நம்மாழ்வார் நினைவு தினம் இன்று டிச.31
காலம் தந்த வேளாண் போராளி
எனது ‘சாயத்திரை’ நாவலின் ( திருப்பூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய நாவல்). ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்குச் சம்ர்ப்பணம் செய்திருந்தேன். அதன் வெளியீட்டு விழாவிற்கு நம்மாழ்வார் அய்யாவும் வந்திருந்தார் ( ‘தி கலர்டு கர்டெய்ன்’ என்றத் தலைப்பில் அது ஆங்கிலத்தில் டாக்டர் ராஜ்ஜா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது). அந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோவை கூட்டமொன்றில் அவரைச் சந்தி்த்த போது அது கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்திருப்பதை அறிந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “நீங்கள் சாயத்திரை நாவலில் எழும்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன. தீர்வுகள் கிடைத்தபாடில்லை” என்றார்.
தீர்வு, மாற்றம் குறித்து அக்கறை கொண்டால் அந்த மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக அவர் இருந்தார். ரசாயன உரங்கள் பற்றிய பிரச்சாரம், பசுமைப் புரட்சி போன்றவற்றை தன் அரசு தொழில் சார்ந்து இயங்குதலில் முரண்பாடு கொண்டு அரசு பதவியிலிருந்து வெளியேறியவர் நம்மாழ்வார். அதன் பின் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரிந்தாலும் சுதந்திரமானப் போக்கையே மனதில் கொண்டு மனதில் கொண்டு செயல்பட்டவர்.
இந்திய வேளாண்மை முறையில் அதிகம் பேசப்பட்ட ‘பசுமை புரட்சி’ ஏற்படுத்திய மோசமான விளைவுகள், ரசாயனம் சார்ந்த உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் பொதுவுடைமை இயக்க வட்டாரங்களுக்கு வெளியில்தான் பெருமளவில் நடந்தன. என் ‘சாயத்திரை’ நாவல் பற்றி பொதுவுடைமை சார்ந்த எழுத்தாளர் ஒருவர் திருப்பூர் கூட்டமொன்றில் தன் கட்சி சார்ந்த இலக்கிய பிரிவின் விவாதத்தில் எடுத்துக் கொண்டு ‘சாயத்திரை’ நாவல் பற்றிய மையத்தை பொதுவுடைமை கட்சி சார்ந்த உள்ளூர் எழுத்தாளர்கள் அதற்கு முன் நாவல் என்ற அளவில் கைக் கொள்ளாததும்,அந்த நாவல் வந்த பின் அதை முன் எடுத்துப் பேசாததும் குறித்து விவாதத்தை எழுப்பியிருக்கிறார். அப்போது சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பெரிதுபடுத்தி 10,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும், தொழிலாளர் நலத்தையும் புறக்கணித்து முன் செல்ல முடியாது என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டது. இது போலவே சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சனைகளின் மீதான் பொதுவுடைமை இயக்கவாதிகளின் முன்னெடுப்புகள் இருந்தன. இந்தச் சூழலில்தான் மண்மீதும், இயற்கை வேளாண்மையை முன் வைத்தும் நம்மாழ்வார் தனது செயல்பாடுகளயும், பரப்புரைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். கிராம் அனுபவங்களும், கிராமந்தோறும் சென்று நுண்ணறிவால் சேகரித்துக் கொண்டதையும் உலக அளவில பேசப்பட்ட ஜப்பானிய புகோகோவின் ஒற்றை ஐக்கோல் புரட்சி நூலும், ரேச்சல் கார்சனின் “மெளன வசந்தம் “ நூலும் அவரை முன்னெடுத்திச் செல்ல பயன்பட்டன. மரபணு மாற்றப்பயிர்கள் இந்தியாவில் வேகமாகப் புக ஆரம்பித்தபோது, தமிழகத்தில் பலரையும் முன் நிறுத்திக் கொண்டு அதைஎதிர்த்துப் போராடினார். இந்திய மக்களை பலிகடாவாக்கும் மரபணு தொழில்நுட்பம் பற்றிய பரப்புரைகளின் மூலம் பசுமை இயக்கங்களை ஒன்றிணைத்து அது பற்றிய எதிர்ப்பை சரியாகவே வெளிப்படுத்தி வெற்றி கண்டார். இயற்கை வேளாண்மை சார்ந்த பாதுகாப்பையும், சத்துணவு அவசியமும், சுத்தமான குடிநீர் உரிமை என்பதையும் வலியுறுத்தி சக மனிதனின் விடுதலை குறித்த முன்னெடுப்புகளாக அவரின் போராட்ட இயங்கு முறை இருந்தது. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் முறைகளுக்கு எதிராக கடைசி காலத்தில் போராடி அங்கேயே மரணமடைந்தார். ஆயிரக் கணக்கான இளைஞர்களின் நல்லாசிரியராக இருந்து இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பாய் முன் நின்ற போராளியாக விளங்கினார்.
ஹைதராபாத்தில் நான் வசித்து வந்த போது கத்தாரின் நடமாட்டம் அதிகம் இருந்த செகந்திராபத் பகுதியில் அவரின் உடம்பு மீதான துப்பட்டா துப்பாக்கியைப் போல செயல்பட்டதை அறிந்திருக்கிறேன். அதே போல் தலையில் முண்டாசாகக் கட்டி கொள்ளும் வெள்ளை துண்டும், பசுமை வாழ்வை முன்னிருத்தும் பச்சை நிற சால்வையும், பற்றற்ற வாழ்க்கையின் குறியீடான காவி வேட்டியும் அவரை இயற்கை காப்புப் போராளியாக வெளிக்காட்டியிருக்கிறது.
அவரை உசுப்பிய விடுகதை ஒன்றை பல மேடைகளில் சொல்லுவார்: “பழமாகி காயாவது எது? காயாகிப் பூவாவது எது” அவர் பழமாகவும், காயாகவும், நெஞ்சில் நிறைந்த அற்புத மலராகவும் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்க பல ஆயிரம் இளைஞர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதுதான் கண்கூடாகும். அவர் 2013 டிசம்பர் கடைசி நாளில் மறைந்து நம்மை வெகுவாக பாதித்து விடைபெற்று விட்டார்.