடுத்தான். ” என்னை டிரப் பண்ண வந்துட்டுப் போடி “
அவன் அதைக் கொடுத்த போது எதிரில் இருந்த
மின்விளக்கின் வெளிச்சம் சாவியின் நிழலை பூதாகரமாக்கியிருந்தது. காய்ந்த மரத்தின் பகுதியாயும் தண்ணீருக்காக வாயைத் திறந்து வைத்திருக்கும் ஏதோ பறவையின் நிழலுரு
போலவும் அது இருந்தது.
subrabharathi@gmail.com Fb:
Kanavu Subrabharathimanian Tirupur
:
blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Home :
8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003