முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள் : சுப்ரபாரதிமணியன்
---------------------------------------------------------------------------------------------------
ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான
உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய
போராட்டங்கள் பல பின்னடைவுகளைத் தந்து விட்டது.
யுத்தங்களின் பாதையில் நெடும்பயணம் சென்று விட்டனர் ஈழ மக்கள். அறுபதாண்டு குரல்கள் ஓய்ந்து விட்டன. இன அழிப்பு முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. கனவுகளும் இருந்து
கொண்டே இருக்கின்றன. அகதிகள் நிலையை
மீட்டெடுக்காமல் கொல்லப்படாமல் திரிவதே
சுதந்திரம் என்றாகி விட்ட்து. அந்த நாட்டு எழுத்தாளர்கள் தொடர்ந்து வாழ்தலுக்கான
நீதியையும் அநீதியையும் பதிவு செய்து கொண்டே வருகிறார்கள்.பேரழிவுகள் தந்த
உள்ளார்ந்த துயரங்களைத் துடைத்தெறிய முடியாமல்
இன்னும் எழுத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. போராட்டமும் வாழும் கனவும் தொடர்கிறது.
போருக்குப் பின்னான நிகழ்வுகளும் மக்களைக் குரல் அற்றவர்களாக்கி விட்டது. ஈனசுரங்களாய் பலவும் எழுகின்றன. வாழ்கிற பெரும்
கனவிற்காக இன்னும் துயரங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் அகளங்கன்
இந்தத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் அறுபது வயதைக்கடந்திருக்கிறார் அகளங்கன். அவரின் எழுத்துப்
பணியில் கவிதைகள், கட்டுரைகள், நாடகம் என்றிருந்தாலும் சிறுகதைத் தொகுப்பு என்ற
வகையில் இதுதான் முதலாவதாகும். 42 வது வயதில் அவரின் இந்நூல் 21 சிறுகதைகளை
உள்ளடக்கியதாகும். இனத்தன்மையின் தனித்துவமும், வன்னிப்பகுதிமக்களின் இன்றைய
வாழ்வியலும் என்ற வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன..வவுனியாவின் பம்பைமடு என்ற
விவசாய கிராமத்தின் மண்ணின் வனப்பையும்
பண்பாட்டு விழுமியங்களையும் அசைபோடும் மனிதர்களைக் காட்டுகிறார். மரபு
வகையில் அமையப்பெற்ற நடத்தை முறைகளின்
விசித்திரங்களையும் வாழ்வியலையும் போர்க்காலச் சூழலையும் அதன் பின்னதான
வாழ்க்கையையும் விரிவான அளவில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆசிரியராக
பணிபுரிந்தவர் என்ற அளவில் நகர்புற
ஆசிரியப்பணியின் சூழல் சரியாக துருவ
நட்சத்திரம் போன்ற கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது. ஆசிரியரால் உருவாக்கப்படும் சிறுவர்கள்
ஆசிரியர்களை நினைவு கூர்தல் சகஜமே. அந்த நினைவுகூறலின் உட்சபட்சமாய் ஏழேழு பிறப்பும் ஆசிரியராக பணிபுரிய வேண்டும்
என்ற அவா எழுவது உன்னதமான ஆசிரியப்பணியின் லட்சியமாக இருக்கிறது. அதேபோல் எழுத்தாளன்
ஆவது என்கிறதும் கூட. ஆனால் இன்றைய நிலை வேறு மாதிரியாக இருக்கலாம். ஆனால் அந்த
உயர்ந்த லட்சிய நிலையை மனதுள் மீட்டெடுப்பதாய் அமைந்துள்ள சிறுகதைகள் பள்ளிப்பருவத்தையும் ஆசிரியப் பணி குறித்த
அக்கறையையும் வெளிப்படுத்துகின்றன.
பள்ளி போர்க்காலச் சூழலில் படும்
அவஸ்தையை பல கதைகளில் எடுத்துரைக்கிறார்
இதைச் சொல்வதற்கு அவரின் ஆசிரியப்பணியின்
நேர்மை முன்னிற்கிறது. கவிதை எழுதுபவன்
இராணுவத்தாரின் சோதனையில் அது அவர்களின் கையில் சிக்கி விட்டால் அது தரும்
விளைவுகளையும் மனப்பதட்டத்தையும் உணர்ச்சிமயமாக்கியிருக்கிறார். கவிதை எழுதுவதே
மனபாரத்தை, சுமையை இறக்கி வைப்பதற்குத்தான். ஆனால் அதுவே பாரமாகி ஒரு இளைஞனை மனஅழுத்த்தில்
மூழ்கடிப்பதைச் சொல்கிறார்.போர்க்காலச்சூழல்
மனிதர்களையும் விவசாயக்குடிகளையும் இளைஞர்களையும் அலைக்கழிப்பதை பல கதைகளில்
விரிவாகவே எழுதியிருக்கிறார்.குண்டு வெடிப்பு மனித மனங்களை சுக்கு
நூறாக்குகிறது. பள்ளியிலேயே குண்டு வெடித்து
மாணவர்களைச் சிதறச் செய்கிறது. யுத்தம்
ஏதோ மூலையில் நடந்தாலும் அதன் பதற்றம் வீட்டிலும் பள்ளியிலும் உணரப்படாமல்
இல்லை.இராணுவ நடவடிக்கைகளால் ஊனமாவனவர்களின் அவலத்திற்கு கணக்கில்லை. .ஊனமாகிறார்கள்.
பென்சன் வாங்கப் போனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ( வெயில் மட்டுமா சுகம்
) . எந்த வகையிலும்
புறக்கணிக்கப்பட்ட துன்ப நிலையில்
குடும்பம் என்ற வண்டி நகர சிரமப்படுவதை கதைகள் சொல்கிறன.காதலித்தவள் இராணுவதினரால்
பாலியல் வல்லுறவுக்குப்பட்ட நிலையில் அவளை
குடும்பமே நிராகரிக்கிற அவல நிலையும்
ஏற்படுகிறது ( மீண்டும் ஒரு குருஷேத்திரம் ) சொல்வதற்கு நேரடித்தளங்கள்
தேவையில்லாத போது குறிப்பாய் உணர்த்துவது படைப்பமைதிக்கு சிறப்பாக இருக்கும்
என்பதை ” வத்துக்குளம்
“ போன்ற கதைகள் எடுத்துரைக்கின்றன. கொண்டல்
பிசின் போன்ற கதைகளையும் இது போன்ற குறியீட்டு வகையில் சேர்த்துப் பார்க்கலாம். சாப்பாட்டிற்கு
மீன் பிடிக்க வந்தவர்கள் பெரும் வியாபாரிகளாகி மீன் வளத்தைச் சூறையாடுவதை
இக்கதையில் சொல்கிறார். ஆனால் குறியீட்டுத்தன்மையில் பல தளங்களை இக்கதை
குறிப்பிட்டுச் செல்கிறது.கிராமிய அனுபவங்கள் வெகு சரளமாக இக்கதைகளில் ஊடாடி
நிற்கின்றன. உணவு பழக்க வழக்கங்கள்,
மக்களின் அன்பான உபசரிக்கும் முறை, கிராமிய தொன்மை முதற் கொண்ட உணர்வுகள் போன்றவை விரிவாகவே எடுத்துச் சொல்கிறார்.
போர்க்கால சூழல் இடப்பெயர்வுகளை கொண்டு வந்திருக்கின்றன.
ஒரு புறம் சம்பாதிக்க போய் விட்டத் தலைமுறையினர். இன்னொரு புறம் உயிர் பிழைக்க இருப்பதை
விற்று காசு பார்த்து அதைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மத்தியில்
செல்ல முடியாத முதியவர்கள் தங்களின் மண் மீதான பாசத்தையும் உயிர்ப்பையும்
கண்ணீரோடு வெளிப்படுத்தும் அனுபவங்கள் நிறைய உள்ளன.தங்களை விட மோசமான வகையில் உடல்
உறுப்புகளை இழந்து தவிக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து ஆறுதல் அடைவதும்
நிகழ்கிறது ( இந்தப் பிள்ளைக்கு ), போர்ச்சூழலில் செல் வெடிப்பும் அதற்குப் பயந்து
மக்கள் சிதறுவது, ஒளிந்து கொள்ளும் அனுபவங்களும் பல கதைகளில் பதிவாகியுள்ளன. போர்
நின்று போனால் தனது வருமானம் நின்று போகுமே என்று நினைத்து சங்கடப்படும் ஒரு சிறுவனின் மன்நிலை
விசித்திரமாகத் தென்பட்டாலும் அவனின் இயல்பான எண்ணமாக இருப்பதை ” யாழ்தேவி “கதை சொல்கிறது. குழந்தைத் தொழிலாளியாக அவன்
பெறும் கூலி அவன் குடும்பத்திற்கு உதவுகிறது.. கொழும்பு தாண்டிக்குளம் வரை சென்று
திரும்பும் புகை வண்டியால் அங்கிருந்து அரை கிமீ தூரத்திற்கு பயணிகளின் மூட்டைகளைக் கொண்டு செல்லும்
குழந்தைத் தொழிலாளி அவன். கிராமப்புறங்களில் விவசாயிகள் எதிர் கொள்ளும்
பிரச்சினைகள் ஏராளம். ஒரு விவசாயி சிறு வியாபாரி ஆகும் போது அவன் நடந்து கொள்ளும்
“ முதாலாளித்துவ குணம் “ பற்றியும் பேசுகிறார். ஒரு நண்பனே அப்படி மாறும் போது
நடக்கும் கூத்து உட்சபட்சமாகப் போய் விடுகிறது.
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது வேறு. ஒருவரை ஒருவர் புகழ்ந்து காரியங்கள்
சாதித்துக் கொள்ளும் மன்ப்பாங்கு பற்றிய மன அலசல்கள் இதில் உள்ளன.சாமியாரை நம்பும்
மக்கள், அவர்களின் மன நிலையை சமூக நிலையைக் கொண்டு விமர்சனமாக்குகிறார். வேலைக்குப் போகிறவர்கள் சுபமாக திரும்புவார்களா
என்றப் பதைபதைப்பு, பள்ளிக்கு செல்கிற
குழந்தைகள் உயிருடன் திரும்புவார்களா என்ற வேதனை, பென்சன் வாங்கச் செல்கிறவர்கள் இராணுவத்தின் கெடுபிடிக்கு பயந்து உயிரைவிடாமல்
வீடு திரும்புவார்களா என்ற பயம் போன்றவை கூட உளவியல் முறையில் அனுதாபங்களுடனும்
பதை பதைப்புடனும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இலங்கையின் சம்கால சூழலில் வாழ
நேர்கிறவனின் நேர்மையான அனுபவங்களை சிறுகதைகளாக்கியிருக்கிறார் அகளங்கன். “ நாளைக்கும் பூமலரும் “ என்பது அங்கே
காதில் விழும் ஒரு பிரபலமான திரைப்பாடல் . அந்தத் தலைப்பில் இருக்கும் சிறுகதையின்
மனப்பதட்ட்த்தைத் தாண்டி அது போன்ற நம்பிக்கைகளையும் இக்கதைகள் தருவதை
மறுப்பதற்கில்லை. மிருகங்களும் தாவரங்களூம், பறவைகளும் வெறும் குறிப்பீட்டளவில்
மட்டுமில்லாமல் அதன் வெவ்வேறு வகைப் பெயர்களுடனும் இயல்புடனும் இவரின் கதைகளில்
தென்படுகின்றன. ஆண்களின் உளவியல், மற்றும் கிராமிய பெண்களின் உளவியலை கூர்ந்து
நோக்கும் உரையாடல்களால் நிரம்பியிருக்கிறது. வழக்கமானக் கட்டமைபை தகர்க்கும் பெண்களும்
இதில் தென்படுகிறார்கள். புலம்பலுக்குள் மாட்டிக் கொண்டவர்களும்
இருக்கிறார்கள்.அறிவூட்டும் சமூகக் கடமையை பேச்சுக்கள் மூலமும் வெளிப்படுத்தி
வருபவர் . அந்த நோக்கில் சில பேச்சுக்களும் உள்ளன.
குமார் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு பல
கதைகளின் உருவாக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அகதிமுகாம் நிலைகளும் போர்சூழலும் தீவிரமாக நம் கண்களில் நடமாட வைத்து
விட்டார். அதேபோல் வவுனியா பிரதேச நில
அமைப்பும்,வைத்யசாலைகளும், விவசாய நிலங்களும் மண்ணின் மணத்தோடு பதிவாகியுள்ளன.இவரின்
ஆசிரியர் கதாபாத்திரம் ஆசிரியர் பணியின் மேன்மையை உணர்ந்து ஏழேழுப் பிறவிக்கும்
ஆசிரியராகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல் ஏழேழுப் பிறவிக்கும்
எழுத்தாளராகப் பிறக்கும் அனுபவங்களைத் தீவிரமாகக் கொண்டிருக்கிறார் அகளங்கன்.
( முற்றத்துக்கரடி – அகளங்கன்
சிறுகதைகள்- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
வெளியீடு, கதிர்காமர் வீதி, அமிர்தகழி,
மட்டக்களப்பு )