சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 31 மே, 2008

Indian Express


செவ்வாய், 20 மே, 2008

"எண்ணும் எழுத்தும்"



திருப்பூரில்
"எண்ணும் எழுத்தும்" கோடைப் பயிற்சி

திருப்பூர்,மே.13
எழுத்து தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எழுத்துக்க‌ளை க‌ற்றுக் கொடுக்க‌வும் , எண்க‌ள் தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எண்க‌ளை க‌ற்றுக்கொடுக்க‌வும்,'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப்ப‌யிற்சியை த‌மிழ்நாடு முழுவ‌தும் யுரேகா இய‌க்க‌ம் தொட‌ங்கி வ‌ருகிற‌து.அதுபோல் இந்த‌ இய‌க்க‌ம் 'க‌ன‌வு'அமைப்புட‌ன் இணைந்து 'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப‌யிற்சியை பெருமாந‌ல்லூரில் தொட‌ங்கி உள்ள‌து. இதை எழுத்தாள‌ர் சுப்ர‌பார‌திம‌னிய‌ன் தொட‌ங்கிவைத்தார். இந்த‌ தொட‌க்க‌ விழாகூட்ட‌த்தில் பெருமாந‌ல்லூர் நூல‌க‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌ த‌லைவ‌ர் சுப்பு, க‌விஞ‌ர் சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன், தொலைபேசி பொறியாள‌ர் சேக‌ர் , நூல‌க‌ர் ஜெய‌சித்ரா,யுரேகா ப‌ணியாள‌ர் செல்வ‌குமார் உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.

செய்தி: தினத்த‌ந்தி
13/05/2008

திங்கள், 19 மே, 2008

ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்

திரைப்படம் :
==============
சுப்ரபாரதிமணியன்
========================
வீட்டு முற்றத்தில் சாயம் தோய்த்த துணிகளைப் பெண்கள் காயப் போடுகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று கடந்து போகிறது. ஒரு பெண்மணி வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு அவ்வப்போது கடந்து போகிறாள்.ஒரு குழந்தை தடுமாறி தாயைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது தன்னை அலங்கரித்துக்கொள்ளும் பெண் முற்றத்தை அலட்சியமாக பார்த்துக் கிடக்கிறாள். அந்த முற்றத்தில் ஒரு நீதிமன்றம் கூடியிருக்கிறது. இரண்டு தரப்பிலான வழக்கறிஞர்கள் அங்கு நீதிமன்றப் பணியில் இருக்கிறார்கள். உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களின் மேல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. சில வழக்கறிஞர்களால் ஆப்ரிக்காவின் சுய தன்மையைப் பாழாக்கி அதை ஒரு நவகாலனிய நாடாக்குவதில் இந்த் நிறுவனங்கள் நிணுக்கமாக எப்படிச் செயல்படுகின்றன என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த நிறுவனங்களின் சார்பிலும் சில வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். புலம்பெயர்தல் ஆப்ரிக்காவில் சாதாரணமாகிவிட்டது. சகாராவில் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கல்வி, உடல் நலத்திற்கு நிறைய நிதிகள். அரசு கல்வி கொடுத்தபின் எதற்கு வெளிநாடு போகிறாய் என்ற கேள்விகள். உலகமயமாக்கலின் நாகரீகம் உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவன் பாட்டு மூலம் தனது மனக் குறையை வெளிப்படுத்துகிறான். இன்னொருவன் விசாரணைக்கு வந்து நின்று பேச எதுவுமில்லாததாக மௌனமாகவே இருக்கிறான். அதீத மனிதத் தன்மையில் பல விடங்கள் நடப்பதாய் தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன. உயர்ந்தபட்ச தங்கம் கிடைக்கும் நாடு. ஆனால்யாரும் தங்கம் அணிவதில்லை. நீக்ரோக்கள் சோம்பேறிகள் என்றி குற்றம் சாட்டப்படுகிறார்கள். நீதிமன்றம் நடக்கும் முற்றத்தை தாண்டி சுற்றுச்சுவருக்கு வெளியே இந்த வாதங்களைக் கேட்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சாவகாசமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மதப்பிரச்சாரம் நடக்கிறது. வžகரமான வாதங்கள். மரங்கள் முக்யம் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தை நடத்த மரங்கள் எதற்கு . உற்பத்திப் பொருள்போதும். உடையின் பின்புற ஊக்கை போடச்சொல்லி ஒருபெண் நீதிமன்றத்தில் இருப்பவனிடம் கேட்கிறாள். பொருளாதார மேம்பாடு யார்பொருட்டு என்ற விவாதம் கிளம்புகிறது. திருவ ஜஸ்கட்டிகள் உருகுகின்றது என்பதும் விவாதமாகிறது. எய்ட்ஸ் வியாதிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. கடன் நாட்டைச் žரழித்துவிட்டது. ஆப்ரிக்கா அடிமை தேசமாகிக் கொண்டிருக்கிறது. உலகவங்கியின் மேல்குற்றம் சட்டப்படுகிறது. அவர்கள் இல்லாவிட்டால் எல்லோரும் பிச்சைக்காரர்களாகி இருப்பார்கள் என்கிறது ஒரு குழு.
இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது பிசாசிடம் வாழ்க்கையை ஒப்படைப்பது போன்றது. கடன் பிசாசிடம் நாடு திணறுகிறது. இருப்புப்பாதை மூடப்படுவதால் தோடர்பற்றுப் போவிட்ட ஒரு கிராமத்தைப் பற்றி ஒரு பெண் சொல்கிறாள். ஆப்ரிக்காவில் திட்டமிடப்பட்டு இருப்புப் பாதைகள் அழிக்கப்படுவது மக்களை அந்நியமாக்குகிறது என்ற வேதனை ஒரு பெண் பிரதானமாய் பகிர்ந்து கொள்கிறாள். அப்ரிக்காவின் வறுமைத்தோய்ந்த நிலை அவசரப்பட்டு உலகவங்கி போன்றவை குற்றவாளிகளாக்கப் படுகின்றன. மாலி புறநகர் பகுதியின் ஒரு வீட்டு முற்றத்தில் நடக்கும் இந்த நீதிமன்றம் சாதாரண மனிதர்களின் நடமாட்டங்களுக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட நாடகமாகிறது. இவை ஆப்ரிக்க திரைப்பட உலகின் மிக முக்யமான இயக்குனராக ஆப்டெர்ராஹ்மனே சிஸ்ஸாகோவின் சமீபத்திய "பமாகோ" என்றத் திரைப்படத்தில் இடம்பெறும் அம்சங்களாகும். திரைப்படத்தின் புதிய மொழியை அவர் படங்களில் காணலாம்
என்பதற்கு அத்தாட்சியாக 'பமாகோ' படம் வெளிப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் தன்மையினூடே அவரின் அரசியல் கடமை குறித்த அக்கரையிலிருந்து அவர் விலகாமல் இருப்பதை அவர் படங்கள் காட்டுகின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளால் மரபுக்கும், புதுமைக்கு இடையில் நடக்கும் போராட்டம் இவரின் சமீபத்திய படைப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. நவீன உலகத்தின் தொழில்நுட்ப அம்சங்களும், உபகரணங்களும் மனிதனை ஆத்மாவைத் தொடாமல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பதை வெளிப்படுத்தியது. ஆப்ரிக்க அரசியல் குறித்த விடயங்களைச் சொல்வதற்காக அவர் எடுக்கும் தளம் ஆப்ரிக்க கிராமங்களாக இருக்கிறது. "பமாகோ"வில் மெலே என்ற பாடகியின் கணவனுடனான முறிந்து போகிற
தாம்பத்ய உறவை சொல்ல அரம்பிக்கிற படம் வெவ்வேறு தளங்களுக்கு படரசிகனை இழுத்துச் செல்கிறது. ஆப்ரிக்காவின் வறட்சியான கிராம புழுதியும் வெயிலும் வறுமையும் தரும் சித்திரங்களூடே 'கௌபாய் மற்றும் இந்தியர்களின்' வீரதீர செயல்களின் விமர்சனமும் நீதிமன்ற அலசல் போலவே இன்னொரு தளத்தில் இப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. முரணான சமூகங்களை அதன் மூலம் முன் வைக்கிறார். பழங்குடி சமூகத்தின் கதை சொல்லும் மனத்தினன் ஆக அவரின் படங்களில் சிஸ்ஸாகோ வெளிப்பட்டிருக்கிறார். நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் எந்தவிதத் தொடர்பும் அற்று அந்நியமாகிப்போய் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை சிஸ்ஸாகோவின் படங்களில் பார்க்க முடிகிறது.
"எல்லாம் இழந்து போனதான உணர்வும் இறந்த காலமும் என்னைப் படம் எடுக்க வைத்தது. எல்லா சொத்துக்களையும் இழந்திருந்தேன். பம்பாரா என்ற என் மொழி தொலைந்துபோயிருந்தது. குழந்தைப்பருவ நண்பர்கள் இல்லை. எனவே என்னைச் சுற்றி இருப்பவர்களை, இருப்பவற்றை ஆழமாகக் கவனிக்கவும் கற்றுக் கொண்டேன். என் மனதில் ஆழப் பதிந்திருப்பவற்றை மீட்டெடுக்க நான் படம் எடுக்க வேண்டியிருந்தது. என் அம்மாவின் மூத்த மகனை அவளின் அல்ஜ“ரியத் தகப்பன் கட்டாயப்படுத்தி பிரித்திருந்தது என்னை மிகவும் பாதித்தது. என் அம்மாவையும் அது மிகவும் பாதித்தது. அவனைப் பற்றி நிறைய போசுவார்கள். இரண்டு தடவைதான் அவனை நான் சந்தித்திருக்கிறேன். ரஷ்யாவிற்கு சென்று படமெடுக்க கற்பதற்காகச் சென்றபோது ஒருமுறை வந்தான். அவனை நான் மிகவும் நேசித்தேன். மிகுந்த அன்பால் அவனைப்பற்றி என் அம்மா நிறையப் பேசினாள். அவனி ஆதர்சமாகக் கொண்டேன். அவனைக் கதாநாயகனாக மனதில் கொண்டு நான் படமெடுக்கிறவனானேன். அதற்கு முன்னால் திரைப்படங்கள் என்னை நெகிழ வைத்ததில்லை. எனது மங்கலான நினைவுகளில் இரண்டு மூன்று சார்லி சாப்ளின் படங்கள் மட்டுமே இருந்தன.எனது குடும்ப சூழல் பின்னணியும், அரசியல் அக்கறையும் என் படங்களின் வெளிப்பாட்டு வடிவமாக்கிக் கொண்டேன்" என்கிறார் சிஸ்ஸாகோ.
ஆப்ரிக்க சமூகத்தின் அரசியல் தீண்டாமையை இன்னொரு வடிவத்தில் சொல்லும் படம் "சராபினா" பாடல்கள், நடனங்கள் மூலம் கதை சொல்லும் உத்தியை இப்படம் கையாண்டிருக்கிறது. அதுவும் மாணவர்களின் துள்ளல் மிகுந்த பாடல்களும், ஆட்டமும் இப்படத்தை வேறொரு நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இந்த உணர்வெழுச்சியின் மறுபுறமாய் அவர்களுக்கு நேர்கிற அரசியல் அனுபவங்கள் அவர்களை செயலற்றவர்களாக ஆக்குகிறது. ஆனால் அந்தப் பாடல்களை அதிகாரம் அடக்கிவிட முடியாது. எல்லோர் வாய்களிலும் அவை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் என்பதை இப்படம் காட்டுகிறது. 1976ல் நடந்த அரசியல் கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றதை நாடமாக்கி பரவலானது. இது நாடகத்திலிருந்து திரைப்படமாகியிருப்பதால் by2 வடிவத்திற்கு ஒத்திசைவான பாடல்களும், நடனங்களும் திரைப்படத்திலும் அதே வடிவமாக அமைந்துவிட்டிருக்கிறது. சரபினாவிற்கு பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அவளின் கனவை அடிக்கடி நெல்சன் மண்டேலாவின் படத்திற்கு முன் நின்று அவரோடு போசுகிற இயல்பில் பகிர்ந்து கொள்கிறாள். அவளுக்கு ஆதர்சமாக இருப்பவள் கோல்டுபர்க் என்ற சரித்திரம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியை. மறுக்கப்பட்ட நீதியையும், மீட்டெடுக்கப்பட வேண்டிய மனித உரிமைகளைப் பற்றியும் வகுப்பில் மாணவர்களிடம் கோல்டுபெர்க் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். சரித்திரம் கற்பிக்கும் சாக்கில் பொதுவுடைமை, புரட்சி பற்றி போதிக்கிறாள் என்றக் குற்றச்சாட்டும் கண்காணிப்பும் அவளின் மீது உண்டு. காவல்துறை அவளது நோட்டமிடுவதும், அவள் வகுப்பெடுக்கும்போது கூர்ந்து கவனிப்பதும் சாதாரணம். சராபினாவின் வகுப்புத்தோழியொருத்தி அரசியலில் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடுவதும் அவளின் வகுப்பையும் பாதிக்கிறது. ஆப்ரிக்க சமுக எழுச்சிக்கான மாணவ்ர்களின் எண்ணமாய் அது விரிகிறது. பள்ளியில் காவல்துறையின் அத்துமீறலும், அதை எதிர்த்த மாணவர்களின் போராட்டங்களும் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்ந்த கலவரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. பினாவும் அவளது வகுப்பினரும் மிகவும் மோசமான சிறைசித்ரவதைகளுக்குள்ளும் கொடுமைக்கும் ஆளாகிறார்கள். கோல்டுபர்க்கும் சிறை பிடிக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாகிறார். மாணவர்களின் எழுச்சி சிதைக்கப்படுகிறது. மாணவர்கள் உயிரற்ற பிணங்களாய் சிறையிலிருந்து வெளிவருகிறார்கள். தங்கள் வகுப்பினரைத் தேடுகிறார்கள். ஜோகன்ஸ்பர்க்கில் ஒரு வெள்ளைக்காரன் வீட்டில் வேலை செய்யும் சரபினாவின் அம்மா அவளுக்கு ஆறுதலாய் அமைகிறாள். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் விதைகளை மனதில் ஆழமாகப் பதிக்கிறார்கள். மாணவ்ர்களின் எழுச்சியும் போராட்டமும் வெளிப்படும் தீவிரத்தை படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆழமாக்குகின்றன. பாடல்களும் அதனூடனான ஆடல்களும் மாணவர்கள் போராட்டங்களை உணர்வு பூர்வமிக்கதாக ஆக்குவதாய் அமைக்கப்பட்டிருப்பதில் மாலை சமூக எழுச்சியின் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு உட்பட்ட பல மாணவர்களின் போராட்டங்களை இப்படச்சூழலில் வைத்துபார்க்கலாம். தமிழில், இந்தி எதிர்ப்பி போராட்டச் சூழல்களில் மாணவர்களைக் கொண்டு இது போன்ற படங்களின் தேவையை இப்படம் வலியுருத்துகிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பாவது மாணவர்களை தங்களின் அரசியல் உணர்வு குறித்து விழிப்படையச்செய்யும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சக்தியும் போராட்ட உணர்வும் தட்டி எழுப்பப்பட்டு முறைப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை இப்படம் உணரச் செய்கிறது. அதற்குப் பயன்பட்டிற்கும் பாடல், நடனம் சார்ந்து கதை சொல்லும் இயல்பில் வழக்கமான பாணி தகர்ந்துபோய் திரைப்படம் பார்ப்பதை உணர்வெழுச்சி கொண்டதாக்குகிறது. ஆப்ரிக்க சமூகம் பற்றின பலவர்ண யத'ர்த்தத்தை வெளிப்படுத்தும் இந்த துண்டு வளையல்கள் ஒரு கோணத்தில் கலைடாஸ்கோப்பின் பல வர்ண ஜாலத்தை வெளிப்படுத்துபவை. கறுப்பு சமூக மக்களிடம் மிஞ்சியிருக்கும் புன்னகையையும் வெளிப்படுத்துபவை.

புதுமைப்பித்தன் வரலாறு



நூல் மதிப்புரை சுப்ரபாரதிமணியன்
===============================

இலக்கியப் பத்திரிக்கை நடத்துகிறவனுக்கு, எழுத்தாளனுக்கு மணியார்டர் என்பது பல்வேறு கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்து விடுகிறது. பத்திரிக்கைகளில் பணிபுரிந்தபோது மணியார்டரை எதிர்பார்ப்பதும், அதைப் பெற்று செலவு செய்வதும் வினோத இன்பமாகிறது. அதையே பிற்காலத்தில் புதுமைப்பித்தன் சாவை மணியார்டரை எதிர்பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்றக் குறிப்பு பணம், அது வந்து சேரும் சாதனம், குறியீடு குறித்து அதிர்ச்சிகளையும் தருபவை. புதுமைப்பித்தன் வாழ்க்கையே அதிர்ச்சிகரமான குறுகிய ஆயுள் கொண்டதுதான். புதுமைப்பித்தனின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று நூலின் முன்னுரையை தொ.மு.சி. ரகுநாதன் ஆரம்பிக்கிறார். அவரின் வாழ்க்கை அவஸ்தைகளை ஏகதேசம் நெருக்கமாய் இருந்து கண்டவர் என்ற வகையில் இந்த அபிப்ராயம் உருவாகியிருக்கலாம். ஆனால் அவரின் படைப்புகளை முன் நிறுத்தி அவர் ஒரு பிரம்மராட்சன் என்பதை அவர் படைப்புகள் நிறுவியிருக்கின்றன. புதுமைப்பித்தனுக்கு நூற்றாண்டு கொண்டாடும் இந்த ஆண்டில் அவரின் எச்சரிக்கை பல புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எச்சரிக்கையாகவே இன்றைக்கும் அமைந்து விட்டிருக்கிறது தமிழ்ச்சூழல் கவலைதரக்கூடியது தான்.‘செல்லும் வழி இருட்டு’ என்பது தெரிந்துதான் எழுத்தை பு.பி. தேர்ந்தெடுத்துக் கொண்டாரே என்றுத் தோன்றும். “எழுத்தாளனுக்கே ஒளி பேரிலேதான் ஆசை போலிருக்கு. நான் போகிற பாதையெல்லாம் வெளிச்சமாக்க விரும்பினேன். இப்போ இருட்டில் நடக்க ஒளியை விரும்புகிறேன்” என்கிறார்.“பிறந்தவுடனேயே நஞ்சுக் கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு வரும் குழந்தையின் அசாதாரணத் தன்மையை இசக்கி முத்து எனும் கதாபாத்திரத்தை ‘அவதாரம்’ என்றக் கதையில் வர்ணிக்கும் புதுமைப்பித்தனுக்கே அவ்வர்ணனை பொருந்தி வருவதை ரகுநாதன் விளக்கும் ஆரம்பப் பக்கங்கள் அவரை தனித்துவம் மிக்கவராகவே காட்டுகிறது. சம்பளமில்லாத மணிக்கொடி சேவகமோ, சம்பளமுடனான ‘ஊழியன்’ பத்திரிக்கை வேலையோ, 1933ம் ஆண்டில் தந்தையிடம் ஏற்பட்ட கசப்பின் காரணமாக பத்திரிக்கைத் தொழிலை லட்சியமாகக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர், 1944ம் ஆண்டில் அந்த லட்சியத்தைக் கைவிட்டு வெளியே வருகிறார்.சொ. விருத்தாச்சலம் புதுமைப்பித்தன் என்றப் படைப்பாளியாக விசுவரூபம் எடுத்த அந்த காலக்கட்டத்தை படைப்பினூடே வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை இந்த நூல் அமைக்கவில்லை. ஆனால் அவர் வாழ்க்கை சார்ந்த குறிப்புகளுக்கான களமாகவே அமைந்திருக்கிறார். பெப்பர் மிண்ட் விற்கலாமா, பீடி விற்கலாமா பிழைப்பதற்கு என்று யோசிக்கிற அளவு எழுத்து அவரை சீரழித்திருக்கிறது. அந்த சீரழிவை ரகுநாதன் காட்டும் போக்கில் எழுதி தன் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ளாத எழுத்தாளர்களின் மாதிரியாக பு.பி. பார்க்க நேர்கிறது.இதிலிருந்து தப்பிப்பதற்கு உபாயமாக திரைப்படத்துறை வாய்க்கிறது. அங்கும் தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. ரகுநாதன் குறிப்பிடும் அவ்வை படத்தின் வசனங்களில் அவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. ஆனால் வியாபார உலகம் பகல் கனவிற்குத் தீனி போட வேண்டியதாகிறது. அந்தத் தீனியை வாரி வழங்குபவராக பு.பி. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இயலாமை தனித்துவம் மிக்கப் படைப்பாளிக்கு சாதாரணமாக நிகழ்வதுதான். அது இன்னொரு புறத்தில் திரைப்படத் தயாரிப்பிற்கும் அவரைத் தள்ளி விடுகிறது. தெரியாத தொழிலை வைத்துப் பிழைக்க முடியாது என்ற உண்மையைத் திரைப்பட உலகம் நிரூபிக்கிறது.“என்னுடைய கதைகள்... பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடு அல்ல என்பதில் திடமான நம்பிக்கையும் இலக்கிய தீட்சண்யமும் கொண்டிருந்தவருக்கு “எழுத்தாளன் என்றால் முழுப் பட்டினி பத்திரிக்கையாசிரியன் என்றால் அரைப்பட்டினி” என்பதை அனுபவிக்கும் வாய்ப்புகள் வாழ்க்கை முழுவதும் நேர்ந்திருக்கின்றன. சாவதில் துன்பமில்லை என்று உணரவும் வைத்திருக்கிறது. இந்த வகை சாவை எதிர் கொண்ட மனநிலைதான் அவரை அமரத்துவப் படைப்புகளைப் படைக்க வைத்திருக்கிறது. சாவிற்கு முன் அழிவற்றதை உருவாக்கும் திடம் விசுவரூபித்து நின்றிருக்கிறது.படைப்புகளில் சகமனிதர்களோடு உறவாடுவதில் ஒருவனாக ஆனந்தம் கொண்டிருக்கிறார். ஆனால் சக எழுத்தாளர்கள், குடும்பத்தினர், நண்பர்களுடனான உறவு கசப்பாகவே ஒரு எல்லை வரை நின்றிருக்கிறது. “என் கதை நெருப்பப்பா... நெருப்பு. உன் பத்திரிக்கை சாம்பலாய் போகும்” என்று சக எழுத்தாளர்களை, பத்திரிக்கையாளர்களை விமர்சிக்கும் போக்காகட்டும், உறவுகளிலிருந்து அந்நியமாடும் வினோதமாகட்டும் எல்லாமே படைப்பாளியின் விசித்திரங்கள் தான். ஆனால் படைப்புகளில் சக மனிதர்களுடன் நெருக்கமாக அவர் உரையாடும் தன்மை அவரை வேறொரு கோணத்தில் பார்க்கச் செய்கிறது. எல்லோரையும் நேசிக்கும் மனம் அவருள் இருந்திருக்கிறது. ஆனால் வாழ்க்கையின் கசடுகள் அவரைத் தனிப்பட்ட முறையில் வெறுப்புகளை உள்ளடக்கியவராகவே பல சமயங்களில் காட்டி விட்டிருக்கிறது. உதாரணமாய் குழந்தைகளை அவர் படைப்புகளில் அணுகுமுறையும், பணிமாற்றமும் படைப்புகளில் அவரை குழந்தை மனத்தினராகவே காட்டுகிறது. கதைகளில் தான் குழந்தைகளைச் சீராட்டியவர் என்ற ஒரு குறிப்பும் இந்த நூலில் உண்டு.புதுமைப்பித்தனை ஆழ்ந்து படித்த தீவிர வாசகர்கள் மற்றும் அவரின் அபிமானிகளுக்கான பார்வையை இந்நூல் கொண்டிருக்கவில்லை. புதுமைப்பித்தனின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காக நுழையும் எந்த சாதாரண வாசகனும் புதுமைப்பித்தன் குறித்த திறந்த வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டதாய் இந்த நூலை தொ.மு.சி. ரகுநாதன் அமைந்திருக்கிறார். பின்னிணைப்பான சுந்தரராமசாமியின் பேட்டி புதுமைப்பித்தனின் படைப்புகளூடே பயணம் செய்து நுணுக்கமான ஒரு மாபெரும் படைப்பாளியாக முன் நிறுத்துகிறது. அபூர்வமான புகைப்படங்கள் ரகுநாதனின் எண்ணங்கள் தர இயலாத அபூர்வ கணங்களை உருவாக்குகின்றன. அவரின் கடைசி நாட்களில் அவர் தங்கியிருந்த, தனித்திருந்த இடத்தின் ஒளியும் வெளிச்சமும், திறக்காத மூடின கதவுகளும் சாதாரணமாக சலனப்படுத்துபவை. படைப்பாளியோடு நெருக்கமாகப் பழகியவர் என்ற கோணத்தில் உணர்ச்சிக் குவியல் நிறைந்து விடாமல் சற்று விலகி இருந்து ஒரு எழுத்தாளரை பார்க்கும் பார்வையில் இந்நூலை ரகுநாதன் நிறைந்திருக்கிறார். அவரை உணர்ச்சி மேலிட்டவராக பல படைப்பாளிகள் முன் நிறுத்துவதிலிருந்தும் எல்லாவாக வாசகர்களை ஈர்க்கவுமாக சம்பவங்களைத் தேர்வு செய்திருப்பதில் ரகுநாதனின் எளிமையும் சாதாரண வாசகனையும் சென்றடைய வேண்டிய அக்கறையும் நிறைந்திருக்கிறது.புதுமைப்பித்தன் வரலாறு,ஆசிரியர்: தொ.மு.சி. ரகுநாதன்,பதிப்பாசிரியர்: இளசை மணியன்,வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை.விலை : ரூ. 95.00.

வெள்ளி, 16 மே, 2008

சாபமும், வீழ்ச்சியும்

" சதாம்ஹுசைனை முன் வைத்து மூன்று படங்கள் "
----------------------------------------------------------------------
சுப்ரபாரதிமணியன்
================
சமகால அரசியல் நிகழ்வுகள் இந்தியப் படங்களில் வெளிப்படுவது சமீப இந்தியப் படங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. சோனாலிபோஸ’ன் 'அம்மு', கோவிந்த் நிகாலினியின் 'தேவ்" போன்ற படங்கள் இந்திராகாந்தியின் கொலை, குஜராத் வன்முறைகளை முன் வைத்து வெளிவந்திருக்கும் திரைப்படங்கள். சரிகா, நசுருதின்ஷா நடித்து வெளி வந்திருக்கும் "பர்சானியா.." குஜராத் கலவரத்தை முன் வைத்த படம். இப்படத்தில் ஆலன் என்ற அமெரிக்கன் அகமதாபாத்திற்க்கு வருகிறான். இந்தியா மற்றும் காந்தி பற்றின அக்கறையும் நேசமும் இந்தியாவிற்க்கு அவனை அழைத்து வந்திருக்கிறது. கோத்ரா சம்பவங்களில் நிகழ்வு அப்பூமியை கொலைக் களமாக்கியதை நேரிடையாகக் காணுகிறான் இதில். ( இப்படம் குஜராத்தில் திரையிடப்படமுடியாமல் நரேந்திர மோடி செய்த தடைகள் சமீபத்தியவை).
மேற்கத்தியத் திரைப்படங்களில் சமகால அரசியல் நிகழ்வுகளும் அரசியல் தலைவர்களின் பிண்ணணியும் வெகு சாதாரணமாக முன் வைக்கப்படுவதுண்டு. என்றாலும் விமர்சனமும் கலந்த தன்மை அவ்வகைபடங்களை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்கின்றன. ஈரான் ஈராக் பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் சதாம் ஹுசேனின் ஆட்சிப் பற்றியும் அதன் பின்புலம் வெளிப்படும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. சதாம் ஆட்சியின் கொடுமைகளும் அது பற்றின விமர்சனத்தையும் "கிலோமீட்டர் ஜ“ரோ" என்ற படம் கொண்டிருக்கிறது. அக்கோ என்ற குர்திஸ் இனத்தைச் சார்ந்தவன் சதாம் ஹுசேனின் ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படுகிறான். அவனின் கனவு அந்த நாட்டை விட்டு ஓடிப் போவதுதான்.ஆனால் அது நிறைவேறுவதில்லை. அக்கோவின் மனைவி நாட்டைவிட்டு ஓட சம்மதிப்பதில்லை. படுக்கையில் கிடக்கும் அவளின் அப்பாவை நிர்கதியாக்கிவிட்டு ஓடுவது அவளுக்கு உடன்பாடில்லை. ஈராக் ராணுவத்தில் கணவன் கட்டாயமாக்கப்பட்டு தள்ளப்படுவதை விட ஓடிப் போவது ஆறுதல்தான். ஆனால் படுக்கையில் கிடக்கும் தகப்பன் சுமையாகிறான். தேவதூதர்கள் அவனுக்காக, கிழவனுக்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கிழவனிடம் எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருப்பது அவனின் பொழுது போக்காகிறது. கட்டாயமாக்கப்பட்டு, அடி உதைக்குள் தள்ளப்படும் சக மனிதர்களின் அவஸ்தையூடே அவனும் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறான். ஈரான் ஈராக் போர்முனைக்கு செல்கிறான். அங்கு மேல் அதிகாரிகளின் அதிகார வன்முறையும், சாதாரண சாப்பாட்டிற்கும் சிரமப்பட வேண்டிய சூழலும், குர்திஸ் இனத்தவன் என்பதாலான அவமானங்களும் அவனை அங்கிருந்து ஓடச் செய்ய எத்தனிக்கின்றன. நிர்பந்தத்தால் அவனுடன் இருக்கும் வேறு ஒருவனின் அனுபவங்கள் வேறு வகையிலானது. பெருத்த உடம்பைக் கொண்ட ஒருவன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடுவது, பதுங்குக்குழிக்குள் ஒளிவது போன்றவற்றுக்குக் கூட சிரமப்பட்டு மேலதிகாரிகளால் உதைபட வேண்டியிருக்கிறது. அற்ப உணவை பகிர்ந்து கொள்வதிலும் ரொட்டித் துண்டின் மிச்சம் கையிலிருக்கும் போது பறக்கும், குண்டு வீசும் விமானங்களின் போக்கால் அதையும் தவற விட வேண்டியதாகிறது. தப்பி ஓடுகிற கனவை அக்கோ மனதில் தேக்கி வைத்துக் கொண்டே இருக்கிறாள். செத்துப் போன ஈராக்கியன் ஒருவனின் சவப்பெட்டியை அவனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி அக்கோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவனுக்கு ஆறுதல் தான் போர் சூழலில் இருந்து தப்பித்துவிடலாம். அங்கு சென்ற பின் எப்படியாவது தப்பித்து குர்தீஸ் எல்லைக்குள் தஞ்சமடைவது அவனின் லட்சியமாகிறது. சவப் பெட்டியை எடுத்துச் செல்லும் ராணுவ வண்டியோட்டி குர்தீஸ் இனமக்கள் மீது பகைமை கொண்ட அராபியன். பயணம் தொடர்கிற போது சதாம் ஹுசேனின் சிலையொன்று வாகனம் ஒன்றில் இணையாகவும், நாடு முழுவதும் ஹுசேனின் புகழ் பாடிய படி தொடர்ந்து செல்கிறது.வண்டியோட்டியுடன் அக்கோவிற்கு வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.குர்தீஸ் மக்கள் மீதான வெறுப்பு , அவர்கள் ஈரான் ஆட்சிக்கு விசுவாசமானவர்கள் அல்ல, அல்லா அவர்களை தண்டிப்பார், ஹுசேன் அல்லாவின் தூதன் என்பது பற்றின வாக்குவாதங்களாய் அவை அமைகின்றன. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அபாயங்களும் நிகழ்கின்றன.
சவப்பெட்டிகளை தாங்கிய பல ராணுவ வண்டிகள் வெவ்வேறு திசைகளுக்குச் செல்கின்றன. அவை மலைப் பகுதி சாலைகளில் கொண்டு செலவ்து மேலதிகாரிகளால் வலியுறுத்தப்படுகிறது." சவப்பெட்டிகளை பிரதான சலைகளில் கொண்டு சென்றால் ஈராக்கியனின் மனது புண்படும். நாமென்ன கோழைகளா." ஆனால் சவப்பெட்டியைச் சுற்றிய ஈராக் கொடி மீதான அவமதிப்பை அக்கோ நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். துடைக்க கொடியை பயன்படுத்துவது, அலைந்து திரியும் எருமை சவப்பெட்டியின் மீது சாணம் இடுவது, சவப்பெட்டியின் நாற்றத்தை மிகைப்படுத்துவது என. இறந்த ராணுவ வீரனின் வீட்டை கண்டுபிடிக்கிற சில நாட்களின் தேடலில்பின் அந்த வீட்டின் உள்ளிலிருந்து எழும் சிரிப்பலைகள் பெட்டியை ஒப்படைக்க மனம் இசையாமல் , அனாதையாக விடப்பட்ட நிலப்பரப்பில் சவப்பெட்டியை வைத்துவிட்டு அக்கோவும் வண்டியோட்டியும் மறைகிறார்கள். அக்கோ வீடு வந்து குர்தீஸ் பிரதேசத்திற்கு மனைவியையும், மாமாவையும் வண்டியொன்றில் அழைத்து வந்துவிடுகிறான். ஊமையாக்கப்பட்ட ஒருவன் அத்துவான வீடு ஒன்றை அக்கோவிற்கு தருகிறான். அக்கோ பாலுறவுக்கு கிழட்டு மாமா படுத்திருக்கும் கட்டில் தேவைப்படுவதால் அவர் கீழிறக்கப்பட்டு கட்டில் பயன்படுத்தப்படுகிறது வெட்ட வெளியில். விமானங்கள் வீசும் குண்டுகளின் பொழிவு அவர்களை நிர்கதியாக்குகிறது. பாக்தாத்தை அமெரிக்கா கைப்பற்றினச் செய்தியை கேட்கிறார்கள். குர்திஸ்தான் வாழ்க என்று அக்கோவும் அவன் மனைவியும் கூச்சலிடுகிறார்கள். பாடல்களால் தங்களின் மகிழ்ச்சியை தங்களின் சொந்த குர்திஸ் மண்ணில் தனிமையில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இப்படத்தில் வரும் குழந்தை எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது.எங்காவது தப்பி ஓடிவிடத்துடிக்கும் அப்பாவோ, படுக்கையில் கிடந்து கொண்டு எதையாவது அரற்றிக் கொண்டிருக்கும் தாத்தாவோ, எல்லாவற்றையும் எரிச்சலாகப் பார்க்கும் அம்மாவோ, மரத்தடியில் ஒதுங்கி நிற்கையில் வெடிக்கும் குண்டோ எல்லாம் வேடிக்கைப் பொருட்கள்தான். மிரட்சியுடன் அவற்றைப் பார்க்கிறது. குழந்தைத்தனம் மேலிட எல்லாவற்றையும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கிறது.
குழந்தைத்தனம் இழந்து போய் கன்னி வெடிகளுக்கும், அகதி முகாம்களுக்கும், உயிர் ஊசலாட்டத்திற்கும் இடையில் மிரட்சியானப் பார்வையைத் தள்ளி விட்டு எந்த கணமும் சாவை எதிர்நோக்கும் குழந்தைகளை " Turtles can fly "என்ற படத்தில் காணலாம். கிழக்கத்திய நாடுகளின் குழந்தைத்தன்மையை இழந்து விட்ட குழந்தைகளை இதில் காணலாம். நவீன் அரசியலின் குரூரங்களும் மனிதத் தன்மை இழந்து போன மனிதர்களின் மத்தியில் வெறும் பிண்டமாய் திரிகிறவர்களாய் குழந்தைகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது. குழந்தைகளின் ஆதிக்க சக்திகளின் வன்முறையை சுலபமாகக் காண முடிகிறது. சிவில் யுத்தங்களுக்கு நடுவில் அகப்பட்டுக் கொண்ட மனிதர்களின் காலோரங்களில் குழந்தைகள் நடை பயில்வதை பார்க்க நேரிடுகிறது.
ஈரான் ஈராக் எல்லையோர குர்திஸ் அகதிகள் முகாமை இப்படம் மையமாகக் கொண்டிருக்கிறது.அமெரிக்க யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முந்தைய கால கட்டம். அவ்வகை யுத்தம் பற்றினச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் அவற்றை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கவும் அகதி முகாமிலும் சுற்றிலும் இருப்பவர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள். மேகங்களிடையே பறந்து திரியும் விமானங்களைக் அடையாளம் கண்டு தங்கள் மீட்சிக்கானவை அவை என்று முதியவர்கள் நம்புகிறார்கள்.
குர்திஸ் அகதி முகாமில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு பையன் குழுத்தலைவனாக இருக்கிறான்.பதிமூன்று வயதினான அவனின் பெயர் மறந்து போய் " சாட்டிலைட் " என்ற பட்டப் பெயரே நிலைத்து விடுகிறது. பக்கத்து கிராமத்திலிருந்து வந்து அகதி முகாமில் தங்கியிருக்கும் ஹென்கோவ் கன்னி வெடி விபத்தில் ஒரு கையை இழந்தவன். அவன் ஒருவகையில் ஆருடம் சொல்கிறவனாகவும் இருக்கிறான். இந்தப் பகுதி அபாயகரமானது, இங்குள்ள டேங்க் வெடிக்கும் , இங்குள்ள கன்னி வெடிகள் அபாயகரமானவை என்பதையும் அவனின் ஆருடம் ஏகதேசம் யதார்த்தமாக்குகிறது. "சேட்டலைட்டுக்கு " இது அதிர்ச்சி தருகிறது. ஊரும் அகதிமுகாமும் அவனை வழிபட்டுக் கொண்டிருக்க அவன் ஹன்கோவை ஆராதிக்கிறான். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் திரும்பத் திரும்ப கேட்கிறான். அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்யப்போவது உறுதி என்கிறான். அகதிகளின் வாழ்க்கை ஒரு நிலைக்கு வருகிற கனவு ஊர் பெரியவர்களுக்கு உண்டாகிறது. ஆண்டானாக்களைத் திருப்பி வைத்து யுத்த செய்திகளை காண்பிக்க முயல்கிறான். ஆனால் செய்திகள் கிடைப்பதில்லை. டிஸ் ஆண்டனா தேடி ஆயுத சந்தைக்கு தன்னுடன் இருக்கும் அகதி முகாம் சிறுவர்களுடன் செல்கிறான். காய்கறிக்கூறுகள் போல் ஆயுதங்கள் கிடக்கின்றன. டிஸ் ஆண்டனா வாங்கி வந்து பொருத்துகிறான். அமெரிக்கா போர் நிகழ்த்தப்போவது உறுதியாகிறது. அகதிகள் உயிரோடு இருக்க சாத்தியங்களை நினைத்துக் கொள்கிறார்கள். குர்தீஸ் அகதி முகாமில் இருக்கும் துருக்கியர்கள், ஈராக்கியர்கள் வன்மத்துடன் பார்க்கிறார்கள்.குர்தீஸ் அகதிகள் நாடற்றவர்களாக அலைகிறார்கள். குழந்தைகளும் இளம் சிறுவர்களும்ம் அவர்களின் மத்தியில் அனாதைகளாகத் திரிகிறார்கள்.
அந்த அனாதை குழந்தைகளுக்கு வேலை வாங்கிக் கொடுப்பவனாகயும் 'சாட்டலைட்' இருக்கிறான். கன்னி வெடிகளை அகற்றுவது அந்த அகதிக் குழந்தைகளுக்கு வேலையாகிறது.என்ன கூலி என்பது பற்றி பேரம் நடத்துகிறான். மீட்ட
கன்னி வெடிகளை ஆயுத சந்தைக்கு குழந்தைகளுடன் எடுத்துப் போய் விற்கவும் செய்கிறான். சதாம் ஹ’சேனின் ராணுவத்தினரால் புதைக்கப்பட்டவை அந்தக் கன்னி வெடிகள்.குழந்தைகள் கன்னி வெடிகளை அகற்ற வேண்டியிருக்கிறது. கைகள் இல்லாத சிறுவர்கள் வாயினால் கன்னிவெடிகளை திறக்க வேண்டியிருக்கிறது.செயலிழக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இவ்வகையில் கைகளை இழந்த ஒரு பையன் 'சட்டிலைட்' போலவே ' பையன்' என்ற பெயருடன் உலா வருகிறான். 'சாட்டிலைட்டுக்கு அக்ரின் என்ற பெண் மீது ஈர்ப்பு. அவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்து நற்பெயர் எடுக்க முயல்கிறான்.ஆனால் அவள் நிராகரித்தபடியே இருக்கிறாள் . அவளுடன் நடக்கத் தடுமாறும் குழந்தை உள்ளது. அக்குழந்தை ஈராக் ராணுவ வீரர்களின் பாலியல் வன்முறை காரணமாக அவள் பெற்றது. அக்குழந்தையை அவள் வெறுக்கிறாள். கல்லைக் கட்டி குழந்தையை குளத்தில் எரிகிறாள். மண்ணெண்ணையை ஊற்றி மூச்சு திணறச் செய்கிறாள். இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாகவும் இருக்கிறாள். டிஸ்
ஆண்டெனா, 'சாட்டலைட்' இவர்கள் அமெரிக்கப் போரை அறிவிக்கிறார்கள்.ஊர் பெரியவர்கள் அமெரிக்கர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்தீஸ் இன மக்கள் சதாம்ஹ’சேனை எதிர்த்துப் போரிட்டபோது அமெரிக்கா ஆதரவு அளித்திருக்கிறது. அமெரிக்கர்களின் வருகை ஆறுதாலாகக் கணிக்கப்படுகிறது. அமெரிக்கர்கள் அகதி முகாமில் நுழைழந்து முன்னேறுகிறார்கள். குழந்தையை மீட்கும் முயற்சியில் கால்களை இழந்த 'சாட்டிலைட்' வலியால் அரர்றிக் கொண்டிருக்கிறான். ஆருடம் சொல்கிற 'பையனின்' கைகள் இல்லாத உடம்பின் மீது குழந்தை பலமாக இறுக்கிக் கொள்கிறது. கன்னி வெடிகளை வாயின் மூலம் அகற்றி பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. சதாமின் ஆட்சியின் வன்முறைகளிலிருந்து தப்பும் கனவுகளில் பெரியவர்கள் மூழ்குகிறார்கள் அமெரிக்கர்கள் கதாநாயகர்களாக்கப்படவில்லையென்றாலும் சதாமிற்கு முன் ஆறுதல் தருகிறவர்களாக இருக்கிறார்கள்.சதாம் சிலை உடைபடுகிறது.ஒரு பையன் தன்னிடமிருந்த கன்னி வெடிகளை விற்று உடைந்த சதாம் உசேனின் சிலையிலிருந்த கையை வாங்கி வருகிறான். கைகள் இல்லாத பையன் சொல்கிறான்: " 275 நாட்களுக்குப் பிறகு நிலமை மாறும்.'. கன்னி வெடிப்பில் ஊனமுற்ற 'சாடிலைட்' அமெரிக்க ராணுவத்தினர் முகாமைக் கடந்து போவதைக்காணச் சகிக்காதவன் போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.
குர்தீஸ் குழந்தைகளின் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஈராக் ஆட்சி அதிகாரத்தில் குர்தீஸ் இனத்தவர் சில முக்கிய பதவிகளில் இருந்தாலும் அதிகாரமற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.நாடற்றவர்களாய் அகதி முகாம்களில்
இருக்க வேண்டியதுமாகிறது. துருக்கியர்கள், இராக்கியர்களுக்கெதிரான அவர்களின் போராட்டமும் தொடர்கிறது.
தங்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு ஈரான் ஈராக் துருக்கி சிரியா ஆர்மினியா என் சிதறின் வாழ்க்கையைக் கைக்கொண்டிருப்பவர்கள் குர்தீஸ் மக்கள்.
சதாமிற்கு எதிராக கொமேனி ஈராக்கியகுர்துக்களுகு உதவியிருக்கிறார். கொமேனிக்கு எதிராக சாதம் ஈரானிய குர்துக்களுக்கு உதவியிருக்கிறார். துருக்கிய அரசை எதிர்த்த குர்தீஸ் போராளி ஒச்சலனுக்கு சிரியா இடமளித்து உதவி செய்தாலும் பின்னால் துர்ருக்கி, இஸ்ரேல், சிரியா ஒன்று சேர்ந்து கொண்ட போது ஒச்சலன் சிரியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.அமெரிக்கா ஒச்சல்லனின் இயக்கத்தைத் தடை செய்து பயங்கரவாதி என முத்திரை குத்தி மரண தண்டனை விதித்தது. ஒச்சல்லனை விடுதலை செய்ய வேண்டும் என்றக் குரலை எழுப்பியவர்களில் முக்கியமானவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற ஹெரால்ட் பிண்டர். குர்தீஸ் மக்களின் சித்திரவதி அனுபவங்களின் அடிப்படையில் அவர் இரண்டு நாடகங்களை உருவாக்கியிருக்கிறார்.
ஹெரால்டுபிண்டர் குறிப்பிடும் குர்தீஸ் மக்களின் அனுபவங்களை இப்படம் காட்டுகிறது எனலாம். அவர்களின் பிரச்சினைகளும், வாழ்வியலும் மாறாமல் -தீர்வை நோக்கிச் செல்லாமல்- ஒரு வகையில் அமெரிக்காவைப் பார்த்து ஆசுவாசம் கொள்ளும் காலகட்டத்திற்குள் தள்ளி விட்டதை இப்படங்கள் காட்டுகின்றன் அது மாயை என்பதையும், அமெரிக்காவின் வேடமும் 275 நாட்களுக்குப் பின்னால் நிலமை மாறும் என்று ஆருடம் சொல்லும் 'பையனை' நினைவுபடுத்துபவையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
'Maroaned in Iraq" என்ற படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் சதாமின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறவர்களாகவும் அவன் வாழ்வு நாசமாகப் போகட்டும் என்று சபிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் வளைகுடாபோருக்குப் பின்னதான காலகட்டத்தை இப்படம் கொண்டிருக்கிறது.ஈரான் குர்தீஸ்தானத்தில் மக்கள் போரினால் வீடு, உடமைகளை இழந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிர்சா என்ற பாடகன் தனது மனைவி ஒருத்தி சாகக் கிடக்கிறாள் என்பதை அறிந்து தனது இரண்டு வளர்ந்த மகன்களுடன் பயணமாகிறார். ( அவர்கள் இருவரும் மகன்களும் பாடகர்கள்தான். ஒருவனுக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது விருப்பம். இன்னொருவன் தன் மனைவிகள் =7 மனைவிகள்,
11 குழந்தைகள்=ஆண் குழந்தையைப் பெற்றுத் தராததால் இன்னொரு திருமண்ம் தேவை என்று நினைப்பவன்) ஈராக் குர்தீஸ்தான் பகுதிக்குச் செல்கிறார்கள். இடையில் கொள்ளைக்காரர்களால் இரட்டைச் சக்கர வாகனம், உடமை என பறி போகிறது. மிர்சாவின் மூத்த மனைவியைத் தேடுகிறார்கள். அவள் மிர்சாவை விட்டு வேறொருவனுடன் சென்று இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. ஈரானில் பெண்கள் பாடக் கூடாது என்ற நிர்பந்தம் அவளை அப்படி துரத்தியிருக்கிறது. பயணத்தி மூத்த மகன் தனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணை அகதி முகாமில் சந்திக்கிறான். ( அவளின் பாடல் அவனை உருக்குகிறது) இரண்டாவது மகன் அகதி முகாமில் இருக்கும் இரு ஆண் குழந்தைகளி தத்தெடுக்க விரும்புகிறான். மிர்சா தன் மூத்த மனைவியின் இருப்பிடத்தைக் கண்டறிகிறான். அவள் ரசாயன ஆயுதங்களின் பாதிப்பில் குரலை இழந்து செத்துப் போயிருப்பது தெரிகிறது. அவளின் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்புகிறான் மிர்சா. சதாமின் போரால் லாபடடைகிற வியாபாரிகள் அவனைப் புகழ்வதும், பின்னால் கொள்ளைக்காரர்களால் அவற்றை இழக்கிற போது அவனை இகழ்வதும் , சாபமிடுவதும் இப்படத்தில் சாதாரணமாக இடம் பெறுகிறது. ரசாயன ஆயுத பாதிப்பால் குரல்களை இழந்த பாதிப்பில் அலறும் பெண்கள், ஒட்டு மொத்தமாக பிணங்களை புதைக்கையில் எழும் பெண்களின் ஓலங்கள் சதாமிற்கு எதிரான சாட்சியங்களாக அமைந்துள்ளன.
ஒரு புறம் நீதிமன்றத்தில் அமெரிக்காவை எதிர்த்து சதாம் எழுப்பிய கேள்விகளும் இன்னொரு புறம் அவனின் வன்முறைக் கொலைகளும் , அமெரிக்காவை வெளியேறச் சொல்லி நடக்கும் போராட்ட வன்முறைகளும் அதனை ஒட்டிய பதில்களும் என் இப்படங்களின் வெவ்வேறு பரிமாணங்கள் அமைந்துள்ளன. சதாமிற்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட சூழலில் குர்தீஸ் இன மக்களை கொன்ற குற்றத்திற்காக இப்படங்கள் அவருக்கு எதிரான சாட்சிப் பதிவுகளாக அமைந்துள்ளன.
சுப்ரபாரதிமணியன்

புதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை

Thursday April 12, 2007
சுப்ரபாரதிமணியன்
===================
உலகமயமாக்கல் மரபு ரீதியானத் தொழில்களை முடக்கி விட்டது. விவசாயம், கைத்தொழில்கள் போன்றவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு விட்டு தொழில் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வது சாதாரணமாகிவிட்டது. தொழிற்சாலைகளை மையங்களாகக் கொண்ட நகரங்களில்
புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
நகரங்களில் பெரும் முதலீட்டாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் உலகை சிறு கிராமமாக்கி வெவ்வேறு வகையான தொழில்களில் பெரும்பாலும் லாபத்தையே முதன்மை நோக்கமாகக் கொண்டு முதலீடுகளைச் செய்கிறார்கள்.
புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் தங்களைத் தொழிலாளர்கள் என்று உணர்வதற்கான் சந்தர்ப்பங்கள் வெகு குறைவாகவே நேர்கின்றன. விவசாயம் மற்றும் மரபு ரீதியான தொழில்களில் தங்களை கிராமங்களிலும் பிற நகரமல்லாத பகுதிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பெரும்பாலும் தங்களை தொழிலாளர்களாக எண்ணிக் கொள்வதில்லை
தங்களின் சிறு நில உடமை மற்றும் சிறு முதலீட்டின் மூலமாக தொழிலைச் செய்கிறவர்களாகவும் அதன் மூலமான உற்பத்திப் பொருளை விநியோகிக்கிறவர்களாகவும்
விற்பனை செய்கிறவர்களாகவும் அதிலிருந்து வரும் லாபத்தை தங்கள் தினப்படி வாழ்க்கைக்கு
பயன்படுத்திக் கொண்டு வாழ்கிறவர்களாகயும் இருந்திருக்கிறார்கள். தங்களை தொழிலாளர்கள் என்று வகைப்படுத்திப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டதில்லை.
அவர்கள் தங்களின் சொந்தப்பகுதியிலிருந்து நகரங்களின் தொழிற்சாலைகளுக்கு வேலை தேடி வந்து குடிபெயர்ந்த பின் தொழிற்சாலையின் பகாசூரப்பசிக்கு சுலபமாக இலக்காகிப் போகிறார்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் அமிழ்ந்து போகிறார்கள்.
புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என்பதாலேயே அவர்கள் சேரும் தொழிற்சாலைகளில் முன்பு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் கூலி, சம்பளம் போன்றவை நிராகரிக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். கூலி பாதியாக நிர்ணயிக்கப்படலாம். அதுவே அவர்களின் தேவைக்குப் போதுமானதாகக் கருதப்படும் சூழ்நிலைக்கு ஒத்துப் போகிறார்கள்.தங்களின் கிராமப்பகுதி வேலைகளுக்குக் கிடைத்த சம்பளம். கூலியிலிருந்து 50% அது அதிகமாக இருப்பதே காரணம். ( ஆனால் தொழிற்சாலயின் குறைந்த பட்ச சம்பளத்தில் அது 50% தான் என்பதை அவர்கள் அறிவதில்லை) நிரந்தரத் தொழிலாளி, தொழிற்சட்டங்கள் தரும் உரிமைகள் , இ.எஸ்.அய்,
பிராவிடண்ட் பண்ட் மருத்துவ வசதி போன்ற அடிப்படையான வசதிகளை உரிமையாகப் பெறும் தொழிலாளி மத்தியில் தன்னைப் பொருத்திப் பார்ப்பதில்லை. தனக்குக் கிடைக்கிற வருமானம் சொந்த ஊரில் கிடைத்ததை விட அதிகமானது என்ற ஆறுதலே அவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது. இதன் பிறகு வேலை நேரம் என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. அது எட்டு மணி நேரத்திலிருந்து பத்து, பனிரெண்டு பணி என்று நீட்சி பெறும்போதோ, நிர்பந்திக்கப்படுகிற போதோ அதிக கவனம் பெறுவதில்லை. அல்லது வேலை நேரம் குறிப்பிடத்தக்கதாக இல்லாமல் குறிப்பிட்ட வேலையை பூர்த்தி செய்வது வரைக்குமானது என்ற வகையில் வடிவமைக்கப்ப்ட்டு தொழிற்சாலைகளுக்குள் இருக்க வைக்கப்படுகின்றனர்.
அதிகப்படியான் வேலைக்கு ஓவ்ர் டைம் அலவன்ஸ் போண்றவற்றைக் கோருதல் என்பது சற்று மிகையாகப் பட்டு விடுகிறது."யாசகமாய்" அப்படி ஓவர் டைம் அலவன்ஸ் வழங்கப்படுகிற போதும் சாதாரண சம்பளத்தை விட அது இரட்டை மடங்காக இருக்கவேண்டும் என்பது தவிர்க்கப்பட்டு சாதாரண சம்பளமே அதிகப்படியான நேரத்திற்குமென்றாகிவிடுகிறது,
தங்களின் சொந்த ஊரின் பாதிப்பிலிருந்து அவர்கள் மீள்வதற்கு அவசியம் இல்லாதபடியாகிறது. சொந்த ஊரில் வருடத்தில் பாதி நாட்கள் வேலை இருந்தாலே அதிகம். இங்கு வார ஞாயிறு விடுமுறையும் மறுக்கப்பட்டு வேலை நாட்கள் அதிகமாய் இருப்பது அவர்களின் உழைப்பிற்கு பூரண அங்கீகாரம் தருவதாய் எண்ணி விடுகிறார்கள்.
தங்களின் சொந்த ஊரில் விசாலமான வீடுகளில் வாழ்ந்து வந்ததையும் நல்ல காற்றோட்டமான சூழலும் மாசுபாடற்ற தண்ணீர் கிடைத்து வந்ததையும் மறந்து இரவு நேரத்தில் தூங்குவதற்கு மட்டும் ஒரு இடமாகி விடுகிறது புது இடம். மற்றும் வாடகை வீடு. குடி தண்ணீரோ, வீட்டு உபயோகிப்பிற்கான தண்ணீரோ காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. உடல்நலப்பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை கேள்விக்குறிகளாகிவிடுகின்றன.
இந்நிலையில் அவர்களின் வாழ்க்கை வெகு இயந்திர நிலையிலாகி விடுகிறது. ஓய்வு நேரத்திற்கான அவசாசங்களையும் உருவாக்கிக் கொள்வதில்லை. வார விடுமுறைகளையும் தெய்வ நம்பிக்கை , ஜாதிய ஈடுபாடு மற்றும் முறையற்ற பொழுதுபோக்கால் கழிக்கிறார்கள்.
இவர்கள் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கான சட்டரீதியான உரிமைகளைப் பெற்றவர்கள் என்று உணர்வதற்கான சந்தர்ப்பங்களிஅ அவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. தொழிற்சங்க இயக்கங்களின் தேக்கநிலை என்பது பல ஆண்டுகளாக உள்ளது. புலம் பெயர்ந்துவந்தத் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தினர் சந்திப்பது என்பது அபூர்வமானதாக அமைகிறது, தொழிற்சாலைசூழல்கள் அதற்குத் தடையாக இருக்கின்றன. அவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று தொழிலாளர்களை ஓய்வு நேரத்தில் சந்திப்பது அபூர்வமாகிவடுகிறது. இயலாததாகவும் உள்ளது. அப்படி அவர்களை சந்தித்து உரையாட முற்பட்டாலும் சாதகமான விளைவுகள் இருப்பதில்லை.
தங்களைத் தொழிலாளிகள் என்று உணர்கிற சந்தர்ப்பங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதிகப் படியான வேலை நேரங்களுக்கு வேலை செய்வதற்கான முறையான உரிமையைக் கோராமல் , இருக்கும் உரிமைகளைப் பற்றி எடுத்துரைக்கும் போது எங்களுக்கு வேலை கிடைப்பதே பெரிய வரம் என்பதாய் சொல்லிக் கொள்கிறார்கள். வார விடுமுறை நாட்கள் மற்றும் நீண்ட இரவு வேலைகள உடல்நலம் பொருட்டு தவிர்க்கவேண்டும் என்பதற்கு பதிலாக அவ்வாறு உழைத்தால்தான் குடும்ப நிலைகளைச் சமாளிக்கிற அளவு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால் இதெல்லாம் அவர்களுக்கு உறுத்தலாக அமைவதில்லை. வெகு சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
தெழிற்சங்கங்கள் அவர்களின் வளர்ச்சிக்கும் இருப்பிற்கும் தங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவே எண்ணுகிறார்கள். தங்களுக்குத் தேவையில்லாதவர்கள் தங்களின் தினப்படி வாழ்க்கையில் குறுக்கிடுவது போன்ற பிரமைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.தொழிற்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வது தேவையற்றது என்பதாய் நிச்சயித்துக் கொள்கிறார்கள்.. தங்களின் வேலை பாதுகாப்பிற்கு குந்தகமாய் அமைந்து விடும் என எண்ணுகிறார்கள்.
தொழிற்சங்கங்களில் சேருவதன் மூலம் அதிகப்படியான் நேர உழைப்பு, குறைந்த கூலி இவற்றைத் தவித்து விட்டு முறையான அதிக சம்பளம் , தொழிலாளர்கள் உரிமைகள் , வேலை பாதுகாப்பு போன்றவை கிடைக்கும் என்பதை உணராமலே காலத்தைக் கழிக்கிறார்கள்.
வேலை நீக்கம், கூலி பாக்கி, தண்டனை என்று வருகிற போதே தொழிற்சங்கத்தினரை அவர்கள் அணுகுகிறார்கள். அப்போதுதான் தொழிற்சங்கத்தினர் அவர்களுகு தொழிற்சங்க உரிமைகள எடுத்துச் சொல்ல வாய்ப்பு அமைகிறது. கட்டாயத்தால் தொழிற்சங்கத்தில் சேர்கிறார்கள்.தங்களின் பிரச்சனைகள் தற்க்காலிகமாக தீர்ந்த பின்பு நிர்ப்பந்தங்கள் வருமானால் சந்தா செலுத்துவது மட்டும் அவர்களின் கடமையாகிறது. இவ்வகையான புதிய தொழிலாளர்கள் மிகப்பெருமளவில் வளர்ந்து வருகிறார்கள்.
பெரும் நகரங்களிலும் பெரும் தொழிற்சாலைகளிலும் இவ்வகை புதிய தொழிலாளர்கள் வளர்ந்து பெருகுகிற " முறை சாராத தொழிலாளர்களின் "கடலில்"
சங்கமித்திருக்கிறார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட தொழில் அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலவாணியைக் குவித்துக் கொண்டிருக்கும் தொழில்களின் மத்தியில் தொழிலாளர்கள் மட்டும் அங்கீகரிக்கப்படாதவர்களாக, முறை சாராத தொழிலாளர்களாக தள்ளப்படுவது தற்செயலாக நிகழ்ந்து வருவதல்ல. உலக மயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயாஜாலங்களில் ஒன்றாக சாதாரணமாக இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இது தொழிற்சங்கத்தினரை பலவீனமாக்கி சிதறுண்டு போகச் செய்து வருகின்றது. இந்தத் தேக்க நிலையை உடைத்தெரிவது தொழிலாளர்கள் தங்களைத் தொழிலாளிகள் என்று உணரச் செய்வதற்காக உபாயமாக இருக்கும். கொத்தடிமைகளாய் தொழிலாளர்கள் நீடிக்கிற அவலத்தை சிதறடிப்பதாக அமையும்.அதற்காக தொழிற்சங்கத்தினரும், அரசியல் கட்சிகளும் அக்கறை எடுத்துக் கொள்வது சரித்திர நிர்பந்தமாகும்

பசோலினி : கலையும், விளையாட்டும்



Thursday June 7, 2007
சுப்ரபாரதிமணியன்
=================

முகத்தில் புரளும் தலை மயிர்கற்றையுடன் அந்த இளைஞன் ரோமின் தெருக்களில் அலைகிறான்.
வீ£தியில் நடந்து போகிறவர்களுடன் பேச்சு கொடுக்கிறான். வாகனங்களின் தாறுமாறான இயக்கமும் இரைச்சலும் அபரிமிதமாக இருக்கிறது. அலட்சியமும், இறுக்கத்திலிருந்து தளர்ந்த மனநிலையிலுமாக அவன் முகம். போரும் குண்டுகளின் பொழிவும் இடைக்காட்சிகளாகி துணுக்குறச் செய்கிறது. கடவுளின் குரல் அவனை அழைக்கிறது. இளைஞன் அதை அலட்சியம் செய்தபடி நடக்கிறான். சிவப்பு காகிதப் பூவை கையில் ஏந்தியபடி தெருக்களில் அலைகிறான். கடவுளின் குரல் உட்சபட்ச்மாய் அலலைக்கழிக்கிறது. வெகுளித்தனம் பாவசித்தமானது என்கிறது கடவளின் குரல். அவற்றையெல்லாம் சபிக்க வேண்டும் என்கிறது. அநீதிகளுக்கும் போரின் வன்முறைகளுக்கும் மத்தியில் மகிழச்சியாக நடமாடிக் கொண்டிருப்பவர்கள் அழிந்து விட வேண்டும் என்கிறது. வெளுத்த நீல வானத்தைக் காட்டும் காட்சியினூடே கைகளை விரித்தபடி அவனின் சவம் கிடக்கிறது. காகிதப்பூ அவன் அருகில்.
பசோலினியின் குறும்படங்களில் ஒன்று இது. இதில் வரும் கடவுளின் குரல் அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் குரலை ஒத்திருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் பசோலின.¢ அவரின் குரல் என்றைக்கும் எதேச்சாதிகாரத்திற்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அநீதி, பாசிசத்திற்கு எதிராகவே இருந்திருக்கிறது. அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு கூட அவர் எதேச்சாதிகாரம் , சிஜஏ ஆதிக்கம் , பொதுப்பண விரயம், வன்முறையை ஊக்குவித்தல், எல்லா சிந்தனைத்தளங்களும் வெளியேற்றப்பட்ட அறநெறி குறித்து தன் தீர்க்கமான கருத்துக்களை முன் வைத்தவர். பாலியல் துன்புறுத்தல் என்ற வகையில் பதினொரு வயது பையன் ஒருவன் பசோலினி மீது குற்றம் சாட்டியிருந்தான். அதனால் பசோலினி அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டார்.
எழுபதுகளில் இத்தாலியில் நிலவிய அதிகாரத்துவம் படைப்பாளிகளை மிகவும் பாதித்திருந்தது. முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள். மிகச் சிதைந்த பொருளாதார நிலை.எங்கும் வன்முறை. பசோலினீயின் எழுத்தும் படைப்பும் இதற்கு இதற்கு எதிராக இருந்ததே அவரின் கொலையின் பின் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
இருபத்தோராம் வயதிலான அவரின் எழுத்துக்களிலிருந்து ஓரிநனப் பாலுணர்வு சம்பந்தமான அவரின் ஈடுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வயது பாலியல் உணர்வின் சந்தோச காலம் என்கிறார்.ஓரினப் பாலுணர்வு அவரை அலைக்கழித்திருக்கிறது. உடம்பின் தேவை மற்றும் பாலியல் பிரச்சினைகள் குறித்து அவற்றின் முக்கியத்துவத்தை பல வகைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து சொல்லாடல்களும் விவாதத்திற்கும் மார்சியத்தின் போதாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மனித நேயம் கத்தோலிக்கம், மார்க்சியம், உளவியல் சிந்தனை மற்றும் ஓரினப் பாலுணர்வு வெவ்வேறு வகைப் பழக்கங்களாய் மற்றும் படிமங்களாய் அவரின் படங்களில் நிறைந்திருக்கிறது. பாலியல் பிரச்சினைகளும்,
பாலியல் தொழிலாளர்களும் அவ்வகையில் அவர் படங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். கத்தோலிக்கத்தினூடே மார்க்சியத்தின் தேவையைப் பல வகைகளில் உணர்ந்திருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி சிந்திக்க மார்க்சியம் அவருக்குப் பெரிதும் உதவியிருப்பதும் கலைஞர்களும் மற்றும் எழுத்தாளர்களின் இருப்பும், நியாயமும், பணியும் மார்க்சியத்தால் வழி நடத்தப்படுவதாகவே பெரிதும் நம்பினார். மார்க்சியத்தைத் தவிர கிறிஸ்துவும், பிராய்டும் அவரின் பெரும் ஆதர்சங்களாக இருந்திருக்கிறார்கள். பைபளின் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் விமர்சனரீதியிலும் விவரணங்களாகவும் பல படங்களில் பதிவு செய்திருக்கிறார். கிறிஸ்துவ நிறுவனங்களை தம் படைப்புகளில் கேவலமாக சித்திகரித்த
குற்றச்சாட்டிற்காக கைதாகியும் இருக்கிறார்.
உலகின் பேரிலக்கியப் படைப்புகளில் ஒன்று ஈடிபஸ் மன்னன். சிக்மண்டு பிராய்டு போன்றவர்களின் தீவிர பரிசிலனைக்குட்பட்டது. புராதன கிரேக்க மொழிகளில் சோபாக்ளிஸ் எழுதிய இந்த நாடக் வடிவத்தை பசோலினி தன் வரலாற்றுப் படம்மாக்கியிருக்கிறார். ஒரு வகையான விஞ்ஞான விளக்கத்தை பசோலினியின் ஒற்றை பாலுணர்வு பிரச்சனைக்கு இக்கதை அளிப்பதாய் நம்பியிருக்கிறார். ஒடிபசிற்கும் அவன் தாயிற்குமான அன்பை மீறி ஒடிபசின் பாலைவன அலைவுறுதல் படத்தின் மையமாகியிருக்கிறது.
முதல் பாகம் இத்தாலிய நகரமொன்றின் ஒரு ராணுவ அதிகாரி , அவன் குழந்தை, மனைவி என மையமாகிறது. குழந்தை மீதான சிறு வெறுப்பில் குழந்தை அலைக்கழிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் படுகிறது. இதிலிருந்து சோபாக்ளியின் நாடகத்திற்கு தாவுகிறது. கடைசிப்பகுதி மீண்டும் நிகழ்காலத்திற்கு வருகிறது. ஒடிபஸ் புல்லாங்குழல் வாசித்தவறு கண்கள் குருடான நிலையில் ஒரு மாதா கோவிலில், ஒரு தொழிற்சாலைத்தெருவில் அலைகிறான். அவனின் அம்மா அவனை அடிக்கடி எடுத்துச் செல்லும் புல்வெளியில் திரிகிறான். இவற்றின் பிம்பங்களை அழிவுறுகிற கவி மனம், மார்க்சிய கவி மனம், அழிவுறும் நிலை என்ற வகையில் வகைப்படுத்திப் பார்க்கிறார் பசோலினி.
அறுபதுகளில் இந்தியாவிற்கு வந்த பசோலினி இந்தியா பற்றின தனது பதிவுகளை புத்தகமாக்கியிருக்கிறார். அதுவே ஒரு படமாகவும் விரிகிறது. இந்திய சாமியார்கள், எழுத்தாளர்கள் , பழைய மகாராஜாக்களின் குடும்பத்தினர் என்று பலரின் பேட்டிகளாய்த் தொடர்கிறது. இந்திய சமூக் நிலைகள், வறுமை , மதம், உழைக்கம் வர்க்கம் என்று அவர் மனம் துணுக்கிடுகிறது. ஒரு வகை அவநம்பிக்கைவாதியாக அவர் இதில் வெளிப்படாவிட்டாலும் இந்தியாவின் சோகங்களால் அவர் ஈர்க்கப்பட்டிருப்பதும்
விரவும் பிம்பங்களால் தெளிவடைகிறது. எரியூட்டப்படும் ஒரு பிணத்தைக் காட்டியபடி படம் முடிவடைகிறது.
பின்னணியில் உடம்பை உலுக்கும் புல்லாங்குழல் இசை. பசோலினியின் பின்னணிக்குரல் அலைந்து தேய்வுறுகிறது.
"இந்தியாவிற்கு வந்து போகும் ஒரு மேற்கத்திய உலகைச் சார்ந்தவன் ( எல்லாம் உள்ளவனானவன் ) எதையும் தருவதில்லை.ஆனால் இந்தியா ( எதுவுமில்லாதது ) எல்லாவற்றையும் தருகிறது."
சுப்ரபாரதிமணியன்

சின்ன வீடு

சுப்ரபாரதிமணியன்
==== ===============
கோடை காலத்தில் நமது பயணங்கள் தறுமாறாகத்தான் அமைந்து விடுகின்றன். நகர நெரிசல், பெட்ரோல் புகை மூட்டம் இவற்றிலிருந்துதப்பிப்பதற்காக் கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணிப்பதும் சாதரணமாகி விட்டது. வார விடுமுறையை வீட்டை விட்டு வெளியில்சென்று கழிப்பது என்ற மேற்கத்திய வாழ்க்கைமுறையின் ஒரு அம்சம் நம்க்குள் விடுமுறை தினங்களில் புனித ஸ்தலங்கள், கெடா வெட்டுகள் என்று கழிகின்றன. இந்த பயண அலைச்சலின் மையமாக இருப்பது நகர நெரிசலைத்தவிர்ப்பது, இய்ற்கையை அண்டிப் போவது என்றாகிறது.
அறிவியல் தந்த வசதிகளை தவிர்த்து விட்டு இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு ஏங்குவதும் அதனோடு இயைந்து வாழப்ப்ழகுவதும்அடி ஆசை என்றாகி விட்டது. அதை பிரதிபலிக்கிற பிலிப்பைன்ஸ் , சப்பான் இணை தயாரிப்பான் படம் சின்ன வீடு .இயற்கை வேளாண்மைக்கு சப்பான் போன்ற நாடுகள் திரும்பிக்கொண்டிருக்கிற முயற்சிகளில் பூக்கோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி போன்ற நூல்களின் வழிகாட்டுதல்கள் முக்கியமாக இருக்கின்றன.
ஆதிவாசி பழங்குடி குடும்பங்களில் இருந்து படித்து நகர வாழ்க்கையைப் பார்த்தவர்களுக்கு ஒரு நிலையில் காடும், மரங்களும் நிதானமும் மீறி வேறு வாழ்க்கை தேவைப்படுகிறது. அந்த வகையான ஆதிவாசிகளின் குடும்பத்தலைவன் வெளிநாடு போகிற ஆசையில் அலைகிறான்.நகர விடுதிகளில் சாதாரண வேலை செய்ய வேண்டியக் கட்டாயம். அதன் மூலம் வெளி நாட்டு வேலைகளுக்கு பணம் சேர்ப்பது, விடுதிகளின் தாதா கும்பல்களின் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்வதாகப் பணம் பிடுங்குபவன்,வேறு நகரத்தில் விட்டு விட்டுச் செல்வதும் சதாரணமாகிறது.அவனின் மனைவி நகரத்தில் சாதாரண வேலை செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. கணவனின் வெளிநாட்டு சம்பாத்தியக் கனவில் அவளுக்குப் பங்குண்டு.
ஆனால் அவர்களின் மூன்றுக் குழந்தைகளும் மலைப்பிரதேசம் ஒன்றில் முதிய உறவினர் வீட்டில் இருக்கிறார்கள். பெற்றோரை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிறார்கள். அந்த மலைப்பிரதேசம் மின்சாரமோ, தேவாலயமோ, பாதை வசதிகளோ இல்லாதது. இயற்கை உரங்கள் பயிர் வளர்க்கதபோதுமானதாக இருக்கிறது. காய்கறிகளும், கனிகளும், கீரைகளும் சதாரண அரிசி போன்ற பொருட்கள் விளைகிற இடமாகவும் இருக்கிறது.
அந்த வாழ்க்கை நகர வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வந்து வாழும் சிலருக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒட்டு விதைகள் பற்றிபிரசாரம் செய்கிறவர்களை மலைப்பிரதேச மக்கள் நிராகரிக்கிறார்கள். மினி செனரெட்டர் போன்றவற்றுடன் வந்து மின்சாரத்தின் பயன் பற்றியும், தொலைக்காட்சி, மிக்ஸி உட்பட் மின்சாதனப் பொருட்களுடனும் வந்து அதன் உபயோகம் பற்றி உபதேசிப்பவன் தேவையில்லாததவனகிறான்.மலரும் பூக்களும், தூரத்து காட்சிகளும், சலசலக்கும் நீரோடைகளும், உணவிற்கான தங்கள் முயற்சிகளும் அங்கு வாழ்பவர்களுக்கு இயல்பாகவேப்படுகிறது
மூன்றுக்குழந்தைகளும் தங்கள் முயற்சிகளை முதியவர்களோடு தினசரி வேலைகளில் உதவுவது மட்டுமல்லது, கீழ்ப்பகுதிகளுக்குச் சென்று சிறு சிறு பொருட்களை விற்பது, தேவாலயங்களில் பூசை பொருட்களை விற்பது என்றாகிறது. பெற்றோர்களின் வீடு திரும்பலுக்காக ஏங்குகிறார்கள்.நகரத்தில் வசிக்கும் பெற்றோர் மலைப்பிரதேசத்திற்கு வந்தாலும் மீண்டும் நகரக்கனவுகளில் இருக்கிறார்கள். தனிமையை இரண்டாம் பட்சமாக்கி கணவன் இம்முறையாவது வெளிநாடுசெல்லும் கனவை நிறைவேற்றிக் கொள்வது என்று கணவனுக்கும் அவரவர் பாதைகள் நீள்கின்றன். குழந்தைகள் முதியவர்களோடு மலைப்பிரதேச வாழ்க்கைகு தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். .
நகர வாழ்க்கையின் குரூரங்களும், மலைப்பிரதேச இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் மாறி மாறி பிம்பங்களாகின்றன்.
இயற்கையோடு வாழ்தல் என்பது பற்றினத் தீர்மானங்களாய் இந்த பிம்பங்கள் அழுத்தமாகப் பதிகின்றன. படம் இந்த விடங்களை சொல்லும் நிதானமும், மிகையற்ற் சாதாரண் பிரேம்களும் இப்படத்திற்கு இன்னும் வலு சேர்கின்றன். இயற்கைக்கு கடன் பட்டிருக்கிறவர்கள் மற்றும் நகர வாழ்க்கை, வெளிநாட்டு வேலை சொகுசு என்று பொருளாதர்ரச் சூழலுக்குக் கடன்பட்டிருப்பதை சுட்டுகிறது இப்பட.ம் .
அபோங்க் ( சின்னவீடு) ஆங்கிலம் மற்றும் பிலிப்பைன்சின் பிற மொழிகளில் தயாரிக்க்பட்டிருக்கிறது.
சுப்ரபாரதிமணியன்

புதன், 14 மே, 2008