வருகைப்பதிவு
சுப்ரபாரதிமணியன்
“எத்தனை முறை
உற்றுப்பார்த்தாலும்
மறுபக்கம்
காட்டுவதில்லை
கண்ணாடி ”
கவிஞர் – கவிதையின் பின் மறைந்துள்ளதையும் மறுபக்கத்தையும் காட்டாமல் நேரடியாக அவரின் முகத்தையும், அபிப்பிராயங்களையும் இக்கவிதை போல் இத்தொகுப்பில் காட்டுகிறார். அதை அவரின் பாணியாகவும் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.
காக்கிக் சட்டைக்குள் மனிதாபிமானம் இருக்கிறது.ஈர நெஞ்சம் இருக்கிறது. காக்கிக் சட்டைப்பணியில், பயிற்சியில் மனதைத் தொட்ட அனுபவங்கள் கவிதைகளாய் மிளிர்கிறது. அம்மாவின் பெயர் பொறித்த தட்டு போன்ற கவிதைகளில் இது பட்டென வெளிப்படுகிறது. இன்னும் நெகிழ்ச்சியாகவும் சொல்லியிருக்கலாம் என்று பட்டது.
நினைவுகளில் அமிழ்ந்து போகிறவையும் உண்டு.. இவரின் அரைக்கால் சட்டை அணிந்த பள்ளிப்பருவம் முதல் வளர்த்தவர்களின் நினைவுகள் வரை எல்லாம் சுற்றி சுற்றி வரும் கொசுக்கள் போல் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. காலிபாட்டில் போன்ற உருவகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சொல்லாமல் விடுவதை விட எல்லாவற்றையும் சொல்லி விடுவதை பாணியாகவும் கொண்டிருக்கிறார். வெளிப்படையாகவும்., அதிகமும் சொல்லாமல் விடுவதுதான் கவிதைக்கு அழகாகும் . ஹைக்குவாய், சென்டிரியுவாய் பல மின்னல்களும், தெறிப்புகளும் தென்படுகின்றன.
“ என்னிடம் சொல்லு, எப்போதாவது
உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில்
நான் முத்தமிட்டிருந்தால்
பிறகு கொஞ்ச நேரம்
என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்
நொண்டித்தானே நடந்திருப்பாய்.
( நிகிதா ஸ்டானஸ்கியூ (1933 – 1983) – ரொமானியா )
நொண்டி நொண்டி நடக்கிறபடி இவருக்கு அமைந்த பல அனுபவங்கள் கவிதைத் தெறிப்புகளாய் இத்தொகுப்பில் அமைந்துள்ளன. நொண்டி நடந்தபடியே வாழ்க்கைக்குள்ளூம், கவிதைக்குள்ளும் இவர் நடக்க நெடும் பாதை இருக்கிறது.
— சுப்ரபாரதிமணியன்
( ரோஜர் –ஜனனன் பிரபு கவிதைகள், இடையன் இடைச்சி பதிப்பகம், திருப்பூர் ரூ 80, )