சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 27 ஜூன், 2015

புத்தகத்தின் மீதான  தடையை நீக்குக : கோரிக்கை

கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம் வியாழன் மாலை சக்தி பில்டிங், பாண்டியன் நகரில் நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். சக்தி மகளிர் அறக்கட்டளையின்  தலைவர் கலாமணி கணேசன்  .கனவு இலக்கிய இதழின் 29 ஆண்டின் முதல் இதழை வெளியிட்டார். .கனவு  திருப்பூரிலிருந்து வரும் இலக்கிய காலாண்டிதழாகும் . 29 ஆண்டுகளாக வெளிவருகிறது ( 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602 ஆண்டுச் சந்தா ரூ 100 )
 கு.செந்தில் எழுதிய பழந்தமிழரசும் மரபும் (  மொழி ஞாயிறு பாவாணர் பார்வையில் ) நூல் அறிமுகம் செய்யப்பட்டது . அவர் இதற்கு முன் எழுதிய       “ மீண்டெழும் பாண்டியர் வரலாறு “ நூல் மீதான தமிழக அரசின்  தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
. இவ்வாண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் பரிசு பெற்ற பேர்டு மேன் பட அறிமுகத்தை சுப்ரபாரதிமணியன் நிகழ்த்தினார்.. சிறந்த படம், சிறந்த சுய கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.

செய்தி ; கா .ஜோதி

பார்த்தது:(Birdman) : 

சிறந்த படம், சிறந்த சுய கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.
ரிக்கன் தாம்சன் ஒரு முன்னாள் சூப்பர் ஹீரோ நடிகர். பேர்ட்மேனாக (Birdman) மூன்று படங்களில் நடித்தவர் 4 ஆவது படம் எடுக்க நினைத்தபோது வெறுத்து அந்த வேடத்தை ஒதுக்கியவர்.
ஆனால் அதன் பிறகு தன்னை ஒரு நல்ல நடிகனாக வெளிக்காட்ட வேறு கதாப்பாத்திரம் எதுவும் கிடைக்காமல் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு பழைய பிரபல சிறுகதையை தானே மேடை நாடகமாக எழுதி, தயாரித்து, அதில் நடிக்கவும் செய்கிறார். அந்த மேடை நாடகம் பல முன்னோட்டங்களைத் தாண்டி மக்கள் பார்வைக்கு வரும் தருணம் வரைக்கும் தாம்ஸன் கதைதான் பேர்ட்மேன்.
கதை சாதாரணமாகத் தெரிந்தாலும் அதை அசாதாரணமாக்குவது ஒளிப்பதிவு. மொத்தப் படத்தையும் ஒரே ஷாட் இல் (single shot ) எடுத்திருப்பதைப் போலக் காட்டியிருக்கிறார்கள். Steadycam, Handheld shots கலவையில் பல நீண்ட ஷாட்களை ஒன்றிணத்து ஒளிப்பதிவு, லைட்டிங், படத்தொகுப்பு, கலர் கரெக்‌ஷன் உதவியுடன் ஒரே ஷாட்டாக அதைக் காட்டி நிகரற்ற ஒரு படத்தை வழங்கி அதை “Mastery of Art” என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். அலிஜண்ட்ரோ இயக்கத்தில் மைக்கேல் கீட்டன் நடிப்பில் 'பிளாக் காமெடிவகை படமாக மிரட்டுகிறது படம்.
படத்தின் இயக்குநர் அலிஜண்ட்ரோ (Alejandro) ஏற்கனவே ‘Death Trilogy’ படங்களான Amores perros (2000), 21 Grams (2003), Babel (2006) மூலம் பரிச்சயமானவர்தான். இவரது நான்காவது படமான Biutiful (2010) படமும் ஏகவரவேற்பைப் பெற்ற படம் தான். ஐந்தாவது படம் பேர்ட்மேன். ஏற்கனவே 7 பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 2 விருதுகளை வென்றிருக்கிறது, 9 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 4 ஆஸ்கர் விருதையும் பெற்றிருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர் இமானுல் லுபெஸ்கி (Emmanuel Lubezki) ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார். ஏற்கனவே 7 முறை nominate செய்யப்பட்டு சென்ற ஆண்டு ‘Gravity’ படத்திற்காக தனது முதல் ஆஸ்காரை வென்ற இவர் இந்த ஆண்டும் பேர்ட்மேன் படத்திற்காக ஆஸ்கரை விருதை கையில் ஏந்திருக்கிறார்.
(Birdman) கதைப்பற்றி:
கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று... ரிக்கன்; இன்னொன்று ரிக்கனின் மனசாட்சி. ரிக்கன் நடித்த 'பேர்ட் மேன்பட கதாபாத்திரம்தான் அவருடைய மனசாட்சி. நிஜத்தில் ரிக்கன் உளவியல்ரீதியான பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார். அதாவது தன்னால் அந்தரத்தில் மிதக்க முடியும், விரலை அசைத்து பொருட்களை நகர்த்த முடியும் என நம்புகிறார்.
இதில் அவரின் மனசாட்சியான பேர்ட் மேன், 'ஹேய் உன்னை மக்கள் இன்னும் மறக்கல.. நீ மறுபடி பேர்ட் மேனா நடிஎன நச்சரிக்கிறது. இதோடு இன்னொரு பிரச்னையும் சேர்ந்துகொள்கிறது. ரிக்கன் நடத்தும் நாடகத்தில் நடிக்க வருகிறார் மைக் என்கிற புகழ்பெற்ற நாடக நடிகர்.
ரிக்கனுக்குக் கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச பாராட்டுக்களையும் தன் பக்கம் திருப்பிக்கொள்கிறார் மைக். ஒரு சினிமா நடிகராகத் தோற்று, இப்போது நாடக நடிகராகவும் தோற்றுப்போன ரிக்கன் என்ன செய்கிறார் என்பது செம எமோஷனல் கதை.
படத்தில் ரிக்கனாக நடித்திருக்கும் மைக்கேல் கீட்டன் நடிப்பு அசத்தல். படத்தில் ஒரு காட்சி. ரிக்கன் சில நிமிடங்களில் மேடையில் இருக்க வேண்டும். நாடக அரங்கத்தின் பின்பக்க வாயிலில் இருந்து கீட்டன் பதற்றமாக வெளியே வரும்போது எதிர்பாராதவிதமாக கதவு சாத்திக்கொள்கிறது. அதில் அவரது கோட் மாட்டிக்கொள்கிறது. எவ்வளவு முயன்றும் அதை எடுக்க முடியவில்லை.
நாடகம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன. எனவே, கோட்டைக் கழட்டிப் போட்டுவிட்டு உள்ளாடையுடன் ஓடுகிறார். அந்தப் பரபரப்பிலும் அவரிடம் ஒருவன் ஆட்டோகிராப் கேட்க, அவர் ஓடிக்கொண்டே ஆட்டோகிராப் போடுவது... கண்கலங்க வைக்கும் காமெடி.
மிகச் சிறந்த கலைஞர்கள் ஒன்று சேர்ந்து மிகக் கடினமான ஒரு காமெடி படத்தை (Black Comedy) எடுத்திருக்கிறார்கள். அவர்களது உழைப்பு வீண் போகவில்லை என்பது படம் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் விருதுகளின் மூலம் தெளிவாகிறது. சென்ற ஆண்டு வெளியான மிகச் சிறந்த படங்களில் பேர்ட்மேன் படமும் ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

 நன்றி; இணைய  தளக்குறிப்புகள்





   ” கதை சொல்லி..  “ நிகழ்ச்சி
 பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்  கதை சொல்லி.. “ நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது.  ஆசிரியை விசாலாட்சி தலைமை தாங்கினார்.
     கவிஞர் ஜோதிமணி “ கதை சொல்லி ..நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வழிகாடும் நீதிக் கதைகள், அற நெறிக்கதைகள் பற்றிப் பேசினார். திருப்பூர் இணைய தள அணி பொறுப்பாளர் சிங்கை அருண் கார்த்திக், தேவராஜன், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், நொய்யல் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் முத்துசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருப்பூர் இணைய தள அணி சார்பாக இரு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டது.
தலைமையாசிரியை கிருஷ்ணகுமாரி நன்றி கூறினார்.

செய்தி: ஆசிரியை ஆ. விசாலாட்சி (  பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி) 


புதன், 24 ஜூன், 2015

படிக்கலாம் வாங்க..

                                      சுப்ரபாரதிமணியன்

                   1.
நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் )
தமிழில்: ச.மாடசாமி
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர்  சிப்ஸ் )

     சிப்பிங் என்ற  பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு  பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர்  உறவு பற்றியும் இந்நூல் பேசுகிறது. ஒரு தலைமை ஆசிரியராக உயர்வது அவரின் கனவு.  அதற்குத் தேவையான கல்வித்தகுதியும் திறமையும் அவரிடம் இல்லை. 60 வயதில் பள்ளி ஆலோசராகிறார். 65ல் பணி ஓய்வு..பள்ளி வாழ்க்கையும் ,  ஓய்வு வாழ்க்கைக்குப் பின்னதான அவரின் அனுபவங்களும் இந்நாவலில் விரிகிறது. ஆசிரியர் மாணவரிடத்தில் அதிகாரமற்ற உறவு நீடித்திருப்பதை சிப்ஸ் பள்ளி வாழ்க்கை முடிய கடைபிடித்திருக்கிறார். மாணவர்களை தோழர்களாக வகுப்பிலும் வெளியிலும் நடத்தியிருக்கிறார்.1848ல் பிறந்த சிப்ஸ் 1913ல் மூச்சுத் திணறல் நோயால் இறந்து போகிறார்.பள்ளியை பனி மூடிக்கிடந்த போதும், பள்ளி மாணவர்கள் மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டபோதும் அசெம்பிளி ஹாலையே மருத்துவ வார்டாக மாற்றி சேவை செய்திருக்கிறார். முதல் உலகப் போர் தொடங்கிய போது புருக்பீல்டு மாணவர்களில் கணிசமானோர் ராணுவத்தில் சேர்ந்து சிலர் பலி ஆகி யிருக்கின்றனர். பழைய மாணவர்களைப் பற்றி பிறமாணவர்களிடம் பேசி உத்வேக மூட்டி மனம் கரையச் செய்திருக்கிறார்.பள்ளீக்கு வெளியே குண்டு மழை பொழிந்தபோதும் அது மாணவர்களை பெரிதும் பாதிக்கக் கூடாதென்று  பாடத்தை நடத்தி  காட்டியவர்.பள்ளி இயல்பான இடமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.போர்க்காலத்தில் ரொட்டிக்கு ரேசன். ரேசனில் கிடைத்த ரொட்டியை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்.தன் உயிலில் சொத்துக்களை புரூக் பீல்டு பள்ளிக்கும், ஆதரவற்றோர் பள்ளிக்கும் எழுதி வைத்தவர். ஆட்சி அதிகாரத்தைப் பற்றி  தொடர்ந்து மாணவர்களிடம் விமர்சித்துக் கொண்டே இருந்தவர்.திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களில் மனைவி இறந்து போன பின் முடிந்து போக வாழ்க்கை முழுக்க தனிமைதான். ஆனால் தனிமையை அவர் உணராமல்  மாணவர்களுடனேயே கழித்தவர்.எனக்கா குழந்தைகள் இல்லை. எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள் . ஆயிரக்கணக்கில்.. எல்லாம் ஆம்பளப் பசங்க “ என்று மரணப் படுக்கையில் பெருமிதம் கொண்டவர்.வகுப்பறையை வெல்வது, மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரியராக உணர்ந்து வாழ்ந்தது, தொடர்ந்து வாசிப்பதன் ஆகியவை மூலம்  தன்னை தன்னை ஆசிரியராய்  நிருபித்து கொள்வதுமாய் வாழ்ந்திருக்கிறார். சிப்ஸ் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான். ஆனால் நிஜ மனிதராய் ஜேம்ஸ் ஹில்டன் மூலம் பெரும் ஆளுமையாக இந்நாவலில் வெளிப்பட்டிருக்கிறார் சிப்ஸ். எளிய மொழிபெயர்ப்பு.உள் ஓவியங்கள் பள்ளிச் சூழலை வெளிக்கொணர சிறப்பாகப் பயன்பட்டிருகிறது.திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.ஆசிரியர் மாணவர் உறவு அசாதரணமாக இருக்கும் இன்றைய சூழலில் அதை மேம்படுத்ஹ்டும் அம்சங்களை இந்நாவல் கொண்டிருக்கிறது.
    ( 64 பக்கங்கள் ரூ 35: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )




     - சுப்ரபாரதிமணியன் (  9486101003  )
பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி



நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்

பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக  அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை.                           
இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும்  நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம்  சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய  தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி  தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை  வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அதனால்தான் மரணமில்லா பெருவாழ்வும் அவனின் கனவாக இருந்திருக்கிறது.அவரின் இறுதிச் சொற்பொழிவினை ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.அதன் தலைப்பு :  மனிதனுக்கு மரணமில்லை. அவரை சிறந்த சொற்பொழிவாளராகக் காட்டும் தரவுகளைத் தந்திருக்கிறார். இதைத்தவிர இஸ்லாம் மார்க்க மகிமை போன்ற சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டி இதைச் செய்திருக்கிறார்.

தாவரங்களின் வழி அன்பைத்  தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட  இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து  கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது.பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து  அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை  தவிர்க்கிறார். அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களீல் காட்டப்பட்டிருக்கிறது.திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில்சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து  உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படி பூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதியின் செயப்பாட்டால் விளங்கியதை சேதுபதி எடுத்துரைக்கிறார்.  .  

பலஅபூர்வமான  புதிய தரவுகளையும் செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. பாரதி தலைமறைவு வாழ்க்கையில் சென்னையிலிருந்து புதுவைப் பயணத்தை இரயில் மேற்கொண்டாரா, இல்லை படகில் சென்றாரா என்ற ஆய்வில் படகில் சென்றிரூகும் வாய்ப்பு பற்றி  எடுத்துரைக்கிறார். ( இதை மெய்பிக்க அவர் அரசாஙகத்தின் கெமிக்கல் எக்ஸாமினரின் முதல் நிலை உதவியாளரான நஞ்சுண்டராவ் வாரிசுகளை சேதுபதி தேடிச் சென்ற அனுபவங்களை நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவே ஒரு தனி நூல் அளவு விரிவானது)  படைப்புகளைத் தொகுக்கப்படுகிற போது ஏற்படும் மயக்கம் தந்திருக்கும் குழப்பத்தை சேதுபதி பாரதிதாசன் அரவிந்தர் மீது பாடிய அரவிந்த பாம்பு என்ற கவிதை பாரதியின் பாடலென இடம்பெற்றிருப்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறார்.தன் நண்பரான அரவிந்தரின் நட்பு  ஆன்மீக இலக்கிய உறவாக இருந்ததைக் காட்டும் அத்தியாயங்கள் வெகு சிறப்பானவை.
பாரதி எப்பொருளையும் விட்டு வைக்கவில்லை. எந்தக்கடவுளையும் கூட.பக்தி இலக்கியப் பார்வையிலிருந்து  மாறுபட்டு செயலாக்க  நிலையில் நாயன்மார்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம்  செய்திருப்பதை சேதுபதி விரிவாய்ச் சுட்டிக்காட்டுவதில் நவீன நாயன்மாராக பொலிவுறும் பாரதியைக் காட்டுவதன் மூலம்    கலை வடிவம் மீறி செயல்வடிவிற்குறிய  அவசியத்தை  வலியுறுத்துகிறார். சமூக செயல்பாடுகளில் இன்றைய எழுத்தாளர்கள் நிற்க வேண்டிய இடம் எது என்பது இதனால் பூடகமாக சேதுபதி வெளிப்படுத்தியிருக்கிறார். என்பது சமகால முக்கியச் செய்தியாகும். அருணகிரிநாதர் முதற் கொண்டு அரவிந்தர் வரைக்கும்,  நவராத்திரி முதல் தீபாவளி வரை, மதம் முதல் தொழிலாளி வர்க்கம் வரை பாரதியின் பாடல்கள் கவிதையின், படைப்பிலக்கியத்தின்  உச்சமாயும், சமூக வாழ்வியலாகவும் அமைந்திருப்பதை சேதுபதி ஆழமான வாசிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.அருணகிரிநாதரின் கவிதைகளை மொழிபெயர்த்தது, நாயன்மார்களின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை  சேதுபதி வெளிப்படுத்துவது பாரதியின் ஆழமான வாசிப்பின் அடையாளத்தையும் பன்முகத்தன்மையையும்  விரிவுபடுத்துகிறது.

    மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல்  என்ற வகையிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக்கிறது..அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது. இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது. சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின்  வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கியச் சம்பவங்களையும் சுவாரஸ்யமானச் செய்திகளையும் அவரின் கவிதைகளின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்புகளில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டுவதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.




நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்- முனைவர் சொ. சேதுபதி ரூ 115, நியூ சென்சுரி  புக் ஹவுஸ், சென்னை



ஊடகக் கல்விக்கான ஆதாரங்கள்

அ.ஸ்டீபன் நூல் பற்றி : சுப்ரபாரதிமணியன்

 வெகுஜன ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை அளிக்கிற விதத்தில் கேளிக்கையையும் சேர்ந்தே தருகின்றன.பெரும் இடைவெளிகளை உருவாக்கும் வர்க்க நிலையில்  பெரும் வணிக சமூகத்துடன் சமரசப்போக்குடன்  எதிர்ப்பின்றி செல்லும் போக்கைக் கொண்டிருக்கின்றன.ஆதிக்கச் சக்திகளின் பார்வையை சாதாரண மக்கள் மீது திணித்து  ஒரு வகை செயலாக்கமின்மையை உருவக்குகின்றன.  .ஊட்கங்கள் தரும் விசயங்களின் ஒப்புதலை உற்பத்தி செய்து சமரச உலகிலேயே உலகச் செய்கின்றன. இதை நோம் சோம்ஸ்கி                  “ ஒப்புதலை உற்பத்தி செய்தல்என்கிறார்.முதலாளித்துவ சக்திகள் தொடர்ந்து சொத்துக்களைக் குவித்துக் கொள்வதற்கும், நுகர்வு மனப்போக்கை சாதாரண மக்களிடம் விதைத்து  அடிமைகளாக நிலைத்து  நிற்பதற்கும் வழிகளைக் கோலுகின்றன.

இவ்வகை ஆதிக்கப் பிடியில் சாதாரண மக்களும், உலகமும் சிக்கிக் கொண்டிருக்கிறது. கோடிகளில் நிதி ஆதாரமாய் முதலீடு செய்யப்படுகிறது.விளம்பரம் தரும் மாயை நுகர்வுத் தன்மைக்கு சுலபமாக வழி கோருகிறது. தகவலே வாழ்வாதாரம். ஊடகமே பொருளாதாரம் . என்று மெய்ப்பிக்கப்படுகிறது. திரும்பத்திரும்ப சொன்ன விசயங்களையே சொல்லி அதை உறுதியாக்குகிறதுஊடகத்தின் பிடியில் பார்க்கிற வாசகன் திணறிப் போகிறான். வாய்ச் சொல்லாய் வயிற்றை நிரப்பச் சொல்கிறார்கள்.கைப்பிடிக்குள் உலகம் மாறிப்போய் விட்ட்து. நிழல் நிஜமாகி விட்ட்து.பெண் எந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதுநுகர்வு வியாதி தொற்றிப் பரவுவதாய் சுலபமாய் மாறிப் போய் விடுகிறதுஇதைச் சிறு சிறு வாக்கிய அமைப்புகளுடன் ஒரு வகையில் புதுக்கவிதையின் உரைநடையை பிரித்துப் போடும் தன்மையில் ஒரு சிறு படத்துடன்  ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக் கொண்டு இந்நூல் விளக்குகிறது.  கூரிய சமூக விமர்சனங்களாக அவை விளங்குகின்றன.. 49 தலைப்புகள்.   ஊடகம் மக்களுக்காக இருக்க வேண்டும் என்ற விசயம் ஒவ்வொரு கருத்திலும் தொனிக்கிறது.  கோட்டோவியங்கள் நறுக்குத்தறித்த விசயங்களைச் கட்டியமாகச் சொல்லி விடுகின்றன. “ ஊடகம் மக்களுக்காக . தொடர்பு மாண்புக்காக “ என்பதை இவை வலியுறுத்துகின்றன. ஊடகத்தின் பிடியில் அகப்பட்டிருக்கும் இளைய தலை முறை புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலின் வெளிப்பாட்டு முறை அமைந்திருப்பது அதை வெற்றிகரமாக்குகிறது.  ஒரு உதாரணம்: : மீனுக்கேற்ற வலை, ஆளுக்கேற்ற வடிவம் . குறைந்த வரிகளில் குறுஞ் செய்தி. சிறு கோட்டோவிம். சட்டென ஒரு நகைச்சுவை, எள்ளல். நுகர்வு சந்தையில் ஷாம்பு பற்றி சொல்ல ஆரம்பித்து  அது கிரிக்கெட் வரைக்கும் நீள்கிறது. ஊடகத் துறையில் 20 ஆண்டுகாலமாய் தொடர்ந்து பணி புரிந்து வரும் அ. ஸ்டீபனின் இந்நூல் ஊடகம் பற்றின எள்ளல் பார்வை விமர்சனமாக பரவியுள்ளது.  இவர் இதற்கு முன் வெளியிட்ட இடைவேளை, ரசிகர் மன்றங்கள், பாபா மயக்கமும் சில படிப்பினைகளும், போன்ற நூல்களும் தீவிரமாக இவை பற்றியே பேசுகின்றன. ஊடகக் கல்விக்கான ஆதார நூல்களில் ஒன்றாக அமையும் தீவிரத்தைப் பெற்றது ஸ்டீபனின் இந்நூல். இதுவரை இவ்வகையில் 10 நூல்களை    ஸ்டீபன் வெளியிட்டிருக்கிறார்.

( ரூ 25,  பக்கங்கள் 108 .அ. ஸ்டீபன் : ஊடகச் சிந்தனைகள், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல் )



திங்கள், 22 ஜூன், 2015

கனவு இலக்கிய வட்டம்: ஜூன் மாதக் கூட்டம் .


        புத்தகத்தின் மீதான  தடையை நீக்குக : கோரிக்கை

கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம் வியாழன் மாலை சக்தி பில்டிங், பாண்டியன் நகரில் நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். சக்தி மகளிர் அறக்கட்டளையின்  தலைவர் கலாமணி கணேசன்  .கனவு இலக்கிய இதழின் 29 ஆண்டின் முதல் இதழை வெளியிட்டார். .கனவு  திருப்பூரிலிருந்து வரும் இலக்கிய காலாண்டிதழாகும் . 29 ஆண்டுகளாக வெளிவருகிறது ( 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602 ஆண்டுச் சந்தா ரூ 100 )
 கு.செந்தில் எழுதிய பழந்தமிழரசும் மரபும் (  மொழி ஞாயிறு பாவாணர் பார்வையில் ) நூல் அறிமுகம் செய்யப்பட்டது . அவர் இதற்கு முன் எழுதிய       “ மீண்டெழும் பாண்டியர் வரலாறு “ நூல் மீதான தமிழக அரசின்  தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
. இவ்வாண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் பரிசு பெற்ற பேர்டு மேன் பட அறிமுகத்தை சுப்ரபாரதிமணியன் நிகழ்த்தினார்.. சிறந்த படம், சிறந்த சுய கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய படம் பேர்ட்மேன்.

செய்தி ; கா .ஜோதி