சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 26 ஜனவரி, 2016

ஒரு பேட்டி :

வாழ்க்கையை முறைப்படுத்த இலக்கியப் பகிர்வு அவசியம்!

-    எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

தமிழ் நவீன இலக்கிய உலகில் திருப்பூரின் அடையாளங்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். 13 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 47 நூல்களை வெளியிட்டிருக்கும்  இவர் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து வாழ்வியல் பிரச்சனைகளை இலக்கியரீதியாக வெளிப்படுத்தி வருபவர். சாயத்திரைஎன்ற நாவலுக்கு தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான கதா விருது உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளி வந்துள்ளன.
குறிப்பாக, திருப்பூர் சுற்றுச்சூழல் சார்ந்த சாயத்திரைநாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளிவந்திருக்கிறது. தண்ணீர் யுத்தம்“, “நீர்ப்பாலைபோன்ற இவரின் நூல்கள் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றிப் பேசுகின்றன. பல நூல்கள் முக்கிய  பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக உள்ளன.
இவரது கனவுஇலக்கியச் சிற்றிதழ் 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொலைபேசி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியோடும் இணைந்து செயலாற்றிவரும் இவர், “நமக்கிருப்பது ஒரு பூமி; நம் வாழ்வின் முதல் முழு ஆதாரமும் இதுதான். இதைச் சீரழிப்பது நம் வாழ்வின் இறுதி நிலையாகிவிடும்என்று எங்கெல்ஸ் கூறிய வார்த்தைகளை மையமிட்டுச் செயலாற்றி வருகிறார். நம்ம தீக்கதிருக்காக அவரது பகிர்வு:
உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை?
சோமனூர் அருகே செகுடந்தாளி கிராமம்தான் எனது ஊர். அங்கு உயர்சாதி பிடிமானத்தால், சாதி அடிப்படையில் அடிக்கடி வன்முறை ஏற்படும். விவசாயம் சார்ந்த இப்பகுதியில் தண்ணீர் பிரச்சனையும் கடுமையாக இருந்தது. இத்தகைய சூழலில் நிறைய பேர் அங்கிருந்து வெளியேறி திருப்பூருக்கு வந்தனர். அப்படித்தான் எங்கள் குடும்பமும் வெளியேறினோம். கடும் உழைப்பு, விருந்தோம்பல், மொழியை லாவகமாக பயன்படுத்தி மரியாதையோடு எளிமையாக பேசக்கூடியவை இந்த வட்டார மக்களை நல்ல மனிதர்களாக அடையாளம் காட்டின. பள்ளி வாழ்க்கையில் இங்குள்ள பனியன் தொழிற்சாலை, தொழிலாளர்கள் பற்றி சமூக அக்கறையோடு அறிந்து கொண்டேன்.
கவர்ச்சியும், அதிர்ச்சியும்
1990களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி என்ற நிலையை திருப்பூர் எட்டியது. இடையில் 8 ஆண்டுகள் ஐதராபாத் இடமாறுதல் ஆகி வேலைக்குச் சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது கவர்ச்சியாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி, வேலைவாய்ப்பு என்பது கவர்ச்சியானதாக இருந்தது. அதேசமயம் 60 ஆயிரம் குழந்தை தொழிலாளர், நொய்யல் நதி காணாமல் போனது, சாக்கடை ஓடும் நதியானது அதிர்ச்சியானதாக இருந்தது.
எழுதத் தூண்டிய திருப்பூர்
உழைப்பு என்பதைப் பெரும் மூலதனமாக வைத்து, உழைக்கும் மக்களையும், அதன் தொடர்ச்சியாக குழந்தைகளையும் உழைக்க வைக்கும் மோசமான கலாசாரத்துக்கு கொண்டு போனது. 8 – 10 வயது குழந்தைகள் அதிக அளவு சம்பளம் தருவதாகச் சொல்லி வேலை வாங்கப்பட்டனர். இதைப் பற்றிய புரிதல், அவமானம் எதுவும் இல்லை. 4 குழந்தைகள் இருக்கும் குடும்பத்தை வருமானமாகப் பார்த்தனர். அது குழந்தைகளைப் பாதிப்பதாகப் பார்க்கவில்லை. இந்த சூழலில்தான் எனது சுதந்திர வீதிகள்முதல் கதை யுகவிழிப்பு இதழில் வந்தது.
ஐதராபாத் இடம் பெயர்ந்தபோது, அங்குள்ள தமிழர்கள் வாழ்க்கை, நிறைய சிறுகதைகள், நாவல், தெலுங்கானா பின்னணியில் தமிழ்க்குடும்பம் பற்றிய மற்றும் சிலர்நாவல், சுடுமணல், நகரம் 90, போன்றவை எழுதினேன். அரசியல் மத சண்டைகளுக்கு பின்புலமாக இருப்பது சாமானியர்கள்தான். அதனால் அவர்கள்தான் பலியாகிறார்கள் என்பதை சொல்வதாக எனது படைப்புகள் இருந்தது.
சாயத்திரை நாவல்
சாயத்திரை நாவலில் நொய்யல் ஆறு எப்படி பாதிக்கப்பட்டது, மக்கள் எப்படி இங்கு ஈர்க்கப்பட்டு எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த நாவல் பேசியது. இந்த நாவல் ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகளில் வெளிவந்துள்ளது.
குழந்தைத் தொழில், பெண்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்க்கை, திருப்பூர் மக்கள் வாழ்க்கையை மையப்படுத்தித்தான் நான் பதிவு செய்து வருகிறேன். தினமும் செய்தியைப் படிக்கிறோம். கேட்கிறோம். ஆனால் இலக்கியப் படைப்புகளுக்கும், செய்திப் பதிவுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
நகரமயமாக்கல் விளைவு
திருப்பூரில் 9 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையாக, இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், உலகமயச் சூழல், விவசாயம், சிறுதொழில் நசிவில் பெரிய நகரங்களுக்கு தொழிலாளர்கள் வருகிறார்கள். மெட்ரோபாலிடன் (பெருநகரம்) நகரின் தன்மை, அதில் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை, இந்த நகரம் எப்படி இயங்குகிறது, வாழ்நிலை, அவர்கள் வசிப்பிடம், சுற்றுப்புறச் சூழல், பணம் சம்பாதிக்கும் வேட்கையில் பெரும்பான்மையினர் சொந்த வாழ்வை இழப்பது, அவநம்பிக்கை, மனச்சோர்வு உள்ளிட்ட மனபாதிப்புகள் ஏற்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது.
தற்போது தொழிற்சங்கங்கள் தேவையில்லை, தொழிலாளி என்ற அந்தஸ்து தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இவர்களை தொழிற்சங்கப்படுத்துவது, அரசியல் கல்வி தருவது பெரும் நெருக்கடியாகும். தொழிலாளிகள் அந்நியப்பட்டு இருக்கிறார்கள். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து ஏமாற்றம் அடைகின்றனர்.
ஒற்றைப் பெற்றோர் நிலை இங்கு அதிகம் உள்ளது. அதிக நேரம் பணிக்கூடங்களில் வேலை, ஆரம்பத்தில் சுதந்திரமாக இருப்பது போல தெரிந்தாலும், பிற்பாடு வாழ்க்கையை முறைப்படுத்த அரசியல், தொழிற்சங்கம், இலக்கியம் சார்ந்து இல்லாதபோது வெற்றுக்கேளிக்கையில் ஈடுபடுகின்றனர். அரசியல், இலக்கிய இயக்கங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படுகிறது. தனக்கான வாழ்க்கை மேம்பாடு அடையும் என நினைத்து தனிமைப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, அந்நியப்பட்டு இருக்கிறார்கள்.
உலகமயமாக்கலில் நிரந்தரம் இல்லாமல், கேசுவல், காண்ட்ராக் தொழிலாளியாக மாற்றப்படுகிறார்கள். இதை தொழிலாளி புரிந்து கொள்ளவில்லை. நல்ல பத்திரிகை, தொழிற்சங்க இயக்கம் இவர்களை மீட்டெடுக்கும் என நம்பிக்கை உள்ளது.
மறுக்கப்படும் கல்வி வாய்ப்பு
பீஹார், நேபாளம், அஸ்ஸாம் என பல மாநிலங்களில் இருந்து வருவதால் தொழிலாளர் அந்தஸ்து கிடைப்பதில்லை. கொத்தடிமைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கான கல்வி மறுக்கப்படுகிறது. இவர்களை இணைக்க முடியவில்லை. இணைப்பு பாடமுறை பள்ளிகள் மிகவும் முக்கியம். இந்த நிலையில் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமை ஏற்படுகிறது. கல்வி உரிமைச் சட்டம் வந்தாலும் மிகவும் வணிகமயமான சூழ்நிலைதான் உள்ளது. இதனால் அந்த குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுகிறது.
திருப்பூருக்கு நீங்கள் சொல்லும் கொத்தடிமைத்தனம் என்பது பொருந்துமா?
20 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நியச் செலாவணி ஈட்டும் திருப்பூரில் மற்ற பகுதிகளை விட கூடுதல் சம்பளம் தருவதால் இங்கு கொத்தடிமைத்தனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதே கொத்தடிமைத்தனம்தான். கொத்தடிமைத்தனத்திற்குள் போவதற்கு ரொம்ப காலம் ஆகிவிடாது. உலகம் முழுவதும் கார்ப்பரேட்மயமாக மாற்றும் முதலாளிகள் இப்படித்தான் செய்கின்றனர். தொழிலாளர்கள் மொழி, கலாச்சாரம் சார்ந்த அடையாளங்களை இழப்பது, தொழிலாளி என்ற அந்தஸ்து இல்லாமல் இருப்பது போன்றவை கொத்தடிமைத்தனம்தான்.
இதே பகுதியில் முன்பிருந்த மில் தொழிலாளி மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் இன்று அந்த நிலைமை போய்விட்டது. தினக்கூலி நிலைமைக்கு மாறிவிட்டது. இங்கு வாழ்வதற்கான கூலி மிக அதிகமாக உள்ளது. அதை சமாளிக்க நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது.
கார்ப்பரேட்டுகள், தொழிலாளர்களை எப்படியெல்லாம் மாற்ற நினைக்கிறார்களோ, அப்படியே தங்களை ஒப்படைத்துக் கொள்ளும் தன்மைதான் இருக்கிறது.
அரசியல் மற்றும் தொழிற்சங்க இயக்கங்கள் இதை மீட்டெடுக்கும் சிக்கலான பணியைச் செய்ய வேண்டும். சிக்கல் வரும்போது தேவையை உணர்கிறார்கள்.
உங்கள் படைப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன?
தொழில் நலனைச் சார்ந்தது தொழிலாளர் நலன் என்று கருதி அதை முடக்கக்கூடாது. நான் பிரச்சனைகளைச் சார்ந்து எழுதுவது கிடையாது. இங்குள்ள வாழ்க்கையைத்தான் எழுதுகிறேன்.
எனது படைப்புகளில் முன்வைக்கப்பட்ட குழந்தைத் தொழில்முறை, சாயக் கழிவு, நொய்யல் நதி போன்றவை, மாற்றம் ஏற்படுத்தும் சிறு உந்துசக்தியாக இருக்கிறது என கருதுகிறேன்.
புதிய தலைமுறை ஏற்றுமதியாளர்கள் வியாபார ஒப்பந்தங்களின்போது, பின்னலாடை தயாரிப்பில் குழந்தைத் தொழில் இல்லை, தொழிலாளர் ஒடுக்குமுறை இல்லை, ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டது என்பன போன்ற விதிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
திருப்பூர் பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றனவா?
திருப்பூர் பற்றி பல்வேறு வெளிநாட்டு தன்னார்வ அமைப்புகள், தனிநபர்கள் ஏராளமான ஆய்வுகளைச் செய்கின்றனர். ஆனால் இங்கு அத்தகைய முறையான ஆய்வு போதுமானதாக இல்லை. அரசுக்கு இதில் அக்கறை இல்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தார் நிறையபேர் இங்கு ஆய்வுக்கு வருகிறார்கள். அந்த ஆய்வுகள் கல்விப்புலம் சார்ந்ததாக இருக்கின்றன. அவை இலக்கிய, அனுபவப் பகிர்வுக்கு வாய்ப்பளிக்காமல் இருக்கின்றன.

சந்திப்பு: வே.தூயவன் ( தீக்கதிர் )