சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 2 மே, 2014

சாணித்துகள் முட்கள்: அபிமானியின் “ நீர் கொத்தி மனிதர்கள் ” நாவல்

சுப்ரபாரதிமணியன்விளிம்புநிலை மக்களைப்பற்றியும்  குறிப்பாக தலித் மக்களைப்பற்றியும் கடந்த 20 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர்  அபிமானி.  பலசமயங்களில் நம்பிக்கையே அவர்களின் ஊக்க சக்தியாக இருப்பதைச் சுட்டிக்காடுபவர்.   என்றைக்காவது ஒருநாள் போராட்டங்கள், எதிர்ப்புக்குரல்கள் மூலம் நல்ல வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியம் என்பதை சூசகாகமாக வெளிப்படுத்துபவர். கிராமங்களில் நிலம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கையில் இருக்கிறது.இன்னும் கூட தலித்துகளில் பெரும்பான்மையோர்   விவசாயக் கூலிகள். ஆதிக்க ஜாதியினரின் பாலியல் கொடுமைகள் பற்றி நிறைய எழுதி உள்ளார்.  காவல்துறையினருக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள்  கொல்லப்படுகிற இந்தியச்சூழல்.  மனித உருவங்கள் சாதியின் கொடுமையான வன்முறையைப் புரிந்து கொள்ள இயலாத அவலங்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
இவரின் முதல் நாவலில் தண்ணீர் பிரச்சினையை முன் வைத்து தலித்துகள் அவர்களின் உட்சாதிகள் குறித்த முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் விவாதத்திற்குக் கொண்டு வருகிறார். சாம்பாக்கமார் ( பறையர்), பகடைகள் எனும் அருந்ததியர் போன்றோரின் உள் முரண்பாடுகளும் அவர்களின் வாழ்வியலையும் சொல்ல இந்நாவல் அவருக்குப் பயன்பட்டிருக்கிறது. மற்றும் துலுக்கக்குடி எனும் முஸ்லீம்களின் வாழ்வும். கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை பெரிதாகவே இருக்கிறது. பொதுக்கிணறு, பொது நீர்க்குழாய்  எல்லோரும் புழங்கும் இடங்களாக இருக்கின்றன. விவசாயக்கூலி வேலைக்குப் போய் வரும் பொன்னாபரணத்திற்கு   தொண்டை தாகம் தீர்க்க்க்கூட வீட்டில் தண்ணீர் இல்லை. படுக்க வரும் கணவனிடம் கூட “ கழுவறதுக்கு தண்ணி இருக்கா “ என்று ஒதுக்கி விடுகிறாள்.  துலுக்கக் குடி முஸ்லீம் பெண்கள் தண்ணீர் பிடிப்பதில் சற்றே அதிகாரம் காட்டுகிறார்கள். இஸ்மாயில் சாயபு செய்வினை செய்து எல்லாரையும் முடக்கி விடுவானோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது.  சொக்காரன்மார் பாடை சாங்கியத்திற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. செத்த பிணத்தை குளிப்பாட்ட தண்ணீர் கொண்டு வருவது பெரும் சிரம்மாக இருக்கிறது. தண்ணீர் கொண்டு வரும் பிரச்சினைகளில் மனிதர்கள் குறிப்பாய் பெண்கள் கரிக்கட்டையாய் ஆகிறார்கள். பனை ஓலைப் பட்டையில் தண்ணீர் சேந்தும் அவலம். உடைந்து போன மண்குட்த்தை கூட மாற்ற முடிவதில்லை. சைவபிள்ளையார் வெள்ளாக்குடி நாச்சீயாரும் சேரி கிணத்துக்கு தண்ணீருக்கு வர வேண்டிய தண்ணீர் தட்டுப்பாட்டுச் சூழல். . குண்டி காயந்தால் குதிரையும் புல்லைத் தின்னும் என்பது போல் தண்ணீர் பிரச்சினையை முன் வைத்து எல்லோரும் அலைகிறார்கள். சக்கிலிக்குடி கறி வாங்க பகடைகளும் அலைகிறார்கள். சக்கிலிப்பையன் சுவர் மேல் உட்கார்ந்து பேசுவது கூட வாறு சாதிக்காரர்களை எரிச்சலூட்டி கையை நீள வைக்கிறது. நாடக்கமார்களின் அதிகாரமும் ஒரு புறம். 50 குடிகள் தலித் இருக்கும் கிராமத்தில் 20 குடிகள் முஸ்லீம்கள் செய்யும் அதிகாரம் இன்னொரு புறம். சாணித்துகள் முட்களின் உரசலாய் வாழ்க்கை எல்லோருக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காடாவிளக்கு போய்  அரிக்கன் விளக்கு வந்தாலும் சேரிகள் போய் பெரும் கட்டிடங்கள் வந்தாலும் தண்ணீர்ப் பிரச்சினை ஏதாவது ரூபம் எடுத்துக் கொண்டே இருக்கிறது. புது வீடுகள், புது காலனிகள் வந்தாலும் வீட்டு தனிக்குழாய்கள் வந்தாலும் தண்ணீர் ஏதாவது வகையில் பிரச்சினைகளாக விசுவரூபித்துக் கொண்டு வருவதை இந்நாவல் சொல்கிறது. சூழலியல் பற்றி யோசிப்பில் இப்போது முன் நிற்பது  தண்ணீர் வணிகப் பொருளாகிப் போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக யுத்தம் என்பதும்தான்.   “ எல்லோருக்குமான தண்ணீர்” என்பது சுத்தமான குடிநீர் உபயோகத்தை முன் நிறுத்துகிறது. தண்ணீர் பண்டமாகி விட்டது. தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உலகளவிலான ஏற்பாடுகள் பயமுறுத்தவே செய்கின்றன.” தண்ணீர் விற்பனைக்கல்ல “ என்று  தண்ணீரை ஒரு அடிப்படை உரிமையாகவும் கோரி பெரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தண்ணீர் தனியார்மயமாக்கல் என்பது தோல்வியடைந்து வருவதை பல நாடுகளின் போராட்டங்கள் சுட்டுகின்றன.
இந்நிலையில் கிராமங்களில் தண்ணீர் பிரச்சினை சாதிய அடையாளங்களோடும், சாதிய பிரச்னைகளொடும் இருந்து வருவதை இந்நாவல் சொல்கிறது. இந்துக்களின் சாதிப்பிரிவுகள் பாம்புகளின் நீளம் போல் நீண்டு கொண்டு தொடர்கின்றன.  இதில் மேலே இருப்பவர்கள் தங்களை  அதிக்கத்தின் மூலம் அப்படியே நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றனர்.    கீழே உள்ளவர்களை எவ்வகையிலும் உயர வழியில்லாமல் செய்கின்றனர். நீர்தேவைகள் சம்பந்தமான வசதிகளும் அவர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டன.இவை ஆங்கிலேயர்களால் முதலில் வசதி வாய்ப்பு என்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பின்னர் சுதந்திர காலம் தொட்டு விரிவுபடுத்தப்பட்டன.  சாதி அமைப்புகளும் உட்பிரிவுகளும் ஆழமாக வேர் விட்டன.  சாதியக் கட்டுப்பாடுகள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களை இன்னும் இன்னும்  சிரமமாக்கியது. இதில் நீர் விநியோகம் சார்ந்த  முறைகளும் சாதிய கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்த வெவ்வேறு நிலைகளை இந்நாவலின் பல பக்கங்களில் காணலாம்.
போராட்டங்கள் மூலம் தங்கள் பிரச்சினையை சொல்ல மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பறையர்களுக்கு வழிகாட்டவும் போராடச் சொல்லவும் பண்டாரம் இருக்கிறான். பம்பாய் போய் விட்டு வருகிற வெள்ளையனும் அவர்களின் வாழ்க்கைப் போக்குகளிலிருந்து மாறுபட்டு இருக்கிறான்.  கொத்தனார் அந்தோணி தலித் பெண்ணை காதலித்தாலும்  அது கூட நிறைவேறாததாக இருக்கிறது.
தலித்துகள், உட்சாதிகள் குறித்த நுணுக்கமான பார்வை வைக்கப்பட்டிருக்கிறது. சாம்பாக்கமார்களுக்கும் அவர்களை ஒதுக்கி வைக்கும் பிள்ளை, துலுக்கர், நாடார், மறவர், கோனார் ஆகியோர்களுக்கும் சாம்பாக்கமார்களுக்கும் அவர்களால் ஒதுக்கப்படும் சக்கிலியர்களுக்கும் இடையில் ஏற்படும் முரண்செயல்களும் சம்பவங்களாய் விரிக்கப்பட்டிருக்கின்றன. தலித்துகளின் உடல்கள் தீண்டத்தகாதவை என்று பிற சாதியினர் அவர்களின் உடம்ப்பைச் சுற்றி அமைத்துக் கொள்ளும்  வேலிகள் நிறைய இருக்கின்றன. அவர்களின் உடம்பு மட்டுமா. அவர்கள் குடிநீர் பிடிக்க பொது குழாய்க்குச் செல்லும் இடங்களில் அவர்களின் மண் குடங்களோ, பித்தளைப் பாத்திரங்களோ உயர்சாதியினரின் புழங்கு பாத்திரதில் மோதிக் கொள்வது கூட எவ்வளவு கோபத்தை அவர்களிடம் கிளப்புகிறது . சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக இதில் ஒரு போராட்டம் வருகிறது. வாழ்க்கையிலும்  வாழ்விடங்கள் சாதி வாரியாகப் பிரித்துப் போடப்படுகின்றன.  உறவுகளூம், உணவு உண்ணும் முறைகளும் கூட  இவ்வறு பிரித்துப்போட்டு  சாதிய அடையாளம் காட்டப்படுவதை இறுதி பாகம் சொல்கிறது.கிணற்றடிகளும் பொது தண்ணீர்க்குழாய்களும் கலவரம் கிளம்பும் இடமாக மாறி இருப்பதை விரிவாகச் சொல்கிறார்.சாதிய ஆதிக்கம் வெவ்வேறு காலத்திற்கும் வெவ்வேறு சாதிகளின் கைகளுக்குச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும் புகைச்சல்கள்,  ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமையாக இருக்க வேண்டிய அவலம்.மனப்போக்கு.
நாவலின் வடிவமும் அது சொல்லும் விசயங்களும் வெவ்வேறானவையல்ல  என்பது விளங்குகிறது. நிகழ்கால வாழ்க்கையைச் சொல்ல புது மொழியோ, உருவகங்களோ, புது வடிவமோ தேவையில்லை. வாழ்வின் நடைமுறையோடும், புழங்கு மொழியோடும் நகர்த்திக் கொண்டு போவதே இந்நாவலின் சிறப்பு என்று சொல்லலாம்.அரசியல் மாற்றங்களோ, சமூக மாற்றங்களோ செல்ல வழி காட்டும்  தனி நபர்களின் கதைகளின் மூலம் சமூக எழுச்சியைத் தொட்டுச் செல்வதை கோடிடுகிறார். தனி மனிதர்களும் சமூகமும் வேறு வேறு துருவங்களாய் அமையாமல் சமூகத்தின் வலியின் படிமமாகவே இந்நாவல் அமைந்திருக்கிறது. அதில் தலித் விடுதலையும் அடங்கி இருக்கிறது.  அரசாங்க உத்தியோகச் சூழல் அபிமானியை நடுத்தர வர்க்க ஆளாக்கி விட்டிருந்தாலும் அவரின் உறவுகளும் சாதி ஆக்கிரமிப்புக்குள் இருப்பதை தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் சமூகத்தின் மாற்று உண்மைகளை  அவர்களின் வாழ்கையை மாற்றி அமைத்துக் கொள்வதற்கான புது சக்திகளை இவரின் படைப்புகளிலிருந்து பெற முடியும்.அதில் இந்நாவலும் ஒன்று.
( ரூ 250.  நீர் கொத்தி மனிதர்கள் : அபிமானியின் நாவல், காவ்யா பதிப்பக வெளியீடு, சென்னை )